29 நவம்பர், 2016

கருப்புப்பண ஒழிப்பு மோசடி : ஊழல் கழிசடைகளின் பகற்கொள்ளை!

கருப்புப் பணத்தை ஒழிக்கப் போகிறேன் என்று களமிறங்கி இருக்கும் இந்தியப் பிரதமர், உண்மையைதான் பேசுகிறாரா? சாமானிய மக்களை ஐந்துக்கும், பத்துக்கும் ஏ.டி.எம். வரிசைகளிலும், வங்கிகளுக்கு முன்பான ஜனநெரிசலிலும் அலைக்கழிக்கும் இந்திய அரசாங்கத்தின் உண்மையான நோக்கம்தான் என்ன?

‘எழுபது ஆண்டுகளாக தொடர்ந்து வரும் நோயை ஏழே நாட்களில் விரட்ட முடியாது’ என்று வீராவேசமாக பாஜகவினர் பேசிவருகிறார்களே? நாட்டை அரித்துக் கொண்டிருக்கும் நோய் உண்மையிலேயே கருப்புப் பணம்தானா?

சிக்கலான எந்தப் பிரச்சினைகளுக்கும் எளிமையான தீர்வு இருக்கவே முடியாது என்பதுதான் உலக வரலாறு நமக்கு எடுத்துரைக்கும் உண்மை. அப்படியிருக்க ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்பப்பெற்று விட்டால் கருப்புப் பணம் ஒழிந்துவிடுமென்றால், ஊழலில் புரையோடி திவால் ஆகும் நிலையில் இருக்கும் உலகின் மற்ற நாடுகளும் இந்த எளிமையான தீர்வை எட்டியிருக்க வேண்டுமா, இல்லையா?

‘ஜெய்ஹிந்த்’, ‘பாரத் மாதா கீ ஜே’ போன்ற உசுப்பேற்றும் தேசபக்தி கோஷங்களை புறம் தள்ளிவிட்டு யதார்த்தமாக கொஞ்சம் யோசிப்போம்.

உயர்மதிப்பு கரன்ஸிகளான 500, 1000 அரசால், வங்கிகள் வாயிலாக திரும்பப் பெறப்பட்டு மாற்றாக புதிய 2000, 500 ரூபாய் தாள்கள் வினியோகிக்கப்படுகின்றன. ஏற்கனவே புழக்கத்தில் இருந்த 500, 1000 ரூபாய் தாள்களின் மதிப்பு சுமார் 14 லட்சம் கோடி. இந்த இருபது நாட்களில் வங்கிகளில் அடாவடியாக மக்களிடம் இருந்து பிடுங்கிய பணம் சுமார் 8 லட்சம் கோடி. இன்னும் ஒரு மாத காலத்தில் மேலும் பல்லாயிரம் கோடிகள் வங்கிகளில் டெபாசிட் செய்யப்படும்.

பழைய கரன்ஸிகளுக்கு மாற்றாக இவர்கள் வழங்கிய புது கரன்ஸி, வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு மாற்றித் தந்த பணத்தின் மதிப்பு குறித்த தொகைரீதியான தகவல்கள் எதுவும் துல்லியமாக இல்லை. வங்கிகள் தவிர்த்து மக்களிடம் புழக்கத்தில் மூன்று அல்லது நான்கு லட்சம் கோடிகளாவது அன்றாடச் செலவுகளுக்கு இருக்கலாம் என்று கருதலாம். இந்தப் பணம் கூட மக்களிடையே இல்லாமல் இருக்கும் பட்சத்தில், இந்தியாவில் எதுவுமே நகர வாய்ப்பில்லை.

இன்னமும் பழைய மதிப்பை ஈடுகட்டும் அளவுக்கு ரிசர்வ் வங்கியும் 2000 மற்றும் 500 ரூபாய் தாள்களை முழுமையாக அச்சிட்டிருப்பதாகவும் தெரியவில்லை. இவை ஒன்று அல்லது இரண்டு லட்சம் கோடியாக இருக்கலாம். ஒருவேளை அதற்கும் கூடுதலாக இருக்கலாம்.

சரியா? ஒரு வழியாக இந்த பதினான்கு லட்சம் கோடி என்பது ஏறக்குறைய ஒருவழியாக கணக்குக்கு வந்துவிடுகிறது.

அப்படியெனில், கணக்குக்கு வராத பணம் - அதாவது கருப்புப்பணம் - எங்கே போனது? கருப்புப் பணத்தை வைத்திருப்பவர்கள் எல்லாம் அப்படியே எரித்துவிடுவார்கள், ஆற்றில் எறிந்துவிடுவார்கள் என்கிற எதிர்ப்பார்ப்பு பொய்யாகதானே போயிருக்கிறது? மோடி அரசின் இந்த செயல் திட்டம் மன்மோகன்சிங் சொல்வதை போல வரலாற்று மோசடி அல்லவா? மோடியின் இந்த அறுவைச் சிகிச்சைக்கு பின்னால் என்னதான் நோக்கம் இருக்க முடியும்?

