30 நவம்பர், 2011

சுதந்திர பூமி – கமர்சியல் பார்ப்பனக் கருத்தியல்!


"அண்ணா, பெரியார் காலத்துலேயெல்லாம் இப்படியில்லே. கருணாநிதி வந்துதான் எல்லாத்தையும் கெடுத்துட்டாரு. அதுவும் பழைய கருணாநிதி வேற. இப்போ இருக்குற கருணாநிதி வேற” என்கிற தொனியில் பார்ப்பனர்கள் பலரும் அவரவருக்கு கிடைக்கும் துக்ளக், தினமலர் மாதிரி பத்திரிகைகளிலும், இணையத் தளங்களிலும் வினோத பிரச்சாரத்தை கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தி வருகிறார்கள். இந்த கருத்துக்கு தொடர்பான ஏதாவது துணைக் கேள்வியைக் கேட்டால், ”96 வரைக்கும் கருணாநிதிக்குதான் ஓட்டு போட்டோம்!” என்று தங்களது நடுநிலையையும் அழுத்தமாக நிரூபிக்கத் தயங்குவதில்லை இவர்கள்.

ஒருவேளை 96க்கு முன்பாக பார்ப்பனர்கள் திராவிட இயக்கத்தின் சமூகப் பணிகளை பாராட்டிக் கொண்டுதான் இருந்தார்களோ? அப்போது சின்னப் பயல்களாக இருந்ததால் நமக்குதான் தெரியாமல் போய்விட்டதோ என்றுகூட சில நேரங்களில் சந்தேகம் வந்துவிடும். உச்சக்கட்டமாக, “இவங்களைப் போய் தப்பா நினைச்சிட்டோமே? பெரியார், அண்ணா மேல எவ்வளவு மரியாதை வெச்சிருக்காங்க?” என்றுகூட சில நேரங்களில் நினைத்துவிடுவது உண்டு. 2009ல் திடீரென ஈழப்பாசம் இவர்களுக்கு பொத்துக்கொண்டு சோனியாவையும், கலைஞரையும் கரித்துக் கொட்டியபோது, “அடடா.. நிஜமாவே இவாள்லாம் ரொம்ப நல்லவளா இருக்காளே?” என்றும் கூட நினைக்கத் தோன்றியது.

1973ல் வெளிவந்த இந்திரா பார்த்தசாரதியின் ‘சுதந்திர பூமி’ நாவலைப் வாசித்தபோது இந்த நினைப்பெல்லாம் சுத்தமாக அகன்றது. ஏற்கனவே இ.பா.வின் படுமொக்கை நாவலான ‘வேதபுரத்து வியாபாரிகள்’ வாசித்து நொந்து நூடுல்ஸ் ஆகிப்போனோம். அந்நாவலை வாசிப்பதற்கு முன்பாக இலக்கிய அன்பர்கள் பலரும் ‘சமகால அரசியலை இவ்வளவு பகடியோடு அணுகிய படைப்பு வேறொன்றுமில்லை’ என்றெல்லாம் பில்டப் கொடுத்திருந்தார்கள். உண்மையில் ‘வேதபுரத்து வியாபாரிகள்’ வெறும் தயிர்வடை காமெடிதான். புன்னகைத்துக் கொண்டேகூட படிக்க முடியவில்லை. 91-96 ஜெயா ஆட்சிக் காலத்தை பகடி செய்வதாக நினைத்துக்கொண்டு, ‘ஆட்டோ வந்துடுமோ?’வென பயந்துக்கொண்டே இ.பா. எழுதியிருப்பார் என்று தோன்றுகிறது.

‘சுதந்திர பூமி’ சோஸலிஸத்தை நக்கலடிக்கும் பிரதியென்று இ.பா. நினைத்துக்கொண்டு எழுதியிருக்கிறார். பார்ப்பன டி.என்.ஏ. என்பதால் தமிழகத்தை விட்டு துரத்தப்பட்ட (எத்தினி கதை சார் இதே டெம்ப்ளேட்டுலே எத்தினி பேரு எத்தனை காலத்துக்கு எழுதுவீங்க) இளைஞன் ஒருவன், டெல்லிக்குப் போய் ஒரு எம்.பி.க்கு சமையல் வேலை செய்து, அவரது நம்பிக்கையைப் பெற்று, 72 தேர்தலில் மத்தியப் பிரதேசத்தில் நின்று வென்று, மத்திய அமைச்சர் ஆகிறான் என்று போகிறது கதை. பெரும்பாலும் மூன்றே மூன்று கதாபாத்திரங்கள், அரசியல் பேசுகிறோம் என்று எப்போதும் மொக்கை போட்டுக்கொண்டே போகிறார்கள். அரசியல் என்பதால் இடையிடையே மைல்டாக ‘செக்ஸ்’ வருகிறது. அதையும் நேரிடையாக வெளிப்படுத்த இ.பா.வுக்கு துணிச்சல் இல்லை.

இ.பா.வின் பெரும்பாலான கதைகளில் டெல்லிதான் களம். அவர் அங்கு வாழ்ந்தார் என்பதே இதற்கு காரணம். இந்நாவலும் விதிவிலக்கல்ல. அமெரிக்காவிலேயே ‘க்ரீன் கார்ட்’ வாங்கி செட்டில் ஆகிவிட்டாலும், இங்கிருக்கும் தி.க.,வையும், தி.மு.க.வையும் பார்த்து வயிறெறிவதுதான் பார்ப்பன அடிப்படைக் கருத்தியல். தமிழகத்தின் 97 சதவிகிதம் பேர் முட்டாள்கள் என்பதையே திரும்ப, திரும்ப வேறு வேறு வார்த்தைகளில், வேறு வேறு வடிவங்களில் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். இ.பா.வும் இந்த ‘சோஸலிஸ பகடி’க் கதையில் (கதையோடு ஒட்டா விட்டாலும்) அதை இரண்டு அத்தியாயங்களுக்கு விரிவாகச் சொல்கிறார்.

வட இந்திய எம்.பி., சென்னைக்கு வருகிறார். அவரோடு நம் ‘பார்ப்பன’ நாயகனும் காரியதரிசியாக வருகிறார். தமிழக அரசியல் தத்துவ விசாரங்களை உரையாடல்களாக இருவரும் நிகழ்த்துகிறார்கள். வடநாட்டு எம்.பி. சொல்கிறார் “பெரியார்தான் உங்களுக்கு டான் க்விஸாட் என்றால் நீங்களெல்லாம் எவ்வளவு பெரிய முட்டாள்கள்?”

தமிழ் அரசியல் வட இந்திய அரசியல்வாதிகளுக்கு வேப்பங்காய்தான். ஆனாலும் இ.பா. இந்தப் போக்கை நியாயப்படுத்துகிறார். ஏனென்றால் தமிழர்கள் முட்டாள்கள் என்றுதானே அவரும் நம்புகிறார்? இல்லாவிட்டால் ராமராஜ்யம் நடத்திய ராஜாஜியை வீழ்த்திவிட்டு காமராஜர் வந்திருப்பாரா? அவருக்குப் பிறகு சூத்திரக் கட்சியான திமுக பெரும்பான்மை பெற்றிருக்குமா?

