22 ஆகஸ்ட், 2018

ஏகலைவன்!

தமிழ் சினிமாவில் முதன்முதலாக ஒரு வசனகர்த்தாவின் பெயரை டைட்டிலில் கண்டதுமே, ஒரு சூப்பர் ஸ்டாருக்கான ஆரவாரம் திரையரங்கங்களில் எழுந்ததென்றால், அது ‘மு.கருணாநிதி’ என்கிற பெயருக்குதான். இந்த சாதனை கலைஞரால், அவ்வளவு எளிதில் படைக்கப்பட்டு விடவில்லை. அவரது மொழியில் சொன்னால் தென்றலை தீண்டியதில்லை, தீயை தாண்டியிருக்கிறார்.

‘குடியரசு’ இதழில் மாதம் 40 ரூபாய் சம்பளத்துக்கு உதவி ஆசிரியராக கலைஞர் பணிபுரிந்துக் கொண்டிருந்த சமயம். ஒவ்வொரு இதழிலுமே அவரது தமிழ், நெருப்பைக் கக்கிக் கொண்டிருந்ததை கவனித்த ஜூபிடர் பிக்சர்ஸ் நிறுவனம், ‘ராஜகுமாரி’ படத்துக்கு வசனம் எழுதுவதற்காக அவரை அழைத்தது. தந்தை பெரியாரிடம், சினிமாவில் பணிபுரிய கலைஞர் அனுமதி கேட்டபோது, மகிழ்வோடு வாழ்த்தி அனுப்பி வைத்தார். பெரியாருக்கு, சினிமா என்றாலே வேப்பங்காய் என்றாலும், கலைஞர் என்றாலே தித்திப்பு.

‘ராஜகுமாரி’ டைட்டிலில் ‘வசனம்’ என்கிற இடத்தில் இயக்குநர் ஏ.எஸ்.ஏ.சாமியின் பெயர்தான் இடம்பெற்றது என்றாலும், ‘உதவி ஆசிரியர்’ என்று கலைஞரின் பெயர் இடம்பெற்றது. நெற்றி நிறைய விபூதி, கழுத்தில் துளசிமாலை, தூய்மையான வெள்ளை கதராடையோடு இந்தப் படத்தில் நாயகனாக நடித்தவர், வசனகர்த்தா கலைஞருக்கு நெருக்கமான நண்பரானார். பின்னர் கலைஞரால் ‘கொள்கை மாற்றம்’ அடைந்து திராவிடப் புரட்சி நடிகரான எம்.ஜி.ஆர்தான் அவர்.

‘ராஜகுமாரி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ‘அபிமன்யூ’ படத்துக்கும் வசனம் எழுதும் வாய்ப்பு கலைஞருக்கு கிடைத்தது. ‘அபிமன்யூ’ வெளியானபோது, படத்தைக் காண்பிப்பதற்காக தியேட்டருக்கு தன்னுடைய மனைவியையும், நண்பர்களையும் அழைத்துச் சென்றார் கலைஞர். டைட்டிலில் அவரது பெயர் இடம்பெறவில்லை. அதிர்ச்சியடைந்தார் கலைஞர்.

பட அதிபர்களிடம் சென்று நீதி கேட்டபோது, ‘நீங்கள் மிகவும் வயதில் குறைந்தவர். மேலும் உங்கள் பெயருக்கு பின்னால் பட்டமளிக்கக்கூடிய கல்வித்தகுதியும் இல்லாதவர். இன்னும் நீங்கள் சினிமாவில் புகழ் பெற்ற பிறகே உங்கள் பெயரை டைட்டிலில் போட முடியும்’ என்றார்கள். படத்தின் டைட்டிலில் வசனம் என்கிற இடத்தில் இடம்பெற்ற எஸ்.ஏ.சாமிக்கு, ‘பி.ஏ’ என்கிற பட்டம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

மறைவுக்குப் பிறகும் மெரீனாவில் இடம் பிடிக்க கலைஞர் போராடி வென்ற வரலாறுதான், அவருடைய ஆரம்பகால சினிமாவுலக வரலாறும்கூட.

டைட்டிலில் ‘இடஒதுக்கீடு’ கொடுக்க மறுத்தவுடன், கோபத்துடன் ஜூபிடர் பிக்சர்ஸை விட்டு சுயமரியாதை காக்க வெளியேறினார் கலைஞர். நல்ல சம்பளம் கொடுக்கிறார்களே என்று தன்னை அவர் சமரசப்படுத்திக் கொள்ளவில்லை. தன் பெயர் இல்லாத இடத்தில், தான் இருப்பதை அவர் விரும்பவில்லை.

கோவையிலிருந்து ஊர் திரும்பியவர், திருவாரூரில் முகாமிட்டிருந்த ‘தேவி நாடக சபா’வினருக்கு ‘குண்டல கேசி’யை ஆதாரமாக வைத்து ‘மந்திரி குமாரி’ நாடகத்தை எழுதிக் கொடுத்தார். ‘சக்தி நாடக சபா’விடமிருந்து பிரிந்து வந்து புதிய சபாவை அமைத்திருந்த அந்த நாடகக் குழுவினருக்கு ‘மந்திரி குமாரி’, மாஸ்டர்பீஸாக அமைந்தது. மக்களிடம் பெரும் வரவேற்பை அந்த நாடகம் பெற்றிருந்தது.

மயிலாடுதுறையில் இந்த நாடகத்தை கண்டு வியந்த கவிஞர் கா.மு.ஷெரீப், இந்நாடகத்தின் வசன சிறப்புகளைப் பற்றி மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரத்திடம் எடுத்துச் சொன்னார். சுந்தரம், ‘மந்திரி குமாரி’யை திரப்படமாக்க விரும்பினார். 40களின் இறுதியிலேயே மாதம் ரூ.500 (அப்போது ஒரு சவரன் தங்கமே 75 ரூபாய்தான்) என்கிற மிகப்பெரிய சம்பளத்துக்கு மாடர்ன் தியேட்டர்ஸில் பணிபுரிய கலைஞர் ஒப்பந்தமானார். ஜூபிடரில் பணிபுரிந்தபோது எப்படி எம்.ஜி.ஆரை தன்னுடைய கொள்கைக்கு திருப்பினாரோ, அது போலவே மாடர்ன் தியேட்டர்ஸில் பணிபுரிந்தபோது கண்ணதாசனையும் தி.மு.கழகத்துக்கு கலைஞர் கொண்டுவந்து சேர்த்தார்.

‘கொள்ளையடிப்பது ஒரு கலை’ போன்ற பஞ்ச் வசனங்களால் ‘மந்திரி குமாரி’ தமிழகமெங்கும் பரபரப்பை கிளப்பியது. தமிழ் சினிமாவின் முதல் பஞ்ச் வசனகர்த்தா என்றுகூட கலைஞரை சொல்லலாம்.

‘மந்திரி குமாரி’யைப் பார்த்து மகிழ்ந்த என்.எஸ்.கிருஷ்ணன் சேலத்துக்கு வந்து கலைஞரை சந்தித்தார். தான் எடுக்கவிருக்கும் ‘மணமகள்’ படத்துக்கு வசனம் எழுதித்தர வேண்டுமென்று கேட்டார். என்.எஸ்.கிருஷ்ணனும், தந்தை பெரியாரின் அபிமானி என்கிற அடிப்படையில் அவருடன் அன்புடன் பழகினார் கலைஞர். எனவேதான் சம்பளப்பேச்சு வந்தபோது, ‘நீங்க கொடுக்கிறதை வாங்கிக்கறேன்’ என்றார் கலைஞர்.“நான் எவ்வளவு கொடுத்தாலும் வாங்கிப்பீரா?”, என்.எஸ்.கே கேட்க, கலைஞர் மகிழ்ச்சியாக தலையாட்டினார்.

ஒரு வெள்ளை பேப்பரில் ஒரு தொகையை குறிப்பிட்டு, அதை நான்காய் மடித்து கலைஞரின் பாக்கெட்டில் வைத்தார் என்.எஸ்.கே., கலைஞர் அதை பிரித்துக்கூட பார்க்கவில்லை.

“பிரித்துப் பாரும் ஓய். அப்போதானே தொகை தெரியும்...”

கலைஞர் பிரித்துப் பார்க்க.. அதில் நான்கு பூச்சியங்கள் எழுதப்பட்டிருந்தன.“அண்ணே, எதுவாக இருந்தாலும் சம்மதம்தான்” என்று கலைஞர் சொல்ல, அப்படியே அவரை கட்டிப் பிடித்துக் கொண்டார் என்.எஸ்.கே.

