25 அக்டோபர், 2016

புனைவில் ஒரு மங்காத்தா!

 தமிழ் சினிமாவில் ‘மங்காத்தா’வின் வெற்றி ஆகப்பெரிய ஆச்சரியம். அதுவரையிலான தமிழ் சினிமாவின் நாயகர்கள் ஒழுக்கமானவர்கள், நேர்மையானவர்கள், பெண்களிடம் நாணயமாக நடந்துக் கொள்வார்கள், அடக்குமுறைகளுக்கு எதிராக திமிறியெழுவார்கள், பழிக்குப் பழி வாங்குவார்கள், இத்யாதி.. இத்யாதி..

எதிர்நாயகனை மையமாக கொண்ட திரைப்படங்களில் கூட சட்டத்துக்கு புறம்பான, சமூகத்துக்கு எதிரான அவனது செயல்களில் ஓர் அறம் இருக்கும். இல்லையேல் முழுக்க கெட்டவனான நாயகன், கடைசியில் திருந்துவான் என்பதைப் போன்ற Conditions apply இருக்கும்.

‘மங்காத்தா’, எல்லாவற்றையும் உடைத்தெறிந்தது. மும்பை காவல்துறையில் ஒழுக்கக்கேடு மற்றும் வேறுவிதமான குற்றச்சாட்டுகளுக்காக சஸ்பெண்ட் செய்யப்பட்ட அசிஸ்டெண்ட் கமிஷனர்தான் நாயகன். சுயநலத்துக்காக – பணத்துக்காக –- எதையும் செய்வான். தன் காதலியை கூட ஏமாற்றுவான். நட்பு, அன்பு மாதிரி எந்த நல்ல உணர்வுகளும் அவனுக்கு இல்லை. தான் அடைய விரும்பியதற்காக எந்த எல்லைக்கும் போவான். படம் முடிந்தபிறகும்கூட விநாயக் மகாதேவ் வில்லன்தான். அஜித்தை இரட்டை வேடமாக காட்டி ஒரு அஜித் நல்லவர், இன்னொருவர் வில்லன் என்கிற வழக்கமான ஜல்லியை எல்லாம் இயக்குநர் வெங்கட்பிரபு அடிக்கவில்லை.

அந்தப் படத்தின் பிரும்மாண்ட வெற்றி என்பது ‘பணத்துக்காக எதையும் செய்யலாம்’ என்கிற மக்களின் மில்லெனியம் காலத்து மனநிலையை அப்பட்டமாக பிரதிபலித்தது. நாயகன் என்பவன் ஒழுக்கசீலன் அல்ல. எப்படியோ கோடிகளை சம்பாதிப்பவன் என்கிற புதிய இலக்கணத்தை படைத்தது. விநாயக் மகாதேவுக்கு கிடைத்தது மாதிரி மங்காத்தா ஆட வாய்ப்பு கிடைத்தால், ரிஸ்க் எடுத்து ஆடுவதற்கு ஒவ்வொருவருமே தயாராகதான் இருக்கிறோம்.

உலகமயமாக்கலுக்கு பிறகு மக்களிடையே வளர்ந்திருக்கும் இந்த ‘கம்ப்ளீட் மெட்டீரியலிஸ்டிக் மெண்டாலிட்டியை’ உணராதவர்கள்தான் இன்னமும் இராமாயணம், மகாபாரதம் என்று டிவியில் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் ஒவ்வொரு வாரமும் இதை பார்க்கும்போது, இவர்களை வைத்து டி.ஆர்.பி. கணக்கு காட்டி பின்னணியில் பலரும் கோடிகளை குவித்துக் கொண்டிருப்பது.. பாவம், இவர்கள் சாகும்வரை அறியப் போவதில்லை.

அறம் பேசுவதே இன்று மிகப்பெரிய வருவாய் கொடுக்கக்கூடிய பிசினஸ். முதுகில் குத்தும் துரோகமெல்லாம் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிசினஸ் டெக்னிக்.

நமக்கு இன்று பேச மொழி இருக்கிறது, எழுத எழுத்து இருக்கிறது, தகவல்களை பரப்புவதற்கு தொழில்நுட்பம் இருக்கிறது, மனித வாழ்வை இலகுவாக்க எந்திரங்கள் இருக்கின்றன, உலகளாவிய நாகரிகம் இருக்கிறது.