சென்னைக் கடற்கரையைப் பார்க்கும் எம்.பி. இவ்வளவு அழகான கடற்கரையில் சமாதி கட்டி, தமிழ் அறிஞர்களின் சிலைகளை வைத்து அசிங்கப்படுத்திய திராவிட ஆட்சியை கேலி செய்கிறார். ‘நாட்டுக்குள் ஒரு தனிநாடாக’ தமிழ்நாடு விளங்குவதை வடநாட்டு எம்.பி.யால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அவரது தமிழ்நாட்டு டி.என்.ஏ காரியதரிசியோ காட்டிக் கொடுக்கும் வேலையை செவ்வனே செய்கிறார். “எங்கள் முதல்வருக்கு ராஜராஜ சோழன் என்று நினைப்பு” என்று தொடங்கி, சராசரி பார்ப்பனர் எப்படி திராவிட இயக்கங்களை அணுகுவாரோ, அந்தக் கருத்தியல்களை தத்துவம் மாதிரியான போர்வையை கட்டமைக்கும் வார்த்தைகளில் பக்கம் பக்கமாகப் பேசுகிறார். அண்ணா அப்போதே செத்துப் போய்விட்டார் என்பதால், அண்ணாவுக்கு மட்டும் லேசான சேதாரம் வரும்படியாக பார்த்துக்கொண்டு, பெரிய மனது வைத்து தமிழ்நாட்டின் மானத்தை ஓரளவுக்கு காப்பாற்றியிருக்கிறார் இ.பா.

இந்நாவலை வாசிக்கும்போது தெளிவாகவே தெரிகிறது. பார்ப்பனக் கருத்தியலின் அஜெண்டா எப்போதுமே ஒன்றே ஒன்றுதான். அதன் வடிவங்களும், பிரச்சாரர்களும் மாறுவார்களே தவிர, அக்கருத்தியலின் நோக்கம் மாறவே மாறாது. நாற்பதாண்டுகளுக்கு முன்பாக எதை சொல்லி வந்தார்களோ, அதையேதான் இன்றும் சொல்லி வருகிறார்கள்.

ஒரே மாற்றம் என்னவென்றால், இப்போது அந்தக் கருத்தியலுக்குள் சூத்திரர்களுக்கும் கொஞ்சம் தாராளமாக ‘இடஒதுக்கீடு’ கொடுக்க முன்வந்திருக்கிறார்கள். திராவிட ஆட்சி விதைத்ததின் பலன்களை நன்கு அறுவடை செய்துவிட்ட ஒரு குழுவோ, தங்களுக்கும் இடுப்புக்கும் தோளுக்கும் குறுக்காக ஒரு வெள்ளைநிற ‘மாய நூல்’ வழங்கப்பட்டு விட்டதாக கருதிக்கொண்டு வளர்த்த கடாக்களின் மார்பிலேயே பாயத் தொடங்கியிருக்கிறார்கள். கடந்த இருபதாண்டுகளில் உலகமயமாக்கல் தனிமனித சுயநலத்தை தூண்டும் போக்கை விரைவுபடுத்தியிருக்கிறது. இதன் விளைவாக எவ்வளவோ உன்னத சிந்தனைகளும், இயக்கங்களும் காலாவதியாகத் தொடங்கியிருக்கிறது. திராவிட இயக்கமும் அதற்கு பலிகடா ஆகிவிடுமோ என்று இன்று அஞ்ச வேண்டியிருக்கிறது.

பார்ப்பனக் கருத்தியல் எப்போதுமே ஒழுக்கத்தை சுட்டிக் காட்டி தனது எதிரிகளை ஒடுக்கும். எதிரி, தான் ஒழுக்கக் குறைவானவன்தானோ என்று அவனையே நம்பச் செய்து குற்றவுணர்ச்சிக்கு ஆளாக்கும். டி.என்.ஏ பாரம்பரியமல்லாமல், நவீன பார்ப்பனர்களாக உருவெடுத்துவரும் அரசியல் விலக்கு செய்யப்பட்ட, ஒரு மொன்னையான சூத்திரப் பரம்பரைக்கு ‘சுதந்திர பூமி’ இவ்வாறான ஒரு குற்றவுணர்ச்சியை வெற்றிகரமாக ஏற்படுத்தும்.

நூல் வெளியீடு : கிழக்கு பதிப்பகம், சென்னை

(கிழக்கு இணையத்தளத்தில் தேடும்போது, இந்நூல் ‘ஸ்டாக்’ இல்லையென்று தெரிகிறது. கிழக்கின் செகண்ட் சேல்ஸில் ஒருவேளை கிடைக்கக் கூடும். இல்லையென்றால் இருக்கவே இருக்கிறது தேவி தியேட்டருக்கு எதிரிலிருக்கும் பிளாட்பாரப் புத்தகக் கடை அல்லது தெருவோர திருவல்லிக்கேணி புத்தகக் கடைகள்)

29 நவம்பர், 2011

மயக்கம் என்ன?

தனுஷ் தலைசிறந்த நடிகராக பரிணமித்து வருகிறார். இன்னும் சில ஆண்டுகளில் இந்தியாவை திரும்பிப் பார்க்க வைப்பார் என்பதில் சந்தேகமில்லை. சிறு சிறு காட்சிகளிலும் தன் முத்திரையை மிக அழுத்தமாகவே பதிக்கிறார். அவரது கண்கள் பெரிய ப்ளஸ் பாயிண்ட். தனுஷின் கண்களில் காதல், காமம், கோபம், வீரம், போதை, கருணை என்று எல்லா ரசங்களுமே காட்சியின் தன்மைக்கேற்ப சொட்டோ சொட்டுவென சொட்டிக் கொண்டேயிருக்கிறது. ‘மயக்கம் என்ன?’ திரைப்படம் மூலமாக, தனது நடிப்புலக வாழ்க்கையில் அடுத்த மைல் கல்லை நிச்சயமாக தாண்டிச் சென்றிருக்கிறார்.

தனுஷுக்காக மட்டுமே ‘மயக்கம் என்ன?’வை ஒரு முறை பார்க்கலாம். தனுஷைத் தவிர வேறு கேமிராமேன் ராம்ஜியை மட்டுமே பாராட்டலாம். சினிமாவில் ஒரு நொடிக்கு 24 ஃப்ரேம். இரண்டு மணி நேரத்துக்கு எத்தனை ஃப்ரேம் என்று கால்குலேட்டரில் கணக்கு போட்டுக் கொள்ளுங்கள். அத்தனை ஃப்ரேமையும் உலகத் தரத்தோடு படமாக்கியிருக்கிறார் ராம்ஜி. அவ்வளவுதான். மற்றபடி ‘மயக்கம் என்ன?’ வெறும் மட்டை.

பாலாவிடம் ’சரக்கு’ தீர்ந்துவிட்டதைப் போல, செல்வராகவனிடமும் ஸ்டாக் இல்லையென்பது புரிகிறது. இப்படத்தின் கார்த்திக்கை, 7ஜியிலேயே பார்த்தாயிற்று. இறுதிக்காட்சியை சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரித்த சூப்பர் மொக்கைப்படமான ‘புன்னகை தேசத்தில்’ பார்த்தாயிற்று. கொஞ்சம் புதியபாதை. கொஞ்சம் துள்ளுவதோ இளமை. கொஞ்சம் முகவரி. இவ்வாறாக 80 வருட தமிழ் சினிமாவின் அத்தனைப் படங்களிலிருந்து ஒவ்வொரு காட்சியாக சுட்டுத் தள்ளியிருக்கிறார். ஏற்கனவே நைசாக அரைத்த மாவை மற்றுமொருமுறை கிரைண்டரில் போட்டு ஆட்ட செல்வராகவன் எதற்கு?

‘யூ ஆர் லைக் மை சிஸ்டர்’ என்று கூறிய பெண்ணை, பிற்பாடு காதலித்து மணக்கிறார் கார்த்திக் (எ) தனுஷ். அதுவும் உயிர் நண்பனோடு ‘டேட்டிங்’ செய்துக் கொண்டிருந்த பெண். இப்படியெல்லாம் சமூகத்தில் நடப்பதே இல்லையா என்று கேட்கலாம். சமூகத்தில் நடந்ததை தினத்தந்தியில் படிக்கும்போதே பொறுமிக் கொள்ளும் ரசிகன், சினிமாவில் காட்சியாகப் பார்க்கும்போது காறி உமிழத்தான் செய்வான். திரையில் தெரியும் நாயகன் ராமனாகவும், நாயகி கண்ணகியாகவும் இருந்தாகவேண்டும் என்பது தமிழ் சினிமா ரசிகனுக்கு எழுதப்படாத விதி. அபூர்வமாக சில படங்களில் வேண்டுமானால் கதையின் முக்கியத்துவம் கருதி பொறுத்துக் கொள்வான்.

