6 அக்டோபர், 2016

க.கா.விலிருந்து தொடரி வரை!

 தன்னுடைய உயரத்தை அவர் உணரவில்லையா, அல்லது அவரைப் போன்றவர்களை தமிழ் சினிமா சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லையா என்று சொல்லத் தெரியவில்லை.

இயக்குநர் ஷங்கருக்கு உரிய potential இவருக்கும் உண்டு.

ஆனால்-

ஷங்கருக்கு கிடைத்த வாய்ப்புகள் இவருக்கு கிடைக்கவில்லை.

தனக்கு வாய்த்த space குறைவுதான் என்றாலும், அதை முடிந்தவரை நிறைவாகவே செய்ய முயற்சிப்பார். அவரது படங்கள் வெற்றி பெறாமல் போயிருக்கலாம். ஆனால், அழகியலில் எந்த குறையும் இருக்காது.

பிரபு சாலமன்.

இயக்குநராகி பதினெட்டு ஆண்டுகள் ஆகிறது. இன்னமும் அவருடைய கேரியர் ‘பரமபதம்’தான். பெரிய ஏணியில் ஏறிய அதே வேகத்தில் பெரிய பாம்பினை பிடித்து இறங்கிவிடுகிறார்.

நல்ல இயக்குநர்களுக்கு ஓர் இலக்கணமுண்டு. கதை, திரைக்கதை உள்ளிட்ட content கந்தாயங்கள், படப்பிடிப்பு உள்ளிட்ட திரைப்பணிகளுக்கு 50 சதவிகித உழைப்பை செலுத்தி, மீதியிருக்கும் 50 சதவிகிதத்தை எடிட்டிங் டேபிளுக்கு அர்ப்பணிப்பார்கள். அப்படிப்பட்ட எடிட்டிங் டேபிளின் மகத்துவத்தை தமிழ் சினிமாவில் முதன்முதலாக உணர்ந்தவர் எம்.ஜி.ஆர்.

இன்றைய தலைமுறை இயக்குநர்கள் பலரும் கதை விவாதங்களிலும், படப்பிடிப்புத் தளங்களிலும் தங்கள் முழு ஆற்றலையும் விரயமாக்கிவிட்டு அவசர அவசரமாக எடிட்டிங்கை முடித்து, ‘பண்ண வரைக்கும் போதும்’ என்று படத்தை வெளியிட்டு ரசிகர்களை தாலியறுக்கிறார்கள்.

பிரபுசாலமனின் படங்கள் பெரும்பாலும் எடிட்டிங் டேபிளில்தான் அதன் நிஜமான வடிவத்தை எட்டுகின்றன. இதில் கடைசியாக அவர் வெளியிட்ட ‘தொடரி’யில்தான் கொஞ்சம் பிசிறு தட்டுகிறது. மற்றபடி அவர் இயக்கிய படங்களில் தேவையற்ற காட்சிகளோ, செலவு செய்து எடுத்து விட்டோமே என்று துருத்திக் கொண்டு தெரியும் ஷாட்டுகளோ இருக்காது.

சினிமாவில் இயங்கவேண்டும் என்பதுதான் பிரபு சாலமனின் கனவு. அனேகமாக அவர் நடிகராக விரும்பிதான் சென்னைக்கு வந்திருப்பார் என்று தோன்றுகிறது. சரத்குமாருக்கு ‘டூப்’ போட்டிருக்கிறார். அந்தப் படத்தில் இணை இயக்குநராக பணியாற்றிக் கொண்டிருந்த சுந்தர்.சி-யின் நட்புதான் பிரபு சாலமனை இயக்கம் பக்கமாக செலுத்தியிருக்க வேண்டும்.

