19 ஜனவரி, 2018

வாசிப்பு குறைகிறதா?

ஆமாம் என்கிறார்கள் அறிவுஜீவிகள் பலரும். குறிப்பாக இலக்கியவாதிகள்.

இவர்களிடம் புள்ளிவிவரம் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. விளக்கமாக கேட்டால், ‘அந்தக் காலத்தில் நாங்கள்லாம்…’ என்று நீட்டி முழக்குகிறார்கள்.

ஆனால் –

இந்தியாவில் அச்சுப் பத்திரிகைகளை வாசிக்கும் பழக்கம் மிக வேகமாக அதிகரித்துக் கொண்டே செல்கிறது என்று சொல்கிறது Indian readership survey.

“இப்போல்லாம் யாரு சார் புக்கு படிக்கிறா? என் பையனுக்கு தமிழே படிக்கத் தெரிய மாட்டேங்குது. எப்பவும் நெட்டுலேதான் இருக்கான்” என்றெல்லாம் ஜல்லியடிக்காமல், கொஞ்சம் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் விவரங்களை வாசியுங்கள்.

Readership Studies Research Council of India (RSCI) மற்றும் Media Research Users Council (MRUC) ஆகிய இரு நிறுவனங்களும்தான் IRS கணக்கீடுகளை வெளியிடுகின்றன. 2014க்கு பிறகு 2017ல் மூன்று ஆண்டுகள் கழித்து இப்போதுதான் வெளியிட்டிருக்கின்றன.

2017ஆம் ஆண்டு கணக்கீடுகளின் அடிப்படையில் புதிய பதிப்பு நிறுவனங்களின் அலை வலுவாக வீசுவது தெரியவந்திருக்கிறது.

கடந்த மூன்றாண்டுகளில் மட்டுமே பதினோரு கோடி புதிய வாசகர்கள் (நகர்ப் புறங்களில் 4 கோடி, கிராமப் புறங்களில் 7 கோடி), இந்திய நாளிதழ்களை வாசிக்கத் தொடங்கியிருக்கிறார்கள் என்கிறது IRS 2017. அடுத்த மூன்றாண்டுகளில் 40 சதவிகித அளவுக்கு இந்த வளர்ச்சி இன்னமும் விஸ்வரூபம் எடுக்கக்கூடும் என்றும் கணிக்கிறார்கள்.

நகர்ப்புறங்களில் அச்சுப் பத்திரிகைகளை வாசிப்பவர் எண்ணிக்கை உயர்வது இயல்புதான். எனினும், தற்போதைய வாசிப்புப் புரட்சிக்கு சொந்தக்காரர்கள் இந்திய கிராமங்களைச் சேர்ந்தவர்கள். இந்திய கிராமப்புறங்களில் பரவலாக கல்வியறிவு கிடைத்து வருவதால், அச்சுப் பத்திரிகைகளுக்கு கணிசமான வளர்ச்சி சாத்தியமாகி இருக்கிறது.

சராசரியாக இந்தியாவில் நாளிதழ்கள் 105 கோடி பேர்களால் வாசிக்கப்படுகின்றன. கடந்த மூன்றாண்டுகளில் தமிழின் வளர்ச்சி என்று எடுத்துக் கொண்டால் 44%.

தமிழில் இப்போது ‘தினத்தந்தி’, ‘தினகரன்’, ‘தினமலர்’ ஆகிய மூன்று நாளிதழ்கள் மட்டுமே (ஆங்கிலம் தவிர்த்த டாப்-10 பட்டியலில் இவை மூன்றுதான் இடம்பெற்றிருக்கின்றன) சுமார் 4 கோடியே 69 லட்சம் வாசகர்களால் வாசிக்கப்படுகின்றன.

நாளிதழ் தவிர்த்து இதழ்களைப் பொறுத்தவரை கடந்த மூன்றாண்டுகளில் வாசிப்பு எண்ணிக்கை அப்படியே இரு மடங்காகி இருக்கிறது. 2014ல் 4 கோடியாக இருந்த இந்த எண்ணிக்கை, இப்போது 2017ல் 7 கோடியே 80 லட்சமாக உயர்ந்திருக்கிறது.

பிராந்திய மொழி இதழ்களைப் பொறுத்தவரை இந்திய அளவில் 2017 டாப்-10 பட்டியலில் ஆனந்தவிகடன், குமுதம், குங்குமம் என்று மூன்று இதழ்கள் பெருவாரியான வாசகர் எண்ணிக்கை அடிப்படையில் இடம்பெற்றிருக்கின்றன. இந்த மூன்று இதழ்களுக்கும் சேர்த்து தோராயமாக 72 லட்சம் வாசகர்கள் இருக்கிறார்கள். தமிழ் தவிர்த்து மலையாளம் மற்றும் வங்காள இதழ்கள் மட்டுமே முதல் பத்து இடத்தில் இருக்கின்றன.

தமிழில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட வாசகர்களை கொண்ட இதழ்களாக ‘ஆனந்த விகடன்’, ‘குமுதம்’, ‘குங்குமம்’, ‘புதிய தலைமுறை’, ‘அவள் விகடன்’ ஆகியவை விளங்குகின்றன.