இவ்வாறு மணம் செய்துக் கொள்ளும் பெண்ணோடு நாயகன் முதலில் அன்னியோன்னியமாக இருப்பதையும், பிற்பாடு உளவியல்ரீதியாக தாம்பத்திய சிக்கல்களில் அல்லாடும் போதும் சாமானிய ரசிகனுக்கு எந்தவிதமான கிளுகிளுப்போ, பச்சாதாபமோ ஏற்படாது.

தொடர்ச்சியாகவே செல்வராகவனின் படங்களில் பெண் பாத்திரங்களை நோக்கி நாயகன், பெண்மையை கொச்சைப்படுத்தும் மோசமான வசைகளை உதிர்க்கும் போக்கு தொடர்ந்துக் கொண்டே இருக்கிறது. இதுவும் சமூகத்தில் நடக்கவேயில்லையா என்றால் நடந்துதான் தொலைக்கிறது. ஆனால் திரையில் அவ்வாறு தனுஷ் ஒரு பெண்ணைப் பார்த்து ‘பழைய கோழியா இருக்கும் போலிருக்கே?’ எனும்போது தியேட்டரில் எழும் ஏகோபித்த ஆதரவுடனான இளைஞர்களின் விசில் சப்தம் ஆபத்தான போக்கு.

நாயகன் என்றால் மெண்டலாக இருந்துத் தொலைக்க வேண்டுமென்று செல்வராகவனுக்கு என்னதான் வேண்டுதலோ? 1999ல் பாலா ஆரம்பித்து வைத்த இந்த சைக்கோ பேய், தமிழ் சினிமாவை பிடித்து ஆட்டு, ஆட்டுவென்று ஆட்டித் தொலைக்கிறது. கருக்கலைந்து நாராய் விழுந்து கிடக்கும் நாயகியை நாலு நிமிஷத்துக்கு வெறித்துக் கொண்டே இருக்கிறான் நாயகன்.

இடைவேளை வரையாவது சீட்டில் நெளிந்துக் கொண்டே படம் பார்த்துவிடலாம். இடைவேளைக்குப் பிறகு க்ளைமேக்ஸ் வந்தால் போதும், தெறித்துவிடலாம் என்கிற ‘கொலைவெறி’யை ஏற்படுத்தியிருக்கிறார் செல்வராகவன். ஜி.பி.பிரகாஷின் பின்னணி இசை வேறு பெரிய ரோதனை. காதில் பஞ்சு அடைத்துக்கொண்டு வந்திருக்கலாமோ என்று ஏங்க வைக்கிறது.

மயக்கம் என்ன? – சைக்கோக்களுக்கு மட்டும்!

28 நவம்பர், 2011

டிசம்பர் 6 - அனைவரும் வருக!




நீதான் எழுத்தாளன் சாரு
எழுத்துதான் உனக்கு சோறு
இனிமே நம்மளோட லெவலே வேறு
ரோட்டுலே ஓடுது காரு
சொம்புங்க குடிப்பாங்க மோரு
நாம போவலாம் டாஸ்மாக் பாரு
குடிக்கலாம் ஜிங்காரோ பீரு
பிஜேபி தலைவர் வெங்கையா காரு
உலகமே எதிர்ப்பார்க்குது டிசம்பர் ஆறு
எக்ஸைல் ஹிட்டடிக்குது எல்லாரும் பாரு


- நாவலை வெளியிடுபவர் வாலிபக் கவிஞர் வாலி என்பதால், அவருக்கு சமர்ப்பிக்கும் வண்ணம் எழுதப்பட்ட சமகால உயர் தனித்துவ கவித்துவம் -

26 நவம்பர், 2011

குடிவெறி

தமிழ்நாட்டில் இருந்துக் கொண்டு குடிவெறிக்கு எதிராகப் போராடுவது என்பது, அமெரிக்காவில் இருந்துக்கொண்டு சமத்துவத்துக்காக குரல் கொடுக்கும் பேரறிஞர் நோம்சாம்ஸ்கி நிலைமை மாதிரி படு தர்மசங்கடமான நிலைமை.ம் அத்தகைய ஒரு நிலையில் சமீபகாலமாக நானும், தோழர் அதிஷாவும் சிக்கிக் கொண்டிருக்கிறோம்.

ஒரு பிரபலமான அரசியல்/சமூக செயற்பாட்டாளர் அவர். ஏதேனும் பிரச்சினைகள் நேரும்போதெல்லாம் அது தொடர்பான விழிப்புணர்வுக் கூட்டங்களை சென்னையில் நடத்துவார். ஓசியில் டீயும், தம்மும் கிடைப்பதாக இருந்தால் கொலைகூட செய்யத் தயாராக இருக்கும் நாங்கள் அவ்வாறான கூட்டங்களில் கலந்துக் கொள்வதுண்டு. அந்த சமூக செயற்பாட்டாளர் மிகச்சரியாக ஒன்பது, ஒன்பதேகாலுக்கெல்லாம் எப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த கூட்டமாக இருந்தாலும் முடித்துவிடுவதை கண்டோம். இம்மாதிரி கூட்டங்களில் வாய்ப்பு கிடைத்தால் வாழப்பாடி வரை வாய் கிழிய பேசும் பேச்சாளர்களுக்கு இவர் ஒழுங்கு செய்யும் கூட்டங்களில் ஏமாற்றம்தான். எப்படி இந்த பங்ச்சுவாலிட்டி அவருக்கு கைவந்தது என்று விசாரித்துப் பார்த்ததில் அதிர்ச்சிகரமான ஓர் உண்மை எங்களுக்கு தெரியவந்தது. பத்து மணிக்கு டாஸ்மாக் மூடிவிடுவார்கள் என்பதாலேயே, எந்தப் பிரச்சினையப் பற்றிய கூட்டத்தையும் ஒன்பது மணிக்கு அவர் முடித்துக் கொள்கிறார் என்றார்கள். குடிவெறி தீமைக்கு இவர் ஒரு எடுத்துக்காட்டு.

இதுபோல குடிவெறியின் தீமைகளை கண்ணால் கண்டும், காதால் கேட்டும், மூக்கால் சுவாசித்தும் உணர்ந்த நாங்கள், அதை எதிர்த்து பிரச்சாரம் செய்ய ஓரியக்கம் ஒன்றினை தொடங்கினோம். வரலாற்றில் யாரெல்லாம் குடிவெறியை எதிர்த்திருக்கிறார்கள், அவர்களை பின் தொடர்வோம் என்று ஆராய்ந்தபோது, உத்தமர் காந்தியின் பெயர் முதலில் வந்தது. அவர் அந்தக் காலத்து அன்னா ஹசாரே என்பதால் அவரை பின் தொடர்வதா என்று யோசித்தோம்.

சமகாலத்தில் தனித்துவத்தோடு குடிவெறியை எதிர்த்தவர்கள் பா.ம.க.வினர் என்பதால், பா.ம.க.வில் இணைந்து குடிவெறியர்களை பந்தாடலாமா என்றும் திட்டமிட்டோம். சென்னைக்கு அருகில் அம்பத்தூரில் (பிரபல குடிவெறியர் ஜ்யோவ்ராம் வசிக்கும் ஊர் இது) நடந்த மது ஒழிப்பு மாநாட்டில் கலந்துக்கொண்ட பா.ம.க. பெண் தொண்டர் ஒருவரின் இந்தப் படத்தைக் கண்டவுடன், பாமகவில் சேரும் திட்டத்தையே கைவிட்டோம். இந்த சமூகத்தீமையைப் பற்றியே எப்போதும் நினைத்துக் கொண்டிருந்ததால், எங்களை அறியாமலேயே நாங்களும் கூட இக்காலக்கட்டத்தில் குடிவெறிக்கு பலியாகிவிட்டோம்.

