கட்டுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கட்டுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

7 ஜூலை, 2021

டக் அவுட்!



 ‘டொம்’.

முதல் கல் கூரையின் மீது விழுந்தவுடனேயே பெரிய சப்தம் ஏற்பட்டது.

தோனியின் அப்பா பால்கனிக்கு வந்தார்.

கேட்டின் முன்பாக இருநூறுக்கும் மேற்பட்டோர் குழுமியிருந்தார்கள்.

“தோனி டவுன் டவுன்”

அதுநாள் வரையில் தோனி குடும்பம் கேட்டிராத கோஷம். எப்போதும் வாழ்க போடும் கூட்டம் இன்று அப்படியே எதிர்மறையாக நடந்துக் கொண்டது.

அடுத்த கல் தோனியின் அப்பா மீதே விழுந்தது.

இறுகக் கதவை மூடிக்கொண்டார்கள் குடும்பத்தினர்.

ஜன்னல் கண்ணாடிகள் கல்வீச்சில் நொறுங்கின.

‘தோனி டவுன் டவுன்’ கோஷம் உக்கிரமானது.

தோனியை மட்டுமின்றி அவரது பரம்பரையையே ஆபாசமாகத் திட்டிக் கொண்டிருந்தது அந்த வன்முறைக் கூட்டம்.

யாரோ கேட்டை இடித்துத் திறக்க முற்பட்டனர்.

செக்யூரிட்டியை தாக்கிக் கோண்டிருந்தது வெறிபிடித்த இன்னொரு கூட்டம்.

‘டவுன் டவுன்’ சொல்லி போர் அடித்து விட்டதாலோ என்னவோ “dhoni die die” என்று விபரீதமாக கோஷம் எழுப்பத் தொடங்கினர்.

தோனியின் வீடு கிரிக்கெட் வெறி பிடித்த ரசிகர்களால் தாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் சேதி, தோனியின் அண்ணன் நரேந்திரசிங் தோனிக்கு தெரிய வந்தது. அவர் அப்போது பாஜக பிரமுகர் (பின்னாளில் சமாஜ்வாதி கட்சிக்கு வந்துவிட்டார்).

அவர் உடனடியாக தன் தொடர்புகளோடு பேச, தோனியின் வீட்டை பாதுகாக்க துணை ராணுவப்படை அனுப்பப் பட்டது.

அதற்குள்ளாக ராஞ்சி நகரின் கிழக்குப் பகுதியில் தோனியின் வீடு அமைந்திருந்த தெரு போர்க்களமாகி இருந்தது.

தோனியின் கொடும்பாவி எரிக்கப்பட்டு, நெருப்பும் புகையுமாக அல்லோலகல்லோலப்பட்டது.

அக்கம் பக்கம் வீடுகள் அச்சமடைந்தன.

அதுநாள் வரை  அதிரடி மன்னன் தோனியின் பக்கத்து வீடு எதிர்த்த வீடு மூணாவது வீடு முக்குவீடு என்றெல்லாம் பெருமை பேசி வந்தவர்கள், முதன்முறையாக தோனி தங்கள் தெருவில் குடியிருப்பது குறித்து அவமானம் அடைந்தார்கள்.

இப்படியான சம்பவங்கள் நடந்தன என்று சொன்னால்  இன்று குழந்தைகூட நம்பாது.

ஒரு சினிமா சூப்பர்ஸ்டாரின் இமேஜுக்கும் மேலான மிகப்பெரிய இடத்தை தோனி இன்று எட்டியிருக்கிறார். யாராவது அவரை நியாயமாக விமர்சிக்க வாயைத் திறந்தாலே கூட வாய் மீதே நாலு போடு போடுவார்கள் தோனி ரசிகர்கள்.

ஆனால் –

மேற்கண்ட தாக்குதல் சம்பவம் நிகழ்ந்தது நூறு சதவிகித நிஜம்.

‘dhoni die die’ என்ற கோஷம் போடப்பட்டதும் துரதிருஷ்டவசமாக நிஜம்தான்.

2007ஆம் ஆண்டு மார்ச் 18ஆம் தேதி நடந்த சம்பவம் இது.

அவ்வளவு மோசமாக வெறுக்கப்படக்கூடிய அளவுக்கு தோனி என்னதான் செய்துவிட்டார்?

முந்தைய நாள்தான் 2007 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் முதல் போட்டி.

கத்துக்குட்டி அணியான வங்கதேசத்தை, ராகுல் திராவிட் தலைமையில் சச்சின், கங்குலி, சேவாக், யுவராஜ்சிங், தோனி மாதிரி சூப்பர் பேட்ஸ்மேன்கள் அடங்கிய இந்திய அணி தூக்கி சாப்பிட்டுவிடும் என்றுதான் கிரிக்கெட் ஜோசியர்கள் நம்பினார்கள்.

தரகர்கள்  கண்ணை மூடிக்கொண்டு இந்தியா மீது பந்தயம் கட்டினார்கள்.

எனினும் நடந்தது எவருமே எதிர்பாராத விபத்து.

ஓப்பனிங் பேட்ஸ்மேனான கங்கூலி மட்டுமே 66 ரன்கள் எடுத்திருந்தார். இந்தியப் பெருஞ்சுவர் என்று வருணிக்கப்பட்ட கேப்டன் ராகுல் திராவிட்டோ வெறும் 14 ரன்களோடு திருப்திப்பட்டுக் கொண்டார். சேவக், சச்சின் என்று சர்வதேச அளவில் ஜாம்பவான்களாக திகழ்ந்த பேட்ஸ்மேன்கள் ஒற்றை எண்ணிக்கையில் அவுட் ஆனார்கள்.

கங்கூலியோடு கைகோர்த்து கவுரவமான ஸ்கோரை எட்ட யுவராஜ்சிங் மட்டுமே முயற்சித்து அரை செஞ்சுரியை நெருங்கும் வேளையில் அவுட்.

அடுத்த ஓவரிலேயே கங்கூலியும் அவுட்.

158 ரன்களுக்கு 6 விக்கெட்.

நீளமான முடிவளர்த்து வித்தியாசமான ஹேர்ஸ்டைலோடு தோனி நுழைந்தார்.

இந்தியாவின் பல கோடி ரசிகர்களின் ஒரே நம்பிக்கையாக அப்போது தோனி மட்டுமே இருந்தார்.

 “கடவுளே! போயும் போயும் பங்களாதேஷ் கிட்டே தோத்துடக்கூடாது”

“அதெப்படி தோப்போம்? தோனி இருக்கான். ஹெலிகாஃப்டர் ஷாட்டுகளாக அடிச்சி சிக்ஸருக்கு விரட்டுவான் பாரு”

ம்ஹூம். மூன்றே பந்துகளில் தோனியை விரட்டி விட்டார்கள் வங்கதேச பந்து வீச்சாளர்கள்.

டக் அவுட்.

தோனி ஆரம்பித்து வைத்த ராசியோ என்னவோ?

அடுத்தடுத்து ஹர்பஜன் சிங், அஜித் அகர்கர் என்று இந்தியா ஹாட்ரிக் முட்டை போட்டது.

இந்திய பேட்டிங் வரிசையின் வால் வீரர்களான ஜாகீர்கானும், முனாஃப் பட்டேலும் தட்டுத் தடுமாறி ஒன்று இரண்டாக சேர்த்து எப்படியோ 191 ரன்களில் ஆல் அவுட் ஆனது இந்தியா.

பேட்டிங்கில் சொதப்பி விட்டாலும், பவுலிங்கில் வங்கதேசத்தை சுருட்டி விடுவோம் என்று இந்திய அணி நம்பியதோ இல்லையோ, இந்திய ரசிகர்கள் கண்மூடித்தனமாக நம்பினார்கள்.

அந்தோ பரிதாபம்.

வங்கதேச அணியின் மூன்று வீரர்கள் தலா அரை செஞ்சுரி விளாச ஜாம்பவான் அணியான இந்தியா, கத்துக்குட்டி வங்கதேசத்திடம் உலகக் கோப்பையின் அறிமுகப் போட்டியிலேயே பல்பு வாங்கியது.

அந்தக் கோபம்தான் தோனியுடைய ராஞ்சி இல்லத்தின் முன்பாக வன்முறையாக வெளிப்பட்டது.

தோனியின் வீட்டின் முன்பாக மட்டுமின்றி, இந்தியா முழுக்க பெருநகரங்களில் தெருவுக்கு வந்த ரசிகர்கள் அணியின் பேட்ஸ்மேன்கள், பவுலர்களில் தொடங்கி பயிற்சியாளர் வரை குறிவைத்து ஆபாசமாக வசை பாடினார்கள். வன்முறை வெறியாட்டங்களில் இறங்கினார்கள்.

அடுத்து பெர்முடா அணியிடம் இமாலய வெற்றியை இந்தியா பதிவு செய்தும்கூட, இலங்கை அணியிடம் படுமோசமாக தோற்றது. அந்தப் போட்டியிலும் தோனி ‘டக் அவுட்’.

சூப்பர் எய்ட் சுற்றுக்குள் நுழைய முடியாமல், அதோடு உலகக் கோப்பைக் கனவை தகர்த்துக் கொண்டு பரிதாபமாக தாய்நாடு திரும்பியது இந்திய கிரிக்கெட் அணி.

டெல்லி விமான நிலையத்தில் வீரர்கள் இறங்கியபோது, எதிர்ப்பட்ட அத்தனை பேருமே இவர்களை விரோதமாகப் பார்த்தார்கள்.

“ஒரு போலீஸ் வேனில் நாங்கள் அவசர அவசரமாக ஏற்றப்பட்டோம். மாலை வேளை. எங்களை ஏற்றிய வேன் 70 கி.மீ வேகத்தில் பறந்தது. வீரேந்திர சேவக்குக்கு பக்கத்தில் அமர்ந்திருந்த எனக்கு ஒன்றுமே புரியவில்லை.

மீடியா வாகனங்கள் கேமிராக்களோடு எங்களை அசுரவேகத்தில் பின் தொடர்ந்தன. நாங்கள் ஏதோ பெரிய குற்றத்தை செய்த தீவிரவாதிகள், கொலைக்காரர்கள் என்பதைப் போல அச்சூழல் அமைந்திருந்தது. ஒரு போலீஸ் நிலையத்துக்கு எங்களை அழைத்துச் சென்று பதினைந்து நிமிடங்களுக்கும் மேலாக எங்களை சுற்றி பாதுகாப்பாக போலீஸ் படையினர் நின்றிருந்தார்கள்.

வாழ்க்கையில் மிகவும் அவமானகரமாக அந்தத் தருணத்தை கருதினேன். கண் மண் தெரியாமல் எனக்கு ஏற்பட்ட கோபத்தையெல்லாம் ஒன்று திரட்டினேன். அந்தக் கோபத்தை இனி கிரவுண்டில் காட்ட வேண்டும் என்று முடிவெடுத்தேன். நல்ல கிரிக்கெட் வீரனாக மட்டுமின்றி நல்ல மனிதனாகவும் என்னை வெளிப்படுத்திக் கொள்ள அன்றைய கோபம்தான் உதவியது” என்று அந்தக் கொடுமையான நாளை பின்னர் ஒரு முறை நினைவு கூர்ந்தார் ‘தல’ மகேந்திர சிங் தோனி.

பின்னர் நடந்ததெல்லாம் வரலாறு!

Happy Birthday Thala!

19 ஆகஸ்ட், 2020

டி20 யுகத்தின் காட்ஃபாதர்

(ஓவியம் : அரஸ்)

கிரிக்கெட்டைப் பொறுத்தவரை இந்திய அணி என்பது பழைய ஸ்கூட்டர் மாதிரி.

லேட் பிக்கப்.

1932ல் டெஸ்ட் கிரிக்கெட் ஆட ஆரம்பித்தது இந்திய அணி.

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய ஜாம்பவான் அணிகளோடு தொடர்ந்து ஆடியது.

தன்னுடைய முதல் டெஸ்ட் வெற்றியை இங்கிலாந்துக்கு எதிராக அது பெற்றது (நம்ம சென்னையில்தான்) 1952ல்.

அதாவது முதல் வெற்றியை டெஸ்ட் கிரிக்கெட்டில் பதிவு செய்துக் கொள்வதற்கே இந்திய அணிக்கு இருபது ஆண்டுகள் தேவைப்பட்டது.

போலவேதான் –

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலும்.

1974ல் முதன்முறையாக இங்கிலாந்துடன் மோதியது.

தன்னுடைய முதல் மூன்று ஒருநாள் போட்டிகளிலும் இங்கிலாந்தை எதிர்கொண்டு, மூன்று போட்டிகளிலுமே படுமோசமான தோல்வியை பெற்றது.

குறிப்பாக சொல்ல வேண்டுமானால், மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து 202 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வெற்றி கொண்டிருந்தது.

இந்தியா தன்னுடைய நான்காவது போட்டியில்தான் கிரிக்கெட்டுக்கு அவ்வளவாக அறிமுகமாகாத மொக்கை அணியான கிழக்கு ஆப்பிரிக்காவிடம் தன் முதல் வெற்றியை பதிவு செய்தது.

கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி 1983ல் உலகக்கோப்பை விளையாடச் செல்வதற்கு முன்பாக 9 ஆண்டுகளில் மொத்தம் 40 ஒருநாள் போட்டிகள் விளையாடி இருந்தன.

அவற்றில் மொத்தம் 11 போட்டிகள் மட்டுமே வெற்றி. 29 போட்டிகளில் தோல்வி.

வெற்றி பெற்ற பல போட்டிகளிலும் கூட மயிரிழையில்தான் போராடி வென்றது.

அப்போதைய கத்துக்குட்டி அணியான இலங்கையுடன்தான் சொல்லிக் கொள்ளும் வகையில் மூன்று போட்டிகளில் பெரும் வெற்றி பெற்றிருந்தது.

எனவேதான் –

1983ஆம் ஆண்டு உலகக்கோப்பை வெற்றிக்கு முன்பாக வரை, ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கு ரசிகர்களிடம் பெரிய ஆதரவு இல்லை.

லிமிட்டெட் ஓவர் ஒருநாள் கிரிக்கெட்டில் விக்கெட்டை தக்கவைப்பது முக்கியமல்ல.

களத்தில் இருக்கும் நேரத்தில் குறைந்த பந்துகளில் அதிக ரன்களை சேகரிப்பதே வெற்றிக்கான வாய்ப்பு.

அதே நேரம் –

நமது அணியால் எவ்வளவு ரன்களை அதிகபட்சம் சேகரிக்க முடியுமோ, அந்த ரன்களைவிட30, 40 ரன்கள் குறைவாக எதிரணியை வீழ்த்தக்கூடிய பவுலிங் வியூகமும் இருக்க வேண்டும்.

இந்த இரு விஷயங்களையும் மனதில் கொண்டு கபில்தேவ் தீட்டிய திட்டங்களின் பலன்தான் எவருமே எதிர்பாராத வகையில் இந்தியாவுக்கு கிடைத்த உலகக்கோப்பை.

1983 வெற்றிக்குப் பிறகு இந்தியாவில் மட்டுமல்ல, உலகமெங்கும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கு மவுசு கூடியது.

மக்கள் தொகை அடிப்படையில் உலகின் இரண்டாம் பெரிய நாடான இந்தியாவில் கிரிக்கெட் காய்ச்சல், கொரோனா கணக்காக நான்குகால் பாய்ச்சலில் பரவியது.

அப்போது இந்தியாவில் டிவிக்கும் மவுசு கூடிக் கொண்டிருந்தது.

டிவியில் கிரிக்கெட் பார்க்கவும், ரேடியோவில் ஸ்கோர் கேட்கவும் பெரும் கூட்டம் காத்திருந்தது.

விளம்பரதாரர்கள் இச்சூழலைப் பயன்படுத்தி தங்கள் தயாரிப்புகளை கிரிக்கெட் நட்சத்திரங்களை வைத்து விளம்பரப்படுத்தி வணிகத்தை பெருக்கிக் கொண்டார்கள்.

அவ்வகையில் இந்தியாவில் கிரிக்கெட்டுடன், நாட்டின் பொருளாதாரமே இணைக்கப்பட்டு விட்டது.

கிரிக்கெட் என்பது இங்கே வெறும் விளையாட்டல்ல.

மதம்.

83ல் கபில்தேவ் ஒருநாள் கிரிக்கெட்டில் செய்த அந்த அரிய சாதனையை, 24 ஆண்டுகள் கழித்து 2007ல் 20 ஓவர் டி20 கிரிக்கெட்டில் செய்தவர், ‘தல’ தோனி என்பதுதான் அவரது முக்கியத்துவமே.

டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் வெற்றிகரமான அணியாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள பல்லாண்டுகள் இந்தியாவுக்கு தேவைப்பட்டது.

ஆனால் –

டி20ஐப் பொறுத்தவரை எடுத்தவுடனேயே உலக சாம்பியன்தான்.

இத்தனைக்கும் –

அப்போதைய இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்கள் அணியில் இடம்பெறவில்லை.

பேட்ஸ்மேன்கள், பவுலர்கள் பெரும்பாலானவர்கள் சர்வதேச கிரிக்கெட்டுக்கு அவ்வளவாக அறிமுகமில்லாதவர்கள்.

அதற்கு ஆறு மாதங்களுக்கு முன்புதான் ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பைத் தொடரில் மிகக்கேவலமான வகையில் வெளியேறியிருந்தது இந்திய அணி.

எல்லாவற்றையும் விட கேப்டன் தோனிக்கும் பெரிய அனுபவமில்லை.

பேட்ஸ்மேனாக, விக்கெட்கீப்பராக அவர் சற்று பெயர் பெற்றிருந்தாலும் கேப்டனாக என்னத்தைக் கிழிப்பார் என்கிற அலட்சியமே பெரும்பாலான ரசிகர்களுக்கு இருந்தது.

பொய் சொல்லி ஆபிசுக்கு லீவு போட்டுவிட்டு, காய்ச்சல் என்று ஸ்கூலுக்கு கட் அடித்துவிட்டு டிவி பெட்டி முன்பாக தவம் கிடந்த தலைமுறைக்கு அப்போது சற்றே கிரிக்கெட் சலித்து விட்டிருந்தது.

அடுத்து வந்த தலைமுறையோ போனில் அவ்வப்போது கிரிக்கெட் ஸ்கோர் பார்த்தால் போதும் என்கிற அளவுக்கு கிரிக்கெட் மேல் பெரிய பிடிப்பு கொள்ளாமல் இருந்தது.

எனவேதான் 2007ல் தோனி தலைமையிலான அணி பெற்ற டி20 உலகக்கோப்பை வெற்றியை, இன்னுமொரு வெற்றிக் கோப்பையாக மட்டுமே நம்மால் கருத முடியவில்லை.

அதுவொரு game changer.

மீண்டும் கிரிக்கெட்டை மதமாக இங்கே ஸ்தாபித்த பெருமை தல தோனியையும் அவரது தலைமையில் ஆடிய துடிப்பான இளம் வீரர்களையுமே சாரும்.

கிரிக்கெட் என்பது மெட்ரோ நகரங்களுக்கு உரியது என்கிற மாயையை முற்றிலுமாக உடைத்தெறிந்தது டி20.

கிரிக்கெட்டுக்கு எல்லையே இல்லை எனுமளவுக்கு குக்கிராமங்களும் கூட ஆர்வத்தோடு மீண்டும் டிவி பெட்டி முன்பாக தவம் கிடக்கக் காரணமானது டி20.

2007 டி20 உலகக் கோப்பையில் முக்கியமான போட்டி ஒன்றில் ஸ்ரீசாந்த் ஷார்ட் ஃபைன் லெக் திசையில் பிடித்த கேட்ச், கவுதம் காம்பீரின் பெற்ற அபாரமான மேன் ஆஃப் த மேட்ச், யுவராஜ்சிங்கின் ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர், பாகிஸ்தானுக்கு எதிரான திரில்லிங்கான பவுல் அவுட், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தினேஷ் கார்த்திக்கின் சூப்பர் கேட்ச், ஆர்.பி.சிங் மற்றும் இர்ஃபான் பதானின் துல்லியமான பவுலிங்….

என்று நாம் என்றென்றைக்கும் சிலிர்த்துக்கொள்ள கொள்ள ஏராளமான பசுமையான நினைவுகள் உண்டு.

இதையெல்லாம் தாண்டிய விஷயம் எம்.எஸ்.தோனி.

கிரிக்கெட் அணியின் தலைமைப் பண்புகளுக்கு அவர் வகுத்த புதிய இலக்கணங்கள், அவ்விளையாட்டின் எதிர்காலத்தையே தாக்கப்படுத்தி இருக்கின்றன.

சந்தேகமே இல்லை.

டி20 யுகத்தின் காட்ஃபாதர் என்று அவரை நாம் உறுதியாகவே அழைக்கலாம்.

(‘குங்குமம்’ இதழில் வெளிவந்துக் கொண்டிருக்கும் ‘தல’ தொடரின் ஓர் அத்தியாயம்)


21 ஜூலை, 2020

கலையுலகச் சோழன்!



அப்பா, எம்.ஜி.ஆர் ரசிகர். எனவே, வாரிசு ரசனையாக எனக்கும் மக்கள் திலகத்தைதான் பிடிக்கும்.

அம்மாவோ நேரெதிர். சிவாஜி படங்கள்தான் பார்ப்பார். எம்.ஜி.ஆர் படத்தையெல்லாம் ‘வெறும் சண்டை’ என்று ஒதுக்கிவிடுவார்.

ஆனால் -

கடைசிக் காலத்தில் அப்பாவும் சிவாஜியை ரசிக்க ஆரம்பித்தார். ‘திருவிளையாடல்’, ‘சரஸ்வதி சபதம்’ மற்றும் ‘பா’ வரிசை படங்களை திரும்பத் திரும்ப விசிடியில் பார்த்துக் கொண்டிருந்தார். “சிவாஜியும் கூட நல்லாதான்யா ஸ்டைல்லா நடிச்சிருக்காரு” என்று கமெண்ட் செய்வார். எனக்குள் ஊறிப்போயிருந்த எம்.ஜி.ஆர் ரசனை ரத்தம் அதை ஒப்புக்கொள்ளவில்லை.

2001, ஜூலை 21-க்கு முன்பாக ஒட்டுமொத்தமாக பத்து, பதினைந்து சிவாஜி படங்களைப் பார்த்திருந்தாலே அதிகம். அவையும் கூட பராசக்தி, மனோகரா, நான் வாழ வைப்பேன், விடுதலை, தேவர் மகன், படையப்பா, ஒன்ஸ்மோர் மாதிரி படங்கள்தான். டிவியில் சிவாஜி படமென்றாலே ஜூட்.

2000-ங்களின் தொடக்கத்தில் தி.நகர் பாகீரதி அம்மாள் தெருவிலிருந்த ஒரு விளம்பர ஏஜென்ஸியில் பணி. தினமும் போக் ரோடு சிவாஜி வீட்டைக் கடந்துதான் என் டிவிஎஸ் சேம்ப் செல்லும். அந்த வீட்டு வாசலில் சில முறை சிவாஜி, ராம்குமார், பிரபுவையெல்லாம் கண்டிருக்கிறேன். அங்கிருக்கும் ஆட்டோ ஸ்டேண்ட் டிரைவர்களோடு அவ்வப்போது பிரபு பேசிக்கொண்டிருப்பார்.

