25 ஏப்ரல், 2012

தண்ணீர்ப் பந்தல்


சென்னைக்கு வெகு அருகில் அமைந்திருந்தாலும், கிராமிய அடையாளங்கள் ஒரு பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்புவரை கூட எங்கள் ஊருக்கு இருந்தது. ஒவ்வொரு வீட்டின் முன்பும் ஒரு புன்னை மரமோ, வேப்பமரமோ கட்டாயம் இருக்கும். அவ்வப்போது வெயிலில் வியாபாரம் செய்யும் பிளாஸ்டிக் சாமான் கடைக்காரரோ, ஜோசியரோ ‘தில்’லாக யார் வீட்டு முன்பாகவும் இளைப்பாறலாம். “கொஞ்சம் தண்ணி கொடுங்க தாயீ!” என்று குரல் கொடுத்தால், பெரிய சொம்பில் ஜில்லென்று கிணற்று நீர் கட்டாயம் கிடைக்கும். அந்தக் காலத்து மடிப்பாக்க தண்ணீரை குடிக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். பேச்சுக்கு சொல்வார்கள்.. ‘எங்க வீட்டு கிணத்துத் தண்ணி தேங்காய்த்தண்ணி மாதிரி இருக்கும்’ என்று.. நிஜமாகவே எங்க ஊர் தண்ணி தேங்காய்த் தண்ணிதான். அப்போதெல்லாம் நினைத்ததேயில்லை, தண்ணீரை கூட காசு கொடுத்து வாங்குவோமென்று.

‘கேட்டால் கிடைக்கும்’ என்பதால் மடிப்பாக்கத்திலோ, சுற்று வட்டாரத்திலோ நான் தண்ணீர்ப் பந்தலை பார்த்ததே இல்லை. அறுபத்து மூவர் விழாவுக்கு மயிலாப்பூர் வரும்போதுதான் இப்படி ஒரு சமாச்சாரம் இருப்பதே தெரியும். அப்போதெல்லாம் நகரில் சில இடங்களில் பக்காவாக கான்க்ரீட் கட்டமைப்பு கொண்ட தண்ணீர் பந்தலை ஓரிரு இடங்களில் பார்த்திருக்கிறேன். உபயம் : லயன்ஸ் கிளப் என்றோ அல்லது ஜெயின் சங்கம் என்றோ கல்வெட்டு பொறிக்கப்பட்டிருக்கும். எவர்சில்வர் லோட்டா மிகக்கவனமாக அதைவிட நான்கு மடங்கு விலை கொண்ட சங்கிலியில் கட்டப்பட்டிருக்கும்.

அரசியல் கட்சிகள் தண்ணீர்ப் பந்தல் திறக்கும் புரட்சிக்கு புண்ணியம் கட்டிக் கொண்டவர் நம் புரட்சித்தலைவி அம்மாதான். 96ல் தோற்றபிறகு எந்த ஆக்டிவிட்டியும் இல்லாமல் அதிமுக சோர்ந்துப்போயிருக்க, ஒரு கோடைக்காலத்தில் அம்மா அறிக்கை விட்டிருந்ததாக ஞாபகம். “தீயசக்தியின் ஆட்சியில் மக்கள் தாகத்தால் தவித்துப் போகிறார்கள். எனவே கழகத் தொண்டர்கள் ஆங்காங்கே தண்ணீர்ப் பந்தல் திறந்துவைத்து மக்களின் தாகத்தைப் போக்க வேண்டும்” என்கிற ரீதியில் அந்த அறிக்கை இருந்ததாக நினைவு.

அன்று ஆரம்பித்த அமர்க்களம்தான் இன்று ஆவேசமாக தலைவிரித்து ஆடிக் கொண்டிருக்கிறது. ஏப்ரல் வந்துவிட்டாலே அதிமுகவினர் உற்சாகமடைந்து விடுகிறார்கள். ‘தண்ணீர்ப் பந்தல் திறக்கவரும் புரட்சித்தலைவியின் போர்ப்படைத் தளபதியான செங்கோட்டையன் அவர்களே, அம்மாவின் இதயக்கனி அக்கா வளர்மதி அவர்களே’ ரேஞ்சுக்கு மெகா போஸ்டர் ஒட்டி, கடைகளில் கலெக்‌ஷன் கல்லா கட்டி, தெருவெல்லாம் தோரணம், ஆயிரம்வாலா பட்டாசு என்று கோடைத்திருவிழாவை அரசியல் கலாச்சார கோலாகலமாக கொண்டாடுகிறார்கள். காலணா பந்தலை திறக்க எதற்கு அமைச்சர்கள் வருகிறார்கள் என்கிற தர்க்கம் பிடிபடவே மாட்டேன் என்கிறது.

இவர்களைப் பார்த்து ரசிகன் விஜய் நற்பணி மன்றம், கேப்டன் நரசிம்மா மன்றம், காதல் மன்னன் ‘தல’ மன்றம் என்று துக்கடா நற்பணி இயக்கங்களும், உதிரிக் கட்சிகளும் கூட பந்தல் விளையாட்டு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில் சென்னைக்கு வருபவர்கள் தடுக்கி விழுந்தாலே ஏதோ ஒரு தண்ணீர்ப் பந்தலில்தான் விழுந்தாக வேண்டும். திமுககாரர்கள் இந்த விஷயத்தில் அசமஞ்சங்கள். கிருஷ்ணா நீர் வாங்கிக் கொடுத்துவிட்டோமென்று மிதப்பில் அலைகிறார்கள் போல.

எக்கனாமிக்கலாக பார்த்தால் ஒரு தண்ணீர்ப் பந்தல் அமைக்க என்ன செலவாகும்? ஐந்துக்கு ஐந்து சைஸில் சவுக்கு கட்டி, தென்னை ஓலை வேய்ந்து ஒரு சிறிய குடில். தோராயமாக இரண்டாயிரம் செலவாகலாம். இரண்டு பெரிய சைஸ் பானை. கோடம்பாக்கத்தில் விசாரித்ததில் இருநூறு, இருநூற்றி ஐம்பது என்று எஸ்டிமேட் தருகிறார்கள். நான்கு பிளாஸ்டிக் லோட்டா நாற்பது ரூபாய். ஒட்டுமொத்தமாகவே அதிகபட்சம் இரண்டாயிரத்து ஐநூறில் பக்காவான தண்ணீர்ப்பந்தல் அமைத்துவிடலாம். துரதிருஷ்டவசமாக ஒரு பந்தலுக்கு நம்மாட்கள் குறைந்தபட்சம் ஐம்பதாயிரத்திலிருந்து, ஒரு லட்சம் வரை செலவழிக்க வேண்டியிருக்கிறது. தண்ணீர்ப் பந்தலுக்கு ஆகும் செலவை விட இருபது, நாற்பது மடங்கு போஸ்டர், பட்டாசு, பேனர் மாதிரியான சமாச்சாரங்களுக்கு செலவழிக்கிறார்கள். இந்த ஆடம்பரம் இல்லாவிட்டால் ஒரு பந்தல் அமைப்பதற்கு பதிலாக நாற்பது, ஐம்பது பந்தல் போட்டு அசத்து அசத்துவென அசத்தலாம். ஆனால் பப்ளிசிட்டிதான் எதிர்ப்பார்த்த அளவுக்கு கிடைக்காது.

சரி, தீபாவளி மாதிரி கொண்டாடி பந்தல் அமைத்துவிட்டார்கள். மெயிண்டனென்ஸ் எப்படியிருக்கிறது?

முதல் நாள் திறப்பாளர் வந்து திறக்கும்போது தர்ப்பூசணி, கிர்ணிப்பழம், ரஸ்னா, கோக்கோ கோலா, மோர், லொட்டு லொசுக்குவென்று கோடையைத் தணிக்கும் குளிர் சமாச்சாரங்களாக மக்களுக்கு தந்து அசத்துகிறார்கள். இரண்டாவது, மூன்றாவது நாள் மட்டும் பானையில் தண்ணீர் இருக்கும். ஐந்தாவது நாள் அந்தப் பானையில் கால்வாசியளவு தண்ணீர் இருக்கும். குடித்தால் ஒரு மாதிரி சவுரு அடிக்கும். ஏழாவது நாள் பானை மட்டும் இருக்கும். பத்தாவது நாள் பந்தல் மட்டும் இருக்கும். பதினைந்தாவது நாள் அங்கே கட்டப்பட்ட பேனர்களும், ஒட்டப்பட்ட போஸ்டர்களும் மட்டுமே இருக்கும். திறப்பு விழாவின் போது எடுக்கப்பட்ட படங்கள் சில நாளிதழ்களில் மட்டும் ‘கவர்’ சிஸ்டத்தில் பிரசுரிக்கப்படும். பந்தலை ஏற்பாடு செய்து திறந்துவைத்த வட்டச் செயலாளரோ, கொட்டச் செயலாளரோ அடுத்த உள்ளாட்சியின் போது சீட்டு கேட்க ‘பக்கா’வாக இதையெல்லாம் ஆல்பம் போட்டு வைத்திருப்பார்.

தண்ணீர்ப் பந்தல் யாருக்காவது பயன்படுகிறதா?

பன்றிக்காய்ச்சல் பரவிவரும் நிலையில் யாரும், எதிலும் ரிஸ்க் எடுக்கத் தயாரில்லை. யாசகம் கேட்கும் தோழர்கள் கூட தண்ணீர்ப் பந்தல் எதையும் இப்போது பயன்படுத்துவதாக தெரியவில்லை. ஒண்ணரை ரூபாய் கொடுத்தால் ‘ஜில்’லென்று பொட்டிக்கடையில் பாக்கெட்டாகவே கிடைக்கிறது தண்ணீர். குடிவெறியர்கள் கூட மிக்ஸிங்குக்கு தண்ணீர்ப் பந்தல் தண்ணீரை யூஸ் செய்வதில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

நிஜமாகவே நாட்டு நடப்பு எல்லைமீறி கேணைத்தனமாக நடந்துக் கொண்டிருக்கிறது.

20 ஏப்ரல், 2012

தனித் தமிழீழம்

‘தனித் தமிழீழம் அமைய வாக்கெடுப்பு நடத்த வேண்டும்’ என்று கலைஞர் போனவாரம் எழுதியிருக்கிறார். ‘தமிழீழம் தன்னுடைய நிறைவேறாத கனவு’ என்று ஏற்கனவே சொன்னவர் என்பதால், இதுகுறித்த அவரது அக்கறையை புரிந்துகொள்ள முடிகிறது. ஈழத்தமிழர்கள் ‘ஒற்றுமையாக’ தமிழீழம் காணவேண்டும் என்பதே திமுகவின் நெடுங்கால ஆசையாக இருந்துவருகிறது. இன்றையத் தேதியில் இதற்கான சாத்தியக்கூறுகள் கிட்டத்தட்ட சாத்தியமற்றவையாக தெரிகின்ற போதிலும் இந்த ஆசையை, கனவை எதிர்காலத்தில் மாறக்கூடிய சூழல்களை மனதில் வைத்து தக்கவைத்துக் கொள்வது அவசியமே.

புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் சிலரும், பிழைப்புக்காக தமிழ் தேசியவாதிகளாகி விட்ட நம்மூர் ஆட்கள் சிலரும் கலைஞரின் கனவை நாடகமென்றோ, ஏமாற்றுப்பேச்சு என்றோ சொல்லலாம். ஆனால், 83 இனப்படுகொலை நடந்த காலத்தில், அதை யாரும் தட்டிக்கேட்க நாதியில்லாத நிலையில் முதன்முதலாக தனி ஈழத்துக்காக இந்தியாவில் போர்க்குரல் எழுப்பிய தலைவர் கலைஞரே. தமிழகமெங்கும் ஈழக்கனவை விதைத்தவர்கள் திமுகவினரே என்பது வரலாறு. ஈழத்துக்காக முதன்முதலாக தமிழகத்தில் தீக்குளித்தவரும் திமுகவைச் சேர்ந்த ‘இஸ்லாமிய’ தோழர் ஒருவரே என்பதை யார் மறைக்க நினைத்தாலும் மறுக்க இயலாது. இன்றுவரை தனித் தமிழீழத்தை, ஜெ தலைமையிலான அதிமுக நேரடியாக ஒப்புக்கொள்ளவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

கலைஞரின் அறிக்கையில் ‘வாக்கெடுப்பு’ என்பது நியாயமான கோரிக்கையாக இருந்தாலும், அடுத்த வரியிலேயே ஒட்டுமொத்தமாக இந்த கோரிக்கையை காமெடி ஆக்கிவிட்டார் என்பதே நம் ஆதங்கம். “இந்த வாக்கெடுப்புக்கு இந்தியா ஒத்துழைக்க வேண்டும்”.

கிட்டத்தட்ட கலைஞர் சொல்லவருவதை எளிமையாக இப்படிப் புரிந்துக் கொள்கிறேன். “கந்துவட்டி கொடுமையை ஒழிக்க கந்துவட்டிக்காரர்கள் முன்வரவேண்டும்”.

இந்தியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடக்கிறது என்பதைத் தவிர்த்து ஜனநாயகத்துக்கும், இந்தியாவுக்கும் வேறு என்ன சம்பந்தம் என்பதையே நம்மால் புரிந்துகொள்ள இயலவில்லை. தாங்கள் தனிநாடாக இருக்கவேண்டுமா என்கிற சுயநிர்ணய உரிமைக்காக மக்களிடையே வாக்கெடுப்பு நடத்துவதை ஆதரிக்கும் ஜனநாயகப் பண்பு இந்தியாவுக்கு இருக்கிறது என்று கலைஞர் எப்படி நம்புகிறாரோ தெரியவில்லை.

சீக்கியர்களின் போராட்டத்தை இராணுவத்தைக் கொண்டு கண்மூடித்தனமாக அடக்கியதில் தொடங்கி, வடகிழக்கு மாநிலங்களில் கிட்டத்தட்ட இராணுவ ஆட்சி நடத்துவதில் தொடர்ந்து, காஷ்மீரை கடும் அடக்குமுறையில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக வைத்திருப்பதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது இது இந்தியாவா, அமெரிக்காவா என்கிற நியாயமான சந்தேகம் அதன் குடிமக்களுக்கே இருக்கிறது.

ஒருவேளை இந்தியா எம்.ஜி.ஆர் பட க்ளைமேக்ஸில் நம்பியாரின் முகத்தில் இருந்த சிகப்பு விளக்கு ஒளி நீங்கி, பச்சை விளக்காக மாறுவதைப்போல திடீரென நல்லவனாக மாறி வாக்கெடுப்புக்கு ஒப்புக்கொண்டால் என்ன ஆகும்? உடனடியாக காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் டவுசரை பாகிஸ்தான் கயட்டும்தானே? அங்கும் வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்கிற கோரிக்கை வலுப்பெறும்தானே? இப்படிப்பட்ட நெருக்கடியான அரசியல் கட்டாயத்தை எதிர்கொள்ளக்கூடிய வலுவான நிலையில் இந்தியா இருக்கிறதா என்ன?

‘ஈழப்பிரச்சினை இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினை. அது இலங்கைக்குள்ளேயே பேசி தீர்வு காணப்பட வேண்டும்’ என்பதுதான் இந்தியாவின் நீண்டகால நிலைப்பாடாக இருக்கிறது. இந்த நிலைப்பாடுதான் இந்தியாவுக்கு காஷ்மீர் உள்ளிட்ட பிரச்சினைகளை அணுகவும் வாகானது.

தார்மீக ரீதியில் தனித்தமிழீழத்துக்கு ஆதரவாக இருப்பது தமிழகத் தமிழர்களின் கடமை. இது உறவுப்பூர்வமான உணர்வு. ஆதரவினைத் தவிர்த்து வேறெதையும் ஈழத்தமிழர்களுக்கு தமிழகத் தமிழர்களால் செய்யமுடியாது என்பதுதான் யதார்த்தம். தமிழகத் தமிழர்களையே தன் குடிமக்களாக முழுமையாக மதிக்காத இந்தியாவிடம் தமிழீழத்துக்காக இனியும் கோரிக்கைகள் வைத்துக் கொண்டிருப்பது அர்த்தமற்றது. ஈழ விவகாரத்தில் இதுவரை இந்தியா பிடுங்கிய ஆணிகளே போதும். இனி ஏதும் பிடுங்க நினைத்தாலும் கூட அது இந்திய வல்லாதிக்கத்துக்கு ஆதரவான செயல்களாக இருக்குமே தவிர, தமிழர் நலனோ (ஏன் சிங்களவர் நலனோ கூட) கிஞ்சித்தும் இருக்கப் போவதில்லை.

ஒரு சில அமைச்சுப் பதவிகளுக்காக டெல்லியிடம் தமிழகம் அளவுக்கதிகமாக குனிந்தாயிற்று. சென்னையிலிருந்து டெல்லிக்குப் போகும் கடிதங்களும், கோரிக்கைகளும்.. அதற்கு டெல்லியிலிருந்து வரும் பதில்களும், சமாளிப்புகளும் ஏதோ லொள்ளுசபா காட்சிகளைப் போல தமிழக மக்களின் மனங்களில் படிமமாகிறது என்கிற உண்மையை தமிழக அரசியல்வாதிகள் புரிந்துகொள்ள வேண்டும்.

