30 டிசம்பர், 2017

தாம்பூலம் முதல் திருமணம் வரை

மகிழ்ச்சி.

ஒவ்வொரு திருமணத்தின் நோக்கமும் இதுதான்.

உங்களுக்கு திருமணமாகி இருந்தால் திருமண ஆல்பத்தை உடனே புரட்டிப் பாருங்கள். இல்லையேல் உங்கள் பெற்றோருடைய, சகோதர சகோதரிகளுடைய, நண்பர்களுடைய ஆல்பத்தை பாருங்கள். போட்டோக்களில் இடம்பெற்றிருக்கும் மணமக்கள் மட்டுமல்ல. சுற்றமும், நட்பும் கூட முகத்தில் மகிழ்ச்சியை மட்டுமேதான் சுமந்திருக்கும். எல்லோரும் மகிழ்ந்திருக்கும் ஒரே இடம் திருமணக்கூடம்.

பெண் பார்ப்பதில் தொடங்கி, சாந்தி முகூர்த்தம் வரை சம்பந்தப்பட்ட மணமக்கள் இருவருமே தங்கள் வாழ்வில் கடக்கும் ஒவ்வொரு நொடியையும் வாழ்க்கை முழுக்க மலரும் நினைவுகளாக மனதில் கல்வெட்டாக பதிந்து வைத்துக் கொள்கிறார்கள்.

கெட்டிமேளம் முழங்க மணமகன் தாலி கட்டும்போது, அட்சதை போடும் அத்தனை பேருமே, “இந்த மணமக்கள் நீடூழி வாழவேண்டும்” என்று மனமார வாழ்த்துகிறார்கள். பிள்ளையையும், பெண்ணையும் பெற்ற பெற்றோர் பெரிய மனப்பாரத்தை இறக்கி வைத்ததாக நிம்மதி கொள்கிறார்கள். ஒவ்வொரு பெண்ணுக்கும் திருமணம் என்பது செகண்ட் இன்னிங்ஸ். புதிய உறவுகள், புதிய குடும்பம், புதிய வீடு என்று எல்லாமே புதுச்சூழல். எனவேதான் திருமணத்தை ‘The big day’ என்கிறார்கள்.

இருமனம் இணைவது மட்டுமல்ல திருமணம். இச்சொல்லுக்கு ‘ஓர் ஆணுக்கும், ஒரு பெண்ணுக்கும் இடையிலான வாழ்க்கை ஒப்பந்தம்’ என்று ஒருவரியில் அர்த்தம் புரிந்துக் கொள்ளலாம். ஆனால், அது மட்டும்தானா திருமணம்? இந்த வார்த்தையை வெறும் சடங்காக மட்டும் சுருக்கி கூற இயலாது. ஒரு புதிய குடும்பத்தின் தொடக்கத்தை, தலைமுறைகளின் தொடர்ச்சியை சடங்கு என்று சுருக்கி சங்கடப்படுத்திவிட முடியுமா என்ன?

மேற்கத்திய நாடுகளில், இரு தனி நபர்களுக்கு இடையேயான குறைந்தபட்ச செயல்திட்டங்களோடு கூடிய ஒப்பந்தம் என்று திருமணத்தைக் கூறலாம். நம்முடைய மரபில் இரண்டு குடும்பங்களின் இணைப்பாக இது பாரம்பரியமாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இரு குடும்பம், அவரவருடைய தொடர்புடைய குடுங்பங்கள், நண்பர்கள் என்று இரு சமூகத்தின் உறவுப்பாலம் அல்லவா. திருமணம் என்பது நம் சமூகப் பாரம்பரியத்தில் ஆண்டாண்டு காலமாக அறுபடாத தொடர்சங்கிலி.

வரலாறாக திருமணத்தை வரையறுப்பது கொஞ்சம் கடினம். காடுகளில் வசித்து வந்த மனிதன், நாடுகளில் விவசாயம் செய்து, நிலங்களை உழுது நாகரிகமாக தொடங்கிய காலத்தில் தத்தம் உடைமைகளை பாதுகாக்கவும், முறையான சமூக அமைப்பின் அங்கமாக விளங்கவும் உருவாக்கிய ஏற்பாடே திருமணம்.

