21 ஏப்ரல், 2014

கவிஞரு பேசுறாரு!

திமுக பழைய பாதைக்கு திரும்புகிறது. திமுக ஆரம்பிக்கப்பட்ட காலங்களிலும் சரி. பிற்பாடு வளர்ந்து ஆட்சியைப் பிடித்த காலங்களிலும் சரி. அக்கட்சியின் முக்கியமான பிரச்சார ஆயுதமாக தெருமுனை கூட்டங்கள் அமைந்தன. தொண்ணூறுகளுக்கு பிறகான ஊடக தகவல் தொடர்பு வளர்ச்சியால் கொஞ்சம் கொஞ்சமாக தெருமுனை கூட்டங்களை வெகுஜன இயக்கங்கள் குறைத்துக் கொண்டன. இன்றும் தெருமுனைப் பிரச்சாரத்தை தீவிரமாக கைக்கொண்டிருப்பது கம்யூனிஸ்ட்டு கட்சிகள்தான். தொண்ணூற்றி ஆறாம் ஆண்டு சன்டிவி திமுகவுக்கு சரித்திர வெற்றி பெறக்கூடிய வகையில் உதவியது. அதையடுத்து தெருமுனை கூட்டங்களையும், அடிக்கடி நடத்தக்கூடிய பொதுக்கூட்டங்களையும் திமுக குறைத்துக்கொண்டது. இதனால் நேரடியாக அக்கட்சியினர் மக்களை சந்திக்கும் நிலைமை தேர்தலுக்கு தேர்தல் என்று மட்டுமே ஆனது. 2011ஆம் ஆண்டு சட்டமன்ற தோல்விக்குப் பிறகு மீண்டும் திமுகவினர் மக்களை சந்திக்க ஆரம்பித்தார்கள். ஊடகங்கள் பெரும்பாலும் திமுகவுக்கு எதிர்நிலையை பல்வேறு காரணங்களால் எடுத்துவிட்ட நிலையில் நேரடிப் பிரச்சாரம் ஒன்றே தங்களை கரைசேர்க்கும் என்பதை கட்சி நிர்வாகிகள் உணர்ந்திருக்கிறார்கள்.

அடுத்ததாக எழுபதுகளிலும், எண்பதுகளிலும் அறிவுஜீவியினர், படித்தவர்கள், கலை இலக்கியத்துறையினர் ஆதரிக்கக்கூடிய இயக்கம் என்கிற பெயரை இரண்டாயிரங்களில் அக்கட்சி சிறிது சிறிதாக இழந்து வந்தது. குறிப்பாக இரண்டாயிரத்து ஒன்பது ஈழ இறுதிக்கட்டப் போரின் போது, அதுவரை கண்ணை மூடிக்கொண்டு திமுகவை ஆதரித்து வந்தவர்கள் பலரும் திமுகவின் எதிர்நிலைக்கு பயணிக்க ஆரம்பித்தார்கள். நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக அவ்வியக்கத்தை எதிர்த்து சோர்ந்துப்போன சக்திகள் இச்சந்தர்ப்பத்தை மிகச்சரியாக பயன்படுத்தினார்கள். ராஜீவ் கொலையை சாக்காக வைத்து ஆட்சிக்கு வந்த ஜெ.தி.மு.க மற்றும் இந்துத்துவ சக்திகள் தாங்கள்தான் விடுதலைப்புலிகளையே உருவாக்கி நடத்தி வந்தது போன்ற பிம்பத்தை ஏற்படுத்தினார்கள்.