14 ஏப்ரல், 2012

ஓக்கே ஓக்கே

ரட்சகன் வெளியான நேரத்தில் அப்படத்தின் இயக்குனர் பிரவீண்காந்த் ஒரு பேட்டியில் அறச்சீற்றத்தோடு முழங்கினார். “எம்படத்துலே கதை இல்லை, கதை இல்லைன்னு சொல்றாங்க. ஒண்ணு மட்டும் சொல்றேங்க.. கதை இல்லாம படமே எடுக்க முடியாது”. பிரவீண்காந்தின் கூற்று மகிழ்ச்சிகரமாக பொய்யாகி இருக்கிறது இயக்குனர் ராஜேஷின் கேரியரில். கதையே இல்லாமல் ஒன்றில்லை, ரெண்டில்லை.. மூன்றாவது படத்தையும் எடுத்து, மூன்றும் சூப்பர்ஹிட்!

ஒரு சக்சஸ்ஃபுல் டெம்ப்ளேட்டை உருவாக்கிவிட்டு ஹீரோ, ஹீரோயின் மற்றும் கேரக்டர்களில் மட்டும் ஆள் மாத்திப் போட்டு ஒரு குலுக்கு குலுக்கி விளையாடுவது ராஜேஷின் பாணி. காமெடியன் மட்டும் அதே சந்தானம். சந்தேகமில்லாமல் ராஜேஷின் ஹாட்ரிக் சிக்ஸராக வந்திருக்கிறது ‘ஒரு கல், ஒரு கண்ணாடி’. படத்தின் கதை என்ன? அதைதான் முதல் பாராவிலேயே சொல்லிவிட்டோமே... பூதக்கண்ணாடி வைத்து தேடினாலும் கிடைக்காது கதை. அதுதான் ராஜேஷின் ஸ்பெஷாலிட்டியும் கூட. சலிக்கவே சலிக்காத திரைக்கதை. நரசிம்மராவை கூட வாய்விட்டு சிரிக்கவைக்கும் வசனங்கள். கன்வின்ஸிங்கான காட்சியமைப்புகள். சினிமாவை கலையாக ஆதரிப்பவர்களும், கோயிலில் சிலை வைத்து பூஜிக்க விரும்புபவர்களும் இப்படம் ஓடும் தியேட்டர் பக்கமே வரவேண்டாம் என்பது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள். தமிழ்ச்சூழலைப் பொறுத்தவரை சினிமா மாஸ் எண்டெர்டெயினர். இங்கிருந்துதான் நம்மை ஆளுபவர்கள் வரப்போகிறார்கள், வந்திருக்கிறார்கள். தமிழர்களின் மெண்டாலிட்டி மீட்டரை கரெக்ட்டாக நாடி பிடித்துப் பார்த்து வைத்தியம் செய்யும் டாக்டர்தான் இயக்குனர் ராஜேஷ்.

தங்கத் தளபதியின் மைந்தன்தான் ஹீரோ என்பது படத்தின் டபுள், த்ரிபுள் எக்ஸ்பெக்டேஷனுக்கு முக்கியமான காரணம். முதல் படத்தின் சாயல் ஆரம்பக் காட்சிகளில் மட்டும்தான் தெரிகிறது. போக போக ஓக்கே ஓக்கே. உதயநிதியின் ஸ்க்ரீன் ப்ரெஸன்ஸ் அபாரம். எந்த உடை அணிந்தாலும் பாந்தமாகவே இருக்கிறது. ஆண்மையான குரல். அசத்தலான ஹேர்ஸ்டைல். உயரம், உடல்வாகு எல்லாமே ஓக்கே. சீரியஸ் படமென்றால் நடித்துத் தொலைக்க வேண்டும், முகபாவங்களில் பர்ஃபெக்ட்னெஸ் கொண்டுவரவேண்டும். அந்த பஞ்சாயத்தெல்லாம் எதற்கு என்று லாஜிக்கேயில்லாத காமெடி படத்தை செலக்ட் செய்திருப்பதில் உதயநிதியின் புத்திசாலித்தனம் மிளிர்கிறது. டேன்ஸ்தான் கொஞ்சம் பேஜாரு. போக போக சரியாகிவிடும். சினிமாவுக்கு வந்து இத்தனை வருடங்களாகியும் ‘தல’யே இன்னும் இந்த விஷயத்தில் தடுமாறிக் கொண்டுதானிருக்கிறது. கலைஞரின் பேரன், தளபதியின் மகன் என்கிற ஹோதாவில் பத்து பேரை பறக்க வைக்கிற ஃபைட் சீன் எதுவும் இல்லாததற்கே உதயநிதிக்கு தமிழ்நாடெங்கும் கட்டவுட் வைக்கலாம்.

புஸுபுஸுவென்று அழகாக இருக்கும் பெண்கள் மத்த விஷயங்களில் கொஞ்சம் மந்தமாகவே இருப்பார்கள் என்கிற சைக்காலஜியை அனுபவப்பூர்வமாக உணர்ந்திருக்கிறேன். இயக்குனர் ராஜேஷும் உணர்ந்திருப்பார் போல. ஹன்சிகா மோத்வானியின் கேரக்டர் அப்படித்தான் இருக்கிறது. பார்ப்பதற்கே மெத்து மெத்து என்று இருப்பதால், தன் பெயரை ஹன்சிகா மெத்துவானி என்று அவர் மாற்றி வைத்துக் கொள்வதுதான் சரியாக இருக்கும். ஆப்கானிஸ்தான், துருக்கி நாடுகளின் சூப்பர் ஃபிகர்கள் மாதிரியான சாடையில் இருக்கிறார். படத்தில் ஒரு கேரக்டர் சொல்வதைப் போல கொஞ்சம் ‘ஆண்ட்டி’ லுக்தான். பொதுவாக சேட்டு ஃபிகர்கள் பதிமூன்று, பதினான்கு வயதில் செம ஃபிகர்களாக இருந்து, பத்தொன்பது இருபது வயதுகளில் ஆண்ட்டிகளாக மாறிவிடுவார்கள் என்பது நாமறிந்ததே. ஹன்சிகாவும் நியூட்டனின் இந்த விதிக்கு விலக்கல்ல. காட்சிகளில் சிக்கனத்தைக் காட்டி வெறுப்பேற்றுபவர், பாடல்களில் தாராளத்தைக் காட்டி எண்டெர்டெயின் செய்கிறார். ஒரு பாடல் காட்சியில் டைட்டான மாம்பழ நிற உடையை ஹன்சிகாவுக்கு செலக்ட் செய்த காஸ்ட்யூமருக்கு தயாரிப்பாளர் சம்பளத்தை டபுளாக கொடுக்கலாம். 70 எம்.எம்.மின் விரிந்த ஸ்க்ரீனில் கண்களை 120 டிகிரிக்கு அகலவிரித்துப் பார்த்ததில் ‘நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்’ பாடல் நினைவுக்கு வந்து விசிலடிக்கத் தோன்றுகிறது.

சந்தானம் பற்றி எதையும் குறிப்பாக சொல்ல விரும்பவில்லை. எல்லா பாலையுமே சிக்ஸருக்கு விரட்டும் பேட்ஸ்மேனை போய் ‘நல்ல பேட்ஸ்மேன்’ என்று சொல்லிதான் தெரியவேண்டுமா? இப்படம் பார்த்தவர்களும், பத்திரிகை மற்றும் இணைய விமர்சகர்கள் பலரும் பக்கம், பக்கமாய் சொல்லப் போகிறார்கள். “இங்க பீர் தட்டுப்பாடு ஏற்பட்டப்போ, பாண்டிச்சேரிக்கு மொதல்லே பஸ்ஸூ ஏறுதுனது யாரு.. நம்ம பயலுகதான்!” – இதே டைப் காமெடிதான் படம் முழுக்க. நடிகர் திலகத்தின் மகன்கள் ராம்குமாரும், பிரபுவும் தங்கள் தந்தையை காமெடியனாக்கிவிட்டதாக சந்தானத்தின் மீது கேஸ், கீஸ் போட்டுவிடக் கூடாது என்று திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாளை வேண்டிக் கொள்வோம்.

படத்தில் ரொம்ப க்யூட்டான விஷயம் அழகம்பெருமாள் – சரண்யாவுக்கு இடையேயான ஈகோயிஸ்ட் லவ். ஒரிஜினல் ட்ராக்கைவிட இந்த சைட் ட்ராக் சூப்பர். தனி படமாகவே எடுக்கக்கூடிய ஸ்ட்ராங்கான கண்டெண்ட் இது.

பாடல்கள் வழக்கம்போல தேறிவிட்டாலும் ‘மின்னலே’வுக்கு பிறகு ஒரு இஞ்ச் கூட இன்னும் ஹாரிஸ் வளரவேயில்லை என்கிற யதார்த்தத்தை பறைசாற்றுகிறது. இவ்வளவு இளமையான படத்துக்கு எவ்வளவு முதுமையான ரீரெக்கார்டிங். அதிலும் முதல் காட்சியில் எல்லாம் மேட்டர்பட குவாலிட்டிக்கு பின்னணி இசை.

படத்தில் துணை இயக்குனராக பணியாற்றியிருக்கும் தோழர் மாடசாமி ஒரு முக்கியமான பாத்திரத்தில் நடிகராகவும் அறிமுகமாகியிருக்கிறார். தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர், சிவாஜி, கமல் ரஜினி அறிமுகத்துக்குப் பிறகு மிக முக்கியமான அறிமுகமாக இதை கருத வேண்டியிருக்கிறது. ஜாங்கிரியின் மாப்பிள்ளையாக அவர் தோன்றும் காட்சியில், “யாரு இவரு? இவ்ளோ அபாரமா அசத்துறாரே?” என்று ரசிகர்கள் ஆச்சரியத்தில் விழிபிளந்து, ஆவென்று வாயைத் திறந்து கணநேரத்துக்கு பிணமாகிறார்கள். அபூர்வ ராகங்களில் ரஜினியின் என்ட்ரியை பார்த்து இதே மாதிரிதான் முப்பத்தேழு வருடங்களுக்கு முன்பும் ரசிகர்கள் செத்து செத்து விளையாடினார்களாம்.

இரண்டேகால் மணி நேரத்துக்கு போரடிக்காமல் படத்தை எடுத்துவிட்டு, எப்படி முடிப்பது என்று தெரியாத தொடர்சோகம் இந்த மூன்றாவது படத்திலும் ராஜேஷுக்கு தொடர்கிறது. ஜவ்வு மாதிரி இழுக்கப்படும் க்ளைமேக்ஸ்களால் “எப்போதான் மணி அடிக்கிறது, நாமள்லாம் எப்போதான் வீட்டுக்கு போகிறது?” என்கிற பள்ளிக்குழந்தைகளின் மனநிலையை ரசிகர்களுக்கு ஏற்படுத்துகிறார்.

பராசக்தி தந்த கலைஞரின் பேரன் நாயகனாக அறிமுகமாகும் படமென்பதால் குறிப்பிடத்தக்க அளவில் திராவிட அடையாளங்கள் படம் நெடுக விரவியிருக்கும் என்று எதிர்ப்பார்த்தேன். என் நம்பிக்கை பொய்க்கவில்லை. டைடல் பார்க் அருகே எடுக்கப்பட்ட காட்சி ஒன்றிலும், அகிலா அகிலா பாடலிலும் ஹன்சிகா ‘கருப்பு-சிவப்பு’ உடையணிந்து வருகிறார்.

12 ஏப்ரல், 2012

சிட்டுக்குருவிக்கென்ன தட்டுப்பாடு?

அம்மாவைக் கொண்டுபோய் முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டு, ‘உலக அன்னையர் தினம்’ கொண்டாடுவது நகரவாசியின் வழக்கமாகப் போய்விட்டது. அதே மாதிரிதான் சில நாட்களுக்கு முன்பாக கடந்துப்போனது ‘உலக சிட்டுக்குருவிகள் தினம்’.

“சிட்டுக்குருவியா.. அது எப்படி இருக்கும்?” என்று அப்பாவை, அம்மாவை கேட்கக்கூடிய ஒரு தலைமுறை உருவாகிக் கொண்டிருப்பது வேதனையான விஷயம்தான். நம் முற்றங்களிலும், வாசல்களிலும், தெருக்களிலும்.. எங்கெங்கு காணினும் காணப்படக்கூடிய மிகச்சிறிய பறவையினமாக சிட்டுக்குருவி இருந்தது. சாம்பலும், பிரவுனும் கலந்த அழகான இறக்கைகள். சிறிய முகம். துறுதுறுக்கும் கண்கள். குட்டியான அலகு. சுறுசுறுப்புக்கு பேர் போனவை இந்த குருவிகள். பெரும்பாலும் வீடுகளில் கூடுகட்டி வசிப்பதால் வீட்டுக்குருவிகள் என்றும் சொல்வார்கள். செல்லப்பறவையாக வளர்க்கப்பட்டதில்லை என்றாலும், அதிகாலையில் இக்குருவிகளின் சத்தம் கேட்டால்தான் நாளே நிம்மதியாக பலருக்கும் விடியும்.

துரதிருஷ்டவசமாக சிலகாலமாக இப்புள்ளினம் அருகிக்கொண்டே போகும் உயிரினம் ஆகிவிட்டது. காரணம்.. ஒன்றா, ரெண்டா? குறிப்பாக இதனால்தான் சிட்டுக்குருவிகள் மறைகின்றன என்று ஒரே காரணத்தை சுட்டிக் காட்ட முடியாது. ஆலிஸ் இன் ஒண்டர்லேண்ட் கதையில் ஆலிஸ் அப்படியே மறைவதைப் போல, மெதுவாக நம் கண் முன்னால் மறைந்துக்கொண்டே போகின்றன இந்த சுட்டிப் பறவைகள். இங்கிலாந்தின் முன்னணிப் பத்திரிகை ஒன்று சிட்டுக்குருவிகளின் மீது அக்கறை கொண்டு, சிட்டுக்குருவிகளை காப்பாற்றும் உருப்படியான ஐடியா ஒன்றினை தருவபவருக்கு கோடிக்கணக்கில் பணம் பரிசாக வழங்குவதாக அறிவித்தது. இன்று வரை கேட்பாரின்றி கிடக்கிறது அந்த பரிசுப்பணம்.

நம் ஊர் சூழலில் சிட்டுக்குருவிகள் குறைந்துவருவதற்கு முதன்மையான மூன்று காரணங்களை பட்டியலிடுகிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.

ஒன்று, பூச்சி மருந்துகள். ரசாயன பூச்சி மருந்துகளாலும், வேதியியல் உரங்களாலும் நிலம், நீர் அனைத்துமே மாசுபட்டு வருகின்றன. சிறு பூச்சிகளும், புழுக்களும் பறவையினங்களின் உணவு. அவை பூச்சி மருந்துகளால் கொல்லப்படும் சூழலில் பறவைகளுக்கு உணவுப்பஞ்சம் ஏற்படுகிறது. மேலும் தானியங்களிலும் பூச்சி மருந்துகளின் பாதிப்பு இருப்பதால், அவற்றை உண்ணும் பறவைகள் இடும் முட்டைகள் குஞ்சு பொரிக்கும் தன்மையை இழக்கின்றன.

இரண்டு, ஓட்டு வீடுகள் குறைந்தது. முன்பு பெரும்பாலான வீடுகள் ஓட்டு வீடுகளாக இருந்தன. அந்த ஓடுகளின் இடைவெளி குருவிகள் கூடுகட்டி வாழ ஏதுவாக அமைந்திருந்தது. ஓடுகள் குறைந்து, கான்க்ரீட் இல்லங்கள் அதிகமாக அதிகமாக குருவிகளுக்கான வாழ்விடம் இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது.

மூன்று, செல்போன் டவர்களின் கதிர்வீச்சு. கோவை சலிம் அலி பறவையியல் இயற்கை வரலாறு மையத்திலுள்ள ஆராய்ச்சியாளர்கள் இதை சோதனை அடிப்படையில் நிரூபித்திருக்கிறார்கள். ஐம்பது முட்டைகளை கதிரியக்கத்தின் தாக்கத்தில் முப்பது நிமிடம் வைத்திருந்து பரிசோதித்ததில், எல்லா முட்டைகளின் கருக்களுமே சிதைக்கப்பட்டு விட்டன என்று ஆதாரப்பூர்வமாக நிரூபித்திருக்கிறார்கள்.

இந்த நிலையை எல்லாம் பார்த்து, கதறிப் பதறிக் கொண்டிருக்கிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள். கடந்துப்போன ’உலக சிட்டுக்குருவித் தினத்தை’ (மார்ச் 20) சாக்காக வைத்து, இப்பறவையினத்தை காக்கும் முயற்சிகளுக்கு மக்களிடம் அழைப்பு விடுத்திருக்கிறார்கள். சென்னை இயற்கையியலாளர் அமைப்பு (Madras Naturalists’ Society ) சிட்டுக்குருவிகள் குறித்த ஒரு மக்கள் கணக்கீட்டை நடத்தியது. மார்ச் 20 அன்று சிட்டுக்குருவிகளை பார்க்க நேர்பவர்கள் அதுகுறித்த சில விவரங்களை தங்களுக்கு ஃபேஸ்புக், மின்னஞ்சல், தொலைபேசி, கடிதம் வாயிலாக தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டது. சிறப்பாக சிட்டுக்குருவிகளை படமெடுத்து அனுப்புபவர்களுக்கும் பரிசும் உண்டு என்று அறிவித்தது.

ஆச்சரியகரமான வகையில் இந்த சிறு முயற்சிக்கே பெரும் வரவேற்பு கிடைத்திருப்பதாக பெருமைப்படுகிறார் அவ்வமைப்பின் தலைவர் கே.வி.சுதாகர். “சென்னை நகரின் மையத்திலேயே, பல பகுதிகளில் சிட்டுக்குருவிகள் இன்னமும் வாழ்ந்துக் கொண்டிருப்பதை அறிந்துக்கொள்ள முடிந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. இப்பகுதிகளில் எல்லாம், இன்னும் இவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்க என்ன செய்யவேண்டுமோ, நாம் அதை செய்ய முன்வரவேண்டும்” என்கிறார் இவர்.

கிட்டத்தட்ட ஐநூறு பேர் அன்றைய தினம் மட்டுமே சிட்டுக்குருவிகளை கண்டதாக மகிழ்ச்சியோடு தங்களிடம் தெரிவித்ததாக சொன்னார் சென்னை இயற்கையியலாளர் அமைப்பின் உறுப்பினர் காயத்ரி கிருஷ்ணா.

“சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கையை துல்லியமாக கணக்கெடுப்பதற்கான கணக்கெடுப்பு அல்ல இது. சென்னை நகரில் எந்தெந்தப் பகுதிகளில் அதிகமாக வசிக்கின்றன, இங்கே மட்டும் எப்படி அவற்றால் வாழமுடிகிறது, என்ன காரணமென்று தெரிந்துகொள்வதற்காக இதை அறிவித்தோம். பொதுவாக நடுத்தரக் குடியிருப்புகள் இருக்கும் பகுதிகளில் சிட்டுக்குருவிகள் அதிகமாக காணப்படுகின்றன. அரிசி மண்டிகள் இருக்கும் பகுதிகளிலும் நிறைய காணமுடிகிறது.

தனிநபர்கள் நிறைய பேர் அட்டைப்பெட்டிகளால் குருவிகளுக்கு கூடு அமைத்து, தானியம் கொடுத்து வாழவைக்கிறார்கள் என்கிற நெகிழ்ச்சியான விஷயங்கள் நிறையவற்றை தெரிந்துகொண்டோம். அடுத்தபடியாக சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கையை பெருக்குவது, துல்லியமான கணக்கீடு செய்வது, மக்களிடம் இவற்றை காக்க விழிப்புணர்வு ஏற்படுத்துவது மாதிரியான பணிகளில் ஈடுபடுவோம்” என்றார்.

தனி நபர்களும், இம்மாதிரி தனியார் அமைப்புகளும் இயற்கையை காக்க வரிந்துக்கட்டிக் கொண்டு களமிறங்குகிறார்கள். வனத்துறை மாதிரி பெரிய கட்டமைப்பை வைத்திருக்கும் அரசாங்கமும் மனசு வைத்தால் சிட்டுக் குருவிகளை மட்டுமில்லாமல், அழிந்துவரும் பல்வேறு புள்ளினங்களையும் காக்கலாமே?


எக்ஸ்ட்ரா மேட்டர் :

சிட்டுக்குருவிகளுக்கு
இடம் கொடுங்கள்!

வீணாகும் அட்டைப்பெட்டிகளை குப்பைத் தொட்டிகளில் தூக்கி எறியாதீர்கள். அவற்றை உங்கள் வீட்டு மொட்டை மாடியில் கூடு போன்ற அமைப்பில் பாதுகாப்பாக நிறுவுங்கள். நெல், அரிசி என்று தானியங்களை தினமும் இறையுங்கள். சிறிய கிண்ணத்தில் நீர் வையுங்கள். சிட்டுக்குருவி உங்கள் வீட்டிலும் வசிக்கும்.

(நன்றி : புதிய தலைமுறை)

11 ஏப்ரல், 2012

ஈ ரோஜுலோ ஆர்டினரி ரச்சா

என்னதான் மொக்கை ஃபிலிம் கிளப் மெம்பர்கள்தான் என்றாலும், தொடர்ச்சியாக அரவான், முப்பொழுதும் உன் கற்பனைகள், மூணு என்று அடுத்தடுத்து மொக்கைக்கே மொக்கை போடும் படங்களாக வரிசைகட்டிப் பார்த்து, நொந்துப்போன நெஞ்சுக்கு மசாஜூம் விதமாக தமிழ்ப்படங்களை தவிர்க்கும் போராட்டத்தை முன்னெடுத்திருக்கிறது நமது கிளப். வருடத்தின் முதல் காலாண்டில் கிட்டத்தட்ட நாற்பது படங்கள் வெளியாகியும் ’கர்ணன்’ மட்டுமே அள்ளித் தந்திருக்கிறான். ‘அம்புலி’ கையை கடிக்கவில்லை. மற்ற படங்கள் எல்லாம் தயாரிப்பாளரின்/விநியோகஸ்தரின் தாலியறுத்து விட்டது என்பது கோலிவுட் ரிப்போர்ட்.

குறிப்பாக சிவராமன், நாராயணன் போன்ற லேட்டஸ்ட் செயல்வீர மெம்பர்களிடம் ‘ஒத்தவீடு போகலாமா?’ என்று கேட்டால், சோகம் தாங்காமல் தண்ணி போட்டுவிட்டு ‘பன்றிக்காய்ச்சல் பாஸூ’ என்று இரக்கமில்லாமல் மறுத்துவிடுகிறார்கள். இதையடுத்தே கிளப்பின் தலைவர் மொக்கை மற்றும் மொட்டை விஸ்வா தலைமையில் தெலுங்கு, மலையாள மொக்கைப் படங்களை மட்டுமே சில காலத்துக்கு பார்ப்பது என்று தீர்மானம் நிறைவேற்றினோம். அவ்வாறு மொக்கையென நினைத்துப் பார்த்து, எதிர்பாராவிதமாக சுமாராக இருந்து மெம்பர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த படங்கள் சில...

ஈ ரோஜுலோ
தமிழில் ’காதலில் சொதப்புவது எப்படி?’ என்று ‘படமெடுத்து சொதப்புவது எப்படி?’ என பாடமெடுத்த டீம் பார்க்க வேண்டிய தெலுங்கு படமிது. ஒரு கோடி ரூபாய்க்கும் குறைவான பட்ஜெட். இந்தப் படத்தை குட்டி ‘குஷி’ எனலாம். ஹீரோ, ஹீரோயினுக்கு இடையிலான ஈகோவை வைத்து திரைக்கதை குதிரையோட்டுகிறார்கள்.

கதைக்கென்றெல்லாம் ரொம்பவும் மெனக்கெடாமல் காட்சிகளை சுவாரஸ்யப்படுத்துவதில் ஈடுபாடு காட்டியிருக்கிறார் இயக்குனர் மாருதி. கிட்டத்தட்ட ஒட்டுமொத்த டீமுமே புதுமுகங்கள். படம் பார்ப்பவர்கள், இரண்டேகால் மணி நேரத்தில் குறைந்தபட்சம் ஒரு நிமிடத்துக்கு ஒரு முறையாவது கட்டாயம் சிரித்து விடுகிறார்கள். நீண்ட லத்தி வைத்திருக்கும் செக்யூரிட்டி, அந்த லத்தியை எப்போதும் எண்ணெய் போட்டு உருவிக் கொண்டிருக்கும் அசிஸ்டண்ட் என்று புதுமையான பாத்திரப் படைப்புகள். தெலுங்கு சென்ஸார் போர்ட் அதிகாரிகளுக்கு தாராள மனம். டபுள் மீனிங் டயலாக் என்றெல்லாம் மெனக்கெடாமல் டைரக்ட் மீனிங் டயலாக்குகளாக எழுதித்தள்ளிய வசனகர்த்தாவுக்கு ராயலசீமாவில் கோயில் கட்டலாம்.

ஹீரோயின் த்ரிஷாவின் அம்மா ஜாடையில், கொஞ்சம் பாவனாவின் பாடி லேங்குவேஜென்று செம க்யூட்டாக இருக்கிறார். ஹீரோவோ ஒத்தவீடு நாயகனைவிட ரொம்பவே சுமாராகவே இருக்கிறார். படத்தின் ஸ்பெஷல் என்னவென்றால், அட்மாஸ்பியருக்கு வரும் சாதாரண ஃபிகர்கூட ரிச்கேர்ளாகவோ அல்லது சிறப்பான நாட்டுக் கட்டையாகவோ அமைந்து ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளையடிக்கிறார்கள். ஆந்திர மல்டிப்ளக்ஸ் மைனர்களும், அமெரிக்க ஐரோப்பிய என்.ஆர்.ஐ.களும் திரும்பத் திரும்ப இந்தப் படத்தை ரசித்துக் கொண்டேயிருக்க, கோடிகளில் வசூல் பேய்மழையாய் கொட்டி தயாரிப்பாளரை குஷிப்படுத்தியிருக்கிறது. தீம் பாடலான ‘ரிங், ட்ரிங்’, படம் பார்த்து நீண்டநாளானாலும் நம் மனதில் ரிங்கிக் கொண்டும், ட்ரிங்கிக் கொண்டும் இருக்கும்.