சுந்தர்.சி இயக்கிய முதல் படம் ‘முறை மாமன்’. அதில் உதவி இயக்குநராக பிரபு சாலமன் பணியாற்றினார். அடுத்து அன்பாலயா பிலிம்சுக்காக ‘முறை மாப்பிள்ளை’ (அருண் விஜய் அறிமுகமான படம்) படத்திலும் பிரபு சாலமன், சுந்தர்.சி-க்காக வேலை பார்த்தார். இந்தப் படம் முடியும் கட்டத்தில் தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் முட்டிக் கொள்ள படம் அந்தரத்தில் தொங்கியது. கோபத்துடன் சுந்தர்.சி வெளியேறி ‘உள்ளத்தை அள்ளித்தா’ எடுக்க ஆரம்பித்து விட்டார். பிரபு சாலமனே அன்பாலயா பிரபாகரனுக்கு கைகொடுத்து எடிட்டிங் - ரீரெக்கார்டிங் உள்ளிட்ட வேலைகளை ஒருங்கிணைத்து ‘முறை மாப்பிள்ளை’ வெளிவர உதவினார். அதற்கு நன்றிக்கடனாக பிரபு சாலமனை இயக்குநராக்குவதாக அன்பாலயா பிரபாகரன் உறுதி கூறினார்.

‘ஆஹா’ படம் ஹிட்டாகி அதில் ரகுவரன் - பானுப்ரியா ஜோடிப் பொருத்தம் ரசிகர்களை கவர்ந்திருந்த நேரம். ரகுவரனை வில்லத்தனமான ஹீரோவாக்கி, அவருக்கு பானுப்ரியாவை ஹீரோயினாக்கி ஒரு கதை எழுதி தயாராக வைத்திருந்தார் பிரபு சாலமன். ஆனால், அன்பாலயா பிரபாகரனுக்கோ மாஸ் ஹீரோவை வைத்து படம் எடுக்க வேண்டும் என்றுதான் ஆசை. ஷங்கரின் ‘முதல்வன்’ செய்துக் கொண்டிருந்த அர்ஜூனை வைத்து, இதே கதையை செய்யுங்கள் என்று சொல்லிவிட்டார். ‘Casting ஒத்துவராது சார்’ என்று பிரபு சாலமன் சொன்னதை அவர் கேட்கவில்லை. வேறு வழியில்லாமல் அர்ஜூனை வைத்தே ‘கண்ணோடு காண்பதெல்லாம்’ எடுத்தார். அர்ஜூன் பெரிய ஹீரோ என்பதால், பானுப்ரியா நடிக்க வேண்டிய பாத்திரத்தில் அப்போது இந்தியில் முன்னணி நடிகையாக இருந்த சோனாலி பிந்த்ரேவை புக் செய்தார்கள். படம் நன்றாக இருந்தும்கூட ‘முதல்வன்’ அர்ஜூனின் இமேஜே, இந்தப் படத்தை தோல்வியடையச் செய்தது. வைஜயந்தி மாலாவின் மகன் இந்தப் படத்தில் செகண்ட் ஹீரோவாக அறிமுகமானார். அவருடைய திரைவாழ்க்கையும் செல்ஃப் எடுக்கவில்லை. தயாரிப்பாளரான அன்பாலயா பிரபாகரனின் காலமும் முடிவுக்கு வந்தது. பிரபு சாலமனுக்கும் அடுத்த பட வாய்ப்பு கிடைக்கவில்லை.

தமிழில் வெளிவந்து வெற்றி பெற்ற ‘பாரதி கண்ணம்மா’ படத்தின் கன்னட உரிமையை ராக்லைன் வெங்கடேஷ் பெற்றிருந்தார். அந்தப் படத்தை இயக்கும் வாய்ப்பு பிரபு சாலமனுக்கு கிடைத்தது. அங்கும் இதே casting பிரச்சினை. ‘பார்த்திபன் நடித்த வேடத்துக்கு ரவிச்சந்திரன் பொருந்த மாட்டார்’ என்கிற இவரின் ஆட்சேபணையை, ஓவர்ரூல்ட் செய்தார் தயாரிப்பாளர். படம் ஃப்ளாப்.

