அனுபவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அனுபவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

5 ஆகஸ்ட், 2017

சிவாஜி சிலை

ஜூலை 21, 2006.

அந்நாள் வரை ‘பிக்பாக்கெட்’ என்பது புனைவு என்று கருதிக் கொண்டிருந்தேன்.

சிறுவயதிலிருந்தே வெறித்தனமான எம்.ஜி.ஆர் ரசிகன் என்பதால் சிவாஜியை கொஞ்சம்கூட பிடிக்காது. சிவாஜி படங்கள் பார்ப்பதை புறக்கணிப்பது மட்டுமில்லாமல், சிவாஜிக்கு ரசிகர் என்று யாராவது தெரிந்தால் அவர்களையும் புறக்கணிக்குமளவுக்கு வெறித்தனம்.

அந்த பைத்தியம் தெளிந்தது ஜூலை 2001ல்.

அப்போது தி.நகரில் பாகிரதி அம்மாள் தெருவில் இருந்த ஒரு விளம்பர நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். தினமும் போக் ரோடு வழியாக சிவாஜி வீட்டை கடந்துதான் என்னுடைய டிவிஎஸ் சேம்ப் பயணிக்கும்.

ஆற்காடு சாலையை கடக்கும்போது ஆட்டோமேடிக்காக கன்னத்தில் போட்டுக் கொள்வேன். அந்த சாலையில்தான் எம்.ஜி.ஆர் வாழ்ந்தார். அவருடைய நினைவில்லம் அமைந்திருக்கிறது. இப்போதும் எங்கேயாவது எம்.ஜி.ஆர் படத்தையோ, சிலையையோ காணும்போது ஆட்டோமேடிக்காக கைகள் கன்னத்தில் போட்டுக் கொள்கின்றன. அதே நேரம் சிவாஜி வீட்டை ஒரு வெறுப்போடுதான் கடப்பேன். அங்கே கூடியிருக்கும் ரசிகர்கள் மெண்டல்கள் மாதிரிதான் எனக்கு தோன்றுவார்கள்.

சிவாஜி மறைந்த அன்று அந்த சாலையை கடக்கும்போதுதான் அனிச்சையாக கண்கள் கலங்கின. அன்று முழுக்க சிவாஜி பாடல்களை கேட்டு, அவர் குறித்த செய்தித் தொகுப்புகளை தொலைக்காட்சிகளில் பார்த்துக் கொண்டிருந்தபோதுதான் நம்மோடு வாழ்ந்துக் கொண்டிருந்த ஒரு மகத்தான மேதையை இதுநாள் வரை அவமதித்துக் கொண்டிருந்திருக்கிறோமே என்று தோன்றியது. அதன் பிறகே தொடர்ச்சியாக சிவாஜி நடித்த படங்களை பார்த்து அவருடைய தன்னிகரற்ற மேதமையை உணர்ந்தேன்.

ஸ்டாப்.

சிவாஜி மறைந்ததில் தொடங்கி அவருக்கு மணிமண்டபம், சிலை என்று கோரிக்கைகள் அரசுக்கு தமிழர்களால் முன்வைக்கப்பட்டுக் கொண்டிருந்தது. ஏதேதோ காரணங்களால் சிவாஜி மீது அசூயை கொண்டிருந்த ஜெயலலிதா, அவற்றை கண்டுகொள்ளவே இல்லை.

தான் ஆட்சிக்கு வரும்போது சிவாஜிக்கு சிலை வைக்கப்படுமென்று கலைஞர் உறுதியளித்தார்.

சொன்னதை செய்பவர் ஆயிற்றே. 2006ல் ஆட்சிக்கு வந்ததுமே ஆளுநர் உரையில் சிவாஜி சிலையை அறிவித்தார். கடற்கரை சாலை ஐஜி அலுவலகத்துக்கு எதிரே சிவாஜிக்கு சிலை வைக்க இடம் ஒதுக்கினார். பாண்டிச்சேரியில் அமைக்கப்பட்ட சிலை போலவே  கம்பீரமான வெண்கலசிலையும் சிற்பி நாகப்பாவால் செய்யப்பட்டது.

ஜூலை 21 அன்றுதான் சிவாஜி சிலை திறப்புவிழா. திடீரென்று யாரோ அல்லக்கைகள், அதிமுக தூண்டுதலால் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து சிலை திறப்புவிழாவுக்கு தடைவாங்க முயற்சித்துக் கொண்டிருந்தார்கள். ‘தடையை உடைப்போம்’ என்று கர்ஜித்தார் கலைஞர். உயர்நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர்கள் போராடி, ஒருவழியாக மாலை மூன்று மணியளவில் அத்தனை பிரச்சினைகளையும் கட்டுக்கு கொண்டுவந்தார்கள்.

தமிழ் திரையுலகமே திரண்டு வந்து கலந்துகொள்ள போகிறது. திடீர் சிவாஜி ரசிகனாகிவிட்ட நான் அன்று காலையிலிருந்தே ஒருமாதிரி நெகிழ்வான நிலையில் இருந்தேன். விழாவுக்கு போயே ஆகவேண்டும். முதல் நாளே சிவாஜி சிலையை தரிசித்தே ஆகவேண்டும் என்று மனசு அடித்துக் கொண்டது. மனசுக்குள் நிரந்தரமாக சம்மணம் போட்டு அமர்ந்திருந்த எம்.ஜி.ஆர் ரசிகன் மட்டும் கிண்டலடித்துக் கொண்டே இருந்தான்.

மாலை நெருங்க நெருங்க மனசு தாங்கவில்லை. இப்போது மயிலாப்பூரில்தான் அலுவலகம். அங்கிருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் விழா. ஹீரோஹோண்டாவை முறுக்கி கடற்கரைக்கு விட்டேன்.

மணல்பரப்புக்கு அந்தப் பக்கம் கடலலை. சாலையில் மனித அலை. நான் இருந்த இடத்தில் இருந்து மேடை சுமார் அரை கி.மீ. தூரத்தில் இருந்தது. அதற்கு மேல் ஒரு இன்ச் கூட முன்னேற முடியாத அளவுக்கு நெரிசல்.

ரஜினிகாந்த் பேசிக்கொண்டிருக்கிறார்.

“ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இதே கடற்கரை சாலையில் இரண்டு இளைஞர்கள் நடந்துச் சென்றுக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு இளைஞன் சொல்கிறான். ‘நண்பா, இதே சாலையில் எனக்கு சிலை வைக்குமளவுக்கு முன்னேற வேண்டும்’

அடுத்த இளைஞன் சொல்கிறான். ‘உனக்கு சிலை அமைக்கக்கூடிய அதிகாரத்தை நான் எட்ட வேண்டும்’

சிலையாக விரும்பியவர் சிவாஜி. சிலை அமைத்தவர் கலைஞர்”

திரண்டிருந்தவர்களின் கரவொலி கடலொலியை மிஞ்சியது. எனக்கு பின்னே ஒருவன் கூட்டத்தில் இடித்துக் கொண்டே இருந்தான். திரும்பி முறைக்க, “சாரி பாஸ்” என்றான். அவனை விட்டு விலகி இன்னும் சற்று முன்னேறினேன்.

ஏதோ குறைவது போல தோன்ற சட்டென்று பேண்ட் பின்பாக்கெட்டை தொட்டுப் பார்த்தபோதுதான் ‘பர்ஸை காணோம்’ என்று தெரிந்தது. இடித்துக் கொண்டிருந்தவன் உருவிவிட்டிருக்கிறான். இருபத்தைந்தாயிரம் பேர் கூடியிருந்த அந்த கூட்டத்தில் அவனை எங்கே தேடுவது, அவனது முகம்கூட நினைவில் இல்லை. பர்ஸில் நாலு கிரெடிட் கார்ட், ரெண்டு டெபிட் கார்ட், கொஞ்சம் பணம் இருந்தது.

இதற்கிடையே விழா முடிந்து விஐபிகள் கிளம்பத் தொடங்கினர். கூட்டம் அப்படியே வரிசை கட்டி சிலையை தரிசித்துவிட்டு கலையத் தொடங்கியது. இரவு 9.30 மணியளவில்தான் என்னால் நடிகர் திலகத்தை அருகே தரிசிக்க முடிந்தது. சிலர் கையிலேயே கற்பூரம் ஏற்றி ஆரத்தி காட்டிக் கொண்டிருந்தார்கள். கோயில் கொடிமரத்தின் முன்பாக நெடுஞ்சாண்கிடையாக விழுவது மாதிரி நிறைய பேர் விழுந்து வணங்கிக் கொண்டிருந்தார்கள். நானும் ஒரு நெடுஞ்சாண்கிடையை போட்டுவிட்டு,  ஹீரோ ஹோண்டோ எங்கிருக்கிறது என்று தேடத் தொடங்கினேன். நல்லவேளை வண்டியை எவனும் லவட்டவில்லை.

4 ஜூலை, 2017

MCR / MCP chappals

சில மாதங்களுக்கு முன்பாக மிகக்கடுமையான முதுகுவலியில் அவதிப்பட்டுக் கொண்டிருந்தேன். குறிப்பாக இருசக்கர வாகனம் ஓட்டும்போது நடுமுதுகில் நெருப்பை எடுத்துக் கொட்டியது மாதிரி எரியும். இரவில் வீட்டுக்குச் சென்ற பிறகும் இந்த எரிச்சல் குறையாது. தூக்கம் வராது.

தெரிந்த சில மருத்துவர்களிடம் கேட்டபோது அலுவலக இருக்கையை மாற்றிப்பார் என்றார்கள். முயற்சித்தேன். சில நாட்களுக்கு சரியான மாதிரி இருந்தது. மீண்டும் எரிச்சல் தொடங்கும்.

அப்போதுதான் MCR chappals பற்றி சில நண்பர்கள் குறிப்பிட்டிருந்தார்கள். மயிலாப்பூரில் National Leather Works என்கிற நூற்றாண்டு காணப்போகும் செருப்புக்கடை ஒன்று இருக்கிறது. புரட்சித்தலைவி அம்மாவுக்கே இவர்கள்தான் செருப்பு செய்துக் கொடுத்தவர்கள் (சொத்துக் குவிப்பு வழக்கில் இவர்களுடைய சாட்சியமும் உண்டு). சிவராமன் அண்ணன் அந்தக் கடைக்கு அழைத்துச் சென்று ஒரு ஜோடி செருப்பு வாங்கிக் கொடுத்தார்.

கிட்டத்தட்ட ஆறு மாதங்களாக அந்த செருப்பைதான் வாரத்துக்கு மூன்று அல்லது நான்கு நாட்கள் பயன்படுத்துகிறேன். முதுகு எரிச்சல் கொஞ்சமும் இல்லை.

ஒரிரு தலைமுறைக்கு முன்பு செருப்பு என்பது ஆடம்பரமாக இருந்திருக்கிறது. மனிதர்கள் பெரும்பாலும் செருப்பை பயன்படுத்தாமலேயே நடந்திருக்கிறார்கள். கடந்த நாற்பது ஆண்டுகளாக செருப்பு என்பது உடையை போலவே அத்தியாவசியமான அணிகலனாக ஆகிவிட்டது. செருப்பு அணிந்து நடக்கும்போது நம்முடைய இயல்பான நடை மாறுவதால், நரம்புகளில் ஏதோ பிரச்சினை ஏற்பட்டு இடுப்பு, முதுகுவலிகள் ஏற்பட காரணமாகின்றன. மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகள் தற்காலிக நிவாரணம் தருகின்றனவே தவிர, பிரச்சினையை முற்றிலுமாக தீர்ப்பதில்லை. எனவே ஆர்த்தோ மருத்துவர்களே MCR/MCP செருப்புகளை சமீபகாலமாக தங்கள் பேஷண்டுகளுக்கு பரிந்துரைத்து வருகிறார்கள்.

Multicellular rubber (MCR), Multicellular polyurethane (MCP) செருப்புகள் சிறப்பு ரப்பர் மூலப்பொருட்களால் உருவாக்கப்படுபவை. இவற்றை அணிந்து நடக்கும்போது நம்முடைய இயல்பான நடையில் எந்த மாற்றமும் இருப்பதில்லை. நரம்பியல்ரீதியான பிரச்சினையும் ஏற்படுவதில்லை. என் அம்மாகூட மூட்டுவலி பிரச்சினை கொண்டவர். அவரும் MCP செருப்புகளைதான் பயன்படுத்துகிறார்.

விலை கொஞ்சம் கூடுதல்தான். நான் பயன்படுத்தும் அடிப்படை மாடல் செருப்பே 500 ரூபாயில்தான் தொடங்குகிறது. ஏற்கனவே தயார் செய்திருக்கும் செருப்பை நேஷனல் லெதர் நிறுவனத்தார் விற்பதில்லை. நம் கால் அளவுக்கு ஏற்ப, புதுசாக தயார் செய்து கொடுக்கிறார்கள். MCR / MCP முறையில் ஷூ வேண்டுமென்றால், அதையும் செய்துக் கொடுக்கிறார்கள் (விலை ரூ.1500 வரலாம்)

குழப்பத்துக்கு பிறந்தவனுங்க!

நான் சைக்கிள் கத்துக்க ஆரம்பிச்சப்போ கடையிலே பத்தாம் நம்பர் சைக்கிள் இல்லைன்னா, ஆணியே புடுங்க வேணாம்னு போயிடுவேன். கடைக்காரர், ‘டேய், ஏழாம் நம்பர் எடுத்துட்டு போடா’ன்னு சொல்லுவாரு. பசங்க யாருமே ஏழாம் நம்பரை தொடமாட்டோம். பார் இல்லாத சைக்கிளை ஓட்டிக்கிட்டு போனா, ஆண்மைக்கு இழுக்குன்னு அப்படியொரு மூடநம்பிக்கை அப்போ.

இப்போ ஒரு இருபத்தஞ்சி வருஷம் கழிச்சிப் பார்த்தா எந்த சைக்கிளிலும் பாரே இல்லை. கேட்டா unisex சைக்கிள்னு சொல்றானுங்க. சைக்கிள் ரேட்டும் பன்னெண்டாயிரம், பதினஞ்சாயிரமாம். வாடகை சைக்கிள் கடையே எங்கேயும் இருக்குறதா தெரியலை. சைக்கிள் ஓட்ட கத்துக்கணும்னா சொந்தமாதான் சைக்கிள் வாங்கணும். அதுவுமில்லாமே இப்போ யாரு சைக்கிள் கத்துக்கறாங்க, டைரக்டா பைக்குதான். முன்னாடி டைப்ரைட்டிங் இன்ஸ்ட்யூட்டுக்கு போய் ஜூனியர், சீனியர், ஹைஸ்பீடுன்னு எக்ஸாமெல்லாம் எழுதி கவர்மெண்ட் சர்ட்டிஃபிகேட் வாங்குவோம். இப்போ டைரக்டா எல்லாரும் கம்ப்யூட்டரில் டைப் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க.

93-94 வாக்கில் காட் ஒப்பந்த எழவுலே கையெழுத்து போட்டாலும் போட்டானுங்க. நாட்டுலே என்ன எழவு நடக்குதுன்னே தெரியலை. unisexஆதான் எல்லா பிராக்டக்ட்டை கன்ஸ்யூமரிசேஸன் செய்ய வேண்டியிருக்குன்னு சொல்லுறாங்க. “மேல்நாட்டுலே இன்னும் barbie பொம்மை சேல்ஸ் அப்படியேதானேடா இருக்கு? இங்கே மட்டும் ஏன் மரப்பாச்சி பொம்மையை காணோம்?”னு கேட்டா எம்.பி.ஏ. படிச்சவனுங்களுக்கே ஆன்ஸர் தெரியலை.

திடீர்னு பார்த்தா லேடீஸெல்லாம் ஜெண்ட்ஸ் மாதிரி கிராப் வெட்டிக்கிறதை இங்கே சமூகக் கடமையாக பெண்ணியப் போராட்ட வடிவத்துலே நடத்துறாங்க. இன்னும் ஹாலிவுட் ஹீரோயின்களே கூட நீளமா லூஸ் ஹேர் விட்டுக்கிறதை அப்பப்போ சினிமாவிலே எல்லாம் பார்க்குறோம். நம்மூருலே என்னதான் நடக்குதுன்னு புரியலை. தமிழனின் பாரம்பரியத்தை காப்பாத்தணும்னு ஜல்லிக்கட்டுலே கோஷம் போட்டுக்கிட்டிருந்த பொண்ணு, இப்போ பிக்பாஸ் புரோகிராம்லே இளம் நடிகன் ஒருத்தனுக்கு ரூட்டு விட்டிக்கிட்டிருக்கு.

நம்மாலே முழுமையா மேற்கத்திய நாகரிகத்துக்கும் adopt ஆகமுடியலை. இங்கே establish ஆன பண்பாட்டையும் கத்தரிச்சிக்கிட்டு போக முடியலை. பீட்ஸா வடிவத்துலே களி கிண்டிக்கிட்டிருக்கோம்.

முன்னெப்போதையும்விட கடுமையான குழப்பத்தில் வாழ்ந்துக்கிட்டிருக்கிறது நம்ம தலைமுறைதான்னு நெனைக்கிறேன். அரசாங்கம் நிறைய மனநோய் விடுதிகளை திறக்கணும். அதுக்கான தேவை அதிகரிச்சிக்கிட்டே போகுது :(

25 ஜனவரி, 2017

சைலேந்திரபாபு

செம்மொழி மாநாட்டுக்கு கோயமுத்தூர் போயிருந்தபோது, அங்கே கமிஷனராக இருந்த சைலேந்திரபாபுவுக்கு சினிமா ஹீரோவுக்கான இமேஜ் இருந்ததை நேரில் கண்டேன். ஜீப்பில் அவர் வரும் வழியில் எல்லாம் மக்கள் சாலையோரமாக நின்றுக்கொண்டு அவரைப் பார்த்து மகிழ்ச்சியாக கையசைக்கிறார்கள். இவரும் புன்னகைத்தவாறே சல்யூட் செய்தவாறே போய்க் கொண்டிருக்கிறார்.

சைலேந்திரபாபு எங்கே போனாலும் இளைஞர்களின் அன்பை வெகுவிரைவில் பெற்று விடுவார். மற்ற போலிஸ் அதிகாரிகளை போல இல்லாமல், இளைஞர்களோடு இளைஞனாய் பழக முயற்சிப்பதே இதற்கு காரணம்.

அவர் சென்னையில் பணியாற்றியபோதே தூரத்தில் இருந்து கவனித்திருக்கிறேன். பொதுக்கூட்டங்களில் பாதுகாப்புப் பணியை மேற்பார்வையிடுவதற்காக வருவார். உயரதிகாரிகளின் வழக்கமான பந்தாவெல்லாம் காட்டாமல் கான்ஸ்டபிள் மாதிரி களத்தில் இறங்கி தன் கைகளையே லத்தி மாதிரி பயன்படுத்தி கூட்டத்தை கட்டுப்படுத்துவார்.

‘புதிய தலைமுறை’ இதழில் புதியதாக தொடர்கள் கொண்டுவர ஐடியாக்கள் கேட்டிருந்தார் ஆசிரியர் மாலன். ‘Memoirs of a Action Hero’ என்றொரு ஒருவரி ஐடியா கொடுத்திருந்தேன். ‘யாரை எழுதவைக்கலாம்?’ என்று ஆசிரியர் கேட்டதற்கு, யோசிக்காமல் ‘சைலேந்திரபாபு’ என்றேன். சிறுவயதிலிருந்தே அவர் எனக்கு ஹீரோ. அவரைப் பற்றி செய்தித்தாள்களில் அவ்வளவு வாசித்து impress ஆகியிருந்தேன்.

‘எழுதுவாரா?’ என்று கேட்டார் ஆசிரியர். ‘கேட்டு பார்ப்போம் சார். சில புத்தகங்கள் எழுதியிருக்காரு. நல்லா விக்குது’ என்றேன். அதோடு மறந்துவிட்டேன்.

ஆனால்-

எங்கள் ஆசிரியர் அதை நினைவில் நிறுத்தி வைத்து, சில மாதங்கள் கழித்து சைலேந்திரபாபுவிடம் அப்பாயின்மெண்ட் வாங்கி என்னையும் ஐ.ஜி.ஆபிசுக்கு வரச்சொல்லி இருந்தார்.

‘நீங்க எங்க பத்திரிகைக்கு ஒரு தொடர் எழுதணும்’ என்று மாலன் சார் கேட்டதுமே மறுக்காமல் ஒப்புக் கொண்டார்.  ‘இவரு உங்களோட கோ-ஆர்டினேட் பண்ணிப்பாரு. எங்களோட சீனியர் ரிப்போர்ட்டர்’ என்று என்னை அறிமுகம் செய்தார்.

என்னைப் பற்றி நிறைய கேட்டார். போலிஸ்காரர் அல்லவா? துருவித்துருவி விசாரித்தார். நான் கேட்காமலேயே அவரைப் பற்றி சொன்னார். அவர் வேளாண்மைக் கல்லூரி மாணவர் என்கிற விஷயம் ஆச்சரியமாக இருந்தது. நான் அவரை சந்தித்தபோதுகூட முனைவர் பட்டத்துக்காக நிறைய படித்துக் கொண்டிருந்தார்.