ஆர்டினரி
கடந்த சில ஆண்டுகளில் இந்திய சினிமா இண்டஸ்ட்ரியில் தமிழ் இண்டஸ்ட்ரியை விட உருப்படாமல் போய்விட்ட இண்டஸ்ட்ரி மலையாள ஃப்லிம் இண்டஸ்ட்ரி. மம்மூட்டியும், மோகன்லாலுமே கூட அடுத்தடுத்து பல்பு வாங்கிக் கொண்டிருக்க, திலீப் மட்டும் கொஞ்சம் ஸ்டடியாக இருக்கிறார். தமிழ், இந்தி, தெலுங்குப் படங்களைப் பார்த்து மலையாள ஹீரோக்கள் கெட்டுப் போய்விட்டார்கள். ஐ மீன் கற்பிழந்து விட்டார்கள். புதியதலைமுறை ஹீரோக்கள் குத்துப்பாட்டு, ஃபைட் என்று கோமாளித்தனம் செய்ய, மரபார்ந்த மலையாள சினிமா ரசிகர்கள் கதகளி பார்க்க கிளம்பிவிட்டார்கள்.

இந்தச் சூழலில் மலையாள மண்ணின் அச்சு அசலான மீன் வாசனையோடு வந்திருக்கிறது ஆர்டினரி. மென்மையான பாத்திரங்கள், நட்பு- உறவு என்று பழைய கேரள விழுமியங்கள். வித்யாசாகரின் மெல்லிசை. கண்ணுக்கு குளிர்ச்சியான மலையாள லொகேஷன் என்று ஆர்டினரி மலையாள மூவி. ஆனால் எக்ஸ்ட்ரா ஆர்டினரி ரெஸ்பான்ஸாம்.

பிஜூ மேனன் டிரைவர். குஞ்சாகோ கோபன் கண்டக்டர். ஒரு மலை கிராமத்துக்கு அப் & டவுன் என்று ரெண்டே சிங்கிள் போகும் சொத்தையான ஒரு கே.எஸ்.ஆர்.டி.சி ஆர்டினரி பஸ். ஒரு ஹீரோயின். மேலும் சில கேரக்டர்கள். இடைவேளைக்கு முன்பாக ஒரு முடிச்சு. க்ளைமேக்ஸில் சுபம் என்று வழக்கமான சினிமா பாணிதான் சூப்பர்ஹிட் ஆகியிருக்கிறது. இதுவும் ஒரு மினிமம் பட்ஜெட் படம்தான். ஃபாரினுக்கெல்லாம் போய் மலையாள பாரம்பரிய உடையில் யாரும் ஹிப் ஹாப் ஆடவில்லை.

ஹீரோயின் ஷ்ரீதா பற்றி சொல்லாவிட்டால் நாக்கு அழுகிவிடும். பதினேழு வயதான இவர் நம் ராதாவின் பொண்ணு கார்த்திகா சாடையில் இருக்கிறார். இதுதான் முதல் படம். தூக்கலாக மேக்கப் போட்ட காட்சிகளில் பேரழகியாகவும், மேக்கப் குறைவான காட்சிகளில் ரொம்ப சுமார் ஃபிகராகவும் இருக்கிறார். நவ்யா மாதிரி மாநிறம். இவருக்கு கொடுத்த சம்பளத்தில் பாதியை, அவருக்கு ஐப்ரோ திருத்திய அழகுக் கலைஞருக்கு கொடுப்பதுதான் நியாயம்.

ரச்சா
அப்பா மெகா ஸ்டார். சித்தப்பா பவர் ஸ்டார். எனவே ராம்சரண் தேஜா மெகா பவர் ஸ்டார். படத்தில் இவரது சின்ன வயது கேரக்டர் ஓடும்போதுகூட, பக்கத்தில் இருக்கும் டிரான்ஸ்பார்மரில் பவர் எகிறுகிறது. மேலே குறிப்பிட்ட இரண்டு படங்களும் லோ-பட்ஜெட் என்றால், ரச்சா ஹை-பட்ஜெட் ஆக்‌ஷன் மசாலா.

ராம்சரணுக்கு ஒரு ராசி. அவரது படங்களுக்கு ரெண்டே ரெண்டு ரிசல்ட்தான். ஒன்று அட்டர் ஃப்ளாப். இரண்டு மெகா ஜிகா ஹிட். ரச்சா இரண்டாம் வகை. தெலுங்கு சினிமாவின் முந்தைய சாதனைகளான மகாதீரா, தூக்குடு, பிஸினஸ்மேனையெல்லாம் அசால்டாக முதல்வாரத்தில் தூக்கி சாப்பிட்டிருக்கிறது ரச்சா.

இத்தனைக்கும் ரொம்ப சுமாரான ஒருவரி கதை. எளிதில் அடுத்தக் காட்சியை யூகிக்க வைக்கும் பலவீனமான திரைக்கதை. இப்படியிருந்தும் ரச்சா ஏன் சூப்பர் டூப்பர் ஹிட் என்றால், அதை தெரிந்துக்கொள்ள தற்கால தெலுங்கு சினிமா பற்றிய பின்னணியும், கொஞ்சம் வரலாற்று அறிவும் அவசியம்.

மெகா ஸ்டாருக்கும், பவர் ஸ்டாருக்கும் பிரஜாராஜ்யத்தை காங்கிரஸில் இணைத்தது தொடர்பாக கொஞ்சநாளாக கருத்து வேறுபாடு, குடும்பத்தில் குழப்பம் என்று ஆந்திர பத்திரிகைகள் பகிரங்கமாகவே கிசுகிசுத்துக் கொண்டிருக்கின்றன. பவர் ஸ்டாரின் லேட்டஸ்ட் படமான ‘பாஞ்சா’வில் அண்ணனின் சர்வாதிகாரப் போக்குக்கு எதிரான பஞ்ச்களை கொஞ்சம் பலமாகவே வைத்திருந்தார் பவன் கல்யாண். ரசிகர்களின் மாபெரும் ஆதரவோடு ஓபனிங் சூப்பர் என்றாலும், மக்களின் பேராதரவு இல்லாமல் அடுத்தவாரங்களில் பாஞ்சா பஞ்சர் ஆனது. இச்சூழலில் சிரஞ்சீவியின் வாரிசு அவரது தம்பியா அல்லது மகனா என்கிற கேள்வி இயல்பாகவே ஆந்திர சினிமா ரசிகர்களுக்கு எழுந்தது. அதற்கான பதில்தான் ரச்சா.

“என் அப்பனை ஏதாவது சொன்னா, மவனே எங்கிருந்தாலும் தேடி வந்து உதைப்பேன்”

“எனக்கு உயிரைப் பத்தி கவலையில்லை. என் அப்பாவோட ஆசையை நிறைவேத்த எதை வேணும்னாலும் செய்வேன்”

“மக்களோட ஆதரவு எங்களுக்கு இருக்கு. எதைப்பத்தியும் கவலை இல்லை”

இம்மாதிரி வசனங்கள் மெகாஸ்டாரின் மகன் வாயால் உச்சரிக்கப்படும்போது, அது ஆந்திர தியேட்டர்களில் நிலநடுக்கத்தை ஏற்படுத்துவது பெரிய ஆச்சரியமில்லை.

போதாக்குறைக்கு மெகாஸ்டாரின் சூப்பர்ஹிட் பாடலான “வானா.. வானா”-வின் ரீமிக்ஸ் வேறு. இருபத்தி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விரகதாபத்தை சிறப்பாக வெளிப்படுத்தி கேங்லீடரில் இப்பாடலுக்கு ஆடிய சிரஞ்சீவி, விஜயசாந்தி இருவருமே இப்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள்.

கொஞ்சமும் நம்பவே முடியாத, காதுகளில் கி.மீ. கணக்கில் பூ சுற்றும் காட்சிகள் இருந்தாலும் ‘ரச்சா’ பார்ப்பது கொண்டாட்டமாகவே இருக்கிறது என்பதையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். அடுத்தடுத்து தெலுங்கில் ஒருமுறை, தமிழில் இன்னொருமுறை இப்படத்தை மொக்கை ஃப்லிம் கிளப் ரசிகர்கள் ரசித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ஒரு பாடலில் தமன்னா வேகமாக தன் பாலினும் வெண்மையான, வடிவான தொப்புளை ‘ஷேக்’ செய்யும்போது ‘ஷாக்’ ஆகாத ரசிகமனங்களே இல்லை எனலாம். அதிலும் கடைசி பாடலில் உலகில் இருக்கும் அத்தனை வண்ணங்களையும் உடைகளிலும், ப்ராப்பெர்ட்டி செட்டுகளிலும் இறைத்திருக்கும் லாவகம்தான் தெலுங்கு சினிமாக்காரர்களின் பலமே. இப்பாடலில் வரும் ஒரு ஷாட்டில் ஸ்க்ரீனின் இருபுறமும் எக்ஸ்ட்ராஸ் எடுப்பாக திருமலை நாயக்கர் மகால் தூண் மாதிரி நிற்கும்போது ரசிகர்களின் விசிலில் திரை கிழிகிறது.

