30 மார்ச், 2015

சரோஜாதேவி - ராஜபோதை!

சென்னை புத்தகக் கடையொன்றில் மேய்ந்து கொண்டிருந்த போது, மற்ற புத்தகங்களை எல்லாம் காட்சிக்கு அடுக்கி வைத்திருந்தார்கள். ‘சரோஜாதேவி’ புத்தகத்தை மட்டும் கண்ணுக்குத் தெரியாதபடி ‘சொருகி’ வைத்திருந்தார்கள். உயிர்மை பதிப்பகம், மஞ்சள் கலர் அட்டையில் பொம்மைப் படம் போட்டிருக்கும் என்றெல்லாம் அடையாளம் சொல்லிக் கொண்டிருந்த வேளையில், என் தோழிதான் கண்டுபிடித்து எடுத்துக் கொண்டு வந்து தந்தாள். இது தற்செயலானதாகக்கூட இருக்கலாம். ஆனால் தமிழர்களின் பொதுவான மனநிலையை வெளிச்சம் போட்டு இது காட்டுவதாகவே தோன்றியது.

பாலியல் சார்ந்த புத்தகங்களை விழுந்து விழுந்து புரண்டு புரண்டு படி(டு)ப்போம். ஆனால் அதைப்பற்றி எழுதினால் அதற்கு நூலகத்தில் இடம் கொடுக்க மாட்டோம். ‘முள்ளில்லா சுள்ளி எரிமடுத்து முயன்றுன்னை நோக்குகிறோம் காமா’ என்றெல்லாம் பாலுணர்வை அப்பட்டமான மொழியில் வெளிப்படுத்துகிற செழுமையான மரபில் வந்த நாம் எப்போது இந்த ‘இலைமறை காய்’ போக்கிற்குத் தாவினோம்? பாலியல் சார்ந்த சாதாரணமான விஷயத்தைக்கூட பேசவே தயங்குகிறோம். அஞ்சுகிறோம். வேறு வழியில்லாமல் முற்றிப் போன கட்டத்தில், டாக்டர் காமராஜ் வகையறாக்களிடம் மட்டும் பேசித் தொலைக்கிறோம். இந்தியாடுடே வருடா வருடம் ‘செக்ஸ் சிறப்பிதழ்’ கொண்டு வரும் போது வக்கிரம், ஆபாசம் என வசைக் கடிதங்கள் குவியும். ஆனால் அதேசமயம் உள்ளே பணிபுரிந்தவர்களுக்கு மட்டும்தான் தெரியும், ஒரு காப்பிகூட மிச்சமில்லாமல் அந்தச் சிறப்பிதழ் விற்றுத் தீர்கிற ரகசியம்.

“சலவைத் தொழிலாளியிடம் அகப்பட்ட வாழைக்கறை படிந்த வேட்டியைப் போல வெளுத்துவிடத் துடிக்கும் ரகசிய உள்மனம் தனக்கான பாலியல் வேட்கையை நுகர இணைய பால்வெளியில் சஞ்சாரிக்கும் பொழுதுகளில்...”இப்படி ஒரு இறுக்கமான நடையில் ஒருவேளை இந்தப் புத்தகத்தில் இந்த விஷயத்தை அணுகியிருந்தால், நூலக அந்தஸ்து கிடைத்திருக்குமோ என்னவோ? ஆனால் விஷயம் ஒருத்தருக்கும் புரிந்திருக்காது. இறுக்கமும் தயக்கமும் தட்டிப் போன இந்த விஷயத்தை கொண்டாட்டமான மனநிலையில் கொண்டாட்டமான மொழிநடையில் இந்தப் புத்தகத்தில் யுவகிருஷ்ணா அணுகியதால்தான், கொஞ்சத்திற்கு கொஞ்சமாவது இறுக்கம் தளர்ந்திருக்கிறது.

இத்தனை வருட தொலைக்காட்சி அனுபவத்தில் சொல்கிறேன். நேஹா ஆண்ட்டி, சபிதா அண்ணி, அக்கதைகளில் உலவும் ஆண்களெல்லாம் வெறும் கற்பனை பாத்திரங்கள் இல்லை. நம்மோடு நிஜ வாழ்க்கையில் உலவிக் கொண்டிருப்பவர்கள்தான். காதலில் ஏது நல்ல காதல், கள்ளக் காதல் என தமிழர்கள் கேட்க ஆரம்பித்து ஒரு ’மாமா’ங்க காலம் ஆகிவிட்டது. வயது வந்தவர்களுக்கு மட்டும் போன்ற கதைகளையும் எழுதிய கி.ராவுக்கு கிடைத்த வரவேற்புக்கு இணையான கவனம் யுவகிருஷ்ணாவிற்கும் கிடைக்க வேண்டும். புனித பிம்பங்களோடு எத்தனை காலம்தான் வாழ்ந்து கொண்டிருக்கப் போகிறோம்? சன்னிலியோனுக்கு இருக்கிற தைரியம் தமிழ்ச் சிந்தனையாளர்களுக்கு இல்லாமல் போனது ஏனோ?

இணையத்தில் இதைப் படிக்காதவர்கள் தயவுசெய்து புத்தகத்தை வாங்கிப் படியுங்கள். அதைவிட முக்கியம் தைரியமாக நூலகத்தில் அதற்கு இடம் கொடுத்து உங்களது சிந்தனை உயரத்தை விசாலமாக்குங்கள். தமிழ் இலக்கிய உலகிற்கும் ஒரு வேண்டுகோள். உங்களது ‘தீவிரத்’தன்மையை சற்றே தளர்த்தி, உங்களது கதவுகளைத் திறந்து வைப்பீர். அக்னி வெப்பப் புழுக்கம் தாளவில்லை. இது போன்ற புதிய காற்று உள்ளே வரட்டும். வாசக எல்லைகள் விரிவடைய வேண்டிய தருணம் இது. இறுதியாய் படிப்பவர்களுக்கு. ஒரு குவார்ட்டர் பிராந்தி, ஒரு பொட்டுக் கடலை பாக்கெட், ஒரு வாட்டர் பாக்கெட், ஒரு டம்ளர்... இவற்றிற்கு 152 ரூபாய் ஆகிறது. ‘சரோஜாதேவி’ புத்தகத்தின் விலை வெறும் நூறு ரூபாய்தான். ஒரு குவார்ட்டர் பிராந்தி தருவதை விட ராஜபோதை நிச்சயம்.

நன்றி : சரவணன் (பத்திரிகையாளர், டிவி நிகழ்ச்சி தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்)

24 மார்ச், 2015

எவடே சுப்பிரமணியம்?



