2 ஏப்ரல், 2012

பருவச்சீட்டு பயணிகள் சங்கம்

சென்னையைப் பற்றி வாசிக்கவோ, கேட்கவோ சலிக்கவே சலிக்காது. பிறந்து வளர்ந்தது முழுக்க முழுக்க சென்னையின் எல்லையிலிருக்கும் மடிப்பாக்கத்தில்தான். என்றாலும் இரண்டு தலைமுறைகளாகதான் சென்னை எங்களுக்கு அன்னை. அப்பா வழி தாத்தா காஞ்சிபுரத்துக்காரர். முதல் உலகப்போரில் பிரிட்டிஷ் இந்திய இராணுவத்தில் பணியாற்றியவர். இராணுவத்தில் ஓய்வுபெற்ற பிற்பாடு சென்னை மாகாண காவல்துறையின் குதிரைப்படையில் பணியாற்றினார். கொண்டித்தோப்பு போலிஸ் லேனில் குவார்ட்டர்ஸ். பெரியப்பாவில் தொடங்கி, அப்பாவரை பதிமூன்று பேரை அவர் பெற்று வளர்த்தது இங்கேதான்.

அப்பாவின் அம்மா வழி தாத்தா மடிப்பாக்கத்து வாசி. அந்தக் காலத்தில் வெள்ளைக்காரர்களுக்காக கிராமங்களில் வரிவசூல் செய்துத்தரும் அஃபிஷியல் ஏஜெண்ட். ‘ஜமீன்தார்’ என்று ‘க்ளெய்ம்’ செய்துக்கொண்டு ஊரில் கும்மாளம் போட்ட பரம்பரை என்று வைத்துக் கொள்ளுங்களேன். என் பாட்டிக்கு சொந்த ஊர் என்பதால் எங்கள் குடும்பம் கடந்த தலைமுறையில் மடிப்பாக்கத்தில் செட்டில் ஆகிவிட்டது.

இப்போது சென்னை மாநகராட்சிக்குள் இணைந்துவிட்டாலும் மிகச்சரியாக இருபதாண்டுகளுக்கு முன்புவரை மடிப்பாக்கம் கிராமம்தான். ஐந்தாண்டுகளுக்கு முன்புவரை கூட ஓரளவு கிராம அடையாளங்கள் மிச்சமிருந்தது. சைதாப்பேட்டை வரை பஸ்ஸில் போய்வருபவர்கள்கூட ‘பட்டிணத்துக்கு போயாறேன்’ என்று சொல்வார்கள். மவுண்ட்ரோடு போய் சினிமா பார்த்துவிட்டு வருவது ஒரு கவுரவமான சடங்காகவே அப்போது இருந்தது. இப்போதும் மடிப்பாக்கத்தின் பூர்வகுடிகள் யாரும் தங்களை சென்னைவாசி என்று சொல்லிக் கொள்வதில்லை. நானும்கூட வெளியூர்களுக்கு செல்லும்போது, “சென்னைக்கு பக்கத்துலே மடிப்பாக்கம்” என்றே அறிமுகப்படுத்திக் கொள்கிறேன். எல்லா ஊர்க்காரர்களுக்கும் இருப்பதைப் போல ‘மெட்ராஸ்’ எனக்கும் வியப்பூட்டும் ஊர்தான், இப்போதும் கூட. எக்ஸிபிஷன், மியூசியம், பீச், கிண்டி பார்க், பிளானட்டோரியம், அலங்கார் தியேட்டர் என்று மெட்ராஸுடனான சுகமான சிறுவயது நினைவுகளை அசைபோடுவது சுகமான விஷயம்தான். சென்னைக்கு வெகு அருகில் வசிப்பவனையே தனக்கேயுரிய தனித்துவ அலட்டலால் மிரட்டும் இந்த நகரம், வெளியூர்க்காரர்களுக்கு என்னமாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று புரிந்துகொள்ள முடிகிறது.

‘நம்ம சென்னை’ வெளியீடாக வெளிவந்திருக்கும் ‘சென்னையும் நானும்’ ஏற்படுத்தும் நாஸ்டால்ஜியா உணர்வுகள் அற்புதமானவை. ஞாநி, பிரபஞ்சன், மருது, நாசர், மாஃபா பாண்டியராஜன், வெற்றிமாறன் ஆகிய பிரபலங்கள் தங்கள் சென்னை அனுபவங்களை இந்நூலில் பகிர்ந்துக் கொண்டிருக்கிறார்கள். இதில் பாண்டியராஜனின் பேட்டியாக வருவது மட்டும் தேவையற்றத் திணிப்பாக – அவரது நிறுவனத்துக்கு விளம்பரமாக – புத்தகத்துக்கு திருஷ்டிப் படிகாரமாக அமைந்திருக்கிறது. சப்ஜெக்ட் தாண்டுகிறோமேவென்று சென்னையின் வளர்ச்சி குறித்து கொஞ்சமே கொஞ்சம் அகாடமிக்காக பேசியிருக்கிறார் பாண்டியராஜன்.

ஞாநி, நாசர் இருவருமே செங்கல்பட்டுக் காரர்கள். சென்னைக்கு அருகிலிருக்கும் பெரிய நகரைச் சேர்ந்தவர்கள். எழுபதுகளிலும், எண்பதுகளிலும் இங்கே கோலோச்சிக்கொண்டிருந்த ‘நாடகம்’ அவர்களை இங்கே இழுத்து வந்திருக்குமென யூகிக்கிறேன்.

இந்நூலிலும் தன் வழக்கப்படி ஆற, அமர பொறுமையாக பேசும் ஞாநி தஞ்சாவூரில் பிறந்திருக்க வேண்டியவர். அடித்தட்டு மக்கள் நகரை விட்டு வெளியேற்றப்படும் போக்கினை கவலையோடு காண்கிறார். நடுத்தர வர்க்கம் மனச்சாட்சியை இழந்து வருவதை இதற்கு காரணமாக சுட்டிக் காட்டுகிறார். செங்கல்பட்டிலிருந்து தாம்பரம் கிறிஸ்தவக் கல்லூரிக்கு வந்து படித்துக் கொண்டிருந்த ஞாநி, பட்டப்படிப்பை முடித்ததும் முழுக்க சென்னைவாசியாகிறார். நகரைப் பற்றிப் பேசும் பேட்டியில் தன்னுடைய குடும்பப் பின்னணி மொத்தத்தையும் அழகாக நெருடல் இன்றி பேசியிருக்கிறார். சென்னையில் தன்னை கவர்ந்தவையாக பரந்து விரிந்த கடற்கரையையும், நாடகங்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகளையும் குறிப்பிடுகிறார்.

மதுரையைச் சேர்ந்த டிராட்ஸ்கி மருது சென்னை ஓவியக்கல்லூரியில் படிப்பதற்காக சென்னை வாசியானவர். மந்தைவெளி செயிண்ட் மேரிஸ் ரோடு தாண்டி இன்றைய ராஜா அண்ணாமலைபுரம் பகுதிகளில் விவசாயம் நடந்து வந்ததாக தன் நினைவுகளை பகிர்ந்துக் கொள்கிறார். கபாலி தியேட்டர் வாய்க்கால்களில் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது என்று அவர் சொல்லுவதை இன்றைய சென்னைவாசிகள் நம்புவது கடினம். அன்றைய மூர் மார்க்கெட் குறித்த மருதுவின் விவரணைகள் சுவாரஸ்யமானவை. கலைஞர்களுக்கான பொதுவான வெளியற்ற நகரமாக சென்னையை இவர் பார்க்கிறார். கலிபோர்னியாவில் உள்ள கல் ஆர்ட்ஸ் பல்கலைக்கழகத்தை மனதில் வைத்து எண்பதுகள்ன் இறுதியில் அரசாங்கத்திடம் ஒரு யோசனையை இவர் முன்வைத்திருக்கிறார். ஒரே வளாகத்துக்குள் ஏழு விதமான கலைகளையும் கற்றுத்தரும் திட்டமிது. ஒப்புக்கொண்ட அன்றைய திமுக அரசு 1991ல் கவிழ்ந்ததால், இந்த கலைப்பல்கலைக்கழக யோசனை கிடப்பில் போடப்பட்டுவிட்டதாம்.

