29 ஏப்ரல், 2014

விருது பட்டறை

மறைந்த இயக்குனர் பாலுமகேந்திராவின் சீடர்கள் தொடர்ச்சியாக
தமிழுக்கு தேசிய விருதுகளை குவித்து வருகிறார்கள்...


சொர்க்கத்தில் இருக்கும் பாலுமகேந்திரா நிச்சயம் சந்தோஷப்படுவார். அவருக்கு விருதுகள் மீது அலாதி பிரியம். ஒரு கலைஞன், மக்களால் மட்டுமின்றி கலை மற்றும் கலாச்சார அமைப்புகளாலும், அரசாங்கத்தாலும் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்கிற விருப்பம் கொண்டவராக இருந்தார். புனே திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவு கற்றுவிட்டு வெளிவரும்போது தங்கமெடலோடு வெளிவந்தவர் ஆயிற்றே? எனவேதான் கடந்த பிப்ரவரியில் காலமாவதற்கு முன்பாக மரணப்படுக்கையில் இருந்தபோதும், தான் கடைசியாக இயக்கி நடித்த ‘தலைமுறைகள்’ திரைப்படம் தேசிய விருதுக்கு விண்ணப்பிக்கப்பட்ட படிவத்தை ஒன்றுக்கு நாலுமுறை திரும்பத் திரும்ப சரிபார்த்தார்.

கோகிலா, மூன்றாம் பிறை, வீடு, சந்தியாராகம், வண்ண வண்ண பூக்கள் என்று பல படங்களுக்கு ஏற்கனவே தேசியவிருதுகள் பெற்றவர்தான் பாலுமகேந்திரா. இயக்கம், ஒளிப்பதிவு, திரைக்கதை என்று மூன்று துறைகளிலும் தேசியவிருது பெற்ற ஒரே கலைஞர் இவர் மட்டும்தான். இவரது படங்களில் இவருக்கு விருது கிடைக்கும். அல்லது படத்தில் தொடர்புடைய கலைஞர்கள் யாருக்காவது நிச்சயம் விருது கிடைக்கும் என்கிற அளவுக்கு தேசிய விருது அறிவிக்கப்படும் போதெல்லாம் பாலுமகேந்திராவின் பெயர் நிச்சயம் உச்சரிக்கப்படும். கமலஹாசன் முதன்முதலாக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றது இவர் இயக்கிய மூன்றாம் பிறை திரைப்படத்தில்தான்.

பாலா, ராம், வெற்றிமாறன், சீனுராமசாமி, சசிக்குமார் என்று அவரிடம் உருவான சீடர்கள் தொடர்ச்சியாக தேசிய விருதுகளை கடந்த சில ஆண்டுகளாக தமிழுக்கு குவித்து வருகிறார்கள். இவ்வாண்டும் பாலுமகேந்திராவின் தலைமுறைகள் படத்தை தயாரித்த சசிகுமார், தேசிய ஒற்றுமைக்கான நர்கீஸ் விருதை பெற்றிருக்கிறார். ‘கற்றது தமிழ்’ ராம் இயக்கிய ‘தங்க மீன்கள்’ சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருதை வென்றிருக்கிறது. அதே படத்தில் ‘ஆனந்த யாழை மீட்டுகிறாய்’ பாடலை எழுதியதற்காக நா.முத்துக்குமார் சிறந்த பாடலாசிரியருக்கான விருதினை வென்றிருக்கிறார். இவர்களில் முத்துக்குமாரும், ராமும் நேரடியாக பாலுமகேந்திராவுக்கு உதவியாளர்களாக பணிபுரிந்தவர்கள். பாலுமகேந்திராவின் உதவியாளர்களான பாலா, அமீர் ஆகியோரிடம் பணிபுரிந்த காரணத்தால் சசிக்குமாரும் பாலுமகேந்திராவின் பட்டறையிலேயே வருகிறார்.

‘சினிமாவையும் ஒரு பாடமாக்கி மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும்’ என்று நீண்டகாலமாக குரல் கொடுத்து வந்தவர் பாலுமகேந்திரா. சொல்லி வந்ததோடு மட்டுமில்லாமல், அதை செயலாக்கத்துக்கு அவரே கொண்டுவரவும் செய்தார். ‘சினிமா பட்டறை’ என்கிற பெயரில் ஏழு ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு பள்ளியை தொடங்கி நடத்தினார். இப்பள்ளியில் ஒளிப்பதிவு, இயக்கம் மற்றும் நடிப்பு கற்றுத்தரப்பட்டது.

“சொல்லிக் கொடுத்து சினிமாவை கற்றுக்கொள்ள முடியாது. ஆர்வமும் படைப்புத்திறனும் இயல்பிலேயே இருக்கவேண்டும். அவ்வாறு இருப்பவர்களை அடையாளம் கண்டு தேர்வு செய்கிறேன். அவர்களுக்குதான் பிராக்டிக்கலாக சினிமா பட்டறை சினிமாவை கற்றுத்தரும். நான் சின்ன கோடுதான் கிழிக்கிறேன். அவரவரின் படைப்புத்திறன்தான் இந்த கோட்டை அழகிய கோலமாக்க வேண்டும்” என்று தன்னுடைய பள்ளியைப் பற்றி ஒருமுறை சொன்னார் பாலுமகேந்திரா.

“ஒவ்வொரு முறை பாலுமகேந்திரா சாரை நான் சந்திக்கும்போதும், அந்நேரத்தில் நான் எழுதிய பாடல் எதையாவது ரொம்பவும் பாராட்டுவார். ‘நீ வேணும்னா பாரேன். இந்த பாட்டுக்கு உனக்கு தேசிய விருது கிடைக்கும்’ என்பார். கிடைக்காதபோது ரொம்ப வருத்தப்படுவார். எனக்கு தேசிய விருது கிடைக்க வேண்டும் என்று என்னைவிட அதிகம் ஆசைப்பட்டவர் அவர்தான். தங்கமீன்களில் இடம்பெற்ற ‘ஆனந்த யாழை’ பாடல் அவருக்கு ரொம்பப் பிடித்திருந்தது. வழக்கம்போல இப்போதும் சொன்னார். ‘பாரேன். உனக்கு இந்த வாட்டி நிச்சயமா விருது கிடைக்கப் போவுது’. அவரது ஆசைப்படியே கிடைத்துவிட்டது. ஆனால் அதை பார்த்து சந்தோஷப்பட அவர்தான் இல்லை. எனக்கு கிடைத்திருக்கும் இந்த அங்கீகாரத்தை அவருக்கே அர்ப்பணிக்கிறேன்” என்கிறார் நா.முத்துக்குமார்.

காஞ்சிபுரம் அருகே ஒரு கிராமத்தில் பிறந்து வளர்ந்த நா.முத்துக்குமார் இயக்குனர் ஆகும் ஆர்வத்தில் பாலுமகேந்திராவிடம் நான்கு ஆண்டுகள் உதவியாளராக பணிபுரிந்தார். பிறகு பாடலாசிரியாக வீரநடை திரைப்படம் மூலம் அறிமுகமானார். சமகாலத்தில் தமிழ் திரையுலகில் கோலோச்சும் அத்தனை இசையமைப்பாளர்களிடமும் பணிபுரிந்திருக்கிறார். கடந்த 2012ஆம் ஆண்டு மட்டுமே நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை சினிமாவில் எழுதி சாதனை புரிந்தவர். கஜினி, வெயில், சிவாஜி, சிவா மனசுலே சக்தி, அயன், வெப்பம், எங்கேயும் எப்போதும், தாண்டவம் என்று பல்வேறு திரைப்படங்களில் பாடல்கள் எழுதி, பல அமைப்புகளின் விருதுகளை வென்றிருந்தாலும் தேசியவிருது பெறுவது இதுவே முதன்முறை.

“என்னுடைய ஒரே வருத்தம், தலைமுறைகள் படத்துக்கான தேசிய விருதை நேரில் பெற அவர் இல்லையே என்பதுதான். உண்மையான கலைஞர்கள் வயதுக்கு அப்பாற்பட்டவர்கள் என்பதை இவ்விருது மூலம் அவர் நிரூபித்திருக்கிறார். தாத்தாவுக்கும் பேரனுக்குமான கதை மட்டுமல்ல தலைமுறைகள். இரண்டு தலைமுறைகளுக்கு இடையேயான முரணை இது வலுவாக பேசியது. பாலுமகேந்திரா முதன்முதலாக நடித்த படத்தை நான்தான் தயாரித்திருக்கிறேன் என்பது எனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம்” என்று சிலிர்க்கிறார் சசிக்குமார்.

இவர் தயாரித்த ‘பசங்க’ ஏற்கனவே சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருதை வென்றிருக்கிறது. இயக்குனர் பாலாவின் முதல் திரைப்படமான ‘சேது’விலேயே இருபது வயது சசிக்குமார் பணிபுரிந்தார். இவரது மாமா கந்தசாமிதான் அப்படத்தின் தயாரிப்பாளர். அப்போது அறிமுகமான இயக்குனர் அமீரின் ‘மவுனம் பேசியதே’, ‘ராம்’, ‘பருத்தி வீரன்’ ஆகிய படங்களிலும் பணியாற்றினார். போதுமான அனுபவங்கள் பெற்றபின் தானே தயாரித்து, நடித்து ‘சுப்பிரமணியபுரம்’ திரைப்படத்தை இயக்கி மாபெரும் வெற்றி பெற்றார். தொடர்ச்சியாக இயக்கம், தயாரிப்பு, நடிப்பு என்று சமகால தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஆளுமையாக உருவெடுத்திருக்கிறார்.

“மூன்று தேசிய விருதுகளை ‘தங்க மீன்கள்’ வென்றிருக்கிறது. இதில் எனக்கு விருது கிடைத்ததை காட்டிலும் முத்துக்குமாருக்கும், குழந்தை நட்சத்திரம் சாதனாவுக்கும் கிடைத்திருப்பதுதான் என்னை கூடுதல் மகிழ்ச்சிக்கு உள்ளாக்குகிறது. என்னுடைய குருநாதர் பாலுமகேந்திராவின் தலைமுறைகள் விருது பெற்ற அதே சமயத்தில் நானும் பெறுகிறேன் என்பது எனக்கு முக்கியமான அங்கீகாரமாக படுகிறது” என்கிறார் இயக்குனர் ராம்.

தமிழிலக்கிய பட்டதாரியான ராம் இயக்கிய முதல் படமான ‘கற்றது தமிழ்’ நாயகனும் ஒரு தமிழ் பட்டதாரி. இயக்குனர் தங்கர்பச்சான் மூலமாக திரையுலகத்துக்கு வந்த இவர், பிரபலமான இந்தி இயக்குனர்களான ராஜ்குமார் சந்தோஷி, கோவிந்த் நிஹலானி (குருதிப்புனல் இவரது கதைதான்) ஆகியோரிடம் பணிபுரிந்தார். ஓர் ஆங்கிலப்படத்தை இயக்கும் முயற்சியில் இருந்த ராம், அதற்காக ஒளிப்பதிவு செய்ய பாலுமகேந்திராவிடம் வந்தார். அந்த படம் வளரவில்லை என்றாலும் பாலுமகேந்திராவிடமே ராம் தங்கிவிட்டார். ராம், பாலுமகேந்திராவோடு இருந்தபோது அவர் ஒரு படமும் இயக்கவில்லை என்றாலும், அவரிடம்தான் நான் சினிமா கற்றேன். “திரைப்பட வெறியனாக இருந்த என்னை மாணவனாக்கி முறைப்படுத்தினார். திரைநுணுக்கங்களை கற்றுக் கொடுத்தார். குறிப்பாக ஒளிப்பதிவின் முக்கியத்துவத்தை அவரிடம் கற்றேன்” என்று சொல்கிறார் ராம். ‘கற்றது தமிழ்’, ‘தங்க மீன்கள்’ என்று இரண்டே இரண்டு படங்களைதான் இதுவரை இயக்கியிருக்கிறார் என்றாலும் இருபது படங்களை முடித்தவருக்கு கிடைக்கக்கூடிய புகழும், அங்கீகாரமும் இப்போதே அவருக்கு கிடைத்திருக்கிறது. தீவிரமான திரைமொழியை கொண்டிருப்பவரான ராம் இப்போது ‘தரமணி’ என்கிற மூன்றாவது திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.

ஒரு நல்ல குரு, மறைந்தாலும் தன்னுடைய சீடர்களால் நிரந்தரமாக வாழ்வார் என்பதற்கு பாலுமகேந்திரா நல்ல உதாரணம். அவர் உருவாக்கியவர்கள் தேசிய அளவில் தமிழகத்தின் பெருமையை பறைசாற்றி வருகிறார்கள். பாலுமகேந்திரா நடத்தியது சினிமா பட்டறை அல்ல. விருது பட்டறை!

(நன்றி : புதிய தலைமுறை)

3 கருத்துகள்:

  1. பாலு மகேந்திரா அவர்களுக்கு நீங்கள் (சற்று தாமதமாக) எழுதிய இரங்கல் பதிவாக இதை எடுத்துக்கொள்ளலாம்...

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா9:25 PM, ஏப்ரல் 29, 2014

    அமீர் மற்றும் பருத்திவீரன் பெற்ற தேசிய விருதுகள் குறித்து யுவா பெரிதாக எழுதாததற்கு ஏதேனும் சிறப்பு காரணம் இருக்கிறதா

    பதிலளிநீக்கு
  3. பாலுமகேந்திராவின் புகழ் அவரது சீடர்களால் என்றும் நிலைத்திருக்கும்.

    பதிலளிநீக்கு