ஆனாலும், இதுநாள் வரை குடிவெறியை எதிர்த்து மக்களிடையே பிரச்சாரம் செய்துவந்த மக்கள் நலப் பணியாளர்கள் பதிமூன்றாயிரம் பேரை திடீரென புரட்சித்தலைவி பணிநீக்கம் செய்துவிட்டதால், அந்தப் பணியை நாம் இருவர் மட்டுமாவது செய்தாக வேண்டும் என்று திடீரென நாங்கள் சபதம் எடுத்தோம்.

ஓரிரு குடிவெறியர்களையாவது திருத்த முடிந்தால், அதுவே இந்தியா 2020ல் வல்லரசாகும்போது நம்முடைய பங்காக இருக்கும் என்கிற ஆவலில் களமிறங்கினோம். முதற்கட்டமாக மூக்கு முட்ட குடித்துவிட்டு இணையத்தில் ட்விட்டர், ப்ளாக் மற்றும் கூகிள் பஸ்களில் கருத்து வாந்தியெடுக்கும் குடிவெறியர்களை திருத்த முயற்சித்தோம்.

எங்களின் முதற்கட்ட முயற்சியில் ஹாஃப் அடித்துக் கொண்டிருந்த பல்வேறு குடிவெறியர்கள் குவார்ட்டர், கட்டிங் என்று தங்களுடைய லிமிட்டை குறைத்துக் கொண்டார்கள். எங்களுடைய இணையச் சேவையை கேள்விப்பட்ட கேப்டன் கூட இப்போதெல்லாம் ஹாட் அடிப்பதில்லை, பீரோடு திருப்தி கொள்கிறார் என்கிற வெற்றிச் செய்தியை பின்னர் அறிந்துக் கொண்டோம். தோழர் ரோஸாவஸந்த் கூட தன் வீட்டில் சரக்கிருந்தும் தான் அடிப்பதில்லை என்று ட்விட்டரில் ஒப்புக் கொண்டார். 24 மணி நேர ஆஸ்பத்திரி மாதிரி, நாள் முழுவதும் குடிப்பதையே தொழிலாகக் கொண்டிருந்த வரவனையான் செந்தில், எங்களது உபதேசத்தால் குடிவெறியை வெறுத்து ஒதுக்கி, வேறு ஒரு உருப்படியான தொழில் செய்ய போய்விட்டார். அகிம்சை முறையிலான எங்களுடைய குடிவெறி எதிர்ப்புப் பிரச்சாரத்துக்கு இம்மாதிரி ஏராளமான வெற்றிகள் கிடைத்தது.

எந்த நல்ல விஷயம் நடந்தாலும், அதை கெடுக்க சில சாத்தான்கள் இருப்பது உலகம் தோன்றிய நாள் முதலாய் வழக்கம்தானே? எங்களது குடிவெறிக்கு எதிரான போரை கவிராஜன், சரண்கே, பொட்டீக்கடை சத்யா மற்றும் ஜ்யோவ்ராம் போன்ற குடிவெறியர்கள் முடக்க நினைத்தார்கள். ஹாலந்தில் இருக்கும் மெகா குடிவெறியரான மணிகண்டனும் இந்த சதிக்கு உடந்தை.

வெத்தலைப் பாக்கு பழக்கம் கூட இல்லாத எங்களிருவரையும் கஞ்சா புகைப்போம் என்று அவதூறு பரப்பினார்கள். ‘புழுதிவாக்கம் டாஸ்மாக்கில் நான் குடித்துக் கொண்டிருக்கிறேன். இங்கே வந்து குடிவெறிக்கு பிரச்சாரம் செய்து உதை வாங்கிச் செல்லுங்கள்’ என்றுகூட ஒரு குடிவெறியர் நேரடி மிரட்டல் விடுத்தார். இதற்கெல்லாம் நாங்கள் அஞ்சினால் இந்தியா எப்படி வல்லரசாக முடியும்?

எனவே, அடங்காப்பிடாரி குடிவெறியர்களை நேரடியாக சந்தித்து, குடிவெறி தீமைகளை எடுத்துரைத்து திருத்துவது என்று முயற்சியை மேற்கொண்டோம். இந்த முயற்சியின் முதல்கட்டமாக நேற்று கவிராஜன், சரண்கே ஆகியோரைச் சந்தித்து இரண்டு மணி நேர பேருரையாற்றினோம். 1970லோ அல்லது 1972லோ மதுவிலக்கினை திரும்பப் பெற்றுக் கொள்ளும் முடிவை கலைஞர் எடுக்கிறார். இந்த முடிவினை திரும்பப் பெறுமாறு கோரி, கலைஞரின் வீட்டுக்கே ராஜாஜி செல்கிறார். இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுக்குப் பிறகு, அதே மாதிரியான நிகழ்வு இந்த குடிவெறியர்களை நேரில் கண்டு குடிவெறி தீமை வேண்டாம் என்று நாங்கள் கெஞ்சியதுதான்.

இரவு ஒன்பது மணிவரை இந்த உரையைக் கேட்டு திருந்திய ஆடுகளாய் மாறினார்கள். இவர்கள் திருந்திவிட்டார்கள் என்று வெள்ளந்தியாய் நம்பி, நாங்கள் வீட்டுக்குச் சென்ற பிறகு, இருவரும் டாஸ்மாக்குக்கு சென்று, மிகச்சரியாக 9.59க்கு சரக்கு வாங்கி, மப்பு ஏத்திக் கொண்டதாக இன்று காலை அறிய முடிந்தது.

குடிவெறியரான ஜ்யோவ்ராமோ ஃபுல்லாக குடித்துவிட்டு, ‘மழையில் குடிப்பதை விட வேறென்ன பேரானந்தம் வேண்டும்’ என்று கூகிள் பஸ்ஸில் கவிதை எழுதி, அப்பாவி தமிழ் குடிமக்களை, டாஸ்மாக் குடிமக்களாக மாற்றம் செய்யும் வண்ணம் குடிவெறிக்கு ஆதரவான பிரச்சாரத்தை இன்றுமுதல் மேற்கொண்டிருக்கிறார்.

நேரடிப் பிரச்சாரமும் பயனில்லாவிட்டால், அடுத்ததாக காலில் விழுந்து கெஞ்சி குடிவெறியை கைவிடுமாறு கோருவதுதான் எங்களது ஒரே திட்டம். இதற்கும் குடிவெறியர்கள் தலை சாய்க்காவிட்டால், முள்ளை முள்ளால் எடுப்பதுபோல நாங்களும் குடிவெறியர்களாய் மாறி, மப்பு ஏத்திக்கொண்டு குடிவெறியின் தீமைகளை எடுத்துரைத்து அவர்களை மாற்றியே தீருவோம்.

குடிவெறிக்கு எதிரான எங்கள் போர், நாங்களே குடிவெறியர்களாக மாறினாலும் தொடரும் என்ற உறுதியை இப்பதிவின் வாயிலாக ஏற்கிறோம்.

25 நவம்பர், 2011

தளபதி.. எங்கள் தளபதி!

1996 அல்லது 97 ஆம் வருடங்களாக இருக்கலாம். ஒரு ஓட்டை சில்வர் ஃப்ளஸ்தான் என் வாகனம். தினமும் காலை ஒன்பது மணியளவில் வேளச்சேரி செக்போஸ்டை கடந்து கன்னிகாபுரம் வழியாக அண்ணாசாலைக்குள் நுழைவேன்.

ஒரு நாள் அவ்வழியாக சென்றுக் கொண்டிருந்தபோது, ஒரு வீட்டில் மரண இசை முழங்கிக் கொண்டிருந்ததை தூரத்தில் கேட்டேன். அருகே வந்துக் கொண்டிருந்தபோது, என்னை வேகமாக தாண்டி வந்த சைரன் வைத்த கார் ஒன்று அந்த வீட்டின் முன்பாக க்ரீச்சிட்டு நின்றது.