அதன்பிறகு ஒரு வாரம் கழித்து சைலேந்திரபாபுவை பார்க்கப் போனேன். அவர் சொல்ல, நான் எழுத்தாக்கம் செய்வதாக ஏற்பாடு. தொடருக்கு ‘எழுந்திரு, விரைந்து’ என்று மாலன் சார் தலைப்பு கூட வைத்து விட்டார். கொஞ்சம் விடலைத் தோற்றத்தில் இருந்ததாலோ என்னவோ சைலேந்திரபாபுவுக்கு ‘ஒழுங்காக எழுதுவேனா?’ என்று என் மீது சந்தேகம் இருந்திருக்கக்கூடும். ‘இதுவரை பத்திரிகைக்கு எழுதியதில்லைங்க. சரியா வருமா?’ என்று திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருந்தார். ‘நான் வேணும்னா ஒரு அத்தியாயம் எழுதிக் கொடுக்கறேன் சார். சரியா வருதுன்னு நெனைச்சீங்கன்னா எழுதுங்க’ என்றேன்.

Discpline அவருக்கு மிகவும் முக்கியம். அதைவிட தன்னுடைய வேலையை தானே செய்ய வேண்டும் என்கிற ஆர்வம் கொண்டவர். ஐஜி அந்தஸ்தில் இருக்கும் அதிகாரியாக இருந்தாலும், சின்ன சின்ன வேலைகளைகூட அவரே செய்தால்தான் அவருக்கு திருப்தி. ‘தாகமா இருக்கா? தண்ணீ வேணுமா?’ என்று கேட்டு அவரே எழுந்துப்போய்தான் வாட்டர் பாட்டில் எடுத்து வந்து தந்தார். தன்னுடைய உதவியாளர்களை பெல் அடித்து அழைக்கவில்லை. ‘முதல் அத்தியாயமாக உங்களுடைய இந்த பண்பையே எழுதுவோம்’ என்றேன். ஒப்புக்கொண்டு, அவர் சர்வீஸில் சந்தித்த ஒரு இளைஞனைப் பற்றி சொன்னார்.

அலுவலகத்துக்கு வந்து மடமடவென்று ‘மானே தேனே’ சேர்த்து எழுதிப் பார்த்தேன். சும்மா விர்ரென்று வந்திருப்பதாக பட்டது. பிரிண்டவுட் எடுத்துக் கொண்டு அன்று மாலையே அவர் அலுவலகத்துக்கு ஓடினேன். ‘பக்கா, பிரில்லியண்ட்!’ என்றார். என் மீது அவருக்கு நம்பிக்கை வந்துவிட்டது. ‘அடுத்த வாரம் வாங்க. நாலஞ்சு சாப்டர் எழுதி வெச்சுக்கலாம். நான் வேலை விஷயமா வெளியூர் போக வேண்டியிருக்கு’ என்றார்.

அவர் சொன்ன மாதிரியே அடுத்த வாரம் போனேன். மேலும் சில விஷயங்கள் சொன்னார். ஐந்து அத்தியாயம் தேறிவிடும் என்றதுமே திருப்தியானார். ‘எனக்கு இந்த ரூல்ஸெல்லாம் தெரியலை. ஐபிஎஸ் இதுமாதிரி பத்திரிகையில் தொடர் எழுதலாமா? இறையன்பு எல்லாம் எப்படி எழுதுறாரு. யார் கிட்டேயாவது பர்மிஷன் வாங்கணுமா?’ என்று கேட்டார். எனக்குத் தெரியவில்லை. ‘இறையன்பு சாருக்கு போன் போட்டு கேட்டு சொல்லட்டுங்களா?’ என்றேன். ‘வேணாம். வேணாம். நானே பார்த்துக்கறேன். நான் ஓக்கேன்னு சொன்னதுமே விளம்பரம் கொடுங்க’ என்றார்.

மீதி அத்தியாயங்களை எழுதி தயார் செய்து காத்திருந்தேன். அடுத்த சில வாரங்களுக்கு அவரிடமிருந்து அழைப்பு இல்லை. நானாக அழைத்துக் கேட்டேன். ‘கொஞ்சம் தயக்கமா இருக்கு கிருஷ்ணா. இப்போ தொடர் வந்துச்சின்னா பிராப்ளம் ஆக வாய்ப்பிருக்கு. ஏன்னா, சில விஷயங்களை சில பெயர்களை சொல்லி சொன்னாதான் சரியா இருக்கும். சர்வீஸ்லே இருக்குற நான் அப்படி செய்யுறது சரிவராது. சாரி!’ என்றார்.

அவருடைய அப்போதைய நிலைமை புரிந்தது. ஆனால், எனக்கு ஓர் அருமையா தொடர் மிஸ் ஆகிவிட்டதே என்று ஆதங்கம். அந்த தொடரை அவர் எப்போதாவது எழுத நினைத்தால், என்னை அழைப்பார் என்று இன்றுவரை காத்துக் கொண்டிருக்கிறேன். அல்லது அவர் ஓய்வு பெறுகிறார் என்கிற தகவல் கிடைத்தால், நானே அவரை தொடர்பு கொண்டு கேட்பேன்.

இன்றுவரை அச்சு மை காணாமல் என்னுடைய ஜிமெயில் ஃபோல்டரில் உறங்கிக் கொண்டிருக்கும் ‘எழுந்திரு, விரைந்து’ தொடரின் முதல் அத்தியாயத்தை மட்டும் இங்கே பிரசுரம் செய்கிறேன் (இதில் வில்லங்கமாக எதுவுமில்லை என்பதால் சைலேந்திரபாபு சாரிடம் அனுமதி கேட்காமலேயே பதிப்பிக்கிறேன்).

சல்யூட்

ஒரு ஊரில் பெரிய பணக்காரர் இருந்தார். தங்கமும், வைரமும், வைடூரியமாக செல்வச்செழிப்பு. மனநிம்மதியை தவிர அனைத்தும் அவரிடம் இருந்தது. அப்போது அவர் இருந்த ஊருக்கு ஒரு மகான் வந்தார். அவரிடம் தன்னுடைய பிரச்சினையை சொன்னார். தானும் மற்றவர்களைப் போல மகிழ்ச்சியாக வாழ வழி சொல்லுமாறு கேட்டார்.

கனமான மூன்று கற்களை பையில் போட்டு அவரிடம் கொடுத்து, முதுகில் சுமந்து தன்னோடு வருமாறு கேட்டுக் கொண்டார் மகான். கற்களின் கனம் தாங்காமல் மகானின் வேகத்துக்கு ஈடுகொடுத்து அவரால் வரமுடியவில்லை.

“ஒரு கல்லை தூக்கிப் போட்டுவிட்டு, இரண்டு கல்லை சுமந்துவா” என்றார் மகான். முன்பை விட வேகமாக நடக்க முடிந்தது. ஆனாலும் கொஞ்ச தூரம் சென்றதும் முதுகிலிருந்த சுமை அழுத்த விரைவில் களைப்பு அடைந்தார்.

“இன்னொரு கல்லையும் தூக்கி போடு”

இப்போது பணக்காரரின் முதுகில் இருந்தது ஒரே ஒரு கல்தான். முன்பை விட வேகமாக நடக்க முடிந்தது. ஆனால் இப்போதும் ஒருகட்டத்தில் சுமைதாங்காமல் களைப்படைந்தார். மீதியிருந்த ஒரு கல்லையும் மகான் தூக்கிப்போட சொல்ல, எந்த சிரமமுமின்றி பணக்காரர் வெறும் பையை எடுத்துக்கொண்டு அவரோடு செல்லவேண்டிய இடத்துக்கு நடந்துவந்தார்.

மகான் சொன்னார். “பணமோ, கல்லோ. எதை சேர்த்து வைத்தாலும் அது சுமைதான். சுமைகளற்ற பயணமே மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு உத்தரவாதம்”

கல்லூரிப் பருவத்தில் வாசித்த ஜென் கதை. இந்த கதை வேறு வடிவில் Spring, Summer, Fall, Winter என்றொரு கொரிய திரைப்படத்திலும் வருகிறது. இயக்குனர் கிம்-கி-டுக் இயக்கிய படம். நீங்களும் பார்த்திருக்கலாம். பசுமரத்தாணி போல நெஞ்சில் என்றும் நிற்கும் கதை இது. அவ்வப்போது நினைவுக்கு வரும். என்னிடம் இருக்கும் சுமைகள் என்ன, என்னவென்று யோசித்து அவைகளை களைய அவ்வப்போது முற்படுவேன்.

சமீபத்தில் கச்சத்தீவு சென்றிருந்தேன். காவல் பணி நிமித்தமாக. கடலோர காவல் பாதுகாப்பு பொறுப்பில் இருக்கிறேன். இலங்கை, இந்தியா இரு நாட்டு மக்களும் அந்தோணியார் கோயில் திருவிழாவுக்காக ஆயிரக்கணக்கில் குழுமியிருக்கிறார்கள். அசம்பாவிதம் எதுவும் நடந்துவிடாமல் காக்கும் பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது. கண்ணில் படும் ஒவ்வொரு மனிதரையும் எங்களது கண்கள் ‘ஸ்கேனர்’ போல ஊடுருவும். பொதுவாக முதல் பார்வையிலேயே தெரிந்துக் கொள்வோம். இவர் சாதாரணமானவரா அல்லது ஏதேனும் வில்லங்கம் செய்ய வாய்ப்புள்ளவரா என்று. சந்தேகப் படுபவர்களை மட்டும்தான் தனியாக விசாரிப்போம். எங்களது விசாரிப்புக்கு அவர் சொல்லும் பதிலிலேயே எங்களுக்கு விஷயம் புரிந்துவிடும். காவல் பணியில் இருப்பவர்களின் மனதைவிட சிறப்பாக கணக்குபோடும் கம்ப்யூட்டர் இன்னமும் கண்டுப்பிடிக்க முடியவில்லை. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலான காவல்பணியில் எவ்வளவு மனிதர்களை பார்த்திருக்கிறேன். எவ்வளவு மறக்க முடியாத சம்பவங்கள். எவ்வளவு நினைவுகள்?

அப்போதுதான் திடீரென்று எனக்கு மேலே சொன்ன கதை நினைவுக்கு வந்தது. சட்டென்று வெளியில் தெரிவதைப் போன்ற சுமைகள் எதுவும் என்னிடமில்லை. நினைவுகளை சுமையென்று சொல்லலாமா என்றும் தெரியவில்லை. ஆனாலும் மனதில் தங்கிய நினைவுகளை இறக்கிவைத்தால் தேவலை என்றொரு எண்ணம். புதிய தலைமுறையிடம் சொல்வதற்கு எனக்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன. தாம் கற்றதை மற்றவர்களோடு பகிர்வதை விட விருப்பமான செயல் வேறென்ன இருக்க முடியும்?

கற்பித்தல் மட்டுமல்ல கற்பதும் கலைதான். நான் கற்றதை உங்களுக்கு சொல்கிறேன். நீங்கள் கற்றதை எனக்கு சொல்லுங்கள். எனக்கும் உங்களுக்குமான பிரத்யேக உரையாடலுக்கு இத்தொடர் பயன்படட்டும்.

கடலோர மீனவர்கள் பாதுகாப்பினை உறுதிசெய்யும் விழிப்புணர்வுப் பிரச்சாரம் சமீபத்தில் நடந்தது. அதன் பொருட்டு சென்னையில் இருந்து கன்னியாகுமாரிக்கு சைக்கிள் பயணம். இந்திய கடற்படை வீரர்களோடு, கடலோர காவல் பணியில் இருக்கும் காவலர்களும் பங்கேற்றார்கள்.

வெயில் சுட்டெரிக்கவில்லை. இருந்தாலும் கொஞ்சம் கடினமான பயணம்தான். கன்னியாகுமரியை குறிவைத்து சைக்கிளை மிதமாக மிதித்துக் கொண்டிருக்கிறோம். கடலூர் வருகிறது. ஊரின் பெயர் பலகையை கண்டதுமே அந்த இளைஞனின் முகமும் நினைவுக்கு வருகிறது. இருபது ஆண்டுகளுக்கு முந்தைய சம்பவங்கள் வீடியோ காட்சிகளாய் மனதில் ஓடுகிறது.

அப்போது கடலூரில் எஸ்.பி.யாக பணி புரிந்துக் கொண்டிருந்தேன். அம்மாவட்டத்தில் சாராயம் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்த காலம். இரவு பகலாக சாராயம் காய்ச்சுபவர்களையும், விற்பவர்களையும் துரத்திப் பிடிப்பதுதான் வேலை. சினிமாக்களில் போலிஸை காட்டுவது மாதிரி ஆக்‌ஷன் காட்சிகள் பலவும் எங்கள் நிஜவாழ்விலேயே நடந்திருக்கிறது. ஆற்றுப் படுகைகளில் காய்ச்சுவார்கள். காவல்துறையினரின் தடிகளால் உடையாத சாராயப் பானைகளே அங்கே எந்த கிராமத்திலும் இல்லை.

இம்மாதிரியான சூழலில்தான் அங்கிருந்த ஒரு கிராமத்தில் அந்த இளைஞனை சந்தித்தேன் (ஊரும், பெயரும் வேண்டாமே. இப்போது அவர்களுக்கு இது சங்கடத்தைத் தரலாம்). சிவில் என்ஜினியரிங் டிப்ளமோ படித்திருந்தான். அந்த ஊரிலேயே அதிகம் படித்தவன் அவன்தான் என்று தெரிந்தது. படித்து விட்டோம். நகருக்கு இடம்பெயர்ந்து ஏதேனும் வேலையில் சேர்ந்து சம்பாதித்து, வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடலாம் என்று அவன் எண்ணவில்லை. சாராய அரக்கனிடம் மாட்டிக்கொண்ட தன்னுடைய ஊரை காப்பாற்ற நினைத்தான்.

சாராயம் காய்ச்சுபவர்களையும், விற்பவர்களையும் குறித்து அவ்வப்போது எங்களுக்கு தகவல் கொடுப்பான். ஒருகட்டத்தில் போலிஸ் இன்ஃபார்மர் என்பதையே தன்னுடைய தொழிலாக எடுத்துக் கொண்டான். இன்ஃபார்மர்களுக்கு அவரவர் தரும் தகவலின் அடிப்படையில் ஊக்கத்தொகை மாதிரி வழங்குவோம். அவனுடைய படிப்புக்கு ஏற்ற வருமானம் இல்லையென்றாலும், சமூகப் பணியையும் சேர்த்து செய்கிறோம் என்கிற திருப்தியில் எங்களோடு இணைந்து பணியாற்றினான். அவனுடைய உதவியோடு வெற்றிகரமாக பல கிராமங்களில் கள்ளச்சாராயத்தை ஒழித்தோம்.

பணிநிமித்தமாக சில முறை சந்தித்திருக்கிறேன் என்பதைத் தவிர்த்து பெரிய பழக்கமில்லை. ஆனால் பார்த்ததுமே பச்சக்கென்றுன் மனதில் ஒட்டிக்கொள்கிற உருவம். பழகுவதில் அவனுடைய பாங்கு அலாதியானது. நேர்த்தியாக உடை அணிவான். காவல்துறையிலேயே சேர்ந்து பணியாற்ற அவனுக்கு ஆர்வமிருந்தது என்று நினைக்கிறேன்.

ஒருநாள் அதிகாலை வேளையில் அந்த அகாலமான செய்தி வந்தது. ‘அவன்’ கொல்லப்பட்டு விட்டான். தங்களது குற்றநடவடிக்கைகளை கட்டுப்படுத்த காவலர்களோடு இணைந்து செயல்படுகிறான் என்று அவனை படுகொலை செய்துவிட்டார்கள் சமூகவிரோதிகள். மனது கேட்கவில்லை. அவனது மரணத்துக்கு நேரில் மரியாதை செலுத்த கிளம்பினேன்.

எளிமையான வீடுதான். அரைகுறையாக கட்டி பாதியில் விடப்பட்டிருந்தது. என் நினைவு சரியென்றால் கூரைப்பகுதி வேலை மட்டும் பாக்கியிருந்தது. விசாரித்ததில் அந்த வீடு முழுக்கவே அவனுடைய உழைப்பில் உருவானது என்றார்கள். வேறொருவரின் உதவி துளி கூட இல்லையாம். செங்கல்லை கூட அவனே சூளையில் சுட்டு உருவாக்கியிருக்கிறான். கதவு, சன்னல்களை அவனே மரம் வாங்கி இழைத்திருக்கிறான். நேரம் கிடைக்கும் போதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக அவனே கட்டுவானாம். முடிப்பதற்குள் உயிர் போய்விட்டது. இந்த வீட்டினை கட்டுவது மட்டுமில்லாமல் அவனுடைய அன்றாட வாழ்வில் அவனுக்குத் தேவையான அனைத்துப் பணிகளையும் அவனே செய்துக் கொள்வானாம். உழைப்புக்கு அஞ்சாத இப்படிப்பட்ட ஒருவன் இத்துணை இளம் வயதிலேயே இறந்துவிட்டானே என்று எனக்கு துயரம் தாங்கவில்லை.

அந்த இளைஞனிடம் நான் கற்றதுதான் நம்முடைய சிறுசிறு பணிகளை கூட நாமே செய்துக்கொள்ள வேண்டும் என்பது. நம்முடைய வேலைகளை நாமே செய்து முடித்துக் கொள்ளும்போது கிடைக்கும் நிறைவு வேறெதிலும் கிடைப்பதில்லை.

பகவத்கீதை, இராமாயணம், மகாபாரதம், திருவாசகம் போன்றவற்றுக்கு எளிய நடையில் உரை எழுதி நமக்கு அளித்த சுவாமி சித்பவானந்தாரை கேள்விப்பட்டிருப்பீர்கள். ராமகிருஷ்ண குருகுல மரபை சேர்ந்தவர். அவருடைய அறையில் கழிப்பறை, வாஷ்பேஸின் போன்றவற்றை கூட அவரேதான் சுத்தம் செய்வாராம். வரவேற்பறை, படுக்கையறை போன்றவற்றை பெருக்குவதில் தொடங்கி தன் தொடர்பான எந்த வேலையையும் செய்ய சிஷ்யர்களையோ, பணியாட்களையோ அனுமதிக்க மாட்டார். நாம் எப்படி வாழவேண்டுமென்று மகான்கள் வாழ்ந்துக் காட்டியிருக்கிறார்கள்.

வெளிநாடுகளில் இக்கலாச்சாரம் உண்டு. ஆனால் இங்கே கூலிவேலை பார்ப்பவர் கூட தன் வீட்டுப் பணிகளை மேற்கொள்ள வேறொருவரை கூலிக்கு அமர்த்துகிறார். அலுவலகங்களில் கடைநிலை ஊழியராக பணியாற்றுபவர் கூட தன் வீட்டு வேலைகளை செய்ய பணியாளரை அமர்த்துக் கொள்கிறார். எல்லோருமே யாரையோ சார்ந்து வாழ்கிறோம். சமீபமாக ஏற்பட்டிருக்கும் கலாச்சார மாற்றம் இது.

நம்முடைய கை, கால் உறுதியாக இருக்கும் வரை தன் கையே தனக்குதவி என்று வாழ பழகவேண்டும். உடல் மட்டுமல்ல, நம்முடைய உள்ளமும் உறுதியானது என்பதை மற்றவர்களுக்கு உணர்த்த வேண்டும். இப்போதிலிருந்து முடிந்தவரை உங்கள் வேலைகளை நீங்களே செய்துப் பாருங்களேன். உங்கள் வாழ்வின் மிகப்பெரிய மாற்றத்தை உணர்வீர்கள்.


(விரைவோம்)

30 ஜூன், 2016

விஜயமகேந்திரன் படைப்புகள்

விஜயமகேந்திரனை எனக்கு எப்போதிலிருந்து தெரியும் என்பது சரியாக நினைவில்லை. ஆனால் டிசம்பர் 26, 2009 அன்று அவரது முதல் நூலான ‘நகரத்திற்கு வெளியே’ சென்னை தேவநேயப் பாவணர் நூலக அரங்கில் வெளியிடப்பட்ட தினத்திலிருந்து தெரியும். அந்த நூல் மிகச்சிறப்பாக அச்சிடப் பட்டிருக்கிறது என்று அவரிடம் பாராட்டுதல்களை தெரிவித்தேன். அதற்கு பிறகு அவர் எந்த நூலையும் இதுவரை ஏன் அச்சிடவில்லை என்பது தெரியவில்லை. பிற்பாடுதான் தெரிந்தது அந்நூலை அச்சிட்டவர்கள் உயிர்மை பதிப்பகத்தார் என்று. உயிர்மை பதிப்பகம் மனுஷ்யபுத்திரன் எனக்கு நண்பர்தான். அவரை தேடிச்சென்று இதற்காக பாராட்டினேன். இந்த பாராட்டுதல்கள் எனக்குரியவை அல்ல. அந்நூலை அச்சிட்ட மணி ஆப்செட்டாருக்கு போய் சேரவேண்டும் என்று பெருந்தன்மையாக அவர் ஒதுங்கிக் கொண்டார். இந்த பெருந்தன்மை ஏற்படுத்தும் முரண்தான் இலக்கியப் புனைவின் சுவாரஸ்யமே. அதனால்தான் நாமெல்லாம் இலக்கியத்தில் இருந்தாக வேண்டிய தேவையும் இருக்கிறது. மணி ஆப்செட்டாரின் முகவரி என்னிடம் இல்லாததால் அவர்களுக்கான என் பாராட்டுதல்களை ஏழு வருடமாக அப்படியே காத்து வருகிறேன்.

