அந்த நாளிதழ் அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது டீனேஜில் இருந்தேன். குட்டிப்பையன் என்பதால் அங்கே என் டிபார்ட்மெண்டில் பணிபுரிந்து கொண்டிருந்த அக்காக்கள் என்னை ஒரு ஆண்மகனாகவே கருத மாட்டார்கள். அந்த டிபார்ட்மெண்டின் டே ஷிப்டில் ஆண்கள் யாரும் இருக்கமாட்டார்கள். முழுக்க முழுக்க அல்லி ராஜ்ஜியம்தான். குழந்தையாக நினைத்து என் கன்னத்தைப் பிடித்து கொஞ்சிக் கொண்டிருப்பார்கள் அக்காக்கள். வேலை பார்த்துக் கொண்டே, அவரவர் அந்தரங்க விஷயங்களை அசால்ட்டாக பேசிக் கொண்டிருப்பார்கள் (பொதுவாக நேற்றிரவு தூங்க ஏன் லேட்டானது மாதிரி ‘பலான’ விஷயங்கள்). வளர்சிதை மாற்றக் கிளர்ச்சிகள் கொண்ட வயது என்பதால் எனக்கு வெக்கம், வெக்கமாக வரும்.
இந்த குழந்தைப்பையன் இமேஜ் எனக்கு இம்மாதிரியான தொந்தரவுகளை கொடுத்தாலும், வேறு சில அனுகூலங்களையும் கொடுத்தது. லே-அவுட், கேமிரா, எடிட்டோரியல் என்று எல்லா இடங்களுக்கும், யாரையும் கேட்காமல் சுதந்திரமாக சுற்றி வரும் சுதந்திரம் கிடைத்தது. இந்த சுதந்திரமும் ஒரு வகையில் தொந்தரவுதான். கேமிரா ரூமுக்குள் போனால், “டேய் அந்த எட்டாவது பக்கம் நெகடிவ்லே ஒழுங்கா ‘ஒபேக்’ வைடா” என்று கேமிரா அண்ணன் வேலை வாங்குவார். லே-அவுட் பக்கமாகப் போகும்போது, “நாலாம் பக்கம் ஏழாவது காலத்திலே பாட்டமுலே இந்த மேட்டரை ஒட்டுறா. நல்லா ஸ்ட்ரெயிட்டா ஸ்கேல் வெச்சிப் பார்த்து ஒட்டணும்” என்று ஃபோர்மேன் விரட்டுவார். ஏதாவது கோணைமாணையாக அமைந்துவிட்டால் தலையில் ‘குட்டு’ கூட விழும்.
எடிட்டோரியலுக்குப் போய், சப் எடிட்டர்களால் எழுதப்பட்ட மேட்டர்களை கம்போசிங்குக்காக வாங்கிவர வேண்டியது எங்கள் ஃபோர்மேனின் வேலை. ஐந்து நிமிடத்துக்கு ஒருமுறை ‘மேட்டர்’ ஏதேனும் இருக்கிறதா என்று போய் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும். எங்கள் ஃபோர்மேன் கொஞ்சம் சோம்பேறி. கால்நீட்டி வசதியாக உட்கார்ந்துக் கொண்டு என்னை அந்த வேலையை செய்ய துரத்தியடிப்பார்.
அப்படி எடிட்டோரியலுக்கு போகும்போதுதான் அந்த இரண்டு இளைஞர்களையும் பார்த்தேன். ஒருவர் உயரமாக, சிகப்பாக இருப்பார். அவர் பெயர் ரமணன். மற்றொருவர் கொஞ்சம் மாநிறமாக, ஒல்லியாக கொஞ்சம் கூன் போட்டமாதிரியிருப்பார். இவர் பெயர் சரஜ். டெலிபிரிண்டரில் வரும் பி.டி.ஐ., யூ.என்.ஐ., செய்திகளை வாசித்துக் கொண்டே நியூஸ் பிரிண்டில் வேகமாக மொழிபெயர்த்து எழுதிக் கொண்டிருப்பார்கள். லோக்கல் ரிப்போர்ட்டர்களிடமிருந்து மொன்னையாக எழுதப்பட்டு வந்த ரிப்போர்ட்டுகளையும், ஒரு லேங்குவேஜுக்கு கொண்டுவந்து மாற்றி எழுதுவார்கள். இரவு பத்தரை மணிவாக்கில் வேலூர் எடிஷன் பிரிண்டிங்குக்கு போகிறவரை இவர்கள் மாங்குமாங்குவென்று எழுதிக்கொண்டே இருக்க வேண்டும்.
