30 டிசம்பர், 2017

தாம்பூலம் முதல் திருமணம் வரை

மகிழ்ச்சி.

ஒவ்வொரு திருமணத்தின் நோக்கமும் இதுதான்.

உங்களுக்கு திருமணமாகி இருந்தால் திருமண ஆல்பத்தை உடனே புரட்டிப் பாருங்கள். இல்லையேல் உங்கள் பெற்றோருடைய, சகோதர சகோதரிகளுடைய, நண்பர்களுடைய ஆல்பத்தை பாருங்கள். போட்டோக்களில் இடம்பெற்றிருக்கும் மணமக்கள் மட்டுமல்ல. சுற்றமும், நட்பும் கூட முகத்தில் மகிழ்ச்சியை மட்டுமேதான் சுமந்திருக்கும். எல்லோரும் மகிழ்ந்திருக்கும் ஒரே இடம் திருமணக்கூடம்.

பெண் பார்ப்பதில் தொடங்கி, சாந்தி முகூர்த்தம் வரை சம்பந்தப்பட்ட மணமக்கள் இருவருமே தங்கள் வாழ்வில் கடக்கும் ஒவ்வொரு நொடியையும் வாழ்க்கை முழுக்க மலரும் நினைவுகளாக மனதில் கல்வெட்டாக பதிந்து வைத்துக் கொள்கிறார்கள்.

கெட்டிமேளம் முழங்க மணமகன் தாலி கட்டும்போது, அட்சதை போடும் அத்தனை பேருமே, “இந்த மணமக்கள் நீடூழி வாழவேண்டும்” என்று மனமார வாழ்த்துகிறார்கள். பிள்ளையையும், பெண்ணையும் பெற்ற பெற்றோர் பெரிய மனப்பாரத்தை இறக்கி வைத்ததாக நிம்மதி கொள்கிறார்கள். ஒவ்வொரு பெண்ணுக்கும் திருமணம் என்பது செகண்ட் இன்னிங்ஸ். புதிய உறவுகள், புதிய குடும்பம், புதிய வீடு என்று எல்லாமே புதுச்சூழல். எனவேதான் திருமணத்தை ‘The big day’ என்கிறார்கள்.

இருமனம் இணைவது மட்டுமல்ல திருமணம். இச்சொல்லுக்கு ‘ஓர் ஆணுக்கும், ஒரு பெண்ணுக்கும் இடையிலான வாழ்க்கை ஒப்பந்தம்’ என்று ஒருவரியில் அர்த்தம் புரிந்துக் கொள்ளலாம். ஆனால், அது மட்டும்தானா திருமணம்? இந்த வார்த்தையை வெறும் சடங்காக மட்டும் சுருக்கி கூற இயலாது. ஒரு புதிய குடும்பத்தின் தொடக்கத்தை, தலைமுறைகளின் தொடர்ச்சியை சடங்கு என்று சுருக்கி சங்கடப்படுத்திவிட முடியுமா என்ன?

மேற்கத்திய நாடுகளில், இரு தனி நபர்களுக்கு இடையேயான குறைந்தபட்ச செயல்திட்டங்களோடு கூடிய ஒப்பந்தம் என்று திருமணத்தைக் கூறலாம். நம்முடைய மரபில் இரண்டு குடும்பங்களின் இணைப்பாக இது பாரம்பரியமாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இரு குடும்பம், அவரவருடைய தொடர்புடைய குடுங்பங்கள், நண்பர்கள் என்று இரு சமூகத்தின் உறவுப்பாலம் அல்லவா. திருமணம் என்பது நம் சமூகப் பாரம்பரியத்தில் ஆண்டாண்டு காலமாக அறுபடாத தொடர்சங்கிலி.

வரலாறாக திருமணத்தை வரையறுப்பது கொஞ்சம் கடினம். காடுகளில் வசித்து வந்த மனிதன், நாடுகளில் விவசாயம் செய்து, நிலங்களை உழுது நாகரிகமாக தொடங்கிய காலத்தில் தத்தம் உடைமைகளை பாதுகாக்கவும், முறையான சமூக அமைப்பின் அங்கமாக விளங்கவும் உருவாக்கிய ஏற்பாடே திருமணம்.

பண்டைய இந்தியாவில் எட்டு விதமான திருமண பந்தங்கள் இருந்ததாக வரலாறு சொல்கிறது. பிரம்ம விவாகம், தெய்வ விவாகம், அர்ஷ விவாகம், பிரஜபாத்யா விவாகம், காந்தர்வ விவாகம், அசுர விவாகம், ராட்சஸ விவாகம், பைசாஸ விவாகம். இதில் கடைசி நான்கு திருமணங்கள்தான் சாமானிய மக்களின் திருமணங்கள். முந்தைய நான்கும் வேற லெவல்.

காலப்போக்கில் மக்கள் ஏற்றுக்கொண்ட சமூக சீர்த்திருத்தங்களின் காரணமாக அந்த பழம்பெரும் முறைகள் பல்வேறு காரணங்களால் இன்று நடைமுறையில் இல்லை. இன்று நாட்டில் பெரும்பாலான திருமணங்கள் arranged marriages என்று சொல்லப்படும் வகையிலானவை. இத்திருமணங்களுக்கு சமூகம், வர்க்கம், குடும்பம் மூன்றும் முதன்மையான காரணிகள். யாருக்கு யார் ஜோடி என்பதை குடும்பப் பெரியவர்கள் நிச்சயிக்கிறார்கள். இப்போது தனக்கு பிடித்த பெண், பையன் என்று மணமக்களே தங்கள் துணையை விரும்பி, பெற்றோரிடம் சொல்லி திருமணம் செய்துக் கொள்ளுமளவுக்கு மாற்றம் உருவாகி வருகிறது. அடுத்தபடியாக நாகரிக வளர்ச்சியின் காரணமாக சாதி, மதம் பாராத காதல் திருமணங்களும் பெருமளவில் நடந்து வருகின்றன. காதலை பெற்றோர் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் வளர்ந்து வருவது குறிப்பிடத்தக்க மாற்றம். பிரெஞ்சுப் பொண்ணுக்கு மதுரைப் பையன் மாப்பிள்ளை என்கிற அளவில் சர்வதேச அளவில் ஜோடி தேட ஆரம்பித்திருக்கிறோம்.

கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் தொழிற்புரட்சி, மேற்கத்திய நாகரிக பரவல், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி என்று பல்வேறு சூழல்கள் இந்திய சமூகத்தை தாக்கப்படுத்தி இருந்தாலும், திருமணம் மட்டுமே அதன் அடிப்படை நோக்கம் மற்றும் வழிமுறைகளில் இருந்து பெரிய அளவில் தடம் புரளவில்லை. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு பால்யவிவாகங்கள் நடந்ததுண்டு. இந்து திருமணச் சட்டம் 1955ன் படி பெண்ணுக்கு 18 வயதும், ஆணுக்கு 21 வயதும் திருமண வயதாக கட்டாயம் ஆக்கப்பட்டிருக்கிறது. ஒரு சட்டம், மக்களிடையே பெரிய மனமாற்றத்தையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி இருக்கிறது என்றால், அது திருமண விஷயத்தில்தான்.

பொதுவாக நம்மூரில் நாள் நட்சத்திரம் பார்த்து திருமணத்துக்கு தேதி குறிக்கிறார்கள். திருமணத்துக்கு முன்பு இரு குடும்பமும், புதிய உறவின் அச்சாரமாக தாம்பூலம் மாற்றிக் கொள்கிறார்கள். திருமணம் அன்று மணமகனும், மணமகளும் சுற்றத்தையும், நட்பையும் சாட்சியாக வைத்து ஒரு கோயிலிலோ அல்லது கல்யாண மண்டபத்திலோ அமர்கிறார்கள். வேதமந்திரங்களை அந்தணர் ஓதுகிறார். பின்னணி இசையாக மங்கள வாத்தியம். திருமணத்துக்கு வந்தவர்களுக்கு விருந்தோம்பல். நிகழ்வின் உச்சமாக மூன்று முடிச்சுப் போட்டு மணமகளுக்கு மணமகன் தாலி கட்டுகிறார். மணமகளின் கையை மணமகன் பிடித்து இருவரும் அக்னியை சுற்றி தங்கள் திருமணத்தை உறுதி செய்கிறார்கள். பின்னர் இருவரும் ஒருவருக்கு ஒருவர் சகஜமாக வேண்டுமென்று சில விளையாட்டுகளை சுற்றம் மகிழ விளியாடுகிறார்கள். திருமணத்துக்கு வந்த விருந்தினர்கள், மணமக்களுக்கு பரிசளிக்கிறார்கள். பல நூறு ஆண்டுகளாக பொதுவான திருமண வழிமுறை இதுதான். சடங்குகள் மட்டும் சமூகத்துக்கு சமூகம், மதத்துக்கு மதம் சற்றே மாறுபடலாம்.

இந்தியாவில் இந்து மதம் தவிர்த்து இஸ்லாமியர், கிறிஸ்துவர், சிந்தி, பார்ஸி, சீக்கியர், பவுத்தம், ஜெயின் மற்றும் யூதர்கள் என்று பல்வேறு மதத்தினர், அவரவர் மத சம்பிரதாயப்படி திருமணங்களை செய்கிறார்கள். தாலிக்கு பதில் மோதிரம், மந்திரத்துக்கு பதில் புனிதநூல் ஓதுதல் மாதிரி வேறுபாடுகளை தவிர்த்துப் பார்த்தால், ‘திருமணம்’ என்பதன் நோக்கம் நம் நாட்டில் மட்டுமல்ல, உலகளாவிய அடிப்படையிலேயே ஒன்றுதான்.

தரகரிடம் தேடச்சொல்லி, தெரிந்தவர்கள் அறிந்தவர்கள் என்று நாலு இடத்தில் சொல்லிவைத்து பெண் தேடிய காலம் மட்டும் மாறியிருக்கிறது. இன்று இண்டர்நெட்டிலேயே பெண் தேடுகிறார்கள். வீடியோ சாட்டிங்கில் பெண் பார்க்கிறார்கள். மற்ற விஷயங்களை போனில் பேசிக்கொள்கிறார்கள். பஜ்ஜி, சொஜ்ஜி செலவு மிச்சம் என்றாலும், ஏகத்துக்கும் பட்ஜெட்டை எகிறவைக்கும் வேறு புதிய செலவினங்கள் உருவாகியிருக்கின்றன. பையனின், பெண்ணின் தகுதியாக படிப்பு, பாட்டு பாடுவது, நாட்டியம் ஆடுவது எல்லாம் காலாவதியாகி விட்டது. மருத்துவத்தகுதி சான்றிதழ் வாங்கி பொருத்தம் பார்க்குமளவுக்கு விழிப்புணர்வு பெறத் தொடங்கியிருக்கிறோம்.

அதெல்லாம் தனி.

ஆனால்-

கஷ்டப்பட்டு உழைத்து வாழ்நாளெல்லாம் சேமிக்கும் அத்தனை பணத்தையும் தன் மகளின் கல்யாணத்துக்குதான் என்று சொல்லும் தகப்பன்மார்கள் எத்தனை பேரை பார்த்திருக்கிறோம். நல்லபடியாக தன்னுடைய மகள் புகுந்தவீட்டில் செட்டில் ஆகவேண்டுமே என்கிற தாயின் அடிவயிற்று நெருப்பு பரிதவிப்பு நமக்கும் தெரியும்தானே? கல்யாண வீடுகளில் பாருங்கள். வியர்வை வழிய அங்கும் இங்குமாக டென்ஷனாக அல்லாடிக் கொண்டிருப்பவன் பெண்ணின் சகோதரனாகதான் இருப்பான்.

பஜ்ஜி, சொஜ்ஜி சாப்பிட்டு பெண் பார்ப்பது. பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டுக்கு வந்து கையை நனைத்து உறவை உறுதி செய்வது. பரிசம் போட்டு நிச்சயத்தாம்பூலம். கல்யாணத்துக்கு மண்டபம் பார்ப்பது. பெண்ணுக்கு முகூர்த்தப்புடவை எடுப்பது. விருந்துக்கு சுவையாக சமைக்கக்கூடிய சமையல்காரரை தேடுவது. திருமணம் செய்விக்கும் புரோகிதரை புக் செய்வது. ரிசப்ஷனுக்கு நல்ல லைட் மியூசிக் ட்ரூப்பை கண்டு பிடிப்பது. திருமண அழைப்பிதழுக்கு நல்ல டிசைன் செலக்ட் செய்வது. மேடைக்கு பூ அலங்காரம். விருந்தினர்கள் மனம் கோணாமல் உபசரிப்பு. இன்னும் எராளமான விஷயங்கள். இவை எல்லாவற்றுக்கும் லட்சக்கணக்கில் பணம்... யோசித்துக் கொண்டே போனால் ‘கல்யாணம் பண்ணிப் பார்’ என்று சும்மாவா சொன்னார்கள் நம் பெரியவர்கள்?

நம் நண்பர் ஒருவர் டீனேஜில் இருந்தபோது அவருடைய ஒண்ணுவிட்ட அண்ணனுக்கு திருமணம் நடந்தது. அந்தத் திருமணத்தில் ரெட்டை ஜடை, பாவாடைச் சட்டையோடு ஒரு பத்து வயது பெண் சுற்றிக் கொண்டிருந்தாள். மணமகளின் ஒண்ணுவிட்ட தங்கச்சியாம். பத்து ஆண்டுகளுக்கு பிறகு லைஃபில் செட்டில் ஆகிவிட்ட நம் நண்பருக்கு பெண் பார்த்தார்கள். அந்த ரெட்டை ஜடை, பாவாடைச் சட்டையே புடவை கட்டி வந்து அமர்கிறார். இருவரும் இப்போது தம்பதி சமேதரராக அந்த ஒண்ணுவிட்ட அண்ணனுக்கும், ஒண்ணுவிட்ட அக்காவுக்கும் நடந்த கல்யாண வீடியோவை அவ்வப்போது போட்டுப் பார்த்து சந்தோஷமாக ஒருவருக்கு ஒருவர் கிண்டல் அடித்துக் கொள்கிறார்கள். திருமணம், இதுபோன்ற மலரும் நினைவுகளோடு சம்பந்தப்பட்டது.

“நம்ம வாசுதேவன் கல்யாணத்துலே போட்டாங்க பாருடா சாப்பாடு. அதுதான் சாப்பாடு” என்பது மாதிரி டயலாக்குகளை அடிக்கடி கேட்கலாம். வாசுதேவனுக்கு கல்யாணம் ஆகி இருபத்தைந்து ஆண்டுகள் கழித்தும்கூட.

“நம்ம வரலட்சுமி புள்ளை கல்யாணத்துலே குறுக்கும், நெடுக்குமா நெட்டையா சிகப்பா ஒட்டறைக்குச்சி மாதிரி நடந்துக்கிட்டிருந்தாளே ஒரு பொண்ணு. நம்ம விஜயாவோட சின்ன மாமனார் பெண்ணாம். நம்ம சரவணனுக்கு கேட்டுப் பார்க்கலாமா? இவனும் ஒல்லியா, அமிதாப் பச்சன் உயரத்துலேதானே இருக்கான்?” ஒரு கல்யாணத்தால் இன்னொரு கல்யாணம் நிச்சயிக்கப்படுகிறது.

இம்மாதிரி sidelight விஷயங்கள் ஏராளம்.

இவை அத்தனையையும்தான் ‘தாம்பூலம் முதல் திருமணம் வரை’ நூல்.

அலுவல் தொடர்பான சந்திப்பு ஒன்றில்தான் திடீரென திருமணம் பற்றி பேச்சு வந்தது.

எங்கள் நிர்வாக இயக்குநர் ஆர்.எம்.ஆர் அவர்கள், அவர் பார்த்த பல்வேறு சமூகத் திருமணங்களை பற்றி சுவாரஸ்யமாக சொல்லிக் கொண்டிருந்தார். சடங்குகள், சம்பிரதாயம் பற்றியெல்லாம் பேசிக்கொண்டிருந்தபோது, திடீரென அவரேதான் சொன்னார்.

“இதை ஒரு தொடராவே செய்யலாம். ஏன்னா, இப்போ பல சடங்குகள் அர்த்தம் இழந்துப் போச்சி. அர்த்தமுள்ள சடங்குகளுக்கு அர்த்தம் என்னன்னு இப்போதைய தலைமுறைக்கு தெரியலை”

அந்த காலக்கட்டத்தில் திருமணம் குறித்த பல்வேறு தரப்பிலான கருத்துகள் சமூகவலைத் தளங்களில் அலசப்பட்டுக் கொண்டிருந்தது. திருமணம் என்கிற முறையே தவறு என்பது மாதிரியான விவாதங்களும் நடந்துக் கொண்டிருந்தன. அந்த விவாதத்தில் நாம் கலந்துக் கொள்ள வேண்டாம்.

ஆனால்-

‘திருமணம்’ என்கிற நிகழ்வுக்கும், அதன் தொடர்பிலான சடங்குகளுக்கும் நம்முடைய மரபில் அர்த்தத்தை தேடுவோம் என்று முடிவெடுத்தோம்.

அப்படிதான் ‘தாம்பூலம் முதல் திருமணம் வரை’ தொடரை ‘தினகரன் வசந்தம்’ இணைப்பிதழுக்கு எழுதத் தொடங்கினேன். தொடரை ஆரம்பிப்பதற்கு முன்பு ஏகத்துக்கும் உதறல் இருந்தது. ஏதேனும் தவறுதலாக எழுதிவிட்டால் அந்தந்த சமூகத்து மக்களிடம் சமாதானம் சொல்ல வேண்டுமே என்கிற தயக்கமும் இருந்தது.

எனினும், அறிவிப்பு வெளியிட்ட பிறகு தமிழ் சமூகத்துப் பெரியவர்களே என்னை வழிநடத்தத் தொடங்கினார்கள். தேவைப்பட்ட குறிப்புகளையும், நூல்களையும் அவர்களே அனுப்பி வைத்தார்கள். எப்போதும் சந்தேகம் கேட்டாலும், தெளிவான விளக்கங்களை தர அவர்கள் யாரும் தயங்கியதே இல்லை. ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக பெயர் குறிப்பிட்டு நன்றி சொல்ல ஆசைதான். எனினும், இந்த பெயர்ப்பட்டியலே தனிநூலாக போய்விடக்கூடிய அளவுக்கு நீளமான பட்டியல் என்பதால் தவிர்க்கிறேன். நூலில் குற்றம் குறை ஏதேனும் இருந்தால் அது எனது. சொல்லப்பட்டிருக்கும் நிறைவான விஷயங்கள் அத்தனைக்கும் நம் சமூகப் பெரியோரே காரணம்.

இப்போது நூலாக வெளியாகியிருக்கும் அந்த தொடரில் சில சமூகங்கள் தவிர்க்கப்பட்டிருக்கலாம். ஏனெனில், அதே சடங்குகள் வேறொரு சமூகத் திருமணங்களில் கடைப்பிடிக்கப்படக் கூடியதாக இருக்கும். சமூகத்தின் பெயரை மற்றும் மாற்றி ஏற்கனவே சொன்னதையே திரும்பச் சொல்லுவதை தவிர்க்கவே அந்த விடுபடலே தவிர வேறெந்த நோக்கமுமில்லை. அதுபோலவே, தனித்துவமான சடங்குகள் இல்லாமலேயே மிகவும் எளிமையான முறையில் திருமண பந்தத்தை உறுதி செய்யக்கூடிய சமூகங்களும் உண்டு. ஒட்டுமொத்தமாக இந்த நூலை வாசிக்கையில், திருமணம் என்கிற ஆயிரங்காலத்து பயிர் எப்படி வளர்க்கப்படுகிறது, அதற்கு உரமாக எதுவெல்லாம் அமைகிறது என்கிற பறவைப்பார்வை உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும்.

என்னுடைய ஆரம்பக்கட்ட உதறலை போக்கியவர் ‘குங்குமம்’ வார இதழின் ஆசிரியர் கே.என்.சிவராமன். தொடரை ஆரம்பிக்கும்போது அவர்தான் ‘தினகரன் வசந்தம்’ இணைப்பிதழின் ஆசிரியராக இருந்தார். ‘ஏதேனும் சந்தேகம் இருந்தாலோ, சர்ச்சை வரும் என்று தெரிந்தாலோ, அதை எழுதவே எழுதாதே’ என்று அறிவுறுத்தியிருந்தார். நல்லபடியாக எவ்வித சர்ச்சைக்கும் இடமின்றி இந்தத் தொடரை நிறைவு செய்ததற்கு அந்த அறிவுரையே காரணம்.

