22 ஜூலை, 2017

ரஜினி - கமல்


ரஜினியும், கமலும் சேர்ந்து நடித்துக் கொண்டிருந்த காலத்தில் நான் தூளியில் தூங்கிக் கொண்டிருந்தேன். நினைவு தெரிந்தபோது இருவரும் எதிரெதிர் துருவமாக வளர்ந்து நிற்கிறார்கள். தனித்தனியாக தாங்கள் வளருவதற்காக இருவரும் சேர்ந்து பேசி எடுத்த முடிவு என்றார்கள்.

அவ்வப்போது இருவரும் இணைந்து நடிக்கப் போகிறார்கள் என்று பத்திரிகைகள் பரபரப்பாக ஏதாவது எழுதும். ரஜினியோ, கமலோ அதை கண்டுகொண்டதே இல்லை.

பிறவி கமல் ரசிகனான எனக்கு ரஜினியோடு அவர் சேர்ந்து நடிப்பதில் விருப்பமே இருந்ததில்லை. ஏனெனில், ரஜினிக்கு நடிக்கவே தெரியாது என்று உறுதியாக இருந்தேன். தொண்ணூறுகளில் கொஞ்சம் ரசனை மேம்பட்ட காலத்தில் ரஜினியும் ஒரு முக்கியமான நடிகராக மனசுக்குள் உட்கார்ந்தார். இருவரது ஸ்டைலும் வேறு வேறு. இருவரையும் தனித்தனியாக தனித்தனி மனநிலைகளில் ரசிக்க முடியும் என்கிற முதிர்ச்சி ஏற்பட்டது. இருவரும் இணைந்து நடிக்கும் பட்சத்தில் எழுபதுகளின் இறுதியில் இருவரின் ரசிகர்களுக்கும் கிடைத்த ஃபுல் மீல்ஸ் விருந்து கிடைக்குமே என்று மனசு ஏங்கத் தொடங்கியது.

என்னுடைய தலைமுறைக்கு கிட்டாத விருந்து அது. இன்றுவரை எட்டா விருந்தும்கூட.

போகட்டும்.

ஓரளவுக்கு ‘விக்ரம் வேதா’ அந்த விருப்பத்தை நிறைவேற்றியிருக்கிறது.

கமல்ஹாசன் – விக்ரமாதித்தன், ரஜினிகாந்த் – வேதாளம் என்கிற ஐடியாவே பரவசப்படுத்துகிறது. ரஜினியும், கமலும் இப்போதைக்கு இணைய சாத்தியமில்லை என்பதால் – இணைந்தாலும் வயது காரணமாக இருவருக்குமான பழைய கெமிஸ்ட்ரி உருவாக வாய்ப்பில்லை என்பதாலும் - நடிப்புப் பாணியில் அவர்களை முடிந்தளவுக்கு பிரதிபலிக்கக்கூடிய விஜய் சேதுபதி – மாதவன் இணையை தேர்ந்தெடுத்ததும்கூட நுணுக்கமான தேர்வுதான்.

ஆனால்-

இந்த அட்டகாசமான ‘ஐடியா’வை, ரசிகன் conceive செய்ய முடியாத அளவுக்கு கூடுதல் புத்திசாலித்தனமாக இயக்குநர்கள் புஷ்கர்-காயத்ரி எடுத்துவிட்டதால், ஆஹாஓஹோவென்று கொண்டாடப்பட்டிருக்க வேண்டிய ‘விக்ரம் வேதா’, ஓக்கே என்கிற லெவலில் நின்றுவிட்டது.
மாதவன், சின்ன சின்ன ரியாக்‌ஷன்களில்கூட அப்படியே கமலை உரித்து வைத்திருக்கிறார். குறிப்பாக இன்ஸ்பெக்டர் சைமன் இறந்துவிட்ட தகவலை, சைமனின் மனைவியிடம் சொல்லும் காட்சி. விஜய் சேதுபதி, நடையில் தொடங்கி சிரிப்பு வரை அச்சு அசல் ‘பைரவி’ காலத்து ரஜினியேதான். எனினும் இவர்கள் இருவரும் ரஜினி – கமலை பிரதிநிதித்துவப் படுத்துகிறார்கள் என்பதை ரஜினி – கமல் ரசிகர்களே உணரமுடியாதபடி ஏன் படம் எடுக்கப்பட்டிருக்கிறது என்று தெரியவில்லை. இத்தனைக்கும் ‘விக்ரம்’, ‘வேதா’ என்கிற பெயர்கள்கூட அந்த காலத்து கமல், ரஜினி கதாபாத்திரங்களின் பெயர்களை ஒட்டியே இருக்கின்றன. சின்ன சின்ன ரெஃபரன்ஸ் கொடுத்து ரசிகனுக்கு தங்கள் ஐடியா இதுதானென்று புஷ்கரும், காயத்ரியும் மெனக்கெட்டு புரிய வைத்திருந்தால் தியேட்டர்களில் திருவிழாவே நடந்திருக்கும். சிம்பிள். படத்துக்கு டைட்டிலேகூட ‘ரஜினி – கமல்’ என்று வைத்திருக்கலாம்.