பண்டைய இந்தியாவில் எட்டு விதமான திருமண பந்தங்கள் இருந்ததாக வரலாறு சொல்கிறது. பிரம்ம விவாகம், தெய்வ விவாகம், அர்ஷ விவாகம், பிரஜபாத்யா விவாகம், காந்தர்வ விவாகம், அசுர விவாகம், ராட்சஸ விவாகம், பைசாஸ விவாகம். இதில் கடைசி நான்கு திருமணங்கள்தான் சாமானிய மக்களின் திருமணங்கள். முந்தைய நான்கும் வேற லெவல்.

காலப்போக்கில் மக்கள் ஏற்றுக்கொண்ட சமூக சீர்த்திருத்தங்களின் காரணமாக அந்த பழம்பெரும் முறைகள் பல்வேறு காரணங்களால் இன்று நடைமுறையில் இல்லை. இன்று நாட்டில் பெரும்பாலான திருமணங்கள் arranged marriages என்று சொல்லப்படும் வகையிலானவை. இத்திருமணங்களுக்கு சமூகம், வர்க்கம், குடும்பம் மூன்றும் முதன்மையான காரணிகள். யாருக்கு யார் ஜோடி என்பதை குடும்பப் பெரியவர்கள் நிச்சயிக்கிறார்கள். இப்போது தனக்கு பிடித்த பெண், பையன் என்று மணமக்களே தங்கள் துணையை விரும்பி, பெற்றோரிடம் சொல்லி திருமணம் செய்துக் கொள்ளுமளவுக்கு மாற்றம் உருவாகி வருகிறது. அடுத்தபடியாக நாகரிக வளர்ச்சியின் காரணமாக சாதி, மதம் பாராத காதல் திருமணங்களும் பெருமளவில் நடந்து வருகின்றன. காதலை பெற்றோர் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் வளர்ந்து வருவது குறிப்பிடத்தக்க மாற்றம். பிரெஞ்சுப் பொண்ணுக்கு மதுரைப் பையன் மாப்பிள்ளை என்கிற அளவில் சர்வதேச அளவில் ஜோடி தேட ஆரம்பித்திருக்கிறோம்.

கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் தொழிற்புரட்சி, மேற்கத்திய நாகரிக பரவல், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி என்று பல்வேறு சூழல்கள் இந்திய சமூகத்தை தாக்கப்படுத்தி இருந்தாலும், திருமணம் மட்டுமே அதன் அடிப்படை நோக்கம் மற்றும் வழிமுறைகளில் இருந்து பெரிய அளவில் தடம் புரளவில்லை. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு பால்யவிவாகங்கள் நடந்ததுண்டு. இந்து திருமணச் சட்டம் 1955ன் படி பெண்ணுக்கு 18 வயதும், ஆணுக்கு 21 வயதும் திருமண வயதாக கட்டாயம் ஆக்கப்பட்டிருக்கிறது. ஒரு சட்டம், மக்களிடையே பெரிய மனமாற்றத்தையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி இருக்கிறது என்றால், அது திருமண விஷயத்தில்தான்.

பொதுவாக நம்மூரில் நாள் நட்சத்திரம் பார்த்து திருமணத்துக்கு தேதி குறிக்கிறார்கள். திருமணத்துக்கு முன்பு இரு குடும்பமும், புதிய உறவின் அச்சாரமாக தாம்பூலம் மாற்றிக் கொள்கிறார்கள். திருமணம் அன்று மணமகனும், மணமகளும் சுற்றத்தையும், நட்பையும் சாட்சியாக வைத்து ஒரு கோயிலிலோ அல்லது கல்யாண மண்டபத்திலோ அமர்கிறார்கள். வேதமந்திரங்களை அந்தணர் ஓதுகிறார். பின்னணி இசையாக மங்கள வாத்தியம். திருமணத்துக்கு வந்தவர்களுக்கு விருந்தோம்பல். நிகழ்வின் உச்சமாக மூன்று முடிச்சுப் போட்டு மணமகளுக்கு மணமகன் தாலி கட்டுகிறார். மணமகளின் கையை மணமகன் பிடித்து இருவரும் அக்னியை சுற்றி தங்கள் திருமணத்தை உறுதி செய்கிறார்கள். பின்னர் இருவரும் ஒருவருக்கு ஒருவர் சகஜமாக வேண்டுமென்று சில விளையாட்டுகளை சுற்றம் மகிழ விளியாடுகிறார்கள். திருமணத்துக்கு வந்த விருந்தினர்கள், மணமக்களுக்கு பரிசளிக்கிறார்கள். பல நூறு ஆண்டுகளாக பொதுவான திருமண வழிமுறை இதுதான். சடங்குகள் மட்டும் சமூகத்துக்கு சமூகம், மதத்துக்கு மதம் சற்றே மாறுபடலாம்.