என்னுடைய பத்திரிகையுலக வாழ்வில் ‘தாம்பூலம் முதல் திருமணம் வரை’யை மறக்கவே முடியாது. இத்தொடர் தொடங்கும்போது ‘வசந்தம்’ இதழின் மூத்த துணையாசிரியராக இருந்தேன். தொடரின் இறுதி அத்தியாயத்தை எழுதும்போது அவ்விதழுக்கு ஆசிரியர் பொறுப்புக்கு பதவி உயர்த்தப்பட்டிருந்தேன். அவ்வகையில் இந்த ‘திருமணம்’, என் வாழ்வின் சகல சவுபாக்கியங்களையும் உறுதிச் செய்திருக்கிறது.

நூல் : தாம்பூலம் முதல் திருமணம் வரை
எழுதியவர் : யுவகிருஷ்ணா
விலை : ரூ.190
பக்கங்கள் : 255
வெளியீடு : சூரியன் பதிப்பகம்,
229, கச்சேரி ரோடு, மயிலாப்பூர், சென்னை-600004.
தொ.பே 044-2209191 Extn 2115. கைபேசி : 7299027361

20 நவம்பர், 2017

எழுத்துக்கும் பேச்சுக்கும் மேக்கப்!

* மனப்பாடம் செய்து பயின்ற ஃபார்முலா மொழியில் இருந்து நாம் விடுபட வேண்டும்.

* மக்களிடம் பேசுவதற்கு கற்றுக் கொள்ள வேண்டும். ஃபார்முலாவான இலக்கிய மொழியில் அல்ல. பேசக்கூடிய ஒவ்வொரு சொல்லும், கருத்தும் இலட்சக்கணக்கானோருக்கு புரியும் விதத்தில், அவர்களது சிந்தனையை கிளறும் விதத்தில் இருக்க வேண்டும்.

* மக்களுக்கு புரியக்கூடிய மொழியில் நமக்கு பேசத் தெரியாவிட்டால், நம்மை மக்கள் ஏற்றுக் கொள்வது இயலாத காரியம்.

* கூடியிருக்கும் கூட்டத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் பொத்தாம்பொதுவாக பேசுவதோ, தேவையற்ற சொற்களால் பக்கங்களை நிரப்புவதோ, சுய அபிப்ராயத்தை பொதுக்கருத்தாக நிலைநிறுத்துவதோ, வெற்றுரை ஆற்றுவதோ கூடாது.

* மக்களை மிரட்டும் பகட்டு நடையில் பேசுவதும், எழுதுவதும் உலகெங்கும் வியாபித்திருக்கும் ஒரு பொது நோய்.

* எந்தப் பிரச்சினையையும் முழுமையாக கவனி. அந்தப் பிரச்சினையில் சிறிய சந்தேகம் ஏதாவது இருந்தாலும், அதை எழுத வேண்டாம்/பேச வேண்டாம்.

* நீங்கள் சொல்வதற்கு எதுவுமே இல்லாதபோது எதையும் சொல்லித் தொலைக்காதீர்கள். எழுதுவதற்கும்/பேசுவதற்கும் உங்களை நீங்களே நிர்ப்பந்தித்துக் கொள்ளாதீர்கள்.

* எதை எழுதினாலும் அதை குறைந்தது இரு தடவை வாசியுங்கள். தேவையற்ற ஊளைச்சதையை குறையுங்கள். ‘இரு தடவை சிந்தி’ என்று கன்பூசியஸ் இதைதான் சொல்கிறார்.

* சுற்றி வளைக்காமல் சுருக்கமாக பேசி/எழுதித் தொலை.

* உங்களுக்கு மட்டுமே புரியக்கூடிய/பழகிய அடைமொழிச் சொற்களை பொதுவில் பேசும்போதும்/எழுதும்போதும் பயன்படுத்த வேண்டாம்.

* தேய்வழக்குகள் நம் பேச்சிலிருந்தும் / எழுத்திலிருந்தும் ஒழிய வேண்டும்.


-  மேற்கண்ட கருத்துகள் என்னுடையது கிடையாது. பிப்ரவரி 8, 1942ல் ஏனான் என்கிற இடத்தில் நடைபெற்ற ஊழியர் கூட்டம் ஒன்றில் மாவோ ஆற்றிய உரையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கருத்துகள். தகவல் தொடர்பு குறித்து 75 ஆண்டுகளுக்கு முன்பே மாவோவுக்கு எத்தகைய துல்லியமான தெளிவு இருந்தது என்று புரிகிறது. தமிழில் ஐந்து பக்கங்களுக்கு மொழிப்பெயர்க்கப்பட்டிருக்கும் இந்த கட்டுரையை, சோர்வு ஏற்படும்போதெல்லாம் எடுத்து வாசிப்பது என் வழக்கம்.

ஆனால்-

‘பகட்டு எழுத்து நடையினை எதிர்ப்போம்’ என்கிற தலைப்பில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் இந்த உரை, மேற்கண்ட மாவோவின் கருத்துகள் எதையுமே பொருட்படுத்தாத / எதை செய்யக்கூடாது என்று மாவோ வலியுறுத்துகிறாரோ, அந்நடையில் மொழிப்பெயர்க்கப்பட்டிருக்கிறது.

உதாரணத்துக்கு, “அன்னிய உருப்படிவங்கள் (sterio type) ஒழிக்கப்பட வேண்டும், வெற்று அரூபமான மனப்பாங்குகள் குறைவாக இருந்திட வேண்டும், வறட்டு வாதம் அகற்றப்பட வேண்டும்” என்கிற ரேஞ்சுக்கு அந்த கட்டுரை போகிறது.

‘எளிமையாக எழுது’ என்பதையே இவ்வளவு சிக்கலாக மொழிப்பெயர்த்திருக்கிறார்கள் என்றால், அறிவார்ந்த விஷயங்களை தமிழாக்கத்தில் எப்படி சின்னாபின்னப் படுத்தி இருப்பார்கள்?

தமிழில் மொழிப்பெயர்க்கப்பட்ட கட்டுரை ஒன்றையே, மீண்டும் தமிழில் மொழிப்பெயர்த்துதான் நாம் புரிந்துக்கொள்ள முடிகிறது. மற்ற மொழிகளில் எப்படியென்று தெரியவில்லை. தமிழன் எப்போதும் எழுத்துக்கும் / பேச்சுக்கும் டிசைன் டிசைனாக மேக்கப் போட்டுக்கொண்டேதான் திரிகிறான் :(

14 நவம்பர், 2017

ஆலையில்லா ஊருக்கு அறம்!

பொதுவாக தான் நடிக்கும் படங்களின் ஆடியோ மற்றும் பிரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு வருவதையே தவிர்க்கும் நயன்தாரா, முதன்முறையாக வானத்தில் இருந்து இறங்கி தியேட்டர் விசிட் அடித்திருக்கிறார். ரஜினி பாராட்டி விட்டார். ரஞ்சித், நயன்தாராவை தோழர் என்று நெக்குருகி அழைக்கிறார். வாசுகி பாஸ்கர் புகழ்ந்து தள்ளுகிறார். தோழர்கள் தோள் மேல் வைத்துக் கொண்டாடுகிறார்கள். தலித்துகள் பெருமிதப்படுகிறார்கள். தமிழின இணையப் போராளிகள் ஆஸ்கர் அவார்டையே தூக்கிக் கொடுத்து விட்டார்கள். பத்திரிகையாளர்கள் பிரிவ்யூ காட்சியிலேயே கதறி அழுதிருக்கிறார்கள்.

அப்படியாப்பட்ட ‘அறம்’ அப்படியெல்லாம் இல்லை என்பதே உண்மை.

கோபிநைனார் நல்ல வசனகர்த்தா என்று தெரிகிறது. முன்பு விஜயகாந்துக்கு நாடி நரம்பெல்லாம் துடிக்க லியாகத் அலிகான் என்றொருவர் வசனம் எழுதிக் கொண்டிருந்தார். அந்த பாணியில் நக்கல், நையாண்டியுடனான அரச எதிர்ப்பு வசனங்களை துடிப்பாக எழுதியிருக்கிறார்.

ஆனால்-

இயக்கம்?

கிட்டி, நயன்தாராவை விசாரிக்கும் காட்சியில் தொடங்கி, கிளைமேக்ஸ் வரை அத்தனை அமெச்சூர்த்தனம். ஒரு சீஃப் செக்ரட்டரி (அப்படிதான் நினைக்கிறேன். அவர்தானே கலெக்டரை விசாரிக்க முடியும்?) இவ்வளவு மொக்கையாக சீரியல் மாமனார் மாதிரியா கேள்விகளை கேட்பார்?

ப்ளாஷ்பேக்கில் விரியும் கதையில் நயன்தாரா நேரடி சாட்சியாக இருந்திருக்க வாய்ப்பில்லாத ராமச்சந்திரன் – சுனுலட்சுமி பாத்திரங்களின் பின்னணி சித்தரிப்பு இடம்பெறுவதே தர்க்கமில்லாதது. மாவட்ட ஆட்சியரான நயன்தாராவை பார்த்து கேட்கப்படும் கேள்விகளுக்கு, அவர் பார்த்ததையும், குறிப்பிட்ட சம்பவம் தொடர்பான பதில்களையும் சொல்லுவதுதானே சரியாக இருக்க முடியும்? கேட்டால் சினிமாவென்றால் அப்படிதான் என்பார்கள். அப்படியெனில் இது எப்படி உலகப்படம் ஆகும்?

படத்தின் மையம் என்பது ராமச்சந்திரனின் குழந்தை, ஆழ்துளைக் கிணறில் விழுவதும், குழந்தையை சக அதிகாரிகளின் ஒத்துழையாமை மற்றும் அரசியல் குறுக்கீட்டுத் தடைகளை தாண்டி கலெக்டர் மீட்பதும்தான்.

ஆனால்-

படத்தின் தொடக்கம் தண்ணீர்ப் பிரச்சினை என்பதாக தொடங்கி, ஏழ்மை உள்ளிட்ட தமிழ் சமூகத்தின் சர்வப் பிரச்சினைகளுக்கும் வசனங்களாலேயே தீர்வு கண்டுவிடலாம் என்கிற நோக்கத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. நல்ல கலெக்டர் நயன்தாராவுக்கு மதிவதனி என்கிற பெயரை வைத்ததின் மூலம் தொப்புள் கொடி உறவுகளின் உரிமைக்குரலுக்கும் வலு சேர்த்திருக்கிறார் இயக்குநர்.

ஊடகங்களை தோலுரிப்பதெல்லாம் சரிதான். அதற்காக படத்தின் இடைஇடையில் காட்டப்படும் ‘நியூஸ்-18’ விவாதம் மூலம் இயக்குநர் என்ன சொல்லவருகிறார். அதிலும் இளங்கோ கல்லாணை டிவி விவாதங்களில் பேசுவதையே சகித்துக் கொள்ள முடியாது. சினிமாவிலும் அவரை உளறவைத்து கொட்டாவி விடவைப்பதெல்லாம், ரசிகனை செய்யும் மகா டார்ச்சர் அல்லவா கோபி சார்? பெருமாள் மணியும் அவர் பாட்டுக்கும் வந்து ஆழ்துளைக்கிணறு பிரச்சினையை பேசியிருந்தால், இந்த டார்ச்சர் இன்னும் ‘முழுமை’ பெற்றிருக்கும்.

படத்தின் ஆகப்பெரிய அபத்தம் கிளைமேக்ஸ். 93 அடி கிணற்றில் விழுந்திருக்கும் குழந்தையை தூக்க, இன்னொரு குழந்தையை கயிறு கட்டி அனுப்புகிறார்கள். இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு நாளை இதுபோல ஓர் ஆழ்துளை துயர சம்பவம், கொட்டாம்பட்டியிலோ பெண்ணாத்தூரிலோ நடந்தால்.. அங்கிருக்கும் ஊர்மக்கள் இதே பாணியில் முயற்சி செய்து ஏதேனும் விபரீதம் நிகழ்ந்தால் அதற்கெல்லாம் யார் பொறுப்பு?

இதேபோல குழியில் விழுந்துவிடும் ஒரு குழந்தையை காப்பாற்றும் திரைப்படம் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பாக வந்திருக்கிறது. ஜெயராம் – ஊர்வசி தம்பதியினரின் மகள் ஷாம்லி விழுந்துவிடுவார். மலையாளப்படமான இது தமிழில்கூட ‘பூஞ்சிட்டு’ என்பது மாதிரி ஏதோ பெயரில் டப்பிங் செய்து வெளியானது. அந்த காலத்தில் எடுக்கப்பட்ட படத்துக்கே உறைபோடக்கூட ‘அறம்’ காணாது.

மாறாக, ‘அறம்’ படத்துக்கு இப்படி பாராட்டுகள் விளம்பரமாக குவிவதற்கு என்ன காரணம் இருக்க முடியும்?

இயக்குநர், தலித் சமூகத்தைச் சார்ந்தவர் என்கிற ஒருவரி தகவல் முக்கியமான காரணம். ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை கைதூக்கி விடுவோம் என்கிற சமூகநீதி எண்ணத்தால், இந்தப் படத்துக்கு விமர்சனம் நீக்கப்பட்ட பாராட்டுகள் குவியலாம். நல்ல விஷயம்தான்.

ஆனால் –

ஒடுக்கப்பட்ட ஒருவரின் திறமையான படைப்புக்கு அப்படிப்பட்ட அங்கீகாரங்கள் கிடைத்தால் சரி. ‘அட்டக்கத்தி’க்கு கிடைத்த கவனம் நியாயமானதே. மாறாக, மிக சுமாரான ஒரு படத்தை சூப்பர் என்று சொல்லுவதின் மூலம், சம்பந்தப்பட்டவர் தன்னுடைய நிஜமான திறமையை எடைபோடக்கூட முடியாமல் குருவி தலையில் பனங்காய் வைக்கும் முயற்சியாகவே இதை பார்க்கத் தோன்றுகிறது.

அடுத்து, தோழர்கள்.

இவர்களைப் பற்றி பேசி ஒன்றும் ஆகப்போவதில்லை. ‘கத்தி’யையே கம்யூனிஸப் படம் என்று கொண்டாடியவர்கள். நாலு கோமாளிகளை சேர்த்து மநகூ அமைத்து தமிழகத்தின் தலையெழுத்தையே மாற்றிவிடலாம் என்று கருதியவர்கள். இப்படி ஒப்புக்கு பெறாத விஷயங்களை பேசியாவது தாங்கள் உயிர்ப்போடு இருப்பதை நிரூபித்துக்கொள்ள வெறித்தனமாகதான் முயற்சிப்பார்கள்.

இப்போது தமிழில் படமெடுக்க நினைக்கும் படைப்பாளிகள் ஒவ்வொருவருக்கும் ‘பீப்லி லைவ்’தான் ஆதர்சப் படமாக இருக்கிறது. அதை தாண்டி ஒரு படத்தை எடுத்துவிட வேண்டுமென்று துடியாக துடிக்கிறார்கள். நாம் ஏன் ‘பீப்லி லைவ்’ எடுக்க வேண்டுமென்று தெரியவில்லை. நாம் எடுக்க வேண்டியது ‘பதினாறு வயதினிலே’க்கள்தான். அந்தப் படத்தின் சாதனையையே நாற்பது ஆண்டுகளாக இதுவரை உடைக்கவில்லை.

‘அறம்’ மாதிரியான சுவாரஸ்யமற்ற/தர்க்கமற்ற படங்களைதான் நாம் தேசிய/சர்வதேச அரங்கில் மற்ற மொழிகளுக்கு போட்டியாக முன்நிறுத்துகிறோம் என்றால், தமிழ் சினிமாவும் எடப்பாடி அரசு மாதிரி படைப்பு வறட்சியால் தடுமாறிக் கொண்டிருக்கிறது என்றே பொருள்.

எந்தவித கலைவிமர்சன நோக்குக்கும் இடம் கொடுக்காதவாறு ஏகோபித்த பாராட்டுகளை அள்ளியிருக்கும் ‘அறம்’ படத்துக்கு மாநில, மத்திய அரசுகளின் சில விருதுகள்கூட கிடைக்கலாம். ஆளும் தரப்பை மிக மென்மையாக யாருக்கும் வலிக்காமல் எதிர்த்து கையாண்ட ‘ஜோக்கர்’ படத்துக்கே விருது கொடுக்கவில்லையா? மிக மிக சுமாராக நடித்திருந்த நயன்தாராவுக்கு தேசிய விருது கிடைத்தால்கூட ஆச்சரியப்பட ஏதுமில்லை. படத்தின் இறுதியில் அவர் மக்களுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொள்வதாக சித்தரிக்கப்பட்டதைபோல, நிஜத்திலேயே அரசியலில் குதித்து ஆட்சியைப் பிடித்தாலும் யாரும் அதிர்ச்சியடையத் தேவையில்லை. ஏனெனில், இது தமிழ்நாடு.

சிறுபத்திரிகைகளில் திரைவிமர்சனம் எழுதுவது எப்படி?

முன்குறிப்பு : ‘வயது வந்தோருக்கு மட்டும்’ என்று சான்றிதழ் கையளிக்கப்படும் திரைப்படங்கள் பெரும்பாலும் வயதுக்கு வாராதோரையே கவரும் என்பது என் முன்முடிவு. வயதுக்கு வந்தோர் கண்ட காட்சிகளும், கொண்ட கோலங்களுமே ‘வயதுக்கு வந்தோருக்கு மட்டும்’ படங்களில் காட்சிப்படுத்தப் படுகின்றன. மாறாக காட்சியையோ, கோலத்தையோ காணாத வயதுக்கு வாராதோர்தான் வயதுக்கு வந்தோருக்கான படங்களை காண்பதற்கான மனப்பாங்கு கொண்டவர்களாக அமைந்திருக்கிறார்கள்.

‘துண்டு நிச்சயம் உண்டு’ என்கிற முன்முடிவோடே பால்யத்தை ஒட்டிவாழும் பார்வையாளர்கள் இம்மாதிரி படங்களுக்கு அரங்கம் முன்பாக குழுமுகிறார்கள். மீசைக்கு கீழே சில அங்குல மயிர் இல்லாவிட்டாலும், இருக்கையை நிரப்ப ஆள்வேண்டுமே என்கிற எண்ணத்தில் அவர்களும் திரையரங்கு பணியாளர்களால் அனுமதிக்கப்படுகிறார்கள்.
வயதுக்கு வந்தோருக்கு மட்டும் படங்கள், வயதுக்கு வாராதோருக்கு புரியக்கூடிய அளவிலான மேலோட்டமான பாணியில் எடுக்கப்பட்டாலும், முதிர்ச்சியான பார்வையாளர்களுக்கான திரட்சியான காட்சிகளோடு மேற்கத்தியப் பாணியை மேற்குத் தொடர்ச்சி மலை வாசனையோடு தருவது வாடிக்கை.

நிற்க.
அடிப்படையில் பாலியல் பசியை பேசினாலும், பருவப் பசிக்கு தீனி போட்டாலும் வயதுக்கு வந்தோருக்கான படங்கள் வயதுக்கு வந்தோருக்கு மட்டுமானது அல்ல என்பதே என் துணிபு.

சரி, விமர்சனத்துக்குள் நுழைவோம்.

* * *

நான்கு இளைஞர்களுக்கு மது அருந்தும் பழக்கம் உண்டு. அவர்களில் ஒருவனுக்கு திருமணம் ஆகிறது. அவனுடைய மனைவிக்கு மது அருந்தும் பழக்கம் கிடையாது. இதுவே அவர்கள் இருவருக்குமான ஆண் x பெண் முரணை ஏற்படுத்துகிறது. தன்னுடைய மனைவிக்கு மது அருந்தும் பழக்கமில்லை என்பது ஒருவகையில் அவனுக்கு மகிழ்வையும் தருகிறது. இரவு வேளைகளில் மது அருந்திவிட்டு, அதிகாலையில் சூரியன் உதிக்கும் வேளையில் இல்லம் திரும்புகிறான். இதனால் இரவில் அவன் செய்யவேண்டிய ‘வேலை’களை செய்ய முடியாமல் போகிறது.
புதியதாக மணம் ஆன ஒரு ஆணுக்கும், பெண்ணுக்குமான இந்த முரண் படம் நெடுக பாலியல் அங்கதச்சுவையோடு காட்சிப்படுத்தப் படுகிறது. இருவருக்குமான ஊடல் கூடலை நோக்கிச் செல்லாதவகையில் திரைக்கதை புதுமையான உத்தியில் இயக்குநர் சாஜனால் கையாளப்பட்டிருக்கிறது. இக்காட்சிகள் வயதுக்கு வாரா ரசிக மீன்குஞ்சுகளுக்கு தூண்டிலில் போடப்படும் மண்புழு.

