23 ஆகஸ்ட், 2012

கால்களை வென்றவன்!


சர்வதேச அளவிலான தன்னார்வலர் குழு ஒன்றினில் பங்குபெற்று 2008ஆம் ஆண்டு கனடாவைச் சேர்ந்த ஸ்பென்ஸர் வெஸ்ட் கென்யாவுக்கு சென்றார். அங்கிருக்கும் கிராமப்புற மக்களுக்கு உதவும் வகையிலான ஒரு பள்ளியை உருவாக்குவதில் ஸ்பென்சரின் பங்கு அதிகம். இந்தப் பயணத்தின் போது நிறைய ஆப்பிரிக்க இளைஞர்களை அவரால் சந்திக்க முடிந்தது. வறுமையால் தங்களின் ஒவ்வொரு நாளையும் கடக்க அவர்கள் நடத்தும் போராட்டத்தை கண்டார். இவர்களுக்காக தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணிப்பதே தான் பிறந்ததற்கான அர்த்தம் என்பதனை உணர்ந்தார்.
 கடந்த அறுபது ஆண்டுகளிலேயே மோசமான பஞ்சத்தை கடந்த ஆண்டு கென்யா சந்தித்தது. குடிக்க நல்ல குடிநீரின்றி கிராமப்புறங்களில் கொத்து, கொத்தாக மக்கள் நோய்வாய்ப்பட்டு மடிந்துக் கொண்டிருந்தார்கள். கென்ய கிராமப்புறங்களில் முறையான, நீடித்த குடிநீர் ஆதாரங்களை உருவாக்கும் நோக்கத்துக்காக நிதி திரட்ட ஆரம்பித்தார். இதற்காக உலகின் பார்வை தன் மீது படுவதற்காக அவர் அறிவித்த அறிவிப்புதான் இந்த கட்டுரை எழுதப்படுவதற்கான நியாயத்தை ஏற்படுத்துகிறது.
ஆப்பிரிக்காவின் மிக உயர்ந்த மலையான கிளிமாஞ்சாரோவின் சிகரத்தை எட்டப்போகிறேன்” என்று ஸ்பென்ஸர் அறிவித்ததுமே சர்வதேச பிரபல ஊடகங்கள் பிபிசி, சிடிவி, சிபிஎஸ், டெலிகிராப் போன்றவை பரபரப்படைந்தன. ஸ்பென்சருக்கு கோடிகள் நிதியாக குவிய ஆரம்பித்தது. காரணம், அவருக்கு கால்களே இல்லை என்பதுதான். இரண்டு கால்களுமின்றி தவழ்ந்தே, சுமார் இருபதாயிரம் அடி உயரமுள்ள ஆப்பிரிக்காவின் உயர்ந்த சிகரத்தை எட்டுவேன் என்கிற அவரது அறிவிப்பு பலரையும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கியது.

கனடாவின் டொரண்டோ நகரில் பிறக்கும்போதே மரபணு தொடர்பான விசித்திரமான நோயுடன் பிறந்தார் ஸ்பென்ஸர் வெஸ்ட். அவரது மூன்றாவது வயதில் முழங்காலுக்கு கீழ் முழுவதும் அகற்றப்பட்டது. ஐந்தாவது வயதில் இடுப்புக்குக் கீழ் இருந்த பகுதிகளையும் இழந்தார். அப்போது அவரது பெற்றோரிடம் “உயிரோடு இருப்பதைத் தவிர வேறெதையும் உங்கள் மகனிடம் நீங்கள் எதிர்ப்பார்க்காதீர்கள்” என்று மருத்துவர்கள் சொன்னார்களாம். ஆனால் தங்கள் மகன் மீது பெரும் நம்பிக்கை வைத்தார்கள் அவரது பெற்றோர்கள். நம்பிக்கை வீண் போகவில்லை. இன்று ஸ்பென்ஸர் வெஸ்ட் உலகளாவிய அளவில் புகழ்பெற்ற தன்னம்பிக்கை பேச்சாளர்களுள் ஒருவர்.

தான்சானியாவின் கிளிமாஞ்சாரோ உச்சியை அடைவது என்பது சாதாரண சாதனை அல்ல. பாலைவனம், காடு, கடும் பனி என்று வித்தியாசமான சூழல்களை கடக்க வேண்டும். உச்சியை எட்டுகிறோம் என்று கிளம்புபவர்களில் ஐம்பது சதவிகிதம் பேர் மட்டுமே இலக்கை அடைகிறார்கள். மீதி பேர் பாதியிலேயே திரும்பிவிடுகிறார்கள். வருடத்துக்கு பத்து பேராவது இந்த மலையேறும் முயற்சியில் உயிர் இழக்கிறார்கள்.

இப்படிப்பட்ட மலையேற்றத்தை ஸ்பென்ஸர் அறிவித்தது என்பதே பலரையும் ஆச்சரியத்துக்கும், அதிர்ச்சிக்கும் உள்ளாக்கியது. ஒட்டுமொத்த பயணத் தூரத்தில் இருபது சதவிகித தூரத்தை மட்டுமே வீல்சேர் மூலமாக ஸ்பென்ஸர் கடந்தார். மீதி எண்பது சதவிகிதத்தை கையுறை அணிந்த கைகளாலேயே ஏறினார். இடைவிடாத ஏழுநாள் பயணம். “ஏழாவது நாள் சிகரத்தின் உச்சியை எட்டியிருந்தபோது என்னுடைய கைகள் கன்னிப்போய் இருந்தன. கண்ணீர், இரத்தம், வியர்வை எல்லாம் கலந்த வெற்றி இது” என்று தன்னுடைய இணையத்தளத்தில் இந்த சாகஸத்தைப் பற்றி எழுதுகிறார் ஸ்பென்ஸர். freethechildren.com என்கிற இணையத்தளத்தில் தன் வாழ்க்கையை எண்ணங்களாக்கி கட்டுரைகளை தொடர்ச்சியாக பதிந்துவருகிறார்.

“கிளிமாஞ்சாரோவை என்னால் எட்ட முடியும் என்று காண்பிப்பதற்காக மட்டுமே நான் மலையேறவில்லை. தடைகளையும், சவால்களையும் எவ்வாறு தாண்டி வாழ்க்கையை வெல்வது என்று மற்றவர்களுக்கு என் வாழ்க்கையையே படமாக்கி காட்ட விரும்பினேன். நம் வாழ்க்கையை மற்றவர்களுக்கு எப்படியெல்லாம் உபயோகமாக பயன்படுத்த முடியும் என்பதையும் இந்த சாதனையின் மூலம் உணர்த்தியிருப்பதாக கருதுகிறேன்” என்று மலையிறங்கி வந்தவுடன் சொன்னார் ஸ்பென்ஸர்.
“எனக்கு கால்கள் இல்லை என்பதால் என்னை நானே பரிதாபத்துக்குரியவனாக பார்த்துக் கொண்டதில்லை. எல்லோராலும் முடிவது என்னாலும் முடியுமென்று நம்புகிறேன். இதுதான் என்னுடைய வெற்றிக்கு காரணம்” என்று வெற்றிக்கான சீக்ரட்டை வெளிப்படையாக போட்டு உடைக்கிறார் முப்பத்தோரு வயதான ஸ்பென்ஸர்ஸ் வெஸ்ட்.

நம்மாலும் முடியும்தான் இல்லையா?

6 கருத்துகள்: