28 நவம்பர், 2013

வெள்ளை யானை

சென்னையின் ஆதிவாசிகள் யாரென்ற சர்ச்சைக்கு விடை காண முடியாத விவாதங்கள் கடந்த அரைநூற்றாண்டு காலமாக நடைபெற்று வருகிறது. நகரமாக நாகரிகமடைந்த சென்னை ‘தலித்’ மக்களின் உழைப்பாலும், உணர்வாலும் உருப்பெற்ற நகரம் என்கிற கோணத்தை, தகுந்த ஆதாரங்களோடு ஜெயமோகனின் ‘வெள்ளை யானை’ வெளிப்படுத்துகிறது.

நாவலை இன்னமும் முழுமையாக வாசிக்கவில்லை. சோம்பலின் காரணமாக தினம் இருபது, இருபத்தைந்து பக்கங்கள் என பாதியைதான் நெருங்கிக் கொண்டிருக்கிறேன். வரும் சனிக்கிழமை நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெறுகிறது. அதற்குள்ளாக முழுமையாக வாசித்துவிடவேண்டும் என்று ஆசை. அடுத்த இருநாட்களில் ‘சோம்பேறித்தனம்’ தற்காலிகமாகவாவது விலகவேண்டும். வாசித்தவரையில் இது ஜெயமோகனின் முக்கியமான படைப்பு பங்களிப்பாகதான் தோன்றுகிறது.

இந்நூல் திராவிட இயக்கத்தின் தோற்றம், இருப்பை கேள்விக்குள்ளாக்குவதாக இருக்கக்கூடும் என்று நாவல் வெளிவருவதற்கு முன்பாக நண்பர் ஒருவர் கணிப்பாக சொன்னார். இதுவரை எனக்கு அப்படி தோன்றவில்லை. ஒருவேளை இறுதி அத்தியாயம் நெருங்கும்போது ஏதாவது ‘உள்குத்து’ வைத்திருப்பாரோ என்னமோ?

திராவிட இயக்கம் பார்ப்பனரல்லாதவர்களுக்கான இயக்கம் என்றாலும், சாதிய படிநிலையில் பழகிவிட்ட சமூகமரபின் காரணமாக, அந்த ‘பார்ப்பனரல்லாதவர்களில்’ தலித்களை ஒதுக்கியே வைத்திருந்தார்கள். பார்ப்பனரல்லாத முற்பட்ட சாதியினர், சுதந்திரம் பெற்ற சில வருடங்களிலேயே தன்னிறைவை அடைந்துவிட்ட நிலையில் அறுபதுகளில் தொடங்கி தங்கள் உரிமைகளுக்காக போராடும் பிற்படுத்தப்பட்டோரின் ஆதிக்கம் திராவிட இயக்கத்தில் தொடர்ந்து வருகிறது. எனவே இன்றைய நிலையில் திராவிட இயக்கத்தை பிற்படுத்தப்பட்டோரின் இயக்கம் என்றுகூட குறிப்பிடலாம் அல்லது விமர்சிக்கலாம். தர்மபுரி, மரக்காணம் நிகழ்வுகளுக்கு திராவிட இயக்கங்கள் காட்டிய எதிர்வினைகளின் தீவிரத்தை ஒப்பிட்டுப் பார்த்து இம்முடிவுக்கு யாருமே சுலபமாக வரலாம்.

சாதியை சகட்டுமேனிக்கு கேள்விக்குள்ளாக்கும் இன்றைய உலகமயமாக்கல் சூழலிலும் கூட தலித்களுக்கான இடம் முற்போக்கு இயக்கங்களான திராவிட இயக்கங்களில் கூட சிறுபான்மையாகதான் (பெரும்பாலும் உள்ளாட்சி அமைப்புகளில்தான்) கிடைக்கிறது.

இந்த நடைமுறை பின்னணியோடு ‘வெள்ளை யானை’யை வாசிப்பதே சரியாக இருக்கும். இந்நாவல் சென்னையை உருவாக்கிய ‘தலித்’களின் பங்களிப்பையும், அந்தப் பங்களிப்புக்கு உரிய பலன் அச்சமூகத்துக்கு கிடைக்காத அவலத்தையும் சுட்டுவதாகவே புரிந்துக்கொள்கிறேன். இதை சொல்லும்போது, இது திராவிட இயக்கத்தை எதிர்ப்பதான தோற்றத்தை தருமே தவிர, உண்மையான நோக்கம் அதுவாக இருக்காது என்று நம்புகிறேன்.

முந்தைய ஜெயமோகன் படைப்புகளோடு ஒப்பிடுகையில் ‘இலக்கியத்தன்மை’, ‘படைப்பூக்கம்’ மாதிரியான உன்னதங்கள் இதில் குறைவாக இருப்பதாக தீவிர இலக்கிய வாசகர்கள் கருதக்கூடும். என்னைப்பொறுத்தவரை இதில் அம்மாதிரி கற்பிதங்களை காட்டிலும், அவருடைய எழுத்து நாலுகால் பாய்ச்சலில் செயல்வேகத்தோடு கூடியிருப்பதாக கருதுகிறேன். வர்ணனைகளும், உருவகங்களும், குறியீடுகளும் மட்டுமே இலக்கியம் ஆகிவிடாது என்பது என் தாழ்மையான அபிப்ராயம்.

ஒரு நிகழ்வில் இந்த நாவலை குறிப்பிட்டு, இது ஒரு நாவலாக இல்லாமல் ‘திட்டமாக’ உருவாக்கப்பட்டிருக்கிறது என்று கவிஞர் சங்கரராமசுப்பிரமணியன் குறிப்பிட்டார். அது பாராட்டா அல்லது எதிர்விமர்சனமா என்று எனக்குப் புரியவில்லை. ஆனால் திட்டமிடாமல் ஒரு சிறு ஹைக்கூவை கூட எழுதமுடியாது என்பதுதான் என் புரிதல்.

வெள்ளை யானைக்கு ஆவணத்தன்மை சற்று கூடுதலாகவே இருக்கிறது. ஆவணங்கள் இலக்கியமாகுமா என்று விவாதித்து இனி நம் நேரத்தை போக்கிக் கொள்ளலாம் :-)

25 நவம்பர், 2013

இரண்டாம் உலகம்

நல்ல ஐடியா. எல்லோருக்குமே குறைந்தது இரண்டு உலகங்கள் இருக்கிறது. இரண்டாம் உலகம் என்பது கனவாக இருக்கக்கூடும். அல்லது மனப்பிறழ் காரணமாக தாமே உருவாக்கிக்கொள்ளக் கூடிய இன்னொரு உலகாகவும் இருக்கலாம். சுலபமாக மற்றவர்களுக்கு வார்த்தையால் கூட சொல்லி புரியவைக்க முடியாத இரண்டாம் உலகத்தை திரையில் காட்சிகளாக்கி காட்டுவது என்கிற சவாலை செல்வராகவன் முயற்சித்திருக்கிறார்.

கனவுலகம் எல்லாருக்குமே பாதுகாப்பான உலகம். அந்த உலகின் இயக்கத்தை கனவு காண்பவன் தன் கையில் இருக்கும் ரிமோட்டால் கட்டுப்படுத்தலாம். நாம் நினைத்த பெண்ணை காதலிக்கலாம். நமக்கு பிடிக்காதவனை ரஜினி ஸ்டைலில் பறந்து பறந்து அடிக்கலாம். ஆடி காரில் உலா வரலாம். தம் அடிக்கலாம். பீர் குடிக்கலாம். அயல்நாட்டு அழகிகளோடு ஜல்சா செய்யலாம். கனவு காண பிடிக்காதவர்கள் யாராவது இருக்க முடியுமா. கனவுகள் அந்தரங்கமானவை. கனவு முடிந்து விழித்தபிறகு பெரும்பாலும் அவை நினைவில் நிற்பதில்லை. தான் கண்ட கனவு என்று யாராவது விடும் கதை அனேகமாக புனைவாகதான் இருக்கும். முக்கியமாக கனவுக்கு வண்ணமில்லை. கருப்பு வெள்ளையில்தான் கனவு இருக்குமென்று உளவியல் நிபுணர்கள் சொல்கிறார்கள். எனக்கெல்லாம் கனவு வந்தே கால் நூற்றாண்டு இருக்குமென்பதால், அது கருப்புவெள்ளையா, வண்ணமா, சினிமாஸ்கோப்பா என்பதெல்லாம் நினைவிலேயே இல்லை. மேலும், கனவில் ‘ஒலி’ உண்டா என்கிற குழப்பமும் இருக்கிறது. இப்படியிருக்கையில் அப்துல்கலாம் போன்றவர்கள் கனவுகாண சொல்லும்போது, அது எப்படி இந்திய இளைஞர்களுக்கு சாத்தியமாகும் என்று அயர்ச்சிதான் ஏற்படும்.

இது ஒரிஜினல் கனவு. பகல் கனவு என்றொன்று உண்டு. சும்மா உட்கார்ந்து மோட்டுவளையை பார்த்துக் கொண்டிருக்கும் போதோ, பைக்கில் பயணிக்கும்போதோ, டாய்லெட்டில் இருக்கும்போதோ சுய இன்பம் மாதிரி நாமாக ‘விஷூவல்’ அமைத்து, சிந்தனையிலேயே ஓட்டும் ஃபிலிம் இன்னொரு வகை கனவு. ஆண்களைப் பொறுத்தவரை பெரும்பாலும் இவ்வகை கனவுகள் அவர்களது பாலியல் வறட்சிகளுக்கு பசுமை பாய்ச்சக்கூடிய தன்மை கொண்ட கனவுகளாகவே இருக்கக்கூடும். இம்மாதிரி கனவிலேயே காலத்தை ஓட்டினால், பொழைப்பு நாறிவிடுமென்று பாலகுமாரன் அடிக்கடி எழுதுவார்.

செல்வராகவன் காட்ட விரும்பிய இரண்டாம் உலகம் கனவாகவோ அல்லது மனப்பிறழ்வாகவோ இருக்கிறது என்கிற கோணத்தில் பார்த்தேன். அப்படியும் படம் ஓக்கே ரகம் கூட இல்லை.

இது நிஜமாகவே ‘பண்டோரா’ மாதிரி கிரகம் என்று அவர் எடுத்திருந்தால் அதற்கான உழைப்போ, ரசிகனுக்கு பரிமாறப்பட வேண்டிய ஃபேண்டஸியான உணர்வோ திரையில் தென்படவில்லை. ‘அவதார்’ எடுப்பதற்கான டெக்னாலஜி வரும்வரை சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு கருவை அடைகாத்து சுமந்து, அதுவரை திரைக்கதையை செதுக்கிக் கொண்டிருந்தார் கேமரூன் என்பார்கள். செல்வராகவன் இரண்டாம் உலகத்துக்காக இன்னும் சிலவருடங்கள் பிள்ளைத்தாய்ச்சியாகவே இருந்திருக்கலாம்.

படம் பார்த்த கவிஞர் ராஜசுந்தரராஜன் புது ‘கான்செப்ட்’ சொன்னார். ஒரு உலகம் திராவிட உலகம். மற்றொன்று ஆரிய உலகம். அனுஷ்காவுக்கு அதனால்தான் ‘வர்ணா’ என்று பெயர் என்றார். அவரது இந்த பார்வைக்காகவே இன்னொரு முறை ஆரிய-திராவிட அரசியல் படமாக இதை அணுகிப் பார்த்தால் வேலைக்காகுமா என்று பார்க்கவேண்டும்.

அனுஷ்கா ஆண்ட்டி ஆகிவிட்டார். தொப்பை குலுங்க அவர் ஓடியாடி சண்டை போடுவதை காண அதிர்ச்சியாகவும், ஆயாசமாகவும் இருக்கிறது. ஒருவேளை அதனாலேயே கூட படம் பிடிக்கவில்லையோ என்னவோ?

22 நவம்பர், 2013

தருண் தேஜ்பால்

இந்தியப் பத்திரிகையுலகில் பணிபுரியும் இளம் பத்திரிகையாளர்களின் Idol Journalistகளில் ஒருவரான தருண் தேஜ்பாலுக்கு என்ன நடந்திருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். செய்தியை வாசித்தவுடனேயே ஆத்திரம்தான் வந்தது. ஆத்திரம் அறிவிழக்கச் செய்யும். என்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் மிக இழிவான மொழியில் ஒரு நிலைத்தகவல் இட்டிருந்தேன். அதை வாசித்த என்னுடைய நலம் விரும்பியான, தமிழ் இதழியல் துறையில் மரியாதையாக மதிக்கப்படும் மூத்தப் பத்திரிகையாளர் ஒருவர் தனிப்பட்ட முறையில் என்னை கடுமையாக கண்டித்தார். தன் துறையின் இளையவர்கள் தடம் மாறிச் செல்லும்போது ஒரு ஆசான் எதை செய்யவேண்டுமோ அதைதான் அவர் செய்தார். ஏன் அவ்வளவு கேவலமான மொழியை பயன்படுத்தினேன் என்று கொஞ்சம் விரிவாக சிந்தித்துப் பார்த்தேன்.

ஒரு மனிதனையோ, இயக்கத்தையோ, லட்சியத்தையோ, கொள்கையையோ வீழ்ச்சி அடைய செய்யவேண்டுமானால் ஓர் ஆதிகாலத்து தந்திரம் இருக்கிறது. மண், பொன், பெண். நாகரிக உலகில் மண்ணைக் காட்டி மயக்குவது இன்று கடினம். அப்படி மயங்கியவர்கள் நில அபகரிப்பு வழக்குகளில் உள்ளே இருக்கிறார்கள். பொன்னுக்கு மயங்கியவர்கள் ஊழல் வழக்கில் நீதிமன்றங்களால் தண்டிக்கப்படுகிறார்கள். இந்த இரண்டைக் காட்டிலும் மூன்றாவதான ‘பெண்’தான் ஒரு மனிதனை ஒட்டுமொத்தமாக வீழச்செய்கிறது. இதுதான் என்றுமே வெல்லக்கூடிய பிரம்மாஸ்திரமாகவும் இருக்கிறது.

உலகம் தோன்றியதிலிருந்தே ஆண்கள் இந்த விஷயத்தில் அயோக்கியர்கள் என்பதால் மிகச்சுலபமாக அவர்களை வீழ்த்த முடிகிறது. சபலத்துக்கு ஆட்பட்டவன் எவ்வளவுதான் திறமைசாலியாகவோ, நல்லவனாகவோ இருந்துத் தொலைத்தாலும்.. பல்லாண்டுகள் கடினப்பட்டு அவன் உருவாக்கிய உழைப்புக் கோட்டை ஒரே புகாரில் சுக்குநூறாக உடைகிறது.

நிறைய உதாரணங்களை பட்டியலிட முடியும். கடந்த நூற்றாண்டில் தமிழகத்தில் நிகழ்ந்த அற்புதமான திராவிட இயக்கம் எந்தெந்த சந்தர்ப்பங்களில் பிளவுப்பட்டது என்பதை கொஞ்சம் கூர்மையாக கவனித்தால், ‘பெண்ணுடல்’ அரசியல் ஆயுதமாகவும் பயன்பட்டதை உணர்ந்துகொள்ளலாம். உலகளவில் பார்த்தோமானால் சமகால உதாரணங்களாக ஆனானப்பட்ட கிளிண்டனும், ஜூலியன் அசாஞ்சேவுமே கூட இந்த தாக்குதலுக்கு தப்பவில்லை.

குறிப்பாக அரசியல், சினிமா, ஊடகம் மூன்று துறைகளிலும் ஒருவரை முற்றிலுமாக அழித்தொழிக்க பெண் புகார் குற்றச்சாட்டு போதுமானது. நம்மூரில் கூட சமீபத்தில் இரு ஊடக குழுமங்களுக்கு இடையே நடந்த பனிப்போரில் பரஸ்பரம் பரிமாறிக்கொள்ளப்பட்ட குற்றச்சாட்டு என்னவென்பது நமக்கே தெரியும்தானே.. இணையத்திலும்கூட சில இலக்கியவாதிகள் இதனால்தானே ‘டவுசர்’ கழட்டப்பட்டார்கள்? தன் நிழலைக்கூட நம்பாதவர்கள் மட்டுமே தங்கள் இமேஜை நல்லபடியாக வரலாற்றில் பதியவைக்க முடியும்.

உறுதிப்படுத்தப்பட்ட சில அரண்மனை ரகசியங்களை இதுமாதிரி பொதுவிடங்களில் பகிர்ந்துக்கொள்ள முடியாது. ஆனால் உறுதியாக சொல்ல முடியும். உறுதியானவர்களை உடையவைக்க காலம் காலமாக ‘காமம்’ பயன்படுத்தப்பட்டு வருகிறது. இயக்குனர் மதுர்பண்டார்க்கரின் திரைப்படங்கள் சில இப்பிரச்சினையை தீவிர ஆய்வுக்கு உட்படுத்தியிருக்கிறது.

தருண் தேஜ்பால் மீதான குற்றச்சாட்டு வருவதற்கு சரியாக பத்து நாட்களுக்கு முன்பாக, ஓர் ஆவணப்பட வெளியீட்டு விழாவில் இயக்குனர் பாலுமகேந்திரா பேசினார். பவா செல்லத்துரையின் பதினைந்து வயது மகனுக்கு சொல்வதைப்போல, எல்லாருக்குமாக ‘அட்வைஸ்’ செய்தார். குறிப்பாக இலக்கியம், சினிமா உள்ளிட்ட கலைத்துறைகளில் பிரபலம் அடைபவர்களுக்காக அவருடைய பேச்சு அமைந்தது. “வளர்ந்து வருபவர்கள் ‘பெண்’ விஷயத்தில் கூடுதல் ஜாக்கிரதையாக இருங்கள். மொத்த உழைப்பும் வீணாகிவிடும். இது என் தனிப்பட்ட அனுபவத்தில் உணர்ந்த உண்மை” என்றார். பாலுமகேந்திரா சொன்னதுமே நிறைய பேர் சிரித்தார்கள். அவரும் புன்முறுவலோடு சொன்னாலும், அதற்குப் பின்னான அவரது நிரந்தர வேதனையை உணர்ந்துக்கொள்ள முடிந்தது. ஏனெனில் அவருக்கு சமூகத்தில் இருக்கும் இமேஜ் அதுமாதிரியானது. ஏதாவது பழைய பாலுமகேந்திரா படங்களின் பாடல்களை டிவியில் போடும்போது, அவரை சிலாகித்துப் பேசுவேன். அம்மாவுக்கு கோபம் வரும். “அந்தாளு ஒரு அயோக்கியன்” என்பார்கள். அம்மாவை சொல்லியும் குற்றமில்லை. ஷோபா தலைமுறை ஆட்கள் இப்படித்தான் பேசுவார்கள்.

தனிப்பட்ட முறையில் என்னிடம் பேசும்போது மூத்தப் பத்திரிகையாளர்களும் பாலுமகேந்திரா சொன்ன அட்வைஸைதான் எனக்கும் சொல்வார்கள். “இந்த துறையிலே ரொம்ப ஈஸியா கிடைக்கும் தம்பி. இந்த வேலையோட தன்மை அப்படி. சோத்து மூட்டைக்குள்ளே பெருச்சாளி பாய்ஞ்சா மாதிரி பாய்ஞ்சிடாதே. லைஃபே ஸ்பாயில் ஆயிடும்” என்பார்கள். சொன்னவர்கள் பெரும்பாலும் அவர்கள் லைஃபை ஏதோ ஒரு கட்டத்தில் ‘ஸ்பாயில்’ செய்துக்கொண்டவர்கள்தான். அனுபவம்தான் பெரிய ஆசான். தற்காலிக மகிழ்ச்சியையும், அதன் பிறகான முடிவேயில்லாத துயரத்தையும் அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள் சொன்னால் சரியாகதானிருக்கும். கொஞ்சம் அதீதமாக இருந்தாலும், ‘ஆணாகப் பிறப்பதே பாவம்’ என்றுகூட எண்ணத் தோன்றுகிறது. இம்மாதிரி குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள் பொதுவில் அவமானப்படுகிறார்கள் என்பதோடு பிரச்சினை முடிந்துவிடுவதில்லையே. காலத்துக்கும் குடும்பத்தில் இருப்பவர்களின் முகத்தில் எப்படி விழிப்பார்கள்?

தருண் மீது புகார் கொடுத்த பெண், தருணின் மகளுக்கு தோழர் என்கிறார்கள். எப்படிப்பட்ட இடியாப்பச் சிக்கலில் சிக்கிக் கொண்டிருக்கிறார் :-(

தருண் தேஜ்பாலின் தற்போதைய வீழ்ச்சி, கிளிண்டனுக்கு விரிக்கப்பட்ட ‘கண்ணி’ மாதிரி இருக்கக்கூடுமோ என்று எனக்கு உறுதியான சந்தேகம் இருக்கிறது. இதற்காக புகார் கொடுத்த பெண்ணை நான் கொச்சைப்படுத்துவதாக அர்த்தமில்லை. புகார் உண்மையாகவும் இருக்கலாம். ஆனால் இப்படியொரு ‘நிகழ்தகவு’க்கும் வாய்ப்பிருப்பதை நாம் பரிசீலித்தாக வேண்டும். இன்னும் ஆறு மாதத்தில் பாராளுமன்றத் தேர்தல் வரவிருக்கிறது. ‘Sting operation’க்கு பேர்போன தெஹல்காவும், அதனுடைய ஆசிரியரும் என்னென்ன பூதங்களை, விளக்கைத் தேய்த்து வெளிவரச் செய்வார்களோ என்கிற அச்சம் ஏராளமானோருக்கு இருக்கக்கூடும். இந்த குற்றச்சாட்டு தெஹல்காவை முடக்கச் செய்யும் முயற்சியாக கூட இருக்கலாம். முறையாக புகார் தெரிவிக்கப்படாத நிலையில் அவசரம் அவசரமாக கோவா முதல்வர் இப்பிரச்சினையில் காட்டும் கூடுதல் ஆர்வத்தை நாம் புறந்தள்ளிவிட முடியாது. எனவேதான் தெஹல்காவை காக்க தன்னை தற்காலிகமாக தியாகம் செய்துக் கொண்டிருக்கிறார் தருண் தேஜ்பால்.

மீண்டும் பாலுமகேந்திராவுக்கே வருகிறேன். பல நிகழ்ச்சிகளில் அவர் ஒரு படத்தின் காட்சியை விவரித்துச் சொல்வார். ஒரு கலைஞன் தன் எதிரியிடம் சொல்வானாம். “என்னை என்ன வேண்டுமானாலும் அவதூறாக திட்டிக்கொள். அதில் உண்மை இருக்கலாம். ஆனால் என் உழைப்பை மட்டும் பழிக்காதே. நான் அதற்கு விசுவாசமாக இருக்கிறேன்”

தருண் தேஜ்பால் மீது எனக்கு இன்னமும் மரியாதை இருக்கிறது.

19 நவம்பர், 2013

3D விகடன்

அந்த காலத்தில் விகடகவி புதூர் வைத்தியநாத அய்யர் என்றொருவர் இருந்தார். ஒரே நேரத்தில் பத்து விஷயங்களை கவனித்து எதிர்வினை ஆற்றும் ஆற்றல் பெற்ற தசாவதானியாம் அவர். காமெடி வெண்பாக்கள் நிறைய இயற்றுவாராம். அவருடைய கவிதைகளை பத்திரிகைகள் சீண்டவில்லை என்றோ அல்லது வேறு ஏதாவது காரணமோ தெரியவில்லை. திடீரென்று ஒரு பத்திரிகை ஆரம்பித்து நடத்த ஆரம்பித்தார். ஆனந்த விகடன்.

உலகமும், தேசமும் சீரியஸாக சிடுமூஞ்சித்தனமாக இயங்கிக் கொண்டிருந்த காலத்தில் ‘சிரி’யஸாக இயங்கியது விகடன். அரசு வேலையை உதறி சுயத்தொழில்தான் என்று தன்னம்பிக்கையோடு களமிறங்கியிருந்தார் இளைஞரான திருத்துறைப்பூண்டி சுப்ரமணியன் ஸ்ரீனிவாசன். மெயில் ஆர்டர் பிசினஸ் தொடங்கினார். அதாவது ‘துட்டு’ அனுப்பினால், வினோதமான பொருள் உங்கள் வீடு தேடி வரும். ஒரு ரூபாய்க்கு நூறு பொருள் மாதிரி கவர்ச்சிகரமான பேக்கேஜிங்கில் ஸ்ரீனிவாசனின் மெயில் ஆர்டர் பிசினஸ் சக்கைப்போடு போட்டது. இந்த தொழிலை அபிவிருத்தி செய்ய பத்திரிகைகளில் விளம்பரம் தரவேண்டும். அன்றிருந்த விளம்பர ஏஜென்ஸிகள் அடித்த கொள்ளை கமிஷனைப் பார்த்து, ஏற்கனவே இருந்த பிசினஸோடு அட்வர்டைஸிங் ஏஜென்ஸியையும் சேர்த்து செய்ய ஆரம்பித்தார் ஸ்ரீனிவாசன்.

இப்படித்தான் விளம்பரத் தேவைக்காக விகடனும், புதூர் வைத்தியநாத அய்யரும் ஸ்ரீனிவாசன் என்கிற எஸ்.எஸ்.வாசனுக்கு அறிமுகமானார்கள். ஒரு நாள் விளம்பரம் தருவதற்காக அய்யரை பார்க்க வந்திருந்தார் வாசன். சிரிக்க சிரிக்க பத்திரிகை நடத்தும் அய்யர் அன்று சீரியஸாக இருந்தார். “இனிமேல் விளம்பரம் கொடுக்க வேற பத்திரிகை பார்த்துக்கோப்பா. செலவு கட்டுப்படி ஆவலை. தனியாளா ஓடியாடி நடத்துறதுக்கும் கஷ்டமாயிருக்கு. ஆனந்த விகடனை இழுத்து மூடறதா இருக்கேன்”

வாசன் யோசித்தார். நாமே நடத்தினால் என்ன. இதுதான் வாசனின் ஸ்டைல். விளம்பரம் கொடுக்க விளம்பர ஏஜென்ஸிகள் எதற்கு. நாமே நடத்திவிட்டு போகலாமே. விளம்பரங்களை வெளியிட பத்திரிகைகளை ஏன் தொங்கவேண்டும். நாமே பத்திரிகை நடத்தலாமே. அய்யரிடம் பேரம் பேசினார். ஒரு எழுத்துக்கு இருபத்தைந்து ரூபாய் என்று கணக்கு போட்டு, ‘ஆனந்தவிகடன்’ என்கிற எட்டு எழுத்துகளுக்கு இருநூறு ரூபாய் கொடுத்து வாங்கினார். இது எண்பத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கதை. இன்று ஆனந்தவிகடன் ஒரே ஒரு பிரதியின் விலையே இருபது ரூபாய்.

