அதிகாலை இரண்டு மணி.
பாக்யராஜ் வீட்டிங் காலிங்பெல் இடைவிடாமல் அடித்துக் கொண்டிருந்தது.
சற்றுமுன்னர்தான் தூங்கப் போயிருந்தவர் கண்களை கசக்கியபடியே கதவைத் திறந்தார்.
திருதிருவென்று விழித்துக் கொண்டு வெளியே பாண்டியராஜன் நின்றுக் கொண்டிருந்தார்.
“என்னய்யா இந்த நேரத்துலே?”
“உங்க கிட்டே முக்கியமான ஒரு விஷயம் பேசணும் சார்”
அப்போது ‘டார்லிங், டார்லிங், டார்லிங்’ படத்தின் படப்பிடிப்பு வேலைகள் ஜரூராக நடந்துக் கொண்டிருந்தது. ரிலீஸ் தேதி நெருங்கிக் கொண்டிருப்பதால் பாக்யராஜ் நெருப்பாக வேலை செய்துக் கொண்டிருந்தார். படப்பிடிப்பில் சின்ன சின்ன தடங்கல் நடந்தாலும், அவருக்கு அப்போது அசோசியேட்டாக இருந்த பாண்டியராஜனை பிடித்து காய்ச்சி எடுத்துவிடுவார். அன்றும் அப்படிதான் தேர்ட் டிகிரி லெவலில் பாக்யராஜ் திட்டியிருந்தார். அது சம்பந்தமாகதான் தன்னை பாண்டியராஜன் பார்க்க வந்திருப்பார் போலிருக்கிறது என்று பாக்யராஜ் நினைத்தார்.
“நீங்க என்னை இன்னிக்கு ரொம்ப அசிங்கமா திட்டுனீங்க இல்லே?”
“ஆமாய்யா. எனக்கே மனசு கஷ்டமா போயிடிச்சி. நான்தான் திட்டுறேன்னு தெரியுது இல்லே. நான் திட்டாதமாதிரி வேலை பார்க்க வேணாமா?”
“இல்லைங்க சார். நீங்க திட்டுனதுக்காக உங்களுக்கு ‘தேங்க்ஸ்’ சொல்ல வந்தேன்”
“திட்டுனதுக்கு தேங்க்ஸா? அதுவும் இந்த அகால வேளையிலே?” பாக்யராஜ், ஆச்சரியமாக கேட்டார்.
“ஆமாம் சார். நீங்க என்னை திட்டுனதை புரொடியூஸர்களான மாணிக்கவாசகமும், சண்முகராஜனும் பார்த்திருக்காங்க. இவன்தான் பாக்யராஜு கிட்டே நிறைய திட்டு வாங்கியிருக்கான். அப்போன்னா விஷயமுள்ள பையனாதான் இருக்கணும்னு சொல்லி, என்னை டைரக்ட் பண்ணச் சொல்லி காசு அட்வான்ஸ் கொடுத்திருக்காங்க சார்”
“ஆஹா. என் திட்டுலே இப்படியொரு நன்மை நடக்குதா? இனிமே எல்லாப் பயலையும் காச்சு மூச்சுன்னு திட்டி தீர்த்துடறேன். பாண்டி, உனக்கு நல்ல நேரம் ஆரம்பிச்சிருக்கு. நீ நல்லா வருவே” ஆசிர்வதித்து அனுப்பினார் பாக்யராஜ்.
மறுநாள் தயாரிப்பாளர்களிடம் ‘கன்னிராசி’ கதையை சொன்னார் பாண்டியராஜன். அவர்களுக்கு மிகவும் பிடித்துப் போக, “ஹீரோவா பிரபுவை போட்டா நல்லாருக்கும்” என்று ஆலோசனையும் சொன்னார்கள்.
பிரபுவுக்கு கதை சொல்ல ‘அன்னை இல்லம்’ விரைந்தார் பாண்டியராஜன். அப்போது பிரபுவின் சித்தப்பா சண்முகம்தான் கால்ஷீட் பார்த்துக் கொண்டிருந்தார். அவரிடம் கதை சொல்லாமல், பிரபுவின் கால்ஷீட்டை வாங்க முடியாது.
பாண்டியராஜன் குள்ளம் என்பது ஊருக்கே தெரிந்ததுதான். அப்போது மிகவும் ஒல்லியாகவும் இருப்பார். வயது இருபத்தைந்து ஆகியிருந்தாலும், பார்ப்பதற்கு +2 படிக்கும் பையன் மாதிரிதான் இருப்பார்.
சண்முகம் இவரை ஏற இறங்க பார்த்தார். நடிகர் திலகம் பாணியிலேயே, “நீதான் டைரக்டரா? நீதான் கதை சொல்லப் போறீயா? சொல்லு பார்ப்போம்” என்று சொல்லிவிட்டு ஓரமாக இருந்த சோபாவில் சாய்ந்து படுத்துக் கொண்டார்.
பாண்டியராஜன் கதை சொல்ல ஆரம்பித்தார். கொஞ்ச நேரத்திலேயே சண்முகம் தூங்கிவிட்ட மாதிரி தெரிந்தது. தூங்கிவிட்டார் போல என்று இவர் கதையை சொல்வதை நிறுத்தினால், சைகை செய்து மேலே சொல்லு என்கிறார். இவர் தர்மசங்கடத்துடன் தாலாட்டு பாடியதை போல கதை சொல்லி முடிக்கிறார்.