ஆனால், மனதளவில் மனிதனின் முதுகு நிமிர்ந்த கற்கால காலக்கட்டத்துக்குச் சென்றிருக்கிறோம். இன்றைய உலகில் இருவகை மனிதன்தான் உண்டு. வேட்டையாடுபவன், வேட்டையாடப்படுவன். வேட்டையாட திராணி இல்லாதவன் ‘சத்திய சோதனை’ படித்துக் கொண்டு காலத்தை கழிக்க வேண்டியதுதான். வேட்டையாடுபவனுக்கு இந்த உலகமே சொந்தம். பணம் சம்பாதிப்பவன்தான் மனிதனாக மதிக்கப்படுகிறான். மற்றவனெல்லாம் மரவட்டையை போல வாழ்ந்து மடிய வேண்டியதுதான்.

இந்த மனப்பான்மை சமூகத்தில் உருவாகக்கூடிய காலக்கட்டத்தின் முதல் தலைமுறையைச் சேர்ந்தவர்களின் கதைதான் ‘ரோலக்ஸ் வாட்ச்’. அந்தஸ்தின் அடையாளமாக இந்த வாட்ச் கருதப்பட்ட காலம் ஒன்று உண்டு. இன்று வாட்ச் கட்டுவது என்பதே gadgetகள் குறித்த அறியாமை கொண்ட நாட்டுப்புறத்தானின் செயல்பாடாக ஆகிவிட்டது.

‘உலகில் தாய்ப்பாலை தவிர அனைத்திலுமே கலப்படமாகி விட்டது’ என்று தாய்ப்பாலின் மகத்துவத்தை சினிமாவில் வசனமாக வைத்தால் கைத்தட்டல் கிடைக்கிறது. ‘ரோலக்ஸ் வாட்ச்’, தாய்ப்பால் மாதிரி. அதற்கு 99 சதவிகிதம் டூப்ளிகேட்டே இருக்காது. அப்படி டூப்ளிகேட் செய்ய முயற்சித்தால், அம்முயற்சி பல்லிளித்து விடும்.

இந்த நாவலின் கதை சொல்லி தன்னை அதிகம் தாக்கப்படுத்திய நண்பன் ஒருவனின் நகலாக மாற முயற்சிக்கிறான். எங்கோ சாதாரணமாக கிடந்த இவனை சமூகத்தின் மேல்மட்ட தொடர்புகளுக்கு கொண்டுச் சென்றவன் சந்திரன் என்கிற அந்த நண்பன். பணம் எங்கே இருக்கிறது என்று அவன் வழி சொல்கிறான். அதை குறுகிய காலத்தில் குறுக்கு வழியில் அடைய இவன் முயற்சிக்கிறான்.

வாரமிருமுறை இதழ்களில் கழுகார், வம்பானந்தா, ராங்கால் பகுதிகளில் கிசுகிசுக்கப்படும் அத்தனை கேப்மாரித்தனங்களையும் செய்ய கதை சொல்லிக்கு எந்த தயக்கமும் இல்லை. ஆனால், இவனது குருவான சந்திரனோ குறைந்தபட்ச அறவிழுமியங்களோடு நடக்கிறான்.

அவன் ஏன் அப்படி இருக்கிறான், இவன் ஏன் இப்படி இருக்கிறான் என்பதற்கான சமூகப் பின்னணி, பிறந்த குடும்பம், வளர்ப்பு உள்ளிட்ட காரணிகளை விரிவாக அலசுகிறது ‘ரோலக்ஸ் வாட்ச்’. இது சரி, இது தவறு என்று போதிப்பதோ, சுட்டிக் காட்டுவதோ நாவலாசிரியரின் நோக்கமாக இல்லை. இது இது இப்படி இருக்கிறது, அது அது அப்படி இருக்கிறது என்று நாமறியாத இருட்டுச் சென்னையில் முரட்டுப் பக்கங்களை அவர் பாட்டுக்கும் எழுதிக்கொண்டே போகிறார். கொஞ்சமும் தொய்வில்லாத ட்வெண்டி ட்வெண்டி மேட்ச் நடையில் எழுதப்பட்டிருக்கும் அரசியல் மங்காத்தா இது. கடந்த பதினைந்து ஆண்டுகளில் நாம் வாசித்த பல கிசுகிசு புதிர்களுக்கான விடையை, ஓரளவுக்கு அரசியல் பிரக்ஞையுள்ளவர்கள் இந்நாவலில் கண்டுகொள்ளலாம்.