“நீ யாரு?”

“யுவகிருஷ்ணா”

“அது உன் பேரு. நீ யாரு?”

“ஈ.எஸ்.எல்.சி., எஸ்.எஸ்.எல்.சி., ஹையர் செகண்டரி டூ அட்டெம்ப்ட்ஸ்”

“அதெல்லாம் உன் எஜுகேஷனல் குவாலிஃபிகேஷன். நீ யாரு?”

“சீனியர் சப் எடிட்டர் இன் எ லீடிங் டேமில் டெய்லி”

“அது உன் புரொஃபஷன். நீ யாரு?”

இப்படியே ‘நீ யாரு?’ என்று யாராவது தாலியறுத்துக் கொண்டிருந்தால், என்ன ஆகும்?

சித்தார்த்தன் இந்த கேள்விக்கு விடை தேடி போய்தான் புத்தர் ஆனார்.

நாம் விடை தேடி போவதாக இருந்தால் ஒன்று மெண்டல் ஆவோம், அல்லது புத்தன் ஆவோம். இரண்டுக்கும் இடையே மெல்லிய கோடுதான்.

மாஸ் மசாலா தாயகமான டோலிவுட்டில் இருந்து ‘எவடே சுப்பிரமணியம்’ மாதிரி தத்துவார்த்த விசாரணை கோரும் திரைப்படத்தை –அதுவும் பக்கா கமர்சியல் டெம்ப்ளேட்டில்- சத்தியமாக எதிர்ப்பார்க்கவில்லை. அதனால்தான் அங்கே இப்படத்தை நியூவேவ் சினிமா என்று விமர்சகர்கள் கொண்டாடுகிறார்கள். தெலுங்கில் சேகர் கம்முலாவுக்கு பாத்தியதைபட்ட இந்த ஏரியாவில் அறிமுக இயக்குனரான நாக் அஸ்வின் பிரமாதப்படுத்தி இருக்கிறார். கேரளாவில் ‘காட்ஸ் ஓன் கண்ட்ரி’, ‘பெங்களூர் டேஸ்’ போன்ற படங்கள் உருவாக்கிய ஆரோக்கியப் போக்கினை, தெலுங்கில் ‘எவ்வடே சுப்பிரமணியம்’ ஏற்படுத்தும் என்று நம்புகிறார்கள்.

சுப்பிரமணியம் எவரெஸ்ட்டு மலையின் ஏதோ ஒரு முகட்டில் ஊசலாடிக் கொண்டிருக்கிறான். கீழே அதலபாதாளம். இன்னும் சில நாட்களில் ஸ்டாக் எக்சேஞ்சையே அதிரவைக்கப் போகும் கார்ப்பரேட் டான். ஹைதராபாத்தின் மோஸ்ட் எலிஜிபிள் பேச்சுலர். அங்கே ஏன் அனாவசியமாக தொங்குகிறான் என்று ப்ளாஷ்பேக்கில் விரிகிறது கதை.

சிறு வயதிலேயே படிப்புல் சூட்டிகை சுப்பு. டபுள் பிரமோஷன்களாக வாங்கி சீக்கிரமே பத்தாவது படிக்க வந்துவிடுகிறான். அங்கு அவனுக்கு அறிமுகமாகிறான் ரிஷி. தடாலடியாக எதையாவது செய்வது ரிஷியின் வழக்கம். டீச்சர் பாடம் நடத்திக் கொண்டிருக்கும்போதே அமீர்கான் ஸ்டைலில் சக மாணவியை பிரபோஸ் செய்வான். அச்சம், கோபம் மாதிரி உணர்வுகளுக்கு அவன் அகராதியில் அர்த்தமே இல்லை. யார் எதை கேட்டாலும் யோசிக்காமல் கொடுப்பான். எதிர்காலம் பற்றியோ, தன்னைச் சுற்றி நடப்பதைப் பற்றியோ எவ்வித பிரக்ஞையும் இல்லாதவன்.

சுப்புவுக்கு பிறந்தநாள். மிகச்சரியாக அதிகாலை 12.01 மணிக்கு ரிஷி வருகிறான். பிறந்தநாள் ட்ரீட் என்றுகூறி ஜாவா பைக்கில் எங்கோ அதிவேகமாக அழைத்துச் செல்கிறான். அது ஒரு சுடுகாடு. அங்கிருக்கும் அகோரி சாமியார், உங்களை அறிய நீங்கள் தூத் காசிக்கு வருவீர்கள் என்று குத்துமதிப்பாக ஏதோ ஜோஸியம் மாதிரி சொல்கிறார்.

வீட்டுக்கு திரும்பும் வழியில் பைக் ஆக்ஸிடெண்ட். ரிஷியோடு சேர்ந்து சுப்புவும் கெட்டுப் போகிறான் என்று புகார். ரிஷியை வேறு ஊருக்கு அழைத்துச் செல்கிறார்கள் அவனது பெற்றோர். அவனை மறந்துவிட்டு இவன் படிப்பில் கவனம் செலுத்துகிறான்.

ஐஐஎம்மில் பட்டம். பெரிய நிறுவனத்தில் லட்சங்கள் சம்பளம் வாங்கும் வேலை. ஒரு முக்கியமான அசைன்மெண்டை முடித்தால் அவன் வேலை பார்க்கும் நிறுவனம்தான் நெம்பர் ஒன். யாராலும் முடியாத வேலையை சுப்பு முடிக்கப் போகிறான். கிட்டத்தட்ட வேலை முடிந்த மாதிரிதான். முதலாளி, பரிசாக தன் மகளையும் நிறுவனத்தையும் சுப்புவுக்கு அளிக்க இருக்கிறார்.

பூஜைவேளையில் கரடி மாதிரி இப்போது திடீரென்று ரிஷி வருகிறான். நாம் இருவரும் தூத்காசிக்கு போகவேண்டும், மறந்துவிட்டாயா என்று கேட்கிறான். அதையெல்லாம் இன்னுமாடா நினைவில் வைத்திருக்கிறாய் என்று தலையில் அடித்துக் கொள்கிறான் சுப்பு. தன்னுடைய லட்சியத்தை எட்ட, ஒரு பெண்ணிடம் இருக்கும் பங்குகள் சுப்புவின் நிறுவனத்துக்கு தேவை. அதை அடையும் முயற்சியின் போது இருவருக்கும் பொதுவான நட்பாக ஆனந்தி அறிமுகமாகிறாள்.