2 ஏப்ரல், 2012

பருவச்சீட்டு பயணிகள் சங்கம்

சென்னையைப் பற்றி வாசிக்கவோ, கேட்கவோ சலிக்கவே சலிக்காது. பிறந்து வளர்ந்தது முழுக்க முழுக்க சென்னையின் எல்லையிலிருக்கும் மடிப்பாக்கத்தில்தான். என்றாலும் இரண்டு தலைமுறைகளாகதான் சென்னை எங்களுக்கு அன்னை. அப்பா வழி தாத்தா காஞ்சிபுரத்துக்காரர். முதல் உலகப்போரில் பிரிட்டிஷ் இந்திய இராணுவத்தில் பணியாற்றியவர். இராணுவத்தில் ஓய்வுபெற்ற பிற்பாடு சென்னை மாகாண காவல்துறையின் குதிரைப்படையில் பணியாற்றினார். கொண்டித்தோப்பு போலிஸ் லேனில் குவார்ட்டர்ஸ். பெரியப்பாவில் தொடங்கி, அப்பாவரை பதிமூன்று பேரை அவர் பெற்று வளர்த்தது இங்கேதான்.

அப்பாவின் அம்மா வழி தாத்தா மடிப்பாக்கத்து வாசி. அந்தக் காலத்தில் வெள்ளைக்காரர்களுக்காக கிராமங்களில் வரிவசூல் செய்துத்தரும் அஃபிஷியல் ஏஜெண்ட். ‘ஜமீன்தார்’ என்று ‘க்ளெய்ம்’ செய்துக்கொண்டு ஊரில் கும்மாளம் போட்ட பரம்பரை என்று வைத்துக் கொள்ளுங்களேன். என் பாட்டிக்கு சொந்த ஊர் என்பதால் எங்கள் குடும்பம் கடந்த தலைமுறையில் மடிப்பாக்கத்தில் செட்டில் ஆகிவிட்டது.

இப்போது சென்னை மாநகராட்சிக்குள் இணைந்துவிட்டாலும் மிகச்சரியாக இருபதாண்டுகளுக்கு முன்புவரை மடிப்பாக்கம் கிராமம்தான். ஐந்தாண்டுகளுக்கு முன்புவரை கூட ஓரளவு கிராம அடையாளங்கள் மிச்சமிருந்தது. சைதாப்பேட்டை வரை பஸ்ஸில் போய்வருபவர்கள்கூட ‘பட்டிணத்துக்கு போயாறேன்’ என்று சொல்வார்கள். மவுண்ட்ரோடு போய் சினிமா பார்த்துவிட்டு வருவது ஒரு கவுரவமான சடங்காகவே அப்போது இருந்தது. இப்போதும் மடிப்பாக்கத்தின் பூர்வகுடிகள் யாரும் தங்களை சென்னைவாசி என்று சொல்லிக் கொள்வதில்லை. நானும்கூட வெளியூர்களுக்கு செல்லும்போது, “சென்னைக்கு பக்கத்துலே மடிப்பாக்கம்” என்றே அறிமுகப்படுத்திக் கொள்கிறேன். எல்லா ஊர்க்காரர்களுக்கும் இருப்பதைப் போல ‘மெட்ராஸ்’ எனக்கும் வியப்பூட்டும் ஊர்தான், இப்போதும் கூட. எக்ஸிபிஷன், மியூசியம், பீச், கிண்டி பார்க், பிளானட்டோரியம், அலங்கார் தியேட்டர் என்று மெட்ராஸுடனான சுகமான சிறுவயது நினைவுகளை அசைபோடுவது சுகமான விஷயம்தான். சென்னைக்கு வெகு அருகில் வசிப்பவனையே தனக்கேயுரிய தனித்துவ அலட்டலால் மிரட்டும் இந்த நகரம், வெளியூர்க்காரர்களுக்கு என்னமாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று புரிந்துகொள்ள முடிகிறது.

‘நம்ம சென்னை’ வெளியீடாக வெளிவந்திருக்கும் ‘சென்னையும் நானும்’ ஏற்படுத்தும் நாஸ்டால்ஜியா உணர்வுகள் அற்புதமானவை. ஞாநி, பிரபஞ்சன், மருது, நாசர், மாஃபா பாண்டியராஜன், வெற்றிமாறன் ஆகிய பிரபலங்கள் தங்கள் சென்னை அனுபவங்களை இந்நூலில் பகிர்ந்துக் கொண்டிருக்கிறார்கள். இதில் பாண்டியராஜனின் பேட்டியாக வருவது மட்டும் தேவையற்றத் திணிப்பாக – அவரது நிறுவனத்துக்கு விளம்பரமாக – புத்தகத்துக்கு திருஷ்டிப் படிகாரமாக அமைந்திருக்கிறது. சப்ஜெக்ட் தாண்டுகிறோமேவென்று சென்னையின் வளர்ச்சி குறித்து கொஞ்சமே கொஞ்சம் அகாடமிக்காக பேசியிருக்கிறார் பாண்டியராஜன்.

ஞாநி, நாசர் இருவருமே செங்கல்பட்டுக் காரர்கள். சென்னைக்கு அருகிலிருக்கும் பெரிய நகரைச் சேர்ந்தவர்கள். எழுபதுகளிலும், எண்பதுகளிலும் இங்கே கோலோச்சிக்கொண்டிருந்த ‘நாடகம்’ அவர்களை இங்கே இழுத்து வந்திருக்குமென யூகிக்கிறேன்.

இந்நூலிலும் தன் வழக்கப்படி ஆற, அமர பொறுமையாக பேசும் ஞாநி தஞ்சாவூரில் பிறந்திருக்க வேண்டியவர். அடித்தட்டு மக்கள் நகரை விட்டு வெளியேற்றப்படும் போக்கினை கவலையோடு காண்கிறார். நடுத்தர வர்க்கம் மனச்சாட்சியை இழந்து வருவதை இதற்கு காரணமாக சுட்டிக் காட்டுகிறார். செங்கல்பட்டிலிருந்து தாம்பரம் கிறிஸ்தவக் கல்லூரிக்கு வந்து படித்துக் கொண்டிருந்த ஞாநி, பட்டப்படிப்பை முடித்ததும் முழுக்க சென்னைவாசியாகிறார். நகரைப் பற்றிப் பேசும் பேட்டியில் தன்னுடைய குடும்பப் பின்னணி மொத்தத்தையும் அழகாக நெருடல் இன்றி பேசியிருக்கிறார். சென்னையில் தன்னை கவர்ந்தவையாக பரந்து விரிந்த கடற்கரையையும், நாடகங்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகளையும் குறிப்பிடுகிறார்.

மதுரையைச் சேர்ந்த டிராட்ஸ்கி மருது சென்னை ஓவியக்கல்லூரியில் படிப்பதற்காக சென்னை வாசியானவர். மந்தைவெளி செயிண்ட் மேரிஸ் ரோடு தாண்டி இன்றைய ராஜா அண்ணாமலைபுரம் பகுதிகளில் விவசாயம் நடந்து வந்ததாக தன் நினைவுகளை பகிர்ந்துக் கொள்கிறார். கபாலி தியேட்டர் வாய்க்கால்களில் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது என்று அவர் சொல்லுவதை இன்றைய சென்னைவாசிகள் நம்புவது கடினம். அன்றைய மூர் மார்க்கெட் குறித்த மருதுவின் விவரணைகள் சுவாரஸ்யமானவை. கலைஞர்களுக்கான பொதுவான வெளியற்ற நகரமாக சென்னையை இவர் பார்க்கிறார். கலிபோர்னியாவில் உள்ள கல் ஆர்ட்ஸ் பல்கலைக்கழகத்தை மனதில் வைத்து எண்பதுகள்ன் இறுதியில் அரசாங்கத்திடம் ஒரு யோசனையை இவர் முன்வைத்திருக்கிறார். ஒரே வளாகத்துக்குள் ஏழு விதமான கலைகளையும் கற்றுத்தரும் திட்டமிது. ஒப்புக்கொண்ட அன்றைய திமுக அரசு 1991ல் கவிழ்ந்ததால், இந்த கலைப்பல்கலைக்கழக யோசனை கிடப்பில் போடப்பட்டுவிட்டதாம்.

