4 ஜூலை, 2017

சினிமா வீரன்

ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய ‘சினிமா வீரன்’ பார்த்தேன். நீங்கள் சினிமா ரசிகராக (குறிப்பாக ஆக்‌ஷன் ரசிகராக) இருக்கும் பட்சத்தில், இந்த ஆவணப்படத்தின் எண்ட்கார்ட் போடப்படும்போது இருதுளி கண்ணீரையாவது சிந்துவீர்கள்.

இந்தப் படத்தில் ஃபெப்சி விஜயன் சொல்கிறார்.

“எங்க ஸ்டண்ட் யூனியன் சுவத்துலே வால்பேப்பர் ஒட்டுறதுக்கு தேவையே ஏற்படலை. ஏன்னா, சினிமாவில் ஸ்டண்ட் பண்ணுறப்போ செத்துப்போனவங்க படங்களை மாட்டியே சுவரெல்லாம் நிறைஞ்சிடிச்சி”

ஜூடோ ரத்தினம், ஃபெப்சி விஜயன், பீட்டர் ஹெய்ன், ஸ்டண்ட் சில்வா ஆகிய மாஸ்டர்களும் ஏராளமான ஃபைட்டர்களும் சொல்லும் அனுபவங்கள் நம் முதுகெலும்பையே முறிக்கக்கூடிய அளவுக்கு த்ரில்லானவை. குறிப்பாக ‘முதல்வன்’ படத்தில் அர்ஜூனாக பீட்டர் ஹெய்ன் தன் மீது பெட்ரோல் ஊற்றிக்கொண்டு எரிந்தது, ‘அந்நியன்’ விக்ரமாக ஸ்டண்ட் சில்வா நந்தனம் டெம்பிள் டவர்ஸ் பில்டிங்கில் இருந்து தாவித்தாவி உயிரைப் பணயம் வைத்தது, ‘முரட்டுக்காளை’ இறுதிக்காட்சிக்கு ஜூடோரத்தினம் அமைத்த ரிஸ்க்கான ரயில் சண்டைக்காட்சி என்று ஏகத்துக்கும் மயிர்க்கூச்செறிய வைக்கும் அனுபவங்கள்.

வீரமும், காதலும், கண்ணீரும்தான் ஸ்டண்ட் நடிகர்களின் சொத்து. இந்த ஆவணப் படத்தில் ஸ்டண்ட் கலைஞர்கள் குறித்து அவர்களது குடும்பத்தாரின் பார்வையும் இடம்பெற்றிருப்பது சிறப்பானது. எந்த ஸ்டண்ட் கலைஞருக்குமே அரேஞ்ச்ட் மேரேஜ் அமைவதில்லை. யாராவது காதலித்தால் மட்டுமே கல்யாணவரம் கிடைக்குமாம்.

புலிகேசி புருஷோத்தம்மன் என்கிற ஸ்டண்ட் கலைஞர். ஷூட்டிங்கின்போது இவரை புலி மார்பில் அறைந்துவிடுகிறது. பத்து நாள் ஜி.எச்.சில் கவலைக்கிடமாக இருந்து மறைகிறார். இவரை அடக்கம் செய்யக்கூட யாரிடமும் காசில்லை. ஸ்டண்ட் நடிகர்கள் தங்களிடமிருந்து ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் போட்டு காசு திரட்டுகிறார்கள். சுடுகாட்டில் ஒன்றுகூடி கதறுகிறார்கள். எத்தனை காலத்துக்குதான் செத்துக்கொண்டே இருப்பது என்று குமுறியவர்கள் 1966ல் ஸ்டண்ட் யூனியன் அமைத்து தங்கள் உரிமைகளுக்காக குரல் கொடுக்கத் தொடங்குகிறார்கள். சுடுகாட்டில் தொடங்கப்பட்ட யூனியன் என்கிற பெருமை கொண்டது நம் ஸ்டண்ட் கலைஞர்களின் யூனியன். இன்றும் கூட ஸ்டண்ட் கலைஞர்களுக்கு தோராயமாக ஒரு நாள் ஊதியம் 400 ரூபாய்தான்.

ஸ்டண்ட் யூனியன் கட்டிடத்தை காட்டும்போது அந்த காலத்தில் இறந்துப் போனவர்களில் புலி பாஷா என்கிறவரின் படத்தைப் பார்த்தேன். அனேகமாக இவர்தான் அசோகமித்திரனின் ‘புலிக்கலைஞன்’ இன்ஸ்பிரேஷனாக இருக்க வேண்டும்.

சினிமாவில் ஸ்டண்ட் வேலை செய்பவர்கள், லைஃப் இன்சூரன்ஸ் செய்துக்கொள்ள முடியாது. தேசிய, மாநில விருதுகளில் இவர்களுக்கு இடமில்லை. ஏன், நம்மூரை விடுங்கள். ஆஸ்கரிலேயேகூட இவர்களுக்கு அங்கீகாரம் கிடையாது.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கு எடுக்கப்பட்டிருக்கும் இந்த ஆவணப்படத்தை தமிழகமெங்கும் இருக்கும் திரையரங்குகள் சனி, ஞாயிறுகளில் காலை காட்சியாக மக்களுக்கு இலவசமாக போட்டு காட்ட வேண்டும். அல்லது ஸ்டண்ட் யூனியனே செலவு செய்து, இந்த திரையிடலை தமிழகமெங்கும் நடத்த வேண்டும். தாங்கள் கொண்டாடும் மாஸ் ஹீரோக்களை, முன்னாள் மற்றும் நாளைய முதல்வர்களை உருவாக்கியவர்கள் இன்னமும் மரணக்குழிகளுக்குள்தான் வசிக்கிறார்கள் என்பதை மக்களும் அறியவேண்டாமா?

ரஜினியின் மகளாய் பிறந்ததற்கு நியாயம் செய்திருக்கிறார் ஐஸ்வர்யா. Hats off!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக