29 செப்டம்பர், 2011

காதலும், கழுதையும்!

முன்னபோனா
முட்டுது
பின்னவந்தா
உதைக்குது

மிஸ்டுகால்
பார்த்து ரிங்குனா
அப்பா இருக்கார்
அப்புறம் பண்ணு

சாயங்காலம்
பாக்கலாமா
சாரி அம்மாவோடு
கோயிலுக்கு போறேன்

நேத்து ஏன்
பார்க்க வரலை
நேரமில்லையா?
நெனைவு இல்லையா?

சிகரெட்டு புடிப்பியா
தண்ணி அடிப்பியா
செருப்பால அடிப்பேன்
தறுதலை

ப்ளூகலர் ட்ரெஸ்
நல்லாருக்கா?
ஏய் அந்த
ப்ளாக் சுரிதாரை
சைட் அடிக்காதே!

புது ரிசப்ஷனிஸ்ட்
என்னைவிட அழகா?
கண்ணை நோண்டிடுவேன்
முண்டக்கண்ணா

சம்பளம் வந்திடுச்சா
மாயாஜால் போலாமா
எம்ஜிஎம் போலாமா
எனக்கு சத்யம் கூட
ஓக்கேதான்

மாப்பிள்ளை
பார்த்திருக்காங்க
செம ஸ்மார்ட்
டேக் ஹோம் 80கே
எனக்கு டபுள் ஓகே

ம்ம்ம்ம்....
ஏற்கனவே கல்யாணம்
ஆனவன் இன்னொருத்தியை
காதலிப்பதை விட ஒரு
கழுதையை காதலிக்கலாம்

எச்சூஸ்மீ..
கீழ்ப்பாக்கம்
எந்த பக்கம்?

28 செப்டம்பர், 2011

மணிவண்ணன்

நானெல்லாம் ‘அ'ன்னா ஆவன்னா படிக்க ஆரம்பித்தபோதே மணிவண்ணன் நன்றாக தமிழில் எழுத ஆரம்பித்து விட்டான். கிளாஸில் யாரோடும் பேசமாட்டான். முண்டகண்ணி கவிதாவுக்கு பக்கத்தில் தான் உட்காருவான். முண்டகண்ணியும் முசுடு, இவனும் முசுடு என்பதால் இரண்டு பேரும் டிஸ்டர்பன்ஸ் இல்லாமல் உட்கார்ந்திருப்பார்கள்.

ஸ்லேட்டில் தினமும் நூற்றியெட்டு வரிகள் எழுதுவான். மிஸ் ப்ளாக்போர்டில் எழுதிப்போடுவதை தான் எழுதுகிறானா என்று எட்டிப் பார்த்தால் ஸ்லேட்டு முழுக்க ஸ்ரீராமஜெயம் எழுதி வைத்திருப்பான். சில நாட்கள் காலையில் எழுத ஆரம்பித்து மதியமே முடித்துவிடுவான். வழியில் வந்தபோது பறித்து வைத்திருந்த கோவைக்காயை டஸ்டராக உபயோகித்து ஸ்லேட்டை க்ளீனாக்கி மதிய உணவுக்கு பிறகு மீண்டும் எழுத ஆரம்பிப்பான் ‘ஸ்ரீராமஜெயம்'

”அ.. ம்.. மா” “ஆ... டு” என்று அப்போதுதான் நாங்கள் எழுத ஆரம்பித்திருந்தோம். இவனுக்கு மட்டும் எப்படி ஸ்ரீராமஜெயம் எல்லாம் எழுதவருகிறது என்று ஆச்சரியம் தான். ஆத்தில் அவன் தோப்பனார் எழுத கற்றுக் கொடுத்தாராம். பாழாப் போன மனுஷன் 'அ. ஆ. இ'யோ, ABCDயோ கற்றுத் தந்திருந்தால் அவனுக்கு உபயோகமாக இருந்திருக்கும்.

நாங்கள் வளர, வளர மணிவண்ணனும் தென்னை மரம் மாதிரி எங்களோடேயே வளர்ந்தான். ஐந்தாவது வகுப்பு வந்தபோது ‘தாஜ்மகாலை ஷாஜகான் கட்டினான்' என்று பென்சிலால் நோட்டில் எழுதிக் கொண்டிருந்தோம். மணிவண்ணனோ மந்திரங்கள், ஸ்லோகங்களை நோட்டில் கிறுக்க ஆரம்பித்தான். தமிழில் தான் எழுதுவான், ஆனால் படித்துப் பார்த்தால் தமிழ் போல இருக்காது. அது சமஸ்கிருதம், உங்கவாவுக்கெல்லாம் புரியாது என்பான்.

எழுத்து, எழுத்து, எழுத்து - அதுதான் மணிவண்ணன். அவன் வாய்திறந்து பேசியதை விட லட்சம் முறை அதிகமாக எழுதியிருப்பான் போலிருக்கிறது. தொடர்ந்து எழுதி, எழுதி பயிற்சி பெற்றிருந்ததால் மணிவண்ணனின் எழுத்துக்கள் முத்து முத்தாக இருக்கும்.

ஸ்ரீராமஜெயமும், ஸ்லோகங்களுமாக வகுப்பறையில் கிறுக்கிக் கொண்டிருந்தாலும் பயல் படிப்பில் கெட்டி. அவன் ஆத்துலே எல்லாரும் படிச்சவாளா இருந்ததால் வீட்டிலேயே எல்லாப் பாடத்தையும் படித்துவிடுவான். நாங்கள் தான் வீட்டிலும் படிக்காமல், கிளாஸிலும் படிக்காமல் ரோட்டில் நின்றோம். எங்க செட்டு கொஞ்சம் ஏடாகூடமான செட்டு என்பதால் எங்களைப் பார்த்தாலே மணிவண்ணனுக்கு பயம். அவன் கொஞ்சம் கலராக வேறு இருப்பான், எங்கள் செட்டிலோ ரொம்பவும் மாநிறமாக இருந்த நான் தான் அதிகபட்ச கலர்.

எக்ஸாம் எழுதும்போது அடிஷனல் பேப்பர் அதிகமாக வாங்குபவன் எங்கள் பள்ளியிலேயே அவன் மட்டும் தான். வாங்கிய பேப்பரையே எழுதமுடியாமல் நாங்களெல்லாம் அவஸ்தை பட்டுக் கொண்டிருக்க அடிஷனல் ஷீட்டாக வாங்கி எழுதிக் கொண்டேயிருப்பான். ஒருவேளை பேப்பர் முழுக்க ஸ்ரீராமஜெயம் தான் எழுதுகிறானோ என்று கூட சந்தேகப்படுவோம். ஆனாலும் தமிழ்ச்செல்விக்கு அடுத்ததாக நல்ல மார்க்கு வாங்குபவன் மணிவண்ணனாகதான் இருப்பான். அவன் அனாயசமாக தேர்வுகளை எழுதித்தள்ள, நாங்களெல்லாம் ரொம்பவும் கஷ்டப்பட்டு ஒவ்வொரு க்ளாஸாக தாண்டிவந்தோம். பத்தாம் வகுப்பு வருவதற்குள் எங்களுக்கெல்லாம் தாவூ தீர்ந்துவிட்டது.

பரவாயில்லை. பத்தாங்கிளாஸ் வந்தபோது மணிவண்ணனுக்கு ரெண்டு, மூன்று நண்பர்கள் சேர்ந்துவிட்டார்கள். ஆனாலும் படிப்பு பற்றி மட்டும் தான் பேசுவார்கள். மாறாக எங்கள் செட்டோ படிப்புத் தவிர்த்து மற்ற எல்லாவற்றையும் பேசிக்கொண்டிருந்தது. தம் அடிக்க ஆரம்பித்தோம். தண்ணியடிப்பது குறித்துக்கூட திட்டங்களை தீட்டினோம்.

இந்நிலையில் தான் எங்கள் செட்டுக்கு பள்ளியில் பெயர் கெட ஆரம்பித்தது. டாய்லெட்டில் காவேரி டீச்சர் குறித்து ஆபாசமாக கரியில் யாரோ எழுதிவைக்க அது எங்கள் செட்டில் ஒருவன் தான் என்று பி.டி.மாஸ்டருக்கு சந்தேகம். நேரம் கிடைக்கும் போதெல்லாம் எங்களை அடித்து, உதைத்து யாருடா எழுதினது என்று போலிஸ் இன்ஸ்பெக்டர் மாதிரி மிரட்டிக் கொண்டிருந்தார். இவரது மிரட்டலும், அடி உதையும் அதிகமாக, அதிகமாக பிடி மாஸ்டரை, காவேரி டீச்சரோடு இணைத்து இன்னும் பச்சையாக ஸ்கூல் காம்பவுண்டில் கரியில் எழுதப்பட்டது.

”நான் எழுதலை, ஒருவேளை சேகர் எழுதியிருப்பானோ? செந்தில் எழுதியிருப்பானோ” என்று என் நண்பர்கள் மீதே நான் சந்தேகப்பட, அவன்களோ ‘ஒருவேளை குமார் எழுதியிருப்பானோ?” என்று என் மீது சந்தேகப்பட.. எங்களது பரஸ்பர புரிந்துணர்தல் கேள்விக்குறியானது.

”டாய்லெட்டுலே அசிங்கமா எழுதினவன் மாட்டிக்கிட்டாண்டா” சாப்பிட்டுவிட்டு க்ளாஸ் ரூமிலேயே குட்டித்தூக்கம் போட்டுக் கொண்டிருந்த எங்களை சுருளி சுரேஷின் குரல் தட்டி எழுப்பியது. பதட்டப்பட்டு எழுந்த நான் பக்கத்தில் சேகரும், செந்திலும் இருக்கிறார்களா என்று செக் செய்துக் கொண்டேன். ரெண்டு பேரும் இருந்தார்கள். அப்போ எழுதினது வேற ஒரு காவாலி!

ஹெட்மாஸ்டரின் ரூமில் முட்டி போட்டுக் கொண்டிருந்தவன் வேறு யாருமல்ல! நம்ம மணிவண்ணனேதான். அடப்பாவி ஸ்ரீராமஜெயம் எழுதற கையாலே இப்படியெல்லாம் எழுதியிருக்கானே என்று ஸ்கூலே ஆச்சரியப்பட்டது, அதிர்ச்சியடைந்தது. எந்த புத்துலே எந்த பாம்போ என்று நினைத்துக் கொண்டோம். நாங்களெல்லாம் காவேரி டீச்சர் குறித்து வெளிப்படையாக கமெண்டு அடிக்க, பேசமுடியாமல் எல்லாவற்றையும் மனதுக்குள் போட்டு வைத்திருந்த அவனோ டாய்லெட்டில் எழுதி தன் மன அரிப்பை தீர்த்துக் கொண்டிருக்கிறான்.

அதன்பின்னர் அவனை வகுப்பறை தவிர்த்து வெளியே அவ்வளவாக காணமுடியவில்லை. தலைகுனிந்தே பள்ளிக்கு வருவான், போவான். யாரிடமும் பேசமாட்டான். பத்தாவது பொதுத்தேர்வு வந்தது. ஒருவரையொருவர் காப்பி அடித்து எங்கள் செட்டு ஓரளவுக்கு தேறியது. நல்ல மார்க் வாங்கிய அவனோ, எங்கள் பள்ளியிலேயே மேல்நிலையை தொடராமல் வேறு பள்ளிக்கு டி.சி. வாங்கிப் போய்விட்டான். அவன் பட்ட அவமானம் இன்னும் ஒரு ரெண்டு வருடத்தை எங்கள் பள்ளியில் கழிக்க இயலாமல் செய்துவிட்டது.

* * * * * *

பஞ்சாயத்து போர்டில் ஒருவன், விளம்பர நிறுவனத்தில் ஒருவன், சொந்தமாக மெடிக்கல் ஷாப் வைத்திருப்பவன், லெதர் பிசினஸ் செய்பவன், கந்துவட்டி விடுபவன், பத்திரிகைக்காரன் என்று எங்கள் பள்ளி நண்பர்கள் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வேலையில் இப்போது செட்டில் ஆகிவிட்டோம். எப்போதாவது யாருக்காவது கல்யாணம், காட்சி என்றால் மட்டும் சந்திப்பதுண்டு. மணிவண்ணனை அதன்பின்னர் யாருமே கண்டதில்லை.

‘அவன் நிதி ஸ்கூல்லே படிக்கிறான்' ‘காலேஜ் சேந்துட்டான்' ‘பம்பாயிலே ஒரு பெரிய வேலையிலே இருக்குறான்' ‘மெட்ராஸிலேயே சொந்தக் கம்பெனி ஆரம்பிச்சிட்டான்’ என்று அவ்வப்போது அவன் குறித்து செய்திகள் தெரியவருமே தவிர்த்து அவனோடு யாருக்கும் எந்த தொடர்பும் இல்லாமல் தான் இருக்கிறோம்.

எனக்கு மட்டும் நன்றாக தெரியும். அவனால் எதையாவது எழுதாமல் இருக்க முடியாது. ஏதாவது எழுதிக்கொண்டோ, கிறுக்கிக் கொண்டோ தானிருப்பான். யாருக்கு தெரியும்? ஒருவேளை இப்போது பிளாக்கிலோ, கூகிள் பஸ்ஸிலோ, ஃபேஸ்புக்கிலோ, ட்விட்டரிலோ யாரையாவது அவதூறாக, ஆபாசமாக திட்டிக் கொண்டிருக்கலாம்.

27 செப்டம்பர், 2011

மொக்கை ஃப்லிம் க்ளப்

2007 இறுதியா அல்லது 2008 ஆரம்பமா என்று சரியாக நினைவில்லை. மொக்கைப் படங்களின் படுதீவிர ரசிகர்களான நானும், தோழர் கிங் விஸ்வாவும் திடீரென அறச்சீற்றம் கொண்டோம். உப்புமா படங்களை மக்கள் தியேட்டர்களுக்குச் சென்று பார்ப்பதில்லை. திருட்டு டிவிடியிலோ அல்லது டிவியிலோ பார்த்துத் தொலைத்து விடுகிறார்கள். மொக்கைப்பட தயாரிப்பாளர்களின் வீட்டு கேஸ் ஸ்டவ்வில் பூனைகள்தான் தூங்குகிறது. ஏதாவது செய்யணும் பாஸூ.

இந்த சீரிய சிந்தனையின் விளைவாகதான் தொடங்கப்பட்டது மொக்கை ஃப்லிம் க்ளப். எத்தகைய மரண மொக்கைப் படமாக இருந்தாலும் சரி. முதல் நாளே தியேட்டருக்குச் சென்று, சூப்பர் ஸ்டார் படங்களுக்கான ஆரவாரத்தோடு ரசிப்பது என்பதை எங்கள் கொள்கையாக வரையறுத்தோம். தமிழ் மட்டுமின்றி ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என்று மொழிபாகுபாடின்றி மொக்கைப்படங்களை ஆதரிப்பது என்பதாக சபதமும் மேற்கொண்டோம். குறிப்பாக தோழர் கிங்விஸ்வா தெலுங்கு மொக்கைப்படங்களின் தீவிர வெறியர். பிரின்ஸ் மகேஷ்பாபுவின் ஒக்கடு ரிலீஸ் ஆனபோது அவரது ஈமெயில் ஐடி பிரின்ஸ்விஸ்வா@ஜிமெயில்.காம் ஆக இருந்தது. நாகார்ஜூனாவின் ‘கிங்’ ரிலீஸின் போது கிங்விஸ்வா@ஜிமெயில்.காம் ஆக உருமாறியது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். மரணமொக்கைப் படங்களாக தேர்ந்தெடுத்து, கண்டுகளித்து வலைப்பூவில் விமர்சனம் எழுதி, மற்றவர்கள் தாலியறுப்பது எங்கள் திட்டம்.

உன்னத நோக்கத்தோடு தொடங்கப் பெற்றாலும், ஆரம்பத்தில் க்ளப் ரொம்ப மொக்கையாகவே செயல்பட்டது. ஆளே இல்லாத தியேட்டர்களுக்கு போய் எக் பஃப்ஸ் சாப்பிட்டோம். பிற்பாடு தோழர் அதிஷாவும் எங்கள் க்ளப்பில் இணைந்தபிறகு சூடு பிடிக்க ஆரம்பித்தது. உட்லண்ட்ஸ், காசினோ, மோட்சம், பைலட், கிருஷ்ணவேனி, அண்ணா, கே.கே.நகர் விஜயா போன்ற ரெண்டுங்கெட்டான் தியேட்டர்கள்தான் எங்களுக்கு வேடந்தாங்கல். மொக்கைப் படங்கள் என்று தேர்ந்தெடுத்துப் பார்க்கும் சிரமத்தை எங்களுக்கு தராமல், தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் தயாரிக்கும் எல்லாப் படங்களுமே மொக்கையாக அமைந்துவிட்ட காரணத்தால், தேர்ந்தெடுக்கும் பணி சுளுவானது. இன்றுவரை நாங்கள் பார்த்த படங்களிலேயே சிறந்த மொக்கைப் படமாக ‘பொக்கிஷம்’ விளங்குகிறது (கருமாந்திரத்தை பிளாக்கில் டிக்கெட் வாங்கிப் பார்த்தோம் என்பது குறிப்பிடத்தக்கது).

அதற்குப் பிறகு எங்களது வட்டம் விரிவடைந்தது. கவிஞர் தா.பி. அவராகவே கழுத்தில் மாலை போட்டுக்கொண்டு வந்து சேர்ந்தார். அதிர்ஷ்டவசமாக அவர் வந்தபிறகு தொடர்ச்சியாக நாங்கள் பார்த்த படங்கள் அனைத்துமே ‘சன்பிக்சர்ஸ் கலாநிதிமாறன் பெருமையுடன் வழங்கும்’ படங்கள் என்பதால் மொக்கை சூடு பிடித்தது. சன்பிக்ஸர்ஸின் படங்கள் அவரது கவிதைகளைவிட மொக்கைகளாக அமைந்ததை கவிஞரால் ஏற்றுக்கொள்ளவே இயலவில்லை. இதனால் வெள்ளிக்கிழமை தோறும், நாங்கள் போன் செய்து கூப்பிடும்போது கவிஞருக்கு டைபாய்டும் வந்து தொலைத்தது. கோயமுத்தூரிலிருந்து புளிச்சோற்றை மூட்டை கட்டிக்கொண்டு டாக்டர் அ.கொ.தீ.க.வும் சென்னைக்கு வந்து, அவ்வப்போது மொக்கைப்பட ஜோதியில் கலந்துகொண்டார். பைலட் தியேட்டருக்கு அழைத்துப்போய் ஹாலிவுட் தமிழ் டப்பிங் மொக்கைகளை ரெண்டு பீஸு சாம்பிள் காட்டியதிலிருந்து, அலுவலகரீதியாக கூட இப்போதெல்லாம் டாக்டர் சென்னைக்கு வருவதில்லை.