ஒருக்கட்டத்தில் தான் வெறும் நகலாகவே இருப்பதின் வெறுமையை கதை சொல்லி உணர்கிறான். தன்னை உருவாக்கியவனையே வெறுக்கிறான். தன்னை நிரூபிக்க முயற்சிக்கிறான். காலம் உருட்டும் தாயம் யார் யாரை என்னென்னவெல்லாம் செய்யக்கூடுமென்கிற நிகழ்தகவினை எந்த ஈவு இரக்கமுமின்றி முழுநீள நாவலாக எழுதியிருக்கிறார் சரவணன் சந்திரன். அசலாக இருப்பதே ஆளுமை என்கிற எக்காலத்துக்கும் பொருந்தக்கூடிய சிந்தனையை இந்நாவல் வலியுறுத்துகிறது.
சரவணன் சந்திரன், யார் மாதிரியும் இல்லாத புது மாதிரி எழுத்தாளர். இவரது எழுத்தில் அவரது சாயல் தெரிகிறது, இவரது சாயல் தெரிகிறது என்று யாரையும் சுட்ட முடியவில்லை. இவரது முந்தைய நாவலான ‘ஐந்து முதலைகளின் கதை’யும் சரி, இந்த நாவலும் சரி. தமிழ் இலக்கியத்தில் புனைவிலக்கியத்துக்கு என்றிருக்கும் பல வழமைகளை சட்டை கூட செய்யவில்லை. பழசு எல்லாவற்றையும் உடைத்துக் கொண்டு முன்னேறும் வெறி தெரிகிறது.

சரவணன் சந்திரனின் எழுத்துகளை வாசிக்கும்போது, இரண்டாயிரங்களுக்கு பிறகு உருவானவர்களில் தவிர்க்கவியலாத ஓர் எழுத்தாளனை வாசிக்கும் பெருமிதம் ஏற்படுகிறது. எந்த இஸங்களும் சரவணனுக்கு இல்லை அல்லது இருப்பதாக எழுத்தில் காட்டிக் கொள்ளவில்லை. தன்னை வாசிப்பவனுக்கு, தன் எழுத்து புரியவேண்டுமே என்கிற ஒரே அக்கறை மட்டும்தான் அவரது எழுத்தில் அழுத்தமாக வெளிப்படுகிறது. குறிப்பாக, தற்கால இலக்கியத்தில் அதிகம் உடைக்கப்படும் ஜல்லி, சரவணன் சந்திரனிடம் சற்றுமில்லை என்பதே இவரை தனித்துக் காட்டுகிறது.

‘ரெமோ’ படத்தில் சிவகார்த்திகேயன் சொல்லும் வசனம் ஒன்று. “என்னை மாதிரி சாதாரணப் பசங்களுக்கு வாய்ப்பு அதுவா வராது. நாங்களாதான் தேடி வரவைக்கணும்”. இந்த வசனம் சரவணன் சந்திரனின் கதை நாயகர்களுக்கே எழுதப்பட்ட பஞ்ச் டயலாக் மாதிரி இருக்கிறது. தனக்கான வாய்ப்புகளை தானே உருவாக்க முனைபவர்கள்தான் இவரது கதாபாத்திரங்கள்.

ஒரு மனிதனின் சூழல்தான் அவனுடைய நல்லது, கெட்டதுகளை தீர்மானிக்கிறதே தவிர, அவனல்ல என்பதை திரும்பத் திரும்ப வலியுறுத்துகிறது சரவணன் சந்திரனின் கதாபாத்திரங்கள். அவ்வகையில் பார்க்கப் போனால் உலகில் நல்லவன் கெட்டவன் என்று யாருமில்லை, மனிதன் மட்டுமே இருக்கிறான். பச்சை விளக்கொளியில் காட்டினால் நல்லவன், அவன் மீதே சிகப்பு விளக்கொளி பாய்ச்சினால் கெட்டவன். அவ்வளவுதான். எழுபதுகளின் இறுதியிலும், எண்பதுகளின் தொடக்கத்திலும் நடுத்தரக் குடும்பங்களில் பிறந்தவர்களின் மன உளவியலை, முன்னேறுவதற்கான உந்துதலை, அதற்காக அவர்கள் செலவழிக்கும் உடல் மற்றும் மூளை ஆற்றலை... சரவணன் அளவுக்கு துல்லியமாக வேறு யாரும் தமிழிலக்கியத்தில் இதுவரை பதிவு செய்திருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.