மகத்தான நடிகர் வீடு வழியாக தினமும் சென்றுக் கொண்டிருந்தாலும், அந்த வீட்டுக்கு சற்றே எதிர்ப்புறம் அமைந்திருக்கும் ஆற்காடு தெருதான் நமக்கு திருத்தலம். மக்கள் திலகம் வாழ்ந்த வீடாயிற்றே?

எம்.ஜி.ஆர் ரசனையின் ஒரு விபரீத அம்சம் என்பது சிவாஜி வெறுப்பு. கண்ணை மூடிக்கொண்டு சிவாஜியை மட்டம் தட்டுவது. அப்படிதான் தட்டிக் கொண்டிருந்தேன் அந்த 2001 ஜூலை 21 வரை.

‘கலைஞர் நீண்டகாலம் வாழ, என் வாழ்நாளின் மீத வருடங்களை தருவேன்’ என்று கூறியிருந்தார் சிவாஜி. பாசிஸ்ட் ஜெயலலிதாவால் படுமோசமான முறையில் மிருகத்தனமாக போலீஸாரால் கலைஞர் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட ஒரு மாதத்துக்குள்ளாகவே, தன் வாழ்நாளின் மீதி வருடங்களை தன் ஆருயிர் நண்பருக்குக் கொடுத்துவிட்டு மேலுலகம் சென்றார்.

சிவாஜியின் மறைவுச் செய்தியைக் கேட்டபோது அளவில்லா துக்கம் நெஞ்சைக் கவ்வியது. அது ஒரு ஞாயிற்றுக்கிழமை. அவரது பூவுடலுக்கு பல்லாயிரக் கணக்கானோர் திரண்டு மரியாதை செலுத்திய காட்சிகளை டிவியில் பார்த்துவிட்டு, உடனே போக் ரோடுக்கு கிளம்பினேன். நந்தனம் சிக்னலில் வண்டியை நிறுத்திவிட்டு போக் ரோடுக்குச் செல்லும்போது காணுமிடமெல்லாம் மக்கள் வெள்ளம். கதறியழுதவாறே அன்னை இல்லத்தை நோக்கி நகர்ந்துக் கொண்டிருந்தார்கள். ஒரு நடுத்தர வயது மனிதர் ‘பராசக்தி’ வசனத்தை அழுதவாறே உரத்தக் குரலில் முழங்கிக் கொண்டிருந்தார். சிவாஜி யார் என்பதை உணர்ந்த தருணம் அது.

அன்று அவரது உடலுக்கு மரியாதை செலுத்திவிட்டு, மறுநாள் அலுவலகத்துக்கு விடுப்பு சொல்லிவிட்டு, இறுதி ஊர்வலத்திலும் பங்கேற்றேன்.

அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கலைஞர் என்று எத்தனையோ பிரபலங்களின் இறுதி ஊர்வலங்கள் இன்றும் சென்னை மாநகரில் நினைவுகூறப்படுகின்றன. சிவாஜி இறுதி ஊர்வலத்தை மட்டும் ஏனோ அதில் சேர்க்க மறந்துவிடுகிறார்கள்.

தி.நகரில் தொடங்கி பெசண்ட் நகர் வரை நடந்த சிவாஜியின் இறுதி ஊர்வலத்திலும் பல லட்சம் பேர் பங்கேற்றனர். ரஜினி, கமல் உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்கள் சாதாரணர்களாக தங்களை மாற்றிக்கொண்டு பங்கேற்ற பிரும்மாண்டமான ஊர்வலம் அது. மக்கள் கடலில் மிதந்தவாறேதான் அவரை சுமந்த வாகனம் நகர் மத்தியில் சென்றது. செய்தி சேகரிக்க வந்த பத்திரிகையாளர்களும், போட்டோகிராஃபர்களும் கூட அழுதது எந்த இறுதி ஊர்வலத்திலும் நான் கண்டிராத காட்சி.

அன்றிலிருந்துதான் சிவாஜி படங்களையே பார்க்க ஆரம்பித்தேன். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான படங்களை டிவி, இணையம் மூலம் பார்த்தாகிவிட்டது. என்னுடன் சினிமா கார்ப்பரேட் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய சம்பத் என்பவர் தீவிர சிவாஜி ரசிகர். அவருடனான உரையாடல்கள் சிவாஜியின் நடிப்பை எப்படி அணுக வேண்டும் என்பதை சொல்லிக் கொடுத்தது. உலகிலேயே இவ்வளவு வேடங்கள் ஏற்று, ஒவ்வொரு வேடத்துக்கும் வேறுபாடு காட்டி நடித்த நடிகர் வேறு எவராவது இருப்பாரா என்பது சந்தேகம்தான். சிவாஜியை ரசிக்க ‘செல்லுலாய்ட் சோழன்’ என்கிற பிரமாதமான ‘ரீடர்’ ஒன்றை பத்திரிகையாளர் சுதாங்கன் எழுதியிருக்கிறார். சர்வதேச அளவில் வேறெந்த நடிகருக்காவது இப்படியொரு நுணுக்கமான ரசனை சார்ந்த விரிவான நூல் இருப்பதாகத் தெரியவில்லை.

இருபது வயதுவரை நான் வெறுத்துக் கொண்டிருந்த சிவாஜி, கடந்த இருபதாண்டுகளில் மனதுக்கு மிகவும் நெருக்கமான மனிதராக ஆகிவிட்டார். இன்று, உலகின் தலைசிறந்த நடிகர் சிவாஜிதான் என்பது என் மனப்பதிவு.

14 செப்டம்பர், 2019

கலைஞரும் சிறுகதைகளும்!

அரசியல்தான் தான் விரும்பித் தேர்ந்தெடுத்து பணிபுரியும் துறை என்று கலைஞர் அடிக்கடி சொன்னாலும், “அரசியல்/ஆட்சி அழுத்தங்களில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ளவே கலை இலக்கியச் செயல்பாடுகளில் ஈடுபடுகிறேன்” என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

இலக்கியத்தின் பல்வேறு பரிணாமங்களிலும் அவருடைய ஆர்வமான செயல்பாடு இருந்திருக்கிறது. தன்னை முதன்மையாக பத்திரிகையாளர் என்று அவர் பெருமையாக அடையாளப் படுத்திக் கொண்டாலும், இதழியல் மட்டுமின்றி சிறுகதை, நாவல், கவிதை, நாடகம், திரைப்படம், தன்வரலாறு, பேச்சு என்று கிளைவிரித்து தமிழ் பரப்பியிருக்கிறார்.

கலைஞரின் தமிழ்ப் பணிகளில் அதிகம் பேசப்படாதவையாக அவரது சிறுகதைகள் அமைந்திருக்கின்றன.

மிகச்சரியாக கலைஞர் பிறப்பதற்கு பத்து ஆண்டுகளுக்கு முன்பாகதான் தமிழில் ‘சிறுகதை’ என்கிற வடிவமே உருவாகிறது. பாரதியாரின் ‘ஆறிலொரு பங்கு’ என்கிற சிறுகதையையே, தமிழ் சிறுகதை உலகின் முதல் கதையாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

கலைஞர், தன்னுடைய 14வது வயதிலிருந்து வாசிப்பு, எழுத்து என்று தீவிரமாக செயல்படுகிறார். அப்படியிருக்க தமிழில் அவரால் முதல் 25 ஆண்டுகளில் எழுதப்பட்ட சிறுகதைகளைதான் தொடக்கத்தில் வாசித்திருக்க முடியும். ஒட்டுமொத்தமாக அப்போது இருநூறு, முன்னூறு சிறுகதைகள் எழுதப்பட்டிருந்தாலே கூட அது அபூர்வம்தான்.

தமிழ் சிறுகதைகள், நவீன வடிவத்தை எட்டாத சோதனைக்குழாயில் இருந்த காலக்கட்டத்தில் இயங்கியவர்களில் கலைஞரும் ஒருவர். எனவே, இன்றைய காலக்கட்டத்தில் சிறுகதைகளில் இலக்கிய வாசகர்கள் எதிர்ப்பார்க்கக்கூடிய அழகியல், கச்சிதமான வடிவம் மற்றும் சிறுகதைகளுக்கான கறாரான இலக்கணம் போன்றவற்றை கலைஞரின் அந்தக் காலக்கட்டத்துப் படைப்புகளில் தேட முற்படுவது அபத்தம்.

மேலும், ‘திராவிட இலக்கியம் என்றாலே தீட்டு’ என்கிற தமிழ் நவீன இலக்கியப் பண்பும் கலைஞரின் சிறுகதைகள் அதிகம் பேசப்படாததற்கு கூடுதல் காரணம். திராவிட இயக்கச் சிந்தனைகளின் பரப்பியல் உத்திகள் குறித்த போதுமான ஆய்வுகள், தமிழ் இலக்கியத்தில் மிகவும் அரிது என்பதில் இருந்து இதில் புரிந்துக் கொள்ளலாம். திராவிட இயக்கத்தைச் சார்ந்தவர்களை எழுத்தாளர்களாக ஏற்றுக் கொள்பவர்களையே ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கும் நாட்டாமைத்தனமான பாசிஸம் இன்றும் தொடர்கிறது. இத்தகைய சூழலில் கலைஞரின் சிறுகதைகள் குறித்த துல்லியமான விமர்சனங்களை நாம் எதிர்ப்பார்ப்பதே வீண்தான்.

பேரறிஞர் அண்ணா, கலைஞர், இரா.அரங்கண்ணல், ஏவிபி ஆசைத்தம்பி, இளமைப்பித்தன், இரா.இளஞ்சேரன், கே.ஜி.இராதாமணாளன், தில்லை மறைமுதல்வன், எஸ்.எஸ்.தென்னரசு, டி.கே.சீனிவாசன், முரசொலி மாறன், ப.புகழேந்தி, திருச்சி செல்வேந்திரன் ஆகியோரின் நூற்றுக்கும் மேலான தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் தொகுக்கப்பட்டு, ‘திராவிட இயக்க எழுத்தாளர்களின் சிறுகதைகள்’ என்று சீதை பதிப்பகம் கடந்த 2012ல் திராவிட இயக்க நூற்றாண்டை சிறப்பிக்கும் வகையில் வெளியிட்டிருக்கிறது.

இன்றைய நவீன தமிழ் எழுத்தாளர்களோ / விமர்சகர்களோ இப்படியொரு பெருந்தொகுப்பு வந்திருப்பதையாவது அறிந்திருப்பார்களேயானால் அது அதிசயமே. ‘திராவிட இயக்கத்தைச் சார்ந்தவர்களுக்கு இலக்கியம் வராது’ என்று மட்டையடி அடிக்கும் பார்ப்பன எழுத்தாளர்களோ அல்லது அவர்களை அடிவருடும் சூத்திர எழுத்தாளர்களோ இவற்றில் சில கதைகளையேனும் வாசித்திருந்தால் குறைந்தபட்சம் தங்கள் அறியாமையாவது உணர்ந்திருப்பார்கள்.

இன்றைய நவீன இலக்கியவாதிகளில் கலைஞரை அதிகம் வாசித்த மிக சிலரில் பிரபஞ்சனும் ஒருவர். வாசித்திருப்பதால் மட்டுமே அவரால் கலைஞரின் சிறுகதைகளுக்கு அடிநாதமாக இருக்கக்கூடிய சமுதாய உணர்வை கண்டுகொண்டு பாராட்ட முடிகிறது.

“ஒரு கருத்து, சிந்தனை அல்லது அனுபவத்தை சமூகம் சார்ந்து வெளிப்படுத்தக்கூடிய வாய்ப்பாகவே கலைஞர் தன்னுடைய சிறுகதைகளை பயன்படுத்தி இருக்கிறார். கருத்து இல்லாத, சமூக உணர்வு சற்றுமில்லாத ஒரே ஒரு கலைஞரின் சிறுகதையை கூட நான் வாசித்ததில்லை” என்று சொல்லியிருக்கிறார் பிரபஞ்சன்.

எண்பது ஆண்டுகளுக்கும் மேலாக இடைவிடா தமிழ்ப்பணி புரிந்த கலைஞர் அவர்கள், காலமாகி இருக்கும் இச்சூழலிலாவது அவரது எழுத்துகள் மீள்வாசிப்பு செய்யப்படுவதும், அவை குறித்த துல்லியமான ஆய்வுகள் நடத்தப்படுவதுமே நேர்மையான செயல்பாடாக இருக்க முடியும். காலம் கடந்தாவது இந்தச் செயலை நவீன இலக்கியவாதிகள் செய்வார்கள் என்று நம்புவோம்.

கலைஞரின் சிறுகதைகளுக்கு வருவோம்.

கலைஞரின் 21வது வயதில் ‘கிழவன் கனவு’ என்கிற சிறுகதைத் தொகுப்பை 1945ல் வெளியிட்டிருக்கிறார். இந்தத் தொகுப்பில் இடம்பெற்ற கதைகள், எந்தெந்த இதழ்களில் வெளிவந்தன என்பது குறித்த தகவல்கள் சரியாக தெரியவில்லை. அடுத்து எட்டு ஆண்டுகள் கழித்து 1953ல் ‘நாடும் நாகமும்’, 1956ல் ‘தாய்மை’ ஆகிய சிறுகதைத் தொகுப்புகளை வெளியிட்டிருக்கிறார். பின்னர் ‘கண்ணடக்கம்’, ‘அரும்பு’, ‘வாழமுடியாதவர்கள்’, ‘சங்கிலிச்சாமி’, ‘தப்பிவிட்டார்கள்’ உள்ளிட்டத் தலைப்புகளில் பதினைந்துக்கும் மேற்பட்ட சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்திருக்கின்றன.

1971ல் பெரும் தொகுப்பாக முக்கியமான கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு ‘கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்’ என்று வெளியிடப்பட்டது.

1940ல் தொடங்கி 1970களின் இறுதி வரையில் கலைஞர் ஆர்வத்தோடு கிட்டத்தட்ட நாற்பதாண்டுகள் சிறுகதைகள் எழுதுவதில் ஈடுபாடு காட்டியிருக்கிறார். அதன் பிறகு நாவல், ஆய்வுநூல்கள் என்று அவரது ஆர்வம் திசைமாறிய நிலையில் மிகவும் அரிதாகவே சிறுகதை எழுதியிருக்கிறார். இயக்கம் சார்ந்த இதழ்களிலேயே கலைஞரின் சிறுகதைகள் பெரும்பான்மையாக இடம்பெற்றிருக்கின்றன. அவை தவிர்த்து கொஞ்சம் அரிதாகவே வெகுஜன இதழ்களில் எழுதியிருக்கிறார்.

அவர் எத்தனை சிறுகதைகள் எழுதியிருக்கிறார் என்பதற்கு துல்லியமான கணக்கு வழக்கு இல்லை. தோராயமாக இருநூறு கதைகள் எழுதியிருக்கலாம் என்று தெரிகிறது.

சினிமா, நாடகம், பேச்சு என்று தன்னுடைய மற்ற ஆற்றல்களை எல்லாம் எப்படி தான் ஏற்றுக் கொண்ட கொள்கை அரசியலுக்கு பயன்படத்தக்க வகையில் மாற்றிக் கொண்டாரோ, சிறுகதைகளையும் அப்படியேதான் உபயோகித்திருக்கிறார். திராவிட இயக்கத்தின் கருத்துக் கூறுகளை வெளிப்படுத்தக்கூடிய வாய்ப்பாகதான் அவர் சிறுகதைகளையும் பார்த்திருக்கிறார்.

“இராமர் என்ன என்ஜினியரா?” என்று ராமர் பாலம் விவகாரத்தில் கலைஞர் செய்த கேலி, நாடு முழுக்கவே கடுமையான அதிர்வலைகளை எழுப்பியது. இந்துத்துவ ஆதரவாளர்கள் கலைஞரின் மறைவுக்குப் பிறகும் இதற்காக அவரை மன்னிக்கத் தயாராக இல்லை. எழுபது ஆண்டுகளுக்கு முன்பு அவர் எழுதிய ‘விஷம் இனிது’ கதையிலேயேகூட இராமர் எதிர்ப்பை வலுவாக வெளிப்படுத்தி இருக்கிறார். “இராம பிரானை விட இந்த விஷம் இனிது” என்கிற கூரிய விமர்சனத்தோடு கூடிய வசனம் அந்த சிறுகதையில் வெளிப்படுகிறது. கடவுள் மறுப்பு என்கிற கலைஞரின் பண்பு, அவரது சிறுகதைகள் பலவற்றிலும் சம்பவங்களின் ஊடாகவும், வசனங்களின் வெளிப்பாடாகவும் பளிச்சென்றே அமைந்திருக்கிறது.

‘கண்ணடக்கம்’ என்கிற கதையில் பிளேக் நோய் பரவி, ஊரெல்லாம் பிணம். காளிபக்தன் மனசுடைந்துப் போய் காளிதேவியிடம் நியாயம் கேட்பான். “கருணைக்கடலா நீ? பேய்க்கும் உனக்கும் என்ன வேறுபாடு?” இதை வாசிக்கும்போதே உணர்ந்திருப்பீர்கள். கலைஞரின் பெரும்பாலான கதைகளின் நாயகர்கள் ‘பராசக்தி’ குணசேகரன்களேதான். ‘நடுத்தெரு நாராயணி’ என்கிற சிறுகதையில் ‘பராசக்தி’ கல்யாணியைகூட நீங்கள் கண்டுக்கொள்ளலாம்.

கலைஞரின் சிறுகதைகளில் தனித்துவமானதாக அவரது வாசகர்களால் என்று நினைவுகூறப்படுவது ‘குப்பைத்தொட்டி’ என்கிற அவரது சிறுகதை. சர்ரியலிஸம், இருத்தலியல்வாதம், அமைப்பியல்வாதம், பின்நவீனத்துவம், மாந்திரீக யதார்த்தவாதம் போன்ற மேற்கத்திய கோட்பாட்டு முறைகள் தமிழ் நிலத்தில் பேசப்படுவதற்கு வெகுகாலம் முன்பே, ஒரு குப்பைத்தொட்டி மூலமாக சமகால சமூகத்தை பிரதிபலிக்கும் சிறப்பான வடிவ உத்தியை அச்சிறுகதையில் கலைஞர் பயன்படுத்தி இருக்கிறார்.

இடதுசாரி இலக்கிய இதழான ‘செம்மலர்’, இச்சிறுகதையை ‘சிகரம் தொட்ட சிறுகதை’ என்கிற வரிசையில் மறுபிரசுரம் செய்து கொண்டாடியது. கலைஞரின் இலக்கியத்தரம் குறித்து நவீன இலக்கியவாதி ஒருவர் கேள்வி எழுப்பியபோது, கலைஞர் இந்தக் கதையைதான் தன்னுடைய இலக்கியத் திறனுக்கு சான்றாக முன்வைத்தார்.

இச்சிறுகதையைப் பற்றி கேள்விப்பட்டு குஷ்வந்த்சிங், ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்து ‘இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி’ இதழில் வெளியிட்டார். அக்கதையில் வெளிப்பட்டிருந்த புராண எதிர்ப்புக் கருத்துகளுக்காக ‘இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி’ அலுவலகத்தை இந்துமத வெறியர்கள் முற்றுகையிட்டு பிரச்சினை செய்தார்கள். அப்போது, அக்கதையை பாராட்டி மூட்டை மூட்டையாக வந்திருந்த கடிதங்களை அவர்களுக்கு முன்பாகக் கொட்டி, “இக்கதையை ஏற்றுக் கொண்டவர்களும் இந்துக்கள்தான்” என்று மூக்குடைத்தார் குஷ்வந்த்சிங். பின்னர் ‘குப்பைத்தொட்டி’, ஐரோப்பிய மொழிகளிலும் மொழிப்பெயர்க்கப்பட்டது. “குப்பைத்தொட்டி இங்கே குப்பையாக ஒதுக்கப்பட்டாலும் பிற மொழிகளில் கொண்டாடப்படுகிறது” என்று குறிப்பிட்டிருக்கிறார் கலைஞர்.

சிறுகதையின் வடிவங்களில் பரிசோதனை செய்துப் பார்ப்பது கலைஞருக்கு மிகவும் பிடித்தமானது. ‘நரியூர் நந்தியப்பன்’ என்கிற சிறுகதையை கடிதவடிவில் எழுதியிருப்பார். அவருடைய சிறுகதைகளில் சாமியார்களை தோலுரிக்கும் சம்பவங்கள் ஏகத்துக்கும் அமைந்திருக்கும். ‘நளாயினி’, புராண எதிர்ப்புப் பேசும். ‘சந்தனக் கிண்ணம்’, இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போரின் நியாயத்தை எடுத்துச் சொல்லும்.

‘எழுத்தாளர் ஏகலைவன்’ என்கிற சிறுகதையில், “சிறுகதை என்றால் வெறும் பொழுது போக்குக்காகப் படிப்பதற்காகவா எழுதப்படுவது? அதில் ஏதாவது ஒரு கருத்து, சமுதாயத்துக்குத் தேவையானதாக அமைக்கப்பட வேண்டாமா?” என்று தான் ஏன் சிறுகதை எழுதுகிறார் என்பதற்கான நியாயத்தை கதையின் போக்கிலேயே சொல்லியிருப்பார்.

சிறுகதை என்றால் என்னவென்று இந்த பின்நவீனத்துவத்துவக் காலக்கட்டத்திலும் ஏதோ ஒரு வாசகனால் கேட்கப்படுகிறது. ஏதோ ஓர் எழுத்தாளர், தான் அறிந்ததை விளக்கிக் கொண்டிருக்கிறார்.

சிறுகதைக்கான கலைஞரின் இலக்கணம் மிகவும் எளிமையானது.

”ஒரு காட்சி அல்லது நிகழ்வைப் பற்றி, மற்றவர்களுக்கு எடுத்து விளக்கிச் சொல்லும்போது, அவரவர் நிலைக்கேற்பவும், அறிவு வளர்ச்சிக்கேற்பவும், விளக்குபவருக்கும், விளக்கத்தைக் கேட்பவருக்குமிடையே ஒரு பாலமாகப் பாவிக்கப்படுவதுதான் சிறுகதை”

ஏற்றுக் கொள்ளக்கூடிய விளக்கம்தான் இல்லையா?

30 ஆகஸ்ட், 2019

பூம்.. பூம்.. பும்ரா!

அகமதாபாத் நகரை கோடை சுட்டெரித்துக் கொண்டிருந்தது.

உச்சி வேளை.

பள்ளிக்கு விடுமுறை என்பதால் தல்ஜீத் டீச்சர், வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார்.

‘பூம்.. பூம்.. பூம்..’

சீரான இடைவெளியில் அந்த சப்தம் தொடர்ச்சியாகக் கேட்டுக்கொண்டே இருந்தது.

தூக்கம் களைந்து, படுக்கையறையை விட்டு வெளியே வந்தார்.

ஹாலில் பத்து வயது மகன் பும்ரா, சுவரில் பந்து வீசி விளையாடிக் கொண்டிருந்தான்.