படம் நெடுக விரவியிருக்கும் புத்திசாலித்தனமும், பர்ஃபெக்ட்னெஸ்சுமே வெகுஜன ரசிகர்களிடமிருந்து படத்தை அந்நியப்படுத்தக் கூடிய தன்மையை கொண்டிருக்கிறது. ஷங்கர் மாதிரி வெற்றிகரமான இயக்குநர்கள் வேண்டுமென்றே படத்தில் சில faultகளை, லாஜிக் மிஸ்டேக்குகளை திணிப்பதுண்டு. அவற்றை ரசிகனே கண்டுபிடித்து, இயக்குநரைவிட தான் புத்திசாலி என்று அவனுடைய ஈகோவை அவனே திருப்திபடுத்திக் கொள்வதற்காக செய்யப்படும் குறும்பு விளையாட்டு அது. ‘விக்ரம் வேதா’, அதிகபட்ச சாத்திய மிலிட்டரி ஒழுங்குடன் இருப்பதே, படத்தின் ஆகப்பெரிய பலவீனம்.

இயக்குநர்கள் அடிப்படையில் அறிவுஜீவிகளாக இருக்க வேண்டும். ரசிகர்களும் தங்களுடைய wave lengthக்கு இணையாக இருப்பார்கள் என்கிற அவர்களுடைய நம்பிக்கை பாராட்டத்தக்கதே. இருந்தாலும், ஓவியா ஒருவேளை அரசியலுக்கு வந்தால் கண்ணை மூடிக்கொண்டு ஓட்டு போடும் அளவுக்கே தமிழனின் அறிவு இயங்கிக் கொண்டிருக்கிறது. படம் முழுக்க ஏகத்துக்கும் இறைக்கப்பட்ட பாத்திரங்கள் ஒவ்வொன்றுமே, தத்தமது பங்கை பக்காவாக செய்திருப்பதால் பிரதானப் பாத்திரங்களான விக்ரம் – வேதா மீது குவிய வேண்டிய ஈர்ப்பு சிதறுகிறது. உதாரணத்துக்கு வரலட்சுமி பாத்திரம். அவர் இல்லாமலேயே இந்த கதையை சொல்லியிருக்க முடியும். இருப்பினும் அந்த பாத்திரத்தை வைத்துவிட்டதாலேயே அவருக்கென்று வலிந்து சில காட்சிகளை உருவாக்கி, அதை கதையோடு ஒட்டவைக்க முயற்சித்திருப்பது போன்றவை, பார்வையாளனுக்கு ஒரே டிக்கெட்டில் ஒன்பது படத்தை பார்ப்பது போன்ற ஆயாசத்தை ஏற்படுத்துகிறது.

ஒரு குற்றவாளியை ஒரு போலிஸ் அதிகாரி பிடிக்க முயற்சிக்கிறார். ஒவ்வொரு முறை மாட்டும்போதும் ஒரு புதிரை போட்டுவிட்டு எஸ்கேப் ஆகிறான் குற்றவாளி. அந்த புதிர் முடிச்சுகளையெல்லாம் ஒவ்வொன்றாக அந்த அதிகாரி அவிழ்த்துக் கொண்டே வருவதுதான் கிளைமேக்ஸ். இதுதான் ஐடியா. இதைதான் புஷ்கர்-காயத்ரி எடுத்திருக்கிறார்கள். ஆனால், இந்த கதையை சொல்வதற்கு காதை சுற்றி மூக்கை தொடுகிறார்கள்.

நான்லீனியர் வகை கதை சொல்லல், கேட்பவனுக்கு கூடுதல் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தக்கூடிய உத்தியாக இருக்க வேண்டுமே தவிர, அதுவே கதைக்கு கூடுதல் சுமையாக அமைந்துவிடக்கூடாது. ‘விக்ரம் வேதா’வில் அப்படி அமைந்துவிட்டது.

