31 ஆகஸ்ட், 2012

ஸ்ரீதேவி விஜயம்


ஆர்.பாலகிருஷ்ணன் என்கிற சுத்தபத்தமான பெயரை சொன்னால் யாருக்கும் தெரியாது. பால்கி என்றால் போதும். விளம்பர ஏஜென்ஸிகளின் வட்டாரத்தில் அவ்வளவு பிரபலம். லிண்டாஸ் விளம்பர நிறுவனத்தின் தலைவர். ‘கறை நல்லது’ என்கிற கருத்துக்கு சொந்தக்காரர் என்றால்தான் இந்தியாவுக்கே இவரை தெரியும்.

இளையராஜாவின் வெறிபிடித்த ரசிகர். இளையராஜாவின் இசையால்தான் இவருக்கு சினிமா என்கிற துறையே பிடித்தது. சினிமாவில் எழுபதுகளை கட்டி ஆண்டவர்கள் அனைவரும் பால்கிக்கு ஆண்டவர்கள். அவ்வகையில்தான் அமிதாப். திடீரென்று ஒருநாள் இரவில் பால்கி இயக்குனர் ஆனார். அவரது ஆண்டவர்களில் ஒருவரான அமிதாப் பச்சன் ஹீரோ. படம் ‘சீனி கம்’. இரண்டு ஆண்டுகள் கழித்து இன்னொரு படம் எடுத்தார். இதிலும் அமிதாப்தான் ஹீரோ. படம் ‘பா’. இரண்டு படத்துக்குமே இளையராஜாதான் இசை.

அடுத்தது என்ன என்கிற கேள்வி எழுந்தபோது ஒரு படம் தயாரிக்கப் போகிறேன், நான் இயக்கப் போவதில்லை என்றார். சில நாட்கள் கழித்து தான் தயாரிக்கும் படத்தை இயக்கப் போகிறவர் கவுரி ஷிண்டே என்று அறிவித்தார். கவுரி யாருமில்லை பால்கியின் திருமதிதான்.

கவுரி படமெடுப்பது பெரிய சாதனையோ, உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் நிகழ்வோ இல்லை. அவரது படத்தில் ஸ்ரீதேவி கதாநாயகியாக நடிக்கப் போகிறார் என்பதுதான் குறிப்பிடத்தக்க நிகழ்வாக இதை மாற்றியிருக்கிறது. நம் விருதுநகரைச் சேர்ந்த ஸ்ரீதேவி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என்று இந்திய மொழிகளை ஒரு கலக்கு கலக்கினார், இந்தியாவின் முதல் பெண் சூப்பர் ஸ்டார் என்பதெல்லாம் ஏற்கனவே தெரிந்த விஷயம்தான். 96ல் அணில்கபூரின் அண்ணனை திருமணம் செய்துக் கொண்டார். 97ல் திரைப்படங்களில் நடிப்பதற்கு முழுக்கு போட்டார். கிட்டத்தட்ட பதினாறு வருடங்கள் கழித்து நடிக்க வருகிறார் என்பதால்தான் கவுரியின் திரையுலகப் பிரவேசம் இங்கே முக்கியத்துவம் பெறுகிறது.
படத்தின் பெயர் இங்கிலீஷ் விங்கிலீஷ். அமெரிக்காவுக்கு ஒரு குடும்பம் குடிபெயர்கிறது. குடும்பத் தலைவியான ஸ்ரீதேவிக்கு இங்கிலீஷ் தெரியாது. குடும்பத்தில் குழந்தைகள், கணவர் எல்லோரும் இதற்காக அவரை கிண்டலடிப்பது வழக்கம். அமெரிக்க குடியுரிமை அதிகாரிகூட “தப்பும் தவறுமாக ஆங்கிலம் பேசி, எங்கள் நாட்டில் என்ன செய்யப் போகிறாய்?” என்று கேட்கிறார். ஸ்ரீதேவி எப்படி இங்கிலீஷ் கற்றுக் கொள்கிறார் என்பதுதான் மீதி கதை. முழுக்க முழுக்க நகைச்சுவையை இழைத்து, என்.ஆர்.ஐ குடும்பங்கள் காட்டும் பகட்டினைப் பற்றிய பகடிதான் இங்கிலீஷ் விங்கிலீஷ்.

கடந்த ஆகஸ்ட் 13 அன்று இப்படத்தின் ட்ரைலர் மும்பையில் வெளியிடப்பட்டது. அன்றுதான் ஸ்ரீதேவியின் 50வது பிறந்தநாளும் கூட. ஒரே வாரத்தில் யூட்யூப் தளத்தில் பத்து லட்சத்துக்கும் மேற்பட்டோர் ட்ரைலரை பார்த்து ரசித்திருக்கிறார்கள். படம் ஷ்யூர் ஹிட், குறிப்பாக வெளிநாடுகளில் வசூல் அள்ளோ அள்ளுவென்று அள்ளும் என்று பேசிக்கொள்கிறார்கள். ஸ்ரீதேவிக்காகவும், பால்கிக்காகவும் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க அமிதாப் ஒப்புக் கொண்டாராம். இந்திப்படவுலகில் அமிதாப்பின் cameo role, படங்களுக்கு பெரிய ஓபனிங்கை பெற்றுத் தருவதாக ஒரு செண்டிமெண்ட். சமீபத்தில் கூட போல் பச்சன், நூறு கோடி அள்ளியதற்கு அவர் ஒரு பாடலில் தோன்றியதும் ஒரு காரணம் என்கிறார்கள்.
படம் தமிழ் மற்றும் தெலுங்கிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வரும் என்று தெரிகிறது. தமிழ், தெலுங்கு ரசிகர்கள் தங்கள் மொழியில் கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்ரீதேவியை ரசிக்கப் போகிறார்கள். குறிப்பாக இப்படத்தின் தமிழ் வெர்ஷன் அக்டோபரிலோ, நவம்பரிலோ (அனேகமாக தீபாவளிக்கு கூட இருக்கலாம்) வெளியாகும்போது பரபரப்பு பற்றிக்கொள்ளப் போகிறது. ஏனெனில் இந்தியில் அமிதாப் நடிக்கும் ரோலில் தமிழில் தோன்றப் போகிறவர் அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார். இதற்காக தயாரிப்பாளர் அளிக்க முன்வந்த சம்பளப் பணம் வேண்டாமென்று மறுத்திருக்கிறார் தல. மேலும் போக்குவரத்து, உடை, உதவியாளர் பேட்டா, என்று அவருக்கான இதரச் செலவுகள் அனைத்தையும் தன்னுடைய சொந்த செலவிலேயே செய்துக் கொண்டிருக்கிறார். மூத்த கலைஞரான ஸ்ரீதேவிக்கு செய்யும் மரியாதையாக இதை ‘தல’ எடுத்துக் கொண்டாராம்.


துக்கடா (மொழி அரசியல் ஆர்வமில்லாதவர்கள் வாசிக்க வேண்டாம்) :

படத்தின் ட்ரைலரைப் பார்த்தேன். அமெரிக்க குடியுரிமை அதிகாரியிடம் ஸ்ரீதேவி சொல்கிறார். “எனக்கு ஆங்கிலம் சரியாக வராது”

அதிகாரி கேட்கிறார் “ஆங்கிலம் தெரியாமல் எங்கள் நாட்டில் எப்படி இருப்பாய்?”


அதிகாரியோடு பணியாற்றும் இந்தியர் ஒருவர் உடனே சொல்கிறார். “இந்தி தெரியாமலேயே நீ எங்கள் நாட்டுக்கு வரலாம்”


இந்த காட்சி ட்ரைலரில் ஓடும்போது வட இந்திய திரையரங்குகளில் க்ளாப்ஸ் எகிறுகிறதாம். வட இந்தியர்களின் மொழிப்பற்றை நாம் பாராட்டுகிறோம். அதே நேரம் இதே கருத்தை எழுபது/எண்பது வருடங்களாக தம் மொழிக்காக திராவிட இயக்கம் இங்கே முன்வைத்துப் போராடிக் கொண்டிருக்கிறது. இவ்வாறு மொழிக்காக போராடியவர்களை ரவுடிகள் என்று இந்தியாவின் பிரதமரே கூட விமர்சித்திருக்கிறார். “இந்தி தெரியாதா? நீ எப்படி இந்தியன் ஆவாய்?” என்கிற வட இந்தியர்களின் அகம்பாவமான கேள்வியை இதுவரை கோடிமுறையாவது தென்னிந்தியர்கள் எதிர்கொண்டிருக்கிறார்கள்.


இந்திக்காரர்கள் தங்களை பெருந்தன்மையான இந்தியர்களாக இன்று உலக அரங்கில் காட்டிக்கொள்ள முயற்சிக்கிறார்கள். அந்த குடியுரிமை அலுவலகக் காட்சி ‘இந்தி’யப் பெருந்தன்மையைதான் வலியுறுத்துகிறது. உண்மையில் நாம்தான் பெருந்தன்மையாளர்கள். தமிழ் தெரியாமலேயே தமிழ்நாட்டில் தொழில்நடத்தி, பரம்பரை பரம்பரையாக பிழைப்பு நடத்த இந்திக்காரர்களை அனுமதித்திருக்கிறோம்.
இங்கே வாழ்பவர்கள் தமிழ்தான் கற்கவேண்டும், தமிழ்தான் பேசவேண்டும் என்று நாம் நம் மொழியை திணித்ததில்லை. இந்தியாவின் பிராந்திய மக்களுக்கு இருக்கும் இந்த பெருந்தன்மையை, இந்தி பேசும் மெஜாரிட்டியினர் மதிக்கவேண்டும். கற்றுக்கொள்ள வேண்டும்.