ஒரு விபத்தில் ரிஷி திடீரென காலமாகிறான். தூத்காசி போவதுதான் அவனுடைய ஒரே ஆசை என்பதால் அவனுடைய அஸ்தியையாவது அங்கே கரைக்க வேண்டும். சுப்புவோடுதான் அங்கே போக ரிஷி ஆசைப்பட்டான். எனவே சுப்புவும் கூட வரவேண்டும் என்று ஆனந்தி வற்புறுத்துகிறாள். அவ்வாறு வருவதாக இருந்தால்தான் தன்னிடம் இருக்கும் பங்குகளை கொடுக்க முடியும் என்று டீலிங் பேசுகிறாள். அவளுடைய பங்குகள் கிடைத்தால்தான் நிறுவனம் நெம்பர் ஒன் ஆகும், நிறுவனத் தலைவருக்கு மருமகன் ஆக முடியும் என்பதால் ஆனந்தியோடு தூத்காசிக்கு கிளம்புகிறான் சுப்பு.
ஏதோ காசி, ராமேஸ்வரம் போவது மாதிரி இல்லை தூத்காசி போவது. உயிரை பணயம் வைத்து எவரெஸ்ட்டில் மலையேற வேண்டும். விருப்பு இல்லாமல் வெறுப்பாக சுப்பிரமணியம் மேற்கொள்ளும் பயணம் அவனுடைய வாழ்க்கையை மாற்றி போடுகிறது. பிரும்மாண்டமான இயற்கைக்கு முன்னால் தன்னுடைய அற்ப இருத்தலியலின் இடத்தை அறிகிறான். தான் யார் என்பதை உணருகிறான்.

சுப்புவாக நானி. ‘நான் ஈ’ படத்தின் அசட்டு நானியல்ல. இந்தப் படத்தில் வருவது ஐஐஎம் அதுப்பு நானி. ஆனந்தியாக வரும் மாளவிகா நாயர் ஒரு சாடையில் சோனாக்‌ஷி மாதிரி இருக்கிறார். “ஐ லவ் யூன்னா லவ் யூதான். லைக் யூ இல்லை” எனும்போது அவர் முகத்தில் வெளிப்படும் காதலை என்னவென்று சொல்ல.

ரிஷியாக நடித்திருக்கும் விஜய் தேவேரெகொண்டா மிகக்குறைந்த காட்சிகள் வந்தாலும் நிறைவான நடிப்பு. “நான் என்ன செய்யமுடியும், நாம என்ன செய்யமுடியும்னு ஒவ்வொருத்தரா இன்னொருத்தரை நம்பிக்கிட்டிருந்தா யாருதாண்டா செய்யுறது?” என்று ஆவேசமும், அழுகையுமாக கொட்டும் இடத்தில் பின்னுகிறார். ஒரு குழந்தையின் மரணத்தில் அவர் தன்னை அறியும் தருணம் அட்டகாசம்.
 
அவதாரம் படத்தில் இடம்பெறும் ‘தென்றல் வந்து தீண்டும்போது’ பாடலை அனுமதி பெற்று பயன்படுத்தி இருக்கிறார்கள். தெலுங்கில் ‘ஈரக்காற்று அடிக்கும்போது’வாக மொழிமாற்றம் ஆகியிருக்கிறது. உணர்ச்சிபூர்வமான அந்த காட்சியை சர்வதேச தரத்துக்கு இளையராஜாவின் இசை உயர்த்துகிறது.

இதுவரை சினிமாக்காரர்களின் கால்படாத பகுதிகளில் நடத்தப்பட்டிருக்கும் படப்பிடிப்பு அநியாய உழைப்பு. எவரெஸ்ட் கேம்பில் இருக்கும் நேபாளி இளைஞன் நானியைப் பார்த்து சொல்கிறான். “உனக்கு முன்பாகவே ஒரு சவுத் இண்டியன் இங்கே வந்து போட்டோ எடுத்துக்கொண்டு சென்றிருக்கிறார்”. யாரென்று நானி போட்டோ வாங்கிப் பார்க்கிறார். ‘ரஜினிகாந்த்’.

ஈரானும், பிரான்ஸும் இருக்கும் அதே உலகத்துக்குள்தான் சீமாந்திராவும், தெலுங்கானாவும் இருக்கிறது என்பதால் ‘எவடே சுப்பிரமணியம்’ படத்தையும் தாராளமாக உலகப்படம் எனலாம். Must watch movie!

19 மார்ச், 2015

கணக்குலே ஃபெயிலு!

+2வில் கணக்கில் ஃபெயிலு. அட்டெம்ப்ட்டும் முன்பைவிட படுமோசமாக வெற்றிவாய்ப்பை இழந்தது.

எனவே, நமக்கு ‘கணக்கு’ பண்ணத் தெரியாது.

ஆனால்- பி.காம்., எம்.காம்., சி.ஏ., மாதிரி பெரிய கணக்கு படிப்பெல்லாம் படித்தவர்கள்தான் சி.ஏ.ஜி.யில் வேலை செய்துக் கொண்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன். அதுவும் தப்பு போலிருக்கிறது. அங்கேயும் நம்மைபோல ‘கணக்குப் புள்ளைகள்’தான் இருக்கிறார்களோ என்னமோ?

‘ஸ்பெக்ட்ரம் ஊழல்’ என்று ஊடகங்களால் பெயர் சூட்டப்பட்ட அந்த சர்ச்சைக்குரிய சி.ஏ.ஜி. ரிப்போர்ட் குறிப்பிட்ட வருமான வரி இழப்பு அரசுக்கு என்ன?

முன்னாள் மத்திய தொலைதொடர்புத்துறை அமைச்சர் அ.ராசா அவர்களது காலத்தில் பயன்பாட்டில் இல்லாமல் இராணுவத்திடம் இருந்த ஸ்பெக்ட்ரம் பெறப்பட்டு நிறுவனங்களுக்கு விற்கப்பட்டன.

வினோத்ராய் அவர்களது அறிக்கைப்படி…

52.7 MHz அளவுள்ள 2ஜி ஸ்பெக்ட்ரம் 12,385 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டன. ஆனால், வினோத்ராயின் மதிப்பீட்டின் படி ஒரு MHz ஸ்பெக்ட்ரம் 3,350 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு விற்கப்பட்டிருந்தால் வரக்கூடிய தொகைதான் 1.76 லட்சம் கோடி.

முன்னாள் மத்திய அமைச்சர் ராசா, ஒண்ணே முக்கால் லட்சம் கோடி ரூபாயை இப்படிதான் தன்னுடைய பாக்கெட்டில் போட்டுக்கொண்டு போனார் என்று ஊடகங்களும், அடிவருடிகளும் தொடர்பிரச்சாரம் செய்தார்கள்.

