29 ஏப்ரல், 2014

விருது பட்டறை

மறைந்த இயக்குனர் பாலுமகேந்திராவின் சீடர்கள் தொடர்ச்சியாக
தமிழுக்கு தேசிய விருதுகளை குவித்து வருகிறார்கள்...


சொர்க்கத்தில் இருக்கும் பாலுமகேந்திரா நிச்சயம் சந்தோஷப்படுவார். அவருக்கு விருதுகள் மீது அலாதி பிரியம். ஒரு கலைஞன், மக்களால் மட்டுமின்றி கலை மற்றும் கலாச்சார அமைப்புகளாலும், அரசாங்கத்தாலும் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்கிற விருப்பம் கொண்டவராக இருந்தார். புனே திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவு கற்றுவிட்டு வெளிவரும்போது தங்கமெடலோடு வெளிவந்தவர் ஆயிற்றே? எனவேதான் கடந்த பிப்ரவரியில் காலமாவதற்கு முன்பாக மரணப்படுக்கையில் இருந்தபோதும், தான் கடைசியாக இயக்கி நடித்த ‘தலைமுறைகள்’ திரைப்படம் தேசிய விருதுக்கு விண்ணப்பிக்கப்பட்ட படிவத்தை ஒன்றுக்கு நாலுமுறை திரும்பத் திரும்ப சரிபார்த்தார்.

கோகிலா, மூன்றாம் பிறை, வீடு, சந்தியாராகம், வண்ண வண்ண பூக்கள் என்று பல படங்களுக்கு ஏற்கனவே தேசியவிருதுகள் பெற்றவர்தான் பாலுமகேந்திரா. இயக்கம், ஒளிப்பதிவு, திரைக்கதை என்று மூன்று துறைகளிலும் தேசியவிருது பெற்ற ஒரே கலைஞர் இவர் மட்டும்தான். இவரது படங்களில் இவருக்கு விருது கிடைக்கும். அல்லது படத்தில் தொடர்புடைய கலைஞர்கள் யாருக்காவது நிச்சயம் விருது கிடைக்கும் என்கிற அளவுக்கு தேசிய விருது அறிவிக்கப்படும் போதெல்லாம் பாலுமகேந்திராவின் பெயர் நிச்சயம் உச்சரிக்கப்படும். கமலஹாசன் முதன்முதலாக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றது இவர் இயக்கிய மூன்றாம் பிறை திரைப்படத்தில்தான்.

பாலா, ராம், வெற்றிமாறன், சீனுராமசாமி, சசிக்குமார் என்று அவரிடம் உருவான சீடர்கள் தொடர்ச்சியாக தேசிய விருதுகளை கடந்த சில ஆண்டுகளாக தமிழுக்கு குவித்து வருகிறார்கள். இவ்வாண்டும் பாலுமகேந்திராவின் தலைமுறைகள் படத்தை தயாரித்த சசிகுமார், தேசிய ஒற்றுமைக்கான நர்கீஸ் விருதை பெற்றிருக்கிறார். ‘கற்றது தமிழ்’ ராம் இயக்கிய ‘தங்க மீன்கள்’ சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருதை வென்றிருக்கிறது. அதே படத்தில் ‘ஆனந்த யாழை மீட்டுகிறாய்’ பாடலை எழுதியதற்காக நா.முத்துக்குமார் சிறந்த பாடலாசிரியருக்கான விருதினை வென்றிருக்கிறார். இவர்களில் முத்துக்குமாரும், ராமும் நேரடியாக பாலுமகேந்திராவுக்கு உதவியாளர்களாக பணிபுரிந்தவர்கள். பாலுமகேந்திராவின் உதவியாளர்களான பாலா, அமீர் ஆகியோரிடம் பணிபுரிந்த காரணத்தால் சசிக்குமாரும் பாலுமகேந்திராவின் பட்டறையிலேயே வருகிறார்.

‘சினிமாவையும் ஒரு பாடமாக்கி மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும்’ என்று நீண்டகாலமாக குரல் கொடுத்து வந்தவர் பாலுமகேந்திரா. சொல்லி வந்ததோடு மட்டுமில்லாமல், அதை செயலாக்கத்துக்கு அவரே கொண்டுவரவும் செய்தார். ‘சினிமா பட்டறை’ என்கிற பெயரில் ஏழு ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு பள்ளியை தொடங்கி நடத்தினார். இப்பள்ளியில் ஒளிப்பதிவு, இயக்கம் மற்றும் நடிப்பு கற்றுத்தரப்பட்டது.

“சொல்லிக் கொடுத்து சினிமாவை கற்றுக்கொள்ள முடியாது. ஆர்வமும் படைப்புத்திறனும் இயல்பிலேயே இருக்கவேண்டும். அவ்வாறு இருப்பவர்களை அடையாளம் கண்டு தேர்வு செய்கிறேன். அவர்களுக்குதான் பிராக்டிக்கலாக சினிமா பட்டறை சினிமாவை கற்றுத்தரும். நான் சின்ன கோடுதான் கிழிக்கிறேன். அவரவரின் படைப்புத்திறன்தான் இந்த கோட்டை அழகிய கோலமாக்க வேண்டும்” என்று தன்னுடைய பள்ளியைப் பற்றி ஒருமுறை சொன்னார் பாலுமகேந்திரா.

“ஒவ்வொரு முறை பாலுமகேந்திரா சாரை நான் சந்திக்கும்போதும், அந்நேரத்தில் நான் எழுதிய பாடல் எதையாவது ரொம்பவும் பாராட்டுவார். ‘நீ வேணும்னா பாரேன். இந்த பாட்டுக்கு உனக்கு தேசிய விருது கிடைக்கும்’ என்பார். கிடைக்காதபோது ரொம்ப வருத்தப்படுவார். எனக்கு தேசிய விருது கிடைக்க வேண்டும் என்று என்னைவிட அதிகம் ஆசைப்பட்டவர் அவர்தான். தங்கமீன்களில் இடம்பெற்ற ‘ஆனந்த யாழை’ பாடல் அவருக்கு ரொம்பப் பிடித்திருந்தது. வழக்கம்போல இப்போதும் சொன்னார். ‘பாரேன். உனக்கு இந்த வாட்டி நிச்சயமா விருது கிடைக்கப் போவுது’. அவரது ஆசைப்படியே கிடைத்துவிட்டது. ஆனால் அதை பார்த்து சந்தோஷப்பட அவர்தான் இல்லை. எனக்கு கிடைத்திருக்கும் இந்த அங்கீகாரத்தை அவருக்கே அர்ப்பணிக்கிறேன்” என்கிறார் நா.முத்துக்குமார்.

காஞ்சிபுரம் அருகே ஒரு கிராமத்தில் பிறந்து வளர்ந்த நா.முத்துக்குமார் இயக்குனர் ஆகும் ஆர்வத்தில் பாலுமகேந்திராவிடம் நான்கு ஆண்டுகள் உதவியாளராக பணிபுரிந்தார். பிறகு பாடலாசிரியாக வீரநடை திரைப்படம் மூலம் அறிமுகமானார். சமகாலத்தில் தமிழ் திரையுலகில் கோலோச்சும் அத்தனை இசையமைப்பாளர்களிடமும் பணிபுரிந்திருக்கிறார். கடந்த 2012ஆம் ஆண்டு மட்டுமே நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை சினிமாவில் எழுதி சாதனை புரிந்தவர். கஜினி, வெயில், சிவாஜி, சிவா மனசுலே சக்தி, அயன், வெப்பம், எங்கேயும் எப்போதும், தாண்டவம் என்று பல்வேறு திரைப்படங்களில் பாடல்கள் எழுதி, பல அமைப்புகளின் விருதுகளை வென்றிருந்தாலும் தேசியவிருது பெறுவது இதுவே முதன்முறை.