* * *

காமப்பசி தீரா பேரிளம்பெண். எனினும், அவளது உடல் கட்டோடு குழலாட ஆடவென்று கச்சிதமாக இருக்கிறது. அவரது கணவன் அயல்நாட்டில் பொருள் ஈட்டுகிறான். இந்தப் பெண்ணுக்கு பக்கத்து இல்லத்தில் கட்டிளங்காளை ஒருவன் தினசரி உடற்பயிற்சி செய்வது வழக்கம். காம்பவுண்டு தாண்டி கட்டிளங்காளை. இங்கே காமப்பசி அடங்கா காரிகை.

அந்த பேரிளம்பெண்ணின் காமம் கலங்கரை விளக்க ஒளியாய் காளையை எட்டுகிறது. கண்கூசும் காமவொளியை தாங்கவொண்ணா துயரம் கொண்டவனாய், விளக்கை அணைக்க காம்பவுண்டு தாண்டி வருகிறான். அணைக்க வேண்டியது விளக்கையல்ல. விளக்கு ஏந்திய மங்கையை என்று உணர்கிறான்.
காமச்சுவையில் இருவரும் கரைபுரண்டு ஓடுகிறார்கள். சலிக்க சலிக்க காமம். விடிய விடிய ஹோமம். ஆணுக்கு பெண், பெண்ணுக்கு ஆண் என்கிற மரபான பாலியல் செயல்பாடுகளில் மனதை வசம் இழக்கிறார்கள் இருவரும்.

இந்த காட்சிகளில் ஒளிப்பதிவாளரின் நேர்த்தியான ஒளியமைப்பும், படத்தொகுப்பாளரின் தாராள மனசும் பார்வையாளர்களுக்கு ஓர் ஐரோப்பிய திரைப்படத்தை காணும் அற்புத அனுபவத்தை ஏற்படுத்துகின்றன.

* * *
போதையிலே சுகம் காண்கிறான் மாணவன் ஒருவன். ஆரம்பத்தில் விளையாட்டாக பீர் என்கிற மதுபானத்தை சுவைக்கிறான். அதிலிருந்து சற்று முன்னேறி பிராந்தி, ரம் என்று ஐரோப்பிய பானங்களை பதம் பார்க்கிறான்.

ஒருக்கட்டத்தில் பானங்கள் பானகம் மாதிரி இனிக்கிறது. அவனது தேவை, மேலும் போதை மேலும் மயக்கம். கஞ்சா புகைக்கிறான். அந்த போதையும் போதாமல் பாலியல் தொழிலாளிகளை நாடுகிறான். போதைகளில் சிறந்தது போகம் என்று உணர்கிறான்.

* * *

மூன்று வெவ்வேறு கிளைகளாக விரிந்த இந்த சிறுகதையாடல்களை கடைசியாக மருத்துவர் ஒருவரின் ஆலோசனைக் காட்சியை நயமாக சேர்த்து பெருங்கதையாடலாக மாற்றுகிறார் இயக்குநர்.
* * *

முதல் கதையில் திருப்தியடையாத புதுமனைவி, கணவனின் நண்பர்களில் ஒருவனோடு கூடுகிறாள். இந்த காட்சி பார்வையாளனுக்கு சுவாரஸ்யமான அனுபவத்தை தருவதோடு வயதுக்கு வராத பார்வையாளர்கள் எதிர்காலத்தில் வேலை செய்யாவிட்டால் என்னவாகும் என்கிற படிப்பினையை பெறக்கூடிய பாடத்தையும் வழங்குகிறது.

இரண்டாவது கதையில், பக்கத்துவீட்டு பாலகனோடு பந்து விளையாடும் பெண், அற்பமான பாலியல் தேவைக்காக அற்புதமான இல்வாழ்க்கையை இழப்பதாக கதையின் போக்கில் அமைக்கப்பட்டிருக்கிறது.

மூன்றாவது கதையில் போதைக்கு பாதை தேடிய மாணவன், பாதை தவறி பல்லாவரத்தில் பாக்கு போட்டுக் கொண்டு பராக்கு பார்த்துக் கொண்டிருப்பதாக முடிவு.

* * *
‘மது, மங்கை, மயக்கம்’ என்கிற இந்த திரைப்படம், தணிக்கை சான்றிதழ் சுட்டுவதை போல வயதுக்கு வந்தோருக்கான பாலியல் படம் மட்டுமல்ல. பாலியலை மிகைபுனைவாக கருதும் பாலகர்களுக்கான படமும்தான். பெண்களிடம் என்ன இருக்கிறது என்று அறிய ஆர்வமாக முற்படும் ஆண்களுக்கு எதை காட்ட வேண்டுமோ, அதை மட்டும் இப்படம் சுட்டிக் காட்டுகிறது. முதிர்ச்சியான பார்வையாளன் இம்மாதிரி படங்களில் அழகியல் பாடம் கற்பான். ஐரோப்பிய புது அலை திரைப்படங்கள், ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபதுகளில்உ லகம் முழுக்க செய்தது இதைதான். ஆட்டுமந்தை மூளை கொண்டவர்களோ ‘துண்டு’ போடசொல்லி அரங்கில் விசில் அடித்து கலாட்டா செய்வார்கள். யார் யாருக்கு எது வேண்டுமோ, அவரவருக்கு அது அது கிடைக்கும்.

பின்குறிப்பு : கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் வண்ணப் படங்கள், ‘மது மங்கை மயக்கம்’ படத்தில் இடம்பெற்றவை அல்ல. பல்வேறு பாலியல் பருவ திரைப்படங்களில் இருந்து வாசகர்களின் வசதிக்காக சேகரிக்கப்பட்டவை.

13 நவம்பர், 2017

நேருவின் ரோஜா

கணவரின் கைபிடித்து முதன்முதலாக புகுந்த வீட்டுக்குள் நுழைந்த கமலாவுக்கு படபடவென்று நெஞ்சு அடித்துக் கொண்டது. இதற்கு முன்பாக இவ்வளவு பெரிய வீட்டை பார்த்தது கூட இல்லை. நவநாகரிக தோற்றத்தில் இருந்த மாமியார் வீட்டாரை பார்த்ததுமே, எப்படித்தான் இங்கே காலத்துக்கும் வாழப்போகிறோமோ என்று அச்சப்பட்டார். பதினேழு வயது. முகத்தில் அப்பட்டமாக அச்சம். டெல்லியில் காஷ்மீரி பிராமண குடும்பத்தில் பிறந்தவர். ஆச்சாரமான நடுத்தரக் குடும்பம். நொடிக்கு நாலு முறை வெட்கப்படுவார். வாய்திறந்து ‘களுக்’கென்று பேசமாட்டார். ரொம்பவும் அமைதியான சுபாவம். பெரிய குடும்பத்தில் பெண் கேட்கிறார்கள் என்றதுமே எதையும் யோசிக்காமல் கன்னிகாதானம் செய்துவிட்டார் கமலாவின் அப்பா.

அலகாபாத்துக்கு வந்தபிறகுதான் தெரிந்தது, தான் வாழ்க்கைப்பட்டிருக்கும் குடும்பம் அரசக்குடும்பத்துக்கு நிகரான அந்தஸ்தோடு வாழ்கிறார்கள் என்று. ‘ஆனந்த பவன்’ என்கிற அந்த மாபெரும் மாளிகைக்குள் கவனமாக வலதுகாலை எடுத்து வைத்து நுழைந்தார் கமலா நேரு.

மேற்கத்திய நாகரிகத்தில் வாழும் கணவர். வீட்டில்கூட நுனிநாக்கு ஆங்கிலத்தில் பேசுவதை பார்க்க பார்க்க பற்றிக்கொண்டு வந்தது. கமலாவுக்கு ஒரு வார்த்தைகூட ஆங்கிலத்தில் பேசவராது. மனைவியையும், குடும்பத்தையும் விட நாடுதான் முக்கியம் நேருவுக்கு. எப்போது பார்த்தாலும் அரசியல், போராட்டம், பயணம். திருமணமாகி சில நாட்களிலேயே இமாலயத்துக்கு ‘டூர்’ போட்டார் நேரு. தேனிலவு அல்ல, தனியாகதான். பின்னர் தன்னுடைய வாழ்க்கை வரலாற்றில் இச்சம்பவத்தை எழுதும்போது, “அப்போது கிட்டத்தட்ட கமலாவை நான் மறந்தேவிட்டேன்” என்று வேடிக்கையாக குறிப்பிடுகிறார் நேரு.

“எங்கள் மணவாழ்வில் நாங்கள் இருவரும் சேர்ந்திருந்த நாட்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அரிதிலும் அரிதான அச்சந்திப்புகளுக்கு விலைமதிப்பே இல்லை” என்றும் நேரு சொல்கிறார்.

கமலாவின் ஒரே ஆறுதல் நாத்தனார் விஜயலஷ்மி பண்டிட்தான். நேருவுக்கு இணையான புத்திக்கூர்மையும், கல்வியறிவும் பெற்றிருந்தவர். தன்னுடைய அண்ணியை எப்படியாவது தேற்றிவிட வேண்டுமென்று விஜயலட்சுமி கடுமையாக முயற்சித்தார். அவரது உழைப்பு வீண் போகவில்லை. சீக்கிரமே மாமியார் வீட்டை புரிந்துக்கொண்டு, தன்னை புகுந்த வீட்டோடு இயல்பாக பொருத்திக்கொள்ள தொடங்கினார் கமலா. கல்யாணம் ஆன அடுத்த வருடமே நேருவை அச்சு அசலாக உரித்துக்கொண்டு அழகான மகள் பிறந்தாள். இந்திரா பிரியதர்ஷனி. இந்திராவுக்கு பிறகு பிறந்த மகன், ஒரு வாரத்திலேயே காலமாகிவிட்டான்.

கணவர் ஏன் எப்போதும் ஊர் சுற்றிக் கொண்டே இருக்கிறார் என்று வருத்தப்பட்டுக் கொண்டிருந்த கமலாவுக்கு சுதந்திரப் போராட்டம், காங்கிரஸ் குறித்து பாடமெடுத்தார் விஜயலஷ்மி. இதையடுத்து நாட்டுக்காக கணவரோடு இணைந்து போராடுவது தன்னுடைய கடமை என்கிற முடிவுக்கு அவர் வந்தார்.

1921ல் நடந்த ஒத்துழையாமை இயக்கம் மூலமாக பொதுவாழ்வுக்கு வந்தார். அலகாபாத் நகர் மகளிரை ஒன்றிணைத்தார். அயல்நாட்டு பொருட்களையும், மதுவகைகளையும் விற்றுவந்த கடைகளுக்கு முன்பாக மறியல் செய்தார். ஒத்துழையாமை இயக்கத்தின் அவசியத்தை விளக்கி மாபெரும் பொதுக்கூட்டம் ஒன்றினை நடத்த நேரு திட்டமிட்டிருந்த நிலையில், அவரை வெள்ளையர் கைது செய்தனர்.

கணவர் திட்டமிட்டிருந்த கூட்டத்தை வெற்றிகரமாக கமலா கூட்டினார். அக்கூட்டத்தில் ஆற்றுவதற்காக நேரு தயார் செய்திருந்த உரையை கமலா வாசித்தார். அந்நிய ஆட்சிக்கு எதிராக போர் முழக்கம் புரிந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பாக ஆங்கிலவாசனையே இல்லாமல் ஆனந்தபவனுக்குள் கமலாவா இதுவென்று நேரு குடும்பத்துக்கே ஆச்சரியம்.

நேருவுக்கு இணையான அச்சுறுத்தல் அவரது மனைவி கமலாவாலும் தங்களுக்கு நேரலாம் என்று வெள்ளையர்கள் யூகித்தனர். ஏனெனில் கமலாவின் பின்னால் அலகாபாத் பெண்கள் மட்டுமல்லாமல், நாடு முழுக்கவிருந்த பெண்களும் அணிதிரள தயார் ஆனார்கள். அடுத்தடுத்து இருமுறை கமலா கைது ஆனார். தொடர்ச்சியான போராட்டங்கள், சிறைவாசமென்று அவரது உடல் சீர்குலைந்தது. ஏற்கனவே காசநோய் பிரச்சினை இருந்தது. சிறப்பு சிகிச்சை அளிப்பதற்காக ஐரோப்பாவுக்கு மனைவியை அழைத்துச் சென்றார் நேரு. இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து என்று பல இடங்களுக்கும் மகள், மனைவியோடு சுற்றிக் கொண்டிருந்தார்.

இந்தியாவில் உப்பு சத்தியாக்கிரக போராட்டங்கள் உக்கிரம் பெற்ற நிலையில் குடும்பத்தோடு அப்போராட்டங்களில் கலந்துகொண்டார். நேரு, அவரது மனைவி, தங்கை என்று மொத்தமாக குடும்பத்தோடு சிறைவைக்கப் பட்டார்கள். சிறையில் மீண்டும் கமலாவின் உடல்நிலை படுமோசமானது. ஐரோப்பாவில் அவருக்கு சிகிச்சை தேவைப்பட்ட நிலையில் வெள்ளையர் அரசு கருணை அடிப்படையில் அவர்களை விடுதலை செய்தது.

சுவிட்சர்லாந்தில் கமலாவுக்கு சிகிச்சை தொடர்ந்தது. அவர் படுத்த படுக்கையானார். இந்தியாவில் நேருவின் சுதந்திரப் போராட்டம், சுவிட்சர்லாந்தில் கமலாநேரு உயிருக்குப் போராட்டமென்று குடும்பம் தத்தளித்தது.

இந்த அவலம் வெகுவிரைவிலேயே முடிவுக்கு வந்தது. கமலா நேரு 1936ல் தன்னுடைய 37வது வயதில் சுவிட்சர்லாந்தில் காலமானார். மனைவியின் நினைவாக தன்னுடைய உடையில், கமலாவுக்கு பிடித்த சிகப்பு ரோஜாவை செருகிக்கொள்ளத் தொடங்கினார் நேரு. இந்தப் பழக்கம் 1964ல் அவர் மரணிக்கும் வரை தொடர்ந்தது.

3 நவம்பர், 2017

தோகை விரி!

“இயற்கையை பழிக்காதேடா பாவி..” அப்பா அடிக்கடி சொல்வார்.

அடிவானம் கறுக்கும்போதே எங்களுக்கெல்லாம் அடிவயிற்றில் அச்சம் எழும். தூறல் விழ ஆரம்பித்தாலே ‘எழவெடுத்த மழை’ என்று இயல்பாக எங்கள் உதடுகள் உச்சரிக்கும். அப்பாவுக்கு கண்மூடித்தனமாக கோபம் வரும்.

நாங்கள் மழையை வசைபாடும்போதெல்லாம், அவர்தான் மழைக்கு வக்காலத்து வாங்குவார்.

“பழிக்காம.. இந்த எழவெடுத்த மழையை பாராட்டவா சொல்றீங்க.. ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி இதே இயற்கைதான் நம்மை மொத்தமா குடும்பத்தோட பலிவாங்கப் பாத்துச்சி” என்பேன்.

அப்பா ஏற்றுக்கொள்ள மாட்டார்.

அந்தந்த பருவத்தில் வெயிலும், மழையில் இயற்கையின் இயல்பு. அதனால் மனிதர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்றால், அதற்கு மனிதப்பிழைதான் காரணம் என்பது அவருடைய ஆணித்தரமான வாதம்.

அவர் சொல்வது அறிவியல்ரீதியாக சரிதான். நான் கற்ற கல்வி அவருடைய தர்க்கத்தை ஏற்றுக் கொள்கிறது.

ஆனால்-

கருமேகம் சூழ்ந்து வானம் இருட்ட ஆரம்பிக்கும்போதெல்லாம் என் வயிற்றுக்குள் சடுகுடு நடக்கிறது.

ஆமாம் சார்.

நான் வரதராஜபுரத்துக்காரன். எனக்கு அப்படிதான் இருக்கும்.

மழைத்தூறல் விழுந்ததுமே மகிழ்ச்சியில் பெண் மயில் தோகை விரிக்கும் என்பார்கள். எங்கள் வரதராஜபுரத்துக்காரர்களுக்கு ‘மழை’ என்கிற சொல் காதில் விழுந்தாலே முகம் பேயறைந்துவிடும்.

அப்பா மட்டும் விதிவிலக்கு. அவரைப் பற்றி அப்புறம் பார்ப்போம்.

மழையை யாராவது வெறுக்க முடியுமா என்று கேட்டீர்களேயானால், நீங்கள் புண்ணியவான். மழையை ரசிக்கும் மனசை உங்களுக்கு பரம்பொருள் அருளியிருக்கிறது.

மன்னித்துக் கொள்ளுங்கள்.

தமிழ்நாட்டிலேயே மழையை அதிகம் வெறுக்கும் மனிதர்களாக வரதராஜபுரத்துக்காரர்கள் சமீபத்தில் மாறிப்போனோம்.

ஏன் என்பதற்கு ஒரு சிறிய நினைவூட்டல்.

ஆண்டு 2015. தேடி டிசம்பர் ஒன்று. உங்களில் யாருக்காவது நினைவிருக்கிறதா?

ஒருவேளை அந்த தேதியில் நீங்கள் சென்னையில் இருந்திருந்தால், சாகும்வரை அந்நாளை மறந்திருக்க மாட்டீர்கள். நாங்களெல்லாம் அன்றைய ஊழித்தாண்டவத்தை நினைத்து நாள்தோறும் இன்றும் நடுநடுங்கிக் கொண்டிருக்கிறோம்.

பரவாயில்லை.

அந்த ஆண்டு நவம்பர் மாதமே வானத்தை யாரோ திட்டமிட்டு வாள் கொண்டு கிழித்திருப்பார்களோ என்று சந்தேகம் கொள்ளுமளவுக்கு வரலாறு காணாத மாமழை பொழிந்தது. மாலை ஆனாலே மழைதான். ஒட்டுமொத்த சென்னை, காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஆறு, ஏரி, குளம், வாய்க்கால், குழியெல்லாம் தளும்பத் தளும்ப தண்ணீர்.

குடிக்கும் தண்ணீரைகூட காசு வாங்கி குடிக்கும் கூட்டம்தானே? அந்த மழையை சிகப்புக் கம்பளம் விரித்து வரவேற்றோம். அந்த ஆண்டு தீபாவளியை அவ்வளவு சிறப்பாக கொண்டாடினோம்.

மழை, செகண்ட் இன்னிங்ஸ் ஆடுமென்று யாருக்கு தெரியும்? டிசம்பர் முதல் நாளிலேயே பேயாட்டம் ஆடியது. போதுமான முன்னறிவிப்பு இல்லாமல் ஆட்சியாளர்கள் வேறு காஞ்சிபுரம் மாவட்டத்திலேயே பெரிய ஏரியான செம்பரம்பாக்கத்தை வேறு திறந்து விட்டார்கள். சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற வட்டாரங்களில் பிரளயமே நேர்ந்துவிட்டது.

ஒட்டுமொத்த ஊரும் நீரில் மிதந்தது. ஆடு மாடுகளோடு மனிதர்களும் அடையாற்றில் அடித்துக்கொண்டு போனார்கள். ஒரு வாரத்துக்கு மின்சாரம் இல்லை. லட்சக்கணக்கான குடும்பங்களின் அன்றாட அலுவல்கள் மொத்தமாக முடங்கி, அத்தனை பேரும் வீட்டுக்குள் அடைந்துக் கிடந்தார்கள். பாடுபட்ட சேர்த்த அத்தனையும் வெள்ளத்தில் அடித்துக் கொண்டுச் செல்வதை கண்டு மனம் நொந்தார்கள். வீட்டின் தரைத்தளம் முழுக்க நீரால் நிரம்ப, மொட்டை மாடிக்கு போய் மழையில் நனைந்தவாறே உயிரைக் காப்பாற்றிக் கொண்டார்கள்.

தன்னார்வலர்களின் தொண்டு உள்ளத்தால்தான் மீண்டது சென்னை. அரசிடம் நியாயம் கேட்ட மக்களுக்கு, “நூற்றாண்டு கண்டிராத மழை. நாங்கள் என்ன செய்ய முடியும்?” என்று பதில் சொன்னார்கள் ஆட்சியாளர்கள்.

எல்லா நிகழ்வுகளையும் நீங்களும் டிவியில் பார்த்திருப்பீர்கள். செய்தித்தாள்களில் வாசித்திருப்பீர்கள். இரண்டு மாடி கட்டிடங்கள் வரை மூழ்கிய நிலையில், மிதக்கும் நகரமான வெனிஸை போன்ற ஓர் ஊரை அப்போது அடிக்கடி டிவியில் காட்டிக்கொண்டே இருந்தார்கள். நினைவிருக்கிறதா?

மக்கள், குடும்பம் குடும்பமாக படகுகளில் அகதிகளாக வெளியேறிக் கொண்டே இருந்தார்களே. ஹெலிகாஃப்டர் வந்துதான் நூற்றுக்கணக்கான மக்களின் உயிரை காப்பாற்ற முடிந்ததே. தன்னார்வலர்களும், மீட்புப் படையினரும் பணிபுரிய மிகவும் சிரமப்பட்டார்களே. அந்த ஊர்தான் வரதராஜபுரம். நான் வசிக்கும் பகுதி.

தாம்பரத்திலிருந்து ஏழு கிலோ மீட்டர் தூரம்தான். இயற்கை வனப்பு சூழ்ந்த பகுதி. கிணறு வெட்ட வேண்டாம். பள்ளம் தோண்டினாலே போதும். பத்தடியில் இளநீர் சுவையில் தெளிவான குடிநீர். சென்னை, செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்புதூர் என்று முக்கிய நகரங்களுக்கு மையத்தில் அமைந்திருக்கும் அழகான ஊர். பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாக இங்கே சல்லிசான விலைக்கு இரண்டு கிரவுண்டு நிலம் வாங்கிப் போட்டிருந்தார் அப்பா.

அண்ணனும், நானும் வங்கியில் வீட்டுக்கடன் வாங்கி ஏழு ஆண்டுகளுக்கு முன்புதான் வீடு கட்டினோம். பங்களா மாதிரி பெரிய வசதியான வீடு. அப்பாவுக்கு மழையை பிடிக்கும் என்பதால், வீட்டுக்குள்ளேயே மழை பெய்வதற்கு ஏதுவாக பழைய வீடுகள் பாணியில் வீட்டுக்கு நடுவே ஓர் அழகான முற்றம். வீட்டுக்கும் முன்பும் பின்புமாக பெரிய தோட்டம். நிறைய மரங்கள். அக்கம் பக்கம், சொந்தம் பந்தம், உற்றார் உறவினர் அத்தனை பேரும் மூக்குமேல் விரல்வைத்து ஆச்சரியப்படுமளவுக்கு அத்தனை அழகான வீடு. கூட்டுக் குடும்பமாய் அவ்வளவு சந்தோஷமாய் வாழ்ந்து வந்தோம்.

நாங்கள் கட்டியிருக்கும் வீடு கடல் மட்டத்துக்கு கீழே இருக்கிறது என்கிற புவியியல் உண்மையெல்லாம் அப்போது தெரியாது. ஒரு காலத்தில் இங்கே பிரும்மாண்டமான ஏரி இருந்தது. அந்த ஏரியின் நீர்ப்பாசனம் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களுக்கு உதவியது என்பதெல்லாம் ஐம்பது, அறுபது ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு. அதையெல்லாம் யாராவது எடுத்துச் சொல்லியிருந்தாலும்கூட, வீடு கட்டும்போது எங்கள் தலையில் ஏறியிருக்காதுதான்.

2015ல் பெய்த மழைதான் இதையெல்லாம் நினைவுறுத்தியது.

அந்த டிசம்பர் ஒன்று நாள்ளிரவில் எங்கள் வீடே ஆற்றுக்கு மத்தியில் கட்டப்பட்டதை போன்று ஆனது. அழையா விருந்தாளியாக அடையாறு எங்கள் வரவேற்பறைக்குள் நுழைந்தது. குழந்தை குட்டிகளோடு மொட்டைமாடியில் குளிரில் விரைத்து ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டு ஆறுதல்படுத்தகூட தெம்பில்லாமல் அச்சத்தோடு இருந்தோம். பசி மயக்கம் வேறு. யாராவது காப்பாற்ற வருவார்களா, உயிர் பிழைப்போமா என்கிற அச்சத்துடன் கழிந்த அந்த முழு இரவை எப்படிதான் அவ்வளவு சுலபமாக மறக்க முடியும்?

உடுத்திய உடையை தவிர வேறொன்றும் எங்கள் கைவசமில்லை. ஒரே இரவில் எல்லாம் இருந்தும் ஏதுமற்றவர்களாகிப் போனோம். குழந்தைகள், பெண்களோடு ஒரு வார காலம் அகதிகளாக தாம்பரத்தில் ஒரு கல்யாண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டோம். சாப்பாட்டுக்கு வரிசையில் நின்று தட்டேந்தினோம். அப்போது என் தம்பி மனைவி பச்சை உடம்புக்காரி. குழந்தை பிறந்து பதினைந்து நாட்கள்தான் ஆகியிருக்கும். அப்போது நாங்கள் அடைந்த மன உளைச்சலை இப்போது வார்த்தைகளில் முழுமையாக விவரிக்க முடியுமா என்பதே சந்தேகம்தான்.

இப்போது சொல்லுங்கள்.

மழை பெய்தால், நாங்கள் மயில் மாதிரி தோகை விரித்து மகிழவா முடியும்?

ஆனால்-

அப்பா அப்படியேதான் இருக்கிறார்.

சொல்லப்போனால், மயிலைவிட மகிழ்ச்சி அவருக்குதான்.

என் வாழ்நாளில் அப்பா, மழைக்காக எங்கும் ஒதுங்கியதில்லை. குடைபிடித்து நடந்ததில்லை. ரெயின்கோட் அணிந்ததில்லை.

“மழைன்னா நனையனும். எங்க ஊருலே அப்படிதான். ஆடு, மாடெல்லாம் குடை பிடிச்சி பார்த்திருக்கியா? அதென்னவோ தெரியலை. இந்த மெட்ராசுலேதான் அவனவன் மழையிலே நனையுறதுன்னாலே அப்படி அலறுறான். நனைஞ்சா காய்ச்சல் வரும்னு சொல்றான். தண்ணீதான் உலகத்தோட ஜீவன். அதுலே நனைஞ்சு காய்ச்சல் வருதுன்னா, நீ உன் உடம்பை பார்த்துக்கற லட்சணம் அப்படி” ஒவ்வொரு மழையின் போதும் இதுமாதிரி ஒவ்வொரு வியாக்கியானம் பேசுவார்.

அப்பாவுக்கு தர்மபுரி பக்கமாக மழையே பார்க்காத ஏதோ ஒரு வறண்ட ஊராம். அவருக்கு பத்து வயது இருக்கும்போது மிகப்பெரிய பஞ்சம் வந்ததாம். சுற்றுவட்டார மொத்தப் பகுதியுமே பாலைவனமாகி, பஞ்சம் பிழைக்க குடும்பம் குடும்பமாக இடம்பெயர்ந்தார்களாம். தன்னுடைய பால்ய வயது உறவுகளையும், நட்புகளையும் பிரிந்ததற்கு மழை பொய்த்ததே காரணம் என்பார். அதற்காக வெயிலையும் அவர் திட்டியதில்லை.

அப்படி இப்படி எப்படியோ படித்து சென்னைக்கு வந்தார். அரசு வேலையில் இணைந்தார். தன்னுடைய வேரை இங்கே உறுதியாக நிலைப்படுத்திக் கொண்டார்.

அக்னி வெயில் முடிந்தாலே போதும். அடிக்கடி அம்மாவிடம், “அடிவானம் கறுக்குற மாதிரியில்லே. இந்த வருஷம் சீக்கிரமே மழை வரப்போகுது” என்பார். மழை வர தாமதமானால் அவருக்கு இரத்த அழுத்தம் எகிறிவிடும். கடற்கரைக்கு போய் கடலையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பார். அப்போதுதான் அவரால் சமநிலைக்கு வரமுடியும். அவருடைய பழைய விஜய் சூப்பர் ஸ்கூட்டரின் ஸ்டெப்னியில் ‘மாமழை போற்றுதும்’ என்று பெயிண்டால் எழுதி வைத்திருப்பார். அப்படிப்பட்ட மழை வெறியர்.

அம்மாவுக்கும், அப்பாவுக்கும் கல்யாணம் ஆனதே ஐப்பசி மாதம்தான். அடைமழையில்தான் தாலி கட்டினார். முப்பத்து முக்கோடி தேவர்களும் மழையால் அட்சதை இட்டு எங்களை ஆசிர்வதித்தார்கள் என்று அடிக்கடி கல்யாணப் பெருமை பேசுவார்.

அவருக்கு ஐப்பசியில் முகூர்த்தம் அமைந்துவிட்டது என்கிற ஒரே காரணத்தால் எங்கள் வீட்டில் அத்தனை பேருக்கும் ஐப்பசியில்தான் கல்யாணம் என்பதில் பிடிவாதமாக இருந்து சாதித்தார்.

அப்பாவுடைய மழைக்காதலை அம்மா, திருமணமான சில காலத்திலேயே புரிந்து, அவருடைய அலட்டல்களை சகித்துக் கொண்டார். எங்களுக்குதான் கடுப்பு. “ஏம்பா, சிவாஜி மாதிரி ஓவர் ஆக்டிங் பண்றே..?” என்று நக்கலடிப்போம்.

சிறுவயதில் நாங்கள் பள்ளிக்கு கிளம்பிக் கொண்டிருப்போம். மழை பெய்தால், “லீவு போட்டுட்டு மழையை ரசிங்கடா” என்பார். அப்போதெல்லாம் அப்பாவே லீவு போடச் சொல்கிறார் என்று மகிழ்ச்சியாகதான் இருந்தது.

ஆனால்-

முக்கியமான தேர்வுகள் வந்தபோதெல்லாம் கூட மழையென்றால், “எக்ஸாமெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம். வர வர மழையை பார்க்கிறதே அபூர்வமாயிக்கிட்டிருக்கு. அதை ரசிக்காம படிப்பு என்ன வேண்டிக் கிடக்கு?” என்று அவர் கேட்டபோது எங்களுக்கு ஆச்சரியமும், அதிர்ச்சியும் ஏற்பட்டது.

அக்காவுக்கு காலேஜில் கடைசிநாள் தேர்வு. அன்று திடீரென கோடைமழை. அக்காவை, தேர்வெழுதப் போகக்கூடாது என்று சொல்லி அப்பா ஒரே அடம். இவர் வேற மாதிரி அப்பா என்பதை நாங்கள் உணர்ந்துதான் இருந்தோம். மழை பொழிந்தால் ‘மவுன ராகம்’ ரேவதி, ‘ஓஹோ.. மேகம் வந்ததே’ என்று ஆடிப்பாடினால் ரசிக்கலாம். பூர்ணம் விசுவநாதன் ஆடினால் சகிக்குமா?

எங்கள் அப்பா அப்படிதான் ஆடிக்கொண்டிருந்தார்.

நாங்கள் எல்லாம் காலேஜ், ஆபிஸ் என்று செட்டில் ஆகி, ஒரு நாளைக்கு ஆயிரத்தெட்டு பிரச்சினைகளில் அல்லல் பட்டுக் கொண்டிருந்தோம். அப்போதும்கூட மழை வந்தால் குடும்பமாக உட்கார்ந்து கும்மியடித்து கொண்டாட வேண்டும் என்கிற அப்பாவின் அன்புக்கட்டளை எங்களை எரிச்சலுக்கு உள்ளாக்கியது. “இதே ரோதனையாப் போச்சிப்பா” என்று சலித்துக்கொண்டே அவரை கடந்துச் செல்வோம்.

அப்பா டிவியில் செய்திகள் மட்டும்தான் பார்ப்பார். குறிப்பாக செய்திகளின் இறுதியில் இடம்பெறும் வானிலை தகவல்கள். செய்தித்தாளிலும்கூட மழை பற்றிய தகவல்களைதான் தேடி வாசிப்பார். நம்மூர் மழை மட்டுமல்ல. வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் பொழிந்த மழை பற்றியெல்லாம் அப்டேட்டாக இருப்பார். நுங்கம்பாக்கம் வானிலைமைய இயக்குநர் ரமணனுக்கு மனதளவில் ரசிகர் மன்றமே வைத்திருந்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

அப்பா ஓய்வு பெற்று வீட்டுக்கு வந்ததுமே சொன்னார்.

“நானும், உங்கம்மாவும் மேகாலயாவுக்கு டூர் போகப் போறோம்”

எங்களுக்கு நினைவு தெரிந்ததில் இருந்து அவர்கள் இருவரும் வெளியூருக்கு எங்கேயும் போனதாக நினைவே இல்லை. எப்போதும் அப்பாவுக்கு ஆபிஸ், அம்மாவுக்கு வீட்டு வேலையென்றே எங்களுக்காக தங்கள் இளமைக்காலம் மொத்தத்தையும் தொலைத்தவர்கள்.

ஆச்சரியமாக கேட்டேன். “நீங்க டூர் போறது நல்ல விஷயம்பா. ஆனா, காசி ராமேஸ்வரம்னு சொன்னாகூட ஓக்கே. அதென்ன மேகாலயா?”

“அங்கேதாண்டா சிரபூஞ்சி இருக்கு. உலகத்துலே அதிகம் மழை பொழிகிற ஊர். மனுஷனா பொறந்த ஒவ்வொருத்தனும் தரிசிக்க வேண்டிய புண்ணியஸ்தலமே அதுதாண்டா”

இதற்கும் மேல் அவரைப் பற்றி என்னதான் சொல்ல? அந்த கொடூரமான டிசம்பர் மழைக்கு பிறகும்கூட மழைமீதான நேசம் அவருக்கு எள்ளளவும் குறையவில்லை என்பதுதான் எங்களுக்கு அதிர்ச்சி. மாறாக நாங்களெல்லாம் மழையை தெலுங்கு சினிமா வில்லனை மாதிரி வெறுக்க ஆரம்பித்து விட்டோம்.

அந்த மழையோடு சரி.

அதன்பிறகு எங்களுடைய வேண்டுதலை ஏற்றோ என்னவோ வருணபகவான், நீண்ட விடுமுறைக்கு போய்விட்டார். அதற்கு அடுத்த ஆண்டு வந்த வார்தா பெரும்புயலிலும்கூட காற்றுதான் கோரத்தாண்டவம் ஆடி லட்சக்கணக்கான மரங்களை பலி கொண்டதே தவிர்த்து, மழையோ வெள்ளமோ இல்லாமல் நாங்கள் மீண்டும் தண்ணிக்கு சிங்கி அடிக்க ஆரம்பித்தோம்.

அப்பாதான் தவிக்க ஆரம்பித்தார். பால்கனியில் ஈஸிசேரில் அமர்ந்துக் கொண்டு அடிவானத்தை பார்த்துக்கொண்டே இருப்பார். கையை நெற்றி மீது வைத்து கண்சுருக்கிப் பார்த்து, “வானம் இருட்டற மாதிரி இல்லே?” என்பார்.

“அதெல்லாம் ஒண்ணுமில்லே. சாயங்காலம் சூரியன் மறையுறப்போ எப்பவுமே கருப்பு மேகம்தான் இருக்கும்” என்று சொன்னால் முகம் வாடி அப்படியே உட்கார்ந்து விடுவார்.

திடீரென இரவில் எழுந்து தோட்டத்துக்கு வருவார். இப்படி அப்படியுமாக மெதுவாக தளர்ந்த நடை போடுவார். யாராவது யதேச்சையாக எழுந்து அவரைப் பார்த்துக் கேட்டால், “லேசா ஈரக்காத்து அடிக்குது. மண்வாடையும் வீசுது. அனேகமா காஞ்சிவரத்துக்கு அந்தப் பக்கம் மழைன்னு நெனைக்கிறேன்” என்பார்.

அய்யோடா என்றிருக்கும்.

ஒருமுறை அம்மா என்னிடம் சொன்னார். “ப்ளீஸ்டா. அப்பாவை கோச்சுக்காதீங்க. நீங்கள்லாம் மழையை தொல்லையா பார்க்குறீங்க. அவருக்கு அதுதான் எப்பவும் கனவு. சின்ன வயசுலே மழை இல்லாததாலே சொந்த மண்ணை பிரிஞ்ச மனுசண்டா”

அப்பாவை அம்மா புரிந்துக் கொண்ட மாதிரி நாங்கள் இருவரையுமே புரிந்துக் கொண்டுதான் இருந்தோம். இருந்தாலும் பதில் சொன்னேன்.

“அம்மா, தாம்பரத்துலே அனாதைங்க மாதிரி நம்ம குடும்பம் தவிச்ச அந்த வாரத்தை நினைச்சுப் பாரு. புதுசா பொறந்த உன் பேத்தியை வெச்சுக்கிட்டு நீ எப்படியெல்லாம் கஷ்டப்பட்டு. எல்லாம் இந்த மழையாலேதானே?”

“நம்ம நியாயம் நமக்கு. அவரு நியாயம் அவருக்கு” அப்பாவை விட்டுக் கொடுக்காமல்தான் அம்மா சொன்னார்.

மழையை நாம் நேசித்தாலும் சரி. வெறுத்தாலும் சரி. எவ்வித பாகுபாடு பார்க்காமல் எல்லோருக்கும் பொதுவாகதான் பெய்கிறது மழை. பருவம் தப்புவதும் அப்படிதான். இயற்கையின் புதிர் விளையாட்டுக்கு அற்பப் பிறவிகளான மனிதர்களிடம்தான் விடை ஏது?

இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே வரலாறு காணாத வெயிலில் வாடினோம். “மழை பெய்ஞ்சித் தொலைக்கக் கூடாதா?” என்று வரதராஜபுரத்து ஆட்களே ஏங்குமளவுக்கு அப்படியொரு அசுர வெயில்.

அப்பா மட்டும் குஷியானார். “இப்படி வெயில் காட்டு காட்டுன்னு காட்டிச்சின்னா, அந்த வருஷம் கண்டிப்பா அடைமழை நிச்சயம். 1967லே இப்படிதான் ஆச்சு. அப்போ அடிச்ச புயல்லே ஒரு கப்பலு, மெரீனா பீச்சுலே கரை ஒதுங்கி மாசக்கணக்குலே கிடந்துச்சி. நாங்கள்லாம் ஆதம்பாக்கத்துலே இருந்து நடந்தே போயி பார்த்தோம்”

தேவுடா. அப்பா இப்போது வெயிலையும் ரசிக்க ஆரம்பித்து விட்டாரா? ஒவ்வொரு வருட மழைக்கும் அவரிடம் ஒவ்வொரு கதை உண்டு. அவரது அனுபவ ஞானம் கொண்டு, இந்தாண்டு பெருமழை நிச்சயம் என்று கணித்தார்.

போனமாதம் காலையில் கடுமையான வெயிலில் கார் ஓட்டிக் கொண்டிருந்தேன். அலுவலகத்துக்கு செல்ல வேண்டிய நேரம் தப்பி செம டென்ஷன். நந்தனம் சிக்னலில் மெட்ரோ ரயில் பணிகள் முடிவடையாததால் பேரணி மாதிரி டிராஃபிக் ஜாம்.

திடீரென செல்போன் கிணுகிணுத்தது. மனைவி calling. நேரம் கெட்ட நேரத்தில் அவரிடமிருந்து போன் வராது. ஏதாவது முக்கியமான விஷயம் என்றால் மட்டுமே தொடர்பு கொள்வார்.

ஸ்பீக்கரை போட்டு “ஹலோ..” சொன்னேன்.

“மாமாவுக்கு திடீர்னு நெஞ்சுவலிங்க. இந்து மிஷன் ஆஸ்பிடலுக்கு அழைச்சிட்டு போயிருக்காங்க”

பதில்கூட சொல்லாமல் போனை கட் செய்தேன். வண்டியை ‘யூ டர்ன்’ எடுக்கவே அரை மணி நேரம் ஆகிவிட்டது. என் அவசரம் மற்றவர்களுக்கு எப்படி தெரியும். நான் தாம்பரம் போய் சேர்ந்தபோது எல்லாமே முடிந்துவிட்டது.

அப்பா, சில நாட்களாகவே சோர்வாகதான் தெரிந்தார். சர்க்கரை, இரத்த அழுத்தம் என்றெல்லாம் அவருக்கு உடல்ரீதியாக பிரச்சினைகள் இருந்தாலும் இவ்வளவு சீக்கிரமாக விடைபெற்றுக் கொள்வார் என்று யாருமே எதிர்ப்பார்க்கவில்லை.

அம்மா, அழக்கூட மறந்து உறைந்துப் போயிருந்தார். ஐம்பது ஆண்டுகால தாம்பத்யம் அவருக்கு எவ்வளவோ நல்ல நினைவுகளை பரிசளித்துவிட்டுதான் சென்றிருக்கிறது. அண்ணன், அக்கா, தங்கை, தம்பி என்று குடும்பமே கதறிக் கொண்டிருக்க எனக்கு மட்டும் ஏனோ அழுகையே வரவில்லை.

அப்பாவுக்கு இறுதியஞ்சலி செலுத்த வீட்டுக்கு வந்தவர்கள் எல்லாமே அவரை மழையோடு தொடர்பு படுத்திதான் நினைவு கூர்ந்தார்கள்.

“மழைன்னா மனுஷனுக்கு அவ்வளவு உசுரு”

“மழை பெய்யுறப்போ எல்லாம் உங்கப்பாதாம்பா நினைவுக்கு வருவாரு”

அப்பாவை வெறித்து பார்த்துக்கொண்டே இருந்தன். கொஞ்சம் நேரம் ஒதுக்கி தினமும் அவரோடு இன்னும் கொஞ்சம் நெருங்கி பேசிப்பழகி இருக்கலாமோ என்று தோன்றியது. நாங்கள் குழந்தைகளாக இருந்தபோது எங்களோடு மழையில் அவர் போட்ட ஆட்டமெல்லாம் நினைவுக்கு வந்தது. அவர் கடைசிவரை அப்படியேதான் இருந்தார். நாங்கள்தான் வளர்ந்ததும் மழையிடமிருந்து வெகுதூரம் விலகிவிட்டோம்.

சுட்டெரிக்கும் வெயிலில்தான் அப்பா இறுதி யாத்திரை சென்றார். எந்த வெயிலால் சொந்த ஊரிலிருந்து இடம் பெயர்ந்தாரோ, அதே வெயில்தான் கடைசிவரை அவரோடு வந்துக்கொண்டே இருந்தது.

இடுகாட்டில் நடக்க வேண்டிய சடங்கெல்லாம் நடந்து முடிந்தது. அண்ணன் கொள்ளி வைக்கப் போகிறான். மூடியிருந்த விறகு விலக்கி, அப்பாவின் முகத்தை இறுதியாக பார்க்கிறேன். விபூதி பூசியிருந்த அவரது நெற்றியின் மீது சட்டென்று ஒரு பொட்டு ஈரம். வானத்தைப் பார்த்தேன். இருள் மேகம் எங்கள் தலைக்கு மேலே கூடியிருந்தது. குளிரான பெரிய மழைத்துளிகள் சடசடவென்று கொட்டியது. நான் முதன்முதலாக பெருங்குரலெடுத்து வெடித்து அழ ஆரம்பித்தேன்.

(நன்றி : தினகரன் தீபாவளிமலர்)
ஓவியம் : ஸ்யாம்

16 ஆகஸ்ட், 2017

படம் வரைந்து பாகம் குறித்தலும் படமெடுத்து பாடம் நடத்துதலும்!

முன்குறிப்பு : ‘வயது வந்தோருக்கு மட்டும்’ என்று சான்றிதழ் கையளிக்கப்படும் திரைப்படங்கள் பெரும்பாலும் வயதுக்கு வாராதோரையே கவரும் என்பது என் முன்முடிவு. என் பால்ய அனுபவங்களில் இருந்து வந்தடைந்திருக்கும் தரிசனம் இது.

வயதுக்கு வந்தோர் கண்ட காட்சிகளும், கொண்ட கோலங்களுமே ‘வயதுக்கு வந்தோருக்கு மட்டும்’ படங்களில் காட்சிப்படுத்தப் படுகின்றன. மாறாக காட்சியையோ, கோலத்தையோ காணாத வயதுக்கு வாராதோர்தான் வயதுக்கு வந்தோருக்கான படங்களை காண்பதற்கான மனப்பாங்கு கொண்டவர்களாக அமைந்திருக்கிறார்கள். காணவேண்டிய தேவையும் அவர்களுக்கே இயல்பாய் ஏற்படுகிறது.

‘துண்டு நிச்சயம் உண்டு’ என்கிற முன்முடிவோடே பால்யத்தை ஒட்டிவாழும் பார்வையாளர்கள் இம்மாதிரி படங்களுக்கு அரங்கம் முன்பாக ஆவலோடு குழுமுகிறார்கள். மீசைக்கு கீழே சில அங்குல மயிர் இல்லாவிட்டாலும், இருக்கையை நிரப்ப ஆள்வேண்டுமே என்கிற எண்ணத்தில் அவர்களும் சட்டத்துக்கு விரோதமாக திரையரங்கு பணியாளர்களால் உள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

வயதுக்கு வந்தோருக்கு மட்டும் படங்கள், வயதுக்கு வாராதோருக்கு புரியக்கூடிய அளவிலான மேலோட்டமான பாணியில் எடுக்கப்பட்டாலும், முதிர்ச்சியான பார்வையாளர்களுக்கான திரட்சியான காட்சிகளோடு மேற்கத்தியப் பாணி திரைப்படமாக்கலை மேற்குத் தொடர்ச்சி மலை வாசனையோடு தருவது வாடிக்கை.

நிற்க.

அடிப்படையில் பாலியல் பசியை பேசினாலும், பருவப் பசிக்கு தீனி போட்டாலும் வயதுக்கு வந்தோருக்கான படங்கள் வயதுக்கு வந்தோருக்கு மட்டுமானது அல்ல என்பதே என் துணிபு.

சரி, விமர்சனத்துக்குள் நுழைவோம்.

* * *

நான்கு இளைஞர்களுக்கு மது அருந்தும் பழக்கம் உண்டு. அவர்களில் ஒருவனுக்கு திருமணம் ஆகிறது. அவனுடைய மனைவிக்கு மது அருந்தும் பழக்கம் கிடையாது. இதுவே அவர்கள் இருவருக்குமான ஆண் x பெண் முரணை ஏற்படுத்துகிறது.

தன்னுடைய மனைவிக்கு மது அருந்தும் பழக்கமில்லை என்பது ஒருவகையில் அவனுக்கு மகிழ்வையும் தருகிறது. இரவு வேளைகளில் மது அருந்திவிட்டு, அதிகாலையில் சூரியன் உதிக்கும் வேளையில் இல்லம் திரும்புகிறான். இதனால் இரவில் அவன் செய்யவேண்டிய  அடிப்படை வேலைகளை செய்ய முடியாமல் போகிறது.

புதியதாக மணம் ஆன ஒரு ஆணுக்கும், பெண்ணுக்குமான இந்த அகசிக்கல் பாலியல் அங்கதச்சுவையோடு நீலமாக காட்சிப்படுத்தப் படுகிறது. இருவருக்குமான ஊடல் கூடலை நோக்கிச் செல்லாதவகையில் திரைக்கதை புதுமையான உத்தியில் இயக்குநர் சாஜனால் கையாளப்பட்டிருக்கிறது. இக்காட்சிகள் வயதுக்கு வாரா ரசிக மீன்குஞ்சுகளுக்கு தூண்டிலில் போடப்படும் மண்புழு.

* * *

வனப்பு வாரியிறைக்கப்பட்ட பேரிளம்பெண். அவளது உடல் கட்டோடு குழலாட ஆடவென்று கச்சிதமாக இருக்கிறது. கணவன் அயல்நாட்டில் பொருள் ஈட்டுகிறான்.  இப்பெண்ணுக்கு பக்கத்து இல்லத்தில் வசிக்கக்கூடிய கட்டிளங்காளை ஒருவன் தினசரி அதிகாலை உடற்பயிற்சி செய்வது வழக்கம். காம்பவுண்டு தாண்டி கட்டிளங்காளை. இங்கே காமப்பசி அடங்கா காரிகை.

அந்த பேரிளம்பெண்ணின் காமம் கலங்கரை விளக்க ஒளியாய் காளையை எட்டுகிறது. கண்கூசும் காமவொளியை தாங்கவொண்ணா துயரம் கொண்டவனாய், விளக்கை அணைக்க காம்பவுண்டு தாண்டி வருகிறான். அணைக்க வேண்டியது விளக்கையல்ல. விளக்கு ஏந்திய மங்கையை என்று உணர்கிறான்.

காமச்சுவையில் இருவரும் கரைபுரண்டு ஓடுகிறார்கள். சலிக்க சலிக்க காமம். விடிய விடிய ஹோமம். ஆணுக்கு பெண், பெண்ணுக்கு ஆண் என்கிற மரபான பாலியல் செயல்பாடுகளில் மனதை வசம் இழக்கிறார்கள் இருவரும்.

இந்த காட்சிகளில் ஒளிப்பதிவாளரின் நேர்த்தியான ஒளியமைப்பும், படத்தொகுப்பாளரின் தாராள மனசும் பார்வையாளர்களுக்கு ஓர் ஐரோப்பிய திரைப்படத்தை காணும் அற்புத அனுபவத்தை ஏற்படுத்துகின்றன.

* * *

போதையிலே சுகம் காண்கிறான் மாணவன் ஒருவன். ஆரம்பத்தில் விளையாட்டாக பீர் என்கிற மதுபானத்தை சுவைக்கிறான். அதிலிருந்து சற்று முன்னேறி பிராந்தி, ரம் என்று ஐரோப்பிய பானங்களை பதம் பார்க்கிறான்.

ஒருக்கட்டத்தில் பானங்கள்  பானகம் மாதிரி இனிக்கிறது. அவனது தேவை, மேலும் போதை மேலும் மயக்கம். கஞ்சா புகைக்கிறான். அந்த போதையும் போதாமல் பாலியல் தொழிலாளிகளை நாடுகிறான். போதைகளில் சிறந்தது போகம் என்று உணர்கிறான்.

* * *

மூன்று வெவ்வேறு கிளைகளாக விரிந்த இந்த சிறுகதையாடல்களை கடைசியாக மருத்துவர் ஒருவரின் ஆலோசனைக் காட்சியை நயமாக சேர்த்து பெருங்கதையாடலாக மாற்றுகிறார் இயக்குநர் சாஜன். அவரை எவ்வளவு விரித்துப் பாராட்டினாலும் தகும்.

முதல் கதையில் திருப்தியடையாத புதுமனைவி, கணவனின் நண்பர்களில் ஒருவனோடு கூடுகிறாள். இந்த காட்சி பார்வையாளனுக்கு சுவாரஸ்யமான அனுபவத்தை தருவதோடு வயதுக்கு வராத பார்வையாளர்கள் எதிர்காலத்தில் வேலை செய்யாவிட்டால் என்னவாகும் என்கிற படிப்பினையை பெறக்கூடிய பாடத்தையும் வழங்குகிறது.

இரண்டாவது கதையில், பக்கத்துவீட்டு பாலகனோடு பந்து விளையாடும் பெண், அற்பமான பாலியல் தேவைக்காக அற்புதமான இல்வாழ்க்கையை இழப்பதாக கதையின் போக்கில் அமைக்கப்பட்டிருக்கிறது.

மூன்றாவது கதையில் போதைக்கு பாதை தேடிய மாணவன், பாதை தவறி பல்லாவரத்தில் பாக்கு போட்டுக் கொண்டு பராக்கு பார்த்துக் கொண்டிருப்பதாக முடிவு.

* * *

‘மது, மங்கை, மயக்கம்’ என்கிற இத்திரைப்படத்தின் தணிக்கை சான்றிதழ் சுட்டுவதை போல வயதுக்கு வந்தோருக்கான பாலியல் படம் மட்டுமல்ல. பாலியலை மிகைபுனைவாக கருதும் பாலகர்களுக்கான படமும்தான். எதிர்பாலினத்தவரான பெண்களிடம் என்ன இருக்கிறது என்று அறிய ஆர்வமாக முற்படும் ஆண்களுக்கு எதை காட்ட வேண்டுமோ, அதை மட்டும் இப்படம் சுட்டிக் காட்டுகிறது. ஆண்களிடம் என்ன இருக்கிறது என்பதே ஆண்களுக்கு தெரியாத நம் சமகால சூழலில், ஆண் பெண் இருவரிடமும் என்னென்ன இருக்கிறது என்று படம் வரைந்து பாகம் குறிக்க முற்பட்ட இயக்குநரின் முயற்சி துணிச்சலான முயற்சி.

முதிர்ச்சியான பார்வையாளன் இம்மாதிரி படங்களில் அழகியல் பாடம் கற்பான். ஐரோப்பிய புது அலை திரைப்படங்களில் ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபதுகளில் உலகம் முழுக்க செய்தது இதைதான். ஆட்டுமந்தை மூளை கொண்டவர்களோ ‘துண்டு’ போடசொல்லி அரங்கில் விசில் அடித்து கலாட்டா செய்வார்கள். யார் யாருக்கு எது வேண்டுமோ, அவரவருக்கு அது அது கிட்டட்டும்.

5 ஆகஸ்ட், 2017

சிவாஜி சிலை

ஜூலை 21, 2006.

அந்நாள் வரை ‘பிக்பாக்கெட்’ என்பது புனைவு என்று கருதிக் கொண்டிருந்தேன்.

சிறுவயதிலிருந்தே வெறித்தனமான எம்.ஜி.ஆர் ரசிகன் என்பதால் சிவாஜியை கொஞ்சம்கூட பிடிக்காது. சிவாஜி படங்கள் பார்ப்பதை புறக்கணிப்பது மட்டுமில்லாமல், சிவாஜிக்கு ரசிகர் என்று யாராவது தெரிந்தால் அவர்களையும் புறக்கணிக்குமளவுக்கு வெறித்தனம்.

அந்த பைத்தியம் தெளிந்தது ஜூலை 2001ல்.

அப்போது தி.நகரில் பாகிரதி அம்மாள் தெருவில் இருந்த ஒரு விளம்பர நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். தினமும் போக் ரோடு வழியாக சிவாஜி வீட்டை கடந்துதான் என்னுடைய டிவிஎஸ் சேம்ப் பயணிக்கும்.

ஆற்காடு சாலையை கடக்கும்போது ஆட்டோமேடிக்காக கன்னத்தில் போட்டுக் கொள்வேன். அந்த சாலையில்தான் எம்.ஜி.ஆர் வாழ்ந்தார். அவருடைய நினைவில்லம் அமைந்திருக்கிறது. இப்போதும் எங்கேயாவது எம்.ஜி.ஆர் படத்தையோ, சிலையையோ காணும்போது ஆட்டோமேடிக்காக கைகள் கன்னத்தில் போட்டுக் கொள்கின்றன. அதே நேரம் சிவாஜி வீட்டை ஒரு வெறுப்போடுதான் கடப்பேன். அங்கே கூடியிருக்கும் ரசிகர்கள் மெண்டல்கள் மாதிரிதான் எனக்கு தோன்றுவார்கள்.

சிவாஜி மறைந்த அன்று அந்த சாலையை கடக்கும்போதுதான் அனிச்சையாக கண்கள் கலங்கின. அன்று முழுக்க சிவாஜி பாடல்களை கேட்டு, அவர் குறித்த செய்தித் தொகுப்புகளை தொலைக்காட்சிகளில் பார்த்துக் கொண்டிருந்தபோதுதான் நம்மோடு வாழ்ந்துக் கொண்டிருந்த ஒரு மகத்தான மேதையை இதுநாள் வரை அவமதித்துக் கொண்டிருந்திருக்கிறோமே என்று தோன்றியது. அதன் பிறகே தொடர்ச்சியாக சிவாஜி நடித்த படங்களை பார்த்து அவருடைய தன்னிகரற்ற மேதமையை உணர்ந்தேன்.

ஸ்டாப்.

சிவாஜி மறைந்ததில் தொடங்கி அவருக்கு மணிமண்டபம், சிலை என்று கோரிக்கைகள் அரசுக்கு தமிழர்களால் முன்வைக்கப்பட்டுக் கொண்டிருந்தது. ஏதேதோ காரணங்களால் சிவாஜி மீது அசூயை கொண்டிருந்த ஜெயலலிதா, அவற்றை கண்டுகொள்ளவே இல்லை.

தான் ஆட்சிக்கு வரும்போது சிவாஜிக்கு சிலை வைக்கப்படுமென்று கலைஞர் உறுதியளித்தார்.

சொன்னதை செய்பவர் ஆயிற்றே. 2006ல் ஆட்சிக்கு வந்ததுமே ஆளுநர் உரையில் சிவாஜி சிலையை அறிவித்தார். கடற்கரை சாலை ஐஜி அலுவலகத்துக்கு எதிரே சிவாஜிக்கு சிலை வைக்க இடம் ஒதுக்கினார். பாண்டிச்சேரியில் அமைக்கப்பட்ட சிலை போலவே  கம்பீரமான வெண்கலசிலையும் சிற்பி நாகப்பாவால் செய்யப்பட்டது.

ஜூலை 21 அன்றுதான் சிவாஜி சிலை திறப்புவிழா. திடீரென்று யாரோ அல்லக்கைகள், அதிமுக தூண்டுதலால் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து சிலை திறப்புவிழாவுக்கு தடைவாங்க முயற்சித்துக் கொண்டிருந்தார்கள். ‘தடையை உடைப்போம்’ என்று கர்ஜித்தார் கலைஞர். உயர்நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர்கள் போராடி, ஒருவழியாக மாலை மூன்று மணியளவில் அத்தனை பிரச்சினைகளையும் கட்டுக்கு கொண்டுவந்தார்கள்.

தமிழ் திரையுலகமே திரண்டு வந்து கலந்துகொள்ள போகிறது. திடீர் சிவாஜி ரசிகனாகிவிட்ட நான் அன்று காலையிலிருந்தே ஒருமாதிரி நெகிழ்வான நிலையில் இருந்தேன். விழாவுக்கு போயே ஆகவேண்டும். முதல் நாளே சிவாஜி சிலையை தரிசித்தே ஆகவேண்டும் என்று மனசு அடித்துக் கொண்டது. மனசுக்குள் நிரந்தரமாக சம்மணம் போட்டு அமர்ந்திருந்த எம்.ஜி.ஆர் ரசிகன் மட்டும் கிண்டலடித்துக் கொண்டே இருந்தான்.

மாலை நெருங்க நெருங்க மனசு தாங்கவில்லை. இப்போது மயிலாப்பூரில்தான் அலுவலகம். அங்கிருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் விழா. ஹீரோஹோண்டாவை முறுக்கி கடற்கரைக்கு விட்டேன்.

மணல்பரப்புக்கு அந்தப் பக்கம் கடலலை. சாலையில் மனித அலை. நான் இருந்த இடத்தில் இருந்து மேடை சுமார் அரை கி.மீ. தூரத்தில் இருந்தது. அதற்கு மேல் ஒரு இன்ச் கூட முன்னேற முடியாத அளவுக்கு நெரிசல்.

ரஜினிகாந்த் பேசிக்கொண்டிருக்கிறார்.

“ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இதே கடற்கரை சாலையில் இரண்டு இளைஞர்கள் நடந்துச் சென்றுக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு இளைஞன் சொல்கிறான். ‘நண்பா, இதே சாலையில் எனக்கு சிலை வைக்குமளவுக்கு முன்னேற வேண்டும்’

அடுத்த இளைஞன் சொல்கிறான். ‘உனக்கு சிலை அமைக்கக்கூடிய அதிகாரத்தை நான் எட்ட வேண்டும்’

சிலையாக விரும்பியவர் சிவாஜி. சிலை அமைத்தவர் கலைஞர்”

திரண்டிருந்தவர்களின் கரவொலி கடலொலியை மிஞ்சியது. எனக்கு பின்னே ஒருவன் கூட்டத்தில் இடித்துக் கொண்டே இருந்தான். திரும்பி முறைக்க, “சாரி பாஸ்” என்றான். அவனை விட்டு விலகி இன்னும் சற்று முன்னேறினேன்.

ஏதோ குறைவது போல தோன்ற சட்டென்று பேண்ட் பின்பாக்கெட்டை தொட்டுப் பார்த்தபோதுதான் ‘பர்ஸை காணோம்’ என்று தெரிந்தது. இடித்துக் கொண்டிருந்தவன் உருவிவிட்டிருக்கிறான். இருபத்தைந்தாயிரம் பேர் கூடியிருந்த அந்த கூட்டத்தில் அவனை எங்கே தேடுவது, அவனது முகம்கூட நினைவில் இல்லை. பர்ஸில் நாலு கிரெடிட் கார்ட், ரெண்டு டெபிட் கார்ட், கொஞ்சம் பணம் இருந்தது.

இதற்கிடையே விழா முடிந்து விஐபிகள் கிளம்பத் தொடங்கினர். கூட்டம் அப்படியே வரிசை கட்டி சிலையை தரிசித்துவிட்டு கலையத் தொடங்கியது. இரவு 9.30 மணியளவில்தான் என்னால் நடிகர் திலகத்தை அருகே தரிசிக்க முடிந்தது. சிலர் கையிலேயே கற்பூரம் ஏற்றி ஆரத்தி காட்டிக் கொண்டிருந்தார்கள். கோயில் கொடிமரத்தின் முன்பாக நெடுஞ்சாண்கிடையாக விழுவது மாதிரி நிறைய பேர் விழுந்து வணங்கிக் கொண்டிருந்தார்கள். நானும் ஒரு நெடுஞ்சாண்கிடையை போட்டுவிட்டு,  ஹீரோ ஹோண்டோ எங்கிருக்கிறது என்று தேடத் தொடங்கினேன். நல்லவேளை வண்டியை எவனும் லவட்டவில்லை.

