18 மே, 2015

ஒரு பயணம்

திருவண்ணாமலையை யாராவது குன்று என்றால் எனக்கு கோபம் வந்துவிடும். உயரமாக இருக்கிறது. அது மலைதான் என்று ஆவேசமாக வாதிடுவேன். மலையை குன்று என்று சொல்வதால் என்ன பெரிய இழவு என்று நினைப்பவர்கள், பாலகுமாரனின் ’பழமுதிர் குன்றம்’ நாவலை வாசிக்கலாம். அல்லது அந்நாவலின் ஒரிஜினல் வெர்ஷனான ’The Englishman Who Went Up a Hill But Came Down a Mountain’ திரைப்படத்தைப் பார்க்கலாம். பாலகுமாரனின் நாவலில் வரும் மலை, திருவண்ணாமலைக்கு அருகில் இருப்பதாகதான் சித்தரிக்கப்பட்டிருக்கும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இத்தனைக்கும் திருவண்ணாமலை எனக்கு சொந்த ஊர் அல்ல. அந்த மாவட்டத்தில் இருக்கும் வந்தவாசியிலும் அதைச்சுற்றியிருக்கும் தாழம்பள்ளம், மருதாடு போன்ற கிராமங்களிலும் சில உறவினர்கள் இருக்கிறார்கள். அவ்வளவுதான். திருவண்ணாமலை மீது ஏற்பட்டிருக்கும் இருக்கும் நிபந்தனையில்லா ஈர்ப்புக்கு என்ன காரணமென்று தெரியவில்லை. நிச்சயமாக பக்தி அல்ல.

எஸ்.ராமகிருஷ்ணனுக்காவும், வேடியப்பனுக்காகவும் நேற்று அங்கே செல்ல வேண்டியிருந்தது.

பைக்கில் 100 கி.மீ.க்கு மேல் லாங்ரைட் அடித்து நீண்ட காலமாகி விட்டது. கடைசியாக போனது ’தடா’வுக்கு. அதற்கு முன்னர் புதுச்சேரி. லாங் பைக் ரைட் என்பது காமம் மாதிரி. ஒருமுறை அறிமுகமாகி விட்டால் விடாது கருப்பு.

நான் முதன்முதலாக ஓட்டு போட்ட சட்டமன்றத் தேர்தல் 1996ல் தமிழகத்தில் இருகட்டமாக நடந்தது (பதினெட்டு வயதில் ஓட்டுரிமை வாங்கிய பர்ஸ்ட் செட்டு நான்). விழுப்புரத்துக்கு அந்த பக்கமாக முதல் கட்டத் தேர்தல். சில நாள் இடைவெளியில் சென்னையிலும், வடமாவட்டங்களிலும் தேர்தல். லைவ்வாக தேர்தலை பார்க்க சென்னையிலிருந்து மதுரைக்கு ஜாகிர் என்கிற நண்பர் ஒருவரோடு KB100ல் கிளம்பினேன். ஜி.எஸ்.டி. ரோடு, இப்போதைபோல நவீனமடைவதற்கு முன்பு பள்ளமும், மேடுமான சாலைகளில் கடினப் பயணம். மாலை 6 மணிக்கு மேலூர் போய் சேர்ந்தபோது உடம்பின் அத்தனை எலும்புகளும் தடதடத்துப் போயிருந்தது. அன்று பிடித்த லாங் டிரைவ் பேய் இன்றுவரை ஆட்டிக் கொண்டிருக்கிறது. பைக் பயணம் பிடித்துவிட்டவர்களுக்கு பஸ், ரயில்... ஏன் விமானப் பயணம் கூட போர் அடிக்கும்.

திருவண்ணாமலைக்கு பைக்கில் பலமுறை போயிருக்கிறேன். ஹரி அண்ணனோடுதான் அடிக்கடி. அவர் பவுர்ணமிதோறும் கிரிவலம் வருவார். பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு Adreno என்கிற அட்டகாசமான பைக்கில் போனதுதான் முதல் தடவை.