இந்தியாவில் இந்து மதம் தவிர்த்து இஸ்லாமியர், கிறிஸ்துவர், சிந்தி, பார்ஸி, சீக்கியர், பவுத்தம், ஜெயின் மற்றும் யூதர்கள் என்று பல்வேறு மதத்தினர், அவரவர் மத சம்பிரதாயப்படி திருமணங்களை செய்கிறார்கள். தாலிக்கு பதில் மோதிரம், மந்திரத்துக்கு பதில் புனிதநூல் ஓதுதல் மாதிரி வேறுபாடுகளை தவிர்த்துப் பார்த்தால், ‘திருமணம்’ என்பதன் நோக்கம் நம் நாட்டில் மட்டுமல்ல, உலகளாவிய அடிப்படையிலேயே ஒன்றுதான்.

தரகரிடம் தேடச்சொல்லி, தெரிந்தவர்கள் அறிந்தவர்கள் என்று நாலு இடத்தில் சொல்லிவைத்து பெண் தேடிய காலம் மட்டும் மாறியிருக்கிறது. இன்று இண்டர்நெட்டிலேயே பெண் தேடுகிறார்கள். வீடியோ சாட்டிங்கில் பெண் பார்க்கிறார்கள். மற்ற விஷயங்களை போனில் பேசிக்கொள்கிறார்கள். பஜ்ஜி, சொஜ்ஜி செலவு மிச்சம் என்றாலும், ஏகத்துக்கும் பட்ஜெட்டை எகிறவைக்கும் வேறு புதிய செலவினங்கள் உருவாகியிருக்கின்றன. பையனின், பெண்ணின் தகுதியாக படிப்பு, பாட்டு பாடுவது, நாட்டியம் ஆடுவது எல்லாம் காலாவதியாகி விட்டது. மருத்துவத்தகுதி சான்றிதழ் வாங்கி பொருத்தம் பார்க்குமளவுக்கு விழிப்புணர்வு பெறத் தொடங்கியிருக்கிறோம்.

அதெல்லாம் தனி.

ஆனால்-

கஷ்டப்பட்டு உழைத்து வாழ்நாளெல்லாம் சேமிக்கும் அத்தனை பணத்தையும் தன் மகளின் கல்யாணத்துக்குதான் என்று சொல்லும் தகப்பன்மார்கள் எத்தனை பேரை பார்த்திருக்கிறோம். நல்லபடியாக தன்னுடைய மகள் புகுந்தவீட்டில் செட்டில் ஆகவேண்டுமே என்கிற தாயின் அடிவயிற்று நெருப்பு பரிதவிப்பு நமக்கும் தெரியும்தானே? கல்யாண வீடுகளில் பாருங்கள். வியர்வை வழிய அங்கும் இங்குமாக டென்ஷனாக அல்லாடிக் கொண்டிருப்பவன் பெண்ணின் சகோதரனாகதான் இருப்பான்.

பஜ்ஜி, சொஜ்ஜி சாப்பிட்டு பெண் பார்ப்பது. பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டுக்கு வந்து கையை நனைத்து உறவை உறுதி செய்வது. பரிசம் போட்டு நிச்சயத்தாம்பூலம். கல்யாணத்துக்கு மண்டபம் பார்ப்பது. பெண்ணுக்கு முகூர்த்தப்புடவை எடுப்பது. விருந்துக்கு சுவையாக சமைக்கக்கூடிய சமையல்காரரை தேடுவது. திருமணம் செய்விக்கும் புரோகிதரை புக் செய்வது. ரிசப்ஷனுக்கு நல்ல லைட் மியூசிக் ட்ரூப்பை கண்டு பிடிப்பது. திருமண அழைப்பிதழுக்கு நல்ல டிசைன் செலக்ட் செய்வது. மேடைக்கு பூ அலங்காரம். விருந்தினர்கள் மனம் கோணாமல் உபசரிப்பு. இன்னும் எராளமான விஷயங்கள். இவை எல்லாவற்றுக்கும் லட்சக்கணக்கில் பணம்... யோசித்துக் கொண்டே போனால் ‘கல்யாணம் பண்ணிப் பார்’ என்று சும்மாவா சொன்னார்கள் நம் பெரியவர்கள்?