இங்குதான் ரிச்சர்ட் பேக்கர் எழுதிய ‘அமெரிக்கா : ஜனநாயக மோசடியும், வங்கிகளின் கொள்ளை ஆட்சியும்’ கட்டுரை நமக்கு, இந்த மோசடியின் பின்னால் இருக்கும் நிஜமான அரசியலை அம்பலப்படுத்துகிறது.

இக்கட்டுரை அமெரிக்காவின் சோசலிஸம் மற்றும் விடுதலைக்கான கட்சியால் வெளியிடப்பட்டது. தமிழில் 48 பக்க சிறுநூலாக விடியல் பதிப்பகத்தால் நிழல்வண்ணன் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு 2013ல் வெளியிடப்பட்டிருக்கிறது.

அந்நூலின் பதிப்புரையில், ‘கடந்த 25 ஆண்டுகளாக உலகமயமாக்கலின் விளைவாக உற்பத்தித்துறை முதலாளிகள் (பெரும்பாலும் சிறு/நடுத்தர/குறு முதலாளிகள்) முதல் அனைத்துத் துறை உழைப்பவர்கள் வரை தங்கள் உபரி சேமிப்பை/உழைப்பை வங்கிகள் என்கிற கொள்ளையர்களிடம் இழந்துவருகிறார்கள். நிதி மூலதனத்தின் ஆட்சியே உலகின் ஆட்சி’ என்று குறிப்பிடப்படுகிறது.

மேலும், ‘அத்தகைய கொள்ளையின் அடுத்தக்கட்டம் இந்தியாவில் இனி கூடுதலாக நடக்க உள்ளது’ என்று மூன்று ஆண்டுகளுக்கு முன்பாகவே மிகச்சரியாக தற்போது எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கை குறித்து ஆரூடம் சொல்கிறது.

வங்கிகளின் லாபவெறிச் செயல்பாடுகள் அமெரிக்கப் பொருளாதாரத்தையே பெரும் நெருக்கடிக்கு எப்படி உள்ளாக்கியது, அந்த நெருக்கடியை அரசின் மீது திணித்து தம்மை மீட்டுக் கொள்ளும் முயற்சியில் மக்களை எப்படி தெருத்தெருவாக விரட்டித் தள்ளினார்கள், மக்களின் வரிப்பணத்தின் பெரும்பகுதியை அபகரித்துக் கொண்டு மக்களை எப்படி ஓட்டாண்டி ஆக்கி வருகிறார்கள் என்பதை விளக்குவதே அந்நூலின் சாரம்.

வீட்டுக்கடன், கல்விக்கடன், பர்சனல் லோன், கடன் அட்டைகள் எனும் பெயரில் மக்களை சுரண்டிக் கொழிக்கும் வங்கிகள், பெருமுதலாளிகளுக்கு மக்களின் பணத்தை கூட்டிக் கொடுத்துவிட்டு, மக்கள் தங்கள் கடனை கட்டாததால்தான் நாங்கள் திவாலாகப் போகிறோம் என்று அரசை மிரட்டி, அரசிடமிருந்து மக்களின் வரிப்பணத்தையும் அபகரிக்கின்றன என்று அந்நூல் விலாவரியாக தகுந்த உதாரணங்களோடு சொல்கிறது.

2008ஆம் ஆண்டு அக்டோபரில் அமெரிக்க அரசாங்கம் மக்களின் பணத்திலிருந்து 700 பில்லியன் டாலரை (42,00,000 கோடி ரூபாய்) வங்கிகள், நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்காக செலவிட்டது. இந்திய அரசுக்கு அவ்வளவு துப்பில்லை. மக்களை வலுக்கட்டாயமாக தங்களிடமிருக்கும் ஐநூறு, ஆயிரம் பணத்தை வங்கிகளுக்கு தாரைவார்க்க வைத்திருக்கிறது. இவ்வகையில் முதலாளித்துவத்தின் உச்சம் என்று சொல்லப்படும் அமெரிக்காவைவிட மிக கீழ்த்தரமாக செயல்பட்ட நாடு என்கிற அவலமான பெருமை நமக்கு கிடைத்திருக்கிறது.

அமெரிக்காவில் அவ்வாறு வங்கிகளுக்கு கொடுக்கப்பட்ட மக்கள் பணம், எவ்வகையில் செலவிடப்பட்டது, எப்படி வங்கிகளின் நிதிநிலைமையை சரிசெய்தது என்கிற கேள்விகளுக்கு எந்த அமெரிக்க வங்கியுமே பதில் அளிக்கவில்லை. ஜே.பி.மார்கன் சேஸ், நியூயார்க் மெல்லன், மார்கன் ஸ்டான்லி உள்ளிட்ட வங்கிகள் நேரடியாகவே அது ரகசியம், வெளியிடுவதற்கில்லை என்று மறுத்தன.