ஒருமுறை சென்னை அசோக்பில்லர் வழியாக நான் சென்றுக் கொண்டிருந்தேன். அப்போது அங்கே ஒரு டீக்கடை இருந்தது. டீக்கடை வாசலில் விஜயமகேந்திரனும் இருந்தார். “டீ சாப்பிடலாமா?” என்று அவர் கேட்டார். “சாப்பிடலாமே” என்று நான் சொன்னேன். இருவரும் சாப்பிட்டோம். எனக்கு சர்க்கரை கொஞ்சம் கூடுதலாக வேண்டும். அவரோ கொஞ்சம் சர்க்கரை குறைவாக போட்டு குடித்தார். அப்போது ஒரு டீயின் விலை நான்கு ரூபாய்தான். விஜயமகேந்திரன் டீக்கடைக்காரருக்கு பத்து ரூபாய் தந்தார். நான் மீதம் இரண்டு ரூபாயை கொடுத்தேன். டீக்கடைக்காரரோ அதை மறுத்து, நான்தான் உங்களுக்கு மீதம் இரண்டு ரூபாய் தரவேண்டும் என்று நேர்மையாக ஒப்புக்கொண்டது மகிழ்ச்சியாக இருந்தது. இப்படியாக எங்கள் இலக்கிய நட்பு ஆழமாக வளர்ந்தது.

2006ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக சிற்றேடுகளில் சிறுகதை, கவிதை, விமர்சனம் என்று எழுதிவரும் விஜயமகேந்திரனுக்கு இலக்கியத்தில் இது பத்தாம் ஆண்டு. ஆனால் அவரை 1978லிருந்தே சிற்றேடு வட்டாரம் அறியும். ஏனெனில் அவர் அப்போதுதான் பிறந்தார். அவர் பிறப்பதற்கு வெகுகாலம் முன்பே புதுமைப்பித்தன் மறைந்துவிட்டார்.

எனினும் புதுமைப்பித்தனின் வரிசையில்தான் விஜயமகேந்திரனையும் சேர்க்க வேண்டியிருக்கிறது. இருவரும் சிறுகதை மரபின் வேர்கள் என்கிற அடிப்படையில் இந்த ஒப்பீட்டை நான் செய்ய வேண்டியிருக்கிறது. சிலர் இதை ஒப்புக் கொள்ளலாம். பலர் இதை மறுக்கலாம். ஆனால், உண்மை என்பது உண்மைதான்.

விஜயமகேந்திரனின் படைப்புகள் பெரும்பாலும் பெண் புனைவை அடிப்படையாக கொண்டவை. புதுமைப்பித்தனின் கதைகளில் பெண் புனைவும் உண்டு. பேய் புனைவும் உண்டு. அவ்வகையில் பார்க்கப் போனால் நகுலனின் சுசிலாவே விஜயமகேந்திரனின் பாத்திரவார்ப்புகளுக்கு முன்னோடி என்பது பூடகமாக அவரது ‘நகரத்திற்கு வெளியே’ தொகுப்பில் தொக்கி நிற்கிறது.

நகுலனுக்கும், விஜயமகேந்திரனுக்கும் முக்கியமான வேறுபாடு உண்டு. அவர் திருவனந்தபுரத்தில் வசித்தார். இவர் சென்னையில் வசிக்கிறார். இருவரையும் ஒப்பிட வேண்டுமானால், இருவரும் தமிழில்தான் எழுதுகிறார்கள் என்கிற அம்சத்தைதான் குறிப்பிட வேண்டும்.

அசோகமித்திரனின் தாக்கம் விஜயமகேந்திரனுக்கு உண்டு என்று நினைக்கிறேன். அசோகமித்திரனை நான் பிறந்தபோதே அறிவேன். ஏனெனில் நான் பிறந்தபோதே அசோகமித்திரனுக்கு என்னுடைய தாத்தா வயது ஆகியிருந்தது. அவர் அப்போது கணையாழியில் நிறைய எழுதிக் கொண்டு இருந்தார்.

அசோகமித்திரனின் மிகப்பெரிய பிரச்சினையே அவர் அறுபது ஆண்டுகளாக எழுதிக் கொண்டிருக்கிறார் என்பதுதான். சுமார் முன்னூறு சிறுகதைகள் எழுதியிருக்கிறார். அந்த கதைகளின் தலைப்பை மட்டுமாவது மனப்பாடம் செய்துக் கொண்டு கூட்டங்களில் பேசுவதற்குள்ளாகவே விஜயமகேந்திரன் யாரென்பதே மறந்துவிடும்.

மாறாக மெளனியும், மாமல்லனும் நம்முடைய ஆட்கள். இவர்களை குறிப்பிட்டு கூட்டங்களில் பேசுவதோ, சிற்றேடுகளில் இலக்கியக் கட்டுரைகளை எழுதுவதோ சுலபம். இருவருமே தலா முப்பது கதைகள்தான் எழுதியிருக்கிறார்கள். ஒரு துண்டுச் சீட்டில் எல்லாக் கதைகளின் தலைப்பையும் எழுதி கையில் மறைத்து வைத்துக் கொண்டோமானால், கூட்டங்களில் பேசும்போது அப்படியே பார்த்து கதைகளின் தலைப்பை ஒப்பித்து கைத்தட்டல்களை அள்ளிவிடலாம்.

மெளனியின் கதை புரியாது என்பதே மெளனியின் பிரச்சினை. மெளனியே அதை வாசித்துப் பார்த்தாலும் அவருக்கே புரியாது என்றுதான் கருதுகிறேன். மாறாக மாமல்லனின் கதைகள் எளிதில் புரிந்துவிடுகிறது என்பதே மாமல்லனின் பிரச்சினை. மெளனியோ மாமல்லனோ என்ன எழுதியிருக்கிறார்கள் என்பதைவிட, அவர்கள் ஏதாவது எழுதியிருக்கிறார்கள் என்பதே இலக்கிய உலகத்துக்கு அவர்கள் செய்திருக்கும் தொண்டாக நாம் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

விஜயமகேந்திரனையும் நாம் இதே மரபில் கொண்டு நிறுத்தலாம். ஆனால், அவர் கவிதையும் எழுதியிருக்கிறார். மெளனியோ மாமல்லனோ கவிதை புனைந்ததாக எனக்கு நினைவில்லை. அப்படி எழுதியிருப்பார்களேயானால் அதை நான் வாசிக்கவில்லை. வாசித்த வாசகர்கள் என்ன ஆனார்களோ என்றும் தெரியவில்லை.

நடந்து முடிந்த சென்னை புத்தகக் காட்சியில் மனுஷ்யபுத்திரனை பார்த்தேன். அவர் சிரித்தார். நான் சிரித்தேன். அவர் முறைத்தார். நான் பதிலுக்கு முறைக்கவில்லை. ஏனெனில் இதுதான் இலக்கிய பண்பாடு. இப்படிதான் ந.பிச்சமூர்த்தியும், க.நா.சு.வும், சிலம்பொலி செல்லப்பாவோ எழுத்து செல்லப்பாவோ யாரோ ஒருவரும் இருந்தார்கள். நாம் மட்டும் ஏன் வேறுமாதிரி இருக்க வேண்டும்.

மணிக்கொடி எழுத்தாளர்களின் மரபில் வந்தவர் விஜயமகேந்திரன் என்பதை நிறுவுவதற்காக நான் இந்தப் பெயர்களை இங்கே உச்சரிக்க வேண்டியிருக்கிறது. மணிக்கொடியும், வானம்பாடியும் இருவேறு துருவங்கள். உயிர்மையும், காலச்சுவடும் கூட அதே மாதிரிதான். விஜயமகேந்திரன் உயிர்மையில் எழுதினார் என்பது இங்கே குறிப்பிடத்தக்க அம்சமாக இருக்கிறது.

பிரமிளை எனக்கு நேரடியாக தெரியாது. அவரை எனக்கு தெரியாது என்கிற செய்தி அவருக்கு தெரிவதற்கு முன்பாகவே காலமாகி விட்டார். ஒருவேளை தெரிந்திருந்தால் ஆத்மாநாம் அகாலமரணம் அடைந்திருக்க மாட்டார். ஆத்மாநாம் அம்பத்தூரில் வசித்த கவிஞர். ‘ழ’ இதழில் அவர் எழுதிய கவிதைகள் எனக்கு பசுமையாக நினைவிருக்கிறது. ஆனால், இங்கே எதையாவது குறிப்பிட நினைத்தால் எதுவும் நினைவுக்கு வரமாட்டேன் என்கிறது. இதுவும் இலக்கியம் ஏற்படுத்தும் சுவாரஸ்யமான புதிர்தான். என் நண்பர் ஜ்யோவ்ராம் சுந்தருக்கு ஆத்மாநாமை பிடிக்கும். சுந்தரும் அம்பத்தூரில்தான் வசிக்கிறார் என்பதால் இருக்கும்.

வைத்தீஸ்வரனின் கவிதைகளில் கதைத்தன்மை இருக்கும். விஜயமகேந்திரனின் கதைகளில் கவிதைத்தன்மை இருக்கும். இந்த பொதுவான புள்ளியே இருவரும் இணைக்கும் நேர்க்கோடாக அமைகிறது.

ஞானக்கூத்தனின் கவிதைகளை ‘யாத்ரா’வில் வாசித்திருக்கிறேன். ஆனால் அவர் யாத்ராவில் எழுதியிருக்கிராறா என்று தெரியவில்லை. அவரது கவிதைகள் higher standard என்பார்கள். அவர் ஐயரா, ஐயங்காரா என்று தெரியாமல் எப்படி ஐயர் ஸ்டேண்டர்டில் அவர் கவிதைகளை reposition செய்ய முடியும் என்கிற கேள்வி எனக்கு தொக்கி நிற்கிறது. எனினும் அவரது கவிதைகளில் நுணுக்கமும், நுட்பமும் பூடகமாக செயல்படும் என்பதே வாசகர்களுக்கு முக்கியமானது. நுணுக்கத்துக்கும், நுட்பத்துக்கும் என்ன வேறுபாடு என்று தெரியாது. இரண்டுமே சிற்றேடுகளில் அதிகம் பிரயோகிக்கப்படும் சொற்கள் என்பதால் நூதன சிருஷ்டியாக இதை உபயோகப்படுத்த வேண்டி வருகிறது.

இந்த நுட்பமும், நுணுக்கமும் நகுலனுக்கு அலாதி. அவர் இறந்துவிட்டார். இருந்திருந்தால் இப்படியொரு கவிதை எழுதியிருப்பார்.

விஜயமகேந்திரன்

--

வி




கே

ந்

தி


ன்

--

ன்


தி

ந்

கே




வி

--

இது நானாக நகுலன் எப்படி எழுதியிருப்பார் என்று கருதி புனைந்த கவிதை. பிரமிள் உயிரோடு இருந்திருந்தால் இது கவிதையா என்று கேட்டு என் சட்டையைப் பிடித்து உலுக்கியிருப்பார். இது ஏன் கவிதையில்லை என்று பதிலுக்கு நான் கேட்டிருப்பேன். வெங்கட்சாமிநாதன் என்னை ஆதரித்து கடிதம் எழுதியிருப்பார். அவரை டெல்லியிலேயே நான் அறிவேன். பிற்பாடு மடிப்பாக்கத்தில் வசித்தார். கடைசிக்காலத்தில் பெங்களூரில் இருந்தார். நல்ல மனிதர். சிறந்த விமர்சகர். இறந்துவிட்டார்.

விஜயமகேந்திரன் இப்போது ‘ஊடுருவல்’ என்றொரு நாவலை ஏழு ஆண்டுகளாக எழுதிவருகிறார். அது வாசகர்களை எப்போது ஊடுருவும் என்பதை விஜயமகேந்திரனும் அறிய மாட்டார். நானும் அறியமாட்டேன். பிரமிளோ, நகுலனோ, ஆத்மாநாமோ, ந.பிச்சமூர்த்தியோ, புதுமைப்பித்தனோ, சுந்தரராமசாமியோ, ஜெயமோகனோ, எஸ்.ராமகிருஷ்ணனோ யாரும் அறிந்திருக்கவும் வாய்ப்பில்லை. இந்த அறியாத்தன்மை இலக்கிய உணர்வின் இன்னொரு வெளிப்பாடு.

ஒட்டுமொத்தமாக விஜயமகேந்திரனின் இலக்கிய வாழ்வையும், படைப்புகளையும் ஒருவரியில் எப்படி சொல்லுவதென்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், ஒருவரியில் அவரை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டுமானால், ‘விஜயமகேந்திரன்’ என்று சொல்லி அறிமுகப்படுத்தலாம்.

11 மே, 2016

சரவணா ஸ்டோர்ஸ்

எண்பதுகளின் தொடக்கத்தில் தீபாவளி ஷாப்பிங் தி.நகரில்தான். ஒரு தீபாவளிக்கு ‘வேட்டைக்காரன்’ எம்.ஜி.ஆர் ஸ்டைலில் கவுபாய் டிரெஸ். மற்றொரு முறை வாத்தியாரின் ‘காவல்காரன்’ படத்துக்கு tribute ஆக போலிஸ் டிரெஸ். அதற்கு மேட்ச்சாக பர்மாபஜாரில் ஒரிஜினல் ரிவால்வர் மாதிரியே தோற்றமளிக்கும் பிரபாகரன் துப்பாக்கி. அப்பா, ஒரு எம்.ஜி.ஆர் பைத்தியம். தீபாவளிக்கு தீபாவளி என்னை கோமாளி ஆக்கிக் கொண்டிருந்தார். ஒருமுறை கலகக்குரல் எழுப்பி ப்ரூஸ்லீ படம் வரையப்பட்ட பச்சை கலர் பனியன் ஒன்றை அடம்பிடித்து வாங்கி அவரை எரிச்சலுக்கு உள்ளாக்கினேன்.

அப்போதெல்லாம் தி.நகரில் சரவணா ஸ்டோர்ஸ் மளிகைக்கடையாகவோ, பாத்திரக்கடையாகவோ இருந்திருக்கலாம். உண்மையில் ரங்கநாதன் தெரு ஷாப்பிங் ஸ்ட்ரீட் ஆகவெல்லாம் இல்லை. உஸ்மான் ரோடுதான் ஃபேமஸ். ஷாப்பிங்குக்கு எல்லாரும் பூக்கடைக்குதான் போவார்கள். பிராட்வே போகும் பஸ்களில் கூட்டம் கும்மும். பூக்கடையை ஒப்பிடும்போது உஸ்மான்ரோடில் விலைவாசி ஒரு பத்து சதவிகிதம் அளவுக்காவது கூடுதலாக இருக்கும். எனவே, தி.நகரில் நெரிசலே இல்லாமல் ஷாப்பிங் செய்யலாம். நம்புங்கள். எண்பதுகளில் அப்படிதான் இருந்தது.
ரங்கநாதன் தெருவையே சரவணா தெரு என்று பெயர் மாற்றிவைத்து விடலாம் என்கிற நிலையெல்லாம் தொண்ணூறுகளில்தான் உருவானது. சூரத்தில் மொத்தமாக கொள்முதல் செய்து மற்ற கடைகளை ஒப்பிடும்போது 30% முதல் 40% வரை மலிவாக துணிகளை விற்றதும், சென்னையில் புதிதாக உருவாகி வந்த நடுத்தர வர்க்கம் அப்படியே சரவணாவுக்கு ‘ஜே’ போட்டது. குறிப்பாக சொல்ல வேண்டுமானால் திருமணத்துக்கு ஒரு குடும்பம் துணிகளுக்காக செய்யவேண்டிய பட்ஜெட்டில் ஆயிரக்கணக்கில் பணம் மிச்சமானது. சரவணாவின் புகழ் செங்கல்பட்டுக்கு அந்தப் பக்கமாகவும் பரவ, மக்கள் கூட்டம் கூட்டமாக ரயிலேறி வந்து துணிமணி வாங்கினார்கள். ரங்கநாதன் தெரு முக்கில் அன்பழகன் பழக்கடையில் கரும்பு ஜூஸ் குடித்தார்கள். கோன் ஐஸ் சாப்பிட்டார்கள்.

சரவணாவுக்கு முன்பாக அங்கே முருகன் டெக்ஸ்டைல்ஸ்தான் பிரபலமாக இருந்தது. ‘வாங்க வாங்க முருகன் டெக்ஸ்டைல்ஸ்’ என்று ஒரு கியூட்டான குழந்தை அழைக்கும் விளம்பரம் நினைவிருக்கிறதா? எனினும் சரவணாவோடு விலை விஷயத்தில் போட்டியிட முடியாமல் பலரும் பிசினஸை ஏறக்கட்டினார்கள். பிரபலமாக இருந்த ‘குமரன் டிரெஸ்ஸஸ்’, பனகல் பார்க் ‘குமார் சர்ட்ஸ்’ எல்லாம் காலி. பாரம்பரியமாக ராசியான துணிக்கடையென பெயரெடுத்த ‘நல்லி’ மாதிரி ப்ளேயர்ஸ் மட்டுமே சரவணாவையும் தாண்டி தாக்குப்பிடிக்க முடிந்தது.

கூட்டம் அதிகரிக்க அதிகரிக்க துணிமணிகளோடு மற்றப் பொருட்களையும் சரவணா அதே மலிவுவிலை டெக்னிக்கில் விற்க ஆரம்பித்தது. சரவணா என்கிற பிராண்ட் துணிக்கடையின் மூலம் பிரபலமாக ஏற்கனவே இருந்த பாத்திரக்கடை பிரும்மாண்டமாக உருவெடுத்தது. நகைக்கடையும் திறந்தார்கள். தொண்ணூறுகளின் இறுதியில் அண்ணாச்சி செல்வரத்தினத்தை அந்த பாத்திரக்கடை வாசலில் எப்போதும் பார்க்கலாம். கொஞ்சம் அழுக்காக கதர் வேட்டி, முரட்டுத் துணியில் தைக்கப்பட்ட வெள்ளைச் சட்டை என்று வியர்வை கசகசக்க நின்றுக்கொண்டே ஊழியர்களை வேலை வாங்கிக் கொண்டிருப்பார். கஸ்டமர்களை கண்டதும் கஷ்டப்பட்டு சிரிப்பார். யாராவது கம்ப்ளையண்ட் சொன்னால் அவரால் தாங்க முடியாது. ஊழியர்களிடம் கன்னாபின்னாவென்று கத்துவார். கஸ்டமர்கள்தான் அவருக்கு கடவுள்.

ஸ்தாபனம் கொஞ்சம் வளர்ந்ததும் ரேடியோ மற்றும் டிவியில் விளம்பரங்கள் தர ஆரம்பித்தார்கள். டிவி விளம்பரத்தின் மாடல் அண்ணாச்சியேதான். ‘நம்பிக்கை, நாணயம், கைராசி... உங்கள் சரவணா ஸ்டோர்ஸ்’ என்று theme signature வரும்போது அண்ணாச்சி கைகூப்பியபடியே வருவார். எனவே, இப்போது அண்ணாச்சியின் சகோதரர் மகன் சரவணன் விளம்பரத்தில் தோன்றுவது என்பது சரவணாவின் வரலாற்றில் புதியதல்ல. அண்ணாச்சியின் திடீர் மரணத்துக்குப் பிறகு சரவணா ‘பிரும்மாண்டமாய்’ மாறிய பிறகுதான் நடிக, நடிகையர்களை வைத்து விளம்பரங்கள் எடுக்கப்பட்டன.
இம்மாதிரி ஓனரே தோன்றும் விளம்பரங்கள் தமிழ் விளம்பரச் சூழலுக்கு வினோதமுமில்லை. விஜிபி சகோதரர்கள் கோட்டு, சூட்டு போட்டுக்கொண்டு விளம்பரங்களில் தோன்றுவார்கள். தவணைமுறையில் பொருட்களை விற்கும்போது, விற்பவன் மீது மக்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்பதால் நவீன உடைகளை அணிய வேண்டியதாகியது என்று அண்ணாச்சி வி.ஜி.சந்தோஷம், ‘தவணை முறை பிறந்த கதை’ நூலில் குறிப்பிடுகிறார். கோட்டு, சூட்டு போட்டவன் ஏமாற்ற மாட்டான் என்று மக்களுக்கு பொதுவாக ஒரு நம்பிக்கை உண்டு.