“என்னுடைய ஒரே வருத்தம், தலைமுறைகள் படத்துக்கான தேசிய விருதை நேரில் பெற அவர் இல்லையே என்பதுதான். உண்மையான கலைஞர்கள் வயதுக்கு அப்பாற்பட்டவர்கள் என்பதை இவ்விருது மூலம் அவர் நிரூபித்திருக்கிறார். தாத்தாவுக்கும் பேரனுக்குமான கதை மட்டுமல்ல தலைமுறைகள். இரண்டு தலைமுறைகளுக்கு இடையேயான முரணை இது வலுவாக பேசியது. பாலுமகேந்திரா முதன்முதலாக நடித்த படத்தை நான்தான் தயாரித்திருக்கிறேன் என்பது எனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம்” என்று சிலிர்க்கிறார் சசிக்குமார்.

இவர் தயாரித்த ‘பசங்க’ ஏற்கனவே சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருதை வென்றிருக்கிறது. இயக்குனர் பாலாவின் முதல் திரைப்படமான ‘சேது’விலேயே இருபது வயது சசிக்குமார் பணிபுரிந்தார். இவரது மாமா கந்தசாமிதான் அப்படத்தின் தயாரிப்பாளர். அப்போது அறிமுகமான இயக்குனர் அமீரின் ‘மவுனம் பேசியதே’, ‘ராம்’, ‘பருத்தி வீரன்’ ஆகிய படங்களிலும் பணியாற்றினார். போதுமான அனுபவங்கள் பெற்றபின் தானே தயாரித்து, நடித்து ‘சுப்பிரமணியபுரம்’ திரைப்படத்தை இயக்கி மாபெரும் வெற்றி பெற்றார். தொடர்ச்சியாக இயக்கம், தயாரிப்பு, நடிப்பு என்று சமகால தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஆளுமையாக உருவெடுத்திருக்கிறார்.

“மூன்று தேசிய விருதுகளை ‘தங்க மீன்கள்’ வென்றிருக்கிறது. இதில் எனக்கு விருது கிடைத்ததை காட்டிலும் முத்துக்குமாருக்கும், குழந்தை நட்சத்திரம் சாதனாவுக்கும் கிடைத்திருப்பதுதான் என்னை கூடுதல் மகிழ்ச்சிக்கு உள்ளாக்குகிறது. என்னுடைய குருநாதர் பாலுமகேந்திராவின் தலைமுறைகள் விருது பெற்ற அதே சமயத்தில் நானும் பெறுகிறேன் என்பது எனக்கு முக்கியமான அங்கீகாரமாக படுகிறது” என்கிறார் இயக்குனர் ராம்.

தமிழிலக்கிய பட்டதாரியான ராம் இயக்கிய முதல் படமான ‘கற்றது தமிழ்’ நாயகனும் ஒரு தமிழ் பட்டதாரி. இயக்குனர் தங்கர்பச்சான் மூலமாக திரையுலகத்துக்கு வந்த இவர், பிரபலமான இந்தி இயக்குனர்களான ராஜ்குமார் சந்தோஷி, கோவிந்த் நிஹலானி (குருதிப்புனல் இவரது கதைதான்) ஆகியோரிடம் பணிபுரிந்தார். ஓர் ஆங்கிலப்படத்தை இயக்கும் முயற்சியில் இருந்த ராம், அதற்காக ஒளிப்பதிவு செய்ய பாலுமகேந்திராவிடம் வந்தார். அந்த படம் வளரவில்லை என்றாலும் பாலுமகேந்திராவிடமே ராம் தங்கிவிட்டார். ராம், பாலுமகேந்திராவோடு இருந்தபோது அவர் ஒரு படமும் இயக்கவில்லை என்றாலும், அவரிடம்தான் நான் சினிமா கற்றேன். “திரைப்பட வெறியனாக இருந்த என்னை மாணவனாக்கி முறைப்படுத்தினார். திரைநுணுக்கங்களை கற்றுக் கொடுத்தார். குறிப்பாக ஒளிப்பதிவின் முக்கியத்துவத்தை அவரிடம் கற்றேன்” என்று சொல்கிறார் ராம். ‘கற்றது தமிழ்’, ‘தங்க மீன்கள்’ என்று இரண்டே இரண்டு படங்களைதான் இதுவரை இயக்கியிருக்கிறார் என்றாலும் இருபது படங்களை முடித்தவருக்கு கிடைக்கக்கூடிய புகழும், அங்கீகாரமும் இப்போதே அவருக்கு கிடைத்திருக்கிறது. தீவிரமான திரைமொழியை கொண்டிருப்பவரான ராம் இப்போது ‘தரமணி’ என்கிற மூன்றாவது திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.

ஒரு நல்ல குரு, மறைந்தாலும் தன்னுடைய சீடர்களால் நிரந்தரமாக வாழ்வார் என்பதற்கு பாலுமகேந்திரா நல்ல உதாரணம். அவர் உருவாக்கியவர்கள் தேசிய அளவில் தமிழகத்தின் பெருமையை பறைசாற்றி வருகிறார்கள். பாலுமகேந்திரா நடத்தியது சினிமா பட்டறை அல்ல. விருது பட்டறை!

(நன்றி : புதிய தலைமுறை)

28 ஏப்ரல், 2014

ஊர்கூடி தேர்தல்

ஒவ்வொரு தேர்தலையும் எப்படி நடத்துகிறார்கள் நம் அரசு ஊழியர்கள்?

“ஐந்து ஆண்டுகளுக்கு மட்டும்தான் எங்களுக்கு தேர்தல் வேலையென்று அனைவரும் தவறாகப் புரிந்துக் கொள்கிறார்கள். தமிழகத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு சராசரியாக மூன்று தேர்தல்கள் (நாடாளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி) நடைபெறுகிறது. வருடம் முழுக்கவே ஏதோ ஒரு வகையில் நாங்கள் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுவருகிறோம். இந்த வழிமுறைகளை வாக்காளர்களும் தெரிந்துக்கொண்டால் எங்களது பணி என்னவென்பதை பற்றிய தெளிவு எல்லாருக்கும் கிடைக்கும்” என்று ஆரம்பித்தார் டெபுடி தாசில்தார் ஒருவர்.

“மாநில வருவாய்த்துறை மூலம்தான் தேர்தல் கமிஷனுக்கு ஆட்கள் அளிக்கப் படுகிறார்கள். பாதுகாப்புப் பணிகளுக்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பு ஆணையரும், இதரப் பணிகளுக்கு மாவட்ட ஆட்சியரும் பொறுப்பு. பெரும்பாலும் மண்டல அலுவலகத்தில் உதவி ஆணையாளராக இருப்பவர் மண்டல தேர்தல் அதிகாரியாக இருப்பார்.

அரசு நிரந்தரப் பணியாளர்கள்தான் (பெரும்பாலும் ஆசிரியர்கள்) தேர்தலை நடத்தும் அலுவலர்கள். கிட்டத்தட்ட கட்டாயப்பணிதான். தேர்தல் பணியை செய்ய முடியாது என்று யாரும் முறையான காரணங்களின்றி தவிர்க்க இயலாது. மத்திய அரசுப் பணியாளர்களும் கூட ‘மைக்ரோ அப்சர்வர்ஸ்’ என்று சொல்லக்கூடிய தேர்தல் கண்காணிப்பாளர்களாக பணிபுரிவதுண்டு.