நாசர் எழுபதுகளில் சென்னை ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் படித்தவர். ரயிலில் மாம்பலம் நிலையத்தில் இறங்கி, வேர்க்கடலை கொரித்தப்படியே ரங்கநாதன் தெரு, பனகல் பார்க், ஜி.என்.செட்டி சாலை வழியாக மவுண்ட்ரோடுக்கு நடந்து வருவாராம். அப்போதைய சென்னை முழுக்க நடந்தே கடந்துவிடும் பரப்பளவில் இருந்ததாக சொல்கிறார். ஜி.என்.செட்டி சாலையில் இருந்த வீட்டில் நச்சினார்க்கினிய சிவன், வண்டார்குழலி என்று பெயர்ப்பலகை இருந்ததை நினைவுகூர்கிறார். இத்தனை ஆண்டுகளில் சென்னை வளரவில்லை, மாறியிருக்கிறது என்பது நாசரின் வாதம். சென்னை அழகியலை விற்று, குப்பையை வாங்கி வீங்கிக் கொண்டிருக்கிறது என்பது இவரின் வருத்தம்.

நூலின் மிக சுவாரஸ்யமான பேட்டியாக வெற்றிமாறனின் பேட்டியைச் சொல்லலாம். பிறந்தது கடலூராக இருந்தாலும் சிறுபிராயத்தை பெரும்பாலும் சென்னையில் கழித்திருக்கிறார். மேல்நிலை படிக்கும்போது உறவினர் வீட்டில் ஏற்பட்ட ஏதோ பிரச்சினையால் பள்ளி நண்பணின் வீட்டில் தங்கிப் படித்த இவரது அனுபவம் அபாரம். தங்கள் மகனோடு, வேறு யாரோ ஒரு பிள்ளையையும் மகனாக வளர்த்த அந்த குடும்பத்தின் அன்பு, இதுவரை இலக்கியமோ, சினிமாவோ நமக்கு காட்டிய அன்புகளையெல்லாம் விட பேரன்பு. சென்னையின் அடையாளமான டீக்கடைகளைப் பற்றி இப்புத்தகத்தில் விலாவரியாக பேசியிருப்பவர் இவர் மட்டும்தான். சென்னையைக் கெடுப்பவர்கள் எல்லாருமே வெளியூரிலிருந்து வருபவர்கள் என்று நேரடியாகவே குற்றம் சாட்டுகிறார். சென்னையின் மீது மற்றவர்களால் வைக்கப்படும் புகார்களை இவர் கோபத்தோடு பார்க்கிறார். நமது கழிவுகளை சுமக்கும் கூவத்தை எப்படி இளக்காரமாகப் பேசமுடியும் என்று கேட்கிறார். ‘வடசென்னைதான் அசல் சென்னை’ என்பது வெற்றிமாறனின் வாதம்.

சென்னை குறித்த பிரபஞ்சனின் சில கட்டுரைகள் இணைக்கப்பட்டிருக்கின்றன. பிரபஞ்சனின் கட்டுரை நன்றாக இருக்கிறது என்று சொல்வது க்ளிஷேவாகிவிடும். அவரோடு மேன்ஷனில் தங்கியிருந்த வெளியூர்க்காரர் ஒருவரிடம் பிரபஞ்சன் கேட்டாராம்.

“ஊருக்கு போவதே இல்லையா?”

“எதுக்கு? இதுவும் ஊர்தானே?”

சென்னையை நேசிப்பவனாக என்னை நெகிழவைத்த வரிகள் இவை. சென்னையை ஊராக சென்னைவாசி உட்பட யாருமே மதிப்பிடுவதில்லை என்பதுதான் உண்மை. இங்கு எல்லாமே இருந்தும், எதுவுமே இல்லாதது மாதிரி எப்போதும் குறை சொல்லிக்கொண்டே இருப்பது வாடிக்கையாகி விட்டது. கோயமுத்தூர் மாதிரி வருமா, மதுரை மாதிரி வருமாவென்று புலம்பிக் கொண்டேயிருப்பவர்கள் கோயமுத்தூருக்கோ, மதுரைக்கோ போனால் ஒரே வாரத்தில் தெறித்துக்கொண்டு சென்னைக்கு ஓடிவருகிறார்கள். இங்கு எதுவுமே சரியில்லை என்பவர்கள்தான் இங்கேயே நிரந்தமாக வசிக்க வழிவகை செய்துக் கொள்கிறார்கள்.

சினிமாக்களில் காட்டப்படுவது போல எல்.ஐ.சி.யோ, சென்ட்ரலோ மாதிரி சென்னைக்கென்று எதுவும் தனித்துவமான பொதுப்பிம்பம் உருவாகியிருப்பதாகத் இந்நூலை வாசிக்கும்போது தோன்றவில்லை. இந்நகரைப் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக ஒரு மனச்சித்திரத்தை இந்நகரம் வழங்குகிறது. நாசருக்கு தேவிபாரடைஸ் தியேட்டரில் இருந்த சிவப்பிந்திய சிலையும், அலங்காரத் தண்ணீர் ஊற்றும் சென்னையாகத் தோன்றுகிறது. இதுபோல ஒவ்வொருவருக்கும் சென்னை என்றால் ஏதோ ஒரு அடையாளம். மற்ற நகரங்களை மனதுக்குள் நினைத்தாலே நச்சென்று ஒரு லேண்ட்மார்க் மூளைக்குள் பல்ப் அடிக்கும். சென்னைக்கு நிறைய லேண்ட்மார்க்குகள். ஆனால் எதுவும் பொதுப்பிம்பம் உருவாக்கக்கூடிய அளவுக்கு ‘பளிச்’சென்று இல்லை.

சென்னையில் திருவிழாக்கள் மிகக்குறைவு. கபாலீஸ்வரர் கோயில் அறுபத்து மூவர், திருப்பதி குடை மாதிரி ஒரு சிலவற்றை யோசித்துதான் சொல்லமுடியும். மாறாக வருடாவருடம் பொங்கலுக்கு தீவுத்திடலில் நடக்கும் எக்ஸிபிஷனை நடுத்தர, கீழ்த்தட்டு மக்களின் திருவிழாவாக குறிப்பிடலாம். எண்பதுகளில் செல்வாக்கோடு (போக்குவரத்துக் கழகம் சிறப்பு பஸ் விடுமளவுக்கு) இருந்த இந்த விழா, இன்றளவுக்கும் ஓரளவுக்கு சிறப்பாகவே மூன்றுமாத காலத்துக்கு நடக்கிறது. முன்பெல்லாம் காணும் பொங்கலுக்கு மாட்டு வண்டி கட்டி பீச்சுக்கு வரும் வழக்கம்தான் இப்போது சுத்தமாக வழக்கொழிந்துப் போய்விட்டது. பழைய படங்களில் காணக்கிடைக்கும் சென்னையை பார்க்க இப்போது ஏக்கமாக இருக்கிறது. வளர்ச்சியோ, மாற்றமோ.. இரண்டாயிரங்களுக்குப் பிறகு.. குறிப்பாக ஐ.டி. தலைமுறை உருவானபிறகே சென்னை தன்னுடைய பிரத்யேக அடையாளங்களை கொஞ்சம் கொஞ்சமாக இழந்துவருகிறது என்பது என்னுடைய அவதானிப்பு.

புத்தகத்தில் மிகவும் கவர்ந்த ஒரு விஷயம் ஞாநி சொன்னது. ஞாநியின் தந்தை சென்னையில் எக்ஸ்பிரஸ் அலுவலகத்தில் பத்திரிகையாளராக பணியாற்றியவர். பேரறிஞர் அண்ணா இவரது கல்லூரித் தோழர். கிட்டத்தட்ட நாற்பத்தைந்து ஆண்டுகள் செங்கல்பட்டில் இருந்து நகருக்கு சீசன் டிக்கெட் எடுத்து ரயிலில் வரும் வழக்கம் கொண்டவர் என்பதால் ‘சீசன் டிக்கெட் பயணிகள் சங்கம்’ என்ற ஒன்றை ஆரம்பித்திருக்கிறார் (ஞாநிக்கே அப்பாவாச்சே?). ஆண்டுதோறும் செங்கல்பட்டில் இந்த சங்கத்தின் ஆண்டுவிழாவுக்கு அண்ணா, ராஜாஜி, காமராஜர் மாதிரி ஆட்கள் சிறப்பு விருந்தினர்களாக வருவார்கள். ஒருமுறை கலைஞர் வந்திருக்கிறார். ஆங்கிலத்தில் சங்கத்தின் பெயர் இருப்பதைக் கண்டவர் கவர்ச்சிகரமாக தமிழில் மாற்றிவைத்த பெயர்தான் இந்த கட்டுரையின் தலைப்பு.


நூல் : சென்னையும் நானும் (பிரபலங்கள் பார்வையில் சென்னை)

பக்கங்கள் : 80, விலை : ரூ.40

வெளியீடு : நம்ம சென்னை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
B-1, கீழ்த்தளம், ஆர்.ஈ. அப்பார்ட்மெண்ட்ஸ்,
70, ஆரிய கவுடர் சாலை, மேற்கு மாம்பலம்,
சென்னை-600 033. போன் : 044-24718501
மின்னஞ்சல் : nammachennai@gmail.com