4 மார்ச், 2007

வாங்க 3க்கு போலாம்!

விளம்பரத் துறையில் “Teaser” என்ற வார்த்தை மிக பிரபலமானது. வாசகர்களை சீண்டும் வாசகங்கள் கொண்ட விளம்பரங்களை தொடர்ச்சியாக வெளியிட்டு அந்த விளம்பரம் என்ன சொல்ல வருகிறது? எந்தப் பொருளை விற்க வருகிறது என்று சஸ்பென்ஸ் கொடுக்கும் விளம்பரங்களை Teaser Ad என்பார்கள். தமிழகத்தில் அனைவருக்கும் தெரிந்த மிகப் பிரபலமான Teaser ad “புள்ளி ராஜாவுக்கு எய்ட்ஸ் வருமா?” என்பதே.
சமீபத்தில் (2005ல்) தமிழகத்தில் பிரபலமடைந்த இன்னொரு Teaser Adம் உண்டு. அது “சண்டேன்னா ரெண்டு” என்ற குறும்பான ஸ்லோகனைக் கொண்ட தினமலருக்கான விளம்பரம். முதல் மூன்று வாரங்களுக்கு வெவ்வேறான சூழ்நிலைகளில், வெவ்வேறான மனிதர்களைக் கொண்டு “சண்டேன்னா ரெண்டு” என்ற வாசகத்துடன் கூடிய விளம்பரங்கள் மட்டுமே வெளிவந்து மக்களை வெறுப்பேற்றியது. இது எய்ட்சு எதிர்ப்புக்கான விளம்பரம் என்றெல்லாம் ஒருவாறாக யூகித்த மக்கள் கடைசியில் அது தினமலர் விளம்பரம் என்றதுமே வெறுத்துப் போனார்கள்.

ஆரோக்கியா பாலின் “அர்ஜீனோட அம்மா யாரு?” Teaser விளம்பரமும் நல்ல கவனம் பெற்ற விளம்பரங்களில் ஒன்று.

மக்களை மட்டுமே Tease செய்யாமல் தங்களது போட்டி நிறுவனங்களை Tease செய்து விளம்பரங்கள் வெளியிடுவதும் உண்டு. கோகோ கோலா – பெப்சி இரு நிறுவனங்களுக்கிடையே ஆன Teaser விளம்பரங்கள் மிகப் பிரபலம். சுமார் 80 ஆண்டுகளாக இரு நிறுவனங்களும் மாறி மாறி மற்றொன்றை கிண்டல் செய்து விளம்பரங்களை வெளியிட்டு வருகிறது. கோகோ கோலா நிறுவனம் பெப்சியை விளம்பரம் செய்து வெறுப்பேற்றுவதற்கென்றே Sprite என்ற புதிய தயாரிப்பு ஒன்றினை அறிமுகப்படுத்தியது. Sprite நிறுவனத்தில் “மசால் வடை ப்ரீ மாமே” விளம்பரம் உங்களுக்கு நினைவிருக்கலாம். பெப்சி இலவசப் பரிகள் தந்துக் கொண்டிருந்த நேரத்தில் பெப்சியை வெறுப்பேற்றவே Spriteக்கு அதுபோன்ற விளம்பரங்கள் உருவாக்கப்பட்டுக் கொண்டிருந்தது. ஆயினும் சும்மா கும்மிக்காக உருவாக்கப்பட்ட Sprite என்ற தயாரிப்பு Barகளில் மிக்ஸிங்குக்கு பக்காவாக செட் ஆகிறது என்ற காரணத்தால் கோக்குமாக்காக ஹிட்டாகி கோகா கோலா நிர்வாகத்தையே ஆச்சரியப்படுத்தியது.

அயல்நாடுகளில் தங்களது போட்டி நிறுவனங்களை கிண்டல் செய்து விளம்பரங்கள் வெளியிடுவது சகஜம். எடக்கு முடக்கான சட்டங்களை கொண்ட இந்தியாவில் அந்த அளவுக்கெல்லாம் செல்ல முடியாது. ஓரளவு லைட்டாக நக்கலடித்து விளம்பரங்களை வெளியிடலாம். பொதுவாக இங்கே வெளியிடப்படும் விளம்பரங்கள் சர்வே முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு தங்களது சகப் போட்டியாளர் தங்களை விட மட்டம் தான் என்று Comparison Chartகளை காட்டி விளம்பரம் போடுவார்கள்.

