28 ஏப்ரல், 2014

ஊர்கூடி தேர்தல்

ஒவ்வொரு தேர்தலையும் எப்படி நடத்துகிறார்கள் நம் அரசு ஊழியர்கள்?

“ஐந்து ஆண்டுகளுக்கு மட்டும்தான் எங்களுக்கு தேர்தல் வேலையென்று அனைவரும் தவறாகப் புரிந்துக் கொள்கிறார்கள். தமிழகத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு சராசரியாக மூன்று தேர்தல்கள் (நாடாளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி) நடைபெறுகிறது. வருடம் முழுக்கவே ஏதோ ஒரு வகையில் நாங்கள் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுவருகிறோம். இந்த வழிமுறைகளை வாக்காளர்களும் தெரிந்துக்கொண்டால் எங்களது பணி என்னவென்பதை பற்றிய தெளிவு எல்லாருக்கும் கிடைக்கும்” என்று ஆரம்பித்தார் டெபுடி தாசில்தார் ஒருவர்.

“மாநில வருவாய்த்துறை மூலம்தான் தேர்தல் கமிஷனுக்கு ஆட்கள் அளிக்கப் படுகிறார்கள். பாதுகாப்புப் பணிகளுக்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பு ஆணையரும், இதரப் பணிகளுக்கு மாவட்ட ஆட்சியரும் பொறுப்பு. பெரும்பாலும் மண்டல அலுவலகத்தில் உதவி ஆணையாளராக இருப்பவர் மண்டல தேர்தல் அதிகாரியாக இருப்பார்.

அரசு நிரந்தரப் பணியாளர்கள்தான் (பெரும்பாலும் ஆசிரியர்கள்) தேர்தலை நடத்தும் அலுவலர்கள். கிட்டத்தட்ட கட்டாயப்பணிதான். தேர்தல் பணியை செய்ய முடியாது என்று யாரும் முறையான காரணங்களின்றி தவிர்க்க இயலாது. மத்திய அரசுப் பணியாளர்களும் கூட ‘மைக்ரோ அப்சர்வர்ஸ்’ என்று சொல்லக்கூடிய தேர்தல் கண்காணிப்பாளர்களாக பணிபுரிவதுண்டு.

பாதுகாப்புப் பணிகளுக்கு காவல்துறையில் பணியாற்றுபவர்களும், முன்னாள் இராணுவத்தினரும், மத்திய பாதுகாப்புத்துறையில் பணியாற்றும் (ரிசர்வ் போலிஸ் உள்ளிட்ட துறைகளில்) காவலர்களும் பொறுப்பேற்கிறார்கள். அவரவர் வேலைக்கேற்ப அவரவர் சார்ந்த துறை, தேர்தல் பணிக்காக ஒரு கூடுதல் படி வழங்குவதுண்டு.

தேர்தல் செலவுக்காக வருடாவருடம் ஒரு நிதியை வருவாய்த்துறைக்கு மாநில அரசு ஒதுக்குகிறது. ஒவ்வொரு வட்டாட்சியர் அலுவலகத்திலும் ஒரு டெபுடி தாசில்தாருக்கு, தேர்தல் பிரிவு பொறுப்பு கூடுதலாக நிரந்தரமாக இருக்கும். அது போலவே ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியின் பாகத்துக்கும் (நீங்கள் வாக்களித்த பூத் எண் என்று ஒன்று இருக்குமே அதுதான் பாகம்) ‘பூத் லெவல் ஆபிஸர்’ என்று சொல்லக்கூடிய அதிகாரி ஒருவர் நிரந்தரமாக இருப்பார். உங்கள் பூத் எண் சரியாகத் தெரிந்தால் அருகிலிருக்கும் கிராம நிர்வாக அதிகாரி அலுவலகத்திலோ அல்லது மண்டல அலுவலகத்திலோ கேட்டு, உங்களது பூத் லெவல் ஆபிஸர் யாரென்று தெரிந்துக் கொள்ளலாம். அனேகமாக அருகிலிருக்கும் அரசுப்பள்ளி ஏதேனும் ஒன்றில் அவர் ஆசிரியராக பணிபுரிந்துக் கொண்டிருப்பார். இதற்காக வருடத்துக்கு அவருக்கு மூவாயிரம் ரூபாய் அளவில் கூடுதல் சம்பளம் தேர்தல் பணிகளுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. வாக்குச்சீட்டில் பெயர் மாற்றம், புகைப்பட மாற்றம் போன்ற பிரச்சினைகளை அவரிடம் பேசி நீங்கள் சரிசெய்துக் கொள்ள முடியும். வாக்காளர் சேர்ப்பு, நீக்கம், சரிபார்ப்பு எல்லாமே அவருடைய வேலைதான். தேர்தல் நேரத்தில் வீடு வீடாக பூத் ஸ்லிப் வழங்குவது போன்ற பணிகளை இவர்தான் பார்த்துக் கொள்கிறார்.

உங்கள் பூத் எண், அதில் வாக்காளராக உங்கள் சீரியல் எண். இதை மட்டும் தெரிந்துக் கொண்டால் போதும். வேறெதுவுமே தேவையில்லை. ஒவ்வொரு வாக்காளரும் இதை அறிந்து வைத்துக் கொண்டால், உங்களுக்கு பூத் ஸ்லிப் வரவில்லையென்றால் கூட கவலை கொள்ளத் தேவையில்லை. தேர்தல் நேரத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை மாதிரி ஊடகங்களில் வெளிவரும் பிரச்சினைகளே இருக்காது. ஆனால் மக்களுக்கு தேர்தல் நாளன்று மட்டுமே வாக்கு செலுத்துவது குறித்த ஜனநாயக அக்கறை வருவதால்தான் நாம் கேள்விப்படும் பிரச்சினைகள் ஏற்படுகின்றன” என்று விலாவரியாக விளக்கினார்.

அடுத்து பூத் லெவல் அதிகாரியாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் பணியாற்றும் ஆசிரியை ஒருவரிடம் பேசினோம். “கிராமப் புறங்களில் பரவாயில்லை. நகரகப் பகுதிகளில் தேர்தல் பணிகள் மிக சிரமமாக இருக்கிறது. கோடை விடுமுறையை நாங்கள் தேர்தல் பணிகளுக்கு என்றே எடுத்துக் கொள்கிறோம். வீடு வீடாக நேரில் சென்று வாக்காளர் பட்டியலில் அவர்களது பெயர் இருக்கிறதா, சேர்க்க வேண்டுமா என்று உறுதிப்படுத்திக் கொள்கிறோம்.

வெயிலில் அலைந்து திரிந்து வரும் எங்களை வரவேற்காவிட்டாலும் பரவாயில்லை. சில வீடுகளில் ஏதோ சேல்ஸ் பெண்களை நடத்துவது மாதிரி மோசமாக நடத்துவார்கள். வீட்டுக்கு வெளியேவே நிற்கவைத்து கடன்காரரிடம் பேசுவது மாதிரி பேசுவார்கள். சில பேர் கோபமாகவும் பேசுவார்கள். நாங்கள் அரசு அதிகாரிகள் என்கிற எண்ணமே மக்களுக்கு இல்லை. அப்பார்ட்மெண்ட்களில் பெரும்பாலும் வீடுகள் மூடியே கிடக்கும். காலிங்பெல் அடித்தோ, கதவைத் தட்டியோ சோர்ந்துவிடுவோம்.

இதற்காக நான்கைந்து முறை வெயிலில் அலைய வேண்டும். நகர்களில் அக்கம் பக்கம் வீடுகளில் இருப்பவர்கள் பற்றி ஒன்றும் பக்கத்து வீட்டுக்காரர்கள் தெரிந்துவைத்துக் கொள்ளாததால் ஒன்றுக்கு நாலு முறை நாங்கள் சிரமப்பட வேண்டியிருக்கிறது. இம்மாதிரி பிரச்சினைகளால்தான் நூறு சதவிகிதம் பேருக்கும் எங்களால் பூத் ஸ்லிப்பை வினியோகம் செய்ய முடியவில்லை. பக்கத்து வீடுகளில் கொடுத்தால் வாங்கிக்கொள்ள மாட்டார்கள். அப்படி வாங்கிக் கொண்டாலும் உரியவர்களிடம் சேர்க்க மறந்துவிடுவார்கள்.

கிராமப்புறங்களில் பரவாயில்லை. அரசாங்கத்தில் இருந்து வருகிறோம் என்று தெரிந்தாலே நல்ல மரியாதை கொடுக்கிறார்கள். அமரவைத்து சில்லென்று நீர், மோர் என்று விருந்தோம்பலில் ஜமாய்த்து விடுவார்கள். அதுவுமின்றி வீட்டுக்கு ஒருவர் யாராவது நிச்சயம் இருப்பார். வீடு பூட்டி இருப்பதெல்லாம் கிராமப்புறங்களில் அரிதான விஷயம்” என்றுகூறி ‘கிராமங்களுக்கு ஜே’ போட்டார் அவர்.

“வீடு வீடாகப் போகும்போது சில வீடுகளில் மனிதர்களே நாய் மாதிரி குறைப்பதுண்டு” என்று ஜாலியாக ஆரம்பித்த மற்றொரு ஆசிரியர், திருவண்ணாமலை அருகில் ஒரு கிராமத்தில் நிஜமாகவே தன்னை நாய் துரத்தி, துரத்தி கடித்த சோகத்தை தொடர்ந்தார். “அந்த தெருவுக்குள் நுழைந்ததுமே பத்து நாய்கள் என்னை விரோதமாக பார்த்தன. வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டை, கருப்புக் கண்ணாடி என்று இருந்த நான் அவற்றுக்கு வினோதமாக தெரிந்தேன். ‘உர்.. உர்’ரென்று பின்னாடியே உருமிக்கொண்டு வந்தன. இந்த வேலையில் இதெல்லாம் சகஜமென்று வீடு வீடாக போய் வாக்காளர் பட்டியலை சரிபார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு வீட்டுக்குள் நுழைந்தபோது, அங்கு செல்லமாக ’பொமரேனியன்’ நாய் ஒன்றை வளர்த்துக் கொண்டிருந்தார்கள். அது தெருநாய்களை பார்த்து குரைக்க, பதிலுக்கு தெருநாய்கள் மல்லுக்கட்ட, இடையில் நான் சக்கரவியூக அபிமன்யூ மாதிரி மாட்டிக் கொண்டேன். வீட்டுக்குள் இருந்த பொமரேனியனை தாக்க முடியாத ஆத்திரத்தில் இருந்த தெருநாய் ஒன்று, என் மீது பாய்ந்து ‘வள்’ளென்று கத்தி முழங்காலுக்கு கீழே கடித்து வைத்தது. வேட்டியோடு சேர்ந்து சதையும் கொஞ்சம் கிழிந்தது. ஊசி போட்டுக்கொண்டு அடுத்த சில நாட்களுக்கு நொண்டிக்கொண்டே போய்தான் வாக்காளர் பட்டியலை சரிபார்த்தேன்” என்று நொந்துக்கொண்டார்.

தேர்தல் அன்று பணிகளில் ஈடுபடுபவர்கள் சொந்தத் தொகுதி பூத்களில் அமர்த்தப்பட மாட்டார்கள். பெரும்பாலும் அக்கம் பக்கத்து தொகுதிகளில் இருக்கும் வாக்குச்சாவடிகளில்தான் பணி இருக்கும். எனவே சென்னையில் இருப்பவர் திருநெல்வேலிக்கு போயோ, கன்னியாகுமரியில் இருப்பவர் வேலூருக்கு போயோ பணிபுரிய வேண்டியதில்லை. அதிகபட்சம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏதேனும் ஒரு தொகுதியில் வேலை இருக்கும். தேர்தலுக்கு முந்தைய நாளே வாக்குச்சாவடிக்கு சென்று மெஷின்களை பொருத்துவது உள்ளிட்ட அடிப்படையான வேலைகளை செய்து வைத்துவிடுவார்கள். அங்கே இவர்கள் தங்கும் இடம், சாப்பாடு போன்றவற்றை அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் அல்லது மண்டல அதிகாரிகள் கவனித்துக் கொள்வார்கள்.

“இம்மாதிரி செலவுகளுக்காக வருவாய்த்துறை சொற்பமாக ஒரு நிதியை எங்களுக்கு அனுப்புகிறது. அதைவைத்து தேர்தல் பணிகளுக்கு வருபவர்களுக்கு நான்கு வேளை தயிர்சாதமும், ஊறுகாயும்தான் தரமுடியும். எனவே எங்கள் சொந்த செலவிலோ அல்லது ‘எப்படி’யோ நிதி திரட்டி ஒரு பெரும் தொகையை முன்பாகவே ஏற்பாடு செய்துவைத்து விடுவோம். ‘அந்த ஊரு விஏஓ நல்லா கவனிச்சிக்கிட்டாருப்பா’ என்று அவர்கள் போய் மற்றவர்களிடம் பரப்பும் செய்திகளில்தான் எங்கள் கவுரவம் அரசு மட்டத்தில் பெருகும்” என்று தன்னுடைய கவுரவ சீக்ரட்டை போட்டு உடைத்தார் கடலூர் மாவட்ட விஏஓ ஒருவர்.

பின்தங்கிய கிராமப்புற தொகுதிகளுக்கு பணிபுரிய போகும்போது இயற்கை உந்துதலை கழிப்பது மற்றும் குளித்துத் தயாராவது போன்றவை பெண் ஊழியர்களுக்கு கடுமையான சிரமத்தை கொடுக்கிறது.

“பெரும்பாலும் நாங்கள் பணிபுரியும் வாக்குச்சாவடி அமைந்த பள்ளிகளில்தான் தங்குகிறோம். அரசுப்பள்ளிகளின் கழிப்பறை எப்படி இருக்குமென்று நாங்கள் சொல்லித் தெரியவேண்டியதில்லை. குளியல் வசதி இருக்க சாத்தியமேயில்லை. ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகள் சிலவற்றில் மின்விசிறி கூட இருக்காது. கொசுத்தொல்லையில் இரவுகளில் தூங்க முடியாது. அதிகாலையிலேயே எழுந்து வேலையை தொடங்க வேண்டும் என்பதால்தான், தேர்தல் அன்று தூக்கமின்றி எரிச்சலாக காணப்படுகிறோம். திரும்பத் திரும்ப சந்தேகம் கேட்கும் வாக்காளர்களிடம் ‘சுள்’ளென்று விழுகிறோம்.

இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டு சில மண்டல அதிகாரிகளும், வி.ஏ.ஓ.க்களும் அருகிலிருக்கும் வீடுகளில் எங்களை தங்கவைக்க ஏற்பாடு செய்வார்கள். அம்மாதிரி ஏற்பாடுகள் இல்லாவிட்டால் எங்கள் கதி அதோகதிதான்” என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவர் தங்கள் சிரமத்தை விளக்கினார்.

ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் பிரசைடிங் ஆபிஸர் எனப்படும் முதன்மை அதிகாரி ஒருவரும், போலிங் ஆபிஸர்-1, போலிங் ஆபிஸர்-2, போலிங் ஆபிஸர்-3 என்று நான்கு பேர் பணிபுரிவார்கள். இவர்களுக்கு சராசரியாக ரூபாய் 1200, 900, 800, 700 மாதிரி படி வழங்கப்படும். தேர்தலுக்கு முன்பாக தேர்தலை எப்படி நடத்துவது என்று பயிற்சிகளும் வழங்கப்பட்டிருக்கும். அதற்காக பயணப்படியும் தரப்படுவதுண்டு.

“எங்கள் மெட்ரோ வாட்டர் சென்னை மாநகரம் முழுக்க தேர்தல் நடந்த இடங்களில் வாக்காளர்களுக்கும், வாக்குச்சாவடிகளுக்கும் குடிநீர் வழங்க சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தோம். வெயிலில் தாகமாக வருபவர்களுக்கு அது எவ்வளவு முக்கியமான விஷயம்? இதுமாதிரிதான் அரசின் எல்லா துறையுமே ஏதோ ஒருவகையில் தங்களை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்திக் கொள்கிறது” என்றார் மெட்ரோ வாட்டர் ஊழியர் ஒருவர்.

‘கீய்ங்க்க்க்க்....’ என்று பொத்தானை அழுத்தியதுமே பத்து நொடிகளுக்கு தொடர்ச்சியாக எழுப்பப்படும் ஜனநாயக சப்தத்துக்கு பின்னணியில் இதுபோல லட்சக்கணக்கானவர்களின் ஆண்டுக்கணக்கான உழைப்பு இருக்கிறது. குறைகளை குறிப்பிடுவது எளிது. நிறைகளை பாராட்ட நிறைவான மனசு வேண்டும். பாராட்டுவோம் உழைப்புக்கு அஞ்சாத நம் அரசு ஊழியர்களை.

3 கருத்துகள்:

  1. நகரங்களில் இருப்பவர்களுக்கு சிரமங்கள் அதிகம் தான். ஒரு சில கிராமங்களில் மிகுந்த மரியாதையும் வரவேற்பும் இருக்கும்.

    பதிலளிநீக்கு
  2. அனைவரும் தெரிந்துக்கொள்ள வேண்டிய விவரங்கள். பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  3. My hearty thanks to you on behalf of thousands of Government staff those who are working sincerely.

    பதிலளிநீக்கு