26 ஏப்ரல், 2019

காமிக்ஸாக ‘மெகா’பாரதம்!

“இந்தக்கால குழந்தைகளுக்கு ஸ்கூல்புக் தவிர வேறெந்த வாசிப்புமே வெளியிலே இல்லை. எப்போ பார்த்தாலும் டிவி, கம்ப்யூட்டர், மொபைல்கேம்ஸ்...” என்று அலுத்துக் கொள்ளும் பெற்றோரா நீங்கள்?

உங்கள் குழந்தைகளுக்கு இந்த கோடைவிடுமுறையில் மகாபாரதத்தை அறிமுகப்படுத்துங்கள். அதுவும் அவர்களுக்கு பிடித்த காமிக்ஸ் வடிவத்தில்.

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் தனித்தனி புத்தகங்களாக அமர்சித்திரக்கதைகளாக வாசித்த அதே மகாபாரதம்தான். இப்போது முழுத்தொகுப்பாக மூன்று வால்யூம்களில் 1,312 பக்கங்களில் ஏ4 அளவில் பிரும்மாண்டமாக வெளிவந்திருக்கிறது. வெளியிட்டிருப்பவர்கள் அதே அமர் சித்திரக்கதை நிறுவனத்தினர்தான்.

உலகின் மிகப்பழமையான இதிகாசங்களில் ஒன்று மகாபாரதம். வியாசர் சொல்ல, விநாயகரே எழுதினார் என்பது நம்பிக்கை. அதற்காக இதை மதம் சார்ந்த பிரதியாக மட்டும் அணுக வேண்டியதில்லை. பண்டைய இந்திய பண்பாடு, தத்துவங்கள் குறித்த அறிமுகத்துக்கு இராமாயணமும், மகாபாரதமும் வாசிப்பதை தவிர்த்து வேறெந்த வழியுமில்லை. மேலும் இவற்றில் இடம்பெற்றிருக்கும் கதாபாத்திரங்களின் சித்தரிப்பு, சம்பவங்கள் ஆகியவை வாசிப்பவரின் படைப்புத்திறனை மேலும் கூர் தீட்டவும் செய்யும்.
குழந்தைகளுக்கு ஏன் மகாபாரதம்?

ஏனெனில், குடும்பம் மற்றும் நட்பின் முக்கியத்துவத்தையும், மதிப்பையும் அவர்கள் மகாபாரதம் வாசிப்பதின் மூலமாக உணரமுடியும். மனிதன் என்பவன் ஒரு சமூகவிலங்கு. சமூகத்தின் நெறிமுறைகளோடு அவன் ஒத்து வாழவேண்டியதின் அவசியத்தை மகாபாரதம் எடுத்துக் காட்டும். இந்த வாசிப்பு பிற்காலத்தில் உங்கள் குழந்தைகளின் வாழ்க்கைக்கு வழிகாட்டுவதாக அமையும்.

உங்கள் குழந்தை, ‘மகாபாரதம்’ வாசித்தால் கீழ்க்கண்ட சில தெளிவுகளை பெறலாம்.

* பொறாமைதான் துன்பங்களுக்கு அடிப்படை காரணம். கவுரவர்களின் தாயார் காந்தாரியின் கதை இந்த அடிப்படை உண்மையை அழகாக எடுத்துக்கூறும்.

* அர்த்தமற்ற வெறுப்பு என்பது எதிரிகளைதான் உருவாக்கும். மேலும் ஒரு தனிமனிதனின் மகிழ்ச்சியை மொத்தமாகவே இந்த வெறுப்பு பறித்துவிடும். பாண்டவர்கள் மீது கவுரவர்கள் காட்டிய வெறுப்பின் மூலமாக இதை உணரலாம். இறுதியில் பாண்டவர்களால் குருவம்சமே அழிந்ததுதான் மிச்சம். யார் மீதும் எதற்காகவும் தேவையின்று வெறுப்பு கொள்ளக்கூடாது என்பதே மகாபாரதம் நமக்கு நடத்தும் பாடம்.

* நல்ல நண்பனை தேர்ந்தெடுப்பது வாழ்வில் மிகவும் முக்கியம். கர்ணன் மாவீரனாக இருந்தும், நல்ல மனிதாக இருந்தும் துரியோதனின் நட்பு அவனது வீழ்ச்சிக்கு காரணமானது. நட்பை தேர்ந்தெடுப்பதில் நாம் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும்.

* எல்லாவற்றுக்கும் மேலான சக்தியை (ஆத்திகர்களுக்கு கடவுள், நாத்திகர்களுக்கு இயற்கை) நாம் உணர்ந்து, நம்பிக்கையோடு பின்பற்றினால் வெற்றி நிச்சயம். அர்ஜூனன் தன் வில்லாற்றலைவிட கிருஷ்ணனை நம்பினான். போரில் வென்றான்.
* வாழ்க்கையின் முக்கியமான ஒரு சந்தர்ப்பத்தில் தவறான முடிவை எடுத்துவிட்டால், அதன் பாதிப்பு வாழ்க்கை முழுக்கவே தொடரும். குந்தியின் வாழ்க்கையிலிருந்து இதை நாம் அறியலாம். அவரது மூத்த மகன் கர்ணனின் பிறப்பை மறைத்ததால், அவர் அடைந்த துயரங்கள் எண்ணிலடங்காதவை. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உண்மையை மறைக்கக்கூடாது என்கிற எண்ணத்தை குந்தியின் வாழ்க்கையிலிருந்து நாம் அறியலாம்.

* எந்தவொரு பெண்ணையுமே அவமதிக்கக்கூடாது. அதுவே நம்முடைய வீழ்ச்சிக்கு பிரதானமான காரணமாகிவிடும். பாஞ்சாலியை அரசவையில் அவமதித்த துஷ்யந்தன், நமக்கு இதைதான் உணர்த்துகிறான்.

* எந்தவொரு அபாயகரமான பழக்க வழக்கத்துக்கும் நாம் அடிமையாகிவிடக் கூடாது. சூது விளையாட்டுக்கு அடிமையாகிவிட்ட தர்மரின் கதை இதை நமக்கு அழுத்தமாக சொல்கிறது.

வாட்ஸப் தலைமுறையில் வாழும் இன்றைய குழந்தைகளுக்கு நம்முடைய இதிகாசங்களில் சுவையான சம்பவங்களோடு விவரித்துச் சொல்லப்பட்டிருக்கும் இம்மாதிரியான கருத்துகள் மிகவும் அவசியம். மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு என்னென்ன பண்புகள் இருக்க வேண்டும் என்பதை மகாபாரதம் சொல்கிறது. குழந்தைகளை கவரக்கூடிய வகையிலான எளிமையான கதைத்தொகுப்புகளாக உருவாக்கப்பட்டிருப்பதே மகாபாரதத்தின் பெரும் சிறப்பு.
“குழந்தைகள் மட்டுமல்ல. பெரியவர்களுக்கும் நாங்கள் வெளியிட்டிருக்கும் ‘மகாபாரதம்’ மிகவும் பிடிக்கும். எண்பதுகளில் தனித்தனியாக 42 நூல்களாக வெளியிடப்பட்ட இந்தக் கதைகள், தொண்ணூறுகளில் ஆங்கிலத்தில் தொகுக்கப்பட்டு வெளியாகி பல்லாயிரக்கணக்கில் விற்றன. அப்போதே கூட தமிழில் தனித்தனி புத்தகங்களாக வந்துவிட்டாலும், மொத்தத் தொகுப்பாக வரவில்லையே என்கிற குறை ஏராளமானோருக்கு இருந்தது.

அப்போது குழந்தைகளாக தனிநூல்களாக வாசித்தவர்கள், நீண்டகாலமாக எங்களிடம் ‘மகாபாரதம்’ காமிக்ஸ் முழுத்தொகுப்பு எப்போது வருமென்று கேட்டுக் கொண்டிருந்தார்கள். தாங்கள் வாசித்து சிலிர்த்த மகாபாரதத்தை தங்கள் குழந்தைகளுக்கு வாசிக்கக் கொடுக்க வேண்டும் என்பது அவர்கள் விருப்பம். அவர்களது விருப்பத்தை நிறைவேற்றும் வகையிலேயே இப்போது இந்த பெரும் தொகுப்பை,  முழு வண்ணம், ஹார்ட்பவுண்ட் அட்டையில் சர்வதேசத் தரத்தில் மிகவும் மலிவான விலையில் கொண்டு வந்திருக்கிறோம்.
வாசகர்களிடம் பிரமாதமான வரவேற்பை பெற்றிருக்கிறது. தொடர்ந்து இதேபோல இராமாயணத்தையும் கொண்டுவரவேண்டும் என்று அனைவரும் கேட்கிறார்கள். அதையும் செய்வோம். எங்களால் நிறைய குழந்தைகள் தமிழில் நூல்கள் வாசிக்க முன்வருகிறார்கள் என்கிறபோது, இதையெல்லாம் செய்யவேண்டியது எங்கள் கடமையாகிறது” என்று உற்சாகமாக சொல்கிறார் அமர் சித்திரக் கதையின் மண்டல விற்பனை மேலாளர் நாகராஜ்.

மகாபாரதம், நம் முன்னோர் வழிவழியாக கடத்தி நமக்குக் கொண்டுச்சேர்ந்த அறிவுச்செல்வம். அதை அடுத்த தலைமுறைக்கும் அறிமுகப்படுத்துவோமே?

(நன்றி : தினகரன் வசந்தம்)

5 கருத்துகள்:

  1. சிறந்த ஆய்வுக் கண்ணோட்டம்

    பதிலளிநீக்கு
  2. கட்டுரை அருமை. மஹாபாரதம் என்ற இதிகாசத்தை , நம் குழந்தைகள், தங்கள்,இளம் வயதில் , படிப்பது, எண்ணற்ற , மன வளம், போன்ற, அறம் சார்ந்த பண்புகளை , இயல்பாக வளர்த்திடும்... இவ்வளவு, விரிவாக, எழுதிய, நீங்கள், அந்த நூலை வாங்கிட வசதியாக, லின்க்கும் கூடவே,கொடுத்திலிருந்தால்,இன்னும் உதவியாக இருந்திருக்கும்.

    பதிலளிநீக்கு
  3. ஆஹா! குழந்தைகள் புத்தகம் வாசிக்கும் அழகே அழகு! உன்னோட குழந்தைகள்னு நினைக்கிறேன். வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  4. நான் ஆன்லைனில் இந்த புத்தகத்தை எங்கு வாங்கலாம். நான் அம்ரிதாதிகதாத்த தளத்தில் தேடினேன் ஆனால் அதை கண்டுபிடிக்க முடியவில்லை.

    பதிலளிநீக்கு