பாதுகாப்புப் பணிகளுக்கு காவல்துறையில் பணியாற்றுபவர்களும், முன்னாள் இராணுவத்தினரும், மத்திய பாதுகாப்புத்துறையில் பணியாற்றும் (ரிசர்வ் போலிஸ் உள்ளிட்ட துறைகளில்) காவலர்களும் பொறுப்பேற்கிறார்கள். அவரவர் வேலைக்கேற்ப அவரவர் சார்ந்த துறை, தேர்தல் பணிக்காக ஒரு கூடுதல் படி வழங்குவதுண்டு.

தேர்தல் செலவுக்காக வருடாவருடம் ஒரு நிதியை வருவாய்த்துறைக்கு மாநில அரசு ஒதுக்குகிறது. ஒவ்வொரு வட்டாட்சியர் அலுவலகத்திலும் ஒரு டெபுடி தாசில்தாருக்கு, தேர்தல் பிரிவு பொறுப்பு கூடுதலாக நிரந்தரமாக இருக்கும். அது போலவே ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியின் பாகத்துக்கும் (நீங்கள் வாக்களித்த பூத் எண் என்று ஒன்று இருக்குமே அதுதான் பாகம்) ‘பூத் லெவல் ஆபிஸர்’ என்று சொல்லக்கூடிய அதிகாரி ஒருவர் நிரந்தரமாக இருப்பார். உங்கள் பூத் எண் சரியாகத் தெரிந்தால் அருகிலிருக்கும் கிராம நிர்வாக அதிகாரி அலுவலகத்திலோ அல்லது மண்டல அலுவலகத்திலோ கேட்டு, உங்களது பூத் லெவல் ஆபிஸர் யாரென்று தெரிந்துக் கொள்ளலாம். அனேகமாக அருகிலிருக்கும் அரசுப்பள்ளி ஏதேனும் ஒன்றில் அவர் ஆசிரியராக பணிபுரிந்துக் கொண்டிருப்பார். இதற்காக வருடத்துக்கு அவருக்கு மூவாயிரம் ரூபாய் அளவில் கூடுதல் சம்பளம் தேர்தல் பணிகளுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. வாக்குச்சீட்டில் பெயர் மாற்றம், புகைப்பட மாற்றம் போன்ற பிரச்சினைகளை அவரிடம் பேசி நீங்கள் சரிசெய்துக் கொள்ள முடியும். வாக்காளர் சேர்ப்பு, நீக்கம், சரிபார்ப்பு எல்லாமே அவருடைய வேலைதான். தேர்தல் நேரத்தில் வீடு வீடாக பூத் ஸ்லிப் வழங்குவது போன்ற பணிகளை இவர்தான் பார்த்துக் கொள்கிறார்.

உங்கள் பூத் எண், அதில் வாக்காளராக உங்கள் சீரியல் எண். இதை மட்டும் தெரிந்துக் கொண்டால் போதும். வேறெதுவுமே தேவையில்லை. ஒவ்வொரு வாக்காளரும் இதை அறிந்து வைத்துக் கொண்டால், உங்களுக்கு பூத் ஸ்லிப் வரவில்லையென்றால் கூட கவலை கொள்ளத் தேவையில்லை. தேர்தல் நேரத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை மாதிரி ஊடகங்களில் வெளிவரும் பிரச்சினைகளே இருக்காது. ஆனால் மக்களுக்கு தேர்தல் நாளன்று மட்டுமே வாக்கு செலுத்துவது குறித்த ஜனநாயக அக்கறை வருவதால்தான் நாம் கேள்விப்படும் பிரச்சினைகள் ஏற்படுகின்றன” என்று விலாவரியாக விளக்கினார்.

அடுத்து பூத் லெவல் அதிகாரியாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் பணியாற்றும் ஆசிரியை ஒருவரிடம் பேசினோம். “கிராமப் புறங்களில் பரவாயில்லை. நகரகப் பகுதிகளில் தேர்தல் பணிகள் மிக சிரமமாக இருக்கிறது. கோடை விடுமுறையை நாங்கள் தேர்தல் பணிகளுக்கு என்றே எடுத்துக் கொள்கிறோம். வீடு வீடாக நேரில் சென்று வாக்காளர் பட்டியலில் அவர்களது பெயர் இருக்கிறதா, சேர்க்க வேண்டுமா என்று உறுதிப்படுத்திக் கொள்கிறோம்.

வெயிலில் அலைந்து திரிந்து வரும் எங்களை வரவேற்காவிட்டாலும் பரவாயில்லை. சில வீடுகளில் ஏதோ சேல்ஸ் பெண்களை நடத்துவது மாதிரி மோசமாக நடத்துவார்கள். வீட்டுக்கு வெளியேவே நிற்கவைத்து கடன்காரரிடம் பேசுவது மாதிரி பேசுவார்கள். சில பேர் கோபமாகவும் பேசுவார்கள். நாங்கள் அரசு அதிகாரிகள் என்கிற எண்ணமே மக்களுக்கு இல்லை. அப்பார்ட்மெண்ட்களில் பெரும்பாலும் வீடுகள் மூடியே கிடக்கும். காலிங்பெல் அடித்தோ, கதவைத் தட்டியோ சோர்ந்துவிடுவோம்.

இதற்காக நான்கைந்து முறை வெயிலில் அலைய வேண்டும். நகர்களில் அக்கம் பக்கம் வீடுகளில் இருப்பவர்கள் பற்றி ஒன்றும் பக்கத்து வீட்டுக்காரர்கள் தெரிந்துவைத்துக் கொள்ளாததால் ஒன்றுக்கு நாலு முறை நாங்கள் சிரமப்பட வேண்டியிருக்கிறது. இம்மாதிரி பிரச்சினைகளால்தான் நூறு சதவிகிதம் பேருக்கும் எங்களால் பூத் ஸ்லிப்பை வினியோகம் செய்ய முடியவில்லை. பக்கத்து வீடுகளில் கொடுத்தால் வாங்கிக்கொள்ள மாட்டார்கள். அப்படி வாங்கிக் கொண்டாலும் உரியவர்களிடம் சேர்க்க மறந்துவிடுவார்கள்.

கிராமப்புறங்களில் பரவாயில்லை. அரசாங்கத்தில் இருந்து வருகிறோம் என்று தெரிந்தாலே நல்ல மரியாதை கொடுக்கிறார்கள். அமரவைத்து சில்லென்று நீர், மோர் என்று விருந்தோம்பலில் ஜமாய்த்து விடுவார்கள். அதுவுமின்றி வீட்டுக்கு ஒருவர் யாராவது நிச்சயம் இருப்பார். வீடு பூட்டி இருப்பதெல்லாம் கிராமப்புறங்களில் அரிதான விஷயம்” என்றுகூறி ‘கிராமங்களுக்கு ஜே’ போட்டார் அவர்.

“வீடு வீடாகப் போகும்போது சில வீடுகளில் மனிதர்களே நாய் மாதிரி குறைப்பதுண்டு” என்று ஜாலியாக ஆரம்பித்த மற்றொரு ஆசிரியர், திருவண்ணாமலை அருகில் ஒரு கிராமத்தில் நிஜமாகவே தன்னை நாய் துரத்தி, துரத்தி கடித்த சோகத்தை தொடர்ந்தார். “அந்த தெருவுக்குள் நுழைந்ததுமே பத்து நாய்கள் என்னை விரோதமாக பார்த்தன. வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டை, கருப்புக் கண்ணாடி என்று இருந்த நான் அவற்றுக்கு வினோதமாக தெரிந்தேன். ‘உர்.. உர்’ரென்று பின்னாடியே உருமிக்கொண்டு வந்தன. இந்த வேலையில் இதெல்லாம் சகஜமென்று வீடு வீடாக போய் வாக்காளர் பட்டியலை சரிபார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு வீட்டுக்குள் நுழைந்தபோது, அங்கு செல்லமாக ’பொமரேனியன்’ நாய் ஒன்றை வளர்த்துக் கொண்டிருந்தார்கள். அது தெருநாய்களை பார்த்து குரைக்க, பதிலுக்கு தெருநாய்கள் மல்லுக்கட்ட, இடையில் நான் சக்கரவியூக அபிமன்யூ மாதிரி மாட்டிக் கொண்டேன். வீட்டுக்குள் இருந்த பொமரேனியனை தாக்க முடியாத ஆத்திரத்தில் இருந்த தெருநாய் ஒன்று, என் மீது பாய்ந்து ‘வள்’ளென்று கத்தி முழங்காலுக்கு கீழே கடித்து வைத்தது. வேட்டியோடு சேர்ந்து சதையும் கொஞ்சம் கிழிந்தது. ஊசி போட்டுக்கொண்டு அடுத்த சில நாட்களுக்கு நொண்டிக்கொண்டே போய்தான் வாக்காளர் பட்டியலை சரிபார்த்தேன்” என்று நொந்துக்கொண்டார்.

தேர்தல் அன்று பணிகளில் ஈடுபடுபவர்கள் சொந்தத் தொகுதி பூத்களில் அமர்த்தப்பட மாட்டார்கள். பெரும்பாலும் அக்கம் பக்கத்து தொகுதிகளில் இருக்கும் வாக்குச்சாவடிகளில்தான் பணி இருக்கும். எனவே சென்னையில் இருப்பவர் திருநெல்வேலிக்கு போயோ, கன்னியாகுமரியில் இருப்பவர் வேலூருக்கு போயோ பணிபுரிய வேண்டியதில்லை. அதிகபட்சம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏதேனும் ஒரு தொகுதியில் வேலை இருக்கும். தேர்தலுக்கு முந்தைய நாளே வாக்குச்சாவடிக்கு சென்று மெஷின்களை பொருத்துவது உள்ளிட்ட அடிப்படையான வேலைகளை செய்து வைத்துவிடுவார்கள். அங்கே இவர்கள் தங்கும் இடம், சாப்பாடு போன்றவற்றை அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் அல்லது மண்டல அதிகாரிகள் கவனித்துக் கொள்வார்கள்.

“இம்மாதிரி செலவுகளுக்காக வருவாய்த்துறை சொற்பமாக ஒரு நிதியை எங்களுக்கு அனுப்புகிறது. அதைவைத்து தேர்தல் பணிகளுக்கு வருபவர்களுக்கு நான்கு வேளை தயிர்சாதமும், ஊறுகாயும்தான் தரமுடியும். எனவே எங்கள் சொந்த செலவிலோ அல்லது ‘எப்படி’யோ நிதி திரட்டி ஒரு பெரும் தொகையை முன்பாகவே ஏற்பாடு செய்துவைத்து விடுவோம். ‘அந்த ஊரு விஏஓ நல்லா கவனிச்சிக்கிட்டாருப்பா’ என்று அவர்கள் போய் மற்றவர்களிடம் பரப்பும் செய்திகளில்தான் எங்கள் கவுரவம் அரசு மட்டத்தில் பெருகும்” என்று தன்னுடைய கவுரவ சீக்ரட்டை போட்டு உடைத்தார் கடலூர் மாவட்ட விஏஓ ஒருவர்.

பின்தங்கிய கிராமப்புற தொகுதிகளுக்கு பணிபுரிய போகும்போது இயற்கை உந்துதலை கழிப்பது மற்றும் குளித்துத் தயாராவது போன்றவை பெண் ஊழியர்களுக்கு கடுமையான சிரமத்தை கொடுக்கிறது.

“பெரும்பாலும் நாங்கள் பணிபுரியும் வாக்குச்சாவடி அமைந்த பள்ளிகளில்தான் தங்குகிறோம். அரசுப்பள்ளிகளின் கழிப்பறை எப்படி இருக்குமென்று நாங்கள் சொல்லித் தெரியவேண்டியதில்லை. குளியல் வசதி இருக்க சாத்தியமேயில்லை. ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகள் சிலவற்றில் மின்விசிறி கூட இருக்காது. கொசுத்தொல்லையில் இரவுகளில் தூங்க முடியாது. அதிகாலையிலேயே எழுந்து வேலையை தொடங்க வேண்டும் என்பதால்தான், தேர்தல் அன்று தூக்கமின்றி எரிச்சலாக காணப்படுகிறோம். திரும்பத் திரும்ப சந்தேகம் கேட்கும் வாக்காளர்களிடம் ‘சுள்’ளென்று விழுகிறோம்.

இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டு சில மண்டல அதிகாரிகளும், வி.ஏ.ஓ.க்களும் அருகிலிருக்கும் வீடுகளில் எங்களை தங்கவைக்க ஏற்பாடு செய்வார்கள். அம்மாதிரி ஏற்பாடுகள் இல்லாவிட்டால் எங்கள் கதி அதோகதிதான்” என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவர் தங்கள் சிரமத்தை விளக்கினார்.

ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் பிரசைடிங் ஆபிஸர் எனப்படும் முதன்மை அதிகாரி ஒருவரும், போலிங் ஆபிஸர்-1, போலிங் ஆபிஸர்-2, போலிங் ஆபிஸர்-3 என்று நான்கு பேர் பணிபுரிவார்கள். இவர்களுக்கு சராசரியாக ரூபாய் 1200, 900, 800, 700 மாதிரி படி வழங்கப்படும். தேர்தலுக்கு முன்பாக தேர்தலை எப்படி நடத்துவது என்று பயிற்சிகளும் வழங்கப்பட்டிருக்கும். அதற்காக பயணப்படியும் தரப்படுவதுண்டு.

“எங்கள் மெட்ரோ வாட்டர் சென்னை மாநகரம் முழுக்க தேர்தல் நடந்த இடங்களில் வாக்காளர்களுக்கும், வாக்குச்சாவடிகளுக்கும் குடிநீர் வழங்க சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தோம். வெயிலில் தாகமாக வருபவர்களுக்கு அது எவ்வளவு முக்கியமான விஷயம்? இதுமாதிரிதான் அரசின் எல்லா துறையுமே ஏதோ ஒருவகையில் தங்களை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்திக் கொள்கிறது” என்றார் மெட்ரோ வாட்டர் ஊழியர் ஒருவர்.

‘கீய்ங்க்க்க்க்....’ என்று பொத்தானை அழுத்தியதுமே பத்து நொடிகளுக்கு தொடர்ச்சியாக எழுப்பப்படும் ஜனநாயக சப்தத்துக்கு பின்னணியில் இதுபோல லட்சக்கணக்கானவர்களின் ஆண்டுக்கணக்கான உழைப்பு இருக்கிறது. குறைகளை குறிப்பிடுவது எளிது. நிறைகளை பாராட்ட நிறைவான மனசு வேண்டும். பாராட்டுவோம் உழைப்புக்கு அஞ்சாத நம் அரசு ஊழியர்களை.