2008 பொருளாதார வீழ்ச்சியின் போது இந்தியா பெருமளவில் பாதிக்கப்படவில்லை. அயல்நாட்டு முதலீடுகள் குறைந்தனவே தவிர, நேரடியாக இந்திய சந்தை பாதிக்கப்படாத அளவுக்கு ஓரளவுக்கு பாதுகாப்பானதாகவே இருந்தது. இங்கிருக்கும் வங்கிச் சந்தை பெரும்பாலும் பப்ளிக் செக்டார் நிறுவனங்களாக அரசின் கட்டுப்பாட்டில் (தேசியமயமாக்கிய இந்திராவுக்கு நன்றி) இருந்ததால், அமெரிக்க வங்கிகள் அளவுக்கு ஆணவத்தில் ஆடாமல் இருந்தன.

ஆனால்-

அமெரிக்காவில் வங்கிகளுக்கு புஷ்/ஒபாமா காலக்கட்டங்களில் காட்டப்பட்ட ‘செல்லம்’, இங்கிருந்த வங்கி முதலைகளின் நாக்கில் நீர் சுரக்க வைத்திருக்க வேண்டும். அடுத்த ஐந்தாண்டுகளில் கமிஷன் காரணமாகவோ, அரசியல் அழுத்தத்தாலோ அல்லது வேறு என்ன எழவுக்காகவோ பெருமுதலாளிகளுக்கு கடனாக வாரி வழங்கத் தொடங்கினார்கள். அந்நிய முதலீடு குறைந்ததால், உள்ளூர் வங்கிகளின் கடனில்தான் தொழில் விரிவாக்கம் சாத்தியம் என்று இந்நடவடிக்கைகளுக்கு சப்பைக்கட்டு கட்டப்பட்டது.

கடனை வாங்கிய விஜய் மல்லையாக்கள் உல்லாசமாக அவற்றை செலவழித்துவிட்டு, கடனை திருப்பிக் கட்ட முடியாது என்று அழிச்சாட்டியம் செய்ய ஆரம்பித்தார்கள். வங்கிகளில் நிதிநிலைமை டாஸ்மாக் குடிகாரனை காட்டிலும் மோசமாக தள்ளாட ஆரம்பித்தது.

இந்த ஆண்டின் முதல் காலாண்டுத் தொடக்கத்தில் 15 பொதுத்துறை வங்கிகள் ஒட்டுமொத்தமாக தங்களுக்கு 23,493 கோடி ரூபாய் நஷ்டம் என்று கணக்கு காட்டியிருக்கின்றன. பஞ்சாப் நேஷனல் பேங்க் (5,367 கோடி), கனரா பேங்க் (3,905 கோடி), பேங்க் ஆஃப் இண்டியா (3,587 கோடி), பேங்க் ஆஃப் பரோடா (3,230 கோடி) என்று நஷ்டத்தில் சாதனை புரிந்திருக்கின்றன நமது வங்கிகள். கடந்த ஆண்டு தொடக்கத்தில் இதே காலாண்டில் இந்த வங்கிகள் 8,500 கோடி ரூபாய் லாபம் காட்டியவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஓராண்டுக்குள் அப்படி என்ன பெரிய எழவு இந்தியாவுக்கு விழுந்துவிட்டது என்றுதான் தெரியவில்லை.

இதற்கு காரணமானவர்கள் யார் என்று விசாரணை நடத்த வேண்டிய அரசோ, கள்ளப் பண முதலைகளை வேட்டையாடுகிறோம் என்று மக்களை தெருவில் நிற்கவைத்திருக்கிறது. இந்த மோசடிகளை மூடி மறைக்கதான் இந்த நடவடிக்கையோ என்றும் கருத வேண்டியிருக்கிறது.
இந்த வீழ்ச்சிக்கு 90% காரணம் வராக்கடன்கள்தான் என்று வங்கிகள் ஒப்பாரி வைக்க, அடுத்த ஓராண்டுக்குள் இந்தப் பிரச்சினையை ‘எப்படியாவது’ சரி செய்துவிடுங்கள் என்று ரிசர்வ் வங்கி கறார் காட்டியது. இல்லையேல் தேசத்தின் பொருளாதாரமே ஆடிவிடும் என்று கடந்த ஆண்டு இறுதியிலேயே ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்த ரகுராம் ராஜன் எச்சரித்திருந்தார். அப்போது அவர் பயன்படுத்திய வார்த்தைதான், இப்போது மோடி தானே கண்டுபிடித்து பேசுவதை போல ஒப்பேத்திக் கொண்டிருக்கும் deep surgery. ஆனால், ஒரு போதும் 500, 1000 செல்லாது என்று ஓரிரவில் அறிவித்து மக்களை பரிதவிப்புக்கு உள்ளாக்கும் அறுவைச் சிகிச்சையை ரகுராம் ராஜன் ஒப்புக் கொண்டிருக்க மாட்டார். மோடியை மாதிரி எக்கனாமிக்ஸில் மொக்கையா அவர்?

பொதுத்துறை வங்கிகள் ததிங்கிணத்தோம் போடும் இதே காலாண்டில்தான் தனியார் வங்கிகள் 14% வளர்ச்சியை காட்டியிருக்கின்றன. அதாவது தொழில் வளர்ச்சிக்காக அங்கே கடன் வாங்கிய பெருமுதலைகள், அந்தப் பணத்தில் பெரும்பான்மையை தங்கள் சொந்தக் கணக்கில் இங்கே பாதுகாத்துக் கொண்டு, அரசு வங்கிகளிடம் நஷ்டம், கடனை திருப்பிச் செலுத்த முடியாது என்று பெப்பே காட்டுகிறார்கள் என்று நாம் புரிந்துக்கொள்ள முடிகிறது.