தற்போது பாஜகவின் ராமராஜ்ஜியத்தில் 380.75 MHz அளவுக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனை ஆகியிருக்கிறது. சிஏஜியின் மதிப்பீட்டின் படி விற்கப்பட்டிருக்க வேண்டுமானால் 380.75 x 3350 என்று கணக்கு போட்டு 12.75 லட்சம் கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால், 1.1 லட்சம் கோடிக்குதான் விற்கப்பட்டிருக்கிறது. அதாவது ஒரு MHz ஸ்பெக்ட்ரம் ரூ.267.51 கோடி ரூபாய்க்குதான் விற்பனை ஆகியிருக்கிறது.

இதைதான் ஆரம்பத்தில் இருந்து சொல்லிக் கொண்டிருக்கிறோம். சிஏஜியின் உத்தேச மதிப்பீடு என்பது ‘கோழி மோசடி’ கணக்குதான்.

எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது பதினொன்றரை லட்சm கோடி வருமான இழப்பு என்று சிஏஜி அறிக்கை தரப்போவதில்லை.

ஊடகங்களும் பத்து லட்சம் கோடி ‘ஸ்பெக்ட்ரம் ஊழல்’ என்று கட்டுரைகள் வெளியிடப் போவதில்லை.

தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ஊழல் செய்துவிட்டார் என்று யாரும் டிவிக்களில் அனலைஸ் செய்யப் போவதில்லை. அவர் திகாருக்கும் திக்விஜயம் செய்ய வேண்டியதில்லை.

அடிவருடிகளோ வாயையும் வயிற்றையும் பொத்திக் கொண்டு உலகக் கோப்பை கிரிக்கெட்டில் என்ன ஸ்கோர் என்று நெட்டை நொட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
அ.ராசாவுக்கு எதிரான அநியாயத்தை ‘பார்ப்பன மோசடி’ என்று தொடர்ந்து அம்பலப்படுத்திக் கொண்டிருக்கிறோம். நம்மை ‘சாதிவெறியன்’ என்று முத்திரை குத்துகிறார்கள். சாதியை எதிர்ப்பவர்களும் சாதிவெறியர்கள் என்று விளங்கிக் கொள்ளப்படும் வித்தியாசமான டிக்‌ஷனரிகள் இந்தியாவில் மட்டுமே அச்சாகின்றன.

17 மார்ச், 2015

உல்லாசம்

‘உல்லாசம்’ என்ற சொல்லை கேட்டால் உங்களுக்கு என்ன நினைவுக்கு வரும்?

அஜித் நடித்த சினிமா?

ஜாலி, ஹேப்பி மாதிரியான உணர்வுகள்?

அதெல்லாம் நினைவுக்கு வரும் பட்சத்தில் நீங்கள் ‘உல்லாசமாக’ இருக்க லாயக்கே இல்லை.

நமக்கு ‘உல்லாசம்’ என்றாலே தினத்தந்தி நினைவுக்கு வரும். அதில் உல்லாசம் என்கிற சொல்லை வாசிக்கும்போதே ‘உல்லாசமாக’ இருக்கும். செய்தி எழுதும் உதவி ஆசிரியர்கள், பேனாவில் ‘உல்லாசத்தை’ ஊற்றி எழுதுகிறார்கள்.

தந்தி, ‘உல்லாசம்’ என்கிற தமிழ்ச் சொல்லை எந்த அர்த்தத்தில் பயன்படுத்துகிறது என்பது தமிழர்கள் யாவரும் அறிந்ததே. உதாரணத்துக்கு நேற்று வாசித்த ‘உல்லாச’ செய்தி ஒன்று சாம்பிளுக்கு கீழே.

சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் கடை வீதியை சேர்ந்தவர் ராமசாமி (வயது 34). அவருடைய மனைவிக்கும், நாமக்கல்லைச் சேர்ந்த என்ஜினியர் (வயது 28) ஒருவருக்கும் செல்போன் மூலம் பழக்கம். அப்படியே அது ‘கள்ளக்காதலாக’ உருவெடுக்கிறது.

செல்போனில் அடிக்கடி ராமசாமியின் மனைவி, என்ஜினியருடன் பேசிக்கொண்டே இருக்கிறார். ராமசாமி இந்த நடவடிக்கையை கண்டிக்கிறார். உடனே ராமசாமியின் மனைவி, என்ஜினியரிடம் தன் கணவர் இதுபோல திட்டுவதாக புகார் செய்கிறார்.

இதையடுத்து அந்த என்ஜினியர், ஆத்தூருக்கு வந்து ராமசாமியிடம் தன்னிலை விளக்கம் கொடுத்திருக்கிறார். “உங்கள் மனைவியோடு எனக்கு ‘தொடர்பு’ எதுவுமில்லை. சும்மா ‘பழக்கம்’ தான்”

“அப்படியா, அப்படியெனில் நாம் இருவரும் இனி நண்பர்களாக இருப்போம்” என்று பெருந்தன்மையோடு அவரை நண்பராக்கிக் கொண்டார் ராமசாமி.

உடனே, அந்த என்ஜினியரை தன் வீட்டுக்கு அழைத்து வந்திருக்கிறார். இருவரும் இணைந்து ‘சரக்கு’ சாப்பிட்டிருக்கிறார்கள். ராமசாமியின் மனைவி ‘சைட் டிஷ்’ ஏற்பாடு செய்திருக்கிறார். சரக்கு போதையில் ராமசாமி ராஜதந்திரமாக ஒருவேலை செய்தார்.

என்ஜினியரிடம், “என் மனைவியோடு ‘உல்லாசமாக’ இருக்க விரும்பினால் இருந்துக்கொள்” என்று சலுகை காட்டியிருக்கிறார்.

இதை கேட்டு மகிழ்ந்த இருவரும், நள்ளிரவில் நிர்வாண நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது.

கையும், களவுமாக இருவரையும் பிடித்துவிட்ட ராமசாமி, என்ஜினியரை கடுமையாக தாக்கினார். கொடுவாள் எடுத்து வெட்ட முயன்றார். உடையை மாற்றிக் கொள்ளக்கூட அவகாசமற்ற நிலையில் பேண்ட், சட்டை, ஜட்டி உள்ளிட்ட உடைகளை கையில் எடுத்துக்கொண்டு என்ஜினியர் தப்பி ஓடினார். அவரை ராமசாமி விரட்டிச் சென்றும் போதை காரணமாக பிடிக்க முடியவில்லை. உடனே வீட்டுக்கு திரும்பியவர் நிர்வாண நிலையில் இருந்த தன் மனைவியை கத்தரிக்கோலால் குத்த முயன்றிருக்கிறார். அவரும் உயிருக்குப் பயந்து ‘அப்படியே’ தெருவில் ஓடியிருக்கிறார்.