“பும்ரா, சத்தமில்லாமே விளையாட மாட்டியா?” லேசாக கண்டிப்பு தொனிக்கும் குரலில் கேட்டார் டீச்சர்.

தொனிக்கும் குரலில்தான். நிஜமான கண்டிப்பு அல்ல. மகனைப் பொறுத்தவரை எப்போதுமே தல்ஜீத் டீச்சர் கண்டிப்பு காட்ட மாட்டார்.

ஏனெனில், ஏழு வயதிலேயே தந்தையை இழந்த குழந்தை அவன்.

தொழில் நிமித்தமாக அகமதாபாத்துக்கு இடம் பெயர்ந்திருந்த பஞ்சாபி குடும்பம்.

சிறிய அளவில் கெமிக்கல் ஃபேக்டரி ஒன்றை நடத்திக் கொண்டிருந்தார் ஜஸ்பீர் சிங். அன்பான மனைவி. அவர்களது மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு சாட்சியாக ஒரு மகள், ஒரு மகன்.

மகன் பும்ராவுக்கு ஏழு வயது இருக்கும்போதுதான், அந்தக் குடும்பம் தாங்கவொண்ணா துயர் இருளில் வீழ்ந்தது. குடும்பத்தின் ஆணிவேராக திகழ்ந்த ஜஸ்பீர் சிங், மஞ்சக்காமாலை நோயால் திடீரென காலமானார்.

அதுநாள் வரை கணவரின் அரவணைப்பில் வெளியுலகம் பாராமல் இருந்த தல்ஜீத் மகனுக்காகவும், மகளுக்காகவும் வீட்டை விட்டு வெளியே வந்தார்.

நிர்மாண் உயர்நிலைப் பள்ளியில் பிரின்சிபாலாக வேலையில் அமர்ந்தார்.

அதே பள்ளியில் தன் மகளையும், மகனையும் படிக்க வைத்தார்.

டீச்சரின் குழந்தைகள் என்பதால் இருவரும் நன்றாகவே படித்தார்கள்.

டாக்டர், என்ஜினியர், ஐஏஎஸ், ஐபிஎஸ் என்று தன் குழந்தைகளின் எதிர்காலம் குறித்து எல்லோரையும் போலவும் தல்ஜீத் டீச்சருக்கும் கனவுகள் இருந்தன.

தகப்பன் இல்லாத குறை தெரியாமல் அவர்களை வளர்த்து வந்தார்.

மகனை வீட்டை விட்டு வெளியே அனுப்ப மாட்டார். வீட்டுக்குள்ளேயே விளையாடச் சொல்லுவார்.

பும்ராவுக்கு கிரிக்கெட்தான் பிடிக்கும்.

சச்சின் டெண்டுல்கர், வீரேந்தர் சேவாக், சவுரவ் கங்குலி, ராகுல் டிராவிட், முகம்மது கைஃப், யுவராஜ்சிங், தினேஷ் மோங்கியா, ஹர்பஜன் சிங், ஜாகீர்கான், ஜவகல் ஸ்ரீநாத், ஆஷிஷ் நெஹ்ரா என்று இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்கள் சர்வதேச அளவில் கோலோச்சிக் கொண்டிருந்த காலம் அது.

டிவியில் கிரிக்கெட் பார்ப்பதுதான் பும்ராவின் ஒரே சந்தோஷம். பேட்டிங்கைவிட பவுலிங்தான் அவனது விருப்பம். ஜாகீர்கான் யார்க்கர் போட்டு பேட்ஸ்மேனை திணறடிக்கும் காட்சியை கைத்தட்டி ரசிப்பான்.

கிரிக்கெட் போட்டி இல்லாதபோது டென்னிஸ் பந்தை சுவரில் அடித்து பவுலிங் செய்து விளையாடுவான்.

அப்படிதான் அன்று ‘பூம்.. பூம்.. பூம்..’ சப்தம் வந்த சம்பவம்.

சப்தமில்லாமல் சுவரில் பந்துவீசி எப்படி பவுலிங் செய்ய முடியும்?

முடியும்.

சிறுவன் பும்ரா யதேச்சையாக அந்த டெக்னிக்கை கண்டுப்பிடித்தான்.

சுவரின் கீழ்ப்பகுதி, தரையோடு இணையும் இடத்தில் குறிபார்த்து பந்து வீசினால் ‘பூம்.. பூம்.. பூம்..’ சப்தம் எழவில்லை. அம்மாவும் நிம்மதியாகத் தூங்கினார். தானும் விளையாடிய மாதிரி ஆயிற்று.

யதேச்சையாக அமைந்த அந்த பயிற்சிதான் இன்று உலகின் தலைசிறந்த யார்க்கர் பவுலிங் பேரரசனாக பும்ராவை உருவாக்கி இருக்கிறது என்றால் நம்பமுடியாத ஆச்சரியமாகதான் இருக்கும். ஆச்சரியங்களும், அற்புதங்களும் பெரும்பாலும் இதுபோல யதேச்சையாக தோன்றுபவைதான்.

பள்ளியில் கிரிக்கெட் ஆடிக் கொண்டிருந்தபோது, யதேச்சையாகதான் (இந்தக் கட்டுரையில் இன்னும் எத்தனை யதேச்சை வருமோ) பும்ராவின் பவுலிங்கைப் பார்த்தார் விளையாட்டு ஆசிரியர்.

பொதுவாக வேகப்பந்து வீச்சாளர்கள் தொலைவில் இருந்து ஓடிவந்துதான் பந்து வீசுவார்கள். பும்ராவோ, ஸ்பின்னர்களைப் போல மிகக்குறைவான தூரம் ஓடிவந்து படுவேகமாக வீசினான். அதுவும் அடுத்தடுத்து துல்லியமான யார்க்கர்கள்.

விளையாட்டு ஆசிரியருக்கு ஆச்சரியம். இப்படியொரு பவுலிங்கை அவர் சர்வதேச கிரிக்கெட்டில் கூட பார்த்ததில்லை.

”பும்ரா, உனக்கு யார் இப்படி பந்து வீசக் கற்றுக் கொடுத்தது?”

“நானேதான் கற்றுக் கொண்டேன்” என்றவன், வீட்டில் ‘பூம்.. பூம்’ சப்தம் வராமல் இருப்பதற்காக சுவரும், தரையும் இணையும் இடத்தில் குறிபார்த்து வீசி, வீசி பயிற்சி பெற்ற கதையை சொன்னான்.

பும்ராவின் அதிசயப் பந்துவீச்சு குறித்த தகவல் உள்ளூர் கிரிக்கெட் அகாடமிக்குப் போனது. அகாடமியில் இருந்த பயிற்சியாளர், “தம்பி, நீ சாதாரண ஆளு இல்லை. உலகத்தையே உன் பந்து வீச்சால் ஆளப்போறே. டெய்லி கரெக்டா பிராக்டிஸுக்கு வந்துடு” என்றார்.

அப்போது பும்ராவின் வயது பதினாலு.

நேராக அம்மாவிடம் போனார். இனிமேல் ‘ர்’தான். டீனேஜுக்கு வந்துவிட்டாரே?

“அம்மா, நான் ஜாகிர்கான் கிரிக்கெட் பிளேயர் ஆகப்போறேன்”

ஆச்சரியத்தோடு பார்த்தார் அம்மா.

“உனக்கென்ன கிரிக்கெட் தெரியும்?”

“மத்தவங்களுக்கு தெரியாததெல்லாம் எனக்குத் தெரியும்னு கிரிக்கெட் அகாடமியில் சொல்லுறாங்க அம்மா”

அம்மாவுக்கு கவலையாகப் போய்விட்டது. ஒரே மகனை நன்றாகப் படிக்கவைத்து பெரிய வேலைக்கு அனுப்புவதுதான் அவரது லட்சியம். மகனோ, விளையாடப் போகிறேன் என்று அடம் பிடிக்கிறார்.

”வேணாம் கண்ணா. கோடி பேருலே ஒருத்தருதான் டெண்டுல்கர் ஆகமுடியும். நீ அப்பா இல்லாத பையன். உன்னை வெச்சி நான் ரிஸ்க் எடுக்க முடியாது.”

“அம்மா. என்னை நம்பு. நானும் கோடிலே ஒருத்தன்தான்.”

“கண்ணா, நீ ஸ்பெஷல்னு அம்மாவுக்குத் தெரியும். இருந்தாலும்…”

“என்ன இருந்தாலும்? அம்மா, நீங்க ஸ்கூல் பேரண்ட்ஸ் மீட்டிங்கில் பேசுறதைப் பார்த்திருக்கேன். குழந்தைகளோட கனவை நனவாக்கிறது பெற்றோர்களின் கடமைன்னு பேசுவீங்க. நீங்களே கடமை தவறலாமா?”

வார்த்தைகளால் பும்ரா வீசிய யார்க்கருக்கு அம்மா தல்ஜீத், க்ளீன் பவுல்ட் ஆனார். தன் பேச்சை எடுத்துக்காட்டியே தன்னை மடக்கிய மகனின் சாமர்த்தியத்தை வியந்தார்.

”கண்ணா, நீ எது செஞ்சாலும் நல்லபடியா செய்வே. உன் கனவு நீ நினைச்சமாதிரி நடக்கலைன்னாலும் பரவாயில்லை. உடனே அம்மா கிட்டே ஓடி வந்துடு. வேற என்ன செய்ய முடியும்னு பார்த்துக்கலாம்.”

ஆனால் –

அப்படியொரு சந்தர்ப்பம் பும்ராவுக்கு ஏற்படவே இல்லை.

அதிகாலையில் எழுந்து பயிற்சிக்காக அகாடமிக்கு செல்வார். பயிற்சி முடிந்ததும் நல்ல பிள்ளையாக பள்ளிக்குச் செல்வார். மாலையில் மீண்டும் பயிற்சி.

அம்மாவுக்காக நன்றாகப் படித்தார். தனக்காக தீவிரப் பயிற்சி மேற்கொண்டார்.

குஜராத் கிரிக்கெட் அசோஷியேஷன் நடத்திய சம்மர் கேம்பில் கலந்துக் கொண்டார். பும்ராவின் வித்தியாசமான பவுலிங் அங்கிருந்தவர்களைக் கவர்ந்தது.

அதைத் தொடர்ந்து அவரை எம்.ஆர்.எஃப் பவுண்டேஷனுக்கும், தேசிய கிரிக்கெட் அகாடமியின் மண்டலப் பயிற்சி முகாமுக்கும் அனுப்பினார்கள். சென்ற இடமெல்லாம் புதிய நுணுக்கங்களை கற்றுத் தேர்ந்தார்.

குஜராத் 19 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட் அணிக்கு தேர்வாகி, முதல் போட்டி சவுராஷ்டிரா அணியுடன். தான் விளையாடிய முதல் போட்டியிலேயே பேட்டிங்குக்கு சாதகமான ராஜ்கோட் மைதானத்தில் 7 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

“பும்ரா எப்போது பவுன்ஸர் வீசுவான், எப்போது யார்க்கர் போடுவான் என்று எந்த பேட்ஸ்மேனுமே கணிக்க முடியாது. அவன் வீசுவது பந்தா அல்லது அணுகுண்டா என்றே தெரியாது” என்று இப்போதும் சிலிர்க்கிறார் குஜராத் ரஞ்சி அணியின் பயிற்சியாளரான ஹிதேஷ் மஜூம்தார்.

சயித் முஷ்டாக் அலி டி20 சாம்பியன்ஷிப் போட்டியில் பும்ராவின் பந்துவீச்சை கவனித்தார் அப்போதைய மும்பை ஐபிஎல் அணியின் பயிற்சியாளரான ஜான்ரைட்.

மும்பை அணி, பும்ராவோடு ஒப்பந்தம் செய்தது. மும்பை அணியில்தான் தன்னுடைய காட்ஃபாதரான யார்க்கர் மன்னன் லசித் மலிங்காவை சந்தித்தார் பும்ரா. தன்னைப் போலவே சலிக்காமல் யார்க்கர் வீசும் பும்ராவுக்கு, ஏகப்பட்ட நுணுக்கங்களைச் சொல்லிக் கொடுத்தார் மலிங்கா.

அவ்வளவுதான்.

சர்வதேச கிரிக்கெட்டுக்கு ஒரு யார்க்கர் டான் ரெடி!

மீதியெல்லாம் சமகாலத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சாதனை வரலாறு.

(நன்றி : குங்குமம்)

21 மே, 2019

திமுக vs விடுதலைப்புலிகள்

திமுக எப்படியோ அப்படியேதான் எனக்கு விடுதலைப்புலிகளும். திமுக மீது சில கசப்பான விமர்சனங்கள் இருப்பதைப் போலவே விடுதலைப்புலிகள் மீதும் உண்டு.

ஒருக்கட்டத்தில் திமுகவை மிகக்கடுமையாக வெறுக்குமளவுக்கு விடுதலைப்புலிகள் மீது அளவுக்கதிகமான நம்பிக்கையும், பாசமும் இருந்தன (ஆம், இருந்தன. past tense)

எனினும் -

திமுக தன்னுடைய அமைப்புப் பலத்தில், சித்தாந்தப் பின்புலத்தில் 70 ஆண்டுகளாக தொய்வின்றி வலிமையாக செயல்படும் பிராந்திய இயக்கமாக இருக்கிறது. திமுகவின் அரசியலுக்கு inclusiveness தன்மை உண்டு. காலத்திற்கேற்ப மாற்றங்களுக்கு தயாரான இயக்கம். இயக்கத்தை உயிர்ப்போடு வைத்திருக்க அவசியமான சமரசங்களுக்கு உடன்படும் கட்சி. அடிப்படைக் கொள்கையான பிராந்திய நலன் மட்டுமே அவ்வியக்கத்தை நீண்டகாலமாக செலுத்தும் சக்தி. இயக்கம் இல்லையேல் தங்கள் இலட்சியங்களை ஈடேற்றிக் கொள்ள களம் இருக்காது என்கிற யதார்த்தத்தை உணர்ந்த இயக்கம்.

விடுதலைப்புலிகளுக்கு அத்தகைய தன்மை குறைவு. சாகஸவாதத்தில் நம்பிக்கை வைத்திருந்த இயக்கமாகவே படுகிறது. மக்கள் ஆதரவு என்பதைவிட, போராளிகளின் வீரத்தின் மீதே அதிக சுமையை ஏற்றிவிட்டோம். 'பீலி யேற்றிய சகடமும் அச்சுமுறியும்’ என்றாகி விட்டது. இயக்கத்தின் இதயமாக விளங்கிய தமிழீழத் தேசியத் தலைவரின் வெற்றிடம், இயக்கத்தை மட்டுமின்றி அதன் நோக்கங்களையும் சூனியமாக்கி விட்டது. தொண்ணூறுகளின் இறுதியிலும், இரண்டாயிரங்களின் தொடக்கத்திலும் இயக்கத்துக்கு கிடைத்த leverage, மிதமிஞ்சிய தன்னம்பிக்கையால் வீணாகிவிட்டது.

இருப்பினும் -

என் வாழ்நாளின் கணிசமான நாட்களில் நான் பெருமிதமாக எண்ணி மகிழக்கூடிய தருணங்களை வழங்கிய இயக்கம் விடுதலைப்புலிகளே. இதே மாதிரியான பெருமிதத்தை நாற்பதுகளின் இறுதியிலும், ஐம்பதுகளின் தொடக்கங்களிலும் தமிழகத்தில் பிறந்தவர்களுக்கு திமுக கொடுத்திருக்கலாம்.

இன்று; திமுக vs விடுதலைப்புலிகள் என்கிற எதிர்நிலைப்பாடுகள் இணையத்தளங்களில் புலம்பெயர் புலி ஆதரவாளர்களாலும், தமிழகத்தில் பிறந்த திமுக ஆதரவாளர்களாலும் எடுக்கப்படுவது அபத்தமானது. புலிகள் இல்லாத நிலையில் புலி ஆதரவு என்பது பணம் கொழிக்கும் தொழிலாக 2009க்கு பிறகு மாறிவிட்ட கொடுமையான சூழலில், தங்கள் சுயநலத்துக்கு திமுகவை வில்லனாக சுட்டும் துரோகிகளால் உருவாகியிருக்கும் நிலை இது. தங்கள் தலைவர்களும், இயக்கமும் அபாண்டமாக அவதூறு செய்யப்படும் நிலையில், அதற்கு நிஜமான காரணகர்த்தாக்களை சாடுவதை விட்டுவிட்டு, களத்திலேயே இல்லாத புலிகள் மீது பாய்வதும், அவர்களது வீரவரலாறு திமுகவினரால் கொச்சைப்படுத்தப்படுவதும் துரதிருஷ்டவசமானது.

உண்மையைச் சொல்லப்போனால் எண்ணற்ற துரோகிகள் தங்கள் தவறுகளை மறைக்கவே நிஜத்தில் இல்லாத ஒரு முரண்பாடாக ‘திமுக vs விடுதலைப்புலிகள்’ என்கிற conspiracy theoryயை உருவாக்கி, குளிர் காய்கிறார்கள். விடுதலைப்புலிகளுக்காக வெளிநாடுகளில் திரட்டப்பட்ட பெரும் பணத்தை பங்கு போட்டுக் கொள்வதற்காக திட்டமிட்டு நடத்தப்பட்ட, நடத்தப்படும் நாடகமே இது.

திமுகவைப் பொறுத்தவரை ஈழத்தில் தமிழர்கள் ஒற்றுமையான சூழலில் தமிழீழம் பெறக்கூடிய அரசியல் நிலைப்பாட்டை ஆதரித்தது. எண்பதுகளின் மத்தியில் அவர்களுக்குள் உருவான முரண்பாடுகளை சங்கடத்தோடு பார்த்தது. ‘சகோதர யுத்தம் வேண்டாம்’ என்று கேட்டுக் கொண்டது. திமுக எதை உத்தேசித்து எண்பதுகளில் கவலைப்பட்டதோ அதுவே கிட்டத்தட்ட 25 ஆண்டு காலம் கழித்து 2009ல் நடந்தது. 60களின் தொடக்கத்தில் ‘சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்’ என்கிற நிலைப்பாட்டை திமுக எடுத்திருக்கவில்லையென்றால், தமிழகத்துக்கும் எமர்ஜென்ஸியின்போது அதுவே நடந்திருக்கும்.

விடுதலைப்புலிகள் இன்று இல்லாத சூழலில் தமிழீழம் என்பது பகற்கனவே. இருக்கட்டுமே? என்றோ ஒருநாள் தமிழர்களுக்கென்று ஒரு நாடு உருவாக இந்த கனவு மட்டுமாவது மிஞ்சியிருக்கட்டும். வரலாற்றிலிருந்து நாம் கற்கவேண்டிய பாடங்கள் நிறைய இருக்கின்றன. வம்புச்சண்டைகளால் அந்த வாய்ப்பை இழந்துவிடக்கூடாது.

30 ஏப்ரல், 2019

ஊருக்குதான் உபதேசமா?

ரத்தன் டாட்டாவை தெரியாதவர்கள், இந்தியாவில் மிகவும் அரிதானவர்கள். டாட்டா என்பது இந்தியாவில் 150 வயது தொழில் சாம்ராஜ்ஜியம். இரும்பில் தொடங்கி உப்பு வரை அவர்கள் ஈடுபடாத தொழிலே இல்லை. அதன் தலைவராக இருந்த ரத்தன் டாட்டா வெறித்தனமான கார் பிரியர். பெராரி, மெர்சிடிஸ் பென்ஸ், லேண்ட்ரோவர், கேடிலாக், கிறிஸ்லெர் என்று அவரது காரேஜில் இல்லாத அயல்நாட்டு கார்வகைகளே இல்லை.

இருப்பினும் –

முக்கியமான நிகழ்வுகளுக்கு அவரது டாட்டா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பான ‘டாட்டா நிக்ஸான்’ காரில்தான் ஜம்மென்று வந்து இறங்குவார். அது மட்டுமின்றி தன்னுடைய குழுமத்தைச் சார்ந்தவர்களும் டாட்டா நிறுவனத்தின் தயாரிப்புகளைதான் பயன்படுத்துகிறார்களா என்று கவனிப்பார்.

அவ்வளவு ஏன்?

ரத்தன் டாட்டா, கார் பிரியர் மட்டுமல்ல. நாய் பிரியரும் கூட. தன்னுடைய செல்லப் பிராணிகள் குதூகலமாக பயணிப்பதற்காகவே ஒரு கார் வைத்திருக்கிறார். நாய்கள் வசதியாக அமருவதற்கு ஏதுவாக அதில் இருக்கைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அதுவும் டாட்டா தயாரிப்பான ‘இண்டிகோ மரீனா’ கார்தான்.

இதற்குப் பெயர் எளிமை அல்ல. Brand Promotion. தன்னுடைய brandஐ தானே நம்பிப் பயன்படுத்தவில்லை எனில், வாடிக்கையாளர்களை எப்படி திருப்திப்படுத்த முடியும் என்கிற நியாயமான கவலையும் அவருக்கு உண்டு.

ரத்தன் டாட்டா ஒரு பக்கம் இருக்கட்டும்.

Brand Loyaltyக்கு வருவோம்.

ஒரு பொருளை வாங்கும் போதோ, ஒரு சேவையை பயன்படுத்தும் போதோ ஒரு குறிப்பிட்ட நிறுவனம் தயாரித்த பொருளைதான் வாங்குவேன் / சேவையைதான் பயன்படுத்துவேன் என்று ஒரு வாடிக்கையாளர் தீர்க்கமான முடிவெடுத்து வைத்திருப்பதைதான் brand loyalty என்று விளம்பரத்துறை மொழியில் குறிப்பிடுகிறார்கள்.

அத்தகைய விசுவாசத்தை வாடிக்கையாளர்களுக்கு உருவாக்குவதற்குதான் லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் விளம்பரம் செய்கிறார்கள். உங்கள் கண்ணில் படும் இடங்களிலெல்லாம் அவர்களது brand nameஐ நினைவுறுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.

சினிமா நட்சத்திரங்கள், கிரிக்கெட் வீரர்கள், ஏனைய துறை பிரபலங்கள் ஏதாவது ஒரு தயாரிப்பையோ, சேவையையோ பயன்படுத்தும்படி பத்திரிகை மற்றும் டிவி விளம்பரங்களில் உங்களை வற்புறுத்திக் கொண்டே வருகிறார்கள்.

ஒரு நிறுவனம் நீண்டகாலமாக தொழில் செய்ய வேண்டுமெனில் தன்னுடைய வாடிக்கையாளர்களிடையே தன்னுடைய தயாரிப்பு குறித்த brand loyalty-ஐ உருவாக்கியே ஆகவேண்டும். நீங்கள் நீண்டகாலமாக ‘குங்குமம்’ வாசிக்கிறீர்கள் எனில், எங்கள் இதழ் மீது உங்களுக்கு இருக்கக்கூடிய brand loyalty-க்கு இச்சந்தர்ப்பத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

அடுத்து, விஷயத்துக்கு வருவோம்.

வெறுமனே ஒரு தயாரிப்பின் அருமை, பெருமைகளை பற்றி எடுத்துச் சொல்லி மட்டுமே ஒரு வாடிக்கையாளரை, விசுவாசியாக எந்த நிறுவனத்தாலும் மாற்றிவிட முடியாது.