30 ஆகஸ்ட், 2012

பிரா விற்பனையாளனின் காதல்


பர்ஹாத் ஓர் எலிஜிபிள் பேச்சுலர். அம்மா கோண்டு. பார்ஸி சமுதாயத்தைச் சேர்ந்த அவனுக்கு கல்யாணம் தள்ளிக்கொண்டே போகிறது. காரணம் அவனது வேலை. மும்பையில் பெண்கள் உள்ளாடை விற்கும் பெரிய கடை ஒன்றில் விற்பனையாளனாக பணிபுரிகிறான். பெண் பார்க்கச் செல்லும் இடங்களில் எல்லாம் ‘பிரா, ஜட்டி விற்பவன்’ என்கிற இவனது பணியை கிண்டல் செய்கிறார்கள். பர்ஹாத்துக்கு தன் பணி மீது உயர்ந்த அபிப்ராயம் இருக்கிறது. உள்ளாடை பயன்படுத்தாத பெண்ணே இல்லை என்கிறபோது, அதை விற்பது எவ்வளவு கவுரவமான பணி என்கிறான். ஒரு பெண்ணை பார்த்ததுமே அவளது ‘சைஸ்’ என்ன என்பதை அளக்காமலேயே ‘பளிச்’சென்று சொல்லக்கூடிய நிபுணத்துவத்தைப் பெற்ற ‘கில்லி’ அவன். ‘அண்டர் வேர்ல்ட்’ என்கிற பெயரில் பெண்களுக்கான பிரத்யேக உள்ளாடை வணிகவளாகத்தை உருவாக்குவது அவனது கனவு. பையனுக்கு கல்யாணம் ஆகி பேரக்குழந்தைகளை பார்க்க முடியவில்லையே என்று அவனது அம்மாவுக்கும், அம்மாவின் அம்மாவுக்கும் ஆதங்கம்.

கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்ட ஒரு காலை வேளை. தான் பணிபுரியும் கடையில் அலங்காரத்துக்காக வைக்கப்பட்டிருக்கும் பொம்மைக்கு (பெண் பொம்மை) ஜட்டியும், பிராவும் மாட்டிவிட்டுக் கொண்டிருக்கிறான். கடைக்கு வெளியே ஒரு தேவதை கொஞ்சம் வெட்கமாகவும், கொஞ்சம் அருவருப்போடும், கொஞ்சம் காமெடியாகவும் இவனைப் பார்க்கிறாள். அவள் ஷெரீன். தன்னை ஒருத்தி ஒரு மாதிரியாக பார்ப்பதை பர்ஹாத்தும் கவனித்து விடுகிறான். பார்த்ததுமே புரிந்துவிட்டது. தனக்காக படைக்கப்பட்டவள் இவள்தான். அவனது மூளைக்குள் எண்டாக்ரீன் வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது. ஹார்மோன்கள் தறிகெட்டு அலைந்தன.

கடைக்குள் நுழைகிறாள் ஷெரீன். பர்ஹாத் எதிர்கொள்கிறான்.

“எனக்கு பிரேசியர் வேண்டும்”

“ஏகப்பட்ட மாடல்கள் இருக்கின்றன.
நிறைய வண்ணங்களில். ஃப்ளோரசண்ட் கூட இருக்கிறது. பார்க்கிறீர்களா?”

“இல்லை. சாதாரணமான வெள்ளை ப்ராவே போதும்”

“உங்கள் சைஸ்?”

கொஞ்சம் வெட்கத்தோடும், பீதியோடும் “38”

“இல்லை. 36தான் உங்களுக்கு சரியாக இருக்கும். 38 கொஞ்சம் லூஸ்”


“மிஸ்டர். என்னுடைய அளவு எனக்குத் தெரியும். நான் கேட்டதை கொடுங்கள்”


பற்றிக்கொண்டது காதல். வாழ்க்கையில் முதன்முறையாக காதலை உணர்கிறான் பர்ஹாத். இந்தப் பரவசம் அவனது உடலெங்கும் பெய்யென பெய்யும் மழையாய் சோவென அடிக்க, காதல் காலராவில் அவதிப்படுகிறான்.


இதற்கிடையே அவனுடைய அம்மா பார்ஸி சங்கத்தின் மேட்ரிமோனியல் சேவையை நாடியிருக்கிறாள். நம்மூர் கல்யாண மாலை மாதிரி ஒரு சுயம்வரத்துக்கு பர்ஹாத் செல்கிறான். அங்கே நடைபெறும் ஏகப்பட்ட கலாட்டாக்களுக்கு இடையே ஷெரீனை மீண்டும் காண்கிறான். கொஞ்சம் தைரியமாகவே அவளிடம் போன் நம்பர் கேட்கிறான்.

“உங்களுடைய நம்பர் என்ன?”

“38” சொல்லிவிட்டு குறும்பாக சிரிக்கிறாள்.

அப்புறம் என்ன பையனுக்கு வந்த காதல் காலரா பெண்ணுக்கும் தொற்றிக் கொள்கிறது. பார்ஸி சங்கத்தில் அவள் செயலராகப் பணிபுரிகிறாள். பர்ஹாத்தை விட வசதியான குடும்பம். பையனுக்கும், பெண்ணுக்கும் பிடித்துவிட்டது. அடுத்து கல்யாணம்தான் எனும்போது ஒரு பெரிய சிக்கல்.

பர்ஹாத்தின் அம்மாவுக்கு பெண்ணை சில காரணங்களால் பிடிக்கவில்லை. அம்மாவின் செல்லக் குழந்தையான பர்ஹாத் தாய்க்கும், காதலிக்கும் இடையே அல்லாடுகிறான். இப்படிப்பட்ட சூழலில் ஒரு முக்கியமான விஷயத்துக்காக ஷெரீன் இவனை அழைக்க செல்போனில் முயற்சிக்கிறாள். அப்போது அம்மாவிடம் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் பர்ஹாத் கோபமாக போனை எடுத்து, “எப்பவும் கொஞ்சிக்கிட்டிருக்கணுமா” என்பது மாதிரி கேட்டு போனை தூக்கிப்போட்டு உடைக்கிறான். இயல்பிலேயே இனியவன் என்பதால்தான் ஷெரீனுக்கு இவன் மீது காதல் பிறந்தது. மாறாக முதன்முதலாக அவனது கோபத்தை உணர்ந்தவள் தனது காதலை துறக்கிறாள். பிற்பாடு எவ்வளவு கெஞ்சியும் மீண்டும் பர்ஹாத்தை காதலிக்க ஷெரீன் துணியவில்லை. இதற்கிடையே பர்ஹாத்தின் அம்மா அவனுக்கு வேறு பெரிய இடங்களில் பெண் பார்க்க ஆரம்பிக்கிறாள்.

க்ளைமேக்ஸ்.

பர்ஹாத் கடைசியாக ஷெரீனுக்கு ஒரு எஸ்.எம்.எஸ். அனுப்புகிறான். டிசம்பர் 31 இரவு 9 மணிக்கு தயாராக இரு. நாம் நியூ இயர் பார்ட்டிக்கு செல்கிறோம். நீ வர மறுத்தால் நம்முடைய காதல் முடிந்தது என்று நினைத்துக் கொள்கிறேன். இடைபட்ட ’பசலை’ நாட்களில் பர்ஹாத்துடனான தன்னுடைய தினங்களை ஷெரீன் நினைத்துப் பார்க்கிறாள். தன் வாழ்க்கையிலேயே மிக மகிழ்ச்சியான தினங்கள் அவைதான் என்று உணர்கிறாள். பர்ஹாத்துடன் வாழ்ந்தால் மட்டுமே அது வாழ்க்கை என்பதை உணர்ந்த ஷெரீன் பார்ட்டிக்கு தயார் ஆகிறாள்.

வீட்டிலிருந்து கிளம்பிக் கொண்டிருந்த பர்ஹாத்துக்கு பெரிய அதிர்ச்சி. ‘பையன்’ பார்க்க பெண்வீட்டாரை அழைத்திருக்கிறாள் அம்மா. 9 மணிக்கு செல்லாவிட்டால் ஷெரீன் இனி வாழ்நாள் முழுக்க தன்னை மன்னிக்கவே மாட்டாள். டென்ஷன்.

நயமாக தன்னைப் பார்க்க வந்த பெண்ணிடம் தான் காதல்வசப்பட்டிருப்பதை எடுத்துச் சொல்கிறான். அம்மாவிடமும் தன் காதலின் வீச்சு எவ்வளவு புனிதமானது என்பதை விளக்குகிறான். ஷெரீன் வீட்டுக்கு மிகச்சரியாக ஒன்பது மணிக்குச் செல்கிறான். அவளது வீட்டு வாசலில் நடக்கும் நியூ இயர் கலாட்டாவில் போலிஸ் இவனை அள்ளிப்போட்டுக் கொண்டு செல்கிறது. பர்ஹாத் வருவான் என்று காத்திருக்கும் ஷெரீன் பதட்டமடைகிறாள். நேரம் போய்க்கொண்டே இருக்கிறது. 9.00, 10.00, 11.00, 12.00

புதுவருடம் பிறக்கிறது. பர்ஹாத் வரவேயில்லை. இனி அவன் தன் வாழ்க்கையில் வரவே மாட்டான் என்று நினைக்கிறாள் ஷெரீன். காதலர்கள் இணைந்தார்களா என்பதை நீங்கள் ஏதேனும் திரையரங்கின் வண்ணத்திரையில்தான் காணவேண்டும்.

இதுவரை நீங்கள் பார்த்த, கேட்ட பிழியப் பிழிய காதல் திரைப்படங்களையும், கதைகளையும் கொஞ்சம் நினைவுறுத்திப் பாருங்கள். ரோமியோ ஜூலியட், அம்பிகாபதி அமராவதி, ஏக் துஜே கலியே, அன்பே வா, அலைகள் ஓய்வதில்லை, காதலுக்கு மரியாதை, வைகாசி பொறந்தாச்சி, காதல் கோட்டை, விண்ணைத் தாண்டி வருவாயா... இதெல்லாம் சட்டென்று நினைவுக்கு வரலாம். இந்த எந்த படைப்புகளுக்கும் ஒப்பானது பர்ஹாத் ஷெரீனின் காதல். ஒரே ஒரு வித்தியாசம்தான். நீங்கள் இதுவரை பார்த்த ‘காதல்’களின் காதலர்கள் வயது அதிகபட்சம் இருபதுகளின் இறுதியில் இருக்கும்.
Shirin Farhad Ki Toh Nikal Padi படத்தில் பையனின் வயது 45. பெண்ணுக்கு வயது 40+. வயது ஒரு மேட்டரே இல்லை என்பதை படம் பார்க்கும்போது உணர்வீர்கள். விண்ணைத்தாண்டி வருவாயாவில் சிம்பு என்னென்ன செய்வாரோ அது அத்தனையையும் பர்ஹாத் என்கிற பொமான் இரானி செய்கிறார். இடுப்பொடிய நடனம் ஆடுகிறார். நொடிக்கொரு முறை காதலியை நினைத்து சிலிர்க்கிறார். திரிஷா செய்கிற அத்தனையையும் ஷெரீன் என்கிற ஃபராகான் செய்கிறார். முகம் சிவந்து வெட்கப்படுகிறார். காதலனை தன் பின்னாலேயே ஹட்ச் நாய்க்குட்டி மாதிரி அலைய விடுகிறார்.