ஒரு வாலிபரும், அழகியும் தெருவில் ‘இந்த’ கோலத்தில் ஓடியதால், அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

பின்னர் அங்கிருக்கும் பொதுமக்கள் தலையிட்டு அழகிக்கு நைட்டி கொடுத்து மாட்டிக்கொள்ள சொல்லியிருக்கிறார்கள். ஒரு மரநிழலில் என்ஜினியரும் உடை மாற்றிக் கொண்டார். இருவரும் காயத்துக்கு சிகிச்சை பெற ஆத்தூர் மருத்துவமனையில் அட்மிட் ஆனார்கள். விசாரணைக்குச் சென்ற போலிஸாரிடம் இருவரும் வழக்கு எதுவும் பதியவேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்கள். கீழே விழுந்து இருவருக்கும் அடிபட்டு விட்டது என்று வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்கள்.

ஆனால் நேர்மையாளரான ராமசாமியோ நேராக காவல்நிலையத்துக்குச் சென்று நடந்த சம்பவத்தை எடுத்துக் கூறியிருக்கிறார். அவர் மீது பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் பிரிவின் கீழ் போலிஸார் வழக்குப்பதிவு செய்திருக்கின்றனர். ஆத்தூர் உதவி கலெக்டர் ‘நீதி விசாரணை’ நடத்த இருக்கிறார்.

நேற்று (மார்ச் 17, 2015) வாசித்த செய்தியை அப்படியே என்னுடைய மொழியில் மொழிபெயர்த்திருக்கிறேன். தந்தி லெவல் மொழிப்புலமை நமக்கு வராது.

மேற்கண்ட சம்பவத்தில் ஒரே ஒரு லாஜிக் இடிப்பதாக தோன்றுகிறது. அனேகமாக இது உதவி கலெக்டரின் நீதிவிசாரணையில் தெளிவாகும்.

‘நிராயுதபாணியாக’ என்ஜினியர் தப்பி ஓடியபோது, ராமசாமி துரத்திக்கொண்டு சென்றிருக்கிறார். கிடைத்த அவகாசத்தில் அந்த அம்மணி உடை மாற்றிக் கொண்டிருக்கலாமே? ராமசாமி வீட்டுக்கு திரும்பும்வரை ஏன் ‘அப்படியே’ இருந்திருக்கிறார்? – நேற்றிலிருந்து மண்டையை குடைந்துக் கொண்டிருக்கும் சந்தேகம் இது.

16 மார்ச், 2015

கால் கிலோ காதல், அரை கிலோ கனவு!

ஒன்பதாவது படிக்கும்போது யாரை காதலித்துக் கொண்டிருந்தேன்?

அனுராதா – இல்லை. பத்தாவது கோட்டர்லி லீவில்தான் ‘லவ்வு’ பச்சக்கென்று வந்தது.

குணசுந்தரி – பார்த்திபன் ஜூட் விட்டுக் கொண்டிருந்தான். நண்பனின் காதலியை காதலிக்குமளவுக்கு நான் நாகரிகமற்றவன் இல்லை.

ஸ்ரீவித்யா – நோ சான்ஸ். வாழைக்காய் விஜய்யின் ஆளு.

எழிலரசி – வெள்ளைக்காரி மாதிரி இருப்பாள். வெள்ளை என்றாலே அலர்ஜி.

சபிதா – மூன்றாவது படிக்கும்போது லவ் பண்ணிய பொண்ணு. நாலாவதிலேயே புட்டிக்கிச்சி.

கவிதா – பர்ஸ்ட் ஸ்டேண்டர்டுன்னு நெனைக்கிறேன். சபிதாவுக்கு முன்னாடி.

ஸ்ரீதேவி, கவுதமி, குஷ்பூ - இவர்களையெல்லாம் லவ் செய்தேன். ஒப்புக் கொள்கிறேன். ஆனால் ஒன்பதாவது படிக்கும்போதா என்று குறிப்பாக நினைவில்லை.

கோவிலம்பாக்கம் குமுதா – யெஸ். இவளாகதான் இருக்கவேண்டும். கொஞ்சம் குள்ளச்சி. அதனால் என்ன. அப்போது நானும் கொஞ்சம் குள்ளம்தான்.

கேளம்பாக்கம் அரசினர் உயர்நிலைப்பள்ளியில் ஒன்பதாவது வகுப்பு ‘பி’ பிரிவில் படித்த பா.ராகவன்.. மன்னிக்கவும்.. பத்மநாபன் என்கிற குடுமிநாதன் வளர்மதியை லவ் செய்கிறான்.

நாவலின் முதல் சாப்டரே, பவித்ரனின் ‘இந்து’ படத்தில் வாலி எழுதியதாக டைட்டிலில் பெயர் போடப்பட்டு -ஆனால் உண்மையில் ஷங்கர் எழுதிய- பாடலின் சமாச்சாரம்தான். ‘எப்படி எப்படி? பொண்ணு (ப்பீப்.. பீப் சவுண்டு) எப்படி?’

ஏற்கனவே வளர்மதி என்கிற குட்டச்சியை கிளாஸில் நான்கு பேர் லவ் செய்கிறார்கள். குடுமிநாதனுக்கு செம காம்பெடிஷன். போதாக்குறைக்கு அவள் வயசுக்கு வந்துவிட்டாள் என்கிற ப்ளாஷ் நியூஸ் வந்தபிறகு, மிச்ச சொச்சப் பயல்களுக்கும் அவள் மீது தெய்வீகக் காதல் வந்துத் தொலைக்கிறது.

சகப் போட்டியாளர்களை சமாளித்து, முப்பாட்டன் திருப்போரூர் முருகன் திருவருளால் வளர்மதியின் கடைக்கண் பார்வை, குடுமிநாதன் மீது விழுந்ததா என்பதே நாவல்.