இங்குதான் brand ambassador-களின் தேவை ஏற்படுகிறது. இப்போது நீங்கள் ‘லக்ஸ்’ சோப் பயன்படுத்துபவர் என்றால், அந்த சோப்பை விளம்பரங்களில் ஐஸ்வர்யா ராயோ, கரீனா கபூரோ, கத்ரினா கைஃபோ உங்களுக்கு பரிந்துரைத்திருப்பார் இல்லையா? அவர்தான் ‘லக்ஸ்’ சோப்பின் brand ambassador.

வணிகப் பொருட்களை / சேவைகளை விற்பதற்காக நியமிக்கப்படும் brand ambassador-களுக்கு சம்மந்தப்பட்ட நிறுவனங்கள், தங்கள் விளம்பரங்களில் தோன்றுவதற்காக பெரும் பணம் வழங்குவது உண்டு. தங்கள் நிறுவனத்துக்கு இத்தனை ஆண்டுகள் தூதராக இருக்க வேண்டுமென்று முன்கூட்டியே ஒப்பந்தங்களும் போட்டுக் கொள்வது உண்டு.

‘என்னுடைய ஆற்றலுக்கு இந்த பானம்தான் காரணம்’ என்று டிவியில் சிரித்தவாறே சொல்லும் விளையாட்டு வீரர், அந்த பானத்தைதான் அருந்துகிறாரா என்பதெல்லாம் நமக்குத் தெரியாது. ஆனால், அவர் நமக்குப் பிடித்தமானவர் என்றால் அவர் பரிந்துரைக்கும் brand, நம்மை அறியாமலேயே நம்முடைய மனதுக்குள் நிரந்தர இடம் போட்டு அமர்ந்து விடுகிறது.

அதாவது நமக்குப் பிடித்த சினிமா நடிகர், நடிகை மற்றும் விளையாட்டு வீரர்கள் பரிந்துரைக்கும் brand-க்கு நம்மையறியாமலேயே நாம் brand loyalty கொண்டவர்களாக மாறிவிடுகிறோம்.

அப்படியெனில், நமக்கு பரிந்துரைப்பவர்கள் எவ்வளவு பொறுப்பாக இருக்க வேண்டும்? வெறுமனே காசுக்காகவோ, புகழுக்காகவோ ஒரு தப்பான தயாரிப்பையோ / சேவையையோ முன்னிறுத்தி அவர்கள் விளம்பரங்களில் நடிக்கக்கூடாதுதானே?

இது விளம்பரத்துறையின் அடிப்படை அறம் (basic ethics).

வணிகத் தயாரிப்பு / சேவைகளை விட்டுத் தள்ளுங்கள்.

விழிப்புணர்வு விளம்பரங்களுக்கு வருவோம்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஆரம்பக் காலங்களில் விரல் விட்டு எண்ணக்கூடிய விளம்பரங்களில் மட்டுமே இதுவரை தோன்றியிருக்கிறார். ஒருக்கட்டத்தில் விளம்பரங்களில் நடிப்பதற்காக தன்னை யாரும் அணுகவேண்டாம் என்று வெளிப்படையாகவே அறிவித்து விட்டார்.

அப்படிப்பட்டவர், ஒரு விளம்பரத்தில் தோன்றி, அது மக்கள் மத்தியில் பிரபலமாகி, அவரால் பெரும் விழிப்புணர்வு நம் தமிழகத்தில் ஏற்பட்டது.

ஆம்.

போலியோ தடுப்புக்காக சொட்டு மருந்து போடச்சொல்லிய ஒரு விழிப்புணர்வு விளம்பரத்தில், தன்னுடைய தனிப்பட்ட விளம்பரக் கொள்கையை தவிர்த்துவிட்டு தோன்றினார் ரஜினிகாந்த்.

ரஜினி சொன்னதாலேயே, சொட்டு மருந்து குறித்து தயக்கம் கொண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பாமரர்கள், தங்கள் குழந்தைக்கு சொட்டு மருந்து போடுவதற்கு கூட்டம் கூட்டமாக முன்வந்தனர். ஆச்சரியகரமான வகையில் தமிழகமெங்கும் போலியோ குறித்த விழிப்புணர்வு எல்லாத் தரப்புக்கும் வேகமாக பரவியது.

இந்த விழிப்புணர்வு விளம்பரத்துக்காக ரஜினி, வெகுமதி எதுவும் பெறவில்லை. தன்னை ஆளாக்கிய சமூகத்துக்கு நன்றிக்கடனாக செய்துக் கொடுத்தார்.

பொதுவாக லாபம்சாரா சேவைப்பணிகளுக்காக பிரபலங்கள் இதுபோன்ற விளம்பரங்களில் பங்கேற்கும்போது, அதை தங்களுடைய சமூகக்கடமைகளில் ஒன்றாகக் கருதியே செய்துத் தருகிறார்கள்.

ரஜினியைப் போலவே கமல்ஹாசன், வருமானவரித்துறை விளம்பரங்களில் தோன்றி வருமானவரி கட்ட வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்தி இருக்கிறார். வரி கட்டாத பணம், கருப்புப் பணமாகி விடும் என்று அந்த விளம்பரங்களில் எச்சரித்திருக்கிறார்.

மக்களுக்கு விழிப்புணர்வுத் தூதர்களாக பணியாற்றிய இந்த இருவரை மட்டுமே எடுத்துக் கொள்வோம்.

ஒருவேளை ரஜினி தன் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்காமல் இருந்திருந்தால், கமல்ஹாசன் முறையாக வருமானவரி கணக்கு காட்டாமல் இருந்திருந்தால்.. மற்றவர்களுக்கு டிவியில் தோன்றி உபதேசம் செய்யும் தகுதி அவர்களுக்கு இருந்திருக்குமா?

இல்லைதானே?

அதேதான். தாங்கள் பரிந்துரைக்கும் ஒரு விஷயத்துக்கு விசுவாசமாக பிரபலங்கள் நடந்துக் கொள்வதும் brand loyaltyதான். இப்போது ரத்தன்சிங் டாட்டா, தன்னுடைய சொந்தத் தயாரிப்பு கார்களை பயன்படுத்துவதின் நியாயம் புரியவந்திருக்குமே?

சில நேரங்களில் பிரபலங்கள், தங்களுடைய இந்தக் கடமையிலிருந்து விலகி விட நேர்வதுதான் அவலம்.

சிகரெட் குடிக்கும் ஒருவரே, சிகரெட் பிடிக்காதீர் என்று விளம்பரங்களில் தோன்றி உபதேசம் செய்தால் சரியாக இருக்குமா?

இப்போது கிரிக்கெட் வீரர், ராகுல் டிராவிட்டை எடுத்துக் கொள்வோம்.

‘அனைவரும் வாக்களிக்க வேண்டும்’ என்று டிவியிலும், பத்திரிகையிலும், இண்டர்நெட்டிலும் தேர்தல் கமிஷன் சார்பாக விளம்பரத் தூதராக பணியாற்றிக் கொண்டிருப்பவர் இந்தியாவின் கிரிக்கெட் பெரும் சுவர் என்று வர்ணிக்கப்படும் பிரபல கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட்.

ஜனநாயகக் கடமையை பல கோடி பேருக்கு நினைவுறுத்தும் தூதராக அவர் இருப்பதற்கு காரணம் அவரது பிரபலம்தான்.

அப்படிப்பட்டவரே, இந்த பாராளுமன்றத் தேர்தலில் வாக்களிக்கப் போவதில்லை என்பதுதான் வேதனை.

தன்னுடைய வீட்டை மாற்றும்போது பழைய முகவரியில் இருந்த தன் பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து படிவம் கொடுத்து நீக்கியுள்ளார்.

ஆனால் –

புதிய முகவரியில் தன்னுடைய பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் படிவத்தை அவர் பூர்த்தி செய்துத் தராததால், வாக்களியுங்கள் என்று இந்தியாவுக்கே பாடம் நடத்தும் ராகுல்திராவிட்டால் வாக்களிக்க முடியவில்லை.

இதைதான் ஊருக்கு உபதேசம் என்பது.

சொல்லைவிட செயல்தான் முக்கியம் இல்லையா?

(நன்றி : குங்குமம்)

8 மார்ச், 2019

பெண்ணியம் : ஒரு கட்டிங்!

பத்தொன்பதாம் நூற்றாண்டில்தான் ‘பெண்ணியம்’ (feminism) என்கிற சொல்லே உருவாகிறது. ஆரம்பக் கட்டத்தில் பெண்ணியம் பேசியவர்கள் 99 சதவிகிதம் ஆண்களே. Feminism என்கிற வார்த்தையை முதன்முதலாக உருவாக்கியவருமே கூட பிரெஞ்சு சிந்தனையாளரான ஓர் ஆண்தான்.

நாடுகள் குடியரசாக ஆகிக்கொண்டிருந்த காலக்கட்டத்தில் தங்களுக்கு வாக்குரிமை கேட்டு பெண்கள் போராடியதே பரந்துப்பட்ட சமூக அளவில் முதல் பெண்ணிய உரிமைக்குரல் எனலாம். இது பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி மற்றும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கநிலை.

உலகப்போர்கள் நடந்துக் கொண்டிருந்தபோது போரில் ஈடுபட்டிருந்தவர்கள் பெரும்பாலும் ஆண்கள். அப்போது போரில் ஈடுபட்ட நாடுகளின் உள்நாட்டு உற்பத்தியை தீர்மானிக்கக்கூடிய சக்தியாக பெண்களே இருந்தார்கள். அதையடுத்து போர்களுக்குப் பின்னரான காலக்கட்டமான இருபதாம் நூற்றாண்டின் மத்தியில்தான் குடும்பத்தில் தொடங்கி சமூகம், நாடு, உலகம் என்று எல்லைகளை வரையறுக்காமல் ‘ஆணுக்குப் பெண் சமம்’ என்கிற குரல் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்தது.

பெண்ணியம் என்பது குடும்பம், சமூகம், அரசியல் மற்றும் பொருளாதாரத் தளங்களில் ஆணுக்கு இணையான இடத்தை பெண்ணுக்கும் கோருவது என்பதாக புரிந்துக் கொள்ளலாம்.

தொண்ணூறுகளில் உலகமயமாக்கலுக்குப் பின்னான பெண்ணியச் சிந்தனைகள் வேறு புதிய பரிமாணங்களை எட்டியது. இதை வார்த்தைகளில் வரையறை செய்ய இயலாது. தங்கள் உடையை தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தில் தொடங்கிய, இந்த பெண்ணிய அலை இப்போது தங்கள் உடல் குறித்த அரசியலை விவாதிப்பதைக் கடந்து வேறு வேறு அதீத எல்லைகளை நோக்கிச் சென்றுக் கொண்டிருக்கிறது.

வரலாற்று அடிப்படையில் ‘இது நல்லது’, ‘இது கெட்டது’ என்றெல்லாம் நிகழ்வுகள் நடக்கக்கூட சமகாலத்தில் யாராலும் துல்லியமாக கூறிவிட முடியாது. எது நல்லது, எது கெட்டது என்பதையெல்லாம் எதிர்காலம் முடிவு செய்துக் கொள்ளட்டும்.

சரி, விஷயத்துக்கு வருவோம்.

கடந்த வாரம் ‘90 ml’ என்கிற பெண்ணியம் பேசும் திரைப்படம், தமிழகமெங்கும் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது.

’90 ml’ என்பது ‘குடி’மகன்களுக்கு கவர்ச்சிகரமான அளவு. மதுவிடுதிகளில் “ஒரு லார்ஜ், ஒரு ஸ்மால்” என்று ஆர்டர் கொடுப்பார்களே, அந்த அளவுதான் 90 ml. நம் டாஸ்மாக் கடைகளின் அளவீடுகளின் அடிப்படையில் சொல்ல வேண்டுமானால் ‘ஒரு கட்டிங்’.

சில ஆண்டுகளுக்கு முன்பு, ‘சரக்கு’க்காக ராத்திரி முழுக்க தெருத்தெருவாக அலையும் ஓர் ஆணின் கதை ‘வ - குவார்ட்டர் கட்டிங்’ என்கிற தலைப்பில் வெளியானது. அதே போல ஐந்து பெண்கள் கூடி சரக்கு போடும் படத்துக்கு ’90 ml’ என்று தலைப்பு வைத்திருப்பது பொருத்தமானதுதான்.

தொண்ணூறுகளுக்குப் பிறகான உலகமயமாக்கல் சூழலில் பெண்ணியம் என்ன பாடுபடுகிறது என்பதற்கு சரியான உதாரணம் காட்ட வேண்டுமானால் ’90 ml’ஐ காட்டலாம்.

‘ஆண் சரக்கு அடிக்கும்போது, நாங்கள் அடிக்கக் கூடாதா?’ என்று பெண்கள் கேட்டால் அது சம உரிமை கோருவது மாதிரியான நியாயமான கேள்வியாகதான் இருக்கக்கூடும்.

ஆனால் –

போதைப்பழக்கம் என்பது ஆண், பெண் இருபாலருக்குமே உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் தீங்கு விளைவிக்கும் என்பதே மருத்துவ உண்மை.

’90 ml’ படத்தில் ஐந்து பெண்கள் அவ்வப்போது சரக்கு அடிக்கிறார்கள். அந்த ஐந்துப் பெண்களில் தலைவி மாதிரி இருக்கும் ஓவியாவின் ஆண் நண்பர், சைட் டிஷ்ஷாக ஹாஃப்பாயில் போட்டுக் கொடுக்கிறார்.

இம்மாதிரி குடியும் குடித்தனமுமான கூட்டங்களில் ஓவியாவும், அவரது குழுவினரும் முழுக்க பேசிக்கொள்வது ‘டபுள் மீனிங்’ அல்ல ‘டைரக்ட் மீனிங்’ வசனங்கள். குறிப்பாக பெண்களின் உடல் அங்கங்கள் குறித்த கேலியான வருணனை, பேச்சுலர் ரூம்களில் நடபெறும் டிரிங்ஸ் பார்ட்டிகளின் எல்லையையே கூட மீறுகிறது.

பெண்கள் தனியாக பேசும்போது இப்படித்தான் பேசுவார்களா என்று இந்தக் கட்டுரையை எழுதும் ஆணுக்குத் தெரியாது. எனினும், அவ்வாறுதான் பேசுவார்கள் என்றால் பெண்களுக்குள்ளேயே ‘ஆணாதிக்கம்’ இருப்பதாகதான் எண்ண வேண்டியிருக்கிறது.

படத்தில் ஓரினச்சேர்க்கையில் ஆர்வம் கொண்ட லெஸ்பியன் தம்பதியினர் காட்டப்படுகிறார்கள். ‘ஓரினச்சேர்க்கை சட்டத்துக்கு விரோதமானது அல்ல’ என்கிற உச்சநீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பை சுட்டிக்காட்டி இந்த பாத்திரங்கள் சித்தரிக்கப்படுகின்றன.

ஆனால் –

படம் முழுக்கவே அத்தம்பதியினர் குறித்த கேலியான பார்வையையே மற்ற பாத்திரங்கள் கொண்டிருக்கிறார்கள், பாலியல்ரீதியான நகைச்சுவை அவர்களை வைத்து உருவாக்கப்படுகிறது எனும்போது அம்மாதிரியான ‘முற்போக்கு’ சித்தரிப்பின் நோக்கமே பழுதுபடுகிறது.

படத்தின் மையப்பாத்திரமாக ஓவியா வருகிறார். ‘திருமணம்’ உள்ளிட்ட சமூகத்தின் எவ்விதமான கட்டுமானங்களிலும் தன்னை பொருத்திக்கொள்ள முடியாது என்கிற சுதந்திர மனப்பான்மை கொண்டவர். அவர் அவராக இருப்பது பிரச்சினையில்லை. அவருடன் பழகும் மற்றப் பெண்களையும் அவராகவே மாற்றும் முயற்சியில் அவரது பாத்திரம் படைக்கப்பட்டிருப்பது நெருடல். குடிக்கத் தூண்டுகிறார், கஞ்சா புகைக்க அழைத்துச் செல்கிறார், குடும்பத்தாரோடு அவரவருக்கு இருக்கும் முரண்களை தீர்க்க உறவுகளையே வெட்டிவிடும் தீர்வினைதான் முன்வைக்கிறார்.

‘அவரவர் அவரவருக்கு விருப்பப்பட்டவர்களோடு இருந்துக் கொள்ளலாம்’ என்கிற ஓவியா கொடுக்கும் பாதைதான் நம்முடைய குடும்பப் பிரச்சினைகளுக்கெல்லாம் தீர்வாக முடியுமா?

இக்கட்டுரையை எழுதுபவர் ஓர் ஆண் என்கிற அடிப்படையில் ஓவியா முன்வைக்கும் பெண்ணிய நியாயத்தை அவரால் முழுவதுமாக உணரமுடியாமல் கூட இருக்கலாம். எனினும், இப்படம் இளைய தலைமுறையினரின் சிந்தனைகளில் ஏற்படுத்தக்கூடிய விபரீதங்களை சுட்டிக் காட்டுவதற்கு அவர் ஆணாக இருப்பது நிச்சயமாக தகுதிக்குறைவு அல்ல.

பெண்ணியத்தை நாம் ‘90 ml’ ஓவியாவிடம் இருந்துதான் கற்க வேண்டுமா அல்லது அன்றாடம் நாம் காணும் பூக்கட்டி விற்பது, இட்லி சுட்டு விற்பது என்று குடும்பச்சுமைகளை சுகமாக கருதி தாங்கி, தங்களையும் தங்கள் குடும்பத்தையும் முன்னேற்றும் அமைப்புச்சாராத் தொழில் செய்யும் விளிம்புநிலை பெண்களிடமிருந்து கற்கவேண்டுமா?

(நன்றி : குங்குமம்)

25 பிப்ரவரி, 2019

அது ஒரு கொண்டாட்டமான காலம்!


“மதம் கொண்ட யானை என்ன செய்யும் தெரியுமா?”

“சினம் கொண்ட சிங்கத்திடம் தோற்று ஓடிப் போகும்”

திரையில் நம்பியாரின் ‘பஞ்ச்’ டயலாக்குக்கு, ‘ஆயிரத்தில் ஒருவன்’ எம்.ஜி.ஆர் கவுண்டர் கொடுக்கிறார்.

மக்கள் ‘ஓ’ வென்று கத்துகிறார்கள். விசில் சப்தம் விண்ணைப் பிளக்கிறது.

மணல் பரப்பப்பட்ட தரையில் ஓம்பிரகாஷ் மாமாவின் மடியில் தலை வைத்து தூங்கிக் கொண்டிருந்த ஐந்து வயது சிறுவனான நான் அதிர்ந்து, முழித்து எதிரே வண்ணத்திரையில் கையில் வாளோடு ஜெயலலிதாவை நோக்கி புன்னகையும், நம்பியாரை நோக்கி ஆவேசமுமாக நின்றுக் கொண்டிருந்த வாத்யாரை கண்டு எல்லோரையும் போல ஆர்ப்பரித்தேன். சண்டைக்காட்சி முடிந்தவுடன் மீண்டும் மாமாவின் மடியில் தூக்கம்.

அதிகாலை ஒரு மணிக்கு படம் முடிய ஓம் பிரகாஷ் மாமா, பாலாஜி அண்ணா, செந்தில் அண்ணா, பிரபா அண்ணா என்று அனைவரும் மாறி மாறி என்னைத் தூக்கிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தார்கள். வழிநெடுக வாத்யாரின் வாள்வீச்சு, நம்பியாரின் நரித்தந்திரம், ஆர்.எஸ்.மனோகரின் கம்பீரமான வில்லத்தனம், ஜெயலலிதாவின் அசரடிக்கும் பேரழகு என்று பேசிக்கொண்டே வந்தார்கள். அரைத்தூக்கத்தில் அவர்களது பேச்சு கொடுத்த ஆர்வம்தான், இன்றுவரை என்னை சினிமாப் பைத்தியமாக வைத்திருக்கிறது.

என்னைப் போன்று நாற்பதைத் தொட்டுவிட்டவர்களுக்கு இதுபோல நிறைய பால்யகால நினைவுகளை டூரிங் கொட்டாய்கள் வாழ்நாள் முழுக்க விதைத்திருக்கிறது. மறக்க முடியாத இரவு. என் நாடி, நரம்பு, ரத்தம், சதையில் எல்லாம் சினிமாவை குளுகோஸாக ஏற்றிய இரவு.

பரபரப்பான சென்னை மாநகராட்சியின் அங்கமாகிவிட்ட மடிப்பாக்கத்தில் தனலட்சுமி என்றொரு டெண்டு கொட்டாய் இயங்கியது என்று சொன்னால், அங்கே வசிக்கும் இன்றைய இளையதலைமுறையினர் நம்பவே மாட்டார்கள். அந்த கொட்டாய் இருந்த இடத்தில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் இப்போது டிடிஎஸ், க்யூப் டிஜிட்டல் புரொஜெக்ஷன், ஏசி உள்ளிட்ட நவீன வசதிகளோடு குமரன் என்கிற தியேட்டர் இயங்கிக் கொண்டிருக்கிறது.

தரை டிக்கெட் 50 காசு. பெஞ்ச் 75 காசு. இரும்பு சேர் 1 ரூபாய் என்பது கட்டண விவரம். சைக்கிள் டோக்கன் 25 காசு என்று நினைவு. எட்டணாவுக்கு ருசியான ரவி சோடா ஃபேக்டரின் ஜில்லென்ற சோடா கிடைக்கும். நிறைய வெங்காயம் போட்ட சமோசா நாலணாதான். முறுக்கு, அவித்த வேர்க்கடலை எல்லாம் ரொம்ப சல்லிசான ரேட்டு. ஒரு குடும்பமே வெறும் பத்து ரூபாயில் தனலட்சுமியில் சந்தோஷமாக படம் பார்க்கலாம்.

இன்று அங்கேயே இருக்கும் குமரன் தியேட்டரில் பார்க்க வேண்டுமானால் பார்க்கிங், டிக்கெட் கட்டணம், Food & beveragesக்கு எல்லாம் சேர்த்து ஆயிரம் ரூபாயாவது மொய் வைக்க வேண்டியிருக்கிறது.

என்னுடைய அப்பா, வெறும் பத்து ரூபாயில் எங்கள் குடும்பத்துக்கு கொடுத்த சந்தோஷத்தை, நான் என் குடும்பத்துக்கு நூறு மடங்கு செலவழித்துக் கொடுக்க வேண்டியிருக்கிறது. வெறும் முப்பத்தைந்து ஆண்டுகளில் இப்படியொரு விலையேற்றம் வேறு எந்தத் துறையிலும் நடந்திருக்குமா என்பது சந்தேகம்தான்.