காசில்லாமல் தடுமாறிக் கொண்டிருந்த வங்கிகளில்தான் இப்போது 500, 1000 செல்லாது என்று நம்முடைய பணத்தை கொண்டுப்போய் கொட்டிக் கொண்டிருக்கிறோம். நாம் பணத்தைக் கொட்டியதுமே பெருமூச்சு விட்ட ஸ்டேட் பேங்க் ஆஃப் இண்டியா, வாங்கியதற்கு வாலாட்டும் விதமாக உடனடியாக ஏழாயிரத்து சொச்சம் கோடியை வெட்கமே இல்லாமல் பெருமுதலாளிகளுக்கு writeoff செய்திருக்கிறது.

ஊழலில் ஊறித்திளைத்து மக்களுக்கு உபதேசம் செய்யும் இந்த உத்தமன்களின் பொருளாதார நிலைமையை சீர்செய்யதான் நாம் தெருத்தெருவாக அலைந்துக் கொண்டிருக்கிறோம். போட்ட பணத்தை ஏடிஎம்மில் எடுக்க முடியாமல் / வங்கிகளிலும் வாரத்துக்கு இவ்வளவு என்கிற கட்டுப்பாட்டில் முழி பிதுங்கிக் கொண்டிருக்கிறோம். நம் பணத்தை கொடுக்க நமக்கே மை வைத்து அசிங்கப்படுத்துகிறார்கள். நிஜமான கருப்புப் பணமெல்லாம் பாதுகாப்பாக தங்கமாகவும் / வெளிநாட்டு வங்கிகளிலும் ‘அரசு மரியாதையோடு’ அடக்கமாக இருக்கிறது.

‘ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கைய்யே’ என்பதுதான் மோடி அரசின் திட்டம். மக்களின் பணத்தை வலுக்கட்டாயமாக பிடுங்கி, பெருமுதலாளிகளுக்கு கடனாக கொடுக்கப்பட்டதால் வங்கிகளுக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடியை சமாளிப்பதே இந்த கருப்புப்பண ஒழிப்பு நடவடிக்கையின் நிஜமான நோக்கம். உலக வரலாற்றிலேயே மக்களை பொய் சொல்லி வதைக்கும் இப்படியானதொடு மோசடி நாடகத்தை பாசிஸ்ட்டு ஆட்சியாளர்கள் கூட அரங்கேற்றியதில்லை.

23 நவம்பர், 2016

சத்ரியன் மறைந்தார்!

இந்த தலைமுறையினரில் எத்தனை பேருக்கு இந்த இயக்குநரை தெரியுமென்று தெரியவில்லை. எண்பதுகளின் குழந்தைகளான எங்களுக்கு கே.சுபாஷ், மிகப்பெரிய இயக்குநர்.

அந்த காலக்கட்டத்தில் ரஜினி - கமல் இருவரையுமோ, இருவரில் ஒருவரையுமோ இயக்காமல் தமிழில் முன்னணி இயக்குநராக கோலோச்சியவர் அனேகமாக இவர்தான்.  இருப்பினும் தொண்ணூறுகளில் திரையுலகப் படிக்கட்டுகளில் அடுத்தடுத்த நிலையில் இருந்தவர்களான விஜயகாந்த், சத்யராஜ், பிரபு ஆகியோரின் மனம் கவர்ந்த இயக்குநராக இவர் இருந்தார். பி.வாசுவுக்கு இணையான செல்வாக்கு சுபாஷுக்கும் ஒரு காலத்தில் இருந்தது.

‘நாயகன்’ படத்தின் வெற்றிக்கு கமல்ஹாசனின் நடிப்பும், மணிரத்னத்தின் இயக்கமும்தான் காரணமென்று அத்தனை பேரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். கமலுக்கும், மணிரத்னத்துக்கும்தான் தெரியும், சுபாஷின் உழைப்பு அப்படத்தின் வெற்றிக்கு எவ்வளவு உறுதுணையாக இருந்தது என்று. ‘நாயகன்’ காலத்தில் மணிரத்னத்தின் வலதுகையாக சுபாஷ் இருந்தார். எனவேதான், தனியாக படம் இயக்கப் போய் திணறிக் கொண்டிருந்தபோது, தன்னுடைய தயாரிப்பில் ‘சத்ரியன்’ இயக்கும் வாய்ப்பை அவருக்கு கொடுத்தார் மணிரத்னம்.

தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களான இரட்டை இயக்குநர்கள் கிருஷ்ணன் - பஞ்சு ஜோடியில் கிருஷ்ணனின் மகனாக பிறந்தவர் சுபாஷ். ஆனால், தன்னுடைய சினிமா சிபாரிசுக்காக எந்நாளும் அவர் தன்னுடைய தந்தை பெயரை பயன்படுத்தியதே இல்லை.