22 ஜூலை, 2017

ரஜினி - கமல்


ரஜினியும், கமலும் சேர்ந்து நடித்துக் கொண்டிருந்த காலத்தில் நான் தூளியில் தூங்கிக் கொண்டிருந்தேன். நினைவு தெரிந்தபோது இருவரும் எதிரெதிர் துருவமாக வளர்ந்து நிற்கிறார்கள். தனித்தனியாக தாங்கள் வளருவதற்காக இருவரும் சேர்ந்து பேசி எடுத்த முடிவு என்றார்கள்.

அவ்வப்போது இருவரும் இணைந்து நடிக்கப் போகிறார்கள் என்று பத்திரிகைகள் பரபரப்பாக ஏதாவது எழுதும். ரஜினியோ, கமலோ அதை கண்டுகொண்டதே இல்லை.

பிறவி கமல் ரசிகனான எனக்கு ரஜினியோடு அவர் சேர்ந்து நடிப்பதில் விருப்பமே இருந்ததில்லை. ஏனெனில், ரஜினிக்கு நடிக்கவே தெரியாது என்று உறுதியாக இருந்தேன். தொண்ணூறுகளில் கொஞ்சம் ரசனை மேம்பட்ட காலத்தில் ரஜினியும் ஒரு முக்கியமான நடிகராக மனசுக்குள் உட்கார்ந்தார். இருவரது ஸ்டைலும் வேறு வேறு. இருவரையும் தனித்தனியாக தனித்தனி மனநிலைகளில் ரசிக்க முடியும் என்கிற முதிர்ச்சி ஏற்பட்டது. இருவரும் இணைந்து நடிக்கும் பட்சத்தில் எழுபதுகளின் இறுதியில் இருவரின் ரசிகர்களுக்கும் கிடைத்த ஃபுல் மீல்ஸ் விருந்து கிடைக்குமே என்று மனசு ஏங்கத் தொடங்கியது.

என்னுடைய தலைமுறைக்கு கிட்டாத விருந்து அது. இன்றுவரை எட்டா விருந்தும்கூட.

போகட்டும்.

ஓரளவுக்கு ‘விக்ரம் வேதா’ அந்த விருப்பத்தை நிறைவேற்றியிருக்கிறது.

கமல்ஹாசன் – விக்ரமாதித்தன், ரஜினிகாந்த் – வேதாளம் என்கிற ஐடியாவே பரவசப்படுத்துகிறது. ரஜினியும், கமலும் இப்போதைக்கு இணைய சாத்தியமில்லை என்பதால் – இணைந்தாலும் வயது காரணமாக இருவருக்குமான பழைய கெமிஸ்ட்ரி உருவாக வாய்ப்பில்லை என்பதாலும் - நடிப்புப் பாணியில் அவர்களை முடிந்தளவுக்கு பிரதிபலிக்கக்கூடிய விஜய் சேதுபதி – மாதவன் இணையை தேர்ந்தெடுத்ததும்கூட நுணுக்கமான தேர்வுதான்.

ஆனால்-

இந்த அட்டகாசமான ‘ஐடியா’வை, ரசிகன் conceive செய்ய முடியாத அளவுக்கு கூடுதல் புத்திசாலித்தனமாக இயக்குநர்கள் புஷ்கர்-காயத்ரி எடுத்துவிட்டதால், ஆஹாஓஹோவென்று கொண்டாடப்பட்டிருக்க வேண்டிய ‘விக்ரம் வேதா’, ஓக்கே என்கிற லெவலில் நின்றுவிட்டது.
மாதவன், சின்ன சின்ன ரியாக்‌ஷன்களில்கூட அப்படியே கமலை உரித்து வைத்திருக்கிறார். குறிப்பாக இன்ஸ்பெக்டர் சைமன் இறந்துவிட்ட தகவலை, சைமனின் மனைவியிடம் சொல்லும் காட்சி. விஜய் சேதுபதி, நடையில் தொடங்கி சிரிப்பு வரை அச்சு அசல் ‘பைரவி’ காலத்து ரஜினியேதான். எனினும் இவர்கள் இருவரும் ரஜினி – கமலை பிரதிநிதித்துவப் படுத்துகிறார்கள் என்பதை ரஜினி – கமல் ரசிகர்களே உணரமுடியாதபடி ஏன் படம் எடுக்கப்பட்டிருக்கிறது என்று தெரியவில்லை. இத்தனைக்கும் ‘விக்ரம்’, ‘வேதா’ என்கிற பெயர்கள்கூட அந்த காலத்து கமல், ரஜினி கதாபாத்திரங்களின் பெயர்களை ஒட்டியே இருக்கின்றன. சின்ன சின்ன ரெஃபரன்ஸ் கொடுத்து ரசிகனுக்கு தங்கள் ஐடியா இதுதானென்று புஷ்கரும், காயத்ரியும் மெனக்கெட்டு புரிய வைத்திருந்தால் தியேட்டர்களில் திருவிழாவே நடந்திருக்கும். சிம்பிள். படத்துக்கு டைட்டிலேகூட ‘ரஜினி – கமல்’ என்று வைத்திருக்கலாம்.

படம் நெடுக விரவியிருக்கும் புத்திசாலித்தனமும், பர்ஃபெக்ட்னெஸ்சுமே வெகுஜன ரசிகர்களிடமிருந்து படத்தை அந்நியப்படுத்தக் கூடிய தன்மையை கொண்டிருக்கிறது. ஷங்கர் மாதிரி வெற்றிகரமான இயக்குநர்கள் வேண்டுமென்றே படத்தில் சில faultகளை, லாஜிக் மிஸ்டேக்குகளை திணிப்பதுண்டு. அவற்றை ரசிகனே கண்டுபிடித்து, இயக்குநரைவிட தான் புத்திசாலி என்று அவனுடைய ஈகோவை அவனே திருப்திபடுத்திக் கொள்வதற்காக செய்யப்படும் குறும்பு விளையாட்டு அது. ‘விக்ரம் வேதா’, அதிகபட்ச சாத்திய மிலிட்டரி ஒழுங்குடன் இருப்பதே, படத்தின் ஆகப்பெரிய பலவீனம்.

இயக்குநர்கள் அடிப்படையில் அறிவுஜீவிகளாக இருக்க வேண்டும். ரசிகர்களும் தங்களுடைய wave lengthக்கு இணையாக இருப்பார்கள் என்கிற அவர்களுடைய நம்பிக்கை பாராட்டத்தக்கதே. இருந்தாலும், ஓவியா ஒருவேளை அரசியலுக்கு வந்தால் கண்ணை மூடிக்கொண்டு ஓட்டு போடும் அளவுக்கே தமிழனின் அறிவு இயங்கிக் கொண்டிருக்கிறது. படம் முழுக்க ஏகத்துக்கும் இறைக்கப்பட்ட பாத்திரங்கள் ஒவ்வொன்றுமே, தத்தமது பங்கை பக்காவாக செய்திருப்பதால் பிரதானப் பாத்திரங்களான விக்ரம் – வேதா மீது குவிய வேண்டிய ஈர்ப்பு சிதறுகிறது. உதாரணத்துக்கு வரலட்சுமி பாத்திரம். அவர் இல்லாமலேயே இந்த கதையை சொல்லியிருக்க முடியும். இருப்பினும் அந்த பாத்திரத்தை வைத்துவிட்டதாலேயே அவருக்கென்று வலிந்து சில காட்சிகளை உருவாக்கி, அதை கதையோடு ஒட்டவைக்க முயற்சித்திருப்பது போன்றவை, பார்வையாளனுக்கு ஒரே டிக்கெட்டில் ஒன்பது படத்தை பார்ப்பது போன்ற ஆயாசத்தை ஏற்படுத்துகிறது.

ஒரு குற்றவாளியை ஒரு போலிஸ் அதிகாரி பிடிக்க முயற்சிக்கிறார். ஒவ்வொரு முறை மாட்டும்போதும் ஒரு புதிரை போட்டுவிட்டு எஸ்கேப் ஆகிறான் குற்றவாளி. அந்த புதிர் முடிச்சுகளையெல்லாம் ஒவ்வொன்றாக அந்த அதிகாரி அவிழ்த்துக் கொண்டே வருவதுதான் கிளைமேக்ஸ். இதுதான் ஐடியா. இதைதான் புஷ்கர்-காயத்ரி எடுத்திருக்கிறார்கள். ஆனால், இந்த கதையை சொல்வதற்கு காதை சுற்றி மூக்கை தொடுகிறார்கள்.

நான்லீனியர் வகை கதை சொல்லல், கேட்பவனுக்கு கூடுதல் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தக்கூடிய உத்தியாக இருக்க வேண்டுமே தவிர, அதுவே கதைக்கு கூடுதல் சுமையாக அமைந்துவிடக்கூடாது. ‘விக்ரம் வேதா’வில் அப்படி அமைந்துவிட்டது.

எல்லாவற்றையும் மீறி இது நல்ல படம். Hardcore சினிமா ரசிகன் ரசித்து ரசித்து சுவைக்க ஏராளமான ஐட்டங்களை கொண்டிருக்கும் படம். ‘ஆரண்ய காண்டம்’ மாதிரி ஃபேஸ்புக்கில் நீண்டகாலத்துக்கு பேசப்படும்.

19 ஜூலை, 2017

தேசத்துரோகிகளா ஜனரஞ்சக எழுத்தாளர்கள்?

“அந்த நாள் அப்படியே நினைவிருக்கிறது. 1985, ஜூன் 24. அன்று என் தந்தையார் மறைந்த நாள். அலுவலகத் தோழர்களோடு அமர்ந்து திவச உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.

வாசலில் நிழலாடியது. கையில் ப்ரீப்கேஸ். கண்களில் கூலிங் கிளாஸ். சஃபாரி அணிந்த அவர், ‘ஐ ஆம் ராஜேஷ்குமார் ஃப்ரம் கோயமுத்தூர்’ என்று அறிமுகம் கொடுத்துக்கொண்டே உள்ளே நுழைந்தார்.

அப்பாவே நேரில் வந்து ஆசிர்வதிப்பதாக நினைத்து சிலிர்த்தேன்!”

நெகிழ்ச்சியாக தன்னுடைய ஆரம்பகால நினைவுகளோடு பேச ஆரம்பிக்கிறார் ‘பாக்கெட் நாவல்’ ஜி.அசோகன். தமிழ் மாத நாவல் உலகின் முடிசூடா மன்னனாகிய இவர், கடந்த முப்பத்தி இரண்டு வருடங்களாக இத்துறையில் இடைவிடாமல் இயங்கிக் கொண்டிருக்கிறார். ‘பாக்கெட் நாவல்’ பத்திரிகையின் 350வது இதழ் தயாரிப்பில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டே நம்மிடம் பேசினார்.

“அப்பா, பத்திரிகையுலகில் மிகவும் பிரபலம். ‘வாலிபம்’ எல்.ஜி.ராஜ் என்றால் எல்லாருக்குமே தெரியும். ஃப்ரீலான்ஸ் ஓவியர். ‘ராணி’ பத்திரிகையின் முதல் அட்டைப்படத்தை வரைந்தவர் அவர்தான். நிறைய பத்திரிகைகள் நடத்தினார். அப்போதெல்லாம் பத்திரிகையாளன் வீட்டு அடுப்பில் பூனைகள் உறங்குவது வழக்கம்தான்.

நாங்கள் நான்கு சகோதரர்கள். மூன்று சகோதரிகள். அடிப்படைக் கல்வித் தகுதியான எஸ்.எஸ்.எல்.சி. படித்தால் போதும். மீதி விஷயங்களை வாழ்க்கை அனுபவத்தில்தான் கற்கவேண்டும் என்பது அப்பாவின் முடிவு.

அப்படிதான் நானும் அந்தகால எஸ்.எஸ்.எல்.சி. முடித்துவிட்டு அப்பாவின் சீடனாக அவரது பத்திரிகை வேலைகளுக்கு துணையாக வந்துவிட்டேன். அவரது ஓவியங்களை எடுத்துக் கொண்டு பத்திரிகை அலுவலகங்களுக்கு போவதும், சன்மானம் வாங்கி வருவதுமாக இருந்ததால் இயல்பாகவே எனக்குள் பத்திரிகைகள் மீது ஈடுபாடு வந்துவிட்டது...” கண்சிமிட்டுகிறார் ஜி.அசோகன்.

“எப்போது ‘பாக்கெட் நாவல்’ ஆரம்பித்தீர்கள்?”

“1981ல் அப்பா காலமாகி விட்டார். அவர் நடத்திக் கொண்டிருந்த பத்திரிகையை நான் ஆசிரியராகி தொடர்ந்து நடத்திக் கொண்டிருந்தேன். பத்திரிகை ஆசிரியராகும்போது என் வயது இருபதுதான். சில வருடங்களிலேயே மாத நாவல் நடத்த வேண்டும் என்று எனக்கு தோன்றியது. அப்பா, அப்போது நிறைய டைட்டில்ஸை ரெஜிஸ்டர் செய்து வைத்திருந்தார். அதில் ஒன்றுதான் ‘பாக்கெட் நாவல்’. 1971 வாக்கில் இந்த டைட்டிலில் சில மாத நாவல்களையும் கொண்டு வந்திருக்கிறார்.

அதையே மீண்டும் தூசு தட்ட முடிவெடுத்தேன். வெகுஜன இதழ்களில் எழுதிக் கொண்டிருந்த அத்தனை எழுத்தாளர்களுக்கும் கடிதம் எழுதி கதை கேட்டேன். மகரிஷி, வாஸந்தி, ராஜேந்திரகுமார், ராஜேஷ்குமார் உள்ளிட்டோர் உடனடியாக சம்மதம் தெரிவித்தனர். ராஜேஷ்குமார் நேராகவே சென்னைக்கு வந்துவிட்டார். சில எழுத்தாளர்களை அவரவர் வசிக்கும் ஊருக்கே போய் சந்தித்து கதை கேட்டேன். அதுவும் பட்டுக்கோட்டை பிரபாகரிடம் கதை வாங்க பட்டுக்கோட்டைக்கே போயிருந்தேன். பல எழுத்தாளர்கள் என்னை ஊக்குவித்தாலும், சிலரிடம் கசப்பான அனுபவங்களும் கிடைத்தன.
1985, நவம்பர் மாதம் ‘பாக்கெட் நாவல்’ முதல் இதழைக் கொண்டு வந்தேன். அப்போதிலிருந்து இன்றுவரை என்னை ஆதரிக்கும் ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், இரட்டை எழுத்தாளர்களான சுபா (சுரேஷ், பாலகிருஷ்ணன்) ஆகியோரின் படத்தைதான் இந்த 350வது இதழின் அட்டைப்படமாக கொண்டு வந்திருக்கிறேன். இதைவிட வேறெப்படி என்னால் நன்றியை தெரிவிக்க முடியும்?”

“இத்தனை ஆண்டுகளாக ஒரே வேலையை திரும்பத் திரும்ப செய்வது போல சலிக்கவில்லையா?”

“எப்படி சலிக்கும்? விரும்பிதானே இந்த வேலையை செய்கிறேன். ‘பாக்கெட் நாவல்’ கொண்டு வந்த காலத்தில் சந்தையில் சுமார் ஐம்பத்தோரு மாத நாவல்கள் எனக்கு போட்டியாக இருந்தன. அவர்களோடு போட்டியிட்டு முன்னணிக்கு வந்ததே சுவாரஸ்யமான பயணம். சொன்னால் நம்ப மாட்டீர்கள். பிரபலமான எழுத்தாளர்களான பாலகுமாரன், சிவசங்கரி உள்ளிட்டோர் எனக்குதான் முதன்முதலாக மாத நாவல் எழுதினார்கள். அதற்கு முன்பாக அவர்கள் இதழ்களில் எழுதும் தொடர்கள்தான் புத்தகமாகும்.

‘பாக்கெட் நாவ’லைத் தொடர்ந்து ராஜேஷ்குமாருக்கு என்றே ‘கிரைம் நாவல்’, பட்டுக்கோட்டை பிரபாகருக்கு என்றே ‘எ நாவல் டைம்’ (பின்னர் பாலகுமாரன் இதில் எழுதினார்), ‘குடும்பநாவல்’ என்று வரிசையாக மாதநாவல்களை தொடங்கினேன்.

மாதநாவல்கள் மட்டுமின்றி வேலைவாய்ப்புச் செய்திகளை வழங்கும் ‘ஜாப் கைடுலைன்ஸ்’ மாத இதழ், பங்குமார்க்கெட் தகவல்களை தரும் ‘பங்கு மார்க்கெட்’ வார இதழ், ‘சினிமாலயா’ என்கிற சினிமா மாதப் பத்திரிகை, ‘சக்தி காமிக்ஸ்’ என்கிற காமிக்ஸ் பத்திரிகை, ‘சுபயோகம்’ என்கிற ஜோதிடப் பத்திரிகை என்று ஏகத்துக்கும் பத்திரிகைகள் நடத்தியிருக்கிறேன். என் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாகவும், சுவாரஸ்யமாகவும் ஆக்கியவை நான் நடத்திய, நடத்தும் பத்திரிகைகள்தான்”

“மாத நாவல்களில் பெரிய வெற்றியை நீங்கள் எட்டியதற்கு என்ன காரணம்?”

“யார் நாவலை அனுப்பினாலும் வாசித்துவிட்டுதான் போடுவேன். பிரபலமான எழுத்தாளர் கொடுத்த கதையாக இருந்தாலும், வாசகர்களுக்கு தேவையான சுவாரஸ்யம் அதில் இல்லையென்றால், ‘வேறு கதை கொடுங்க’ என்று தைரியமாக கேட்பேன்.

எங்கள் பத்திரிகைகளை பெரிய பதவிகளில் இருப்பவர்கள் நிறைய பேர் வாசிக்கிறார்கள். குறிப்பாக காவல்துறையினர், நீதிபதிகள் மற்றும் வக்கீல்கள். கிரைம், அவங்க சப்ஜெக்ட் ஆச்சே? அதனால்தான் கதைத் தேர்வில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியிருக்கிறது. அதுவே என்னுடைய வெற்றிக்கு காரணம்.

ஒன்று தெரியுமா? ‘வேறு நாவல் கொடுங்க’ என்று நான் சொன்னபோதும் கோபப்படாமல் வேறு கதையை பிரபலமான எழுத்தாளர்கள் கூட கொடுத்திருக்கிறார்கள். வாசகர் பார்வையிலேயே இப்படி நான் கேட்கிறேன் என்பது அவர்களுக்குத் தெரியும். இந்த பரஸ்பர புரிதலும் நம்பிக்கையும்தான் 350 இதழ்களை நான் கொண்டு வரக் காரணம்”

“அடிக்கடி இலக்கிய நாவல்களையும் வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்துகிறீர்களே..?”

“எங்களுடைய ‘குடும்ப நாவல்’ வாசகர்களுக்கு இலக்கியமும் தேவைப்படுகிறது. சுந்தரராமசாமியின் ‘புளியமரத்தின் கதை’, க.நா.சு.வின் ‘பொய்த்தேவு’, ஹெப்சிபா ஜேசுதாஸனின் ‘புத்தம் வீடு’, அசோகமித்திரனின் ‘கரைந்த நிழல்கள்’ உள்ளிட்ட இலக்கிய நாவல்களை நாங்கள் வெளியிட்டதற்கு நல்ல வரவேற்பு. மூத்த படைப்பாளிகளுக்கு மரியாதை கொடுத்து சம்பந்தப்பட்ட படைப்புகளுக்கு அனுமதி வாங்கி, உரிய சன்மானம் கொடுத்துதான் வெளியிடுகிறோம்.

இதுதவிர கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’, ‘சிவகாமியின் சபதம்’, ‘பார்த்திபன் கனவு’, நா.பார்த்தசாரதியின் ‘மணிபல்லவம்’ மாதிரியான க்ளாசிக்குகளையும் பாகம் பாகமாக மாதந்தோறும் வெளியிட்டிருக்கிறோம்.

வெகுஜன வாசகர்களுக்கு இலக்கியத்தின் மீதும் ஈடுபாடு உண்டு. இந்த உண்மையை இலக்கியத்தில் இருப்பவர்களாக சொல்லிக் கொள்பவர்கள்தான் உணராமல் இருக்கிறார்கள். வெகுஜன வாசகர்கள் மீது தீண்டாமை அனுசரிக்கிறார்கள்.