மடிப்பக்கத்தில் மட்டுமல்ல. தமிழகம் முழுக்கவே பெரிய நகரங்களின் புறநகர், சிறுநகர், கிராமங்களில் எல்லாம் டூரிங் கொட்டாய்கள் சக்கைப்போடு போட்ட காலம் ஒன்று உண்டு. பழைய எம்.ஜி.ஆர் - சிவாஜி படங்களோடு ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ் என்று எங்கள் கால ஹீரோக்களின் படங்களையெல்லாம் நாங்கள் நூற்றுக்கணக்கில் அங்கேதான் மகிழ்ச்சியாக குடும்பமாக கண்டுகளித்தோம். வாரத்துக்கு இரண்டு படம் மாற்றுவார்கள். ஒரு பழைய படம், வார இறுதிக்கு புதிய படம் என்று காம்பினேஷன். வாரத்தில் எல்லாக் கிழமைகளிலும் மாலை 6 மணிக்கு, இரவு 9 மணிக்கு என்று இரண்டு காட்சிகள். சனி, ஞாயிறு மட்டும் மதியம் 3 மணிக்கு சிறப்பு மேட்னி காட்சி உண்டு.

சினிமாவைத் தவிர்த்தால் எங்களுக்கெல்லாம் வேறென்ன பொழுதுபோக்கு இருந்தது?

அதே மடிப்பாக்கம் தனலட்சுமி, சில ஆண்டுகள் கழித்து கீழ்க்கட்டளை என்கிற ஊரில் இயங்கியது. டெண்டு கொட்டாய்களுக்கு, மற்ற நிரந்தர அரங்குகளுக்கு தருவதைப் போல பர்மணென்ட் லைசென்ஸ் கிடையாது. ஐந்து ஆண்டுகளுக்கு டெம்பரவரி லைசென்ஸ்தான் தருவார்கள். லைசென்ஸ் முடிந்தபிறகு ஏற்கனவே இயங்கிய இடத்திலோ அல்லது அருகில் வேறேதும் புதிய வசதியான இடத்திலோ மீண்டும் குடிசை போட்டு ‘புதுப்பொலிவோடு’ படம் ஓட்டுவார்கள். கடைசியாக, பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு கீழ்க்கட்டளை தனலட்சுமி தியேட்டரில் சிம்பு நடித்த ‘தம்’ பார்த்ததாக நினைவு. இப்போது தனலட்சுமி, அங்கே இல்லை.


‘நியூஸ் மினிட்’ ஆங்கில இணைய இதழில் வந்திருக்கும் கட்டுரை ஒன்று மீண்டும் டூரிங் கொட்டாய் நினைவுகளில் என்னை உலவச் செய்திருக்கிறது.

இப்போது டூரிங் கொட்டாய்களே தமிழகத்தில் இல்லையென்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன்.

வேலூர் மாவட்டத்தின் புத்துக்காடு என்கிற ஊரில் கடந்த 1985ல் இருந்து இன்றுவரை ‘கணேஷ் திரை அரங்கம்’ என்கிற டூரிங் கொட்டாய் சிறப்பாக நடந்து வருகிறது என்று தகவல் கொடுக்கிறது ‘நியூஸ் மினிட்’.

பி.கே.கணேசன் என்பவர், இந்திய திரையரங்கை நடத்தி வருகிறார். புத்தூர், ‘பராசக்தி’யை தயாரித்த நேஷனல் பிக்சர்ஸ் பி.ஏ.பெருமாளின் சொந்த ஊர். பெருமாள், உயிரோடு இருந்தவரை சிவாஜி வருடாவருடம் இந்த ஊருக்கு வருவாராம். எனவே, ஊர் முழுக்க சிவாஜி ரசிகர்கள் என்கிறார்கள்.


பெரிய திரையரங்குகளில் இடம்பெற்றிருப்பதை போல சிறப்பான வெண்திரை, கியூப் புரொஜெக்ஷன், டிடிஎஸ் ஒலியமைப்பு (7.1 சேனல்) என்றெல்லாம் இருந்தும் இன்னமும் பழமை மாறாமல் மணல் தரை வசதியோடு இந்த அரங்கம் நடந்துக் கொண்டிருக்கிறது.

நகரங்களில் இருக்கும் நவீன தியேட்டர்களில் வாரநாட்களில் ரசிகர்கள் இல்லாமல் அரங்கங்கள் காற்றாட, இன்னமும் நூற்றுக்கணக்கான ரசிகர்களின் ஆதரவோடு படங்கள் இங்கே திரையிடப் படுகின்றனவாம். விஜய், ரஜினி, அஜித் போன்ற ஹீரோக்களின் படங்கள் திரையிடப்படும் போதெல்லாம் 400, 500 டிக்கெட் கூட ஒரு காட்சிக்கு விற்கப்படுவதுண்டாம். தரை டிக்கெட் 25 ரூபாய், 30 ரூபாய் சேர் டிக்கெட், 40 ரூபாய் பாக்ஸ் டிக்கெட் என்று கட்டணம் நிர்ணயித்திருக்கிறார்கள்.

புத்தூர் ‘கணேஷ் திரை அரங்கம்’ போல தமிழகம் முழுக்க மலிவு விலையில் படம் காட்டக்கூடிய டெண்ட் கொட்டாய்கள் மீண்டும் உருவாக்கப்படுவதே, ‘தமிழ் ராக்கர்ஸ்’ போன்ற திரையுலகப் பிரச்சினைகளுக்கு முடிவு கட்டும். ஒவ்வொரு படத்துக்கும் தயாரிப்பாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்களுக்கு குறைவாக கிடைத்தாலும், நிறைவாக நீண்டகாலத்துக்கு வருமானம் கிடைத்துக்கொண்டே இருக்கும்.

திரையுலகம் இதைப்பற்றி யோசிக்க வேண்டும். அந்த பொற்காலம் மீண்டும் திரும்ப ‘சி’ சென்டர் தியேட்டர்கள் நிறைய பெருகுவதே ஒரே வழி.


(நன்றி : குங்குமம்)

29 டிசம்பர், 2018

ஆயிரம் books கண்ட அபூர்வ சிகாமணி!

ஆயிரம் books கண்ட அபூர்வ சிகாமணி  என்கிற இந்தப் பட்டத்தை, ஒரு காலத்தில் முப்பது சிறுகதைகள் எழுதி, தொண்ணூறுகளிலேயே இலக்கிய மெனோபாஸ் அடைந்துவிட்ட குடுகுடு எழுத்தாளர் விமலாதித்த மாமல்லன் அவர்களுக்கு வழங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

அவருக்கு ‘மச்சி சார்’ என்கிற உயரிய இலக்கியப் பட்டத்தையும் ஏற்கனவே வழங்கியவர்கள் நாம்தான். அவர் ஆறு புத்தகத்தை கூட வாசித்தவர் இல்லையே, ஏன் இந்த திடீர் ஆயிரப் பட்டம் என்று அவரை அறிந்தவர்கள் குழம்புவார்கள்.

ப்ரூஃப்ரீடிங் செய்வதில் மச்சி சார் வல்லவர். தியேட்டர் பாத்ரூம் சுவர்களில் யாராவது ‘குதி’ என்று எழுதிவிட்டுப் போனால்கூட, கரித்துண்டு வைத்து அந்த எழுத்துப் பிழையை சரிசெய்துவிட்டுதான் ஜிப்பையே அவிழ்ப்பார். நாம் அவருக்குக் கொடுத்திருக்கும் இந்த லேட்டஸ்ட் பட்டத்திலும் ஓர் எழுத்துப்பிழை விட்டிருக்கிறோம். ‘k' என்று தவறாக எழுதப்பட்டிருப்பதை ‘b' என்று மச்சிசாரே ப்ரூஃப் மிஸ்டேக் திருத்தி எழுதிப் படித்துக் கொள்வார்.

அவ்வளவுதான் மேட்டர்.
ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இணையத்தில் யாருடனேயோ மச்சி சாருக்கு சண்டை. ஸ்க்ரீன்ஷாட் எடுப்பதற்காகவே பிறப்பெடுத்த மச்சி சார், அந்த சண்டை தொடர்பாக ஒரு ஸ்க்ரீன்ஷாட் எடுத்துப் போட்டிருந்தார். அதில்தான் அவருடைய இலக்கியத்தேடல் எவ்வளவு ‘பெருசு’ என்பதை எல்லோரும் அறிந்தோம்.

மினிமைஸ் செய்யப்பட்டிருந்த கூகிள் இமேஜஸ் தேடல் டேப்பில் மச்சி சார் டைப் செய்து தேடியிருந்த இலக்கிய குறிச்சொல் deepa boobs. கூகிள் பிளஸ்ஸில் அம்பலப்படுத்தப்பட்டு, இணையமே சிரிப்பாய் சிரித்த நிகழ்வு அது. ‘தீபா பீப்பாயை தேடுறது அவ்ளோ பெரிய குத்தமாய்யா?’ என்று மச்சி சாரே நாணத்தோடு ஒப்புக்கொண்ட அஜால்குஜால் மேட்டர் அது.

தப்புன்னு சொல்ல முடியாது மச்சி சார். ஆனா, அதையெல்லாம் தொப்புள் பார்க்குற எங்க ஜல்லிக்கட்டு வயசுலே நீங்க செஞ்சிருக்கணும். அப்படி செஞ்சிருந்தா நார்மல். ராமா, கிருஷ்ணான்னு காசி ராமேஸ்வரத்துக்குப் போகிற ரிட்டையர்ட் வயசுலேயும் செஞ்சுக்கிட்டிருந்தீங்கன்னா நீங்கவொரு caligulaன்னு லேடீஸெல்லாம் நினைச்சுப்பாங்க.

ஓக்கே.

விஷயத்துக்கு வருவோம்.

ஆயிரம் books கண்ட அபூர்வ சிகாமணி (kவை bயாக மாற்றி வாசிக்கவும்) மச்சி சார், 1970களின் இறுதியில் சுந்தரராமசாமி, அசோகமித்திரன் போன்ற எழுத்தாளர்கள் எழுதிய ஓரிருக் கதைகளை வாசித்திருக்கிறார். அந்த உத்வேகத்தில் அவரும் இலக்கியவாதி ஆகிவிட்டார்.

அவர் இலக்கியவாதியாக இருந்த அந்தக் காலக்கட்டங்களில் இலக்கியவாதிகள் பெரும்பாலும் ‘அவா அவா க்யா அவா’வாக இருந்த காரணத்தால், இலக்கிய உலகில் ரொம்பவே கம்ஃபர்டபுளாக ஃபீல் செய்தார்.

இலக்கிய உலகம் போலவே எல்லா உலகமும் அக்கிரகாரமாகவே இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று அந்தக் காலத்து பார்ப்பன எழுத்தாளர்களுக்கு இருந்த இலட்சியக்கனவு இவருக்கும் இருந்ததில்  வியப்பேதுமில்லை.

ஆயிரம் books கண்ட அபூர்வ சிகாமணிக்கு (kக்கு பதில் b) ஓர் அபூர்வப் பிரச்சினை உண்டு.

புலவர் இந்திரகுமாரியின் மருமகன் செல்வா ஹீரோவாக நடித்த ‘கோல்மால்’ படத்தை உங்களில் சிலர் பார்த்திருக்கலாம். அதில் முக்கியப் பாத்திரத்தில் நடித்திருந்த நடிகை பல்லவி, ஒரு சினிமாப் பைத்தியம். எப்போதும் வீடியோ கேசட்டில் படம் பார்த்துக் கொண்டே இருப்பார். அப்போதைக்கு அவர் பார்க்கும் படத்தில் வரும் கேரக்டராகவே தானும் மாறிவிடுவார். பக்திப்படம் பார்த்தால் சிகப்புச் சேலை, வேப்பிலை. பிட்டுப் படம் பார்த்தால் தன் கணவர் தியாகுவின் பெண்டை இரவுபகல் பாராமல் நிமிர்த்துவிடுவார். நம்ம ஆபூஆசி-க்கும் அதுவேதான் பிரச்சினை.

இலக்கியத்தை துறந்துவிட்டு நாடு, மதம், கோயில் குளம், வேலை என்று அவ்வப்போது ஏதோ ஒன்றில் டீப்பாக மூழ்கிவிடுவார். இதனால் அடிக்கடி அவரது இலக்கியவாழ்வுக்கு வனவாச கேப் விழும். ஒவ்வொரு முறையும் சின்ன இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வந்து, “அத்திம்பேர் நல்லா இருக்கேளா?” என்று சக இலக்கியவாதிகளை குசலம் விசாரிப்பார்.

கடைசியாக ஆபூஆசி-யின் வனவாசம் கொஞ்சம் நீண்டு விட்டது. தொண்ணூறுகளின் மத்தியில் காணாமல் போனவர் கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வருகிறார். அத்திம்பேர்களை உபயகுசலோபரிக்கலாம் என வந்தவருக்கு கடும் அதிர்ச்சி. ஆளாளுக்கு “இன்னா மாம்ஸு சவுக்கியமா, மச்சி நல்லாருக்கியா?” என்று நலம் விசாரிக்கிறார்கள்.

இப்போது பார்த்தால் இணையம் வந்துவிட்டது. தமிழிலக்கியத்துக்கு அடிப்படைத்தகுதியான வெள்ளைநூல் ஐடெண்டிட்டி கார்டு இல்லாதவர்கள் எல்லாம் இலக்கியவாதி ஆகிவிட்டார்கள்.

அப்போதைய தமிழின் டாப்-3 பெஸ்ட்செல்லர் இலக்கியவாதிகளில் ஒரே ஒரு அத்திம்பேர் கூட இல்லை.

“அக்கிரகாரம், அப்பார்ட்மெண்ட் ஆனா பரவாயில்லை. பெரியார் நினைவு சமத்துவபுரமா மாத்திட்டீங்களேடா” என்று ஆபூஆசி குமுறினார். இந்த நிலைக்கு என்ன காரணம் என அறிய சபதம் பூண்டார்.

பாழாய்ப்போன திராவிடம்தான் இதுக்கெல்லாம் காரணம் என்று அவரது ஆராய்ச்சிக் குறிப்புகள் சொன்னது. மச்சி சாரின் தாத்தா ஆச்சாரியார் ராஜாஜி, இந்த எழவெல்லாம் விழக்கூடாது என்பதற்காகதான் மச்சி சார் பிறப்பதற்கு முன்பாகவே குலக்கல்வித் திட்டம் கொண்டுவந்து 3000 பள்ளிகளை மூடவைத்தார். ஆனால் இந்துமத துவேஷியான இராமசாமி நாயக்கரோ, ராஜாஜியை இறக்கி காமராஜரை முதல்வராக்கி மூடப்பட்ட 3000 பள்ளிகளுக்குப் பதிலாக 6000 பள்ளிகளை திறந்தார்.

இதன் காரணமாக சூத்திரவாள், பஞ்சமரெல்லாம் ‘அ, ஆ, இ, ஈ’ படிக்க ஆரம்பித்தார்கள். ஆரம்பத்தில் தினத்தந்தி படித்துக் கொண்டிருந்தவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி சிறுபத்திரிகைகள் எல்லாம் படித்து புரிந்துக்கொள்ளும் திறனை பெற்றுவிட்டார்கள்.

முன்பெல்லாம் அத்திம்பேர்கள் இலக்கிய விமர்சனம், அரசியல் அபிப்ராயம், கலை என்றெல்லாம் ஏதாவது வாந்தியெடுத்தால் துணியெடுத்து துடைத்து க்ளீன் செய்துக் கொண்டிருந்தவர்கள், இப்போது பதிலுக்குப் பதிலாக எதிர்வாதம் செய்கிறார்கள். வாய்ப்பு கிடைத்த இடங்களில் எல்லாம் அவர்களும் எழுத ஆரம்பித்தார்கள். அக்கிரகாரத்து எழுத்துகளைவிட, எளிமையாக புரியும்படி எழுதிய இவர்களுக்கு தமிழுக்கு மவுசு சேர்ந்தது. நூல்களும் அதிகம் விற்பனையாகின.

1980களில் ‘தன் கையே தனக்குதவி’ முறையில் மச்சி சார் அவரே எழுதி அவரே பதிப்பித்த புத்தகங்கள் மூட்டை மூட்டையாக வீட்டுப் பரணில் கிடக்க, கண்டவனெல்லாம் இலக்கியம் அரசியல் என்று வந்துவிட்டானே என்று காண்டாகிவிட்டார்.

அந்த காண்டுதான் எவனெல்லாம் தன்னை திராவிடன் என்று அறிவித்துக் கொள்கிறானோ, அவனையெல்லாம் ஜமுக்காளத்தில் வடிகட்டிய 100 சதவிகித பொய்யான அவதூறுகளால் இழிவுப்படுத்துவது என்கிற சைக்கோ மனநிலைக்கு நம் ஆபுஆசி-யை கொண்டுச் சேர்த்திருக்கிறது. தனிப்பட்ட வகையில் இலக்கியத்தில் மிகப்பெரிய தோல்வி அடைந்தவரான மச்சி சார், நெட்டில் ஏதாவது பிசாத்துப் பயல்களுக்கு பத்து லைக் விழுந்தால்கூட பொறாமைப்பட ஆரம்பித்தார்.
யாரைத் திட்டுவது, எதற்குத் திட்டுவது என்று எவ்வித வரையறைகளுமின்றி 24 மணி நேரமும் வெறுப்பரசியலில் ஊறி, ‘திரிஷா இல்லன்னா நயன்தாரா’ படத்தில் வரும் செங்கல் சைக்கோ மாதிரி பரிதாபமான உளவியல் சிக்கல்களுக்கு ஆளானார்.


அதுவே பார்ப்பனரல்லாதவர்களை படுமோசமான மொழிகளில் அவரை வசைபாட வைக்கிறது. சில நாட்கள் முன்புகூட என்னுடைய போட்டோவை பதிவேற்றி, உருவக்கேலி செய்திருக்கிறார். 
உப்புமூட்டைக்கு கைகால் முளைத்த தோற்றத்தில் இருக்கும் அவர் கேலி செய்யுமளவுக்கெல்லாம் நானில்லை என்றாலும், 1980களின் சமூகத்திலேயே தேங்கிவிட்ட அவருடைய பார்ப்பன வெறியைக் கண்டு பரிதாபம்தான் வருகிறது.

என்னோடு அவருக்கு என்னதான் பிரச்சினை?

ஒன்றுமில்லை.

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பற்றிய உண்மைக்கு கொஞ்சமும் தொடர்பில்லாத ஓர் அவதூறை ஓவிஓபி முறையில்  கிளப்பினார். அதாவது ஆசிரியரின் பேத்திக்கு திருமணம் பேசியபோது சகுனம் பார்த்தார் என்று வழக்கமான தினமலர்த்தனமான குற்றச்சாட்டுதான். அவர் குறிப்பிட்டிருந்த காலக்கட்டத்தில் ஆசிரியருக்கு திருமண வயதில் பேத்தியே இல்லை என்று தர்க்கப்பூர்வமாக நாம் வாதாடினோம். அவர் செய்த அவதூறுக்கு ஆதாரம் இருப்பதாக சொல்லி, நிரூபிக்கிறேன் என்று சொன்னவர் மூன்று ஆண்டுகளாக நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.

நினைவுப்பிழையால் தெரியாமல் சொல்லிவிட்டவர்கள் மன்னிப்பு கேட்பார்கள். குறைந்தபட்சம் வருத்தமாவது தெரிவிப்பார்கள். பார்ப்பனக் கொழுப்பால் தெரிந்தே பச்சைப்பொய் சொன்னவர்களிடம் நாம் அத்தகைய பண்பாட்டையெல்லாம் எதிர்ப்பார்க்க முடியாது.

அந்த விவகாரத்தில் இருந்து ஆபூஆசி-க்கு நம் மீது வெறித்தனமான கோபம். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சாதியத்திமிரை இணையத்தில் காட்டுவார். நானென்னவோ தகுதியே இல்லாத இடத்தைப் பிடித்திருப்பதாக குத்திச் சொல்வார். அதெப்படி பார்ப்பனரல்லாத ஒருத்தன் பத்திரிகை உலகில் ஏதோ ஒரு பொசிஷனில் இருக்கப் போச்சு, அப்போவெல்லாம் நம்ம அத்திம்பேருங்கதானே டிசம்பர் இசைக்கச்சேரி எழுதிட்டிருந்தாங்கன்னு அவருக்கு எண்ணம்.

நான் பெற்றிருக்கும் இடம் முழுக்கவே என்னுடைய சொந்த அறிவால், உழைப்பால், திறமையால் பெற்றிருப்பது. சாதிரீதியாக எப்போதோ என் முன்னோருக்கு அரசுவேலை கிடைத்து, அது படிப்படியாக ‘குலக்கல்வி’ டைப்பில் பாஸ் செய்யப்பட்டு எனக்குக் கிடைத்த கருணை வேலை அல்ல.

சூத்திரர்கள் நுழையமுடியாத இரும்புக்கோட்டையாக இருந்த ஒரு துறை, திராவிட மறுமலர்ச்சியில் எல்லோருக்குமானதாக ஜனநாயகப் பூர்வமானது. அந்தச் சூழலில் வாய்ப்பு பெற்றிருப்பவன் நான். இதற்காக அந்த சமூகசீர்த்திருத்த இயக்கத்துக்கும், போராடிய தலைவர்களுக்கும் காலத்துக்கும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.

சரி, லேட்டஸ்ட் விஷயத்துக்கு வருவோம்.

கம்யூ.க்களுக்கும், திராவிட இயக்கத்தாருக்கும் 1930களில் இருந்தே பிரச்சினை. தேர்தல்களில் அவ்வப்போது உடன்பாடு செய்துக்கொள்வோமே தவிர, சித்தாந்தரீதியாக (என்ன பெரிய ஹைகோர்ட்டு சித்தாந்தம், மொழி இன உணர்வுகள் சுத்திகரிக்கப்பட்ட அவர்களது பார்ப்பனப் போக்கோடுதான் பிரச்சினை) ஒருவருக்கு ஒருவர் வேப்பங்காய்தான்.

அந்தவகையில் நல்ல மனிதரான தோழர் நல்லக்கண்ணு அவர்களது அரசியல், சமூகப்பணிகள் குறித்த பங்களிப்பு குறித்த விவாதம் ஒன்று. அதில், “நல்லது செய்ய வாய்ப்பிருந்தும்கூட தன்னுடன் இருந்தவர்களுக்கே அதை செய்ய நல்லக்கண்ணு தவறியிருக்கிறார்” என்பதை ஒரு சம்பவத்துடன் சொல்லியிருந்தேன்.

உடனே பார்ப்பனக்கொம்பு நட்டுக்கொண்டது : https://maamallan.com/?p=4169

லிங்கில் இருக்கும் பார்ப்பனப் பொச்சரிப்பை படித்து விட்டீர்களா?

எவனோ ஒரு சூத்திரனுக்கு என்ன இலக்கியம் தெரியப்போகிறது என்று வழக்கமான திமிர் மொழியில் நம்முடைய கவிதையில் குற்றம் கண்டுப்பிடித்திருக்கிறார் ஆபூஆசி. அதற்காக விக்கிப்பீடியாவில் இருந்தும், தனக்குத் தெரிந்த அத்திம்பேர்களிடம் தொலைபேசி வாயிலாகவும் ஆதாரம் திரட்டியிருக்கிறார்.

நாம் குறிப்பிட்ட சம்பவம் உண்மைதான் என்பதால்தான், ஓரளவுக்கு கம்யூனிஸ வரலாறு தெரிந்தவர்கள்கூட அமைதியாக இருக்கிறார்கள்.

ஆனால் -

ஃபேஸ்புக்குக்கு வந்துவிட்டதால் மட்டுமே கம்யூனிஸ்ட் ஆன ஒரு சிலர்தான் கம்பு சுத்திவருகிறார்கள். குறிப்பாக சொல்லவேண்டுமானால் ‘லண்டன்’ படத்து வடிவேலுவாகவே ‘வாழ்வு’ பெற்றிருக்கும் யமுனாராஜேந்திரன் (இவரது வாழ்க்கையைதான் ஏதோ அசிஸ்டெண்ட் டைரக்டர் சொல்லி சுந்தர்.சி காமெடி காட்சியாக வைத்தார் என்று தகவல்). நமக்கு ஏதோ வரலாறு தெரியாது, புவியியல் புரியாது என்று உளறி வைத்திருக்கிறார் என்று கேள்விப்பட்டோம்.

இலக்கிய மெனோபாஸ் அடைந்துவிட்ட மச்சி சாரால்தான் எதையும் எழுதவோ, வாசிக்கவோ முடியாது என்பதால் அவருக்கு இச்சம்பவம் குறித்து எதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

நான்தான் ஃபேஸ்புக்கில் ஏதோ உள்நோக்கத்தோடு சொல்லியிருப்பதாகவே ஒரு வாதத்துக்கு வைத்துக் கொள்வோம்.

ஒருவர் எழுத்துப் பூர்வமாகவே இதை பதிந்திருக்கிறார். அது நூலிலும் இடம்பெற்றிருக்கிறது.

வேறு யாருமல்ல. தொ.மு.சி.ரகுநாதனோடு அரைநூற்றாண்டுக் காலம் பழகிய நைனா கி.ராஜநாராயணன்தான். ‘தொ.மு.சி’ என்று அவர் எழுதியிருக்கும் நீண்ட கட்டுரையில், நான் குறிப்பிட்டிருக்கும் சம்பவம் வருகிறது. நைனாவுக்கு பொய் சொல்ல வேண்டிய எந்த அவசியமுமில்லை. இப்போது கம்யூனிஸ்டு என்று ஜபுல் விட்டுக் கொண்டிருப்பவர்களுக்கெல்லாம் தாத்தா கம்யூனிஸ்டு அவர். கம்யூனிஸ்டுகளை இழிவு செய்யவோ, காட்டிக் கொடுக்கவோ எந்த காரணமும் இல்லாத ஒரிஜினல் கம்யூனிஸ்ட் அவர்.

------

“சோவியத் ஆட்சி நொடித்தவுடன், சென்னையில் நடந்து வந்த ‘சோவியத்நாடு’ இதழ் மற்றும் வகையறாக்கள் அனைத்தையும் கடை ஏறக்கட்டியபோது, இருபது ஆண்டுகளுக்கும் மேலாக அங்கே பணியில் இருந்த ரகுநாதன் உட்பட மற்றவர்களையும், பிணையலில் சுற்றிக் கொண்டிருந்த காளைகளை அவிழ்த்து விடுவது போல் போங்க என்று அனுப்பி வைத்து விட்டார்கள்.

இருபது ஆண்டுகள் என்பது ஒரு இந்தியனின் சராசரி வயசில் சரிபாதி.

ஆயுள் தண்டணை என்பதே இப்போது பதினெட்டு ஆண்டுகள்தான். இருபது ஆண்டுகள் பிழிந்து வேலை வாங்கினோமே, அனுப்பப்படும் இந்த பாவிமட்டைகளுக்குப் போய் தலைசாய்க்கச் சொந்தவீடு ஏதேனும் உண்டா என்று அவர்கள் நினைத்துப் பார்த்திருப்பார்களா என்று தெரியவில்லை.

‘அய்யரே, ஆத்துநீரில் அடிச்சிக் கொண்டு போறப்போ, அவரோட அழகான முன்குடுமி போகுதே’ என்று கி.ரா கவலைப்படுகிறார் என்று என்னை எகத்தாளம் பேசலாம். தலை சாய்ந்து அங்கே வீழ்ந்தது தனியார் மூலதனம் அல்ல. உழைப்பாளர்களுக்குப் பார்த்துப் பார்த்து செய்கிறவர்கள் அவர்கள். அவர்களே இப்படி அம்போ என்று விட்டு விட்டார்களே என்றுதான் வருத்தம்.

ரகுநாதனிடம் எனக்குக் கடைசியாக வந்த கடிதத்தில், தனக்கு தலைசாய்க்க ஒரு சொந்த வீடு இல்லையே என்று வருத்தப்பட்டு எழுதியிருந்தார். அவர் தனது கஷ்டங்களை யாரிடமும் - நெருங்கிய நண்பர்களிடம் கூட - சொல்ல மாட்டார்.

இந்தக் கடிதம் என்னை ரொம்பவும் பாதித்தது. உடனே தோழர் நல்லக்கண்ணுவுக்கு அவசரமாக ஒரு கடிதம் எழுதினேன். அப்போது ஆட்சியில் இருந்தவர்களோடு நல்லக்கண்ணுவுக்கு நெருக்கம் இருந்தது. பாளையங்கோட்டையில் அரசு கட்டுகிற தொகுப்பு வீடுகளில் ஒன்றை இனாமாகக் கேட்க மனம் இடம் தராது. என்றாலும் பத்திரிகையாளர், படைப்பாளர் என்ற முறையில் எளிய தொகையில் லைசென்ஸ் கட்டணம் (மிகக்குறைந்த வாடகை) என்ற முறையில் ரகுநாதனுக்கு ஓர் ஏற்பாடு செய்துத் தந்திருக்கலாம். ஆனால், நல்லக்கண்ணுவிடமிருந்து உடனே பதில் வந்தது. ‘பார்த்தீர்களா எப்பேர்ப்பட்ட படைப்பாளிக்குக் குடியிருக்கக்கூட ஒரு குடிசை இல்லாமல் போனதே’ என்று வருத்தப்பட்டு எழுதியிருந்தார்.

‘வருத்தப்படத்தான் ஆள் இருக்கு; வகை செய்ய ஆளில்லை’ என்ற சொல்வம்தான் ஞாபகத்துக்கு வந்தது.

‘நாராய் நாராய் செங்கல் நாராய்’ காலத்திலிருந்து இன்றைக்குத் தேதிவரைக்கும் தமிழில் கவிஞர், படைப்பாளிகளின் பாடு ததிக்குணத்தோம்தான் கண்டது.
நூலின் பெயர் : பதிவுகள்
எழுதியவர் : கி.ராஜநாராயணன்
தேர்வும், தொகுப்பும் : கழனியூரன்
வெளியீடு : அன்னம், தஞ்சை.
மேற்கண்ட பகுதி, நூலின் 237 மற்றும் 238-ஆம் பக்கங்களில் இடம்பெற்றிருக்கிறது.

---

வாசித்து விட்டீர்களா? மீண்டும் ஒருமுறை பார்ப்பனக்கொம்பு நட்டுக்கொண்ட மாமல்லனின் பொய்ப்பிரசாரப் பதிவை வாசிக்கவும். தன்முனைப்பும், சுயசாதி அபிமானமும், திராவிட வெறுப்பும் தவிர்த்து அவரிடம் வேறு ஏதேனும் தன்மைகள் இருக்கின்றனவா என்று யோசியுங்கள்.

கெட்டிக்காரன் புளுகு எட்டுநாள் என்பார்பர்கள். நாம் உரிக்க ஆரம்பித்தால் பார்ப்பனப்புளுகெல்லாம் பத்துநிமிஷம் கூட தாங்காது.

24 நவம்பர், 2018

மஞ்சள் நீராட்டுவதற்கு முன்...

உங்கள் குழந்தை பெரிய மனுஷியாகி விட்டாள் என்பதற்காக, ஊரைக்கூட்டி மஞ்சள் நீராட்டு சடங்கு நடத்துவதெல்லாம் நல்ல விஷயம்தான். நடத்தாதீர்கள் என்று சொல்லுவதற்கு சட்டத்துக்கு கூட உரிமையில்லை. உங்கள் மரபையும், கலாச்சாரத்தையும் நீங்கள் பேணிக்காப்பது உங்களது பிறப்புரிமை.

ஆனால் –

காலம் மாறிக் கொண்டிருக்கிறது என்பதை மட்டும் நினைவூட்டும் கடமை நமக்கு இருக்கிறது.

ஏனெனில் –

சமீபத்திய அவலச் செய்தி ஒன்று இது குறித்து பேசவேண்டிய தேவையை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழகத்தை சூறையாடி சென்ற கஜா புயல், மதிப்பிட முடியாத அளவுக்கு சேதங்களை மாநிலத்துக்கு ஏற்படுத்தி இருக்கிறது. தனிப்பட்ட வகையில் பல்லாயிரம் மனிதர்களின் வாழ்வை மீண்டும் ‘அ’விலிருந்து தொடங்கவேண்டிய மிகப்பெரிய இயற்கை அவலமாக கஜா அமைந்துவிட்டது.

பட்டுக்கோட்டை அடுத்த அணைக்காடு கிராமத்தை சார்ந்த செல்வராஜ் – பானுமதி தம்பதியினருக்கு கஜா கொடுத்த துயரம் மிகவும் அவலமானது. இவர்களது ஒரே மகள் விஜயலட்சுமி பூப்பெய்தி இருக்கிறார். அவர்களது குடும்ப வழக்கப்படி சடங்குகள் செய்வதற்கு முன்பாக விஜயலட்சுமிக்கு தனி குடிசை கட்டி தங்க வைத்திருக்கிறார்கள். கடந்த 16-ம் தேதி அதிகாலை வேதாரணயத்தில் கொடூரத் தாக்குதல் நடத்திய கஜா புயலால், தென்னை மரம் ஒன்று குழந்தை தங்கியிருந்த குடிசை மீது வீழ்ந்திருக்கிறது. தூங்கிக் கொண்டிருந்த விஜயலட்சுமியின் மீது வீழ்ந்த தென்னை மரம் அவளது உயிரைப் பறித்திருக்கிறது. தனிக்குடிசை கட்டாமல் தங்களுடன் வைத்திருந்தால், தங்கள் ஒரே மகள் உயிருடனாவது இருந்திருப்பாளே என்று அவளது பெற்றோர் கதறிக் கொண்டிருக்கிறார்கள்.

இயற்கையின் கோரத்தாண்டவம் பறித்திருப்பது நூற்றுக்கணக்கான உயிர்கள். இயற்கைப் பேரிடர் தவிர்க்க முடியாதது.

ஆனால் –

பூப்பெய்தும் சடங்குக்காக தனிக்குடிசை கட்டி விஜயலட்சுமியை தங்க வைத்திருக்காவிட்டால், அவளது மரணத்தை அந்தக் குடும்பம் தவிர்த்திருக்க முடியும்.

இந்தக் காலத்திலும் என்றோ அந்தந்த காலக்கட்டத்து மதிப்பீடுகளின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட சடங்கு வழிமுறைகளை நாம் இன்றும் கேள்வியின்றி பின்பற்றி வரவேண்டுமா என்கிற கேள்வியை விஜயலட்சுமியின் இழப்பு ஏற்படுத்துகிறது.

ஒரு பெண் வயதுக்கு வருவது என்பது இயற்கை. அறிவியல்ரீதியாக ஒரு பெண் குழந்தை, இனப்பெருக்கத்துக்கு தயாராகிறாள் என்பதற்கான சமிக்ஞை, அவ்வளவுதான்.

தென்னிந்திய சமூக அமைப்பில் பெண் வயதுக்கு வருவதை படோடபமாக ஊர், உறவைக் கூட்டி விருந்து வைத்துக் கொண்டாடுவது என்பது நூற்றாண்டுக்கால வழக்கம்.

மாதவிடாய் வரும் நாட்களில் நோய்த்தொற்று எளிதாக பெண்ணுடலை பாதிக்கக்கூடும். எனவேதான் முதன்முதலாக ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் வரும்போது, அவளை தனிமைப்படுத்தி அவள் ஆரோக்கியம் பாதிக்கப்படாத வகையில் வைத்தார்கள். மருத்துவம் நவீனமான காலக்கட்டத்துக்கு முன்பாக நோய் எதிர்ப்பு மருந்துகள், தடுப்பூசி போன்றவை இல்லாத காலக்கட்டங்களில் இதுபோன்ற நடவடிக்கைகள் அவசியமாக இருந்தது என்பது உண்மைதான்.

மேலும், அவளுக்கு அப்போது கர்ப்பப்பையை உறுதியாக்கக்கூடிய ஊட்டச்சத்துகள் கொண்ட உணவை வழங்குவதும் வழக்கமாக இருந்தது. இந்த காலக்கட்டங்களில் ஊட்டமான உணவு மூலமாக குழந்தை பிறப்புக்கு வாகாக இடுப்பு எலும்புகளுக்கு ஏற்படுத்தக்கூடிய உறுதி, பின்னாளில் அவளுக்கு சுகப்பிரசவம் ஏற்பட ஏதுவாக இருக்கும். எனவேதான், பத்திய முறையிலான உணவு வழங்குவதற்கு வசதியாக சில நாட்கள் முறையான ஓய்வு வழங்கப்பட்டது.

மேலும், திடீரென தன்னுடைய உடலில் ஏற்பட்ட மாற்றத்தைக் கண்டு குழந்தை குழம்பியிருக்கும். அது என்னவகையான மாற்றம் என்பதை அத்தை, பெரியம்மா, சித்தி போன்ற குடும்பத்தின் மற்றப் பெண்கள், அந்தக் குழந்தைக்கு எடுத்துச் சொல்வதற்கான வாய்ப்பாகவும், அக்குழந்தைக்கு தனிமை ஏற்படுத்தப்பட்டது. பெரிய மனுஷியாகி விட்டதால் நாணப்படுவாள் என்பதற்காக தந்தை உட்பட மற்ற ஆண்களை அவள் எதிர்நோக்கி தர்மசங்கடப்படுவதையும் தவிர்க்க இந்த தனிமை உதவியது.

அடுத்து விமரிசையாக நடத்தப்படும் மஞ்சள் நீராட்டு விழா.

‘பெண்ணின் திருமண வயது 18’ என்றெல்லாம் முறையான சட்ட அறிவுறுத்தல்கள் இல்லாத காலக்கட்டத்தில் ஒரு பெண், பெரிய மனுஷி ஆனதுமே திருமணம் செய்துவைக்க மாப்பிள்ளை தேடுவது வழக்கமாக இருந்திருக்கிறது. என்னுடைய வீட்டில் திருமணத்துக்கு ஒரு பெண் தயாராக இருக்கிறாள் என்று அப்பெண்ணின் தந்தையார் விளம்பரப் படுத்துவதற்காகவே மஞ்சள் நீராட்டு விழா என்கிற சடங்கு ஏற்படுத்தப்பட்டது. அந்தக் காலத்தில் எல்லாம் இணையத்தில் மாப்பிள்ளை தேடக்கூடிய வசதியெல்லாம் இல்லைதானே?

மேற்கண்ட விஷயங்கள் எல்லாம் நம் பாட்டிக்கு, ஏன் நம் அம்மாவுக்கே கூட நடந்தவைதான்.

இப்போது நம் மகள்களுக்கும் இதையெல்லாம் செய்ய வேண்டிய தேவை இருக்கிறதா, இந்தக் காலத்துக்கு இவையெல்லாம் பொருத்தமானவைதானா என்றுதான் நாம் யோசிக்க வேண்டும்.

நம் குழந்தை பிறக்கும்போதே நோய்த்தொற்றுகளுக்கு எதிரான முறையான தடுப்பூசிகளை போட்டுவிடுகிறோம். அவரவர் வசதிக்கு ஏற்ப ஊட்டமான உணவுகளை வழங்குகிறோம். அந்தக் காலத்தில் சிக்கன், முட்டை என்பதெல்லாம் ஆடிக்கு ஒருமுறை அமாவாசைக்கு ஒருமுறை சமைக்கக்கூடிய உயர்தர உணவு. இப்போது குறைந்தது வாரம் ஒரு முறையாவது கறியெடுக்க கசாப்புக் கடை வரிசையில் நிற்கிறோம்தானே?

அதுவுமின்றி, அந்தக் காலத்தில் பெண் குழந்தைகள் கல்வி மறுக்கப்பட்டு வெளியுலகத் தொடர்பு இன்றி வீட்டிலேயே வளர்க்கப்பட்டார்கள். இப்போது பள்ளி, கல்லூரி மற்றும் பணியிடங்களுக்கு செல்கிறார்கள். உலக நடப்பை அறிந்து வைத்திருக்கிறார்கள். அவரவர் வாழ்க்கையை தெரிவு செய்யக்கூடிய சமூக அந்தஸ்தை எட்டியிருக்கிறார்கள்.

ஆணும், பெண்ணும் சமம் என்று இயற்கை வழங்கியிருக்கக்கூடிய இயல்பு நீதியை, சமூகமும் ஒப்புக்கொள்ளத் தொடங்கியிருக்கிறது. ஒரு ஆண் குழந்தை எப்படியோ, அப்படியேதான் பெண் குழந்தையும் என்கிற விழிப்புணர்வும் ஏற்பட்டு வருகிறது.

தூய்மை உள்ளிட்டக் காரணங்களால் அந்தக் காலத்தில் கற்பிக்கப்பட்ட மாதவிடாய் தீண்டாமையை இன்னும் நாம் அனுசரித்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் ஏதுமில்லை. அந்நாட்களில் அவர்கள் தூய்மையைப் பேணுவதற்கு வசதியாக நாஃப்கின்கள் பெருமளவு புழக்கத்துக்கு வந்துவிட்டன. இன்னும் அவர்களை வீட்டுக்குள் புழங்க விடாமல் செய்வதற்கு ஏதேனும் காரணம் நம்மிடம் மிச்சமிருக்கிறதா?

வயதுக்கு வருவது குறித்து அவர்களுக்கு முன்பு இருந்த அச்சமெல்லாம் இன்றைய நாகரிக உலகில் அகன்று, உடல் மாற்றத்தை இயல்பாக ஏற்றுக்கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள்.

நகர்ப்புறக் குடும்பங்களில் இந்த மாற்றங்களின் விளைவுகளை கண்கூடாக நாம் காண முடிகிறது.

எனினும் –

இன்னமும் கிராமப்புற மக்களிடம் இந்த விழிப்புணர்வு ஏற்படாததின் ஓர் விளைவாகவே அணைக்காடு விஜயலட்சுமியின் இழப்பைக் காண வேண்டியிருக்கிறது.

முன்னெப்போதோ ஒரு காலத்தில் முன்னோர் அனுஷ்டித்தார்கள் என்பதற்காக அர்த்தமற்ற சடங்குகளை இன்றும்கூட நாம் கடைப்பிடித்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை.

மஞ்சள் நீராட்டு விழா போன்ற குடும்ப விசேஷங்களை கொண்டாடலாமா என்று அதில் சம்மந்தப்பட்ட பெண் குழந்தைகள் முடிவெடுத்துக் கொள்ளட்டும். அவர்களுக்கு விருப்பமிருந்தால் செலவு செய்துக் கொண்டாட வேண்டியது பெற்றோரின் கடமையும்கூடதான்.

ஆனால் –

அதன் பேரில் பெண் குழந்தைகளை தனிமைப்படுத்துவது, தீண்டாமை அனுசரிப்பது போன்ற மூடப்பழக்க வழக்கங்கள் இனியும் வேண்டாமே? இவற்றையெல்லாம் தவிர்ப்பதின் மூலமாகதான் நாம் நாகரிகமான சமுதாயத்தின் ஓர் அங்கம் என்பதை நிரூபிக்க முடியும்.

(நன்றி : குங்குமம்)

23 நவம்பர், 2018

ஈ.வெ.ராமசாமி நாயக்கராகிய நான்..

..இன்று முதல் ஈ.வெ.ராமசாமி!

அரசுத் துறைகளில் காலியாக இருக்கும் சுமார் 1200 பணியிடங்களுக்கு சமீபத்தில் குரூப்-2 முதல்நிலைத் தேர்வு நடைபெற்றது. ஆறு லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர்.

தேர்வுத் தாளில் இடம்பெற்றிருந்த ஒரு கேள்வி :

“திருச்செங்கோடு ஆசிரமத்தை நிறுவியவர் யார்?”

இதற்கு நான்கு பதில்கள் கொடுக்கப்பட்டு, அதில் சரியான பதிலை தேர்வு எழுதுபவர் தேர்வு செய்ய வேண்டும்.

கொடுக்கப்பட்டிருந்த நான்கு பதில்கள் :

A) இ.வெ.ராமசாமி நாயக்கர்

B) ராஜாஜி

C) காந்திஜி

D) சி.என்.அண்ணாதுரை

தந்தை பெரியாரின் இனிஷியலில் இடம்பெறும் ‘ஈ’ என்பது ஈரோட்டைக் குறிக்கும். அதையேகூட கேள்வித்தாள் தயாரித்த மேதாவி அதிகாரிகள் ‘இ’ என்று தவறாகக் குறிப்பிட்டதைக் கூட விட்டுவிடலாம்.

ஆனால் –

பெரியாரின் பெயருக்குப் பின்னால் அவரது சாதியை குறிப்பிட்டிருப்பதுதான் தமிழகம் முழுக்க பெரும் எதிர்ப்புகளைக் கிளப்பியிருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்களின் கடுமையான கண்டனங்களுக்கும் உள்ளாகியிருக்கிறது.

தந்தை பெரியார் யார் என்பதை உணர்ந்தவர் யாவருமே உள்ளம் கொதித்துப் போய்விடக்கூடிய அடாத செயல்பாடு இது.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் தமிழகம் சாதிய இறுக்கத்தில் மூச்சுவிட திணறிக்கொண்டிருந்த சூழலில் பிறந்தவர் தந்தை பெரியார். 94 வயதில் தான் இறுதிமூச்சை விடும் நொடி வரைக்கும் சாதிய ஏற்றத்தாழ்வுகளை மிகவும் கடுமையாக விமர்சித்து, சாதியை விட்டொழிக்க வேண்டும் என்று மக்களிடம் விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை நடத்தி வந்தவர்.

அவர் மறைந்து 45 ஆண்டுகள் ஆனாலும், இன்னமும் சாதி ஒழிப்புச் சூரியனாக பிரகாசித்துக் கொண்டிருக்கிறார்.

தந்தை பெரியார், சாதியொழிப்பு லட்சியத்துக்காகவே கடவுளை, மதத்தை எதிர்க்கும் கடுமையான நிலைப்பாட்டுக்குச் சென்றார்.

“அவருக்கு முன்பான தலைவர்களில் இரட்டைமலை சீனிவாசன், அயோத்திதாசப் பண்டிதர், எம்.சி.ராஜா உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்த தலைவர்களே சாதியமைப்புக்கு எதிராக அரசியல் தளத்தில் செயல்பட்டவர்கள். பெரியார்தான் சாதியொழிப்பைப் பேசிய ஒடுக்கப்பட்டோர் அல்லாத முதல் தலைவர்” என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் குறிப்பிடுகிறார்.