விஜிபியில் இருந்து பிரிந்து தனிக்கடை போட்ட வசந்த் & கோ, வசந்த் அண்ணாச்சியும் கூட டிவி விளம்பரங்களில் அவரேதான் நடித்தார். தொண்ணூறுகளில் டிவி பார்த்தவர்கள், இன்னமும் அந்த அதிர்ச்சியில் இன்று மீண்டிருக்க மாட்டார்கள். அண்ணாச்சி வசந்த், நீட்டான கோட் & சூட்டில் ஒரு பெரிய காரில் இருந்து இறங்குவார். கல்லூரி இளம்பெண்கள் சூழ்ந்து அவரிடம் ஆட்டோகிராப் வாங்குவார்கள் என்பது மாதிரி கிரியேட்டிவ்வான விளம்பரம் அது. முரண் என்னவென்றால் வசந்த் அண்ணாச்சியின் சொந்த அண்ணாச்சியான குமரி ஆனந்தன் தீவிர காந்தியவாதி. கதர் தவிர வேறெதையும் அணிய மாட்டார்.

இந்த முதலாளிகளின் சுயவிளம்பரப் பெருமையாக மட்டும் இதை பார்க்காமல், சமூக உளவியல் காரணிகளோடு இந்தப் போக்கை பொருத்திப் பார்க்க வேண்டும். நாடார் சமூகத்தினர், நல்ல உடை அணிவதற்கு தடை விதிக்கப்பட்டவர்களாக இருந்திருக்கிறார்கள். இடுப்புக்கு மேலே ஆடை என்பது சில நூற்றாண்டுகளுக்கு முன்பு அவர்களுக்கு கனவாக இருந்திருக்கிறது. அவர்கள் சமூகப் பெண்களே மார்பை மறைக்க வேண்டுமானால், அதற்கு தனி வரி செலுத்த வேண்டும் என்கிற அளவுக்கு ஒடுக்கப்பட்டார்கள் என்று வரலாற்றிலேயே ஆதாரப்பூர்வமாக பதிவாகியிருக்கிறது.
இந்தப் பின்னணியில் இருந்துப் பார்த்தால்தான் அச்சமூகத்தில் இருந்து பொருளாதார ரீதியாக வளர்ந்தவர்கள் வெள்ளைக்காரன் மாதிரி உடை அணிவதையும், அதை விளம்பரப் படுத்திக் கொள்ள விரும்புவதின் உளவியல் காரணங்களையும் உணர முடியும். நாடார்கள் விரும்பி துணிக்கடை நடத்துவது லாபம் கருதி மட்டுமல்ல. அவர்களது ஜீன்களில் பதிந்திருக்கும் ஆடை குறித்த அவர்களது முன்னோர்களின் கனவுகளின் காரணமாகவும்தான் என்றும் தோன்றுகிறது. கலர் கலராக ராமராஜனும், சரத்குமாரும் உடையணிந்து சினிமாவில் ஆடுவதை நகரங்களில் வசிப்பவர்கள் கிண்டலடிக்கிறோம். கோளாறு அவர்களது உடைத்தேர்வில் அல்ல. நம்முடைய பார்வையில்தான்.

28 மார்ச், 2016

ஷேவிங்!

கோடை உக்கிரம் சற்று முன்னதாகவே ஆரம்பித்து விட்டது. இப்போதே அக்னி வந்துவிட்டதோ என்று அஞ்சக்கூடிய அளவுக்கு கதிரவன் சுட்டெரித்துக் கொண்டிருக்கிறான். சந்தேகமே இல்லை. இது சூரியனின் வருடம்.

ஃபுல் மேக்கப் போட்டு அலுவலகத்துக்கு கிளம்பும் பெண்களின் சாயம் பாதியிலேயே கலைகிறது. எதிர் பிளேடு போட்டு ஷேவ் செய்த ஆண்களுக்கு தாடை தீயாய் எரிகிறது. ஆக, கோடையால் இருபாலருமே பாதிக்கப்படுவதால் ஆண்-பெண் சமத்துவம் இயற்கையின் இயல்பு என்பதும் புரிகிறது.

பத்து ஆண்டுகளுக்கு முன்புவரை ஷேவிங்கில் அவ்வளவு ஆர்வம் இருந்தது கிடையாது. தாடியும், மீசையும் சொல்லிக் கொள்ளும்படி வளரவில்லை என்பதும் ஒரு காரணம். வாரத்துக்கு ஒருமுறை ஞாயிற்றுக்கிழமையில் நேரம் கிடைத்தால் பிளேடால் ஒரு இழுப்பு இழுத்துவிட்டுக் கொள்வதுண்டு. அதுவும்கூட “ஷேவிங் பண்ணுடா. சீக்கு புடிச்ச மாதிரி இருக்கே!” என்று அப்பாவோ, அம்மாவோ கவனித்து சொன்னால்தான்.

என்னுடையது பிரபுதேவா தலைமுறை. எனவே, சைட் அடிப்பதற்கு க்ளீன்ஷேவெல்லாம் அவசியமானதாக இல்லை. பிற்பாடு அப்பாஸ், மாதவன் ஆகியோர் எழுச்சி அடைந்தபிறகே இது அத்தியாவசியமான தகுதியாக மாறியது.

முன்பு விளம்பர நிறுவனங்களில் பணிபுரிந்துக் கொண்டிருந்தபோது அதுபாட்டுக்கும் தான்தோன்றித்தனமாக வளரும் தாடி, added valueவாக இருந்தது. வேலை செய்ய சோம்பேறித்தனமாக இருந்தால் தாடியை வருடிக்கொண்டு வானத்தைப் பார்த்து தம் அடித்துக் கொண்டிருக்கலாம். மேலதிகாரிகள், ‘அவன் திங்க் பண்ணுறான்’ என்று நினைத்துக் கொள்வார்கள். அம்மாதிரி ஒருமுறை தாடி வளர்த்தபோது எதிர்ப்பட்ட நிறைய பேர் “சலாம் அலைக்கும் பாய்” என்று சொல்ல, மதமாற்றத்துக்கு தயார் இல்லாத நான் தாடியை வழித்தேன்.

‘புதிய தலைமுறை’யில் சேர்ந்த பிறகுதான் தோற்றம் குறித்து ரொம்ப கவலைப்பட வேண்டியதாயிற்று. ஷேவ் செய்யாத முகம், ‘இன்’ செய்யப்படாத சட்டை, செருப்புக் காலோடு ஓர் ஆர்.ஜே.வை பேட்டி எடுக்கப் போயிருந்தோம். எங்களுடைய தோற்றமே அவருக்கு அலர்ஜி ஆகிவிட்டது. பேச்சிலேயே தீண்டாமையை கடைப்பிடித்தார் (obviously அவர் அந்த சாதிதான்). கசப்பான அந்த அனுபவத்துக்கு பிறகே, இனிமேல் கொஞ்சம் டீசண்டாக தோன்ற வேண்டும் என்கிற அக்கறை பிறந்தது.

எங்கள் ஆசிரியர் மாலன், எப்போதும் பளிச்சென்று இருப்பார். அவருடைய முகத்தில் 0.5 மிமீ அளவுக்கு தாடி வளர்ந்தால் கூட அதிசயம்தான். திங்கள் டூ வெள்ளி ஃபார்மல்ஸ் உடையில்தான் இருப்பார். வீக்கெண்டில் ஆபிஸுக்கு வந்தால் மட்டும் டீஷர்ட் அணிவார். ஏதாவது விழாவில் கலந்துக் கொள்கிறார் என்றாலும், அந்த விழாவின் தன்மைக்கேற்ப கோட்சூட்டோ அல்லது ஜிப்பா (இலக்கிய நிகழ்வுகள்) மாதிரியோ அணிவார்.

‘பளிச்’ தோற்றத்துக்காக அவரை ஃபாலோ செய்ய ஆரம்பித்தேன். இப்போதெல்லாம் கம்பல்ஸரி ஃபார்மல்ஸ்தான். பேண்டில் டக்-இன் செய்த சட்டை, தினமும் இல்லாவிட்டாலும் ஒருநாள் விட்டு ஒருநாள் ஷேவிங், பாலிஷ் செய்த ஷூ என்று ஒருமாதிரி ஆபிஸ் கோயிங் ரோபோ மாதிரியான தோற்றத்தில் இருக்கிறேன். எப்போதாவது மின்தடை காரணமாக அயர்ன் செய்ய முடியாவிட்டால் மட்டும் ஜீன்ஸ் பேண்ட் அணிந்து ஒருமாதிரி செமி ஃபார்மலில் சமாளித்துக் கொள்கிறேன். இப்போது சந்தித்து பேசுபவர்கள் (அந்த ஆர்ஜே மாதிரியில்லாமல்) கொஞ்சம் மரியாதையோடுதான் நடத்துகிறார்கள்.

ஒரே தொந்தரவு ஷேவிங்தான். விருப்பமே இல்லாமல் செய்துத் தொலைக்க வேண்டியிருக்கிறது. நமக்கு கடை ஷேவிங் செட் ஆகாது. செல்ஃப் ஷேவிங்தான் திருப்தி. முன்பெல்லாம் ஒரு பிளேடில் சைடுக்கு ஒரு முறை என்று நாலு முறை ஷேவ் செய்துக் கொண்டிருந்தேன். இப்போது தோல் கொஞ்சம் தடித்து விட்டது. முகத்தில் வளரும் மயிறும் தடியாக ஸ்டாப்ளர் பின் கனத்துக்கு வளருகிறது. ஒரு பிளேடில் இரண்டு ஷேவுக்கு மேல் இழுக்க ஆரம்பித்தால் ரத்தம் துளிர்க்கிறது. அதுவும் ஷேவ் செய்து முடித்தபிறகு கொஞ்சூண்டு சொரசொரப்பு தட்டுப்பட்டாலும் சோப்பு போடாமல் குளித்தது மாதிரி அன்ஈஸியாக இருக்கும். எனவே எதிர்ஷேவ் பார்ட்டி நான். எரிச்சலைத் தணிக்க ஆஃப்டர் ஷேவ் லோஷனுக்கு வேறு பெரிய பட்ஜெட் அழுதுத் தொலைக்க வேண்டியிருக்கிறது (ஓல்டு ஸ்பைஸ் ஆச்சே?).

ஏசி காரில் அலுவலகம் செல்பவர்களுக்கும்தான் டெய்லி ஷேவிங் செட்டாகும் போல. ஒவ்வொரு நாளும் தரமணி சிக்னலில் என் பைக் பத்து நிமிடம் நிற்கும்போது, முகம் முழுக்க அனலில் வேகுகிறது. இந்த எரிச்சலில் அட்ரினல் எக்ஸ்ட்ராவாக சுரந்து, டென்ஷன் கூடி பி.பி. வேறு இஷ்டத்துக்கும் எகிறுகிறது. இதனால் அப்படியே சுகர், ஹார்ட் அட்டாட், கிட்னி ஃபெய்லியர் என்று இந்த சாதாரண ஷேவிங் எழவால், பரம்பரை குடிவெறியனுக்கு வரவேண்டிய ஏகப்பட்ட எக்ஸ்ட்ரா எழவு நோய்கள், டீடோடலரான எனக்கு வந்து சேருமோ என்றும் அச்சம் ஏற்படுகிறது.

சரி. நாலு நாளைக்கு ஷேவிங்கே வேண்டாமென்றால் 80% வெள்ளையாக தாடி முளைத்து இளமைக்கு வேட்டு வைக்கிறது. இந்த பாழாய்ப்போன மயிறு தலையில் வளர்ந்துத் தொலைந்தாலாவது, ஓரளவுக்கு வழுக்கைப் பிரச்சினையை அட்ஜஸ்ட் செய்யலாம். மாறாக தலையில் எவ்வளவுக்கு எவ்வளவு முடி கொட்டிக் கொண்டிருக்கிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு அடர்த்தியாக முகத்தில் வளர்ந்துத் தொலைக்கிறது.

பெண்களுக்குதான் நிறைய உடல்ரீதியான இஷ்யூக்கள் உண்டு என்பதைபோல பொதுப்புத்தியை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். ஆண்களுக்கு தினமும் இந்த ஷேவிங் பிரச்சினையே பெரும் பிரச்சினைதான். உள்ளாடைரீதியான பிரச்சினைகளை எல்லாம் பேச ஆரம்பித்தால் இராமாயணமே எழுதலாம். இதையெல்லாம் புலம்பிக்கொண்டா இருக்கிறோம்?

அந்த காலத்தில் முற்றும் துறந்து முனிவனாக போனவனெல்லாம் ஷேவிங் செய்ய சோம்பேறித்தனப் பட்டுதான் இமயமலைக்கு போயிருப்பான் என்று நினைக்கிறேன்.

4 ஜனவரி, 2016

நாஞ்சில் சம்பத்!

‘நெல்லை எங்களுக்கு எல்லை. குமரி எங்களுக்கு தொல்லை’ என்பது கலைஞரின் ஃபேமஸான பஞ்ச் டயலாக். நாஞ்சில் நாட்டில் என்றுமே திமுக கொஞ்சம் வீக்குதான். மொழி, இன உணர்வு மாநிலம் முழுக்க கொழுந்துவிட்டு எரிந்தாலும் காங்கிரஸ், இடதுசாரிகள், பாஜக என்று நாஞ்சில் நாடு மட்டும் தேசியநீரோட்டத்தில் டெல்லிரூட்டில்தான் என்றுமே பயணிக்கும்.

‘அண்ணா’, ‘தென்னகம்’ பத்திரிகைகளில் ‘ஆற்றல்மிகு அடலேறே!’ என்று அதிமுக தொண்டர்களை விளித்து நாஞ்சில் கி.மனோகரன் எழுதும் கடிதங்கள் எழுபதுகளில் திமுக தலைவர்களின் பி.பி.யை இஷ்டத்துக்கும் ஏற்றும். திமுகவில் உட்கட்சி குழப்பம் ஏற்பட்டபோது அவர் எழுதிய ‘கருவின் குற்றம்’ கவிதை ஏற்படுத்திய அதிர்வுகள் கொஞ்சநஞ்சமல்ல.

நாஞ்சில் சம்பத்தைப் பொறுத்தவரை மனோகரன் அளவுக்கு பெரிய தலைவர் எல்லாம் அல்ல. திமுகவில் இருந்தவரை தீப்பொறி ரேஞ்சைவிட குறைந்த நிலையில் இருந்த பேச்சாளர்தான். மதிமுகவில் இருந்த தலைவர்கள் ஒவ்வொருவராக தாய்வீட்டுக்கு படையெடுக்க இவரது கேரியர் கிராப் கொஞ்சம் கொஞ்சமாக அக்கட்சியில் ஏறத் தொடங்கியது. குறிப்பாக தொண்ணூறுகளின் இறுதியில் சம்பத்துக்கென்று கட்சி அபிமானங்களை தாண்டி நிறைய ரசிகர்கள் உருவானார்கள்.

பரங்கிமலை ஒன்றியம் என்றுமே பேச்சாளர்களின் கோட்டை. 67 மற்றும் 72 தேர்தல்களில் எம்.ஜி.ஆர் நின்று வென்ற தொகுதி பரங்கிமலை என்பதால் திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுக்குமே இது கவுரவப் பிரச்சினையான இடம். மாவீரன் மிசா ஆபிரகாம் இருந்தவரை அதிமுகவினரை திமுகவினர் ஓட ஓட விரட்டிய களம். பிரசித்தி பெற்ற செங்கை மாவட்டத்தின் கிழக்கு எல்லை.

மதிமுக உருவானபோது மதுராந்தகம் ஆறுமுகம், பாலவாக்கம் சோமு, வேளச்சேரி மணிமாறன் என்று கழக செயல்வீரர்கள் பலரும் மதிமுகவுக்கு இடம்பெயர்ந்ததால் சென்னையின் சுற்றுப்புற வட்டாரத்திலேயே மதிமுக கொடி சொல்லிக் கொள்ளும்படி இந்த ஏரியாவில்தான் பறந்தது. 2000ஆம் ஆண்டு பிறந்தநாளில் மிகச்சரியாக இரவு 12.00 மணிக்கு வைகோ ‘மில்லெனியம் புத்தாண்டு வாழ்த்துகள்’ சொன்னதே மடிப்பாக்கம் கூட்ரோடு பொதுக்கூட்டத்தில்தான்.

பரங்கிமலை ரயில்நிலையம் அருகிலிருந்த திடல் (மதி தியேட்டர் எதிரே) ரொம்ப ஃபேமஸ். தமிழக அரசியலில் கோலோச்சிய அத்தனை தலைவர்களுமே ஒருமுறையாவது அங்கே பொதுக்கூட்டத்தில் பேசியிருப்பார்கள். குறிப்பாக வெற்றிகொண்டானுக்கு அது ஹோம்கிரவுண்டு மாதிரி. தென்சென்னை தொகுதி எம்.பி.யாக இருந்த வைஜயந்திமாலா ஏற்பாட்டின் பேரில் அங்கே சுரங்கப்பாதை பணிகள் தொடங்கிய காலத்தில் இந்த திடல் பறிபோனது.

இதன் பின்னர் ஆயில்மில் பஸ்நிலையம் அருகே சர்ச்சுக்கு பக்கத்திலிருந்த காலிமனையில்தான் கட்சி பொதுக்கூட்டங்கள் அதிகளவில் நடக்கும் (இப்போது அங்கே பெட்ரோல் பங்க் இருக்கிறது). கட்சி வேறுபாடில்லாமல் நூற்றுக்கணக்கான பேச்சாளர்களின் பேச்சை இங்கே நடந்த பொதுக்கூட்டங்களில்தான் செவிமடுத்திருக்கிறேன். கடந்த பதினைந்து ஆண்டுகளில் பறிபோன பொதுக்கூட்ட திடல்களை பற்றி தனியாக ஓர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். இங்கே இந்து முன்னணி கூட்டமும் நடக்கும். அடுத்த வாரமே ஆராதனைப் பெருவிழாவும் நடக்கும். காளிமுத்து வந்து பேசுகிறார் என்றால் அடுத்த வாரமே துரைமுருகன் வருவார். இப்படி ஏட்டிக்கு போட்டியாக தொண்டர்களின் –- ரசிகர்களின் என்டெர்டெயின்மெண்டுக்கு கட்சிகள் நல்ல தீனி போட்டு வந்தன.

நாஞ்சில் சம்பத்தின் பேச்சை முதன்முதலாக இங்குதான் கேட்டேன். அனேகமாக 2002 ஆக இருக்கலாம். சில நாட்கள் முன்புதான் நாகர்கோயிலில் இருந்த அவரது பாரம்பரிய வீட்டை ஆக்கிரமிப்பு என்றுகூறி அதிமுக அரசு இடித்துத் தள்ளியிருந்தது. அன்றைக்கு நாஞ்சில், மேடையில் நடத்திக் காட்டியது ஒரு துன்பவியல் நாடகத்தின் உருக்கமான காட்சிகள். கருப்புத்துண்டை திடீரென்று இழுத்துப் பிடித்து வாள் மாதிரி உயரத் தூக்கிக் காட்டுவார். சட்டென்று அதே துண்டையெடுத்து வாய்பொத்தி கதறி கதறி அழுவார். வைகோவின் டிரேட்மார்க்கான ‘கிரேக்கத்திலே கலிங்கத்திலே’ பேச்சை அப்படியே இமிடேட் செய்தார். சங்கத்தமிழ் தண்ணி பட்ட பாடு. மாற்றுக் கட்சியின் எந்தத் தலைவருக்குமே மரியாதையில்லை. ‘அவன், அவள்’தான். அவருடைய பேச்சை முதன்முதலாக கேட்டதுமே தோன்றியது. “இவரிடம் சரக்கு சுத்தமாக இல்லை. ஆனால் கேட்பவர்களை கவரக்கூடிய ஈர்ப்பு இருக்கிறது”.

பின்னர் சில முறை மதிமுக தலைமையகமான தாயகத்தில் சந்தித்திருக்கிறேன். “இவங்களுக்கு டீ கொண்டாந்து கொடுப்பா” என்பதைகூட மேடையில் பேசும் பாவத்தில் உணர்ச்சிபூர்வமாகதான் சொல்லுவார்.

சங்கரன்கோயில் இடைத்தேர்தல் நடந்தபோது வைகோவின் கலிங்கப்பட்டி வீட்டுக்குச் சென்றிருந்தோம். வைகோ வீட்டுக்குள் ஓய்வில் இருந்தார். சாப்பிட்டுக் கொண்டிருந்த தொண்டர்களை சம்பத்தான் உபசரித்துக் கொண்டிருந்தார். அவரிடம் பேச முயன்றபோது, “சாயங்காலம் சங்கரன்கோயில் பஸ் ஸ்டேண்ட் கிட்டே பேசறேன். அங்கே வந்துருப்பா” என்றார்.

