30 ஏப்ரல், 2019

ஊருக்குதான் உபதேசமா?

ரத்தன் டாட்டாவை தெரியாதவர்கள், இந்தியாவில் மிகவும் அரிதானவர்கள். டாட்டா என்பது இந்தியாவில் 150 வயது தொழில் சாம்ராஜ்ஜியம். இரும்பில் தொடங்கி உப்பு வரை அவர்கள் ஈடுபடாத தொழிலே இல்லை. அதன் தலைவராக இருந்த ரத்தன் டாட்டா வெறித்தனமான கார் பிரியர். பெராரி, மெர்சிடிஸ் பென்ஸ், லேண்ட்ரோவர், கேடிலாக், கிறிஸ்லெர் என்று அவரது காரேஜில் இல்லாத அயல்நாட்டு கார்வகைகளே இல்லை.

இருப்பினும் –

முக்கியமான நிகழ்வுகளுக்கு அவரது டாட்டா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பான ‘டாட்டா நிக்ஸான்’ காரில்தான் ஜம்மென்று வந்து இறங்குவார். அது மட்டுமின்றி தன்னுடைய குழுமத்தைச் சார்ந்தவர்களும் டாட்டா நிறுவனத்தின் தயாரிப்புகளைதான் பயன்படுத்துகிறார்களா என்று கவனிப்பார்.

அவ்வளவு ஏன்?

ரத்தன் டாட்டா, கார் பிரியர் மட்டுமல்ல. நாய் பிரியரும் கூட. தன்னுடைய செல்லப் பிராணிகள் குதூகலமாக பயணிப்பதற்காகவே ஒரு கார் வைத்திருக்கிறார். நாய்கள் வசதியாக அமருவதற்கு ஏதுவாக அதில் இருக்கைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அதுவும் டாட்டா தயாரிப்பான ‘இண்டிகோ மரீனா’ கார்தான்.

இதற்குப் பெயர் எளிமை அல்ல. Brand Promotion. தன்னுடைய brandஐ தானே நம்பிப் பயன்படுத்தவில்லை எனில், வாடிக்கையாளர்களை எப்படி திருப்திப்படுத்த முடியும் என்கிற நியாயமான கவலையும் அவருக்கு உண்டு.

ரத்தன் டாட்டா ஒரு பக்கம் இருக்கட்டும்.

Brand Loyaltyக்கு வருவோம்.

ஒரு பொருளை வாங்கும் போதோ, ஒரு சேவையை பயன்படுத்தும் போதோ ஒரு குறிப்பிட்ட நிறுவனம் தயாரித்த பொருளைதான் வாங்குவேன் / சேவையைதான் பயன்படுத்துவேன் என்று ஒரு வாடிக்கையாளர் தீர்க்கமான முடிவெடுத்து வைத்திருப்பதைதான் brand loyalty என்று விளம்பரத்துறை மொழியில் குறிப்பிடுகிறார்கள்.

அத்தகைய விசுவாசத்தை வாடிக்கையாளர்களுக்கு உருவாக்குவதற்குதான் லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் விளம்பரம் செய்கிறார்கள். உங்கள் கண்ணில் படும் இடங்களிலெல்லாம் அவர்களது brand nameஐ நினைவுறுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.

சினிமா நட்சத்திரங்கள், கிரிக்கெட் வீரர்கள், ஏனைய துறை பிரபலங்கள் ஏதாவது ஒரு தயாரிப்பையோ, சேவையையோ பயன்படுத்தும்படி பத்திரிகை மற்றும் டிவி விளம்பரங்களில் உங்களை வற்புறுத்திக் கொண்டே வருகிறார்கள்.

ஒரு நிறுவனம் நீண்டகாலமாக தொழில் செய்ய வேண்டுமெனில் தன்னுடைய வாடிக்கையாளர்களிடையே தன்னுடைய தயாரிப்பு குறித்த brand loyalty-ஐ உருவாக்கியே ஆகவேண்டும். நீங்கள் நீண்டகாலமாக ‘குங்குமம்’ வாசிக்கிறீர்கள் எனில், எங்கள் இதழ் மீது உங்களுக்கு இருக்கக்கூடிய brand loyalty-க்கு இச்சந்தர்ப்பத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

அடுத்து, விஷயத்துக்கு வருவோம்.

வெறுமனே ஒரு தயாரிப்பின் அருமை, பெருமைகளை பற்றி எடுத்துச் சொல்லி மட்டுமே ஒரு வாடிக்கையாளரை, விசுவாசியாக எந்த நிறுவனத்தாலும் மாற்றிவிட முடியாது.

இங்குதான் brand ambassador-களின் தேவை ஏற்படுகிறது. இப்போது நீங்கள் ‘லக்ஸ்’ சோப் பயன்படுத்துபவர் என்றால், அந்த சோப்பை விளம்பரங்களில் ஐஸ்வர்யா ராயோ, கரீனா கபூரோ, கத்ரினா கைஃபோ உங்களுக்கு பரிந்துரைத்திருப்பார் இல்லையா? அவர்தான் ‘லக்ஸ்’ சோப்பின் brand ambassador.

வணிகப் பொருட்களை / சேவைகளை விற்பதற்காக நியமிக்கப்படும் brand ambassador-களுக்கு சம்மந்தப்பட்ட நிறுவனங்கள், தங்கள் விளம்பரங்களில் தோன்றுவதற்காக பெரும் பணம் வழங்குவது உண்டு. தங்கள் நிறுவனத்துக்கு இத்தனை ஆண்டுகள் தூதராக இருக்க வேண்டுமென்று முன்கூட்டியே ஒப்பந்தங்களும் போட்டுக் கொள்வது உண்டு.

‘என்னுடைய ஆற்றலுக்கு இந்த பானம்தான் காரணம்’ என்று டிவியில் சிரித்தவாறே சொல்லும் விளையாட்டு வீரர், அந்த பானத்தைதான் அருந்துகிறாரா என்பதெல்லாம் நமக்குத் தெரியாது. ஆனால், அவர் நமக்குப் பிடித்தமானவர் என்றால் அவர் பரிந்துரைக்கும் brand, நம்மை அறியாமலேயே நம்முடைய மனதுக்குள் நிரந்தர இடம் போட்டு அமர்ந்து விடுகிறது.

அதாவது நமக்குப் பிடித்த சினிமா நடிகர், நடிகை மற்றும் விளையாட்டு வீரர்கள் பரிந்துரைக்கும் brand-க்கு நம்மையறியாமலேயே நாம் brand loyalty கொண்டவர்களாக மாறிவிடுகிறோம்.

அப்படியெனில், நமக்கு பரிந்துரைப்பவர்கள் எவ்வளவு பொறுப்பாக இருக்க வேண்டும்? வெறுமனே காசுக்காகவோ, புகழுக்காகவோ ஒரு தப்பான தயாரிப்பையோ / சேவையையோ முன்னிறுத்தி அவர்கள் விளம்பரங்களில் நடிக்கக்கூடாதுதானே?

இது விளம்பரத்துறையின் அடிப்படை அறம் (basic ethics).

வணிகத் தயாரிப்பு / சேவைகளை விட்டுத் தள்ளுங்கள்.

விழிப்புணர்வு விளம்பரங்களுக்கு வருவோம்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஆரம்பக் காலங்களில் விரல் விட்டு எண்ணக்கூடிய விளம்பரங்களில் மட்டுமே இதுவரை தோன்றியிருக்கிறார். ஒருக்கட்டத்தில் விளம்பரங்களில் நடிப்பதற்காக தன்னை யாரும் அணுகவேண்டாம் என்று வெளிப்படையாகவே அறிவித்து விட்டார்.

அப்படிப்பட்டவர், ஒரு விளம்பரத்தில் தோன்றி, அது மக்கள் மத்தியில் பிரபலமாகி, அவரால் பெரும் விழிப்புணர்வு நம் தமிழகத்தில் ஏற்பட்டது.

ஆம்.

போலியோ தடுப்புக்காக சொட்டு மருந்து போடச்சொல்லிய ஒரு விழிப்புணர்வு விளம்பரத்தில், தன்னுடைய தனிப்பட்ட விளம்பரக் கொள்கையை தவிர்த்துவிட்டு தோன்றினார் ரஜினிகாந்த்.

ரஜினி சொன்னதாலேயே, சொட்டு மருந்து குறித்து தயக்கம் கொண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பாமரர்கள், தங்கள் குழந்தைக்கு சொட்டு மருந்து போடுவதற்கு கூட்டம் கூட்டமாக முன்வந்தனர். ஆச்சரியகரமான வகையில் தமிழகமெங்கும் போலியோ குறித்த விழிப்புணர்வு எல்லாத் தரப்புக்கும் வேகமாக பரவியது.

இந்த விழிப்புணர்வு விளம்பரத்துக்காக ரஜினி, வெகுமதி எதுவும் பெறவில்லை. தன்னை ஆளாக்கிய சமூகத்துக்கு நன்றிக்கடனாக செய்துக் கொடுத்தார்.

பொதுவாக லாபம்சாரா சேவைப்பணிகளுக்காக பிரபலங்கள் இதுபோன்ற விளம்பரங்களில் பங்கேற்கும்போது, அதை தங்களுடைய சமூகக்கடமைகளில் ஒன்றாகக் கருதியே செய்துத் தருகிறார்கள்.

ரஜினியைப் போலவே கமல்ஹாசன், வருமானவரித்துறை விளம்பரங்களில் தோன்றி வருமானவரி கட்ட வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்தி இருக்கிறார். வரி கட்டாத பணம், கருப்புப் பணமாகி விடும் என்று அந்த விளம்பரங்களில் எச்சரித்திருக்கிறார்.

மக்களுக்கு விழிப்புணர்வுத் தூதர்களாக பணியாற்றிய இந்த இருவரை மட்டுமே எடுத்துக் கொள்வோம்.

ஒருவேளை ரஜினி தன் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்காமல் இருந்திருந்தால், கமல்ஹாசன் முறையாக வருமானவரி கணக்கு காட்டாமல் இருந்திருந்தால்.. மற்றவர்களுக்கு டிவியில் தோன்றி உபதேசம் செய்யும் தகுதி அவர்களுக்கு இருந்திருக்குமா?

இல்லைதானே?

அதேதான். தாங்கள் பரிந்துரைக்கும் ஒரு விஷயத்துக்கு விசுவாசமாக பிரபலங்கள் நடந்துக் கொள்வதும் brand loyaltyதான். இப்போது ரத்தன்சிங் டாட்டா, தன்னுடைய சொந்தத் தயாரிப்பு கார்களை பயன்படுத்துவதின் நியாயம் புரியவந்திருக்குமே?

சில நேரங்களில் பிரபலங்கள், தங்களுடைய இந்தக் கடமையிலிருந்து விலகி விட நேர்வதுதான் அவலம்.

சிகரெட் குடிக்கும் ஒருவரே, சிகரெட் பிடிக்காதீர் என்று விளம்பரங்களில் தோன்றி உபதேசம் செய்தால் சரியாக இருக்குமா?

இப்போது கிரிக்கெட் வீரர், ராகுல் டிராவிட்டை எடுத்துக் கொள்வோம்.

‘அனைவரும் வாக்களிக்க வேண்டும்’ என்று டிவியிலும், பத்திரிகையிலும், இண்டர்நெட்டிலும் தேர்தல் கமிஷன் சார்பாக விளம்பரத் தூதராக பணியாற்றிக் கொண்டிருப்பவர் இந்தியாவின் கிரிக்கெட் பெரும் சுவர் என்று வர்ணிக்கப்படும் பிரபல கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட்.

ஜனநாயகக் கடமையை பல கோடி பேருக்கு நினைவுறுத்தும் தூதராக அவர் இருப்பதற்கு காரணம் அவரது பிரபலம்தான்.

அப்படிப்பட்டவரே, இந்த பாராளுமன்றத் தேர்தலில் வாக்களிக்கப் போவதில்லை என்பதுதான் வேதனை.

தன்னுடைய வீட்டை மாற்றும்போது பழைய முகவரியில் இருந்த தன் பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து படிவம் கொடுத்து நீக்கியுள்ளார்.

ஆனால் –

புதிய முகவரியில் தன்னுடைய பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் படிவத்தை அவர் பூர்த்தி செய்துத் தராததால், வாக்களியுங்கள் என்று இந்தியாவுக்கே பாடம் நடத்தும் ராகுல்திராவிட்டால் வாக்களிக்க முடியவில்லை.

இதைதான் ஊருக்கு உபதேசம் என்பது.

சொல்லைவிட செயல்தான் முக்கியம் இல்லையா?

(நன்றி : குங்குமம்)

26 ஏப்ரல், 2019

காமிக்ஸாக ‘மெகா’பாரதம்!

“இந்தக்கால குழந்தைகளுக்கு ஸ்கூல்புக் தவிர வேறெந்த வாசிப்புமே வெளியிலே இல்லை. எப்போ பார்த்தாலும் டிவி, கம்ப்யூட்டர், மொபைல்கேம்ஸ்...” என்று அலுத்துக் கொள்ளும் பெற்றோரா நீங்கள்?

உங்கள் குழந்தைகளுக்கு இந்த கோடைவிடுமுறையில் மகாபாரதத்தை அறிமுகப்படுத்துங்கள். அதுவும் அவர்களுக்கு பிடித்த காமிக்ஸ் வடிவத்தில்.

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் தனித்தனி புத்தகங்களாக அமர்சித்திரக்கதைகளாக வாசித்த அதே மகாபாரதம்தான். இப்போது முழுத்தொகுப்பாக மூன்று வால்யூம்களில் 1,312 பக்கங்களில் ஏ4 அளவில் பிரும்மாண்டமாக வெளிவந்திருக்கிறது. வெளியிட்டிருப்பவர்கள் அதே அமர் சித்திரக்கதை நிறுவனத்தினர்தான்.

உலகின் மிகப்பழமையான இதிகாசங்களில் ஒன்று மகாபாரதம். வியாசர் சொல்ல, விநாயகரே எழுதினார் என்பது நம்பிக்கை. அதற்காக இதை மதம் சார்ந்த பிரதியாக மட்டும் அணுக வேண்டியதில்லை. பண்டைய இந்திய பண்பாடு, தத்துவங்கள் குறித்த அறிமுகத்துக்கு இராமாயணமும், மகாபாரதமும் வாசிப்பதை தவிர்த்து வேறெந்த வழியுமில்லை. மேலும் இவற்றில் இடம்பெற்றிருக்கும் கதாபாத்திரங்களின் சித்தரிப்பு, சம்பவங்கள் ஆகியவை வாசிப்பவரின் படைப்புத்திறனை மேலும் கூர் தீட்டவும் செய்யும்.
குழந்தைகளுக்கு ஏன் மகாபாரதம்?

ஏனெனில், குடும்பம் மற்றும் நட்பின் முக்கியத்துவத்தையும், மதிப்பையும் அவர்கள் மகாபாரதம் வாசிப்பதின் மூலமாக உணரமுடியும். மனிதன் என்பவன் ஒரு சமூகவிலங்கு. சமூகத்தின் நெறிமுறைகளோடு அவன் ஒத்து வாழவேண்டியதின் அவசியத்தை மகாபாரதம் எடுத்துக் காட்டும். இந்த வாசிப்பு பிற்காலத்தில் உங்கள் குழந்தைகளின் வாழ்க்கைக்கு வழிகாட்டுவதாக அமையும்.

உங்கள் குழந்தை, ‘மகாபாரதம்’ வாசித்தால் கீழ்க்கண்ட சில தெளிவுகளை பெறலாம்.

* பொறாமைதான் துன்பங்களுக்கு அடிப்படை காரணம். கவுரவர்களின் தாயார் காந்தாரியின் கதை இந்த அடிப்படை உண்மையை அழகாக எடுத்துக்கூறும்.

* அர்த்தமற்ற வெறுப்பு என்பது எதிரிகளைதான் உருவாக்கும். மேலும் ஒரு தனிமனிதனின் மகிழ்ச்சியை மொத்தமாகவே இந்த வெறுப்பு பறித்துவிடும். பாண்டவர்கள் மீது கவுரவர்கள் காட்டிய வெறுப்பின் மூலமாக இதை உணரலாம். இறுதியில் பாண்டவர்களால் குருவம்சமே அழிந்ததுதான் மிச்சம். யார் மீதும் எதற்காகவும் தேவையின்று வெறுப்பு கொள்ளக்கூடாது என்பதே மகாபாரதம் நமக்கு நடத்தும் பாடம்.

* நல்ல நண்பனை தேர்ந்தெடுப்பது வாழ்வில் மிகவும் முக்கியம். கர்ணன் மாவீரனாக இருந்தும், நல்ல மனிதாக இருந்தும் துரியோதனின் நட்பு அவனது வீழ்ச்சிக்கு காரணமானது. நட்பை தேர்ந்தெடுப்பதில் நாம் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும்.

* எல்லாவற்றுக்கும் மேலான சக்தியை (ஆத்திகர்களுக்கு கடவுள், நாத்திகர்களுக்கு இயற்கை) நாம் உணர்ந்து, நம்பிக்கையோடு பின்பற்றினால் வெற்றி நிச்சயம். அர்ஜூனன் தன் வில்லாற்றலைவிட கிருஷ்ணனை நம்பினான். போரில் வென்றான்.
* வாழ்க்கையின் முக்கியமான ஒரு சந்தர்ப்பத்தில் தவறான முடிவை எடுத்துவிட்டால், அதன் பாதிப்பு வாழ்க்கை முழுக்கவே தொடரும். குந்தியின் வாழ்க்கையிலிருந்து இதை நாம் அறியலாம். அவரது மூத்த மகன் கர்ணனின் பிறப்பை மறைத்ததால், அவர் அடைந்த துயரங்கள் எண்ணிலடங்காதவை. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உண்மையை மறைக்கக்கூடாது என்கிற எண்ணத்தை குந்தியின் வாழ்க்கையிலிருந்து நாம் அறியலாம்.

* எந்தவொரு பெண்ணையுமே அவமதிக்கக்கூடாது. அதுவே நம்முடைய வீழ்ச்சிக்கு பிரதானமான காரணமாகிவிடும். பாஞ்சாலியை அரசவையில் அவமதித்த துஷ்யந்தன், நமக்கு இதைதான் உணர்த்துகிறான்.

* எந்தவொரு அபாயகரமான பழக்க வழக்கத்துக்கும் நாம் அடிமையாகிவிடக் கூடாது. சூது விளையாட்டுக்கு அடிமையாகிவிட்ட தர்மரின் கதை இதை நமக்கு அழுத்தமாக சொல்கிறது.

வாட்ஸப் தலைமுறையில் வாழும் இன்றைய குழந்தைகளுக்கு நம்முடைய இதிகாசங்களில் சுவையான சம்பவங்களோடு விவரித்துச் சொல்லப்பட்டிருக்கும் இம்மாதிரியான கருத்துகள் மிகவும் அவசியம். மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு என்னென்ன பண்புகள் இருக்க வேண்டும் என்பதை மகாபாரதம் சொல்கிறது. குழந்தைகளை கவரக்கூடிய வகையிலான எளிமையான கதைத்தொகுப்புகளாக உருவாக்கப்பட்டிருப்பதே மகாபாரதத்தின் பெரும் சிறப்பு.
“குழந்தைகள் மட்டுமல்ல. பெரியவர்களுக்கும் நாங்கள் வெளியிட்டிருக்கும் ‘மகாபாரதம்’ மிகவும் பிடிக்கும். எண்பதுகளில் தனித்தனியாக 42 நூல்களாக வெளியிடப்பட்ட இந்தக் கதைகள், தொண்ணூறுகளில் ஆங்கிலத்தில் தொகுக்கப்பட்டு வெளியாகி பல்லாயிரக்கணக்கில் விற்றன. அப்போதே கூட தமிழில் தனித்தனி புத்தகங்களாக வந்துவிட்டாலும், மொத்தத் தொகுப்பாக வரவில்லையே என்கிற குறை ஏராளமானோருக்கு இருந்தது.

அப்போது குழந்தைகளாக தனிநூல்களாக வாசித்தவர்கள், நீண்டகாலமாக எங்களிடம் ‘மகாபாரதம்’ காமிக்ஸ் முழுத்தொகுப்பு எப்போது வருமென்று கேட்டுக் கொண்டிருந்தார்கள். தாங்கள் வாசித்து சிலிர்த்த மகாபாரதத்தை தங்கள் குழந்தைகளுக்கு வாசிக்கக் கொடுக்க வேண்டும் என்பது அவர்கள் விருப்பம். அவர்களது விருப்பத்தை நிறைவேற்றும் வகையிலேயே இப்போது இந்த பெரும் தொகுப்பை,  முழு வண்ணம், ஹார்ட்பவுண்ட் அட்டையில் சர்வதேசத் தரத்தில் மிகவும் மலிவான விலையில் கொண்டு வந்திருக்கிறோம்.
வாசகர்களிடம் பிரமாதமான வரவேற்பை பெற்றிருக்கிறது. தொடர்ந்து இதேபோல இராமாயணத்தையும் கொண்டுவரவேண்டும் என்று அனைவரும் கேட்கிறார்கள். அதையும் செய்வோம். எங்களால் நிறைய குழந்தைகள் தமிழில் நூல்கள் வாசிக்க முன்வருகிறார்கள் என்கிறபோது, இதையெல்லாம் செய்யவேண்டியது எங்கள் கடமையாகிறது” என்று உற்சாகமாக சொல்கிறார் அமர் சித்திரக் கதையின் மண்டல விற்பனை மேலாளர் நாகராஜ்.

மகாபாரதம், நம் முன்னோர் வழிவழியாக கடத்தி நமக்குக் கொண்டுச்சேர்ந்த அறிவுச்செல்வம். அதை அடுத்த தலைமுறைக்கும் அறிமுகப்படுத்துவோமே?

(நன்றி : தினகரன் வசந்தம்)