வாயை மூடி பேசவும்

‘உனக்கு எது சரின்னு படுதோ, அதை செய்’ படம் சொல்லும் மெசேஜ் இதுதான். எனவே இயக்குனருக்கு சரியென்று பட்டதை எடுத்திருக்கிறார்.

பனிமலை என்றொரு பச்சைப்பசேல் ஊர். பேசினால் பரவும் வியாதி திடீரென்று வருகிறது. எனவே இங்கு பேச்சுரிமைக்கு அரசு தடை விதிக்கிறது. காமிக்கலான கலக்கல் ஒன்லைனர். வாயாடிகளை கலாய்ப்பது என்று கங்கணம் கட்டிக்கொண்டு இயக்குனர் களமிறங்கி விட்டதால், கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு ஆடி தீர்க்கிறார். இந்த ஐடியா மட்டுமே கரை சேர்த்துவிடுமென்று அவருக்கு மூடநம்பிக்கை.

திருவாரூர் தேர் மாதிரி முதல் பாதியில் படம் நகரவே மறுக்கிறது. ஆனால் நிமிடத்துக்கு நிமிடம் வாய்விட்டு சிரிக்க வைக்கிறார்கள் என்பதை ஒப்புக்கொள்ளதான் வேண்டும். இயக்குனரே அறிவிப்பாளராய் ‘நடித்திருக்கும்’ டிவி க்ளிப்பிங், நடிகர் பூமேஜ், தமிழ்நாடு குடிகாரர்கள் நல சங்கம் என்கிற எழவெல்லாம் எதற்கென்றே தெரியவில்லை. ‘மொழி’ மாதிரி உணர்ச்சிப்பூர்வமான படமாக வந்திருக்க வேண்டியது, இந்த கந்தாயங்களால் ‘தெனாலிராமன்’ ஆகிவிட்டது.

துல்ஷார் துடிப்பாக இருக்கிறார். சிநேகமாக சிரிக்கிறார். நன்றாக நடிக்க அவரது அப்பா கொஞ்சம் டிரைனிங் கொடுக்க வேண்டும். இந்த சப்பை கேரக்டர் செய்ய நஸ்ரியா தேவையா? ஹீரோயினைவிட ஹீரோயினின் சித்தியாக வரும் மதுபாலாவை பார்த்து, யூத் விசில் அடிக்கிறார்கள். இந்திய இளைஞர்களிடையே வெகுவாக பரவிவரும் இந்த ‘ஆண்டிமேனியா’தான் நமோ அலையின் ஒரே சாதனை போலிருக்கிறது.

சார்லி சாப்ளின் பட பாணியில் நகரும் இரண்டாம் பாதி சுவாரஸ்யம். ஆனால் இதைவிட முழுநீள சுவாரஸ்யமாக இருபத்தேழு வருடங்களுக்கு முன்பாகவே கமல் – சிங்கீதம் கூட்டணி ‘பேசும்படம்’ படத்தில் பின்னி பெடல் எடுத்திருக்கிறார்கள்.

சின்ன சின்ன சிறுகதை மாதிரி நல்ல குட்டி ஐடியாக்கள். இந்த படம் எடுப்பதற்கு பதிலாக இயக்குனர், நான்கைந்து குறும்படங்கள் எடுத்திருந்தால், மக்களிடம் நன்றாக பேசப்பட்டிருப்பார்.

டைம்பாஸுக்காக ஒரு முறை பார்க்கலாம். ஒருவேளை கோடைவிடுமுறை குழந்தைகளுக்கு பிடிக்குமோ என்னவோ?

21 ஏப்ரல், 2014

கவிஞரு பேசுறாரு!

திமுக பழைய பாதைக்கு திரும்புகிறது. திமுக ஆரம்பிக்கப்பட்ட காலங்களிலும் சரி. பிற்பாடு வளர்ந்து ஆட்சியைப் பிடித்த காலங்களிலும் சரி. அக்கட்சியின் முக்கியமான பிரச்சார ஆயுதமாக தெருமுனை கூட்டங்கள் அமைந்தன. தொண்ணூறுகளுக்கு பிறகான ஊடக தகவல் தொடர்பு வளர்ச்சியால் கொஞ்சம் கொஞ்சமாக தெருமுனை கூட்டங்களை வெகுஜன இயக்கங்கள் குறைத்துக் கொண்டன. இன்றும் தெருமுனைப் பிரச்சாரத்தை தீவிரமாக கைக்கொண்டிருப்பது கம்யூனிஸ்ட்டு கட்சிகள்தான். தொண்ணூற்றி ஆறாம் ஆண்டு சன்டிவி திமுகவுக்கு சரித்திர வெற்றி பெறக்கூடிய வகையில் உதவியது. அதையடுத்து தெருமுனை கூட்டங்களையும், அடிக்கடி நடத்தக்கூடிய பொதுக்கூட்டங்களையும் திமுக குறைத்துக்கொண்டது. இதனால் நேரடியாக அக்கட்சியினர் மக்களை சந்திக்கும் நிலைமை தேர்தலுக்கு தேர்தல் என்று மட்டுமே ஆனது. 2011ஆம் ஆண்டு சட்டமன்ற தோல்விக்குப் பிறகு மீண்டும் திமுகவினர் மக்களை சந்திக்க ஆரம்பித்தார்கள். ஊடகங்கள் பெரும்பாலும் திமுகவுக்கு எதிர்நிலையை பல்வேறு காரணங்களால் எடுத்துவிட்ட நிலையில் நேரடிப் பிரச்சாரம் ஒன்றே தங்களை கரைசேர்க்கும் என்பதை கட்சி நிர்வாகிகள் உணர்ந்திருக்கிறார்கள்.

அடுத்ததாக எழுபதுகளிலும், எண்பதுகளிலும் அறிவுஜீவியினர், படித்தவர்கள், கலை இலக்கியத்துறையினர் ஆதரிக்கக்கூடிய இயக்கம் என்கிற பெயரை இரண்டாயிரங்களில் அக்கட்சி சிறிது சிறிதாக இழந்து வந்தது. குறிப்பாக இரண்டாயிரத்து ஒன்பது ஈழ இறுதிக்கட்டப் போரின் போது, அதுவரை கண்ணை மூடிக்கொண்டு திமுகவை ஆதரித்து வந்தவர்கள் பலரும் திமுகவின் எதிர்நிலைக்கு பயணிக்க ஆரம்பித்தார்கள். நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக அவ்வியக்கத்தை எதிர்த்து சோர்ந்துப்போன சக்திகள் இச்சந்தர்ப்பத்தை மிகச்சரியாக பயன்படுத்தினார்கள். ராஜீவ் கொலையை சாக்காக வைத்து ஆட்சிக்கு வந்த ஜெ.தி.மு.க மற்றும் இந்துத்துவ சக்திகள் தாங்கள்தான் விடுதலைப்புலிகளையே உருவாக்கி நடத்தி வந்தது போன்ற பிம்பத்தை ஏற்படுத்தினார்கள்.