உதாரணத்திற்கு இங்கே தினமலர் தான் நெ.1 என்று காட்டுவதற்காக ஏராளமான விளம்பரங்களைப் போடும். காலையில் 4 மணிக்கு முன்பே பேப்பர் படிக்கிறவர்களில் 100க்கு 80 பேர் தினமலர் தான் படிக்கிறார்கள். அதிகாலையில் கக்கூசில் தம்மடிக்கும் 100க்கு 95 பேர் தினமலர் தான் படிக்கிறார்கள் என்ற ரேஞ்சுக்கு Category பிரித்து போட்டு தான் தான் நெ.1 என்று விளம்பரங்கள் வெளியிடுவது தினமலருக்கு வாடிக்கை. தினத்தந்தியோ Categoryகளை குறிப்பிடாமல் “மொத்தமா யாருய்யா நெ.1?” என்று கேட்டு தினத்தந்தி நெ.1 என்பதற்கான ஆதாரங்களை வெளியிடும். தினமலர் – தினத்தந்தி விளம்பரப் போர் கடந்த 15 ஆண்டுகாலமாக மிக மிக சுவாரஸ்யமாக நடந்து வருவது எத்தனை பேருக்குத் தெரியும் என்று தெரியவில்லை.

பொதுவாக எந்த Teaser Campaign வரும்போதும் நண்பர்கள் என்னைத் தொடர்புகொண்டு “எந்த கம்பெனி? எந்த Product?” என்று துளைத்தெடுப்பார்கள். நான் விளம்பர ஏஜென்ஸிகளில் வேலை செய்வதால் சுலபமாக சொல்லிவிடுவேன் என்பது அவர்கள் எண்ணம். நானும் பல நேரங்களில் யூகித்தே சொல்லவேண்டியிருக்கிறது. Teaser Ad வெளியிடும் விளம்பர நிறுவனங்கள் இந்த விடயத்தில் மிக மிக கவனமாக செயல்படுவார்கள்.

புள்ளிராஜா Campaign வந்தபோதும் சரி, ஆரோக்கியா, தினமலர் Teaser Campaignகளின் போதும் சரி எனது கணிப்பு சரியாகவே இருந்தது. இப்போது புதிய தலைவலி! ஒரு நண்பன் தொலைபேசி, “மச்சான் அது என்னடா 3க்கு போலாம் வாங்க?” என்றான். எனக்குத் தலையும் புரியவில்லை, காலும் புரியவில்லை. அதன்பின்னரே கொஞ்சம் விளக்கினான். சிலநாட்களாக விஜய் தொலைக்காட்சியில் “வாங்க 3க்கு போலாம்” என்று ஒரு விளம்பரம் வருகிறது. அது எந்த கம்பெனி? என்ன புராடக்ட்? என்று கொஞ்சம் தெளிவாக்கினான்.

நான் தொலைக்காட்சிகளை அதிகமாக பார்ப்பதில்லை என்பதால் ஆரம்பத்தில் கொஞ்சம் புரியவில்லை. நண்பன் குறிப்பிட்ட Teaser விளம்பரங்களை சற்று உற்றுநோக்க ஆரம்பித்தேன். இந்த விளம்பரங்களுக்கு பின்னால் மிகப்பெரிய தொலைக்காட்சி நிறுவனங்கள் இரண்டு ஒன்றுக்கொன்று அடித்துக் கொள்வது அதன் பின்னரே தெரியவந்தது.