இணையத்தின் தாக்கம்?

இந்தியாவைப் பொறுத்தவரை இப்போதைக்கு இணையத்தைக் கண்டு அச்சுப் பத்திரிகைகள் அச்சப்பட வேண்டிய அவசியமில்லை.

இணையம், ரேடியோ என்கிற ஊடகத்தோடுதான் இப்போது வரை மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறது.

இணையத்தின் வளர்ச்சி, சினிமாத்துறையைதான் பெருமளவில் பாதித்திருக்கிறது (இந்த பாதிப்பிலும்கூட ஆந்திரா, தெலுங்கானா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களில் சினிமாத்துறை வியத்தகு அளவுக்கு – வணிக அடிப்படையில் - வளர்ந்திருக்கிறது).

சென்னை புத்தகக் காட்சியில் வழக்கமான விற்பனை இல்லை. இலக்கிய நூல்கள் விற்கவில்லை என்றெல்லாம் பின்னூட்டம் போடாதீர்கள். மேற்கண்ட புள்ளிவிவரங்களை அடிப்படையாகக் கொண்டு, இவர்களில் எவ்வளவு சதவிகித வாசகர்களை இலக்கியம் பக்கம் தள்ளிக் கொண்டு வரலாமென்று திட்டம் தீட்டி செயல்படுத்தினால் கணிசமான முன்னேற்றம் நிச்சயம். அதற்கு ஊடகத்துறையை தொடர்ச்சியாக கவனித்துவரும் நல்ல media expertகளின் ஆலோசனைகள் அவசியம். என்னிடம் யாராவது பரிந்துரை கேட்டால் வெயிட்டாக ஃபீஸ் கேட்பேன் என்று எச்சரிக்கிறேன்.

18 ஜனவரி, 2018

முதலிரவே போய் வா!

எண்பதுகளின் இறுதியில் ராஜ் வீடியோ விஷனுக்கு போட்டியாக வீடியோ கேசட் துறையில் பெரும் போட்டியாளராக விளங்கியவர்கள் ஏக்நாத் வீடியோஸ்.

வீடியோ கேசட் துறையை சேர்ந்தவர்களும் (இப்போது சேட்டிலைட் சேனல்கள் செய்வது மாதிரி) நிறைய content தேவைக்காக சினிமாவில் முதலீடு செய்யத் தொடங்கினார்கள்.

ஏக்நாத் வீடியோஸ், ஒரு கன்னடப் படத்தை தமிழில் டப் செய்து வெளியிட பிரமாதமாக மார்க்கெட்டிங் செய்தார்கள். அந்த படம்தான் ‘முதலிரவே வா வா’

எண்பதுகளின் இறுதியில் இந்தப் படத்துக்காக மஜாவான ஹோர்டிங் ஒன்றை பிரும்மாண்டமாக மவுண்ட்ரோடில் வைத்திருந்தார்கள். மீசை வளராத அந்த வயதில் படத்தின் டைட்டிலும், மஜாவான ஸ்டில்களும் குறுகுறுப்பை ஏற்படுத்தியது இயல்புதான். படமும் ஓரளவுக்கு பரபரப்பாகவே ஓடியது. ஆனால், அந்தப் படத்துக்கு அழைத்துச் செல்லுமாறு அப்பாவை கேட்க முடியாது.

பிற்பாடு மீசையெல்லாம் லேசாக முளைத்த காலத்தில் ‘முதலிரவே வா வா’ பார்த்தபோது, அப்படியொன்றும் ‘எதிர்ப்பார்த்த அளவு’ பிரமாதமில்லை என்று தோன்றியது. மாப்பிள்ளைக்கு ‘முதலிரவு’க்கு ‘முடியலை’ என்பதுதான் சப்ஜெக்ட். ஏன் ‘முடியலை’ என்பதற்கு பின் ஒரு கிளுகிளுப்பான சதி. பல்வேறு சிக்கல்களுக்கு பிறகு வெற்றிகரமாக ‘முடிவது’தான் கிளைமேக்ஸ். டயலாக்கெல்லாம் டைரக்ட் மீனிங்.

அந்தப் படத்தின் ஹீரோ நம்மூர் நாகேஷ் மாதிரி வெடவெடவென்று இருக்கும் காசிநாத். அப்போதிலிருந்தே கன்னட சினிமா ஒரு விஷயத்தில் ஆச்சரியத்தை அள்ளித் தரும். ஹீரோவெல்லாம் ரொம்ப சுமாராக இருக்க, இந்திரலோகத்து சுந்தரிகள் கணக்கான ஹீரோயின்கள் எப்படி அவர்களை விரட்டி விரட்டி ரொமான்ஸ் செய்கிறார்கள் என்பதுதான் இன்றுவரை புரியாத புதிர்.

இட்ஸ் ஓக்கே.