படத்தில் நாயகன் நாயகியை நினைத்தும், நாயகி நாயகனை நினைத்தும் காதலை கொட்டோ கொட்டுவென்று கொட்டி பாடல் காட்சிகள். டூயட்டுகள். அதிலும் ஒரு டூயட்டில் இந்தி சினிமாவின் புகழ்பெற்ற காதல் திரைப்படங்களான ஹம் ஆப்கே ஹைன் கோன், ஜப் வி மெட் மாதிரி படங்களில் இடம்பெற்ற காட்சிகளை உல்டா அடித்து பயங்கர கலாட்டா.

காதலுக்கு வயது ஒரு பொருட்டேயில்லை. காதல் எப்பவும் காதல்தான். படம் பார்க்கும்போது நம் அம்மா-அப்பா, சித்தப்பா-சித்தி, மாமா-அத்தை, பக்கத்து வீட்டு அங்கிள் - ஆண்ட்டி என்று அத்தனை பேரின் காதலையும், நாம் ரகசியமாக எட்டி நின்று பார்ப்பது மாதிரி ஃபீலிங். இரண்டு மணி நேர திரைப்படத்தில் இரண்டு நிமிடத்துக்கு ஒரு முறையாவது நீங்கள் வாய்விட்டு சிரிப்பீர்கள். காதல் என்பது வேடிக்கை பார்ப்பவர்களுக்கு நகைச்சுவையும்தான்.

ஹீரோ-ஹீரோயின் வயதானவர்கள் என்பது தவிர்த்து, ஒரு காதல் படத்தில் இருக்கவேண்டிய அத்தனை அம்சங்களும் படத்தில் உண்டு. லேசான செக்ஸ் கூட. காதல் படங்களுக்கு அவசியமான வஸ்துவான மழை அவ்வப்போது தூறி, காதல் சிற்றாறாய் ஓடுகிறது. படம் பார்ப்பவர்களின் மனம் கரைகிறது.

படத்தில் நடிகர்கள் கதாபாத்திரங்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள். ஒளிப்பதிவு ஆப்ட்டாக இருக்கிறது. இசை பிரமாதம். எடிட்டிங் நறுக். மிகக்குறைவான கேரக்டர்களை வைத்து, சிக்கனமான பட்ஜெட்டில் சிறப்பான கதை, திரைக்கதை அமைத்து ‘ரிச்’சாக எடுத்திருக்கிறார்கள். இப்படியெல்லாம் நாம் இப்படத்தை விமர்சிக்க வேண்டியதே இல்லை. படம் பார்ப்பவர்களே அதையெல்லாம் உணர்ந்துக் கொள்வார்கள்.

இந்தி சினிமா உள்ளடக்க ரீதியில் சர்வதேசத் தரத்தை எட்டியிருப்பதற்கு இப்படம் நல்ல உதாரணம். இப்படம் பார்க்கும்போது காட்டப்பட்ட சில ட்ரைலர்கள் மேலும் சில உதாரணங்களாய் எனக்குப் பட்டது. அதில் ஒன்று ஸ்ரீதேவி மீண்டும் நடிக்கும் படம் ஒன்று. அமெரிக்காவுக்கு ஒரு இந்தி குடும்பம் இடம் பெயர்கிறது. குடும்பத் தலைவியான ஸ்ரீதேவிக்கு மட்டும் ஆங்கிலம் சரியாக வராது. அதனால் அவர் அங்கே படும் பாடு. ஒரு என்.ஆர்.ஐ குடும்பத்தலைவி ஆங்கிலம் கற்றுக் கொள்வது என்று ஒரு ஒன்லைன். இன்னொரு படம் சக்கரவியூக். மாவோயிஸ்ட்டுகளை குறித்த விரிவான திரைப்படம். இன்னொன்று ராஸ்-3 (3டி) லேசான போர்னோ கலந்த திகில் படம். இப்படி ஏகப்பட்ட genreகளில் இந்தியில் நிறைய படங்கள் வந்துக்கொண்டிருக்கின்றன. அவர்களது இண்டஸ்ட்ரி ஆரோக்கியமாக இருப்பதையே இது காட்டுகிறது.

மாறாக நம் கோலிவுட்டை நினைத்துப் பாருங்கள். தெரியாத்தனமாக ‘ஓக்கே ஓக்கே’ ஹிட் அடித்துவிட்டது என்று நகைச்சுவைத் துணுக்குத் தோரணங்களை கட்டிக் கொண்டிருக்கிறார்கள் நம்மூர் இயக்குனர்கள். இல்லாவிட்டால் சைக்கோ த்ரில்லர். இந்தியிலும், தெலுங்கிலும், மலையாளத்திலும் வெரைட்டியாக பிரியாணி போட்டுக் கொண்டிருக்க, நாம் வடுமாங்காய் வைத்து தயிர்ச்சாதம் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம்.

Shirin Farhad Ki Toh Nikal Padi மாதிரி ஒரு படத்தை நம்மூரில் எடுக்க முடியாதா? இங்கே இப்படிப்பட்ட படத்தில் நடிக்க பொமன் இரானி, ஃபராகான் மாதிரி  ’ஸ்டார்’ கலைஞர்கள் இல்லையா? சிறப்பாக படம்பிடிக்க தொழில்நுட்பக் கலைஞர்கள் இல்லையா? என்னதான் பிரச்சினை? உறுதியாக சொல்லலாம். இதே கதை, இங்கு ‘பிரபு அம்பிகா’ காம்பினேஷனில் எடுக்கப்பட்டிருந்தால் பரபரப்பான ஹிட் படம் ஆகியிருக்கும். பிரச்சினை என்னவென்றால் ஏற்கனவே ஹிட் கொடுத்த இயக்குனர்கள் இன்னமும் தமக்கென்று ஒரு ‘டெம்ப்ளேட்’ அமைத்துக்கொண்டே இயங்குகிறார்கள். புது இயக்குனர்களும் சேஃபாக அதே டெம்ப்ளேட்டில்தான் சிந்திக்கிறார்கள். அதை உடைத்து சிந்தனையை பரவலாக்க அவர்கள் தயார் இல்லை. குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டுவதே அவர்களுக்கு பாதுகாப்பானதாக இருக்கிறது. அவ்வப்போது அங்காடித்தெரு, மதுபானக்கடை, அட்டக்கத்தி மாதிரி ஒரு சில வித்தியாச முயற்சிகள் அத்திப்பூத்தாற்போல ஒரு ஒளிக்கீற்றாக தென்படுவதை தவிர்த்து, கோலிவுட் ஜிலோவென்று இருளாகத்தான் இருக்கிறது.

29 ஆகஸ்ட், 2012

வேண்டாம் காட்டுமிராண்டித்தனம்


அஜ்மல் கசாப் நல்லவன், வல்லவன் என்றெல்லாம் சான்றிதழ் கொடுக்கவில்லை. எல்லோரும் சொல்வதைப் போல அவன் தீவிரவாதி, நூற்றுக்கணக்கானோரின் மரணத்துக்கு காரணமானவன் என்கிற நம்பிக்கை நமக்கும் உண்டு.

இணையத்தளத்தில் கட்டுரை எழுதி மரணதண்டனையை நிறுத்த முடியும் என்று நினைக்குமளவுக்கு நாம் மனநலம் குன்றிவிடவில்லை. ஆனால் கருத்தியல்ரீதியாக மரணதண்டனைக்கு எதிரான நிலையில் இருப்பவர்கள், தூக்குத்தண்டனை என்கிற காட்டுமிராண்டித்தனமான நடைமுறை செயல்பாடுக்கு வரும் நிலையில் எல்லாம் அதை எதிர்க்கவேண்டிய கடமையில் இருக்கிறார்கள். இதில் தமிழர்கள், தெலுங்கர்கள், பாகிஸ்தானியர்கள், அமெரிக்கர்கள் என்கிற பாகுபாடு எதுவும் தேவையில்லை. அவ்வாறு சிலருக்காக மட்டுமே தேர்ந்தெடுத்து ‘மரணதண்டனை எதிர்ப்பு’ பேசினால், அது எவ்வகையிலும் மனிதநேயத்துக்கு சார்பான ஒன்றில்லை. ஆபத்தான ஒருதலைபட்சமான செயல்பாடும் கூட.

ஒவ்வொருமுறை மரணதண்டனை குறித்த செய்திகள் வெளிப்படும் போதெல்லாம், அதை எதிர்த்து எழுதுவது எனக்கு சடங்காகி விட்டது. போதுமான அளவுக்கு எழுதிவிட்டபோதும், திரும்பத் திரும்ப இதை வலியுறுத்துவதின் மூலம் குறைந்தபட்சம் ஓரிருவரையாவது சிந்திக்க வைக்க முடிகிறது என்கிற திருப்தியைத் தாண்டி வேறெதுவும் கிடைப்பதில்லை. மாறாக இதற்காக நமக்குக் கிடைக்கும் எதிர்வினைகள் படுமோசமானவை. அடுத்த சில நாட்களுக்கு கடுமையான மன உளைச்சல்களை தரவல்லவை.

இருப்பினும் மனிதன் என்கிற அடிப்படையில் இந்த காட்டுமிராண்டித்தனம் இந்தியாவில், உலகத்தில் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டுமென்பதை ஆசையாக, கொள்கையாக வளர்த்துக் கொண்டிருக்கிறேன். அஜ்மல் கசாப், முகம்மது அப்சல், தர்மபுரி பஸ் எரிப்பு குற்றவாளிகள், பேரறிவாளன் உள்ளிட்ட மூவர் என்று எவருக்கு விதிக்கப்பட்ட மரணத் தண்டனையும் இந்தியக் குற்றவியல் சட்டத்தை ’பல்லுக்குப் பல்’ காலத்திய கற்காலத்துக்கு கொண்டு செல்கிறது.
திரும்ப திரும்ப மரணத்தண்டனைக்கு எதிராக குரல் கொடுத்துதேசத்துரோகிபட்டம் வாங்க அயர்ச்சியாக இருக்கிறது. மரணதண்டனை கூடாது என்பதை தாண்டி, எதை புதியதாக பேசமுடியும் என்றும் தெரியவில்லை.