சுமார் 14 ஆண்டுகளாக தமிழகத்தின் நெ.1 தனியார் தொலைக்காட்சியாக விளங்கும் சன் தொலைக்காட்சிக்கு சவால் விடும் தொடர் விளம்பரங்களே “வாங்க 3க்கு போலாம்” என்பது. (இது என் யூகம் மட்டுமே, வேறு கம்பெனி விளம்பரமாக இருந்தால் என்னை அடிச்சிடாதீங்க). சன் தொலைக்காட்சிகளில் தொடர்ந்து அரைத்த மாவு நிகழ்ச்சிகளே 14 ஆண்டுகளாகத் தொடர்கிறது. ஆனால் விஜய் தொலைக்காட்சியோ புதிது புதிதாக சிந்தித்து Innovative ஆன நிகழ்ச்சிகளை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது.

விஜய் தொலைக்காட்சி சமீபத்தில் அறிமுகப்படுத்திய “கலக்கப் போவது யாரு” என்ற நிகழ்ச்சி பெரும் வெற்றி அடைந்தது. மக்களின் பெருவாரியான வரவேற்பைத் தொடர்ந்து முடிந்துவிட்ட அந்நிகழ்ச்சியை “கலக்கப்போவது யாரு-2” என்றும் சில மாதங்களுக்கு நடத்தி முடித்தது விஜய் தொலைக்காட்சி.

இந்நிலையில் மெகாசீரியல் மாயையிலிருந்து திடீரென்று முழித்துக் கொண்ட சன் தொலைக்காட்சி “கலக்கப் போவது யாரு” நிகழ்ச்சியில் பங்கு கொண்ட டீமை அப்படியே அழைத்து (துட்டா, மிரட்டலா தெரியவில்லை) விஜய் தொலைக்காட்சியை “பிட்” அடித்து “அசத்தப் போவது யாரு?” என்ற நிகழ்ச்சியை நடத்த ஆரம்பித்திருக்கிறது.

சன் தொலைக்காட்சியின் இந்த கேவலமான போக்கை விமர்சித்தே விஜய் தொலைக்காட்சி சன்னை சீண்டும் வகையில் “3க்கு போலாம் வாங்க” “3 தான் ஒரிஜினல்” என்றெல்லாம் சீண்டல் விளம்பரங்களை வெளியிடத் தொடங்கியிருக்கிறது. “சன்” “மூன்” மேட்டர் புரிகிறதா? “3” என்பது வேறொன்றும் இல்லை. கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியின் 3-ம் பாகத்தையே விஜய் “3” என்று குறிப்பிடுகிறது. இதில் சன்னுக்கு எதிராக “மூன்” என்ற வார்த்தை ஜாலத்தையும் உள்குத்தாக வைத்திருக்கிறது.

அசத்தப் போவது யாரு நிகழ்ச்சியின் மூலமாக சன் தொலைக்காட்சி தனக்குத் தானே சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்டதோ என்று நினைக்கிறேன். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் Trend setter என்ற பலமான இமேஜை தக்கவைத்துக் கொண்டிருந்த சன் தொலைக்காட்சிக்கு இதெல்லாம் தேவைதானா என்று தோன்றுகிறது. மக்களிடையே இன்று சன் தொலைக்காட்சி இந்த கேவலமான போக்கின் காரணமாக ஜோக்கர் ரேஞ்சுக்கு காட்சியளிக்கிறது.

மெகாத் தொடர்களாலும், மகா அறுவை விளையாட்டுகளாலும் தொலைக்காட்சி நேயர்களை சாகடித்துக் கொண்டிருக்கும் ராதிகாவை சன் தொலைக்காட்சியை விட்டே துரத்தினால் தான் நிலைமை சீர்படும் என்ற நிலையிலும் இன்னமும் அவரை வைத்து சன் டிவி மக்களை அறுத்துக் கொண்டிருப்பது ஏனோ தெரியவில்லை.

சன் டிவி பழைய மொக்கை நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களை துரத்தியடித்து விட்டு இளையத் தலைமுறையினருக்கு வாய்ப்பளித்து நிகழ்ச்சிகளை மேம்படுத்த வேண்டும். இல்லையேல் மக்கள் சன் தொலைக்காட்சியை இன்னொரு தூர்தர்ஷனாகத் தான் எதிர்காலத்தில் பாவிப்பார்கள்.