அடிப்படையில் இயக்குநரான காசிநாத், பட்ஜெட் பற்றாக்குறை காரணமாக ஒருக்கட்டத்தில் அவரே ஹீரோவாகி விட்டார். கன்னடத்து பாக்யராஜ் என்பார்கள். பெரும்பாலும் சில்மிஷமான சப்ஜெக்டுகளைதான் கையில் எடுத்துக் கொள்வார். சினிமாவில் மட்டுமல்ல, எல்லா ஏரியாவிலுமே Yes, sex always sells.

காசிநாத், இந்த ஏரியாவில் கில்லி. எண்பதுகளின் இந்திய நகர்ப்புற இளைஞர்களுக்கு sex கொஞ்சம் ‘இலைமறை காய்மறை’யாய்தான் கிடைத்தது. அந்த பாலியல் வறட்சியை புரிந்துக்கொண்டு அதற்கேற்ப தன்னுடைய படங்களுக்கு knot பிடிப்பார். ‘அனுபவா’ என்றொரு படம், காசிநாத்தின் இயக்கம் மற்றும் நடிப்பில் வந்திருக்கிறது. எப்போதோ யூட்யூப்பில் பார்த்தேன். செம மஜாவாக இருக்கும். இவருடைய படங்கள் சிலவற்றை ரீமேக்கி தமிழில் பாண்டியராஜன் போன்றவர்கள் (உதா : ‘ஜாடிக்கேத்த மூடி’) இங்கே ஹிட்டடித்திருக்கிறார்கள். உபேந்திரா உள்ளிட்ட இன்றைய கன்னட சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரங்கள், காசிநாத்தின் சிஷ்யர்கள்தான்.

கன்னட சினிமாவின் அடையாளங்களில் ஒருவராக திகழ்ந்த சகலகலா வல்லவன் காசிநாத், இன்று காலமாகி விட்டார். சுலபத்தில் இட்டு நிரப்பமுடியாத ஆளுமை அவர். கன்னட சினிமாவுக்கு நிஜமாகவே பேரிழப்புதான்.

16 ஜனவரி, 2018

பத்து வயசானா பங்காளி

பாவலரை பிரிந்துவிட்டு எழுபதுகளின் தொடக்கத்தில் சென்னைக்கு பிழைப்பு தேடிவந்த பாஸ்கர், இளையராஜா, கங்கை அமரன் மூவரும் ‘பாவலர் பிரதர்ஸ்’ என்கிற பெயரில்தான் இயங்கிக் கொண்டிருந்தார்கள் (இவர்களை பிரிந்த பாவலர் அதன் பிறகு மிகக்குறுகிய காலமே உயிரோடு இருந்தார்).

‘அன்னக்கிளி’யில் இருந்துதான் இளையராஜா என்கிற பெயரில் செயல்படத் தொடங்கினார்கள். லண்டன் டிரினிட்டி பள்ளியில் முறையாக இசை தேர்ந்தவர் என்பதால் ராஜாவின் பெயரில் செயல்படுவதில் பாஸ்கருக்கும், கங்கை அமரனுக்கும் ஆட்சேபணை எதுவுமில்லை.

ஒவ்வொருவரும் திருமணம் செய்துக் கொள்கிறார்கள். அதன் பிறகு அவரவர் பிழைப்பை தனித்தனியாக பார்த்தாலும் மதிய உணவு மட்டும் ஒன்றாகதான் உண்பார்கள். தொண்ணூறுகளின் தொடக்கம் வரை, ராஜாவின் பிரசாத் தியேட்டர் ரெக்கார்டிங் ஸ்டுடியோவில்தான் சகோதரர் மூவரும் மதியம் சந்திப்பார்கள். அவரவருக்கு அவரவர் வீட்டில் இருந்து சாப்பாடு வந்துவிடும்.

தனியாக இயக்குநர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் என்று கங்கை அமரன் திரையுலகில் கோலோச்சிக் கொண்டிருந்தாலும் அண்ணன் ராஜாவுக்கு மேனேஜராகவும் பணியாற்றிக் கொண்டிருந்தார்.

பாஸ்கரும், அமரனும் சுத்த அசைவம். ராஜா சைவம். எனவே கொஞ்சம் இடைவெளி விட்டு ராஜா அமைதியாக சாப்பிடுவார். அமரன், லொடலொடவென்று பேசிக்கொண்டே இருப்பார். மற்ற இருவரும் இவர் பேச்சை கவனித்துக் கொண்டே இருப்பார்கள்.

‘தர்மதுரை’ படத்துக்கு ராஜா இசையமைத்துக் கொண்டிருந்தார். வேறொரு வேலையில் இருந்த அமரனுக்கு போன். “டேய், ரஜினி படத்துக்கு பாட்டெழுதணும். மதியம் வர்றப்போ எழுதிக் கொடுத்துடு”

மதியம் பிரசாத்துக்கு அமரன் வந்து சேர்ந்தபோது ரெக்கார்டிங் தியேட்டர் வாசலில் முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டு பாஸ்கர் உட்கார்ந்திருந்தார். அவருடைய மற்றும் அமரனுடைய சாப்பாட்டு பைகள் வெளியே வைக்கப்பட்டிருந்தன.

