25 ஏப்ரல், 2012

தண்ணீர்ப் பந்தல்


சென்னைக்கு வெகு அருகில் அமைந்திருந்தாலும், கிராமிய அடையாளங்கள் ஒரு பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்புவரை கூட எங்கள் ஊருக்கு இருந்தது. ஒவ்வொரு வீட்டின் முன்பும் ஒரு புன்னை மரமோ, வேப்பமரமோ கட்டாயம் இருக்கும். அவ்வப்போது வெயிலில் வியாபாரம் செய்யும் பிளாஸ்டிக் சாமான் கடைக்காரரோ, ஜோசியரோ ‘தில்’லாக யார் வீட்டு முன்பாகவும் இளைப்பாறலாம். “கொஞ்சம் தண்ணி கொடுங்க தாயீ!” என்று குரல் கொடுத்தால், பெரிய சொம்பில் ஜில்லென்று கிணற்று நீர் கட்டாயம் கிடைக்கும். அந்தக் காலத்து மடிப்பாக்க தண்ணீரை குடிக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். பேச்சுக்கு சொல்வார்கள்.. ‘எங்க வீட்டு கிணத்துத் தண்ணி தேங்காய்த்தண்ணி மாதிரி இருக்கும்’ என்று.. நிஜமாகவே எங்க ஊர் தண்ணி தேங்காய்த் தண்ணிதான். அப்போதெல்லாம் நினைத்ததேயில்லை, தண்ணீரை கூட காசு கொடுத்து வாங்குவோமென்று.

‘கேட்டால் கிடைக்கும்’ என்பதால் மடிப்பாக்கத்திலோ, சுற்று வட்டாரத்திலோ நான் தண்ணீர்ப் பந்தலை பார்த்ததே இல்லை. அறுபத்து மூவர் விழாவுக்கு மயிலாப்பூர் வரும்போதுதான் இப்படி ஒரு சமாச்சாரம் இருப்பதே தெரியும். அப்போதெல்லாம் நகரில் சில இடங்களில் பக்காவாக கான்க்ரீட் கட்டமைப்பு கொண்ட தண்ணீர் பந்தலை ஓரிரு இடங்களில் பார்த்திருக்கிறேன். உபயம் : லயன்ஸ் கிளப் என்றோ அல்லது ஜெயின் சங்கம் என்றோ கல்வெட்டு பொறிக்கப்பட்டிருக்கும். எவர்சில்வர் லோட்டா மிகக்கவனமாக அதைவிட நான்கு மடங்கு விலை கொண்ட சங்கிலியில் கட்டப்பட்டிருக்கும்.

அரசியல் கட்சிகள் தண்ணீர்ப் பந்தல் திறக்கும் புரட்சிக்கு புண்ணியம் கட்டிக் கொண்டவர் நம் புரட்சித்தலைவி அம்மாதான். 96ல் தோற்றபிறகு எந்த ஆக்டிவிட்டியும் இல்லாமல் அதிமுக சோர்ந்துப்போயிருக்க, ஒரு கோடைக்காலத்தில் அம்மா அறிக்கை விட்டிருந்ததாக ஞாபகம். “தீயசக்தியின் ஆட்சியில் மக்கள் தாகத்தால் தவித்துப் போகிறார்கள். எனவே கழகத் தொண்டர்கள் ஆங்காங்கே தண்ணீர்ப் பந்தல் திறந்துவைத்து மக்களின் தாகத்தைப் போக்க வேண்டும்” என்கிற ரீதியில் அந்த அறிக்கை இருந்ததாக நினைவு.