சமீபத்தில் ஆறு மாத காலத்துக்கு முன்பாக நம் க்ளப்பில் இணைந்தார் சூப்பர் ஸ்டார் தியேட்டர் டைம்ஸ். இயல்பாகவே இவரிடம் மொக்கைத்தன்மை கைகூடி இருந்ததால், எங்கள் க்ளப்பின் அசைக்க முடியாத ஆணிவேராக அமைந்தார். தமிழ்ப்படம் பார்ப்பதாக இருந்தாலும் கூட இவருக்கு சப்-டைட்டில் அவசியம். தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், ஸ்பானிஷ், பிரெஞ்சு, மாண்டரீன் என்று எந்த மொழியுமே இவருக்குப் புரியாது என்பதுதான் இவருடைய ஸ்பெஷாலிட்டி. படுசோகமான காட்சிகளில் விழுந்து விழுந்து சிரிப்பதும், வயிற்றைப் பதம் பார்க்கும் காமெடிக் காட்சிகளை உருகிப் போய்ப் பார்ப்பதுமாக இவரது ரசனையே அலாதியானது.

எங்கள் டீமுக்கு லேட்டஸ்ட் வரவு நரேன். அல்பசினோ, ராபர்ட் டீநீரோ, டிண்டோ ப்ராஸ் என்று ஆங்கிலமாய் அலட்டிக் கொண்டிருந்தவரை, “வாய்யா முனி பார்க்கலாம்” என்று உட்லண்ட்ஸுக்கு தள்ளிக்கொண்டு போனோம். இப்போது ‘மங்காத்தா ஈஸ் த பெஸ்ட் மூவி இன் த வேர்ல்டு. ஒய் ஐ சே திஸ்...’ என்று பெசண்ட் நகர் பரிஸ்டாவில், பீட்டர்களோடு பீலா விட்டுக் கொண்டிருக்கிறார்.

மொக்கை ஃப்லிம் க்ளப்புக்கு இதுவரை பொருளாதாரரீதியான பிரச்சினைகள் ஏதும் வந்து தொலைக்கவில்லை. ஏனெனில் ஒன்று முதல் பத்து தேதிகளுக்குள் 50 ரூபாய் டிக்கெட், பத்து முதல் இருபது தேதிகளுக்குள் 30 ரூபாய் டிக்கெட், இருபது முதல் முப்பது தேதிக்குள்ளாக இருந்தால் 10 ரூபாய் டிக்கெட் என்று பக்காவாக பட்ஜெட் போட்டு படம் பார்க்கிறோம்.

க்ளப்பில் சேர விரும்பும் திரைப்பட ஆர்வலர்கள் திறந்தமனதோடு வரவேற்கப்படுகிறார்கள். ஒரே ஒரு கண்டிஷன். இந்த க்ளப்பின் உறுப்பினர் கடுமையான மொக்கைச்சாமி என்பதற்கான போதுமான சான்றிதழ்களும், சம்பவங்களும், தரவுகளும் அவசியம்.

எங்கள் மொக்கை ஃப்லிம் க்ளப் சோர்வில்லாமல் இயங்கிவருவதற்காக, மிகச்சரியான இடைவெளிகளில் குருவி, வில்லு, வேட்டைக்காரன், காவலன் என்று மொக்கைப்படங்களாக நடித்துத் தள்ளுபவரும், எங்களை வாழவைக்கும் தெய்வமுமான டாக்டர் அணிலுக்கு கோடானுகோடி நமஸ்காரங்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

லேட்டஸ்ட் மொக்கை டிப்ஸ் : மொக்கைப் படங்களுக்கு சிகரமாய் லேட்டஸ்டாக வெளிவந்திருக்கும் ஹாலிவுட் தமிழ் டப்பிங் திரைப்படம் ஏலியன்ஸ் விஸ் அவதார். இப்படத்தைக் காணநேரும் மொக்கைரசிகர்களுக்கு நெஞ்சிலிருந்து (ஸ்பெல்லிங் மிஸ்டேக்) ரத்தம் வழிவது நிச்சயம். படம் பார்க்கும்போது கையில் பஞ்சும் அவசியம். எனவே, காணத்தவறாதீர்கள்!

26 செப்டம்பர், 2011

Dookudu – Daring & Dashing

போனவாரம் வரை விஜய்க்கும், சல்மான்கானுக்கும் பயங்கர டென்ஷன். நகம் கடித்தபடியே காத்துக் கொண்டிருந்தார்கள். மனதுக்குள் இஷ்டதெய்வத்தை வேண்டிக் கொண்டார்கள். அவர்களுடைய படம் வெளிவரும்போது கூட இவ்வளவு மெனக்கெட்டதில்லை.

மகேஷ்பாபுவின் டோக்குடுவுக்குதான் இவ்வளவு டென்ஷன் (Dookudu என்பதை தமிழில் எப்படி பிரனவுன்ஸ் செய்வது?). ஏற்கனவே மகேஷ்பாபுவின் ‘போக்கிரியை’ தமிழிலும், இந்தியிலும் முறையே விஜய்யும், சல்மானும் உல்டா அடித்து, பிளாக்பஸ்டர் பார்த்தவர்கள். தெலுங்குகாரர்கள் கடந்த ஆறு மாதங்களாக ‘அடுத்த போக்கிரி’ என்று அலறுவதைப் பார்த்துதான் படத்தின் ரிசல்ட்டுக்காக தேவுடு காத்துக் கொண்டிருந்தார்கள்.

ரிசல்ட் பக்கா. இதுவரை தெலுங்கு சினிமா சென்றிராத உயரங்களுக்கு டோக்குடு போயிருக்கிறது. சுமார் முப்பத்தைந்து கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருக்கும் படம், முதல்நாளே ஆந்திராவில் பத்து கோடி ரூபாய் வசூலை வாரிக்கொட்டிக் கொண்டு கோலிவுட்டையும், பாலிவுட்டையும் அச்சுறுத்தியது. டோலிவுட்டுக்கு வாராது வந்த மாமணியாய் வாய்த்த மகாதீராவை அசால்டாக வசூலில் பின்னுக்கு தள்ளிவிடும் என்று கணிக்கிறார்கள் தெலுங்கு பிசினஸ் ஆட்கள். மகாதீரா அமெரிக்காவில் முதல்நாள் நாலரை கோடி வசூலித்து அசத்தியதாம். டோக்குடுவின் முதல்நாள் அமெரிக்க வசூல் மட்டும் ஆறரைக் கோடி.

ஹீரோ மகேஷ்பாபுவுக்கு இப்படத்தின் வெற்றியில் எந்த சந்தேகமும் இல்லை. அவருக்கு இயக்குனர் சீனு வைத்லா மீது அப்படியொரு நம்பிக்கை. சொல்லிக் கொள்ளும்படியான தோற்றமோ, பெரிய நடிப்புத் திறமையோ இல்லாத ரவிதேஜாவையே மாஸ் மகாராஜா ஆக்கியவர் சீனு. அவருடைய துபாய் சீனு இன்றுவரை ஆந்திராவின் ஏதோ ஒரு தியேட்டரில் விசில் சத்தத்தை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது.

1999ல் தன்னுடைய 24வது வயதில் ஹீரோவானார் மகேஷ். முதல் படம் ராஜகுமாரடு (ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தால் பிரின்ஸ்). அப்போதிலிருந்து ‘பிரின்ஸ்’ என்று ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். முராரி, ஒக்கடு, அத்தடு, போக்கிரி என்று அடுத்தடுத்து ஐந்து வருடங்களில் நான்கு சூப்பர் டூப்பர் ஹிட்டுகளை கொடுத்த மகேஷ்பாபு, இம்மாதிரியான ஒரு வெற்றிக்காகதான் இவ்வளவு நாட்களாக பொறுமையாக காத்திருந்தார். ஹீரோவாக நடிக்கத் தொடங்கி பதினாறாவது படம் டோக்குடு. போக்கிரிக்கு பிறகு சைனிக்குடு, அதிதி, கலேஜா என்று ஹாட்ரிங் படங்கள் வசூலில் டூமாங்கோலி ஆகியதால் இப்படத்தின் வெற்றி, போக்கிரியின் வெற்றியை விட மகேஷ்பாபுவுக்கு முக்கியமானது.

அப்படியென்ன அப்பாடக்கர் படம் இதுவென்றுப் பார்த்தால், நத்திங் ஸ்பெஷல். மிக சாதாரணமான மசாலா படம். கதையோ, திரைக்கதையோ எந்தவகையிலும் மற்ற படங்களில் இருந்து மாறுபடவில்லை. ஆனாலும் டைட்டில் தொடங்கி, க்ளைமேக்ஸ் வரை ஜிவுஜிவுவென்று ஒரு ‘டெம்போ’வை தக்கவைத்திருப்பதுதான் இயக்குனரின் சாமர்த்தியம். கே.வி.குகனின் கேமிரா, ஒரு சாதாரணப் படத்தை எவ்வளவுக்கு எவ்வளவு ‘ரிச்’சாக காட்ட முடியுமோ, அவ்வளவுக்கு அவ்வளவு காட்டுகிறது. குறிப்பாக இண்டர்வெல் ப்லாக் ஆக்‌ஷன், இந்தியத் திரைப்படங்களின் தொழில்நுட்பத் தேர்ச்சிக்கு நல்ல எடுத்துக்காட்டு.

விறுவிறுவென்று ஆக்‌ஷன் காட்சிகளால் தொடக்கம் பெறும் எந்த ஒரு மசாலா திரைப்படமுமே, செண்டிமெண்ட் காட்சிகளின் போது தொங்கிவிடுவது இயல்பானதுதான். இந்த தொங்கல் ஏரியாவை செப்பனிடுவதில்தான் ஒரு கமர்சியல் இயக்குனரின் திறமை வெளிப்படுகிறது. செண்டிமெண்ட் என்பதால் ரசிகன் அழுது வடியவேண்டும் என்று இப்படத்தின் இயக்குனர் எதிர்ப்பார்க்கவில்லை. ரசிகன் கண்கலங்கிவிடக் கூடாது என்பதில் சீனு வைத்லா உறுதியாக இருந்திருக்கிறார். பாசப்போராட்டக் காட்சிகளில் ஏன் அழுதுவடிய வேண்டும், சிரித்தால் என்ன முத்தா கொட்டிவிடும்? - லேட்டரலாக திங்க் செய்து பார்த்திருக்கிறார். இந்த காட்சிகளில் பிரம்மானந்தத்தையும், நாராயணாவையும் சொருகு. தியேட்டரில் எவன் அழுகிறான் என்று பார்த்துவிடுவோம். செண்டிமெண்ட் முடிந்ததும் ரிவென்ஜ், மீண்டும் ஆக்‌ஷன். அதை மகேஷ்பாபு பார்த்துக் கொள்வார். இடையிடையே சமந்தா, ரொமான்ஸ், கலர்ஸ், டான்ஸ்... இந்தப் படம் ஹிட் அடிக்காவிட்டால்தான் ஆச்சரியம்.

சமந்தா. வெள்ளெலி மாதிரி இருக்கிறார். கொஞ்சம் ஒல்லியான காண்வெண்ட் பெண் தோற்றம். ஃப்ளாட்டான, கவர்ச்சி மடிப்புகள் ஏதும் காணப்படாத வெள்ளை வெளேர் ஃப்ளோர் டைல்ஸ் இடை. வழக்கமாக ஹீரோயின்களிடம் நாம் எதிர்ப்பார்க்கும் கவர்ச்சியான ‘பெரிய’ சமாச்சாரங்கள் ஏதும் இவரிடம் இல்லை. ஆனால் கருகருவென மைபூசிய அவரது கண்கள், அளவெடுத்து செய்தமாதிரியான மூக்கு, அசத்தல் வடிவிலான உதடுகளென்று குழந்தைத் தனமான முகம்தான் சமந்தாவின் ப்ளஸ் பாயிண்ட்.

பிரம்மானந்தம், நாராயணா காமெடிக்கு இன்னும் பத்து ஆண்டுகளுக்காவது தெலுங்கு ரசிகர்கள் சிரித்துக்கொண்டே இருக்கப் போகிறார்கள். ஹீரோவிடம் அடி வாங்குவதுதான் பிரம்மானந்தத்தின் வழக்கமான காமெடி. இந்தப் படத்திலும் அடிதான் வாங்குகிறார். கவுண்டமணியிடம் செந்தில் எத்தனைமுறை அடிவாங்கினாலும் நாம் சிரிக்கிறோமில்லையா, அதேமாதிரிதான் மனவாடுகளும் சிரிக்கிறார்கள்.

நாராயணா கேரக்டர், தெலுங்கு சினிமாவின் அத்தனை ஹீரோக்களின் டவுசரையும் ஒட்டுமொத்தமாக கயட்டுகிறது. படம் முழுக்க தெலுங்கு சினிமாக்கள் குறித்த ஒரு சுயபகடி இருந்துக்கொண்டே இருக்கிறது. முன்னதாக ராம்கோபால் வர்மாவின் அப்பள ராஜூ ஒட்டுமொத்தமாக தெலுங்கு சினிமா இண்டஸ்ட்ரியை கேலி செய்தது. அது வன்மமான காமெடி என்று இண்டஸ்ட்ரி மொத்தமும் ராம்கோபால் வர்மா மீது பாய்ந்தது. டோக்குடு இயக்குனரையும் ஆர்.ஜி.வி. அப்பளராஜூவில் கிண்டலடித்திருந்தார். அதற்குப் பதில் சொல்லும் விதமாக, ராம்கோபால் வர்மாவுக்கு பாடமெடுக்கும் விதமாக நோகாமல் தெலுங்கு சினிமாவை நொங்கெடுப்பது எப்படியென்று சீனு படமெடுத்துக் காட்டியிருக்கிறார். குறிப்பாக ராம்கோபால் வர்மா போட்டோவையே கூட பயன்படுத்தி காமெடி செய்திருக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். அதுபோலவே பாடல்காட்சிகள் முழுக்க மகேஷ்பாபு தன்னுடைய ரெகுலர் பாடிலேங்குவேஜை மறந்துவிட்டு, மற்ற ஹீரோக்களை இமிடேட் செய்து ‘லொள்ளு சபா’ செய்கிறார். ஒரு பாடலில் ரவிதேஜா பாணியில் அவர் போடும் குத்து, கும்மாங்குத்து. இன்னொரு பாட்டில் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜூஜூபி காட்டுகிறார்.

தேவுடு என்.டி.ஆர். படத்தில் ஒரு கேரக்டர். அவர் இந்தியாவுக்கே பிரதமர் ஆகிறார்(?). செங்கோட்டையில் வீர உரை கூட நிகழ்த்துகிறார். ஆந்திர திரையரங்குகள் நெரிசலில் மூச்சுத் திணற இது போதாதா?

ஒரிஜினல் மசாலா வாசனையோடு படம் பார்க்க விரும்பினால், உடனே தியேட்டருக்கு ஓடுங்கள். இரண்டரை மணி நேர எண்டெர்டெயிண்ட்மெண்ட் நிச்சய கேரண்டி. தெலுங்கு தெரிந்திருக்க வேண்டுமென்றெல்லாம் அவசியமில்லை. சைதை ராஜ், போரூர் கோபாலகிருஷ்ணா, பல்லாவரம் ஜனதா, ஆதம்பாக்கம் ஜெயலட்சுமி மாதிரி தியேட்டர்களில் கூட டோக்குடு ரிலீஸ் ஆகியிருக்கிறது. இல்லாவிட்டால் ஆற, அமர தமிழில் வந்தபிறகு பார்த்துக் கொள்வது என்றால் உங்கள் இஷ்டம். என்ன ஒரு கொடுமை என்றால், இப்படத்தின் தமிழ் பதிப்பில் அணில் நடித்துத் தொலைப்பார் என்பதுதான்.

24 செப்டம்பர், 2011

புதுசுக்காக பழசை அழிக்கலாமா?

ஒரு பக்கம் வளர்ச்சித் திட்டங்கள் தீட்டப்படுவதில்லை என்று புகார். மறுபுறம் ஏற்கனவே நன்கு கட்டமைக்கப்பட்டு இயங்கிக் கொண்டிருக்கும் கட்டிடங்களையும், மைதானங்களையும், பூங்காங்களையும், நூற்றாண்டு மரங்களையும் வளர்ச்சி என்கிற பெயரில் அழிக்க வேண்டுமா என்று கேள்வி. அரசுக்கு இருதலைக்கொள்ளி எறும்பு நிலைதான்.

எங்கே?

தலைநகர் சென்னையில். சுமார் எழுபது லட்சம் மக்கள் வசிக்கும் ‘கசகச’ நெரிசலான தமிழகத்தின் தலைநகர், தன் அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு தயார் ஆகிக் கொண்டிருக்கிறது. நகர் மக்களின் மிக முக்கியப் பிரச்சினையாக அன்றாட போக்குவரத்து சிக்கல்கள் அடையாளம் காணப்பட்டு, அடுத்தடுத்து இதற்கான தீர்வுகளும், திட்டங்களும் தீட்டப்பட்டு வருகின்றன. அரசுப் பேருந்து, ரயில், ஆட்டோ தனியார் வாகனங்கள் என்று லட்சக்கணக்கில் பெருகிப்போய்விட்ட வாகனங்கள் நெரிசலால் முடங்கிப்போய், சென்னைவாசிகள் தங்கள் நாளின் பெரும்பாலான நேரத்தை சாலைகளுக்கு செலவிட வேண்டியிருக்கிறது.