உள்ளே இருந்து இறங்கி வந்தவர் சென்னை மாநகரின் மேயராக இருந்த ஸ்டாலின். உடல் வைக்கப்பட்டிருந்த இடத்துக்கு வேகமாகச் சென்று, ஒரு நிமிடம் அஞ்சலி செலுத்தினார். இறந்தவரின் உறவினர் (பையனாக இருக்கலாம்) ஒருவர் அருகில் சோகமாக நின்றிருந்தார். அவரிடம் இறந்தவர் பற்றிய விவரங்களை விசாரித்து, செலவுக்கு கொஞ்சம் பணமும் கொடுத்து கிளம்பினார்.

இத்தனைக்கும் காலமானவர் திமுகவை சேர்ந்தவரும் கிடையாது. தினம் அந்த வழியாக மாநகராட்சிக்கு அலுவலகத்துக்கு செல்லும் ஸ்டாலின், தான் செல்லும் வழியில் யாரோ மரணித்துவிட்டதைப் பார்த்து, உடனே மரியாதை செலுத்த இறங்கியிருக்கிறார். “பார்க்குறதுக்கு ரொம்ப ஏழ்மையான குடும்பமா தெரிஞ்சது. அதுதான் செலவுக்கு பணம் இருக்குமோ, இருக்காதோன்னு தெரிஞ்சுக்கறதுக்கு இறங்கி வந்தேன்” என்று காரில் ஏறும்போது சொன்னார்.

‘அரசியலில் எளிமை’ குறித்து ஏடுகளில் மட்டுமே அறிந்திருந்த எனக்கு அந்நிகழ்வு பெரிய ஆச்சரியத்தைக் கொடுத்தது. 96-2001 காலக்கட்டத்தில் சென்னையில் வசித்தவர்கள் பலரும் ஸ்டாலினின் எளிமையை உணர்ந்திருப்பார்கள். முதல்வரின் மகன், மாநகரின் மேயர், எம்.எல்.ஏ., போன்ற எந்த பந்தாவும் ஸ்டாலினுக்கு இருந்ததில்லை. அக்காலக் கட்டத்தில் பல்வேறு இடங்களிலும் அவரது திடீர் அதிரடி விசிட்டுகள் நகர்வாசிகளை ஆச்சரியத்துக்கும், மகிழ்ச்சிக்கும் உள்ளாக்கியது.

பதினைந்து ஆண்டுகள் ஆகியும் இந்த எளிமை அவரை விட்டு இன்றுவரை மறையவில்லை. சில காலம் முன்பு நாம் செய்தித்தாள்களில் வாசித்திருக்கலாம். தவறான சிகிச்சையால் கண்பார்வை பறிபோன சுரேகா என்கிற மாணவிக்கு ஸ்டாலின் தனிப்பட்ட முறையில் உதவி, ஐதராபாத்தில் உயர்சிகிச்சை அளிக்க வைத்தார். ஸ்டாலினோடு நிழல் போல இருக்கும், திமுகவின் மாநில இளைஞரணி துணைச் செயலர் ஹசன் முகம்மது ஜின்னா பலமுறை இந்நிகழ்வைப் பற்றிச் சொல்லியிருக்கிறார். “தளபதி திடீர்னு வண்ணாரப்பேட்டைக்கு வண்டியை விடுன்னு சொன்னாரு. என்ன, ஏதுன்னு தெரியாம காரில் உட்கார்ந்தோம். அங்கே ஒரு இடத்துலே காரை நிப்பாட்டிட்டு, ஒரு சந்துக்குள்ளே இறங்கி நடக்க ஆரம்பிச்சாரு. அப்போ அங்க இருந்தவங்க சிலபேரு பேசிக்கிட்டாங்க. ‘ஏய் அங்கே பாருப்பா ஒருத்தரு ஸ்டாலின்மாதிரியே போறாரு’ ன்னு”. இந்நிகழ்வு நடந்தபோது ஸ்டாலின் துணை முதல்வராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தெருவில் எந்த பாதுகாப்பும் இல்லாமல் சாதாரண மனிதராக, பெரிய பொறுப்பில் இருக்கும் ஒருவர் நடந்துச் செல்வதை மக்களால் நம்பவே முடியவில்லை.

கடந்த வாரம் நடந்த நிகழ்ச்சி ஒன்றும் இம்மாதிரியானதுதான். மனதை நெகிழ வைத்த நிகழ்வு அது.

திருத்தணியைச் சேர்ந்தவர் ஜோதி. மாற்றுத்திறனாளியான அவர் தீவிரமான திமுககாரர். சமீபத்தில் இவருக்கு திருமணம் நடந்தது. தாலி கட்டிய கையோடு, மணமாலையை கழட்டிவிட்டு நேராக அண்ணா அறிவாலயத்துக்கு வந்துவிட்டார். ஸ்டாலினை சந்தித்து தனக்கு திருமணமாகியிருப்பதால், ஆசி வாங்க வந்ததாக சொன்னார். “ஏன் இவ்வளவு சிரமப்பட வேண்டும்?” என்று கடிந்துக் கொண்ட ஸ்டாலின், ஜோதி குறித்த மற்ற விவரங்களை கேட்டுத் தெரிந்துக் கொண்டிருக்கிறார்.

அன்று மாலை திருத்தணியில் ஜோதிக்கு திருமண வரவேற்பு. யாருமே எதிர்பாராத வண்ணம் மண்டபத்துக்குள் தன் வழக்கமான அதிரடி ஸ்டைலில் நுழைந்தார் ஸ்டாலின். ஜோதிக்கு இன்ப அதிர்ச்சி. “கல்யாணம் ஆனவுடனேயே, இரண்டரை மணி நேரம் பயணம் பண்ணி என்னை வந்து பார்த்தியேப்பா, பதிலுக்கு நான் வந்து உன்னை பார்க்க வேணாமா?” என்று தன் அறிவிக்கப்படாத திடீர் வருகைக்கு காரணமும் சொன்னாராம்.

அரசியல் தலைவர்களிடம் எளிமை இல்லை. கட்சித் தொண்டர்களுக்கு மரியாதை இல்லை என்றெல்லாம் திட்டமிட்டு, அன்னா ஹசாரே பாணியில் மொக்கைப் பிரச்சாரம் செய்யப்பட்டு வரும் இதே காலத்தில்தான், திமுகவின் பொருளாளரும், அடுத்த முதல்வருமான ஸ்டாலின் விடிவெள்ளியாக தெரிகிறார்.

அவரது தலைவர் கலைஞருக்கு தமிழ்நாட்டின் ஒவ்வொரு ஊரிலும், ஒரு நபரையாவது பெயர் சொல்லி அழைக்குமளவுக்கு தெரியும். ரொம்பவும் அடி வாங்கிய பழைய பழமொழிதான். இருந்தாலும் இந்த இடத்தில் பொருத்தமாக இருப்பதால் சொல்லி வைக்கிறோம். ‘புலிக்கு பிறந்தது பூனையாகுமா?’

23 நவம்பர், 2011

சென்னையில் சாக்ரடிஸ்!

ஏதோ ஒரு புத்தகக் காட்சி சீசனின் போது சாரு எழுதியிருந்ததாக நினைவு. ‘எஸ்.ராமகிருஷ்ணனை சுற்றி பத்து இளைஞர்கள் இருந்தார்கள். அவர்கள் மத்தியில் எஸ்.ரா பேசுவதையும், அதை உன்னிப்பாக இளைஞர்கள் கவனிப்பதையும் காணும்போது, இப்படித்தானே ஏதென்ஸில் சாக்ரடிஸ் பேசுவதை அரிஸ்டாட்டில், பிளேட்டோ உள்ளிட்ட இளைஞர்கள் கேட்டிருப்பார்கள் என்று நினைத்தேன்’.