நூல் : ரோலக்ஸ் வாட்ச்
எழுதியவர் : சரவணன் சந்திரன்
பக்கங்கள் : 160
விலை : ரூ.150
வெளியீடு : உயிர்மை பதிப்பகம்
11/29, சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை-600018.
போன் : 044-24993448 இணையத்தளம் : www.uyirmmai.com



6 அக்டோபர், 2016

க.கா.விலிருந்து தொடரி வரை!

 தன்னுடைய உயரத்தை அவர் உணரவில்லையா, அல்லது அவரைப் போன்றவர்களை தமிழ் சினிமா சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லையா என்று சொல்லத் தெரியவில்லை.

இயக்குநர் ஷங்கருக்கு உரிய potential இவருக்கும் உண்டு.

ஆனால்-

ஷங்கருக்கு கிடைத்த வாய்ப்புகள் இவருக்கு கிடைக்கவில்லை.

தனக்கு வாய்த்த space குறைவுதான் என்றாலும், அதை முடிந்தவரை நிறைவாகவே செய்ய முயற்சிப்பார். அவரது படங்கள் வெற்றி பெறாமல் போயிருக்கலாம். ஆனால், அழகியலில் எந்த குறையும் இருக்காது.

பிரபு சாலமன்.

இயக்குநராகி பதினெட்டு ஆண்டுகள் ஆகிறது. இன்னமும் அவருடைய கேரியர் ‘பரமபதம்’தான். பெரிய ஏணியில் ஏறிய அதே வேகத்தில் பெரிய பாம்பினை பிடித்து இறங்கிவிடுகிறார்.

நல்ல இயக்குநர்களுக்கு ஓர் இலக்கணமுண்டு. கதை, திரைக்கதை உள்ளிட்ட content கந்தாயங்கள், படப்பிடிப்பு உள்ளிட்ட திரைப்பணிகளுக்கு 50 சதவிகித உழைப்பை செலுத்தி, மீதியிருக்கும் 50 சதவிகிதத்தை எடிட்டிங் டேபிளுக்கு அர்ப்பணிப்பார்கள். அப்படிப்பட்ட எடிட்டிங் டேபிளின் மகத்துவத்தை தமிழ் சினிமாவில் முதன்முதலாக உணர்ந்தவர் எம்.ஜி.ஆர்.

இன்றைய தலைமுறை இயக்குநர்கள் பலரும் கதை விவாதங்களிலும், படப்பிடிப்புத் தளங்களிலும் தங்கள் முழு ஆற்றலையும் விரயமாக்கிவிட்டு அவசர அவசரமாக எடிட்டிங்கை முடித்து, ‘பண்ண வரைக்கும் போதும்’ என்று படத்தை வெளியிட்டு ரசிகர்களை தாலியறுக்கிறார்கள்.

பிரபுசாலமனின் படங்கள் பெரும்பாலும் எடிட்டிங் டேபிளில்தான் அதன் நிஜமான வடிவத்தை எட்டுகின்றன. இதில் கடைசியாக அவர் வெளியிட்ட ‘தொடரி’யில்தான் கொஞ்சம் பிசிறு தட்டுகிறது. மற்றபடி அவர் இயக்கிய படங்களில் தேவையற்ற காட்சிகளோ, செலவு செய்து எடுத்து விட்டோமே என்று துருத்திக் கொண்டு தெரியும் ஷாட்டுகளோ இருக்காது.

சினிமாவில் இயங்கவேண்டும் என்பதுதான் பிரபு சாலமனின் கனவு. அனேகமாக அவர் நடிகராக விரும்பிதான் சென்னைக்கு வந்திருப்பார் என்று தோன்றுகிறது. சரத்குமாருக்கு ‘டூப்’ போட்டிருக்கிறார். அந்தப் படத்தில் இணை இயக்குநராக பணியாற்றிக் கொண்டிருந்த சுந்தர்.சி-யின் நட்புதான் பிரபு சாலமனை இயக்கம் பக்கமாக செலுத்தியிருக்க வேண்டும்.