இப்பிரச்சினைக்கு தீர்வாக கொண்டுவரப்பட்டதுதான் மெட்ரோ ரயில் திட்டம். சென்னையில் இரு மார்க்கத்தில் இது திட்டமிடப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. வடசென்னை வண்ணாரப்பேட்டையில் தொடங்கி பிராட்வே, ஸ்பென்சர்ஸ், அண்ணாசாலை, கிண்டி வழியாக சென்னை விமான நிலையத்திற்கு 23.1 கி.மீ நீளத்தில் ஒரு மார்க்கம். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து வேப்பேரி, அண்ணாநகர், கோயம்பேடு, வடபழனி, பரங்கிமலை வரை 22 கி.மீ நீளத்துக்கு மற்றொரு மார்க்கம். இத்திட்டத்துக்கு சுமார் 16,000 கோடி ரூபாய் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. இதில் 41 சதவிகிதத் தொகையை மத்திய, மாநில அரசுகளும் மீதியை ஜப்பானிடம் கடன் வாங்கி திட்டத்தை முடிப்பதாகவும் ஏற்பாடு.

வண்ணாரப்பேட்டையிலிருந்து நந்தனம் சேமியர்ஸ் சாலை வரை பூமிக்கு கீழாகவும், அங்கிருந்து தூண்கள் மீதும் ரயில் பயணிக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. இதே போலவே சென்னை சென்ட்ரலில் இருந்து திருமங்கலம் வரை கீழே, அதன் பிறகு பரங்கிமலைவரை தூண்களில் ரயில் செல்லும்.

அயல்நாடுகளில் இருப்பதைப் போன்ற சுரங்க ரயில் நிலையங்கள் நம்மூரிலும் அமையப்போகிறது என்கிற மகிழ்ச்சி ஆரம்பத்தில் இருந்தாலும், திட்டத்துக்கான பணிகள் தொடங்க ஆரம்பித்தப் பிறகு ஆங்காங்கே பல தரப்பினரிடமிருந்தும் எதிர்ப்பு கிளம்பத் தொடங்கியது. தங்கள் இடம் அரசுத் திட்டத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் போதெல்லாம் தனியார் எதிர்ப்பு தெரிவிப்பது வாடிக்கைதான். மெட்ரோ ரயில் திட்டத்துக்கு அரசுத்துறையைச் சார்ந்தவர்களும் எதிர்ப்பு தெரிவித்ததுதான் முக்கியமானது.

மீனம்பாக்கத்தில் விமான நிலையத்துக்கு அருகில் தூண்கள் அமைக்கப்பட விமான நிலையத்துறை அதிகாரிகள் தரப்பில் இருந்து ஆரம்பத்தில் எதிர்ப்பு கிளம்பியது. விமான ஓடுபாதைக்கு அருகே ரயில் செல்வதால், விமான நிலையத்தின் பாதுகாப்பு கேள்விக்குறி ஆகும் என்று இவர்கள் ஆட்சேபம் தெரிவித்தார்கள். இதையடுத்து விமான நிலைய அதிகாரிகள் தரப்பும், மெட்ரோ ரயில் அதிகாரிகள் தரப்பும் அமர்ந்துப் பேசி இருவருக்கும் பொதுவான திட்டத்துக்கு ஒப்புக் கொண்டார்கள்.

இதுபோலவே கோயம்பேடு மார்க்கெட் மற்றும் பேருந்து நிலையம் அருகே பாதை மற்றும் பணிமனை அமைக்க சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்திடம் இடம் கோரியது மெட்ரோ ரயில். இதையடுத்து மார்க்கெட் பகுதியில் ஜவுளி மற்றும் மளிகை அங்காடிகள் கட்ட திட்டமிடப்பட்டிருந்த 35 ஏக்கர் நிலத்தை மெட்ரோ ரயிலுக்கு வளர்ச்சிக் குழுமம் தந்தது. இது கோயம்பேடு மார்க்கெட் வணிகர்களை கோபப்படுத்தியிருக்கிறது. பல வருடங்களுக்கு முன்பாகவே தங்களுக்கு ஒதுக்கித்தந்து, வணிக விரிவாக்கத்துக்காக திட்டம் தீட்டி வைத்திருந்த இடத்தை, புதியதாக வந்த ஒரு திட்டத்துக்கு தாரை வார்ப்பது சரியல்ல என்று குமுறிக் கொண்டிருக்கிறார்கள்.

“கட்டுமானப் பணிகளுக்காக மெட்ரோ ரயில் நிலம் எடுத்துக் கொள்வதின் மூலமாக ஏற்கனவே பெருநகர வளர்ச்சிக் குழுமத்திடம் வாங்கப்பட்ட 25 கடைகள் அழிக்கப்படும். காய்கறி எடுத்துவரும் டிரக்குகளின் பார்க்கிங் இடம் பறிக்கப்பட்டால், கோயம்பேடு மார்க்கெட்டின் வழக்கமான பணிகளும் பாதிக்கப்படும்” என்கிறார் வி.ஆர்.சவுந்தரராஜன். இவர் கோயம்பேடு காய்கறி மார்க்கெட் லைசன்ஸ் ஹோல்டர்ஸ் அசோசியேஷனின் செயலாளர்.

கோயம்பேடு பேருந்து நிலையத்தின் ஊடாக மெட்ரோ ரயில் ஊடுருவ திட்டமிடப்பட்டிருப்பதால் வெளியூர் பஸ்கள் வந்து செல்லும் பாதை, மாநகர பஸ்கள் நிற்கும் பகுதி ஆகியவற்றில் பெரும்பகுதி மெட்ரோ ரயிலுக்கு ஒதுக்கப்பட்டது. வெளியூர் பஸ்கள் வந்துச் செல்லும் பாதை இத்திட்டத்துக்கு வந்துவிட்டதால், அருகிலிருந்த குடிநீர் வடிகால் வாரியத்திடம் பேசி, அங்கிருந்து நிலம் பெறப்பட்டு புதுப்பாதை போடப்பட்டது. பெருகி விட்ட பஸ்களின் எண்ணிக்கை, நடைபெற்றுவரும் மெட்ரோ பணிகள் ஆகியவற்றால் வரலாற்றில் இதுவரை சென்னை நகரம் கண்டிராத போக்குவரத்து நெரிசலை இப்போது கோயம்பேடு பேருந்து நிலையம் சந்தித்து வருகிறது. இதனால் பஸ் ஓட்டுனர்கள் தொடர்ச்சியாக புலம்பி வருகிறார்கள். இவர்களது புலம்பல் என்று கோபமாக மாறி வெடிக்குமோ என்கிற வெப்பச்சூழல் நிலவுகிறது.

எனவே இந்த நெரிசலைத் தவிர்க்க, பஸ் நிலைய விரிவாக்கத்துக்காக வளாகத்தின் பின்னாலிருக்கும் குடிநீர் வடிகால் வாரியத்திடம் ஐந்து ஏக்கர் நிலம் கோரப்பட்டிருக்கிறது. ஏற்கனவே வெளியூர் பேருந்துகள் பாதைக்காக நிலம் தானம் செய்திருக்கும் குடிநீர் வடிகால் வாரியம், மேலும் மேலும் நிலம் கேட்பதால் கடும் அதிருப்திக்கு ஆளாகியிருக்கிறது. இச்சிக்கல் தொடர்பாக அதிகாரிகள் நிலையில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

சென்னையில் பதினாறு இடங்களில் பாரம்பரிய கட்டிடங்கள் இருக்கின்றன. பிராட்வே வெஸ்லி தமிழ் ஆலயம், சென்னை சட்டக்கல்லூரி, ரிப்பன் கட்டிடம், விக்டோரியா பொது அரங்கம், சென்ட்ரல் ரயில் நிலையம், இராமசாமி முதலியார் கட்டிடம், சிம்சன், அண்ணா சாலை பாரத ஸ்டேட் வங்கி, பாரத் காப்பீட்டுக் கழகம், ஹிக்கின் பாதம்ஸ் கட்டிடம், மே நாள் நினைவுப்பூங்கா, கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி உள்ளிட்டவை பாதுகாக்கப்படும் பாரம்பரியக் கட்டிடங்கள் ஆகும். இந்த பாரம்பரியக் கட்டிடங்களுக்கு அருகில் எந்த புதிய கட்டுமானப் பணியும் நடக்கக்கூடாது என்பது விதி. ஏனெனில் அந்தப் பணிகளால் இவற்றின் கட்டுமான உறுதி பாதிக்கப்படலாம்.

துரதிருஷ்டவசமாக மெட்ரோ ரயில் பாதை போடப்பட்டு வரும் வழியில் இந்த பாரம்பரியக் கட்டிடங்கள் பெரும்பாலானவை அமைந்து விட்டன. குறிப்பாக கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி கட்டிடம், ஹிக்கின் பாதம்ஸ் புத்தகக் கடை ஆகியவை பெரும் பாதிப்புக்குள்ளாகும் என்று தெரிகிறது. எனவே பாரம்பரிய ஆர்வலர்கள் இதுகுறித்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இது தொடர்பாக சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்திடம், மாநகர பாரம்பரிய கட்டிடங்களுக்கான பாதுகாப்புக் குழு புகார் கூறியிருக்கிறது. தங்கள் வசமிருக்கும் இடங்களையே மெட்ரோ ரயில் திட்டத்துக்கு முணுமுணுப்போடு தூக்கிக் கொடுத்துக் கொண்டிருக்கும் வளர்ச்சிக் குழுமத்துக்கு இதுபோல எட்டுத்திக்கிலுமிருந்து எழுப்பப் பட்டுக் கொண்டிருக்கும் பிரச்சினைகள் பெரும் தலைவலியை தந்துக் கொண்டிருக்கிறது.

முதலில் பூந்தமல்லி சாலையில் அமையவிருந்த மெட்ரோ ரயில் பணிகள் இடதுபுறமாகவே திட்டமிடப்பட்டது. அப்பக்கம் முழுக்க முழுக்க தனியார் இடம் என்பதால், அவற்றைப் பெறுவதில் ஏற்படும் சிக்கல்களை கணக்கில் கொண்டு வலப்புறமாக திட்டம் மாற்றியமைக்கப்பட்டது. நேரு பூங்கா, கீழ்ப்பாக்கம் மருத்துவமனை, நெய்வேலி இல்லம், பச்சையப்பன் கல்லூரி என்று அரசு தொடர்பான இடங்கள் என்பதால் இடம் கேட்பது பெரிய பிரச்சினையாக இருக்காது என்று நினைத்தார்கள். ஆனால் தங்கள் கல்லூரியில் இருந்து பிடி மண்ணை கூட தரமுடியாது என பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் போர்க்கொடி தூக்கினார்கள். “எங்கள் கல்லூரி வளாகத்தில் இருக்கும் கிட்டத்தட்ட 300 மரங்கள், இத்திட்டத்தால் வெட்டுப்படும் வாய்ப்பிருக்கிறது. அவற்றை காக்கும் வரை போராடுவோம்” என்கிறார் இரண்டாம் ஆண்டு பி.காம் மாணவரான நரேஷ்குமார்.

மாணவர்களை சமாதானப்படுத்தும் படி பேராசிரியர்களை கேட்டால், அவர்களும் மாணவர்களோடு சேர்ந்து உண்ணாவிரதம் மாதிரியான போராட்டங்களில் கலந்துகொள்ள சென்னை மெட்ரோ ரயில் திட்ட அதிகாரிகளுக்கு தர்மசங்கடமாகி விட்டது.

இக்கல்லூரி மாணவர்கள் வித்தியாசமான போராட்டங்களை முன்னெடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். மரங்கள் எங்கள் சகோதரர்கள் என்று அறிவிக்கும் பொருட்டு, மரங்களுக்கு ‘ராக்கி’ கட்டும் போராட்டம் ஒன்றினையும் நடத்தினார்கள். இந்தப் போராட்டத்தில் இக்கல்லூரிக்கு எதிரிலிருக்கும் செயிண்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இண்டியன் பள்ளி மாணவர்களும், கல்லூரி மாணவர்களோடு கைகோர்த்தார்கள்.

எக்ஸ்னோரா அமைப்பின் தலைவரான எம்.பி.நிர்மல், இத்திட்டத்தால் மரங்கள் வெட்டப்படுவதை கடுமையாக எதிர்க்கிறார். “நூறு ஆண்டுகளுக்கு மேற்பட்ட மரங்கள் பலவற்றையும் வெட்டிவிட்டால், என்ன விலை கொடுத்தாலும் இந்த இழப்பை ஈடு செய்யவே முடியாது. ஏற்கனவே மரங்கள் நிறைந்த சோலைகளாக இருந்த கீழ்ப்பாக்கம், ஷெனாய்நகர் ஆகிய பகுதிகள் மரங்களை இழந்து சுற்றுச்சூழல் சீர்கெட்டுப் போயிருக்கிறது. நன்கு வளர்ந்த 300 மரங்களை வெட்டிவிட்டு, 3000 விதைகளை விதைக்கிறோம் என்று சொன்னால் கூட அது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல” என்கிறார்.

இப்பகுதியில் மட்டுமல்ல. நகரில் பல இடங்களில் வெட்டப்படும் மரங்களைப் பார்த்து, இயற்கை ஆர்வலர்கள் கடுப்பு ஆகிக் கொண்டிருக்கிறார்கள். அசோக் நகர் போன்ற இடங்களில் பெரிய நூற்றாண்டு மரங்கள் வெட்டப்படுவதை பதைபதைப்போடு செய்வதறியாமல் பார்த்து நிற்கிறார்கள். இதற்காக இவர்கள் என்று நீதிமன்றப்படி ஏறப்போகிறார்களோ என்று மெட்ரோ ரயில் நிர்வாகத்துக்கும் டென்ஷன்.

இவையெல்லாம் கண்ணுக்கு தெரிந்து வெளிப்படையாக நடந்து வரும் பிரச்சினைகள். இதுபோல தினமும் ஆயிரத்தெட்டு பிரச்சினைகளுக்கு இடையேதான் மெட்ரோ ரயில் பணிகளுக்கு தூண்கள் அமைக்கப்பட்டு வருகிறது. சென்னை நந்தனத்தில் கோழி உற்பத்தி மற்றும் மேலாண்மை தொழிற்கல்வி நிலையம் அடிபடும் என்று தெரிகிறது. சைதாப்பேட்டையில் மாநகராட்சிக்கு சொந்தமான மருத்துவ ஆய்வு நிலையம் மற்றும் கட்டிடங்கள், ஈ.எஸ்.ஐ. மருத்துவமனை, பனகல் மாளிகைக்கு எதிரில் அமைந்திருக்கும் பேருந்து நிலையம் ஆகியவையும் கபளீகரம் ஆகும்.

பாரம்பரியத்தையும், சுற்றுச்சூழலையும் அழித்து ஒரு வளர்ச்சிப் பணி இவ்வளவு முணுமுணுப்புகளையும், சாபங்களையும் பெற்றுக்கொண்டு நடைபெறுவது வருத்தத்துக்குரியது. சென்னை போன்ற திட்டமிடப்படாமல் உருவான நகரங்களில், ஏற்கனவே வளர்ந்துவிட்ட பகுதிகளில், புதியதாக ஒரு பெரிய வளர்ச்சிப்பணியை முன்னெடுக்கும் போது இம்மாதிரிப் பிரச்சினைகள் தவிர்க்க இயலாதது.

எனவேதான் நகரங்களில் மட்டுமே அரசு பல்லாயிரம் கோடிகளை கொட்டிக் கொண்டிருக்காமல், துணை நகரங்கள் அமைத்து வளர்ச்சியை பரவலாக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் பலகாலமாக கோரிவருகிறார்கள்.

சென்னைக்கு அருகே திருமழிசை அருகில் 2,160 கோடி ரூபாய் செலவில் துணை நகரம் அமைக்கப்படும் என்கிற முதல்வரின் அறிவிப்பு இக்கட்டுரை எழுதிக் கொண்டிருக்கும் நேரத்தில் அறிவிக்கப்பட்டிருப்பது ஆறுதல் அளிக்கிறது.

வளர்ச்சியை ஒரே இடத்தில் குவித்தால் அது இப்படித்தான் வீங்க ஆரம்பிக்கும். பரவலாக்குவதின் மூலமாக மட்டுமே இம்மாதிரியான பிரச்சினைகளை களைய முடியும்.

(நன்றி : புதிய தலைமுறை)

22 செப்டம்பர், 2011

மறதி

அந்த நாளிதழ் அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது டீனேஜில் இருந்தேன். குட்டிப்பையன் என்பதால் அங்கே என் டிபார்ட்மெண்டில் பணிபுரிந்து கொண்டிருந்த அக்காக்கள் என்னை ஒரு ஆண்மகனாகவே கருத மாட்டார்கள். அந்த டிபார்ட்மெண்டின் டே ஷிப்டில் ஆண்கள் யாரும் இருக்கமாட்டார்கள். முழுக்க முழுக்க அல்லி ராஜ்ஜியம்தான். குழந்தையாக நினைத்து என் கன்னத்தைப் பிடித்து கொஞ்சிக் கொண்டிருப்பார்கள் அக்காக்கள். வேலை பார்த்துக் கொண்டே, அவரவர் அந்தரங்க விஷயங்களை அசால்ட்டாக பேசிக் கொண்டிருப்பார்கள் (பொதுவாக நேற்றிரவு தூங்க ஏன் லேட்டானது மாதிரி ‘பலான’ விஷயங்கள்). வளர்சிதை மாற்றக் கிளர்ச்சிகள் கொண்ட வயது என்பதால் எனக்கு வெக்கம், வெக்கமாக வரும்.

இந்த குழந்தைப்பையன் இமேஜ் எனக்கு இம்மாதிரியான தொந்தரவுகளை கொடுத்தாலும், வேறு சில அனுகூலங்களையும் கொடுத்தது. லே-அவுட், கேமிரா, எடிட்டோரியல் என்று எல்லா இடங்களுக்கும், யாரையும் கேட்காமல் சுதந்திரமாக சுற்றி வரும் சுதந்திரம் கிடைத்தது. இந்த சுதந்திரமும் ஒரு வகையில் தொந்தரவுதான். கேமிரா ரூமுக்குள் போனால், “டேய் அந்த எட்டாவது பக்கம் நெகடிவ்லே ஒழுங்கா ‘ஒபேக்’ வைடா” என்று கேமிரா அண்ணன் வேலை வாங்குவார். லே-அவுட் பக்கமாகப் போகும்போது, “நாலாம் பக்கம் ஏழாவது காலத்திலே பாட்டமுலே இந்த மேட்டரை ஒட்டுறா. நல்லா ஸ்ட்ரெயிட்டா ஸ்கேல் வெச்சிப் பார்த்து ஒட்டணும்” என்று ஃபோர்மேன் விரட்டுவார். ஏதாவது கோணைமாணையாக அமைந்துவிட்டால் தலையில் ‘குட்டு’ கூட விழும்.