அன்று ஆரம்பித்த அமர்க்களம்தான் இன்று ஆவேசமாக தலைவிரித்து ஆடிக் கொண்டிருக்கிறது. ஏப்ரல் வந்துவிட்டாலே அதிமுகவினர் உற்சாகமடைந்து விடுகிறார்கள். ‘தண்ணீர்ப் பந்தல் திறக்கவரும் புரட்சித்தலைவியின் போர்ப்படைத் தளபதியான செங்கோட்டையன் அவர்களே, அம்மாவின் இதயக்கனி அக்கா வளர்மதி அவர்களே’ ரேஞ்சுக்கு மெகா போஸ்டர் ஒட்டி, கடைகளில் கலெக்‌ஷன் கல்லா கட்டி, தெருவெல்லாம் தோரணம், ஆயிரம்வாலா பட்டாசு என்று கோடைத்திருவிழாவை அரசியல் கலாச்சார கோலாகலமாக கொண்டாடுகிறார்கள். காலணா பந்தலை திறக்க எதற்கு அமைச்சர்கள் வருகிறார்கள் என்கிற தர்க்கம் பிடிபடவே மாட்டேன் என்கிறது.

இவர்களைப் பார்த்து ரசிகன் விஜய் நற்பணி மன்றம், கேப்டன் நரசிம்மா மன்றம், காதல் மன்னன் ‘தல’ மன்றம் என்று துக்கடா நற்பணி இயக்கங்களும், உதிரிக் கட்சிகளும் கூட பந்தல் விளையாட்டு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில் சென்னைக்கு வருபவர்கள் தடுக்கி விழுந்தாலே ஏதோ ஒரு தண்ணீர்ப் பந்தலில்தான் விழுந்தாக வேண்டும். திமுககாரர்கள் இந்த விஷயத்தில் அசமஞ்சங்கள். கிருஷ்ணா நீர் வாங்கிக் கொடுத்துவிட்டோமென்று மிதப்பில் அலைகிறார்கள் போல.

எக்கனாமிக்கலாக பார்த்தால் ஒரு தண்ணீர்ப் பந்தல் அமைக்க என்ன செலவாகும்? ஐந்துக்கு ஐந்து சைஸில் சவுக்கு கட்டி, தென்னை ஓலை வேய்ந்து ஒரு சிறிய குடில். தோராயமாக இரண்டாயிரம் செலவாகலாம். இரண்டு பெரிய சைஸ் பானை. கோடம்பாக்கத்தில் விசாரித்ததில் இருநூறு, இருநூற்றி ஐம்பது என்று எஸ்டிமேட் தருகிறார்கள். நான்கு பிளாஸ்டிக் லோட்டா நாற்பது ரூபாய். ஒட்டுமொத்தமாகவே அதிகபட்சம் இரண்டாயிரத்து ஐநூறில் பக்காவான தண்ணீர்ப்பந்தல் அமைத்துவிடலாம். துரதிருஷ்டவசமாக ஒரு பந்தலுக்கு நம்மாட்கள் குறைந்தபட்சம் ஐம்பதாயிரத்திலிருந்து, ஒரு லட்சம் வரை செலவழிக்க வேண்டியிருக்கிறது. தண்ணீர்ப் பந்தலுக்கு ஆகும் செலவை விட இருபது, நாற்பது மடங்கு போஸ்டர், பட்டாசு, பேனர் மாதிரியான சமாச்சாரங்களுக்கு செலவழிக்கிறார்கள். இந்த ஆடம்பரம் இல்லாவிட்டால் ஒரு பந்தல் அமைப்பதற்கு பதிலாக நாற்பது, ஐம்பது பந்தல் போட்டு அசத்து அசத்துவென அசத்தலாம். ஆனால் பப்ளிசிட்டிதான் எதிர்ப்பார்த்த அளவுக்கு கிடைக்காது.

சரி, தீபாவளி மாதிரி கொண்டாடி பந்தல் அமைத்துவிட்டார்கள். மெயிண்டனென்ஸ் எப்படியிருக்கிறது?

முதல் நாள் திறப்பாளர் வந்து திறக்கும்போது தர்ப்பூசணி, கிர்ணிப்பழம், ரஸ்னா, கோக்கோ கோலா, மோர், லொட்டு லொசுக்குவென்று கோடையைத் தணிக்கும் குளிர் சமாச்சாரங்களாக மக்களுக்கு தந்து அசத்துகிறார்கள். இரண்டாவது, மூன்றாவது நாள் மட்டும் பானையில் தண்ணீர் இருக்கும். ஐந்தாவது நாள் அந்தப் பானையில் கால்வாசியளவு தண்ணீர் இருக்கும். குடித்தால் ஒரு மாதிரி சவுரு அடிக்கும். ஏழாவது நாள் பானை மட்டும் இருக்கும். பத்தாவது நாள் பந்தல் மட்டும் இருக்கும். பதினைந்தாவது நாள் அங்கே கட்டப்பட்ட பேனர்களும், ஒட்டப்பட்ட போஸ்டர்களும் மட்டுமே இருக்கும். திறப்பு விழாவின் போது எடுக்கப்பட்ட படங்கள் சில நாளிதழ்களில் மட்டும் ‘கவர்’ சிஸ்டத்தில் பிரசுரிக்கப்படும். பந்தலை ஏற்பாடு செய்து திறந்துவைத்த வட்டச் செயலாளரோ, கொட்டச் செயலாளரோ அடுத்த உள்ளாட்சியின் போது சீட்டு கேட்க ‘பக்கா’வாக இதையெல்லாம் ஆல்பம் போட்டு வைத்திருப்பார்.

தண்ணீர்ப் பந்தல் யாருக்காவது பயன்படுகிறதா?

பன்றிக்காய்ச்சல் பரவிவரும் நிலையில் யாரும், எதிலும் ரிஸ்க் எடுக்கத் தயாரில்லை. யாசகம் கேட்கும் தோழர்கள் கூட தண்ணீர்ப் பந்தல் எதையும் இப்போது பயன்படுத்துவதாக தெரியவில்லை. ஒண்ணரை ரூபாய் கொடுத்தால் ‘ஜில்’லென்று பொட்டிக்கடையில் பாக்கெட்டாகவே கிடைக்கிறது தண்ணீர். குடிவெறியர்கள் கூட மிக்ஸிங்குக்கு தண்ணீர்ப் பந்தல் தண்ணீரை யூஸ் செய்வதில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

நிஜமாகவே நாட்டு நடப்பு எல்லைமீறி கேணைத்தனமாக நடந்துக் கொண்டிருக்கிறது.

10 கருத்துகள்:

  1. " தண்ணீர்ப் பந்தல் யாருக்காவது பயன்படுகிறதா? "

    என்ன தம்பி அப்டி கேட்டுபுட்டிங்க . .

    உங்களுக்கே ஒரு பதிவு எழுத . . !

    நல்ல பதிவு

    நன்றி

    பதிலளிநீக்கு
  2. அதே அருமையான மயக்க வைக்கும் எழுத்து நடை. பதிவின் ஆரம்பத்திலிருந்து கடைசி வரைக்கும் ஒரே மூச்சாக படிக்கத் தூண்டும் ஆர்வம். எல்லாரும் கவனிக்கும் விஷயத்தையே , வேறு கோணத்தில் கவனிக்கும் ஆற்றல்.. உங்கள் தரம் நாளுக்கு நாள் மெருகேறுவதை தொடர்கிறது யுவா. நானும் பதிவு எழுதி அதை நான்கு பேர் படிக்கிறார்கள் என்றால், அந்த பெருமை உங்களுக்கே சேரும்.

    பதிலளிநீக்கு
  3. சரியா சொல்லி இருக்கீங்க..

    பதிலளிநீக்கு
  4. //மிக்ஸிங்குக்கு தண்ணீர்ப் பந்தல் தண்ணீரை யூஸ் செய்வதில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்//

    நிஜமாவா??

    யோசிக்க வைக்கும் பதிவு..

    பதிலளிநீக்கு
  5. கே.கே.நகரில் ஓர் இடத்தில் பபுள் டாப் செட்டப்பில் கேன் வாட்டர் போட்டு தண்ணீர் பந்தல் அமைத்திருக்கிறார்கள்..!