இதுகுறித்து ஏற்கனவே எழுதிய சில பதிவுகளின் சுட்டியை இங்கே 
அளிக்கிறேன்:




23 ஆகஸ்ட், 2012

கால்களை வென்றவன்!


சர்வதேச அளவிலான தன்னார்வலர் குழு ஒன்றினில் பங்குபெற்று 2008ஆம் ஆண்டு கனடாவைச் சேர்ந்த ஸ்பென்ஸர் வெஸ்ட் கென்யாவுக்கு சென்றார். அங்கிருக்கும் கிராமப்புற மக்களுக்கு உதவும் வகையிலான ஒரு பள்ளியை உருவாக்குவதில் ஸ்பென்சரின் பங்கு அதிகம். இந்தப் பயணத்தின் போது நிறைய ஆப்பிரிக்க இளைஞர்களை அவரால் சந்திக்க முடிந்தது. வறுமையால் தங்களின் ஒவ்வொரு நாளையும் கடக்க அவர்கள் நடத்தும் போராட்டத்தை கண்டார். இவர்களுக்காக தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணிப்பதே தான் பிறந்ததற்கான அர்த்தம் என்பதனை உணர்ந்தார்.
 கடந்த அறுபது ஆண்டுகளிலேயே மோசமான பஞ்சத்தை கடந்த ஆண்டு கென்யா சந்தித்தது. குடிக்க நல்ல குடிநீரின்றி கிராமப்புறங்களில் கொத்து, கொத்தாக மக்கள் நோய்வாய்ப்பட்டு மடிந்துக் கொண்டிருந்தார்கள். கென்ய கிராமப்புறங்களில் முறையான, நீடித்த குடிநீர் ஆதாரங்களை உருவாக்கும் நோக்கத்துக்காக நிதி திரட்ட ஆரம்பித்தார். இதற்காக உலகின் பார்வை தன் மீது படுவதற்காக அவர் அறிவித்த அறிவிப்புதான் இந்த கட்டுரை எழுதப்படுவதற்கான நியாயத்தை ஏற்படுத்துகிறது.
ஆப்பிரிக்காவின் மிக உயர்ந்த மலையான கிளிமாஞ்சாரோவின் சிகரத்தை எட்டப்போகிறேன்” என்று ஸ்பென்ஸர் அறிவித்ததுமே சர்வதேச பிரபல ஊடகங்கள் பிபிசி, சிடிவி, சிபிஎஸ், டெலிகிராப் போன்றவை பரபரப்படைந்தன. ஸ்பென்சருக்கு கோடிகள் நிதியாக குவிய ஆரம்பித்தது. காரணம், அவருக்கு கால்களே இல்லை என்பதுதான். இரண்டு கால்களுமின்றி தவழ்ந்தே, சுமார் இருபதாயிரம் அடி உயரமுள்ள ஆப்பிரிக்காவின் உயர்ந்த சிகரத்தை எட்டுவேன் என்கிற அவரது அறிவிப்பு பலரையும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கியது.

கனடாவின் டொரண்டோ நகரில் பிறக்கும்போதே மரபணு தொடர்பான விசித்திரமான நோயுடன் பிறந்தார் ஸ்பென்ஸர் வெஸ்ட். அவரது மூன்றாவது வயதில் முழங்காலுக்கு கீழ் முழுவதும் அகற்றப்பட்டது. ஐந்தாவது வயதில் இடுப்புக்குக் கீழ் இருந்த பகுதிகளையும் இழந்தார். அப்போது அவரது பெற்றோரிடம் “உயிரோடு இருப்பதைத் தவிர வேறெதையும் உங்கள் மகனிடம் நீங்கள் எதிர்ப்பார்க்காதீர்கள்” என்று மருத்துவர்கள் சொன்னார்களாம். ஆனால் தங்கள் மகன் மீது பெரும் நம்பிக்கை வைத்தார்கள் அவரது பெற்றோர்கள். நம்பிக்கை வீண் போகவில்லை. இன்று ஸ்பென்ஸர் வெஸ்ட் உலகளாவிய அளவில் புகழ்பெற்ற தன்னம்பிக்கை பேச்சாளர்களுள் ஒருவர்.

தான்சானியாவின் கிளிமாஞ்சாரோ உச்சியை அடைவது என்பது சாதாரண சாதனை அல்ல. பாலைவனம், காடு, கடும் பனி என்று வித்தியாசமான சூழல்களை கடக்க வேண்டும். உச்சியை எட்டுகிறோம் என்று கிளம்புபவர்களில் ஐம்பது சதவிகிதம் பேர் மட்டுமே இலக்கை அடைகிறார்கள். மீதி பேர் பாதியிலேயே திரும்பிவிடுகிறார்கள். வருடத்துக்கு பத்து பேராவது இந்த மலையேறும் முயற்சியில் உயிர் இழக்கிறார்கள்.

இப்படிப்பட்ட மலையேற்றத்தை ஸ்பென்ஸர் அறிவித்தது என்பதே பலரையும் ஆச்சரியத்துக்கும், அதிர்ச்சிக்கும் உள்ளாக்கியது. ஒட்டுமொத்த பயணத் தூரத்தில் இருபது சதவிகித தூரத்தை மட்டுமே வீல்சேர் மூலமாக ஸ்பென்ஸர் கடந்தார். மீதி எண்பது சதவிகிதத்தை கையுறை அணிந்த கைகளாலேயே ஏறினார். இடைவிடாத ஏழுநாள் பயணம். “ஏழாவது நாள் சிகரத்தின் உச்சியை எட்டியிருந்தபோது என்னுடைய கைகள் கன்னிப்போய் இருந்தன. கண்ணீர், இரத்தம், வியர்வை எல்லாம் கலந்த வெற்றி இது” என்று தன்னுடைய இணையத்தளத்தில் இந்த சாகஸத்தைப் பற்றி எழுதுகிறார் ஸ்பென்ஸர். freethechildren.com என்கிற இணையத்தளத்தில் தன் வாழ்க்கையை எண்ணங்களாக்கி கட்டுரைகளை தொடர்ச்சியாக பதிந்துவருகிறார்.

“கிளிமாஞ்சாரோவை என்னால் எட்ட முடியும் என்று காண்பிப்பதற்காக மட்டுமே நான் மலையேறவில்லை. தடைகளையும், சவால்களையும் எவ்வாறு தாண்டி வாழ்க்கையை வெல்வது என்று மற்றவர்களுக்கு என் வாழ்க்கையையே படமாக்கி காட்ட விரும்பினேன். நம் வாழ்க்கையை மற்றவர்களுக்கு எப்படியெல்லாம் உபயோகமாக பயன்படுத்த முடியும் என்பதையும் இந்த சாதனையின் மூலம் உணர்த்தியிருப்பதாக கருதுகிறேன்” என்று மலையிறங்கி வந்தவுடன் சொன்னார் ஸ்பென்ஸர்.
“எனக்கு கால்கள் இல்லை என்பதால் என்னை நானே பரிதாபத்துக்குரியவனாக பார்த்துக் கொண்டதில்லை. எல்லோராலும் முடிவது என்னாலும் முடியுமென்று நம்புகிறேன். இதுதான் என்னுடைய வெற்றிக்கு காரணம்” என்று வெற்றிக்கான சீக்ரட்டை வெளிப்படையாக போட்டு உடைக்கிறார் முப்பத்தோரு வயதான ஸ்பென்ஸர்ஸ் வெஸ்ட்.

நம்மாலும் முடியும்தான் இல்லையா?

22 ஆகஸ்ட், 2012

ஜாக்கியா? கேபிளா?


இரண்டாயிரங்களின் மத்தியில் உட்லண்ட்ஸ் ட்ரைவ் இன் ஓட்டலில் போண்டாக்களை பிரதானப்படுத்தி தொடங்கிய பதிவர் சந்திப்புகள் இப்போது கல்யாண மண்டபத்தில் மாநாடு நடத்தக்கூடிய அளவுக்கு அசுர வளர்ச்சி பெற்றிருக்கின்றன. ஆரம்பத்தில் நடந்த சந்திப்புகளில் போலி டோண்டுவை ஒழிப்பது எப்படி, இந்தியா வல்லரசு ஆவது எப்படி போன்ற உலகளாவிய பிரச்சினைகள் பேசப்பட்டன. பிற்பாடு தி.நகர் பூங்காக்களிலும், கடற்கரையிலும், சாந்தோம் டீக்கடையிலுமாக நடந்த சந்திப்புகளும் ஒருவருக்கு ஒருவர் அறிமுகமாகி, எல்லாருமாக ஒன்றுசேர்ந்து ‘எங்கள் பிளாக்கில் எல்லா நாளும் கார்த்திகை’ என்று குழுவாக பாடுமளவுக்கு உறுதிபெற்றது. யார் கண்பட்டதோ, அந்த சந்திப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து, இப்போதெல்லாம் ஏதாவது புத்தக வெளியீடு, புதுப்படம் ரிலீஸ் போன்ற இடங்களில்தான் பதிவர்கள் சந்தித்துக்கொள்ள முடிகிறது. அந்த குறையைப் போக்கும் வகையில்தான் சென்னையில் தமிழ் வலைப்பதிவர் மாநாடு நடைபெறுகிறது.

மாநாட்டு நிகழ்ச்சிகளில் ‘கவியரங்கம்’ மாதிரியான கவர்ச்சியான அம்சங்கள் இருப்பதாக கேள்விப்பட்டோம். ஒருவழியாக தமிழ்வலைப்பதிவர் சந்திப்புகள் தமிழரது மரபார்ந்த மேடைகலாச்சாரத்துக்கு திரும்புவது என்பது தமிழன் என்கிற வகையில் பெருமிதத்தையும், பெரும் ஆர்வத்தையும் தூண்டியிருக்கிறது. குறிப்பாக குடிவெறிக்கு ஆதரவான பதிவுகளை பதிவர்கள் இடக்கூடாது என்கிறரீதியில் உருப்படியான ஒரு தீர்மானமும் மாநாட்டில் நிறைவேற்றப்படலாம் என்கிற சேதி காதில் தேனாய் பாய்கிறது. தோழர் மணிஜியோடு இணைந்து இந்த தீர்மானத்தை கண்மூடித்தனமாக வரவேற்கிறோம். சீயர்ஸ்!