ஒவ்வொரு தலைமுறைக்கும் ஒரு பள்ளிக்கூட காதல் படம் ஹிட் ஆகும். அலைகள் ஓய்வதில்லை, வைகாசி பொறந்தாச்சி, துள்ளுவதோ இளமை, காதல் என்று பெரிய பட்டியல். பா.ராகவன் எழுதியிருக்கும் ‘கால் கிலோ காதல், அரை கிலோ கனவு’ அந்த ஜானர். முன்னெப்போதோ கல்கியில் எழுதிய இந்த தொடர்கதையை சினிமாவுக்கு கொடுக்காமல், ஏன் நாவலாக இப்போது அச்சில் கொண்டு வந்திருக்கிறாரோ தெரியவில்லை. இப்போதும் கெட்டுப்போய்விடவில்லை. படமாக எடுத்தால் பட்டையைக் கிளப்பலாம்.

பத்மநாபன் என்கிற இளைஞனின் (!) ஓராண்டு வாழ்க்கைப் பயணம். படிக்கச் சொல்லி வன்முறையில் ஈடுபடும் தீவிரவாத ஆசிரியர்கள். மகன் உருப்படுவான் என்கிற நம்பிக்கையே இல்லாத தறுதலை அப்பா. பத்து மாதம் சுமந்து பெற்றுவிட்டோமே என்பதற்காக கடனே என்று சோறு போட்டு வளர்க்கும் அம்மா. எங்கே இவனுக்கெல்லாம் லவ்வு செட் ஆகிவிடுமோ என்கிற பதட்டத்தில் அலையும் பொறாமைக்கார நண்பர்கள். குறிப்பாக பர்ஸ்ட் ரேங்க் பன்னீர்செல்வம். இப்படிப்பட்ட வாழத்தகுதியற்ற கொடூரமான உலகில், கண்ணுக்கு தெரிந்தமட்டும் பாலைவனமாய் நீண்டிருக்கும் துலாபார சோக வாழ்க்கையில் கானல்நீராய், பசுஞ்சோலையாய் வளர்மதி மட்டுமே.

கதை நடைபெறும் காலக்கட்டம் எண்பதுகளின் கரெக்ட்டான மத்தி. ஏனெனில் நாயகி வளர்மதி 1971ல் பிறந்தவள் என்கிற குறிப்பு கிடைக்கிறது. அவள் ஒன்பதாவது படிக்கிறாள் என்றால் 14 வயசு (வயசுக்கு வந்தது கொஞ்சம் லேட்டுதான்). எனவே, கதை நடக்கும் காலக்கட்டம் 1985 என்று எடுத்துக் கொள்ளலாம்.

இந்த கட்டுரையை வாசிக்கும்போது நாவல் கொஞ்சம் ‘அப்படி, இப்படி’ இருக்குமோவென்று உங்களுக்கு டவுட்டு வரலாம். பா.ராகவன் சுத்த சைவம். ஒரு இடத்தில் கூட அவரது பேனா வரம்பு மீறவில்லை. அதுவும் கல்கியில் தொடராக வந்த கதை. ஆனால் வாசிக்கும் வாசகரான நாம், ‘ப்ளெஷர் ஆஃப் டெக்ஸ்ட்’டுக்காக, ஆங்காங்கே லைட்டாக கூட்டிக் குறைத்து, ‘அப்படி, இப்படி’ கற்பனை செய்துக்கொள்ளக்கூடிய ஏராளமான வாய்ப்புகளை கதையின் சம்பவங்கள் அனுமதிக்கிறது. அவ்வகையில் இந்நாவலுக்கு ஒரு பின்நவீனத்துவத் தன்மை இருப்பதை ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும்.

முப்பது ஆண்டுகளுக்கு முந்தைய ‘ராஜீவ்காந்தி சாலை’ (ஓ.எம்.ஆர் என்றழைக்கப்படும் ஓல்டு மகாபலிபுரம் ரோடு) எப்படியிருந்தது என்கிற வர்ணனை மிகத்துல்லியமாக இந்நாவலில் பதிந்திருக்கிறது. நாவலாசிரியர் வளர்ந்த பகுதி அது என்பதாலும் இருக்கலாம். புவியியல்ரீதியான வர்ணனை மட்டுமின்றி, அத்தலைமுறையின் கலாச்சாரம், மரபு, இத்யாதி லொட்டு லொசுக்குகளை எல்லாம் மலரும் நினைவுகளாக ரீவைண்ட் செய்து ஃபிலிம் ஓட்டுகிறார் பாரா. இந்த கதை குடுமிநாதனுடையது அல்ல. நம் அனைவருடையதும் கூட. மாங்காய் அடிப்பது, கிணற்றில் குதிப்பது, சினிமா, கிரிக்கெட் என்று அக்கால இளைய தலைமுறையினரின் அசலான வாழ்க்கைப் பதிவு. வாட்ஸப் யூத்துகள் தங்களுடைய சித்தப்பாக்களும், மாமாக்களும் எப்படிப்பட்ட உயர்வான இலட்சிய வாழ்வினை வாழ்ந்தார்கள் என்பதை அறிய அரிய வாய்ப்பு.

சிறுவனை நாயகனாகவும், சிறுமியை நாயகியாகவும் கொண்டு எழுதப்பட்ட நாவல் என்பதால் இதை சிறுவர் இலக்கியம் என்று வகைப்படுத்தலாமா என்கிற குழப்பமும் இடையிடையே வருகிறது. ஆனால், இதற்கு எவ்வித இலக்கிய அந்தஸ்து மயிரும் வேண்டாம் என்று அட்டையிலேயே முத்திரை போட்டு முகத்தில் அறைந்திருக்கிறார் பா.ராகவன். ‘கத புஸ்தகம்’ என்று சிகப்பு முத்திரையிட்டு கழுதைப் படம் போட்ட முகப்பு அட்டை. கமர்சியல் ரைட்டர்களின் வழக்கமான கொணஷ்டை.

உண்மையை சொல்லப் போனால் தீவிர இலக்கியம் என்று சமகாலத்தில் முன்வைக்கப்படும் தீவிர த்ராபைகளை விடவும், அக்கால இளைஞர்களின் பிரச்சினைகளை தீவிரமாகவே அலசியிருக்கக்கூடிய நூல் இது. ஆனால், இதை எழுதியவர் ‘இதெல்லாம் இலக்கியமா?’ என்கிற பாணியில் அசால்டாக இருக்கிறார். சுவாரஸ்யமாக எழுதினால் அது நிச்சயமாக இலக்கியமல்ல என்று அதை எழுதக்கூடிய எழுத்தாளர்களே நம்பக்கூடிய அளவுக்கு தமிழிலக்கியத்தின் நிலைமை இப்படி அபாயகரமாக போகுமென்று டால்ஸ்டாயும், தஸ்தாவேஸ்கியும் கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள்.

வாசிப்பும் இன்பம் தரும் என்பதற்கு இந்நாவல் நல்ல எடுத்துக்காட்டு. இது த்ரில்லர் அல்ல. ஆனால், த்ரில்லருக்கு இணையான வேகம் ஆரம்பம் முதல் இறுதிவரை இருக்கிறது. பத்திக்கு பத்தி சுவாரஸ்யத்துக்கு குறைவேயில்லை. வாசிப்பின் வழியாக ஒரு ரோலர் கோஸ்டர் ரைடுக்கு தயாராக இருப்பவர்கள் ‘மிஸ்’ பண்ணாதீங்க.
நூல் : கால் கிலோ காதல் அரை கிலோ கனவு
எழுதியவர் : பா.ராகவன்
பக்கங்கள் : 160
விலை : ரூ.80
வெளியீடு : மதி நிலையம்
எண் 2/3, 4வது தெரு, கோபாலபுரம்,
சென்னை – 600 086.
போன் : 28111506
மின்னஞ்சல் : mathinilayambook@gmail.com

3 மார்ச், 2015

சாந்தி (70 எம்.எம். ஏ/சி)

சாந்தி தியேட்டருக்கும் எனக்கும் ஒருவகையில் பூர்வஜென்ம பந்தம் உண்டு.

அம்மா அங்கே சிவாஜி படம் (ஜஸ்டிஸ் கோபிநாத் அல்லது பைலட் பிரேம்நாத் என நினைக்கிறேன்) பார்த்துக் கொண்டிருந்தபோதுதான் இடுப்பு வலி வந்ததாம். மறுநாள் காலை நான் பிறந்தேன். ஒருவேளை தியேட்டரிலேயே பிறந்திருந்தால் சிவாஜி கணேசன் என்று பெயர் வைத்திருப்பார்கள். வாத்யார் ரசிகரான அப்பாவுக்கு அசிங்கமாகியிருக்கும்.

‘ஏர் கண்டிஷன்’ என்றொரு நவீன வசதியை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருப்பதையே தமிழர்கள் முதன்முதலாக சாந்தி தியேட்டர் மூலமாகதான் அறிந்தார்கள். ‘குளுகுளு வசதி செய்யப்பட்டது’ என்று விளம்பரப்படுத்தப் படுமாம். சென்னையின் முதல் ஏர்கண்டிஷண்ட் தியேட்டரான சாந்தி 1961ல் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது.

ஆனந்த் தியேட்டர் உரிமையாளர் உமாபதி கட்டிய இந்த அரங்கை, சிவாஜி ஆசையாக கேட்டு வாங்கிக் கொண்டதாக சொல்வார்கள் (காசுக்குதான்). அப்படியல்ல, உமாபதி காண்ட்ராக்டர் மட்டும்தான் என்று சொல்வோரும் உண்டு. எப்படியிருப்பினும் இதற்கு நன்றிக்கடனாக பிற்பாடு நடிகர் திலகம் உமாபதிக்கு நடித்து கொடுத்த ‘ராஜ ராஜ சோழன்’ படுமோசமாக தோல்வியடைந்து, உமாபதியை மேற்கொண்டு நஷ்டத்துக்கு உள்ளாக்கியது என்பதெல்லாம் இப்போது தேவையில்லாத சமாச்சாரம்.

திறக்கப்பட்ட காலத்தில் நகரின் பெரிய தியேட்டரும் சாந்திதான். சுமார் 1200+ இருக்கைகள். பால்கனியில் மட்டுமே நானுத்தி சொச்சம் சீட்டு. இவ்வளவு பெரிய தியேட்டரை கட்டிவிட்டு கூட்டம் வராமல் ஆரம்பத்தில் சில நாட்களுக்கு அவதிப்பட்டிருக்கிறார்கள். தெலுங்கு டப்பிங் படம், இந்திப்படம் என்றுதான் காலத்தை ஓட்டினார்களாம். ‘அய்யோ, அந்த தியேட்டரா? உள்ளே போனா ஊட்டி மாதிரி பயங்கரமா குளுருமாமே? ஸ்வெட்டர் போட்டுக்கிட்டுதான் போவணுமாம்’ என்று மக்கள் அனாவசியமாக அச்சமடைந்திருக்கிறார்கள் (பின்னாளில் குளுகுளு ஏற்பாட்டில் ‘அலங்கார்’ சாதனை படைத்தது. இன்றும் காசினோ காஷ்மீர் மாதிரி ஜில்லிட்டு கிடக்கிறது)

அப்போது பீம்சிங் இயக்கத்தில் ‘பாவமன்னிப்பு’ நடித்திருந்தார் சிவாஜி. நட்சத்திர நடிகர்களின் படங்களை எல்லாம் ‘சித்ரா’வில்தான் திரையிடுவார்கள். சின்ன தியேட்டர் என்பதால் நூறு நாள் ஓட்டி கணக்கு காட்ட வசதியாக இருக்கும்.

சிவாஜியே சொந்தமாக தியேட்டர் கட்டியிருக்கிறார், அதில் பாவமன்னிப்பை வெளியிட்டே ஆக வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்த்தார்கள். அவ்வளவு பெரிய தியேட்டரில் வெளியிட்டுவிட்டு நூறு நாள் ஓடாவிட்டால் அசிங்கமாகிவிடுமே என்று ஏவிஎம் நிறுவனம் அச்சப்பட்டிருக்கிறது. சிவாஜியின் வற்புறுத்தலின் பேரில் இங்கு திரையிடப்பட்ட ‘பாவமன்னிப்பு’ வெற்றிகரமாக வெள்ளிவிழா ஓடி சாதனை படைத்தது.

அதையடுத்து கிட்டத்தட்ட நூறு சிவாஜி படங்கள் இங்கே திரையிடப்பட்டிருக்கின்றன. பாவமன்னிப்பு, திருவிளையாடல், வசந்தமாளிகை, தங்கப்பதக்கம், திரிசூலம், முதல் மரியாதை ஆகிய படங்கள் வெள்ளிவிழா கொண்டாடியிருக்கின்றன. முப்பதுக்கும் மேற்பட்ட சிவாஜி படங்கள் நூறு நாள்களை தாண்டி ஓடியிருக்கிறது.