சுபாஷின் முதல் முயற்சியான ‘கலியுகம்’, புரட்சிகரமான கதையை கொண்டதாக இருந்தாலும் போதிய வெற்றி பெறவில்லை. ஆனால், இவரது இயக்கத்தில் பிரபு கம்ஃபர்ட்டபிளாக உணர்ந்தார். எனவே அடுத்து அவர் நடித்த காமெடிப் படமான ‘உத்தம புருஷன்’ படத்தின் இயக்குநர் வாய்ப்பும் சுபாஷையே தேடிவந்தது. இந்தப் படம் கமர்ஷியலாக நன்றாக போக, தமிழ் சினிமாவின் வெற்றிகரமான கமர்ஷியல் இயக்குநர்களில் ஒருவராக சுபாஷ் தடம் பதித்தார்.

1990 தீபாவளிதான் சுபாஷின் தலை தீபாவளி எனலாம். கமலின் ‘மைக்கேல் மதன காமராஜன்’, ராமராஜனின் ‘புதுப்பாட்டு’ (தயாரிப்பு : இளையராஜா), மனோபாலா இயக்கத்தில் சத்யராஜின் ‘மல்லுவேட்டி மைனர்’, பாக்யராஜின் ‘அவசர போலிஸ் 100’ என்று பலத்த போட்டிகளுக்கு மத்தியில் விஜயகாந்த் நடிப்பில் இவர் இயக்கிய ‘சத்ரியன்’ வெளிவந்து வெற்றி கண்டது. அதுவரையில் தமிழ் சினிமாவில் வெளிவந்த cop movies வகையில் அதுவே தலைசிறந்தது என்று பெயரெடுத்தது.

‘சத்ரியன்’ திரைப்படம், தமிழ் சினிமாவில் போலிஸுக்கு என்று புது இலக்கணமும் படைத்தது. இரண்டே பாட்டு, ஒரு நச் ப்ளாஷ்பேக், விறுவிறுப்பான திரைக்கதை, நறுக்கென்ற வசனங்கள் என ‘சத்ரியன்’ ஒரு டிரெண்ட் செட்டர். பிற்பாடு ஷங்கர் போன்ற பெரிய இயக்குநர்களின் கதை சொல்லும் பாணியில் ‘சத்ரியன்’ தாக்கம் கூடுதலாகவே இருந்தது. தொண்ணூறுகளின் தொடக்க நியூவேவ் மூவியாக, அடுத்த சில ஆண்டுகள் தமிழ் சினிமாவின் போக்கை தொழில்நுட்பரீதியில் தீர்மானிக்கக் கூடியதாக அப்படம் அமைந்தது. ‘பழைய பன்னீர் செல்வமா வரணும்’ என்கிற திலகனின் குரல் இருபத்தாறு ஆண்டுகள் ஆகியும் யார் காதிலாவது இன்னமும் கேட்டுக்கொண்டே தான் இருக்கிறது.

ஆங்கிலப் படங்கள் பாணியில் அவர் எடுத்த த்ரில்லரான ‘ஆயுள் கைதி’ வசூலில் சோடை போனாலும், அடுத்த தீபாவளிக்கு அவர் கொடுத்த ‘பிரம்மா’ பிளாக் பஸ்டர் ஹிட். இந்த தீபாவளிதான் பிரசித்தி பெற்ற தளபதி –- குணா மோதிய பிரபலமான தீபாவளி. ரஜினி, கமல் படங்களை பல ஏரியாக்களில் ‘பிரம்மா’ அசால்டாக தோற்கடித்தது. ‘செக்ஸ் கொஞ்சம் தூக்கல்’ என்கிற விமர்சனத்தையும் பெற்றது. ‘பிரம்மா’ ஜோடியான அதே சத்யராஜ் - பானுப்ரியாவை வைத்து அவர் இயக்கிய ‘பங்காளி’, சுபாஷுக்கு பின்னடைவாக அமைந்தது. எனினும் இன்றுவரை தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் ‘சைதை தமிழரசி தாக்கப்பட்டாரா?’ என்கிற வசனம் இடம்பெற்ற படம் அதுதான்.

‘பங்காளி’க்குப் பிறகு சுபாஷின் திரையுலக வாழ்க்கையில் பெரும் தேக்கம். அப்போது அறிமுகமாகியிருந்த அஜித்தை வைத்து அடுத்தடுத்து ‘பவித்ரா’, ‘நேசம்’ படங்களை இயக்கினார். அவை எதிர்ப்பார்த்த வெற்றியை எட்டவில்லை. பார்த்திபனை வைத்து அவர் எடுத்த ‘அபிமன்யூ’ பரபரப்பாக வசூலித்து மீண்டும் சுபாஷை லைம்லைட்டுக்கு கொண்டுவந்தது. இதன் பிறகு தரை லோக்கலுக்கு இறங்கி பிரபுதேவாவை வைத்து ‘நினைவிருக்கும் வரை’, ‘ஏழையின் சிரிப்பில்’ படங்களை வெறும் வசூலை மட்டுமே மனதில் நிறுத்தி இயக்கி வென்றார்.

பார்த்திபனை மீண்டும் அவர் இயக்கிய ‘சபாஷ்’, பழைய சுபாஷை மீண்டும் கொண்டுவந்தது. எனினும் வணிகரீதியாக சரியாக போகவில்லை. கிட்டத்தட்ட இந்தப் படத்தோடு சுபாஷின் தமிழ் திரையுலக வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதாக கருதலாம். அதன் பின்னர் பிரபுதேவா சகோதரர்களை வைத்து அவர் எடுத்த ‘ஒன் டூ த்ரீ’, டிசாஸ்டர் ஆகவே அமைந்தது.
எனினும் இந்தியில் வெற்றிகரமான கதையாசிரியராக அவர் கடைசி பத்தாண்டுகளாக இருந்தார். ஷாருக்கானின் வசூல் சரித்திர சாதனைப் படமான ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்துக்கு கதை எழுதியது இவர்தான். ‘எண்டெர்டெயின்மெண்ட்’, ‘தில்வாலே’, ‘ஹவுஸ்ஃபுல்-3’ என்று இந்தியிலும் வெற்றிக்கொடி நாட்ட சுபாஷ் தவறவில்லை.

இன்று ‘தல’ அஜீத், ஷூட்டிங்கில் எல்லோருக்கும் பிரியாணி சமைத்துப் போடுவது பிரபலமான செய்தியாக, ஆர்வமாக வாசிக்கப்படுவதாக ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது. அஜீத்துக்கு ‘பவித்ரா’ படம் எடுத்த காலத்தில் பிரியாணி உட்பட விதவிதமான அசைவ உணவு வகைகளை சமைக்க கற்றுக் கொடுத்தவர் இதே கே.சுபாஷ்தான். அறிமுகக் காலத்தில் சினிமாவில் சரியான வழிகாட்டுதல் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்த அஜீத்துக்கு கே.சுபாஷின் அலுவலகம்தான் வேடந்தாங்கலாக இருந்தது. ஓய்வாக இருக்கும்போது சுபாஷை பில்லியனில் அமரவைத்து சென்னை முழுக்க அதிவேகமாக பைக் ஓட்டி குஷிப்படுத்துவாராம் அஜித்.

தொண்ணூறுகளின் சினிமா ரசிகர்களுக்கு தாங்க முடியாத இழப்பு, சுபாஷின் திடீர் மரணம்.

9 நவம்பர், 2016

தெறிக்குது இளமை!

‘கீழ் மேல்’ கோட்பாடுதான் மலையாளிகளின் ஒரே கலை செயல்பாடு என்று இன்னும் நாம் நம்பிக் கொண்டிருந்தால் நம்மைவிட பெரிய முட்டாள்கள் யாருமில்லை. மலையாளிகள் என்றாலே கதகளி, வேட்டி, சேச்சி, மூக்கால் பேசும் முக்காத் தமிழ் என்கிற காலமெல்லாம் மலையேறி மாமாங்கமாகி விட்டது. மிக தைரியமாக ஹோமோசெக்ஸ் த்ரில்லர் எடுக்கிறார்கள். குறிப்பாக வினீத் சீனிவாசனின் வரவுக்குப் பிறகு மலையாளத் திரையுலகில் புதிய அலை சுனாமி வேகத்தில் கரைகடந்து வீசிக்கொண்டிருக்கிறது.

‘1983’, ‘ஒரு வடக்கன் செல்ஃபீ’, ‘தட்டத்தின் மறயத்து’, ‘மும்பை போலிஸ்’, ‘பிரேமம்’, ‘பெங்களூர் டேஸ்’, ‘உஸ்தாத் ஹோட்டல்’, ‘டயமண்ட் நெக்லஸ்’, ‘டிராஃபிக்’, ‘ஷட்டர்’, ‘ஹவ் ஓல்ட் ஆர் யூ’, ‘த்ரிஷ்யம்’ என்று சமீப வருடங்களில் வேறெந்த திரையுலகிலும் வராத அளவுக்கு வகை வகையான கதைகளிலும், களங்களிலும் கலக்கிக் கொண்டிருக்கிறது மாலிவுட்.

இந்த புதிய அலை ஜோதியில் லேட்டஸ்ட் வரவு ‘ஆனந்தம்’.

முற்றாக புதுமுகங்களோடு களமிறங்கியிருக்கும் இயக்குநர் கணேஷ்ராஜுக்கும் இதுதான் முதல் படம். வினீத் சீனிவாசனிடம் உதவியாளராக இருந்தவர், அதே வினீத் சீனிவாசனுக்கு கதை சொல்லி அவரையே தயாரிக்க வைத்திருக்கிறார். என்ன கதை சொல்லி கன்வின்ஸ் செய்திருப்பார் என்பதுதான் சஸ்பென்ஸாக இருக்கிறது. ஏனெனில் ‘ஆனந்தம்’ படத்தில் கதையென்று எதையும் குறிப்பாக சுட்டிக்காட்ட முடியவில்லை. தமிழில் எண்பதுகளின் தொடக்கத்தில் எடுக்கப்பட்ட ‘பன்னீர் புஷ்பங்கள்’ வகையறா கதைதான்.

