முதல் கல் கூரையின் மீது விழுந்தவுடனேயே பெரிய சப்தம் ஏற்பட்டது.
தோனியின் அப்பா பால்கனிக்கு வந்தார்.
கேட்டின் முன்பாக இருநூறுக்கும் மேற்பட்டோர் குழுமியிருந்தார்கள்.
“தோனி டவுன் டவுன்”
அதுநாள் வரையில் தோனி குடும்பம் கேட்டிராத கோஷம். எப்போதும் வாழ்க போடும் கூட்டம் இன்று அப்படியே எதிர்மறையாக நடந்துக் கொண்டது.
அடுத்த கல் தோனியின் அப்பா மீதே விழுந்தது.
இறுகக் கதவை மூடிக்கொண்டார்கள் குடும்பத்தினர்.
ஜன்னல் கண்ணாடிகள் கல்வீச்சில் நொறுங்கின.
‘தோனி டவுன் டவுன்’ கோஷம் உக்கிரமானது.
தோனியை மட்டுமின்றி அவரது பரம்பரையையே ஆபாசமாகத் திட்டிக் கொண்டிருந்தது அந்த வன்முறைக் கூட்டம்.
யாரோ கேட்டை இடித்துத் திறக்க முற்பட்டனர்.
செக்யூரிட்டியை தாக்கிக் கோண்டிருந்தது வெறிபிடித்த இன்னொரு கூட்டம்.
‘டவுன் டவுன்’ சொல்லி போர் அடித்து விட்டதாலோ என்னவோ “dhoni die die” என்று விபரீதமாக கோஷம் எழுப்பத் தொடங்கினர்.
தோனியின் வீடு கிரிக்கெட் வெறி பிடித்த ரசிகர்களால் தாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் சேதி, தோனியின் அண்ணன் நரேந்திரசிங் தோனிக்கு தெரிய வந்தது. அவர் அப்போது பாஜக பிரமுகர் (பின்னாளில் சமாஜ்வாதி கட்சிக்கு வந்துவிட்டார்).
அவர் உடனடியாக தன் தொடர்புகளோடு பேச, தோனியின் வீட்டை பாதுகாக்க துணை ராணுவப்படை அனுப்பப் பட்டது.
அதற்குள்ளாக ராஞ்சி நகரின் கிழக்குப் பகுதியில் தோனியின் வீடு அமைந்திருந்த தெரு போர்க்களமாகி இருந்தது.
தோனியின் கொடும்பாவி எரிக்கப்பட்டு, நெருப்பும் புகையுமாக அல்லோலகல்லோலப்பட்டது.
அக்கம் பக்கம் வீடுகள் அச்சமடைந்தன.
அதுநாள் வரை அதிரடி மன்னன் தோனியின் பக்கத்து வீடு எதிர்த்த வீடு மூணாவது வீடு முக்குவீடு என்றெல்லாம் பெருமை பேசி வந்தவர்கள், முதன்முறையாக தோனி தங்கள் தெருவில் குடியிருப்பது குறித்து அவமானம் அடைந்தார்கள்.
இப்படியான சம்பவங்கள் நடந்தன என்று சொன்னால் இன்று குழந்தைகூட நம்பாது.
ஒரு சினிமா சூப்பர்ஸ்டாரின் இமேஜுக்கும் மேலான மிகப்பெரிய இடத்தை தோனி இன்று எட்டியிருக்கிறார். யாராவது அவரை நியாயமாக விமர்சிக்க வாயைத் திறந்தாலே கூட வாய் மீதே நாலு போடு போடுவார்கள் தோனி ரசிகர்கள்.
ஆனால் –
மேற்கண்ட தாக்குதல் சம்பவம் நிகழ்ந்தது நூறு சதவிகித நிஜம்.
‘dhoni die die’ என்ற கோஷம் போடப்பட்டதும் துரதிருஷ்டவசமாக நிஜம்தான்.
2007ஆம் ஆண்டு மார்ச் 18ஆம் தேதி நடந்த சம்பவம் இது.
அவ்வளவு மோசமாக வெறுக்கப்படக்கூடிய அளவுக்கு தோனி என்னதான் செய்துவிட்டார்?
முந்தைய நாள்தான் 2007 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் முதல் போட்டி.
கத்துக்குட்டி அணியான வங்கதேசத்தை, ராகுல் திராவிட் தலைமையில் சச்சின், கங்குலி, சேவாக், யுவராஜ்சிங், தோனி மாதிரி சூப்பர் பேட்ஸ்மேன்கள் அடங்கிய இந்திய அணி தூக்கி சாப்பிட்டுவிடும் என்றுதான் கிரிக்கெட் ஜோசியர்கள் நம்பினார்கள்.
தரகர்கள் கண்ணை மூடிக்கொண்டு இந்தியா மீது பந்தயம் கட்டினார்கள்.
எனினும் நடந்தது எவருமே எதிர்பாராத விபத்து.
ஓப்பனிங் பேட்ஸ்மேனான கங்கூலி மட்டுமே 66 ரன்கள் எடுத்திருந்தார். இந்தியப் பெருஞ்சுவர் என்று வருணிக்கப்பட்ட கேப்டன் ராகுல் திராவிட்டோ வெறும் 14 ரன்களோடு திருப்திப்பட்டுக் கொண்டார். சேவக், சச்சின் என்று சர்வதேச அளவில் ஜாம்பவான்களாக திகழ்ந்த பேட்ஸ்மேன்கள் ஒற்றை எண்ணிக்கையில் அவுட் ஆனார்கள்.
கங்கூலியோடு கைகோர்த்து கவுரவமான ஸ்கோரை எட்ட யுவராஜ்சிங் மட்டுமே முயற்சித்து அரை செஞ்சுரியை நெருங்கும் வேளையில் அவுட்.