இக்கலாச்சாரம் இத்தோடு நின்றுவிடாமல் எதிர்காலத்தில் ‘பட்டிமன்றம்’ மாதிரியான தமிழரின் பாரம்பரிய கலாச்சாரச் செயல்பாடுகளுக்கு அடிகோல் நாட்டவேண்டும் என்பதே நம் விருப்பம். அவ்வாறு நடத்தப்படும் பட்டிமன்றம் எவ்வகையில் அமையலாம் என்கிற நமது ஆசையை இங்கே ட்ரைலர் ஓட்டுகிறோம். இந்தப் பதிவு யார் மனத்தையும் புண்படுத்த அல்ல என்றெல்லாம் டிஸ்க்ளைமர் போட விரும்பவில்லை. எனவே யார் மனதாவது புண்பட்டு விட்டால், புண்பட்ட இடத்துக்கு டிஞ்சர் தடவவும் நாம் தயாராகவே இருக்கிறோம்.

பட்டிமன்றத்தின் தலைப்பு : ஜாக்கியா? கேபிளா?

நடுவர் : வடகரை வேலன்

ஜாக்கி அணியில் வாதாடுபவர் : மணிஜி

கேபிள் அணியில் வாதாடுபவர் : அப்துல்லா

பலத்த கரகோஷத்துடன் பட்டிமன்றம் தொடங்குகிறது.

நடுவர் வடகரை : ‘ஜாக்கியா? கேபிளா?’ என்கிற இந்த புதுமையான தலைப்பில் தமிழ் வலைப்பதிவுலகில் தொன்றுதொட்டு வரும் பிரச்னைகளை குறித்து இருதரப்பு காரசாரமாக மோதிக்கொள்ள இருக்கிறார்கள். முட்டையும் முட்டையும் மோதிக்கொண்டால் ஆஃப் பாயில். மொட்டையும் மொட்டையும் மோதிக்கொண்டால்? இவர்கள் முட்டையா இல்லை மொட்டையா என்று கொஞ்ச நேரத்தில் தெரிந்துவிடும்.

(பலத்த கைத்தட்டல்)

ஜாக்கி இல்லாமல் காருக்கு பஞ்சர் போட முடியாது. கேபிள் இல்லாமல் டிவியிலே படம் பார்க்க முடியாது. ரெண்டுமே நமக்கு அவசியம்தான். எனவே டஃப் ஃபைட்டுதான். வா முனிம்மா வா.. வா முனிம்மா வா.. நீயும் நானும் ஜோடி.. சும்மா பீச்சு பக்கம் வாடி என்று பாடினான் அந்தகால கவிஞன். அதே பாடலை பாடி ஜாக்கி அணிக்காக வாதாட அணியின் தலைவர் நாவுக்கரசர் மணிஜியை அழைக்கிறோம்.

மணிஜி : நடுவர் அவர்களே, எதிரே என் பேச்சை கேட்க குவிந்திருக்கும் வாசக நண்பர்களே, இந்நிகழ்ச்சியை வலைத்தளத்தில் வாசிக்கவிருக்கும் ஆயிரக்கணக்கான ரத்தத்தின் ரத்தமான என் வாசகப்பெருங்‘குடி’மக்களே! உங்களுக்கெல்லாம் ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். ‘ஒத்தா’

(ஜாக்கியின் மந்திரகோஷத்தை மணிஜி உச்சரிக்க, பார்வையாளர் மத்தியில் பலத்த கரகோஷத்துடன், விசில் சத்தமும் கூரையைப் பிளக்கிறது)


நடுவர் வடகரை : தேவையாய்யா நமக்கு?

(அரங்கில் சிரிப்பு)

மணிஜி : நடுவர் அவர்கள் ஜாக்கியை வைத்து காருக்கு பஞ்சர் ஒட்டமுடியுமென்று மட்டும்தான் சொன்னார். ஜாக்கி இல்லாமல் குதிரைகூட பந்தயத்தில் ஓடாது என்பதை அவருக்கு தெரிவித்துக் கொள்கிறேன். குங்ஃபூ மன்னனின் பெயரும் ஜாக்கி. அது மட்டுமின்றி ஜட்டிகளில் சிறந்தது ஜாக்கி


நடுவர் வடகரை (அவசரமாக குறுக்கிட்டு சிரித்துக்கொண்டே) : நாங்கள்லாம் அந்த காலத்து ஆளுங்கய்யா.. கோவணம் பார்ட்டி!


(பார்வையாளர்கள் பலத்த சிரிப்பு)

மணிஜி : நடுவர் அவர்களே! கோவணம் மட்டும் இளப்பமா என்ன? ஒரு கவிஞன் பாடினான். ‘எங்கோ மனம் பறக்குது.. எங்கோ மனம் பறக்குது’. இந்தப் பாட்டைக் கேட்டுவிட்டு டாஸ்மாக்குக்கு தண்ணியடிக்கப் போன மூதேவி ஒருத்தன் வேகமா போதையில் இதே பாட்டை பாடினான் ‘என் கோமணம் பறக்குது.. என் கோமணம் பறக்குது’

(பலத்த கைத்தட்டல்)

ஆகையால் நடுவரே! (ராகத்துடன்) நாட்டாமை பாதம் பட்டா, இங்கே வெள்ளாமை வெளையுமடி. நாட்டாமை கை அசைச்சா அந்த சூரியனும் மறையுமடி (ராகத்தை நிறுத்தி, தீவிரமான குரலில்) என்றுகூறி ஜாக்கிதான் சிறந்தவர். ஜாக்கிதான் நல்லவர். ஜாக்கிதான் வல்லவர் என்கிற தீர்ப்பினை வழங்குமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

(பலத்த கைத்தட்டல்)

நடுவர் வடகரை : அபாரம்யா.. அபாரம்.. அதுவும் கடைசியா வெச்சீங்க பாருங்கய்யா ஒரு பஞ்ச். என் மனசு பஞ்சு பஞ்சா பறந்துடிச்சி. பஞ்சு மிட்டாய் சேலைக்கட்டி பட்டுவண்ண லவிக்கை போட்டு, கஞ்சிகொண்டு போறபுள்ளே என்று கூறி, வெள்ளை மனசுக்காரர், வெள்ளை உடுப்புக்காரர், சுருக்கமாக வெள்ளைக்காரர் அப்துல்லா அவர்களே வருக, வருக.. கேபிள் பற்றிய உங்கள் வாதங்களை வறுத்து வறுகடலையாக தருக, தருகவென அழைக்கிறேன்.

(பலத்த கைத்தட்டல்)

முழுக்க வெள்ளையாக ஜெகன்மோகிணி, நவமோகிணி படங்களில் வரும் வெள்ளைக்கலர் குட்டிச்சாத்தான் மாதிரி (ஆனால் கொஞ்சம் உயரமாக) கருப்பு, சிவப்பு கரைவேட்டியோடு கைகூப்பியபடியே, கைகூப்பி முடித்ததும் வலதுகையால் உதயசூரியனை காட்டியவாறே வருகிறார் அப்துல்லா.

அப்துல்லா : நடுவர் அண்ணே, எம்பேச்சை கேட்குற பார்வையாளர் அண்ணே எல்லாத்துக்கும் வணக்கம் அண்ணே!

நடுவர் வடகரை : பொம்மனாட்டிகளை கூட அப்துல்லாண்ணே அக்கா, தங்கச்சின்னு ன்னு கூப்பிடாம அண்ணேன்னுதான் கூப்பிடுவாருன்னா பார்த்துக்கங்களேன்

(மொக்கை ஜோக்காக இருந்தாலும் பார்வையாளர்கள் தலையெழுத்தே என்று சிரித்துத் தொலைக்கிறார்கள்)

அப்துல்லா : எல்டாம்ஸ் ரோடு முனையிலே சிக்னல் கிட்டே ஒரு சின்னப் பையன் அண்ணன் மூத்திரம் போயிக்கிட்டிருந்தான். நான் போயி அவங்கிட்டே சொன்னேன். தம்பியண்ணே! இங்கிட்டு மூத்திரம் போவக்கூடாது. பக்கத்துலேதான் போலிஸ் ஸ்டேஷன். அவங்க பார்த்தாங்கன்னா பிடிச்சிக்கிட்டு போயிடுவாங்கன்னு. அவன் சொன்னான். வீணா வேஸ்டாப் போறதுதானே, வேணும்னா அவங்க புடிச்சிக்கிட்டுப் போவட்டும்..


(சொல்லிவிட்டு கூட்டத்தைப் பார்க்கிறார். அண்ணன் கைத்தட்டலை எதிர்ப்பார்க்கிறார் என்பதை புரிந்துக்கொண்ட கூட்டம் பலத்த கைத்தட்டலோடு, ஆயிரம் முறை கேட்டுவிட்ட இந்த ஜோக்குக்கு இன்னொருமுறையும் தலையெழுத்தே என்று சிரிக்கிறது)

இப்படித்தான் ஒருவாட்டி கேபிளண்ணன் சொன்னார். என் ஃப்ரெண்டு ஒருத்தன் இருக்கான், ஊர்லே நாலு பேரு சிரிக்கிற மாதிரி எந்த காரியத்தையும் அவன் பண்ணவே மாட்டான்.

நடுவர் வடகரை : ஊரு சிரிக்கலேன்னா என்னய்யா, நான் சிரிக்கறேன். நானும் ஊர்லே ஒருத்தன்தான்

(நடுவர் பலமாக சிரிக்கிறார். வேறு யாரும் சிரிக்கவில்லை)

அப்துல்லா : அப்படி என்ன வேலையை அண்ணே உங்க ஃப்ரெண்டண்ணன் செய்யுறாருன்னு கேட்டேன். அதுக்கு கேபிளண்ணே சொன்னார். அவன் மெகாசீரியல் டைரக்டரா இருக்கானுன்னு...

(பார்வையாளர்கள் பலத்த சிரிப்பு)

நீங்கள்லாம் சிரிக்கறீங்கண்ணே. ஆனா நான் இந்த ஜோக்கை கேட்டதும் அழுதுட்டேன். அதான் கேபிளண்ணன். ஒரு முறை அண்ணன், ’கேட்டால் கிடைக்கும்’னார். நான் என்னத்தை கேட்டா என்னத்தை கிடைக்கும்ணேன். உன் எண்ணத்தை கேட்டா, உனக்கு என்னென்னவோ கிடைக்கும்னார்.

