31 ஆகஸ்ட், 2010

தூக்குத்தண்டனை - எதிர்வினைகள்!

கடந்த பதிவான ’தூக்குத்தண்டனை’ எக்கச்சக்கமாக கண்டனங்களையும், குறைந்தளவிலான பாராட்டுகளையும், எகனை மொகனையான எதிர்வினைகளையும் பெற்றிருக்கிறது. ஃபேஸ்புக்கிலும், வலைப்பூவிலும் பெற்ற எதிர்வினைகளையும் விட மின்னஞ்சல்களில் பெற்றிருக்கும் எதிர்வினைகள் மிக அதிகம். இது ஒரு உலகளாவியப் பிரச்சினை என்பதால் தனிநபர் தொடர்பான, அவரவர் சார்பு அரசியல் தொடர்பான எதிர்வினைகளை விடுத்துவிட்டு, தனிப்பட்ட என் தேர்வில் நியாயமாக தெரியும் சில எதிர்வினைகளை முன்வைத்து மேற்கொண்டு உரையாடலாம் என திட்டமிட்டிருக்கிறேன்.

1. மூன்று மாணவிகளின் உயிர் என்ன கிள்ளுக்கீரையா? அவர்கள் கொல்லப்பட்டதை ஆதரிக்கிறீர்களா? உன் தங்கையையோ, அக்காவையோ உயிரோடு கொளுத்தியிருந்தால் இப்படிதான் எழுதியிருப்பாயா?

2. கொலைகாரர்களுக்கு அதிகபட்ச தண்டனையான தூக்குதான் சரி. இல்லையேல் மீண்டும் மீண்டும் கொலைகள் தொடரும்.

3. தூக்குத்தண்டனை கொடுப்பதை விட்டு விட்டு சிறையில் வைத்து லெக்பீஸோடு பிரியாணி போடச் சொல்லுகிறீர்களா? அரசுக்கும் இவர்களால் வெட்டிச்செலவு.

4. மரணதண்டனை வேண்டாம் சரி. வேறு என்னமாதிரியான தண்டனையை பரிந்துரைக்கிறீர்கள்.

5. பஸ் எரிப்பு கொடூரத்தை நேரில் கண்ட தோழர் சஞ்சய்காந்தியின் வாக்குமூலம் : http://www.blog.sanjaigandhi.com/2010/08/blog-post_30.html

இன்னும் ஏராளமான எதிர்வினைகள் வந்திருந்தாலும், மிக முக்கியமான விவாதத்துக்கான அடிப்படைக் கூறுகளை இவை கொண்டிருப்பதாக கருதுவதால், இவற்றை மட்டும் தேர்ந்தெடுத்து விவாதிக்கலாம் என்றிருக்கிறேன். என்னுடைய அரசியல் சார்பினை சுட்டிக்காட்டி ஆதரவாகவோ, எதிராகவோ வந்த எதிர்வினைகளை கைவிடுகிறேன். அதுபோலவே நான் பணிபுரியும் ஊடகத்தினை தொடர்புபடுத்தி எழுப்பப்பட்ட வினாக்களை வருத்தத்தோடு புறந்தள்ளுகிறேன்.

ஒரு நிறுவனத்தில் பணிபுரிவதாலேயே சொந்தக்கருத்து எதுவும் அந்நிறுவனத்தின் ஊழியனுக்கு இருந்துவிடக்கூடாது என்று பலபேர் அக்கறையோடு கச்சைக்கட்டி அலைவதை காண வேடிக்கையாக இருக்கிறது. சமூக வலைத்தளங்களைப் பொறுத்தவரை என்னுடைய தனிப்பட்ட கருத்துகளைதான் நான் முன்வைக்கிறேன். இதற்கும், என்னுடைய தொழிலுக்கும் முடிச்சுப் போட்டு பேசுவது அயோக்கியத்தனம். அதுமாதிரி பேசும் நபர்களை தயவுதாட்சணியமின்றி ட்விட்டர், ஃபேஸ்புக் மற்றும் வலைத்தளங்களில் புறக்கணித்தும் வருகிறேன்.

மரணதண்டனைக்கு எதிரான மனநிலையை ஒரு கொள்கையாகவே கொண்டவன் என்றமுறையில் மட்டுமே என்னுடைய கருத்துகளை தோழர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் வேண்டுகிறேன். மரணதண்டனை தீர்ப்பு எழுதும் நீதிபதிகளோ, வாதாடிய வழக்கறிஞர்களோ தண்டனை குறித்து மகிழ்வு அடைந்து விடுவதில்லை. இறுகிய முகத்தோடுதான் பலரும் இதுபோன்ற தீர்ப்பினை வரவேற்கிறார்கள்.

ஓக்கே, லெட் அஸ் மூவ் டூ தி பாயிண்ட்ஸ்...

1. மூன்று மாணவிகள் கொல்லப்பட்ட சம்பவம் மிக மிக மோசமானது. திரும்பவும் அப்படியொரு நிகழ்வு ஏற்பட்டுவிடவே கூடாது என்பதில் மாற்றுக்கருத்து ஏதுமில்லை. அவர்கள் கொல்லப்பட்டதை மனநிதானத்தோடு இருப்பவர்கள் யாரும் ஆதரித்து விடமுடியாது. என்னுடைய சிறுவயதில் ராஜீவ் கொல்லப்பட்டபோது அதை மகிழ்ச்சியோடு வரவேற்ற நிமிடங்கள் எவ்வளவு அயோக்கியத்தனமானது என்பதை பிற்பாடுதான் உணர்ந்தேன். உயிரிழப்பு என்பது மோசமானது, அது யாருடைய உயிராக இருந்தாலும். கொலை செய்தவர்களையே பதிலுக்கு கொலை செய்யக்கூடாது என்று சொல்லுபவன், எப்படி மூன்று உயிர்கள் கொல்லப்பட்டதை வரவேற்பான் என்று லாஜிக்காக பின்னூட்டம் இடுபவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இதே கருத்தை மதுரை தினகரன் ஊழியர்கள் கொல்லப்பட்ட சம்பவத்துக்கும் பொறுத்திப் பார்த்துக் கொள்ளலாம்.

2. மரணம் என்பது தண்டனையல்ல என்பதுதான் நமது வாதமே. உலகம் என்பதே ஒரு சிறைக்கூடம் என்பது தத்துவவாதிகளின் சிந்தனைகளில் உதிக்கும் கருத்து. இந்த சிறைக்கூடத்திலிருந்து ஒருவருக்கு விடுதலை அளிப்பது எப்படி தண்டனையாக இருக்கக்கூடும்? கொலை செய்தவர்களை பதிலுக்கு கொலை செய்துவிட்டால், இனி கொலைகள் தொடராது என்பது மிக மிக அபத்தமான வாதம். நாகரிகம் தொடங்கிய 3000 ஆண்டுகளாக உலகில் இருக்கும் நடைமுறை மரணதண்டனை. கொலைகள் நின்றுவிட்டதா என்ன?

3. குற்றவாளிகளை சிறையில் அடைத்து, வேறு குற்றங்கள் செய்யாமல் தடுப்பதைவிட அரசுக்கு வேறென்ன பெரிய வேலை இருந்துவிடப் போகிறது? குற்றவாளிகளும் மனிதர்கள்தானே? அவர்களுக்கு வயிறு இல்லையா? பசி இல்லையா? சக மனிதர்களுக்கு வாரத்துக்கு ஒருமுறை லெக் பீஸ் பிரியாணி போடுவதைகூட ஆட்சேபிக்கும் அளவுக்கு நம் சமூகத்தின் மனப்பான்மை குறுகிவிட்டதா என்று எண்ணத் தோன்றுகிறது. அதிலும் விருந்தோம்பலுக்கு பெயர்போன தமிழர்கள் இவ்வாறெல்லாம் கருத்து கொண்டிருப்பது அதிர்ச்சிகரமானது.

4. மரணம் என்பது தண்டனையல்ல, விடுதலை என்று தத்துவார்த்தமாக 2வது பாயிண்டில் விவாதித்து விட்டதால், நடைமுறையிலிருக்கும் ஆயுள் தண்டனைகளை அதிகபட்சத் தண்டனைகளாக பரிந்துரைக்கிறேன். இரட்டை ஆயுள் தண்டனை போல சாகும் வரை ஆயுள் தண்டனை கூட கொடுக்கலாம். நம்முடைய சட்டத்தில் ஏற்கனவே இதற்கு இடமுண்டு. தர்மபுரி கொலை சம்பவ குற்றவாளிகளைப் போன்ற கொடூரமான குற்றவாளிகளுக்கு நன்னடத்தை அடிப்படையிலோ அல்லது அரசுகளின் மன்னிப்பு அடிப்படையிலோ சாகும்வரை விடுதலையே கிடையாது என்று சட்டத்திருத்தமும் கொண்டு வரலாம். வாழ்வு முழுக்க நான்கு சுவர்கள்தான் உலகம் என்பதை விட கொடுமையான தண்டனை வேறென்ன இருந்துவிட முடியும்? - சிறைவாழ்க்கை எவ்வளவு கொடூரமானது என்பதை உணர ஹென்றி ஷாரியரின் பாப்பிலோன் (தமிழில் ரா.கி.ரங்கராஜனின் பட்டாம்பூச்சி) நூலை பரிந்துரைக்கிறேன்.

5. தோழர் சஞ்சய்காந்தி நேரில் கண்ட நிகழ்வுகளின் அடிப்படையில் அவரது உணர்வுகளை சில தகவல் பிழைகளோடு கொட்டியிருக்கிறார். அன்று அவர் கேட்ட மரண ஓலம் அவரது வாழ்வின் எல்லா நாட்களையும் தொந்தரவு செய்துக்கொண்டே இருக்கும் என்பதை உணரமுடிகிறது. அதன் அடிப்படையில் குற்றவாளிகளுக்கு மரணதண்டனை அவசியம் நிறைவேற்றியாக வேண்டும் என்று கட்டளையிடுகிறார். ஒருவேளை இம்மூவரும் தூக்கில் இடப்பட்டால் - அதன் விளைவாக சிறைவாசலில் இறந்தவர்களின் உற்றாரும், உறவினரும் எழுப்பிடப்போகும் மரண ஓலத்தையும் தோழர் நேரில் கேட்பாரேயானால் - மரணதண்டனை குறித்த தனது மனப்பான்மையை மாற்றிக் கொள்வார் என்று நம்புகிறேன்.

30 ஆகஸ்ட், 2010

தூக்குத்தண்டனை!

தர்மபுரி பஸ் எரிப்பும், அதைத் தொடர்ந்து மாணவிகள் உயிரிழப்பும் நிச்சயமாக மன்னிக்க முடியாத குற்றமே. சேலம் நீதிமன்றம் அவ்வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளில் மூவருக்கு தூக்குத் தண்டனையை தீர்ப்பாக விதித்தது. சென்னை உயர்நீதிமன்றமும் இவர்களது மரணதண்டனையை உறுதி செய்துவிட்ட நிலையில் உச்சநீதிமன்றமும் இப்போது கைவிரித்து விட்டதாக தெரிகிறது.

மரணதண்டனைக்கு எதிரான மனநிலை கொண்டவன் என்ற முறையில் உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு எனக்கு கடுமையான மன உளைச்சலைத் தருகிறது. கொலை செய்வது என்பதை எப்படி காட்டுமிராண்டித் தனமாக நினைக்கிறோமோ, அதுபோலவே கொலை செய்தவனை சட்டப்படி அரசு பதிலுக்கு கொலை செய்வதையும் காட்டுமிராண்டித்தனமாகவே நினைத்தாக வேண்டும். பல்லுக்கு பல், கண்ணுக்கு கண் என்று தண்டனை விதிக்கக்கூடிய அளவில்தான் இன்னமும் நம் சட்டம் பணியாற்றுகிறதா என்பதை சட்டத்தை உருவாக்குகிறவர்களும், பயன்படுத்துபவர்களும் பரிசீலனை செய்து பார்த்துக் கொள்ள வேண்டும்.

"நீதிமன்றம் விதிக்கிற தண்டனையால் ஒரு மனித உயிர் பறிக்கப்படுகின்ற ஒவ்வொரு அதிகாலையிலும் மனித உரிமையின் கொடி அரைக்கம்பத்தில் பறக்கிறது" என்று நீதியரசர் வி.ஆர். கிருஷ்ணய்யர் ஒரு தீர்ப்பில் கூறியிருப்பதை இங்கே நினைவுகூர வேண்டும். "கடவுள் தந்த உயிரைப் பறிக்க எந்த மனிதனுக்கும் உரிமை இல்லை. உயிரைப் பறிக்கும் உரிமை அரசுக்கும் கிடையாது" என்பது இந்தியா தனது தேசப்பிதாவாக கொண்டாடும் உத்தமர் காந்தியின் வாக்கு.

பணத்தின் மீது காந்திப் படத்தை அச்சடிக்கும் இந்தியா, காந்தியின் சிந்தனைகளுக்கு ஓரளவுக்காவது மதிப்பு கொடுக்குமாயின், மரணதண்டனை என்ற காட்டுமிராண்டித்தனத்தினை சட்டத்திருத்தம் மூலமாக ஒழித்திட முன்வந்திட வேண்டும். மூன்றாம் உலக நாடுகள் பலவும் தங்களது நாடுகளில் இந்த காட்டுமிராண்டித்தனத்தினை ஏற்கனவே ஒழித்துவிட்டன. காந்தியால் சுதந்திரம் பெற்ற அகிம்சை நாடு, புத்தன் பிறந்த மண் என்றெல்லாம் உலகில் அறியப்படும் இந்தியா இன்னமும் இதை ஒழிக்காதது வெட்கக்கேடு. மவுண்ட் பேட்டனை கொடூரமாக கொன்ற கொலைகாரனுக்கு கூட பிரிட்டிஷ் அரசாங்கம் மரணத்தண்டனை விதிக்கவில்லை.

ஒரு மனிதனுக்கு மரணம் என்பதுதான் இறுதிநாள். லாஜிக்கலாக யோசித்துப் பார்த்தால் நீதிமன்ற ஆணையின் பேரில் தூக்குத்தண்டனை ஒருவனுக்கு இறுதிநாளாக அமைந்துவிட்டால் அது எப்படி தண்டனை ஆகுமென்று தெரியவில்லை. மரணத்தண்டனை விதிக்கப்பட்டு மரணமடையும் ஒருவனின் குடும்பம்தான் தண்டனையை அனுபவிக்கிறதே தவிர, உலகை விட்டு விடைபெற்றுவிடும் குற்றவாளி அல்ல.

ராஜிவ்காந்தி கொலைவழக்கில் மரணதண்டனை பெற்ற பேரறிவாளன் - சாந்தன் - முருகன், அப்சல் குரு, இப்போது தர்மபுரி பஸ் எரிப்பு சம்பவ குற்றவாளிகள் நெடுஞ்செழியன் - ரவீந்திரன் - முனியப்பன் உள்ளிட்டோரில் யார் ஒருவர் தூக்கில் போடப்பட்டாலும், இந்தியாவின் அகிம்சை முகமூடி உலகநாடுகள் மத்தியில் சந்திசிரிக்கும் என்பது உறுதி.

சர்வதேச நாடுகள் மரணதண்டனையை ஒழிக்க வேண்டும் என்று ஐ.நா. பல்லாண்டுகளாக கரடியாக கத்தி வருகிறது. உலகில் கிட்டத்தட்ட 135 நாடுகள் ஒட்டுமொத்தமாக இந்த காட்டுமிராண்டித் தண்டனையை ஒழித்துவிட்டன. சுமார் 30 நாடுகளில் மரணதண்டனை வழக்கத்தில் இருந்தாலும் கடந்த பத்தாண்டுகளாக யாருக்கும் இத்தண்டனையை விதிக்கவில்லை. சுமார் 60 நாடுகளில் தான் இக்கொடுமை வழக்கத்தில் இருக்கிறது. இதில் இந்தியாவும் ஒன்று.

நீதிமன்றங்களால் மரணதண்டனை விதிக்கப்பட்டவர்கள் பிற்பாடு கருணையளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டதெல்லாம் ஏற்கனவே நடந்திருக்கும் முன்னுதாரணங்கள்தான். தமிழக அளவில் ஏற்கனவே தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட தோழர் தியாகு, புலவர் கலியபெருமாள் போன்றவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ததில் முதல்வர் கலைஞருக்கு முக்கியப் பங்குண்டு. மனிதநேய அடிப்படையில் முதல்வர் உடனடியாக இவ்விஷயத்தில் தலையிட்டு ராஜீவ்காந்தி கொலைவழக்கு மற்றும் தர்மபுரி பஸ் எரிப்பு சம்பவங்களில் மரணத்தண்டனை விதிக்கப்பட்டவர்களின் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றிட ஆவன செய்திட வேண்டும். கொள்கையளவில் மரணத்தண்டனையை எதிர்ப்பது என்பது பகுத்தறிவாளர்களின் கடமையும் கூட என்பது கலைஞருக்கு நன்றாகவே தெரியும். இந்திய அளவில் முடியாவிட்டாலும் தமிழக அளவிலாவது மரணத்தண்டனை என்ற அரச பயங்கரவாதம் முற்றிலும் கலைஞரால் ஒழிக்கப்படுமேயானால் மனிதம் இருக்கும் வரை அவரது பெயரும் வரலாற்றில் நிலைத்திருக்கும்.

28 ஆகஸ்ட், 2010

ஏ.டி.எம். ஏக்கம்!

ச்சே.. நம்மூரிலும்தான் ஏ.டி.எம். இருக்கிறது..

நம்மிடமும்தான் கார்டு இருக்கிறது..

நாமும்தான் அவ்வப்போது நூறோ, இருநூறோ எடுக்கிறோம்..

நம்பள்க்கி எல்லாம் ஏன் இதுமாதிரி நடக்கமாட்டேங்குது? :-(

தமிழக இளைஞர்களை ஏக்கம் கொள்ளவைக்கும் இனிய செய்தி தினமலரில் வந்திருக்கிறது : http://www.dinamalar.com/News_Detail.asp?Id=63041

அழகிகளிடம் ஏமாந்த சோணகிரி ஒரு தமிழராம்.

ம்.. பிரான்சுக்கு போனாலும் தமிழன் சிங்கத்தமிழன்தான்!

25 ஆகஸ்ட், 2010

ப்ளூகாலர் வேலைகளுக்கு பலத்த மவுசு!

விருந்தினர் பக்கம் : வழங்குபவர் கார்க்கி iamkarki@gmail.com

அடுத்த 10 வருடங்களில் இந்தியாவில் அபார வளர்ச்சி காணப்போகும் துறைகளில் ஆட்டோமொபைல் முக்கியமானது. கடந்த 2 வருடங்களாகவே இத்துறையில் வேலைவாய்ப்பு கணிசமாக வளர்ந்திருக்கிறது. இனிவரும் ஆண்டுகளில் இது இன்னும் பன்மடங்காகும். Robert Bosch என்ற ஒரு நிறுவனம் மட்டும் இந்த ஆண்டு 5000 பேரை வேலைக்கு எடுக்கவிருக்கிறது. இந்தியா போன்ற ஒரு பெரிய நாட்டில் மனிதவளமும் நிறையவே இருக்கிறது. ஆனால் நிறுவனங்களுக்கும், வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கும் ஒரு பெரிய இடைவெளி இருக்கிறது.

இந்தியாவில் தற்போது ப்ளூ காலர் என்றழைக்கப்படும் semi-skilled ஆட்களுக்குத்தான் அதிக பற்றாக்குறை. உண்மையை சொல்லப்போனால் பற்றாக்குறை கூட அல்ல. ஆட்கள் தேவைப்படுவோருக்கு ஆட்கள் கிடைப்பதில்லை. வேலைத் தேடுவோருக்கு எங்கே வேலை இருக்கிறதென தெரியவில்லை. இவர்களுக்கு இன்னமும் இணையம் அவ்வளவாக பரிச்சயமாகவில்லை என்பதும் ஒரு காரணம்.

அது தவிர இந்த வேலைகள் எல்லாம் சென்னை போன்ற ஓரு சில தொழிற்துறை நகரங்களிலே இருப்பதால் மற்ற சிறுநகரத்துவாசிகளுக்கு தெரிவதில்லை. நோக்கியா போன்ற பெரிய நிறுவனங்கள் இம்மாதிரி கிராமத்து ஆட்களை வேலைக்கு வரவழைக்க நல்லதொரு திட்டம் வைத்திருக்கிறார்கள் சுற்றியுள்ள கிராமங்களுக்கே சென்று அங்கேயே நேர்முகத்தேர்வு வைத்து (கேம்பஸ் இண்டர்வ்யூ மாதிரி) அப்பாய்ண்ட்மெண்ட் ஆர்டரையும் கையோடு தந்துவிட்டு வருகிறார்கள். மறுநாள் அவர்களை அழைத்து செல்ல நோக்கியாவின் பேருந்து வந்துவிடும். ஒரு சில கிராமங்களுக்கு அரசுப்பேருந்து கூட செல்வதில்லை. ஆனால் நோக்கியா போன்ற பெருநிறுவனப் பேருந்துகள் தவறாமல் செல்கின்றன.