அடுத்த ஓவரிலேயே கங்கூலியும் அவுட்.
158 ரன்களுக்கு 6 விக்கெட்.
நீளமான முடிவளர்த்து வித்தியாசமான ஹேர்ஸ்டைலோடு தோனி நுழைந்தார்.
இந்தியாவின் பல கோடி ரசிகர்களின் ஒரே நம்பிக்கையாக அப்போது தோனி மட்டுமே இருந்தார்.
“கடவுளே! போயும் போயும் பங்களாதேஷ் கிட்டே தோத்துடக்கூடாது”
“அதெப்படி தோப்போம்? தோனி இருக்கான். ஹெலிகாஃப்டர் ஷாட்டுகளாக அடிச்சி சிக்ஸருக்கு விரட்டுவான் பாரு”
ம்ஹூம். மூன்றே பந்துகளில் தோனியை விரட்டி விட்டார்கள் வங்கதேச பந்து வீச்சாளர்கள்.
டக் அவுட்.
தோனி ஆரம்பித்து வைத்த ராசியோ என்னவோ?
அடுத்தடுத்து ஹர்பஜன் சிங், அஜித் அகர்கர் என்று இந்தியா ஹாட்ரிக் முட்டை போட்டது.
இந்திய பேட்டிங் வரிசையின் வால் வீரர்களான ஜாகீர்கானும், முனாஃப் பட்டேலும் தட்டுத் தடுமாறி ஒன்று இரண்டாக சேர்த்து எப்படியோ 191 ரன்களில் ஆல் அவுட் ஆனது இந்தியா.
பேட்டிங்கில் சொதப்பி விட்டாலும், பவுலிங்கில் வங்கதேசத்தை சுருட்டி விடுவோம் என்று இந்திய அணி நம்பியதோ இல்லையோ, இந்திய ரசிகர்கள் கண்மூடித்தனமாக நம்பினார்கள்.
அந்தோ பரிதாபம்.
வங்கதேச அணியின் மூன்று வீரர்கள் தலா அரை செஞ்சுரி விளாச ஜாம்பவான் அணியான இந்தியா, கத்துக்குட்டி வங்கதேசத்திடம் உலகக் கோப்பையின் அறிமுகப் போட்டியிலேயே பல்பு வாங்கியது.
அந்தக் கோபம்தான் தோனியுடைய ராஞ்சி இல்லத்தின் முன்பாக வன்முறையாக வெளிப்பட்டது.
தோனியின் வீட்டின் முன்பாக மட்டுமின்றி, இந்தியா முழுக்க பெருநகரங்களில் தெருவுக்கு வந்த ரசிகர்கள் அணியின் பேட்ஸ்மேன்கள், பவுலர்களில் தொடங்கி பயிற்சியாளர் வரை குறிவைத்து ஆபாசமாக வசை பாடினார்கள். வன்முறை வெறியாட்டங்களில் இறங்கினார்கள்.
அடுத்து பெர்முடா அணியிடம் இமாலய வெற்றியை இந்தியா பதிவு செய்தும்கூட, இலங்கை அணியிடம் படுமோசமாக தோற்றது. அந்தப் போட்டியிலும் தோனி ‘டக் அவுட்’.
சூப்பர் எய்ட் சுற்றுக்குள் நுழைய முடியாமல், அதோடு உலகக் கோப்பைக் கனவை தகர்த்துக் கொண்டு பரிதாபமாக தாய்நாடு திரும்பியது இந்திய கிரிக்கெட் அணி.
டெல்லி விமான நிலையத்தில் வீரர்கள் இறங்கியபோது, எதிர்ப்பட்ட அத்தனை பேருமே இவர்களை விரோதமாகப் பார்த்தார்கள்.
“ஒரு போலீஸ் வேனில் நாங்கள் அவசர அவசரமாக ஏற்றப்பட்டோம். மாலை வேளை. எங்களை ஏற்றிய வேன் 70 கி.மீ வேகத்தில் பறந்தது. வீரேந்திர சேவக்குக்கு பக்கத்தில் அமர்ந்திருந்த எனக்கு ஒன்றுமே புரியவில்லை.
மீடியா வாகனங்கள் கேமிராக்களோடு எங்களை அசுரவேகத்தில் பின் தொடர்ந்தன. நாங்கள் ஏதோ பெரிய குற்றத்தை செய்த தீவிரவாதிகள், கொலைக்காரர்கள் என்பதைப் போல அச்சூழல் அமைந்திருந்தது. ஒரு போலீஸ் நிலையத்துக்கு எங்களை அழைத்துச் சென்று பதினைந்து நிமிடங்களுக்கும் மேலாக எங்களை சுற்றி பாதுகாப்பாக போலீஸ் படையினர் நின்றிருந்தார்கள்.
வாழ்க்கையில் மிகவும் அவமானகரமாக அந்தத் தருணத்தை கருதினேன். கண் மண் தெரியாமல் எனக்கு ஏற்பட்ட கோபத்தையெல்லாம் ஒன்று திரட்டினேன். அந்தக் கோபத்தை இனி கிரவுண்டில் காட்ட வேண்டும் என்று முடிவெடுத்தேன். நல்ல கிரிக்கெட் வீரனாக மட்டுமின்றி நல்ல மனிதனாகவும் என்னை வெளிப்படுத்திக் கொள்ள அன்றைய கோபம்தான் உதவியது” என்று அந்தக் கொடுமையான நாளை பின்னர் ஒரு முறை நினைவு கூர்ந்தார் ‘தல’ மகேந்திர சிங் தோனி.
பின்னர் நடந்ததெல்லாம் வரலாறு!
Happy Birthday Thala!