சென்னையின் பெரிய தியேட்டர் சிவாஜியின் கையில் இருந்ததாலும், அவர் நடித்த எந்த படம் திரையிடப்பட்டாலும் ரசிகர்கள் குவிந்துவிடுவார்கள் என்பதாலும் எம்.ஜி.ஆரை ஒப்பிடுகையில் வசூல்ரீதியாக சிவாஜியே சென்னையின் மன்னனாக இருந்திருக்கிறார். அதுவுமின்றி சிவாஜி கெடாவெட்டு கணக்கில் வருடத்துக்கு ஏழெட்டு படங்கள் நடித்துத் தள்ளிக்கொண்டே இருப்பார் என்பதால், சாந்தி தியேட்டருக்கு வேறு நடிகர்களின் படங்களை ரிலீஸ் செய்யும் வாய்ப்பு குறைவு. எம்.ஜி.ஆருக்கு சித்ரா, ஸ்ரீகிருஷ்ணா மாதிரி சுமார் அரங்குகள்தான் மாட்டும். ஏசி தியேட்டரில் எம்.ஜி.ஆர் படம் என்கிற வாத்யார் ரசிகர்களின் ஆசை ரொம்ப நாள் கழித்து உலகம் சுற்றும் வாலிபனில்தான் தேவிபாரடைஸ் மூலமாக நிறைவேறியது. எனக்குத் தெரிந்து இன்றுவரை சாந்தி தியேட்டரில் எம்.ஜி.ஆர் படம் எதுவும் திரையிடப்பட்டதாக தெரியவில்லை. சிவாஜி தெலுங்கு, மலையாளத்தில் நடித்த படங்களைகூட அடமாக இங்கே திரையிட்டு நடிகர் திலகத்தின் ரசிகர்களை பரவசப்படுத்திக்கொண்டே இருப்பார்கள்.

அந்த காலத்தில் சாந்தி தியேட்டரில் நைட்ஷோ விடும் நேரத்தை கணக்கில் வைத்து, படம் பார்த்து வருபவர்களின் வசதிக்காக ஸ்பெஷலாக பிராட்வேயிலிருந்து தாம்பரத்துக்கு 18ஏ பேருந்தினை அதிகாலை வேளையில் விட்டிருந்தது போக்குவரத்துக் கழகம். தினமலரில் பணியாற்றும்போது வீட்டுக்கு போக இந்த பேருந்து பல நாட்கள் எனக்கு பயன்பட்டிருக்கிறது.

சிவாஜிக்கு வயதானபிறகு பிரபு நடித்த திரைப்படங்கள் தொடர்ச்சியாக திரையிடப்பட்டன. இவரது பெரும்பாலான படங்கள் ‘டப்பா’தான் என்பதால் தியேட்டரின் மவுசே குறைய ஆரம்பித்தது. ‘சின்னத்தம்பி’ விதிவிலக்காக இருநூற்றி ஐம்பது நாட்கள் ஓடி சாதனை படைத்தது. ‘மன்னன்’ படத்தில் கவுண்டமணியும், ரஜினியும் சேர்ந்து ‘சின்னத்தம்பி’ படம் பார்ப்பது இந்த தியேட்டரில்தான்.

பிரபுவின் நூறாவது படமான ‘ராஜகுமாரன்’ பயங்கர ஃப்ளாப். ஆனாலும் ஓனர் படம் என்பதால் ஆளே இல்லாத டீக்கடையில் நூறு நாட்களுக்கு ஈ ஓட்டி நஷ்டப்பட்டது சாந்தி தியேட்டர். கடைசியாக இனிய திலகம் விக்ரம் பிரபு நடித்த அத்தனை படங்களையுமே நூறு நாட்களுக்கு மேலாக (அரிமா நம்பி கூட என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்) ஓட்டியது. ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பாக பால்கனியை மட்டும் தனியாகப் பிரித்து ‘சாய்சாந்தி’ என்று தனி அரங்காக ஆக்கினார்கள்.

ஆண்பாவம், நீதிக்கு தண்டனை, வெற்றிவிழா, மன்னன், சந்திரமுகி, சுப்பிரமணியபுரம் போன்ற படங்கள் இங்கே அபாரவெற்றி பெற்றவை. இந்திப் படமான ‘சங்கம்’ வெள்ளிவிழா கண்டதும் இங்கேதான். பாகவதரின் ‘ஹரிதாஸ்’ சாதனையை (பிராட்வே தியேட்டர்) உடைக்க வேண்டும் என்பதற்காகவே, ‘சந்திரமுகி’யை 888 நாட்கள் ஓட்டி கணக்கு காட்டினார்கள்.

எல்லா சென்னைவாசிகளையும் போலவே சாந்தி திரையரங்கோடு எனக்கும் உணர்வுபூர்வமான பந்தம் உண்டு. எத்தனை படங்கள் இங்கு பார்த்திருப்பேன் என்று கணக்கு வழக்கே இல்லை. நண்பர்களோடு சேர்ந்து படங்கள் பார்த்த அற்புதமான தருணங்கள் எல்லாம் இப்போது நெஞ்சில் நிழலாடுகிறது.

ஒவ்வொரு காட்சி தொடங்குவதற்கு முன்பாக இன்றும் கவுண்டர் அருகே ஒயிட் & ஒயிட்டில் கம்பீரமாக வந்து நிற்கும் அந்த தியேட்டர் மேனேஜரை மறக்கவே முடியாது. இப்போது கலைஞரின் வயது ஆகிறது அவருக்கு. பெண்கள் பாதுகாப்பாக படம் பார்க்கவேண்டும் என்று ரொம்பவும் அக்கறை காட்டுவார்.

பதினைந்து, இருபது ஆண்டுகளுக்கு முன்பாக படம் பார்க்க க்யூவில் நிற்கும்போது கையில் லத்தியோடு கூட்டத்தை ஒழுங்குபடுத்த அங்கும், அவர் இங்குமாக அலையும் காட்சி ஓர் ஓவியம் மாதிரி மனசுக்குள் பதிந்திருக்கிறது. இவரது கேரக்டரைதான் ‘அமர்க்களம்’ படத்தில் சரண், வினுசக்ரவர்த்திக்கு கொடுத்திருப்பார்.

தியேட்டரை இடித்துவிட்டு மால் கட்டுகிறோம் என்று அதிகாரபூர்வமாக சிவாஜி குடும்பத்தார் அறிவித்து விட்டார்கள். புதிதாக கட்டப்படும் மாலில் சாந்தி என்கிற பெயரிலேயே சில ஸ்க்ரீன்கள் இருக்கும் என்று ஆறுதல் அளிக்கிறார்கள். இருந்தாலும் ‘திருவிளையாடல்’, ‘சரஸ்வதி சபதம்’, ‘தில்லானா மோகனாம்பாள்’ ஓடிய ஒரிஜினல் சாந்தி மாதிரி வருமா?