எல்லாவற்றையும் மீறி இது நல்ல படம். Hardcore சினிமா ரசிகன் ரசித்து ரசித்து சுவைக்க ஏராளமான ஐட்டங்களை கொண்டிருக்கும் படம். ‘ஆரண்ய காண்டம்’ மாதிரி ஃபேஸ்புக்கில் நீண்டகாலத்துக்கு பேசப்படும்.

6 கருத்துகள்:

  1. யுவகிருஷ்ணா உங்களுக்கு படம் சுத்தமாக புரியவில்லை அல்லது புரிந்தும் 'உங்கள்' ரசிகர்களுக்காக மாற்றி எழுதுகிண்றீர்கள். பழைய விகரம் வேதாளம் கதை விக்ரமன் வேதாளத்தை தோளில் ஏற்றி செல்வது மட்டும் அல்ல. அவன் அதை ஏன் ஏற்றி செல்கிறான்?

    விக்ரமன் வேதாளத்துக்கு செய்வது என்ன, வேதாளம் விக்ரமனுக்கு செய்யும் நல்லது என்ன - அது தான் கதை - அது மட்டும் தான்.

    உங்களுக்கு தோன்றியது கமல் ரஜினி அதை ஏதன் காரன ம் கொண்டு இங்கு புகுத்துகிண்றீர்கள் என்பது உங்களுக்கே வெளிச்சம்.

    ஒவொவொரு முறை நல்ல படங்கள் வரும்போது அதை பற்றி கேனை தனமாக எதையாவது எழுதி உங்கள் மேல் உள்ள மதிப்பை குறைத்து கொள்ளவே செயகிண்றீர்கள்.. அல்லது அது தான் உங்கள்பலம் போலும்!

    நன்றி
    வெ. ராகவ்
    (உங்கள் நீண்ட நாள் வாசகன்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ராகவ், படம் உங்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்று கருதுகிறேன். உங்களுக்கு பிடித்துத் தொலைத்ததாலேயே அதை உலகம் கொண்டாட வேண்டும் என்று கருதுகிறீர்கள். நீங்கள் ‘நல்ல’ படம் என்று கருதுவதெல்லாம் ‘கபாலி’ ரேஞ்சுக்கு இருக்குமென்றால், நான் கேணைத்தனமாகவே எழுதுவதாக உங்களுக்கு தோன்றலாம். அது உங்கள் அறியாமை என்று எடுத்துக் கொள்கிறேன். வேறென்ன செய்ய?

      மேலும், இந்தப் படத்தில் மாதவன் - விஜய் சேதுபதி இருவரும் கமல் - ரஜினியை நடிப்பில் உங்களுக்கு நினைவுபடுத்தி இருக்காவிட்டால், நீங்கள் தமிழ்ப்படங்கள் பார்ப்பதே வேஸ்ட்டு என்பதே என்னுடைய கருத்து :)

      நீக்கு
    2. கதை பழைய விக்ரமன் வேதாளம் கதை தான்.. அது முழுக்கவும் வேதாளம் மறுபடியும் மறுபடியும் விக்ரமனிடம் என்ன முயல்கிறது. விக்ரமன் அப்படி விடாமல் வேதாளத்தை பிடித்து வர காரணம் என்ன. இது முழுக்கவும் அப்படித்தான் இருக்க முடியும். வேதாளம் சொல்லும் கதைகளை நேரடியாக சொல்ல முடியாது. ஏன் என்றால் அவை விக்ரமன் ஏறிவரவேண்டிய படிகள். வேதாளம் கேட்கும் ஒரு கேள்வி கூட வெள்ளை கருப்பு கேள்வி அல்ல வெள்ளையான இரெண்டில் எது.. இது தான் தொன்மையாக சொல்லப்படும் கதை

      வேதாளத்தை விக்ரமன் மந்திரவாதியிடம் சேர்த்தால் என்ன ஆகும் என்பது தொன்மையான கதையின் முடிவில் வருவது..

      இந்தா அமுதம் என்றால் ஒன்று அதை மிகையாக பருகி சாகலாம் அல்லது அதை மதிக்காமல் போகலாம். அமுதை என்னவென்று தெளியவைத்து அளவோடு தருபவை தொன்மையான கதைகள்.

      கதைகளின் முக்கிய பங்களிப்பே அது.. அப்படியான கதையை மாயாஜாலம் இல்லாமல் இவன் இன்றைய விக்ரமன், இவன் இன்றைய வேதாளம் (இவர்கள் இன்றைய மந்திரவாதிகள் - விக்ரமனை ஆட்டுவிப்பவர்கள்) என்று படம் சொல்கிறது.