அதிலும் ஜனரஞ்சக எழுத்தாளர்களை இலக்கியவாதிகள், தேசத் துரோகிகளாகவே பார்க்கிறார்கள். இம்மாதிரி இடைவெளி தீவிர இலக்கியத்துக்கும், வெகுஜன இலக்கியத்துக்கும் ஏற்பட்டு விட்டதால்தான் புதியதாக வெகுஜன எழுத்தாளர்கள் உருவாவது குறைந்திருக்கிறது.

தீவிர இலக்கியம் என்னும் சீரிய இடத்துக்கு வாசகர்களை ஏற்றிவிடும் ஏணியே வெகுஜன இலக்கியம்தான். அது உதாசீனப்படுத்தப் பட்டால் எதிர்காலத்தில் இலக்கிய எழுத்தாளர்கள் மட்டுமே இருப்பார்கள். வாசகர்கள் என்று யாரும் இருக்கமாட்டார்கள். அவரவர் எழுதியதை அவரவரே வாசித்துக் கொள்ள வேண்டியதுதான்”

“புதியதாக எழுத வருபவர்களில் நம்பிக்கை தரும் எழுத்தாளர்கள்..?”

“பெண் எழுத்தாளர்கள் அனைவரையுமே குறிப்பிடலாம். கீதாராணி, ஆர்.சுமதி, பரிமளா ராஜேந்திரன், ஜி.ஏ.பிரபா உள்ளிட்டோரை இதற்கு உதாரணமாக சொல்லலாம். ஆண் எழுத்தாளர்களில் ஜி.ஆர்.சுரேந்திரநாத், சுப.தனபால் ஆகியோர் நம்பிக்கை அளிக்கிறார்கள். தொடர்ச்சியாக எழுதியும் வருகிறார்கள்.

இன்னும் நிறைய புதிய எழுத்தாளர்களை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறேன். நிறைய கதைகள் பரிசீலனையில் இருக்கின்றன”

“இத்தனை ஆண்டுகளில் மறக்கமுடியாத அனுபவம் ஏதாவது..?”

“ஒருமுறை பட்டுக்கோட்டை பிரபாகரோடு சின்ன கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பிரபாகரின் அப்பா எங்கள் இருவரையும் அழைத்து, ‘தொழில் ரீதியாக உங்களுக்குள் பிரச்னை ஏற்பட்டால் இருந்துவிட்டு போகட்டும். ஆனால், நீங்கள் இருவருமே எனக்கு மகன்கள்தான். தனிப்பட்ட முறையில் உங்கள் நட்பு சிதையக் கூடாது’ என்று கூறி எங்களிடம் வாக்கு கேட்டார். அதிலிருந்து பிரபாகரிடம் மட்டுமல்ல. அத்தனை எழுத்தாளர்களிடமும் எதிர்ப்பார்ப்பில்லாத நட்பினை தொடர்கிறேன்”

“அடுத்து?”

“எங்கள் நாவல்களை இப்போது ‘நாவல் ஜங்ஷன்’ என்கிற இணையத்தளத்தில் பதிவேற்றுகிறோம். அயல்நாடுகளில் இருந்தெல்லாம் லட்சக்கணக்கானோர் வாசிக்கிறார்கள். குறிப்பாக பழைய கிளாசிக் நாவல்கள் இந்தத் தளத்தில் சக்கைப்போடு போடுகிறது.

நீண்டகாலமாகவே அரசியல் விமர்சன பத்திரிகை ஒன்று கொண்டுவரும் எண்ணம் இருக்கிறது. ‘கும்கி’ என்கிற மாத இதழின் மூலம் அந்த எண்ணம் விரைவில் நிறைவேறப் போகிறது.

பழம்பெரும் எழுத்தாளரும், காமிக்ஸ் உலகின் ஜாம்பவானுமாகிய முல்லை தங்கராசன் அவர்களின் அத்தனை படைப்புகளுக்கும் உரிமை வாங்கி வைத்திருக்கிறேன். வரிசையாக அவற்றை வெளியிடப் போகிறேன்” 

(நன்றி : குங்குமம்)

11 ஜூலை, 2017

திட்டுனதுக்கு தேங்க்ஸ் சார்!

அதிகாலை இரண்டு மணி.

பாக்யராஜ் வீட்டிங் காலிங்பெல் இடைவிடாமல் அடித்துக் கொண்டிருந்தது.

சற்றுமுன்னர்தான் தூங்கப் போயிருந்தவர் கண்களை கசக்கியபடியே கதவைத் திறந்தார்.

திருதிருவென்று விழித்துக் கொண்டு வெளியே பாண்டியராஜன் நின்றுக் கொண்டிருந்தார்.

“என்னய்யா இந்த நேரத்துலே?”

“உங்க கிட்டே முக்கியமான ஒரு விஷயம் பேசணும் சார்”

அப்போது ‘டார்லிங், டார்லிங், டார்லிங்’ படத்தின் படப்பிடிப்பு வேலைகள் ஜரூராக நடந்துக் கொண்டிருந்தது. ரிலீஸ் தேதி நெருங்கிக் கொண்டிருப்பதால் பாக்யராஜ் நெருப்பாக வேலை செய்துக் கொண்டிருந்தார். படப்பிடிப்பில் சின்ன சின்ன தடங்கல் நடந்தாலும், அவருக்கு அப்போது அசோசியேட்டாக இருந்த பாண்டியராஜனை பிடித்து காய்ச்சி எடுத்துவிடுவார். அன்றும் அப்படிதான் தேர்ட் டிகிரி லெவலில் பாக்யராஜ் திட்டியிருந்தார். அது சம்பந்தமாகதான் தன்னை பாண்டியராஜன் பார்க்க வந்திருப்பார் போலிருக்கிறது என்று பாக்யராஜ் நினைத்தார்.

“நீங்க என்னை இன்னிக்கு ரொம்ப அசிங்கமா திட்டுனீங்க இல்லே?”

“ஆமாய்யா. எனக்கே மனசு கஷ்டமா போயிடிச்சி. நான்தான் திட்டுறேன்னு தெரியுது இல்லே. நான் திட்டாதமாதிரி வேலை பார்க்க வேணாமா?”

“இல்லைங்க சார். நீங்க திட்டுனதுக்காக உங்களுக்கு ‘தேங்க்ஸ்’ சொல்ல வந்தேன்”

“திட்டுனதுக்கு தேங்க்ஸா? அதுவும் இந்த அகால வேளையிலே?” பாக்யராஜ், ஆச்சரியமாக கேட்டார்.

“ஆமாம் சார். நீங்க என்னை திட்டுனதை புரொடியூஸர்களான மாணிக்கவாசகமும், சண்முகராஜனும் பார்த்திருக்காங்க. இவன்தான் பாக்யராஜு கிட்டே நிறைய திட்டு வாங்கியிருக்கான். அப்போன்னா விஷயமுள்ள பையனாதான் இருக்கணும்னு சொல்லி, என்னை டைரக்ட் பண்ணச் சொல்லி காசு அட்வான்ஸ் கொடுத்திருக்காங்க சார்”

“ஆஹா. என் திட்டுலே இப்படியொரு நன்மை நடக்குதா? இனிமே எல்லாப் பயலையும் காச்சு மூச்சுன்னு திட்டி தீர்த்துடறேன். பாண்டி, உனக்கு நல்ல நேரம் ஆரம்பிச்சிருக்கு. நீ நல்லா வருவே” ஆசிர்வதித்து அனுப்பினார் பாக்யராஜ்.

மறுநாள் தயாரிப்பாளர்களிடம் ‘கன்னிராசி’ கதையை சொன்னார் பாண்டியராஜன். அவர்களுக்கு மிகவும் பிடித்துப் போக, “ஹீரோவா பிரபுவை போட்டா நல்லாருக்கும்” என்று ஆலோசனையும் சொன்னார்கள்.

பிரபுவுக்கு கதை சொல்ல ‘அன்னை இல்லம்’ விரைந்தார் பாண்டியராஜன். அப்போது பிரபுவின் சித்தப்பா சண்முகம்தான் கால்ஷீட் பார்த்துக் கொண்டிருந்தார். அவரிடம் கதை சொல்லாமல், பிரபுவின் கால்ஷீட்டை வாங்க முடியாது.

பாண்டியராஜன் குள்ளம் என்பது ஊருக்கே தெரிந்ததுதான். அப்போது மிகவும் ஒல்லியாகவும் இருப்பார். வயது இருபத்தைந்து ஆகியிருந்தாலும், பார்ப்பதற்கு +2 படிக்கும் பையன் மாதிரிதான் இருப்பார்.

சண்முகம் இவரை ஏற இறங்க பார்த்தார். நடிகர் திலகம் பாணியிலேயே, “நீதான் டைரக்டரா? நீதான் கதை சொல்லப் போறீயா? சொல்லு பார்ப்போம்” என்று சொல்லிவிட்டு ஓரமாக இருந்த சோபாவில் சாய்ந்து படுத்துக் கொண்டார்.

பாண்டியராஜன் கதை சொல்ல ஆரம்பித்தார். கொஞ்ச நேரத்திலேயே சண்முகம் தூங்கிவிட்ட மாதிரி தெரிந்தது. தூங்கிவிட்டார் போல என்று இவர் கதையை சொல்வதை நிறுத்தினால், சைகை செய்து மேலே சொல்லு என்கிறார். இவர் தர்மசங்கடத்துடன் தாலாட்டு பாடியதை போல கதை சொல்லி முடிக்கிறார்.

சண்முகத்திடம் நீண்ட அமைதி. பாண்டியராஜனோ, ‘இது வேலைக்கு ஆகாது. நிச்சயமாக பிரபுவோட கால்ஷீட் கிடைக்காது’ என்கிற மனநிலைக்கு வந்துவிட்டார்.

சண்முகத்திடம் இருந்து குரல் வருகிறது. “அப்புறம்?”

“அவ்ளோதான் சார். கதை முடிஞ்சிடிச்சி”

“சரி. நீ போ. நான் புரொடியூஸர் கிட்டே பேசிக்கறேன்”

தன்னுடைய கதை சண்முகத்துக்கு பிடிக்காமல்தான் தூங்கிவிட்டாரோ அல்லது அவருக்கு தூக்கம் வருமளவுக்கு நாம் கதை சொல்லியிருக்கிறோமோ என்று பாண்டியராஜனுக்கு குழப்பம்.

மறுநாள் புரொடியூஸர் பாண்டியராஜனை கூப்பிட்டார்.

“என்னய்யா செஞ்சிருக்கே?”

“சார்”

“நீ சொன்ன கதையை ஒரு சீன் கூட மாத்தாம அப்படியே படம் புடிக்கிறதா இருந்தா பிரபுவோட கால்ஷீட்டை கொடுக்கிறேன்னு சண்முகம் சார் சொல்லிட்டாரு. அவருக்கு உன்னை ரொம்ப பிடிச்சிப் போச்சி”

அப்போதுதான் போன உயிரே திரும்பி வந்தது. வேண்டுமென்றே தன்னை விளையாட்டுக்கு சீண்டியிருக்கிறார் சண்முகம் என்பதை புரிந்துக் கொண்டார் பாண்டியராஜன்.

பல்வேறு சிரமங்களுக்கு பிறகு ‘கன்னிராசி’ வெளியாகி, சக்கைப்போடு போட்டது.

இருந்தாலும் பாண்டியராஜனை யாருக்குமே அடையாளம் தெரியவில்லை. அவருக்கு அட்வான்ஸ் தர வந்தவர்கள் எல்லாம் 101, 201 என்றே உப்புமா டைரக்டர்களுக்கு கொடுப்பது மாதிரி கொடுக்க வந்தார்கள். எப்படியோ சிரமப்பட்டு அடுத்த படத்துக்கு புரொடியூஸரை பிடித்துவிட்டார்.

ஒரு படம் ஓடினால்கூட டைரக்டருக்கு மரியாதை இல்லை. நடிகரைதான் மக்கள் மதிக்கிறார்கள் என்று அவருக்கு தோன்றியது. எனவே ‘ஆண் பாவம்’ படத்தில் இரண்டு ஹீரோக்களில் ஒருவராக அவரே நடித்தார்.

1985. கிறிஸ்துமஸ் முடிந்து இரண்டு நாட்களுக்கு பிறகு படம் ரிலீஸ். சென்னை நகரம் முழுக்க தன்னுடைய படம் அச்சிடப்பட்ட போஸ்டரை தானே நேரில் போய் ஒட்டிக் கொண்டிருந்தார் பாண்டியராஜன். உதயம் தியேட்டரில் முதல் காட்சி ஆரம்பிக்கப் போகிறது. தியேட்டர் வாசலில் கூலிங்கிளாஸெல்லாம் போட்டு பந்தாவாக வந்து நின்றார் இவர். போஸ்டரை பார்த்தவர்களுக்கு கூட இவர்தான் ஹீரோ என்பதே தெரியவில்லை. ‘கஷ்டப்பட்டு போஸ்டர் அடிச்சதெல்லாம் வீணாப்போச்சி போலிருக்கே? கடைசிவரைக்கும் ஒரு பய நம்மளை அடையாளம் கண்டுபிடிக்கலையே?’ என்று நொந்துப் போனார்.

முதல் காட்சி முடிந்து கூட்டம் வெளியே வந்தது. “ஏய், படத்துலே சின்ன பாண்டியா நடிச்சவரு அவருதாண்டா” என்று கத்தியபடியே இவரை கூட்டம் சூழ்ந்தது. ஆளாளுக்கு கைகுலுக்குகிறார்கள். பாராட்டுகிறார்கள். இவரிடம் ஆட்டோகிராப் வாங்குகிறார்கள். பாண்டியராஜனால் இதை நம்பவே முடியவில்லை. மூன்று மணி நேரத்துக்கு முன்பாக தனிமரமாக அதே இடத்தில் நின்றிருந்தார். இப்போது அவரை சுற்றி அவ்வளவு ரசிகர்கள். ஆர்வமிகுதியில் அவரை தோள்மீது தூக்கி தியேட்டர் வளாகத்தில் ஊர்வலமாக ஓடுகிறார்கள்.

உள்ளே ‘ஆண் பாவம்’ அடுத்த காட்சி ஆரம்பித்தது.

வைரமுத்துவின் வைரவரிகள் இளையராஜா குரலில் டைட்டில் பாடலாக ஒலிக்கிறது.

“இந்திரன் வந்ததும்
சந்திரன் வந்ததும்
இந்த சினிமாதான்
எம்ஜிஆர் வந்ததும்
என்டிஆர் வந்ததும்
இந்த சினிமாதான்
கட்சி வளர்த்ததும்
ஆட்சி பிடிச்சதும்
இந்த சினிமாதான்...”

(நன்றி : ‘பழைய பேப்பர்’ தொடர் - தினகரன் வெள்ளிமலர்)

4 ஜூலை, 2017

கட்டுரை எழுதுவது எப்படி?

‘புதிய தலைமுறை’ இதழில் பணிக்கு சேரும்போது ‘எழுதுவது எப்படி?’ என்று மாலன், தான் எழுதிய பதினாறு பக்க சிறுநூல் ஒன்றை தந்தார். சி.பா.ஆதித்தனாரின் ‘இதழாளர் கையேடு’ போன்ற அந்நூல் ஊடகத்துறையில் பணிபுரிபவர்களுக்கு மிகவும் பயன்படும். பல பத்திரிகை ஆசிரியர்கள் அந்த நூலை ஜெராக்ஸ் போட்டுக்கொண்டு திருப்பித் தருகிறோம் என்று கேட்டார்கள். அதுமாதிரி ஒருவரிடம் போன copy இன்னமும் எனக்கு திரும்ப வரவில்லை. மாலன் சார், ஒரு soft copy கொடுத்தால் மகிழ்ச்சி.

அது மட்டுமின்றி அவ்வப்போது நம்முடைய கட்டுரைகளை திருத்தும்போது என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது என்பதை கவனித்து, அடுத்தமுறை அந்த தவறை திருத்திக் கொள்ளும்படி அறிவுறுத்துவார்.

ஒருமுறை ‘இந்தித் திணிப்பு’ குறித்து நான் எழுதியிருந்த கட்டுரை ஒன்று அரைகுறையாக வெந்திருந்தது. அதை வாசித்துவிட்டு, ‘கட்டுரை எழுதுவது எப்படி?’ என்று ஒரு மடலில் சில அறிவுறுத்தல்களை வழங்கினார். முடிந்தவரை அதை இன்றுவரை கடைப்பிடிக்கிறேன்.

‘யாம் பெற்ற இன்பம், பெறுக இவ்வையகம்’ என்று மாலன் சாரின் அனுமதியில்லாமலேயே அதை இங்கு பகிர்கிறேன். அவருக்கு தகவல்களை பரப்புவதில் பேரார்வம் உண்டு. எனவே எனக்கே எனக்காக கொடுத்த அறிவுரைகள் பலருக்கும் பயன்பட பகிர்வதை ஆட்சேபிக்க மாட்டார் என்றும் கருதுகிறேன். இப்போது சமூக வலைத்தளங்களில் ஏராளமானோர் கட்டுரைகள் எழுதிவருகிறார்கள். பத்திரிகையாளர்கள் மட்டுமின்றி இவர்களுக்கும் மூத்தப் பத்திரிகையாளரின் அனுபவ அறிவுறுத்தல்கள் உதவக்கூடும்.
--------------------

கட்டுரைகள் எழுதுவது எப்படி?
by மாலன்

1. கட்டுரையின் மையம் -focus- என்பதை எழுதத் துவங்கும் முன்னரே தீர்மானித்துக் கொள்ளுங்கள். உங்களிடம் கட்டுரை எழுதும் பணி ஒப்படைக்கப்படும் போது அதைக் குறித்துக் கேட்டுத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்.

உதாரணமாக இந்தித் திணிப்புப் பற்றிய கட்டுரையை பல்வேறு விதங்களில் எழுதலாம். இந்திப் போராட்டங்களின் வரலாற்றைப் பற்றி எழுதுவது ஒரு வகை. நாம் current affairs பத்திரிகை. அதில் வரலாற்றுக்கு முக்கியத்துவம் இல்லை. வரலாற்றுக் கட்டுரைகளாக வருமிடங்களைத் தவிர மற்ற இடங்களில் வரலாற்றை மையமாகக் கொண்டு எழுதுவதைத் தவிர்க்க வேண்டும்.

செய்தித் தாளிலிருந்து தலைவர்கள் அறிக்கைகளைத் தொகுத்து எழுதுவது ஒரு வகை. ஆனால் அது அரைத்த மாவு.

இந்தத் திணிப்பின் காரணங்கள் என்ன, விளைவுகள் என்ன என்பதை மையப்படுத்தி எழுதுவதே சுவையும் பயனும் தரும். அப்படி எழுத விளைவுகள் என்ன என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டும். சிந்தனையும் உழைப்பும் இல்லாமல் சிறந்தவை உருவாவதில்லை

2. மையத்தைத் தீர்மானித்த பிறகு அதற்கான தரவுகளைத் திரட்ட வேண்டும். உதாரணத்திற்கு இந்திக் கட்டுரைக்கே வருவோம். அந்த ஆணையில் இடம் பெற்றுள்ள வாசகங்கள் என்ன? அது என்று வெளியிடப்பட்டது போன்ற தகவல்களைத் திரட்ட வேண்டும்.

3. தரவுகளைத் திரட்டிய பின் அவை அனைத்தையும் மொத்தமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. கட்டுரையில் முன் வைக்கப்படும் கருத்திற்கு ஏற்ப உரிய இடத்தில் தரவுகளிலிருந்து தேவையானவற்றை மட்டும் பொருத்தமாகப் பயன்படுத்த வேண்டும்.