‘சேது’ படத்தின் போதே விக்ரமுக்கும், பிரபு சாலமனுக்கும் நட்பு மலர்ந்திருந்தது. அதன் விளைவாக பிரபு சாலமனுக்கு படம் இயக்கும் வாய்ப்பை கொடுத்தார் விக்ரம். முந்தைய இரு படங்களையும் ஏ.கே.பிரபு என்கிற பெயரில் இயக்கியவர், தன்னுடைய பெயரை ஏ.கே.சாலமன் என்று மாற்றிக் கொண்டு இந்தப் படத்தை இயக்கினார். விக்ரமுக்கு, பிரபு சாலமன் வேறு கதைகளை சொல்ல, அவர் குறிப்பாக அப்பா - மகன் சென்டிமெண்ட் கதையிலேயே பிடிவாதமாக இருந்தார். ‘இந்த கதைக்கு உங்கள் வயது அதிகம்’ என்கிற சாலமனின் அட்வைஸ் எடுபடவில்லை. வழக்கம்போல தன் பாத்திரத்துக்கு பொருத்தமில்லா ஹீரோ என்கிற சாபக்கேட்டுக்கு ஆளானார் சாலமன். போதாக்குறைக்கு விக்ரமுக்கு ஏற்பட்டிருந்த கமர்ஷியல் ‘ஜெமினி’ இமேஜ், அடுத்தடுத்து பாலாஜி சக்திவேலின் ‘சாமுராய்’, சாலமனின் ‘கிங்’ என்று இரண்டு படங்களையும் தோற்கடித்தது.

முதல் மூன்று படங்களுமே படுதோல்வி அடைந்தபிறகு, ஓர் இயக்குநர் மேலெழுவது என்பது கிட்டத்தட்ட இன்று சாத்தியமே இல்லாத ஒன்று. பிரபு சாலமன் தினமும் ஒரு தயாரிப்பாளரையாவது சந்தித்து ஒன்லைன் சொல்லிக் கொண்டிருந்தார். ஒரு பெரிய ஹீரோவின் கால்ஷீட்டை வைத்திருந்த தயாரிப்பாளரிடம் கதை சொல்லப் போனார். “கதையெல்லாம் கிடக்கட்டும். உன் ஜாதகத்தைக் கொடு. ஹீரோவுக்கு மேட்ச் ஆச்சின்னா, நீதான் டைரக்டர்”. இவருக்கு ஆச்சரியமாக இருந்தது. நாம என்ன ஹீரோவையா கல்யாணம் பண்ணிக்கப் போறோம் என்று மனசுக்குள் நினைத்தவர், “என்னோட திறமைதான் சார் என் ஜாதகம்” என்று சொல்லிவிட்டு திரும்பிவிட்டார்.

ஆனால், அந்த சந்திப்பு வீண் போகவில்லை. அந்த ‘ஜாதக’ மேட்டரையே கதையாக்கினார். ஹீரோவின் ஜாதகம் வில்லனுக்கு பொருந்தித் தொலைக்கிறது. கிட்டத்தட்ட தன் மனைவி மாதிரி எப்போதும் ஹீரோ கூடவே இருக்க வேண்டும் என்று வில்லன் எதிர்ப்பார்க்கிறான். ஹீரோ மறுக்க, பிரச்சினை ஆகிறது என்று ‘கொக்கி’ போட்டு ‘கொக்கி’ கதையை எழுதினார். இம்முறை casting பிரச்சினையே வந்துவிடக்கூடாது என்று தெளிவாக இருந்தார். தன் பாத்திரத்துக்குதான் நடிகரே தவிர, நடிகருக்காக பாத்திரமல்ல என்று காத்திருந்தார். இவரை போலவே காத்திருப்பில் இருந்த கரணுக்கு ‘கொக்கி’ செட் ஆனது. முதன்முறையாக பிரபு சாலமன் என்கிற பெயரில் இயக்கிய பிரபு சாலமனுக்கு ஒருவகையில் இதுதான் முதல் படம் எனலாம். தான் யார், தன்னுடைய திறமை என்ன என்பதையெல்லாம் இந்தப் படத்தில்தான் உணர்ந்தார் அவர். படம் ஹிட்.