(பலத்த கைத்தட்டல்)

ஆகவே, நடுவர் அண்ணன் அவர்களே! நடுவர் என்பவர் நடுவில் இருக்க வேண்டும். காவிரியில் நடுவர் மன்றம் அமைய காரணமாக இருந்தது கழக அரசு. எனவே நீங்கள் செசன்ஸ் நீதிமன்ற நடுவராக இல்லாமல், ஐ.நா.மன்ற நடுவராக நினைத்து கேட்கிறேன். ஜாக்கியண்ணனை விட கேபிளண்ணன் சிறந்தவர் என்று தீர்ப்பளித்து, தேர்தலில் எனக்கு டெபாசிட்டு மட்டுமின்றி வெற்றியையும் வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.


(கரகோஷம்)


நடுவர் வடகரை : கடைசி பத்தியிலே அண்ணன் வெச்சாரு பாருய்யா ஐஸூ. உள்ளூர் நாட்டாமையை உலக நாட்டாமையாக்கிட்டாரே. இதுக்காகவே இவருக்கு தீர்ப்பை மாத்தி தந்துடலாமான்னு தோணுது. ஆனாலும் சொம்பு, ஜமக்காளம் சகிதமா உட்கார்ந்திருக்கிற பொறுப்பான நாட்டாமைங்கிறதாலே பொருத்தமான தீர்ப்பு சொல்றதுதான் முறை.


ரெண்டு தரப்பும் முட்டையாவோ, மொட்டையாவோ, கொட்டையாவோ இல்லாம பட்டையாவே மோதிக்கிட்டாங்க. அவங்களோட வார்த்தைச் சாட்டையில் பட்டை பட்டையா வீங்கிடுச்சி என் மூளை.


சக்தி இல்லாமல் சிவனில்லைம்பான். சிவனில்லாம சக்தி இல்லைம்பான். அம்மாதிரி ஜாக்கி இல்லாம கேபிளில்லை. கேபிளில்லாம ஜாக்கி இல்லைன்னு சொல்லி இந்த பட்டிமன்றத்தை முடிச்சிக்கறேன்.

(சிரிப்பு. கைத்தட்டல். கரகோஷம் என்று கலவையான சத்தம்)

தீர்ப்புக்காக காத்திருந்த ஜாக்கியின் வாசக நண்பர்களும், கேபிளின் ஐம்பத்து ஐந்து லட்ச ஹிட்ஸ் வாசகர்களும் ஆனந்தத்தால் ஒருவரை ஒருவர் கட்டியணைத்து ‘உம்மா’ கொடுத்துக் கொள்கிறார்கள்.

நடுவர் வடகரை மேடையிலிருந்து கம்பீரமாக இறங்க ‘ஹோ.. ஹோ... ஹோஹோஹோ’ என்று கோரஸைத் தொடர்ந்து, ‘நாட்டாமை பாதம் பட்டா’ பாடல் பின்னணியில் ஒலிக்கிறது.


நாட்டாமையை இடைமறித்து யாரோ ஒரு புதுப்பதிவர் : நாட்டாமை தீர்ப்பை மாத்திச் சொல்லு.

(அரங்கம் முழுக்க நிசப்தம்)


ஒற்றுமையாக கும்மியடித்துக் கொண்டிருந்த கேபிள்-ஜாக்கி ரசிகர்கள் ஆக்ரோஷமாக அந்தப் பதிவரை முற்றுகையிடுகிறார்கள்.

நாட்டாமை வடகரை (குறுக்கிட்டு) : அவனை அப்படியே விடுங்க. இவ்ளோ நேரம் இந்த மொக்கை போஸ்ட்டை படிச்சானே, இதுதான் அவனோட முந்திரிக்கொட்டைத் தனத்துக்கு நான் அவனுக்கு கொடுக்குற தண்டனை...

‘நல்ல தீர்ப்பு, நல்ல தீர்ப்பு’ என்று நாடகத்தனமாக சொல்லியவாறே பார்வையாளர்கள் அரங்கத்தைவிட்டு வெளியேறி, எதிரே இருக்கும் டாஸ்மாக்குக்கு கும்பல், கும்பலாகச் செல்கிறார்கள்.

18 ஆகஸ்ட், 2012

அட்ட கத்தி


நான் கல்லூரிக்குப் போகும்போது தினமும் எஃப்-51 பஸ்ஸில் போவேன். அப்போதுதான் அவளைப் பார்த்தேன். இம்மாதிரி தொடங்கி தமிழில் அட்ட கத்தி படத்துக்கு பத்து விமர்சனங்களாவது வந்துவிட்டதால், நானும் அதையே எழுதித் தொலைக்க விரும்பவில்லை. இம்மாதிரி எழுத முடியாததற்கு இன்னொரு காரணம் என்னவென்றால், நான் கல்லூரியே போனதில்லை.

இயக்குனர் ரஞ்சித்துக்கு ரொம்ப கருக்கான பட்ஜெட்டில் படமெடுக்க ஒரு ப்ரொட்யூஸர் கிடைத்திருக்கிறார். இந்த பட்ஜெட்டில் குறும்படமோ, ஆவணப்படமோதான் எடுக்க முடியுமென்றாலும் ஒரு முழுநீளப்படம் எடுத்து தன்னை அறிமுகப்படுத்தி, நிரூபித்துக்கொள்ள முடிவெடுத்திருக்கிறார். இந்த வேளையில்தான் சற்குணத்தின் ‘களவாணி’ வந்தது. தமிழ்த்திரையில் முதன்முதலாக பட்டுக்கோட்டைக்கு பக்கத்தில் இருக்கும் ஒரு கிராம வாலிபனின் பயோக்ராபி. தியேட்டரில் விசிலும், க்ளாப்ஸும் அள்ளுகிறது. ‘சட்’டென்று மூளைக்குள் ‘பல்பு’ எரிந்திருக்கிறது நம் ரஞ்சித்துக்கு. சென்னைக்கு அருகில் ஒரு கிராமம். அங்குதான் நம்ம ஹீரோ விமல் வசிக்கிறார். ஓ.. விமல் எழுபத்தைந்து லட்சம் வாங்குகிறாரா? படத்தோட பட்ஜெட்டே அதுதான் என்பதால் புதுமுகத்தை போட்டு அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம். அட்ட கத்தி ரெடி!

கதை? அது கிடக்குது கழுதை. முதல்லே சீன் புடிச்சிக்கலாம். அப்புறம் வரிசைப்படுத்தி எடிட்டிங்கில் கதை ஆக்கிக்கலாம் என்று ரஞ்சித் அவரது குருநாதர் வெங்கட்பிரபு மாதிரியே நினைத்திருக்கலாம். துரதிருஷ்டவசமாக இவரது வேகத்துக்கு ஒளிப்பதிவாளரும், எடிட்டரும் ஓடிவர முடியவில்லை என்பதால் கொஞ்சம் சொதப்பி விட்டது. ஃப்ரேமுக்குள் எல்லா கேரக்டரும் வந்தால் போதும் என்கிற சின்சியாரிட்டி மட்டுமே ஒளிப்பதிவாளருக்கு இருந்திருக்கிறது. படம் முழுக்கவே கொஞ்சம் டல்லாக தெரிந்ததாகதான் ஞாபகம். சரக்கு அடித்துவிட்டு படம் பார்க்கவில்லை என்பதால் இந்த கூற்று உண்மையாக இருக்கலாம். அல்லது உதயம் திரையரங்கின் பாடாவதி ப்ரொஜெக்ட்டர் ‘அட்டு’ ஆகியிருக்கலாம். இந்த மொக்கை தியேட்டரை வைத்துக்கொண்டு, ‘மால்’ கணக்காக தம்மெல்லாம் அடிக்கக்கூடாது என்று ரூல்ஸ் போடும் திரையரங்கு நிர்வாகத்தின் அராஜகத்தை பாசிஸ மனோபாவமாகவே கருத வேண்டியிருக்கிறது.

எங்கே விட்டோம்? ஒளிப்பதிவு. ஆங்.. ஒளிப்பதிவு ஊத்திக்கிச்சி என்றால் எடிட்டிங் மொத்தமாக கவுத்துக்கிச்சி. அந்த காலத்து பாணியில் ஃப்லிம் ரோலை பார்த்து, பார்த்து அட்ட கத்தியில் வெட்டியிருப்பார் போல எடிட்டர். சுவாரஸ்யமான திரைக்கதையாலும், இயல்பான வசனங்களாலும் ‘ஷார்ப்’ ஆகத்தெரிய வெண்டிய பல காட்சிகள் எடிட்டரால் படுமொன்னையாக தெரிகிறது. காட்சிகள் மாறும் டிரான்ஸ்லிஷன், ஆக்‌ஷன் மற்றும் பாடல் காட்சிகளையெல்லாம் இப்போது உப்புமா படங்களிலேயே சூப்பராக ஊறுகாய் போட்டு, எடிட்டி அசத்துகிறார்கள். ஆனால் நம்ம அட்டகத்தி எடிட்டரோ இருபது வருஷத்துக்கு முன்னால் சூப்பர்குட் ஃபிலிம்ஸ் படத்தில் பணியாற்றிவிட்டு, நேராக இந்தப் படத்துக்கு வேலை பார்க்க வந்திருப்பாரோ என்கிற ஃபீலிங்கை தருகிறார்.

ஒளிப்பதிவும், எடிட்டிங்கும் மைனஸ் என்றால், படத்தில் மீதி எல்லாமே கிட்டத்தட்ட ப்ளஸ்தான். குறிப்பாக நடிகர்கள். நடிக்கிறோம் என்கிற உணர்வே இல்லாமல் நிஜமாகவே வாழ்ந்திருக்கிறார்கள். ஹீரோவின் அப்பா, அம்மா, அண்ணன், தாத்தா என்று casting பக்கா. ஹீரோ ஜூட்டு விடும் ஃபிகர்களும் கரெக்ட்டான ரியாக்‌ஷனை, கரெக்ட் டைமிங்கில் தெளிக்கிறார்கள். எல்லாருமே யதார்த்தமாக இருக்கும்போது, அந்த ட்வின் எக்ஸ்போர்ட் குவாலிட்டி ஃபிகர்கள் மட்டும் தூக்கலான மேக்கப்பில் துருத்திக்கொண்டு திரிகிறார்கள். கருப்பான, களையான, லேசான தெத்துப்பல் ஹீரோயின். இவரை மேலும் வர்ணிக்க ஆசைப்பட்டாலும், நாம் ஆசைப்படும் அளவுக்கு ‘திறமை’யை அவர் ஸ்க்ரீனில் காட்டவில்லை. தமிழ் ஹீரோயினுக்கு அத்தியாவசிய அடிப்படைகளான தொப்புள், கழுத்துக்கு கீழே மாதிரியான சமாச்சாரங்கள் எதையும் இவர் வெளிப்படையாக இன்னமும் முன்வைக்காததால் இவரது அடுத்தப் படம் வரும்வரை காத்திருப்போம்.
அம்பத்தூர், ஆவடி ஏரியாவின் பாடாவதி ரோட்டில் திறமையாக பென்ஸ் கார் ஓட்டியிருக்கிறார் படத்தின் இசையமைப்பாளர். இவ்வளவு சென்ஸிபிளாக, இயக்குனரின் மனச்சாட்சியாய் வேலை பார்த்த இசையமைப்பாளர் ஒருவரை சமீபகாலமாக எந்த திரைப்படத்திலும் கேட்ட நினைவில்லை. குறிப்பாக க்ளைமேக்ஸுக்கு முந்தைய ‘பஸ் உழைப்பு’ காட்சியில் அககா.. அமர்க்களம்.. நாடி நரம்பெல்லாம் காமவெறியேறி, குறைந்தது ஒரு பத்து வருஷமாவது ரெகுலராக ‘பிட்டு’ படம் பார்த்திருப்பவரால் மட்டுமே, இப்படிப்பட்ட ஆப்ட்டான மியூசிக்கை, ஆப்ட்டான இடத்தில் சொருக முடியும்.

இயக்குனர் தனக்கு கொடுக்கப்பட்ட காசுக்கு நியாயமான உழைப்பை கொட்டியிருக்கிறார். இவர் எடுத்துக்கொண்ட சப்ஜெக்ட் யுனிவர்செல் லெவலுக்கு இல்லாவிட்டாலும், அட்லீஸ்ட் தமிழக லெவலுக்கு இருந்திருக்கலாம். சென்னையின் மல்ட்டிப்ளக்ஸுகளை தவிர்த்து, மற்ற ஊர்களில் அட்ட கத்தியின் டப்பா டான்ஸ் ஆடிவிடும் என்றே தோன்றுகிறது. ரூட்டு தல கலாச்சாரமெல்லாம் பிறந்ததில் இருந்து தென்சென்னையில் வசிக்கும் எனக்கே கொஞ்சம் அந்நியம்தான் (எங்க ஊரில் எல்லாம் கேங்ஸ் ஆஃப் ஆலந்தூர் கல்ச்சர்தான்). எனவே வாடிப்பட்டிக்காரன் இதை உணர்ந்து ரசிக்க வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பது நியாயமல்ல. ஒருவேளை படத்துக்கு டெக்னிக்கல் சவுண்ட் கிடைத்திருந்தால் சென்னை 600028 மாதிரி இண்டர்நேஷனல் ஹிட்டாகியிருக்கும் என்று தோன்றுகிறது. ஆரம்பத்தில் கொஞ்சம் நிமிர்ந்து உட்கார வைத்தாலும் திரும்பத் திரும்ப ஒரே மாதிரியான காட்சிகள், ஒரே மாதிரியான ட்விஸ்ட்டுகள் என்று பேஜார் ஆகிறது. குறிப்பாக இடைவேளைக்குப் பிறகு விழுந்துவிடும் படம், மீண்டும் எழுந்திருப்பதற்குள் க்ளைமேக்ஸ் வந்துவிடுகிறது.

திசைக்கு ஒருவராக நாலு பேர் சுமக்க வேண்டிய படத்தை இயக்குனரும், இசையமைப்பாளருமாக பக்கத்து ஒருவராக இரண்டே பேர் சுமக்கிறார்கள். கேமிராமேனும், எடிட்டரும் சும்மாக்காச்சும் கைவைத்து பாவ்லா காட்டியிருக்கிறார்கள். ஓவர் பந்தா உடம்புக்கு ஆகாது என்கிற வகையில், சுமாரான படத்துக்கு சூப்பர் பப்ளிசிட்டி செய்திருப்பதே, இப்படம் குறித்த நெகட்டிவ் மவுத் டாக் அதிகமாக வெளிவர காரணமாகி விட்டது.

எது எப்படியோ.. வெங்கட்பிரபுவுக்கு பிறகு தமிழில் அவருடைய genreல் திறமையோடு இன்னொரு இயக்குனரை அட்ட கத்தி அடையாளம் காட்டியிருக்கிறது. இப்படம் சாதித்திருப்பது இதைதான்.

17 ஆகஸ்ட், 2012

ஆந்திர ஜோதி


ஆச்சரியத்தில் இயல்பாக நாம் மூக்கின் மேல் விரல்வைத்து கேட்கும் எந்த ஒரு வெற்றிக்கதையின் பின்னணியிலும் விவரிக்க முடியாத சோகமும், வலியும் இழையோடுவது வழக்கம்தான். சினிமாவில் மட்டுமே சாத்தியமாகக் கூடிய கதை என்று நாம் நினைப்பது, சிலரின் வாழ்வில் நிஜமாக நடந்துக் கொண்டிருக்கிறது என்பது நம் கற்பனைக்கும் சாத்தியமில்லாதது. ஜோதிரெட்டியின் கதையும் அப்படித்தான். ஒரு சாதாரணப் பெண்ணின் வாழ்க்கைப் பயணத்தில் இத்தனை திருப்பங்களா என இவரின் கதையைக் கேட்கும்போது வாய்பிளக்கிறோம்.

ஆந்திராவின் வாரங்கல் மாவட்டத்தில் ஹனுமகொண்டா மண்டலத்தில் அமைந்திருக்கும் நரசிம்மலாகூடம் என்கிற ஊரில் பிறந்தார் ஜோதிரெட்டி. நான் குழந்தைகளில் இவர்தான் மூத்தவர். அப்பா சாதாரண விவசாயப் பணியாளர். எமர்ஜென்ஸி கால நெருக்கடியில் அவருக்கு வேலை கிடைக்கவில்லை. குடும்பத்தை நடத்த சிரமப்பட்டவர் வெறுத்துப் ராணுவத்தில் பணிக்குச் சேர்ந்தார். ஆனாலும் குடும்பம் மீதிருந்த பாசம் காரணமாக தன் பணியை தொடரவில்லை. இராணுவப் பயிற்சியிலிருந்து பாதியிலேயே ஊர் திரும்பினார். குடும்ப வறுமை தொடர்ந்தது. அம்மா இல்லாத குழந்தை என்றுகூறி அருகிலிருந்த ‘பாலசதன்’ என்கிற ஆதரவற்றோர் இல்லத்தில் ஜோதியை சேர்த்தார் அவருடைய தந்தை.

ஐந்தாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு முடிக்கும் வரை ஜோதி அந்த இல்லத்தில்தான் வாழ்ந்தார். வாழ்வின் மிக மோசமான கட்டம் அது. குளிர்க்காலங்களில் போர்வைகூட இல்லாமல் கொடிய வறுமை. ஏதேனும் அதிசயம் நிகழும், தன் வாழ்வு மாறும் என்று தினம் தினம் கற்பனையிலேயே நாட்களை கடத்தினார். கோடை விடுமுறையின் போது குழந்தைகள் தங்கள் ஊருக்கும், உறவினர் வீடுகளுக்கும் செல்வதுண்டு. ஐந்தாண்டுகளில் ஒருமுறை கூட ஜோதி தனது வீட்டுக்குச் சென்றதில்லை. வார்டனின் இல்லத்திலேயே தங்கிவிடுவார். அந்த நாட்களின் நினைவுகள் இன்னும்கூட ஜோதிக்கு கொடுங்கனவுதான். அன்னை தெரசாவின் வார்த்தைகளோடு அந்தநாளை நினைவுகூர்கிறார். “வறுமையோ, வேறு எந்த விஷயமோகூட இளமையில் கொடிது அல்ல. நம்மைப் பற்றி யாருக்குமே அக்கறையில்லை என்று உணர்வதைவிட மோசமான விஷயம் உலகில் இல்லை”
பத்தாம் வகுப்பில் எல்லோரும் பாராட்டும் விதமாக நல்ல மதிப்பெண்களோடு தேர்ந்தார் ஜோதி. படிப்பைத் தொடரவேண்டும் என்பது அவரது கனவு. ஆனால் அவரது அப்பாவுக்கு வேறு திட்டமிருந்தது. சிறுவயதிலேயே தன் மகளை ஆதரவற்றோர் இல்லத்தில் அனாதரவாக விட்ட குற்றவுணர்வின் காரணமாக, அவளுக்கு நல்ல குடும்ப வாழ்க்கை அமைத்துத்தரவேண்டும் என நினைத்தார். முடிந்தவரை சீக்கிரமாக தன்னுடைய கடமைகளை முடித்தாகவேண்டும் என்று அவருக்கு அவசரம். பதினாறு வயதிருந்தபோதே ஜோதிக்கு திருமணம் செய்வித்து நன்றாக வாழவைக்க வேண்டுமென ஆசைப்பட்டார். அப்பாவின் ஆசைப்படியே ஜோதிக்கு திருமணம் ஆனது. கணவர் சங்கிரெட்டி.

திருமணம் குறித்த பெரிய ஆர்வமோ, புரிதலோ இல்லாத வயது. பதினெட்டு வயதிலேயே இரண்டு குழந்தைகளுக்கு தாயானார் ஜோதி. துரதிருஷ்டவசமாக பிறந்த வீட்டு வறுமை புகுந்த வீட்டிலும் இருந்தது. தன் குழந்தைகளை காப்பாற்ற சிரமப்பட்டார். மாமியாரின் பொறுப்பில் குழந்தைகளை விட்டுவிட்டு, விவசாயக்கூலியாக பணியாற்றத் தொடங்கினார். தினமும் ஐந்து ரூபாய் கூலி. படித்த பெண் ஒருவர் தங்களோடு வேலை செய்வது, அவருடன் பணியாற்றவர்களுக்கு அதிசயமாக இருந்தது.

1986ஆம் ஆண்டிலிருந்து 89ஆம் ஆண்டுவரை மூன்றாண்டுகள் கடுமையாக உழைத்தார் ஜோதி. படிக்கும்போது ஏதோ ஓர் அதிசயம் நிகழும் என்று தினம் தினம் அவர் எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்த அதிசயம் குறித்த கனவெல்லாம் இப்போது இல்லை. ஆனாலும் விதி சிரித்தது. இம்முறை நல்லவிதமாகவே சிரித்தது. ஜோதி எதிர்பாராத அந்த அதிசயமும் நிகழ்ந்தது. நேரு யுவகேந்திரா திட்டம் மூலமாக அந்த கிராமத்தில் வயது வந்தோருக்கு கல்வி போதிக்கும் மையம் ஒன்று உருவானது. அதில் பயிற்றுநராக ஜோதிக்கு வாய்ப்பு கிடைத்தது. மாதம் நூற்றி ஐம்பது ரூபாய்தான் சம்பளம். விவசாயக் கூலிவேலையில் கிடைக்கும் அதே பணம்தான் என்றாலும், இது அவரது படிப்புக்கு மரியாதை செய்யும் கவுரவமான வேலையாக இருந்தது. தன்னோடு வேலை செய்தவர்களுக்கே ‘டீச்சர்’ ஆனார் ஜோதி. டீச்சர் என்பதால் கண்டிப்பு காட்டாமல், விளையாட்டாக பாடம் நடத்தினார். நல்ல பலன். ஓராண்டு கழித்து ஆய்வுக்கு வந்த குழுவினர் ஆச்சரியப்பட்டார்கள். ஜோதியின் தன்னார்வத்தையும், அர்ப்பணிப்பையும் பாராட்டும் வகையில் ஹனுமகொண்டா மண்டலத்துக்கே அவரை பயிற்றுநராக தரம் உயர்த்தினார்கள்.

இந்தப் பதவிக்கு உயர்ந்தபிறகு வாரங்கல் மாவட்டம் முழுக்க அவர் பயணிக்க வேண்டியிருந்தது. பல்வேறு மனிதர்களை சந்தித்துப் பேசியபோது, ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ‘கல்வி’ என்பது எத்தனை மகத்தான முன்னேற்றத்தை ஏற்படுத்துமென கண்டுகொண்டார். தானும் இனி முன்னேற வேண்டுமானால், கல்விரீதியாக தன்னை தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று உணர்ந்தார். அம்பேத்கர் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பையும், பட்டமேற்படிப்பையும் முடித்தார். பி.எட் முடித்து அரசுப்பணியில் ஆசிரியராக வெற்றிகரமாக சேர்ந்தார்.

மிக சுலபமாக அவரது இந்தப் பயணத்தை வார்த்தைகளில் கடந்துவிட்டோம். ஒரு குக்கிராமத்துப் பெண், தன் கிராமத்தை விட்டு வெளியே வந்து பணிக்காக தங்குவதும், கணவர்-குழந்தைகள் என்று குடும்பத்தையும் கவனித்துக் கொள்வதையும் வெறுமனே வெற்றியாகவோ, சாதனையாகவோ சொல்லிவிட முடியாது. இவற்றைத் தாண்டிய வார்த்தைகள் தேவை. ஜோதியின் கதை அவர் ஆசிரியராக பணிக்கு சேர்ந்ததோடு முடிந்துவிட்டால், மிகச்சாதாரண வெற்றிக்கதைகளில் ஒன்றாக சேர்ந்திருக்கும். ஆனால் இன்னும் தொடர்கிறது.

ஜோதியின் உறவினர்களில் ஒருவர் அமெரிக்காவில் இருந்தார். அமெரிக்க வருமானம் அந்த குடும்பத்தை எப்படி தரமுயர்த்தியது என்பதை நேரில் கண்டார். உறவினரின் குழந்தைகளுக்கு நல்ல கல்வியும், வாழ்க்கைத் தரமும் கிடைத்தது. தன் குழந்தைகளுக்கும் அதை வழங்கவேண்டுமென்ற ஆசை ஜோதியின் நெஞ்சில் தீயாய் பற்றியெரியத் தொடங்கியது. கம்ப்யூட்டர் கற்றுக் கொண்டார். அமெரிக்கா செல்வதற்காக கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேர்க்கத் தொடங்கினார். ஆனால் விசா கிடைப்பது அத்தனை சுலபமாக இல்லை. எப்படியோ அடித்துப் பிடித்து ‘விசா’ வாங்கி, சொற்பப் பணத்தோடு அமெரிக்கா பறந்தார். அமெரிக்கா சென்றவுடன் தான் தெரிந்தது, அங்கே வாழ்வது அத்தனை சுலபமல்ல. யாரெல்லாம் தன்னை ஆதரிப்பார்கள் என்று நினைத்து அமெரிக்காவுக்குப் போனாரோ, அவரெல்லாம் கைகழுவி விட்டார்கள்.

கையிருப்புக் கறைந்துக் கொண்டிருந்த நேரத்தில், நியூஜெர்ஸி நகரில் ஜோதிக்கு வேலை கிடைத்தது. ’மூவி டைம்’ என்கிற வீடியோ கடையில் விற்பனைப் பணி. ஒரு குஜராத்திக் குடும்பத்தில் ‘பேயிங் கெஸ்ட்’ ஆக தங்கினார். வீடியோக் கடையில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, வாரங்கல்லைச் சேர்ந்த ஒரு இந்தியர் பழக்கமானார். ஜோதியின் கதையைக் கேட்ட அவர், தன்னுடைய தம்பிக்கு சொந்தமான நிறுவனம் ஒன்றில் வேலைக்கு சேர்த்துவிட்டார். சி.எஸ்.அமெரிக்கா என்கிற நிறுவனத்தில் பயிற்றுநராக பணியாற்ற, ஜோதியின் பொருளாதாரக் கனவுகள் நிஜமாகத் தொடங்கின. சிறிது காலத்திலேயே ஐ.சி.எஸ்.ஏ என்கிற பெரிய நிறுவனம் தனது கதவுகளை, கவர்ச்சிகரமான சம்பள உறுதியோடு ஜோதிக்கு திறந்து வைத்தது. எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்தது என்று நிம்மதியாகப் பணியாற்றிக் கொண்டிருந்தவருக்கு அடுத்து ஒரு திடீர் இடி.

அவரது விசா பணியாற்றுவதற்கு அங்கீகரிக்கப் படாதது என்பதால் எச்-1 விசா வாங்கும்படி நிறுவனம் வற்புறுத்தியது. எச்-1 விசா சுலபமாக கிடைக்கவில்லை என்பதால் நிறுவனத்தில் இருந்து ஜோதி வெளியேறினார். மீண்டும் நாட்டுக்கு திரும்புவதை விட எச்-1 விசாவை போராடி வாங்குவதையே அவர் விரும்பினார். ஒரு மணி நேரத்துக்கு ஐந்து டாலர் சம்பளம் கிடைக்கும் சிறு சிறுவேலைகளை செய்தார். தன்னுடைய விசாவை உறுதியாக்க மெக்ஸிகோ வரை அவர் செல்ல வேண்டியிருந்தது. இந்த அலைச்சல்தான் ஜோதியை ஒரு நிறுவனம் துவக்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாக்கியது. அமெரிக்காவில் விசா பிரச்சினைகளால் அவதிப்படும் வெளிநாட்டவருக்கு உதவி, அதன் மூலம் சிறு கமிஷனை பெறும் ஒரு நிறுவனத்தை உருவாக்கினால் என்ன என்கிற ஐடியா அவருக்கு தோன்றியது. ‘கீ சொல்யூஷன்’ நிறுவனம் உருவான கதை இதுதான். ‘தீர்வுகளுக்கு சாவிஎன்கிற பெயர் பொருத்தமானதுதான் இல்லையா?

2000ஆம் வருடம் மே மாதம் அமெரிக்காவுக்கு திரும்பிய ஜோதி, 2001 செப்டம்பரில் தன் நிறுவனத்தைத் தொடக்கினார். சாஃப்ட்வேர் தொழில் தெரிந்த தன்னுடைய உறவினர் ஒருவரையும் பங்குதாரர் ஆக்கி ‘கீ சாஃப்ட்வேர் சொல்யூஷன்ஸ்’ என்கிற பெயரில் தொழிலை விரிவுப்படுத்தினார். இரட்டை கோபுரத் தாக்குதலால், செப்டம்பர் 2001 அமெரிக்காவே அலறிய மாதம். ஆனால் அம்மாதத்தில் தொழில் தொடங்கி, மிகக்குறைந்த கால அவகாசத்தில் ஜோதி உயர்ந்தார். அவரது கனவுகள் ஒவ்வொன்றாக நனவாகத் தொடங்கியது. தன்னுடைய குழந்தைகளுக்கு அமெரிக்காவின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் கல்வி வழங்க முடிந்தது. இரண்டு பெண்களையும் நல்ல இடத்தில் கட்டிக் கொடுத்திருக்கிறார்.

அமெரிக்க வாழ்க்கை அமைந்துவிட்டாலும் ஜோதிக்கு தன்னுடைய வேர்களை மறக்கமுடியவில்லை. வருடத்துக்கு ஒருமுறையாவது இந்தியாவுக்கு வருகிறார். ஆதரவற்றோர் இல்லங்களுக்கு நேரில் செல்கிறார். பொருள் உதவி செய்கிறார். இவரது கதையை தங்கள் மாணவ, மானவிகளிடம் நேரில் சொல்லவைக்க ஆந்திர கல்லூரிகள் போட்டாபோட்டி போடுகிறது. இந்தியப் பெண்களுக்கு கல்வி அடிப்படையில் உதவும் ஓர் ஒருங்கிணைந்த அமைப்பினை உருவாக்குவது அவரது இன்றைய லட்சியம். விடாப்பிடியாக தான் விரும்பியதை சாதித்தவர், லட்சியத்தை எப்பாடு பட்டாவது நிச்சயமாக அடைவார். ஒவ்வொரு இந்தியப் பெண்ணும் ஜோதியின் வாழ்க்கையை படிக்க வேண்டும். ஏனெனில் அவர்களுக்கான படிப்பினை இவரது வாழ்க்கையில் இருக்கிறது.

(நன்றி : புதிய தலைமுறை)