எல்லா நிறுவனங்களும் இந்த முறையை செயல்படுத்தவதில்லை. அவர்கள் மனிதவள மேலாண் நிறுவன்ங்களின் உதவியை நாடுகின்றனர். இன்னமும் பல நகரங்களை சேர்ந்த மாணவர்கள் சரியான வேலை கிடைக்காமல் இருப்பதை பார்க்கலாம். ஆனால் அவர்கள் விரும்பும் துறையிலே வேலைகள் தயாராக இருக்கின்றன. இவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் இது போன்ற நிறுவனங்களை தொடர்பு கோண்டு தங்களது பயோடேட்டாவை கொடுப்பது மட்டுமே.

“மனிதவள மேலாண் நிறுவனங்களுக்கு இருக்கும் மவுசை நன்றாக உணர்ந்ததால்தான், எட்டு வருடங்களாக உற்பத்தித்துறையில் பணியாற்றிக் கொண்டிருந்தவன், வேலையை ராஜினாமா செய்துவிட்டு சொந்தமாக ஒரு நிறுவனம் ஆரம்பித்திருக்கிறேன்” என்கிறார் இளைஞரான கார்க்கி. வெர்ட் எக்ஸ் சொல்யூஷன்ஸ் என்ற பெயரில் இவர் தொடங்கியிருக்கும் மனிதவள மேலாண்நிறுவனம் ப்ளூகாலர் பணிகளில் இருக்கும் வெற்றிடங்களை நிரப்புவதை குறிக்கோளாக கொண்டிருக்கிறது.

“5000 – 8000 முதல் சம்பளம் கிடைக்கக்கூடிய வேலைக்கு ஆட்களின் தேவை எப்போதும் இருந்துக் கொண்டேயிருக்கிறது. +2, டிப்ளமோ, டிகிரி படித்தவர்கள் எல்லோருமே தேவை. விற்பனை பிரதிநிதிகள், மார்க்கெட்டிங், தொழில்நுட்ப வேலைகள் என எல்லாப் பிரிவிலும் ஆட்கள் தேவை. எங்களைப் போன்ற நிறுவனங்கள் எங்கெங்கே எவ்வளவு வேலை இருக்கிறது என்பதை தெரிந்து வைத்திருக்கிறோம். ஆனால் அந்த வேலைகளை பூர்த்தி செய்ய ஆட்கள் கிடைக்காமல்தான் திண்டாடி வருகிறோம்” என்று மேலும் சொல்கிறார் கார்க்கி.


வெர்ட் எக்ஸ் சொல்யூஷன்ஸ் மூலமாக வேலைவாய்ப்பு பெற்ற இருவரின் வெற்றிக் கதைகள் :

ஒன்று :

தஞ்சாவூரைச் சேர்ந்தவர் சாமிநாதன். அஞ்சல்வழியில் பி.பி.ஏ படித்தவர். படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கும்வரை காத்திருக்கவில்லை. கிடைத்த வேலைகளை ஊரிலேயே செய்யத் தொடங்கினார். ஒரு பெயிண்டராக வாழ்க்கையைத் தொடர்ந்து கொண்டிருந்தார்.

சென்னையில் ஒரு மனிதவள மேலாண்மை நிறுவனம் மூலமாக ஒரு நிதித்துறை நிறுவனத்தில் Backend office எனப்படும் பிரிவில் பணிக்கு சேர்ந்தார். கிடைத்த வேலையை திருப்தியாக செய்ததற்கு பரிசாக, இப்போது 10 பேர் கொண்ட குழுவை வழிநடத்தும் டீம் லீடராக இருக்கிறார்.

“வாய்ப்பு கிடைக்கும் வரை காத்திருக்க வேண்டும். அதுவரை எந்த வேலை கிடைக்கிறதோ, அந்த வேலையை திருப்தியாக செய்யும் மனநிலைக்கு தயார்படுத்திக் கொள்ள வேண்டும். செய்யும் வேலையிலிருந்தே, அதைவிட சிறப்பான வேலை கிடைக்குமா என்று வாய்ப்புகளை கண்கொத்திப் பாம்பாக பார்த்துவரவேண்டும். வாய்ப்புகள்தான் நம் வாழ்க்கையை நிர்ணயிக்கும்” என்று தத்துவமாக கொட்டுகிறார் சாமிநாதன்.


இரண்டு :

திண்டிவனம் ரமேஷின் கதை கொஞ்சம் வித்தியாசமானது. இவர் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் விற்பனை மேலாளராகப் பணிபுரிகிறார். பொதுவாக இந்தப் பதவிக்கு வருபவர்கள் எம்.பி.ஏ. படித்திருக்க வேண்டும். ஆனால் ரமேஷோ +2தான் முடித்திருக்கிறார். இப்போது அஞ்சல் வழியில் எம்.பி.ஏ. படித்திருக்கிறார்.

சென்னைக்கு வந்து கிடைத்த வேலைகளை செய்துக் கொண்டிருந்தவருக்கு ஏதோ ஒரு நிறுவனத்தின் விற்பனைப்பிரிவில் வேலை கிடைத்தது.

“எல்லோரும் நினைப்பது மாதிரி படிப்பு எல்லாம் இன்றைய காலக்கட்டத்தில் பெரிய விஷயமேயில்லை. விற்பனைப் பிரிவில் பணியாற்ற சரளமான ஆங்கிலமும், துடிப்பான பேச்சும், நிறைய உழைப்பும் இருந்தால் போதும். வெகுவிரைவில் வெற்றிப்படிக்கட்டுகளை ஏறி விடலாம்” என்பது ரமேஷின் அனுபவம்.

நினைத்தாலே நடக்கும்!

நீண்டதூரப் பயணம். செமையான வேலை. பிளாட் கதவைத் திறந்துவிட்டு ‘அப்பாடா’வென்று சோபாவில் விழுகிறீர்கள். எழுந்துச் சென்று ட்யூப்லைட்டையோ, ஃபேனையோ ‘சுவிட்ச் ஆன்’ செய்யக்கூட முடியாத அலுப்பு.

இதுமாதிரி நேரங்களில் நீங்கள் நினைத்தவுடனே விளக்கு எரிந்தால், ஃபேனோ, ஏசியோ அதுவாகவே ‘ஆன்’ ஆனால், ரிமோட் கண்ட்ரோல் இல்லாமல் உட்கார்ந்த இடத்திலேயே மனதில் விரும்பும் சேனல் டிவியில் தோன்றினால் எப்படியிருக்கும்? எதற்குமே நீங்கள் அசையக்கூட வேண்டாம். நினைப்பு மட்டுமே போதும்.

ம்.. ‘நினைப்புதான் பொழைப்பை கெடுக்கும்’ என்கிறீர்களா? பழமொழியெல்லாம் பழங்கதை சார். நீங்கள் நினைத்ததை முடிப்பதுதான் அறிவியலின் வேலை.

சமீபத்தில் கனடாவின் டொரண்டோ நகரில் ஒரு அலுவலகத்துக்கு பத்திரிகையாளர் ஒருவர் சென்றார். வாசலில் ‘ஹெட்ஃபோன்’ ஒன்றை செக்யூரிட்டி மாட்டி அனுப்பினார். கதவைத் திறக்க வேண்டுமென்று நினைத்துக்கொண்டே சென்றவருக்கு, கதவு அதுவாகவே திறந்து வழிவிட்டது. அட...

கொஞ்சம் அச்சத்தோடு உள்ளே சென்றவருக்கு லேசாக வியர்த்துக் கொட்ட, ஃபேன் சுவிட்ச் எங்கேவென்று தேடத்தொடங்கினார். அவர் நினைத்த மாத்திரத்தில் ஃபேன் ஓட.. விட்டலாச்சார்யா பட அனுபவம்தான் போங்கள்.

திகிலடித்துப் போயிருந்த பத்திரிகையாளருக்கு மேலும் ‘சோதனை’ தர விரும்பாமல் ‘இண்டரெக்ஸான்’ என்று பெயரிடப்பட்டிருந்த அந்நிறுவனத்தைச் சார்ந்த ஏரியல் கார்ட்டன் என்கிற உளவியல் நிபுணரான பெண்மணி, ‘டெக்னாலஜியை’ விளக்கத் தொடங்கினார்.

“எதையாவது செய்யும் முனைப்போடு நீங்கள் சிந்திக்கும்போது பீட்டா அலைகளை உங்கள் நினைவகம் உருவாக்குகிறது. ஓய்வு மூடுக்கு வரும்போது ஆல்பா அலைகளை உருவாக்குகிறது. இந்த அலைகளை கட்டுப்படுத்துவதின் மூலமாக ‘ஸ்விட்ச்’ இல்லாமலேயே லைட் போடலாம், ஃபேனை ஓடவைக்கலாம். இசை கேட்கலாம். ஏன் காலில் ‘கீர்’ போடாமலேயே, ஆக்ஸிலேட்டரை முறுக்காமலேயே வண்டி கூட ஓட்டலாம்”

செய்தியை கேட்டதுமே “நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான் நான் நான்” என்று பாட்டு பாடலாம் போல தோன்றுகிறதுதானே? – இந்த ஆல்ஃபா, பீட்டா அலைகளை குறித்த ஆராய்ச்சியின் தொடக்கம்தான் இது. நினைவலைகளை வைத்து என்னவெல்லாம் செய்யலாம் என்ற சாத்தியத்தை கண்டறிந்திருக்கிறார்கள். இப்போதைக்கு ட்யூப் லைட் போடுவது, டயல் செய்யாமலேயே ஆபிஸுக்கு போன் செய்து, பொய்பேசி லீவு வாங்குவது என்ற லெவலுக்குதான் இந்த ஆராய்ச்சி முன்னேறியிருக்கிறது. இன்னும் நிறைய ஆராய்ந்து நிறைய விஷயங்களை நினைப்பின் மூலமாகவே சாத்தியப்படுத்தும் ஆராய்ச்சிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

இப்போதைக்கு எப்படி இயங்குகிறது என்றால் நம் காதில் பொருத்தப்படும் ஹெட்செட்டில் இருக்கும் சில எலக்ட்ரானிக் சமாச்சாரங்கள் மூலமாக நம் மூளையின் செயல்பாடுகள் வாசிக்கப்படுகிறது. இது ஒரு கணினிக்கு கொண்டு செல்லப்பட்டு கணினியின் மூலமாக நம் நினைவுகள் செயலாற்றப்படுகிறது.

மனித மூளையை ஒரு கணினியால் படிக்க முடியும் என்பதே மிகப்பெரிய விஷயம். இதனால் நினைத்தமாத்திரத்தில் எவ்வளவோ விஷயங்களை சாத்தியப்படுத்த முடியும் என்பது சாதகமான அம்சம். பாதகமான அம்சங்களும் நிச்சயமாக நிறைய உண்டு. எவையெல்லாம் என்று சொல்லவே தேவையில்லை. உங்களுக்கே தெரியும்தானே?

(நன்றி : புதிய தலைமுறை)

24 ஆகஸ்ட், 2010

பிறந்தநாள்!

தொடக்கத்தில் – அதாவது அப்பா கண்ட்ரோலில் இருந்தபோது..

அப்பாவிடம்...

“ப்ரூஸ் லீ படம் போட்ட சர்ட்டு வேணும்!”

“கபில்தேவ் பேட், அதோட ஒரு ஹீரோ பேனாவும்”

“இப்போ நல்லா ஓட்டுறேன். கால் நல்லா எட்டுது. ஒரு பி.எஸ்.ஏ எஸ்.எல்.ஆர் வாங்கித் தரலாமில்லே”

அம்மாவிடம்...

“கோயிலுக்கு நான் வரலை. பிரண்ட்ஸோட ஜெண்டில்மேன் பார்க்கப் போறேன்”

அப்பா அவருடைய அண்ணனிடம்...

“இவனும் என்னை மாதிரியே மாசக்கடைசியிலே பொறந்து தொலைச்சிட்டானே? இருந்தாலும் என்னத்தைப் பண்ணுறது? ஒரே புள்ளையா பொறந்துட்டான். எத கேட்டாலும் செஞ்சிதான் கொடுத்தாவணும்”

ஆசைகள் எதுவுமே நிராசை ஆனதில்லை. எனக்கு வாய்த்தவர் உலகின் தலைசிறந்த அப்பா.


நடுவில் – அதாவது சிறகு முளைத்துவிட்டதாக நானே நினைத்துக் கொண்டபோது..

கோபாலிடம்...

“இன்னைக்காவது அவகிட்டே பிரபோஸ் பண்ணிடனும்”

அவள்...

“தம்மு கூட அடிக்க மாட்டியா? ச்சே.. என்னடா ஆம்பளை நீ?”

ஜாஹிரிடம்...

“வெற்றிலே கட்டப் பஞ்சாயத்து ஓடுது. நக்மா ஒயின்ஸுலே ஆளுக்கொரு பீர் உட்டுட்டு அப்படியே போயிடலாமா இல்லைன்னா ஜோதியா?”

மெக்கானிக் தமிழ்...

“சில்வர் ப்ளஸ்ஸோட அழகே சில்வர் கலர்தான். நீ ஏண்டா ஃபுல்லா பிளாக் பெயிண்ட் அடிக்கணும்னு சொல்றே?”

பிள்ளையார் கோயில் தர்மகர்த்தாவிடம்...

“சார் திக இளைஞரணி சார்புலே பகுத்தறிவு பிரச்சாரக் கூட்டம் நடத்தப் போறோம். உங்க கோயில் முன்னாடி மேடை போட்டுக்கறோம்”

யாரோ ஒருவர், ஆள் கூட நினைவில்லை...

“எதுவா இருந்தாலும் முதல்லே உனக்கு மீசை முளைக்கட்டுண்டா வெண்ணை”

நிறைய ஆசைகள் பேராசையாகி நிராசையாகிய பருவம்...


லேட்டஸ்டாக – அதாவது இப்போது...

இன்சூரன்ஸ் ஏஜெண்டிடம்...

“சார் ஜீவன் அன்மோல் போட்டுட்டேன். ஜீவன் ஆனந்தும் இருக்கு. வேற ஒரு ரெண்டு பாலிசியும் ஃபேமிலி மெம்பர்ஸ் பேருலே எடுத்துட்டேன். திடீருன்னு ஆக்சிடெண்ட் கீக்ஸிடெண்ட் ஆகி மண்டையப் போட்டுட்டோமுன்னா ஃபேமிலி சேஃப்புதான். இருந்தாலும் குழந்தை ஃப்யூச்சருக்கு ஏதாவது போட்டு வைக்கலாம்னு பார்க்குறேன். லோ ப்ரீயமுத்துலே நிறைய பெனிஃபிட் கிடைக்கிறமாதிரி பாலிசி ஏதாவது பார்த்து சொல்லுங்க சார்!”

பிறந்தநாள் கொண்டாட்டத் தன்மையை இழந்து பீதிநாளாகி வருகிறது :-(

எல்லாமே அப்படியே ரிவர்ஸிலேயே போனால் எவ்வளவு நல்லாருக்கும்?

23 ஆகஸ்ட், 2010

ஜெயமோகனின் பொறுமை!

எப்படித்தான் இந்த மனுஷனுக்கு இவ்வளவு பொறுமை சாத்தியமாகிறதோ என்று கடந்த ஒரு வாரமாக ஆச்சரியப்பட்டு வருகிறேன். சாருவிடம் யாராவது இம்மாதிரியாக பேசியிருந்தால் சுனாமியே நிச்சயமாக வந்திருக்கும். யாரோ ஒரு தமிழ் ட்விட்டர் ”ஜெ விரைவில் எழுத்துத் துறவறம் மேற்கொள்ளுவார்” என்று ஆரூடம் சொல்லும் அளவிற்கு அவருக்கு உளவியல்ரீதியான வன்புணர்ச்சியை இரு வாசகர்கள் தந்து வருகிறார்கள்.

ஜெயமோகனின் இணையத்தளத்தை தொடர்ச்சியாக வாசிக்குமளவுக்கு சிலநாட்களாக பணிச்சூழல் இடம் தராததால் பிரச்சினையின் மையப்புள்ளி எங்கிருந்து சரியாக தொடங்கியது என்று தெரியவில்லை. ஜெமோ சில நாட்களாக நிறைய எழுத்தாள விக்கெட்டுகளை வீழ்த்தி வருகிறார். கல்கியில் தொடங்கி அவருடைய பந்துவீச்சில் சுஜாதாவென ஒவ்வொருவராக போல்ட் ஆகிவர, பாலகுமாரன் எல்பி.டபிள்யூ. ஆனபோது பிரச்சினை தொடங்கியிருக்கலாம் என்று நினைக்கிறேன்.

இந்த தொடர்தாக்குதலில் குழம்பிப்போன இரு வாசகர்கள் பிச்சைக்காரன் & ராம்ஜியாஹூ. தடாலென்று அதிரடியாக ஜெமோவின் பின்னூட்டப் பெட்டியை கைப்பற்றி, அவருடைய பந்துவீச்சை இவர்கள் இருவரும் எதிர்கொள்ள முடிவெடுத்திருக்கிறார்கள். நொந்துப்போன ஜெமோ ”கேளிக்கை எழுத்தாளர் vs சீரிய எழுத்தாளர்” என்று ஒரு பதிவெழுத வேண்டிய நெருக்கடிக்கு ஆளானார். ஆயினும் அந்தப் பதிவிலேயே நண்பர் ராம்ஜியாஹூ நான்கு ஸ்டெப் ஏறிவந்து பின்வருமாறு ஒரு சிக்ஸர் அடித்திருக்கிறார்.

“எனக்கு தெரிந்து பல வாசகர்கள் (நான் உட்பட) சுஜாதா பாலகுமாரன் புஷ்பா தங்கதுரை யும் படிக்கிறோம், நகுலன் வண்ண நிலவன், சு ர, கோபி கண்ணன், பஷீர், ஜெயமோகன், கோணங்கி, அம்பை யும் படிக்கிறோம். மாலை முரசும் படிக்கிறோம், கார்டியனும் படிக்கிறோம். சகலகலா வல்லவன், சிங்கார வேலனும் பார்க்கிறோம், மூன்றாம் பிறை, சலங்கை ஒலி, அன்பே சிவம், மகாநதியும் பார்க்கிறோம். பால குமாரன் என்றுமே தனது எழுத்து மட்டுமே படியுங்கள். கி ரா, வண்ணதாசன் பக்கம் போகாதீர்கள் என்று சொன்னதே இல்லை.”

ராம்ஜி சிக்ஸர் அடித்த அடுத்த ஓவரிலேயே, பிச்சைக்காரன் இன்னொரு மெகாசிக்ஸரை இவ்வாறாக அடித்திருக்கிறார்.

“பாலகுமாரன் அவர்களை இலக்கியவாதிகள் வரிசையில் வைக்காதது வருத்தமாக இருந்தது . ஆனால் உங்களை போன்ற சிலரை தவிர, பெரும்பாலாலான இலக்கியவாதிகளை பார்க்கும்போது , பாலகுமாரன் போன்ற உன்னத மனிதரை இலக்கியவாதி வரிசையில் வைப்பது அவரை இழிவு செய்வது போன்றது என்றே உணர்கிறேன். உங்களையும் கூட இலக்கியவாதியாக பார்க்கவில்லை. சிந்தனையாளராகவே பார்க்கிறேன்.”

நொந்துப்போன ஜெமோ வெறுத்துப் போய் மிக நாகரிகமாக, எளிமையாக ஒரு பதில் கொடுக்கிறார் பாருங்கள்.

“அன்புள்ள பிச்சைக்காரன்

பாலகுமாரன் மீதான உங்கள் மதிப்பை அங்கீகரிக்கிறேன். ஒர் எழுத்தாளன் மீது கொண்டுள்ள பிரியம் என்பது தன்னளவிலேயே மகத்தானதே. அவரை உங்கள் ஞானாசிரியனாக ஆக்கும் சக்தி அதற்கு உண்டு. ஆனால் அவரில் இருந்து மேலே செல்லும் வாசல்களையும் திறந்தே வையுங்கள். அது உங்களுக்கு உதவும். அந்த நிலை உங்களிடம் இருப்பதை காண்கிறேன், மகிழ்ச்சி”

பிரச்சினை முடிந்தது என்று நினைத்தால் இல்லவேயில்லை. பின்னூட்ட சூறாவளிகள் இருவரும், ஜெமோ ஸ்பின் போட்டாலும் சரி, ஸ்பீட் போட்டாலும் சரி. சுளுக்கெடுக்கும் தீர்மானத்தில் இருந்து பின்வாங்கவேயில்லை.