காட்சிக்கு காட்சி திரையின் ஒவ்வொரு பிக்ஸெலிலும் தெறிக்கும் இளமைதான் ‘ஆனந்தம்’. படம் பார்க்கும் கல்லூரி மாணவர்கள், தங்களையே கண்ணாடியில் காண்பதாக உணர்வார்கள். முப்பது ப்ளஸ்ஸை எட்டிய அரைகிழங்கள், தங்களின் இருபதுகளை நினைத்து ஏங்குவார்கள். புத்திசாலித்தனமான திரைக்கதை யுக்தியோ, வலுவான காட்சியமைப்புகளோ இல்லாமலேயே ‘ஆனந்தம்’, ஒரு ‘ஆட்டோகிராப்’பை சாதித்திருக்கிறது. ஒவ்வொரு காட்சியிலும் குறைந்தபட்சம் ஒரு ‘ஆனந்தம்’ –- அதாவது கள்ளமில்லாத ஒரு சிரிப்பு - என்று மட்டும் திட்டமிட்டுப் பார்த்துக் கொண்டதுதான் இயக்குநரின் சிறப்பு. சின்ன சின்ன உரசல்கள், கேலி, கிண்டல், சீண்டல், ஜாலி, நட்பு, காதல், ஜொள்ளு, லொள்ளு என்று ஒவ்வொரு உணர்வையும் கொஞ்சம் கொஞ்சம் எடுத்து, சரிவிகிதத்தில் கலந்து பரிமாறியிருக்கிறார் கணேஷ்ராஜ். சேர்மானம் சரியாக அமைந்துவிட்டதால் ஆனந்தத்தின் சுவை அபாரம்.

என்ஜினியரிங் படிக்கும் கல்லூரி மாணவர்கள் ‘இண்டஸ்ட்ரியல் விசிட்’ அடிக்கிறார்கள். மாணவர்களின் ஒருங்கிணைப்பாளர் எப்படியோ பிரின்சிபலை தாஜா செய்து, இந்த விசிட்டில் கோவாவையும் சேர்த்துவிடுகிறார். புதுவருடம் அன்று வகுப்பு மாணவர்கள் அத்தனை பேரும் கோவாவில் பார்ட்டி கொண்டாடுவதுதான் திட்டம். கொச்சியிலிருந்து ஹம்பிக்கு போய், அங்கிருந்து கோவா என்று மாணவர்களின் நான்கு நாள்தான் ‘ஆனந்தம்’.

இந்த நான்கு நாட்கள் அவர்களில் சிலருக்கு எதிர்கால வாழ்க்கை குறித்த தெளிவினை ஏற்படுத்துகிறது. உம்மணாம் மூஞ்சி புரொபஸர் ஒருவர், எப்போதும் புன்னகையை மட்டுமே முகத்தில் ஏந்தியிருக்கும் சக புரொபஸரின் மீது காதலில் விழுந்து கல்யாணம் செய்துக் கொள்ள முடிவெடுக்கிறார். பப்பி லவ் முறிந்த ஒருவன், காதல் இல்லையென்றாலும் அப்பெண்ணோடு நட்பை தொடரமுடியும் என்று உணர்கிறான். இன்னொருவனோ தன்னுடைய உள்ளத்தை தான் விரும்பும் பெண்ணிடம் திறந்துகாட்டி அவளது காதலை வெல்கிறான். தான் தானாக இருக்கக்கூடிய சுயவெளிப்பாட்டின் சுதந்திரத்தை இன்னொருவன் அறிகிறான். தான் நேசிக்கக்கூடியவனை அவனை அவனுடைய தனித்துவத்தோடு மதிக்க ஒருத்தி கற்றுக் கொள்கிறாள். தன்னுடைய பெற்றோரின் மணமுறிவினை முதிர்ச்சியோடு ஏற்றுக்கொள்ளக் கூடிய மனப்பான்மைக்கு மற்றொருத்தி வருகிறாள். இப்படியாக அந்த வகுப்பிலிருக்கும் பலரின் வாழ்க்கையை அந்த நான்கு நாட்கள் முற்றிலுமாக மாற்றுகிறது. கூட்டமாக இருப்பதின் சவுகரியத்தை அனைவருமே உணர்கிறார்கள். பொதுவாக இதுமாதிரி ஜானரில் படமெடுப்பவர்களுக்கு கை கொஞ்சம் துறுதுறுக்கும். லேசாக செக்ஸ் சேர்த்தால் ஜம்மென்று இருக்குமே என்று தோன்றும் (நம்ம ஊர் செல்வராகவன் நாசமா போனதே இதனால்தான்). ஆனால், கணேஷ்ராஜோ படத்தில் சின்ன கிளிவேஜ் கூட இல்லாமல் பார்த்துக் கொள்கிறார். ஆங்காங்கே ‘நேவல்’ தெரியதான் செய்கிறது. ஆனால், காமமாக கண்ணுக்கு எதுவும் உறுத்தவில்லை.