வாசன் கைக்கு மாறியதுமே பத்திரிகையும் மாறத்தொடங்கியது. சித்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தார். ஆனால், பத்திரிகைக்கு அஸ்திவாரமாக அய்யர் கருதிய ‘ஆனந்தம்’ மட்டும் அப்படியே இருந்தது. சிரிக்க வைக்கும் பத்திரிகை, சித்திரங்களும் அபாரம் என்று ஊர் பேசியது. வாசனுக்கு முழுமையான திருப்தி கிடைக்கவே கிடைக்காது. தன்னுடைய பத்திரிகையில் இடம்பெறும் எழுத்துகளும் சூப்பர் என்று எல்லோரும் பேசவேண்டும் என்று முயற்சித்தார். கல்கியை பிடித்தார். சிறந்த எழுத்தாளர்களுடன், சிறந்த ஓவியர்கள் என்கிற கூட்டணிதான் விகடனின் வெற்றி ஃபார்முலா. நல்ல எழுத்துகளை மிக நல்ல வடிவத்தில் வாசகர்களுக்கு வழங்கவேண்டும் என்கிற அமரர் வாசனின் தரக்கொள்கையை இன்றுவரை நூற்றாண்டை நெருங்கும் விகடன் அப்படியே கடைப்பிடித்து வருகிறது.

அதே நேரம் மாற்றங்களுக்கும் விகடன் அஞ்சியதே இல்லை.
ஐம்பதுகளில் தமிழகத்தில் ஏற்பட்ட திராவிட எழுச்சியின் போது விகடன் அடைந்த மாற்றம் முக்கியமானது. வெகுஜன வாசகர்களை கவரும் எளிய தமிழில் திராவிட எழுத்தாளர்கள் எழுதத் தொடங்கியிருந்தார்கள். இந்த மாற்றத்தை உணர்ந்துக்கொள்ளாத அல்லது ஏற்றுக்கொள்ள விரும்பாத பத்திரிகைகள் பலவும் பொலிவிழந்தன. எண்ணற்ற பத்திரிகைகள் மக்கள் செல்வாக்கினை இழந்து கடையை இழுத்து பூட்டிக்கொண்டது. அரசியல்ரீதியாக காங்கிரஸ் ஆதரவாளராக இருந்தாலும் திராவிட தாக்கத்தை ஏற்றுக்கொண்டு, கவுரவம் பார்க்காமல் விகடனில் இந்த புதுத்தமிழ் நடையை புத்திசாலித்தனமாக புகுத்தினார் வாசன்.

எழுபதுகளிலும், எண்பதுகளிலும் ரேடியோ-டிவி போட்டிகளை விகடன் தன்னுடைய புகைப்படக் கலைஞர்களின் திறமையைக் கொண்டு சமாளித்தது. ரேடியோவாலும், அந்தகால டிவியாலும் செய்யமுடியாத நேரடிகள அனுபவ சாகஸங்களை ஜூ.வி. மாதிரியான இன்வெஸ்டிகேட்டிங் ஜர்னலிஸ பத்திரிகையை அறிமுகப்படுத்தி செய்தது. திரைப்படங்களும் ‘கலர்’ ஆகி பத்திரிகைகளுக்கு கடுமையான அச்சுறுத்தல் நீடித்த இந்த காலத்தில் வாசனின் புதல்வர் எஸ்.பாலசுப்பிரமணியன், ஒரு பத்திரிகையில் செய்யக்கூடிய எல்லா சாத்தியங்களையும் கையாண்டு வெற்றிகண்டார்.

இப்போது மூன்றாவது தலைமுறை. வாசனின் பேரன் பா.சீனிவாசன் பொறுப்பிலிருக்கிறார். முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு பத்திரிகைகளுக்கு பல்முனை போட்டி. மில்லெனியமின் ஆகச்சிறந்த புரட்சியான இணையத்தை மரபான அச்சுப் பத்திரிகைகள் எப்படி எதிர்கொண்டு, தங்கள் இருத்தலியத்தை தக்கவைத்துக்கொள்ளப் போகின்றன என்கிற கேள்விக்கு விடைகாணவேண்டிய காலம். தன் பங்காக ஆனந்த விகடன் 3D அனுபவத்தை வாசகர்களுக்கு முன்வைத்திருக்கிறது.
தொண்ணுறுகளில் ஸ்டீரியோகிராம் தொழில்நுட்ப முறையில் பின்னட்டையில் 3Dயை அறிமுகப்படுத்தியது விகடன். இப்போது ரெட், சியான் அனாக்லிப் கண்ணாடிகளை அணிந்து நேரடியாகவே விகடனில் அச்சிடப்படும் படங்களையும், ஓவியங்களையும் முப்பரிமாணத்தில் பார்க்கக்கூடிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். விகடனுக்கு மட்டுமின்றி, தமிழ் இதழியலுக்கே நாலுகால் பாய்ச்சலை உருவாக்கித்தரும் முக்கியமான மாற்றம் இது. நீளம், அகலம் என்று இருபரிமாணத்தில் அடங்கியிருந்த வாசிப்புக்கு, ஆழத்தை உணரக்கூடிய கூடுதலான இன்னொரு பரிமாணத்தை சேர்த்திருக்கிறார்கள். விகடன் நமக்கு அறிமுகப்படுத்தியிருக்கும் இத்தொழில்நுட்பத்தை எப்படி தமிழ் பதிப்புலகம் பயன்படுத்திக் கொள்ளப் போகிறது என்பதையெல்லாம் எதிர்காலம் முடிவு செய்துக்கொள்ளட்டும். ஆனால், அனைவராலும் தமிழ் பத்திரிகைத்துறையில் இது எழுந்து நின்று இருகைதட்டி பாராட்டப்பட வேண்டிய முக்கியமான புரட்சி.

இந்த கனவை சாத்தியமாக்க விகடன் குழுவினர் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்திருக்க வேண்டும். குறிப்பாக ரெஜிஸ்ட்ரேஷன் பார்க்கவேண்டிய அச்சு ஊழியர்கள், இமைக்க மறந்து வேலை பார்த்திருப்பார்கள். லே-அவுட் பணியாளர்களும் ஒன்றுக்கு பத்துமடங்கு உழைப்பை செலுத்தியிருப்பார்கள். 3டி பக்கங்களுக்காக எடிட்டோரியல் குழுவினர் கற்பனையை தாறுமாறாக பறக்க செய்திருப்பார்கள். ஒட்டுமொத்தமாக விகடன் தாத்தாவுக்கு அட்டென்ஷனில் ஒரு சல்யூட்.
ஓராண்டுக்கு முன்பு அமெரிக்காவில் இருந்து திரும்பிய நண்பர் ஒருவர் 3டியில் அச்சிடப்படும் பத்திரிகை ஒன்றை காட்டினார். என் கையில் கூட கொடுக்காமல் மிகக்கவனமாக அவரே பக்கங்களை புரட்டிக் காண்பித்தார். Word’s most beautiful என்கிற அப்பத்திரிகையை கண்ணாடி போட்டு பார்த்தபோது, முதன்முதலாக ஒரு பெண்ணிடம் ‘ஐ லவ் யூ’ சொன்னபோது ஏற்பட்ட பரவசத்தை மீண்டும் அடைந்தேன். “இதெல்லாம் உங்க ஊருக்கு வர்றதுக்கு இன்னும் நாற்பது, ஐம்பது வருஷம் ஆவும்” என்றார். ஏக்கத்தோடு “ம்” கொட்டினேன். வெறும் இருபது ரூபாய் செலவில் அந்த ஏக்கத்தை இவ்வளவு சீக்கிரமாக விகடன் தாத்தா போக்குவார் என்று கனவிலும் நினைக்கவில்லை. 3டி விகடன் இதழ் கடைக்கு வந்த அன்று மாலை, அதே ‘ஐ லவ் யூ’ பரவசத்தை இரு மடங்காக உணர்ந்தேன். என்ன இருந்தாலும் என் தாய்மொழியில் 3டியை பார்க்கிறேன் இல்லையா. கல்வெட்டு, பட்டயம், ஓலைச்சுவடி, பேப்பர் என்று மரபான எல்லா அச்சு ஊடகவடிவங்களையும் தாக்குப்பிடித்து வாழும் என் தமிழ், முப்பரிமாண தொழில்நுட்பத்துக்கும் தயாராகிவிட்டதை காணும்போது எழும் உணர்ச்சியலைகளுக்கு அளவேயில்லை. ஒரே ஒரு குறைதான். எண்பது ஆண்டுகளாக விகடன் தாத்தா எல்லா மாற்றங்களையும் உள்வாங்கி, விதம்விதமாக தன் கெட்டப்பை மாற்றிக்கொண்டிருக்கிறார். 3டியில் அவரை ஒரு முழுப்பக்கத்துக்கு காட்டியிருக்க வேண்டாமா விகடன் ஓவியர்கள்? அப்புறம், ஆனந்தவிகடன் ஆசிரியருக்கு இன்னொரு கோரிக்கை. தயவுசெய்து ‘டைம்பாஸ்’ இதழையும் 3டி வடிவில் வெளியிட ஆவன செய்யவும். எவ்வளவு செலவு ஆனாலும் சரி. ஆவலோடு காத்திருக்கிறோம்.
அ-னா, ஆவன்னா வாசிக்கத் தொடங்கிய காலத்திலிருந்தே உற்ற தோழனாக இருந்த ஆனந்த விகடன் மீது, சில ஆண்டுகளாக கடுமையான மனக்கசப்பு இருந்தது. ‘ஆனந்தம்’ போய், ‘அழுமூஞ்சி’ விகடனாக அதுமாறிவிட்டதால் ஏற்பட்ட கடுப்பு. ஜூ.வி.தான் அரசியலுக்கு என்று தண்ணீர் தெளித்துவிட்டபிறகு, ஆ.வி.யிலும் ஏன் பக்கம் பக்கமாக, குறிப்பாக கலைஞரை மட்டும் குறிவைத்து வன்மமான அரசியல் என்று ஓர் ஆதங்கம். கலைஞர் தாத்தாவும், விகடன் தாத்தாவும் சமகாலத்தவர்கள்தானே? ஒரு தாத்தாவை இன்னொரு தாத்தா இப்படி ஏதோ சொத்துத்தகராறு மாதிரி தனிப்பட்ட முறையில் அளவுதாண்டி தாக்கலாமா என்று கோபம். அதனாலேயே நான்கு ஆண்டுகளாக விகடனை காசு கொடுத்து வாங்குவதில்லை. அலுவலகத்துக்கு வந்து புரட்டுவதோடு சரி (அரசியல் கட்டுரைகளை ஏறெடுத்தும் பார்க்கவே மாட்டேன்).

தாத்தாவுக்கும் பேரனுக்குமான இயல்பான ஊடல்தான் அது. விகடன் தாத்தா மீதிருந்த அந்த கோபம் இந்த 3டியால் மொத்தமாக ஓடியே போய்விட்டது. என்ன இருந்தாலும் நம்ம தாத்தா இல்லையா?

16 நவம்பர், 2013

கேன்சர் அகற்றப்பட்ட கதை

சமீபத்தில் குஜராத்தில் நடந்த வல்லபாய் படேல் சிலை அடிக்கல் நாட்டுவிழாவில் “சர்தார் வல்லபாய் படேல் மதச்சார்பின்மைக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர். அவர் இருந்த கட்சியில் நானும் இருப்பதற்காக பெருமைப்படுகிறேன்” என்று பிரதமர் மன்மோகன்சிங் பேசினார்.

ஆனால் இந்தியாவின் முதல் பிரதமரான நேரு அவரை ‘மதச்சார்பு கொண்டவர்’ என்று நேரடியாக குற்றம் சாட்டியதாக ஒரு புத்தகத்தை மேற்கோள் காட்டி அத்வானி குற்றம் சாட்டுகிறார். இதெல்லாம் காங்கிரஸ் – பாஜக இடையிலான அரசியல் சடுகுடு. யார் வெல்லுவார்கள் என்பதை காலம் முடிவு செய்துக்கொள்ளட்டும்.

அத்வானி குறிப்பிடுகிற புத்தகம் எம்.கே.கே. நாயர் என்கிற முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி எழுதிய மலையாளப் புத்தகம். அது ஆங்கிலத்தில் ‘The story of an era told without ill will’ என்று மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது. அப்புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் ஒரு சுவாரஸ்யமான அத்தியாயத்தின் ஒரு பகுதி :

ஏப்ரல் 30, 1948. இந்திய ராணுவம் ஹைதராபாத்திலிருந்து முற்றிலுமாக விலக்கிக் கொள்ளப்பட்டது. உடனடியாக ஹைதராபாத் நிஜாமின் ‘ரஜாக்கர்கள்’ எனப்படும் ஆயுதக்குழு நிஜாம் பிரதேசம் மொத்தத்தையும் தங்கள் ஆளுகைக்குள் எடுத்துக் கொண்டனர். மக்களை கடுமையாக சித்திரவதை செய்யத் தொடங்கினர் ரஜாக்கர்கள்.

மவுண்ட்பேட்டன் இடத்தை காலி செய்ததுமே கவர்னர் ஜெனரலாக இராஜாஜி பதவியேற்றுக் கொண்டார். ஹைதராபாத்தின் அபாயநிலையை இராஜாஜி, நேரு மற்றும் படேல் மூவரும் உணர்ந்திருந்தனர். எனவே இராணுவத்தை அனுப்பி நிஜாமின் கொட்டத்தை அடக்கவேண்டுமென்று படேல் துடித்துக் கொண்டிருந்தார்.