ஒரு மாதிரியாக தன்னுடைய ரூட்டை பிடித்துவிட்டவர் அடுத்து சத்யராஜின் மகன் சிபிராஜுக்காக ‘லீ’ செய்தார். அதுவரை நடிப்பில் வெற்றியே அறியாத சிபிராஜுக்கு முதன்முதலாக பேசப்பட்ட படமாக இது அமைந்தது.

அடுத்தது ‘லாடம்’. தயாரிப்புத் தரப்பில் ஏற்பட்ட சில குழப்பங்களின் காரணமாக ஓர் இயக்குநர் எந்தளவுக்கு தன்னை காம்ப்ரமைஸ் செய்துக் கொண்டாக வேண்டியிருக்கிறது என்பதை பிரபு சாலமனுக்கு உணர்த்திய படம் இது. அவர் எழுதிய கதையில் ஹீரோயினே இல்லை. ஆனால்- படம் வெளியாகும்போது அதில் சார்மி ஹீரோயின். டெக்னிக்கலாக தான் விரும்பியதையெல்லாம் இந்தப் படத்தில் பரிசோதித்துப் பார்த்துக் கொள்ள முடிந்ததோடு, தன்னுடைய அடுத்தப் படத்துக்கான ஹீரோவையும் இதில் கண்டறிந்தார் என்பதே பிரபு சாலமனுக்கு ஒரே லாபம். யெஸ். விதார்த், இந்தப் படத்தில் துணை நடிகராக வில்லனின் அல்லக்கைகளில் ஒருவராக நடித்திருந்தார்.

இனிமேல் தானே தயாரிப்பாளராக ஆகிவிடுவது ஒன்றே, தன்னுடைய படைப்புகளை தான் நினைத்த மாதிரியாக கொடுப்பதற்கான ஒரே வழி என்றுணர்ந்தார்.

இந்த காலக்கட்டத்தில் சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டுக்கு அருகிலிருந்த டீக்கடையில் பார்த்த ஒரு காட்சி அவரை உலுக்கிக் கொண்டே இருந்தது. போலிஸ்காரர் ஒருவரும், அவரது கையோடு சங்கிலியால் பிணைக்கப்பட்ட குற்றவாளி ஒருவரும் ஒன்றாக அமர்ந்து டீ சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த காட்சி, பிரபு சாலமனை தொடர்ச்சியாக தொல்லைக் கொடுத்துக் கொண்டே இருந்தது. நல்ல நாள், கெட்ட நாள் இல்லாமல் எப்போதும் குற்றவாளிகளோடே வாழ்க்கையை கழிக்க வேண்டிய நிலையில் இருக்கும் போலிஸ்காரர், சிறு குற்றத்துக்காக சிறை, கோர்ட் என்று அலைக்கழிக்கப்பட்ட குடும்பம், குழந்தை, குட்டிகளை பிரிந்து அவஸ்தைப்பட வேண்டிய நிலையிலிருக்கும் குற்றவாளி என்கிற இரு துருவங்களுக்கு பின்னாலிருந்த கதைகளை யோசிக்க ஆரம்பித்தார். ‘மைனா’ உருவானது.
பயணங்களின் காதலரான பிரபுசாலமனின் படங்களில் லொகேஷன்கள் அதுவரை சினிமாக்களில் இடம்பெறாதவையாக ப்ரெஷ்ஷாக இருக்கும். ‘மைனா’வில்தான் அது பளீரென்று தெரிந்தது. குரங்கணி, இன்று எல்லா சினிமாக்காரர்களுக்குமே ஃபேவரைட் லொகேஷனாக இருக்கிறதென்றால், அதற்கு பிள்ளையார் சுழி போட்டவர் பிரபு சாலமன்.

இந்தப் படத்தை ரெட்ஜெயண்ட் மூவிஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் வெளியிட, படத்தின் ரேஞ்ச் எங்கேயோ போனது. போதாக்குறைக்கு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல் பேசிய பேச்சு, ரசிகர்களிடம் படம் குறித்த எதிர்ப்பார்ப்பை எகிறவைத்தது. கமலுக்கு முன்பாக உதயநிதி பேசும்போது, “இந்தப் படத்தின் கிளைமேக்ஸ் என்னை உறங்கவிடாமல் செய்துவிட்டது” என்றார். அப்பேச்சை குறிப்பிட்ட கமல், “நான் இன்றுதான் படத்தை பார்த்தேன். நிம்மதியாக உறங்குவேன். நல்ல படம் பார்த்தால் மட்டுமே எனக்கு நிம்மதியான உறக்கம் கிடைக்கிறது” என்றார். பாராட்டுவதில் கமலின் கஞ்சத்தனம் ஊரறிந்தது. அவரே பிரபு சாலமனின் ‘மைனா’வை பாராட்டியதால் 2010 தீபாவளிக்கு வெளியான ‘மைனா’, கருப்புக் குதிரையாக ஓடி தனுஷின் ‘உத்தம புத்திரன்’, ‘தமிழ்ப்படம்’ கொடுத்த தெம்பில் இருந்த சிவாவின் ‘வ – குவார்ட்டர் கட்டிங்’, அர்ஜூனின் ‘வல்லக்கோட்டை’ படங்களை ஜெயித்தது.

‘மைனா’வுக்கு பிறகு விநியோகஸ்தர்களின் செல்லப்பிள்ளை ஆனார் பிரபு சாலமன். ‘கும்கி’யின் வெற்றியைப் பற்றி தனியாக சொல்ல வேண்டியதில்லை. சுனாமியின் பத்தாம் ஆண்டை நினைவுகூறும் வகையில் வெளிவந்த ‘கயல்’, வணிகரீதியாக வெற்றியடையவில்லை என்றாலும், விமர்சனப் பூர்வமாக நல்ல படமென்று பெயரெடுத்தது. கடைசியாக ‘தொடரி’.

பிரபு சாலமன் படங்கள் குறித்து சமூகவலைத்தளங்களில் கிண்டலான விமர்சனங்கள் நிறைய உண்டு. ஆங்கிலம், கொரியன் உள்ளிட்ட படங்களை உல்டா அடிக்கிறார் என்று எல்லாம் தெரிந்தவர்கள் ஸ்டேட்டஸ் போடுகிறார்கள். ‘தொடரி’ வரை இது தொடர்கிறது.

தனக்குப் பிடித்த படங்களின் கருவை எடுத்துக் கொண்டு, அதை தமிழ் ரசிகர்களுக்கு ஏற்ற வகையில் அவர் மாற்றித் தருகிறார் என்பதில் குற்றம் சாட்ட என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. ‘காட்ஃபாதர்’ எப்படி ‘நாயகன்’ படத்துக்கு இன்ஸ்பிரேஷனோ அதுபோன்ற செயல்பாடுதான் இது. ‘கும்கி’யை ஜப்பானியர்கள் பார்த்தால், அதை ‘செவன் சாமுராய்’ என்று கண்டுபிடிப்பார்களா என்பதே சந்தேகம்தான். அவர் குறித்த ஒவ்வாமை இணையத்தில் அதிகமாக இருப்பதற்கு அவரது மதமும் ஒரு காரணமாக இருக்கலாம் என்றுதான் யூகிக்க வேண்டியிருக்கிறது.