சண்முகத்திடம் நீண்ட அமைதி. பாண்டியராஜனோ, ‘இது வேலைக்கு ஆகாது. நிச்சயமாக பிரபுவோட கால்ஷீட் கிடைக்காது’ என்கிற மனநிலைக்கு வந்துவிட்டார்.
சண்முகத்திடம் இருந்து குரல் வருகிறது. “அப்புறம்?”
“அவ்ளோதான் சார். கதை முடிஞ்சிடிச்சி”
“சரி. நீ போ. நான் புரொடியூஸர் கிட்டே பேசிக்கறேன்”
தன்னுடைய கதை சண்முகத்துக்கு பிடிக்காமல்தான் தூங்கிவிட்டாரோ அல்லது அவருக்கு தூக்கம் வருமளவுக்கு நாம் கதை சொல்லியிருக்கிறோமோ என்று பாண்டியராஜனுக்கு குழப்பம்.
மறுநாள் புரொடியூஸர் பாண்டியராஜனை கூப்பிட்டார்.
“என்னய்யா செஞ்சிருக்கே?”
“சார்”
“நீ சொன்ன கதையை ஒரு சீன் கூட மாத்தாம அப்படியே படம் புடிக்கிறதா இருந்தா பிரபுவோட கால்ஷீட்டை கொடுக்கிறேன்னு சண்முகம் சார் சொல்லிட்டாரு. அவருக்கு உன்னை ரொம்ப பிடிச்சிப் போச்சி”
அப்போதுதான் போன உயிரே திரும்பி வந்தது. வேண்டுமென்றே தன்னை விளையாட்டுக்கு சீண்டியிருக்கிறார் சண்முகம் என்பதை புரிந்துக் கொண்டார் பாண்டியராஜன்.
பல்வேறு சிரமங்களுக்கு பிறகு ‘கன்னிராசி’ வெளியாகி, சக்கைப்போடு போட்டது.
இருந்தாலும் பாண்டியராஜனை யாருக்குமே அடையாளம் தெரியவில்லை. அவருக்கு அட்வான்ஸ் தர வந்தவர்கள் எல்லாம் 101, 201 என்றே உப்புமா டைரக்டர்களுக்கு கொடுப்பது மாதிரி கொடுக்க வந்தார்கள். எப்படியோ சிரமப்பட்டு அடுத்த படத்துக்கு புரொடியூஸரை பிடித்துவிட்டார்.
ஒரு படம் ஓடினால்கூட டைரக்டருக்கு மரியாதை இல்லை. நடிகரைதான் மக்கள் மதிக்கிறார்கள் என்று அவருக்கு தோன்றியது. எனவே ‘ஆண் பாவம்’ படத்தில் இரண்டு ஹீரோக்களில் ஒருவராக அவரே நடித்தார்.
1985. கிறிஸ்துமஸ் முடிந்து இரண்டு நாட்களுக்கு பிறகு படம் ரிலீஸ். சென்னை நகரம் முழுக்க தன்னுடைய படம் அச்சிடப்பட்ட போஸ்டரை தானே நேரில் போய் ஒட்டிக் கொண்டிருந்தார் பாண்டியராஜன். உதயம் தியேட்டரில் முதல் காட்சி ஆரம்பிக்கப் போகிறது. தியேட்டர் வாசலில் கூலிங்கிளாஸெல்லாம் போட்டு பந்தாவாக வந்து நின்றார் இவர். போஸ்டரை பார்த்தவர்களுக்கு கூட இவர்தான் ஹீரோ என்பதே தெரியவில்லை. ‘கஷ்டப்பட்டு போஸ்டர் அடிச்சதெல்லாம் வீணாப்போச்சி போலிருக்கே? கடைசிவரைக்கும் ஒரு பய நம்மளை அடையாளம் கண்டுபிடிக்கலையே?’ என்று நொந்துப் போனார்.
முதல் காட்சி முடிந்து கூட்டம் வெளியே வந்தது. “ஏய், படத்துலே சின்ன பாண்டியா நடிச்சவரு அவருதாண்டா” என்று கத்தியபடியே இவரை கூட்டம் சூழ்ந்தது. ஆளாளுக்கு கைகுலுக்குகிறார்கள். பாராட்டுகிறார்கள். இவரிடம் ஆட்டோகிராப் வாங்குகிறார்கள். பாண்டியராஜனால் இதை நம்பவே முடியவில்லை. மூன்று மணி நேரத்துக்கு முன்பாக தனிமரமாக அதே இடத்தில் நின்றிருந்தார். இப்போது அவரை சுற்றி அவ்வளவு ரசிகர்கள். ஆர்வமிகுதியில் அவரை தோள்மீது தூக்கி தியேட்டர் வளாகத்தில் ஊர்வலமாக ஓடுகிறார்கள்.
உள்ளே ‘ஆண் பாவம்’ அடுத்த காட்சி ஆரம்பித்தது.
வைரமுத்துவின் வைரவரிகள் இளையராஜா குரலில் டைட்டில் பாடலாக ஒலிக்கிறது.
“இந்திரன் வந்ததும்
சந்திரன் வந்ததும்
இந்த சினிமாதான்
எம்ஜிஆர் வந்ததும்
என்டிஆர் வந்ததும்
இந்த சினிமாதான்
கட்சி வளர்த்ததும்
ஆட்சி பிடிச்சதும்
இந்த சினிமாதான்...”
(நன்றி : ‘பழைய பேப்பர்’ தொடர் - தினகரன் வெள்ளிமலர்)
அருமையான தகவல்
பதிலளிநீக்கு