பஸ்ஸ்டேண்ட் அருகே நடந்த பொதுக்கூட்டத்தில் நல்ல கூட்டம். உணர்ச்சிபூர்வமாக நெசவாளர்களின் துயரை பண்டைய கிரேக்கக் காலத்திலிருந்தே அடுக்கிக்கொண்டு வருகிறார். நெசவாளர்கள் நிறைந்த சங்கரன்கோயிலில் நன்கு எடுப்பட்ட பேச்சு அது. அப்போது திடீரென்று திமுக கொடி கட்டிய ஆட்டோ ஒன்று அந்தப் பக்கமாக போகிறது. மைக்கில் ‘சங்கரன்கோயில் பஸ் நிலையம் அருகே பிரச்சார பீரங்கி குஷ்பு உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு கேட்டுக் கொண்டிருக்கிறார். அனைவரும் அலைகடலென திரண்டு வாரீர்’ என்று ஆட்டோவில் கட்டப்பட்ட ஹாரனில் அறிவிப்பு. கூட்டம் சலசலத்தது.

பேசிக்கொண்டிருந்த நாஞ்சில் அப்படியே பேச்சை நிறுத்துகிறார். கூட்டத்தைப் பார்க்கிறார். “எவனெல்லாம் அவளைப் பார்க்கணும்னு நெனைக்கிறீயோ, அத்தனை பேரும் அப்படியே போயிடு. இங்கே உட்காராதே. எனக்கு அருவருப்பா இருக்கு”. பாதி கூட்டம் அப்படியே அம்பேல்.

“மேக்கப் போட்ட ஒரு நடிகை வார்றான்னா, அப்படியே போறீங்களேய்யா. ஒண்ணரை லட்சம் பேரு செத்திருக்கான். இன்னும் நீ சினிமா பார்த்துட்டு, வடநாட்டு நடிகைகளை வாயைப் பிளந்து ரசிச்சிக்கிட்டு இருக்கே. இந்த நாடு உருப்படுமா. தமிழினம் வாழுமா. நமக்கெல்லாம் எதுக்குய்யா கொள்கை, புடலங்காய். பேசாம நாமள்லாம் அந்த நடிகை நடத்துற கட்சியிலேயே போயி சேர்ந்துடலாம்”

கொஞ்ச நாட்களிலேயே சம்பத், அதிமுகவுக்கு போய்விட்டார்.

19 டிசம்பர், 2015

மீட்பர்

இன்று காலை காபியோடு தினத்தந்தியை பருகிக் கொண்டிருந்தபோது ‘சன் லைஃப்’ மியூசிக் சானலில் ‘பூங்காற்று’ நிகழ்ச்சி வரவேற்பரையை நிறைத்துக் கொண்டிருந்தது.

‘பாண்டி நாட்டுத் தங்கம்’ படத்திலிருந்து ‘சிறு கூட்டுலே’ பாட்டு. வாசித்துக் கொண்டிருந்த செய்திகள் மறந்து மனசு வேறெங்கோ பறக்க ஆரம்பித்தது. அடுத்து ‘அதிசயப் பிறவி’யில் இருந்து ‘உன்னைப் பார்த்த நேரம்’. சமையலறையிலிருந்து அம்மா குரல் கொடுத்தார். “இப்போவெல்லாம் யாரு இது மாதிரி பாட்டு போடுறாங்க.... இந்தப் படமெல்லாம் உங்க அப்பாவோட ரங்கா தியேட்டருலே பார்த்தேன்”. ‘அம்மன் கோயில் கிழக்காலே’விலிருந்து ‘பூவை எடுத்து ஒரு மாலை’. விஜய்காந்த் ரசிகையான அம்மா உருகிப் போனார். சமையலை மறந்துவிட்டு பாடல்களை கேட்க அமர்ந்துவிட்டார்.

இதெல்லாம் வெறும் பாடல்கள் அல்ல. நினைவுகள்!

டீனேஜில் இருந்தபோது ஒரு மழைக்கால நள்ளிரவு. மறுநாள் காலையில் நான் என்னவாக இருக்கப் போகிறேன் என்று தெரியாத நிச்சயமற்ற சூழல். எல்லா வகையிலும் தோற்றுப்போன எனக்கு எதிர்காலமே இல்லை என்பது மட்டும் தெரிந்திருந்தது. சூடாக தேநீர் அருந்திக் கொண்டே மண்ணாங்கட்டி மூளையின் துணைகொண்டு என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தேன். டேப்ரிக்கார்டரை ஆன் செய்தார் டீ மாஸ்டர். ‘தாலாட்டுதே வானம்... தள்ளாடுதே மேகம்’. ஜெயச்சந்திரனின் குரலில் இளையராஜாவின் மேஜிக். பாடல் தொடங்கிய நொடியிலிருந்து அடுத்த நான்கு நிமிடங்களுக்கு என்னை சுற்றி என்ன நடக்கிறது என்று எதுவுமே தெரியவில்லை. பாடல் முடிந்ததுமே, புதியதாக பிறந்தவனாய் உணர்ந்தேன். கடந்துப்போன பதினேழு வருடங்கள் அத்தனையையும் மறந்தேன். மழை நனைத்த வயலாய் மனசு பளிச்சென்று ஆனது. இன்று நான் நானாக இருப்பதற்கு அந்த நாலு நிமிடங்களே காரணம்.

புத்தனுக்கு போதிமரத்தின் அடியில் கிடைத்த ஞானம் இப்படியானதாகதான் இருந்திருக்க வேண்டும். பிற்பாடு பல நண்பர்களோடு பேசிப் பழகும்போது நிறைய பேர் இதே போன்ற அனுபவத்தை ஏதோ ஒரு பாடல் மூலம் பெற்றிருக்கிறார்கள் என்பதை அறியமுடிந்தது. அத்தனை பாடல்களுமே இளையராஜா இசையமைத்தவை என்பதுதான் ஆச்சரியமான ஒற்றுமை.

கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் என் வாழ்நாளின் படுமோசமான நாட்களை கடந்தேன். ஆகஸ்ட் 24 அன்று என்னுடைய பிறந்தநாள் என்பதையே ஃபேஸ்புக்கில் வந்து குவிந்த வாழ்த்துகள் மூலம்தான் உணர்ந்தேன். என் குடும்ப விளக்கு அணைந்துவிடுமோ, குழந்தைகளின் எதிர்காலம் என்னாகுமோ என்கிற பதட்டத்தில் மனநலம் பிறழ்ந்து சுற்றிக் கொண்டிருந்த நாட்கள் அவை. தேக்கி வைத்த கண்ணீர், எந்நிமிடமும் அணையாய் உடைய தயாராக இருக்க நடைப்பிணமாய் ஆனேன். அந்த மனநிலையில் வண்டி ஓட்டும்போது ஏதேனும் விபத்து ஏற்பட்டு விடுமோ என்கிற அச்சத்தில் எந்நேரமும் கூடவே இருந்தார் அண்ணன் சிவராமன்.

அவர் உடன் இல்லாத பொழுதுகளில் எந்நேரமும் மொபைலிலும், கணினியிலும் சேகரிக்கப்பட்டிருந்த இளையராஜாதான் ஹெட்செட் மூலமாக என்னை மீட்டார். என்னைப் பொறுத்தவரை இயேசுவை மாதிரி இளையராஜாவும் ஒரு மீட்பர். மிகைப்படுத்தி சொல்வதாக தோன்றலாம்.

ராகம், தாளம் என்று இசை பற்றிய எந்த அறிவும் இல்லாத பாமரனான எனக்கு தாயின் அன்பையும், தந்தையின் அக்கறையையும் இளையராஜாவின் இசை அளித்தது. குஞ்சுக்கு தாய்ப்பறவை தரும் கதகதப்பையும், பாதுகாப்பையும் வழங்கியது என்று சொன்னால் யார்தான் நம்புவார்கள்? ஆனால், இதுதான் உண்மை. எழுதியோ, பேசியோ இந்த உணர்வுகளை யாருக்கும் கடத்தவே முடியாது. ஒவ்வொருவருமே இம்மாதிரி சூழலை எதிர்கொள்ளும் அனுபவம் மட்டுமே நான் சொல்லவருவதின் பேருண்மையை எடுத்துக் காட்டும்.

பல முறை இணையத்தளங்களிலும், நண்பர்களுடனான விவாதங்களிலும் எது எதற்கோ இளையராஜாவை லூசுத்தனமாக கிண்டலடித்திருக்கிறேன். கேணைத்தனமாக திட்டியிருக்கிறேன். அதற்காகவெல்லாம் இப்போது வருந்த வேண்டியதில்லை. என் தகப்பன் மீது நான் என்ன உரிமை எடுத்துக் கொள்வேனோ, அப்போதெல்லாம் அதே போன்ற உரிமையைதான் அவர் மீதும் எடுத்துக் கொண்டிருக்கிறேன் என்று புரிகிறது. என்னுடைய இரத்தத்திலும், உடலின் ஒவ்வொரு செல்லிலும் இளையராஜா இருக்கிறார் என்கிற புரிதலுக்கு இப்போது வந்திருக்கிறேன். அறுவைச்சிகிச்சை செய்துகூட அவரை என்னிடமிருந்து அகற்ற முடியாது.

இளையராஜாவுக்கு நாம் வெறும் ரசிகர்கள் அல்ல. அவரது இசை, ரசிப்பு என்கிற அற்ப எல்லையை எல்லாம் என்றோ தாண்டிவிட்டது. உயிரிலும் உணர்விலும் ஒன்றாக கலந்துவிட்ட மேதைமை அவரது இசை. ஒவ்வொரு தமிழனுமே மகிழ்ச்சியாக இருக்கும்போது அவனுடைய மகிழ்ச்சியின் அளவை பன்மடங்கு கூட்டுவதும், துயரத்திலிருக்கும்போது அதிலிருந்து அவனை மீட்டெடுக்கும் வல்லமையும் இளையராஜாவுக்கு மட்டுமே உண்டு. இதை மறுப்பவர்களுக்கு கேட்கும் சக்தி இல்லையென்று அர்த்தம்.

கடவுள் நம்பிக்கையற்ற நாத்திகன் நான். நமக்கு கற்பிக்கப்பட்ட எந்த கடவுளுமே இதுவரை எந்த அதிசயத்தையும் நிகழ்த்திக் காட்டியதில்லை. நம் கண் முன்னால் ஒரு புல்லை கூட பிடுங்கிப் போட்டதில்லை. ஆனால், கடவுளைவிட மேன்மையான சொல் எந்த மொழியிலும் இல்லாததால் இளையராஜாவை இப்போதைக்கு கடவுள் ஸ்தானத்தில்தான் வைக்க விரும்புகிறேன். அவரை நாம் இழக்கும் நாள்தான் நிஜமாகவே தமிழ் சமூகம் ஈடு இணை செய்ய முடியாத இழப்பினை சந்திக்கும் நாளாக இருக்கும்.

சமீபத்தில் வெளிவந்த ‘CREED’ படத்தில் சில்வஸ்டர் ஸ்டாலோன் ஓர் அபாரமான வசனத்தை பேசியிருப்பார். “காது கொடுத்து கேள். எப்போதும் நீ பேசிக்கொண்டே இருந்தால் எதையுமே கற்க முடியாது”. நம்முடைய இடியட் பாக்ஸ்கள் எப்போதும் பேசிக்கொண்டேதான் இருக்கின்றன. அவையும் கற்பதாக தெரியவில்லை. அவற்றை உபயோகிப்பவனும் எதையும் கற்கமுடியுமென்று தோன்றவில்லை.

நம்மிடையே வாழும் கடவுளை அவமதிக்கும் எவனுக்கும் பரலோகத்திலும் கூட பாவமன்னிப்பு இல்லை!

1 ஜூலை, 2015

டிஜிட்டல் நார்சிஸம்

புராதன கிரேக்க கதைகளில் வரும் ஒரு கதாபாத்திரம் நார்சிசஸ். தண்ணீரில் தெரியும் தனது பிரதிபலிப்பையே காதலிப்பான் என்பது மாதிரி கேரக்டர் ஸ்கெட்ச். இவனை முன்வைத்துதான் சிக்மண்ட் ப்ராய்ட் ‘நார்சிஸம்’ என்கிற உளவியல் கோட்பாட்டினை முன்வைக்கிறார்.

வெட்கமே இல்லாமல் எதிலும் தன்னையே முன்னிலைப்படுத்தி பேசுவதும், சிந்திப்பதுமான நிலையை ‘நார்சிஸம்’ என்கிற மனரீதியான பிரச்சினையாக சொல்கிறார்கள் மனநிலை ஆய்வாளர்கள்.

சுற்றி வளைத்துச் சொல்வானேன். எப்போது பார்த்தாலும் உங்கள் ஸ்மார்ட்போனில் செல்ஃபீ எடுத்து ஃபேஸ்புக்கில் அப்லோட் செய்து, எத்தனை லைக்கு, என்னென்ன கமெண்டு என்று வெட்டியாக பொழுதைப் போக்கிக் கொண்டிருக்கிறீர்களா?

நீங்கள் ஒரு நார்சிஸ்டாக இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்.

கூகிளில் இமேஜஸ் தேடினால் சமீபமாக செல்ஃபீ படங்கள்தான் அதிகம் தட்டுப்படுகின்றன. செல்ஃபீ என்றால் தன்னைத்தானே படமெடுத்துக் கொள்வது என்றெல்லாம் ஏ, பி, சி, டி-யில் இருந்து உங்களுக்கு சொல்லித்தர வேண்டிய அவசியமில்லைதானே?

சாமானியர்கள் பிரபலங்கள் வித்தியாசமில்லாமல் எல்லோரும் தங்களை தாங்களே படம் எடுத்துக் கொண்டு, பெருமையாக அதை மற்றவர்களிடம் பகிரும் போக்கினை ‘டிஜிட்டல் நார்சிஸம்’ என்று புதுப்பெயர் சூட்டி அழைக்கிறார்கள். ‘ஸ்ட்’-டில் முடித்தால் ஏதோ கம்யூனிஸ்ட், பெரியாரிஸ்ட் மாதிரி கவுரவமாக இருந்துத் தொலைக்கிறது. இந்த டிஜிட்டல் நார்சிஸ்ட்டுகளை டிஜிட்டல் பைத்தியங்கள் என்று அழைப்பதே முறை.

தொண்ணூறுகள் வரை ஊடகங்கள் ஏதோ தேவலோகத்தில் இருந்து இயங்கிக் கொண்டிருப்பதான தோற்றம் மக்களுக்கு இருந்தது. ஊடகங்களில் இடம்பெறும் பிரபலங்கள், சாமானியர்களால் அணுக முடியாத தேவதூதர்களாக இருந்தார்கள்.

தொலைக்காட்சித் துறையின் வளர்ச்சி காரணமாக புதிய சிந்தனைகளுக்கான, வடிவங்களுக்கான தேவை பெருகியது. தொலைக்காட்சி பெட்டிக்கு முன்பாக ஆணியடித்து செட்டில் ஆகிவிட்டவர்களுக்கு இருபத்து நான்கு மணி நேரமும் நுகர்வுப் பசியெடுத்துக் கொண்டே இருந்தது. அவர்களை திருப்திபடுத்த ரியாலிட்டி ஷோக்கள் அறிமுகப்படுத்தப் பட்டன.

தேவதூதர்கள் பூமிக்கு வந்து தரையில் கால்பதித்து சாமானியர்களோடு பேசினார்கள். சாமானியர்களுக்கும், பிரபலங்களுக்குமான இடைவெளி குறைந்தது. ஒரு பிரபலத்தை பற்றி, அந்த பிரபலத்துக்கே தெரியாத செய்திகளை எல்லாம் சாமானியன் தெரிந்து வைத்துக் கொண்டான். அச்சு, தொலைக்காட்சி ஊடகங்களின் நீட்சியாக இணையம், இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் அறிமுகப்படுத்தப்பட்டு, மில்லெனியம் ஆண்டுகளில் மகத்தான ஊடகமாக உருவெடுக்கிறது.
மரபு ஊடகங்களை முறையான பயிற்சி பெற்ற ஊடகவியலாளர்கள்தான் நடத்த முடியும். மாறாக நவீன ஊடகமான இணையம் பெரும்பாலும் சாமானியர்களை சார்ந்திருக்கிறது. ஈமெயிலில் தொடங்கி சமூகவலைத்தளங்கள் வரை அவர்களது ஆதிக்கம்தான். இணைய ஊடகத்தில் இயங்க விரும்பும் பிரபலங்கள், சாமானியர்களை தாஜா செய்துதான் தங்களை புரமோட் செய்துக்கொள்ள முடிகிறது. லைக்குகள் மற்றும் ரீட்விட்டுகளின் எண்ணிக்கைதான் அந்த பிரபலத்தின் பிரபல அளவை அளவிட உதவுகிறது.

இதற்கிடையே செல்போன் என்கிற தகவல் தொடர்பு சாதனம் வருகிறது. ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொள்ள என்கிற நிலை மாறி இது கேமிராவாகவும் செயல்படுகிறது. போட்டோ எடுப்பது மட்டுமின்றி இதில் வீடியோவும் எடுக்கலாம். செல்போனும், இணையமும் இணைந்த புள்ளிதான் முக்கியமானது.

தான் எடுத்த போட்டோவையோ, வீடியோவையே ஃபேஸ்புக்கில் பதிந்து அதை உலகின் அடுத்த மூலையில் இருப்பவனுக்கும் காட்ட முடிகிறது என்கிற ‘அதிகாரம்’ சாமானியனுக்கு கிடைக்கிறது. தானும் பிரபலம்தான் என்கிற எண்ணம் அவனுக்குள் இப்போது வேரூன்றுகிறது.

குஷ்பூவே ட்விட்டரில் தனக்கு நன்றி சொல்லிவிட்டார் என்று பக்கத்து வீட்டுக்காரனை கேவலமாக பார்க்க ஆரம்பிக்கிறான். “கலைஞரும், நானும் ஃபேஸ்புக்குலே ப்ரெண்ட்ஸ், தெரியுமா?” என்று பெருமை பேச ஆரம்பிக்கிறான்.

கருத்துக் களங்களும், வலைப்பூக்களும், சமூக வலைத்தளங்களுமாக இணையமெங்கும் திறந்து வைக்கப்பட்டிருக்கும் ஓராயிரம் வாசல்களில் கன்னாபின்னாவென்று நுழைந்து விளையாடுகிறான். நூறு லைக்கும், முப்பது கமெண்டும் பெற்றுவிட்ட பிறகு அவனாகவே ‘கெத்து’ என்று நினைத்துக் கொள்கிறான்.

‘நான்’, ‘என்’, ‘எனக்கு’, ‘என்னுடைய’, ‘என் வீடு’, ‘என் அறை’, ‘என் பைக்’ ‘என் கார்’ என்று பர்ஸ்ட் பர்சனிலேயே பேச ஆரம்பிக்கிறான். எந்நேரமும் தன்னை தானே படமெடுத்து ஃபேஸ்புக்கில் போடுகிறான். ‘நைஸ்’, ‘பியூட்டிஃபுல்’ ‘ஹேண்ட்ஸம்’ ‘அழகு’ கமெண்டுகளுக்காக ஒற்றைக்காலில் தவம் கிடக்கிறான்.

போதுமான வாசிப்போ, புரிதலோ இன்றி தத்துவங்கள் பேச ஆரம்பிக்கிறான். உலகின் சர்வ பிரச்சினைகளுக்கும் தன் சிந்தனைகளில் தீர்வு(!) காண்கிறான். ‘நான் என்ன சொல்கிறேன் என்றால்...’ ‘இந்தப் பிரச்சினையை நான் எப்படி பார்க்கிறேன் என்றால்...’ ‘குப்பையாக எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தை நான் எடுத்திருந்தேன் என்றால்...’ ‘ என்று அவனது ஈகோ, நார்சிஸத்தின் உச்சத்தை எட்டுகிறது.
வேண்டுதல் மாதிரி இவனை ஏற்றிவிடவே நூறு பைத்தியங்களாவது இணையத்தில் திரிகின்றன. ‘சாட்டையடி சகோதரி’ ‘பின்னி பெடல் எடுத்து விட்டீர்கள் நண்பா’, ‘அருமையான சிந்தனை, ஆழ்ந்த கருத்து’ மாதிரி ஓராயிரம் ஒன்லைனர் புகழாரங்களை ஒரு வேர்ட் ஃபைலில் சேமித்து வைத்துக் கொண்டு, ஆங்காங்கே ஆணி மாதிரி காபி & பேஸ்ட் அடித்துவிட்டுச் செல்வார்கள்.

இவர்களுக்கு என்ன லாபம்?

மொய் மாதிரிதான். பதிலுக்கு இவனுடைய நார்சிஸ ஸ்டேட்டஸ்களுக்கு அவர்கள் வந்து லைக் போட்டு, ‘பிரித்து மேய்ந்துவிட்டீர்கள்’ கமெண்டு போட வேண்டாமா?

இரண்டு மணி நேரம் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் லாகின் செய்து சந்தோஷமாக மேய முடிந்தால், சந்தேகமே இல்லை. சத்தியமாக நாம் மெண்டல்தான்.

நாம் வாழும் உலகமே மாபெரும் மூடர்கூடமோ என்கிற சந்தேகத்தை இணையம் ஏற்படுத்துகிறது.