    பதிலளிநீக்கு
  6. தர்ப்பூசணி, கிர்ணிப்பழம், ரஸ்னா, கோக்கோ கோலா, ///

    இதெல்லாம் எங்க வீட்டுக்கு பக்கத்தில் தண்ணீர் பந்தல் தொடங்கியபொழுது கொடுத்தார்கள். இதைப்பார்த்த எங்க ஆயா சொல்லிச்சு, ''பரவால்லடா அம்மாவுக்கும் கொஞ்சம் இரக்கம் இருக்குடா கரண்ட் குடுக்கிலீனாலும் இதையாவது செய்றாங்களே '' என்று. எனக்கும் தர்பூசணி, ரஸ்னா வை எல்லாம் பார்த்தபொழுது இவ்வளவு இரக்கமா? என்று கூட தோன்றியது. திறந்து வைத்த அடுத்தநாள் ஒரு ஆர்வத்தில் இன்னைக்கு என்ன தருகிறார்கள் என்று சென்று பார்த்தேன். அங்க பேரளும் இல்ல தண்ணியும் இல்ல. தெரு நாய்கள் நான்கைந்து நிழலுக்கு அங்கே ஓய்வெடுத்துக்கொண்டிருந்தது. எங்க ஆயாவிடம் வந்து சொன்ன பொழுது ,'' அட நீ வேற தெறந்து வெச்ச உடனே எல்லாம் தீர்ந்து போச்சு. அப்போ போனவனுங்கதான் அப்புறம் தண்ணி பந்தல எட்டியே பாக்கல '' என்று.

    பதிலளிநீக்கு
  7. ஏழாவது நாள் பானை மட்டும் இருக்கும்....இருந்துச்சிங்க. பத்தாவது நாள் பந்தல் மட்டும் இருக்கும்....இருக்குதுங்க....நிஜமாகவே நாட்டு நடப்பு கொஞ்சம் கேணத்தனமாதான் படுதுங்க.

    பதிலளிநீக்கு
  8. தண்ணீர் பந்தல் என்பது இன்றைய காலகட்டத்தில் மிகவும் வரவேற்கப்பட வேண்டிய ஒரு விஷயம்தான். என்றாலும் அது எப்படி நடக்கிறது என்பதை பார்த்தால் கொஞ்சம் கோக்குமாக்காகதான் இருக்கிறது.

    வெயிலின் போது தாகம் தணிக்க என்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட தண்ணீர்பந்தல் இப்போது கோடை காலங்களில் மட்டுமே நடக்கும் ஒரு சம்பிரதாயமாக மாறிவிட்டது.

    கோவையில் இந்த வருடம் தரையெல்லாம் குளிரும் தை மாதத்திலேயே வெயில் புரட்டி எடுத்துவிட்டது. மின்விசிறி இல்லாமல் தூங்கவியலாமல், மின்சாரம் இல்லாமல் மின்விசிறி ஓடாமல் மிகவுமே சிரமப்பட்டுவிட்டோம்.

    வெயில் வெயில் வெயில்...

    கோவை மக்கள் இப்படி ஒரு வெப்பத்தை ஒரு வருடமும் அனுபவித்ததில்லை, அதுவும் தை மாதத்திலேயே...

    அப்பொழுதெல்லாம் தவித்த வாய்க்கு ஒரு குவளை தண்ணீர் தராத தண்ணீர் பந்தல் அமைப்பாளர்கள், வழக்கம்போல பங்குனி மாத முடிவில் அதாவது ஏப்ரல் மாத முதல் வாரங்களில் பந்தல் அமைத்தார்கள். அதற்குள் ஒரு மழையும் பெய்து, குளிர் காற்றும் அடித்து, ஊர் கொஞ்சம் குளிர்ந்துகூடவிட்டது. தண்ணீர் பந்தல்கள் காய்ந்து போய் கிடக்கிறது.

    காலம்காலமாக பல நல்ல விஷயங்கள் சம்பிரதாயமாக மாறி வருவது இப்படித்தான் போலும், தண்ணீர் பந்தல்கள் எல்லாம் கோடைகாலத்திற்குத்தான், வெயிலுக்கு அல்ல என்பதுபோல...

    பதிலளிநீக்கு
  9. If a very very ordinary subject results in an interesting reading experience, the credit goes to the style of presentation and the inputs that went into it. It is this pleasurable reading experience that makes us double-click your captions / links. P.S. Today's newspapers say that water is going to cost more. Ashok, Chennai rajashokraj@yahoo.com

    பதிலளிநீக்கு
  10. http://www.envazhi.com/rajini-distributes-buttermilk-to-people-of-chennai/

    பதிலளிநீக்கு