இதற்கிடையே நிஜாம் தன்னுடைய பிரதிநிதியை பாகிஸ்தானுக்கு அனுப்பி நல்லுறவு ஏற்படுத்த முயற்சித்தார். தன்னுடைய அரசுப் பணத்தில் கணிசமான தொகையை பாகிஸ்தானுக்கு கொடுத்தார். அமைச்சரவை சந்திப்பில் இந்த நிலவரத்தை படேல் விலாவரியாக எடுத்துரைத்தார். ஹைதராபாத்தில் நடக்கும் வன்முறை வெறியாட்டங்களை முடிவுக்கு கொண்டுவர இராணுவத்தை அனுப்பவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். பொதுவாக கனிவாகவும், அமைதியாகவும் பேசக்கூடிய தன்மை கொண்ட நேரு திடீரென எரிச்சலடைந்தார். தன்னிலை இழந்த நிலையில் வல்லபாய் படேலை நோக்கி, “நீங்கள் ஒரு முழுமையான வகுப்புவாதி. உங்கள் கோரிக்கையை ஏற்கமாட்டேன்” என்று குரல் உயர்த்தி சொன்னார். படேல் ஆவேசப்படவில்லை. அமைதியாக அறையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.

ஹைதராபாத்தில் நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்தது. கவர்னர் ஜெனரலான இராஜாஜி இந்த சூழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்தார். நேருவையும், பட்டேலையும் இணக்கமாக போகவைக்க முயற்சித்தார். அரசியல் ஆலோசனை அதிகாரியான வி.பி.மேனனை அழைத்துப் பேசினார். இராணுவம் தயார் நிலையில் இருப்பதாகவும், எந்த நிமிடத்திலும் ஆணை கிடைத்தால் எல்லாவற்றையும் சரிக்கட்டிவிட முடியுமென்றும் இராஜாஜியிடம் மேனன் சொல்கிறார். அடுத்த நாளே நேருவையும், பட்டேலையும் சந்திப்புக்காக இராஷ்டிரபதி பவனுக்கு வரவழைத்தார் இராஜாஜி. வி.பி.மேனனும் சந்திப்புக்கு அழைக்கப்பட்டார்.

இராஷ்டிரபதி பவனுக்கு வந்துக் கொண்டிருந்த நேரத்தில் மேனனிடம் ஒரு கடிதம் கையளிக்கப்பட்டது. திருவாங்கூர் மற்றும் கொச்சியை இந்தியாவில் சேர்ப்பதற்கான பேச்சுவார்த்தையை நடத்திய ஐ.சி.எஸ். அதிகாரி பட்ச் என்பவர் இந்த கடிதத்தை அவரிடம் கொடுத்தார். பிரிட்டிஷ் ஹைகமிஷனரிடம் இருந்து வந்த அந்த கடிதம், ஹைதராபாத்தில் கன்னியாஸ்திரிகள் சிலர் ரஜாக்கர்களால் பாலியல் வன்முறைக்கு ஆளானதை கண்டித்து வந்திருந்தது. மேனன் இந்த கடிதத்தை அப்படியே இராஜாஜியிடம் கொடுத்தார்.

நேரு, படேல் வருகைக்குப் பிறகு சந்திப்பு தொடங்கியது. இராஜாஜி தனக்கேயுரிய பாணியில் ஹைதராபாத் நிலைமையை கவலையோடு பேசினார். இந்தியாவின் இறையாண்மையை காக்கும் வகையில் நடவடிக்கை வேகமாக இருக்கவேண்டுமென்கிற தொனி இராஜாஜியின் பேச்சில் இருந்தது. நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் சர்வதேச அளவில் இந்தியா எதிர்கொள்ளக்கூடிய அழுத்தங்களை நேரு வலியுறுத்தி பதில் சொல்லிக் கொண்டிருந்தார். நேருவின் பேச்சை முழுமையாக கேட்ட இராஜாஜி, பொறுமையாக தன்னிடம் மேனன் கொடுத்த பிரிட்டிஷ் ஹைகமிஷனரின் கண்டனக் கடிதத்தை தருகிறார்.

கடிதத்தை வாசித்ததுமே நேருவின் முகம் மாறுகிறது. கோபத்தில் சிவக்கிறார். கன்னியாஸ்திரிகளை கூட விட்டுவைக்காத ரஜாக்கர்களின் கொடுஞ்செயல் அவரது உறுதியான இதயத்தை அசைத்துவிட்டது. கைகளால் வேகமாக மேசை மீது குத்தியபடியே குரலுயர்த்தி சொன்னார்.

“இனியும் நாம் பொறுக்க முடியாது. அவர்களுக்கு பாடம் கற்பித்தே தீரவேண்டும்”

நேருவிடமிருந்து இராஜாஜி எதிர்ப்பார்த்தது இதைதான். வி.பி.மேனனை பார்த்து இராஜாஜி சொல்கிறார்.

“மேனன், இராணுவ தலைமை அதிகாரியை களமிறங்கச் சொல்லுங்கள்”

ஆணை கிடைத்ததுமே மேனன் செயல்படத் தொடங்கினார். இராணுவ ஜெனரலுக்கு செய்தி பறந்தது. கவலையோடு தன்னுடைய தலையைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார் நேரு. தன் நிலையை ஆசுவாசப்படுத்திக்கொள்ள தேனீர் அருந்தினார். நேருவின் நிலையை கண்ட இராஜாஜி புன்னகையோடு அவரிடம் சொல்கிறார்.

“கொடுமையான வலி ஏற்படுமென்றாலும் வேறு வழியில்லை. அறுவைச் சிகிச்சை செய்து, கேன்சர் கட்டியை நாம் அகற்றித்தான் ஆகவேண்டும்”

13 நவம்பர், 2013

பாட்ஷா

எண்பதுகளில் ஆட்டோ இளைஞர்களின் கனவு வாகனமாக இருந்தது. படித்துவிட்டோ அல்லது படிப்பில் கோட்டை விட்டோ திரிந்துக் கொண்டிருந்த இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கு வரப்பிரசாதமாக ஆட்டோக்கள் அமைந்தன.

அப்போதெல்லாம் சாதாரணமாக காணக்கூடிய காட்சி இது.

“என்ன பண்ணுறே?”

“ஆட்டோ ஓட்டுறேன்” பதில் சொல்லும்போதே பெருமிதம் தென்படும். கேள்வி கேட்டவரும் பையன் பொறுப்பாதான் இருக்கான் என்று திருப்திப்படுவார்.

ஆட்டோ ஓட்டுபவர்களுக்கு நல்ல வருமானமும் கிடைத்து வந்தது. எங்கள் தெருமுக்கில் இருந்த ஒரு குடும்பம் காலம் காலமாக செயிண்ட் தாமஸ் மவுண்ட் ஸ்டேண்டில் குதிரைவண்டி வைத்திருந்தார்கள். மவுண்ட் டூ மடிப்பாக்கம் ட்ரிப்புக்கு நாற்பத்தி ஐந்து காசு கொடுத்து நானேகூட பயணித்திருக்கிறேன். அந்த குதிரைவண்டி குடும்பத்தில் வந்த இளைஞர் எண்பதுகளின் மத்தியில் ஆட்டோ ஓட்டத் தொடங்கினார். கொஞ்ச நாளிலேயே சொந்த ஆட்டோ. இன்னும் சில காலம் கழித்து ரெண்டு ஆட்டோ கூடுதலாக வாங்கி வாடகைக்கு விட்டார். வீடு கட்டினார். கல்யாணம் முடித்து செட்டில் ஆனார். இப்போது வேறெங்கோ இடம்பெயர்ந்து டிராவல்ஸ் நடத்தி, பங்களா கட்டி பக்காவாக செட்டில் ஆகிவிட்டதாக கேள்வி.

அப்போதைய ஆட்டோக்காரர்கள் பெரும்பாலும் சி.ஐ.டி.யூ தொழிற்சங்கத்தில் இருப்பார்கள். அவர்களது தம்பிகள் வேலையில்லாமல் இருந்தால் டி.ஒய்.எஃப்.ஐ.யாகவோ அல்லது படித்துக் கொண்டிருந்தால் எஸ்.எஃப்.ஐ.யாகவோ இருப்பார்கள். சென்னையில் எம்.எம்.டி.ஏ.காலனி மற்றும் புழுதிவாக்கம் மா.கம்யூ அலுவலகங்கள் (அதாவது கொஞ்சம் பெரிய சைஸ் அறை) நமக்கு பரிச்சயமானது இதுபோன்ற தோழர்களால்தான். பொதுவாகவே அந்த காலத்தில் நாம் பார்த்தவர்களில் நான்கில் ஒருவராவது கட்சி வேறுபாடுகளை தாண்டி இடதுசாரி சிந்தனை கொண்டவர்களாக இருந்தார்கள். எண்பத்தி ஒன்பது தேர்தலில் திமுகவின் வெற்றிக்கு தமிழகத்தின் இந்த பொதுவுடைமை போக்கும் முக்கியமான காரணமாக இருந்தது.

சி.ஐ.டி.யூ-வுக்கு அடுத்தபடியாக ஆட்டோக்காரர்களில் பெரும்பாலானோர் திமுகவின் தொ.மு.ச.காரர்களாக இருந்தார்கள். சி.ஐ.டி.யூ தோழர்களாக இருந்தவர்களும் கூட தீக்கதிர் படிப்பதற்குப் பதிலாக தினகரன் படிப்பார்கள். ‘யார்’ படத்தில் ரஜினிகாந்த் தினகரன் வாசித்ததுதான் இதற்கு காரணமாக இருந்திருக்கிறது. அக்காலக்கட்டத்து சினிமாக்களில் வரும் நாளிதழாக பெரும்பாலும் தினகரன் இருக்கும் அல்லது மக்கள்குரல் இருக்கும்.

அந்நாளைய ஆட்டோக்காரர்கள் தீவிரமான ஈழ ஆதரவாளர்கள். மத்திய அரசின் போக்குக்கு பெரும்பாலும் எதிரானவர்கள். எனவேதான் ஈழ ஆதரவுப் போராட்டங்களோ, பொதுப் பிரச்சினைகளுக்காக பாரத் பந்த் மாதிரி பெரிய வேலைநிறுத்தங்கள் நடந்தபோதோ நகரத்தை மொத்தமாக ஸ்தம்பிக்க வைத்தார்கள்.

அருமையாக கானா பாடுவார்கள். இளையராஜா ரசிகர்கள். பிரபு, ராம்கி மாதிரி அந்த காலத்து இளைய ஹீரோக்களின் தாக்கம் கொண்டவர்கள். எனவேதான் ஸ்டைலுக்காக கோடையிலும்கூட கழுத்தில் மஃப்ளர் சுற்றிக்கொண்டு ஆட்டோ ஓட்டினார்கள். காக்கி பேண்டும், கலர்ச்சட்டையுமாக டீக்கடைகளில் அரசியல் பேசிக்கொண்டிருப்பார்கள். சவாரி வந்துவிட்டால் வண்டியில் மாட்டி வைத்திருக்கும் காக்கிச்சட்டையை மாட்டிக் கொள்வார்கள். அச்சட்டைக்கு பட்டன் போடமாட்டார்கள். கண்டிப்பாக ‘பேட்ஜ்’ விசிபிள் செய்துக் காட்டுவார்கள்.

ஏரியாவில் ஸ்டேண்ட்காரர்கள் ஹீரோவாக மதிக்கப்பட்டார்கள். ஏதாவது வம்பு, தும்பு என்றால் முதலில் வந்து நின்று நியாயம் கேட்பார்கள். குறிப்பாக பெண்களிடம் வம்பு செய்யும் ரோமியோக்களுக்கு இவர்கள்தான் வில்லன். ஏரியா பெண்களை (கிழவியிலிருந்து குமரிவரை – வயசு பாகுபாடில்லாமல்) பாதுகாக்கும் எல்லைச்சாமிகள். யாராவது மருந்து குடித்துவிட்டாலோ, தீக்குளித்துவிட்டாலோ முதலுதவிக்கு முதலில் வந்துக் கொண்டிருந்தவர்கள்.

அந்தகால ஆட்டோக்காரர்களை நினைத்தால் ‘ஆயுத பூஜை’யும் இயல்பாகவே நினைவுக்கு வரும். அதகளமான காலம். லைட் மியூசிக் கச்சேரியெல்லாம் வைத்து ஏரியாவையே எண்டெர்டெயின் செய்வார்கள்.

‘பாட்ஷா’ வெளிவந்த தொண்ணூறுகளின் மத்திய காலக்கட்டம்தான் ஆட்டோக்காரர்கள் உச்சத்திலிருந்த காலமென்று தோன்றுகிறது. இந்த சமூகநிலையை அழகாக கமர்சியல் ஆக்கியது ரஜினி-சுரேஷ்கிருஷ்ணா கூட்டணி. சூப்பர்ஸ்டார், நக்மாவை ‘உஷார்’ பண்ணியதைக் கண்டு கவரப்பட்டதாலோ, என்னவோ அதன்பிறகு நிறைய ஆட்டோக்காரர்கள் ரோமியோக்களாக மாறிவிட்டார்கள். பெண்களை கேலி செய்தவர்களை இவர்கள் தட்டிக்கேட்ட காலம் போய், இவர்களில் நிறைய பேரே ‘ஈவ் டீசிங்’ சம்பவங்களில் ஈடுபட ஆரம்பித்து விட்டார்கள். தொண்ணூறுகளின் இறுதியிலும், ரெண்டாயிரங்களின் தொடக்கத்திலும் நிறையமுறை கேட்டவார்த்தை “ஆட்டோக்காரனோடு ஓடிப்போயிட்டா”

சமூக அநீதிகளை எதிர்க்கும் பொறுப்பான சிகப்பு மனிதர்கள் எப்போதிலிருந்து சமூகவிரோதிகளாய் அடையாளம் காணப்பட்டார்கள் என்பதை சரியாக கணிக்கமுடியவில்லை. லோக்கல் அரசியல்வாதிகளுக்கு அடியாட்களாக எப்போதிலிருந்து பணியாற்றத் தொடங்கினார்கள் என்பதையும் கவனிக்கத் தவறிவிட்டேன். இன்று ஆட்டோக்காரர்களுக்கு சமூகத்தில் கவுரவமான இடம் இருப்பதாக தெரியவில்லை. குடிகாரர்களாகவும், பெண்பித்தர்களாகவும், ரவுடிகளாகவும், அடாவடிக்காரர்களாகவுமே பொதுப்புத்தியில் உறைந்துப் போயிருக்கிறார்கள்.

ஒரு காலத்தில் நம்மால் ஹீரோக்களாக மதிப்பீடு செய்யப்பட்டவர்கள், அம்மதிப்பீட்டிலிருந்து வீழ்ந்துக்கொண்டே போவதை தாங்கிக்கொள்ள முடியவில்லை.

12 நவம்பர், 2013

பெருகுகிறதா ‘மால்’ கலாச்சாரம்?

‘ஷாப்பிங்’ செய்ய ரங்கநாதன் தெருவிலும், டவுன்ஹால் ரோட்டிலும் லோலோவென்று அலைந்துக்கொண்டிருந்த தமிழர்கள், இப்போது குஷியாக மால்மாலாக திரிகிறார்கள்.

சமீபத்தில் சென்னையில் துவக்கப்பட்டிருக்கும் மிகப்பெரிய மால் அது. சுமார் இருபத்தைந்து லட்சம் சதுர அடி பரப்பில், சென்னை மாநகருக்குள் ஒரு குட்டி ஹைடெக்நகரமாக உருவாகியிருக்கிறது. சாதாரண துணிக்கடையில் தொடங்கி, ஐந்து நட்சத்திர ஓட்டல் வரை ஒரே வளாகத்தில் அமைந்து இருக்கிறது. திருவிழா போல ஜெகஜ்ஜோதியாக அந்த மால் அமைந்திருக்கும் பகுதியே ஜொலிக்கிறது. தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் கூடி, அங்கே ஏதோ மாநாடு நடப்பதைப் போன்ற தோற்றம் ஏற்படுகிறது.

சில வருடங்களுக்கு முன்பு இம்மாதிரி காட்சி அபூர்வம். பண்டிகைக் காலங்களில் ஒவ்வொரு நகரின் ஏதோ ஒரு தெருதான் பரபரப்படையும். அத்தெருவில் வரிசையாக கடைகள் இருக்கும். ஒவ்வொரு கடையாக ஏறி, இறங்கி நமக்குத் தேவையானதை, திருப்திப்படும் விலையில் கறாராக பேரம் பேசி வாங்குவோம்.

அந்த காலம் மலையேறிவிட்டது. நுகர்வுக் கலாச்சாரத்தின் செல்லப் பிள்ளையாக நகரங்கள் தோறும் மால்கள் உருவாக ஆரம்பித்துவிட்டன. இந்திய நகரங்களில் நவீன அரண்மனைகளின் வடிவத்தில் புதுசு புதுசாக ஏராளமான மால், கண்ணையும் கருத்தையும் கவரும் வண்ணம் –அதே நேரம் பர்ஸை பலமாக பதம் பார்க்கும் நோக்கிலும்- உருவாகிக்கொண்டே இருக்கின்றன. தமிழகத்தில் பெருநகரமான சென்னையை தாண்டி கோவை, மதுரை, சேலம், திருச்சி, நெல்லை என்று அடுத்தடுத்த மட்டத்தில் இருக்கும் நகரங்களிலும் மால் கலாச்சாரம் பரவி வருகிறது.

ஒரே கூரையின் கீழ் சூரியனுக்கு கீழே இருக்கும் எல்லாமே கிடைக்குமென்ற நம்பிக்கையை மால்கள் உருவாக்குகின்றன. அயல்நாட்டு செண்ட் பாட்டிலில் தொடங்கி, மதுரை மல்லிவரை மாலில் வாங்கலாம். marketing for all என்கிற வார்த்தையே mall என்று சுருக்கமாக குறிப்பிடப்படுகிறது. விற்பனையை வெறும் வியாபாரமாக அணுகாமல் வாடிக்கையாளர்களுக்கு பொழுதுபோக்கு பாணியில் வழங்குவதுதான் மால்களின் அடிப்படை ஐடியா. இதனால்தான் மால் அனுபவத்தை shoppertainment என்கிற புதிய கலைச்சொல்லை உருவாக்கி குறிப்பிடுகிறார்கள்.

தினம் தினம் பல லட்சம் பேர் மால்களில் குவிகிறார்கள். பல்லாயிரம் கோடிகளில் பணம் புரளுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டுமே சுமார் நூற்றி இருபதுக்கும் புதிய மால்கள் திறக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் கிட்டத்தட்ட நாற்பது மால்கள் மூடுவிழா கண்டிருக்கின்றன என்பதுதான் இங்கே கவனித்தக்க அம்சம்.

அங்கொன்றும் இங்கொன்றுமாக நகரில் ஆங்காங்கே இயங்கும் கடைகளில் தெருத்தெருவாக ஏறி இறங்கி, மூட்டுவலியால் அவதிப்படும் தங்கள் வாடிக்கையாளர்களை கண்டு கண்ணீர் விட்டு கதறிய வியாபாரிகள் கண்ட தீர்வுதான் ‘மால்’. ஒரே வளாகத்தில் எல்லா கடைகளும் என்கிற இந்த ‘ஐடியா’வுக்கு வயது ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகள். ரோம் நகரில் கி.பி. நூறாம் ஆண்டு வாக்கில் திறக்கப்பட்ட ‘டிராஜன்ஸ் சந்தை’தான் உலகின் பழமையான மால். ஒரே கட்டிடத்தில் என்றில்லாமல் பக்கத்து, பக்கத்து தெருக்களை இணைத்து ஒரே ஷாப்பிங் வளாகமாய் (நம்மூர் பர்மா பஜார் மாதிரி) உலகெங்கும் நிறைய உருவாகியிருக்கின்றன. இஸ்தான்புல் சந்தை (58 தெருக்களை இணைத்து சுமார் 4000 கடைகள்), பத்து கிலோ மீட்டருக்கு நீளும் டெஹ்ரானின் சந்தை என்று நூற்றாண்டுகள் கண்ட மால்கள் நிறைய உண்டு.

பதினேழு மற்றும் பதினெட்டாம் நூற்றாண்டுகளில்தான் மழையோ, வெயிலோ படாமல் பாதுகாப்பான ஷாப்பிங் வசதியை உருவாக்கும் எண்ணம் வணிகர்களுக்கு வலுத்தது. பாரிஸ் நகரில் 1628ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மார்ச்சே தே என்பேண்ட் ரோஹ்ஸ், இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் நகரில் 1774ல் இயங்கத் துவங்கிய ஆக்ஸ்போர்ட் கவர்ட் மார்க்கெட் போன்ற மால்கள் இன்னும்கூட சேவையை தொடர்ந்துக் கொண்டிருக்கின்றன. ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் 1785ல் துவக்கப்பட்ட கோஸ்தினி த்வார் மால்தான் இன்றைய மால்களின் வடிவத்துக்கு முன்னோடியாக அமைந்தது.

ஸ்பென்ஸர் & கம்பெனி நிறுவனம், சென்னையில் சுமார் எண்பது தனித்தனி பிரிவுக்கடைகளை ஒன்று சேர்த்து, இந்தியாவின் முதல் டிபார்ட்மெண்ட் ஸ்டோராக துவக்கிய ஸ்பென்ஸர் பிளாஸாதான் நம் நாட்டின் முதல் மால் ஆக கருதப்படுகிறது (1895). தொடங்கப்பட்ட காலத்தில் தெற்காசியாவின் பெரிய ஷாப்பிங் மால் ஆகவும் இதுவே இருந்தது. 1990ல் புனரமைக்கப்பட்டு துவக்கப்பட்ட ஸ்பென்சர் ப்ளாஸா அன்றையக் காலத்தில் சென்னை நகரில் தரிசித்தே தீரவேண்டிய தலமாக இருந்தது.

“படிக்கும் காலத்தில் ஊரைவிட்டு வந்து சென்னையில் தங்கியிருந்தேன். தொண்ணூறுகளின் ஸ்பென்ஸர் பிளாஸா, அல்ஸா மால் போன்றவைதான் எங்களைப் போன்ற இளைஞர்களுக்கு வாரயிறுதிகளின் வேடந்தாங்கல். பெரும்பாலும் வேடிக்கைதான். மாதத்துக்கு ஒரு முறை டீஷர்ட் மாதிரி ஏதாவது வாங்கினால் அபூர்வம். ஒவ்வொரு முறை இந்த மால்களுக்குள் நுழையும்போதும் கண்களை விரித்துக்கொண்டு ஆச்சரியமாக ஆசை ஆசையாக சுற்றுவேன்.

இன்றைய சென்னையில் எக்ஸ்பிரஸ் அவென்யூ, பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டியை எல்லாம் பார்க்கும்போது இருபது வருடங்களுக்கு முன்பு நான் கண்டு ஆச்சரியப்பட்ட மால்கள் எல்லாம் மால்தானா அல்லது பெட்டிக்கடைகளா என்று சந்தேகம் வருகிறது. ஷாப்பிங் கட்டமைப்பு, வசதிகள் விஷயத்தில் நாம் மிகக்குறுகிய ஆண்டுகளிலேயே பலநூறு மடங்கு முன்னேறியிருக்கிறோம்” என்கிறார் டெல்லியில் நிம்பஸ் நிறுவனத்தின் தரக்கட்டுப்பாட்டு அதிகாரியாக பணிபுரியும் ரவீந்திரன்.

கட்டமைப்பு விஷயமெல்லாம் ஓக்கேதான். ஆனால் உண்மையிலேயே மால்கள் நம் நாட்டில் வெற்றி அடைந்திருக்கிறதா என்றால் சந்தேகம்தான். நெரிசலற்ற பார்க்கிங், முழுக்க குளிர்சாதனம், எஸ்கலேட்டர் வசதி, விழாக்கள் நடத்துவதற்குரிய வளாகம், திரையரங்குகள், டிபார்ட்மெண்ட் கடைகள், அழகு நிலையம், ஆடை விற்பனை அங்காடிகள், வீடியோ கேம்ஸ், உணவகங்கள் என்றெல்லாம் பொழுதுபோக்கையும், ஷாப்பிங்கையும் இணைத்து திட்டமிடுபவர்கள், இதை நடைமுறைக்கு கொண்டுவரும்போது செயல்பாட்டில் கோட்டை விட்டு விடுகிறார்கள். அவர்கள் எதிர்ப்பார்க்கும் விதமாக ‘கலர்ஃபுல் காம்பினேஷனில்’ கடைகள் அமைவதில்லை. ஒரு எலெக்ட்ரானிக் பொருட்கள் விற்கும் கடைக்கு, அடுத்து பெண்களின் உள்ளாடை விற்கும் கடை என்பதுமாதிரி எகனைமொகனையாய் அமைந்துவிடுகிறது.

எப்படியாவது துண்டு போட்டு பெரிய மால்களில் இடம்பெற்றுவிடும் சில்லறை விற்பனையாளர்கள் போதுமான விற்பனை செய்யமுடியாமல் அல்லாடுகிறார்கள். இங்கு வரும் வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் இண்டர்நேஷனல் பிராண்ட் அந்தஸ்துடைய பொருட்களையே வாங்க விரும்புகிறார்கள். இவற்றை விற்கும் ஏற்கனவே பிரபலமாகிவிட்ட பெரிய நிறுவனங்களோடு சரிக்கு சமமாக வளர்ந்துவரும் சிறிய நிறுவனங்களும் போட்டியிட வேண்டியிருக்கிறது. மட்டுமில்லாமல் மால்களில் இயங்கி கிடைக்கும் லாபத்தில் 25 முதல் 35 சதவிகிதம் வரை, இங்கே இருப்பதற்காகவே செலவிட வேண்டியிருக்கிறது என்பது சில்லறை விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு பெரிய சுமையாக இருக்கிறது.

சென்னையில் தனியாக கட்டிடம் கட்டி பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த ஒரு சில்லறை விற்பனை நிறுவனம், ஆசை ஆசையாக பிரும்மாண்டமாக கட்டப்பட்ட ஒரு மாலில் இடம்பெற்று குடியேறினார்கள். “எங்களது வழக்கமான வாடிக்கையாளர்களை இழந்துவிட்டோம். பெரிய இடத்தில் வியாபாரம் செய்வதால், விலையை கூட்டி விற்கிறோமோ என்று அவர்கள் சந்தேகப்படுகிறார்கள்” என்று அந்நிறுவனத்தின் நிர்வாகி நம்மிடம் கூறினார்.