      உங்கள் பதிவின் மூலம் சாதாரணமாக நீங்கள் 'இந்த படத்தில் இவர்கள் ரஜினி கமலை நடிக்கின்றார்கள்' என்று படத்தையும், பாத்திரங்களையும், அந்த நடிகர்களையும் ( தெரிந்தே !?? ) மலின படுத்துகிண்றீர்கள்.

      கமல் ரஜினி இருவரும் மற்றவர்களை அவர் அவர் நடிப்பில் கொண்டு வந்து இருக்கின்றார்கள்.

      உங்கள் ஆதர்ச எழுத்தாளர்களின் ஒரு துளி கூட இல்லாமல் இதுவரை நீங்கள் என்ன எழுதி இருகிண்றீர்கள் என்பது உங்களுக்கு தெரியும்.. உங்கள் எழுத்து அவரின் நகல் என்று சொல்வது கேனை தனம், ஏன் என்றால் உங்கள் பங்களிப்பினால் உங்கள் ஆக்கம் உங்களுடையதாகிறது. உங்களை படிப்பவர்களுக்கு பட்டவர்த்தனமாய் அது தெரியும். உங்கள் எழுத்தில் எள்ளி நகையாடல் இருத்தல், உங்களுக்கே உரித்தான பார்வை.. இவை போன்றவைக்கு நிச்சயம் வாசாரிடம் மதிப்பு உண்டு. மலின படுத்துவதை கொண்டாட தோன்றவில்லை... அது நீங்கள் உங்கள் வாசகரையும் ஒரு படத்தை பார்க்கும் பார்வையாளனையும் மலின படுத்துவது.

      உங்களுக்கு தெரியாத சென்னை இல்லை.. அதன் நிழல் உலகு அதன் வெளிச்சம் போடப்பட்ட வெள்ளை உலகு இப்படி ஒன்று உங்களிடம் இருந்து வர சாத்தியம் உண்டு ஆணால் நீங்கள் கமல் ரஜினி என்று எழுதுவது தான் உங்கள் மேல் கோபம் கொள்ள செய்கிறது.. நான் உங்கள் வாசகன் உங்கள் எழுத்தை திட்ட உரிமை உண்டு. உங்களை திட்டி இருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன்.

      நன்றி
      வெ. ராகவ்

      நீக்கு
    3. நண்பரே, உங்களுக்கு புரிபடாத விஷயத்தை மிக சுலபமாக ‘கேணைத்தனம்’ என்று புறந்தள்ளி விடுகிறீர்கள். சினிமாவில் ஊறிய எவருக்குமே (நான் குறைந்தபட்சம் வாரத்துக்கு மூன்று தமிழ்ப்படம் பார்ப்பவன்) இந்தப் படத்தில் இருக்கும் ரஜினி - கமல் ரெஃபரன்ஸ் சுலபமாக புரிபடும்.

      மற்றபடி என்னை மட்டுமல்ல. எவரையுமே திட்ட உங்களுக்கு உரிமை உண்டு. வாயுள்ள எவருமே திட்டக் கடவது. இதற்காக உங்களால் திட்டப்படுபவரின் நீண்டநாள் வாசகராக நீங்கள் இருக்க வேண்டும் என்றெல்லாம் அவசியமில்லை. Cheers!

      நீக்கு
  2. நான் நீண்ட நாட்களாக யுவா வின் வாசகனாக சொல்கிறேன் இதுவே கருந்தேள் விமர்சனமாக இருந்தால் தலையை 360 டிகிரி சுத்தவிட்டு ஹாலிவுட் ல மூழ்கி South Korea ல வந்து நிப்பார்.யுவாவின் விமர்சனம் எப்போபோது ம் ஜாலியாகவும் நக்கல் நய்யாண்டி ஆகத்தான் இருக்கும் அது அவருடைய பாணி எழுத்து . அவருடைய தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களின் விமர்சனங்களை ஒரு முறை படித்து பாருங்கள் எப்பவாது. சீரியசாக எழுது இருப்பாரா என்று Joker சொல்வது போல் Why So Serious type அவர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதை மறுக்க முடியாது.. அவறையும் இந்த தளத்தையும் விரும்பி நாம் படிப்பதற்கு அதுவும் ஒரு காரணம் தான்.

      நன்றி
      ராகவ்

      நீக்கு