பெரியார், ஈரோட்டில் விவசாயிகளும் வியாபாரிகளும் நிறைந்த இடைநிலைச் சாதியில் பிறந்தவர். அவரது குடும்பம் ஈரோட்டிலேயே வணிகத்துக்கு பிரசித்தி பெற்றிருந்த பணக்காரக் குடும்பம். சிறுவயதிலிருந்தே சாதிரீதியிலான ஒடுக்குதலை அவர் எதிர்கொண்டதில்லை.

தந்தையுடன் ஏற்பட்ட மனஸ்தாபத்தில் ஒருமுறை கோபித்துக்கொண்டு காசிக்கு செல்கிறார். தான் பிறந்த சாதியின் காரணமாக அங்கே சில அவமானங்களை எதிர்கொள்கிறார். சாதி ஒரு கொடிய நோய் என்கிற புரிதலை அச்சம்பவங்கள் அவருக்கு ஏற்படுத்துகின்றன.

இங்கே நீதிக்கட்சி வலுப்பெற்று திராவிடர் இயக்கத்தின் தோற்றுவாயாக உருவெடுத்துக் கொண்டிருந்த காலத்தில் எல்லாம் பெரியார், முற்போக்குப் பிரச்சாரங்கள் செய்யக்கூடிய நிலையில் இல்லை. அவர் ஈரோட்டின் நகராட்சித் தலைவராக தெரிவு செய்யப்பட்டு, பொதுவான மக்கள் சேவையில்தான் ஈடுப்பட்டிருந்தார். அதன் மூலமாக கொங்குப் பகுதியில் மக்கள் செல்வாக்கு பெற்ற மகத்தான தலைவராக உருவெடுத்தார்.

சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்த காங்கிரஸ் கட்சி, தந்தை பெரியாரை தன்னுடைய கட்சியில் இணைத்துக் கொண்டது. தீண்டாமைக்கு எதிரான கேரளாவில் நடந்த வைக்கம் போராட்டத்தில் தலைமை தாங்கிப் போராட பெரியாரை பணித்தது.

‘வைக்கம் கோயில் கதவுகள் ஒடுக்கப்பட்டோருக்கும் திறக்கப்பட வேண்டும்’ என்று களமிறங்கிய பெரியாரை நசுக்க அன்றைய திருவாங்கூர் அரசாங்கம் சாம, பேத, தான, தண்டங்கள் அத்தனையையும் பயன்படுத்தி தோல்வியடைந்தது.த

வைக்கம் வீரராக பெரியார் பெற்ற வெற்றி, இந்திய வரலாற்றிலேயே சமத்துவத்துக்கான போராட்டங்களுக்கு சரியான பாதையை அடையாளம் காட்டியது.

எனினும், பெரியாரின் வழிமுறையில் காங்கிரஸ் கட்சிக்கு சில பிரச்சினைகள் இருந்தது. ‘சத்தியாக்கிரகம்’ மாதிரியான அகிம்சை முறை போராட்டங்கள், சாதியத்துக்கு எதிரான மென்மையான எதிர்ப்பு ஆகியவை காங்கிரஸுக்கும், பெரியாருக்கும் இடைவெளியை ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்தே காங்கிரஸில் இருந்து வெளியேறி ‘சுயமரியாதை இயக்கம்’ கண்டார் பெரியார். காங்கிரஸார், தங்கள் அடையாளமாக வெள்ளைச்சட்டை அணிய, பெரியாரோ தன்னுடைய தொண்டர்களை கறுப்புச்சட்டை அணியச் சொன்னார்.

1929ஆம் ஆண்டு செங்கல்பட்டு நகரில் பிப்ரவரி 17 மற்றும் 18ஆம் தேதிகளில் முதன்முறையாக சுயமரியாதை மாநாடு நடத்தினார். அப்போது சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த ப.சுப்பராயன், இந்த மாநாட்டை தொடக்கி வைத்தார்.

தமிழக அரசியலில் பெரியார் என்ன செய்யப் போகிறார் என்பதற்கான கொள்கை விளக்க அறிவிப்புகள், அம்மாநாட்டில்தான் தீர்மானங்களாக வரையறுக்கப்பட்டன.

சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும், மதம் மற்றும் மூடநம்பிக்கைகள் ஒழிப்பு குறித்தும் பேசினார்கள். சுயமரியாதை திருமணத்துக்கு ஆதரவாகவும், விதவை மறுமணத்தை ஊக்குவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றினார்கள். தமிழக அரசியல் வரலாற்றில் பெரும் பங்களிப்பு செய்த மாநாடு அது. இந்த மாநாட்டின் விளைவாகவே திராவிட இயக்கத்தின் வளர்ச்சி, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நாலு கால் பாய்ச்சலில் அமைந்தது.

அந்த மாநாட்டில் பெரியார் பேசியதை, சத்யராஜ் நடித்த ‘பெரியார்’ திரைப்படம் துல்லியமாகப் பதிவு செய்திருக்கிறது.

“ஒரு சமத்துவ உலகத்தை நிர்மாணிக்கிறதுக்காக நான் உங்களையெல்லாம் அழைக்கிறேன். இனிமேல் இந்த சமூகத்துலே பிராமணன், சூத்திரன், பஞ்சமன்னு யாருமே இருக்கக்கூடாது.

அதனாலே.. இன்னையிலிருந்து நம்ம பேர்களுக்குப் பின்னாடி இருக்கிற சாதி அடையாளங்களை நாம எல்லாம் நீக்கிடறோம். ஈ.வெ.ராமசாமி நாயக்கர் ஆகிய நான், இன்று முதல் ஈ.வெ.ராமசாமி”

பெரியார் இவ்வாறு முழங்கியதைத் தொடர்ந்து, மாநாட்டில் கலந்துக் கொண்டவர்கள் தங்கள் பெயருடன் இருந்த சாதி அடையாளத்தை மேடையிலேயே துறந்தார்கள்.

அவ்வாறாக தொண்ணூறு ஆண்டுகளுக்கு முன்பாக தந்தை பெரியார் துறந்த சாதிப்பட்டத்தை தான் தமிழ்நாடு தேர்வாணையக் குழு அதிகாரிகள், மீண்டும் அவரது பெயரோடு சேர்க்கும் முயற்சியைதான் குரூப்-2 தேர்வு வினாத்தாள் மூலமாக செய்திருக்கிறார்கள்.

சாதியைக் கடந்து வரும் தமிழகத்தின் முற்போக்கு முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போட்டு, மீண்டும் ஓர் நூற்றாண்டுக்கு முந்தைய சாதிய, சனாதன அடக்குமுறை நிலையை ஏற்படுத்த விரும்பும் விஷமனம்தான் இவ்வளவு வக்கிரமாக சிந்தித்திருக்க முடியும்.

பெரியார் மறைந்தும் அவருக்கு இழைக்கப்பட்ட இந்த அவமானத்துக்கு தமிழக அரசு வருத்தம் தெரிவித்தால் மட்டும் போதாது. இதற்கு காரணமான கருப்பு ஆடு யார் என்பதையும் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவதே சரியான செயல்பாடு ஆகும்.

(நன்றி : குங்குமம்)

22 ஆகஸ்ட், 2018

ஏகலைவன்!

தமிழ் சினிமாவில் முதன்முதலாக ஒரு வசனகர்த்தாவின் பெயரை டைட்டிலில் கண்டதுமே, ஒரு சூப்பர் ஸ்டாருக்கான ஆரவாரம் திரையரங்கங்களில் எழுந்ததென்றால், அது ‘மு.கருணாநிதி’ என்கிற பெயருக்குதான். இந்த சாதனை கலைஞரால், அவ்வளவு எளிதில் படைக்கப்பட்டு விடவில்லை. அவரது மொழியில் சொன்னால் தென்றலை தீண்டியதில்லை, தீயை தாண்டியிருக்கிறார்.

‘குடியரசு’ இதழில் மாதம் 40 ரூபாய் சம்பளத்துக்கு உதவி ஆசிரியராக கலைஞர் பணிபுரிந்துக் கொண்டிருந்த சமயம். ஒவ்வொரு இதழிலுமே அவரது தமிழ், நெருப்பைக் கக்கிக் கொண்டிருந்ததை கவனித்த ஜூபிடர் பிக்சர்ஸ் நிறுவனம், ‘ராஜகுமாரி’ படத்துக்கு வசனம் எழுதுவதற்காக அவரை அழைத்தது. தந்தை பெரியாரிடம், சினிமாவில் பணிபுரிய கலைஞர் அனுமதி கேட்டபோது, மகிழ்வோடு வாழ்த்தி அனுப்பி வைத்தார். பெரியாருக்கு, சினிமா என்றாலே வேப்பங்காய் என்றாலும், கலைஞர் என்றாலே தித்திப்பு.

‘ராஜகுமாரி’ டைட்டிலில் ‘வசனம்’ என்கிற இடத்தில் இயக்குநர் ஏ.எஸ்.ஏ.சாமியின் பெயர்தான் இடம்பெற்றது என்றாலும், ‘உதவி ஆசிரியர்’ என்று கலைஞரின் பெயர் இடம்பெற்றது. நெற்றி நிறைய விபூதி, கழுத்தில் துளசிமாலை, தூய்மையான வெள்ளை கதராடையோடு இந்தப் படத்தில் நாயகனாக நடித்தவர், வசனகர்த்தா கலைஞருக்கு நெருக்கமான நண்பரானார். பின்னர் கலைஞரால் ‘கொள்கை மாற்றம்’ அடைந்து திராவிடப் புரட்சி நடிகரான எம்.ஜி.ஆர்தான் அவர்.

‘ராஜகுமாரி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ‘அபிமன்யூ’ படத்துக்கும் வசனம் எழுதும் வாய்ப்பு கலைஞருக்கு கிடைத்தது. ‘அபிமன்யூ’ வெளியானபோது, படத்தைக் காண்பிப்பதற்காக தியேட்டருக்கு தன்னுடைய மனைவியையும், நண்பர்களையும் அழைத்துச் சென்றார் கலைஞர். டைட்டிலில் அவரது பெயர் இடம்பெறவில்லை. அதிர்ச்சியடைந்தார் கலைஞர்.

பட அதிபர்களிடம் சென்று நீதி கேட்டபோது, ‘நீங்கள் மிகவும் வயதில் குறைந்தவர். மேலும் உங்கள் பெயருக்கு பின்னால் பட்டமளிக்கக்கூடிய கல்வித்தகுதியும் இல்லாதவர். இன்னும் நீங்கள் சினிமாவில் புகழ் பெற்ற பிறகே உங்கள் பெயரை டைட்டிலில் போட முடியும்’ என்றார்கள். படத்தின் டைட்டிலில் வசனம் என்கிற இடத்தில் இடம்பெற்ற எஸ்.ஏ.சாமிக்கு, ‘பி.ஏ’ என்கிற பட்டம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

மறைவுக்குப் பிறகும் மெரீனாவில் இடம் பிடிக்க கலைஞர் போராடி வென்ற வரலாறுதான், அவருடைய ஆரம்பகால சினிமாவுலக வரலாறும்கூட.

டைட்டிலில் ‘இடஒதுக்கீடு’ கொடுக்க மறுத்தவுடன், கோபத்துடன் ஜூபிடர் பிக்சர்ஸை விட்டு சுயமரியாதை காக்க வெளியேறினார் கலைஞர். நல்ல சம்பளம் கொடுக்கிறார்களே என்று தன்னை அவர் சமரசப்படுத்திக் கொள்ளவில்லை. தன் பெயர் இல்லாத இடத்தில், தான் இருப்பதை அவர் விரும்பவில்லை.

கோவையிலிருந்து ஊர் திரும்பியவர், திருவாரூரில் முகாமிட்டிருந்த ‘தேவி நாடக சபா’வினருக்கு ‘குண்டல கேசி’யை ஆதாரமாக வைத்து ‘மந்திரி குமாரி’ நாடகத்தை எழுதிக் கொடுத்தார். ‘சக்தி நாடக சபா’விடமிருந்து பிரிந்து வந்து புதிய சபாவை அமைத்திருந்த அந்த நாடகக் குழுவினருக்கு ‘மந்திரி குமாரி’, மாஸ்டர்பீஸாக அமைந்தது. மக்களிடம் பெரும் வரவேற்பை அந்த நாடகம் பெற்றிருந்தது.

மயிலாடுதுறையில் இந்த நாடகத்தை கண்டு வியந்த கவிஞர் கா.மு.ஷெரீப், இந்நாடகத்தின் வசன சிறப்புகளைப் பற்றி மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரத்திடம் எடுத்துச் சொன்னார். சுந்தரம், ‘மந்திரி குமாரி’யை திரப்படமாக்க விரும்பினார். 40களின் இறுதியிலேயே மாதம் ரூ.500 (அப்போது ஒரு சவரன் தங்கமே 75 ரூபாய்தான்) என்கிற மிகப்பெரிய சம்பளத்துக்கு மாடர்ன் தியேட்டர்ஸில் பணிபுரிய கலைஞர் ஒப்பந்தமானார். ஜூபிடரில் பணிபுரிந்தபோது எப்படி எம்.ஜி.ஆரை தன்னுடைய கொள்கைக்கு திருப்பினாரோ, அது போலவே மாடர்ன் தியேட்டர்ஸில் பணிபுரிந்தபோது கண்ணதாசனையும் தி.மு.கழகத்துக்கு கலைஞர் கொண்டுவந்து சேர்த்தார்.

‘கொள்ளையடிப்பது ஒரு கலை’ போன்ற பஞ்ச் வசனங்களால் ‘மந்திரி குமாரி’ தமிழகமெங்கும் பரபரப்பை கிளப்பியது. தமிழ் சினிமாவின் முதல் பஞ்ச் வசனகர்த்தா என்றுகூட கலைஞரை சொல்லலாம்.

‘மந்திரி குமாரி’யைப் பார்த்து மகிழ்ந்த என்.எஸ்.கிருஷ்ணன் சேலத்துக்கு வந்து கலைஞரை சந்தித்தார். தான் எடுக்கவிருக்கும் ‘மணமகள்’ படத்துக்கு வசனம் எழுதித்தர வேண்டுமென்று கேட்டார். என்.எஸ்.கிருஷ்ணனும், தந்தை பெரியாரின் அபிமானி என்கிற அடிப்படையில் அவருடன் அன்புடன் பழகினார் கலைஞர். எனவேதான் சம்பளப்பேச்சு வந்தபோது, ‘நீங்க கொடுக்கிறதை வாங்கிக்கறேன்’ என்றார் கலைஞர்.“நான் எவ்வளவு கொடுத்தாலும் வாங்கிப்பீரா?”, என்.எஸ்.கே கேட்க, கலைஞர் மகிழ்ச்சியாக தலையாட்டினார்.

ஒரு வெள்ளை பேப்பரில் ஒரு தொகையை குறிப்பிட்டு, அதை நான்காய் மடித்து கலைஞரின் பாக்கெட்டில் வைத்தார் என்.எஸ்.கே., கலைஞர் அதை பிரித்துக்கூட பார்க்கவில்லை.

“பிரித்துப் பாரும் ஓய். அப்போதானே தொகை தெரியும்...”

கலைஞர் பிரித்துப் பார்க்க.. அதில் நான்கு பூச்சியங்கள் எழுதப்பட்டிருந்தன.“அண்ணே, எதுவாக இருந்தாலும் சம்மதம்தான்” என்று கலைஞர் சொல்ல, அப்படியே அவரை கட்டிப் பிடித்துக் கொண்டார் என்.எஸ்.கே.

உடனே பேப்பரை வாங்கி நான்கு பூச்சியங்களுக்கு முன்னால் ‘ஒன்று’ என்கிற எண்ணை என்.எஸ்.கே. எழுத, கலைஞருக்கு ஆனந்த அதிர்ச்சி. பத்தாயிரம் ரூபாய். ஒரு வசனகர்த்தாவுக்கு இந்த தொகை என்பது அந்த காலத்தில் மிகவும் அதிகம். இந்தப் பணத்தில் அப்போது ஆயிரம் கிராம் தங்கம் வாங்கலாம் என்றால், இன்றைய மதிப்பில் எவ்வளவு பெரிய தொகை என்று எண்ணிப் பாருங்கள். கலைஞரின் வயது அப்போது 25 தான். ‘மணமகள்’ படத்துக்கு கிடைத்த அந்த அபாரமான சம்பளம்தான் கலைஞரை சென்னைக்கு குடிபெயர வைத்தது. எந்த சினிமாவின் டைட்டிலில் கூட தனக்கு பெயர் போட மறுத்தார்களோ, பின்னாளில் அதே சினிமாவை தன் தீந்தமிழால் கட்டியாண்டார் கலைஞர்.

சினிமாவில் கதை, வசனத்தில் கலைஞர் நிகழ்த்திய சாதனைகளை காட்டிலும், சினிமாவில் ஒரு சாதாரணர் சாதிக்க முடியும் என்று அவர் நிகழ்த்திக் காட்டிய சாதனையே தலையாயது. ஏனெனில், கலைஞருக்கு முன்பு வரை பாகவதர்களும், பண்டிதர்களும்தான் சினிமாத்துறையில் ஜொலிக்க முடியும் என்கிற நிலை இருந்தது. அந்த இரும்புக்கதவை எட்டி உதைத்துத் திறந்த முதல் சாமானியன் கலைஞர்தான். அவர் திறந்துவிட்ட கதவுதான் அன்றிலிருந்து இன்றுவரை சென்னையை நோக்கி, நம்பிக்கையை மட்டுமே மூலதனமாகக் கொண்டு, கண்களில் சினிமா கனவோடு ரயிலேறிய பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு கலங்கரை விளக்கம்.

கலைஞர் ஒரு சுயம்பு. கலைஞர் ஒரு ஏகலைவன். அவர் இளைஞர்களுக்காக எழுதிய இந்த ஒரு கவிதை போதும். சினிமாவில் மட்டுமல்ல. எத்துறையிலும் போராடி, வெல்லுவதற்கான உந்துசக்தியாக இளைஞர்களுக்கு என்றுமே இருக்கும்.

ஏகலைவன் வித்தை கற்க
எந்த சாத்திரமும் அனுமதிக்கவில்லை
அவன் வில்லில் விஜயனையும் வெல்வான் என்று
கட்டைவிரலைக் காணிக்கையாய் பெற்றதென்ன நியாயம்?
தவம் செய்தான் சம்பூகச் சூத்திரன்
தகுதி அவனுக்கேது என்று சீறி
அவன் தலை வெட்டிச் சாய்த்தகதை
இராமபிரான் வரலாரன்றோ?
கட்டை விரலையோ, தலையையோ
காணிக்கையாக இந்நாளில் எவனும் கேட்டால்
பட்டை உரியும் சுடுகாட்டில்
அவன் கட்டை வேகும். பிறகென்ன?
முதலுக்கே மோசம் வந்தபின்னர்
முயலாக ஆமையாக கிடத்தல் நன்றோ?
ஆயிரம் அடி பள்ளத்தில் வீழ்ந்தவனை
கைதூக்கிக் கரையேற்றும் நேரத்தில்
கனமான பாறையொன்றை
அவன் தலையில் உருட்டி விட
எத்தனிக்கும் உளுத்தர்களை கண்டால்
உதைக்கத் தான் வேண்டும்
ஓட ஓட விரட்டத்தான் வேண்டும்

(நன்றி : தினகரன் வெள்ளிமலர்)

14 ஆகஸ்ட், 2018

ஞாயிறு போற்றுதும்

தலைவர்கள் பிறப்பதில்லை. காலம்தான் அவர்களை உருவாக்குகிறது. ஒரு சமூகத்தின் சூழலும், தேவையுமே தங்களில் ஒருவரைத் தலைவராக  உயர்த்துகிறது. குடிமையியலின் இந்தக் கோட்பாட்டை உடைத்தெறிந்து தலைவராக உருவெடுத்தவர் டாக்டர் கலைஞர். பிறக்கும்போதே அவர்  தலைவர்தான். தலைவருக்குரிய தலைமைப் பண்புகள் அவரிடம் இளம் பிராயத்திலேயே காணப்பட்டன. திராவிட முன்னேற்றக் கழகம் உருவானபோது  கலைஞரின் வயது 25. அடுத்த இருபதாண்டுகளில் இளைஞர்கள் நிறைந்த இந்த இயக்கத்தை அவர்தான் தலைமையேற்று, அரைநூற்றாண்டுக்  காலத்துக்கு நடத்தப் போகிறார் என்று யாராவது ஜோசியம் சொல்லியிருந்தால் கலைஞரே கூட நம்பியிருக்க மாட்டார்.

ஜோசியத்தில் அவருக்கு நம்பிக்கையில்லை என்பது வேறு விஷயம். உலகிலேயே வேறெங்கும் காமுடியாத அதிசயமாக, எழுபது ஆண்டுகளாக ஒரு  பிராந்திய இயக்கம் மக்கள் செல்வாக்கில் வலிமை யானதாக, இந்தியா போன்ற மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் ஏற்றங்களிலும், கொள்கை  முடிவுகளிலும் பங்களிக்கக்கூடியதாக இருக்கிறதென்றால், அதில் கிட்டத்தட்ட அரைநூற்றாண்டுக் கால கலைஞரின் தலைமையின் முக்கியத்துவத்தை நாம் உணரலாம்.கடந்த நூற்றாண்டின் மத்தியில் ஏராளமான சாமானியர்கள் தலைவர்களாக உயர்ந்திருக்கிறார்கள் என்றாலும்,  கலைஞர் மற்றவர்களிடமிருந்து முற்றிலும் வேறுபட்டவர்.

அவர் நிரம்பப் படித்த பட்டதாரி அல்ல. அவரை தலைவராக உயர்த்தக்கூடிய பெரும் எண்ணிக்கை மிகுந்த சமூகப் பின்னணியும் கொண்டவரல்ல.  சினிமாவில் ஜொலித்து, அதன் மூலம் மக்கள் அபிமானத்தைப் பெற்றவரும் அல்ல. அரசியல் / சமூக செயற்பாட்டாளராக அவர் பெற்றிருந்த  புகழைத்தான், தான் பொருள் ஈட்ட பயன்படுத்திய சினிமாவுக்கும் பயன்படுத்தினாரே தவிர, சினிமா புகழ் அவருடைய முன்னேற்றத்துக்கான  மூலதனமாக எப்போதும் இருந்ததில்லை. மேலும், சினிமாவை, தான் ஏற்றுக் கொண்ட இயக்கத்தை வலுப்படுத்தவும், இயக்கத்தின் கொள்கைகளைப்  பிரசாரம் செய்யவும் வலிமையான ஊடகமாகத்தான் கையாண்டார்.

செயல் மட்டுமே அவரது அத்தனை வளர்ச்சிகளுக்கும் காரணம். பலனை எதிர்பாராது, ஏற்றுக் கொண்ட கொள்கைக்காக அல்லும் பகலும் உழைத்துக்  கொண்டிருப்பது மட்டுமே அவர் அறிந்த ஒரே முன்னேற்ற யுக்தி. ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு கலைஞரின் வாழ்க்கையை ஆராய்ந்து பார்த்தோமானால்,  உழைப்பு மட்டுமே அவரை மகத்தான ஓர் இயக்கத்தின் தலைவராகவும், மாநிலத்தை ஆளும் முதல்வராகவும், நாட்டின் பிரதமர்களைத் தேர்ந்தெடுக்கக்கூடிய உயரிய பொறுப்பு களுக்கும் உயர்த்தியது என்பதை உணரலாம்.அவருடைய தீந்தமிழ் எழுத்தாற்றலும், பேச்சாற்றலும், லட்சக்கணக்கான  தொண்டர்களை அரவணைத்துச் செல்லும் அமைப்பாற்றலும் அவருடைய உழைப்புக்கு உதவும் ஆயுதங்களே தவிர.. அவை மட்டுமே அவருடைய  மகத்தான சாதனைகளுக்குக் காரணமல்ல. எனவேதான், ‘ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்’ என்று தன்னுடைய கல்லறை வாசகத்தை அவரே எழுதினார்.

துள்ளித் திரிந்ததொரு காலம்

திருவாரூர் நகரிலிருந்து 25 கி.மீ. தூரத்தில் அமைந்திருக்கும் திருக்குவளை என்கிறகிராமத்தில்தான், எளிய பின்னணி கொண்ட குடும்பத்தில் கலைஞர்  1924, ஜூன் 3-ஆம் தேதி பிறந்தார். தந்தையார் முத்துவேலர். தாயார் அஞ்சுகம் அம்மாள்.முத்துவேலர் பழுத்த ஆத்திகர். நெற்றியில் திருநீறு  இல்லாமல் அவரைக் காணவே முடியாது. அந்த கிராம மக்களுக்கு ஏற்படும் சிறிய உடல்நலக் குறைவுகளையெல்லாம் மந்திரித்தே குணப்படுத்துவார்  என்பார்கள். தந்தையைப் போலவேதான் தனயனும் சிறுவயதில் இருந்தார். திருநீறுக்கு மத்தியில் அழகாக குங்குமப்பொட்டு வைத்து காட்சியளிப்பார்  குழந்தை கலைஞர். கோயிலிலிருந்து ரிஷப வாகனம் உலா வருவதைக் கண்ட கலைஞர், அதுபோன்ற ஒரு வாகனத்தைச் செய்து தன் நண்பர்களைக்
கூட்டிவைத்து  வீட்டிலேயே உற்சவம் நடத்துவார்.

திருக்குவளை சிவன் கோயில், திருக்குளம், முனீசுவரன் கோயில், அய்யனார் கோயில் இங்கெல்லாம் நடைபெறும் உற்சவங்கள் மற்றும் விழாக்கள்  கலைஞரை உற்சாகப்படுத்தும். கிரிக்கெட், ஹாக்கி, கால்பந்து போன்ற விளையாட்டுகளிலும் சிறுவர் கலைஞருக்கு ஆர்வமிருந்தது.முத்துவேலருக்கு  தன்னுடைய ஒரே மகன், கலை மற்றும் கல்வியில் கரைசேர வேண்டுமென்ற பெரும் விருப்பம் இருந்தது.  கலைஞர், திருக்குவளையில் இருந்து ஐந்து  கி.மீ. தூரம் நடந்து பேருந்து ஏறி திருவாரூருக்குச் சென்று அங்கிருந்த உயர்நிலைப் பள்ளியில் கல்வி கற்க வேண்டியிருந்தது. மகனுடைய  சிரமங்களைக் கருத்தில் கொண்டுதான் குடும்பத்தையே திருவாரூருக்கு இடம்பெயர வைத்தார் முத்துவேலர். கல்வியோடு இசை பயிலும்  ஏற்பாட்டையும் முத்துவேலர் செய்தார்.

சமத்துவச் சிந்தனை பிறந்தது

கலைஞருக்கு இசையில் பெரும் ஈடுபாடு உண்டு. எனினும், இசை பயில மறுத்து, தந்தையாரையே எதிர்த்து போராட்டம் நடத்தினார். அதற்குக்  காரணம், அக்காலத்தில் இசைக்கலைஞர்கள் மேடையில் மேலாடை அணியக்கூடாது, இடுப்பைச் சுற்றி துண்டு கட்டிக் கொண்டிருக்க வேண்டும்,  காலில் செருப்பு அணியக்கூடாது என்கிற சம்பிரதாயங்கள் இருந்தன. ஏனெனில், இசையை ரசிப்பவர்கள் பெரும் பண்ணையார்களாக விளங்கினார்கள்.  ‘கலைஞர் என்போர் பண்ணையார்களுக்கு அடிமைகள் அல்ல, எல்லோரும் சமம்’ என்கிற சமத்துவ எண்ணம் கலைஞருக்குப் பிறந்ததாலேயே, துண்டு  கட்டிக் கொண்டு, மேலாடையின்றி, காலில் செருப்பு அணியாமல் கச்சேரி செய்யும் வழக்கம் இந்த கருணாநிதிக்குக் கிடையாது என்றுகூறி இசை பயில  மறுத்தார். ‘தான் அடிமை அல்ல’ என்று தந்தையாரிடம் வாதிட்டார்.

திருவாரூர் பள்ளியில் அவருக்குக் கிடைத்த சமூகச் சிந்தனைகளும், கேள்வியின்றி மரபை ஏற்றுக்கொள்ளும் வழக்கத்தை எதிர்க்கக்கூடிய  மனப்பான்மையை அவருக்குத் தோற்றுவித்தது. தந்தை பெரியார் அப்போது பேசிக்கொண்டிருந்த சமூகக் கருத்துகளில் பெரிதும் ஈடுபாடு கொண்டார்.  திராவிட இயக்கக் கவிஞரான பட்டுக்கோட்டை அழகிரிசாமியின் பேச்சுகளும் அவருக்குள் கனலை மூட்டிக் கொண்டிருந்தன.திருவாரூரில் ஒரு முறை  ஆவேசமாக பட்டுக்கோட்டை அழகிரி பேசிக்கொண்டிருந்தார். காசநோயாளியான அவர் பேச்சுக்கு இடையே திடீரென மயங்கி விழுந்தார். கூட்டத்தின்  மத்தியில் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த சிறுவனான கலைஞர், “நோயாளியான நீங்கள், இவ்வளவு சிரமப்படலாமா?” என்று கண்ணீரோடு  கேட்டார்.அதற்கு அழகிரி, “என் நோயைவிட இந்த நாட்டைப் பீடித்திருக்கும் நோய் கடுமையானது. அதைச் சரிப்படுத்தத்தான் நாம் உழைக்க  வேண்டும்...” என்று பதிலளித்தார். கலைஞர், தன்னை முழுமையாக சமூகத்துக்கு ஒப்புக்கொடுக்க, அழகிரி அன்று கொடுத்த பதில்தான் பிரதான  காரணம்.

கம்யூனிஸமும், கலைஞரும்

மாணவப் பருவத்தில் தன் சக மாணவர்களோடு இணைந்து ‘மாணவர் மன்றம்’ உருவாக்கி, சமுதாய விழிப்புணர்ச்சி விவாதங்களை அடிக்கடி நடத்திக்  கொண்டிருப்பார் கலைஞர். தங்களுடைய எண்ணங்களை வெளியிட ஏடு ஒன்று தேவை என்பதை உணர்ந்து, ‘மாணவ நேசன்’ என்கிற கையெழுத்துப்  பத்திரிகையை கலைஞர் தொடங்கினார். ரஷ்யாவில் புரட்சி ஏற்பட்டு உலகெங்கும் கம்யூனிஸத் தாக்கம் உருவாகி வந்த காலம் அது. இந்திய  கம்யூனிஸ்டு இயக்கம், மாணவர்களை ஒருங்கிணைத்து ‘மாணவ சம்மேளனம்’ என்கிற இயக்கத்தைக் கட்டமைத்துக் கொண்டிருந்தது.திருவாரூரில்  மாணவர்களின் சூப்பர் ஸ்டாராகத் திகழ்ந்த கலைஞரை அந்த அமைப்புக்குள் கொண்டுவரும் முயற்சிகளில் வெற்றி பெற்றனர். மாணவ சம்மேளத்தினர்  ‘தமிழ் வாழ்க’ கோஷத்தோடு, ‘இந்தி வளர்க’ என்றும் கோஷம் எழுப்பியது கலைஞருக்கு கருத்து மாறுபாட்டை ஏற்படுத்தியது.

எனவே, திருவாரூர் மாணவ சம்மேளனத்தைக் கலைத்துவிட்டு, ‘தமிழ் மாணவர் மன்றம்’ என்கிற புதிய அமைப்பினை உருவாக்கினார். இந்த புதிய  அமைப்பு, பெரியாரின் சுயமரியாதைக் கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கத் துவங்கியது. கம்யூனிஸ்ட் இயக்கங்களின் செயல்பாடுகளிலிருந்து  தொடக்க காலத்திலேயே விலகி நின்றாலும் அவருக்குள் பொதுவுடைமைச் சிந்தனை இருந்துகொண்டேதான் இருந்தது. எனவேதான்,  பின்னாளில்  ‘நானும் ஒரு கம்யூனிஸ்ட்தான்’ என்று கலைஞர் பகிரங்கமாகவே அறிவித்தார்.

முரசொலி

‘தமிழ் மாணவர் மன்றம்’, திருவாரூரில் நிகழ்த்திய பல்வேறு நிகழ்வுகளுக்கு அன்பழகன், மதியழகன் போன்ற அந்தக்கால மாணவர் தலைவர்களை  அழைத்துப் பேசச் செய்தார் கலைஞர். இதற்கான செலவு களுக்கு வீட்டில் இருந்து சங்கிலி, வெள்ளிக் கிண்ணம் போன்றவற்றை வீட்டாருக்குத்  தெரியாமல் அடகு வைப்பார். இந்தித் திணிப்பை எதிர்க்க பெரியார், மாணவர்களுக்கு அழைப்பு விடுத்தார். இதை ஏற்றுக் கொண்டு இந்தி எதிர்ப்பு  ஊர்வலங்களில் கலைஞர் தீவிரமாகப் பங்கு பெற்றார். ஊர்வலத்தில் வந்து கொண்டிருந்தபோது எதிரில் வந்த தன்னுடைய பள்ளி ஆசிரியரிடமே இந்தி  எதிர்ப்புக் கொடியைத் திணித்து, தன் எதிர்ப்பை வலிமையாகப் பறைசாற்றினார். மறுநாள் இந்தி வகுப்பில், இந்தி படிக்க மாட்டேன் என்று சொல்லி  அதே ஆசிரியரிடம் அறையும் வாங்கினார்.

இந்தக் காலகட்டத்தில் தந்தை பெரியார், மணவை திருமலைச்சாமி, மூவலூர் ராமாமிருதம் அம்மையார், பட்டுக்கோட்டை அழகிரி, அறிஞர் அண்ணா  உள்ளிட்டோரின் இந்தி எதிர்ப்புப் பேச்சுகள் அவரைப் பெரிதும் கவர்ந்தன. இந்தி எதிர்ப்புப் போராட்டம் தமிழகத்தில் ஏற்படுத்தியிருந்த சமூக  உணர்வலையில் நீந்திக் கரையேறியவர்களில் தலையானவர் கலைஞர். இந்தி எதிர்ப்பு மட்டுமின்றி, மக்களிடையே நிலவி வந்த மூடநம்பிக்கைகள்,  சமூக ஏற்றத் தாழ்வுகள் ஆகியவற்றைப் பற்றி மேடைகளில் அருமையான தமிழ்நடையில் பேசத் தொடங்கினார். தான் நடத்திய கையெழுத்துப்  பிரதியில் எழுதினார்.“ஏரோட்டும் மக்களெல்லாம் ஏங்கித் தவிக்கையிலேதேரோட்டம் ஏன் உனக்கு தியாகராசா?”என்று திருவாரூர் தேரோட்டத்தை  நோக்கிய கேள்வியோடு கூடிய புகழ் பெற்ற வாசகத்தை கலைஞர் எழுதியது அப்போதுதான்.

‘திராவிட நாடு’ இதழுக்கு அவர் எழுதிய ‘இளமைப் பலி’ என்கிற கட்டுரையின் காரணமாக அறிஞர் அண்ணா இவரது தமிழாற்றலை உணர்ந்தார்.  எனினும், பள்ளி மாணவன் முழுமையாகத் தன்னை இயக்கப் பணிகளில் ஈடுபடுத்திக்கொண்டு, படிப்பை கோட்டைவிடுவதை அண்ணா  விரும்பவில்லை. அதனால்தான் தொடர்ந்து கலைஞர் அனுப்பிய கட்டுரைகளை அவர், ‘திராவிட நாடு’ இதழில் வெளியிடவில்லை. எனவே, தன் எழுத்துக்கென்றே பிரத்யேகமான ஊடகம் தேவை என்பதை உணர்ந்த கலைஞர், ‘முரசொலி’ என்கிற பெயரில், தான் நடத்தி வந்த ‘மாணவ  நேசன்’ கையெழுத்துப் பத்திரிகையைத் துண்டுப் பிரசுரமாக, மாத இதழாக மாற்றினார். ஒருங்கிணைந்த தஞ்சை முழுக்க கருணாநிதி என்கிற பெயர்  பிரபலமாக, ‘முரசொலி’யே முதல் காரணம்.

ஈரோட்டு குருகுலம்

பாண்டிச்சேரியில் திராவிடர் கழக மாநாடு ஒன்று நடந்தது. இதில் குழப்பம் விளைவிக்க ஏராளமானோர் காத்திருந்தார்கள். பாரதிதாசனோடு சாலையில்  நடந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென்று கலைஞர் மீது தாக்குதல் நடைபெற்றது. இதில் பாரதிதாசன் தப்பிக்க, கலைஞரின் கதி என்னஆனது என்றே யாருக்கும் தெரியவில்லை. ‘கலைஞரைக் காணோம்’ என்றதுமே பெரியார் இடிந்து போனார். விடியற்காலையில் இஸ்லாமியரைப்  போன்று தலையில் குல்லா, கைலி மாறுவேடத்தில் கலைஞர் வந்து சேர்ந்தபோது கண்ணீரோடு அவரைக் கட்டித் தழுவிக் கொண்டார் பெரியார்.  தாக்குதலில் கலைஞருக்கு ஏற்பட்ட காயங்களுக்கு தன் கையாலேயே மருந்திட்டார் பெரியார். அப்போதே கலைஞரை, ‘குடியரசு’ இதழின் உதவி  ஆசிரியராக பணிக்கு சேர்த்துக் கொண்டு ஈரோட்டுக்கு அழைத்துச் சென்றார். ‘குடியரசு’ பத்திரிகையில் பெரியாரின் நேரடிப் பார்வையில்  பணிபுரிந்தபோதுதான் பல்வேறு தலைவர்களுடனான அறிமுகம் அவருக்குக் கிடைத்தது. அவருடைய எழுத்தாற்றலை தமிழகம் உணர, சினிமாவில்  வசனம் எழுதக்கூடிய வாய்ப்பும் கலைஞருக்குக் கிடைத்தது. பெரியாரும் வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்.

கலையுலகில் கலைஞர்

‘ராஜகுமாரி’, கலைஞருக்கான ராஜபாட்டையை சினிமா உலகில் ஏற்படுத்தியது. தொடர்ந்து ‘மருதநாட்டு இளவரசி’, ‘மந்திரிகுமாரி’ என்று பயணித்த  அவரது சினிமாப்பயணம் ‘பராசக்தி’யில் உச்சத்தை எட்டியது. 1947ல் ‘ராஜகுமாரி’ மூலமாக சினிமாவுக்கு வந்த கலைஞர், 2011ல் ‘பொன்னர் சங்கர்’  வரை 64 ஆண்டுகளில் எண்ணற்ற படங்களில் எழுத்தாளர், தயாரிப்பாளர் என்று தன்னுடைய அபரிமிதமான பங்களிப்பை வழங்கியிருக்கிறார். சினிமா  மட்டுமின்றி ‘மந்திரி குமாரி’, ‘தூக்குமேடை’என்று அவரது நாடகங்களும் பிரபலம். சினிமா, நாடகம் மட்டுமின்றி கவிதை, கடிதங்கள், சிறுகதைகள்,  நாவல்கள் என்றும் அவரது பன்முக பங்களிப்புகள் தமிழ் பேசும் பேருலகுக்குக் கிடைத்தன. ‘குறளோவியம்’, ‘சங்கத்தமிழ்’, ‘தொல்காப்பியப் பூங்கா’, ‘தென்பாண்டிச் சிங்கம்’, ‘ரோமாபுரி பாண்டியன்’, ‘நெஞ்சுக்கு நீதி’ உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட  நூல்களை தொடர்ச்சியாக எழுதி யிருக்கிறார். அயராத அரசியல் பணிகளுக்கு இடையே கலை, இலக்கியம்தான் தன்னை ஓய்வெடுக்க வைக்கிறது  என்று அந்த கடுமையான உழைப்பையும் ‘ஓய்வு’ என்று குறிப்பிடுகிறார் கலைஞர்.

சட்டமன்றத்தில் கலைஞர்

திராவிடர் கழகத்தில் இருந்து திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றியபோது அறிஞர் அண்ணாவின் தளகர்த்தர்களில் ஒருவராகத் தன்னை  அடையாளப் படுத்திக் கொண்டார் கலைஞர். 1953ல் திமுக அறிவித்திருந்த மும்முனைப் போராட்டம், கலைஞரின் போர்க்குணத்தை தமிழகத்துக்குப்  பறைசாற்றியது. மும்முனைப் போராட்டத்தின் ஓர் அங்கமாக நடந்த கல்லக்குடி போராட்டத்தில் ரயில் தண்ட வாளத்தில் தலைவைத்துப் படுத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் கலைஞர். இளைஞர்கள் அவர் பின்னால் திரள, இந்தப் போராட்டமே முதல் காரணம்.1957ல் முதன் முறையாக  திமுக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டபோது திருச்சி மாவட்டம் குளித்தலையில் போட்டியிட்டு வென்றார் கலைஞர். அந்தத் தேர்தலில் 112  தொகுதிகளில் போட்டியிட்ட திமுகவுக்கு சுயேச்சை வேட்பாளர்களுக்கு வழங்கப்படுவதைப் போல வெவ்வேறு சின்னங்கள்தான் வழங்கப்பட்டன.  கலைஞருக்கு அப்போதே கிடைத்த சுயேச்சை சின்னம்தான் ‘உதயசூரியன்’. பின்னர் திமுக அரசியல் கட்சியாக அங்கீகாரம் பெற்ற பிறகும், அதே  சின்னத்தில்தான் இன்றுவரை போட்டியிடுகிறது. 1957ல் குளித்தலை, 1962ல் தஞ்சாவூர், 1967 மற்றும் 1971ல் சைதாப்பேட்டை, 1977 மற்றும் 1980ல் அண்ணா நகர், 1989 மற்றும் 1991ல் துமுகம், 1996, 2001 மற்றும் 2006ல் சேப்பாக்கம், 2011 மற்றும் 2016ல் திருவாரூர் என்று அறுபது ஆண்டு களுக்கும் மேலாக தமிழக சட்டமன்றத்தில்  உறுப்பினராக மகத்தான ஜனநாயகப் பங்களிப்பைத் தந்திருக்கிறார் கலைஞர். இந்தியாவிலேயே வேறு எவரும் இவ்வளவு நீண்டகால மக்கள் மன்ற  சேவையைச் செய்ததில்லை.

முதல்வர் கலைஞர்

1967ல் திமுக ஆட்சிக் கட்டிலில் ஏறுவதற்கு கழகத்தின் பொருளாளராக இருந்த கலைஞரின் புயல்வேகப் பணிகள் பெரும் காரணமாக இருந்தன.  அறிஞர் அண்ணாவே கூட, “தம்பி, உனக்கு ‘நிதி’ என்று தந்தையும் தாயும் சும்மாவா பெயரிட்டார்கள்?” என்று விளையாட்டாக அவரைப் புகழ்ந்தார்.பத்து  லட்சம் தேர்தல் நிதியென்று நிர்ணயித்து, பதினோரு லட்சமாக சேர்த்துத் தந்த பொருளாளர் என்றால் சும்மாவா?ஆட்சிக்கு வந்த இரண்டே ஆண்டில்  உடல்நலக்குறைவு காரணமாக அறிஞர் அண்ணா திடீரென மறைவுற்றார். அப்போது முன்னணித் தலைவர்களையும் தாண்டி இயக்கத்தை நடத்தக்கூடிய  வலிமை கொண்டவராக கலைஞரை கட்சியினர் தேர்வு செய்து, அவரை முதல்வராகவும் ஆக்கினார்கள். நாற்பத்திஐந்து வயதிலேயே முதல்வராகி  கலைஞர், தமிழகத்துக்குச் செய்த சாதனைகள் அளப்பரியவை.

சாதனை நாயகன்

போக்குவரத்தை தேசிய மயமாக்கியது, அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம், குடிநீர் வடிகால் வாரியம், குடிசை மாற்று வாரியம், கண் சிகிச்சை  முகாம், பிச்சைக்காரர்கள் மறுவாழ்வுத் திட்டம், கைரிக்‌ஷா ஒழிப்பு, இந்தியாவிலேயே முதன் முறையாக காவல்துறை ஆணையம், பிற்படுத்தப்பட்டோர்  மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கு தனித்துறை, விவசாயக் கல்லூரி, அரசு ஊழியர்கள் குடும்ப நலத் திட்டம், நிலவிற்பனை வரையறை, சிட்கோ மற்றும்  சிப்காட் தொழிற்பேட்டைகள், இந்தியாவிலேயே முதன்முறையாக விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், ஆசியாவிலேயே முதன்முறையாக கால்நடை  மற்றும் விலங்குகள் பல்கலைக்கழகம், பெண்களுக்கு சொத்தில் சம உரிமை, ஏழைப்பெண்களுக்கு திருமண உதவித்திட்டம், விதவைப் பெண்களுக்கு  மறுமண உதவித்திட்டம், பெண்கள் சுய உதவிக்குழு, கிராமந்தோறும் கான்கிரீட் சாலைகள், இந்தியாவின் தெற்கு எல்லையாக திருவள்ளுவர் சிலை,  தமிழுக்கு செம்மொழி மாநாடு, எல்லோருக்கும் கலர் டிவி, பல்கலைக்கழகங்கள்... என்று ஐந்து முறை தமிழகத்தை ஆண்ட கலைஞரின் எண்ணிலடங்கா  மக்கள் சேவைகளைச் சொல்லிக்கொண்டே போகலாம்.

ஆளுங்கட்சியாக இருந்தபோதும் சரி, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தபோதும் சரி, அவரது இதயம் தமிழர்களுக்காகவே துடித்துக் கொண்டிருந்தது. ஒரு  தெருவுக்கோ, மேம்பாலத்துக்கோ பெயர் வைப்பதிலும்கூட அவருக்கு கட்சி மற்றும் மாநில நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கம்  இயல்பாகவே இருந்தது.கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக கலைஞரின் பெயர் இடம்பெறாத செய்தித்தாள்களே தமிழகத்தில் இல்லை எனலாம்.  இனி, தமிழக வரலாற்றை எழுதும் எவருமே கலைஞரின் பெயரைத் தவிர்க்கவே முடியாது என்பதுதான் அவரது சாதனைகளுக்கெல்லாம் மகுடம்.

(நன்றி : குங்குமம்)