நாசர் எழுபதுகளில் சென்னை ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் படித்தவர். ரயிலில் மாம்பலம் நிலையத்தில் இறங்கி, வேர்க்கடலை கொரித்தப்படியே ரங்கநாதன் தெரு, பனகல் பார்க், ஜி.என்.செட்டி சாலை வழியாக மவுண்ட்ரோடுக்கு நடந்து வருவாராம். அப்போதைய சென்னை முழுக்க நடந்தே கடந்துவிடும் பரப்பளவில் இருந்ததாக சொல்கிறார். ஜி.என்.செட்டி சாலையில் இருந்த வீட்டில் நச்சினார்க்கினிய சிவன், வண்டார்குழலி என்று பெயர்ப்பலகை இருந்ததை நினைவுகூர்கிறார். இத்தனை ஆண்டுகளில் சென்னை வளரவில்லை, மாறியிருக்கிறது என்பது நாசரின் வாதம். சென்னை அழகியலை விற்று, குப்பையை வாங்கி வீங்கிக் கொண்டிருக்கிறது என்பது இவரின் வருத்தம்.

நூலின் மிக சுவாரஸ்யமான பேட்டியாக வெற்றிமாறனின் பேட்டியைச் சொல்லலாம். பிறந்தது கடலூராக இருந்தாலும் சிறுபிராயத்தை பெரும்பாலும் சென்னையில் கழித்திருக்கிறார். மேல்நிலை படிக்கும்போது உறவினர் வீட்டில் ஏற்பட்ட ஏதோ பிரச்சினையால் பள்ளி நண்பணின் வீட்டில் தங்கிப் படித்த இவரது அனுபவம் அபாரம். தங்கள் மகனோடு, வேறு யாரோ ஒரு பிள்ளையையும் மகனாக வளர்த்த அந்த குடும்பத்தின் அன்பு, இதுவரை இலக்கியமோ, சினிமாவோ நமக்கு காட்டிய அன்புகளையெல்லாம் விட பேரன்பு. சென்னையின் அடையாளமான டீக்கடைகளைப் பற்றி இப்புத்தகத்தில் விலாவரியாக பேசியிருப்பவர் இவர் மட்டும்தான். சென்னையைக் கெடுப்பவர்கள் எல்லாருமே வெளியூரிலிருந்து வருபவர்கள் என்று நேரடியாகவே குற்றம் சாட்டுகிறார். சென்னையின் மீது மற்றவர்களால் வைக்கப்படும் புகார்களை இவர் கோபத்தோடு பார்க்கிறார். நமது கழிவுகளை சுமக்கும் கூவத்தை எப்படி இளக்காரமாகப் பேசமுடியும் என்று கேட்கிறார். ‘வடசென்னைதான் அசல் சென்னை’ என்பது வெற்றிமாறனின் வாதம்.

சென்னை குறித்த பிரபஞ்சனின் சில கட்டுரைகள் இணைக்கப்பட்டிருக்கின்றன. பிரபஞ்சனின் கட்டுரை நன்றாக இருக்கிறது என்று சொல்வது க்ளிஷேவாகிவிடும். அவரோடு மேன்ஷனில் தங்கியிருந்த வெளியூர்க்காரர் ஒருவரிடம் பிரபஞ்சன் கேட்டாராம்.

“ஊருக்கு போவதே இல்லையா?”

“எதுக்கு? இதுவும் ஊர்தானே?”

சென்னையை நேசிப்பவனாக என்னை நெகிழவைத்த வரிகள் இவை. சென்னையை ஊராக சென்னைவாசி உட்பட யாருமே மதிப்பிடுவதில்லை என்பதுதான் உண்மை. இங்கு எல்லாமே இருந்தும், எதுவுமே இல்லாதது மாதிரி எப்போதும் குறை சொல்லிக்கொண்டே இருப்பது வாடிக்கையாகி விட்டது. கோயமுத்தூர் மாதிரி வருமா, மதுரை மாதிரி வருமாவென்று புலம்பிக் கொண்டேயிருப்பவர்கள் கோயமுத்தூருக்கோ, மதுரைக்கோ போனால் ஒரே வாரத்தில் தெறித்துக்கொண்டு சென்னைக்கு ஓடிவருகிறார்கள். இங்கு எதுவுமே சரியில்லை என்பவர்கள்தான் இங்கேயே நிரந்தமாக வசிக்க வழிவகை செய்துக் கொள்கிறார்கள்.

சினிமாக்களில் காட்டப்படுவது போல எல்.ஐ.சி.யோ, சென்ட்ரலோ மாதிரி சென்னைக்கென்று எதுவும் தனித்துவமான பொதுப்பிம்பம் உருவாகியிருப்பதாகத் இந்நூலை வாசிக்கும்போது தோன்றவில்லை. இந்நகரைப் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக ஒரு மனச்சித்திரத்தை இந்நகரம் வழங்குகிறது. நாசருக்கு தேவிபாரடைஸ் தியேட்டரில் இருந்த சிவப்பிந்திய சிலையும், அலங்காரத் தண்ணீர் ஊற்றும் சென்னையாகத் தோன்றுகிறது. இதுபோல ஒவ்வொருவருக்கும் சென்னை என்றால் ஏதோ ஒரு அடையாளம். மற்ற நகரங்களை மனதுக்குள் நினைத்தாலே நச்சென்று ஒரு லேண்ட்மார்க் மூளைக்குள் பல்ப் அடிக்கும். சென்னைக்கு நிறைய லேண்ட்மார்க்குகள். ஆனால் எதுவும் பொதுப்பிம்பம் உருவாக்கக்கூடிய அளவுக்கு ‘பளிச்’சென்று இல்லை.

சென்னையில் திருவிழாக்கள் மிகக்குறைவு. கபாலீஸ்வரர் கோயில் அறுபத்து மூவர், திருப்பதி குடை மாதிரி ஒரு சிலவற்றை யோசித்துதான் சொல்லமுடியும். மாறாக வருடாவருடம் பொங்கலுக்கு தீவுத்திடலில் நடக்கும் எக்ஸிபிஷனை நடுத்தர, கீழ்த்தட்டு மக்களின் திருவிழாவாக குறிப்பிடலாம். எண்பதுகளில் செல்வாக்கோடு (போக்குவரத்துக் கழகம் சிறப்பு பஸ் விடுமளவுக்கு) இருந்த இந்த விழா, இன்றளவுக்கும் ஓரளவுக்கு சிறப்பாகவே மூன்றுமாத காலத்துக்கு நடக்கிறது. முன்பெல்லாம் காணும் பொங்கலுக்கு மாட்டு வண்டி கட்டி பீச்சுக்கு வரும் வழக்கம்தான் இப்போது சுத்தமாக வழக்கொழிந்துப் போய்விட்டது. பழைய படங்களில் காணக்கிடைக்கும் சென்னையை பார்க்க இப்போது ஏக்கமாக இருக்கிறது. வளர்ச்சியோ, மாற்றமோ.. இரண்டாயிரங்களுக்குப் பிறகு.. குறிப்பாக ஐ.டி. தலைமுறை உருவானபிறகே சென்னை தன்னுடைய பிரத்யேக அடையாளங்களை கொஞ்சம் கொஞ்சமாக இழந்துவருகிறது என்பது என்னுடைய அவதானிப்பு.

புத்தகத்தில் மிகவும் கவர்ந்த ஒரு விஷயம் ஞாநி சொன்னது. ஞாநியின் தந்தை சென்னையில் எக்ஸ்பிரஸ் அலுவலகத்தில் பத்திரிகையாளராக பணியாற்றியவர். பேரறிஞர் அண்ணா இவரது கல்லூரித் தோழர். கிட்டத்தட்ட நாற்பத்தைந்து ஆண்டுகள் செங்கல்பட்டில் இருந்து நகருக்கு சீசன் டிக்கெட் எடுத்து ரயிலில் வரும் வழக்கம் கொண்டவர் என்பதால் ‘சீசன் டிக்கெட் பயணிகள் சங்கம்’ என்ற ஒன்றை ஆரம்பித்திருக்கிறார் (ஞாநிக்கே அப்பாவாச்சே?). ஆண்டுதோறும் செங்கல்பட்டில் இந்த சங்கத்தின் ஆண்டுவிழாவுக்கு அண்ணா, ராஜாஜி, காமராஜர் மாதிரி ஆட்கள் சிறப்பு விருந்தினர்களாக வருவார்கள். ஒருமுறை கலைஞர் வந்திருக்கிறார். ஆங்கிலத்தில் சங்கத்தின் பெயர் இருப்பதைக் கண்டவர் கவர்ச்சிகரமாக தமிழில் மாற்றிவைத்த பெயர்தான் இந்த கட்டுரையின் தலைப்பு.


நூல் : சென்னையும் நானும் (பிரபலங்கள் பார்வையில் சென்னை)

பக்கங்கள் : 80, விலை : ரூ.40

வெளியீடு : நம்ம சென்னை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
B-1, கீழ்த்தளம், ஆர்.ஈ. அப்பார்ட்மெண்ட்ஸ்,
70, ஆரிய கவுடர் சாலை, மேற்கு மாம்பலம்,
சென்னை-600 033. போன் : 044-24718501
மின்னஞ்சல் : nammachennai@gmail.com

20 கருத்துகள்:

  1. லக்கிண்ணே, சென்னையுடனான என் உறவை வார்த்தைகளில் வடிக்க முடியாது. எனக்கு பட்டமளித்து என் பரம்பரையை கெளரவித்த நகர். சென்னை சங்கமம் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கிராமியக்கூத்து மெரினா கடற்கரை அருகில் உள்ள ராணி மேரிகல்லூரியில் நடந்தது. நான்,கேபிள் சங்கர், மனிஜி, அகநாழிகை வாசு ஆகியோர் அங்கிருக்கிறோம். அப்போது ஏ.ஆர்.ரகுமான் அந்த நிகழ்சிக்காக இசையமைத்த பாடல் ஒளிபரப்பாகிக்கொண்டு இருந்தது. குறிப்பிட்ட ஒரு வரியை கேட்டபோது என்னை அறியாமல் என் கண்களில் கண்ணீர். அருகில் இருந்த கேபிள் "என்னண்ணே, அழுகுறீங்க? " என்று கேட்டார்.

    அந்த வரி..

    "தஞ்சம் குடுத்திடும் சென்னை
    இவள் நெஞ்சம் சுரந்திடும் அன்னை"

    என் ஒவ்வொரு வாய் சோறும் சென்னை மட்டுமே குடுத்தது.

    பதிலளிநீக்கு
  2. நான் போன கமெண்டில் சொன்ன நிகழ்ச்சி குறித்து கேபிள் சங்கர் எழுதியது

    http://www.cablesankaronline.com/2010/01/blog-post_13.html

    பதிலளிநீக்கு
  3. என் பள்ளி நாட்களை நினைவூட்டியது. அருமையான பதிவு. புத்தகம் தபாலில் பெறமுடியுமா?

    பதிலளிநீக்கு
  4. நானும் சில வருடங்கள் சென்னையில் இருந்தேன். சென்னையை விட்டே போகக்கூடாது என ஒரு கட்டத்தில் நினைத்ததுண்டு. ஆனால் காலம் அனைத்தையும் மாற்றிவிட்டது. ஆனாலும் என்னால் சென்னையை மறக்கவே முடியாது. மிகவும் அதிகமாக சினிமா பார்த்தது சென்னையில் தான். அதுவும் கிட்டத்தட்ட சென்னையிலுள்ள எல்லா தியேட்டர்களிலும்.