எடிட்டோரியலுக்குப் போய், சப் எடிட்டர்களால் எழுதப்பட்ட மேட்டர்களை கம்போசிங்குக்காக வாங்கிவர வேண்டியது எங்கள் ஃபோர்மேனின் வேலை. ஐந்து நிமிடத்துக்கு ஒருமுறை ‘மேட்டர்’ ஏதேனும் இருக்கிறதா என்று போய் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும். எங்கள் ஃபோர்மேன் கொஞ்சம் சோம்பேறி. கால்நீட்டி வசதியாக உட்கார்ந்துக் கொண்டு என்னை அந்த வேலையை செய்ய துரத்தியடிப்பார்.

அப்படி எடிட்டோரியலுக்கு போகும்போதுதான் அந்த இரண்டு இளைஞர்களையும் பார்த்தேன். ஒருவர் உயரமாக, சிகப்பாக இருப்பார். அவர் பெயர் ரமணன். மற்றொருவர் கொஞ்சம் மாநிறமாக, ஒல்லியாக கொஞ்சம் கூன் போட்டமாதிரியிருப்பார். இவர் பெயர் சரஜ். டெலிபிரிண்டரில் வரும் பி.டி.ஐ., யூ.என்.ஐ., செய்திகளை வாசித்துக் கொண்டே நியூஸ் பிரிண்டில் வேகமாக மொழிபெயர்த்து எழுதிக் கொண்டிருப்பார்கள். லோக்கல் ரிப்போர்ட்டர்களிடமிருந்து மொன்னையாக எழுதப்பட்டு வந்த ரிப்போர்ட்டுகளையும், ஒரு லேங்குவேஜுக்கு கொண்டுவந்து மாற்றி எழுதுவார்கள். இரவு பத்தரை மணிவாக்கில் வேலூர் எடிஷன் பிரிண்டிங்குக்கு போகிறவரை இவர்கள் மாங்குமாங்குவென்று எழுதிக்கொண்டே இருக்க வேண்டும்.

அதன்பிறகு சாப்பிட்டுவிட்டு, எக்ஸ்பிரஸ் பில்டிங்குக்கு அருகிலிருக்கும் செந்தில் டீக்கடைக்கு போய் ‘தம்மு, கிம்மு’ அடித்துவிட்டு ரிலாக்ஸாக வருவார்கள். லே-அவுட், கம்போஸிங், கேமிரா என்று ரோந்து சுற்றுவார்கள். ‘ஸ்டாப் பிரஸ்’ மேட்டர்கள் ஆடிக்கு ஒருமுறையோ, அமாவசைக்கு ஒருமுறையோதான் வருமென்பதால் பத்தரை டூ ரெண்டு இவர்களுக்கு அவ்வளவு வேலையிருக்காது.

அப்போதெல்லாம் ‘சிறுகதை கதிர்’ என்கிற ஒரு பத்திரிகையை கையில் வைத்திருப்பேன். அதில் பெ.கருணாகரன் எழுதும் ‘காதல் தோல்விக் கதைகள்’ என்றொரு தொடர் வந்துக் கொண்டிருந்தது. ஏதாவது கட்டையான, சிகப்பான ஃபிகரை பார்த்தால் உடனே காதலிக்கத் தொடங்கி, அது நம்மை கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டால் ‘காதல் தோல்வி’ என்று தட்டையாக புரிந்துக்கொண்டு புலம்பிக்கொண்டிருந்த வயது. எனவே காதல் தோல்விக் கதைகள் இயல்பாகவே என்னை ஈர்த்துக் கொண்டிருந்தது.

ஒருநாள் என்னிடம் இருந்த சிறுகதைக் கதிர் இதழ் ஒன்றினை வாங்கிப் புரட்டினார் சரஜ். பெரிய அரசியல் தலைவர் ஒருவருடைய மனைவி கொடுத்திருந்த பேட்டி கவர் ஸ்டோரியாக வந்திருந்தது. அதற்குத் தலைப்பு இப்படி வைத்திருந்தார்கள். ‘நான் ஒரு சுமைதாங்கி‘. இந்த தலைப்பைப் பார்த்துவிட்டு சரஜ் சொன்னார். “தலைப்பு ரொம்ப ஆபாசமா வெச்சு இருக்காங்களே?”. என்ன ஆபாசம் என்று எனக்கு அப்போது புரியவில்லை. ரமணன் வெளிப்படையாக விஷயத்தை சொல்லி என்னை வெட்கப்பட வைத்தார்.

சரஜூம், ரமணனும் என்னை அந்த வயதில் வெகுவாக ஈர்த்த பர்சனாலிட்டிகள். செய்திகளுக்கு இவர்கள் வைக்கும் தலைப்பு அபாரமான ஹூயூமர் சென்ஸோடு இருக்கும். அப்போதெல்லாம் பத்திரிகைக் காரர்கள் பெரும்பாலும் பஜாஜ் எம்-80 வைத்திருப்பார்கள். வீரமுள்ள நிருபர் வீரபத்திரன் ஓட்டும் வண்டி என்றுதான் விளம்பரம்கூட வரும். ஒருநாள் இவர்களைப் போலவே பெரியவனாகி(!) வீரமுள்ள நிருபனாக பஜாஜ் எம்-80ல் வலம் வர வேண்டும் என்று மனதுக்குள் சபதம் போட்டுக் கொண்டேன்.

தோழர்களே! ஏதோ ‘பீமா’ படத்தின் திரைக்கதை போல இருப்பதாக ஃபீல் செய்கிறீர்கள் இல்லையா? இப்படித்தான் சினிமாக் கதைகளை விட வாழ்க்கைக் கதைகள் நம்ப முடியாததாகவும், திருப்பங்கள் நிறைந்ததாகவும் சில சமயங்களில் அமைந்துவிடும். ஓக்கே, நிகழ்காலத்துக்கு வந்துவிடுவோம்.

ஓரிரு வருடத்துக்கு முன்பு புத்தக வெளியீட்டு விழாக்களில் ஒரு இலக்கியப் பெரியவரை கண்டேன். கோல்ட் ஃப்ரேம் கண்ணாடி, தொப்பை, காதோர நரை, சதைப்பிடிப்பான முகமென்று இருக்கும் இவரை எங்கேயோ பார்த்த ஞாபகமாகவே இருந்தது. யார் என்னவென்று விசாரித்துப் பார்த்தால் ‘எழுத்தாளர் சரஜ்’ என்றார்கள். இவரு அவராதான் இருப்பாரோ என்று சந்தேகம். நேரடியாக கேட்கவும் ஏதோ தயக்கம். நான்கைந்து முறை அவர் முன்பாக அப்படியும், இப்படியுமாக நடந்தேன். ஒருவேளை என்னை அடையாளம் கண்டுகொண்டு அவராகவே பேச வாய்ப்பிருக்கிறது இல்லையா? இதற்கிடையில் என் உருவத்திலும் கொஞ்சம் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. மீசை வளர்ந்திருக்கிறது. ஹேர்ஸ்டைல் மாறியிருக்கிறது.

ம்ஹூம். அவரால் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. அப்படியென்றால் இது அவர் அல்ல. அவர் ஒல்லியாக இருப்பார். லைட்டாக கூன் போட்டிருப்பார். பிரபுதேவா மாதிரி பேக்கீஸ் பேண்ட் எல்லாம் போட்டிருப்பார். இவர் வேறு மாதிரியாக சினிமா டாக்டர் மாதிரி இருக்கிறாரே?

அடுத்தடுத்து சில இடங்களில் பார்த்துக் கொண்டு, புன்னகைத்து ஹலோ சொல்லி அறிமுகப்படுத்திக் கொள்ளும்போது.. அடக்கடவுளே! அவரேதான் இவர்...

இப்போது அவர் நெம்பர் ஒன் நாளிதழின் செய்தி ஆசிரியர். நான் வீரமுள்ள நிருபர் வீரபத்திரன் ரேஞ்சுக்கு இல்லையென்றாலும், என்னிடம் பஜாஜ் எம்-80யும் கூட இல்லையென்றாலும், ஒரு வாரப்பத்திரிகையில் சீனியர் ரிப்போர்ட்டர்.

ஆனாலும் அவருக்கு என்னை மட்டும் அடையாளமே தெரியவில்லை என்பது வருத்தமாக இருந்தது. அந்தக் காலத்தில் அவரோடு இருந்ததை சொல்லிப் பார்த்தேன். கூட இருந்த நண்பர்களின் பெயரையெல்லாம் சொல்லிப் பார்த்தேன். வேலைக்கு ஆகவில்லை. மூன்றாம் பிறை கமல் மாதிரி குட்டிக்கரணம் அடிக்காதது ஒன்றுதான் பாக்கி. என்ன சொல்லி நான்தான் அது என்று அவருக்கு தெரியப்படுத்துவது? கடைசி அஸ்திரத்தைப் பயன்படுத்தினேன்.

“அண்ணே நான் மானு அக்கா டீமுலே இருந்தேனே?”

அவருக்கு சட்டென்று முகம் மலர்ந்தது. நாணத்தால் கன்னம் சிவந்தது மாதிரியும் தெரிந்தது. எப்படியோ நினைவு வந்தால் சரிதான் என்று நினைத்துக் கொண்டேன்.

ம்ஹூம்.

சரஜுக்கு மானு அக்காதான் பளிச்சென்று நினைவுக்கு வருகிறாளே தவிர, என்னை சுத்தமாக நினைவுக்கு கொண்டுவர முடியவில்லை. இரண்டு வருடங்களாக இதேதான் நிலைமை. அவரைப் பொறுத்தவரை நான் புது மனிதன். இரண்டு, மூன்று வருடங்களுக்கு முன்பாக அறிமுகமானவன்.

ரமணன் எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை. நிச்சயமாக அவருடைய நினைவிலும் நான் இருப்பேன் என்ற நம்பிக்கையில்லை. ஆனால் அவரும் அக்காக்களை மட்டும் மறந்திருக்க மாட்டார் என்றே நினைக்கிறேன்.

பையன்களை மட்டும் கச்சிதமாக மறந்துவிடக் கூடிய இந்த நோய்க்கு என்ன பெயர் என்று ஜெயமோகனுக்கு கடிதம் எழுதிதான் கேட்கவேண்டும்.

20 செப்டம்பர், 2011

ஈரான் – மர்ஜானே சத்ரபி

‘ஈரான்’ – உடனே உங்களுக்கு என்ன நினைவுக்கு வரும்?

1. மத அடிப்படைவாதம்
2. பல லட்சம் பேரை பலிகொண்ட நீண்டகால ஈரான் – ஈராக் கொடூர யுத்தம்
3. கோமேனி
4. சல்மான் ருஷ்டிக்கு தூக்குத்தண்டனை
5. சில உன்னத உலகத் திரைப்படங்கள்

சரியா?

இன்னும் யோசித்தால் மேலும் ஐந்து விஷயங்களை அதிகபட்சமாக உடனடியாக சேர்க்க முடியும் என்று தோன்றுகிறது. நமக்கும் இவற்றைத் தவிர வேறொன்றும் புதியதாக இதுவரை நினைவுக்கு வந்ததில்லை. ஈரான் பற்றியும், ஈரானியர்கள் பற்றியும் இந்தியர்களுக்கு இருக்கும் பொதுவான ஒரு மதிப்பீட்டை மீளாய்வு செய்யவைக்கிறது இரு புத்தகங்கள். பெர்சேபோலிஸ் என்ற பெயரில் பிரெஞ்சு மொழியில் எழுதப்பட்டவை தமிழில் ‘விடியல்’ வெளியீடாக விடிந்திருக்கிறது.

1969ல் பிறந்த மர்ஜானே சத்ரபி என்ற பெண் குழந்தைப் பருவத்தில் தான் கண்ட ஈரானை எழுத்தாகவும், சித்திரமாகவும் சிரத்தையுடன் வடித்திருக்கிறார். ‘சித்திரமா?’ என்று ஆச்சரியப் படுவீர்களே? ஆம். ஓவியரான மர்ஜி (இப்படி சொல்லுறது ஈஸியா இருக்கில்லே?) காமிக்ஸ் வடிவில் தன் வாழ்க்கையை பதிவு செய்திருக்கிறார். வெகுசீரியஸான காமிக்ஸ். குழந்தைகளுக்கானது அல்ல. குழந்தைகளும் படிக்கலாம். தப்பில்லை. ஆங்காங்கே நகைச்சுவைக்கும் பஞ்சமில்லை. முதல் நூலை பிரித்ததுமே பல ஆச்சரியங்கள் புதையலாய் புதைந்திருக்கிறது. கண்டுகளித்து, வாசித்து உணருங்கள். தீவிரவாசிப்பாளர்கள் நிச்சயம் வாசிக்க வேண்டிய புத்தகங்கள்.

மர்ஜி டெஹ்ரானில் பிரெஞ்சுப் பள்ளியில் தன் ஆரம்பக்கல்வியை தொடங்கியவர். பொதுவுடைமை சித்தாந்தங்களில் நன்கு பரிச்சயம் கொண்ட பாரம்பரியத்தில் பிறந்தவர். இஸ்லாம் புரட்சி ஈரானில் ஏற்பட்டபோது மர்ஜிக்கு பத்து வயது இருக்கலாம். திடீர் திடீர் கட்டுப்பாடுகள். பெரும்பாலானவை பெண்ணடிமைத் தனத்தின் உச்சம். சட்டம் அபத்தக் களஞ்சியம்.

ஈரான் கொடுங்கோல் மன்னராட்சி, ஏகாதிபத்திய அடக்குமுறை, சர்வாதிகார அட்டூழியங்கள் என்று மாறி மாறி ஆட்சிமாற்றங்கள கண்ட நாடு. துரதிருஷ்டவசமாக ஒரு ஆட்சியில் கூட மக்கள் நிம்மதியாய், சுதந்திரமாய் உணர்ந்ததில்லை. இப்படியிருந்த நிலையில் தொடங்கிய ஈரான் – ஈராக் யுத்தம் பல பேரின் வாழ்க்கை வரைபடத்தை புரட்டிப் போட்டது. எண்ணற்றவர்கள் அகதிகளாயினர். திக்கற்றவர்கள் தியாகிகளாயினர். அதாவது உயிரை இழந்தனர். இறைவனின் கருணை கொஞ்சூண்டு மிச்சமிருந்தது போலிருக்கிறது. இன்றும் ஈரான் மிஞ்சியிருக்கிறது.

இந்தப் போருக்குப் பின்னணியில் மேற்கத்திய நாடுகளின் குறுக்குசால் விளையாட்டு இருந்தது. இருநாடுகளும் பலத்த அழிவுக்குப் பின்னரே இதை உணர்ந்தன. ஈராக் இஸ்ரேலுக்கு பாலஸ்தீனிய பிரச்சினையில் அச்சுறுத்தலாக இருந்தது. ஈரான் மத்திய கிழக்கு ஆசியாவிலேயே இராணுவபலம் மிகுந்த நாடாக வலிமைபெற்று திகழ்ந்தது. எட்டாண்டு கால தொடர்போரின் விளைவால் இருநாடுகளிலும் பெருமளவு இராணுவ மற்றும் பொருளாதார‌ வலிமை குன்றியது. குழம்பிய எண்ணெய்க் குட்டையில் மீன் பிடித்தது அமெரிக்காவும், பிரிட்டனும்.

இரு நூல் முழுவதுமே சொல்லப்பட்டிருப்பது மர்ஜியின் வாழ்க்கை என்றாலும், இதன் மூலமாக கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகால ஈரானையும் நாம் தெளிவாக அறிந்துகொள்ள முடிகிறது. ஈரானியர்கள் கிட்டத்தட்ட இந்தியர்கள். ஆனால் திறமையானவர்கள். மேற்கத்திய நாடுகளை சேர்ந்தவர்களால் பலமாக எள்ளல் செய்யப்படுபவர்கள். இந்தியர்களைப் போலவே ஆதிக்க எதிர்ப்பு மனப்பான்மையோடு, குறிப்பாக அமெரிக்க எதிர்ப்பு மனப்பான்மையோடே பிறக்கிறார்கள். ஆட்சிக்கு வருபவர்கள் மட்டும் மக்குகளாக இருக்கிறார்கள். மாய்க்கன்களாக இருக்கிறார்கள். கூமூட்டைகளாக இருக்கிறார்கள். மதவெறியர்களாக மனிதாபிமானம் கிஞ்சித்துமற்ற காட்டுமிராண்டிகள் ஈரானின் ஆட்சிக்கட்டிலை தொடர்ந்து அலங்கரிக்கிறார்கள். மக்களையும், நாட்டின் வளர்ச்சியையும் அலங்கோலப் படுத்துகிறார்கள்.

அகதியாய் வாழ்வது எவ்வளவு அவலம் என்பதற்கு மர்ஜியின் வாழ்க்கையே சாட்சி. விமானங்கள் வீசும் வெடிகுண்டுகளுக்கிடையே ஏது பள்ளியும் கல்வியும்? கல்வி கற்க ஆஸ்திரியாவின் தலைநகர் வியன்னாவுக்கு பயணிக்கிறாள். ஈழத்தமிழர்களின் அவலம் இக்கட்டங்களை வாசிக்கும்போது இயல்பாகவே நினைவுக்கு வருவதை தவிர்க்க இயலவில்லை.

ஐரோப்பியர்களால் தன் மண் கேவலப்படுத்தப்படும் போது மனதுக்குள் குமுறுகிறாள். அடக்கமுடியாத நேரங்களில் அடங்க மறுத்து பொங்கியெழுகிறாள். கன்னியாஸ்திரிகள் மடத்தில் தங்கியிருந்தபோது ஒரு நாள்.

மதர் சுப்பீரியர் : ஈரானியர்களைப் பற்றிச் சொல்லப்படுவது சரியாக இருக்கிறது. அவர்களுக்கு நாகரிகமே தெரியாது.

மர்ஜி : உங்களைப் பற்றி சொல்லப்படுவதும் உண்மைதான். கன்னியாஸ்தீரிகளாக ஆவதற்கு முன்பு நீங்கள் எல்லோரும் வேசியாக இருந்தீர்கள்.

இப்படி வாதிடும்போது மர்ஜிக்கு பதினைந்து அல்லது பதினாறு வயதிருக்கலாம். இவ்வளவு வாயாடியான பெண் ஒரு இடத்தில் நீடிக்க முடியுமா? வீடு வீடாக மாறி எப்படியோ பள்ளிக் கல்வியை முடிக்கிறாள்.

ஈரானிய கலாச்சாரத்தை ஒட்டியும் வாழ முடியவில்லை. ஈர்க்கும் ஐரோப்பிய கலாச்சாரத்தின் பால் முழுவதுமாக விழவும் முடியவில்லை. தடுமாறுகிறாள் மர்ஜி. காதல் வசப்படுகிறாள். நிராகரிக்கப் படுகிறாள். காதலிக்கப் படுகிறாள். போதை வசமாகிறாள். தெருத்தெருவாய் அலைகிறாள். வெறுத்துப் போய் ஈரானுக்கு திரும்புகிறாள்.

இப்படி போகிறது அவளது வாழ்க்கை. ஈரானுக்கு திரும்பியவள் உருக்குலைந்த நாட்டையும், மக்களையும் கண்டு மனம் வெதும்புகிறாள். சோர்ந்து சுருண்டு விடுகிறாள். மீண்டும் பல்கலையில் சேர்ந்து பட்டம் பயில்கிறாள். காதலிக்கிறாள். திருமணம் செய்துகொள்கிறாள். விவாகரத்து செய்கிறாள். பிரான்சுக்கு பறக்கிறாள்.

ஒரே நேர்க்கோட்டில் அமையாதது தான் மர்ஜியின் வாழ்க்கை. அவளது வாழ்க்கையை ஒட்டியே நாட்டின் நடப்பையும் வழிகாட்டி போல சொல்லிக்கொண்டே வருவது நல்ல யுத்தி. சுவாரஸ்யமான திருப்பங்களுக்கு இருநூல்களிலும் பஞ்சமேயில்லை. பக்கத்துக்கு பக்கம் சுவாரஸ்யம். வாசிக்க வாசிக்க பேரின்பம். சித்திரங்களை திரும்ப திரும்ப காண கண் கோடி வேண்டும்.

மர்ஜானே சத்ரபியின் ஓவியங்கள் தத்ரூபமாக இருப்பதோடு சூழலின் உணர்வை அச்சுஅசலாக பிரதிபலிக்கிறது. தமிழில் அற்புதமாக எஸ்.பாலச்சந்திரன் மொழிமாற்றம் செய்திருக்கிறார். ஒரு முழுநீளத் திரைப்படம் பார்ப்பது போன்ற உணர்வை இந்த இரு தொடர்நூல்களும் நமக்கு ஏற்படுத்துகிறது.

நூல்கள் :

1. ஈரான் – ஒரு குழந்தைப் பருவத்தின் கதை (154 பக்கம்)
2. ஈரான் – திரும்பும் காலம் (188 பக்கம்)

நூலாசிரியர் : மர்ஜானே சத்ரபி

தமிழில் : எஸ்.பாலச்சந்திரன்

விலை : நூலொன்றுக்கு தலா ரூ. 100/-

வெளியீடு : விடியல் பதிப்பகம்,
11, பெரியார் நகர், மசக்காளிபாளையம் (வடக்கு)
கோயம்புத்தூர் – 641 015. தொலைபேசி : 0422-2576772

19 செப்டம்பர், 2011

எங்கேயும் எப்போதும்

முதல் காட்சியே க்ளைமேக்ஸாக வைக்க இயக்குனருக்கு பயங்கர தில் இருக்க வேண்டும். அங்காடித்தெரு இயக்குனருக்கு பிறகு இந்த தில் எம்.சரவணனுக்கு வாய்த்திருக்கிறது. இதுமாதிரியான நான்லீனியர் படங்களுக்கு திரைக்கதை சுவாரஸ்யமாக அமையாவிட்டால் மொத்தமும் போச்சு. சென்னையிலிருந்து திருச்சிக்கு ஒரு தனியார் பேருந்து கிளம்புகிறது. திருச்சியிலிருந்து சென்னைக்கு அரசுப்பேருந்து கிளம்புகிறது. நான்கு மணிநேரத்தில் இரண்டு சந்தித்துக் கொள்ளும்போது... ஒன்லைனர் இவ்வளவுதான்.

இடையிடையே பேருந்துகளின் பயணத்தை ஒரு த்ரில்லர் படத்துக்கான எஃபெக்ட்டோடு காட்சிப்படுத்தியிருப்பதில் இயக்குனரோடு கேமிராமேன், இசையமைப்பாளர், எடிட்டர், சிஜி கலைஞர் என்று அனைவரும் கைகோர்த்து அசத்தியிருக்கிறார்கள்.

இரண்டு காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படமென்றாலும் கிளைக்கதைகளாக விரியும் ஒருவரி குட்டிக்கதைகள் சுவாரஸ்யம். மனைவி ஏழுமாத கர்ப்பிணியாக இருந்தபோது துபாய்க்கு போன கணவன், செம ஃபிகரை பிராக்கெட் போடும் இளைஞன், புதுமனைவியை பிரிய மனமில்லாமல் கூடவே வரும் மாப்பிள்ளை என்று படம் முழுக்க சுவாரஸ்யமாக சித்தரிக்கப்பட்ட பாத்திரங்கள் பல.

இயக்குனர் இந்தக் கதையை எழுதுவதற்கு முன்பாக பல பஸ் ஸ்டேண்டுகளிலேயே தேவுடு காத்திருப்பார் போல. பூ, பழம் விற்பவரில் தொடங்கி, கண்டக்டர், டிரைவர் வரை பல பாத்திரங்களை உண்மைக்கு வெகு அருகாக சித்தரிக்க முடிந்திருக்கிறது. குறிப்பாக திருச்சி அரசுப்பேருந்து கண்டக்டர் சொல்லும் வசனம். “தம்பி. நாலு சீட்டு தள்ளி வுட்டு உட்கார்ந்துக்கப்பா”.

திருச்சியிலிருந்து சென்னைக்கு வரும் பெண்ணின் காதல் இயல்பாக பூ மலர்வது மாதிரி மலர்கிறது என்றால்.. திருச்சியில் அரசூர் பையன் மீதான நர்ஸின் காதல் அடாவடி ரகம். கிட்டத்தட்ட மவுனராகம் கார்த்திக்கின் கேரக்டர் அஞ்சலிக்கு. ஆக்‌ஷன், ரொமான்ஸ் ஹீரோவாக ஃபார்ம் ஆகிவிட்ட ஜெய்யின் அண்டர்ப்ளே ஆச்சரியம்.

15-பி பஸ்ஸில் ஏற்றிவிட மட்டுமே ‘அசைன்’ செய்யப்படும் ஷ்ரவன் கடைசியில் ஆபிஸ் லீவு போட்டுவிட்டு நாள் முழுக்க பஸ்களிலும், ஷேர் ஆட்டோக்களிலும் அனன்யாவோடு சுற்றுவது கொஞ்சம் லாஜிக் மீறலாகத் தெரிந்தாலும் இண்டரெஸ்டிங்காக இருப்பதால் மன்னித்து விடலாம்.

தொண்ணூறு சதவிகிதம் ‘ஃபீல்குட்’ மூவியாக பயணப்படும் ‘எங்கேயும் எப்போதும்’ கடைசி இருபது நிமிடங்களில் கலங்க வைக்கிறது. குறிப்பாக ‘அப்பா போன் எடுங்கப்பா’ ரிங்டோன் ஒலிக்கும்போது, இடிஅமீன் படம் பார்த்தால் கூட கண்ணைக் கசக்கிக் கொள்வார். படத்தின் இறுதியில் ரசிகனுக்கு கிடைப்பது நெஞ்சு முழுக்க தாங்க முடியாத சோகம்தான்.

படம் பார்த்தவர்கள் ’வீச்சு’ தாங்கமுடியாமல் நேராக டாஸ்மாக்குக்கு ஓடுவதுதான் இயக்குனருக்கு கிடைத்திருக்கும் வெற்றி.

சாந்தி தியேட்டர் அருகேயிருந்த டாஸ்மாக்கில் கிரவுடு தாங்காமல், எக்ஸ்பிரஸ் மாலுக்கு எதிரே மூத்திரச்சந்துக்கு அருகாமையில் அமைந்திருக்கும் டாஸ்மாக்குக்கு ஓடி (நேரம் இரவு 9.50 – டாஸ்மாக் மூடும் நேரம் சரியாக 10.00) அங்கும் குடிமகன்களின் பயங்கரவாத குடிவெறி கூட்டம் காரணமாக சரக்கு வாங்க முடியாமல், மை பாருக்குச் சென்று.. கிங்ஃபிஷர், ஹேவார்ட்ஸ் உள்ளிட்ட ரெகுலர் பிராண்டுகளில் சூப்பர் ஸ்ட்ராங்க் பீர் கிடைக்காமல், டென் தவுசண்ட் சூப்பர் ஸ்ட்ராங்க் என்கிற ஏடாகூட சாராயநெடியோடு கூடிய பாடாவதி சரக்கினை உள்தள்ளி, தலையெழுத்தேவென்று எண்பது ரூபாய் பீருக்கு நூற்றி ஐம்பது ரூபாய் கொடுத்து, டபுள் போதையாகி, செயினாக நாலைந்து தம்மடித்து, மாணிக்சந்தை வாயில் கொட்டி குதப்பியவாறே ஃபீல் செய்து பேசிக்கொண்டிருந்தபோது, தோழர் நரேன் சொன்னார், “தலைவா. நம்மளுக்கெல்லாம் மங்காத்தாதான் ரைட்டு”.

17 செப்டம்பர், 2011

பெரியாரைச் சந்தித்தேன்!

எனது பள்ளி நாட்களில் ஒருநாள். வகுப்பு ஆசிரியர் மாணவர்களிடையே ஒரு அறிவிப்பை வெளியிட்டார். ‘இன்று நமது ஊருக்கு விஜயம் செய்திருக்கும் திரு.ஈ.வெ.ராமசாமி பெரியார் அவர்களை மாணவர்கள் அனைவரும் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இன்று மாலை இரண்டு மணிக்கு பள்ளி மாணவர்கள் அனைவரும் வரிசையாக ஒழுங்கு காத்து அவர் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். அவரைப் பார்த்துவிட்டு அங்கிருந்து அனைவரும் அவரவர் வீட்டுக்குச் செல்லலாம்’ என்பதே அந்த அறிவிப்பு.

மாணவர்களிடையே ஒரு சந்தோஷ சலசலப்பு. அது பெரியாரை பார்க்கப் போவதால் அல்ல! மதியம் சீக்கிரமே வீட்டுக்குப் போகப் போகிறோமே என்கிற இன்ப அதிர்ச்சி! ஆறாம் வகுப்பு மாணவர்களான எங்களுக்கு அப்போது பெரியார் பற்றியெல்லாம் எதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனாலும் அவரைச் சந்திக்கிறவரை யார் இந்த பெரியார் என்கிற கேள்வி எனக்குள் சஸ்பென்ஸாகவே இருந்தது.

சுமார் முன்னூறு மாணவர்கள் வரிசையாக கிளம்பினோம். ஊர் ஜனங்கள் எல்லோரும் எங்களின் இந்த திடீர் அணிவகுப்பைப் பார்த்து அவர்களுக்குள் ‘எங்க போறாங்க இந்தப் பசங்க?’ என்று கேட்டுக் கொண்டார்கள். ஒருசிலர் எங்களிடமே கேட்டுத் தெரிந்து கொண்டார்கள். எங்களின் மூலமாக அன்றைக்கு பெரியார் நமது ஊருக்கு வந்திருக்கிறார் என்கிற விபரம் எல்லோருக்கும் தெரிந்த விஷயமானது.

ஒரு ரைஸ்மில் உரிமையாளருக்குச் சொந்தமான பங்களா ஒன்றில் பெரியார் தங்க வைக்கப்பட்டிருந்தார். வரிசையாக, அமைதியாக செல்லும் மாணவர்கள் அவருக்கு வணக்கம் சொல்ல, அவர் பதில் வணக்கம் சொல்லி சிரித்த முகத்தோடு ஒருசில மாணவர்களிடம் பேச்சுக் கொடுத்து அனுப்பி வைத்தார்.

எனக்கு அவரைப் பார்த்ததும் என் செல்லமுத்து தாத்தா நினைவுக்கு வந்தார். வெள்ளைத்தாடியும் அருகில் கைத்தடியுமாக அச்சு அசலாக அப்படியே என் தாத்தாவைப் பார்ப்பதுபோலவே உணர்ந்தேன். என்னை குழந்தை முதலே தன் தோளில் தூக்கிவைத்துக் கொண்டாடிய செல்லமுத்து தாத்தா சில மாதங்களுக்கு முன்புதான் இறந்திருந்தார். அவரது நினைவுகள் என்னை சில நிமிடங்கள் தடுமாற வைத்தன.

எல்லா மாணவர்களும் பெரியாரை நோக்கி இருகரம் கூப்பி வணக்கம் சொல்லிவிட்டு நகர எனக்கு மட்டும் அவரை ஒருதடவையாவது தொட்டுப் பார்க்க வேண்டும் என்கிற ஆசை வந்தது. அவரை நெருங்கும்போது சட்டென எனது வலது கையை கைகுலுக்கும் தோரணையில் நீட்டினேன். பெரியாரும் அதை ரசித்தபடியே எனது கைகளைப் பற்றிக் கொண்டு,

‘’உங்க பேரு என்ன தம்பி?’’ என்றார்.

நான் சொன்னேன்.

‘’நல்லா படிக்கணும்’’ என்று என் கன்னத்தைத் தட்டிக் கொடுத்து அனுப்பி வைத்தார்.

பன்னிரெண்டு வயது சிறுவனான என்னைப் பார்த்து மரியாதையோடு ‘உங்க’ பேரு என்ன தம்பி என்று அவர் கேட்டது எனக்கு அப்போது மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. என் வாழ்க்கையில் என்னை முதன்முதலாக இப்படி ’உங்க’ சேர்த்து அழைத்த மாமனிதர் பெரியார். அந்த மாதம் முழுதும் பலரிடமும் இந்தச் சம்பவத்தை நான் சொல்லிச்சொல்லி மாய்ந்து போனேன்.

அதன்பிறகுதான் கொஞ்சம் கொஞ்சமாக செல்லமுத்து தாத்தா மாதிரியே இருந்த பெரியாரின் மதிப்பும் மரியாதையும் எனக்குத் தெரியவந்தது. பள்ளிப் படிப்பு முடிந்து பல்வேறு வகையான நூல்களைப் படிக்கிற போது பெரியாரின் எழுத்துக்களுக்கு முக்கியத்துவம் தந்து படிக்க ஆரம்பித்தேன். அவர் மீது எனக்கிருந்த மரியாதை மென்மேலும் கூடிப்போயிற்று.
அவரது தீவிரமான தொண்டனாக செயல்படாவிட்டாலும் முடிந்தவரை அவரது கருத்துக்களுக்கும் எண்ணங்களுக்கும் மதிப்புக் கொடுப்பனாகவே இருந்து வந்திருக்கிறேன்.

பல்வேறு காலகட்டங்களில் தனது கருத்துக்களை துணிச்சலாகவும் புதுமையாகவும் சொல்லி வந்த அந்த பெரியார் என்கிற வடிவம் ஆழமாக என மனதில் பதிந்து போயிருக்கிறது. அவரது மரணத்திற்குப் பின்னால் அவரைப் போல கருத்துக்களைச் சொல்ல யார் இருக்கிறார்கள் என்கிற கேள்வி எனக்குள் இன்றைக்கும் இருக்கிற ஒன்று.

இன்றைய இளைய சமுதாயத்திற்கு பெரியார் என்கிற பெயரே ஓல்டு ஃபேஷன் நேம் என்று ஆகிவிட்ட நிலையில் –
இன்னொரு பெரியார் நமக்குக் கிடைப்பாரா என்கிற கேள்விக்கு விடை கிடைக்குமா என்ன?

சல்லிக்காசு பெறாத நான் சாவதற்குள், இந்த மில்லியன் டாலர் கேள்விக்கு விடை கிடைக்குமா?


கட்டுரையாளர் : கல்யாண், புதிய தலைமுறை வார இதழில் துணை ஆசிரியராகப் பணிபுரிகிறார். ஆசிரியர் மாலனின் திசைகள் மூலமாக பத்திரிகையுலகுக்கு அறிமுகமானவர். மணிவண்ணன் உள்ளிட்ட பிரபல இயக்குனர்களிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர். இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரின் கதை இலாகா மெம்பர். ஏராளமான கவிதைகள், சிறுகதைகள் எழுதியிருக்கிறார். தலா ஒரு சிறுகதைத் தொகுப்பும், கவிதைத் தொகுப்பும் வெளியிட்டிருக்கிறார். ரோஜா திரைப்படம் வெளிவருவதற்கு முன்பாக இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானை பேட்டி கண்டு, இந்தியா டுடேவில் எழுதியவர். இணையத்திலும் சில ஆண்டுகளாக உலா வருகிறார்.

இவரது வலைப்பக்கம் : http://kalyanje.blogspot.com

15 செப்டம்பர், 2011

பேரறிஞர் அண்ணா


வங்கக் கடலோரம் துயில் கொண்டிருக்கும்
தங்கத் தலைவனின் நூற்றி மூன்றாவது பிறந்தநாள் இன்று.

“இந்தியா ஒரு துணைக்கண்டம். இது ஒரு தனி நாடு, ஒரே நிர்வாகத்தால் ஆளப்பட வேண்டிய நாடு என்று யாரும் வாதம் புரியமுடியாது. ஐரோப்பா 32 நாடுகளாக பிரிக்கப்பட்டிருப்பதைப் போல இந்திய துணைக்கண்டமும் தனித்தனி நாடுகளாக நிர்வகிக்கப்பட வேண்டும். ஆரிய ஆதிக்கத்தின் காரணத்தாலே தான் இந்தியா என்ற பெயரில் இக்கண்டம் தனியொரு நாடாக இருக்கிறது. ஆரிய ஆதிக்கம் மற்ற இனத்தவரின் நல்வாழ்வை நசுக்கியிருக்கிறது. பல்வேறு தேசிய இனங்கள் கட்டாயமாக ஒரே நாடாக வாழவேண்டுமென்று திணிக்கப்படுகிறார்கள். இதனால் புரட்சிகளையும், குழப்பங்களையும் தவிர்க்க இயலாது.

குழப்பங்களையும், போராட்டங்களையும் தவிர்க்க வேண்டுமானால் இனவாரியாக இக்கண்டம் தனித்தனி நாடாக பிரிக்கப்பட வேண்டும். அசோகர், கனிஷ்கர், சமுத்திரகுப்தர் போன்ற பேரரசர்களின் காலத்தில் கூட ‘இந்தியா' என்ற பெயரில் ஒரே நாடாக இக்கண்டம் இருந்ததில்லை. இந்திய துணைக்கண்டம் பல்வேறு நாடுகளாக பிரிக்கப்பட்டால் ஒவ்வொரு நாடும் தனக்கிருக்கும் வளங்களை கொண்டு பொருளாதாரரீதியாக இலகுவாக முன்னேற முடியும். ஒவ்வொரு இனத்துக்கும் ஒவ்வொரு தனி நாடிருந்தால் எல்லா இனமுமே சமமான முன்னேற்றத்தை பெற இயலும். சமத்துவம் மலரும். ஒரு இனத்தின் ஆதிக்கத்தில் இன்னொரு இனம் வாழவேண்டிய நிலை இருந்தால் வன்முறை தான் மிஞ்சும். வன்முறைகளிலிருந்து மக்களை காக்க பிரிவினை அவசியப்படுகிறது.”

1940ஆம் ஆண்டு திருச்சியில் நடந்த சுயமரியாதை மாநாட்டில் பேரறிஞர் அண்ணா துரை பேசியதின் சாராம்சம் இது. விருப்பு வெறுப்பின்றி இதை வாசித்துப் பார்த்தோமானால் 71 ஆண்டுகளுக்கு முன்பாக அண்ணாவுக்கு இருந்த தீர்க்கதரிசனத்தை உணரலாம்.


காஞ்சீபுரம் நடராஜன் அண்ணாதுரை 1909ஆம் ஆண்டு காஞ்சிபுரத்திலே ஒரு கீழ்நடுத்தர குடும்பம் ஒன்றில் பிறந்தவர். காஞ்சிபுரம் பச்சையப்பன் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தவர் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பட்டம் பெற்றார். மாணவராக இருந்த காலத்திலேயே ஆங்கிலம் மற்றும் தமிழில் அவருக்கு அபார புலமை இருந்தது. நவயுவன், பாலபாரதி ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியராக இருந்தார். ஆங்கிலத்தில் வெளிவந்த ஜஸ்டிஸ் என்ற நாளிதழின் துணையாசிரியாக பணிபுரிந்த அனுபவமும் அவருக்குண்டு. தந்தை பெரியாரின் விடுதலை பத்திரிகையில் பட்டை தீட்டப்பட்டப் போது தான் வைரமாய் மின்னினார் பேரறிஞர் அண்ணா.

அண்ணாதுரைக்கு திருப்புமுனை தந்தது திருப்பூர். 1934ஆம் ஆண்டு தந்தை பெரியாரை அவர் சந்தித்தது இங்கே தான். பெரியாரை சந்தித்தபின் தனது பேச்சாற்றல், எழுத்தாற்றல் அனைத்தையும் சுயமரியாதை இயக்கத்திற்கு காணிக்கையாக்கினார். நூல்கள் வாசிப்பிலே பெரும் ஆர்வம் கொண்டிருந்த பேரறிஞர் அண்ணா, வீட்டுக்கு ஒரு நூலகம் அவசியம் இருக்கவேண்டுமென தமிழர்களை வற்புறுத்தினார். தமிழர்களுக்கு வாசிப்புப் பழக்கம் குறைவு என்று குறைபட்டுக் கொண்டவர் எழுதியதைப் பாருங்கள்.

“இந்த நாட்டிலே நம்மவர் வீடு கட்டுவர், அதிலே பல அறைகளும் அமைப்பர். மாட்டுக்கொட்டகை ஒரு பால், பொக்கிஷ அறை ஒருபால், சமையலறை மற்றொருபால். மற்றெதை மறக்கினும் ஆண்டவனுக்குப் பூசை செய்ய அறை அமைக்க மட்டும் மறவார். ஆனால் அறிவூட்டும் ஏடுகள் நிறைந்த படிப்பறையைப் பற்றிய பகற்கனவும் காணார். படிப்பறை மிகவும் முக்கியமானது. அவசியமானது. அலட்சியப்படுத்தக் கூடியதன்று. ஆயினும் அது அவர்தம் சிந்தனையில் தோன்றாது”

அறிஞர் அண்ணாவின் எழுத்துலக ஆளுமை அப்போது சினிமாவுக்கு பரவியது. திராவிட சிந்தனை கொண்ட எழுத்தாளர்கள் சினிமாவில் கொடிகட்டிப் பறக்க அச்சாரம் போட்டவர் அறிஞர் அண்ணா. அறிஞர் அண்ணாவுக்கு முன்பான தமிழ் சினிமாவில் “அவா வருவா, இவா ஊதுவா” என்ற அளவிலேயே தமிழ் இருந்தது. அறிஞர் அண்ணாவின் ஓர் இரவு, வேலைக்காரி திரைப்படங்கள் பெரியளவில் வெற்றி கண்டன. மேடைத்தமிழை சினிமாவுக்கும் கொண்டு சென்ற பெருமை அறிஞர் அண்ணாவையே சாரும். இவரைப் பின் தொடர்ந்து நுழைந்த திராவிட சிந்தனையாளர்கள் இயல்புத்தமிழையும் பிற்பாடு சினிமாவுக்கு கொண்டு வந்தார்கள்.

எழுத்து, பேச்சு என்று அலுவலக அறைக்குள் மட்டுமே தமிழர்களுக்கான அண்ணாவின் சேவை நின்றுவிடவில்லை. அதையும் தாண்டி விலைவாசி உயர்வு எதிர்ப்பு மறியல் போராட்டம், மும்முனைப் போராட்டம், கட்டாய இந்தி பதினேழாவது மொழிப் பிரிவு சட்ட நகல் எரிப்புப் போராட்டம் என பல போராட்டங்களில் ஈடுபட்டு சிறை சென்றவர் அண்ணா.

1949ஆம் ஆண்டு திராவிடர் கழக தலைவர் தந்தை பெரியாரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடின் காரணமாக தி.மு.கழகத்தை தொடங்கினார். கழகம் தொடங்கி பதினெட்டாவது ஆண்டில் 1967ல் தமிழகத்தின் ஆட்சிப்பீடத்தை அலங்கரித்தது. அப்போது இந்தியாவிலேயே காங்கிரஸ் ஆளாத மாநிலமாக தமிழகம் தான் இருந்தது. உலகளவில் ஒரு பிராந்திய கட்சி பொன்விழா கொண்டாடியும் மக்கள் மத்தியில் வலுவாக, செல்வாக்காக இருக்கிறதென்றால் அது அறிஞர் அண்ணா தொடங்கிய திராவிட முன்னேற்றக் கழகம் மட்டுமே.

1967ஆம் ஆண்டிலிருந்து 69ஆம் ஆண்டுவரை மிகக்குறுகிய காலம் மட்டுமே முதலமைச்சராக அறிஞர் அண்ணா இருந்தார். இதற்குள்ளாகவே மதராஸ் மாகாணம் என்ற பெயரை தமிழ்நாடு என்று பெயர்மாற்றி அழகுத்தமிழை அரசாட்சி ஏற்றினார். இரண்டாம் உலகத் தமிழ்மாநாட்டை உலகம் வியக்குமளவுக்கு சிறப்பாக சென்னையில் நடத்திக் காட்டினார். கலப்புத் திருமணத்திற்கு இந்தியாவிலேயே முதன்முறையாக சட்ட அங்கீகாரம் அளித்தார். தென்னாட்டு பெர்னாட்ஷா என்று பேராசிரியர் கல்கியால் புகழப்பட்டார்.

பிப்ரவரி 2, 1969ல் மறைந்த பேரறிஞர் அண்ணாவின் மறைவுக்கு ஒன்றரை கோடி பேர் சென்னையில் கூடினார்கள். உலகளவில் ஒருவரின் மறைவுக்கு மிக அதிகமான பேர் கூடியதாக கின்னஸ் சாதனை புத்தகத்தில் அறிஞர் அண்ணாவின் இறுதி ஊர்வலம் பதிவாகியிருக்கிறது. தமிழ் வளர, தமிழர் தம் வாழ்வுயர காலமெல்லாம் பாடுபட்ட தலைவனின் இறுதி ஊர்வலத்துக்கு இவ்வளவு பேர் திரண்டதில் ஆச்சரியமென்ன இருக்க முடியும்?

அகில இந்திய வானொலியில் தலைவர் கலைஞர் கதறிய உலகப்புகழ் பெற்ற “அண்ணா, எம் இதய மன்னா” கவிதாஞ்சலியை இங்கே கேட்கவும்.

பேரறிஞர் அண்ணா சுமாராக ஓவியமும் வரைவார். அவரது ஓவியங்களில் சில :




14 செப்டம்பர், 2011

லெட்டர் டூ தி எடிட்டர்

அன்புள்ள ஆசிரியருக்கு,

என் சொந்த மாநிலமான தமிழ்நாட்டில் அவ்வப்போது நடைபெறும் சாதிக்கலவரங்கள் அச்சமூட்டுகின்றன.

இதுபோல ஏதாவது சாதிக்கலவரங்கள் ஏற்படும் போதெல்லாம் மாநிலத்தை ஆளும் திராவிடக் கட்சிகள் தெருப்பெயரிலிருந்து சாதியை எடுத்து தற்காலிகமாக பிரச்சினையை திசை திருப்புகிறது. தெருவுக்கும், ஊருக்கும் சாதிப்பெயரை வைத்ததே இந்த திராவிடக் கட்சிகள்தான்.

தெருவுக்கும், ஊருக்கும் மட்டுமல்ல. பேருந்து நிலையத்துக்கும், ரயில் நிலையத்துக்கும், ஏன் விமான நிலையத்துக்கும் கூட சாதித்தலைவர்களின் பெயரை வைத்து ஓட்டு வாங்குவதே இவர்களுக்கு பிழைப்பாகப் போய்விட்டது. தெருவுக்கு தெரு சாதித்தலைவர்களுக்கு சிலை வைத்து, போலிஸ் பாதுகாப்பு போட்டு அரசியல்வாதிகளே கலவரத்தை தங்கள் சுயநலத்துக்காக உருவாக்குகிறார்கள். நம் நாட்டில் ஊழல், சாதிப்பிரிவினை, லஞ்சம் என்று எல்லா கேடுகளுக்கும் அரசியலும், கேடுகெட்ட அரசியல் வியாதிகளுமே காரணம்.

உலகில் எங்காவது நடக்குமா இந்த அநியாயம்? அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் சாதிப்பெயரில் தெருக்கள் உண்டா? சாதித்தலைவர்களுக்கு சிலைகள்தான் உண்டா?

சாதி வேண்டாம், சாதி வேண்டாம் என்று சொல்லிக்கொண்டே பள்ளியில் குழந்தைகளை சேர்க்கும்போது கூட, என்ன சாதி என்று கேட்டு எழுதி வாங்கிக் கொள்கிறார்கள். பிஞ்சு மனங்களின் மனதில் நஞ்சை விதைக்கிறார்கள். ஏனென்றால் சாதி மூலமாக இடஒதுக்கீடு போன்ற சலுகைகள் கொடுத்து, அப்பாவி மக்களின் ஓட்டுகளை வெட்கமில்லாமல் வாங்குகிறார்கள்.

சாதிகள் இல்லையடி பாப்பா என்று பாடினான் பாரதி. அவன் வாக்கு பொய்த்துப்போனது இந்த அரசியல்வாதிகளால். சாதி இல்லாத இந்தியா எப்போது சாத்தியமாகுமோ, அதை என் வாழ்நாளில் என்று காணமுடியுமோவென்று ஏங்கித் தவிக்கிறேன்.

அன்புடன்
யுவகிருஷ்ணா
yuvakrishna.iyer@gmail.com

டிபன் பாக்ஸ்

ஃபேக்டரி சங்கு ஊதியது. கேண்டீன் நோக்கி தொழிலாளர்கள் அவசரமாகப் படையெடுத்தார்கள். வடை, பாயசத்தோடு ருசியான, தரமான சாப்பாட்டை இலவசமாகவே கொடுக்கிறது நிர்வாகம். கரும்பு தின்ன கூலியா? எப்போது சங்கு ஊதுமோவென்று காத்துக் கிடப்பார்கள் தொழிலாளர்கள்.

ஃபிட்டர் அன்பு இதுவரை கேண்டீனுக்கு வந்ததேயில்லை. சங்குச் சத்தம் கேட்டதுமே, சாப்பாட்டுப் பையை தூக்கிக் கொண்டு, வசதியான மரநிழல் நோக்கி ஓடிவிடுகிறான்.

“ஏண்டா. கேண்டீன்லே ப்ரீயாவே நல்ல சாப்பாடு போடுறானுங்க. என்னவோ வூட்டுலே தினமும் கறியும், மீனும் கட்டித்தர மாதிரி கேரியரைத் தூக்கிட்டு ஓடுறீயே?” தங்கம் அடிக்கடி இதே கேள்வியை கேட்பான். அன்பு பதில் சொன்னதில்லை. புன்னகையோடு கடப்பான்.

என்னத்தைதான் கட்டிக்கொண்டு வருகிறான்? தங்கமும், நண்பர்களும் ஒரு நாள் டிபன்பாக்ஸில் என்னதான் இருக்கிறது என்று திறந்துப் பார்த்தார்கள். புளித்தவாடையோடு தயிர்ச்சாதமும், தொட்டுக்கொள்ள மோர்மிளகாய் நான்கும்.

“அடப்பாவி. இதுக்கா கேண்டீனுக்கு வராம தங்கம் மாதிரி டிபன் பாக்ஸைத் தூக்கிட்டு ஓடுறான்? ஆயிரக்கணக்குலே சம்பளம் வாங்கி என்னத்தைப் பிரயோசனம்? வாய்க்கு ருசியா சாப்பிட மாட்டேங்கிறானே?”

அன்று டூல்ரூம் கண்ணனுக்கு பிறந்தநாள்.

“நம்ம செட்டுலே யாரும் இன்னிக்கு கேண்டீனுக்கு போவேணாம். எல்லாத்துக்கும் பாய்கடையிலே பிரியாணி ட்ரீட்” – காலையிலேயே அறிவித்து விட்டான்.

சாப்பாட்டு நேரம் வந்ததும், வழக்கம்போல அன்பு சாப்பாட்டுப்பையைத் தூக்கிக் கொண்டுச் செல்ல, கண்ணனுக்கு கோபம்.

“முரட்டு முட்டாளுடா நீயி. ஏதோ ஒரு நா ஃப்ரெண்ட்ஸோட ஜாலியா வெளியே சாப்பிடலாம்னு கூப்பிட்டா, இப்படி பிகு பண்ணுறே. போ. போய் உன் நாத்தம் புடிச்ச டிபன் பாக்ஸை கட்டிக்கிட்டு அழுவு. நாகரிகம் தெரியா ஜென்மம்” கத்தித் தீர்த்துவிட்டு, நண்பர்களோடு கிளம்பிவிட்டான்.

‘இவர்களுக்கு எப்படி புரியவைப்பது?’ அன்புக்கு தெரியவில்லை. டிபன்பாக்ஸில் இருப்பது வெறும் தயிர்சோறல்ல. அவனுடைய ஆத்தாவின் அன்பு என்பதை.

(நன்றி : தினகரன் வசந்தம்)

13 செப்டம்பர், 2011

இரண்டு முக்கியச் செய்திகள்

இன்று வாசிக்க கிடைத்த இரண்டு முக்கியச் செய்திகள் :

உலகின் மொத்த அழகிகளும் பிரேஸிலில் குவிந்திருந்தார்கள். இவர்களில் யார் பிரபஞ்ச அழகி என்ற முடிவு இன்னும் சில மணி நேரங்களில் தெரிந்துவிடும். அவர்களில் ஒருவர் கொலம்பிய நாட்டைச் சேர்ந்த 22 வயது அழகியான கேத்தலினா ரொபாயோ. 33.5-24-36.5 அளவு கொண்டவர். ஐந்தடி ஒன்பது அங்குலம் உயரம். மிஸ் கொலம்பியா 2010-ம் இவர்தான்.

அமைப்பாளர்களின் ஏற்பாட்டின் படி டாப்-16ல் வந்த அழகிகள் அனைவரும் க்ரூப் போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் வைபவம் நடந்து கொண்டிருந்தது. எல்லாமே நன்றாகதான் நடந்தது.

மறுநாள் உள்ளூர் செய்தித்தாள் ஒன்றில் கேத்தலினாதான் தலைப்புச்செய்தி. பவழவண்ண குட்டைப்பாவாடை அணிந்து போஸ் கொடுத்தவர், துரதிருஷ்டவசமாக கீழ் உள்ளாடை அணிய மறந்துவிட்டிருக்கிறார். இந்த சீனை ‘க்ளிக்’ செய்த போட்டோகிராஃபர் ஸ்பெஷல் ஜூம் போட்டு, ஜொள்ளிக்கொண்டே போட்டோவாக எடுத்துத் தள்ளியிருக்கிறார்.