அடுத்ததாக ரந்தீவ் ஸ்டைலில் ஒரு ‘நோபால்’ போட்டு ஆட்டத்தை நிறுத்தும் முயற்சியில் ஜெமோ ஈடுபடுகிறார். ”பாலகுமாரனும் வணிக இலக்கியமும்” என்று மிக ஸ்ட்ராங்கான முயற்சி இது. எப்படிப்பட்ட பேய்களும் பயந்து ஓடிவிடக்கூடிய செமையான வேப்பிலைப் பூசை.

ம்ஹூம். வேலைக்கு ஆவது போல தெரியவில்லை. இம்முறை ராம்ஜியும், பிச்சைக்காரனும் அடித்துக் கொண்டிருப்பது ‘அவுட் ஆஃப் த ஸ்டேடியம்’ பாணி சிக்சர்கள்.

”ஜனநாயக அடிப்படையில்தான் இங்கே ராம்ஜி யாகூ அவர்கலின் கருத்துக்கள் இடம் பெறுகின்றன. இந்த விவாதத்தில் பொருட்படுத்தி பேசும் அளவுக்கு அவர் கருத்துக்கள் இல்லை. இங்கேஇலக்கிய விமர்சனம் குறித்து பேசபப்டும் எதையுமே அவர் புரிந்துகொள்ள முயல்வதாகவும் தெரியவில்லை. ஆகவே அவரது கருத்துக்களை அப்படியே விட்டுவிடும்படி கோருகிறேன். அது இந்த விவாதத்தை மிகவும் திசைதிருப்பிச் சோர்வூட்டுகிறது” - தாவூ தீர்ந்துப்போன ஜெமோ இப்படி சொல்லியிருக்க வேண்டிய அளவுக்கு நிலைமை மோசம்.

அனேகமாக ஜெமோவின் கால் நூற்றாண்டுக்கால இலக்கிய வாழ்வில் இப்படியான தன்மைகொண்ட எதிர்வினைகளை அவர் சந்தித்திருக்கவே மாட்டார் என்று தோன்றுகிறது. ஆனானப்பட்ட சாருவையே சமாளிக்க முடிந்தவருக்கு ஒரே நேரத்தில் இரு சிம்ம சொப்பனங்கள், யாருமே எதிர்பாராத வடிவத்தில் தோற்றத்தில் தோன்றுவார்கள் என்று யார்தான் நினைத்திருக்க முடியும்.

கடைசியாக ஜெமோ, “வழக்கம்போல விவாதம் அதன் ‘அடுத்த’ கட்டத்துக்குச் சென்றுவிட்டது. நான் சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டமையால் இதில் மேலே ஏதும் சொல்லாமல் முடித்துக்கொள்கிறேன். நான் சொன்னவை ஓர் இலக்கிய விமர்சகனின் கருத்துக்கள். இவற்றுக்குப் பின் மிக விரிவான ஓர் இலக்கிய பாரம்பரியமும் உலகளாவிய அழகியற்புலமும் உண்டு. அவற்றயும் இந்த இணைய தளத்திலேயே அறிமுகம் செய்துகொள்ளலாம். தன் ரசனையையும் நுண்ணுணர்வையும் சார்ந்து மேலே வாசிப்பவர்களும் யோசிப்பவர்களும் இதை பரிசீலிக்கலாம். மற்றவர்கள் தங்கள் கருத்துக்களிலேயே நீளலாம். இதுவே எந்த இலக்கிய விமர்சனத்துக்குக்கும் பயனாகும்.” என்று சொல்லி தற்காலிக பிரேக்கை போட முயற்சித்திருக்கிறார். இந்த சுவாரஸ்யமான இலக்கியப்போர் என்னதான் ஆகுமென்று பொறுத்திருந்துப் பார்ப்போம்.

எனக்கு தெரிந்து ஜெமோவுக்கு இப்போது இருப்பது இரண்டே இரண்டு சாய்ஸ் தான்.

ஒன்று, ஒட்டுமொத்தமாக இணையத்தை பூட்டி வைத்துவிட்டு சினிமாவில் தீவிரமாவது.

இரண்டு, சாருவை மாதிரி பின்னூட்டப் பெட்டியை மூடிவிட்டு, மெயிலுக்கு வரும் ஆபாசக் கடிதங்களை ஸ்பாமுக்கு அனுப்புவது.

மூன்றாவதாகவும் ஒன்று இருக்கிறது. தொடர்ச்சியாக இதுமாதிரி அவர் பந்துவீச்சு ராம்ஜியாஹூ, பிச்சைக்காரன் மாதிரி வகையறாக்களால் சேதப்படுத்தப்பட்டுக் கொண்டே போனால் இலக்கியத்தை மூட்டை கட்டிவிட்டு, ரஜினிசார் ஸ்டைலில் இமயமலைக்கு போய் ரெஸ்ட் எடுப்பது.

21 ஆகஸ்ட், 2010

முன்னோடி ஊர் முடிச்சூர்!


ஊருக்குள் நுழைந்து நடக்க ஆரம்பித்ததுமே சடக்கென்று உறுத்துகிறது ஒரு விஷயம். அட ஒரு குப்பைத்தொட்டி கூட காணோமே? தேடித்தேடி கண்கள் ஓய்ந்ததுதான் மிச்சம். பாவம். பஞ்சாயத்துக்கு அவ்வளவு நிதி நெருக்கடியோ? குப்பைத்தொட்டியை விடுங்கள். குப்பை கூட இல்லையே? இங்கே மனிதர்கள் வசிக்கிறார்களா என்ன?

மேற்கு தாம்பரத்திலிருந்து படப்பை செல்லும் சாலையில் இருக்கும் முடிச்சூருக்குள் நுழைந்ததுமே இப்படித்தான் எண்ணத் தோன்றுகிறது. மேற்கண்ட சந்தேகம் அவசியமே அற்றது. ஏனெனில் முடிச்சூரில் 16,000 பேர் வசிக்கிறார்கள். தாம்பரத்துக்கு வெகு அருகிலிருக்கும் புறநகர்ப்பகுதி என்பதால் ஆண்டுக்கு ஆண்டு தடாலடி வளர்ச்சி. ஆனாலும் பெரிய ஏரி, குளங்கள், மரங்கள், கால்நடைகள், வெள்ளந்தி மனிதர்களென்று கிராமத்தன்மை சற்றும் மாறாமல் பச்சைமணம் வீசும் பூஞ்சோலையாகவே இருக்கிறது. தூரத்தில் மலைகள் தெரிகிறது. ஊரே பச்சைப்பசேலென இருக்க, சில்லென்ற காற்று 24 மணிநேரமும் வீசிக்கொண்டே இருக்கிறது.

குப்பையைப் போலவே வேறு சில விஷயங்களும் இங்கே இல்லவே இல்லை. குடிநீர்ப் பற்றாக்குறை, குழந்தைத் தொழிலாளர் முறை போன்றவையும் அவற்றில் அடக்கம். சுருக்கமாகச் சொல்லப் போனால் 53 வருட சுதந்திரத்தை முழுமையாக அனுபவிக்கும் கொடுத்துவைத்த பாக்கியவான்கள் முடிச்சூர் வாழ்மக்கள். சும்மாவா? குடியிருப்போர் நலனுக்காக இவ்வளவு சின்ன ஊரிலேயே 53 குடியிருப்போர் நலச்சங்கங்கள் இருக்கின்றன என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

தங்களுக்கு என்ன வேண்டுமோ, அதை அரசிடமோ, வேறு யாரிடமோ எதிர்ப்பார்க்காமல் தாங்களாகவே செய்துகொள்கிறார்கள் என்பதில்தான் முடிச்சூர் மற்ற ஊர்களிலிருந்து வேறுபடுகிறது. இன்று நேற்றல்ல, 1952லிருந்தே அம்மக்கள் இப்படிப்பட்ட மனவோட்ட்த்துடன்தான் இருக்கிறார்கள். உதாரணத்துக்கு ஒரு சோறு பதம் பார்ப்போம். 1957ல் முதல்வர் காமராஜர் இங்கே ஒரு கிராம மருத்துவமனையை திறந்துவைக்கிறார். அந்த காலத்தில் அதற்கு ரூ.5,000/- செலவு ஆனது. மருத்துவமனையை கட்டியது அரசு அல்ல. YWCA (Young Women Christian Association) என்ற தொண்டு நிறுவனம் பாதிப்பணம் அளிக்க, மீதிப்பணத்தை முடிச்சூர் மக்கள் தங்கள் சொந்தப் பணத்தை செலவழித்து, தங்களுக்கு மருத்துவமனை கட்டிக் கொண்டார்கள்.

இதுதான் முடிச்சூர்வாசிகள்!

இரண்டு நடுநிலைப் பள்ளிகள். மூன்று அங்கன்வாடி பள்ளிகள். இரண்டு நியாயவிலைக்கடை. 12 சதுர கிலோ மீட்டர் அளவே கொண்ட சிற்றூர். 4,200 வீடுகள். 4 வார்டுகளுக்கு 6 உறுப்பினர்கள். ஒரு பஞ்சாயத்துத் தலைவர். இதுதான் உள்ளாட்சி கட்டமைப்பு. புனித தோமையார் மலை ஊராட்சி ஒன்றியத்துக்குள் அடங்கியது முடிச்சூர் ஊராட்சி.

ஒரு காலத்தில் இங்கே விவசாயம்தான் பிரதானத் தொழில். நகரமயமாக்கல் சூழலில், தாம்பரம் நகருக்கு வெகு அருகே இருப்பதால் இன்று நிலை மாறிவிட்டது. குறைந்தபட்சம் 30 சதவிகிதம் பேராவது அரசு ஊழியர்கள். கட்டடத் தொழிலாளர்களும் கணிசமானவர்கள். பரம்பரை பரம்பரையாக இங்கே வசிக்கும் பாரம்பரியமான 50 குடும்பங்கள் இன்னமும் இங்கேயே வசிக்கின்றனர்.

குடிநீர்ப்பஞ்சம் அறவேயில்லை!

ஆக்கிரமிப்பு இல்லாத மிகப்பெரிய ஏரி ஒன்று. ஐந்து குளங்கள். மூன்று திறந்தவெளிக் கிணறு, எட்டு ஆழ்துளைக் குழாய்க்கிணறுகள் இருப்பதால் குடிநீர்ப்பஞ்சம் என்ற சொல்லையே முடிச்சூர்வாசிகள் கேள்விப்பட்டதில்லை. ஒரு நாளைக்கு 11 லட்சம் லிட்டர் குடிநீரை இந்த நீராதாரங்களின் மூலமாக எடுத்து பயன்படுத்துகிறார்கள்.

குடிநீர் வினியோகத்துக்கு ஏதுவாக 14 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் கட்டப்பட்டிருக்கின்றன. 1000 வீடுகளுக்கும் மேலாக வீட்டுக் குடிநீர் இணைப்பும், எல்லாத் தெருக்களிலும் குடிநீர்க்குழாயும் கட்டமைத்திருக்கிறார்கள். குடிநீருக்கு பாலாறையோ, சென்னைக் குடிநீரையோ எதிர்ப்பார்க்கா வண்ணம் தன்னிறைவு அடைந்திருக்கிறார்கள். ஊராட்சி முழுக்க மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை முறையாக ஏற்படுத்தியிருப்பதால், நிலத்தில் நீர்மட்டத்தின் அளவு போதுமானதாகவே இருக்கிறது.

விஸ்வரூபம் எடுத்திருக்கும் மகளிர் சுய உதவிக் குழுக்கள்!

முடிச்சூரின் முன்னேற்றத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் பங்கு அளப்பறியது. இவ்வளவு சின்ன ஊராட்சியிலேயே மொத்தம் 112 குழுக்கள் இருக்கிறது. தோராயமாக 1800 பேர் இக்குழுக்களில் இயங்குகிறார்கள். எல்லா குழுக்களையும் இணைத்து ஒரு கூட்டமைப்பு உருவாக்கியிருக்கிறார்கள். இந்த கூட்டமைப்பு ஒரு அரசுசாரா நிறுவனம் (NGO) போல செயல்படுகிறது. ‘போல’ என்ன? NGO-வாக இக்கூட்டமைப்பினை பதிவுகூட செய்திருக்கிறார்கள்.

“மாவட்ட அளவில் மணிமேகலை விருது பெற்றவர்கள் நாங்கள்!” என்று பெருமையாகச் சொல்கிறார் கூட்டமைப்பின் தலைவியான நிர்மலா பாஸ்கர். இவர் முடிச்சூரின் முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவியும் கூட. ஊரில் எந்த நல்லது கெட்டது நடந்தாலும், மகளிர் சுய உதவிக் குழுக்களின் கூட்டமைப்பை கலந்தாலோசிக்காமல் எதுவும் செய்வதில்லை. பாராளுமன்றத்தில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு கொடுக்கிறார்களோ இல்லையோ. முடிச்சூரில் 50% ஒதுக்கீடு இயல்பாகவே இருக்கிறது.

சமீபத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மூலமாக ரூ.27 லட்சம் சுழல்நிதி இந்தக் கூட்டமைப்புக்கு கிடைத்திருக்கிறது. மகளிர் கூட்டமைப்புக்கு 2 கட்டிடங்களும், 2 வணிக மையமும் ஊருக்குள் இருக்கிறது.

“ஊரின் ‘பளிச்’ சுத்ததில் மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்தவர்களின் பங்கு பிரதானமானது” என்கிறார் ஊராட்சிமன்றத் தலைவர் தாமோதரன்.

திடக்கழிவு மேலாண்மைத் திட்டம்

கட்டுரையின் தொடக்கத்தில் குப்பையில்லை என்று ஆச்சரியப்பட்டோம் இல்லையா? அது எப்படி சாத்தியமானது?’

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாக எல்லா ஊர்களுக்கும் இருக்கும் இந்த குப்பைப் பிரச்சினை முடிச்சூருக்கும் இருந்தது. குப்பைகளை மக்கள் விதியில் கொட்ட, அவற்றை இரண்டு குப்பை வண்டிகள் வைத்து வாரி ஏரியில் கொட்டி கொண்டிருந்தது ஊராட்சி நிர்வாகம். நீராதாரங்களில் குப்பைகளை கொட்டுவதால் என்னென்ன தீமைகள் என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியாளர் ஒருமுறை உள்ளாட்சிப் பிரதிநிதிகளை அழைத்து வகுப்பெடுத்தார்.

அதன்பின்னர் விழித்துக் கொண்ட முடிச்சூர் தங்கள் ஊருக்காக ‘சுற்றுச்சூழல் பாதுகாப்பு உரிமைக்குழு’ ஒன்றினை உருவாக்கியது. குடியிருப்போர் நலசங்கங்கள், மகளிர் சுய உதவிக்குழுக்கள், ஊராட்சிமன்றம் ஆகியவை இந்தக் குழுவின் அங்கத்தவர்கள். Hand in Hand என்ற தொண்டு நிறுவனம் இவர்களுக்கு உதவத் தொடங்கியது. மாவட்ட ஆட்சியாளரும் 4,80,000 ரூபாய் நிதிகொடுத்து ஊக்குவித்தார். குப்பைப் பிரச்சினையைத் தீர்க்க இப்போது இவர்களிடம் ஒரு திட்டம் தயார்.

அதன்படி ஒவ்வொரு வீட்டுக்கும் இரண்டு குப்பைத்தொட்டி வழங்கப்பட்டது. ஒன்று பச்சை நிறம் – மக்கும் குப்பைகளுக்காக. மற்றொன்று சிகப்புநிறம் – பிளாஸ்டிக் போன்ற மக்காத குப்பைகளுக்காக. மக்களே குப்பைகளை தரம்பிரித்துக் கொள்ள வேண்டும். தினமும் காலை 7 மணியளவில், குப்பையை சேகரிக்க வருவார்கள் பசுமை நண்பர்கள்.

ஆம், துப்புரவுப் பணியாளர்கள் என்ற சொல் முடிச்சூரில் தடை செய்யப்பட்டிருக்கிறது. சுகாதாரப் பணியில் ஈடுபடும் இவர்களை ஊரில் எல்லோருமே க்ரீன் பிரண்ட்ஸ் (பசுமை நண்பர்கள்) என்றுதான் அழைக்க வேண்டுமென்று அறிவிக்கப்படாத சட்டம் அமலில் இருக்கிறது.

பசுமை நண்பர்களின் வருகை ஒரு விசில் சத்தத்தின் மூலம் மக்களுக்கு தெரியும். சேகரிக்கப்பட்ட குப்பை நேராக ஒரு பிரித்தெடுக்கும் மையத்துக்கு கொண்டு செல்லப்படும். அங்கே மக்காத குப்பைகளை பிரித்தெடுத்து மறுசுழற்சி (recycling) செய்ய அனுப்பப்பட்டு விடும். மக்கும் குப்பைகளை தொட்டிகளில் கொட்டி, பதப்படுத்தப்பட்டு 45 நாட்களில் மண்புழுக்களை உருவாக்குகிறார்கள். இதன்மூலமாக மண்புழு உரம் தயாரிக்கப்பட்டு விற்கப்படுகிறது. எனவே குப்பை என்றால் வீணான விஷயம் என்ற பேச்சுக்கே இடமில்லை.

மொத்தம் 28 பேர் பசுமை நண்பர்கள் குழுவில் இருக்கிறார்கள். இவர்களது சம்பளம், நிர்வாகமென்று மாதத்துக்கு ஒரு லட்சரூபாய் செலவாகிறது. இதையும் அரசிடம் வாங்குவதில்லை. ஊராட்சியும் தனது நிதியிலிருந்து தருவதில்லை. ஒவ்வொரு வீட்டிலும் குப்பை அகற்றும் பணிக்காக மாதம் ரூ.30/- வசூலிக்கப்படுகிறது. Hand-in-hand தொண்டு நிறுவனமும் மொத்தச் செலவில் ஒரு பகுதியை கொடுத்துவிடுகிறது.

சம்பளம் தவிர்த்து, பசுமை நண்பர்களுக்கு சோப், கையுறை போன்றவை இலவசமாக வழங்கப்படுகிறது. காப்பீடு இருக்கிறது. மாதாமாதம் மருத்துவப் பரிசோதனை நடத்தப்படுகிறது.

திடக்கழிவு மேலாண்மையில் முடிச்சூரின் திறமையைக் கண்டு உலகமே வியக்கிறது என்றால் மிகையான வார்த்தையல்ல. நகராட்சி மற்றும் பேரூராட்சி நிர்வாகங்கள் பலவும் இங்கே வந்து இப்பிரச்சினை எப்படி கையாளப்படுகிறது என்று பாடமாக படித்துவிட்டுச் செல்கிறார்கள். வெளிநாடுகளில் இருந்தும் சுத்தம் தொடர்பான பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் முடிச்சூர் குறித்து கேள்விப்பட்டு, நேரில் வந்து கண்டு செல்கிறார்கள். சமீபத்தின் சுவீடன் நாடு, தங்கள் நாட்டில் குப்பைகள் எப்படி சுத்தப்படுத்தப்படுகிறது என்பதை நேரில் காண (Study tour), முடிச்சூர் ஊராட்சிமன்றத் தலைவரை அழைத்து கவுரவப்படுத்தியிருக்கிறது.

மாவட்ட ஆட்சியாளருக்கும் இவ்விஷயத்தில் முழுத்திருப்தி. குப்பைகளை பிரித்தெடுத்து, உரம் தயாரிக்கும் பெரிய தொழிற்சாலை ஒன்றினை இப்போது உருவாக்கி வருகிறார்கள். இதற்காக மாவட்ட ஆட்சியாளர் முதற்கட்டமாக 20 லட்சம் ரூபாய் நிதி வழங்கியிருக்கிறார். தொண்டு நிறுவனங்கள் மற்றும் மக்கள் பங்கேற்பின் மூலமாக வெகுவிரைவில் இத்தொழிற்சாலை பயன்பாட்டுக்கு வந்துவிடும். தமிழ்நாட்டின் 13,000 ஊராட்சிகளிலேயே மிகப்பெரிய குப்பை பிரிக்கும் தொழிற்சாலையாக இதுதான் இருக்கும் என்று மார்தட்டி சொல்கிறார்கள் மக்கள்.