4. தரவுகளைத் திரட்டும் போது புதிய கோணங்களோ, புதிய செய்திகளோ கிடைக்கலாம். அப்படி ஏதும் கிடைக்குமானால் அது மையப்புள்ளியிலிருந்து மாறுபட்டதாக இருக்குமானால் அதை ஆசிரியரிடம் விவாதித்து தெளிவு பெற வேண்டும்

5. கட்டுரைகளை எழுத உட்காரும் முன் அதனுடைய வடிவம் –format- என்ன என்று தீர்மானித்துக் கொள்ள வேண்டும். உள்ளடக்கமே வடிவத்தைத் தீர்மானிக்கும் என்ற அடிப்படை விதியை நினைவில் கொள்க. பொருளாதரம், அறிவியல், அரசிடமிருந்து பயனர் பெறுவதற்கான விதிகள் போன்ற எளிதில் விளங்கிக் கொள்ள இயலாத, செய்திகளை கேள்வி பதில் வடிவில் எழுதலாம். உலர்ந்த விஷயங்களை வாசிக்க சுவாரஸ்யமாக கதை வடிவில் எழுதலாம். நச்சென்று முகத்தில் அறைவது போன்ற விஷயங்களை கடித வடிவில் எழுதலாம். விவாதத்திற்குரிய விஷயங்களை முழுவதும் உரையாடலாக எழுதலாம். எல்லாக் கட்டுரைகளும் பள்ளிக் கூட வியாசங்களாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை

6. எப்படிக் கதைக்கு முதல் வரி முக்கியமோ அதைப்போல கட்டுரையின் துவக்கம் முக்கியம். முதல் வரியின் முக்கியத்துவம், அவற்றின் வகைகள் பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன். அவற்றை மீண்டும் ஒருமுறை வாசியுங்கள். கட்டுரைகளை, சம்பவங்களில் துவக்கலாம். மேற்கோள்களில் துவக்கலாம். உதாரணங்களில் துவக்கலாம். கேள்விகளில் துவக்கலாம் (விஷயம் கேள்விப்பட்டீங்களா? என்று துவங்கும் பழைய முறைதான் தகவல் பரிமாற்றத்தில் இப்போதும் இருந்து வருகிறது என்பதைக் கவனித்திருக்கிறீர்களா?) அதிர்ச்சி தரும் ஒரு வாக்கியத்தில் துவங்கலாம். புனையப்பட்ட ஒரு கதையில் துவங்கலாம். மோனை நயம் பொலியும் ஒரு வாக்கியத்தில் துவங்கலாம். வாய்ப்புக் கிடைக்கும் போது நம் தலையங்கங்களை எடுத்துக் கொண்டு அவற்றின் ஆரம்பங்களை மட்டும் ஆராய்ந்து பாருங்கள். காலத்தின் குரல் நம் நூலகத்தில் இருக்கிறது.

7. கட்டுரைகளின் நடை ஒரு சீராக, ஒரு செய்தியிலிருந்து அடுத்தற்கு இட்டுச் செல்வதாக அமைய வேண்டும். அதற்குரிய transition உத்திகளைப் பின்பற்ற வேண்டும்.

8. பாக்ஸ் என்பது அட்டிகை ஆறாவது விரல் அல்ல. கட்டுரைக்கு அதில் உள்ள தகவல் அவசியம் இல்லை. ஆனால் அந்தக் கூடுதல் தகவல் அதற்கு அழகு அல்லது கனம் சேர்க்கும். எனவே எழுதும் போதே அதைப் பிரித்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.

9. முடிவு முக்கியம்/ ஆரம்பம் எவ்வளவு முக்கியமோ அந்த அளவு முடிவும் முக்கியம் முடிவு என்பது அந்தக் கட்டுரையின் சாரம் முழுவதையும் தொகுப்பதாக இருக்கலாம். கட்டுரையின் மையத்தை நினைவுபடுத்திக் கேள்வி எழுப்புவதாக இருக்கலாம். ’பஞ்ச்’க்கான இடம் அது. ‘காலம்தான் பதில் சொல்ல வேண்டும், பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும், ’என்பதோடு முடித்துக் கொண்டார்’ ‘அவரிடமிருந்து விடை பெற்றோம்’ என்பது போன்ற மொக்கை முடிவுகள் வேண்டாம்

10. intro எனப்படும் அறிமுகக் குறிப்பு. கட்டுரையின் மொத்தத்தையும் ஒரு வரியில் சொல்லும் திருக்குறள். இந்தக் கட்டுரையைப் பற்றி நீங்கள் உங்கள் நண்பரிடம் உரையாடலில் சொல்வதானால் என்ன சொல்வீர்களோ அதுதான் அறிமுகக் குறிப்பு. பாண்டிச்சேரியில் ஆழ்கடல் டைவிங் சொல்லித் தராங்க நான் போயிருந்தேன் என்றோ, ஆர்ட்ஸ் காலேஜ் படிப்புக்கு இந்த முறை டிமாண்ட் அதிகமாயிருச்சாமே என்றோ, இருக்கிற வேலையெல்லாம் விட்டு எதுக்கு இப்போ இந்திப் பிரச்சினையை கிளப்பறாங்க என்றோ சொல்வீர்கள் இல்லையா அதுதான் அறிமுகக் குறிப்பு.

11. தலைப்பு மிக மிக முக்கியம். அதுதான் வாசகரைக் கட்டுரைக்குள் இழுக்கும் விஷயம். அதில் கவனத்தில் கொள்ள வேண்டியது அது நாளிதழ் தலைப்புப் போல இருக்கக் கூடாது. நாம் பத்திரிகைகள். நாளிதழ்கள் அல்ல. நம் இருவரின் நோக்கமும் சுவையும் வேறு. ஒரே மாவில் இருந்து செய்தாலும் இட்லியும் தோசையும் வேறு வேறு. கேள்விகள், கிண்டல்கள், சீண்டல்கள் ஆச்சரியங்கள் பெருமிதம்,சினம் இப்படி ஏதேனும் ஓர் உணர்வை வெளிப்படுத்த வேண்டும் (நாளிதழ் தலைப்புக்கள் வெளிப்படுத்தாது/ வெளிப்படுத்தக் கூடாது) நயமாக இருக்க வேண்டும். நாகரீகமாக இருக்க வேண்டும். கருணாநிதிக்கு சிபிஐ ஆப்பு, பழனிமாணிக்கம் பதவி டர்ர்ர்ர் என்பதெல்லாம் கூடாது.

12. கட்டுரை மட்டுமல்ல, எதை எழுதும் போதும் எழுத்தாளன் வாசகனாகிவிட வேண்டும். ஒரு வாசகனாக இதை நாம் படித்தால்…. என்ற எண்ணம் நினைவில் ஒரு ஓரத்தில் இருந்து கொண்டே இருக்க வேண்டும்

முழுமனதோடு முயற்சியுங்கள். நல்ல கட்டுரை நிச்சயம் உருவாகும்.

MCR / MCP chappals

சில மாதங்களுக்கு முன்பாக மிகக்கடுமையான முதுகுவலியில் அவதிப்பட்டுக் கொண்டிருந்தேன். குறிப்பாக இருசக்கர வாகனம் ஓட்டும்போது நடுமுதுகில் நெருப்பை எடுத்துக் கொட்டியது மாதிரி எரியும். இரவில் வீட்டுக்குச் சென்ற பிறகும் இந்த எரிச்சல் குறையாது. தூக்கம் வராது.

தெரிந்த சில மருத்துவர்களிடம் கேட்டபோது அலுவலக இருக்கையை மாற்றிப்பார் என்றார்கள். முயற்சித்தேன். சில நாட்களுக்கு சரியான மாதிரி இருந்தது. மீண்டும் எரிச்சல் தொடங்கும்.

அப்போதுதான் MCR chappals பற்றி சில நண்பர்கள் குறிப்பிட்டிருந்தார்கள். மயிலாப்பூரில் National Leather Works என்கிற நூற்றாண்டு காணப்போகும் செருப்புக்கடை ஒன்று இருக்கிறது. புரட்சித்தலைவி அம்மாவுக்கே இவர்கள்தான் செருப்பு செய்துக் கொடுத்தவர்கள் (சொத்துக் குவிப்பு வழக்கில் இவர்களுடைய சாட்சியமும் உண்டு). சிவராமன் அண்ணன் அந்தக் கடைக்கு அழைத்துச் சென்று ஒரு ஜோடி செருப்பு வாங்கிக் கொடுத்தார்.

கிட்டத்தட்ட ஆறு மாதங்களாக அந்த செருப்பைதான் வாரத்துக்கு மூன்று அல்லது நான்கு நாட்கள் பயன்படுத்துகிறேன். முதுகு எரிச்சல் கொஞ்சமும் இல்லை.

ஒரிரு தலைமுறைக்கு முன்பு செருப்பு என்பது ஆடம்பரமாக இருந்திருக்கிறது. மனிதர்கள் பெரும்பாலும் செருப்பை பயன்படுத்தாமலேயே நடந்திருக்கிறார்கள். கடந்த நாற்பது ஆண்டுகளாக செருப்பு என்பது உடையை போலவே அத்தியாவசியமான அணிகலனாக ஆகிவிட்டது. செருப்பு அணிந்து நடக்கும்போது நம்முடைய இயல்பான நடை மாறுவதால், நரம்புகளில் ஏதோ பிரச்சினை ஏற்பட்டு இடுப்பு, முதுகுவலிகள் ஏற்பட காரணமாகின்றன. மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகள் தற்காலிக நிவாரணம் தருகின்றனவே தவிர, பிரச்சினையை முற்றிலுமாக தீர்ப்பதில்லை. எனவே ஆர்த்தோ மருத்துவர்களே MCR/MCP செருப்புகளை சமீபகாலமாக தங்கள் பேஷண்டுகளுக்கு பரிந்துரைத்து வருகிறார்கள்.

Multicellular rubber (MCR), Multicellular polyurethane (MCP) செருப்புகள் சிறப்பு ரப்பர் மூலப்பொருட்களால் உருவாக்கப்படுபவை. இவற்றை அணிந்து நடக்கும்போது நம்முடைய இயல்பான நடையில் எந்த மாற்றமும் இருப்பதில்லை. நரம்பியல்ரீதியான பிரச்சினையும் ஏற்படுவதில்லை. என் அம்மாகூட மூட்டுவலி பிரச்சினை கொண்டவர். அவரும் MCP செருப்புகளைதான் பயன்படுத்துகிறார்.

விலை கொஞ்சம் கூடுதல்தான். நான் பயன்படுத்தும் அடிப்படை மாடல் செருப்பே 500 ரூபாயில்தான் தொடங்குகிறது. ஏற்கனவே தயார் செய்திருக்கும் செருப்பை நேஷனல் லெதர் நிறுவனத்தார் விற்பதில்லை. நம் கால் அளவுக்கு ஏற்ப, புதுசாக தயார் செய்து கொடுக்கிறார்கள். MCR / MCP முறையில் ஷூ வேண்டுமென்றால், அதையும் செய்துக் கொடுக்கிறார்கள் (விலை ரூ.1500 வரலாம்)

தலித்துகளுக்கு திமுக என்ன செய்தது?

திமுக தலித்துகளுக்கு என்ன செய்தது என்று முன்பு பார்ப்பனர்கள் வாயால் ஏரோப்ளேன் ஓட்டிக் கொண்டிருந்தார்கள். பார்ப்பனர்கள் சொன்னால் பரமனே சொன்னமாதிரி என்று நம்பும் தலித்துகளும் இப்போது ஹெலிகாஃப்டர் ஓட்ட ஆரம்பித்திருக்கிறார்கள். இந்தியாவிலேயே திமுக அரசு அளவுக்கு தலித்துகளுக்கு நலத்திட்டங்களை சிந்தித்து செயல்படுத்தியவர்கள் வேறெங்கும் இல்லை.

சில உதாரணங்கள் :

- நாட்டிலேயே ஆதிதிராவிடருக்கு என்று தனியாக நலத்துறை அமைத்து அதற்கு பிரத்யேகமாக அமைச்சரை நியமித்தது திமுகவே.

- கலப்பு மணத்தை சட்டரீதியாக அங்கீகரித்ததோடு மட்டுமின்றி, கலப்புமணம் செய்துக் கொள்வோர்களுக்கு பரிசுகள், தொழிற்கடன் போன்றவற்றை வழங்கும் திட்டங்களை தொடங்கியதே திமுக அரசுதான்.

- ஆதிதிராவிடருக்கு என்று தனியே வீட்டு வசதிக்கழகம் உருவாக்கியது திமுக ஆட்சி. இந்த திட்டத்தால் கவரப்பட்ட மத்திய அரசு, அதை நாடெங்கும் விரிவுப்படுத்தி ‘இந்திரா வீட்டுவசதித் திட்டம்’ என்று கொண்டுச் சென்றது. தமிழகத்தில் திமுக ஆட்சிக்காலங்களில் மட்டுமே ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட கான்க்ரீட் இல்லங்கள் இந்த திட்டத்தின் மூலம் கட்டிக் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 16% ஆக இருந்த இடஒதுக்கீடை 18% ஆக உயர்த்தியது திமுக அரசே. 1989ல் ஆட்சிக்கு வந்தவுடன் பொதுப்பிரிவில் இருந்து 1%ஐ எடுத்து பழங்குடியினருக்கு தனிஒதுக்கீடு கொடுத்து, ஆதிதிராவிடருக்கே ஒட்டுமொத்த 18% இடஒதுக்கீடும் கிடைக்க வழிசெய்தது. பிற்பாடு அருந்ததியருக்கு உள் ஒதுக்கீடு செய்ததும் திமுக அரசே.

- மதம் மாறிய ஆதிதிராவிட கிறிஸ்தவர்களின் முதல் தலைமுறைக்கு மட்டும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் இடஒதுக்கீடு என்றிருந்த நிலைமையை மாற்றி, எல்லா தலைமுறையினருக்கும் இடஒதுக்கீடு என்கிற ஆணையை பிறப்பித்தது திமுக அரசாங்கம்.

- அரசுப் பதவிகளில் ஆதிதிராவிடர்/பழங்குடியினருக்கான பதவிகள் நிரப்பப்படாத நிலை இருந்தால், அந்த காலியிடங்களையே இடஒதுக்கீட்டில் இருந்து எடுத்துவிடும் நிலை இருந்தது. ஓர் அரசாணையின் மூலம் அந்த போக்கினை மாற்றி ஏராளமான SC/ST இளைஞர்கள் அரசுப்பணிகளில் சேர காரணமாக இருந்தது திமுக அரசே.

- திமுகவின் கனவுத்திட்டமான பெரியார் நினைவு சமத்துவபுரங்களில் ஆதிதிராவிடர்களுக்கு 40% வீடுகள் இடஒதுக்கீடு செய்யப்பட்டன.

- 96ஆம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்றவுடன் சுமார் 3 லட்சம் ஆதிதிராவிடர்களுக்கு வீட்டுமனை வழங்கப்பட்டது.

- ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் தனிப்பள்ளிகள், கணினிக் கல்வி கற்க ஆய்வகங்கள், மாணவ/மாணவியர் விடுதிகள், உணவுச்சலுகை என்று கல்விரீதியாக தலித் மக்களை முன்னேறச் செய்த திட்டங்கள் அனைத்தும் திமுக ஆட்சியின் சிந்தனைகளே.

- சென்னை வியாசர்பாடியில் அண்ணல் அம்பேத்கர் பெயரில் கலைக்கல்லூரி, அம்பேத்கரின் நூற்றாண்டையொட்டி சென்னை சட்டக்கல்லூரிக்கு அம்பேத்கர் பெயர், அம்பேத்கரின் பெயரில் இந்தியாவின் முதல் சட்டப்பல்கலைக்கழகம், கக்கனுக்கு மதுரையில் சிலை நினைவு மண்டபம், வீரன் சுந்தரலிங்கம் பெயரில் பாஞ்சாலங்குறிச்சி அருகே நகரம் என்று தலித் தலைவர்களின் நினைவைப் போற்றும் ஏராளமான செயல்பாடுகளை திமுக ஆட்சி அமைத்தபோதெல்லாம் நிகழ்த்திக் காட்டியிருக்கிறது.

திமுகவின் சாதனைத் துளிகளில் இவை குறைவே. கடலளவு திட்டங்களும், செயல்பாடுகளும் இன்னும் உண்டு. அவற்றையெல்லாம் எடுத்துச் சொல்ல தனிநூல் தான் எழுத வேண்டும்.

தலித்துகளின் காவலன் திமுகவே. அந்த சமுதாயத்தை சேர்ந்த மக்கள் கல்வி கற்க வேண்டும், நல்ல பணிகளில் சேரவேண்டும் என்கிற அக்கறை கொண்ட ஒரே இயக்கம் தமிழகத்தில் திமுக மட்டும்தான். மற்ற கட்சிகளை போல அவர்களை வெறும் ஓட்டு வங்கியாகவும், கூட்டம் சேர்க்கவும் பயன்படுத்தும் இயக்கம் திமுகவல்ல.

திமுகவை தலித் விரோதி என்று நிறுவ முற்படுபவர்கள், இவ்வளவு திட்டங்களை தலித்துகளுக்காக முன்னெடுத்த அரசு ஏதேனும் இந்தியாவில் உண்டா என்பதை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கவும்.

பொய், புளுகு, பித்தலாட்டங்கள் மலிந்திருக்கும் சூழலில் நிஜமான அக்கறையின் பேரில் திமுக செய்த இதையெல்லாம் சொல்லிக் காட்டி புரியவைக்க வேண்டியிருக்கிறதே என்பதை நினைத்தாலே வேதனையாக இருக்கிறது  

குழப்பத்துக்கு பிறந்தவனுங்க!

நான் சைக்கிள் கத்துக்க ஆரம்பிச்சப்போ கடையிலே பத்தாம் நம்பர் சைக்கிள் இல்லைன்னா, ஆணியே புடுங்க வேணாம்னு போயிடுவேன். கடைக்காரர், ‘டேய், ஏழாம் நம்பர் எடுத்துட்டு போடா’ன்னு சொல்லுவாரு. பசங்க யாருமே ஏழாம் நம்பரை தொடமாட்டோம். பார் இல்லாத சைக்கிளை ஓட்டிக்கிட்டு போனா, ஆண்மைக்கு இழுக்குன்னு அப்படியொரு மூடநம்பிக்கை அப்போ.

இப்போ ஒரு இருபத்தஞ்சி வருஷம் கழிச்சிப் பார்த்தா எந்த சைக்கிளிலும் பாரே இல்லை. கேட்டா unisex சைக்கிள்னு சொல்றானுங்க. சைக்கிள் ரேட்டும் பன்னெண்டாயிரம், பதினஞ்சாயிரமாம். வாடகை சைக்கிள் கடையே எங்கேயும் இருக்குறதா தெரியலை. சைக்கிள் ஓட்ட கத்துக்கணும்னா சொந்தமாதான் சைக்கிள் வாங்கணும். அதுவுமில்லாமே இப்போ யாரு சைக்கிள் கத்துக்கறாங்க, டைரக்டா பைக்குதான். முன்னாடி டைப்ரைட்டிங் இன்ஸ்ட்யூட்டுக்கு போய் ஜூனியர், சீனியர், ஹைஸ்பீடுன்னு எக்ஸாமெல்லாம் எழுதி கவர்மெண்ட் சர்ட்டிஃபிகேட் வாங்குவோம். இப்போ டைரக்டா எல்லாரும் கம்ப்யூட்டரில் டைப் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க.

93-94 வாக்கில் காட் ஒப்பந்த எழவுலே கையெழுத்து போட்டாலும் போட்டானுங்க. நாட்டுலே என்ன எழவு நடக்குதுன்னே தெரியலை. unisexஆதான் எல்லா பிராக்டக்ட்டை கன்ஸ்யூமரிசேஸன் செய்ய வேண்டியிருக்குன்னு சொல்லுறாங்க. “மேல்நாட்டுலே இன்னும் barbie பொம்மை சேல்ஸ் அப்படியேதானேடா இருக்கு? இங்கே மட்டும் ஏன் மரப்பாச்சி பொம்மையை காணோம்?”னு கேட்டா எம்.பி.ஏ. படிச்சவனுங்களுக்கே ஆன்ஸர் தெரியலை.

திடீர்னு பார்த்தா லேடீஸெல்லாம் ஜெண்ட்ஸ் மாதிரி கிராப் வெட்டிக்கிறதை இங்கே சமூகக் கடமையாக பெண்ணியப் போராட்ட வடிவத்துலே நடத்துறாங்க. இன்னும் ஹாலிவுட் ஹீரோயின்களே கூட நீளமா லூஸ் ஹேர் விட்டுக்கிறதை அப்பப்போ சினிமாவிலே எல்லாம் பார்க்குறோம். நம்மூருலே என்னதான் நடக்குதுன்னு புரியலை. தமிழனின் பாரம்பரியத்தை காப்பாத்தணும்னு ஜல்லிக்கட்டுலே கோஷம் போட்டுக்கிட்டிருந்த பொண்ணு, இப்போ பிக்பாஸ் புரோகிராம்லே இளம் நடிகன் ஒருத்தனுக்கு ரூட்டு விட்டிக்கிட்டிருக்கு.

நம்மாலே முழுமையா மேற்கத்திய நாகரிகத்துக்கும் adopt ஆகமுடியலை. இங்கே establish ஆன பண்பாட்டையும் கத்தரிச்சிக்கிட்டு போக முடியலை. பீட்ஸா வடிவத்துலே களி கிண்டிக்கிட்டிருக்கோம்.

முன்னெப்போதையும்விட கடுமையான குழப்பத்தில் வாழ்ந்துக்கிட்டிருக்கிறது நம்ம தலைமுறைதான்னு நெனைக்கிறேன். அரசாங்கம் நிறைய மனநோய் விடுதிகளை திறக்கணும். அதுக்கான தேவை அதிகரிச்சிக்கிட்டே போகுது :(