பரபரவென்று நெருப்பு மாதிரி பற்றிக்கொண்டது மேட்டர். போட்டோ இணையம் மூலமாக பரவ, உலகமகா காமகொடூரர்கள் ஒட்டுமொத்தமாக கூகிளில் கேத்தலினாவின் குட்டைப்பாவாடையை தேடித்தேடி உற்றுப் பார்த்தார்கள். இதுபற்றி கேத்தலினாவிடம் விளக்கம் கேட்டபோது, தான் உள்ளாடை அணிந்திருந்ததாகவே கருத்து தெரிவித்திருக்கிறார்.

பரபரப்புக்காக நிகழ்ச்சி அமைப்பாளர்களோடு கூட்டு சேர்ந்து இவர் ‘அண்டர்ப்ளே’ செய்திருப்பாரோ என்றொரு ஐயம் ஊடகங்களுக்கு. இல்லை, சொந்த பப்ளிசிட்டிக்காகவே இந்த ச்சீ ச்சீ விளையாட்டை விளையாடிருப்பார் கேத்தலீனா என்பது சக அழகிகளின் கருத்து.

சம்பவத்துக்கு பிறகு அம்மணியின் மவுசு எடக்குமடக்காக உயர்ந்திருக்கிறது. இதைக்கண்டு மற்ற அழகிகள் ‘ச்சே.. வடை போச்சே’ என்று கூட புலம்புகிறார்களாம். இப்போதெல்லாம் பொது இடத்துக்கு கேத்தலீனா செல்லும்போதெல்லாம் கூட்டம், இன்னொரு சான்ஸ் கிடைக்காதா என்று எகனைமொகனையாக கூடிவிட, ‘பாடி’கார்டுகளுக்கு செம டென்ஷனாம்.

என்ன காட்டி என்ன பிரயோசனம்? கடைசியில் அங்கோலா நாட்டு அழகி பிரபஞ்சத்திலேயே அழகானவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

எனக்கு இந்த செய்தியில் தெரியவேண்டிய விஷயம் என்னவென்றால், மறக்காமல் தான் உள்ளாடையை அணிந்ததாக கேத்தலினாவின் வெர்ஷன் இருக்கிறது. அவர் அணிந்ததற்கும், போட்டோவுக்கு போஸ் கொடுப்பதற்கும் இடையிலான நேரத்தில், அவருக்கே தெரியாமல் அதை அவிழ்த்த தில்லாலங்கடி யாரென்பதுதான்.

இந்தப் படத்தில் மேடம் உள்ளாடை மட்டுமே அணிந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


இரண்டாவது நம்மூர் செய்தி.

கோவைக்கு அருகில் நடந்திருக்கிறது. போத்தனூர் சிமெண்ட் கலவை ஃபேக்டரியில் ஒரிசாவைச் சேர்ந்த பினோத், நிஸ்தார், டேவிட், பெகோர் ஆகியோர் பணியாற்றியிருக்கிறார்கள்.

ஒருநாள் ரொம்ப காஜூ ஏறிப்போன நால்வரும் தண்டபாணி என்பவரின் வீட்டுத் தோட்டத்துக்கு வந்திருக்கிறார்கள். அங்கு ஒரு அழகான கன்றுக்குட்டி இருந்திருக்கிறது.

அதன் வாயைப் பொத்தி நால்வரும் மாறி, மாறி...

விஷயம் முடிந்ததும் தப்பித்திருக்கிறார்கள். கன்றுக்குட்டியின் கதறல் சத்தத்தைக் கேட்டு வந்த உரிமையாளர் தண்டபாணி நிலைமையை யூகித்திருக்கிறார். தப்பித்துக் கொண்டிருந்தவர்களில் ஒருவனைப் பிடித்து என்ன ‘மேட்டர்’ என்று விசாரித்துத் தெரிந்துக் கொண்டார்.

ஊர்மக்களும் கூடிவிட, காவல் நிலையத்துக்குப் போய் ’புகார்’ செய்துவிட்டு வந்திருக்கிறார்கள். விசித்திரமான புகாரை நம்ப மறுத்ததாலோ என்னவோ போலிஸார் போதிய ஆர்வம் காட்டவில்லை. இதையடுத்து காமுகர்கள் பணிபுரிந்த தொழிற்சாலைக்கு மக்கள் படையெடுத்து, மற்ற மூவரையும் பிடித்து தென்னைமரத்தில் கட்டிவைத்து உதைத்திருக்கிறார்கள். அப்போதும் காவல்துறையினர் வந்து சேரவில்லை.

இதையடுத்து கன்றுக்குட்டிக்கு நீதி கேட்டு காவல் நிலையம் முன்பாக மறியலில் ஈடுபட்டிருக்கிறார்கள். உடனடியாக விழித்துக் கொண்ட காவல்துறை நால்வரையும் கைது செய்தது. கன்றுக்குட்டி மருத்துவப் பரிசோதனைக்கு கால்நடை மருத்துவரிடம் அனுப்பப்பட்டது. மருத்துவர், கன்றுக்குட்டி கற்பழிக்கப்பட்டதை உறுதி செய்து சான்றிதழ் அளித்தால், நாலு பேரின் டவுசரும் கிழியும்.

எந்தப் பிரிவுகளில் வழக்கு தொடுப்பது என்று ஆரம்பத்தில் குழம்பிப் போன காவல்துறை, பின்னர் மிருகத்தை கொலை செய்ய முயற்சித்தது, இயற்கைக்குப் புறம்பான உறவு ஆகிய செக்‌ஷன்களில் வழக்கு பதிந்திருக்கிறது.

எனக்கு இந்தச் செய்தியில் ஆர்வத்தைத் தூண்டிய விஷயம் இந்தப் படம்தான். காமூகர்களோடு, கன்றுக்குட்டியையும் நிற்கவைத்து போட்டோ எடுத்து பத்திரிகைகளுக்கு கொடுத்த அசத்தல் ஐடியா யாருடையது?

12 செப்டம்பர், 2011

சாதி வன்முறை

சாதி தொடர்பான வன்முறைகளும், கலவரங்களும் நடைபெறும் போதெல்லாம் பூணூல் அணிந்தவர்களும் கூட சாதிவெறியை ஒழிக்க உறுதி பூணுகிறார்கள். நன்கு கவனிக்கவும். சாதியை ஒழிக்க வேண்டும் என்பதில்லை. சாதிவெறியை ஒழிக்க வேண்டும் என்கிறார்கள். அன்னா ஹசாரே எப்படி ஊழலை ஒழித்துவிடுவாரோ, அதுபோல இவர்களும் சாதிவெறியை ஒழித்துவிடுவார்கள் என்று நம்பித்தொலைப்போம். எனக்குத் தெரிந்த நன்கு படித்த, பல பட்டங்களை பெற்ற ஒரு அறிவுஜீவி ஒருமுறை சொன்னார். “சாதி கூடாது என்பதல்ல. சாதிவெறி கூடாது என்பதே நம் லட்சியமாக இருக்க வேண்டும்”. அடங்கொன்னியா, இவ்வளவு நாட்களாக கல்வியறிவு சாதியுணர்வை தகர்க்கும் அல்லது குறைக்கும் என்று எவ்வளவு முட்டாள்த்தனமாக நம்பிக் கொண்டிருந்தேன் என்று அப்போது நொந்துக் கொண்டேன்.

தென்மாவட்டத்தில் தற்போது நடைபெற்று வருவதைப் போன்ற சம்பவங்கள் நடைபெறும் போதெல்லாம் சாதியை மறுப்பவனின் குரல் சற்று குறைத்தும், சாதியை ஏற்றுக் கொண்டவன் குரல் சற்று ஓங்கியும் ஒலிப்பதை உற்றுக் கவனித்தால் உணரமுடியும். ஏன் இந்த உரத்தக் குரல் என்று பார்த்தோமானால், தன் சாதி நல்ல சாதி. இது மாதிரி அரிவாள் தூக்காது. பெட்ரோல் குண்டு வீசாது என்பதை மறைமுகமாக நிறுவுவது மட்டுமே அக்குரலுக்கான நோக்கமாக இருக்கிறது. மாற்றுச்சாதி கலவரங்களின்போது மட்டுமே கண்டிக்கும் இம்மாதிரியான குரல்கள், ஒரு மசுருக்கும் பிரயோசனப்படப் போவதில்லை. இவனிடம் இருக்கும் அதே சாதியுணர்வுதான், கலவரத்தை நடத்திக் கொண்டிருக்கும் சாதிக்காரனிடமும் கொஞ்சம் அதிகமாக இருக்கிறது என்பதை இவன் உணரவும் போவதில்லை.

வன்முறையில் ஈடுபடும் சாதிக்காரன் செய்வது பிஸிக்கல் வயலன்ஸ். மனதுக்குள் சாதியுணர்வினை, பற்றினை சுமந்துக்கொண்டு காந்தியவாதியாக சமூகத்தில் வாழ்ந்துக் கொண்டிருப்பவன் செய்துக் கொண்டிருப்பது மெண்டல் வயலன்ஸ். ஒப்பீட்டளவில் பார்க்கப் போனால் பிஸிக்கல் வயலன்ஸை விட, மெண்டல் வயலன்ஸ் பன்மடங்கு ஆபத்தானது. உயிர்ச்சேதங்களும், பொருட்சேதங்களும் இருந்தாலும், பிஸிக்கல் வயலன்ஸின் தாக்கம் தற்காலிகமானது. அதிகபட்சம் நாற்பது, ஐம்பது வருடங்களில் நீர்த்துப் போகக்கூடியது. மாறாக மெண்டல் வயலன்ஸ் என்பது ரிலே ரேஸ் மாதிரி தலைமுறை, தலைமுறையாக பல நூற்றாண்டுகளுக்கு கடத்தப்படக் கூடியது. பிஸிக்கல் வயலன்ஸுக்கான ஆணிவேராக, இந்த மெண்டல் வயலன்ஸே விளங்குகிறது.

பிஸிக்கல் வயலன்ஸ் கண்ணுக்குத் தெரியக்கூடியது. சட்டம் மூலம் தடுக்க முடியும். விளைவுகளுக்காக தண்டிக்கவும் முடியும். மெண்டல் வயலன்ஸ் கடவுள் மாதிரி. கண்ணுக்கும் தெரிந்து தொலைக்காது. அதன் நீட்சிதான் பிஸிக்கல் வயலன்ஸ் என்பதை சட்டம் முன் நிரூபிக்கவும் முடியாது. இது யார் யாரிடம் இருக்கிறது என்பதையும் சி.டி.ஸ்கேன் எடுத்தும் கூட கண்டுபிடிக்கவும் முடியாது.

மதத்தை ஒழிக்காமல் சாதியை ஒழிக்கவே இயலாது. மதம் வேண்டும். சாதி மட்டும் வேண்டாம் என்பது பிராக்டிக்கலாக நடைமுறைப்படுத்த இயலாதது. குருபூசையால் பிஸிக்கல் வயலன்ஸ் உருவாகிறது என்றால், விநாயகர் சதுர்த்திகளும், தீபாவளிகளும் மெண்டல் வயலன்ஸை ஏற்படுத்துகின்றன. சாதிய மெண்டல்களை உருவாக்குகின்றன. மதம் மாறுவதும் இதற்கு தீர்வல்ல என்பது பலமுறை அழுத்தமாக நிரூபிக்கப்பட்டு விட்டது. தலித் மதம் மாறினாலும் தலித்தாகவே இழிவுப்படுத்தப் படுகிறான். நாடாரோ, தேவரோ மதம் மாறினாலும், செல்லும் மதத்திலும் தன் சாதியப்பெருமையை தக்கவைத்துக்கொள்ள முயற்சிக்கிறான்.

மதத்தை ஒழிக்க, கடவுளை மறுத்தாக வேண்டும். இதைத்தான் பெரியாரியம் செய்கிறது. மத அடிப்படையிலோ, சாதி அடிப்படையிலோ எவனும் உயர்ந்தும் விடமுடியாது, தாழ்ந்தும் விட முடியாது என்பதைதான் பெரியார் கரடியாக கத்திக் கொண்டிருந்தார்.

சாதிய வன்முறைகள் கூடாது, மதக்கலவரங்கள் ஒழியவேண்டும் என்று நிஜமாகவே நினைப்பவர்கள் இவற்றைப் பற்றி பேசுவதற்கும், எழுதுவதற்கும் முன்பாக தன்னளவில் மட்டுமாவது கடவுளை மறுத்தாக வேண்டும். கடவுள் பெயரில் பரப்பப்படும் மூடநம்பிக்கைகளை வெறுத்தாக வேண்டும். இல்லையேல் இவர்களது ‘சாதிவெறி கூடாது’ அறிவிப்பு, நிஜமான அக்கறையின் பேரில் விளைந்ததாக இல்லாமல், குடியரசுத்தின குடியரசுத் தலைவரின் உரையை மாதிரி உப்புக்கும், சப்புக்கும் ஒப்பாத சம்பிரதாய விருப்பமாக மட்டுமே இருக்கும்.

10 செப்டம்பர், 2011

காசேதான் கடவுளடா

எவ்வளவு நாளாச்சி நம்ம பாபிலோனாவை திரையில் பார்த்து? போலிஸ் யூனிஃபார்மில் எப்போதும் அட்டென்ஷனுடன், பரந்த மனசை அசோகர் தூண் மாதிரி நிமிர்த்துக்கொண்டு.. கூராக தீட்டப்பட்ட வேல் விழிகள். பக்காவாக திருத்தப்பட்ட வில் புருவம். எழிலான குண்டு முகம். பருவம் மின்னும் பால் வண்ணம். சந்திரன் தியேட்டருக்கு கொடுத்த 70 ரூபாய், பாபிலோனாவுக்கு மட்டும் ஓக்கே.

ரெண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக கோங்குரா சட்னி ஆந்திராவையே சிரிப்பால் அலறவைத்த ப்ளேட் பாப்ஜி, தமிழில் காசேதான் கடவுளடாவாக வெளிவந்திருக்கிறது. அப்படியே டப் அடித்திருந்தால் கூட நன்றாக டப்பு பார்த்திருக்கலாம். ஏன்தான் ரீமேக்கி மொக்கை ஆக்கினார்களோ தெரியவில்லை. இப்படத்தின் இயக்குனர் திருமலை ஏற்கனவே தீ.நகர், அகம்புறம் மாதிரியான மெகா மொக்கைப்படங்களை இயக்கியவர். ஆக்‌ஷன் போர் அடித்து, காமெடிக்கு வந்து தொலைத்துவிட்டார்.

அனேகமாக ஹீரோ சரண் தான் இப்படத்தின் மறைமுக தயாரிப்பாளராக இருந்திருக்க வேண்டும். ஸ்ரீகாந்த் தேவா தன்னுடைய எடையை பாதிக்குப் பாதி குறைத்தால் எப்படியிருப்பாரோ, அச்சு அசலாக அப்படியேதான் இருக்கிறார் சரண். பீரங்கி மூக்கினை கூலர்ஸ் போட்டு சமாளிக்கிறார். ஹீரோதான் த்ராபையாகி விட்டார் என்றால் ஹீரோயின் அதற்கும் மேல். காம்னா. உடம்பு கும்மென்று இலவசம்பஞ்சு மெத்தை மாதிரி இருந்தாலும், எதற்குமே ஒத்துழைக்காத அசமஞ்ச முகம். தேவுடா.


ஒரிஜினல் படமான தெலுங்கில் அல்லரி நரேஷ் ஹீரோ. இவர் ஆள் கொஞ்சம் சப்பையாக இருந்தாலும், தெலுங்கு மீடியம் பட்ஜெட் படங்களின் கில்லி. காமெடி + செக்ஸ் இவரது பலம். இவர் படங்களின் வசனங்கள் டபுள் மீனிங்கெல்லாம் கிடையாது, எல்லாமே டைரக்ட் மீனிங்தான். தமிழில் கூட விஷ்ணுவர்த்தன் அறிமுகமான குறும்பில் இவர்தான் ஹீரோ. தெலுங்கில் இவர் நடித்த ஒரிஜினலை பார்த்துவிட்டு, தமிழில் காசேதான் கடவுளடா பார்க்க ‘டொங்கு’ மாதிரியிருக்கிறது.

குறிப்பாக ஹீரோவுக்கான ஓப்பனிங் சாங்க் படா பேஜார். அறிமுகமாகும் முதல் படத்திலேயே, சூப்பர் ஸ்டார் இமேஜ் தங்களுக்கு வந்துவிடுவதாக சமகால ஹீரோக்கள் மாயையில் உழல்வது துரதிருஷ்டவசமான சோகம்.

‘ஆண் பாவம்’ பாண்டியராஜன், அந்த காலத்தில் நினைத்தே பார்த்திருக்க மாட்டார். இப்படியான டொக்குப் படங்களில் கட்டை வேடங்களில் நடிக்க வேண்டிய கட்டாயம் வருமென்று. பாபிலோனா குனிந்து எதையோ தேடிக்கொண்டிருக்க, பின்னால் நின்றுக்கொண்டு இவரும், டெல்லிகணேஷும் ஏதேதோ பேசுகிறார்கள். ஆர்வமாக நாம் நிமிர, சென்ஸார்காரன் ‘ங்கொய்’ அடித்து வெறுப்பேற்றுகிறான். ‘யூ’ சர்ட்டிஃபிகேட் வாங்குவதற்காக சென்ஸார் ‘ங்கொய்’ போட்ட இடத்தையெல்லாம் மறுதலிக்காமல் பேக்கு மாதிரி தலையை ஆட்டியிருப்பார்கள் போல. ‘லூசு’ என்கிற வசனத்தைக் கூட சாஸ்திரிபவன்காரர்கள் மனச்சாட்சியே இல்லாமல் வெட்டியிருக்கிறார்கள்.

தாங்கள் வசிக்கும் குப்பத்தைக் காப்பாற்ற நாலு கோடி தேவை. நாலு நண்பர்கள் கொள்ளையடிக்கிறார்கள். கொள்ளையடித்த பணம் ரிலே ரேஸ் டார்ச் மாதிரி பலரிடம் கை மாறி, கை மாறி கடைசியாக ஹீரோ க்ரூப்பிடம் வந்து சேர்ந்ததா என்பதே கதை. க்ளைமேக்ஸில் அர்ஜூனனுக்கு, கிருஷ்ணன் பகவத்கீதை உபதேசித்ததைப் போல ஒவ்வொரு கேரக்டரும், ஆளாளுக்கு நீதி, நியாயம் பேச.. சீக்கிரமா விடுங்கடா, பத்து மணிக்கு டாஸ்மாக் மூடிடுவான் என்று ரசிகர்கள் பிய்த்துக்கொண்டு ஓடுகிறார்கள்.

