11 மே, 2015

தீர்ப்பு யாருக்கு சாதகம்?

முதலிலேயே சொல்லிவிடுகிறேன்.

ஜெ, விடுவிக்கப்பட்டது மகிழ்ச்சியையும், நிம்மதியையும் தருகிறது (திமுக தலைவருக்கும் அப்படிதான் இருக்குமென்று யூகிக்கிறேன்).

இந்திய நீதித்துறையின் மீது மக்கள் நம்பிக்கை கொள்ளக்கூடிய நிலை இன்று நிச்சயமாக இல்லை. பலகீனமான நீதித்துறை என்று ஜெ.வுக்கு தண்டனை அளித்தபோது நாம் விமர்சித்தபோது நம்மை திட்டித் தீர்த்தவர்கள், இன்று அதை ஒப்புக் கொள்வார்கள். பதினெட்டு ஆண்டுகளாக இழுத்துக்கொண்டிருந்த வழக்கு, உச்சநீதிமன்றத்தின் மேல்முறையீட்டுக்கு செல்லுமேயானால் இறுதித் தீர்ப்பினை பெற இன்னும் நூற்றி எண்பது ஆண்டுகள் கூட ஆகலாம்.

இந்தியாவில் ‘நக்சல்பாரிகள்’ உருவாவதற்கான அத்தனை நியாயங்களையும் இந்திய ஜனநாயகத்தின் நான்கு தூண்களுமே உருவாக்கி வைத்திருக்கின்றன.

சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னமும் ஓராண்டுகள் கூட முழுமையாக இல்லாத நிலையில் வந்திருக்கும் குமாரசாமியின் தீர்ப்பு, தமிழகத்தில் எந்தெந்த கட்சிகளுக்கு என்னமாதிரியான சாதகபாதகங்களை ஏற்படுத்தக்கூடும் என்று பார்ப்போம்.

இது, அதிமுகவுக்கு ஆதரவான தீர்ப்பாக அதிமுகவின் அடிமைகள் (தொண்டர்கள் என்கிற சொல், இக்கட்சியைப் பொறுத்தவரை சரியான பொருளில் வராது) எண்ணலாம். மாறாக, இத்தீர்ப்பால் அதிக பலன்களை அறுவடை செய்ய இருப்பது திமுகவே என்று தோன்றுகிறது.

கடந்த தேர்தலில் அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திமுகவுக்கு எதிராக பிரயோகித்த ஆயுதம் ஊழல். திமுக அதனாலேயே படுதோல்வி அடைந்து, அக்கட்சியின் பல்வேறு மட்டத் தலைவர்கள் நிலஅபகரிப்பு / சொத்துக்குவிப்பு வழக்குகளை மாவட்டம் தோறும் சந்தித்து வருகிறார்கள். தேசிய அளவில் 2ஜி உள்ளிட்ட கத்திகளும் தலைக்கு மேலே தொங்கிக்கொண்டு அவ்வப்போது அச்சமூட்டுகிறது. இந்த வழக்குகளோடு தேர்தலில் மக்களை சந்திக்க நேரவேண்டிய சங்கடம், குமாரசாமியால் அடியோடு துடைக்கப்பட்டிருக்கிறது.

அம்மா ‘உள்ளே’ எனும் நிலை இருந்தால், 91ல் ஏற்பட்டிருந்த அனுதாப அலையை போன்ற சுனாமியை எதிர்கொண்டாக வேண்டிய நெருக்கடி திமுகவுக்கு இருந்திருக்கும். “ஆயிரம்தான் இருந்தாலும் ஒரு பொம்பளையை கருணாநிதி உள்ளே தள்ளியிருக்கக் கூடாது” என்கிற தமிழர்களின் இரக்க மனோபாவத்தை வெல்ல திமுக ஏழு கடல், ஏழு மலையை கடக்கவேண்டிய சிரமத்தை அடைந்திருக்கும். இப்போது அம்மாதிரி தொல்லைகள் இல்லாமல், கடந்த ஐந்தாண்டுகால ஆட்சியின் அவலங்கள், ஊழல் முறைகேடுகள், வளர்ச்சியற்று ஸ்தம்பித்துவிட்ட நிர்வாகம், விலைவாசி உயர்வு என்றெல்லாம் மக்களுக்கு ‘பிடித்தமான’ சப்ஜெக்ட்டுகளை பிரச்சாரத்தில் பேசக்கூடிய சுதந்திரம் அக்கட்சியினருக்கு கிடைத்திருக்கிறது. ஏற்கனவே ஸ்டாலின் சலங்கை கட்டி ஆடுவார். இத்தீர்ப்பு வெளிவந்திருக்கும் சூழலில் ருத்திரத் தாண்டவம் ஆடக்கூடிய வாய்ப்பு அவருக்கு.