மேற்கண்ட இரண்டு அம்சங்களையும் சரிசெய்ய தற்போதைய திமுக முயற்சித்து வருகிறது. நடைபெறவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலை ஒட்டி இதற்கான ‘டிரைலரை’ ஓட்டி வருவதாகவே தோன்றுகிறது. கடந்த இருபது ஆண்டுகளில் திமுக இத்தனை பெரிய எண்ணிக்கையில் சிறியளவிலான தெருமுனைக் கூட்டங்களை நடத்தியதில்லை. அக்கட்சியின் எதிர்காலமாக கருதக்கூடிய மு.க.ஸ்டாலினும் மிகப்பெரியளவிலான கூட்டங்களை (ஜெயலலிதா ஹெலிகாப்டரில் பறந்து நடத்திவரும் கூட்டங்கள் போன்றவை) ஏற்பாடு செய்யாமல், மக்களை திரட்டக்கூடிய அளவிலான கூட்டங்களுக்கே அதிக முக்கியத்துவம் தருகிறார். ‘ஆடு குட்டி போடும். இலவச கலர் டிவி குட்டி போடுமா?’ என்றெல்லாம் அச்சுபிச்சுவென்று பேசக்கூடிய சினிமா நட்சத்திரங்களையும், பிரபலங்களையும் பயன்படுத்தாமல் திமுகவின் தரப்பை மக்கள் ஏற்றுக்கொள்ளும்படியாக எடுத்து பேசக்கூடியவர்களுக்கு பிரச்சாரத்தில் முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. இந்த போக்கு உடனடியாக வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் அறுவடை ஆகாவிட்டாலும், இரண்டாயிரத்து பதினாறில் நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அக்கட்சியை மக்கள் மத்தியில் வலுவாக்கக்கூடிய வாய்ப்பை பிரகாசமாக்கியிருக்கிறது.
தெருமுனை கூட்டம் ஒன்றில் (தொலைக்காட்சி விவாதங்களால்) நாடறிந்த அறிவுஜீவி ஒருவர் பேசும் கூட்டத்தை வேளச்சேரி பகுதி திமுக ஏற்பாடு செய்திருந்தது. மேல்தட்டு மற்றும் மேல்நடுத்தர வர்க்கத்தினர் அதிகம் புழங்கும் சென்னை பெசண்ட் நகர் பகுதியில், மைனாரிட்டியாக அடித்தட்டு மக்கள் வசிக்கும் இடத்தை அடையாளம் கண்டு இக்கூட்டம் நடத்தப்பட்டது. பெசண்ட் நகர் பஸ் டிப்போவிற்கு பின்னால் இருக்கக்கூடிய மீன் மார்க்கெட் அருகில், நீல் மெட்டல் பனாகா குப்பைத் தொட்டிகளை ஓரமாக வைத்து தரையோடு தரையாக மேடையமைத்திருந்தார்கள்.

இதற்காக ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த ஃப்ளக்ஸ் பேனர்களில் ‘கவிஞர் மனுஷ்யபுத்திரன்’ என்கிற பெயர் கருப்பு-சிவப்பு இரு வண்ணங்களில் இடம்பெற்றிருந்தது. மனுஷ்யபுத்திரனும் கருப்பு-சிவப்பு சட்டை அணிந்தே கூட்டத்தில் கலந்துக்கொண்டார்.

“இவரு யாருங்க. புதுசா இருக்கு”

“டிவியிலே பார்த்ததில்லையா. அடிக்கடி வருவாரே. ரொம்ப நல்லா பேசுவாரு. பெரிய்ய கவிஞ்ஞரு...” சொன்னவர் ‘கலைஞர்’ என்று சொல்லும்போது ஒவ்வொரு திமுககாரரும் முகத்தில் வெளிப்படுத்தும் பெருமிதத்தை ‘கவிஞர்’ என்று குறிப்பிடும்போதும் வெளிப்படுத்தினார்.

சாலை வழியாக இரு சக்கர வாகனங்களிலும், நடந்தும் போய்க்கொண்டிருந்தவர்கள் தங்களுக்கு அறிமுகமான முகம் ஒன்று பேசிக்கொண்டிருப்பதை கண்டு, அப்படியே நின்று கவனிக்க ஆரம்பித்தார்கள்.
மனுஷ்யபுத்திரன் பேச ஆரம்பித்ததுமே கூடியிருந்த ஐநூறுக்கும் மேற்பட்டோர் சட்டென்று அமைதியாகிறார்கள். சலசலவென்று பேசிக்கொண்டிருந்த ஓரிருவரும் கூட, பக்கத்தில் இருந்தவர்களால் “கவிஞரு பேசுறாரு. சும்மாயிருங்கப்பா, கேட்போம்” என்று அமைதிப்படுத்தப் பட்டார்கள்.