தெலுங்கில் இயக்குநர் சேகர் கம்முலா எடுக்கும் ‘ஹேப்பி டேஸ்’, ‘லைஃப் ஈஸ் பியூட்டிஃபுல்’ போன்ற ‘ஃபீல்குட்’ மூவிகளின் தாக்கம் சற்றே அதிகமாக இருந்தாலும், கணேஷ்ராஜின் அசால்டான ஜஸ்ட் லைக் தட் ஸ்டைல் இயக்கம்தான் ‘ஆனந்தம்’ படத்தினை ரசிகர்களை காதலிக்க வைக்கிறது. சேகர் கம்முலாவுக்கு ரசிகனை இரண்டு காட்சியிலாவது அழவைத்து பார்த்துவிட வேண்டும் என்பது லட்சியமாக இருக்கும். கணேஷ்ராஜோ, எவ்வளவு சீரியஸான சீனுக்கு லீட் இருந்தாலும், அதையும் எப்படி காமெடியாக்கலாம் என்பதே கவலையாக இருந்திருக்கிறது. சின்ன சந்து கிடைத்தாலும் அதில் fun வந்தாக வேண்டும் என்று பார்த்து பார்த்து செய்திருக்கிறார்.
படத்தின் இடைவேளையிலும், இறுதியிலும் வரும் இரண்டு காட்சிகள் அபாரமானவை.

தான் இன்னமும் காதலை தெரிவிக்காத பெண்ணின் அருகாமை யதேச்சையாக அவனுக்கு கிடைக்கிறது. ஆசை தீர அந்த பிரைவஸியை அனுபவிக்கிறான் (நோ வல்கர், பேசிப்பேசி தன்னை புரியவைத்து அவளை புரிந்துக்கொள்கிறான்). அவளுக்கு எதை கண்டாலும் பயம் என்பதை அறிகிறான். இவன் சொல்கிறான்.

“எனக்கும் சின்ன வயசுலே இருட்டுன்னா பயம். கரெண்ட் கட் ஆனதுமே ரொம்ப பயப்படுவேன். என்னோட அப்பாதான் அப்போ நட்சத்திரங்களை காண்பிச்சார். கண்ணுக்கு தெரியாத இருட்டை நினைச்சு பயந்துக் கிட்டிருக்கிறதைவிட, கண்ணுக்கு தெரியற மகிழ்ச்சியை அனுபவிக்க கத்துக்கோடான்னு சொன்னாரு”

சின்ன டயலாக்தான். கேட்கும்போது சட்டென்று ஒரு ஜென் கவிதை மாதிரி ஏதோ திறப்பை மனசுக்குள் ஏற்படுத்துகிறது இல்லையா? இந்த காட்சியில் கேமிரா நிலவுக்குச் செல்கிறது. அருகில் நட்சத்திரங்கள். இடைவேளை. வாவ்!

இதே போல கிளைமேக்ஸுக்கு முன்பாக ஒரு வசனம். இத்தனை மாணவர்களையும் மேய்த்து நல்லபடியாக திரும்ப ஊருக்கு கொண்டுபோய் சேர்க்கும் பொறுப்புணர்வில் மிக ஜாக்கிரதையாக இருக்கிறான் அவர்களது ஒருங்கிணைப்பாளர். காலேஜில் இருந்து கிளம்பியதிலிருந்து ஒவ்வொரு விஷயத்தையுமே அவன் பார்த்து பார்த்து செய்துக் கொண்டிருப்பதை, அவர்கள் வந்த பேருந்தின் ஓட்டுநர் கவனித்துக் கொண்டே இருக்கிறார். டூரின் கடைசி நாளன்று, பேருந்து ஓட்டுநரிடம் வந்து ஊர் திரும்புவது பற்றி ஏதோ பேச ஆரம்பிக்கிறான். அவர் சொல்கிறார்.

“மவனே! உனக்கு ஒண்ணு சொல்றேன். எப்பவும் பொறுப்பை தலையிலே சுமந்துக்கிட்டு அலையாதே. பொறுப்பு எங்கேயும் போயிடாது. அது எப்பவும் நம்மளுக்கு இருந்துக்கிட்டேதான் இருக்கும். அதுக்குண்ணு உன் வயசுக்குரிய ஆனந்தத்தை இழந்துடாதே. இன்னும் கொஞ்ச நாளில் நரை விழுந்துடும். தொப்பை வந்துடும். அப்பவும் பொறுப்பு இருக்கும். ஆனா, இளமை இருக்காது. போ.. உன் பிரெண்டுங்களோட லைஃபை என்ஜாய் பண்ணு”

இவ்வளவுதான் படமே.

படம் பற்றி வேறென்ன சொல்வது? நடிகர்கள் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இசையமைப்பாளர் சிறப்பாக இசையமைத்திருக்கிறார். கேமிராமேன் சிறப்பாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இயக்குநர் திறமையாக இயக்கியிருக்கிறார். இப்படியே க்ளிஷிவாகதான் எதையாவது சொல்லிக் கொண்டு போகவேண்டும். படம் பாருங்கள். ஆனந்தமாக இருங்கள். அவ்ளோதான் சொல்லமுடியும்.