சுந்தர்.சி இயக்கிய முதல் படம் ‘முறை மாமன்’. அதில் உதவி இயக்குநராக பிரபு சாலமன் பணியாற்றினார். அடுத்து அன்பாலயா பிலிம்சுக்காக ‘முறை மாப்பிள்ளை’ (அருண் விஜய் அறிமுகமான படம்) படத்திலும் பிரபு சாலமன், சுந்தர்.சி-க்காக வேலை பார்த்தார். இந்தப் படம் முடியும் கட்டத்தில் தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் முட்டிக் கொள்ள படம் அந்தரத்தில் தொங்கியது. கோபத்துடன் சுந்தர்.சி வெளியேறி ‘உள்ளத்தை அள்ளித்தா’ எடுக்க ஆரம்பித்து விட்டார். பிரபு சாலமனே அன்பாலயா பிரபாகரனுக்கு கைகொடுத்து எடிட்டிங் - ரீரெக்கார்டிங் உள்ளிட்ட வேலைகளை ஒருங்கிணைத்து ‘முறை மாப்பிள்ளை’ வெளிவர உதவினார். அதற்கு நன்றிக்கடனாக பிரபு சாலமனை இயக்குநராக்குவதாக அன்பாலயா பிரபாகரன் உறுதி கூறினார்.

‘ஆஹா’ படம் ஹிட்டாகி அதில் ரகுவரன் - பானுப்ரியா ஜோடிப் பொருத்தம் ரசிகர்களை கவர்ந்திருந்த நேரம். ரகுவரனை வில்லத்தனமான ஹீரோவாக்கி, அவருக்கு பானுப்ரியாவை ஹீரோயினாக்கி ஒரு கதை எழுதி தயாராக வைத்திருந்தார் பிரபு சாலமன். ஆனால், அன்பாலயா பிரபாகரனுக்கோ மாஸ் ஹீரோவை வைத்து படம் எடுக்க வேண்டும் என்றுதான் ஆசை. ஷங்கரின் ‘முதல்வன்’ செய்துக் கொண்டிருந்த அர்ஜூனை வைத்து, இதே கதையை செய்யுங்கள் என்று சொல்லிவிட்டார். ‘Casting ஒத்துவராது சார்’ என்று பிரபு சாலமன் சொன்னதை அவர் கேட்கவில்லை. வேறு வழியில்லாமல் அர்ஜூனை வைத்தே ‘கண்ணோடு காண்பதெல்லாம்’ எடுத்தார். அர்ஜூன் பெரிய ஹீரோ என்பதால், பானுப்ரியா நடிக்க வேண்டிய பாத்திரத்தில் அப்போது இந்தியில் முன்னணி நடிகையாக இருந்த சோனாலி பிந்த்ரேவை புக் செய்தார்கள். படம் நன்றாக இருந்தும்கூட ‘முதல்வன்’ அர்ஜூனின் இமேஜே, இந்தப் படத்தை தோல்வியடையச் செய்தது. வைஜயந்தி மாலாவின் மகன் இந்தப் படத்தில் செகண்ட் ஹீரோவாக அறிமுகமானார். அவருடைய திரைவாழ்க்கையும் செல்ஃப் எடுக்கவில்லை. தயாரிப்பாளரான அன்பாலயா பிரபாகரனின் காலமும் முடிவுக்கு வந்தது. பிரபு சாலமனுக்கும் அடுத்த பட வாய்ப்பு கிடைக்கவில்லை.

தமிழில் வெளிவந்து வெற்றி பெற்ற ‘பாரதி கண்ணம்மா’ படத்தின் கன்னட உரிமையை ராக்லைன் வெங்கடேஷ் பெற்றிருந்தார். அந்தப் படத்தை இயக்கும் வாய்ப்பு பிரபு சாலமனுக்கு கிடைத்தது. அங்கும் இதே casting பிரச்சினை. ‘பார்த்திபன் நடித்த வேடத்துக்கு ரவிச்சந்திரன் பொருந்த மாட்டார்’ என்கிற இவரின் ஆட்சேபணையை, ஓவர்ரூல்ட் செய்தார் தயாரிப்பாளர். படம் ஃப்ளாப்.

‘சேது’ படத்தின் போதே விக்ரமுக்கும், பிரபு சாலமனுக்கும் நட்பு மலர்ந்திருந்தது. அதன் விளைவாக பிரபு சாலமனுக்கு படம் இயக்கும் வாய்ப்பை கொடுத்தார் விக்ரம். முந்தைய இரு படங்களையும் ஏ.கே.பிரபு என்கிற பெயரில் இயக்கியவர், தன்னுடைய பெயரை ஏ.கே.சாலமன் என்று மாற்றிக் கொண்டு இந்தப் படத்தை இயக்கினார். விக்ரமுக்கு, பிரபு சாலமன் வேறு கதைகளை சொல்ல, அவர் குறிப்பாக அப்பா - மகன் சென்டிமெண்ட் கதையிலேயே பிடிவாதமாக இருந்தார். ‘இந்த கதைக்கு உங்கள் வயது அதிகம்’ என்கிற சாலமனின் அட்வைஸ் எடுபடவில்லை. வழக்கம்போல தன் பாத்திரத்துக்கு பொருத்தமில்லா ஹீரோ என்கிற சாபக்கேட்டுக்கு ஆளானார் சாலமன். போதாக்குறைக்கு விக்ரமுக்கு ஏற்பட்டிருந்த கமர்ஷியல் ‘ஜெமினி’ இமேஜ், அடுத்தடுத்து பாலாஜி சக்திவேலின் ‘சாமுராய்’, சாலமனின் ‘கிங்’ என்று இரண்டு படங்களையும் தோற்கடித்தது.