அதிமுகவைப் பொறுத்தவரை அம்மா வெளியே வந்துவிட்டார் என்பதுதான் லாபம். அம்மா, நீதியை வென்று வெளியே வந்தார் என்று அவர்களால் மக்களுக்கு நிரூபிக்க முடியாது. “கோர்ட்டில் பணம் விளையாடிடிச்சி...” என்று பேசும் மக்களிடம், தங்களை நிரூபிக்கவே அவர்களுக்கு அடுத்த சில மாதங்களுக்கு தாவூ தீரும்.

திமுகவுக்கு எதிராக மாறிக்கொண்டிருந்த தமிழ் நடுத்தர வர்க்கத்து மனோபாவம், இந்த தீர்ப்பால் திடீர் தடை பெற்றிருப்பதுதான் அதிமுகவுக்கு நிஜமான இழப்பு. குமாரசாமியின் தீர்ப்பினை, ஊழலற்ற இந்தியா கனவில் மிதக்கும் ‘ஜெய் ஹோ’ தலைமுறை ரசிக்கப் போவதில்லை. கடந்த தேர்தலில் முதன்முறையாக வாக்களித்த இந்த மாபெரும் கூட்டம், இரட்டை இலைக்கு வாக்கு இயந்திர பொத்தான்களை சரமாரியாக அமுக்கித் தள்ளியது என்பது குறிப்பிடத்தக்கது.

நியாயமாக இந்த சூழலில் அமோக அறுவடை செய்யவேண்டியது, சட்டமன்ற எதிர்க்கட்சியான தேமுதிகதான்.

ஆனால்-

கடந்த தேர்தலில் அதிமுகவோடு கூட்டணி வைத்ததால்தான் விஜயகாந்த் வெல்ல முடிந்தது என்கிற பொதுக்கருத்தை தவறென்று நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் அக்கட்சி இருக்கிறது. அதற்காக தனியாக போட்டியிட்டு, ‘கெத்து’ காட்ட நினைத்தால், நிலைமை என்னாகும் என்று விஜயகாந்துக்கும் தெரியும், பிரேமலதாவுக்கும் தெரியும்.

பாஜக கூட்டணியில் இன்னமும் தேமுதிக நீடிக்கிறது என்று வைத்துக் கொண்டாலும், சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் அளவுக்கு இந்த கூட்டணி வலுவானது அல்ல. அதற்காக திமுகவோடு கூட்டணி வைத்துக் கொண்டால், எதிர்காலத்தில் எப்போதுமே முதல்வர் கனவு காணமுடியாது. அப்படியொரு நிலைமை ஏற்படும் பட்சத்தில் இன்றைய பாமகவுக்கான இடம்தான் எதிர்காலத்தில் தேமுதிகவுக்கும்.

எப்படிப் பார்த்தாலும் இந்த தீர்ப்பை சாதகமாகவோ/பாதகமாகவோ எடுத்துக்கொள்ளக் கூடிய நிலையில் தேமுதிக இல்லை. அரசியல் ஆற்றில் அதுவாக அடித்துச் செல்லப்படும் தேமுதிக எதைப் பிடித்து கரையேறும் என்பது சஸ்பென்ஸ். ஒருவேளை கடந்த தேர்தலில் அதிமுகவோடு கூட்டணி காட்டாமல் தனியே நின்றிருந்தால், இன்றைய நிலைமை தேமுதிகவுக்கு அட்டகாசமான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருந்திருக்கும்.

காங்கிரஸைப் பொறுத்தவரை இம்முறையும் ஆட்சியைப் பிடிக்க முடியாது என்பதை சொல்ல வித்வான் வே.லட்சுமணன் தேவையில்லை. திமுக அல்லது அதிமுக என்று இரண்டு பிராதனக் கட்சிகளில் ஏதேனும் ஒன்றோடு கூட்டணி சேர முடிந்தாலே, அது ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் செய்யக்கூடிய உலகசாதனையாக இருக்கும்.

அகண்ட பாரத கொள்கை கொண்ட பாஜகவால், இன்னமும் அகண்ட பாஜக ஆவதற்கே முட்டுக்கட்டையாக நிற்பது தமிழகம்.

ஜெயலலிதா விடுதலை ஆனது மோடியின் கைங்கர்யம் என்று சாதாரண மக்கள் நம்புகிறார்கள். அருண் ஜெட்லி, போயஸ் கார்டனுக்கு வந்து சொத்துக்குவிப்பு குற்றவாளியாக ஜாமீனில் இருந்த ஜெயலலிதாவை ‘மரியாதை நிமித்தம்’ சந்தித்துவிட்டுச் சென்றதிலிருந்து மாறிய காட்சிகளை அவர்கள் கவனித்திருக்கிறார்கள். இந்த தீர்ப்புக்கு பிரதியுபகாரமாக சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு கூடுதல் இடம் கொடுத்து தன் கூட்டணியில் அதிமுக சேர்த்துக் கொள்ளும் என்றும் பேசிக் கொள்கிறார்கள்.

ஒருவேளை அதிமுக கூட்டணியில் பாஜக இணையும் பட்சத்தில், 96ல் நரசிம்மராவ் தமிழகத்தில் பெற்ற படுதோல்வியையே மோடி பெறவேண்டியிருக்கும். இங்கே ஓரளவுக்கு துளிர்த்திருக்கும் பாஜகவை ஒட்டுமொத்தமாக பட்டு போகவைக்கும். இது தமிழக அளவிலான அக்கட்சியின் தலைவர்களுக்கு தெரிகிறது என்றாலும், அதை கட்சி மேலிடத்தலைவர்களுக்கு எப்படி புரியவைப்பது என்று தெரியாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

பாமக உள்ளிட்ட குட்டிக் கட்சிகளை இந்த ஆட்டத்தில் சேர்க்க வேண்டியதில்லை. எது எப்படி நடந்தாலும் இந்த கட்சிகளுக்கு சாதக/பாதகம் என்பது கடைசி நேரத்தில் எந்த கட்சியோடு போய் ஒட்டிக் கொள்கிறார்கள் என்பதில் மட்டும்தான் இருக்கிறது.

மக்கள் முதல்வராக இருந்து மாநில முதல்வராக பொறுப்பேற்க இருக்கும் ஜெயலலிதாவுக்கு முன் இப்போது இருக்கும் பெரிய சவால், தான் பெற்றிருக்கும் இந்த தீர்ப்பு நேர்மையான முறையில் பெற்றது என்பதை நிரூபிப்பதுதான். இதற்குப் பிறகே மற்ற விஷயங்களை பிரச்சாரம் செய்து, அதிமுகவின் செல்வாக்கை தக்க வைத்துக்கொள்ள முடியும். ஆயினும், இது சாத்தியமே இல்லை என்றுதான் தோன்றுகிறது.

கடைசியாக-

குமாரசாமி கொடுத்திருக்கும் ‘நேர்மையான’ தீர்ப்பின் காரணமாக நிஜமாகவே விடுதலை ஆகியிருப்பவர் நிரந்தர மக்கள் முதல்வரான ஓ.பன்னீர்செல்வம்தான். முதல்வராக கத்தி மேல் பேலன்ஸ் செய்து நடந்த அவருடைய அரசியல் எதிர்காலம் படு இருட்டாக இருந்தது. இப்போது கண்ணுக்குப் பழகிய இருட்டாக மாறியிருக்கிறது.

8 கருத்துகள்:

  1. பெயரில்லா1:36 PM, மே 11, 2015

    Yuvakrishn sir, do not lose heart. 'after all this case was filed with vengence by a corrupt party . Your dream of ADMK getting a beating in the 'Assembly Elections will not come true. People know whom to place where and at what time

    பதிலளிநீக்கு
  2. கஷ்டம் தான் யுவா, நிறைய இலவச திட்டம் குடுத்து மக்கள குழப்பி வச்சிருக்காங்க. கண்டிப்பா மிக பெரிய பிரச்சார யுக்தி தேவை, அதுபோக, 2G மட்டும் தோல்விக்கு காரணமில்லை... சில சிறு தலைவர்களின் அராஜபோக்கும் முக்கிய காரணம்... இன்னும் 11 மாசம் இருக்கு...மக்கள் மன நிலை எப்பிடி வேணாலும் மாறும் !!!!

    பதிலளிநீக்கு
  3. good analysis. your last point is interesting and valid attractive on o.p.s
    https://marubadiyumpookkum.wordpress.com/2015/05/11/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5/#comment-1936.

    பதிலளிநீக்கு
  4. நீங்கள் கூறுவது போல் உண்மையான விடுதலை பினாமி முதல்வர் ஓ.பி.எஸ்ஸூக்குதான்.

    பதிலளிநீக்கு
  5. என்ன. எம்.ஜி.ஆரு செத்துட்டாரா 🙆🏻

    பதிலளிநீக்கு
  6. நன்றாக அலசியுள்ளீர்கள்
    சிறந்த கருத்துப் பகிர்வு
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  7. //குமாரசாமி கொடுத்திருக்கும் ‘நேர்மையான’ தீர்ப்பின் காரணமாக நிஜமாகவே விடுதலை ஆகியிருப்பவர் நிரந்தர மக்கள் முதல்வரான ஓ.பன்னீர்செல்வம்தான்.//
    well said....

    பதிலளிநீக்கு
  8. அவங்களுக்கு அந்த பிரச்சினை இருக்கு. ஆனா தி மு க விற்கு, அவங்க 100 கோடி ஊழல் பண்ணினதுக்கு விசாரணை நடந்தது ஆனா இவங்க 1000 கோடிகளில் ஊழல் பண்ணினதுக்கு அல்லது பண்ணினதா சொல்ல படுவதற்கு விளக்கம் அளிக்க வேண்டிய பிரச்சினை இன்னும் இருக்கு.

    பதிலளிநீக்கு