அனேகமாக அனைத்து வீடுகளிலுமே கழிப்பறை வசதி இருக்கிறது. பாதாளச் சாக்கடை வசதி இல்லாததால் கழிவுநீரை, தொட்டியில்தான் (safety tank) வெளியேற்ற வேண்டும். இந்த கழிவுநீரால் நிலத்தடி நீர் மாசுபட வாய்ப்பிருக்கிறது. எனவே ஊராட்சியில் ஒவ்வொரு வீட்டில் இருக்கும் கழிவுத்தொட்டியிலும் ‘பேக்டிசைம்’ என்ற ரசாயனம் கலக்கப்பட்டிருக்கிறது. இந்த ரசாயனம் மூலமாக உருவாகும் பாக்டீரியாக்கள் கழிவுநீரிலிருக்கும் கழிவுகளை தின்று, நீரை சுத்தமான நீராக மாற்றிவிடும். இந்நீரை செடி, கொடிகளுக்கு கூட விடலாமாம். நிலத்தடியும் மாசுபடுவதில்லை. மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை கழிவுத்தொட்டியில் விடவேண்டிய பேக்டிசைமுக்கு ரூ.75/- மட்டுமே செலவாகும்.

கூவம் நதி சீரமைப்புக்கு சமீபக்காலமாக அரசு நிறைய ஆலோசனை செய்து வருகிறது. பல கிராமங்கள் தங்கள் கழிவுகளை ஆற்றில் கலந்துவிடுவதாலேயே கூவம் மாசடைகிறது. சிலநாட்களுக்கு முன்பு நடந்த ஆலோசனைக் கூட்டமொன்றில் கழிவு அகற்றுதல் பிரச்சினையை முடிச்சூர் ஊராட்சி எப்படி கையாளுகிறது என்பதை முடிச்சூர் ஊராட்சி மன்றத் தலைவரை நேரடியாகப் பேசச்சொல்லி மற்ற ஊராட்சிமன்றத் தலைவர்களுக்கு விளக்கப்பட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

சாலைகள்

கிட்டத்தட்ட 70 சதவிகிதம் சாலைகள் கான்க்ரீட் சாலைகளாக தரமுயர்த்தப் பட்டிருக்கிறது. சாலைகளுக்கு எப்போதுமே நமக்கு நாமே திட்டம்தான். சாலை போடவேண்டுமென்றால் அதன் பயனாளர்கள் (அதாவது அத்தெருவில் வசிப்பவர்கள்) அனைவரையும் அழைத்து ஒரு கூட்டம் போடுகிறார்கள். சாலை அமைக்க இவ்வளவு ரூபாய் மதிப்பீடு ஆகியிருக்கிறது. நீங்களும் பங்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறார்கள்.

மொத்த மதிப்பீட்டில் மூன்றில் ஒரு பங்கு மக்களுடையதாகவும், மீதி அரசுடையதாகவும் இருக்கிறது. எல்லா சாலைகளுக்கும் விடாப்பிடியாக ‘நமக்கு நாமே’ திட்டத்தை பிடித்திருப்பதற்கு முடிச்சூர் ஊராட்சி ஒரு நியாயமான காரணத்தை வைத்திருக்கிறது. மக்களின் பங்கு இருப்பதால்தான் இச்சாலை நம் பணத்தில் போடப்பட்டிருக்கிறது. நம்முடையது என்ற மனப்பான்மை அவர்களுக்கு வருகிறது.

இதுவரை நமக்கு நாமே திட்டத்தில் கிட்டத்தட்ட இரண்டு கோடி ரூபாய் வரை சாலை போட்டிருக்கிறார்கள் என்றால் எவ்வளவு சாலைகள் போடப்பட்டிருக்கும், அவற்றில் மக்களின் பங்கு எவ்வளவு இருக்கும் என்று நீங்களே கணக்கு போட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள். மக்களிடம் இருந்து பங்கு பெறும்போது வங்கி வரைவோலையாக மட்டுமே பெறுகிறார்கள். பணத்தை கையில் வாங்குவது என்ற பேச்சுக்கே இடமில்லை.

விருதுகள்

தங்கள் பகுதி மக்களின் அடிப்படை வாழ்வியல் பிரச்சினைகளை தீர்ப்பதைத் தவிர்த்து வேறென்ன பெரிய கடமை இருக்கப் போகிறது உள்ளாட்சிகளுக்கு?
கடமையைச் சிறப்பாகச் செய்பவர்களுக்கு விருதுகளும், பாராட்டுகளும் குவிவது வழக்கம்தான்.

சுத்தமான கிராமத்துக்கான நிர்மல் புரஸ்கார் தேசிய விருது, தமிழகத்தின் சிறந்த ஊராட்சி நிர்வாகத்துக்கான தேசிய விருது, கர்நாடக அரசாங்கம் வழங்கிய கர்நாடக உத்சவா விருது, காஞ்சிபுரம் மாவட்டளவில் மழைநீர் சேகரிப்பை சிறப்பாக செய்ததற்கான மாவட்ட விருது என்று இன்னும் நிறைய அரசு மற்றும் தனியார் அமைப்புகளின் விருதுகளால் நிரம்பி வழிகிறது ஊராட்சி மன்ற அலுவலகத்தின் வரவேற்பரை.

தட்டினால் திறக்கிறது

சில காலத்துக்கு முன்பாக ஊராட்சிமன்றத் தலைவர்களோடு, மாவட்ட ஆட்சியர் வீடியோ கான்பரன்சிங் மூலமாக உரையாடும் முறை கொண்டுவரப்படும் என்று அரசால் அறிவிக்கப்பட்டது. முன்னோட்டமாக தமிழகத்தில் இரண்டே இரண்டு ஊராட்சிகளுக்குதான் ‘வெப் கேமிரா’ வழங்கப்பட்டது. ஒன்று அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதியிலிருந்த ஆண்டிப்பட்டி. மற்றொன்று முடிச்சூர். இதிலிருந்து இவ்வூருக்கு அரசிடமிருக்கும் நிஜமான செல்வாக்கையும், முக்கியத்துவத்தையும் உணரலாம்.

“அரசால் எந்த திட்டம் அறிவிக்கப்பட்டாலும் நாங்கள் விடுவதில்லை. உடனே பேப்பரையும், பேனாவையும் எடுத்து விண்ணப்பிக்க ஆரம்பித்து விடுவோம். கிடைக்குமோ கிடைக்காதோவென்று யோசிப்பதேயில்லை. எப்போதும் எல்லாக் கதவையும் தட்டிக்கொண்டே இருக்கிறோம். தொடர்ச்சியாக தட்டிக் கொண்டிருப்பதால் அவையும் திறந்துகொண்டே இருக்கிறது” என்கிறார் ஊராட்சிமன்றத் தலைவர் தாமோதரன்.

நிஜம்தான். சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் இருக்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் (CMDA) கட்டுமான அபிவிருத்திக்காக 25 லட்சம் வழங்குவதுண்டு. முடிச்சூர் வருடம் தப்பாமல் கடந்த 4 ஆண்டுகளாக இத்தொகையை பெற்றுக்கொண்டே இருக்கிறது. தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா அவர்களிடம் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து 40 லட்சம் ரூபாய் வரை பெற்றிருக்கிறார்கள்.

தமிழக அரசின் இலவச வீட்டுமனைப்பட்டா, கிராமநத்தம் வீட்டுமனைப்பட்டா, வண்ணத் தொலைக்காட்சித் திட்டம், கலைஞர் காப்பீடுத் திட்டம் என்று திட்டத்தையும் விட்டு வைப்பதில்லை முடிச்சூர். எல்லாவற்றையும் கதவுத் தட்டி, கதவுத் தட்டியே வாங்கிவிடுகிறது. கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலமாக 4 பேருக்கு இருதய அறுவைச் சிகிச்சை கூட நடந்திருக்கிறதாம்.

தமிழக அரசு, மாவட்ட நிர்வாகம், குடியிருப்போர் சங்கங்கள், மகளிர் கூட்டமைப்பு, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ஊழியர்கள் என்று ஊர் மொத்தமே கூடி தேரிழுப்பதால் முடிச்சூர் தேர் ஆழித்தேர் மாதிரி கம்பீரமாக அசைந்தாடி அடுத்தக்கட்ட வளர்ச்சியை நோக்கி அசுரப்பாய்ச்சல் பாய்ந்துக் கொண்டிருக்கிறது.

நிர்வாகம், அடிப்படை வசதிகள் என்பதைத் தாண்டி குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பில் இவ்வூர் மும்முரம் காட்டிவருவது குறிப்பிடத்தக்க ஒன்று. கடைகளிலோ, வீடுகளிலோ குழந்தைத் தொழிலாளர் கட்டாயம் இருக்கக்கூடாது என்பதை கடுமையாக கடைப்பிடிக்கிறார்கள். குழந்தைகள் யாராவது நீண்டகாலமாக பள்ளிகளுக்கு வராமல் இருந்தால் (school drop out), அதை வைத்து அக்குழந்தை எங்காவது பணி செய்யச் சென்றிருக்கலாம் என்று கண்டுபிடிக்கிறார்கள். சம்பந்தப்பட்ட பெற்றோரிடம் நேரிடையாகப் பேசி, பிரச்சினை ஏதாவது இருந்தால் தீர்த்து வைக்கிறார்கள்.

இந்தியா சுதந்திரமடைந்தபோது நம் நாடும், மக்களும் எப்படி இருக்க வேண்டுமென்று காந்தி கனவு கண்டாரோ, அப்படித்தான் இருக்கிறது முடிச்சூர் ஊராட்சி. நாடு அப்படி இருக்கிறதா என்பதை நாட்டை ஆளுபவர்கள்தான் சிந்தித்துச் செயலாற்ற வேண்டும்.

அடடா, ஒன்றை சொல்ல மறந்துவிட்டோமே? முதலிலேயே சொல்லியிருக்க வேண்டும். கிட்டத்தட்ட அரைநூற்றாண்டுக்கால முடிச்சூர் ஊராட்சியின் வரலாற்றில் ஒருமுறை கூட அரசியல் கட்சி சார்பானவர்கள் தலைவர் பொறுப்புக்கு வந்ததில்லை. நோட் திஸ் பாயிண்ட் யுவர் ஆனர்!

(நன்றி : புதிய தலைமுறை)

19 ஆகஸ்ட், 2010

ஒரு அவசர உதவி!

இதைப் படிக்கும் எல்லோருமே ஒரு காலத்தில் நிச்சயமாக மாணவனாகவே இருந்திருப்பீர்கள். எனவேதான் உங்களிடம் இந்த உதவியைக் கோருகிறேன். ஆசிரியர்கள் யாராவது இந்தப் பதிவை வாசித்தாலும் உதவலாம்.

- உங்களுக்கு வாய்த்த ஆசிரியர் அல்லது இப்போது பணியில் இருக்கும் உங்களுக்கு தெரிந்த ஆசிரியர் யாராவது மிகச்சிறந்த ஆசிரியராக இருந்திருக்கலாம். நாடே போற்ற வேண்டிய அவரைப் பற்றிய தகவல்கள் உங்கள் ஊரைத்தவிர வேறு யாருக்கும் தெரியாமல் போயிருக்கலாம். அதுபோல யாராவது இருந்தால் தொடர்பு எண்ணோடு தந்து உதவுங்கள்.

- நீங்கள் பத்து அல்லது பண்ணிரெண்டாம் வகுப்பு படித்தபோது யாராவது ஒரு ஆசிரியர் உங்கள் எதிர்காலம் குறித்த அக்கறையோடு வழிகாட்டுதல் காட்டியிருக்கலாம். இதனால் உங்கள் வாழ்க்கையே மாறியிருக்கக்கூடும். அதுபோன்ற ஆசிரியர் மற்றும் உங்கள் அனுபவங்களை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

- ஆசிரியர்கள் குறித்து பாசிட்டாகவோ அல்லது நெகட்டிவ்வாகவோ உங்களுக்கு சில எண்ணங்கள் இருக்கக்கூடும். அதையும் தெரிவிக்கலாம்.


இதெல்லாம் ஏன் எதற்கு என்று நீங்கள் தொடர்பு கொண்டபின் மின்னஞ்சலில் தெரிவிக்கிறேன். என்னை தொடர்புகொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி : yuvakrishna@gmail.com

18 ஆகஸ்ட், 2010

நிக்கி லீ!

இதுவரை உலக வரலாறு இதுமாதிரியான அதிசயத்தை கண்டதில்லை. இனி காணப்போவதுமில்லை. உலகமே அதிர்ச்சியில் ஆழ்ந்துப்போய் இருக்கிறது. டாக்டர் ஸ்பாம் பர் என்ற உலகப் புகழ்பெற்ற உளவியல் நிபுணர் நம்பமுடியாமல் அசந்துப்போய் சொல்கிறார். “இது டெக்னிக்கலாக வேலைக்கு ஆகும் மேட்டர்தான். ஆனால் உணர்வு அடிப்படையில் பார்த்தோமானால் படா டேஞ்சரான விஷயமாச்சே?”

அப்படி என்னதான் மேட்டர்?

நிக்கிலீ இங்கிலாந்தின் எசெக்ஸ் மாகாணத்தைச் சேர்ந்தவர். இருபத்து ஐந்து வயது நாட்டுக்கட்டை. அழகுக்கலையை பணியாகக் கொண்ட அழகுதேவதை. வெள்ளைக்கார தேசத்தில் பிறந்தவர் என்பதால் செம கலராக இருப்பார் என்பதை சொல்லவே வேண்டியதில்லை. பிரவுன் கலர் கேசம். மொத்தத்தில் சூப்பர் ஃபிகர்.

’லவ் இட்’ என்றொரு பக்திப் பத்திரிகை இலண்டனில் வெளியாகிறது. இந்தப் பத்திரிகைக்கு ஒரு ‘ஸ்பெஷல்’ தன்மை உண்டு. அதாவது பகலில் வானமே இடிந்து விழுந்தாலும், லவ் இட்டின் நிருபர்கள் தூங்கிக் கொண்டிருப்பார்கள். இரவில் மட்டுமே ‘வேலை’ பார்ப்பார்கள். இப்படிப்பட்ட ‘லவ் இட்’டுக்கு நமது சூப்பர் ஃபிகர் நிக்கி லீ சமீபத்தில் ஒரு பேட்டி அளித்திருக்கிறார். பகலில் பியூட்டிஷியனாக வேலை பார்த்தாலும், இரவிலும் வேறு சில ‘வேலை’களில் நிக்கி லீ டேலண்ட் ஆனவர் என்பதன் அடிப்படையில் இப்பேட்டி எடுக்கப்பட்டிருக்கிறது.


பேட்டியில் இடம்பெற்ற சில முக்கிய ‘அம்சங்கள்’ பின்வருமாறு :

1. நிக்கிலீக்கு 16 வயதில் முதன்முறையாக பாலியல் உறவுக்கான வாய்ப்பு கிடைத்தது.

2. இதையடுத்து ருசி கண்ட பூனையாய் மாறிய அம்மணி அடுத்தடுத்து வாய்ப்புகளை தேடிக் கண்டறிய ஆரம்பித்தார். ‘பணி’ முடிந்ததுமே சம்பந்தப்பட்ட பார்ட்டியின் பெயரை ஒரு சிகப்பு கலர் நோட்டுப் புத்தகத்தில் 1, 2, 3 என்று பட்டியலிட்டு எழுதி வைத்துக் கொள்வார்.

3. தன்னோடு மிகச்சிறப்பாக ‘பணி’ ஆற்றும் தொண்டர்களுக்கு நட்சத்திர அந்தஸ்தும் கொடுப்பது நிக்கியின் வழக்கம்.

4. அம்மணியின் இவ்வகையிலான தீராத ஆர்வம் காரணமாக 18 வயதில் வீட்டை விட்டு வெளியேறி வந்து நண்பர்களோடு சேர்ந்து வாழவேண்டிய சூழல் ஏற்பட்டது. அப்போது அவரது நோட்டுப் புத்தகத்தில் இடம்பெற்றிருந்த பெயர்களின் எண்ணிக்கை தோராயமாக 800.

5. 21 வயது வந்ததுமே மீண்டும் ஒரு கணக்கெடுப்பு நடத்திப் பார்த்தார். அப்போது எண்ணிக்கை அதிரடியாக 2,289 ஆக உயர்ந்திருந்தது.

6. பிகருக்கு ஒரு நல்ல பழக்கம் உண்டு. ஒருமுறை பணியாற்றியவரோடு மறுமுறை பணியாற்ற மாட்டாராம். மிக அரிதாக ஓரிருவரோடு மட்டுமே இப்படி இன்னொரு முறை பணியாற்றியாக வேண்டிய கட்டாயம் வந்ததாக சொல்லுகிறார்.

7. அம்மணியின் சேவையில் அசந்துப்போன ஆண்கள், ’அடுத்த வாட்டிக்காக’ தொடர்பு எண்ணை கேட்பது உண்டாம். ஏதாவது பொய்யான நம்பரை கொடுத்து ‘எஸ்கேப்’ ஆகிவிடுவாராம்.

8. பணிபுரிய நட்சத்திர ஓட்டல்களையோ, நவநாகரிக அறைகளையோ நிக்கி எதிர்ப்பார்ப்பதில்லை. கிடைத்த இடத்தில் வேலையை கச்சிதமாக முடித்துவிடுவார். பெரும்பாலும் நடைபாதையோர புதர், நைட்க்ளப்பின் இருளான மூலைகள், சினிமா தியேட்டர்கள், பூங்காக்கள் என்று கிடைத்த இடத்தில் கச்சிதமாக ‘மேட்டர்’ முடிந்துவிடும்.

9. நிக்கியோடு ஓரிரவைக் கழிக்க உங்களுக்கு இரண்டே இரண்டு விதிகள் மட்டும் உண்டு. ஒன்று, நீங்கள் வேறு பெண்ணுக்கு சொந்தமானவரென்று தெரிந்தால் உங்களை நிராகரிப்பார். இரண்டு, பாதுகாப்பான (அதாவது ஹெல்மெட் போட்டு வண்டி ஓட்டுவது மாதிரி) வேலைகளுக்கு மட்டுமே அவர் சம்மதிப்பார்.

10. இப்போது 25 வயது நிறைவடைந்த நிலையில் தன்னுடைய சிகப்பு நோட்டுப் புத்தகத்தை ரெஃபர் செய்து, சுமார் 5,000 பேரோடு தான் உல்லாசமாக இருந்திருப்பதாக ‘லவ் இட்’டிடம் பெருமையோடு கணக்கு சொல்கிறார்.


தினத்தந்தியின் ‘கள்ளக் காதல்’ செய்திகளை தொடர்ச்சியாக வெறித்தனமான ஆர்வத்தோடு வாசித்துவரும் தீவிர வாசகனான எனக்கே ‘லவ் இட்’ பத்திரிகையின் செய்திக்குறிப்பு கடுமையான அதிர்ச்சியைத் தருகிறது. ரஜினியின் பில்லா படத்தில் வரும் நீலக்கலர் டயரி மாதிரி, நிக்கியின் சிகப்பு கலர் நோட்டுப் புத்தகமும் மிக முக்கியமானது. என்றாவது அவர் அதை பகிரங்கப்படுத்தினால் உருளப்போகும் தலைகளின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் இருக்கும் என்பதால்.

பேட்டியின் ஃபைனல் பன்ச்சாக நிக்கி கூறியிருப்பதுதான் ஹைலைட். “எனக்கு இருப்பது செக்ஸ் நோய் என்று யாராவது சொன்னால் அதைப்பற்றி எந்தக் கவலையுமில்லை. இந்த நோயை நான் அனுபவிக்கிறேன். இது குணமாக வேண்டுமென்று நான் விரும்பவுமில்லை”

நிக்கி என்றாவது இந்தியா பக்கமாக வந்தால் அவரை சந்தித்து.. பேட்டி ‘மட்டுமே’ எடுக்க வேண்டுமென்ற பேராவல் எழும்பி இருக்கிறது.

16 ஆகஸ்ட், 2010

வம்சம்!

விஷால் நடித்திருக்க வேண்டிய படமிது. நல்லவேளையாக அருள்நிதி அறிமுகமாகியிருக்கிறார். இல்லாவிட்டால் ஐம்பது பேரை சுழற்றியெடுத்து பறக்கவைப்பது, பரபர பஞ்சென்று நெத்தியில் டிச் அடித்திருக்கும்.

படத்தின் கதைக்களன் (பத்துநாள் திருவிழா) என்னவென்பதை ஒன்றரை நிமிட டைட்டிலிலேயே விளக்கிவிடுவதால் தலைவலி மிச்சம். இல்லையென்றால் அதற்கும் மெனக்கெட்டு இரண்டாம் பாதி காட்சிகளை நீளவிட்டு தாலியறுத்திருப்பார்கள். திருவிழா கொலை, கத்தாழைக்குத்து, படுக்கையிலே பாடையென்று நிறைய விஷயங்கள் புதுசு கண்ணா புதுசு.