முதல் மூன்று படங்களுமே படுதோல்வி அடைந்தபிறகு, ஓர் இயக்குநர் மேலெழுவது என்பது கிட்டத்தட்ட இன்று சாத்தியமே இல்லாத ஒன்று. பிரபு சாலமன் தினமும் ஒரு தயாரிப்பாளரையாவது சந்தித்து ஒன்லைன் சொல்லிக் கொண்டிருந்தார். ஒரு பெரிய ஹீரோவின் கால்ஷீட்டை வைத்திருந்த தயாரிப்பாளரிடம் கதை சொல்லப் போனார். “கதையெல்லாம் கிடக்கட்டும். உன் ஜாதகத்தைக் கொடு. ஹீரோவுக்கு மேட்ச் ஆச்சின்னா, நீதான் டைரக்டர்”. இவருக்கு ஆச்சரியமாக இருந்தது. நாம என்ன ஹீரோவையா கல்யாணம் பண்ணிக்கப் போறோம் என்று மனசுக்குள் நினைத்தவர், “என்னோட திறமைதான் சார் என் ஜாதகம்” என்று சொல்லிவிட்டு திரும்பிவிட்டார்.

ஆனால், அந்த சந்திப்பு வீண் போகவில்லை. அந்த ‘ஜாதக’ மேட்டரையே கதையாக்கினார். ஹீரோவின் ஜாதகம் வில்லனுக்கு பொருந்தித் தொலைக்கிறது. கிட்டத்தட்ட தன் மனைவி மாதிரி எப்போதும் ஹீரோ கூடவே இருக்க வேண்டும் என்று வில்லன் எதிர்ப்பார்க்கிறான். ஹீரோ மறுக்க, பிரச்சினை ஆகிறது என்று ‘கொக்கி’ போட்டு ‘கொக்கி’ கதையை எழுதினார். இம்முறை casting பிரச்சினையே வந்துவிடக்கூடாது என்று தெளிவாக இருந்தார். தன் பாத்திரத்துக்குதான் நடிகரே தவிர, நடிகருக்காக பாத்திரமல்ல என்று காத்திருந்தார். இவரை போலவே காத்திருப்பில் இருந்த கரணுக்கு ‘கொக்கி’ செட் ஆனது. முதன்முறையாக பிரபு சாலமன் என்கிற பெயரில் இயக்கிய பிரபு சாலமனுக்கு ஒருவகையில் இதுதான் முதல் படம் எனலாம். தான் யார், தன்னுடைய திறமை என்ன என்பதையெல்லாம் இந்தப் படத்தில்தான் உணர்ந்தார் அவர். படம் ஹிட்.

ஒரு மாதிரியாக தன்னுடைய ரூட்டை பிடித்துவிட்டவர் அடுத்து சத்யராஜின் மகன் சிபிராஜுக்காக ‘லீ’ செய்தார். அதுவரை நடிப்பில் வெற்றியே அறியாத சிபிராஜுக்கு முதன்முதலாக பேசப்பட்ட படமாக இது அமைந்தது.

அடுத்தது ‘லாடம்’. தயாரிப்புத் தரப்பில் ஏற்பட்ட சில குழப்பங்களின் காரணமாக ஓர் இயக்குநர் எந்தளவுக்கு தன்னை காம்ப்ரமைஸ் செய்துக் கொண்டாக வேண்டியிருக்கிறது என்பதை பிரபு சாலமனுக்கு உணர்த்திய படம் இது. அவர் எழுதிய கதையில் ஹீரோயினே இல்லை. ஆனால்- படம் வெளியாகும்போது அதில் சார்மி ஹீரோயின். டெக்னிக்கலாக தான் விரும்பியதையெல்லாம் இந்தப் படத்தில் பரிசோதித்துப் பார்த்துக் கொள்ள முடிந்ததோடு, தன்னுடைய அடுத்தப் படத்துக்கான ஹீரோவையும் இதில் கண்டறிந்தார் என்பதே பிரபு சாலமனுக்கு ஒரே லாபம். யெஸ். விதார்த், இந்தப் படத்தில் துணை நடிகராக வில்லனின் அல்லக்கைகளில் ஒருவராக நடித்திருந்தார்.

இனிமேல் தானே தயாரிப்பாளராக ஆகிவிடுவது ஒன்றே, தன்னுடைய படைப்புகளை தான் நினைத்த மாதிரியாக கொடுப்பதற்கான ஒரே வழி என்றுணர்ந்தார்.

இந்த காலக்கட்டத்தில் சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டுக்கு அருகிலிருந்த டீக்கடையில் பார்த்த ஒரு காட்சி அவரை உலுக்கிக் கொண்டே இருந்தது. போலிஸ்காரர் ஒருவரும், அவரது கையோடு சங்கிலியால் பிணைக்கப்பட்ட குற்றவாளி ஒருவரும் ஒன்றாக அமர்ந்து டீ சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த காட்சி, பிரபு சாலமனை தொடர்ச்சியாக தொல்லைக் கொடுத்துக் கொண்டே இருந்தது. நல்ல நாள், கெட்ட நாள் இல்லாமல் எப்போதும் குற்றவாளிகளோடே வாழ்க்கையை கழிக்க வேண்டிய நிலையில் இருக்கும் போலிஸ்காரர், சிறு குற்றத்துக்காக சிறை, கோர்ட் என்று அலைக்கழிக்கப்பட்ட குடும்பம், குழந்தை, குட்டிகளை பிரிந்து அவஸ்தைப்பட வேண்டிய நிலையிலிருக்கும் குற்றவாளி என்கிற இரு துருவங்களுக்கு பின்னாலிருந்த கதைகளை யோசிக்க ஆரம்பித்தார். ‘மைனா’ உருவானது.
பயணங்களின் காதலரான பிரபுசாலமனின் படங்களில் லொகேஷன்கள் அதுவரை சினிமாக்களில் இடம்பெறாதவையாக ப்ரெஷ்ஷாக இருக்கும். ‘மைனா’வில்தான் அது பளீரென்று தெரிந்தது. குரங்கணி, இன்று எல்லா சினிமாக்காரர்களுக்குமே ஃபேவரைட் லொகேஷனாக இருக்கிறதென்றால், அதற்கு பிள்ளையார் சுழி போட்டவர் பிரபு சாலமன்.

இந்தப் படத்தை ரெட்ஜெயண்ட் மூவிஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் வெளியிட, படத்தின் ரேஞ்ச் எங்கேயோ போனது. போதாக்குறைக்கு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல் பேசிய பேச்சு, ரசிகர்களிடம் படம் குறித்த எதிர்ப்பார்ப்பை எகிறவைத்தது. கமலுக்கு முன்பாக உதயநிதி பேசும்போது, “இந்தப் படத்தின் கிளைமேக்ஸ் என்னை உறங்கவிடாமல் செய்துவிட்டது” என்றார். அப்பேச்சை குறிப்பிட்ட கமல், “நான் இன்றுதான் படத்தை பார்த்தேன். நிம்மதியாக உறங்குவேன். நல்ல படம் பார்த்தால் மட்டுமே எனக்கு நிம்மதியான உறக்கம் கிடைக்கிறது” என்றார். பாராட்டுவதில் கமலின் கஞ்சத்தனம் ஊரறிந்தது. அவரே பிரபு சாலமனின் ‘மைனா’வை பாராட்டியதால் 2010 தீபாவளிக்கு வெளியான ‘மைனா’, கருப்புக் குதிரையாக ஓடி தனுஷின் ‘உத்தம புத்திரன்’, ‘தமிழ்ப்படம்’ கொடுத்த தெம்பில் இருந்த சிவாவின் ‘வ – குவார்ட்டர் கட்டிங்’, அர்ஜூனின் ‘வல்லக்கோட்டை’ படங்களை ஜெயித்தது.

‘மைனா’வுக்கு பிறகு விநியோகஸ்தர்களின் செல்லப்பிள்ளை ஆனார் பிரபு சாலமன். ‘கும்கி’யின் வெற்றியைப் பற்றி தனியாக சொல்ல வேண்டியதில்லை. சுனாமியின் பத்தாம் ஆண்டை நினைவுகூறும் வகையில் வெளிவந்த ‘கயல்’, வணிகரீதியாக வெற்றியடையவில்லை என்றாலும், விமர்சனப் பூர்வமாக நல்ல படமென்று பெயரெடுத்தது. கடைசியாக ‘தொடரி’.

பிரபு சாலமன் படங்கள் குறித்து சமூகவலைத்தளங்களில் கிண்டலான விமர்சனங்கள் நிறைய உண்டு. ஆங்கிலம், கொரியன் உள்ளிட்ட படங்களை உல்டா அடிக்கிறார் என்று எல்லாம் தெரிந்தவர்கள் ஸ்டேட்டஸ் போடுகிறார்கள். ‘தொடரி’ வரை இது தொடர்கிறது.

தனக்குப் பிடித்த படங்களின் கருவை எடுத்துக் கொண்டு, அதை தமிழ் ரசிகர்களுக்கு ஏற்ற வகையில் அவர் மாற்றித் தருகிறார் என்பதில் குற்றம் சாட்ட என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. ‘காட்ஃபாதர்’ எப்படி ‘நாயகன்’ படத்துக்கு இன்ஸ்பிரேஷனோ அதுபோன்ற செயல்பாடுதான் இது. ‘கும்கி’யை ஜப்பானியர்கள் பார்த்தால், அதை ‘செவன் சாமுராய்’ என்று கண்டுபிடிப்பார்களா என்பதே சந்தேகம்தான். அவர் குறித்த ஒவ்வாமை இணையத்தில் அதிகமாக இருப்பதற்கு அவரது மதமும் ஒரு காரணமாக இருக்கலாம் என்றுதான் யூகிக்க வேண்டியிருக்கிறது.

ஒரு இயக்குநராக தொழில்நுட்பரீதியில் தமிழ் சினிமாவுக்கு அவர் அளித்திருக்கும் பங்களிப்புகளை வைத்தே அவரை எடை போட வேண்டும். இன்று ‘மேக்கிங் பின்னிட்டான்’ என்று பொள்ளாச்சியில் கூட படம் பார்ப்பவன் உச்சரிக்கிறானே, இந்த ‘மேக்கிங்’ போக்கினை பத்து ஆண்டுகளுக்கு முன்பாக ‘கொக்கி’ என்கிற குறைந்த பட்ஜெட் படத்தில் சாத்தியப்படுத்தி காட்டியவர் பிரபு சாலமன். போஸ்ட் புரொடக்‌ஷனில் இன்று இளம் இயக்குநர்கள் ஆர்வம் செலுத்தத் தொடங்கியிருப்பதற்கு பிரபு சாலமனும் காரணமாக இருந்திருக்கிறார் என்பதை மறுக்க முடியாது.
‘கும்கி’ படத்தின் இன்விடேஷன் இண்டஸ்ட்ரியையே உலுக்கியது. அல்ட்ரா மாடர்ன் யூத் ஆன விக்ரம்பிரபுவை யானை பாகன் கேரக்டருக்கு பிரபு சாலமன் தேர்ந்தெடுத்தபோது கிண்டலடித்தவர்கள் எல்லாம் வாயடைத்துப் போனார்கள். ஒரு பெரிய ஹீரோ, பிரபு சாலமனிடம் ஆதங்கமாகவே கேட்டாராம். “ஏன் பிரபு, நான் இந்த யானை மேலே உட்கார்ந்தா நல்லா இருக்காதா?” இவர் அமைதியாக பதில் சொல்லியிருக்கிறார் “சாரி சார். இது உங்க கப் ஆஃப் டீ கிடையாது”. தொடக்கக் காலத்தில் தவறான பாத்திரத் தேர்வுகள் கொடுத்த கசப்பான அனுபவங்களை பிரபு சாலமன் மறக்கவே இல்லை. அதனால்தான் நட்சத்திரங்களுக்கு கதை பண்ணாமல், தன் கதைக்கான முகங்களை அவர் தேடிக்கொண்டே இருக்கிறார்.

பிரபுசாலமனை நம்பி பெரிய முதலீடு போடக்கூடிய தயாரிப்பாளர் கிடைத்தால் அவரும் இந்தியாவே அசரும்படியான ஒரு படத்தைக் கொடுக்கக்கூடிய திறமை கொண்டவர்தான். ஆனால், காம்ப்ரமைஸ் செய்துக் கொள்ள விரும்பாத இயக்குநரை எந்த தயாரிப்பாளரும், பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களும் விரும்புவதில்லையே?