அதன்பிறகு சாப்பிட்டுவிட்டு, எக்ஸ்பிரஸ் பில்டிங்குக்கு அருகிலிருக்கும் செந்தில் டீக்கடைக்கு போய் ‘தம்மு, கிம்மு’ அடித்துவிட்டு ரிலாக்ஸாக வருவார்கள். லே-அவுட், கம்போஸிங், கேமிரா என்று ரோந்து சுற்றுவார்கள். ‘ஸ்டாப் பிரஸ்’ மேட்டர்கள் ஆடிக்கு ஒருமுறையோ, அமாவசைக்கு ஒருமுறையோதான் வருமென்பதால் பத்தரை டூ ரெண்டு இவர்களுக்கு அவ்வளவு வேலையிருக்காது.
அப்போதெல்லாம் ‘சிறுகதை கதிர்’ என்கிற ஒரு பத்திரிகையை கையில் வைத்திருப்பேன். அதில் பெ.கருணாகரன் எழுதும் ‘காதல் தோல்விக் கதைகள்’ என்றொரு தொடர் வந்துக் கொண்டிருந்தது. ஏதாவது கட்டையான, சிகப்பான ஃபிகரை பார்த்தால் உடனே காதலிக்கத் தொடங்கி, அது நம்மை கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டால் ‘காதல் தோல்வி’ என்று தட்டையாக புரிந்துக்கொண்டு புலம்பிக்கொண்டிருந்த வயது. எனவே காதல் தோல்விக் கதைகள் இயல்பாகவே என்னை ஈர்த்துக் கொண்டிருந்தது.
ஒருநாள் என்னிடம் இருந்த சிறுகதைக் கதிர் இதழ் ஒன்றினை வாங்கிப் புரட்டினார் சரஜ். பெரிய அரசியல் தலைவர் ஒருவருடைய மனைவி கொடுத்திருந்த பேட்டி கவர் ஸ்டோரியாக வந்திருந்தது. அதற்குத் தலைப்பு இப்படி வைத்திருந்தார்கள். ‘நான் ஒரு சுமைதாங்கி‘. இந்த தலைப்பைப் பார்த்துவிட்டு சரஜ் சொன்னார். “தலைப்பு ரொம்ப ஆபாசமா வெச்சு இருக்காங்களே?”. என்ன ஆபாசம் என்று எனக்கு அப்போது புரியவில்லை. ரமணன் வெளிப்படையாக விஷயத்தை சொல்லி என்னை வெட்கப்பட வைத்தார்.
சரஜூம், ரமணனும் என்னை அந்த வயதில் வெகுவாக ஈர்த்த பர்சனாலிட்டிகள். செய்திகளுக்கு இவர்கள் வைக்கும் தலைப்பு அபாரமான ஹூயூமர் சென்ஸோடு இருக்கும். அப்போதெல்லாம் பத்திரிகைக் காரர்கள் பெரும்பாலும் பஜாஜ் எம்-80 வைத்திருப்பார்கள். வீரமுள்ள நிருபர் வீரபத்திரன் ஓட்டும் வண்டி என்றுதான் விளம்பரம்கூட வரும். ஒருநாள் இவர்களைப் போலவே பெரியவனாகி(!) வீரமுள்ள நிருபனாக பஜாஜ் எம்-80ல் வலம் வர வேண்டும் என்று மனதுக்குள் சபதம் போட்டுக் கொண்டேன்.