உடனே பேப்பரை வாங்கி நான்கு பூச்சியங்களுக்கு முன்னால் ‘ஒன்று’ என்கிற எண்ணை என்.எஸ்.கே. எழுத, கலைஞருக்கு ஆனந்த அதிர்ச்சி. பத்தாயிரம் ரூபாய். ஒரு வசனகர்த்தாவுக்கு இந்த தொகை என்பது அந்த காலத்தில் மிகவும் அதிகம். இந்தப் பணத்தில் அப்போது ஆயிரம் கிராம் தங்கம் வாங்கலாம் என்றால், இன்றைய மதிப்பில் எவ்வளவு பெரிய தொகை என்று எண்ணிப் பாருங்கள். கலைஞரின் வயது அப்போது 25 தான். ‘மணமகள்’ படத்துக்கு கிடைத்த அந்த அபாரமான சம்பளம்தான் கலைஞரை சென்னைக்கு குடிபெயர வைத்தது. எந்த சினிமாவின் டைட்டிலில் கூட தனக்கு பெயர் போட மறுத்தார்களோ, பின்னாளில் அதே சினிமாவை தன் தீந்தமிழால் கட்டியாண்டார் கலைஞர்.

சினிமாவில் கதை, வசனத்தில் கலைஞர் நிகழ்த்திய சாதனைகளை காட்டிலும், சினிமாவில் ஒரு சாதாரணர் சாதிக்க முடியும் என்று அவர் நிகழ்த்திக் காட்டிய சாதனையே தலையாயது. ஏனெனில், கலைஞருக்கு முன்பு வரை பாகவதர்களும், பண்டிதர்களும்தான் சினிமாத்துறையில் ஜொலிக்க முடியும் என்கிற நிலை இருந்தது. அந்த இரும்புக்கதவை எட்டி உதைத்துத் திறந்த முதல் சாமானியன் கலைஞர்தான். அவர் திறந்துவிட்ட கதவுதான் அன்றிலிருந்து இன்றுவரை சென்னையை நோக்கி, நம்பிக்கையை மட்டுமே மூலதனமாகக் கொண்டு, கண்களில் சினிமா கனவோடு ரயிலேறிய பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு கலங்கரை விளக்கம்.

கலைஞர் ஒரு சுயம்பு. கலைஞர் ஒரு ஏகலைவன். அவர் இளைஞர்களுக்காக எழுதிய இந்த ஒரு கவிதை போதும். சினிமாவில் மட்டுமல்ல. எத்துறையிலும் போராடி, வெல்லுவதற்கான உந்துசக்தியாக இளைஞர்களுக்கு என்றுமே இருக்கும்.

ஏகலைவன் வித்தை கற்க
எந்த சாத்திரமும் அனுமதிக்கவில்லை
அவன் வில்லில் விஜயனையும் வெல்வான் என்று
கட்டைவிரலைக் காணிக்கையாய் பெற்றதென்ன நியாயம்?
தவம் செய்தான் சம்பூகச் சூத்திரன்
தகுதி அவனுக்கேது என்று சீறி
அவன் தலை வெட்டிச் சாய்த்தகதை
இராமபிரான் வரலாரன்றோ?
கட்டை விரலையோ, தலையையோ
காணிக்கையாக இந்நாளில் எவனும் கேட்டால்
பட்டை உரியும் சுடுகாட்டில்
அவன் கட்டை வேகும். பிறகென்ன?
முதலுக்கே மோசம் வந்தபின்னர்
முயலாக ஆமையாக கிடத்தல் நன்றோ?
ஆயிரம் அடி பள்ளத்தில் வீழ்ந்தவனை
கைதூக்கிக் கரையேற்றும் நேரத்தில்
கனமான பாறையொன்றை
அவன் தலையில் உருட்டி விட
எத்தனிக்கும் உளுத்தர்களை கண்டால்
உதைக்கத் தான் வேண்டும்
ஓட ஓட விரட்டத்தான் வேண்டும்

(நன்றி : தினகரன் வெள்ளிமலர்)

1 கருத்து:

  1. கட்டுரைக்கும் சிவாஜியுடன் இருக்கும் படத்துக்கும் என்ன சம்மந்தம்?

    பதிலளிநீக்கு