சாரு சித்தரித்த அந்தக் காட்சியை நாம் கண்டதில்லை. ஆனால் நேற்று சென்னை ரஷ்ய கலாச்சார மையத்தை கண்டபோது, இது சென்னையா அல்லது பண்டைய ஏதென்ஸா என்கிற சந்தேகம் வந்தது. மேடையில் பேசிக்கொண்டிருந்தவர் சாக்ரடிஸ்தானோ என்கிற மனக்குழப்பமும் ஏற்பட்டது. நல்லவேளையாக அது எஸ்.ரா.தான். அவரது ட்ரேட் மார்க் முன்வழுக்கை மற்றும் முகத்தில் நிரந்தரமாக தங்கிவிட்ட வால்ட் டிஸ்னி கார்ட்டூன் பாணி புன்னகையை கண்டு உறுதி செய்துக் கொண்டோம்.

இலக்கியம் தொடர்பான நிகழ்வுகளுக்கு சென்னையில் அரங்கம் நிறைவது அரிதிலும் அரிதான விஷயம். சாரு, ஜெயமோகன் மாதிரி சூப்பர் ஸ்டார் எழுத்தாளர்களின் புத்தக வெளியீடுகள் தவிர்த்து, இலக்கியப் பேருரைகளுக்கெல்லாம் கூட்டம் சேர்வது என்பது நினைத்தேப் பார்க்க முடியாத விஷயம். எஸ்.ரா.வின் ஏழு நாள் உலக இலக்கிய தொடர்பேருரைகளுக்கு கூடும் கூட்டம் ஒரு உலக அதிசயம். நீண்டகாலம் கழித்து தரையில் அமர்ந்து ஒரு பேச்சை கேட்பது இப்போதுதான்.

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாக திமுக இலக்கிய அணி கூட்டங்களில் இவ்வாறான சுவாரஸ்ய உரையை கேட்டிருக்கிறோம். முதல் நாள் உரையில் டால்ஸ்டாயின் அன்னாகரீனா நாவல் பற்றி அமோகமாகப் பேசியதாக, ஷாஜியோடு போனில் பேசும்போது சொன்னார். அன்று போகும் வாய்ப்பு இல்லை என்பதால் இரண்டாம் நாள்தான் செல்ல முடிந்தது. தஸ்தாவேஸ்கியின் ’க்ரைம் & ஃபணிஷ்மெண்ட்’ பற்றி பேசினார் எஸ்.ரா.

இதை வெறும் பேச்சு என்று சொல்வதா, சொற்பொழிவு என்று சொல்வதா, சொல்லருவி என்று சொல்லுவதா என்று மகாக்குழப்பம். மூன்று மணி நேரம் எதிரில் அமர்ந்திருக்கும் கூட்டத்தை மாயக்கயிறு கொண்டு கட்டிப் போட்டார் என்பதே உண்மை. முதல் வரிசையில் அமர்ந்திருந்த மனுஷ்யபுத்திரன் கொஞ்சமும் அசையாமல் சிலையாக சமைந்திருந்தார். மொத்தக் கூட்டமும் கிட்டத்தட்ட இதே மாதிரியான மோனநிலைக்குதான் போயிருந்தது.

நேரடியாக நாவலை மட்டும் பேசாமல், நாவலாசிரியன் அந்நாவலை எழுதுவதற்கான சூழல், பின்னணி, அவசியமென்று எளிய வார்த்தைகளில், கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் கொஞ்சமும் சுணங்காமல் கொட்டித் தீர்த்துவிட்டார். தஸ்தாவேஸ்கியோடு நாமே வாழ்ந்த அனுபவத்தை எஸ்.ரா தந்தார்.

எஸ்.ரா.வின் பேச்சை வேறு சந்தர்ப்பங்களிலும் நிறைய முறை கேட்டிருக்கிறோம். குறிப்பாக ‘குழந்தைகள்’ பற்றி பேசும்போது அவரும் குழந்தையாக மாறி, கண்கள் மின்ன ஆர்வமாகப் பேசுவார். அந்நிலையில் பார்க்கும்போது உலகின் ஒரே அழகிய ஆணாகவும் அவர் தெரிவார். நேற்றும் அந்த அழகு நான்கைந்து சந்தர்ப்பங்களில் வெளிப்பட்டது.

வரும் ஞாயிறு வரை, எஸ்.ரா அருவியாகக் கொட்டப் போகிறார். சென்னையில் வசிப்பவர்கள் / ஆர்வமிருப்பவர்கள் ரஷ்ய கலாச்சார மையத்துக்கு வந்து நனையலாம். ரஷ்ய கலாச்சார மையத்தோடு, புஷ்கின் இலக்கியப் பேரவை மற்றும் உயிர்மை இணைந்து இந்நிகழ்வை நடத்துகிறது.

21 நவம்பர், 2011

அம்மான்னா சும்மாவா?

பஸ் கட்டணம் உயர்வு என்றதுமே முதலில் மகிழ்ந்தது எங்கள் ரூட்டில் பஸ் ஓட்டிக் கொண்டிருக்கும் கண்டக்டரும், டிரைவரும்தான். இருவருமே புரட்சித்தலைவி கண்ட சின்னமான ரெட்டை எலையை கையில் பச்சையாகக் குத்தியவர்கள்.

“ஆயிரம் ரூபாய்க்கு 23.50தான் பேட்டாவா கொடுக்குறாங்க. இப்போ கட்டணத்தை உயர்த்தியது மூலமா எங்களுக்கெல்லாம் தாயுள்ளம் கொண்ட அம்மா 30 ரூவாயா பேட்டாவை உயர்த்துவாங்க” என்று நாக்கை தொங்கப் போட்டுக்கொண்டு நம்பிக்கை தெரிவித்தார் எங்க ரூட்டு கண்டக்டர்.

ஆயிரக்கணக்கான போக்குவரத்துத் தொழிலாளர்கள் ஆவலாக எதிர்ப்பார்த்த ‘பேட்டா உயர்வையும்’ அம்மா அறிவித்திருக்கிறார். இனிமேல் ஆயிரம் ரூபாய் கலெக்‌ஷனுக்கு ரூ.16.50/- ஆக பேட்டாவை உயர்த்தி ஆணையிட்டிருக்கிறார்.

அடுத்து நம் மடியிலும் தங்கத்தாரகை அம்மா கைவைத்து விடுவாரோ என்று அஞ்சிப்போய், அவசர அவசரமாக மாடு மடியை தஞ்சமடைந்திருக்கிறார்கள் பால் உற்பத்தியாளர்கள்.

* * * * * * * * * *

செந்தமிழன் சீமான் என்றொரு சிங்கத்தின் கர்ஜனையில் மே மாதம் வரை நாடு அதிர்ந்துக் கொண்டிருந்தது. மே பதினைந்தாம் தேதி காலையில் இருந்து அவருக்கு தொண்டையில் ‘கிச் கிச்’. இப்போதெல்லாம் கர்ஜிக்க முயற்சித்தாலும் ‘மியாவ் மியாவ்’ என்றுதான் சவுண்டு வருகிறது.

அவருடைய லேட்டஸ்ட் ‘மியாவ் மியாவ்’ மூவர் தூக்குத்தண்டனை தொடர்பானது. புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அமைச்சரவையைக் கூட்டி மூவரின் உயிரையும் காப்பார் என்று ஆக்ரோஷமாக கைகளை உயர்த்தி, கண்கள் சிவசிவக்க வீர உரையாற்றியிருக்கிறார் ‘தள்ளு தள்ளு’ தலைவர்.

அம்மா, இவரை இப்படியே விட்டுவிட்டால் ’ஈழத்துக்கு ராணுவத்தை அனுப்பி ராஜபக்‌ஷேவை கைது செய்வார் புரட்சித்தலைவி’ என்கிற ரேஞ்சுக்கு அள்ளிவிட ஆரம்பித்துவிடுவார்.