தோழர்களே! ஏதோ ‘பீமா’ படத்தின் திரைக்கதை போல இருப்பதாக ஃபீல் செய்கிறீர்கள் இல்லையா? இப்படித்தான் சினிமாக் கதைகளை விட வாழ்க்கைக் கதைகள் நம்ப முடியாததாகவும், திருப்பங்கள் நிறைந்ததாகவும் சில சமயங்களில் அமைந்துவிடும். ஓக்கே, நிகழ்காலத்துக்கு வந்துவிடுவோம்.
ஓரிரு வருடத்துக்கு முன்பு புத்தக வெளியீட்டு விழாக்களில் ஒரு இலக்கியப் பெரியவரை கண்டேன். கோல்ட் ஃப்ரேம் கண்ணாடி, தொப்பை, காதோர நரை, சதைப்பிடிப்பான முகமென்று இருக்கும் இவரை எங்கேயோ பார்த்த ஞாபகமாகவே இருந்தது. யார் என்னவென்று விசாரித்துப் பார்த்தால் ‘எழுத்தாளர் சரஜ்’ என்றார்கள். இவரு அவராதான் இருப்பாரோ என்று சந்தேகம். நேரடியாக கேட்கவும் ஏதோ தயக்கம். நான்கைந்து முறை அவர் முன்பாக அப்படியும், இப்படியுமாக நடந்தேன். ஒருவேளை என்னை அடையாளம் கண்டுகொண்டு அவராகவே பேச வாய்ப்பிருக்கிறது இல்லையா? இதற்கிடையில் என் உருவத்திலும் கொஞ்சம் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. மீசை வளர்ந்திருக்கிறது. ஹேர்ஸ்டைல் மாறியிருக்கிறது.
ம்ஹூம். அவரால் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. அப்படியென்றால் இது அவர் அல்ல. அவர் ஒல்லியாக இருப்பார். லைட்டாக கூன் போட்டிருப்பார். பிரபுதேவா மாதிரி பேக்கீஸ் பேண்ட் எல்லாம் போட்டிருப்பார். இவர் வேறு மாதிரியாக சினிமா டாக்டர் மாதிரி இருக்கிறாரே?
அடுத்தடுத்து சில இடங்களில் பார்த்துக் கொண்டு, புன்னகைத்து ஹலோ சொல்லி அறிமுகப்படுத்திக் கொள்ளும்போது.. அடக்கடவுளே! அவரேதான் இவர்...
இப்போது அவர் நெம்பர் ஒன் நாளிதழின் செய்தி ஆசிரியர். நான் வீரமுள்ள நிருபர் வீரபத்திரன் ரேஞ்சுக்கு இல்லையென்றாலும், என்னிடம் பஜாஜ் எம்-80யும் கூட இல்லையென்றாலும், ஒரு வாரப்பத்திரிகையில் சீனியர் ரிப்போர்ட்டர்.
ஆனாலும் அவருக்கு என்னை மட்டும் அடையாளமே தெரியவில்லை என்பது வருத்தமாக இருந்தது. அந்தக் காலத்தில் அவரோடு இருந்ததை சொல்லிப் பார்த்தேன். கூட இருந்த நண்பர்களின் பெயரையெல்லாம் சொல்லிப் பார்த்தேன். வேலைக்கு ஆகவில்லை. மூன்றாம் பிறை கமல் மாதிரி குட்டிக்கரணம் அடிக்காதது ஒன்றுதான் பாக்கி. என்ன சொல்லி நான்தான் அது என்று அவருக்கு தெரியப்படுத்துவது? கடைசி அஸ்திரத்தைப் பயன்படுத்தினேன்.
“அண்ணே நான் மானு அக்கா டீமுலே இருந்தேனே?”
அவருக்கு சட்டென்று முகம் மலர்ந்தது. நாணத்தால் கன்னம் சிவந்தது மாதிரியும் தெரிந்தது. எப்படியோ நினைவு வந்தால் சரிதான் என்று நினைத்துக் கொண்டேன்.
ம்ஹூம்.
சரஜுக்கு மானு அக்காதான் பளிச்சென்று நினைவுக்கு வருகிறாளே தவிர, என்னை சுத்தமாக நினைவுக்கு கொண்டுவர முடியவில்லை. இரண்டு வருடங்களாக இதேதான் நிலைமை. அவரைப் பொறுத்தவரை நான் புது மனிதன். இரண்டு, மூன்று வருடங்களுக்கு முன்பாக அறிமுகமானவன்.
ரமணன் எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை. நிச்சயமாக அவருடைய நினைவிலும் நான் இருப்பேன் என்ற நம்பிக்கையில்லை. ஆனால் அவரும் அக்காக்களை மட்டும் மறந்திருக்க மாட்டார் என்றே நினைக்கிறேன்.
பையன்களை மட்டும் கச்சிதமாக மறந்துவிடக் கூடிய இந்த நோய்க்கு என்ன பெயர் என்று ஜெயமோகனுக்கு கடிதம் எழுதிதான் கேட்கவேண்டும்.
//பையன்களை மட்டும் கச்சிதமாக மறந்துவிடக் கூடிய இந்த நோய்க்கு என்ன பெயர் என்று ஜெயமோகனுக்கு கடிதம் எழுதிதான் கேட்கவேண்டும்.
பதிலளிநீக்கு//
அக்கா அம்னீஷியா
very interesting...
பதிலளிநீக்குநல்லா இருக்கு யுவா.....
பதிலளிநீக்குயுவா ரொம்பவும் சுவாரஸ்யமான பதிவு
பதிலளிநீக்குவாவ், அட்டகாசம் லக்கி
பதிலளிநீக்குஎன்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
Lucky Touch :)
பதிலளிநீக்கு//அவருக்கு சட்டென்று முகம் மலர்ந்தது. //
பதிலளிநீக்குஇதோடையே முடித்திருக்கலாம்..எனிவே சூப்பர்..
சூப்பர் பதிவு...
பதிலளிநீக்குபாராட்டுகள்....
நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com
//பையன்களை மட்டும் கச்சிதமாக மறந்துவிடக் கூடிய இந்த நோய்க்கு என்ன பெயர் என்று ஜெயமோகனுக்கு கடிதம் எழுதிதான் கேட்கவேண்டும்.//
பதிலளிநீக்குசபாஷ்
எங்க கல்லூரியோட 35 வருட வரலாற்றில் மொத்தமே 3 பேர் தான் முனைவர் பட்டத்துக்கு படித்தோம். அதில், நான் மட்டும் தான் இந்தியாவின் மிக முக்கியமான தேசிய அறிவியல் நிறுவனத்தில் விஞ்ஞானியாக பணி புரிகிறேன். சமீபத்தில் அந்த கல்லூரி பேராசிரியரிடம் என்னை அறிமுகப்படுத்திய போது என்னைத் தெரியவில்லை என்றார். நானும் நீங்கள் செய்தது போல ஒரு முக்கிய அஷ்த்திரத்தை எடுத்து எய்தேன். சார், நான் அத்வைதா வகுப்புத் தோழன் என்றேன். ஆனால், கொஞ்சமும் சங்கடப்படாமல், அத்வைதா ஞாபகம் இருக்கு, உங்களை தெரியலையே! இது அவரோட எதிர் வினை.
பதிலளிநீக்கு-கிருஷ்ணமூர்த்தி
சூப்பர்... கலக்கிடிங்க..
பதிலளிநீக்குஹா ஹா நன்றாகவுள்ளது. இதுக்குப் பேர் "selective ஆண்nesia"
பதிலளிநீக்குLucky in superb form. You are at your best when it comes to nostalgic moments.
பதிலளிநீக்கு//குழந்தைப்பையன் இமேஜ் எனக்கு இம்மாதிரியான தொந்தரவுகளை கொடுத்தாலும், வேறு சில அனுகூலங்களையும் கொடுத்தது//
பதிலளிநீக்கு#எனக்கும் தான்...
பதிவு கலக்கிட்டிங்க.. நல்லா இருக்கு