    பதிலளிநீக்கு
  5. அருமையான பகிர்வு சகோ..நினைவுகளை தொட்டது..மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  6. பெயரில்லா8:03 PM, ஏப்ரல் 02, 2012

    அசோகமித்திரன் இல்லாமல் சென்னை பற்றிய புத்தகமா?

    பதிலளிநீக்கு
  7. இரண்டாம் உலக போர் தாத்தா ஆலந்தூர்இல் ஆயா வீடு, இரும்புலியூரில் (தாம்பரத்துக்கும் பெருங்களுதூருக்கும் நடுவே) பெற்றோர் வீடு(இருவது ஆண்டுகள் ஆலந்தூர்ல் பல தெருக்களில் வசித்த பிறகு),கலைஞர் பெண்களுக்கும் சொத்துரிமை கொடுத்ததால் மறுபடியும் ஆலந்தூர்,பெரம்பூர் ஜமாலியாவில் மாமியார் வீடு கிழ்பாக்கத்தில் படிப்பு என்று சென்னையை சுற்றி சுற்றி வந்தவனுக்கு குலாப்ஜாமுன் போல இனிக்கும் கட்டுரை.
    இப்போது வெளி மாநிலத்தில் வசித்தாலும் சென்னை மண் மிதிக்கும் போது வரும் மகிழ்ச்சிக்கு ஈடு இணையே கிடையாது.
    சென்னையை பற்றிய பொறாமை தான் கோயம்புத்தூர் போல வருமா/ மதுரை கிட்ட கூட எதுவும் நெருங்க முடியாது/சென்னை தமிழை நக்கல் செய்யும் பேச்சுக்கள்.அதை விளையாட்டாக பேசுபவரின் மனம் நோக கூடாது என்று தலையாட்டும் குணம் சென்னை தண்ணீர் குடித்ததினால் வந்த குணம்.அது வேறு எங்கு தேடினாலும் கிடைக்காது

    பதிலளிநீக்கு
  8. அப்துல்லா அண்ணே! அந்த பாட்டு ரஹ்மான் போடலை-ன்னு நினைக்கிறேன்.. எனக்கும் ரொம்ப பிடித்த பாட்டு!

    ”இளைஞர் நகரம் சென்னை! எங்கள் கலைஞர் வைத்த பேர் சென்னை!”

    ”பஞ்சம் பிழைக்க எவர் வந்தாலும்
    நெஞ்சம் சுரக்கும் அன்னை!”

    பதிலளிநீக்கு
  9. சென்னையின் கதை (1921)
    கிளின் பார்லோ
    தமிழில் ப்ரியாராஜ்
    விலை ரூ. 80
    மதராஸ் ஒரு புராதன நகரமல்ல; அதன் பின்னணியில் சரித்திர நாயகர்களான பண்டைய அரசர்களோ அல்லது புராணச் சம்பவங்களோ சம்பந்தப்படவில்லை. புராதன சரித்திர நிகழ்வுகளைப் பற்றித் தெரிவிக்கும் பாழடைந்த மாளிகைகளும் இங்கில்லை. மதராஸின் புகழ் நம்ப முடியாத கதைகளால் வளர்க்கப்பட்டதல்ல. சுவையான உண்மைச் சம்பவங்களால் அடையப் பெற்றது. மதராஸின் கதை, மனதை லயிக்க வைக்கும் ஒரு பகுதியாக சரித்திரத்தில் அமைந்துள்ளது.


    http://www.sandhyapublications.com/katturaigal01.html

    பதிலளிநீக்கு
  10. பதிவு அழகு..புத்தகமும் அழகாகத்தான் இருக்க வேண்டும். விலை ரொம்பவே அழகு (40 தானா?). முத்தாய்ப்பாக கலைஞர் வைத்த பெயர் ஒரு பருவச்சிட்டு போல் செம அழகு :)

    பதிலளிநீக்கு
  11. நல்ல நடை யு கி!