ஒரு இயக்குநராக தொழில்நுட்பரீதியில் தமிழ் சினிமாவுக்கு அவர் அளித்திருக்கும் பங்களிப்புகளை வைத்தே அவரை எடை போட வேண்டும். இன்று ‘மேக்கிங் பின்னிட்டான்’ என்று பொள்ளாச்சியில் கூட படம் பார்ப்பவன் உச்சரிக்கிறானே, இந்த ‘மேக்கிங்’ போக்கினை பத்து ஆண்டுகளுக்கு முன்பாக ‘கொக்கி’ என்கிற குறைந்த பட்ஜெட் படத்தில் சாத்தியப்படுத்தி காட்டியவர் பிரபு சாலமன். போஸ்ட் புரொடக்‌ஷனில் இன்று இளம் இயக்குநர்கள் ஆர்வம் செலுத்தத் தொடங்கியிருப்பதற்கு பிரபு சாலமனும் காரணமாக இருந்திருக்கிறார் என்பதை மறுக்க முடியாது.
‘கும்கி’ படத்தின் இன்விடேஷன் இண்டஸ்ட்ரியையே உலுக்கியது. அல்ட்ரா மாடர்ன் யூத் ஆன விக்ரம்பிரபுவை யானை பாகன் கேரக்டருக்கு பிரபு சாலமன் தேர்ந்தெடுத்தபோது கிண்டலடித்தவர்கள் எல்லாம் வாயடைத்துப் போனார்கள். ஒரு பெரிய ஹீரோ, பிரபு சாலமனிடம் ஆதங்கமாகவே கேட்டாராம். “ஏன் பிரபு, நான் இந்த யானை மேலே உட்கார்ந்தா நல்லா இருக்காதா?” இவர் அமைதியாக பதில் சொல்லியிருக்கிறார் “சாரி சார். இது உங்க கப் ஆஃப் டீ கிடையாது”. தொடக்கக் காலத்தில் தவறான பாத்திரத் தேர்வுகள் கொடுத்த கசப்பான அனுபவங்களை பிரபு சாலமன் மறக்கவே இல்லை. அதனால்தான் நட்சத்திரங்களுக்கு கதை பண்ணாமல், தன் கதைக்கான முகங்களை அவர் தேடிக்கொண்டே இருக்கிறார்.

பிரபுசாலமனை நம்பி பெரிய முதலீடு போடக்கூடிய தயாரிப்பாளர் கிடைத்தால் அவரும் இந்தியாவே அசரும்படியான ஒரு படத்தைக் கொடுக்கக்கூடிய திறமை கொண்டவர்தான். ஆனால், காம்ப்ரமைஸ் செய்துக் கொள்ள விரும்பாத இயக்குநரை எந்த தயாரிப்பாளரும், பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களும் விரும்புவதில்லையே?

5 கருத்துகள்:

  1. அழகான பதிவி சார்...வாழ்த்துகளும்... வணக்கங்களும்...!!!

    பதிலளிநீக்கு
  2. உண்மைதான்................கற்பனை வேறு, காசாக்குதல் வேறு. இரண்டையும் கையாளத்தெரிந்தவர்களின் கள வேறு.

    பிரபு சாலமன் காலம் கவனிக்க வேண்டிய , கவனிக்க தொடங்கிவிட்ட ஒருவர்.

    பதிலளிநீக்கு
  3. ஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது.. திறமையை மட்டும் வைத்துக்கொண்டு இந்த திரைத்துறையில் முன்னேறுவது மிகக்கடினம்.. காம்ப்ரமைஸ் செய்யத்தெரிந்தால் தான் பிழைக்க முடியும்.. இப்படி ஒரு சூழல் இருக்கும் நிலையில் நல்ல படங்கள் அரிதாக வருவதும் மகிழ்ச்சி தரக்கூடிய ஒன்றே

    பதிலளிநீக்கு
  4. oru line vidama paduchen sir..please keep on writing on ur blog..

    பதிலளிநீக்கு
  5. Arumaiyana katturai...Good read. Prabhu Solomon is my favourite director. By the way I 'd bought your "Saroja" book in the Madurai Book Fair. A good one enjoyed it.

    பதிலளிநீக்கு