வாரயிறுதிகளில் ஆயிரக்கணக்கில் மக்கள் மால்களில் கூடுகிறார்கள் என்பது உண்மைதான். ஆனால் அவர்களில் பெரும்பாலானோர் ‘ஷாப்பிங்’ செய்வதைவிட உணவருந்தவும், பொழுதுபோக்கவும்தான் விரும்புகிறார்கள். சினிமா திரையரங்கங்கள் இடம்பெற்றிருக்கும் மால்களிலேயே கூட்டம் அதிகமாக இருப்பதை நாம் கவனிக்கலாம். ஆனால் அந்த கூட்டமும் குறையத் தொடங்கியிருக்கிறது என்கிறார் சென்னையில் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் இளைஞர் ரமேஷ்.

“மல்ட்டிப்ளக்சுகளிலேயே இவ்வசதிகள் வந்துவிட்டது. வசதியான சூழலை அனுபவிக்க மாலுக்கு வருபவர்கள் மைனாரிட்டிதான். மற்ற திரையரங்குகளில் டிக்கெட் கிடைக்காத பட்சத்திலேயே மால்களில் இருக்கும் திரையரங்குகளுக்கு கூட்டம் சேருகிறது. ஆனால் திரையரங்குகளில் இருசக்கர வாகனங்களுக்கு 20 ரூபாய்தான் பார்க்கிங் கட்டணம். மால்களுக்கு வந்துவிட்டால் மூன்று மணி நேரத்துக்கு 50 ரூபாய் செலவிட வேண்டியிருக்கிறது. வாரயிறுதிகளில் இன்னும் கூடுதல் கட்டணம். கார் பார்க்கிங்கெல்லாம் கொள்ளை. படம் பார்க்க டிக்கெட்டுக்கு செலவிடும் காசையே பார்க்கிங்குக்கும் செலவிட வேண்டுமானால் எப்படி? எனவேதான் ஆரம்பத்தில் மால்களில் சினிமா பார்க்க இருந்த ஜோர் இப்போது குறைந்துவருகிறது” என்று லாஜிக்கலாக பேசுகிறார் ரமேஷ்.

ஏற்கனவே மால்களுக்கு வந்தவர்களை திரும்பத் திரும்ப வரவைப்பதில்தான் வெற்றி அடங்கியிருக்கிறது. ஆனால் அம்மாதிரி திரும்ப வரவைக்கவிடாமல் பார்க்கிங் கட்டணம் பயமுறுத்துகிறது. பொழுதுபோக்கு, உணவு, சினிமா, பேஷன் ஆகிய நான்கும்தான் மால்களின் வெற்றிக்கான கச்சிதமான ஃபார்முலா. இவை சரியான விகிதத்தில் கலந்திருக்கும் மால்கள் மக்களை கவரவே செய்கின்றன. சென்னையில் இருக்கும் எக்ஸ்பிரஸ் அவென்யூக்கு சராசரியாக 70,000 பேர்வரை தினமும் வருகிறார்கள். ஆனால் மால்களுக்கு வருகிற கூட்டத்தை எதையாவது வாங்கச் செய்வது எப்படி என்கிற ரகசியம் புரியாமல்தான் விற்பனையாளர்கள் மண்டையை குழப்பிக் கொள்கிறார்கள்.

மால்களுக்கு வந்துவிட்டு வெறுமனே வேடிக்கை மட்டும் பார்த்துவிட்டு செல்வதை ‘விண்டோ ஷாப்பிங்’ என்கிறார்கள். இதுதான் மால்களின் வெற்றிக்கு அச்சுறுத்தலான விஷயம். “ஷாப்பிங் மால்களுக்கு ஷாப்பிங் பண்ணதான் வரணும்னு இல்லை. வீட்டுலே போர் அடிச்சாலே வந்துடலாம். சும்மா கொஞ்ச நேரம் கடைகளை வேடிக்கை பார்த்துட்டு, டைம்பாஸ் பண்ணலாம். வேணும்னா எதுவாச்சும் சாப்பிட்டுட்டு போகலாம். எதுவும் வாங்கலேன்னு நம்பளை யாராவது போலிஸ்லேயா புடிச்சி கொடுக்கப் போறாங்க?” என்று நக்கலாக கேட்கிறார் சேலத்தை சேர்ந்த சுபாஷ். இந்தப் பிரச்சினையை கட்டுப்படுத்த சமீபத்தில் ரம்ஜான் பண்டிகை நேரத்தில் அகமதாபாத் மால் ஒன்றில், உள்ளே நுழையவே நுழைவுக்கட்டணம் வசூலிக்கப்பட்டது. நுழைவுக்கட்டணம் வசூலிக்கிறார்கள் என்றதுமே வழக்கமாக வரும் கூட்டமும் கூட சிதறி ஓடியதுதான் மிச்சம்.

மெட்ரோ நகரங்களை தவிர்த்து அடுத்தக்கட்ட நகரங்களிலும் மால்கள் நிறைய திறக்கப்பட்டு வருகின்றன. ஆனால் அவற்றுக்கு வரும் கூட்டத்தின் எண்ணிக்கை படுமோசம். மதுரையின் பெரிய மாலான விஷால்-டி-மால் இரண்டரை லட்சம் சதுர அடியில், ஐந்து தளங்களோடு பிரும்மாண்டமாக திறக்கப்பட்டது. வாரநாட்களில் தினத்துக்கு சராசரியாக 500 பேரும், வாரயிறுதிகளில் 800 பேரும்தான் வருகிறார்கள் என்று அங்கே கடை வைத்திருக்கும் ஒருவர் கூறுகிறார். இங்கே ஐனாக்ஸ் தியேட்டர் திரைகள் திறக்க அரசு அனுமதிக்கு காத்திருக்கிறார்கள். ஒருவேளை தியேட்டர் திறந்தபின் கூட்டம் வரலாம் என்றும் அவர் நம்பிக்கை தெரிவிக்கிறார்.

“பொழுதுபோக்கு அம்சங்களை அனுபவிக்க இளைஞர்கள் வருகிறார்கள். கொஞ்சம் கொஞ்சமாக கூட்டம் கூடுகிறது. ஆனால் பொருள் வாங்குவது குறைவுதான். அடிக்கடி வர ஆரம்பிப்பவர்கள் வாங்க தொடங்குவார்கள் என்று நம்புகிறோம். அதற்கு கொஞ்சம் காலம் பிடிக்கும்” என்கிறார் இந்த மாலின் பொதுமேலாளரான செந்தில்குமார்.

பெங்களூரை சேர்ந்த ஏசியாபேக் என்கிற நிறுவனத்தின் கணக்கீட்டின்படி, நாட்டில் நாற்பது சதவிகித மால்கள் வெற்றிகரமாகவே இயங்குகின்றன. பெரிய மால்கள் உடனடியாக வெற்றி காண்பது சாத்தியமில்லை. ஆனால் அடுத்த சில வருடங்களில் ‘மால் ஷாப்பிங்’ சொகுசை அனுபவிப்பவர்களால் இந்த கலாச்சாரம் பெருகும் என்று நம்பலாம்.

2005-06 ஆண்டுகளில் உத்தேசிக்கப்பட்ட மால்களே இப்போது ஆங்காங்கே துவக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. புதியதாக மால்களை உருவாக்க யாரும் இப்போது திட்டமிடுவதில்லை. ஏற்கனவே திறக்கப்பட்ட மால்களில் கூட கடைகள் காலியாகவே இருப்பதால், அதை குடியிருப்பாகவும், அலுவலகத்தேவைக்காகவும் மாற்றியமைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இப்போதைய தேக்கநிலைக்கு நாட்டின் பொருளாதார மந்தநிலையும் ஒரு காரணம். தவிர்த்து சில்லறை விற்பனை முறைகளில் நாம் இன்னும் புதியதொழில்நுட்பங்களுக்கு மாறாத நிலையும் பிரதான காரணம். நம் மக்கள்தொகை மற்றும் இன்றைய நகரமயமாக்கல் வளர்ச்சியை கணக்கிடும்போது இந்தியாவில் இரண்டாயிரம் மால்கள் வரை இயங்க முடியும். சில்லறை விற்பனையில் அந்நிய முதலீடு குறித்த மத்திய அரசின் சமீபத்திய கொள்கை முடிவு, மந்தமாகிவிட்ட மால் கலாச்சாரத்தை சரிக்கட்டிவிடும் என்றொரு நம்பிக்கை உருவாகியிருக்கிறது.

இப்போதைக்கு கொஞ்சம் பணம் வைத்திருப்பவர்கள் வசதியாக ‘ஷாப்பிங்’ செய்ய மால்களை நாடுகிறார்கள். நடுத்தர வர்க்கம் ‘விண்டோ ஷாப்பிங்’குக்காக மால்களில் குவிகிறார்கள். ஏழைகள் அண்ணாந்து பார்த்துக்கொண்டே பெருமூச்சு விடுகிறார்கள். இந்த நிலை மாறினால்தான் மால்கள் வாழமுடியும். இதற்கு மால் நடத்துபவர்களும் தங்கள் அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும். அயல்நாடுகளில் மால்கள் எப்படி இயக்கப்படுகின்றனவோ, அதே முறையை அப்படியே இங்கும் காப்பி & பேஸ்ட் செய்யக்கூடாது. நம் மண்ணுக்கேற்ற முறையில் சில மாற்றங்களை சிந்திக்க வேண்டும். வேடிக்கை பார்க்கவரும் வாடிக்கையாளர்களை கவரும் வண்ணமான விற்பனைமுறைகளை விற்பனையாளர்கள் முயற்சிக்க வேண்டும். பார்க்கிங் கொள்ளை கட்டணத்தை நிறுத்த வேண்டும். இதெல்லாம் நடக்க இன்னும் பல ஆண்டுகள் ஆகலாம். அதுவரை நாமும் ‘விண்டோ ஷாப்பிங்’ செய்துக்கொண்டு இருக்க வேண்டியதுதான்.

ஆரம்பத்தில் கோயில்கள். பின்னர் சுற்றுலாத் தளங்கள், பீச், பார்க், கண்காட்சிகள், மியூசியங்கள், சினிமா, தீம்பார்க். இப்போது மால்கள். நாம் வேடிக்கை பார்க்கவும், பொழுதைப் போக்கவும் எப்போதும் ஏதாவது ஒன்று தயாராகதான் இருக்கிறது. ஆனால் இப்போது பொழுதுபோக்கு கொஞ்சம் கொஞ்சமாக காஸ்ட்லி ஆகிக் கொண்டிருக்கிறது. அதுதான் திருவள்ளுவர் தீர்க்கதரிசனத்துடன் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே சொல்லிவிட்டார். “பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை”

9 நவம்பர், 2013

தன்வி வியாஸ்

எப்படி மனசுக்குள் வந்தாரென்றே தெரியவில்லை. வசதியாக சப்பணம் போட்டு அமர்ந்துவிட்டார் தன்வி வியாஸ். குஜராத்தி பெண்களுக்கே உரிய உயரமும், உடற்கட்டும் அசலாக அமைந்திருக்கிறது. கிராஃபிக் டிசைனரான தன்வி, வதோதரா என்கிற சிறுநகரில் பிறந்து அடித்துப் பிடித்து எப்படியோ குறிப்பிடத்தக்க அழகிப்போட்டியான மிஸ் ஃபெமினாவில் முடிசூட்டிக் கொண்டார்.

தமன்னா கலர். ஆரம்பகால நமீதா உடல். சராசரி இந்தியப் பெண்களுக்கே உரிய மங்களகரமான முகம். சிரிக்கும்போது கன்னத்தில் கிளாமராக குழி விழுகிறது. உதடுகள் ஹாட்டின் வடிவம். சாராயத்தில் ஊறவைத்த கண்கள். பார்த்ததுமே டக்கீலாவை கல்ப் அடித்தது மாதிரி உடலெல்லாம் கிறுகிறுக்கிறது. கிட்டத்தட்ட 'கொமரம்புலி’ நிகேஷா பட்டேல் லுக். நமீதா, நிகேஷா, தன்வி என்று அடுத்தடுத்து குஜராத்தி அழகிகள் தென்னிந்தியாவில் தொடர்ச்சியாக கவர்ச்சி சுனாமி கிளப்பிக் கொண்டிருப்பதை பார்க்கும்போது, வரவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் இங்கே மோடி அலை அடிக்குமோவென்று அச்சப்பட வேண்டியிருக்கிறது.

ஆர்.எம்.கே.வி., ஹீரோ சைக்கிள்ஸ், பேண்டலூன்ஸ், ஜேபி சிமெண்ட்ஸ் என்று குறிப்பிடத்தக்க டிவி கமர்சியல்களில் பட்டையைக் கிளப்பியிருந்தாலும் சினிமா வாய்ப்பு மட்டும் ஏனோ அவருக்கு போக்கு காட்டிக் கொண்டேயிருக்கிறது.

’டைரக்டர் ஆஃப் காதலில் விழுந்தேன்’ பி.வி.பிரசாத்தின் எப்படி மனசுக்குள் வந்தாய்?’ என்கிற மரணமொக்கை படத்தில் அறிமுகமானதாலோ என்னவோ இந்த பேரழகியின் பெருமையை தமிழர்கள் இன்னமும் உணராமல் இருக்கிறார்கள். அழகை ஆராதிக்கும் டோலிவுட் இவரை வாரியணைத்துக் கொண்டிருக்கிறது. ’மிஸ்டர் சின்மயி’ ராகுல்ரவீந்தர் (மாஸ்கோவின் காவிரி, விண்மீன்கள்) நாயகனாக நடித்து வந்திருக்கும் ‘நேனு ஏம் சின்ன பிள்ளனா?’ படத்தில் நடிப்புக்கும், கவர்ச்சிக்கும் ஸ்கோப் இருக்கும் ரோலில் நடித்திருக்கிறார். இந்தப் படமும் ஃபேமிலி டிராமா மொக்கைதானென்றாலும் தன்வி தனியாக கவனிக்கப்படுமளவுக்கு செம பெர்ஃபார்மண்ஸ் கொடுத்திருக்கிறார். தாவணி, சேலை, சுடிதார், மாடர்ன் ட்ரெஸ் என்று எந்த அலங்காரத்திலும் எடுப்பாக இருக்கிறார்.