கடைசியாக அங்கு போய் மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டிருந்தன. வயசாகிவிட்டது. இருந்தாலும் இம்முறை பைக்தான் என்று ஆவேச முடிவுக்கு வந்தேன். அண்ணன் சிவராமனும் கூட வருவதாக சொன்னதால் உற்சாகப் பயணம்.

அக்னிநட்சத்திரம் என்கிறார்கள். தாம்பரம் தாண்டியதுமே மார்கழி மாதிரி பயங்கர பனி. ஐந்தரைக்கு தாம்பரம். எட்டு மணிக்கு திண்டிவனத்தில் டிஃபன். அறுபதுக்கு மேல் விரட்ட அச்சமாக இருந்தது. அரிதான சந்தர்ப்பங்களில் மட்டும் எண்பதை எட்டினேன். ஒரு காலத்தில் யமஹா ஓட்டும்போது அசால்டாக நூறு. BOXER 150க்கு அவ்வளவு துப்பில்லை. நான் முன்பு வைத்திருந்த CD DAWN கூட மவுண்ட்ரோட்டிலேயே நூறை ஒருமுறை எட்டியிருக்கிறது (ஆனால், தரைக்கு அரை அடி மேலே ஓடியது போல சுத்தமாக பேலன்ஸ் இல்லை).

டிராவல்ஸ் கார்கள் நூறில் பறக்கின்றன என்றால் ஒயிட்போர்டு வண்டிகள் காஞ்சனாக்கள் மாதிரி நூற்றி இருபது. நம் வண்டியை கடக்கும்போது கிறுகிறுக்கிறது. சட்டென்று லெஃப்டிலோ, ரைட்டிலோ இண்டிகேட்டர் போட்டு நொடிகளில் ஓவர்டேக் அடிக்கிறான்கள். லோடு ஏற்றிச் செல்லும் லாரிகளை கடக்கையில், இந்த ஓவர்டேக் வெறியன்களிடம் சிக்கி சாண்ட்விச் ஆகிவிடுமோ என்று அடிவயிற்றிலிருந்து அச்சம் கிளம்புகிறது.

வழியெங்கும் காண்கையில் அடுத்த சட்டமன்றத் தேர்தல் குறித்து திமுகவினர் உற்சாகமான மனநிலையில் இருப்பது பேனர்களிலும், சுவர் விளம்பரங்களிலும் தெரிகிறது. அம்மா விடுதலை ஆகிவிட்டாலும் அதிமுகவினரிடம் அவ்வளவு ஜரூர் இல்லை. சேர்த்துவைத்த கஜானாவை இழுத்து மூடியிருக்கிறார்கள். கூடுவாஞ்சேரி-நந்திவரம் அதிமுகவினர் மட்டும் சக்திக்கு மீறி செலவழித்துக் கொண்டிருக்கிறார்கள். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வடமாவட்டங்களில் வலுவாக காலூன்றியிருந்த தேமுதிக, இப்போது இருப்பதற்கான சுவடுகளே இல்லை. பாமகவை மொத்தமாக காலி செய்திருப்பது மட்டுமே கேப்டனின் சாதனை. காங்கிரஸ், தமாக கட்சிகள் தமிழகத்தில் இருப்பதற்கான சான்றுகளை இந்த பயணத்தில் காணமுடியவில்லை. எல்லா ஊரிலுமே மார்க்சிஸ்டுகள் ஏதாவது ஒரு போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

சுற்றுச்சூழல் கொஞ்சம் சரியாகி இருக்கிறது போல. அல்லது குளோபல் வார்மிங் வார்னிங் எல்லாம் புட்டுக்கொள்ளத் தொடங்கியிருக்கிறது. வறண்டுபோன தரிசுகளில் பசுமை. மலைகளில் நிறைய மரங்கள் வளர்ந்திருக்கின்றன. கிணறு, ஏரியெல்லாம் வற்றிவிட்டாலும் ‘போர்’ போட்டு, எப்படியோ விவசாயம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் விவசாயிகள். போர்வெல்லுக்கு கட்டுப்பாடுகள் கொண்டுவந்தால் பெரும் கொந்தளிப்பை அரசு எதிர்கொள்வது நிச்சயம்.

இந்த சுற்றுச்சூழல் அவதானிப்பில் சந்தேகம் இருப்பவர்கள் கத்திப்பாரா மேம்பாலத்தில் நின்றுகொண்டு புனித தோமையர் மலையை பார்க்கலாம். பத்து ஆண்டுகளுக்கு முன்பு கரும்பாறைகளோடு கரேல் என்றிருந்த குன்று, இன்று முழுக்க வனம் மாதிரி மரங்களை வளர்த்து பசேலென்று இருக்கிறது. வட மாவட்டம் முழுக்கவே இந்த பசுமைப்புரட்சி எப்படியோ ஏற்பட்டிருக்கிறது. போனமுறை காஞ்சிபுரம் போனபோது பார்த்தேன். மீண்டும் நிறைய விவசாயிகள் உருவாகியிருக்கிறார்கள். ஒருவேளை விவசாயம் லாபகரமான தொழிலாக மாறியிருக்க வேண்டும். நவீன முறைகள் மூலம் முன்பிருந்த தடைகளை வெல்ல விவசாயிகள் கற்றுக்கொண்டிருக்க வேண்டும்.
திண்டிவனம் - செஞ்சி - திருவண்ணாமலை சாலை பயங்கர பேஜார். ஒரு கி.மீ.க்கு ஒருமுறை பூகம்பம் வந்திருக்கிறது. பள்ளத்தில் விட்டு வண்டியை கீர் மாற்றி எடுக்கும் ஒவ்வொரு வாகன ஓட்டியும் ‘அம்மா வாழ்க, குமாரசாமி வாழ்க’ என்று கோஷம் எழுப்புகிறான். தட்டு தடுமாறி போய் சேரும்போது மணி பதினொன்று. பவா செல்லதுரையின் அட்டகாசமான பண்ணையில் அருமையான இளைப்பாறல்.

ரெண்டு மணி வாக்கில் வடக்கின் வானத்தை பார்த்தபோது பயமாக இருந்தது. பிரளயம் கொண்டுவரும் கருமேகங்கள். சென்னைக்கு திரும்புவது கஷ்டமாகி விடும் போல தெரிந்ததும், நிகழ்வை முடிக்காமல், சாப்பிடாமல்கூட அவசரமாக சொல்லிவிட்டு மூன்று மணிக்கு கிளம்பிவிட்டோம்.

அதே செஞ்சி ரோட்டில் பயணிப்பதை யோசித்தால் அய்யோவென்றிருந்தது. அங்கிருந்த நண்பர் ஒருவர் அவலூர் ரூட்டை சொல்லியிருந்தார். பெங்களூர் செல்லும் பைபாஸில் அவலூர் தாண்டி இடையில் இளைப்பாறுதலுக்காக முட்டைதோசை தள்ளினோம். சாப்பிட்டுவிட்டு கிளம்பும்போது கடைக்காரர் நடுரோட்டில் பூசணிக்காய் உடைத்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார். நாம் சாப்பிட்டதால் கடைக்கு என்ன திருஷ்டி பட்டுவிடப் போகிறது என்று குழம்பினால், நேற்று அமாவாசையாம்.

சேத்பட்டை எட்டும்போதே அருகில் தெரிந்த கிளிமூக்கு மலை ஒன்றின் பாறை முகட்டை கருப்பான மேகங்கள் உரசிக் கொண்டிருந்தது. நெடுங்குணத்தை கடக்கும்போது பிசாசு மழை. ஓரங்கட்டி ஒரு மணி நேரம் நகத்தை கடித்துக் கொண்டிருந்தோம். சும்மா மொபைலை நோண்டி ஏதோ ஒரு அப்ளிகேஷனைப் புரட்டிக் கொண்டிருந்தால், நான் நெடுங்குணத்தில் வாட்டர் டேங்குக்கு கீழே கோழிக்குஞ்சு மாதிரி குளிரில் நடுங்கிக் கொண்டிருப்பது அமெரிக்காகாரனுக்கு சேட்டிலைட் மூலம் தெரிந்திருப்பதை உணர்ந்தேன். மொபைல் வைத்திருப்பவனுக்கு பிரைவஸியே கிடையாது. அங்கிருந்து மடிப்பாக்கம் 108 கி.மீ. என்று ஆறுதல் சொன்னான் (ஆக்சுவலி morethan 150 km. நம் அதிகாரிகள் யாரோ லஞ்சம் வாங்கிக்கொண்டு தப்பான தகவல்களை கூகிள் மேப்ஸுக்கு கொடுத்திருக்க வேண்டும்).

மழை கொஞ்சம் குறைந்து தூறத் தொடங்கியிருந்தது. மருவத்தூர் பைபாஸை எட்டினால்தான் நிம்மதி என்று பயணத்தைத் தொடர ஆரம்பித்தோம். கொடூரமான இருள். பயமுறுத்தும் மின்னல். நசநசவென தூறிக்கொண்டிருந்த மழை. பயங்கர குளிர். எதிரில் சரியான விஷன் இல்லை. எதிர்ப்படும் வண்டிகளின் விளக்கு வெளிச்சம் மழையில் கொடுத்த க்ளேர் வேறு கண்களை துன்புறுத்தியது. நாற்பது, ஐம்பது என்று மாட்டுவண்டி மாதிரி ஓட்டிக்கொண்டு வந்தவாசி வந்து சேர்ந்ததும்தான் உயிர் வந்தது. அங்கிருந்து மேல்மருவத்தூர் 30 கி.மீ.க்கு ஓரிரு கி.மீ. குறைவுதான். “ரோடு சூப்பர் சார்” என்று வந்தவாசிகாரர் வழி சொல்லி அனுப்பினார். ‘சூப்பர்’ என்றால் அவருடைய அகராதியில் என்ன அர்த்தமென்று தெரியவில்லை. செஞ்சி சாலை அளவுக்கு இல்லாவிட்டாலும் இதுவும் கொஞ்சம் மோசம்தான். இருட்டில் இரண்டு, மூன்று பள்ளங்களில் தொபுக்கடீர் என்று இறக்கி ஏற்றினாலும் பஜாஜ்காரனின் அட்டகாசமான சஸ்பென்ஷன் காப்பாற்றியது.

சோத்துப்பாக்கம் வழியாக மருவத்தூரை எட்டிய பிறகுதான் திராட்டலை கூட்டவே முடிந்தது. வழியெங்கும் ‘கும்பகோணம் டிகிரி காஃபி’ என்று போர்ட் வைத்திருக்கிறார்களே, குடிக்கலாம் என்று தேடினால் எல்லா பயலும் நாங்கள் வருவதையொட்டி கடையை மூடிவிட்டான் போலிருக்கிறது. நாற்பது கி.மீ.க்கு அந்தபுறமாக அப்படி மழை அடித்துக் கொண்டிருக்கிறது, இங்கே மழை என்பதற்கான சுவடுகளே இல்லை. முழுக்க நனைந்தும், முக்காடு போடாமல் வந்துகொண்டிருந்த எங்களை மெண்டல் மாதிரிதான் ஃபுல் மேக்கப்பில் இருந்த செவ்வாடை தொண்டர்கள் நினைத்திருக்கக்கூடும். சிவராமன் வேறு சிகப்புச்சட்டை போட்டிருந்தார்.

எட்டரை வாக்கில் ஜி.எஸ்.டி.யை அடைய முடிந்துவிட்டதால் ‘மேட் மேக்ஸ்’ மாதிரி வண்டியை விரட்ட முடிந்தது. பத்தரைக்கு வீட்டுக்கு வந்துவிட்டேன். மீட்டரை பார்த்தபோது 398 கி.மீ. பயணித்திருப்பது தெரிந்தது. எந்த சோர்வுமின்றி இப்போது அலுவலகத்துக்கு வர முடிந்திருக்கிறது. முதுகுவலி மாதிரி எந்த சைட் எஃபெக்டும் இல்லை. இன்னும் அவ்வளவு வயசாகவில்லை என்று உற்சாகமாகவும் இருக்கிறது. என்ஃபீல்ட் எடுத்ததுமே பர்ஸ்ட் ட்ரிப்பாக ஊட்டிக்கோ, கொடைக்கானலுக்கோ கிளம்பிவிட வேண்டும்.

1 கருத்து: