23 அக்டோபர், 2006

மரணதண்டனையை ஆதரிப்பவர்கள் காட்டுமிராண்டிகள்!

"ஒவ்வொரு புனிதனுக்கும் ஒரு இறந்தகாலம் உண்டு, ஒவ்வொரு பாவிக்கும் ஒரு வருங்காலம் உண்டு" - இதை இத்தருணத்தில் நாம் கொஞ்சம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். முகம்மது அப்ஸல் குறித்த எனது முந்தையப் பதிவு ஏற்படுத்தியதின் தாக்கமாக இந்த இரண்டாவது பதிப்பை சமர்ப்பிக்கிறேன். இந்தியாவின் தலைசிறந்த மனித உரிமைப் போராளியும், முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியுமான பெருமதிப்பிற்குரிய வி.ஆர். கிருஷ்ணய்யர் சமீபத்தில் ஒரு வார இதழுக்கு அளித்த பேட்டியொன்றின் அடிப்படையில் இந்தப் பதிவினை சமர்ப்பிக்கிறேன்.

சாதாரண மனிதர்களான நாமெல்லாம் எவ்வளவு உயர்ந்த பதவியில் இருந்தாலும் தவறிழைக்க வாய்ப்புண்டு. பாரபட்சமான தண்டனை வழங்கவும் வாய்ப்புள்ளது. ஒரு கொலைக்கு தண்டனையாக இன்னொரு கொலையை அரசே செய்வது என்பது மிகப்பெரிய பாவம்.

1957ல் கிருஷ்ணய்யர் ஈ.எம்.எஸ்.சின் அரசில் உள்துறை அமைச்சராகப் பணியாற்றியபோது அவரிடம் உச்சநீதிமன்றத்தில் மரணதண்டனை பெற்ற சி.ஏ.பாலன் என்பவரின் மனு வந்திருந்தது. அப்போதைய குடியரசுத் தலைவரும் கூட சி.ஏ. பாலனின் கருணைமனுவை நிராகரித்திருந்தார். கிருஷ்ணய்யர் பெரும் போராட்டம் நடத்தி சி.ஏ. பாலனின் மரணதண்டனையை குறைத்தார்.

இதுபோலவே உச்சநீதிமன்றத்தில் கிருஷ்ணய்யர் நீதிபதியாக இருந்தபோது எடிகா என்ற பெண்ணின் வழக்கு அவர் பார்வைக்கு வந்தது. ஒரு கொலைவழக்கில் எடிகா என்ற பெண்ணுக்கு உயர்நீதிமன்றம் மரணதண்டனை விதித்திருந்தது. இதற்கு தீர்ப்பெழுதிய கிருஷ்ணய்யர் அந்தப் பெண்ணின் தண்டனையைக் குறைத்து "கடவுள் தந்த உயிரைப் பறிக்க எந்த மனிதனுக்கும் உரிமை இல்லை. உயிரைப் பறிக்கும் உரிமை அரசுக்கும் கிடையாது" என்ற மகாத்மா காந்தியடிகளின் கூற்றினை நினைவுபடுத்தினார்.

மரணதண்டனையில் இருந்து தப்பிய சி.ஏ.பாலனும், எடிகாவும் அதன்பின்னர் கொலைவெறியோடு அலைந்ததாக தகவல் இல்லை.

மூன்றாம் உலகநாடுகளில் பெரும்பாலானவை மரணதண்டனை என்பது காட்டுமிராண்டித்தனம் எனக் கண்டித்து மரணதண்டனையை ஒழித்திருக்கும் நிலை நிலவுகிறது. மவுண்ட்பேட்டனை கொடூரமாக கொன்றவனுக்கு கூட பிரிட்டிஷ் அரசாங்கம் மரணத்தண்டனை வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கொலைசெய்பவன் ஆத்திரத்தில் அறிவிழந்து மிருகமாகி அந்த தருணத்தில் ஈடுபடுகிறான். மூளைச்சலவை செய்யப்பட்ட பயங்கரவாதியும் கூட இதுபோன்ற ஒரு சூழ்நிலையிலேயே மிருகமாகிறான். குற்றங்களுக்கு தண்டனை வேண்டாம் என்று யாரும் சொல்லவில்லை. ஆனால் மரணதண்டனையோ "கண்ணுக்கு கண், பல்லுக்கு பல்" என்ற பிற்போக்குத் தனம் கொண்டது.

"நீதிமன்றம் விதித்த தண்டனையால் ஒரு மனித உயிர் பறிக்கப்படுகின்ற ஒவ்வொரு அதிகாலையிலும் மனித உரிமையின் கொடி அரைக்கம்பத்தில் பறக்கிறது" என்று வி.ஆர். கிருஷ்ணய்யர் ஒரு தீர்ப்பில் கூறியிருக்கிறார். மகாத்மா காந்தி இன்றைய தேதியில் உயிரோடு இருந்திருந்தாலும் கூட அப்சலுக்கோ அல்லது வேறு யாருக்குமோ மரணதண்டனை என்பதை ஏற்றுக் கொண்டிருக்க மாட்டார். அதற்காக அவரையும் "தீவிரவாதி" என்று நம் தேசிய ஜல்லிகள் முத்திரை குத்துவார்களா?

ஆனாலும் பிற்போக்குத்தனமான தேசிய ஜல்லிகள் தங்கள் தேசியப்பற்றை காட்ட துரதிருஷ்டவசமாக முகம்மது அப்சல் இப்போது மாட்டிக் கொண்டார். தெரிந்தோ தெரியாமலேயோ தேசப்பற்று எனும் இனிப்புத் தடவி மரணதண்டனை என்னும் காட்டுமிராண்டித் தனத்துக்கு ஆதரவு திரட்டப்படுகிறது.

"மக்களிடம் மரணதண்டனைக்கு ஆதரவான போக்கு இருக்கிறது என்பதற்காக நானும் அதை ஆதரித்து கும்மி அடிக்க முடியாது. மக்கள் எப்போதும் சரியாக, நேர்மையாகவே சிந்திப்பார்கள் என நான் கருதவில்லை. மக்களை மந்தைகளாக நினைத்து ஏமாற்றுபவர்கள் வேண்டுமானால் இந்த மரணதண்டனை-ஆதரவு கருத்துடன் ஒத்துச் செல்லட்டும். நான் மக்களுக்கு நல்ல மேய்ப்பவனாகவே இருக்க விரும்புகிறேன்" என்கிறார் வி.ஆர். கிருஷ்ணய்யர்.

"அன்பை பளிங்கில் பதிந்திடுங்கள், காயங்களைத் தூசிப்போல துடைத்திடுங்கள்" என்பது பாரசீக பழமொழி. அன்பு எல்லாவற்றையும் பெற்றுத் தரும். சமாதானத்தையும், நிம்மதியையும் தந்திடவல்லது அன்பு மட்டுமே. அன்பினை போதித்த புத்தன் பிறந்தநாட்டின் குடியரசுத் தலைவர் நல்ல முடிவு எடுப்பார். ஒரு மனித உயிரைக் காப்பார் என்ற நம்பிக்கையுடன் இருப்போம்.