பாண்டிராஜ் நடத்தும் செல்போன் ராவடி அநியாயம். இந்த காட்சிகளை முன்னாள் ஐ.டி. அமைச்சர் தயாநிதி மாறனுக்கும், இந்நாள் அமைச்சர் ராஜாவுக்கும் கட்டாயம் போட்டுக் காட்டி அனுமதி வாங்கியிருக்க வேண்டும். ‘மலரே குறிஞ்சி மலரே’ ரிங்டோன் அருமை.

அருள்நிதி ஆரம்பக் காட்சிகளில் மட்டுமே அறிமுகமாக தெரிகிறார். க்ளைமேக்ஸில் வீழ்ந்த பனைமரத்தில் சாய்ந்து நிலவை ரசிக்கும் ரியாக்‌ஷனில் அனுபவ நடிகர்களை மிஞ்சுகிறார். நல்ல உயரம். வெட வெட உடல்வாகு. எதிர்கால ஆக்‌ஷன் ஸ்டார் ரெடி! மலராக சுனைனா. நடிகைகளுக்கு நடிக்கும் பாத்திரம் கிடைப்பது எவ்வளவு பெரிய வரம்? வம்சம் வரமளித்திருக்கிறது சுனைனாவுக்கு.

சிட்டி சப்ஜெக்டுக்கு கருணாஸ் என்பதுபோல வில்லேஜ் சப்ஜெக்ட்டுக்கு கருப்பு கச்சிதம். படத்தில் வரும் பெரும்பாலான கதாபாத்திரங்கள் யதார்த்த நடிப்புக்கு ரொம்பவும் மெனக்கெட்டிருப்பது தெரிகிறது. இசை பெரிய இம்சை. பாடல்கள் சுமார். பின்னணி பல காட்சிகளுக்கு ஒட்டவேயில்லை.

தமிழில் ஐநூற்றி ஒண்ணாவது ‘போற்றிப்பாடடி பெண்ணே’ என்றாலும் திருநெல்வேலி, மதுரை தொல்லையில்லாமல் புதுக்கோட்டை, அறந்தாங்கி பக்கத்தைக் காட்டி ஆறுதல் அளிக்கிறார்கள். பாண்டிராஜின் ட்ரீட்மெண்ட் பக்கா.

கலைஞரின் வம்சம் ஆயிற்றே? அம்சம்தான்!

13 ஆகஸ்ட், 2010

அரசியலில் ஈடுபடுங்கள்!


உலகின் மிகப்பெரிய ஜனநாயக அமைப்பு கொண்ட இந்தியாவின் அரசியல் வடிவம் என்பது முன்னேறிய நாடுகளான இங்கிலாந்து, அமெரிக்கா ஆகியவற்றின் அரசியல் கொள்கைகளின் கலவையாக இருக்கிறது. அரசியலில் ஈடுபடுபவர்களின் சுதந்திரமான செயல்பாடுகளுக்கு நம் அரசியல் அமைப்புச் சட்டம் உத்தரவாதமளிக்கிறது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பலகட்சி உறுப்பினர்களை அங்கமாக கொண்ட பாராளுமன்ற ஆட்சி வடிவம் ஒட்டுமொத்த நாட்டின் வளர்ச்சிக்கும், நிர்வாகத்துக்கும் பொறுப்பேற்றுக் கொள்கிறது. மாநிலங்களில் சட்டமன்றம் - நகரங்களிலும், கிராமங்களிலும் உள்ளாட்சி அமைப்புகள் என்று மக்களை ஆளும் அமைப்புகள் அனைத்துமே பாராளுமன்ற வடிவத்திலேயே இங்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தன்னை புதுப்பித்துக் கொள்கிறது. 60 ஆண்டுகால இந்திய குடியரசு வரலாற்றில் ‘எமர்ஜென்ஸி’ காலம் தவிர்த்து, வேறெப்போதும் இவ்வமைப்புகள் முடக்கப்பட்டதேயில்லை என்பதுதான் இந்திய ஜனநாயகத்தின் மிகப்பெரும் சாதனை.

இப்படிப்பட்ட தலைசிறந்த மக்களாட்சி அமைப்புமுறையில், அரசியலில் ஈடுபடுபவர்களுக்கு என்னவகையிலான சுதந்திரம் இருக்கிறது? இந்திய அரசியல் அமைப்புச் சட்டம், இந்தியராகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் தகுதியான வயது வந்ததும் ஓட்டுரிமை வழங்குகிறது. ஓட்டு போடுகிற உரிமை இருக்கிற ஒவ்வொருவரும் அரசியலில் ஈடுபடுகிற அந்தஸ்து பெற்றவர்களாகிறார்கள்.

தனிப்பட்ட முறையில் தங்களுக்கு உடன்பாடான கொள்கைகளை கொண்ட கட்சியில் சேர்ந்தோ, அல்லது சுயேச்சையாகவோ தேர்தல்களில் பங்கேற்கலாம். அரசியலில் பங்கேற்க சாதி, மதம், இனம், மொழி, நிறம், ஆண் பெண் பேதம் எதுவும் தடையில்லை என்று அரசியல் அமைப்புச் சட்டம் சுதந்திரமளிக்கிறது.

அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கும் இந்தச் சுதந்திரத்தை உண்மையிலேயே அரசியலில் ஈடுபட நினைக்கும் எல்லோரும் பயன்படுத்திக் கொள்ள முடிகிறதா என்பதுதான் கேள்விக்குறி. ஏனெனில் அரசியல் கட்சிகளின் ஆதிக்கத்தில் இந்தியா இருக்கிறது. கட்சி சார்பற்றவர்கள் தேர்தலில் நின்று, வெற்றிபெற்று மக்களுக்கு சேவையாற்ற முடியுமென்ற நம்பிக்கை கடந்த அறுபதாண்டுகளில் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துவருகிறது. சுயேச்சையாக ஒருவர் வெற்றிபெற வேண்டுமானால், அவர் அப்பகுதியில் செல்வாக்கு மிகுந்த செல்வந்தராகவே இருந்தாக வேண்டும் என்பதுதான் யதார்த்தம்.

தேர்தலில் நின்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பில்லாத பெரிய தொழில் அதிபர்கள் பலரும், அறிஞர் அவை என்று சொல்லப்படுகிற ராஜ்யசபாவுக்கும், சட்டமன்ற மேலவைகளுக்கும் ‘எப்படியோ’ தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்பதை அடிக்கடி செய்தித்தாள்களில் நாம் வாசிக்க நேர்கிறது.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் தன் ஒவ்வொரு குடிமகனுக்கும் தரும் அரசியல் சுதந்திரம் என்பது ஏட்டளவில் மட்டுமே இருக்கிறது என்பதுதான் யதார்த்தமான உண்மை. அரசியலில் ஈடுபட்டு கவுன்சிலர், சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர், முதல்வர், பிரதமர், குடியரசுத்தலைவர் என்று ஒரு எளியக்குடிமகன் உயரமுடியுமாவென்றால், முடியுமென்று சொல்கிறது அரசியல் சட்டம். முடியாது என்கிறது இந்தியாவின் தற்கால நிலவரம்.

இதற்கு யாரை குற்றம் சொல்வது? அரசியல் கட்சிகளையா, அரசியல்வாதிகளையா? அரசியல்வாதிகளுக்கு ஓட்டுபோட்டு, அரசியல் கட்சிகளை ஆட்சிப்பீடத்தில் ஏற்றும் வாக்காளர்களைதான் நாம் குற்றவாளிக்கூண்டில் ஏற்ற வேண்டும். ஏனென்றால் நம்மை ஆளுபவர்களை நாம் தான் தேர்ந்தெடுக்கிறோம். தேர்ந்தெடுத்துவிட்டு லஞ்ச லாவண்யம், ஊழல், அராஜகம், நிர்வாகக்குளறுபடி என்று அடுத்த ஐந்தாண்டுகளுக்கு புலம்பிக் கொண்டிருக்கிறோம். வேறு ஒரு கட்சியை அடுத்த தேர்தலுக்கு தேர்ந்தெடுக்கிறோம். அவர்கள் மீதும் அதே பழைய லாவணி. மீண்டும் அடுத்த தேர்தலில் முந்தைய கட்சியை ஆதரிக்கிறோம்.

தேர்தல் நாளன்று நம்மைப்போன்ற ஒருவருக்கு நாம் வாக்களிப்பதில்லை என்பதுதான் பிரச்சினை. அரசியலில் எளிமை, தூய்மை, வாய்மையென்று முயற்சிப்பவர்களுக்கு நாம் வாக்களிப்பதில்லை. ஜனநாயகத்துக்கு வலு சேர்க்க ஐந்தாண்டுகளுக்கு ஒரு நாளாவது நாம் நேர்மையாக, கூர்மையாக சிந்தித்து செயல்படுவதின் மூலமாகவே, நமக்கு கொடுக்கப்பட்ட அரசியல் சுதந்திரத்தை சரியாக பயன்படுத்திக் கொள்கிறவர்களாக அறியப்படுவோம்.

சரி, அரசியலில் ஈடுபடுபவர்களுக்கு இருக்கும் பொறுப்புகள் என்னவென்று பார்ப்போம். மிகச்சுருக்கமாக ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் மக்களின் அடிப்படை உரிமைகளை பெற்றுத்தருவதே இவர்களது தலையாயப் பொறுப்பு.

அடிப்படை உரிமைகள் என்றால் ஒவ்வொரு குடிமகனும், வாழ்வதற்கு ஏதுவான சூழல் என்று எடுத்துக் கொள்ளலாம். குடிநீர், உணவு, கல்வி, வேலைவாய்ப்பு என்று அடுக்கிக்கொண்டே போகலாம். உண்மையைச் சொல்லப்போனால் மக்களின் அடிப்படைத்தேவைகள் என்பது மிகக்குறைவானதுதான். ஆயினும் அதுகூட இந்த அறுபதாண்டு கால அவகாசத்தில் முழுமையாக நிறைவேற்றப் படவில்லை என்பதுதான் வேதனை. பாதுகாக்கப்பட்ட குடிநீர் கூட இன்னமும் அனைவருக்கும் கிடைக்கவில்லை. எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் கிட்டத்த 40 சதவிகிதம் பேர் இருக்கிறார்கள். கல்வி, வேலைவாய்ப்பு என்று நிறையப் பிரச்சினைகள் இருந்துகொண்டே இருக்கிறது. இவையெல்லாம் இன்னும் பொறுப்புடன் செயல்படுங்கள் என்று அரசியல்வாதிகளுக்கு அலாரம் அடித்துக்கொண்டும் இருக்கிறது.

கடந்த ஆண்டு, இந்தியத் தலைநகர் டெல்லி பள்ளி மாணவர்களிடையே நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு ஒன்றினைப் பார்ப்போம். உங்களுக்கு ரோல்மாடலாக யாரை எடுத்துக் கொள்வீர்கள் என்பது மாணவர்களிடையே கேட்கப்பட்ட கேள்வி. 13 சதவிகித மாணவர்கள் மறைந்த, சுதந்திரத்துக்கு பாடுபட்ட நாற்பதாண்டுகளுக்கு முந்தையத் தலைவர்களின் பெயர்களை உச்சரிக்கிறார்கள். இன்றைய அரசியல் தலைவர்கள் சிலரின் பெயரை சொன்னவர்கள் வெறும் 2 சதவிகிதம் பேர்தான். மீதி மாணவர்கள் பலரும் அரசியல்சாராத மற்ற பிரிவினரின் பெயர்களைதான் தங்கள் ரோல்மாடலாக கருதுகிறார்கள். அடுத்த தலைமுறை அரசியலை தவிர்க்கிறது என்பதை இன்றைய அரசியல்வாதிகள் உணர்ந்தேயாக வேண்டும். பொறுப்பினை தட்டிக் கழிப்பவர்கள் சமூகத்தால் தவிர்க்கப்படுகிறார்கள்.

கடந்துபோன அரசியல் தலைவர்களின் மீது கூட இன்றையத் தலைமுறைக்கு இருக்கும் நம்பிக்கைகளும், மதிப்பீடுகளும் ஏன் இன்றையத் தலைவர்கள் மீது இல்லை?

ஏழ்மை, கல்வியறிவின்மை, ஊழல், நோய்கள், ஊட்டமான உணவிண்மை என்று ஏராளமான விஷயங்கள் பாக்கியிருக்கிறது. இவற்றை விரைவாக களைவதுதான் அரசியலில் ஈடுபட்டுள்ளவர்களின் முக்கியமான பொறுப்பு. இதுவொன்றும் மலையை கயிறுக் கட்டி இழுக்கும் அசாத்தியமான பணியுமல்ல.

சந்தை சீர்த்திருத்தங்களுக்கு பிறகாக பொருளாதார அடிப்படையில் அசுரவேகம் அடைந்திருக்கும் நாடாக நம் நாடு இருக்கிறது. நாட்டை ஒரு வயலாக எடுத்துக் கொண்டால், பாய்ச்சப்படும் நீர் ஒரே இடத்தில் தேங்காமல் எல்லாப் பகுதிக்கும் பரவலாகப் பாயவேண்டும். இதைக் கண்காணிக்கும் பொறுப்புதான் அரசியலில் ஈடுபடுபவர்களுக்கு இருக்கிறது.

‘இது சரியில்லை, அது சரியில்லை’யென்று புலம்பிக் கொண்டிருப்பவர்களால் எந்த பிரயோசனமும் இல்லை. புலம்புபவர்களுக்கு உண்மையாகவே அக்கறை இருக்குமானால் நேரடியாகவோ, மறைமுகவாகவோ அரசியலில் ஈடுபட்டு அனைத்தையும் சரி செய்ய முன்வரவேண்டும். குறைந்தபட்சம் தேர்தல் நாளன்று ஓட்டு போட மட்டுமாவது வாக்குச்சாவடிக்கு சென்றாக வேண்டும் என்பதே நம் எதிர்ப்பார்ப்பு.

12 ஆகஸ்ட், 2010

பாணா காத்தாடி!

“காதலிக்கும் பெண்ணிடம் பரிசு கொடுத்து காதலை சொல்ல விழைகிறான் காதலன். அவன் கொடுக்கும் பரிசு ஒரு காண்டம். அதிர்ச்சி காதலிக்கு மட்டுமல்ல, காதலனுக்கும்தான்!” – இந்த ஒன்லைனரைப் பிடித்து, பரபரவென்று நூல் விட்டு உயர பறக்கிறது பாணா காத்தாடி. களவாணிக்குப் பிறகு வரவேற்கப்பட வேண்டிய இன்னொரு மீடியம் பட்ஜெட் படம்.

காத்தாடி சீசனெல்லாம் சென்னையில் 15 வருடங்களுக்கு முன்பான அற்புதம். இப்போது சென்னைப் பசங்களுக்கு காத்தாடியில் அவ்வளவு பெரிய விருப்பமெல்லாம் எதுவுமில்லை. காத்தாடி மட்டுமல்ல, பம்பரம், கில்லியெல்லாம் கூட கொஞ்சம் கொஞ்சமாக வழக்கொழிந்துக் கொண்டிருக்கிறது.

சாந்தி தியேட்டர் வாசலில் புரட்சிப்புயல் முரளி ரசிகர்மன்றத்தினர், தங்கள் தலைவரின் மகனான அறிமுகநாயகன் அதர்வாவுக்கு அட்டகாசமாக கட்டவுட் வைத்திருக்கிறார்கள்.

ஒரு ஓட்டலில் ஹீரோவையும், ஹீரோயினையும் பார்க்கிறார் முரளி. ஹீரோவைத் தனியாகக் கூப்பிட்டு சொல்கிறார்.

“அந்தப் பொண்ணு மேலே காதல் வந்திருச்சின்னா உடனே சொல்லிடு. இல்லேன்னா என்னை மாதிரி உனக்கும் இதயத்துலே ஓட்டை விழுந்திடும்”

“நீங்க யாரு சார்?”

“நான் இதயம் ராஜா. மெடிக்கல் காலேஜ்லே ஃபைனல் இயர் படிக்கிறேன்” சொல்லிவிட்டு, ஒரு 192 புத்தக நோட்டை எடுத்துக்கொண்டு முரளி கிளம்புகிறார்.

தியேட்டரில் விசிலும், கைத்தட்டலும் ஓய ஐந்து நிமிடங்கள் ஆகிறது. எல்லா காட்சிகளையும் இதுமாதிரி எள்ளல்தன்மையோடே அணுகியிருப்பது இயக்குனரின் புத்திசாலித்தனம்.

சினிமாக்களும், பத்திரிகைகளும் மெட்ராஸ் பாஷை என்ற ஒரு வினோத பாஷையை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். “இன்னாம்மே வாம்மே போம்மே இஸ்த்துக்கிணு வலிச்சுக்கிணு” என்று ஏகப்பட்ட சொல்லாடல்கள் நிறைந்த பாஷை அது. குறிப்பாக சொல்ல வேண்டுமானால் அந்த காலத்து டி.டி.யில் செவ்வாய்க்கிழமை நாடகம் இயக்கிய பார்ப்பனர்கள் உருவாக்கிய கருத்தாக்கம் என்று கூட சொல்லலாம். விசு படங்களின் மெட்ராஸ் பாஷையையும் இங்கே நினைவுப்படுத்திக் கொள்ளலாம். இவர்களுக்கெல்லாம் சென்னை பாஷை இதுதானென்று பேசி நடித்துக்காட்டிய லூசுமோகனை முதலில் உதைக்க வேண்டும். கருணாஸ் பேசி நடிக்கிறார் பாருங்கள். அதுதான் ஒரிஜினல் சென்னைத் தமிழ்.

இஸ்துக்கினி, வலிச்சிக்கினு, நாஷ்டா மாதிரி சொல்லாடல்கள் எல்லாமே சென்னைத்தமிழில் இருக்கும்தான். இல்லையென்று மறுக்கமுடியாது. ஆனால் ஊடகங்களில் கட்டமைத்து வைக்கப்பட்டிருக்குமளவுக்கு லூசுத்தனமான தொடர்மொழியில் இருக்கவே இருக்காது. எங்கள் ஊர் தமிழ் எப்படியிருக்குமென்று மிகச்சரியாக, துல்லியமாக எடுத்துக்காட்டிய படம் ஜனநாதனின் ‘ஈ’. இப்போது ‘பாணா காத்தாடி’. எதைப் பேசுவதற்கு முன்பாகவும் ‘...த்தா’ போட்டுதான் பேசுவோம். சில நேரம் அம்மாவிடம் பேசும்போதே கூட அந்த வார்த்தையைப் போட்டு பேசிவிடுவதுண்டு. பாணா காத்தாடியில் மிகையில்லாத சென்னை வசனங்கள், சென்னைக்காரன் என்ற முறையில் படத்தை மனதுக்கு நெருக்கமாக உணரமுடிகிறது.

ஹீரோ அதர்வா ஸ்கூல் ஸ்டூடண்ட். ஹீரோயின் சமந்தா காலேஜ் ஸ்டூடண்ட். எட்டு வயதில்தான் அம்மா ஸ்கூல்லே சேர்த்தாங்க என்று ஹீரோ ஒரு காட்சியில் சொல்கிறார். சென்னையில் இது சகஜமான ஒன்றுதான். பத்தொன்பது வயதில் +2 படிக்கும் மாணவர்களை இங்கே சகஜமாக காணலாம். அதுபோலவே கவுன்சிலர், போலிஸ் ஸ்டேஷன், யூத்களின் நைட் ரவுண்ட்ஸ் என்று சென்னையை நன்கு அவதானித்து, நச்சென்று பதிவாக்கியிருக்கும் இயக்குனரை மலர்ச்செண்டு கொடுத்து வரவேற்கலாம்.

புதுமுக நாயகன் அதர்வா அட்டகாசம். அழகாகவும் இருக்கிறார். கொஞ்சம் சதைபோட்டு ஆக்‌ஷனில் இறங்கினால் ‘பஞ்ச் டயலாக்’ எல்லாம் அடித்து மிகவிரைவில் நாளைய முதல்வர் ஆகிவிடலாம். சமந்தா. வாவ். குட்டிக் கண்கள். சின்ன உதடுகள். கூர்மையான நாசி. குள்ளமாய், கைக்கு அடக்கமாய். பார்த்த்துமே கன்னத்தைக் கிள்ளி கொஞ்சத்தூண்டும் அழகோ அழகு.

கதையைப் பற்றி பெரியதாக மெனக்கெடவில்லை. ‘காதல்’ படங்களுக்கு கதை எதற்கு? விறுவிறுப்பான திரைக்கதை போதுமே. இந்த ஃபார்முலாவை அப்படியே பிடித்துக்கொண்டு மாஞ்சா போட்டிருக்கிறார்கள். ஆடியன்ஸுக்கு புதுசாக எதையாவது காட்டவேண்டுமென்ற ஆர்வத்தில் குஜராத் காத்தாடி திருவிழாவை காட்டியிருக்கிறார்கள். அவ்வளவாக ஈர்க்கவில்லை.

சமீபத்தில் வந்து பெரிய வெற்றி பெற்ற வெண்ணிலா கபடிக்குழுவின் க்ளைமேக்ஸ் ஷாக் டெக்னிக்கை இயக்குனர் தேர்ந்தெடுத்த்து பெரிய துரதிருஷ்டம். படத்துக்கு பெரிய திருஷ்டி க்ளைமேக்ஸ். ஹீரோ மீது அனுதாபம் வருவதற்குப் பதிலாக இயக்குனர் மீது ஆத்திரம்தான் வருகிறது.

பாணா காத்தாடி – க்ளைமேக்ஸ் வரை தாக்குப்பிடித்து, கடைசிநொடியில் டீலில் அறுபடுகிறது!

10 ஆகஸ்ட், 2010

ஸ்ரீமதி ஜூலியாராபர்ட்ஸ்!

மேலைநாட்டு மிஷனெரி மதத்தில் பிறந்தவர் ஸ்ரீமதி ஜூலியா ராபர்ட்ஸ். ஜார்ஜியா என்ற மிஷனெரி வெறி பிடித்த நாட்டில் பிறந்தவர். நேற்றுவரை நம் புண்ணிய பூமியாம் பாரதத்தின் புராதன புனித மதமாம் ஹிந்து மதம் பற்றி அறியாதவர். ஆனால் இன்றோ தங்கத்தாரகையை விடவும் சிறப்பாக மந்திரங்கள் சொல்கிறார். மனமுருகி பாடுகிறார். எப்படி நடந்தது இந்த அற்புதம்?

’சாப்பிடு, ஸ்ரீராமனை தொழு மற்றும் கண்ணனை காதல் செய்’ (Eat, Prey and Love) என்ற பெயரில் மிஷனெரி மொழித் திரைப்படம் ஒன்று தற்சமயம் மேலைநாட்டு ஆஞ்சநேயர் பக்தர்களால் எடுக்கப்பட்டு வருகிறது. கதைப்படி கதாநாயகி ஸ்ரீமதி ஜூலியாராபர்ட்ஸ் ஆன்மீக அனுபவம் நாடி புண்ணிய பாரதத்துக்கு வருகிறார். அங்கே புனிதமதமாம் நம் ஹிந்துமத்த்தின் அருமை பெருமைகளை உணர்கிறார். இறுதியாக கரசேவைக்கு ஊர் ஊராகச் சென்று பிச்சையெடுத்து செங்கல் சேர்த்து, ஸ்ரீராமருக்கு கோயில் கட்டுவதாக படம் முடிகிறது.

இந்தக் கதையைக் கேட்டு, உணர்ச்சிவசப்பட்டு கதறியழுத ஸ்ரீமதி ஜூலியாராபர்ட்ஸ், இத்தகைய தெய்வீக அனுபவங்களை தரும் புனிதமதமாம் ஹிந்துமதத்தில் இணைந்து ஏன் பக்தமீராவைப் போல கண்ணனுக்கு சேவை செய்யக்கூடாது என்று எண்ணினார். சீர்மிகு அரியானாவுக்கு வந்து அங்கே ஹர்மந்திர் என்ற புண்ணியஸ்தலத்தில் சுவாமிதர்மதேவ் என்பாரிடம் ஆசிபெற்றார். தன்னுடைய குழந்தைகளுக்கு கூட ஸ்ரீராமர், ஸ்ரீபலராமர் போன்ற கடவுளர்களின் பெயரை சூட்டிக் கொண்டார். முழுமையான ஹிந்துவாக மாறி சொர்க்கத்துக்கு செல்பவர்களின் பெயர் பட்டியலில் தன்னையும் இணைத்துக் கொண்டார்.

சுவாமி தர்மதேவ் அவர்கள் ஸ்ரீமதி ஜூலியாவின் இந்த நல்மதமாற்றம் குறித்து கருத்து தெரிவித்திருக்கிறார். படப்பிடிப்புக்காக கோயில் செட் போடப்பட்டிருந்ததாம். அங்கே உடுக்கை சிலம்பு அடித்தபோது ஸ்ரீமதி ஜூலியா ராபர்ட்ஸுக்கு சாமி வந்து ஆடியதாகவும், அதன்பின்னர் சாமியை மலையேற்றி, அவரது கையில் சிகப்புக் கயிறை கட்டி, நெற்றியில் திலகமிட்டதின் மூலமாக மிஷனெரி மதத்தில் அவர் பிறந்த பாவம் கழுவப்பட்டு, புண்ணிய கணக்கு கூடியிருப்பதாகவும் சுவாமி தர்மதேவ் அவர்கள் திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார்.

மிஷனெரி நாடுகளின் குகையான அமெரிக்காவிலேயே புண்ணிய ஹிந்துக்களுக்காக ’ஹிந்து சர்வதேச சங்கம்’ நடத்திவரும் ஸ்ரீமான் ராஜன்சேத், ஸ்ரீமதி ஜூலியாவின் இம்முடிவை வரவேற்றிருக்கிறார். ஸ்ரீமதி ஜூலியாவின் முடிவினைத் தொடர்ந்து ஸ்ரீமதி ஏஞ்சலினா ஜோலி, ஸ்ரீமதி கேட் வின்ஸ்லெட், ஸ்ரீமதி சாரா ஜெசிக்காபார்க்கர் ஆகியோரும் புண்ணிய மதத்தை தழுவிட வேண்டுமென்று 80 கோடி புனிதமக்களாம் ஹிந்துமக்கள் சார்பாக வேண்டுகோள் விடுக்கிறோம்.

ஸ்ரீமதி ஜூலியா ராபர்ட்ஸ் அவர்களை அண்டோமேனியாக்கள் முன்னுதாரணமாக கொண்டு செயல்பட்டால் புண்ணிய பாரதம் வளம்பெறும் என்பது கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை என்பது மாதிரியான பகிரங்க உண்மை. விரைவில் ஸ்ரீமதி ஜூலியாராபர்ட்ஸ் காஞ்சிபுரம் கோயில்களுக்கு வந்து கருவறைகளில் செய்யப்படும் சிறப்புப்பூசைகளை கண்காணித்து, மேன்மேலும் ஹிந்து மதத்துக்கு சேவை செய்யவேண்டுமென்பதே நம்மூர் தேவ அர்ச்சர்களின் எதிர்ப்பார்ப்பு.

மொழிக்கு விழா எடுத்து நாட்டை அழிக்கும் கிருமிகளான திம்மிக்கள் கூட்டம் இனியாவது திருந்தி புண்ணிய மதச்சேவையில் தங்களையும் இணைத்துக்கொண்டு, திருப்பதிக்குச் சென்று மொட்டைபோட்டு ஸ்ரீராம நாமம் பாடவேண்டும். உலக செம்மத மாநாடு நடத்த முன்வரவேண்டும். மூத்த திம்மி செய்வாரா?

9 ஆகஸ்ட், 2010

PUSH - PULL?

சாமானிய சென்னைத் தமிழனுக்கு ஒரு கலவரமான விஷயமொன்று உண்டு. அதாவது கண்ணாடியால் அலங்கரிக்கப்பட்ட கடைக்கதவுகளை கண்டதுமே “ஒருவேளை ரேட்டு கூடுதலாய் இருக்குமோ?” என்று சந்தேகத்தோடே அணுகுவான். எனவேதான் ஐனாக்ஸுகளையும், சத்தியம்களையும் அனாயசமாக புறக்கணிக்கிறான். கிட்டத்தட்ட இதே டிக்கெட் ரேட்டு கொண்ட குரோம்பேட்டை வெற்றிக்கு ஓடுகிறான்.

நமக்கு இந்த ஃபீவர் கொஞ்சம் அதிகமாகவே உண்டு. ஏழெட்டு வருடங்களுக்கு முன்பாக பஸ்ஸில் போகும்போதெல்லாம் வேளச்சேரியில் ஒரு மென்ஸ் பியூட்டி பார்லரை ஏக்கமாகப் பார்ப்பேன். கலரிங், ஹேர்மசாஜ், ப்ளீச்சிங்கெல்லாம் செய்யப்படுவதாக போர்டில் அறிவித்திருக்கும் அதிநவீன ஆணழகுக் கடை அது. அங்கே கட்டிங் + ஷேவிங் செய்துக்கொள்ள எவ்வளவு கட்டணம் என்று தெரியாததால், நீண்டநாட்களாக அந்நிலையத்தை புறக்கணித்து வந்தேன். ப்ளூ கலர் சீட்டுக் கிழிந்த – கடைக்கு பெயர் கூட இல்லாத சலூன் மோகன் அண்ணனிடமே ஒன்றரை மாதத்துக்கு ஒருமுறை சிகை அலங்காரம் நமக்கு வழக்கமாக நடைபெறும். இதற்கான செலவு ரூ.35/- (வரிகள் உட்பட).

நண்பன் ஒருவன் மூலமாக அந்த ஆணழகுக் கடையின் அந்நாளைய ரேட்டை பின்னாளில் அறிய முடிந்தது. குளிர்சாதனவசதி செய்யப்பட்ட அக்கடையில் கட்டிங் + ஷேவிங்குக்கு ரூ.40/- தான் கட்டணமாம். அதாவது மணி அண்ணன் கடையைவிட விட ரூ.5/- தான் அதிகம். கட்டிங் முடித்து ஷாம்பூ போட்டு ஹீட்டரும் முடிக்கு போட்டுவிடுவார்களாம். எனவே அந்த 5 ரூபாயைக்கூட அதிகமென்று சொல்ல ஏதுமில்லை. இப்போது அந்தக்கடை அங்கு இல்லை. என்ன செய்வது? வடை போயே போயிந்தி...

லேண்ட்மார்க் மாதிரி புத்தகக்கடை தொடங்கி சாதாரண ஓட்டல்கள் வரை பலவற்றையும் நாம் அச்சத்தோடு புறக்கணிக்க இந்தக் கண்ணாடி அலங்கரிப்பு மேட்டரே காரணமாக இருக்கிறது. ஆடம்பரத்தை கண்டு அஞ்சுகிறோம்.

முன்பு தேனாம்பேட்டை எல்டாம்ஸ் ரோட்டில் ஒரு டிசைனிங் செண்டரில் வேலை பார்த்து வந்தேன். ஸ்க்ரீன் பிரிண்டிங் தொழில் பிரபலமாக இருந்த காலக்கட்டம் அது. மினி ஆஃப்செட் சந்தைக்குள் நுழைந்துக் கொண்டிருந்தது. விசிட்டிங் கார்ட், லெட்டர்பேட், லோகோ, பிரிண்ட் ஆட் என்று அங்கே டிசைனிங் செய்துக் கொண்டிருந்தோம். ஆட் ஏஜென்ஸி செய்யும் வேலைகளை விட அதிகமாக, ஆனால் கொஞ்சம் குறைந்த விலையில் செய்துத் தந்துக் கொண்டிருந்தோம்.

முதலாளிக்கு நல்ல லாபம். ஆனால் ஆபிஸ் மட்டும் மீடியம் பட்ஜெட் படங்களின் க்ளைமேக்ஸில் வரும் கொடவுனைப் போல கொஞ்சம் டொங்காக இருக்கும். ஒருநாள் முதலாளியிடம் கேட்டேன். “உங்களுக்கு வர்ற லாபம் லெவலுக்கு எங்களுக்கு சம்பளம் கொடுக்கிறதில்லை. அதை விடுங்க. ஆனா ஆபிஸை கொஞ்சம் கண்ணாடி, கிண்ணாடி போட்டு கூலிங் பேப்பரெல்லாம் ஒட்டி, கஸ்டமர்கள் வந்துபோக குஜாலான எஃபெக்ட்டைக் கொடுக்கலாமில்லே?”

முதலாளி சொன்னார். “காசு பிரச்சினையில்லை. பண்ணிடலாம். ஆனா அப்படியெல்லாம் பண்ணோம்னா சாதாரண பிரிண்டர் உள்ளே வரவே தயங்குவானில்லையா?”.

நிஜம்தான். அதே தெருவில் ஆடம்பரமான அலுவலகத்தோடு, பிற்பாடு தொடங்கப்பட்ட சில டிசைன் சென்டர்கள் - எங்களைவிட குறைவான ரேட்டு வாங்கியும் கூட- தொடங்கப்பட்ட வேகத்தோடே மூடப்பட்டு விட்டன. “அங்கேல்லாம் ஏசி போட்டிருக்காங்க சார். அந்த செலவையும் சேர்த்து எங்ககிட்டேதானே வாங்குவாங்க” என்று ஒரு வாடிக்கையாளர் சொன்னார்.

இருப்பினும் ‘ரேட்’ குறித்த அச்சம் கொஞ்சம் அகன்றுவிட்டது. அது எப்படியெனில் ஏதோ ஒரு ஓட்டல் பாரில் முதன்முதலாக பீர் அடித்தபோது கிடைத்த சொகுசுதான் காரணம். இங்கிலீஷ் படங்களில் வருவதைப் போல மிதமான லைட்டிங், யூனிஃபார்ம் போட்ட சிப்பந்திகள், அவித்த வேர்க்கடலை பப்படம் ஃப்ரீ சைட் டிஷ் என்றெல்லாம் அனுபவித்துவிட்டு, பில்லைப் பார்த்தால்.. டாஸ்மாக் செலவை விட கொஞ்சமே கொஞ்சம் அதிகம். (ஹாட்டுக்கு இது வேலைக்கு ஆகாது என்பது வேறு விஷயம்)

எனவே இப்போது எந்த கடைக்குப் போனாலும் கண்ணாடி இருக்கிறதா, கூல் பேப்பர் ஒட்டப்பட்டிருக்கிறதா என்றெல்லாம் பெரியதாக மெனக்கெடுவது இல்லை. வாங்க விரும்புகிற பொருளின் விலையை மட்டும் விசாரித்துவிட்டு, மற்ற சாதாக்கடைகளின் ரேட்டை மனதுக்குள் ‘கம்பேர்’ செய்து கணக்கு போட்டுவிட்டு வாங்கிவிடுகிறேன்.

இங்கே விளம்பரம் செய்வதற்கு ஒரு அடிப்படை விதி உண்டு. இது இந்திய நுகர்வோர் மனநிலைக்கு கச்சிதமாகப் பொருந்தும் – பெரிய பிராண்டுகளுக்கு விதிவிலக்கு. எந்தப் பொருளை விளம்பரப் படுத்தினாலும், விளம்பரத்தில் ‘ரேட்டை’ குறிப்பிட்டுவிட்டால், அவ்விளம்பரம் மற்ற விளம்பரங்கள் ஏற்படும் தாக்கத்தைவிட டபுள் தாக்கத்தை ஏற்படுத்தும். யுனிவர்செல்லைவிட பூர்விகாவின் விற்பனை வருடாவருடம் அதிகரித்துக் கொண்டேச் செல்கிறது என்பதைவைத்து இந்த விளம்பர டெக்னிக்கின் அவசியத்தைப் புரிந்துகொள்ளலாம்.

முன்பெல்லாம் சட்டையோ, பேண்ட்டோ எடுக்கவேண்டுமானால் சரவணாவைத் தவிர வேறு கடை தெரியாது. இப்போது டெர்பீகாரன்கூட விளம்பரத்தில் விலையை குறிப்பிட்டு விடுவதால், அவன் கடைக்கு கண்ணாடி இருக்கிறது, ஏசி போட்டிருக்கிறான், கடைப்பெண் ஏர் ஹோஸ்டஸ் மாதிரி இருக்கிறாள் போன்ற மனத்தடை எதுவுமின்றி நேராக கடைக்குப் போய் எதையாவது வாங்கிவந்துவிட முடிகிறது.

ஆனாலும் இன்றும் கூட எனக்கு கண்ணாடி போட்ட ஆபிஸுக்கு ஏதாவது வேலையாகப் போகும்போது கொஞ்சம் படபடப்பாகத்தான் இருக்கும். வரவேற்பரையில் குஷன் வைத்த நாற்காலியில் உட்காரும்போது கொஞ்சம் அந்நியமாகவே ஃபீல் செய்கிறேன்.

இந்த ஆடம்பர கண்ணாடிக் கதவு விஷயத்தில் பெரிய பிரச்சினை என்னவென்றால் PUSH அல்லது PULL என்று ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார்கள். PUSH என்றால் அமுக்கித் தள்ளவும் என்று பாலாஜீஸ் ஈஸிவே டூ ஸ்பீக் இங்க்லீஷ் புத்தகத்தில் படித்து தெரிந்து கொண்டிருக்கிறேன். PULL என்றால் இழு என்றும் அதே புத்தகத்தில் குறிப்பிடப் பட்டிருக்கிறது. ஆனாலும் ‘PULL – தள்’ என்று மனம், ஏதோ ஒரு ஆங்கிலத்தமிழ் ஒப்பீட்டு வார்த்தை விளையாட்டை விளையாடி குழப்பிவிட்டிருக்கிறது. PULLஅ வேண்டிய இடத்தில் தள்ளித் தொலைத்துவிட்டு பலர் முன்னிலையில் அசிங்கப்பட்டுத் தொலைக்க வேண்டியிருக்கிறது. நம் பர்சனாலிட்டியும் பார்க்க புல் தடுக்கி பயில்வான் மாதிரி இருப்பதால், கண்ணாடிக் கதவோடு PULLU முள்ளு செய்துக் கொண்டிருக்கையில், பார்க்கிறவர்கள் எல்லாம் ஏதோ வாழைப்பழத் தோலில் வழுக்கி விழுந்தவனை பார்த்து சிரிப்பது மாதிரி அசட்டுச்சிரிப்பு சிரித்து தொலைக்கிறார்கள்.

6 ஆகஸ்ட், 2010

பாதுகாப்பானதா ரயில் பயணம்?

பிப்ரவரி 13, 2009, வெள்ளிக்கிழமை.

பாராளுமன்றத்தில் ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்தார் அன்றைய ரயில்வே அமைச்சர் லாலுபிரசாத் யாதவ். இந்திய ரயில்வேத் துறை விபத்தின்றி செயல்பட மேற்கொள்ளப்பட்டுவரும் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பற்றிய விரிவான விளக்கங்களை அள்ளித் தெளித்துக் கொண்டிருந்தார். அவரது உரையில் பெருமிதம் ஒளிர்ந்தது. . நகைச்சுவையாகப் பேசுவதில் வல்லவரான லாலுவின் பேச்சு எதிர்க்கட்சிகளுக்கு சவால் விடும் தொனியைக் கொண்டிருந்தது. அவருடைய பெருமிதத்துக்கும், சவாலுக்கும் காரணமிருந்தது. கடந்து போயிருந்த 2007 மற்றும் 2008 ஆண்டுகளில் பெரிய அளவில் ரயில் விபத்து ஒன்றுகூட நாட்டில் நடைபெற்றிருக்கவில்லை. ஆனால்-

அவரது உரை முடிந்த சில மணி நேரங்களில் புவனேஸ்வருக்கு 120 கிலோ மீட்டர் வடக்கே அந்தப் பெரிய விபத்து நிகழ்ந்தது. இந்திய ரயில்வேயின் பெருமைக்குரிய ரயில்களில் ஒன்றான கோரமண்டல் எக்ஸ்பிரஸ்ஸின் 14 பெட்டிகள் தடம்புரண்டன. ஹவுராவிலிருந்து வெள்ளிக்கிழமை மதியம் கிளம்பிய அந்த ரயில், இரவு 7.50 அளவில் விபத்துக்குள்ளானது.. சம்பவ இடத்திலேயே 14 பேர் மரணம். நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டார்கள்.

அந்த விபத்து ஒரு தொடக்கம்தான். அதைத் தொடர்ந்து, கடைசியாக அண்மையில் ஜூலை 19 அன்று, மேற்குவங்காளத்தின் சைந்தியாவில் நடந்த உத்தரபங்கா எக்ஸ்பிரஸ் விபத்துவரை மொத்தமாக 13 பெரிய விபத்துகள் நிகழ்ந்திருக்கின்றன. .