    ஆடோகாரரின் அடாவடி வசூல், ஒருமையில் பேசுதல் - இவைதான் சென்னையை பற்றி அதிகம் பேர் குறை சொல்லும் காரணங்கள்..ஆனால் சென்னை அன்னை தன் உள்ளே வைத்திருக்கும் சரித்திரம் பலப்பல!

    http://senthilgauthaman.blogspot.com

    பதிலளிநீக்கு
  12. //கிட்டத்தட்ட நாற்பத்தைந்து ஆண்டுகள் செங்கல்பட்டில் இருந்து நகருக்கு சீசன் டிக்கெட் எடுத்து ரயிலில் வரும் வழக்கம் கொண்டவர் என்பதால் ‘சீசன் டிக்கெட் பயணிகள் சங்கம்’ என்ற ஒன்றை ஆரம்பித்திருக்கிறார்//

    இப்பொழுது கூட ஆயுத பூஜை அன்று இரயில் "7:30 மணி இரயில் ப்ரன்ட்ஸ்" போன்ற க்ரூப்புகளை பார்க்கலாம்.

    பதிலளிநீக்கு
  13. With due respect to everyone, I know the difference of life between Chennai and other cities. My heart longs to make my livelihood in Trichy or Coimbatore or Salem, but I know that is not going to happen.
    I cannot help disagreeing the lines where the author says people run away from other cities to Chennai within a week. I think it is a subjective comment - no hard feelings :)

    A good article, anyways.

    பதிலளிநீக்கு
  14. author says people run away from other cities to Chennai within a week. I think it is a subjective comment - no hard feelings :), I second it..
    whoever come to coimbatore they will not return to their original place.siruvani water,orellaam a.c.,nalla velai vaaippu, panam etc.anubavichchavangala kelunga!!!

    பதிலளிநீக்கு
  15. சென்னை வாழ்க்கை - பெருநகர அபார்ட்மென்ட் வாழ்க்கை என்றெல்லாம் கிளிசே ட்வீட் களை கண்டாலேகூட எரிச்சலாகும்..Toomuch genralization about chennai ..Mostly in negative

    பதிலளிநீக்கு
  16. I was also belong to that category of spending sizable day in a journey from CPT to MSB. It is a news to me that Gnani belonged to CPT. I know about Nasser who also travelled with us during that time. I have a feeling that the people who live in CPT have no identity of their own or it is lost due to the proximity to Chennai. CPT has a beautiful fort which has a reference in a olden tamil book viz.,Anantharangam Pillaying Dairy Kurippu is now in a dilapidated state. When ever I cross the same I have a sorrowful feeling. People who belong to CPT should do something for that. I used to refer CPT as "When you travel down south in a peak summer you will have a whiff of cool after after an hour of start of Chennai" you know that the CPT has come. Come join CPTians.

    பதிலளிநீக்கு
  17. உங்கள் எழுத்துக்களை படிக்கும் பொழுது உங்கள் ஆழ் மனம் கிராமத்தின் கூறுகளால் அமைந்துள்ளது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

    பதிலளிநீக்கு
  18. First time padikarappa "பருவச்சிட்டு பயணிகள் சங்கம்" endru padithu vittu ahaha, nammalu oru masala kathai solla porarurnu padichen. Kadasila than therinjuthu naan thappa padichuttannu.

    பதிலளிநீக்கு
  19. இப்பத்தான் உங்க பதிவுகள படிச்சிட்டு வர்றேன் சார்....சொல்ல வார்த்தையே இல்ல...உங்க எழுத்து நடை பிரமிக்க வைக்குது சார்..யாருக்காகவும் எதற்காகவும் உங்க ஸ்டைல மாத்திக்காதீங்க....பிரஸ் ல வேல பார்க்கிறதா சொல்லியிருக்கீங்க .அதற்காக பதிவு போடாம விட்டுடாதீங்க.உங்க திரை விமர்சனம் எல்லாம் அசத்தலோ அசத்தல்.உங்கள் கிரியேட்டிவிட்டிக்கு என் ராயல் சல்யுட்.....

    பதிலளிநீக்கு