இந்த ஆனந்தத் தொல்லையை சமாளிக்க அம்மாவுக்கு ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. உடனடியாக அமைச்சரவையைக் கூட்டி, ஒரு நடிகையை கற்பழித்ததாக இவர் மீது பதியப்பட்டிருக்கும் முதல் தகவல் அறிக்கையை தள்ளுபடி செய்வது மட்டுமே ஒரே வழி.

அப்படி மட்டும் செய்துவிட்டால் ஈழத்தாய்க்கு பிரமோஷன் கொடுத்து, உலகத்தாயாக்கவும் எங்கள் தன்மானச் சிங்கம் சீமான் ரெடியாகவே இருக்கிறார். அம்மா மனசு வைப்பாரா?

* * * * * * * * * *

கங்கை, யமுனை, சரஸ்வதி மாதிரி தமிழகத்துக்கு வற்றாத ஜீவநதி ஒன்று இல்லையே என்று புரட்சித்தலைவி அம்மா 91-96 காலத்திலேயே சிந்தித்திருக்கிறார். இடையில் தீயசக்தி ஆட்சி வந்ததையடுத்து ஜீவநதியை உருவாக்கும் திட்டம் தள்ளிப்போய் 2001 ஆட்சிக்காலத்தில் நடைமுறைக்கு வந்தது. டாஸ்மாக் எனும் அந்த ஜீவநதி மட்டும் இல்லையேல் 2006 தீயசக்தி ஆட்சியே நடந்திருக்காது. திவால் ஆகியிருக்கும்.

மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்கும் அம்மா, அந்த ஜீவநதியை மேலும் புனிதமாக்கும் முயற்சிகளின் முனைப்பாக இருக்கிறார். தமிழகத்தில் உயர்த்தர குடிமக்களை உருவாக்கும் பொருட்டு ‘எலைட் ஷாப்’புகளை ஏற்படுத்தப் போகிறாராம். குடிவெறியர்கள் சாதாரண சப்பைப் பார்களிலேயே காட்டு, காட்டு என காட்டுவார்கள். எலைட் பார்கள் வந்துவிட்டால் ஒட்டுமொத்தமாக உருவி காட்டிவிடுவார்களோ என்று கிளுகிளுப்படைந்துப் போயிருக்கிறது தமிழகம்.

* * * * * * * * * *

தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதை மட்டுமே ஒரே லட்சியமாக இதுவரை கொண்டிருந்த புரட்சித்தலைவி அம்மாவின் கருணைப்பார்வை மகாராஷ்டிரம் மீதும் திரும்பியிருக்கிறது. இனி மகாராஷ்டிரமும் இந்தியாவின் முதல் மாநிலம் ஆகும்.

கடந்த மாதம் சோ.அய்யர் அவர்களது டைரக்‌ஷனில் மிகச்சிறப்பாக படமாக்கப்பட்டு வெளியான உள்ளாட்சித் தேர்தல் திரைப்படத்தின் மராத்திய ரீமேக், அடுத்த மாதம் மகாராஷ்டிராவில் வெளியாகிறதாம்.

எனவே அம்மாநிலத்தின் பர்பானி மாவட்டம், ஜிந்தூர் நகராட்சியில் இருக்கும் இருபத்தோரு வார்டுகளையும் கைப்பற்ற அம்மா ஓ.பி.எஸ். வகையறாக்களுக்கு ஆணையிட்டிருக்கிறார்.

ரபாட்பேகம் காதிர், முன்னிஷா பெரோஜ்கான், பிட்டு அப்பாசமி, முனாப், சைதை எஸ்.டயாப், காட்டூன் ஷாகிப்கான், யாசின் கரீம், விக்ரம் தேஷ்முக் உள்ளிட்ட 21 வேட்பாளர்கள் இரட்டை இலைச் சின்னத்தில் களம் காணப்போகும் சிறுத்தைகள். இவர்களில் பெரும்பாலானோர் தமிழகத்தில் போனமாசம் வரைக்கும் சேட்டுக்கடை வைத்துக் கொண்டிருந்தவர்கள் என்று ரத்தத்தின் ரத்தம் ஒருவர் நம் காதில் கிசுகிசுக்கிறார்.

இரட்டை இலை அங்கே வென்றதும் பால், பஸ் கட்டணம், மின்சாரம் ஆகியவை மகாராஷ்டிராவிலும் உயர்த்தப்பட்டு விடுமோ என அங்கிருக்கும் மக்கள் பேதியடைந்திருக்கிறார்கள்.

* * * * * * * * * *

எத்தனை முறை எட்டி உதைத்தாலும், போயஸ் கார்டனுக்கு சென்று பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை புரட்சித்தலைவின் பொற்பாதங்களை கழுவிவிட்டு வரும் தமிழக இடதுசாரிகள் தற்போது கடுமையான குழப்பத்தில் இருப்பதாக தெரிகிறது.

சட்டமன்றத் தேர்தல் முடிந்ததுமே, அம்மா அவருடைய வழக்கமான பாணியில் உதைத்துத் தள்ளிவிட, கடைசியாக கேடுகெட்டுப்போய் கோயம்பேடு டாஸ்மாக்குக்கு போய் கூட்டணி பேசி மார்க்ஸ், லெனின், மாவோவின் பெயரையும் கெடுத்தாயிற்று. உள்ளாட்சியில் ‘பல்பு’ வாங்கியதற்குப் பிறகு டாஸ்மாக் தலைவரும் கூட மதிப்பதில்லை.

வேறு போக்கிடமின்றி தவிக்கும் இடதுசாரிகள் மீண்டும் தா.பா. தலைமையில் செந்தமிழன் தள்ளு தள்ளு, இனமான நெடுமாறன் பாணியில் அம்மாவுக்கே தீச்சட்டி தூக்கினாலும் ஆச்சரியப்பட ஏதுமில்லை.

தமிழக இடதுசாரிகளின் அவலநிலைக்கு சற்றும் சளைத்ததல்ல தமிழக ஊடகங்களின் நிலையும்.

பின்னே, அம்மான்னா சும்மாவா?

17 நவம்பர், 2011

தமிழும், திராவிடமும்!

உலகின் மூத்தமொழி. கல்தோன்றி, மண்தோன்றா காலத்து மனிதர்கள் பேசி மகிழ்ந்த மொழி. ஆரியக் கலாச்சார, சமஸ்கிருத ஊடுருவல், மொகலாய உருது, பார்சி, வெள்ளையரின் ஆங்கிலேய ஊடுருவல்களையும் சமாளித்து நின்று இன்றும் வாழும் ஒரே மொழி தமிழ்மொழி.

சமயம் மட்டுமே இம்மொழியைக் காத்தது என்ற புனையுரைகள் எப்போதும் புனையப்பட்டு வரும் சூழ்நிலையில் இனமான திராவிட இயக்கத்தின் பங்களிப்பு இம்மொழியின் வளர்ச்சிக்கு எத்தகையது என்று விளக்க வேண்டிய அவசியம் நமக்கு இயல்பாகவே எழுகிறது.

பண்டிதர்களும், சமயத் தலைவர்களும் தங்களுக்குள்ளாகவே நம் மொழியின் பயன்பாட்டினை பிரித்து எடுத்துக் கொண்டு சமயம் பரப்ப மொழியைப் பயன்படுத்திய வேளையிலே திராவிடர் இயக்கம் மட்டுமே தமிழை பாமரருக்கும் உரிமை கொண்டதாக்கியது.

தமிழிலே புதிய சொற்களை அறிமுகப்படுத்தியதில் முன்னோடிகளாக மறைமலையடிகளாரும், திரு.வி.க.வும் மற்ற பேராசிரியர்களும் பாடுபட்ட போதிலும், அவர்களது பணி எந்த அளவுக்கு மக்களை அடைந்தது என்பது கேள்விக்குறியே. புதுத்தமிழை சாமானியனும் பயன்படுத்தலாம், படைப்புகளை உருவாக்கலாம் என்ற சூழ்நிலையை உருவாக்கியவர்கள் திராவிட இயக்க முன்னோடிகள்.