இடைவேளை வரை சுத்தமாக செல்ஃப் எடுக்காத படம், இடைவேளைக்குப் பிறகு கிச்சு கிச்சு மூட்டுகிறது. ஹீரோவும், ஹீரோயினும் ஒர்த் இல்லை என்பதாலேயோ என்னமோ பாண்டியராஜன், சிங்கமுத்து, மயில்சாமி, சிங்கம்புலி என்று காமெடியன்கள் படத்தை தூக்கிச் சுமக்கிறார்கள். படத்தில் வரும் ஒவ்வொரு பெண் பாத்திரமும் எப்பவும் விரகதாபத்திலேயே இருப்பதைப்போல உணர்ச்சிகளைக் கொட்டி நடித்திருக்கிறார்கள்.

தொப்புளுக்கு மேலே கஞ்சி என்பதைப்போல, பாக்கெட்டில் துட்டு எக்ஸ்ட்ராவாக இருப்பவர்கள் தியேட்டருக்குப் போய் பார்க்கலாம். இல்லையேல் மூன்று மாதம் கழித்து சன் டிவியில் போடும்போது பார்த்துக் கொள்ளலாம். அரசு கேபிள் டிவி வாய்க்கப்பட்ட அதிருஷ்டசாலிகளுக்கு இந்த ஆபத்தும் இல்லையென்று நிம்மதிப் பெருமூச்சு விடலாம்.

9 செப்டம்பர், 2011

தோழர் ஷகீலா!


மன்மதப்புயல் ஷகீலா என்றாலே முகம் சுளிப்பவர்கள் கூட சனிக்கிழமை இரவுகளில் ரகசியமாக முக்காடு போட்டுக் கொண்டு 'சூர்யா டிவி' பார்ப்பதை கண்டிருக்கிறேன். ஷகீலா மிகவும் வெள்ளந்தியானவர், உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாமல் எதிலுமே ‘வெளிப்படையாக' இருப்பவர் என்று சமீபத்தில் அவரை பேட்டி எடுக்க முயற்சித்த நமது பத்திரிகை நண்பர் ஒருவர் சொன்னார். சினிமா இண்டஸ்ட்ரியில் 'ஷகீலா' போன்ற நல்ல குணநலன்களோடு இப்போதும் ஒரு நடிகை இருப்பது ஆச்சரியமானது என்றும் அந்த நண்பர் சொன்னார்.

* ஷகீலா தனது பதினைந்தாம் வயதில் துணைநடிகையாக நடிக்கத் தொடங்கினார். அவர் நடித்த முதல் படம் ‘ப்ளே கேர்ள்ஸ்'. சில்க் ஸ்மிதா கதாநாயகியாக நடித்த திரைப்படம் இது.

* ஷகீலாவின் குடும்பம் பொருளாதாரரீதியாக ரொம்பவும் மோசமான நிலையில் இருந்த காலக்கட்டம் அது. பொருளாதாரத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவே “ச்சீய்” ரக படங்களில் அதன்பின்னர் நடிக்க ஆரம்பித்தார்.

* ”மறுமலர்ச்சி” என்ற மம்முட்டி நடித்த படத்தை பார்த்திருக்கிறீர்களா? அந்தப் படத்தில் விவேக்குக்கு ஜோடியாக ஷகீலா நடித்திருப்பார்.

* ஷகீலா நடித்த ‘கிணரத்தும்பிகள்' படம் மெகாஹிட்.

* ஒரு கட்டத்தில் தொடர்ந்து ஆண்டுக்கு ஆறுபடங்களாவது ஷகீலா நடித்து, அவை செம ஹிட் ஆக மலையாள திரையுலகமே அதிர்ந்தது. மம்முட்டி, மோகன்லால் படங்களின் வசூல் ஷகிலாவால் பாதித்தது. ஷகிலா படங்கள் வெளியாகிறதென்றால் மற்ற படங்களின் வெளியீட்டுத் தேதியை அப்போதெல்லாம் தள்ளி வைத்து விடுவார்களாம். ஷகிலா படங்களை முடக்க மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்களும், தயாரிப்பாளர்களும் முயன்றார்கள் என்று பேசப்பட்டது.

* ஷகீலா “ச்சீய்” ரக படங்களில் நடித்தாலும் அவருக்கு பாசில் போன்ற இயக்குனர்களின் இயக்கத்தில் மம்முட்டி, மோகன்லால் போன்ற நடிகர்களுடன் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாக இருக்கிறது. குறிப்பாக காமெடி வேடங்களில் நடிப்பதில் அவருக்கு அலாதிப்பிரியம்.

* ஷகீலா மன்மதப் புயலாக அறியப்பட்ட பிறகு தமிழில் ஜெயம், தூள், அழகிய தமிழ்மகன் போன்ற படங்களில் தலையைக் காட்டினார்.

* சினிமா இண்டஸ்ட்ரியில் "Cyclone" "லேடி லால்” போன்ற பெயர்களால் ஷகீலாவை குறிப்பிடுகிறார்கள்.

* 'வில்ஸ் பில்டர்' சிகரெட்டை விரும்பி புகைப்பாராம்.

* ஷகீலா நடித்த சூப்பர்ஹிட் திரைப்படங்களில் சில : 'ஆலில தோணி', 'மிஸ் சாலு', 'ஸ்நேகா', ‘சாகரா', 'அக்னிபுத்ரி', 'சவுந்தர்யலஹரி', 'பெண்மனசு', 'வீண்டும் துலாபாரம்' போன்றவை. இப்படங்களையே அடிக்கடி பெயர் மாற்றி, சில பிட்டுகளை சேர்த்து புதியப் படங்கள் போல ஆங்காங்கே திரையிடுவது வழக்கம்.

* மலையாளத் திரைப்படங்களில் இப்போது அவ்வளவாக ஷகீலா ஆர்வம் காட்டுவதில்லை. மற்ற மொழித் திரைப்படங்களில் குணச்சித்திர மற்றும் நகைச்சுவைப் பாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். ‘மோனலிசா' திரைப்படம் மூலமாக (இப்படத்தில் ஷகீலாவை விட சதா அதிகமாக காட்டியிருப்பார்) கன்னடத்திலும் கரைகடந்திருக்கிறது இந்தப் புயல்.

* இயக்குனர் தரணியின் படங்களில் ஷகீலாவுக்கு தொடர்ந்து வாய்ப்பளிக்கப்பட்டு வருகிறது. தரணி தெலுங்கில் இயக்கிய 'பங்காரம்' திரைப்படம் மூலமாக தெலுங்கிலும் ஒரு ரவுண்டு கட்டி அடிக்க ஆரம்பித்திருக்கிறார் ஷகீலா.

* தமிழில் டப் செய்யப்படும் ஷகீலாவின் திரைப்படங்களுக்கான ப்ரீமியர் காட்சி பரங்கிமலை ஜோதியில் ஒரு காலத்தில் தவறாது காட்டப்பட்ட வந்தது.

7 செப்டம்பர், 2011

2ஜி – அரசுக்கு 7000 கோடி லாபம்!

கடந்த ஆண்டு நாம் ‘ஸ்பெக்ட்ரம்’ குறித்து எழுதியிருந்தபோது, நீதிவான்கள் பலரும் கய்யோமுய்யோவென்று கத்தினார்கள். ஸ்பெக்ட்ரம் ஊழலில் இருந்து உனக்கு எவ்வளவு கொடுத்தார்கள் என்றெல்லாம் குதித்தார்கள். இந்திய ராணுவத்திடம் சும்மா ஒப்புக்கு இருந்த அலைவரிசையை பெற்று, நிறுவனங்களுக்கு விற்றதின் மூலமாக அரசுக்கு கூடுதல் வருவாயை ஏற்படுத்தித் தந்தார் அ.ராசா என்பது நம்முடைய அப்போதைய வாதமாக இருந்தது.

2008ஆம் ஆண்டு 122 விண்ணப்பதாரர்களுக்கு 22 வட்டங்களில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு வழங்கப்பட்டபோது அரசுக்கு கிடைத்த வருவாய் 12,386 கோடிகள். சி.ஏ.ஜி. அறிக்கையோ இந்த ஒதுக்கீட்டை ஒரு லட்சத்து எழுபத்தைந்தாயிரம் கோடிகளுக்கு விற்றிருக்க முடியும் என்று ஒரு கற்பனைத் தொகையை குன்ஸாக அடித்துவிட்டது. மத்திய அமைச்சர் கபில்சிபல் அரசுக்கு வருவாய் இழப்பு ஏதுமில்லை என்று அப்போதிலிருந்தே கரடியாக கத்தி வருகிறார். மாறாக பி.ஜே.பி. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சி.ஏ.ஜி. அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு, அரசுக்கு நெருக்கடி தர அ.ராசா தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டியிருந்தது. பின்னர் சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டு, இன்றுவரை திகார் சிறையில் இருக்கிறார்.

நீதிமன்றத்தில் அரசின் கொள்கை முடிவையே தான் அமல்படுத்தியதாக தொடர்ச்சியாக அ.ராசா வாதிட்டு வருகிறார். இந்த கொள்கை ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்காலத்தில் மட்டுமல்ல, முந்தைய பா.ஜ.க. ஆட்சிக்காலத்திலும் கடைப்பிடிக்கப்பட்டதுதான் என்பதை போதிய தரவுகளோடு வாதிடுகிறார்.

கடந்த ஏப்ரல் மாதம் சி.பி.ஐ. நீதிமன்றத்தில் சமர்ப்பித்த குற்றப்பத்திரிகையில் ‘உனக்கும் வேண்டாம், எனக்கும் வேண்டாம்’ பாணியில் 30,000 கோடி ரூபாய் அரசுக்கு இந்த ஒதுக்கீட்டால் இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று குறிப்பிட்டிருந்தது. இந்த குற்றச்சாட்டுக்கு முன்பாக TRAI-யிடம் எவ்வளவு இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று எல்லா கோணங்களிலும் ஆராய்ந்து சொல்லும்படி கேட்டிருந்தது. TRAI இழப்புத் தொகையை சொல்வதற்கு முன்பாகவே அவசர அவசரமாக குற்றப்பத்திரிகையில் பெரும் தொகையை சி.பி.ஐ. குறிப்பிட்டிருக்கிறது.

இப்போது TRAI பலவகைகளில் இந்த ஒதுக்கீட்டை ஆராய்ந்து விற்கப்பட்ட ஸ்பெக்ட்ரம் அலையின் விலையை ரூ.5,500 கோடியிலிருந்து, ரூ.9,500 கோடியாக வரையறுத்து சொல்லியிருக்கிறது. இதன் அடிப்படையில் பார்க்கப் போனால் அ.ராசாவால் அரசுக்கு ரூ.3,000 கோடியிலிருந்து ரூ.7,000 கோடி வரை லாபம் என்று தெரிகிறது. மேலும் ஏலமுறையில் விற்பனை செய்ய பரிந்துரை எதையும் மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சகத்துக்கு செய்யவில்லை என்பதையும் TRAI தெளிவுபடுத்தியிருக்கிறது.

ராசா குற்றவாளியல்ல, மிகத் திறமையாக, சாதுர்யமாக ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு விற்பனையில் நடந்துகொண்ட அமைச்சர், இந்த ஒதுக்கீட்டின் மூலம் அரசுக்கு கூடுதல் வருவாயை ஏற்படுத்தித் தந்தவர் என்பதை TRAI மூலமாக இப்போது கொஞ்சம் தாமதமாகவே அறிந்துகொள்ள முடிவது வேதனையானது.

எந்த தொழில்நுட்ப அறிவுமின்றி தயாரிக்கப்பட்ட சி.ஏ.ஜி. அறிக்கை வந்தவுடனேயே ஒண்ணே முக்கா லட்சம் கோடி ரூபாய் இழப்பு என்று வானுக்கும், பூமிக்குமாக எகிறிக் குதித்துக் கொண்டிருந்தவர்கள் இப்போது வாய் உள்ளிட்ட ஒன்பது ஓட்டைகளையும் அடைத்துக்கொண்டு அமைதிகாத்து வருவது வெட்கக்கேடானது. நிமிடத்துக்கு நாலு ஃப்ளாஷ் நியூஸ் ஓட்டிக்கொண்டிருந்த ஊடகங்கள் இப்போது காத்துவருவது அப்பட்டமான, அயோக்கியத்தன மவுனம்.

செய்யாத குற்றத்துக்காக ஒரு திறமையான அமைச்சர் அரசியல்வாதிகள், ஊடகங்கள், நீதிமன்றங்கள் என்று பலதரப்பின் நெருக்கடிக்கு பலிகடா ஆக்கப்பட்டிருப்பது, அவர் பிறந்த சாதியினாலோ என்று அஞ்ச வேண்டியிருக்கிறது. இங்கே ஜனநாயகம் வாழுகிறது என்று சொன்னால், நம்புபவன் இரு காதுகளிலும் சாமந்திப்பூ வைத்தவனாக இருக்க வேண்டும். தன்னை நிரூபித்து விரைவில் தகத்தாய தங்கமாக, சிங்கமாக தமிழ் மண்ணுக்கு வருகை தரவிருக்கும் வருங்கால மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் அ.ராசாவுக்கு முன்கூட்டிய வாழ்த்துகள்!

தர்மம், தாமதமானாலும் வெல்லும்!

6 செப்டம்பர், 2011

நான் கூட சிகரெட் பிடிப்பேன்!

"டியர் கிருஷ்ணா,
நான் சாகவேண்டும். உங்கள் உதவி தேவை.
அன்புடன்,
மலர்."

இப்படியொரு மெயில் அவளிடமிருந்து வரும் என்று கனவிலும் நான் நினைக்கவில்லை. அவளுக்கு என்னதான் பிரச்சினை? என்னால் உதவமுடியுமா?

"அவசரப்படாதே. பொறு. உனக்கு என்ன பிரச்சினை?" என்று மெயிலிலேயே கேட்டேன். உடனே பதில் வந்தது.

"டியர் கிருஷ்ணா!

என் அப்பா இந்தியாவின் முதல் பத்து பணக்காரர்களில் ஒருவர். சிறுவயதிலேயே தாயை இழந்தவள் நான். அலுவலக உதவியாளினியாக சேர்ந்தவள் என் சித்தி. அப்பாவை மயக்கி வாழ்க்கையிலும் வஞ்சகமாக நுழைந்தாள்.

சென்ற மாதம் அப்பா மர்மமான முறையில் இறந்துவிட்டார். இது நிச்சயமாக சித்தியும், அவளது தம்பியும் செய்த வேலையாக இருக்கும். இப்போது சித்தியின் தம்பியை நான் மணந்துகொள்ள கட்டாயப்படுத்துகிறார்கள். அவனுக்கு வயது 40. கடைந்தெடுத்த பொறுக்கி. சொத்துகளுக்கு நான் மட்டுமே ஒரே வாரிசு. என் சொத்து முழுவதையும் அபகரித்து என்னையும் அப்பாவை போல கொன்றுவிடுவார்கள் என்று அஞ்சுகிறேன்.

எனக்கே எனக்கென்று வாய்ப்பவன் குறித்த கனவுகள் வைத்திருக்கிறேன். என் வயது 22. அவனுக்கு வயது 28 ஆக இருக்கும். பார்க்காமலேயே அவனைக் காதலித்து கைபிடிப்பேன். அவனுக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருக்கும். கல்யாணத்துக்குப் பிறகு அவனை திருத்துவேன்.

இந்த கனவோடு வாழும் நான் (இந்த வரிகளை எழுதும்போது அழுகிறேன்) 40 வயது முரடனுக்கு வாழ்க்கை படுவதை காட்டிலும் இறந்துவிடுவதே மேல் அல்லவா?

அன்புடன்
மலர்"


மலருடைய மின்னஞ்சலை கண்டதும் வேகவேகமாக திட்டங்களை தீட்ட ஆரம்பித்தேன். இதுவரை மலரிடம் ஓராண்டுக்கு மேலாக இண்டர்நெட்டில் நட்பு பாராட்டினாலும் அவளிடம் என்னைப் பற்றி பெரிதாக சொன்னதில்லை. அவளோ வெகுளியாக ஒரு முறை அவளுடைய போட்டோவை அனுப்பியிருக்கிறாள் (பார்க்க ஷ்ரேயா மாதிரி அரபிக்குதிரை வாகாக இருந்தாள்) இப்போது அவள் வாழ்க்கைப் பின்னணியையும் சொல்லியிருக்கிறாள்.

கிளிபோல மனைவி, குரங்குபோல வைப்பாட்டி வைப்பது ஆண்குணம். எனக்கு 34 வயது. கிளிபோல பொண்டாட்டி இருக்கிறாள். பஞ்சவர்ணக்கிளி போல ஒரு வைப்பாட்டி இருந்தால் என்ன தவறு? போனஸாக கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத பல்லாயிரம் கோடி சொத்துக்களோடு.. சரியாக தப்பாக சிந்திக்க ஆரம்பித்தேன்.

அட்டகாசமான ஆங்கிலத்தில் அவளுக்கு ஒரு மடல் தயார் செய்தேன்.

"அன்பு மலர்,

நீண்ட நாட்களாக சொல்லவேண்டுமென்பதை நீ துயரத்தில் இருக்கும்போது சொல்லவேண்டியிருக்கிறதே என்று வருந்துகிறேன்.

எனக்கு 28 வயதாகிறது. உன்னைவிட ஆறுவயதுதான் மூத்தவன். நான் கூட சிகரெட் பிடிப்பேன். புரிகிறதா மலர்?

காதலுடன்
கிருஷ்ணா"


அனுப்பிய பிறகு, மலரிடமிருந்து மெயில் வருமா என்று கம்ப்யூட்டர் முன்பாக தவமிருக்க ஆரம்பித்தேன். பத்து மணி நேரம் கழித்து பதில் மெயில் வந்தது. "அன்புள்ள அண்ணா கிருஷ்ணாவுக்கு" என்று மடலை ஆரம்பித்திருந்தாள் மலர்.

(நன்றி : தினகரன் வசந்தம்)