மேற்கண்ட இரண்டு அம்சங்களையும் சரிசெய்ய தற்போதைய திமுக முயற்சித்து வருகிறது. நடைபெறவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலை ஒட்டி இதற்கான ‘டிரைலரை’ ஓட்டி வருவதாகவே தோன்றுகிறது. கடந்த இருபது ஆண்டுகளில் திமுக இத்தனை பெரிய எண்ணிக்கையில் சிறியளவிலான தெருமுனைக் கூட்டங்களை நடத்தியதில்லை. அக்கட்சியின் எதிர்காலமாக கருதக்கூடிய மு.க.ஸ்டாலினும் மிகப்பெரியளவிலான கூட்டங்களை (ஜெயலலிதா ஹெலிகாப்டரில் பறந்து நடத்திவரும் கூட்டங்கள் போன்றவை) ஏற்பாடு செய்யாமல், மக்களை திரட்டக்கூடிய அளவிலான கூட்டங்களுக்கே அதிக முக்கியத்துவம் தருகிறார். ‘ஆடு குட்டி போடும். இலவச கலர் டிவி குட்டி போடுமா?’ என்றெல்லாம் அச்சுபிச்சுவென்று பேசக்கூடிய சினிமா நட்சத்திரங்களையும், பிரபலங்களையும் பயன்படுத்தாமல் திமுகவின் தரப்பை மக்கள் ஏற்றுக்கொள்ளும்படியாக எடுத்து பேசக்கூடியவர்களுக்கு பிரச்சாரத்தில் முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. இந்த போக்கு உடனடியாக வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் அறுவடை ஆகாவிட்டாலும், இரண்டாயிரத்து பதினாறில் நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அக்கட்சியை மக்கள் மத்தியில் வலுவாக்கக்கூடிய வாய்ப்பை பிரகாசமாக்கியிருக்கிறது.
தெருமுனை கூட்டம் ஒன்றில் (தொலைக்காட்சி விவாதங்களால்) நாடறிந்த அறிவுஜீவி ஒருவர் பேசும் கூட்டத்தை வேளச்சேரி பகுதி திமுக ஏற்பாடு செய்திருந்தது. மேல்தட்டு மற்றும் மேல்நடுத்தர வர்க்கத்தினர் அதிகம் புழங்கும் சென்னை பெசண்ட் நகர் பகுதியில், மைனாரிட்டியாக அடித்தட்டு மக்கள் வசிக்கும் இடத்தை அடையாளம் கண்டு இக்கூட்டம் நடத்தப்பட்டது. பெசண்ட் நகர் பஸ் டிப்போவிற்கு பின்னால் இருக்கக்கூடிய மீன் மார்க்கெட் அருகில், நீல் மெட்டல் பனாகா குப்பைத் தொட்டிகளை ஓரமாக வைத்து தரையோடு தரையாக மேடையமைத்திருந்தார்கள்.

இதற்காக ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த ஃப்ளக்ஸ் பேனர்களில் ‘கவிஞர் மனுஷ்யபுத்திரன்’ என்கிற பெயர் கருப்பு-சிவப்பு இரு வண்ணங்களில் இடம்பெற்றிருந்தது. மனுஷ்யபுத்திரனும் கருப்பு-சிவப்பு சட்டை அணிந்தே கூட்டத்தில் கலந்துக்கொண்டார்.

“இவரு யாருங்க. புதுசா இருக்கு”

“டிவியிலே பார்த்ததில்லையா. அடிக்கடி வருவாரே. ரொம்ப நல்லா பேசுவாரு. பெரிய்ய கவிஞ்ஞரு...” சொன்னவர் ‘கலைஞர்’ என்று சொல்லும்போது ஒவ்வொரு திமுககாரரும் முகத்தில் வெளிப்படுத்தும் பெருமிதத்தை ‘கவிஞர்’ என்று குறிப்பிடும்போதும் வெளிப்படுத்தினார்.

சாலை வழியாக இரு சக்கர வாகனங்களிலும், நடந்தும் போய்க்கொண்டிருந்தவர்கள் தங்களுக்கு அறிமுகமான முகம் ஒன்று பேசிக்கொண்டிருப்பதை கண்டு, அப்படியே நின்று கவனிக்க ஆரம்பித்தார்கள்.
மனுஷ்யபுத்திரன் பேச ஆரம்பித்ததுமே கூடியிருந்த ஐநூறுக்கும் மேற்பட்டோர் சட்டென்று அமைதியாகிறார்கள். சலசலவென்று பேசிக்கொண்டிருந்த ஓரிருவரும் கூட, பக்கத்தில் இருந்தவர்களால் “கவிஞரு பேசுறாரு. சும்மாயிருங்கப்பா, கேட்போம்” என்று அமைதிப்படுத்தப் பட்டார்கள்.

தொலைக்காட்சி விவாதங்களில் மனுஷ்யபுத்திரன் பேசும் அறிவுஜீவித்தனமான, புள்ளிவிவரத் தோரணைகள் எதுவும் அவரது பேச்சில் இல்லை. நேரடியாகவே மோடிக்கு எதிராக எளிமையான வாதங்களை எடுத்து வைத்தார். தமிழகம் எவ்வகையிலும் குஜராத்துக்கு தாழ்ந்ததில்லை. குஜராத்தில் பாலாறும், தேனாறும் ஓடவில்லை என்று புரியவைத்தார். “குஜராத்துலே மின்வெட்டே இல்லைன்னு சொல்றாங்க. அப்படியெல்லாம் இல்லை. நம்மளுக்கெல்லாம் அப்ளை பண்ணா கரெண்ட் கனெக்‌ஷன் கொடுத்துடறாங்க. அங்கே லட்சக்கணக்கான வீடுகளுக்கு கரெண்ட் இணைப்பே கிடையாது. அப்படியிருக்க மின்வெட்டு இல்லைங்கிறது ஊரை ஏமாத்துற வேலை இல்லையா?” என்று டீக்கடையில் பக்கத்திலிருப்பவரிடம் அரசியல் பேசும் பாணியில் அவரது உரை அமைந்தது.

வழக்கமாக கலைஞர், தளபதியை உயர்வுநவிற்சியாக மேடையில் யாராவது பேசி, கைத்தட்டி பழக்கப்பட்டவர்களுக்கு தேர்தலின் பிரதான பிரச்சினைகளை முன்வைத்து உதயசூரியனுக்கு ஓட்டு கேட்ட மனுஷ்யபுத்திரனின் பேச்சு வித்தியாசமானதாகவும், புதிய விஷயங்களை அறிந்துகொள்ளக் கூடியதாகவும் அமைந்திருந்தது. அவர் பேசிய ஒரு மணி நேரமும் கூட்டம் அப்படியே கட்டுண்டு கிடந்தது.
தேசிய நிலவரத்தை பேசி முடித்ததும், சரியாக உள்ளூர் பிரச்சினைகளுக்கு வந்தார். மூன்று வருடங்களில் ஜெயலலிதா எதையுமே உங்களுக்கு செய்யவில்லை என்றார். அப்பகுதி மக்களுக்கு நன்கு அறிமுகமான கோட்டூர்புரம் அண்ணா நூலகம் குறித்து ஐந்து நிமிடங்கள் பேசினார். பாஜக கூட்டணியில் சாதிக்கட்சிகளும், சந்தர்ப்பவாதிகளும், மதவெறியர்களும் சேர்ந்திருக்கிறார்கள் என்பதை ஆதாரங்களோடு எடுத்துக் காட்டினார். கடந்த இரு தேர்தல்களில் ஈழப்பிரச்சினை திமுகவுக்கு சங்கடம் கொடுக்கும் நோக்கத்தோடே அதிகம் பேசப்பட்டதாகவும், இத்தேர்தலில் அடக்கி வாசிக்கப்படுவதின் மர்மத்தையும் வெளிப்படுத்தினார். எதிரிலிருக்கும் கூட்டத்தின் எதிர்ப்பார்ப்புகளை யூகித்து, அதற்கேற்ப தன்னுடைய பேச்சின் சுருதியை கூட்டியும், குறைத்தும் நல்ல அரசியல் பேச்சாளராக மனுஷ்யபுத்திரன் தேறிவிட்டிருந்ததை, அவர் பேச்சை முடித்ததுமே அள்ளிய கரவொலியை வைத்து உணரமுடிந்தது. கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்த கட்சி நிர்வாகிகளின் முகத்தில் நல்ல திருப்தி.