2010ன் தொடக்கமே இந்திய ரயில்வேக்கு மோசமானதாக அமைந்தது. புத்தாண்டின் இரண்டாம் நாளில், உத்தரப்பிரதேசத்தில் மட்டுமே பனி காரணமாக மூன்று விபத்துகள். மறுநாளும் கூட அருணாச்சல் எக்ஸ்பிரஸ் விபத்துக்குள்ளானது. அம்மாதத்திலேயே மேலும் மூன்று விபத்துகள். நடப்பு ஆண்டின் முதல் 7 மாதங்களில் மட்டும் 11 விபத்துகள். இதற்கு முன் எப்படி என்று பார்த்தோமானால் ஆண்டுக்கு 5 பெரிய விபத்துகள் என்பதுதான் அதிகபட்சம். இந்திய ரயில்வே தனது வரலாற்றில் இவ்வருடம் விபத்துக்களின் எண்ணிக்கையில் சாதனை – மன்னிக்கவும் – வேதனை படைத்திருக்கிறது!

விபத்துகளால் ஏற்படும் பொருளிழப்பைக் கூட விட்டுவிடலாம். மனித உயிரிழப்புக்கு எதைக்கொண்டு ஈடு செய்ய இயலும்? தொடர்ச்சியாக நடந்துவரும் ரெயில் விபத்துகள், மற்றும் விபத்துக்களைக் குறிவைத்து நடத்தப்படும் நாசவேலைகளின் காரணமாக, இனி ரயில் பயணங்கள் பாதுகாப்பானவைதானா? என்ற கேள்வியை ஒவ்வொரு ரயில் பயணியும் தனக்குள்ளே கேட்டுக்கொள்ளும் சூழல் இன்று நிலவுகிறது.

இப்படி அடிக்கடி விபத்துகள் ஏற்பட என்ன காரணம்?


ஊழியர்கள்

2003ஆம் ஆண்டு ரயில்வே அமைச்சராக இருந்த நிதீஷ்குமார் . பாதுகாப்பு குறித்த வெள்ளை அறிக்கை ஒன்றை நாடாளுமன்றத்தில் சமர்பித்தார். அதில் “விபத்துகள் மூன்றில் இரண்டு ஊழியர்களின் தவறுகளால் நிகழ்கிறது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

ஊழியர்கள் தவறு செய்ய அவர்களது பணிச்சுமையும் ஒரு காரணமாக இருக்கலாம். உலகெங்கும் டிரைவர்களின் வேலை நேரம் ஒரு நாளைக்கு 6 மணி நேரம் (வாரத்துக்கு 36 மணி நேரம்) என்றிருக்கையில், ஒரு இந்திய ரயில்வேயின் டிரைவர் குறைந்தபட்சம் 10 மணி நேரம் வேலை பார்க்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. டிரைவர்கள் மட்டுமல்ல, டிராஃபிக் ஊழியர்களும், கார்டுகளும், கேட்மேன்களும் கூட 12 மணிநேரம் வேலைவாங்கப்படுவது சகஜமாக இருக்கிறது.

மற்ற வேலை மாதிரி இல்லை ரயில்வே வேலை. ஒரு ஊழியர் தொடர்ச்சியாக 12 மணி நேரம் வேலை பார்த்தால், அவரை விடுவிக்க இன்னொரு ஊழியர் வந்தாக வேண்டும். வரவேண்டிய ஊழியர் ஏதோ தனிப்பட்ட காரணங்களால் வர இயலவில்லை என்றால் அப்படியே விட்டு விட்டு போக முடியாது. ஏற்கனவே வேலை பார்த்த ஊழியர், அடுத்த 12 மணி நேரமும் சேர்த்து 24 மணி நேரமும் விழித்திருக்க வேண்டிய நிலை. ரயில்வே பணியாளர்களிடம் பேசியபோது 36 மணி நேரங்கள் தொடர்ச்சியாக விழித்து வேலை பார்ப்பதெல்லாம் சகஜம் என்கிறார்கள்.

ஆள்பற்றாக்குறை

ஊழியர்களின் பணிச்சுமையைக் குறைக்க காலியாக இருக்கிற பணியிடங்களை நிரப்பினாலே போதும். இந்திய ரயில்வேயில் 89,000 காலியிடங்கள் இருக்கின்றன. அவற்றில் 20,000 பணிகள் பாதுகாப்பு தொடர்பானவை என்று செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் உண்மையில் காலியிடங்கள் இதைவிட அதிகம் என்கிறார் தெற்கு ரயில்வே தொழிலாளர்கள் யூனியனின் (டிஆர்.இ.யூ) செயல் தலைவரான இளங்கோவன். “தோராயமாக ஒரு லட்சத்து 70 ஆயிரம் காலியிடங்கள் இருக்கின்றன. இவற்றில் சுமார் 80 ஆயிரம் இடங்கள் பாதுகாப்பு தொடர்பான பணிகளில் இருப்பவை.” என்கிறார். தனது கூற்றுக்கு ஆதாரமாக ரெயில்வே அமைச்சர் பாராளுமன்றத்தில் பேசியதைக் குறிப்பிடுகிறார்.

தெற்கு ரயில்வேயில் மட்டுமே பாதுகாப்பு தொடர்பான பணிகளில் 6000 காலியிடங்கள். டிராக்மேன் உள்ளிட்ட ‘டி’ பிரிவு பணியிடங்கள் 35,000 காலியாக இருக்கின்றன..
ஒருகாலத்தில் 20 லட்சம் ஊழியர்கள் இருந்த ரயில்வேயில் இன்று 13 லட்சம் பேர்தான் பணியாற்றுவதாக தொழிற்சங்கங்கள் கூறுகின்றன

தண்டவாளங்கள்

தண்டவாளங்களைப் பொறுத்தவரை தமிழகத்தில் நிலைமை கவலை தருவதாகவே இருக்கிறது.. விழுப்புரம் அருகே ரெயில் தண்டவாளம் குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டது. ஈரோடுக்கு அருகே தண்டவாளத்தில் பாறாங்கல் வைக்கப்பட்டது. சென்னைக்கு அருகே பட்டாபிராம் என்ற இடத்தில் சிமெண்ட் ப்ளேட் வைத்து ரயிலை கவிழ்க்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. கோவை அருகே அடுத்தடுத்து ரெயில்களை கவிழ்க்க தொடர் சதித்திட்டம் மேற்கொள்ளப்பட்டது.

சதித்திட்டங்கள் ஒருபுறம் இருக்க தண்டவாளத்தில் விரிசல் காணப்படுவதும் ரயில் பயணங்களின் பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்துகின்றன. கடந்த மூன்று மாதங்களில் மட்டும் தெற்கு ரயில்வே மண்டலத்தில் 32க்கும் மேற்பட்ட இடங்களில் விரிசல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உதாரணத்துக்கு கடந்த ஜூலை 22, விடியற்காலை ஒரு மணியளவில் உளுந்தூர்ப்பேட்டை அருகே நிகழ்ந்த சம்பவத்தை சொல்லலாம் பு.மாம்பாக்கம் ரயில்வே மேம்பாலத்துக்கு மேலே பாண்டியன் எக்ஸ்பிரஸ் வந்து கொண்டிருந்தது. திடீரென்று ரயிலில் கடுமையான அதிர்வு ஏற்பட, ரயிலின் டிரைவர் உளுந்தூர்பேட்டை ரயில் நிலைய அதிகாரியிடம் தகவல் தெரிவித்திருக்கிறார். விரைந்து சென்று பார்த்தபோது தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. தற்காலிகமாக அது சரிசெய்யப்பட்டு, வந்துகொண்டிருந்த ரயில்கள் மிக குறைவான வேகத்தில் அவ்விடத்தை கடந்தன. விரிசலுக்கு நாசவேலையெல்லாம் காரணமில்லை. வெல்டிங் செய்யப்பட்டதில் ஏற்பட்ட பழுதுதான் காரணமாம்.

தண்டவாளத்தில் விரிசல் ஏற்படுவதற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று சரக்கு ரயில்களில் ஏற்றப்படும் அளவுக்கு அதிகமான சுமை. ஒவ்வொரு ஆண்டும் நஷ்டத்தைச் சந்தித்து வந்த இந்தியன் ரயில்வே முதல் முறையாக லாலு அமைச்சராக இருந்த போது லாபம் ஈட்டியது. அதற்குக் காரணம் சரக்குப் போக்குவரத்து. அப்போதிருந்து ரயில்வே நிர்வாகம் சரக்குப் போக்குவரத்தின் மீது கவனத்தைத் திருப்பியது. நிர்ணயிக்கப்பட்ட அளவிற்கும் அதிக அளவு எடை வேகன்களில் ஏற்றப்படுவதாகச் சொல்லப்படுகிறது. விளைவு தண்டவாளத்தில் விரிசல்.

இந்தப் பிரசினையை ஆராய்ந்து ரயில்வே வெளியிட்ட ஆய்வறிக்கை சரக்கு ரயில்களுக்குத் தனிப்பாதை என்ற தீர்வை முன்வைத்தது. ரயில்வே அமைச்சகமும் இந்தத் தீர்வை ஏற்றுக் கொண்டு 2007-08 பட்ஜெட்டில் தனி இருப்புப்பாதை திட்டத்தை அறிவித்தது. ஆயினும் இதனை நிறைவேற்றுவதில் அது முனைப்புக் காட்டவில்லை

விரிசலுக்கான மற்றொரு காரணம், ஒன்றன் பின் ஒன்றாகக் குறைந்த இடைவெளியில் செல்லும் அதி வேக ரயில்கள். கடந்த சில ஆண்டுகளில் 82 விரைவு ரயில்கள் அதிவேக ரயில்களாக மாற்றப்பட்டிருக்கின்றன. இந்த அதி வேக ரயில்களின் வேகத்தைத் தாங்கும் சக்தி தற்போதுள்ள தண்டவாளங்களுக்கு இல்லை.2020க்குள் பயணிகள் வண்டிகளின் வேகம மணிக்கு 130 கிலோ மீட்டரிலிருந்து 200 கிலோ மீட்டர் வரை இருக்குமாறு அதிகரிப்பதைத் தனது லட்சியமாக அறிவித்திருக்கிறது ரயில்வே. தண்டவாளங்களைப் பலப்படுத்தாமல் அல்லது மாற்றாமல் இதைச் செய்தால் அது தற்கொலை முயற்சியாக முடியும்.

ரோந்துப் பணியை மேற்கொள்வதன் மூலம் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருக்கிறதா அல்லது சதி வேலைகள் நடந்திருக்கிறதா என்பதை முன்கூட்டியே கண்டறிய முடியும். ஆனால் பணியாட்கள் பற்றாக்குறையால் இந்தப் பணி சரியாக நடப்பதில்லை.

மனித வளம் குறைவாக இருக்கும் நாடுகளில் இது போன்ற பணிகளை மேற்கொள்ள அல்ட்ராசானிக் ஒலி அலைகளைப் பயன்படுத்தும் தொழில் நுட்பம் செயல்படுத்தப்படுகிறது. நமது ரயில்வேயில் அண்மைக்காலத்தில்தான் (2000க்குப் பிறகு) இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தொழில் நுட்பம்

’நகரும் அருங்காட்சியகங்கள்’ (Museum on the move) என்று வெளிநாட்டவர் நமது ரயில்களைக் கேலி செய்வதுண்டு. அதற்குக் காரணம் அவை நவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதில்லை. உதாரணமாக இந்த நேரம் (Real Time) எந்த ரயில் எங்கிருக்கிறது என்பதைக் கண்டறிய GIS, GPS. என்ற இரண்டு சிஸ்டம்கள் உலகெங்கும் பயன்படுத்தப்படுகின்றன. GIS கணினி சார்ந்தது. GPS செயற்கைக் கோள் சார்ந்தது, இவற்றை ரயில் என்ஜின்களில் பொருத்திவிட்டால் தான் சென்று கொண்டிருக்கும் தண்டவாளத்தில் வேறு ஏதேனும் ரயில் வந்து கொண்டிருக்கிறதா, நின்று கொண்டிருக்கிறதா என்பதை ரயில் ஓட்டுபவர் கண்டு கொள்ள முடியும். மூடூபனிக்காலத்திலும் சிக்னல்கள் தெளிவாகத் தெரிய LED விளக்குகளைப் பயன்படுத்தலாம். .

இந்தியா தகவல் தொழில்நுட்பத்துறையில் அடைந்திருக்கும் முன்னேற்றத்தை பயன்படுத்திக் கொள்ள ரயில்வே துறை முன்வருமாயின் விபத்துக்களை மட்டுமல்ல, நிர்வாகக் குளறுபடிகள் பலவற்றையும் கூட தவிர்க்கலாம்.

அரசியல் அக்கப்போர்

ரயில் போக்குவரத்துத் துறையை விபத்தின்றி நடத்த வேண்டிய பொறுப்புக் கொண்ட அமைச்சர் மம்தா பானர்ஜி இது போன்ற பிரசினைகளையோ, தீர்வுகளையோ பற்றிப் பேசாமல், விபத்துகளை அரசியலாக்கி வருகிறார். அவரது சொந்த மாநிலமான மேற்கு வங்காளத்தில் அடுத்தடுத்து இரண்டு விபத்துகள் நடைபெற்றிருப்பதால், “எதிர்க்கட்சிகளின் சதி”யென்று மாநிலத்தை ஆளும் மார்க்சிஸ்டுகளின் மீது பாய்கிறார். லாலு அமைச்சராக இருந்த காலத்தில் நிர்வாகம் சரியில்லை என்று வெள்ளை அறிக்கை சமர்ப்பித்ததில் தொடங்கி மம்தாவின் ரயில்வே நிர்வாகம் என்பது அவரது அரசியலையொட்டியே நடைபெறுகிறது

ஒரு விபத்து நடந்தாலே தார்மீகப் பொறுப்பேற்று அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிடும் லால்பகதூர் சாஸ்திரி காலத்து அரசியல் மரபு இன்று இல்லை. ஆயினும் சுதந்திரம் பெற்றதிலிருந்தே எந்த ரயில்வே அமைச்சரின் நிர்வாகக் காலத்திலும் இவ்வளவு எண்ணிக்கையிலான விபத்துகள் நடந்ததில்லை என்பதை மம்தாபானர்ஜி முதலில் உணர்ந்தாக வேண்டும்.

’விபத்தில்லா ரயில்வே. தவறில்லா கருவிகள்’ என்பதே தனது லட்சியமென்று அறிவித்து, இந்த இலக்கை 2020க்குள் அடைய வேண்டும் என்று ரயில்வே நிர்வாகம் பேசிவருகிறது. அதை அடைய வேண்டுமானால் தவிர்க்கப்பட வேண்டியது அரசியல் அக்கப்போர். செய்யப்பட வேண்டியது ஆக்கபூர்வமான சீரமைப்பு.


எக்ஸ்ட்ரா மேட்டர் 1 :

ஏழையின் உயிர் என்றால் அத்தனை அலட்சியமா?

நான் அடிக்கடி சென்னைக்கு வேலைநிமித்தமாக வந்து செல்பவன். திட்டமிடப்படாத பயணம் என்பதால் பெரும்பாலும் ‘அன்ரிசர்வ்ட்’ பெட்டிதான். ரயில் நிலையங்களுக்குள் நுழையும்போது கவனித்திருக்கிறேன் பணக்காரர்கள் பயணிக்கக்கூடிய பெட்டிகள் பெரும்பாலும் நிலையத்துக்குள் நுழைந்ததுமே ஏறுவதற்கு வசதியாக . ரயிலின் மத்தியிலும், ஏழைகள் பயணிக்கும் அன் ரிசர்வ்ட் பெட்டிகள் முதலிலும், கடைசியிலுமாக அமைக்கப்பட்டிருக்கின்றன. போர்ட்டர் வைத்து சுமைகளை கொண்டு வரக்கூடிய வசதி படைத்தவர்களுக்கு நிலையத்தில் நுழைந்ததுமே பெட்டி தயாராக இருக்கும். சுமைகளை தானே சுமந்து செல்ல வேண்டிய நிலையில் இருப்பவர்கள் பல மீட்டர் தூரம் நடந்து சென்று முதல் பெட்டியிலோ, கடைசி பெட்டியிலோ ஏறவேண்டும்.

விபத்துக்கள் நடக்கும் போதும் அதிகம் பாதிக்கப்படுபவை முத்லிலும் கடைசியிலும் இருக்கும் பெட்டிகள்தான். என்றுமே இந்தியாவில் ஏழைகள் உயிர் மட்டும் மிக மலிவு! .

தினசேகரன், போத்தனூர்.


எக்ஸ்ட்ரா மேட்டர் 2:

கடந்த இருபதாண்டுகளில் ரயில் விபத்துகளில் உயிரிழந்தவர்களின் சராசரி எண்ணிக்கை: வருடத்துக்கு 186.

கடந்த 9 மாதங்களில் மட்டும் ரயில் விபத்துக்களில் உயிரிழந்தவர்கள் : 233 பேர்


எக்ஸ்ட்ரா மேட்டர் 3 :

இந்திய ரயில்வேயின் மொத்த இருப்புப்பாதை 64,000 கி.மீ

நவீன பாதுகாப்பு கருவிகள் கண்காணிக்கும் தூரம் சுமார் 1,700 கி.மீ மட்டுமே!


எக்ஸ்ட்ரா மேட்டர் 4 :

“அவர்கள் (மார்க்சிஸ்ட்கள்) மாநிலத்தின் வளர்ச்சியைத் திட்டமிடுவதிலை.ரயில் தண்டவாளங்களின் இணைப்பை அகற்றுவதில் ஈடுபட்டிருக்கிறார்கள். சில ‘தோழர்’கள் அதை அறிவியல்ரீதியாகத் திட்டம தீட்டிக் கொண்டிருக்கிறார்கள்”
-மம்தா பானர்ஜி

“அமைச்சரின் கவனம் முழுவதும் வேறெதிலோ (மே.வங்க அரசியலில்) இருக்கிறது. நாடு அதன் பலனை அனுபவிக்கிறது”
-சீதாராம் யெச்சூரி

(நன்றி : புதிய தலைமுறை)

5 ஆகஸ்ட், 2010

உல்டா!

‘உல்டா’ என்றொரு அழகிய தமிழ் சொல்லாடலை என்னுடைய பதின்ம வயதுகளில் அடிக்கடி கேட்டு சிலாகித்திருக்கிறேன். அப்போதெல்லாம் ஏதாவது வித்தியாசமான காட்சிகள் சினிமாத் திரையில் தெரிந்தால், அப்படியே இங்கிலீஷ்லேருந்து ‘உல்டா’ பண்ணிட்டாண்டா என்று ஸ்பாட்டிலேயே கண்டுபிடித்து ரசிகர்கள் நொங்கெடுத்து விடுவார்கள்.

இதுமாதிரியெல்லாம் நொங்கெடுக்க ‘உல்டா’ ஒன்றும் தீண்டாமை மாதிரி பாவச்செயல் அல்ல. ‘உல்டா’ என்றொரு தொழில்நுட்பம் இல்லாது போயிருந்தால் விஜயகாந்த் இங்கே புரட்சிக்கலைஞர் ஆகியிருக்கவே முடியாது. தென்னாட்டு மைக்கேல் ஜாக்சனாக பிரபுதேவா உயர்ந்திருக்க முடியாது. கமல்ஹாசன் காட்ஃபாதர் ஆகியிருக்க மாட்டார். ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ஆகியிருக்க வாய்ப்பிருந்திருக்காது.

90களில் இதுபோல ’உல்டா’க்களை கண்டறிந்து கட்டுரை எழுதுவது இதழியலின் அத்தியாவசியத் தேவையாகக்கூட இருந்ததுண்டு. ‘வெண்ணிலவே வெண்ணிலவே’ பாட்டு ஹிட் ஆனபோது, மெட்ரோப்ரியா கூட குமுதத்தில், அப்பாடல் எந்த ஆங்கிலப் படத்திலிருந்து பிட் அடிக்கப்பட்டது என்று எழுதியிருந்தார். ‘உல்டா’ காட்சிகளை அமைப்பதில் வல்லவரான இயக்குனர் வசந்தே கூட வெறுத்துப் போய் ‘உல்டா’ என்ற பெயரில் ஒரு அருமையான சிறுகதையை விகடனில் எழுதியிருந்ததாக ஞாபகம்.

அமெரிக்க லத்தீன் இலக்கிய ரசனை கொண்ட என்னுடைய வாசகர்களே! மேற்கண்ட மூன்று பாராகிராப்புகளின் மூலமாக நான் உங்கள் மனதுக்குள் புகுந்து, உங்கள் மனோவோட்டத்தை மாற்ற முயற்சிக்கிறேன் என்பதை இன்னேரம் புரிந்துகொண்டிருப்பீர்கள். நான் ஆயிரக்கணக்கான இலக்கியங்களை படைத்து சோர்வு அடைந்துவிட்டிருப்பது உங்களுக்கு தெரியும்.