‘நேனு ஏம் சின்ன பிள்ளனா?’ என்கிற தெலுங்கு டைட்டில் வெளிப்படுத்தும் அறச்சீற்றக் கேள்விக்கு படத்தின் ஒரு காட்சியில் ‘பாடி’ லேங்குவேஜில் பதிலளித்திருக்கிறார் தன்வி. அந்த டைட்டிலுக்கு ‘நான் என்ன சின்னப் பொண்ணா?’ என்று அர்த்தம். தன்னை பெண் பார்க்க வரும் மாப்பிள்ளையை தனியாக அழைத்து சேலை, ஜாக்கெட்டை துறந்து டூ-பீஸில் தன்வி தோன்றும் அதிரடிக் காட்சியில் ரசிகர்கள் கோரஸாக ‘நூவ்வு சின்னப் பிள்ளா லேது’ (நீ சின்னப் பொண்ணு கிடையாது) என்று கத்துகிறார்கள்.

தென்னிந்தியாவில் ஒரு ‘ரவுண்டு’ கட்ட வாய்ப்பிருக்கிறது. தெலுங்கின் மஞ்சு சகோதர்கள், தமிழின் சிம்புகள் க்ரூப்பில் சிக்காமல் இருக்கும் பட்சத்தில்.

8 நவம்பர், 2013

எழுத்துரு விவாதம்

தமிழின் எழுத்துருவை ரோமன் வடிவில் எழுதலாம் என்று ஒரு நாளிதழில் யோசனை கூறியிருக்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன். முதலில் ‘எழுத்துரு’ என்று ஜெயமோகன் பயன்படுத்துவதே தவறு. எழுத்துரு என்பது font. இதை பலர் சுட்டிக் காட்டிய பிறகும் இன்னமும் எழுத்துருவையே பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறார்.

ஜெயமோகன் ஒரு புது யோசனையை சொல்லியிருக்கிறார். அதை ஏற்றுக் கொள்கிறோமா இல்லையாவென்று விவாதிப்போம் என்று அவரது அபிமானிகள் சொல்லி வருகிறார்கள். மிக ஜாக்கிரதையாக ‘டிஸ்கி’ போட்டு ‘ஜெயமோகனின் கருத்தை நான் அப்படியே ஏற்றுக்கொள்ளவில்லை, ஆனால்’ என்றுதான் ஆரம்பிக்கிறார்கள். அரங்கசாமி போன்ற விஷ்ணுபுர பக்தர்களை குறை சொல்ல எதுவுமில்லை. ‘வெள்ளை காக்கா பறக்கிறது’ என்று ஆசான் சொன்னால், ‘ஆமாம்’ போட்டுவிட்டு செல்கிறவர்கள்தான்.

ஜெயமோகனை போலவே நான் ஒரு யோசனை சொல்கிறேன். இதை விவாதிப்போமா நண்பர்களே?

புவி சூடேறுதல் காரணமாக வருடாவருடம் வெயில் ஏறிக்கொண்டே போகிறது. கடுமையான வெக்கையில் உடைகள் உடலுக்கு பெரும் துன்பமாக படுகிறது. எனவே தமிழ் சமூகம் உடையணிய வேண்டுமா என்று தோன்றுகிறது. அந்தமானில் கூட பழங்குடி சமூகத்தினர் உடை அணிவதில்லை.

‘உடைகள் வேண்டாம்’ என்று நான் கூறியிருப்பது புது யோசனை. பைத்தியக்காரத்தனமான யோசனைதான். கேட்டதுமே என்னை செருப்பால் அடிக்க வேண்டும் என்றுகூட நான்கு பேருக்கு தோன்றும். ஆனாலும் அந்தமானில் உடை அணிவதில்லை, ஆப்பிரிக்காவில் மேலாடை கிடையாது என்று உதாரணங்கள் காட்டி என்னுடைய கேணைத்தனமான யோசனைக்கு தர்க்கரீதியாக சில பக்கங்களுக்கு என்னால் பலம் சேர்க்க முடியும். ஜெயமோகன் செய்துக் கொண்டிருப்பது இதைதான். இந்த விவகாரத்தில் மட்டுமல்ல. அவர் எந்த சிந்தனையை முன்வைத்தாலும் இப்படி அரைகுறையாகதான் இருக்கும். ஏனெனில் ஜெயமோகன் தன்னை சிந்தனையாளர் என்று கருதிக்கொள்ளும் சராசரி. எழுதத் தெரிந்தாலே சிந்தனையாளர் ஆகிவிடலாம் என்கிற அபத்தமான ஆபத்தான முடிவுக்கு நிறையபேர் வந்துவிட்டதுக்கு இவரொரு முக்கிய காரணம். புண்ணாக்கு விற்பவரெல்லாம் தொழிலதிபர் என்று சொல்லிக்கொள்கிற காமெடிதான் நினைவுக்கு வருகிறது. சிந்தனையாளர் என்றால் இந்தியாவில் புத்தர், பெரியார், அம்பேத்கர் போன்றவர்கள்தான். ஜெயமோகன்கள் இந்த லெவலா என்று உங்கள் மனச்சாட்சியிடம் நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்.

தமிழுக்கு பெரும் பங்காற்றியவர் என்று ஜெயமோகன் அவரை அவரே சொல்லிக் கொள்கிறார். சமகால தமிழிலக்கியத்தில் அவர் தவிர்க்கமுடியாதவர் என்பதில் நமக்கு மாற்றுக்கருத்தே கிடையாது. ஜெயமோகனின் நாவல்களும், சிறுகதைகளும் சிறப்பானவை. வேறெவரையும் விட அதிகமாக உழைத்து அசுரவேகத்தில் நிறைய பக்கங்களை எழுதிக் குவிக்கிறார். இன்னும் ஒரு இருபது, இருபத்தைந்து ஆண்டுகளுக்கு சிறுபத்திரிகை வாசகர்கள் ஜெயமோகனை நினைவு வைத்திருப்பார்கள். ஆனால் இது மட்டும் தமிழுக்கு பெரும் பங்கு ஆற்றிவிட்டதற்கு போதுமானதல்ல. வெறும் எழுத்து மட்டுமே பங்களிப்பாகிவிடாது இல்லையா? எழுத்தை தாண்டி பாரதியார், உ.வே.சா போன்றவர்கள் பங்களித்தார்கள் என்றால் அது ஏற்றுக்கொள்ளத் தக்கது. எழுத்தின் மூலம் சில நிரந்தர வாசகர்களை ஜெயமோகன் பெற்றிருக்கிறார். சினிமாவில் எழுதி நிறைய பணம் சம்பாதிக்கிறார் என்பதைத் தாண்டி ஜெயமோகனால் தமிழ் என்ன வளம் பெற்றிருக்கிறது. தெருத்தெருவாக சைக்கிள் ஓட்டி குழந்தைகளுக்கு தமிழ் கணிமை சொல்லிக் கொடுக்கும் புதுவை பேராசிரியர் இளங்கோவன் போன்றவர்கள்கூட இவ்வளவு கர்வமாக தமிழுக்கு பங்காற்றியதாக சொல்லிக்கொள்வதில்லையே?

சில குறிப்பிடத்தக்க நாவல்களையும், சிறுகதைகளையும், அச்சுபிச்சுவென்று அரசியல் பேசும் கட்டுரைகளையும் எழுதியிருப்பதால் மட்டுமே தமிழுக்கென்றிருக்கும் வரிவடிவம் வேண்டாம் என்று சொல்லும் தகுதி ஜெயமோகனுக்கு வந்துவிடவில்லை. தமிழ் மொழியை சீர்த்திருத்தவும், அடுத்தடுத்த தளங்களுக்கு எப்படி கொண்டுச் செல்லலாம் என்கிற கவலையையும் கல்வியாளர்களும், ஆய்வாளர்களும் ஏற்கனவே பல்லாண்டுகளாக பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதற்காக யோசித்து வருகிறார்கள். பல்கலைக் கழகங்களில் ஆராய்ச்சிகளை சமர்ப்பித்தும் வருகிறார்கள். முகுந்த், நாகராஜன் மாதிரி தமிழ் படித்த அடுத்த தலைமுறை இளைஞர்கள், தங்கள் தொழில்நுட்ப அறிவைப் பயன்படுத்தி எதிர்கால எந்திரங்களில் எப்படியெல்லாம் தமிழை சாத்தியப்படுத்தலாம் என்றும் உழைத்தும் வருகிறார்கள். எனவே தமிழின் எதிர்காலத்தை பற்றி கவலைப்படுவதை விட்டு விட்டு, ஜெயமோகன் முழு ஈடுபாட்டோடு மலையாளப் படங்களுக்கு வசனம் எழுதும் வேலையை பார்க்கலாம்.

பெரியார் தொடங்கி வா.செ.குழந்தைசாமி வரை இதே யோசனையை சில வேறுபாடுகளுடன் முன்பே சொல்லி விவாதிக்கப்பட்ட கருத்து என்று வடிகட்டிய புளுகுமூட்டையை வேண்டுமென்றே அவிழ்த்துவிடுகிறார் ஜெயமோகன். பெரியார் எங்குமே தமிழுக்கு பங்காற்றப் போவதாக சொல்லி எழுத்துச் சீர்த்திருத்தத்தை அமல்படுத்தவில்லை. அவர் பத்திரிகை நடத்தி வந்தவர். அச்சுக் கோர்ப்பதில் ஏற்படும் வீணான செலவையும், நடைமுறை சிக்கல்களையும் உத்தேசித்தே ‘பெரியார் தமிழ்’ உருவானது. ரோமன் போதும். தமிழ் வரிவடிவம் வேண்டாமென்று பெரியாரா சொன்னார்? பேராசிரியர் வா.செ.குழந்தைசாமியின் யோசனை எழுத்து வடிவம் தொடர்பானது. கொம்பு, சுழி போன்றவற்றை நீக்கி எழுத்துகளை எளிமைப்படுத்தும் பட்சத்தில் கற்றல் எளிமையாக இருக்கும். கணினி தொடர்பான எந்திரங்களுக்கு தமிழை கொண்டுவருவதற்கு உதவியாகவும் இருக்குமென்பது பேராசிரியரின் யோசனை. அவர்களுக்கு இணையாக தன்னையும் தானே ஒப்பிட்டுப் பேசுவது அற்பத்தனமின்றி வேறில்லை. சீண்டுவதற்காக சொன்னேன் என்று சொல்லுபவரிடம் வேறென்ன எதிர்ப்பார்க்க முடியும்?

அடுத்து இந்த யோசனையை சொல்லியதற்காக தமிழகமே பற்றியெரிவது போன்ற மாயையை ஜெயமோகனும், அவரது சிஷ்யக்கோடிகளும் திட்டமிட்டு இணையத்தில் ஏற்படுத்தி வருகிறார்கள். தமிழ்நாட்டில் இதுவரை எங்குமே ஜெயமோகனின் கொடும்பாவி எரிக்கப்படவில்லை. பேரணி நடத்தி ‘ஜெயமோகன் ஒழிக’ என்று யாரும் கோஷமிடவில்லை. இதெல்லாம் நடக்கும் என்பதுதான் ஜெயமோகனின் எதிர்ப்பார்ப்பு. ‘அவர் அதுக்கெல்லாம் சரிப்படமாட்டார், அவ்வளவு ஒர்த்தும் இல்லை’ என்று வெறும் கண்டனத்தோடு தமிழர்கள் நிறுத்திக் கொண்டிருக்கிறார்கள். எனவேதான் இந்துமுன்னணி ஜெயமோகனை அச்சுபிச்சுவென்று வெறேதோ விவகாரத்துக்காக திட்டி வைத்த ஒரு பேனரை தன் வலைத்தளத்தில் போட்டு, என்னை எப்படியெல்லாம் திட்டுகிறார்கள் பாருங்கள் என்று ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கிறார் ஜெயமோகன்.

‘தி ஹிந்து’ தமிழ் நாளேட்டின் அலுவலகத்துக்கு கூட்டமாகப் போய் கலாட்டா செய்தார்கள், வன்முறை செய்தார்கள் என்றெல்லாம் காமெடி செய்துக் கொண்டிருக்கிறார்கள் இந்திய தத்துவ மரபின் பிள்ளைகள். பதினைந்து பேர் என்பதை கூட்டமென்று சொல்லுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியுமென்றே தெரியவில்லை. இவர்களது ‘சிகரெட் பிடிக்கக்கூடாது, மது அருந்தக்கூடாது’ சுவிசேஷக் கூட்டங்களுக்கு வரும் கூட்டத்தின் எண்ணிக்கையை பார்த்து பழகிவிட்டவர்களுக்கு பதினைந்து பேர் என்பதும் பெரும் கூட்டமாக தெரிகிறது. தமிழுக்காக அணி திரளவேண்டுமென்றால் லட்சங்களில்தான் தமிழர்கள் அணிதிரள்வார்கள் என்பது வரலாறு.

தங்களுக்கு மடத்தனமாக பட்ட ஒரு யோசனையை கண்டித்து சம்பந்தப்பட்ட கட்டுரையை வெளியிட்ட நாளேட்டின் ஆசிரியரிடம் கண்டனக் கடிதம் கொடுத்திருக்கிறார்கள் சுபவீ தலைமையிலான தமிழார்வலர்கள். இது ஜனநாயகப் பூர்வமான நடவடிக்கைதான். இது பத்திரிகைச் சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் என்று ஒரு கோஷ்டி ஊளையிடுகிறது. தி ஹிந்து நாளேட்டின் ஆசிரியருக்கு, அன்று கடிதம் கொடுக்க வந்த அனைவருமே பழக்கமானவர்கள்தான். அந்த பத்திரிகையே கூட பதினைந்து பேர் கொண்ட பெரும் கூட்டம் தங்களை அச்சுறுத்தியாக கூறவில்லை. கண்டனக் கடிதம் கொடுக்கவந்தவர்களை மதித்து ஆசிரியரே நேரில் பெற்றுக் கொண்டிருக்கிறார். இம்மாதிரி சர்ச்சைக்குரிய கட்டுரைகளோ, கருத்துகளோ வரும் சமயங்களில் சம்பந்தப்பட்ட ஆசிரியரிடம் போனிலோ, நேரிலோ எதிர்வினையை யாராவது செய்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். ‘நடிகையின் கதை’ தொடர் வந்தபோது, குமுதம் அலுவலகத்துக்கு சண்டை போடும் நோக்கில் வந்த நடிகர்-நடிகையரை அப்போதைய ஆசிரியர் மாலன் வரவேற்று, அவர்கள் தரப்பு நியாயத்தை கேட்டறிந்தார். சமீபத்தில் புதிய தலைமுறை அலுவலகத்துக்கு கூட முன்னூறு பேர் கொண்ட கும்பல் மொத்தமாக லாரியில் வந்திறங்கியது. அவர்களை அழைத்து தன்மையாக பேசி, அவர்கள் தரப்பை கேட்டறிந்து அனுப்பினார்கள். இது வழக்கமாக நடக்கக்கூடிய விஷயம்தான். ‘மாட்டுக்கறி’ மேட்டரில் நக்கீரன் அலுவலகம் தாக்கப்பட்டதைப் போன்ற சம்பவமாக பதினைந்து பேர் கூடி கடிதம் கொடுத்ததை ஜெயமோகனின் கும்பல் ஒப்பிட்டுப் பேசுவது விளம்பரவெறியே தவிர வேறல்ல.

திடீரென்று பெரியாரின் பகுத்தறிவு என்னானது என்று ஜெயமோகனுக்கு பெருங்கவலை ஏற்பட்டிருக்கிறது. அதை பெரியாரின் விசுவாசிகள் பட்டுக் கொள்வார்கள். ஏதாவது ‘தத்துபித்து’வென்று உளறிக்கொட்டி, அந்த அபத்தத்தை கண்டு ஊரெல்லாம் கைக்கொட்டி சிரிக்கும்போதெல்லாம் இப்படித்தான் சம்பந்தா சம்பந்தமில்லாமல் பேசி ‘நானும் ரவுடிதான்’ என்று ஜீப்பில் ஓடிப்போய் ஏறிக்கொள்வார் ஜெயமோகன்.

எதிர்வினை நாகரிகமாக இருக்கவேண்டுமென்று திரும்பத் திரும்ப ஜெயமோகனின் ரசிகர்கள் சொல்லிக் கொண்டிருப்பதைப் பார்த்தால், யாராவது அநாகரிகமாக திட்டுங்களேன் என்று கெஞ்சுவதைப் போல இருக்கிறது. ஒரு காட்டுமிராண்டிக்குழு நாகரிகம் பெற்று, அவர்களுக்குள் மொழி உருவாகி, அது சீர்பெற்று, எழுத்துவடிவம் தோன்றி, இலக்கணம் உருவாகி, கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டு, ஓலைச்சுவடிகளில் இயங்கி, தாள்களில் எழுதப்பட்டு, தட்டச்சில் தட்டப்பட்டு, கணினிகளில் உள்ளீடப்படுவது வரை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தமிழ் வாழ்வது என்பது ஒரு மகத்தான வரலாறு. அந்த வரலாற்றை கொச்சைப்படுத்துவதைப் போன்ற கருத்தை வேண்டுமென்றே சீண்டலுக்காக சொல்லுவது என்பது, எப்படியோ தன் பெயரை நல்லபடியாகவோ, கெட்டபடியாகவோ யாராவது சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும் என்கிற அற்ப எதிர்ப்பார்ப்பே தவிர வேறில்லை.

செத்த மொழியான சமஸ்கிருதத்தை இப்போது இந்திய ஞான மரபாளர்கள் ஆங்கில லிபியில் வாசித்து, மனப்பாடம் செய்கிறார்கள். அப்படியிருக்கையில் தமிழை மட்டும் தனி வரிவடிவத்திலேயே தமிழர்கள் இன்னும் வைத்திருக்கிறார்களே என்கிற பொச்செரிச்சல்தான் இந்த ‘எழுத்துரு’ யோசனைக்கு பின்னாலிருக்கும் நிஜமான சூட்சுமம் என்று நாம் கருத வேண்டியிருக்கிறது.

6 நவம்பர், 2013

எங்க சின்ன ராசா

போனவாரம் ஏதோ ஒரு சேனலில் நைட்ஷோவாக ‘எங்க சின்ன ராசா’ பார்த்துக் கொண்டிருந்தேன். ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் அதே கிளுகிளுப்பை உண்டாக்கும் தன்மை வேறெந்த படத்துக்காவது இருக்குமா என்பது சந்தேகம்தான். இவ்வளவு துல்லியமான விவரணைகள் கொண்ட காட்சிகளை அமைக்கும் இயக்குனர் இனிமேல் புதிதாக பிறந்துதான் வரவேண்டும் என்கிற எண்ணத்தை ஏற்படுத்துகிறார் பாக்கியராஜ்.

பாக்கியராஜின் சின்னம்மாவாக நடித்த சரஸ்வதியின் நடிப்பு ரோபோத்தனமாகவும், மேக்கப் மாறுவேடப்போட்டி தரத்திலும் இருந்ததைத் தவிர்த்து பெரிதாக குறைசொல்ல வேறெதுவுமில்லை. படம் வெளியாகி இருபத்தாறு ஆண்டுகள் கழித்தும் இன்னும் ‘கொண்டச் சேவல்’ காதுக்குள்ளே கூவிக்கொண்டே இருக்கிறது. ‘மாமா உனக்கொரு தூதுவிட்டேன்’ மாதிரி மெலடியெல்லாம் இனிமேல் சாத்தியமாகுமா தெரியவில்லை. எனக்கு ஃபேவரைட், க்ளைமேக்ஸ் ஜில்பான்ஸான ‘தென்பாண்டி சீமை ஓரமா’தான். மியூசிக் சேனல்களில் காணக்கிடைக்காத இந்த பாட்டுக்காகவே எப்போது படம் போட்டாலும் முழுசாக பார்த்துவிடுவது உண்டு. பாக்யராஜின் காஸ்ட்யூமும், டான்ஸும் பக்காவாக அமைந்த பாடல் இது.

ரொம்ப நாட்களாகவே இப்படத்தின் இசை இளையராஜா என்று நினைத்துக் கொண்டிருந்தேன். பாடல்கள் பிரமாதமாக இருந்தால் அது இளையராஜாவாகதான் இருக்கும் என்கிற பொதுப்புத்திக்கு நாம் மட்டும் விதிவிலக்கா என்ன. சங்கர் கணேஷ் என்று கொஞ்ச வருஷம் முன்புதான் தெரிந்தது. ‘கொண்டச்சேவலாக’ ஹிட்டடித்ததைவிட, இந்தி ‘பேட்டா’வில் ‘கோயல் சி தேரி போலி’யாகதான் அந்த ட்யூன் மரண ஹிட்.
முதன்முதலாக இந்தப் படத்தை பார்த்தபோது (அப்போ பத்து வயசு தான்), ராதாவின் இளமைக் கொந்தளிப்பை கண்டு வியந்து அசந்து விட்ட ஜொள்ளின் ஈரம் இன்னமும் காயவில்லை. இப்போது படத்தைப் பார்க்கும்போது அதே அளவிலான ஜொள்ளு வடிகிறது எனும்போது என் இளமை மீதான தன்னம்பிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. ‘தாலி குத்துது. கழட்டி வைடி’ என்று பாக்யராஜ் சொல்லும்போது புரியாமல், சின்ன வயசில் ‘ஏன், எதற்கு, எப்படி’ என்று ஏகப்பட்ட கேள்விகள் எழுந்தது. பின்னாளில் அனுபவப்பூர்வமாக அதே சூழலை எதிர்கொள்ள நேரிட்டபோதுதான், பாக்யராஜ் ஏன் எண்பதுகளில் தமிழ்ப்பெண்களின் ‘ஐடியல் ஹஸ்பண்ட்’ ஆக பார்க்கப்பட்டார் என்பது புரிகிறது.

வயக்காட்டில் வேலை பார்க்கும் பாக்யராஜ், வேலைக்கு இண்டர்வெல் விட்டு கிணத்துமேட்டு ஷெட் ரூமில் ‘மேட்னி ஷோ’ ஆடுவதை பார்க்கும்போது இப்போதும் வெட்கம் வருகிறது. க்ளைமேக்ஸில் வரும் வாய்ஸ் ஓவர் பார்த்திபனுடையது. படம் முழுக்கவே டயலாக்கில் பாக்யராஜ் பிச்சி உதறியிருந்தாலும், ராதா வாந்தியெடுத்ததுமே அவர் சொல்வதுதான் ஹைலைட்டான டயலாக். “யோவ் மண்ணாங்கட்டி. மாமனார் வீட்டுக்குப் போயி மாப்பிள்ளையோட இந்த வீரதீர செயலை சொல்லிட்டு வாய்யா”

யதேச்சையாக இன்று ‘எங்க சின்ன ராசா’வை கூகிளிப் பார்க்கும்போதுதான் தெரிகிறது, இது கன்னட ரீமேக்காம். 1969ல் புட்டண்ணா கனகல் இயக்கத்தில் ராஜ்குமாரும், சரோஜாதேவியும் நடித்திருக்கிறார்கள். சரோஜாதேவியை கிணத்துமேட்டு ரூமில் ராஜ்குமார் எப்படி புரட்டியெடுத்திருப்பார் என்பதை கற்பனை செய்துப் பார்த்தாலே பகீரென்று கலங்குகிறது அடிவயிறு. ராஜ்குமாருக்கு மூக்கு வேறு முழ நீளத்துக்கு தும்பிக்கை மாதிரியிருக்கும்.
1981ல் ஜீதேந்திரா – ஹேமமாலினி ஜோடியாக நடித்து ‘ஜோதி’யாக இந்தியிலும் வந்திருக்கிறது. நம்மாளு ‘எங்க சின்ன ராசா’வாக்கி எட்டுத் திக்கும் வெற்றிமுரசிட்ட பிறகு மீண்டும் இந்தியில் அனில்கபூர், மாதுரிதீக்‌ஷித் நடிப்பில் ‘பேட்டா’வானது (‘தக்கு தக்கு கர்னே லகா’ மார்பை தூக்கி தூக்கி மாதுரி பாடும் பாட்டு நினைவிருக்கிறதா? அப்போதெல்லாம் சூப்பர்ஹிட் முக்காப்புலாவில் எப்பவுமே டாப்பில் இருக்கும்). தெலுங்கில் வெங்கடேஷ்-மீனா நடித்து ’அப்பாய்காரு’, கன்னடத்தில் மீண்டும் ரவிச்சந்திரன்-மதுபாலா இணைந்து ‘அன்னய்யா’, கடைசியாக 2002ல் ’சந்தன்’ என்று ஒரியாவிலும் இதே ஸ்க்ரிப்ட் தேய தேய ஓடியிருக்கிறது. கிட்டத்தட்ட எல்லாமே வெற்றிதான். ஒரே ஸ்க்ரிப்ட் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக, எடுக்கப்பட்டபோதெல்லாம் ‘ஹிட்’டிக்கொண்டே இருந்திருக்கிறது என்பது இமாலய ஆச்சரியம். மறுபடியும் யாராவது இன்றைய வடிவில் ரீமேக்கினாலும் ஹிட்டு நிச்சயம்.

மிக சாதாரணமான ஒன்லைனரை கொண்ட இந்த ஸ்க்ரிப்ட் எப்படி தொடர்ச்சியாக வெற்றிகளை மட்டுமே குவித்துக்கொண்டிருக்கிறது என்று ஆழமாக யோசித்தால்,  மிகச்சுலபமாக அந்த வெற்றி ஃபார்முலாவை கண்டுபிடித்துவிடலாம். செண்டிமெண்ட் + க்ரைம் + செக்ஸ். இந்த சமாச்சாரங்கள் இல்லாமல் எடுக்கப்படும் படங்கள் வெற்றியடைந்தால், அதற்கு வேறு ஏதோ சிறப்புக் காரணங்கள் இருக்கக்கூடும். வெற்றியடைந்த படங்கள் எல்லாவற்றிலுமே இது இருந்திருக்கிறது என்பதை மல்லாக்கப் படுத்து யோசித்தால் உணர்ந்துக் கொள்ளலாம்.