தொண்டர்கள் ஓடிவந்து மனுஷ்யபுத்திரனிடம் கை குலுக்குகிறார்கள். வழக்கமாக திமுக முக்கியஸ்தர்கள் கூட்டம் முடிந்ததுமே, பாதுகாவலர்களின் கெடுபிடியோடு காருக்கு போய்விடுவார்கள். அப்படியில்லாமல் மனுஷ்யபுத்திரன் தன்னுடைய பேச்சுக்கான feedbackஐ கூட்டத்திற்கு வந்திருந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்துக் கொள்கிறார். பிரபலம் – சாதாரணம் இடைவெளியை குறைக்கும் அவரது பண்புக்கு நிறைய ரசிகர்கள் இன்ஸ்டண்டாக உருவெடுக்கிறார்கள்.

“இங்கே பேசுனமாதிரியே நீங்க டிவியிலும் நிறைய பேசணுங்க” என்று கேட்டுக் கொண்டார்கள். திமுகவினர் மத்தியில் மனுஷ்யபுத்திரனுக்கு நல்ல மரியாதை இருக்கிறது.

அரவக்குறிச்சியின் அடுத்த எம்.எல்.ஏ.வுக்கு அட்வான்ஸ் வாழ்த்துகள்!

16 ஏப்ரல், 2014

மோடிக்கு இங்கே யார் வாக்களிக்கப் போகிறார்கள்?

நாடு தழுவிய அளவில் மோடி அலை வீசுவதாக ஊடகங்கள் சொல்லிக் கொண்டிருக்கின்றன. இதுவரை இந்தியத் தேர்தல்களில் ‘அலை’ என்பது பிரச்சினைகளையோ, சாதனைகளையோ, வேதனைகளையோ முன்வைத்து அடித்ததுண்டு. தனிநபர் ஒருவரை முன்வைத்து தேர்தலில் அலை எழுதுவது என்பது அரிதிலும் அரிதானது. அதிலும் நாடு தழுவிய அளவில் தலைவர் ஒருவருக்கு ஆதரவான அலை வீசுகிறது என்பது அபத்தத்திலும் அபத்தமானது.

இந்துத்துவா கோலோச்சும் உ.பி.,யில் மோடி அலை வீசுகிறது (வீசியதா என்பதை மே16தான் உறுதி செய்யவேண்டும்; கடந்த சட்டமன்றத் தேர்தலில் கூட பாஜகவுக்கு அங்கே 3வது இடம்தான்) என்று சொன்னால் நம்பலாம். மோடி ஆளும் குஜராத்தில், பாஜக செல்வாக்குள்ள ராஜஸ்தான், ம.பி., கோவா, உத்தரகாண்ட், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் அப்படியான அலை இருப்பதாக சொன்னால் கூட ஓக்கே. தமிழ்நாடு, கேரளா, அஸ்ஸாம், அருணாச்சலப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர் மாதிரி மாநிலங்களிலும் மோடி சுனாமி தாக்குகிறது என்று இவர்கள் பில்டப் கொடுத்துக் கொண்டிருப்பதை நினைத்தால் வாயால் கூட சிரிக்க முடியவில்லை. மிசோரம், நாகலாந்தில் எல்லாம் போய் மோடிக்கு ஓட்டு என்று தாமரையை நீட்டினால் வேலைக்கு ஆகுமா?

குறிப்பாக தமிழ்நாட்டில் இண்டு இடுக்கெல்லாம் மோடிக்கு வாக்குகள் விழ இருப்பதாக இணையத்தில் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். இங்கே பதிவாகும் வாக்குகளில் குறைந்தபட்சம் அறுபது சதவிகித வாக்குகளை திமுக-அதிமுக இரண்டும் தொடர்ச்சியாக கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளாக அறுவடை செய்துவருகிறது. இரு கட்சிகளுமே நாலில் ஒரு ஓட்டை (படுதோல்வி அடைந்த தேர்தல்களிலும்கூட) தன்னுடைய வாக்கு வங்கியாக நிலைநிறுத்தி வைத்திருக்கிறது. இந்தியாவில் வேறெங்காவது இதுமாதிரியான வாக்கு வங்கியை கட்சிகள் உருவாக்கி வைத்திருக்கின்றனவா என்று தெரியவில்லை. காமராஜர் காலத்திலிருந்து கண்ணை மூடிக்கொண்டு காங்கிரஸுக்கு பரம்பரையாக விழும் சொற்ப ஓட்டுகளையும் கணக்கில் எடுத்துக்கொள்ளலாம். இடதுசாரிகளுக்கும் இதேமாதிரி பரம்பரை வாக்கு வங்கி உண்டு.

தேர்தலுக்கு தேர்தல் இடம் மாறும் உதிரிக்கட்சிகளான மதிமுக, பாமக, தேமுதிக போன்றவற்றை ஒரே கூட்டணியில் சேர்த்துவிட்டதால் பாஜக கூட்டணி இங்கே முதலிடத்துக்கு வந்துவிட முடியாது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பாஜகவுக்கு செல்வாக்கு உண்டு. ஏதேனும் வலுவான கட்சியோடு கூட்டணி அமைத்து போட்டியிடும்போது கன்னியாகுமரியில் மட்டும் வெல்லக்கூடிய வாய்ப்புண்டு. தொண்ணூற்றியெட்டு குண்டுவெடிப்பை தொடர்ந்து கோயமுத்தூரிலும் ஓரளவுக்கு காலூன்றியிருக்கிறார்கள். இவை தவிர்த்து தமிழ்நாட்டில் வேறெங்கும் தனியாக நின்றால் டெபாசிட் கூட கிடைக்காது. இப்போது உதிரிகளின் கூட்டணியில் நிற்பதால் சில இடங்களில் அக்கட்சிக்கு டெபாசிட் கிடைக்கலாம் அவ்வளவே. அதுவும் கூட விஜயகாந்துக்கு, பாமகவுக்கு, வைகோவுக்கு என்று விழப்போகும் வாக்குகள்தான். மோடிக்கு என்றில்லை. தமிழக மக்களுக்கு நன்கு அறிமுகமான ராஜீவுக்கே கூட இங்கே வாக்கு விழுந்ததில்லை. 84லும், 89லும் அதிமுகவோடு கூட்டணியில் இருந்ததால்தான் இங்கே காங்கிரஸ் பெரும்பான்மையான தொகுதிகளை வென்றதே தவிர, குறிப்பாக ராஜீவுக்கு தமிழக மக்கள் வாக்களிக்கவில்லை.

பஸ்களிலும், ரயில்களிலும், கல்லூரிகளிலும், இதர இடங்களிலும் மோடி வந்தால் நல்லது என்று பேசக்கூடிய ஆட்கள்கூட ஓட்டு என்று வந்தால் திமுக அல்லது அதிமுக கூட்டணியைதான் ஆதரிக்கப் போகிறார்கள். மாநிலக் கட்சிகளுக்கே முன்னுரிமை என்பது தமிழனின் அரசியல். தேசியப் பிரச்சினைகளை ஆவிபறக்க விவாதிப்பார்கள். அது வெறும் விவாதத்துக்கான கச்சா மட்டுமே.

முதல்முறை வாக்காளர்கள் கிட்டத்தட்ட முக்கால் கோடி பேர் தமிழகத்தில் வாக்களிக்கப் போகிறார்கள். அவர்கள் அப்படியே மோடிக்கு குத்து குத்துவென்று குத்தப் போகிறார்கள் என்றொரு வாதம் முன்வைக்கப்படுகிறது. இந்த முதல் தலைமுறை வாக்காளர்களை டெஸ்ட் ட்யூப் பேபிகள் போல ‘சிறப்பு அடைமொழி’ கொடுத்து குறிப்பிடுவது ஏமாற்று வேலை. பதினெட்டு வயதிலிருந்து இருபத்தைந்து வயதுக்குள்ளான வாக்காளர்கள் யாருமே திமுக/அதிமுக மற்றும் மாநிலக் கட்சிகளில் இல்லை என்பது போன்ற மாயையை உருவாக்குவது ஏமாற்றுவேலை. இவர்களும் தமிழகத்தில் பிறந்து வளர்ந்தவர்கள்தான். திமுக/அதிமுக குடும்பங்களில் பிறந்தவர்கள்தான். பெரியார், அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என்று தமிழகத் தலைவர்களின் ஆதரவாளர்கள்தான். பிரம்மன் சொர்க்கத்தில் படைத்து நேரடியாக ஓட்டுரிமை வாங்கிக்கொண்டு குதித்தவர்கள் அல்ல. திமுக / அதிமுக கட்சிகளில் இளைஞர் அணி என்பது அக்கட்சிகளின் வலுவான அமைப்புகளாக இருக்கிறது என்பதை ஊடகங்கள் மறைக்க விரும்புகிறார்களா அல்லது மறக்க விரும்புகிறார்களா என்று தெரியவில்லை.

நடுத்தர மக்களும், அடித்தட்டு மக்களும் பாஜகவை ஆதரிப்பார்கள் என்கிற மோடி ஆதரவாளர்களின் எதிர்ப்பார்ப்பு கடந்த டெல்லி சட்டமன்றத் தேர்தலிலேயே ஆட்டம் கண்டுவிட்டது. டெல்லியிலேயே அப்படிதான் என்றால், தமிழகத்தில் இவர்களிடம் தாமரையின் டவுசர் சுத்தமாக கழண்டுவிடும். உண்மையில் தமிழக அடித்தட்டு மக்களிடம், இம்முறை ‘கை’, மத்தியில் வராவிட்டால் ஆண்டுக்கு நூறுநாள் வேலை திட்டம் கேன்சல் ஆகிவிடும் என்கிற அச்சம் இருக்கிறது. தமிழக நடுத்தர வர்க்கத்தைப் பொறுத்தவரை மின்வெட்டு, விலைவாசி மாதிரி அடிப்படைப் பிரச்சினைகளை முன்வைத்து வாக்களிக்கக்கூடிய மனோபாவம் கொண்டவர்கள். தங்கள் கோபத்தையோ, பாசத்தையோ மாநிலக் கட்சிகளிடம்தான் காட்டுவார்களே தவிர, தேசியக் கட்சிகளை இவர்கள் இதுவரை பொருட்டாக மதித்ததே இல்லை.

தமிழக மக்கள் ‘கவர்னன்ஸ்’ பார்த்து வாக்களிக்கிறார்கள் என்பது புல்ஷிட். 96-01ல் மிகச்சிறந்த மாநில வளர்ச்சியை தந்த கலைஞர் ஆட்சியை தூக்கியெறிந்தவர்கள் இவர்கள். மாதாமாதம் அமைச்சர்களையும், ஐ.ஏ.எஸ்./ஐ.பி.எஸ். அதிகாரிகளையும் சரியான காரண காரியமின்றி பந்தாடி வரும் ஜெயலலிதாவை மூன்று முறை தேர்ந்தெடுத்தவர்கள் தமிழக மக்கள். ‘ஸ்டேட் மாஸ் மெண்டாலிட்டி’ அடிப்படையில் வாக்களித்துவரும் தமிழக மக்களிடம் ‘குஜராத்தைப் பார்’ என்று காட்டி வாக்கு வாங்க முடியாது என்கிற அடிப்படையை புரிந்துகொள்ள முடியும்.

இம்முறை தமிழகத்தில் தேமுதிக தலைமையில் அமைந்திருக்கும் பாஜக கூட்டணிக்கு யார் யாரெல்லாம் வாக்களிக்கப் போகிறார்கள்?

ஏற்கனவே பாஜகவுக்கு விழும் இரண்டு, இரண்டரை சதவிகிதம் (மோடி ஃபேக்டர் இருக்கிறது என்று எடுத்துக்கொண்டாலே கூட மேற்கொண்டு அரை சதவிகிதமோ, ஒரு சதவிகிதமோ கூடும்) விழப்போகிறது. கூடுதலாக மதிமுக, பாமக கட்சிகளின் தலா ஐந்து சதவிகிதத்துக்கும் குறைவான வாக்கு வங்கி, தேமுதிகவின் எட்டு சதவிகித வாக்குகள் என்று அதிகபட்சமாக பதினைந்து, பதினாறு சதவிகிதத்தை தொடப்போகிறார்கள். அவ்வளவுதான். ஓரிரு தொகுதிகளில் வெற்றி கிடைக்கலாம். ஏழெட்டு தொகுதிகளில் டெபாசிட் கூட கிடைக்கலாம். மற்றபடி இது பெரியார் மண்தான். அதில் சந்தேகம் எதுவுமில்லை. மதவெறிக்கு இங்கே இடமில்லை. வேண்டுமென்றால் சாதிவெறியை கூட ’கன்சிடர்’ செய்வார்கள் :)

தமிழகத்தில் நிஜமான போட்டி என்பது அதிமுக – திமுகவுக்கு இடையே நடக்கக்கூடியதுதான். மற்றவர்கள் தொட்டுக்க ஊறுகாய்தான். வேண்டுமென்றால் சில தொகுதிகளில் இந்த இரு கட்சிகளின் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கக்கூடிய வகையில் ஓட்டுகளை பிரிப்பார்கள். தேர்தல் களேபரம் எல்லாம் ஆரம்பிப்பதற்கு முன்பாக மிக வலுவாக இருந்தது அதிமுக. அக்கட்சி சரியான கூட்டணியை அமைக்காதது, பிரச்சாரத்தில் தீவிர முனைப்பு செலுத்தாதது போன்ற காரணிகளை பயன்படுத்தி திமுக இடைவெளியை குறைத்து வருகிறது. கோடைகால மின்வெட்டு இம்முறை திமுகவுக்கு சாதகம். இன்றைய தேதியிலும் அதிமுக முதலிடத்தில் ஓடிக்கொண்டிருந்தாலும், திமுக மிக நெருக்கமாகவே வந்துக் கொண்டிருக்கிறது. ரிசல்ட் சிக்ஸ்ட்டி – ஃபார்ட்டி என்று இருக்கப் போகிறது. யார் சிக்ஸ்ட்டி என்பதற்காகதான் நாம் மே 16 வரை காத்திருக்க வேண்டும்.