சோர்வடைந்தும் தொடர்ச்சியாக பிரிண்டிங் மிஷின் மாதிரி நான் படைப்புகளை படைத்துக்கொண்டே போவதற்கு நான் காரணமல்ல என்பதை நீங்கள் அவசியம் புரிந்துகொள்ள வேண்டும். என்னுள் மார்க்குவேஸும், டால்ஸ்டாயும், தஸ்தாவேஸ்கியும், இன்னும் ஏகப்பட்ட இலக்கிய அஸ்கு புஸ்குகளும் பேயாய் இறங்கி, புயலாய் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

ஏன் என்னால் மட்டும் உலகின் தலைச்சிறந்த எழுத்தாளன் ஆகமுடிந்திருக்கிறது, உங்களால் ஏன் முடியவில்லை என்று தீவிரமாக ரூம் போட்டோ, பாம் போட்டோ யோசித்துப் பாருங்கள். ஏனெனில் நீங்கள் நானில்லை. நான் நினைத்தாலும் அழித்துவிடமுடியாது என்னுடைய பிரபலத்துக்கு காரணமென்ன? ஏனெனில் நான் நீங்களில்லை.

தமிழின் முன்னணி பத்திரிகைகளும், தெலுங்கு பத்திரிகைகளும், கன்னட, மலையாள, அரபி, ஹீப்ரு, லத்தீன், ஜெர்மானிய, பிரெஞ்சு, அல்பேனிய, ஆப்ரகாமிய மற்றும் மூவாயிரத்து சொச்ச மொழிகளில் வெளிவந்துக் கொண்டிருக்கும் பத்திரிகைகளும், அம்மொழிகளில் எழுதிக் கொண்டிருக்கும் எழுத்தாளர்களும் என்னுடைய எழுத்துகளை ‘உல்டா’ அடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அவ்வப்போது கண்டறிந்து எனக்கு மின்னஞ்சல் அனுப்பிக் கொண்டிருக்கிறீர்கள்.

உல்டா தொடர்பான இதுபோன்ற மின்னஞ்சல்கள் எனக்கு ஒரு நாளைக்கு ஒரு லட்சமாவது வருவதால், கூகிள் நிறுவனம் என்னுடைய மின்னஞ்சலுக்கான இடத்தை ஒரு லட்சம் ஜிகா பைட்டாக உயர்த்தியிருக்கிறார்கள். ஷேக்ஸ்பியர் கூட அடையமுடியாத உயரமிது.

இதைப்போலவே என்னைப்போன்ற நோபல்தன்மை கொண்ட மாற்றுமொழி சமகாலப் படைப்பாளிகளுக்கும் அவர்களது படைப்பை நான் உல்டா அடிப்பது தொடர்பாக, அவரவரது ரசிகர்கள் அவரவர்க்கு மின்னஞ்சல் மழை பொழிந்துக் கொண்டிருப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன். அவர்கள் நானாக முடியாது என்றாலும் அவர்களும் எழுதுகிறார்கள் என்றவகையில் அவர்களை மதிக்கிறேன்.

இதுவரையில் இப்பதிவில் பதியப்பட்ட 280 வார்த்தைகளை வாசித்ததில் உங்களுக்கு ஒன்று புரிந்திருக்கும். இதுதான் உண்மை. பேருண்மை. இதை நேரிடையாக ஒப்புக்கொள்ள எனக்கு தயக்கமோ, வெட்கமோ, அருவருப்போ, ஆனந்தமோ, அகஞானமோ, புறத்தேடலோ, வேறு எந்த கருமாந்திரமோ தேவைப்படவில்லை. “உல்டா இன்றி அமையாது உலகு”

4 ஆகஸ்ட், 2010

கிண்டியில் கண்டது!

காலில் செருப்பில்லை. கனவுகள் மிதக்கும் கண்கள். மகனையோ, மகளையோ கையில் பிடித்துக்கொண்டு தயக்கத்தோடு நுழையும் பெற்றோர். முகங்களில் எதிர்ப்பார்ப்பும், கவலையும் சரிவிகிதத்தில். அண்ணா பலகலைக்கழக கேம்பஸ் இன்ஜினியரிங் கவுன்சிலிங் திருவிழா. ஒவ்வொரு ஆண்டும் முகங்கள் மட்டுமே மாறுகிறது. காட்சிகளும், உணர்வுகளும் அதேதான்.

இம்முறை நுழையும்போதே கல்விக் கண்காட்சி கண்ணுக்குப் படுகிறது. கல்லூரிகள் வரிசையாக ‘ஸ்டால்’ அமைத்து மாணவர்களை அசத்துகிறார்கள். ‘தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை கலந்தாய்வுக்கு வரும் மாணவ மணிகளே வருக வருக’வென ப்ளக்ஸ் பேனர்கள். ‘முன்பின் தெரியாதவர்கள் வழிகாட்டுதலைப் பின்பற்ற வேண்டாம்’ என்று ஆங்காங்கே பல்கலைக்கழக நிர்வாகத்தின் எச்சரிக்கைப் பலகை.

மரத்தடிகளில் கையில் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அனாயசமாக விரித்து சிரித்துப் பேசிக் கொண்டிருக்கிறார்கள் பெற்றோர். நம்மூரில் பணம் புழங்கும் சீசன் இரண்டே இரண்டுதான். ஒன்று தீபாவளி. மற்றொன்று பள்ளி, கல்லூரி திறக்கும் ஜூன், ஜூலை. பணம் புழங்கும் இடமென்பதால் யாராவது சமூகவிரோதிகள் உள்ளே நுழைந்து யாரையும் ஏமாற்றிவிடக்கூடாது என்ற எச்சரிக்கையில் போலிஸார் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டு ‘ரவுண்ட்ஸ்’ வருகிறார்கள்.

கோயமுத்தூர் மாவட்டம் சோமனூர் கிராமத்தைச் சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி ஒரு விவசாயி. 1161 மதிப்பெண்கள் பெற்றிருக்கும் மகள் ஆனந்தியோடு வந்திருக்கிறார். “வங்கிக்கடன் வாங்கும் எண்ணம் எதுவுமில்லீங்க. வாங்கினாலும் நாமதான் திருப்பிக் கட்டியாவணும். பொண்ணு மேற்படிப்புக்குன்னு ஏற்கனவே திட்டமிட்டு கொஞ்சம் பணம் சேர்த்திருக்கேன். அதை வெச்சு சமாளிச்சுப்பேன்” என்று வங்கிக்கடன் பெற தயக்கம் காட்டுகிறார்.

இந்த தயக்கமே அவசியமற்றது. நான்கு லட்ச ரூபாய் வரை கடன்பெற பிணை (செக்யூரிட்டி) எதுவும் வங்கிகள் இப்போது கேட்பதில்லை. கடன்பெறுவதற்கான நடைமுறைகளை எளிமையாக்கி இருக்கிறார்கள். வளாகத்திலேயே ஸ்டால்கள் அமைத்திருக்கும் வங்கிகள் விவரங்களை கேட்பவர்களுக்கு விலாவரியாக முகம் சுளிக்காமல் திரும்ப திரும்ப விவரிக்கிறார்கள். இங்கே விவரங்களை கேட்பவர்கள், ஊருக்குத் திரும்பி வங்கியின் அந்த ஊர்கிளை நிர்வாகியை அணுகி கடன் பெற்றுக் கொள்ளலாம். அரசு, கல்விக்கடன் விஷயத்தில் கடந்த சில ஆண்டுகளாக தாராளமயக்கொள்கை காட்டிவருகிறது.

கவுன்சிலிங்குக்கு வரும் மாணவ-மாணவிகளில் (அவர்களின் பெற்றோரும் கூட) நிறைய பேர் பெரும்பாலும் முதன்முறையாக சென்னையைப் பார்க்கிறார்கள். கிராமப்புற வெள்ளந்தித்தனம் அசலாக வெளிப்படுகிறது. ‘அக்கம் பக்கத்துலே கடை கண்ணியே இல்லியே? பட்டணத்துலே இருக்கறவங்க ஆத்திர அவசரத்துக்கு ஒரு சோடா குடிக்கக்கூட பஸ் ஏறி ரொம்ப தூரம் போவணுமோ?’ என்று பட்டணக்காரர்களைப் பற்றி கவலைப்படுகிறார்கள். கிண்டி காட்டுக்கு நடுவில் அமைந்திருக்கும் அண்ணா பல்கலைக் கழகத்தின் அருகில் குடியிருக்கும் ஒரே நபர் மாட்சிமை தாங்கிய கவர்னர் பெருமகனார் மட்டும்தான். எனவேதான் இங்கே கடை, கண்ணிக்கு வாய்ப்பேயில்லை.

ஊரில் பஸ் ஏறி நேராக கோயம்பேடுக்கு வருபவர்கள், பஸ் நிலையத்திலேயே குளித்துவிட்டு பெட்டி, படுக்கையோடு கேம்பஸுக்கு வந்துவிடுகிறார்கள். காலையிலேயே அண்ணா பல்கலைக்கழக வளாகத்துக்கு வந்துவிடுவதால் எங்கும் தங்கவேண்டும் என்று யாருக்கும் தோன்றுவதில்லை. மாலைக்குள் குறைந்தது 3500 பேரின் எதிர்காலம் கவுன்சிலிங்கில் தீர்மானிக்கப்பட்டு விடுகிறது. விரும்பிய கல்லூரியும், படிப்பும் கிடைத்தவர்கள் மகிழ்ச்சியாக இரவே ஊருக்கு கிளம்பிவிடுகிறார்கள்.

சிவகாமி, கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியிலிருந்து வந்திருக்கிறார். மகள் கிருத்திகா 1147 மதிப்பெண் எடுத்திருக்கிறார். “எந்த கோர்ஸூ கெடைச்சா என்ன? எம்பொண்ணு என்ஜினீரிங் படிக்கோணும். அவ்ளோதான்” என்று பெரிய எதிர்ப்பார்ப்பு ஏதுமின்றி சொல்கிறார். குரோம்பேட்டையில் உறவினர்கள் வீடு இருப்பதால், ஆண் துணை ஏதுமின்றி சென்னைக்கு ரயில் ஏறியிருக்கிறார்கள் அம்மாவும், மகளும். இரண்டு நாட்கள் தங்கியிருந்து சென்னையைச் சுற்றிப் பார்த்து ஊருக்கு திரும்புவதாக திட்டம்.

கை நடுங்கிக் கொண்டே படிவங்களை பூர்த்திச் செய்கிறார்கள் மாணவர்கள். “ஒருவேளை தப்பாயிடுமோ?”. நகரங்களில் படித்தவர்களுக்கு இதுமாதிரி தயக்கமெல்லாம் ஏதுமில்லை. அவர்களுக்கு இந்த கவுன்சலிங் கலாச்சாரம் அன்னியமானதாகத் தெரியவில்லை. அண்ணனோ, பக்கத்து வீட்டு அக்காவோ ஏற்கனவே வந்திருப்பார்கள். கவுன்சலிங் என்றால் என்னவென்று அவர்களை விசாரித்து அறிந்து தெம்பாக வருகிறார்கள். பாவம், கிராமப்புற மாணவர்கள்தான் முதன்முதலாக பார்லிமெண்ட் கட்டடத்துக்குள் அடியெடுத்து வைக்கும் இளம் எம்.பி. மாதிரி தயக்கத்தோடு அஞ்சுகிறார்கள்.

கடந்த ஆண்டு பொருளாதார மந்தம் காரணமாக ஐ.டி.துறைக்கு மவுசு குறைந்து இருந்ததாக ஒரு பார்வை தென்பட்டது. இப்போது மீண்டும் சாஃப்ட்வேர் கம்பெனிகள் மீண்டு எழுந்திருப்பதால் மாணவர்கள் பலருக்கும் ஐ.டி.யே சரணம். அடுத்ததாக சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக் துறைகளுக்கு போட்டா போட்டி நடக்கிறது.

பல்லாயிரக் கணக்கில் திரண்டு வருபவர்களுக்கு வசதிகள் பரவாயில்லை. கேண்டீனில் தங்குதடையின்றி உணவு கிடைக்கிறது. ஆங்காங்கே சிண்டெக்ஸ் டேங்க் வைத்து குடிநீர்வசதி. வேறு என்ன வேண்டும்?

அஞ்சாதே!

கவுன்சலிங் என்பது என்ன?

மாணவர்கள் விருப்பப்பட்ட பாடப்பிரிவை, விரும்பும் கல்லூரிகள் தேர்ந்தெடுக்க வகை செய்வதே கவுன்சலிங்.

கவுன்சலிங் எப்படி நடக்கிறது?

• கவுன்சலிங்குக்கு அழைக்கப்பட்ட மாணவர்கள் தங்களுக்கென்று குறிப்பிட்ட நேரத்துக்கு ஒரு மணி நேரம் முன்பாக ரொக்கம் அல்லது வரைவோலையாக (டி.டி) கவுன்சலிங் கட்டணம் கட்ட வேண்டும். பல்கலைக்கழக வளாகத்திலேயே வங்கி இருப்பதால் டி.டி. எடுப்பது சுலபம். ஆனால் நீண்ட வரிசை நிற்கும். எனவே ஊரிலிருந்து கிளம்புவதற்கு முன்பாகவே டி.டி. எடுத்து வந்துவிடுவது நல்லது.

• பணம் கட்டிய வரிசையே உங்களை ஒரு கூடத்துக்கு அழைத்துச் செல்லும். கட்-ஆஃப் மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்களை பிரிவு பிரிவாக பிரித்து வைத்திருக்கிறார்கள். குறிப்பிட்ட பிரிவு மாணவர்களை கவுன்சலிங்குக்கு ஒலிபெருக்கியில் அழைப்பார்கள்.

• மிகப்பெரிய அரங்கம் ஒன்றில் கவுன்சலிங் நடைபெறும். உள்ளே மாணவரோடு, பெற்றோரில் ஒருவர் மட்டுமே உடன் செல்லலாம். கவுன்சலிங் கூடத்தில் நுழைந்ததும், உங்கள் வருகையைப் பதிவு செய்துக் கொள்ள வேண்டும். பதிவு மற்றும் கவுன்சலிங் முடியும் வரை உள்ளே நுழைந்தவர்கள் யாரும் வெளியே செல்ல அனுமதியில்லை.

• மிகப்பெரிய திரையில் காட்டப்படும் காலியிடங்களில் மூன்று பாடப்பிரிவுகள் மற்றும் மூன்று கல்லூரிகளை மாணவர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். கலந்தாய்வின் போது மாணவர்கள் தெரிவு செய்த பாடப்பிரிவு மற்றும் கல்லூரி எக்காரணம் கொண்டும் மாற்றப்பட இயலாதது என்பதை மனதில் வைத்துக் கொண்டு தேர்வு செய்ய வேண்டும். தேர்ந்தெடுத்த பின்பு சான்றிதழ் சரிபார்க்கும் இடத்துக்கு செல்ல வேண்டும்.

• சான்றிதழ் சரிபார்க்கும் இடத்தில் உண்மையான சான்றிதழைக் காட்ட வேண்டும். ஜெராக்ஸ் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

• இறுதியாக நீங்கள் ஏற்கனவே தேர்வு செய்திருந்த கல்லூரி பாடப்பிரிவுகளில் ஒன்றை, கணினியின் முன் அமர்ந்திருக்கும் அலுவலரிடம் தெரிவிக்க வேண்டும்.

• கல்லூரி மற்றும் பாடப்பிரிவு ஒதுக்கப்பட்டு நீங்கள் அழைக்கப்படுவீர்கள். அங்கே நீங்கள் தேர்ந்தெடுத்த கல்லூரிக்கான ஒதுக்கீட்டுப் படிவமும், மீதம் செலுத்த வேண்டியத் தொகைக்கான வங்கிப் படிவமும் வழங்கப்படும். பணத்தை அன்றே செலுத்தலாம். அல்லது கல்லூரிக்குச் சென்றும் செலுத்தலாம்.

• ஒரு சிறிய மருத்துவப் பரிசோதனையும் நடைபெறும்.

கவுன்சலிங்கில் வெற்றி பெற...

சில முன் தயாரிப்புகளோடு போனால் – அதாவது ஹோம்வொர்க் செய்தால் – கவுன்சலிங் மூலம் நல்ல பலனைப் பெறலாம்.

1. என்ன படிப்பு, எந்த கல்லூரியில் என்பதை முன்கூட்டியே எந்தவித குழப்பங்களுக்கும் இடம் தராமல் தீர்மானித்துக் கொள்ளுங்கள். உங்களுடைய திறமை, ஆர்வம், மனோபாவம், சக்தி ஆகியவற்றின் அடிப்படையில் உங்கள் படிப்பினைத் தேர்ந்தெடுங்கள். எல்லோரும் என்ன படிக்கிறார்களோ அதையே நாமும் படிப்போம் என்றோ அல்லது வெறும் வேலை வாய்ப்பு அடிப்படையில் மட்டுமோ என்றோ தேர்ந்தெடுக்காதீர்கள். நான்கு வருடத்தில் வேலைச்சந்தை எப்படி வேண்டுமானாலும் மாறலாம்.

2. கல்லூரியை தெரிவு செய்வதற்கு முன்பாக அக்கல்லூரியில் அடிப்படை வசதிகள், ஆசிரியர்கள், தொழிற்துறையோடு அக்கல்லூரி வைத்திருக்கும் உறவு, வேலைவாய்ப்புக்கான ஏற்பாடுகள் இவற்றையெல்லாம் தெரிந்து கொள்ளுங்கள். http://www.annauniv.edu/ இணையத்தளத்தில் இவ்விவரங்களை விலாவரியாக காணலாம். உதாரணத்துக்கு, நீங்கள் படிக்க விரும்பும் துறையில் கடந்த செமஸ்டரில் எத்தனை பேர் வெற்றி கண்டிருக்கிறார்கள் என்று பாருங்கள். அந்தத் துறையில் அக்கல்லூரி எப்படி என்பதை ஓரளவுக்கு புரிந்துக் கொள்ளலாம். உங்கள் ஊருக்கு அருகில் உள்ள கல்லூரியிலேயே படிக்க வேண்டும் என்று விரும்பினால், அங்கே உள்ள படிப்புகளில் எது சிறந்தது என்பதை கண்டுபிடியுங்கள்.


3. நீங்கள் விரும்பும் படிப்பு அல்லது கல்லூரி கண்டிப்பாக கிடைக்கும் என்று சொல்லமுடியாது. அதனால் உங்களது இரண்டாவது, மூன்றாவது விருப்பங்களை முன்னதாகவே தெரிவுசெய்து வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் ரேங்க், கட்-ஆஃப், இடஒதுக்கீடு ஆகியவற்றின் அடிப்படையில் உங்களுக்கு என்ன கிடைக்கும் என்பதை உத்தேசமாக கண்டறிய முடியும். கடந்த ஆண்டின் ரேங்க் லிஸ்ட் கட்-ஆஃப் பட்டியலைக் கொண்டு ஒரு ஐடியா கிடைக்கும். ஆனால் இது 100 சதவிகிதம் துல்லியமாக இருக்குமென்று சொல்ல முடியாது. வருடத்திற்கேற்ப சிலபல காரணிகளால் மாறக்கூடும். இதைக் கண்டுபிடிக்க சில இணையத்தளங்கள் உதவும். உதாரணம் : http://collegesintamilnadu.com/Counseling/TNEA_Cutoff_Search.asp. உங்கள் மொத்த மதிப்பெண், விரும்பும் படிப்பு, இடஒதுக்கீட்டிற்கு தகுதியானவரா என்ற விபரங்களைக் கொடுத்தால் இந்த இணையதளங்கள் எந்தெந்தக் கல்லூரிகளில் இடம் கிடைக்க வாய்ப்பு உண்டு என்பதைச் சொல்லும். ஆனால் இதெல்லாம் உத்தேசமாக ஒரு ‘ஐடியா’வுக்குதான்.

4. கவுன்சலிங் தொடங்கிய பின்பு ஒவ்வொரு நாள் இரவும் http://www.annauniv.edu/tnea என்ற இணையத் தளத்தில் எந்தக் கல்லூரியில், எந்தப் பிரிவில் எவ்வளவு இடம் நிரம்பியிருக்கிறது போன்ற தகவல்களை உடனுக்குடன் ஏற்றி வைப்பார்கள். இதைத் தொடர்ந்துக் கவனித்து வந்தாலே, உங்கள் முறை வரும்போது என்ன நிலை இருக்கும் என்பதை ஓரளவு யூகித்து தெரிந்துக் கொள்ளலாம்.

இத்தனைக்குப் பிறகும் நீங்கள் விரும்பியது கிடைக்கவில்லை எனில்? சிம்பிள். கிடைத்ததை விரும்ப ஆரம்பியுங்கள்!

(நன்றி : புதிய தலைமுறை)