(நன்றி : தினகரன் வசந்தம்)

18 மே, 2015

ஒரு பயணம்

திருவண்ணாமலையை யாராவது குன்று என்றால் எனக்கு கோபம் வந்துவிடும். உயரமாக இருக்கிறது. அது மலைதான் என்று ஆவேசமாக வாதிடுவேன். மலையை குன்று என்று சொல்வதால் என்ன பெரிய இழவு என்று நினைப்பவர்கள், பாலகுமாரனின் ’பழமுதிர் குன்றம்’ நாவலை வாசிக்கலாம். அல்லது அந்நாவலின் ஒரிஜினல் வெர்ஷனான ’The Englishman Who Went Up a Hill But Came Down a Mountain’ திரைப்படத்தைப் பார்க்கலாம். பாலகுமாரனின் நாவலில் வரும் மலை, திருவண்ணாமலைக்கு அருகில் இருப்பதாகதான் சித்தரிக்கப்பட்டிருக்கும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இத்தனைக்கும் திருவண்ணாமலை எனக்கு சொந்த ஊர் அல்ல. அந்த மாவட்டத்தில் இருக்கும் வந்தவாசியிலும் அதைச்சுற்றியிருக்கும் தாழம்பள்ளம், மருதாடு போன்ற கிராமங்களிலும் சில உறவினர்கள் இருக்கிறார்கள். அவ்வளவுதான். திருவண்ணாமலை மீது ஏற்பட்டிருக்கும் இருக்கும் நிபந்தனையில்லா ஈர்ப்புக்கு என்ன காரணமென்று தெரியவில்லை. நிச்சயமாக பக்தி அல்ல.

எஸ்.ராமகிருஷ்ணனுக்காவும், வேடியப்பனுக்காகவும் நேற்று அங்கே செல்ல வேண்டியிருந்தது.

பைக்கில் 100 கி.மீ.க்கு மேல் லாங்ரைட் அடித்து நீண்ட காலமாகி விட்டது. கடைசியாக போனது ’தடா’வுக்கு. அதற்கு முன்னர் புதுச்சேரி. லாங் பைக் ரைட் என்பது காமம் மாதிரி. ஒருமுறை அறிமுகமாகி விட்டால் விடாது கருப்பு.

நான் முதன்முதலாக ஓட்டு போட்ட சட்டமன்றத் தேர்தல் 1996ல் தமிழகத்தில் இருகட்டமாக நடந்தது (பதினெட்டு வயதில் ஓட்டுரிமை வாங்கிய பர்ஸ்ட் செட்டு நான்). விழுப்புரத்துக்கு அந்த பக்கமாக முதல் கட்டத் தேர்தல். சில நாள் இடைவெளியில் சென்னையிலும், வடமாவட்டங்களிலும் தேர்தல். லைவ்வாக தேர்தலை பார்க்க சென்னையிலிருந்து மதுரைக்கு ஜாகிர் என்கிற நண்பர் ஒருவரோடு KB100ல் கிளம்பினேன். ஜி.எஸ்.டி. ரோடு, இப்போதைபோல நவீனமடைவதற்கு முன்பு பள்ளமும், மேடுமான சாலைகளில் கடினப் பயணம். மாலை 6 மணிக்கு மேலூர் போய் சேர்ந்தபோது உடம்பின் அத்தனை எலும்புகளும் தடதடத்துப் போயிருந்தது. அன்று பிடித்த லாங் டிரைவ் பேய் இன்றுவரை ஆட்டிக் கொண்டிருக்கிறது. பைக் பயணம் பிடித்துவிட்டவர்களுக்கு பஸ், ரயில்... ஏன் விமானப் பயணம் கூட போர் அடிக்கும்.

திருவண்ணாமலைக்கு பைக்கில் பலமுறை போயிருக்கிறேன். ஹரி அண்ணனோடுதான் அடிக்கடி. அவர் பவுர்ணமிதோறும் கிரிவலம் வருவார். பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு Adreno என்கிற அட்டகாசமான பைக்கில் போனதுதான் முதல் தடவை.

கடைசியாக அங்கு போய் மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டிருந்தன. வயசாகிவிட்டது. இருந்தாலும் இம்முறை பைக்தான் என்று ஆவேச முடிவுக்கு வந்தேன். அண்ணன் சிவராமனும் கூட வருவதாக சொன்னதால் உற்சாகப் பயணம்.

அக்னிநட்சத்திரம் என்கிறார்கள். தாம்பரம் தாண்டியதுமே மார்கழி மாதிரி பயங்கர பனி. ஐந்தரைக்கு தாம்பரம். எட்டு மணிக்கு திண்டிவனத்தில் டிஃபன். அறுபதுக்கு மேல் விரட்ட அச்சமாக இருந்தது. அரிதான சந்தர்ப்பங்களில் மட்டும் எண்பதை எட்டினேன். ஒரு காலத்தில் யமஹா ஓட்டும்போது அசால்டாக நூறு. BOXER 150க்கு அவ்வளவு துப்பில்லை. நான் முன்பு வைத்திருந்த CD DAWN கூட மவுண்ட்ரோட்டிலேயே நூறை ஒருமுறை எட்டியிருக்கிறது (ஆனால், தரைக்கு அரை அடி மேலே ஓடியது போல சுத்தமாக பேலன்ஸ் இல்லை).

டிராவல்ஸ் கார்கள் நூறில் பறக்கின்றன என்றால் ஒயிட்போர்டு வண்டிகள் காஞ்சனாக்கள் மாதிரி நூற்றி இருபது. நம் வண்டியை கடக்கும்போது கிறுகிறுக்கிறது. சட்டென்று லெஃப்டிலோ, ரைட்டிலோ இண்டிகேட்டர் போட்டு நொடிகளில் ஓவர்டேக் அடிக்கிறான்கள். லோடு ஏற்றிச் செல்லும் லாரிகளை கடக்கையில், இந்த ஓவர்டேக் வெறியன்களிடம் சிக்கி சாண்ட்விச் ஆகிவிடுமோ என்று அடிவயிற்றிலிருந்து அச்சம் கிளம்புகிறது.

வழியெங்கும் காண்கையில் அடுத்த சட்டமன்றத் தேர்தல் குறித்து திமுகவினர் உற்சாகமான மனநிலையில் இருப்பது பேனர்களிலும், சுவர் விளம்பரங்களிலும் தெரிகிறது. அம்மா விடுதலை ஆகிவிட்டாலும் அதிமுகவினரிடம் அவ்வளவு ஜரூர் இல்லை. சேர்த்துவைத்த கஜானாவை இழுத்து மூடியிருக்கிறார்கள். கூடுவாஞ்சேரி-நந்திவரம் அதிமுகவினர் மட்டும் சக்திக்கு மீறி செலவழித்துக் கொண்டிருக்கிறார்கள். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வடமாவட்டங்களில் வலுவாக காலூன்றியிருந்த தேமுதிக, இப்போது இருப்பதற்கான சுவடுகளே இல்லை. பாமகவை மொத்தமாக காலி செய்திருப்பது மட்டுமே கேப்டனின் சாதனை. காங்கிரஸ், தமாக கட்சிகள் தமிழகத்தில் இருப்பதற்கான சான்றுகளை இந்த பயணத்தில் காணமுடியவில்லை. எல்லா ஊரிலுமே மார்க்சிஸ்டுகள் ஏதாவது ஒரு போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

சுற்றுச்சூழல் கொஞ்சம் சரியாகி இருக்கிறது போல. அல்லது குளோபல் வார்மிங் வார்னிங் எல்லாம் புட்டுக்கொள்ளத் தொடங்கியிருக்கிறது. வறண்டுபோன தரிசுகளில் பசுமை. மலைகளில் நிறைய மரங்கள் வளர்ந்திருக்கின்றன. கிணறு, ஏரியெல்லாம் வற்றிவிட்டாலும் ‘போர்’ போட்டு, எப்படியோ விவசாயம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் விவசாயிகள். போர்வெல்லுக்கு கட்டுப்பாடுகள் கொண்டுவந்தால் பெரும் கொந்தளிப்பை அரசு எதிர்கொள்வது நிச்சயம்.

இந்த சுற்றுச்சூழல் அவதானிப்பில் சந்தேகம் இருப்பவர்கள் கத்திப்பாரா மேம்பாலத்தில் நின்றுகொண்டு புனித தோமையர் மலையை பார்க்கலாம். பத்து ஆண்டுகளுக்கு முன்பு கரும்பாறைகளோடு கரேல் என்றிருந்த குன்று, இன்று முழுக்க வனம் மாதிரி மரங்களை வளர்த்து பசேலென்று இருக்கிறது. வட மாவட்டம் முழுக்கவே இந்த பசுமைப்புரட்சி எப்படியோ ஏற்பட்டிருக்கிறது. போனமுறை காஞ்சிபுரம் போனபோது பார்த்தேன். மீண்டும் நிறைய விவசாயிகள் உருவாகியிருக்கிறார்கள். ஒருவேளை விவசாயம் லாபகரமான தொழிலாக மாறியிருக்க வேண்டும். நவீன முறைகள் மூலம் முன்பிருந்த தடைகளை வெல்ல விவசாயிகள் கற்றுக்கொண்டிருக்க வேண்டும்.
திண்டிவனம் - செஞ்சி - திருவண்ணாமலை சாலை பயங்கர பேஜார். ஒரு கி.மீ.க்கு ஒருமுறை பூகம்பம் வந்திருக்கிறது. பள்ளத்தில் விட்டு வண்டியை கீர் மாற்றி எடுக்கும் ஒவ்வொரு வாகன ஓட்டியும் ‘அம்மா வாழ்க, குமாரசாமி வாழ்க’ என்று கோஷம் எழுப்புகிறான். தட்டு தடுமாறி போய் சேரும்போது மணி பதினொன்று. பவா செல்லதுரையின் அட்டகாசமான பண்ணையில் அருமையான இளைப்பாறல்.

ரெண்டு மணி வாக்கில் வடக்கின் வானத்தை பார்த்தபோது பயமாக இருந்தது. பிரளயம் கொண்டுவரும் கருமேகங்கள். சென்னைக்கு திரும்புவது கஷ்டமாகி விடும் போல தெரிந்ததும், நிகழ்வை முடிக்காமல், சாப்பிடாமல்கூட அவசரமாக சொல்லிவிட்டு மூன்று மணிக்கு கிளம்பிவிட்டோம்.

அதே செஞ்சி ரோட்டில் பயணிப்பதை யோசித்தால் அய்யோவென்றிருந்தது. அங்கிருந்த நண்பர் ஒருவர் அவலூர் ரூட்டை சொல்லியிருந்தார். பெங்களூர் செல்லும் பைபாஸில் அவலூர் தாண்டி இடையில் இளைப்பாறுதலுக்காக முட்டைதோசை தள்ளினோம். சாப்பிட்டுவிட்டு கிளம்பும்போது கடைக்காரர் நடுரோட்டில் பூசணிக்காய் உடைத்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார். நாம் சாப்பிட்டதால் கடைக்கு என்ன திருஷ்டி பட்டுவிடப் போகிறது என்று குழம்பினால், நேற்று அமாவாசையாம்.

சேத்பட்டை எட்டும்போதே அருகில் தெரிந்த கிளிமூக்கு மலை ஒன்றின் பாறை முகட்டை கருப்பான மேகங்கள் உரசிக் கொண்டிருந்தது. நெடுங்குணத்தை கடக்கும்போது பிசாசு மழை. ஓரங்கட்டி ஒரு மணி நேரம் நகத்தை கடித்துக் கொண்டிருந்தோம். சும்மா மொபைலை நோண்டி ஏதோ ஒரு அப்ளிகேஷனைப் புரட்டிக் கொண்டிருந்தால், நான் நெடுங்குணத்தில் வாட்டர் டேங்குக்கு கீழே கோழிக்குஞ்சு மாதிரி குளிரில் நடுங்கிக் கொண்டிருப்பது அமெரிக்காகாரனுக்கு சேட்டிலைட் மூலம் தெரிந்திருப்பதை உணர்ந்தேன். மொபைல் வைத்திருப்பவனுக்கு பிரைவஸியே கிடையாது. அங்கிருந்து மடிப்பாக்கம் 108 கி.மீ. என்று ஆறுதல் சொன்னான் (ஆக்சுவலி morethan 150 km. நம் அதிகாரிகள் யாரோ லஞ்சம் வாங்கிக்கொண்டு தப்பான தகவல்களை கூகிள் மேப்ஸுக்கு கொடுத்திருக்க வேண்டும்).

மழை கொஞ்சம் குறைந்து தூறத் தொடங்கியிருந்தது. மருவத்தூர் பைபாஸை எட்டினால்தான் நிம்மதி என்று பயணத்தைத் தொடர ஆரம்பித்தோம். கொடூரமான இருள். பயமுறுத்தும் மின்னல். நசநசவென தூறிக்கொண்டிருந்த மழை. பயங்கர குளிர். எதிரில் சரியான விஷன் இல்லை. எதிர்ப்படும் வண்டிகளின் விளக்கு வெளிச்சம் மழையில் கொடுத்த க்ளேர் வேறு கண்களை துன்புறுத்தியது. நாற்பது, ஐம்பது என்று மாட்டுவண்டி மாதிரி ஓட்டிக்கொண்டு வந்தவாசி வந்து சேர்ந்ததும்தான் உயிர் வந்தது. அங்கிருந்து மேல்மருவத்தூர் 30 கி.மீ.க்கு ஓரிரு கி.மீ. குறைவுதான். “ரோடு சூப்பர் சார்” என்று வந்தவாசிகாரர் வழி சொல்லி அனுப்பினார். ‘சூப்பர்’ என்றால் அவருடைய அகராதியில் என்ன அர்த்தமென்று தெரியவில்லை. செஞ்சி சாலை அளவுக்கு இல்லாவிட்டாலும் இதுவும் கொஞ்சம் மோசம்தான். இருட்டில் இரண்டு, மூன்று பள்ளங்களில் தொபுக்கடீர் என்று இறக்கி ஏற்றினாலும் பஜாஜ்காரனின் அட்டகாசமான சஸ்பென்ஷன் காப்பாற்றியது.

சோத்துப்பாக்கம் வழியாக மருவத்தூரை எட்டிய பிறகுதான் திராட்டலை கூட்டவே முடிந்தது. வழியெங்கும் ‘கும்பகோணம் டிகிரி காஃபி’ என்று போர்ட் வைத்திருக்கிறார்களே, குடிக்கலாம் என்று தேடினால் எல்லா பயலும் நாங்கள் வருவதையொட்டி கடையை மூடிவிட்டான் போலிருக்கிறது. நாற்பது கி.மீ.க்கு அந்தபுறமாக அப்படி மழை அடித்துக் கொண்டிருக்கிறது, இங்கே மழை என்பதற்கான சுவடுகளே இல்லை. முழுக்க நனைந்தும், முக்காடு போடாமல் வந்துகொண்டிருந்த எங்களை மெண்டல் மாதிரிதான் ஃபுல் மேக்கப்பில் இருந்த செவ்வாடை தொண்டர்கள் நினைத்திருக்கக்கூடும். சிவராமன் வேறு சிகப்புச்சட்டை போட்டிருந்தார்.

எட்டரை வாக்கில் ஜி.எஸ்.டி.யை அடைய முடிந்துவிட்டதால் ‘மேட் மேக்ஸ்’ மாதிரி வண்டியை விரட்ட முடிந்தது. பத்தரைக்கு வீட்டுக்கு வந்துவிட்டேன். மீட்டரை பார்த்தபோது 398 கி.மீ. பயணித்திருப்பது தெரிந்தது. எந்த சோர்வுமின்றி இப்போது அலுவலகத்துக்கு வர முடிந்திருக்கிறது. முதுகுவலி மாதிரி எந்த சைட் எஃபெக்டும் இல்லை. இன்னும் அவ்வளவு வயசாகவில்லை என்று உற்சாகமாகவும் இருக்கிறது. என்ஃபீல்ட் எடுத்ததுமே பர்ஸ்ட் ட்ரிப்பாக ஊட்டிக்கோ, கொடைக்கானலுக்கோ கிளம்பிவிட வேண்டும்.

23 பிப்ரவரி, 2015

உசேனி

தொண்ணூறுகளின் துவக்கத்தில் உசேனி சென்னையில் ரொம்ப ஃபேமஸ். கராத்தே, வில்வித்தை உள்ளிட்ட மார்ஷியல் ஆர்ட்ஸ் வகுப்புகளுக்கு ஆட்சேர்ப்பு என்று கருப்பு சிவப்பு வண்ணங்களில் எல்லா சுவர்களிலும் போஸ்டர் ஒட்டியிருப்பார்.

அவ்வப்போது தலைமயிரில் கயிறு கட்டி ஆம்னி காரை இழுப்பது. சுத்தியால் மார்பை அடித்துக் கொள்வது மாதிரி ஏதேனும் சாதனைகள் (!) செய்வார். புறநகர்களில் உசேனியின் சீடர்கள் என்று சொல்லி நிறைய பேர் கராத்தே க்ளாஸ் எடுக்க ஆரம்பித்தார்கள். அம்மாதிரி சீடர்களில் ஓரிருவரும் பல்லால் ஜீப்பை இழுப்பது என்றெல்லாம் சாதனை செய்ய ஆரம்பித்தார்கள்.

உசேனியின் ஒரு சாதனையை நேரில் பார்க்க பெசண்ட் நகர் கடற்கரைக்கு போயிருந்தேன். காருக்குள் தீவைத்துக் கொண்டு உள்ளே உட்கார்ந்து கொள்ள போவதாக பேப்பரில் விளம்பரம் கொடுத்திருந்தார். மாலை நான்கு மணி அளவுக்கு போயிருந்தபோது தீப்பிடிக்காத ஆடைகளை அணிந்துகொண்டு ஒரு ஓட்டை அம்பாஸடருள் போய் அமர்ந்துக் கொண்டார். சீடர்கள் கார் மீது பெட்ரோல் ஊற்றி எரித்தார்கள். ஐந்து நிமிடம் கார் எரிந்தது. உள்ளே இருந்து வெளியே வந்த உசேனி, மூர்ச்சை ஆனதைபோல தரையில் படுத்துக் கொண்டார். உடனே உடைகளை கழட்டிவிட்டு சீடர்கள் அவருக்கு விசிறி விட்டார்கள். போலிஸ் கூட ஏதோ கேஸ் போட்டதாக ஞாபகம். தீப்பிடிக்காத உடை அணிந்துகொண்டு தீக்குள் போவதில் என்ன சாதனை என்று எனக்கு புரியவேயில்லை. சினிமாவில் ஸ்டண்ட்மேன்கள் தினம் தினம் செய்யும் சாதனைதானே இதுவென்று தோன்றியது.

இதுமாதிரி அடிக்கடி செய்தித்தாள்களில் ஏதோ ‘சாதனை’ என்று இடம்பெறுவார். ஒரு கட்டத்தில் இவரது சாதனைகளை செய்தித்தாள்கள் போட மறுக்க, இவரே ஊரெங்கும் போஸ்டர் அடித்து ஒட்டினார். உசேனி ஒரிஜினல் கராத்தேகாரரோ என்னவோ தெரியாது. ஆனால் ஒரிஜினல் ஓவியர். சிற்பங்களும் செய்வார் என்பது மட்டும் உண்மை. பெசண்ட் நகரில் இருக்கும் அவரது வீட்டுக்கு தொண்ணூறுகளின் இறுதியில் அடிக்கடி போய் வந்துக் கொண்டிருந்தேன். என்னுடன் லே-அவுட் ஆர்ட்டிஸ்டாக சவுந்தர் என்றொரு மதுரைக்காரர் பணிபுரிந்துக் கொண்டிருந்தார். அவர் மதுரை ஓவியர் சங்கத்தில் ஏதோ பொறுப்பில் இருந்தவர். ஊரில் இருக்கும் போது உசேனி அவருக்கு க்ளோஸ் ஃப்ரெண்டு என்பார். புன்னகை மன்னன் படம் வந்தபோது, தியேட்டரில் கமல்ரசிகர்கள் உசேனியிடம் வம்பு செய்ததாகவும், உசேனி ஒரே செகண்டில் குங்ஃபூ கராத்தே அடி கொடுத்து பத்து பேரை வீழ்த்தியதாகவும் சவுந்தர் சொல்வார். உண்மையில் உசேனியின் ஆசை திரையுலகம்தான். சுத்தமாக இவருக்கு நடிப்பே வராது, சண்டையும் சுமார்தான் என்பதால் வேறு வழியில்லாமல் கராத்தே க்ளாஸ் ஆரம்பித்தார்.

த.மா.கா உருவானபோது அதன் சென்னை மாவட்ட செயலாளர்களில் ஒருவர் கராத்தே தியாகராஜன். இவர் நிஜமாகவே கராத்தே வீரர். உசேனி ஒரு டூப்ளிகேட், அவருக்கு கராத்தாவே தெரியாது என்பதை ஊரறிய வைத்தவர் இவர்தான். எந்த அங்கீகரிக்கப்பட்ட கராத்தே போட்டிகளிலும் உசேனியோ, அவரது சீடர்களோ கலந்துக் கொள்வதில்லை. மாறாக ஜப்பானிலிருந்து நேரடி பட்டம் என்று இவர்களாக கொடுக்கும் பெல்ட்டுகள் போலி என்று தொடர்ச்சியாக தியாகராஜன் விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தார். இதனால் உசேனியின் பிசினஸ் படுமோசமாக அடிபட ஆரம்பித்தது. அவரிடம் கராத்தே க்ளாசுக்கு சேர்ந்தவர்கள் விளக்கம் கேட்க ஆரம்பித்தார்கள். அப்போதெல்லாம் அவர் தன் பெயருக்கு முன்பாக ‘ஷீஹான்’ என்று பட்டம் போட்டுக் கொள்வார். கராத்தே தியாகராஜன், இவருடைய டவுசரை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவிழ்க்க ஆரம்பிக்க ‘ஷீஹான்’ எங்கே போனதென்றே தெரியவில்லை.

இடையில் கிடைத்த குறுகியகால புகழை வைத்து உசேனி முயற்சித்த சில தொழிற்வாய்ப்புகள் படுதோல்வி அடைந்தன. அவரது தம்பியை சினிமா ஹீரோ ஆக்கும் முயற்சிக்கு மரண அடி. திருட்டு விசிடியை தடுக்க சிறப்பு படை என்று உசேனி தயாரிப்பாளர்களிடம் பல லட்சரூபாய் வாங்கினார். ஆனால் ‘முதல்வன்’ படம் ஊர் ஊராக கோயில் திருவிழாக்களில் கூட திரையிடப்பட, உசேனி ஏடிஎம் செக்யூரிட்டி வேலைக்கு கூட லாயக்கற்றவர் என்று திரையுலகுக்கு தெரிந்தது. திருட்டு விசிடியை தடுப்பதற்கு மாறாக மாட்டிக் கொள்பவர்களிடம் ‘கட்டிங்’ வாங்கினார்கள் அவரது ஆட்கள் என்றுகூட செய்திகள் அப்போது வந்தன.

கராத்தே தியாகராஜன் தமிழ் மாநில காங்கிரஸை சேர்ந்தவர். த.மா.கா, திமுக ஆட்சியின் ஆதரவோடு இருக்கிறது என்கிற ஒரே காரணத்தினாலேயே, அவரை சமாளிக்க தன்னை அதிமுககாரர் என்பது மாதிரி காட்டிக்கொள்ள ஆரம்பித்தார். அம்மாவின் பிறந்தநாள் ஒன்றுக்கு தன்னுடைய ரத்தத்தாலேயே ஓவியம் வரைந்து அம்மாவிடம் கொடுத்து திடீரென்று அதிமுக வட்டாரங்களில் பிரபலம் ஆனார்.

அதிலிருந்து வருடாவருடம் அம்மா கண்டுகொள்கிறாரோ இல்லையோ இவர் பாட்டுக்கு இரத்தத்தில் சிலை மாதிரி ஏதாவது ‘பயங்கரமான’ சாதனையை செய்துக்கொண்டே இருக்கிறார். சில நாட்களுக்கு முன்பாக ஏதோ சிலை செய்து தருகிறேன் என்று (சசிகலா) நடராசனிடம் ஒரு கொழுத்த தொகையை ஆட்டை போட்டதும், அதை அவர் திருப்பிக் கேட்டபோது கொலை செய்ய முயற்சிக்கிறார் என்று கூப்பாடு போட்டதும் நினைவிருக்கலாம்.

கூட்டத்தில் வீறிட்டு அழுது அனைவரின் கவனத்தையும் கவர்ந்து இழுக்கும் குழந்தையை மாதிரியானவர் இவர். எனக்கென்னவோ இவருக்கு ஏதோ சீரியஸான சைக்காலஜிக்கல் பிராப்ளம் இருப்பதாகவே தோன்றுகிறது. இதே பிராப்ளம்தான் சீமானுக்கும், உமாசங்கருக்கும்கூட இருக்கும் போல.

ஆனால், ஒன்றை ஒப்புக்கொள்ள வேண்டும். நடத்துவது மன்னார் & கம்பெனிதான் என்றாலும், அதைவைத்தே இருபத்தைந்து, முப்பது ஆண்டுகளாக ஒருவர் எப்போதும் ‘லைம்லைட்’டில் இருந்துக்கொண்டே இருப்பது மாபெரும் சாதனைதான்.

16 பிப்ரவரி, 2015

எம்.ஜி.ஆரின் வயது என்ன?

1987 டிசம்பர் 24 அன்று எம்.ஜி.ஆர் இறந்தார்.

டிவியில் அவரது இறுதி ஊர்வலக் காட்சிகளை பார்த்துக் கொண்டிருந்தோம்.

முகத்தை குளோஸப்பில் காட்டும்போது, “எண்பது வயசு மாதிரியா இருக்காரு வாத்தியாரு” என்று பார்த்தசாரதி மாமா சொன்னார்.

எங்கப்பாவுக்கு கோபம் வந்துவிட்டது. “சட்டுன்னு பத்து வயசு ஏத்திட்டியே மாமா” என்றார்.

“லச்சிம்பதி, உனக்கு விஷயம் தெரியாது. எம்.ஜி.ஆர் சினிமாவுலே ரொம்ப லேட்டாதான் பிக்கப் ஆனாரு. ஹீரோயினெல்லாம் சின்னப் பொண்ணுங்குறதாலே சங்கடப்பட்டுக்கிட்டு பத்து வயசு குறைச்சு சொல்லிட்டாரு”

அதாவது 1917, ஜனவரி 17 என்பது அஃபிஷியலாக எம்.ஜி.ஆரின் பிறந்தநாள். பார்த்தசாரதி மாமாவின் கணக்குப்படி பார்த்தால் அவர் பிறந்தது 1907. பழைய வாத்தியார் ரசிகர்கள் நிறையபேர் இந்த கூற்றினை ஒப்புக் கொள்கிறார்கள்.

உண்மையில் எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் அவருக்கே தெரியாது என்பார்கள். சினிமாவில் புகழ்பெற்ற பிறகு குன்ஸாக ஏதோ ஒரு வருடத்தை சொல்லவேண்டுமே என்று யோசித்தவர், இந்திராகாந்தி பிறந்த வருடத்தையே தன்னுடைய பிறந்தவருடமாக சொல்லிவிட்டார் என்றும் சிலர் சொல்வதுண்டு.

எம்.ஜி.ஆருக்கு நிறைய மர்மங்கள் உண்டு. அவற்றில் ஒன்று அவரது வயது.

எம்.ஜி.ஆரின் சாதி பற்றிகூட இதுமாதிரி ஒன்றுக்கும் மேற்பட்ட தகவல்கள் உலவுவது உண்டு.

பிறப்பால் ஈழத்தை சார்ந்தவர். அவரது அப்பா கோபாலமேனன் கேரளத்தில் பிறந்தவர். அந்த காலத்திலேயே தலித் பெண் ஒருவரை (அன்னை சத்யா) காதலித்து திருமணம் செய்துக் கொண்டதால் சாதிப்பிரஷ்டம் செய்யப்பட்டு ஊர்விலக்கத்துக்கு உள்ளானார். எனவே பிழைப்புக்காக இலங்கை சென்று, கண்டியில் அரசுப்பணி புரிந்தார் என்பது ஊரறிந்த வரலாறு.

அப்படியில்லை. ‘மேனன்’ என்பது கோபாலனுக்கு கொடுக்கப்பட்ட கவுரவப் பட்டம், சாதியல்ல. அவரது முன்னோர் பழனிக்கு அருகில் ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர்கள். ‘மன்றாயர்’ சாதி என்று சொல்வோரும் உண்டு. எம்.ஜி.ஆரை மலையாளி என்றுகூறி தமிழகத்தில் தமிழ் அரசியல் நடந்தபோது, தானும் தமிழன்தான் என்று நிரூபிக்க எம்.ஜி.ஆர் உருவாக்கிய தியரி இதுவென்றும் சொல்வார்கள்.

கொங்கு பகுதியில் அதிமுகவின் செல்வாக்கு உலகறிந்தது. அப்பகுதியின் முக்கியப் பிரமுகர்கள் சிலர் எம்.ஜி.ஆரை ‘கவுண்டர்’ என்று நிரூபிக்க மெனக்கெட்டதும் உண்டு.

எம்.ஜி.ஆர் மேனனா, மன்றாயரா, கவுண்டரா என்று உறுதிப்படுத்த இன்று ஆட்கள் யாரும் உயிரோடு இருக்க மாட்டார்கள் என்றே எண்ணுகிறேன். போலவே அவரது பிறந்த வருடமும் 1907-ஆ அல்லது 1917-ஆ என்று துல்லியமாக ஆதாரப்பூர்வமாக சொல்லக்கூடியவர்களும் இல்லை. எனவே அதிமுகவினர் வருடாவருடம் எம்.ஜி.ஆர் பிறந்தநாளை 1917ல் கணக்கில் வைத்தே கொண்டாடுவதால், அதையே நாமும் ஏற்றுக்கொண்டாக வேண்டியிருக்கிறது.

நிலைமை இப்படியிருக்க சில வருடங்களுக்கு முன்பு ஒரு வயதான சோதிடரை மடிப்பாக்கம் ஐயப்பன் கோயில் அருகில் சந்தித்தேன். சொந்த பந்தங்களில் யாருக்காவது வரன் பார்ப்பதாக இருந்தால் இவரிடம்தான் அம்மா ஜோடிப்பொருத்தம் பார்ப்பார். இப்போது சோதிடர் எங்கிருக்கிறாரோ தெரியவில்லை.

பேச்சுவாக்கில், எம்.ஜி.ஆருக்கு சோதிடம் பார்த்திருக்கிறேன் என்றார். ஆலந்தூர் மார்க்கெட் அருகில் அப்போது சோதிடர் இருந்திருக்கிறார். 1971 தேர்தலின் போது வாக்கு சேகரிக்க வந்த எம்.ஜி.ஆர், அப்பகுதியில் பிரபலமான சோதிடராக அப்போது இருந்த இவரிடம், தன்னுடைய எதிர்காலம் குறித்து சோதிடம் கேட்டதாகவும், தான் மிகத்துல்லியமாக கணித்துச் சொன்னதாகவும் சொன்னார். “இன்னும் ஆறே வருஷத்தில் நீங்கதான் நாட்டை ஆளப் போறீங்க” என்று  சொன்னபோது எம்.ஜி.ஆர் நம்பாமல் புன்சிரிப்பு சிரித்தாராம். அவர் ஆட்சிக்கு வந்தபின் ஆள் விட்டு தன்னை தேடியதாகவும், அதற்குள்ளாக தான் இடம்மாறி விட்டதாகவும் கூடுதல் தகவல் தந்தார். “ஒருவேளை அப்போ எம்.ஜி.ஆர் ஆளுங்க என்னை கண்டுபிடிச்சி இருந்தாங்கன்னா, இப்போ என்னோட நிலைமையே வேற. நம்ம தலையில் அப்படி எழுதிவெச்சிருக்கு, நாமென்ன செய்யமுடியும்” என்று நொந்துக் கொண்டார்.

சட்டென்று எனக்குள் பல்பு எரிந்தது. “எம்.ஜி.ஆர் உங்களிடம் சோதிடம் பார்த்திருந்தால், அவருடைய பிறந்த வருடம் உங்களுக்கு சொல்லியிருப்பாரே?” என்று கேட்டேன்.

“ஆமாம், சொன்னாரு. அறுபத்தியாறாவது வயசுலே அவர் நாட்டை ஆளுவாருன்னுதான் கணிச்சேன். 1911தான் அவரோட பிறந்தவருஷம். ஏடிஎம்கே காரங்க தப்பா கொண்டாடுறாங்க” என்றார்.

ஜோதிடர்கள் அடித்துவிடுவார்கள்தான். இருந்தாலும் தேவுடா. இப்போது மூன்றாவதாக ஒரு வருடம் குதித்திருக்கிறது. எம்.ஜி.ஆரின் ரோலக்ஸ் வாட்ச் இன்னும் அவரது சமாதியில் ‘டிக் டிக்’கிக் கொண்டிருக்கிறது என்கிற மர்மத்தைபோல, அவர் பிறந்த வருடமும் மர்மத்துக்கு மேல் மர்மமாகிக் கொண்டிருக்கிறது.

எம்.ஜி.ஆரின் ஆஸ்தான (கிட்டத்தட்ட தமிழக அரசவை) ஜோதிடரான வித்வான் வே.லட்சுமணனும் கூட 1911ஐ கணக்கில் வைத்துதான் எம்.ஜி.ஆருக்கு ஜோதிடம் பார்த்திருக்கிறார் என்று முன்னெப்போதோ கேள்விப்பட்டதும் இப்போது நினைவுக்கு வருகிறது.

தமிழ் சினிமாவை முப்பதாண்டுகள் கட்டி ஆண்டவர். ஹாட்ரிக் தேர்தல் வெற்றியை அடைந்து தமிழகத்தை பத்து ஆண்டுகள் ஆட்சி புரிந்தவர். அவருடைய பிறந்த வருடம் எதுவென்று இன்னமும் துல்லியமாக நமக்கு தெரியாது.

11 பிப்ரவரி, 2015

இந்தியா டுடே

இருபத்தைந்து ஆண்டுகள் என்பது வரலாற்றுக்கு வேண்டுமானால் மிகச்சிறிய காலக்கட்டமாக இருக்கலாம். ஆனால் ஒரு தனிமனிதனின் வாழ்வில் பெரும் பங்கை எடுத்துக் கொள்ளும் காலம். சமகாலத்தில் என் கண் முன்னே பிறந்து, தன்னுடைய இறுதியை ‘இந்தியா டுடே’ எட்டுகிறது என்பது ஜீரணிக்க முடியாத நிகழ்வாக இருக்கிறது. அருண்பூரி தன் ஊழியர்களுக்கு எழுதியிருக்கும் கடிதத்தின் மூலம் இருபத்தைந்து ஆண்டுகால இந்தியா டுடே தமிழ் பதிப்பின் காலம் நிறைவடைகிறது.

அப்பத்திரிகையின் கொள்கைப்பாதையாக அடிநாதமாக தோன்றும் வலதுசாரிய தாராளமயவாத பார்வை நமக்கு ஏற்புடையது அல்ல என்றாலும், நவீனத்தமிழ் வாழ்வின் அடையாளங்களை, சிக்கல்களை, அருமை பெருமைகளை அவ்வப்போது பளிச்சென்று வெளிப்படுத்த இந்தியா டுடே தவறியதில்லை.

‘இண்டியா டுடே’ என்கிற பெயரை சண்டை போட்டு ‘இந்தியா டுடே’வாக மாலன் சார் மாற்றினார் என்பார்கள். ‘ரோஜா’ திரைப்படம் வருவதற்கு முன்பாகவே ஏ.ஆர்.ரஹ்மானின் பேட்டியை (கால்பக்க அளவுக்குதான்) வெளியிட்ட பத்திரிகை. இந்தியா டுடே பரிந்துரைக்கும் புள்ளிகள், பிரபலங்கள் சமூகத்தில் முக்கியமானவர்கள் என்கிற எண்ணம் உடனடியாக ஏற்படும். நினைவில் நிற்கக்கூடிய பல கவர்ஸ்டோரிகளை வெளியிட்ட இதழ். மண்டல் கமிஷன் பரிந்துரைகளை வி.பி.சிங் அரசாங்கம் அமல்படுத்த முனைந்தபோது டெல்லி பல்கலைகழக மாணவர் ராஜீவ்கோஸ்வாமி, தன் உடலில் தீ வைத்துக்கொண்டு மாண்ட காட்சியை இந்தியா டுடே அட்டைப்படமாக வெளியிட்டிருந்தது. இட ஒதுக்கீடு கொள்கைகளின் தாயகமான தமிழகத்தில் அது பெரிய சச்சரவினை உருவாக்கியது. ஷங்கர் இயக்கிய முதல் படமான ‘ஜெண்டில்மேன்’ திரைப்படம் மாபெரும் வெற்றியை அடையக்கூடிய கருத்தியல் பார்வைக்கும் அதுவே காரணம். நக்கீரன் பத்திரிகை வீரப்பனை முதன்முதலாக பேட்டி கண்டபோது, அதே படங்கள் இந்தியா டுடேவிலும் வெளியிடப்பட்டு ஏற்பட்ட சர்ச்சையும் நினைவுக்கு வருகிறது.

வெகுஜன வாசகர்களுக்கு இலக்கியத்தை நெருக்கமாக்கிய முயற்சிகளை ஆரம்பத்தில் இருந்தே இந்தியா டுடே தொடர்ந்துக் கொண்டிருந்தது. பத்திரிகையுலகில் பிரபலமான ‘கதை’ ஒன்று இப்போது நினைவுக்கு வருகிறது.

அது ஒரு புலனாய்வு வார இதழ் (இப்போது வாரமிருமுறை). இதழ் அச்சுக்கு போகவேண்டிய நாளில் பணியாளர்கள் எல்லோருக்கும் மூச்சு முட்டுமளவுக்கு வேலை இருக்கும். அதிரடியாக வேலை பார்த்துக் கொண்டிருந்த உதவி ஆசிரியர் ஒருவர் திடீரென மூர்ச்சை ஆனார்.

விஷயம் அறிந்த ஆசிரியர், முகத்தில் தண்ணீர் தெளித்து மயக்கத்தில் இருந்து வெளிவந்து மலங்க மலங்க விழித்துக்கொண்ட உதவி ஆசிரியரை உடனே தன்னுடைய ஜீப்பில் தூக்கிப் போட்டுக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தாராம். பரிசோதித்த மருத்துவர், பிரிஸ்கிரிப்ஷன் எழுதி கொடுத்து, “இதை ஒருவேளை சாப்பிடச் சொல்லுங்க. எல்லாம் சரியாயிடும்” என்றிருக்கிறார். மருத்துவமனையிலேயே இருந்த பார்மஸிக்கு போய் பிரிஸ்கிரிப்ஷனை காட்டியிருக்கிறார் ஆசிரியர். பார்மஸி ஆள் சிரித்துக்கொண்டே, “என்ன எழுதியிருக்கிறது பாருங்கள்” என்று திருப்பிக் கொடுத்திருக்கிறார். ‘ஒரு ஃபுல் மீல்ஸ்’ என்று எழுதியிருக்கிறார் குறும்புக்கார டாக்டர். அதாவது உதவி ஆசிரியருக்கு ஏற்பட்டிருந்தது பசி மயக்கம். தன்னுடைய ஊழியன் ஒருவன் பசியால் மயங்கிய அவலத்தை ஆசிரியரால் சகித்துக்கொள்ளவே முடியவில்லை.

எதுவும் பேசாமல் உதவி ஆசிரியரை ஒரு ஓட்டலுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். வயிறு நிரம்பச் சாப்பிட்டபிறகு ஆசிரியர் கேட்டாராம்.

“ஏன் தம்பி, சாப்பிடலை?”

“காசு இல்லை அண்ணாச்சி!”

“இஷ்யூ முடிக்கிற தேதி அன்னிக்கு எல்லாருக்கும் சாப்புட காசு கொடுக்கணும்னு அக்கவுண்டண்ட் கிட்டே சொல்லியிருக்கேனே? காசு கொடுக்கலையா?”

“அய்யோ. அப்படி இல்லைண்ணே. அவரு அதெல்லாம் கரெக்டா கொடுத்துடுவாரு”

“அப்போன்னா அந்த காசை என்ன பண்ணே?”

“இந்தியா டுடே இலக்கிய மலர் வாங்கிட்டேண்ணே”

நிஜமாகவே நடந்த சம்பவம் இது. இந்தியா டுடேவின் இலக்கிய மலர்களுக்கு எத்தகைய செல்வாக்கு இருந்தது என்பதற்கு இதைவிட பெரிய உதாரணம் தேவையில்லை.

இந்தியா டுடே தமிழில் தொடங்கியபோது நான் பள்ளி மாணவன். அப்போது ஆசிரியர்கள் இந்த இதழை தொடர்ந்து வாசிக்குமாறு மாணவர்களுக்கு பரிந்துரைப்பார்கள் (பிற்பாடு இதுமாதிரி ஆசிரியர்களால் பரிந்துரைக்கப்பட்ட பத்திரிகை ‘புதிய தலைமுறை’).

என்னுடைய அண்ணன் பாலாஜி, ஆரம்பகால இந்தியா டுடே இதழ்கள் அத்தனையையும் சேகரித்து தனித்தனியாக ‘பைண்ட்’ செய்து வைத்திருப்பார். அப்போதெல்லாம் அதுதான் எனக்கு இயர்புக். இன்றைய தலைமுறையினருக்கு இந்தியா டுடே, அதன் செக்ஸ் சர்வேக்களால் அடையாளம் காணப்படுகிறது என்பது துரதிருஷ்டவசமான நிலைமை. கமல்ஹாசனின் கலையுலகப் பொன்விழாவின் போது இந்தியா டுடே வெளியிட்ட சிறப்பிதழ் என்றென்றும் எனக்கு நினைவில் நிற்கும்.

லுங்கி கட்டிக்கொண்டு செல்பவர்கள் மால்களிலும், சினிமா தியேட்டர்களிலும் அனுமதிக்கப்படுவதில்லை என்கிற சூழல் இருந்தபோது, அதுகுறித்த என்னுடைய கருத்து போட்டோவோடு இந்தியா டுடேவில் வெளியானது. எப்படியோ சின்ன துண்டு போட்டு பாஸ்போர்ட்சைஸ் படமாகவாவது வரலாற்றில் இடம்பெற்று விட்டோம்.

குட் பை இந்தியா டுடே!

10 நவம்பர், 2014

தொடர்பு எல்லைக்கு அப்பால் கடவுள்

நவம்பர் 8, 2014 அன்று சென்னை பனுவல் புத்தக நிலையத்தில் நிகழ்ந்த, தாமிராவின் ‘தொடர்பு எல்லைக்கு அப்பால் கடவுள்’ நூல் விமர்சனக் கூட்டத்தில் பேசியதின் வரிவடிவம் :

எல்லாருக்கும் வணக்கம்.

பேச்சுன்னா எனக்கு கலைஞரைதான் பிடிக்கும். மனசுலே நினைக்கிற வேகத்துலே மைக் முன்னாடி அவராலே பேசமுடியும். எந்த நெருக்கடியிலும் கச்சிதமா எடிட் பண்ணிப் பேசுவாரு. தான் உச்சரிக்கிற ஒவ்வொரு சொல்லுக்கும் என்ன விளைவு ஏற்படும்னு அவராலே ஜோசியம் பார்த்துட்டு பேசமுடியும். ஆனா நான் மக்கள் முதல்வர் புரட்சித்தலைவி அம்மாவோட ஜெனரேஷன். திட்டமிடாம பேசினா எதையாவது உளறிக் கொட்டிடுவோமோன்னு பயம். அதனாலேதான் முன்னாடியே எழுதிவெச்சிக்கிட்டு பார்த்து பேசுறேன். மன்னிக்கவும்.

நாலஞ்சி வருஷம் முன்னாடி இருக்கும். கற்பு பத்தி குஷ்பூ தைரியமா பேசியிருந்த டைம் அது. வழக்கம்போல தமிழ்நாடே கொந்தளிச்சிடிச்சி. கல்தோன்றி மண்தோன்றா காலத்திலேயே கற்போடு வாழ்ந்த தமிழரின் பெருமையை ஒரு வடக்கத்திப் பொண்ணு இப்படி கேவலப்படுத்தினா, புலியை முறத்தாலே விரட்டின இனம் சும்மா இருக்குமா?

அந்த டயமில் ஒரு படம் வந்தது. அதிலே ஒரு குட்டிப் பாப்பாவோட பேரு குஷ்பூ.

“குஷ்பூ நீ பேசாதே!”

“குஷ்பூ செருப்பு போட்டுக்கிட்டு கோயிலுக்கு வராதே!”

“குஷ்பூ நீ எதையாவது பேசினாலே பிரச்சினைதான்!”

அட. இப்படியெல்லாம் கூட சினிமாவில் சமூக அரசியலை பேசலாமான்னு ஆச்சரியம்.

நானும் தமிழன்தான். இருந்தாலும் இந்த தமிழ் அடையாளத்தை வெச்சிக்கிட்டு ஒரு நூறு வருஷமா நாம பண்ணுற அலம்பல் நமக்கே புரியுது. அதை தைரியமா ஒத்துக்கிட்டவர் என்கிற முறையில் தாமிராவை அப்போதான் எனக்கு ரொம்ப பிடிக்க ஆரம்பிச்சது. அதுவரை அவரோட கதை சிலதை ஆனந்தவிகடனில் படிச்ச நினைவு. ஆனா, அவரு பேரு ரொம்ப ஸ்ட்ராங்கால்லாம் ரெஜிஸ்டர் ஆகலை. ‘ரெட்டச்சுழி’ படம் வந்தப்போ, அதை ஆதரிச்சி ரொம்ப பாசிட்டிவ்வா இண்டர்நெட்டுலே எழுதினது அனேகமா நான் மட்டும்தான்னு நெனைக்கிறேன்.

லேயர் லேயரா ரெட்டச்சுழியிலே தாமிரா வெச்சிருந்த உள்குத்துகள் வழக்கம்போல தமிழர்களுக்கு புரியலைன்னு தோணுது. அவங்களுக்கு டைரக்டா ‘பஞ்ச் டயலாக்’ சொல்லி, வயிறு நிறைய நாலு இட்லி சாப்பிட்டுட்டு எக்ஸ்ட்ராவது அஞ்சாவது இட்லி ஆர்டர் பண்ணுறவன் பூர்ஷ்வான்னு பப்பரப்பான்னு பேசுனாதான் புரியும்.

“அவுரு கட்சி ஆபிசுக்கு போயே பத்து வருஷம் ஆச்சி. அவராண்டே வந்து ராட்டையை காட்டிக்கிட்டு”ன்னுலாம் டயலாக் வச்சா அது எவ்ளோ பெரிய sattire. அதிர்ஷ்டவசமா இன்னிக்குவரைக்கும் அது காங்கிரஸ்காரனுக்கும் புரியலை. புதுசா வந்திருக்கிற தமிழ்மாநில காங்கிரஸ்காரனுக்கும் புரியலை. நல்லவேளை. தாமிரா தப்பிச்சார். இல்லேன்னா வேட்டி கிழிஞ்சிருக்கும்.

அண்ணன் தாமிராவோட எனக்கு பெருசா பழக்கவழக்கம் எதுவுமில்லை. ஓரிரு முறை அகஸ்மாத்தா பாத்துக்கிட்டப்போ கூட லேசா புன்னகை பண்ணியிருக்கேன். அவ்ளோதான். எனவே அப்போ ரெட்டைச்சுழியை பாசிட்டிவ்வா எழுதினதுக்கு வேறெந்த உள்நோக்கமும் இல்லைங்கிறதை இப்போ சொல்லிக்கறேன். அப்புறம் ‘தொடர்பு எல்லைக்கு அப்பால்’ என்கிற இந்த சிறுகதை தொகுப்பை பத்தியும் பாசிட்டிவ்வாதான் பேசப்போறேன். ஏதாவது தேடிக்கண்டுபிடிச்சி நெகட்டிவ்வா சொன்னா மட்டும்தான் அது விமர்சனம்னா, அப்படியொரு கலையே நமக்கு தேவையில்லை.

தாமிராவோட சில கதைகளை பத்திரிகைகளில் படிச்சப்பவும் சரி. ரெட்டச்சுழி படம் பார்த்தப்பவும் சரி. அவரோட அரசியல் என்னன்னு ரொம்ப சப்டிலா காமிக்கிறார். தமிழ் ஐடெண்டிட்டி மேலே எல்லாம் அவருக்கு பேரன்பு இருக்கு. ஆனா, ‘தமிழ், தமிழன்’னு சொல்லி கும்மி அடிச்சிக்கிட்டு மொழியை, இனத்தை வியாபாரத்துக்கு பயன்படுத்துறவங்க மேலே பெருங்கோபம் இருக்கு. இது நானா அவரைப்பத்தி guess பண்ணி வெச்சிருந்த இமேஜ்.

இந்த தொகுப்போட முன்னுரையை படிக்கறப்போ, அது கரெக்ட்டுதான்னு தோணுது.

பொதுவா எனக்கு ஒரு நம்பிக்கை உண்டு. அனேகமா அது மூடநம்பிக்கையா கூட இருக்கலாம். அதாவது படைப்பாளியோட படைப்புலே அவங்களோட பணிசார்ந்த தாக்கம் கண்டிப்பா இருக்குன்னு நம்பறேன்.

உதாரணத்துக்கு சொல்லணும்னா, சுந்தர ராமசாமியை படிச்சோம்னா அவ்வளவு பர்ஃபெக்ட்டா வார்த்தைகள் கட் பண்ணியிருக்கும். ஒவ்வொரு sentenceலேயும் எக்ஸ்ட்ராவாவும் இருக்காது. கம்மியாவும் இருக்காது. துணிக்கடையிலே ரெண்டு மீட்டர் துணி கேட்டோம்னா, ஒரு இஞ்ச் அப்படியும், ஒரு இஞ்ச் இப்படியுமா இல்லாமே ரொம்ப நறுக்கா வெட்டி கொடுப்பாங்க இல்லையா? அந்த கறாரான அளவீடு அவரோட எழுத்துகளில் இருக்கும்.

பத்திரிகையிலே வேலை செய்யுறவங்க கதை எழுதினாங்கன்னா அதுலே ரிப்போர்ட்டிங் வாசனை நிச்சயமா அடிக்கும். தினத்தந்தியிலே வேலை பார்க்குறவங்க எழுதுறப்போ ‘சதக், சதக்’, ‘கதற கதற’ ஆட்டோமேடிக்கா வந்துடும்னு எனக்கு தோணும்.

இதை கிண்டலுக்காக எல்லாம் சொல்லலை. நாம புழுங்கற மனுஷ்யங்களோட / ஏரியாவோட தாக்கம் நம்மோட கனவுகளிலேயே வர்றப்போ, கதைகளில் வர்றது ஆச்சரியமில்லை இல்லையா. ஒருவகையிலே கதைகளும் அந்த எழுத்தாளனோட கனவுகள்தானே?

படைப்பை பணிசார்ந்த அம்சம் தாக்கப்படுத்துது என்பதாலேதான் சமகால நவீன, பின்நவீனத்துவ தமிழிலக்கியத்துக்கு ஒரு குமாஸ்தா தன்மை இருக்குன்னு நெனைக்கிறேன்.

இதுக்கெல்லாம் புள்ளிவிவரம் எதுவும் எங்கிட்டே இல்லை. இது நானே உட்கார்ந்து சொந்தமா ரூம் போட்டு யோசிச்சப்போ தோணுச்சி. ஒருவேளை இதை யாராவது இண்டெக்ஸ் போட்டு, ஆராய்ச்சி பண்ணினா அனேகமா அவங்களுக்கு டாக்டர் பட்டம் கூட ஏதாவது பல்கலைக்கழகத்தாலே வழங்கப்படலாம்.

ஓக்கே. மேட்டருக்கு வர்றேன்.

தாமிராவோட கதைகளில் அவரோட பணியான சினிமா நிறைய இன்ஃப்ளுயன்ஸ் பண்ணுது. அதை சொல்லதான் இப்படி காதை சுத்தி மூக்கை தொட்டிருக்கேன்.

ஒவ்வொரு பாராவும் ஒரு ஷாட்டா இருக்கு.

ஒவ்வொரு கதையும் ரெண்டு இல்லைன்னா மூணு சீன்.

கதைகளைப் படிக்கிறப்போ எனக்கு ரீரெக்கார்டிங் கூட கேட்குது. கன்ஃபார்மா மியூசிக் இளையராஜாதான். டவுட்டே இல்லை.

இடையிடையிலே பொருத்தமான இடங்களில் பாட்டு கூட போடுறாரு.

‘அமிர்தவர்ஷினி’ கதையை படிக்கிறப்பவே மழை வந்து நாம நனைஞ்சுட்ட ஃபீலிங்.

அதிலும் கேரக்டர் இண்ட்ரொடக்‌ஷனெல்லாம் பக்கா சினிமா.

‘அடிப்படையில் குமார் ஒரு நாத்திகர். ஆனால் அவரது நாக்கில் எப்போதும் சனி குடிகொண்டிருக்கும்’னு சொல்றப்பவே இந்த கேரக்டர் மணிவண்ணனுக்குன்னு தோண ஆரம்பிச்சிடுது.

சில கதைகளில் தாமிராவோட உருவகம் அநியாயத்துக்கு மிரட்டுது.

“யூனிஃபார்மை போட்டுக்கிட்டு ஒரு கல்லறையிலேருந்து இன்னொரு கல்லறைக்கு என்னாமா ஓடுதுங்க”ன்னு சொல்றப்போ பக்குன்னு இருக்கு. திருநெல்வேலி சுடலைக்கு நகரம் மொத்தமாவே நரகம்தான். கான்க்ரீட் வீட்டை கல்லறைன்னு சொல்றான். ஸ்கூலும் கான்க்ரீட்தானே. அதுவும் இன்னொரு கல்லறை. “வாக்கரிசையை கூட இனிமே இறக்குமதிதாண்டா பண்ணனும்னு” அவன் சொல்றப்போ நெஜமாவே நாமள்லாம் சுடுகாட்டுலே அலையற ஆவிங்களோன்னு டவுட்டு வருது.

சாட்டிங், பேஸ்புக்கு, வாட்ஸப்புன்னு மாறிட்ட நவீன உலகத்துலே நுணுக்கமான மனித உறவுகளோட பொசிஸன் என்னன்னு ‘மியாவ்… மனுஷி’ங்கிற கதையிலே ஆராயறாரு. அந்த கதையிலே இண்டர்நெட்டுக்கு தாமிரா கொடுத்திருக்கும் தமிழாக்கம் அட்டகாசம். ‘வலைவனம்’. கதை இப்படி முடியுது… “வலைவனங்களெங்கும் ஏதோ ஒரு பூனை மியாவ் சொல்லிக்கொண்டேதான் இருக்கிறது”. நாமல்லாம் ரோபோவா மாறுகிற வரைக்கும் நம்மோட ஆதாரமான ஆதிகுணங்களை இழந்துட மாட்டோம்னு இந்த கதையோட மெசேஜை எடுத்துக்கிட்டேன்.

எப்பவும் தற்கொலைக்கு முயற்சிக்கிற தட்சணோட முயற்சிகள் ஊத்திக்குது. இருபத்தஞ்சி வாட்டிக்கும் மேலா அவனுக்கு மரணம் கண்ணாமூச்சி காமிக்குது. கடைசியிலே ஒருத்தன் அவங்கிட்டே வந்து புலம்பறான். “என்னை மன்னிச்சிடுங்க. உங்க கிட்டே தோத்துட்டேன். வெளியே சொல்லிடாதீங்க. மானம் போயிடும்”னு அழுவறான். அவன் தான் மரணம். சடார்னு சுஜாதா நினைவுக்கு வந்தாரு. ஒருமாதிரி குறுகுறுப்புலே மறுபடியும் கதையை முதல்லேருந்து படிச்சிப் பார்த்தோம்னா, கிறிஸ்டோபர் நோலன் லெவல் கிளாசிக். கதையோட பின்னிணைப்பா தாமிரா எழுதியிருக்கிற மரணசாசன கவிதை தீபாவளிக்கு டபுள் போனஸ் கிடைச்சமாதிரி இருக்கு.

தாமிராவோட உலகப் புகழ்பெற்ற கதை ‘ரஜினி ரசிகன்’. ரொம்ப நேரிடையான அட்டாக். பாப்புலர் லேங்குவேஜ்லே ஒரு சொசைட்டியோட ஒட்டுமொத்த ஆன்மாவை அம்பலப்படுத்துற கதை. குறைந்தபட்சம் ஒரு கோடி காமுவாவது தமிழ்நாட்டில் இருக்காங்கன்னு தோணுது. நம்பளைப் பத்தி நம்பளைவிட யாருக்கு ரொம்ப நல்லா தெரியும். நாம பொய் பேசுவோம். நாம பொறாமைப் படுவோம். நாம கோள் மூட்டுவோம். நமக்கு பர்சனலா நிறைய வீக்னஸ் இருக்கு. இதெல்லாம் மத்தவங்களுக்கு தெரியாது. நமக்கு மட்டும்தான் தெரியும்னு நெனைச்சிப்போம். ஆனா, “தம்பி. இதெல்லாம்தான் உன்னோட கேரக்டர்”ன்னு ஒருத்தரு புட்டுப்புட்டு வெச்சா எவ்ளோ கோவம் வரும். இந்த கதையை படிக்கிறப்போ அப்படிதான் எல்லாருக்கும் கோவம் வரணும். எனக்கு வரலை. நல்லவேளையா நான் கமல் ரசிகன். கமலைப் பத்தி அண்ணன் ஏதாவது எழுதினாருன்னாதான் டென்ஷன் ஆவேன்.

பொதுவா இதுமாதிரி சினிமாப் பைத்தியங்களை பத்தி வெளியிலேருந்து நிறைய பேர் விமர்சிச்சிருக்காங்க. குறிப்பா பத்திரிகையாளர்களும், எழுத்தாளர்களும். ஆனா ஒரு சினிமாக்காரரே ரொம்ப தெகிரியமா தன்னோட துறையின் சூப்பர்ஸ்டாரை, பலமான ஆதாரங்களை வெச்சிக்கிட்டு அம்பலப்படுத்துறது ரொம்ப துணிச்சலான முயற்சி. ரஜினி கிட்டே கால்ஷீட் வாங்கி, படமெடுக்கிற எண்ணமே அண்ணனுக்கு இல்லைன்னு தோணுது.

எல்லாத்தையும் விட தொகுப்போட க்ளைமேக்ஸ் கொடுக்குற அற்புத அனுபவம்தான் இந்த புத்தகத்தை தலைமேலே தூக்கிவெச்சி என்னை கொண்டாட சொல்லுது. எனக்கு வைரமுத்துவை ரொம்ப பிடிக்கும். இளையராஜாவை ரொம்ப ரொம்ப பிடிக்கும். அனேகமா காது கேட்குற தமிழனில் தொண்ணூறு சதவிகிதம் பேருக்காவது இவங்களை சேர்த்துவெச்சி பிடிக்கும். அவங்க சேர்ந்திருந்த ஆறேழு வருஷம் தமிழ் திரையிசையின் பொற்காலம் என்பதை யாரும் மறுத்துட முடியாது. இந்த பிரிவுக்கு என்ன காரணம்னு ஒவ்வொருத்தனுக்கும் இருவத்தஞ்சி வருஷமா மண்டை காய்ஞ்சிக்கிட்டிருக்கு. தமிழனோட இந்த உணர்வை சைக்காலஜிக்கலா அணுகற கதை அது.

ஒட்டுமொத்தமா இந்த தொகுப்பை பத்தி சொல்லணும்னா, பதினைஞ்சி படத்தை அடுத்தடுத்து பார்த்த இனிமையான அனுபவத்தை எனக்கு கொடுக்குது. பிழியப் பிழிய டிராமா பண்ணவேண்டிய விஷயங்களைகூட ‘லைட்டர் வெர்ஷனில்’ கொடுக்கிறாரு. சமகால அரசியல் சமூக அங்கதம் அங்கங்கே அழகா விரவியிருக்கு. குறிப்பா கடவுள், மரணம்னு விடை தெரியாத விஷயங்களுக்கு… அறிவியலால் ஒப்புக்கொள்ளப்படவோ, நிராகரிக்கப்படவோ முடியாதது பத்தின அலசல் அடிக்கடி வருது.

தான் எழுதுறது இலக்கியங்கிற கான்சியஸ் எல்லாம் இல்லாமே இயல்பான வெளிப்பாடா எழுதியிருக்கிறாரு. ஒரு கதை இலக்கியம்னு ஒப்புக்கப்படணும்னா அதுக்கு நிறைய சங்கேதவார்த்தைகளை அங்கங்கே மானே, தேனேன்னு தூவணும்னாதான் இப்போ ஒத்துக்கிறாங்க. அதிலும் கதையை படிச்சதுமே வாசகனுக்கு புரிஞ்சிடக் கூடாதுன்னு எழுத்தாளர்கள் ரொம்ப தீவிரமா இருக்காங்க. சில கதைகளை படிக்கிறப்போ இந்த கதை எழுதினவருக்கே புரியுமான்னுகூட எனக்கு அப்பப்போ சந்தேகம் வரும். அந்த மாதிரி பாவனைகள் எதுவுமே இல்லாம நேரடியாக வாசகனோட மானசீகமா உரையாடுது தாமிராவோட எழுத்து.

லேங்குவேஜோட கொஞ்சம் இண்டெலெக்ச்சுவல் ஃபார்ம் - ‘மொழியின் அறிவுப்பூர்வமான வெளிப்பாடு’தான் இலக்கியம்னு நம்பறேன். அந்த வகையில் தாமிராவோட இந்தத் தொகுப்பு இப்போதைய சூழலுக்கு அவசியமான இலக்கியம் என்கிற எண்ணம் எனக்கிருக்கு. பரவலாக வாசிக்கப்பட வேண்டிய புத்தகம் என்கிற அபிப்ராயம் உருவாகியிருக்கு. முக்கியமா தாமிரா இனி எழுதற கதைகளையும் மோசமா அவராலே எழுதவே முடியாதுங்கிற ஸ்ட்ராங் ஃபீலிங் வந்திருக்கு.

இந்த கதைகளில் அவருக்கு கிடைச்சிருக்கிற ப்ளாக்பஸ்டர்ஹிட் விரைவில் சினிமாவிலும் கிடைக்கணும்னு, அவரோட முதல் படத்தை இன்னமும் நேசிக்கிற தரைடிக்கெட் ரசிகனாக வாழ்த்துகிறேன். நன்றி. வணக்கம்.
நூல் : தொடர்பு எல்லைக்கு அப்பால் கடவுள்
ஆசிரியர் : தாமிரா
விலை : ரூ. 100
வெளியீடு : நாளந்தா