நம் நண்பர் ஒருவர் டீனேஜில் இருந்தபோது அவருடைய ஒண்ணுவிட்ட அண்ணனுக்கு திருமணம் நடந்தது. அந்தத் திருமணத்தில் ரெட்டை ஜடை, பாவாடைச் சட்டையோடு ஒரு பத்து வயது பெண் சுற்றிக் கொண்டிருந்தாள். மணமகளின் ஒண்ணுவிட்ட தங்கச்சியாம். பத்து ஆண்டுகளுக்கு பிறகு லைஃபில் செட்டில் ஆகிவிட்ட நம் நண்பருக்கு பெண் பார்த்தார்கள். அந்த ரெட்டை ஜடை, பாவாடைச் சட்டையே புடவை கட்டி வந்து அமர்கிறார். இருவரும் இப்போது தம்பதி சமேதரராக அந்த ஒண்ணுவிட்ட அண்ணனுக்கும், ஒண்ணுவிட்ட அக்காவுக்கும் நடந்த கல்யாண வீடியோவை அவ்வப்போது போட்டுப் பார்த்து சந்தோஷமாக ஒருவருக்கு ஒருவர் கிண்டல் அடித்துக் கொள்கிறார்கள். திருமணம், இதுபோன்ற மலரும் நினைவுகளோடு சம்பந்தப்பட்டது.

“நம்ம வாசுதேவன் கல்யாணத்துலே போட்டாங்க பாருடா சாப்பாடு. அதுதான் சாப்பாடு” என்பது மாதிரி டயலாக்குகளை அடிக்கடி கேட்கலாம். வாசுதேவனுக்கு கல்யாணம் ஆகி இருபத்தைந்து ஆண்டுகள் கழித்தும்கூட.

“நம்ம வரலட்சுமி புள்ளை கல்யாணத்துலே குறுக்கும், நெடுக்குமா நெட்டையா சிகப்பா ஒட்டறைக்குச்சி மாதிரி நடந்துக்கிட்டிருந்தாளே ஒரு பொண்ணு. நம்ம விஜயாவோட சின்ன மாமனார் பெண்ணாம். நம்ம சரவணனுக்கு கேட்டுப் பார்க்கலாமா? இவனும் ஒல்லியா, அமிதாப் பச்சன் உயரத்துலேதானே இருக்கான்?” ஒரு கல்யாணத்தால் இன்னொரு கல்யாணம் நிச்சயிக்கப்படுகிறது.

இம்மாதிரி sidelight விஷயங்கள் ஏராளம்.

இவை அத்தனையையும்தான் ‘தாம்பூலம் முதல் திருமணம் வரை’ நூல்.

அலுவல் தொடர்பான சந்திப்பு ஒன்றில்தான் திடீரென திருமணம் பற்றி பேச்சு வந்தது.

எங்கள் நிர்வாக இயக்குநர் ஆர்.எம்.ஆர் அவர்கள், அவர் பார்த்த பல்வேறு சமூகத் திருமணங்களை பற்றி சுவாரஸ்யமாக சொல்லிக் கொண்டிருந்தார். சடங்குகள், சம்பிரதாயம் பற்றியெல்லாம் பேசிக்கொண்டிருந்தபோது, திடீரென அவரேதான் சொன்னார்.

“இதை ஒரு தொடராவே செய்யலாம். ஏன்னா, இப்போ பல சடங்குகள் அர்த்தம் இழந்துப் போச்சி. அர்த்தமுள்ள சடங்குகளுக்கு அர்த்தம் என்னன்னு இப்போதைய தலைமுறைக்கு தெரியலை”

அந்த காலக்கட்டத்தில் திருமணம் குறித்த பல்வேறு தரப்பிலான கருத்துகள் சமூகவலைத் தளங்களில் அலசப்பட்டுக் கொண்டிருந்தது. திருமணம் என்கிற முறையே தவறு என்பது மாதிரியான விவாதங்களும் நடந்துக் கொண்டிருந்தன. அந்த விவாதத்தில் நாம் கலந்துக் கொள்ள வேண்டாம்.

ஆனால்-

‘திருமணம்’ என்கிற நிகழ்வுக்கும், அதன் தொடர்பிலான சடங்குகளுக்கும் நம்முடைய மரபில் அர்த்தத்தை தேடுவோம் என்று முடிவெடுத்தோம்.

அப்படிதான் ‘தாம்பூலம் முதல் திருமணம் வரை’ தொடரை ‘தினகரன் வசந்தம்’ இணைப்பிதழுக்கு எழுதத் தொடங்கினேன். தொடரை ஆரம்பிப்பதற்கு முன்பு ஏகத்துக்கும் உதறல் இருந்தது. ஏதேனும் தவறுதலாக எழுதிவிட்டால் அந்தந்த சமூகத்து மக்களிடம் சமாதானம் சொல்ல வேண்டுமே என்கிற தயக்கமும் இருந்தது.