கோபத்துடன் உள்ளே நுழைந்தார் அமரன். “டேய், ட்யூன் தெரியுமில்லே. சாப்பிட்டுட்டு உடனே பாட்டை எழுதிக் கொடுத்திடு” என்றார் ராஜா.

“அதிருக்கட்டும். எங்க சாப்பாட்டுப் பையை யாரு வெளியே வெச்சது?”

“நான்தான் வைக்க சொன்னேன். நான் சைவம். நீங்க அசைவம். செட் ஆகாது. தனியா சாப்பிடுங்கன்னு உங்க அண்ணிதான் சொல்லிச்சி”

கொதித்துப் போன அமரன் விருட்டென்று வெளியே வந்தார். மனம் நொந்துப் போயிருந்த பாஸ்கர், சாப்பிடாமலேயே கிளம்பிவிட்டார். அமரனும் பசியோடு விறுவிறுவென்று பாட்டு எழுதத் தொடங்கினார்.

பொதுவாக இளையராஜா பாடல்களுக்கு அவரே பல்லவியை எழுதி வைத்திருப்பார்.

அமரன் எழுதவேண்டிய பாடலுக்கு பல்லவி.

“ஆணென்ன பெண்ணென்ன
நீயென்ன நானென்ன
எல்லாம் ஓரினம் தான்
அட நாடென்ன வீடென்ன
காடென்ன மேடென்ன
எல்லாம் ஓர் நிலம் தான்”

விடுவிடுவென அமரன் பாட்டை தொடர ஆரம்பித்தார்.

“நீயும் பத்து மாசம்
நானும் பத்து மாசம்
மாறும் இந்த வேஷம்”

சரணத்தில் அண்ணனை விளாச ஆரம்பித்தார்.

“ஒண்ணுக்கொண்ணு ஆதரவு
உள்ளத்திலே ஏன் பிரிவு
கண்ணுக்குள்ள பேதம் இல்ல
பார்ப்பதிலே ஏன் பிரிவு
பொன்னு பொருள் போகும் வரும்
அன்பு மட்டும் போவதில்லை
தேடும் பணம் ஓடிவிடும்
தெய்வம் விட்டுப் போவதில்லை
மேடைக்கும் மாலைக்கும் கோடிக்கும் ஆசைப்பட்டு
வெட்டுக்கள் குத்துக்கள் ரத்தங்கள் போவதென்ன
மேடைக்கும் மாலைக்கும் கோடிக்கும் ஆசைப்பட்டு
வெட்டுக்கள் குத்துக்கள் ரத்தங்கள் போவதென்ன
இதை புரிஞ்சும் உண்மை தெரிஞ்சும்
இன்னும் மயக்கமா?”

பாட்டு எழுதிய பேப்பரை தூக்கி இளையராஜாவின் மேஜை மீது போட்டார்.

“இதான் பாட்டு. புடிச்சிருந்தா வெச்சிக்கோ. இல்லைன்னா தூக்கிப்போடு” என்று சொல்லிவிட்டு முகத்தைகூட ஏறெடுத்துப் பார்க்காமல் போய்க்கொண்டே இருந்தார். எப்படியும் அந்தப் பாடலை ராஜா, ரெக்கார்டு செய்யமாட்டார் என்பது அமரனின் நம்பிக்கை.

ஆனால்-

அந்த பாட்டு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் குரலில் பதிவு செய்யப்பட்டது. படத்தின் சிச்சுவேஷனுக்கு பொருத்தமான பாட்டு என்பதால், தன்னை குறிவைத்து எழுதப்பட்ட பஞ்ச்லைன்களை அனுமதித்தார் இளையராஜா.

ராஜா மட்டும் சளைத்தவரா?

பஞ்சு அருணாச்சலம் எழுதவேண்டிய அடுத்த பாட்டுக்கு பல்லவி எழுதுகிறார்.

“அண்ணன் என்ன தம்பி என்ன
சொந்தமென்ன பந்தமென்ன
சொல்லடி எனக்கு பதிலை
நன்றி கொன்ற உள்ளங்களை
கண்டு கண்டு வெந்தபின்பு
என்னடி எனக்கு வேலை
நம்பி நம்பி வெம்பி வெம்பி
ஒன்றுமில்லை என்ற பின்பு
உறவு கிடக்கு போடி
இந்த உண்மையைக் கண்டவன் ஞானி”

இந்த கதையெல்லாம் ரஜினிக்கு தெரியாது. ‘தர்மதுரை’ படத்தில் பாடல்கள் மிகவும் பவர்ஃபுல்லாக அமைந்ததில் அவருக்கு சந்தோஷம். ஒருமுறை கங்கை அமரனை சந்தித்தபோது, “நம்ம படத்துலே பாட்டெல்லாம் ரொம்ப பிரமாதமா அமைஞ்சுடுச்சி” என்று சொல்லியிருக்கிறார். பதிலுக்கு அமரன், இந்த வரலாற்றை எடுத்துரைக்க, தன்னுடைய படத்தில் பணியாற்றும்போது சகோதரர்களுக்குள் இப்படியொரு பிளவு ஏற்பட்டு விட்டதே என்று பெரிதும் மனம் வருந்தினாராம்.

கலைஞர்களின் கோபதாபங்கள்கூட கலையாகதான் வெளிப்படும்.

3 ஜனவரி, 2018

ரஜினி – காலாவதியான கவர்ச்சி!

“முதல் படத்துலேயே சிகரெட்டு புடிச்சிக்கிட்டு பொறுக்கி மாதிரி வந்தான். அப்போ இவனெல்லாம் இவ்ளோ பெரிய ஆளா வருவான்னு நெனைக்கவே இல்லை” - ‘ராஜாதி ராஜா’ வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தபோது, ‘அபூர்வ ராகங்கள்’ பற்றி என்னுடைய பெரியம்மா சொன்னது இது.

“அப்புறம் எப்படி பெரிம்மா, இவ்ளோ பெரிய ஸ்டார் ஆனாரு?”

“அப்போவெல்லாம் சிவப்பா இருந்தாதான் ஹீரோ. குப்பை பொறுக்குற கேரக்டருலே நடிச்சாகூட நல்லா மேக்கப் போட்டுக்கிட்டு ஹீரோ சிவப்பாதான் இருக்கணும். முதல் தடவையா ரஜினிதான் கேரக்டருக்கு ஏத்த தோற்றத்துலே கருப்பா, களையா இருந்தான். ‘மூன்று முடிச்சு’, ‘பதினாறு வயதினிலே’, ‘புவனா ஒரு கேள்விக்குறி’, ‘ஆறிலிருந்து அறுபது வரை’, ‘முள்ளும் மலரும்’ படத்துலே எல்லாம் அந்தந்த கேரக்டருக்கு ஏத்தமாதிரி ரஜினி இருப்பான். கிராமத்துப் படத்துலே நடிச்சாகூட கமல், அய்யிரு பையன்தான். ஆனா, ரஜினி அப்படியே நம்மளை மாதிரியே இருந்ததாலே ஜனங்களுக்கு பிடிச்சிப் போச்சு. அதேமாதிரிதான் விஜயகாந்தும்”

ரஜினி, திரையுலகுக்கு அறிமுகமான சூழல் இங்கே குறிப்பிடத்தக்கது. அறுபது வயதை கடந்துவிட்ட எம்.ஜி.ஆர், கட்சி ஆரம்பித்து அரசியலில் மும்முரமாகி விட்டார். அவரைவிட இரண்டு, மூன்று வயது குறைவான காதல் மன்னன் ஜெமினி கணேசன், வண்ணமயமாகிவிட்ட தமிழ் சினிமாவில் தன் முகத்தை குளோஸப்பில்கூட காட்டமுடியாத அளவுக்கு கிழடு தட்டிவிட்டார். இளமையிலேயே முதுமையாக தோற்றமளித்த சிவாஜியும் ஐம்பது வயதை கடந்து நிஜமாகவே முதுமையை எட்டிவிட்டார்.

போட்டியே இல்லாமல் சிவக்குமார்தான் கோலோச்சிக் கொண்டிருந்தார். பார்ப்பதற்கும் அழகாக இருக்கிறார், நன்கு நடனமும் ஆடத்தெரிகிறது, குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் என்கிற கோதாவில் கமல்ஹாசன் வளரத் தொடங்கியிருந்தார். திரையுலகில் எப்போதுமே இருதுருவ ஆதிக்கம் நிலவ வேண்டும் என்கிற மனோபாவம் ரசிகர்களுக்கு மட்டுமின்றி, இண்டஸ்ட்ரியில் இருப்பவர்களுக்கும் உண்டு. சமூகரீதியாக பார்க்கப் போனாலும் திராவிட ஆட்சி தொடரும் தமிழகத்தில், ஒரு பார்ப்பனரை தலைமீது தூக்கி வைத்து கொண்டாட சமூகம் தயாரில்லை. அதனடிப்படையில் போட்டியே இல்லாமல் கமலுக்கு எதிராக நிலைநிறுத்தப்படுகிறார் ரஜினி.

1975ல் திரையுலகுக்கு அறிமுகமான ரஜினிகாந்த், ‘பில்லா’, ‘முரட்டுக்காளை’ என்று நட்சத்திரமாக உருவெடுக்க ஐந்தாண்டு காலம் மிகக் கடுமையாக உழைத்திருக்கிறார். சுமாரான தோற்றத்தோடு ‘அழகான’ ஹீரோக்களோடு போட்டி போட, தன்னுடைய யதார்த்த நடிப்பையே ஆயுதமாக்கி மிகவும் மெனக்கெட்டிருக்கிறார். அதிர்ஷ்டவசமாக ரஜினிக்கு அமைந்த கேரக்டர்கள், அவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்துக் கொண்டே இருந்திருக்கிறது. அவர் முழுநீள ஹீரோவாக உருவெடுப்பதற்கே 25 படங்களும், மூன்று ஆண்டுகளும் முழுமையாக தேவைப்பட்டிருக்கிறது.

கைவிட்டு பைக் ஓட்டுவதும், சிகரெட்டை தூக்கிப் போட்டுப் பிடிப்பதும் பெரும் ஃபேண்டஸியாக கருதிய அந்தகால இளைஞர் கூட்டம் ரஜினியை முரட்டுத்தனமாக கொண்டாடியதில் ஆச்சரியமேதுமில்லை.

தன்னுடைய நூறாவது படம் வரைக்கும் பரிசோதனை முயற்சிகளில் தீவிரமாக இறங்காமல், வணிகரீதியாக தன்னை ஸ்திரப்படுத்திக் கொள்வதில் கமல்ஹாசன் மும்முரமாக இருந்தார்.

ஆனால் -

ரஜினியோ மிக துணிச்சலான கதாபாத்திரங்களை ஏற்று கலைரீதியான படைப்பாக சினிமாவை கருதக்கூடிய இயக்குநர்களிடம் பணிபுரிவதை விரும்பினார்.

1980ல் ‘முரட்டுக்காளை’யில் ரஜினிக்கு கிடைத்த மகத்தான வெற்றிதான் அவருடைய மாற்று சினிமா முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போட்டது. வெற்றியின் ருசி கொடுத்த போதையால் அடுத்தடுத்த பிரும்மாண்ட வணிக வெற்றிகளை நோக்கி ஓடத்தொடங்கினார். இடையிடையே ‘கை கொடுக்கும் கை’, ‘உன் கண்ணில் நீர் வழிந்தால்’ மாதிரி ஆசைக்கு ஏதோ சோதனை செய்து தோல்வியுற்றார்.

‘முரட்டுக்காளை’ மாதிரியே பிரும்மாண்டமான வெற்றியை ‘சகலகலா வல்லவன்’ படத்தில் கமல் எட்டினார்.

ஆனால் –

இந்த வெற்றியை கண்டு அவர் பயப்படத் தொடங்கினார். நாலு ஃபைட்டு, ஆறு பாட்டு என்று தன்னை தமிழ் திரையுலகம் முடக்கிவிடுமோ என்று பதறினார்.

இந்த இருவேறு வெற்றிகள்தான் அடுத்த சில பத்தாண்டுகள் தமிழ் சினிமாவின் போக்கை மாற்றின.

வெற்றி மேல் வெற்றி என்கிற இலக்கை நோக்கி ரஜினியும், தமிழ் சினிமாவில் அதுவரை யாரும் செய்யாதவை என்கிற பரிசோதனை முயற்சிகளில் கமல்ஹாசனும் ஈடுபடத் தொடங்கினார்கள்.

1985ல் ரஜினிக்கு நூறாவது படம் அமைந்தது. தன்னை அறிமுகம் செய்த பாலச்சந்தர்தான் தன்னுடைய நூறாவது படத்தை இயக்க வேண்டும் என்று ரஜினி விரும்பினார். எனினும், அந்தப் படம் ‘தண்ணி, சிகரெட்’ மாதிரி லாகிரி வஸ்துகளுக்கு ஆட்பட்ட ரஜினி படமாக இல்லாமல், வேறொரு ரஜினியை – அதாவது ஆன்மீக ரஜினி – காட்டக்கூடியதாக, தன்னுடைய இஷ்டதெய்வமான ‘ஸ்ரீ ராகவேந்திரர்’ பெருமையை தமிழர்களுக்கு எடுத்துச் சொல்வதாக இருக்க வேண்டுமென்று நினைத்தார்.

ரேஸ் குதிரையாக முதலிடத்தில் ஓடி லட்சம் லட்சமாக கொட்டிக் கொண்டிருக்கும் குதிரையை பூட்டி சாமி தேர் இழுத்தால் வேலைக்கு ஆகாது என்று பாலச்சந்தர் மறுத்தார். எனினும் ரஜினிக்காக படத்தை தயாரிக்க முன்வந்தார். எஸ்.பி.முத்துராமன் இயக்கிய ‘ஸ்ரீராகவேந்திரர்’ படுதோல்வி. நியாயமாக பார்க்கப் போனால், ஆன்மீகம் தனக்கு வேலைக்கு ஆகாது என்பதை ரஜினி அன்றே உணர்ந்திருக்க வேண்டும்.

ரஜினியை ஸ்டைல் மன்னன் ரஜினியாக பார்க்கதான் ரசிகர்கள் விரும்பினார்களே தவிர, அவரிடமிருந்து பொழுதுபோக்கைதான் எதிர்ப்பார்த்தார்களே தவிர வேறொன்றுமில்லை.

உதாரணத்துக்கு 1987 தீபாவளியை சொல்லலாம்.

கமல்ஹாசன் நடித்த ‘நாயகன்’ படத்தை சிறப்புக் காட்சியாக ரஜினி பார்க்கிறார்.

“இந்த தீபாவளி கமலோட தீபாவளி. தமிழில் யாருமே பண்ணாத சாதனையை ‘நாயகன்’ மூலமா செஞ்சிருக்காரு. ரொம்ப சாதாரணமான நம்மோட ‘மனிதன்’ எடுபடாது” என்று வெளிப்படையாகவே ‘மனிதன்’ இயக்கிய எஸ்.பி.முத்துராமனிடமும், தயாரித்த ஏ.வி.எம்.சரவணனிடமும் சொல்லியிருக்கிறார்.

“அது கமல் படம். இது ரஜினி படம். நீங்க வேணும்னா பாருங்க. ரெண்டுமே நல்லா ஓடும்” என்று சமாதானப்படுத்தி இருக்கிறார் எஸ்.பி.முத்துராமன். ரஜினிக்கு சமாதானமாகவில்லை.

ஆனால் –

எஸ்.பி.முத்துராமன் சொன்னதுதான் நடந்தது.

கமல்ஹாசனை அறிவுஜீவியாக, பரிசோதனைகளுக்கு தயாரான எலியாகவே ரசிகர்கள் ஏற்றுக் கொண்டார்கள். கமல்ஹாசனின் படம் ஏதாவது சாதாரண பொழுதுபோக்கு படமாக வந்தால், அவருடைய வெறித்தனமான ரசிகர்களேகூட ‘ஒரு தடவை பார்க்கலாம்’ என்று உதட்டை பிதுக்க ஆரம்பித்தார்கள். இதனாலேயே படத்துக்கு படம் ஏதாவது வித்தியாசம் என்று முயற்சித்து மண்டையை பிய்த்துக் கொண்டார் கமல். முன்பாக எவ்வளவோ ஜிமிக்ஸெல்லாம் காட்டி தலைசிறந்த பொழுதுபோக்குப் படமாக அவர் உருவாக நினைத்த ‘விக்ரம்’ கதை இப்படிதான் கந்தலானது.

ரஜினி, ரஜினியாகவே தோன்றினால் போதும். அவர் ஏதாவது முயற்சித்தால்தான் ரசிகர்களுக்கு சோதனை. பீரியட் ஃபிலிமாக அவர் பிரும்மாண்ட செலவில் முயற்சித்த சொந்தப் படமான ‘மாவீரன்’ படுதோல்வி அடைந்தது.

இந்த நிலையே தொண்ணூறுகளில் தொடர்ந்தது.

ரஜினியின் ஒவ்வொரு படமும் முந்தையப் படத்தின் வசூல்சாதனையை முறியடித்து வந்தன. கமல் கிட்டத்தட்ட கருத்து கந்தசாமியாகவே ஆகிவிட்டார் (இருவருக்கும் ஒருசில விதிவிலக்குகள் இருக்கலாம், ஆனால், இதுவே பொதுவான நிலையாக இருந்தது)

அதாவது –

ரஜினியை மாஸ் மன்னனாகவும், கமலை ஒப்பீனியன் மேக்கர் என்கிற அளவிலும் மக்கள் ஏற்றுக் கொண்டார்கள்.

இதற்கிடையே எம்.ஜி.ஆரின் மறைவு, ரஜினிக்கு ‘தலைவர்’ ஆகும் கெத்தை கொடுத்தது. அவருடைய படங்களில் சோ-வின் உதவியோடு அரசியல் பஞ்ச் வசனங்கள் இடம்பெறத் தொடங்கின.

‘அண்ணாமலை’யில் தொடங்கியது ரஜினிக்கு அரசியல் பஞ்சாயத்து. தொடக்கத்திலிருந்தே ஏனோ ரஜினியை ஜெயலலிதாவுக்கு பிடிக்காது. அவரை மட்டம் தட்டும் விதமாகவே நடந்துக் கொண்டு வந்திருக்கிறார். ‘நதியை தேடி வந்த கடல்’, ‘பில்லா’ படங்களில் ஹீரோ (நம்ம ரஜினிதான்) கருப்பாக இருக்கிறார் என்று நடிக்கவே மறுத்தவர் ஜெயலலிதா.

அப்படிப்பட்டவர் ஆட்சி அதிகாரத்துக்கே வந்த நிலையில், நண்டு சிண்டுகளால் ‘தலைவர்’ என்று அழைக்கப்படும் ரஜினியை எப்படி சகித்துக் கொள்ள முடியும்?

வசூலில் ரஜினியின் மாஸ்டர்பீஸாக ‘பாட்ஷா’ அமைந்தது. தமிழ் சினிமாவிலேயே அதிக முறை நுழைவு டிக்கெட் கிழிக்கப்பட்ட படம் என்கிற பெருமையை சிவாஜியின் ‘திரிசூலம்’ பெற்றிருந்தது. அந்த சாதனையை கமலின் ‘அபூர்வ சகோதரர்கள்’ முறியடித்தது. இரண்டு படங்களின் சாதனையையும் நொறுக்கி, இன்றுவரையிலான மகத்தான சாதனையை ‘பாட்ஷா’வில் செய்தார் ரஜினி.

‘அன்று; தளபதி. நேற்று; மன்னன். நாளை?’ என்று ரசிகர்கள் போஸ்டர் அடித்து ஒட்ட ஜெயலலிதா கடுப்பானார். அதற்கு ஏற்ப ‘பாட்ஷா’ வெற்றிவிழாவில் மயில்தோகையால் மெல்ல ஜெ. தலைமையிலான அரசை ரஜினி விமர்சிக்க, முட்டிக் கொண்டது. ‘முத்து’ படத்தில், “நான் பாட்டுக்கு என் வழியில் போயிக்கிட்டிருக்கேன். எதுக்கு தடங்கல் பண்ணுறீங்க” என்று வசனம் வைத்து ஜெ.வை சீண்டினார்.