தொலைக்காட்சி விவாதங்களில் மனுஷ்யபுத்திரன் பேசும் அறிவுஜீவித்தனமான, புள்ளிவிவரத் தோரணைகள் எதுவும் அவரது பேச்சில் இல்லை. நேரடியாகவே மோடிக்கு எதிராக எளிமையான வாதங்களை எடுத்து வைத்தார். தமிழகம் எவ்வகையிலும் குஜராத்துக்கு தாழ்ந்ததில்லை. குஜராத்தில் பாலாறும், தேனாறும் ஓடவில்லை என்று புரியவைத்தார். “குஜராத்துலே மின்வெட்டே இல்லைன்னு சொல்றாங்க. அப்படியெல்லாம் இல்லை. நம்மளுக்கெல்லாம் அப்ளை பண்ணா கரெண்ட் கனெக்‌ஷன் கொடுத்துடறாங்க. அங்கே லட்சக்கணக்கான வீடுகளுக்கு கரெண்ட் இணைப்பே கிடையாது. அப்படியிருக்க மின்வெட்டு இல்லைங்கிறது ஊரை ஏமாத்துற வேலை இல்லையா?” என்று டீக்கடையில் பக்கத்திலிருப்பவரிடம் அரசியல் பேசும் பாணியில் அவரது உரை அமைந்தது.

வழக்கமாக கலைஞர், தளபதியை உயர்வுநவிற்சியாக மேடையில் யாராவது பேசி, கைத்தட்டி பழக்கப்பட்டவர்களுக்கு தேர்தலின் பிரதான பிரச்சினைகளை முன்வைத்து உதயசூரியனுக்கு ஓட்டு கேட்ட மனுஷ்யபுத்திரனின் பேச்சு வித்தியாசமானதாகவும், புதிய விஷயங்களை அறிந்துகொள்ளக் கூடியதாகவும் அமைந்திருந்தது. அவர் பேசிய ஒரு மணி நேரமும் கூட்டம் அப்படியே கட்டுண்டு கிடந்தது.
தேசிய நிலவரத்தை பேசி முடித்ததும், சரியாக உள்ளூர் பிரச்சினைகளுக்கு வந்தார். மூன்று வருடங்களில் ஜெயலலிதா எதையுமே உங்களுக்கு செய்யவில்லை என்றார். அப்பகுதி மக்களுக்கு நன்கு அறிமுகமான கோட்டூர்புரம் அண்ணா நூலகம் குறித்து ஐந்து நிமிடங்கள் பேசினார். பாஜக கூட்டணியில் சாதிக்கட்சிகளும், சந்தர்ப்பவாதிகளும், மதவெறியர்களும் சேர்ந்திருக்கிறார்கள் என்பதை ஆதாரங்களோடு எடுத்துக் காட்டினார். கடந்த இரு தேர்தல்களில் ஈழப்பிரச்சினை திமுகவுக்கு சங்கடம் கொடுக்கும் நோக்கத்தோடே அதிகம் பேசப்பட்டதாகவும், இத்தேர்தலில் அடக்கி வாசிக்கப்படுவதின் மர்மத்தையும் வெளிப்படுத்தினார். எதிரிலிருக்கும் கூட்டத்தின் எதிர்ப்பார்ப்புகளை யூகித்து, அதற்கேற்ப தன்னுடைய பேச்சின் சுருதியை கூட்டியும், குறைத்தும் நல்ல அரசியல் பேச்சாளராக மனுஷ்யபுத்திரன் தேறிவிட்டிருந்ததை, அவர் பேச்சை முடித்ததுமே அள்ளிய கரவொலியை வைத்து உணரமுடிந்தது. கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்த கட்சி நிர்வாகிகளின் முகத்தில் நல்ல திருப்தி.

தொண்டர்கள் ஓடிவந்து மனுஷ்யபுத்திரனிடம் கை குலுக்குகிறார்கள். வழக்கமாக திமுக முக்கியஸ்தர்கள் கூட்டம் முடிந்ததுமே, பாதுகாவலர்களின் கெடுபிடியோடு காருக்கு போய்விடுவார்கள். அப்படியில்லாமல் மனுஷ்யபுத்திரன் தன்னுடைய பேச்சுக்கான feedbackஐ கூட்டத்திற்கு வந்திருந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்துக் கொள்கிறார். பிரபலம் – சாதாரணம் இடைவெளியை குறைக்கும் அவரது பண்புக்கு நிறைய ரசிகர்கள் இன்ஸ்டண்டாக உருவெடுக்கிறார்கள்.

“இங்கே பேசுனமாதிரியே நீங்க டிவியிலும் நிறைய பேசணுங்க” என்று கேட்டுக் கொண்டார்கள். திமுகவினர் மத்தியில் மனுஷ்யபுத்திரனுக்கு நல்ல மரியாதை இருக்கிறது.

அரவக்குறிச்சியின் அடுத்த எம்.எல்.ஏ.வுக்கு அட்வான்ஸ் வாழ்த்துகள்!

8 கருத்துகள்:

  1. ‘ஆடு குட்டி போடும். இலவச கலர் டிவி குட்டி போடுமா?’ என்றெல்லாம் அச்சுபிச்சுவென்று பேசக்கூடிய சினிமா நட்சத்திரங்களையும்/////////////// இது போன்ற மொக்கைகள் இல்லாமல் மனுஷ்ய புத்திரன் போன்ற நல்ல பேச்சாளர்களை திமுக தேர்தல் நேரங்கள் மட்டும் இல்லாமல் எப்பொழுதுமே உடன் வைத்திருப்பது நல்ல
    பலனை தரும்

    பதிலளிநீக்கு
  2. வாவ், 2016 ல கவிஞர் எங்க ஊரு தொகுதியில போட்டியிடப் போறாரா?
    நான் ஆபிஸ் லீவ் போட்டுட்டு பிரசாரத்துக்கு போயிடறேன்

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா7:12 AM, ஏப்ரல் 22, 2014

    நீர் திமுக தீவிரவாதி (தீவிர அனுதாபி) இருக்கலாம் ஆனால் ஓர் உண்மை மட்டும் மாற வாய்பூ இல்லை அது

    எத்தினை ஸ்டாலின் வந்தாலும் திமுக வாக்கு வங்கி இனிமேல் மேலே போகாது.

    பதிலளிநீக்கு
  4. பெயரில்லா6:43 PM, ஏப்ரல் 22, 2014

    This election is really a 3 way contest which was never happened in 50 years in TN. That itself is a drawback for both DMK and ADMK

    பதிலளிநீக்கு
  5. ஸ்ரீ பெரும்புதூர் எம்.பி. ஆக இருந்த பாலு மூன்று வருடங்களுக்கு முன் தஞ்சாவூருக்கு ஓடி விட்டார் , அவராவது ரயில்வே நிகர்நிலை குழுத் தலைவராக வந்த பிறகு தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களுக்கு புதிய ரயில்களைக் கொண்டு வந்தார் , ஆனால் அரக்கோணம் எம்.பி. ஆக இருந்த ஜெகத் அங்கு ஒன்றுமே செய்யாமல் , பாராளுமன்றத்தில் 2% வருகை பதிவு வைத்து இப்பொழுது ஸ்ரீ பெரும்புதூரில் வேட்பாளராகி விட்டார் . அவரை தவிர யாரை நிறுத்தி இருந்தாலும் சூரியனுக்கு போட்டு இருப்பேன் , இப்பொழுது நோட்டாவா இல்லை பம்பரமா என்ற நிலையில் இருக்கிறேன்

    பதிலளிநீக்கு
  6. பெயரில்லா11:36 AM, ஏப்ரல் 24, 2014

    இஸ்லாமிய மதமென்றால் கலைஞர் நபியாகிறார், கிறித்துவ மதமென்றால் கலைஞர் ஏசுவாகிறார், இந்து மதமென்றால் மட்டுமே கலைஞர் பெரியாராகிறார்-

    பதிலளிநீக்கு
  7. பெயரில்லா7:12 AM, ஏப்ரல் 27, 2014

    DMK used to have good leaders, who rose from the bottom. It's still a great party with respect to the organization and it's structure. Problem or weakness is that the top is so detatched and highly corrupt.
    The Top's brilliance OR DMK party's bottom's double blind cultness help them still win elections for no real reason. We can see that, good,reasonable people like Yuva, manuhsyaputran.. blindly support a rotten party for it's old glory. pity.

    பதிலளிநீக்கு