எனினும், அறிவிப்பு வெளியிட்ட பிறகு தமிழ் சமூகத்துப் பெரியவர்களே என்னை வழிநடத்தத் தொடங்கினார்கள். தேவைப்பட்ட குறிப்புகளையும், நூல்களையும் அவர்களே அனுப்பி வைத்தார்கள். எப்போதும் சந்தேகம் கேட்டாலும், தெளிவான விளக்கங்களை தர அவர்கள் யாரும் தயங்கியதே இல்லை. ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக பெயர் குறிப்பிட்டு நன்றி சொல்ல ஆசைதான். எனினும், இந்த பெயர்ப்பட்டியலே தனிநூலாக போய்விடக்கூடிய அளவுக்கு நீளமான பட்டியல் என்பதால் தவிர்க்கிறேன். நூலில் குற்றம் குறை ஏதேனும் இருந்தால் அது எனது. சொல்லப்பட்டிருக்கும் நிறைவான விஷயங்கள் அத்தனைக்கும் நம் சமூகப் பெரியோரே காரணம்.

இப்போது நூலாக வெளியாகியிருக்கும் அந்த தொடரில் சில சமூகங்கள் தவிர்க்கப்பட்டிருக்கலாம். ஏனெனில், அதே சடங்குகள் வேறொரு சமூகத் திருமணங்களில் கடைப்பிடிக்கப்படக் கூடியதாக இருக்கும். சமூகத்தின் பெயரை மற்றும் மாற்றி ஏற்கனவே சொன்னதையே திரும்பச் சொல்லுவதை தவிர்க்கவே அந்த விடுபடலே தவிர வேறெந்த நோக்கமுமில்லை. அதுபோலவே, தனித்துவமான சடங்குகள் இல்லாமலேயே மிகவும் எளிமையான முறையில் திருமண பந்தத்தை உறுதி செய்யக்கூடிய சமூகங்களும் உண்டு. ஒட்டுமொத்தமாக இந்த நூலை வாசிக்கையில், திருமணம் என்கிற ஆயிரங்காலத்து பயிர் எப்படி வளர்க்கப்படுகிறது, அதற்கு உரமாக எதுவெல்லாம் அமைகிறது என்கிற பறவைப்பார்வை உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும்.

என்னுடைய ஆரம்பக்கட்ட உதறலை போக்கியவர் ‘குங்குமம்’ வார இதழின் ஆசிரியர் கே.என்.சிவராமன். தொடரை ஆரம்பிக்கும்போது அவர்தான் ‘தினகரன் வசந்தம்’ இணைப்பிதழின் ஆசிரியராக இருந்தார். ‘ஏதேனும் சந்தேகம் இருந்தாலோ, சர்ச்சை வரும் என்று தெரிந்தாலோ, அதை எழுதவே எழுதாதே’ என்று அறிவுறுத்தியிருந்தார். நல்லபடியாக எவ்வித சர்ச்சைக்கும் இடமின்றி இந்தத் தொடரை நிறைவு செய்ததற்கு அந்த அறிவுரையே காரணம்.

என்னுடைய பத்திரிகையுலக வாழ்வில் ‘தாம்பூலம் முதல் திருமணம் வரை’யை மறக்கவே முடியாது. இத்தொடர் தொடங்கும்போது ‘வசந்தம்’ இதழின் மூத்த துணையாசிரியராக இருந்தேன். தொடரின் இறுதி அத்தியாயத்தை எழுதும்போது அவ்விதழுக்கு ஆசிரியர் பொறுப்புக்கு பதவி உயர்த்தப்பட்டிருந்தேன். அவ்வகையில் இந்த ‘திருமணம்’, என் வாழ்வின் சகல சவுபாக்கியங்களையும் உறுதிச் செய்திருக்கிறது.

நூல் : தாம்பூலம் முதல் திருமணம் வரை
எழுதியவர் : யுவகிருஷ்ணா
விலை : ரூ.190
பக்கங்கள் : 255
வெளியீடு : சூரியன் பதிப்பகம்,
229, கச்சேரி ரோடு, மயிலாப்பூர், சென்னை-600004.
தொ.பே 044-2209191 Extn 2115. கைபேசி : 7299027361