அடுத்து 1996ல் நடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் நேரடியாகவே ஜெ.வுக்கு எதிராக போர்முழக்கம் செய்தார் ரஜினி. அரசியலில் குதித்து அவர் தமிழக காங்கிரஸ் தலைவராக ஆட்சியைப் பிடிப்பார் என்று யூகங்கள் வந்துக் கொண்டிருந்த நிலையில், அந்த சூழலை சுக்குநூறாக உடைத்தார் அப்போதைய பிரதமர் நரசிம்மராவ். வேறு வழியின்றி சோ ஆலோசனையுடன் திமுக கூட்டணியை ஆதரித்து, ஜெ.வை பழிதீர்த்துக் கொண்டார்.

ரஜினி படமென்றால் வெள்ளிவிழா என்கிற நிலையை தாண்டி ‘முத்து’, ‘அருணாச்சலம்’, ‘படையப்பா’ படங்கள் 250 நாட்கள் ஓடி வைரவிழா கண்டன. இதைவிட பெரிய வெற்றியை கொடுத்தே ஆகவேண்டும் என்கிற சுமை அழுத்த, குழப்பத்தில் சினிமாவில் நடிப்பதையே சில ஆண்டுகள் தவிர்த்தார் ரஜினி.

2001ல் மீண்டும் ஜெ. ஆட்சி.

இம்முறை அரசியல் கருத்துகளோடு சுடச்சுட களமிறங்க திட்டமிட்டார் ரஜினி. இப்போது சொல்லிக் கொண்டிருக்கிறாரே ஆன்மீக அரசியல், அதையே கருத்தாக்கி ‘பாபா’ எடுத்தார்.

படுதோல்விதான் பரிசு. தன்னுடைய நூறாவது படமான ‘ஸ்ரீராகவேந்திரா’வை விடவும் கசப்பான அனுபவத்தை ‘பாபா’வில் பெற்றார்.

‘என்னோட சூப்பர் ஸ்டார் பட்டமெல்லாம் அவ்வளவுதானா?’ என்று ரஜினி புலம்புமளவுக்கான தோல்வி.

ரஜினியிடம் மக்கள் எதிர்ப்பார்ப்பது பொழுதுபோக்கே தவிர, அரசியலோ சமூகக் கருத்துகளோ கிடையாது என்பதை ஆணித்தரமாக ‘பாபா’வுக்கு நேர்ந்த கதி நிரூபித்தது. ஏனெனில் ரஜினியைவிட டீக்கடை பெஞ்சுகளில் ‘தினத்தந்தி’ வாசிக்கும் சாமானியனுக்கே அரசியல் அதிகம் தெரியும். சமூகத்தைப் பற்றிய புரிதலும் அதிகம்.

அரசியல் கருத்துகளால் கீழே விழுந்த குதிரையான ரஜினி, மீண்டும் தன்னுடைய பொழுதுபோக்கு சேணத்தை தட்டிப் போட்டு ‘சந்திரமுகி’யில் வரலாற்று வெற்றியை எட்டினார். அடுத்து ஏவிஎம்மின் ‘சிவாஜி’, ஷங்கரின் ‘எந்திரன்’ படங்களில் வசூல் சாதனை புரிந்தார்.

‘படையப்பா’ வரையில் ரஜினி நடித்தாலே வெற்றி என்கிற நிலைதான் இருந்தது. அப்போது அவருக்கு இருந்த கவர்ச்சி அப்படி. ஐம்பது வயதை கடந்தும் அவர் ஹீரோவாக நடிக்கும் நிலையில் ரஜினிக்காக படம் ஓடும் என்கிற நிலை மாறி, ரஜினி நடித்த படம் நன்றாக இருந்தால் மட்டுமே ஓடும் என்கிற சூழல்தான் இப்போது நிலவுகிறது. ‘பாபா’, ‘குசேலன்’, ‘கோச்சடையான்’, ‘லிங்கா’ என்று அடுத்தடுத்த தோல்விகளும், ‘கபாலி’ போன்ற ஆவரேஜ்களும் நியாயமாக ரஜினிக்கு நிலைமையை விளங்கப்படுத்தியிருக்க வேண்டும்.

அதாவது ரஜினியின் கவர்ச்சி காலாவதியாகி கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் ஆகப்போகிறது. சினிமாவிலேயே படுதோல்வி அடைந்த ‘பாபா’ கருத்துகளோடு 234 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பு ‘2.0’, ‘காலா’ படங்களை ஓடவைப்பதற்கான அவருடைய வழக்கமான விளம்பர யுக்தியா அல்லது நிஜமாகவே ஒருமுறை ஆழத்தில் கால்விட்டு பார்ப்போமா என்கிற அசட்டுத் துணிச்சலா என்பது இன்னும் ஓரிரு ஆண்டுகளிலேயே தெரிந்துவிடும்.