தேசிய இன உணர்வானது தேசிய மொழியையே நேசிக்கச் செய்யும் இயல்பு கொண்டது என்ற நிலையில் மண்டல மொழியான தமிழின் தனித்தன்மையை காக்கும் வேலையை திராவிடர் இயக்கம் செவ்வனே செய்தது. சமயங்கள் தமிழை வாழவைத்தது என்ற கருத்தாக்கத்தை நாமும் ஒப்புக் கொண்டாலும் கூட சமயத்தமிழால் அடித்தட்டு தமிழனுக்கு விளைந்த நன்மை என்ன என்ற நியாயமான துணைக்கேள்வியையும் நம்மால் புறந்தள்ள முடியாது.

கூடுமானவரை வடமொழிச் சொற்களை தமிழில் இருந்து அகற்றி திராவிடர் இயக்கம் மக்களுக்குத் தந்த தமிழ் உரைநடைத் தமிழாக இருந்தாலும், அத்தமிழ் மக்களிடையே ஏற்படுத்திய எழுச்சியினை எந்தக் கொம்பனாலேயும் மறுக்க முடியாது.

திராவிடர்கள் நடத்திய பத்திரிகைகளான குடியரசு, விடுதலை, திராவிடன், திராவிடநாடு, முரசொலி, முத்தாரம், தோழன், நகரதூதன், போர்வாள், தாய்நாடு, குயில், இனமுழக்கம், தென்றல், தென்னகரம், தாரகை, தன்னாட்சி, தனியரசு, மாலைமணி, நம்நாடு, பிறப்புரிமை, நக்கீரன், அண்ணா, தென்புலம், மன்றம், முல்லை, நீட்டோலை, புதுவாழ்வு, தம்பி, மக்களாட்சி, அறப்போர், அன்னை, முன்னணி, காஞ்சி, பகுத்தறிவு, உரிமை வேட்கை, மக்களரசு, தீப்பொறி, ஈட்டி, திராவிடஸ்தான், தமிழரசு, தென்னரசு, திராவிட ஏடு, அருவி, பொன்னி, ஞாயிறு, பூம்புகார், வெள்ளி வீதி, கனவு, அமிர்தம், தஞ்சை அமுதம், தென்னாடு, முன்னேற்றம், தீச்சுடர், களஞ்சியம், திருவிடம், பூமாலை, சங்கநாதம், எரியீட்டி, புரட்சிக்குயில், திருவிளக்கு ஆகியவவை எளிய உரைநடையில் புதுத்தமிழ் சொற்களை சாமானிய மக்களிடையே பரப்பியது.

வேறு வழியில்லாமல் கல்கி, ஆனந்தவிகடன், சுதேசமித்திரன் போன்ற பத்திரிகைகளும் தங்களது சொந்த அடையாள நடையை மாற்றவேண்டிய கட்டாயம் இப்பத்திரிகைகளால் ஏற்படுத்தப்பட்டது. பழைய ஆனந்தவிகடன், கல்கி இதழ்களை இன்றைய இதழ்களோடு ஒப்பிட்டுப் பார்த்தோமேயானால் இந்த உண்மை புலப்படும்.

இதுமட்டுமல்லாமல் சிறுகதை, நெடுங்கதை, கவிதை, நாடகம், திரைப்படம் என இலக்கியத்தின் மற்ற கூறுகளிலும் திராவிட இயக்கத்தின் அழகுத்தமிழ் அரசாட்சி மொழியின் பயன்பாட்டை அதற்குரியவர்களுக்கு கொண்டு சென்றது. துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமியே பலமுறை ஒத்துக் கொண்ட ஒரு உண்மை “திராவிட இயக்கத்தினரால் தமிழர்களுக்கு நல்ல தமிழ் கிடைத்தது” என்பது.

புலவர் குழந்தையின் “இராவணக் காவியம்”, அதுவரை இருந்த இதிகாசத் தமிழ் செயற்பாட்டுக்கு மரண அடி கொடுத்தது.

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா முதற்கொண்டு திராவிட இயக்கத்தின் கடைநிலை எழுத்தாளர் வரை இனமான எழுச்சித் தொடரினை தமிழரிடையே தொடக்கி வைத்தார்கள்.

தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனாரின் தினத்தந்தி எளியத் தமிழில் தினச்செய்திகளை தமிழருக்கு தரத் தொடங்கியது.

தமிழர்களின் வாழ்வியல் முறையில் நடக்கும் இயல்பான நிகழ்ச்சிகளின் தலைப்புகள் தனித்தமிழில் மாற்றப்பட்டது திராவிட இயக்கம் தமிழ் மொழிக்கு செய்த மறுக்க முடியாத சாதனை எனலாம்.

விவாகசுபமுகூர்த்தப் பத்திரிகை – திருமண அழைப்பிதழ்

கர்ணபூஷனம் – காதணிவிழா

ருதுசாந்தி – மஞ்சள்நீராட்டு விழா

கிரஹப்பிரவேசம் – புதுமனை புகுவிழா

உத்தரகிரியை – நீத்தார் வழிபாடு

நமஸ்காரம் – வணக்கம்

இவ்வாறாக அன்றாட வாழ்க்கையில் தமிழன் பயன்படுத்திய வடமொழி வார்த்தைகள் நீக்கப்பட்டு, தமிழின் அழகுச்சொற்கள் பயன்பாட்டுக்கு வர திராவிட இயக்கம் அடிகோலியது.

அதுமட்டுமா? அரசியல் மேடைகளிலும் தமிழ் கொஞ்சத் தொடங்கியது

அக்ரசானர் – அவைத்தலைவர்

காரியதரிசி – செயலாளர்

அபேட்சகர் – வேட்பாளர்

இவ்வாறாகத் துறைதோறும் தனித்தமிழ் வளர்ச்சி திராவிட இயக்கத்தாரால் நித்தமும் நடைபெற்றது.

வேட்பாளர் என்ற சொல்லை திமுக 1957ல் தேர்தலிலே முதன்முறையாக கலந்துகொண்ட போது தான் தமிழகத்திலே பயன்பாட்டுக்கு வந்தது. இம்மாற்றத்தை பாராட்டி அக்காலக்கட்டத்தில் ஆனந்தவிகடன் பத்திரிகை தலையங்கமே எழுதியது.

“சுவாமி வேதாசலம் தன் பெயரை மறைமலையடிகள் என்று மாற்றியபோது எதிர்த்தார்கள். மந்திரிகளை அமைச்சர்கள் என்றபோது எதிர்த்தார்கள். மகாஜனம் வேண்டாம், பொதுமக்கள் போதும் என்றபோது எதிர்த்தார்கள். உபன்யாசத்தை சொற்பொழிவு என்றபோதும் எதிர்த்தார்கள்.

இவர்கள் எங்கேயிருந்து தமிழை வாழவைக்கப் போகிறார்கள். நெருப்பு எரிகிறவரையே குளிர்தெரியாமல் இருக்கும். நெருப்பு அணைந்துவிட்டால் மீண்டும் குளிர் நடுங்க வைக்கும்.

தமிழ்மொழி மீது ஆர்வமும், சுறுசுறுப்பும் தொடர்ந்து இருந்தால் மட்டுமே தமிழ் வாழும். இல்லாவிட்டால் மீண்டும் மகாஜனம் வந்துவிடும். பொதுமக்கள் அழிந்துவிடும்” என்று பேரறிஞர் அண்ணா ஒருமுறை குறிப்பிட்டார்.

அதாவது திராவிடர் இயக்கம் என்ற நெருப்பு அணைந்துவிட்டால், மீண்டும் மணிப்பிரவாள குளிர்நடுக்கம் தமிழனுக்கு ஏற்படும் என்பதையே பேரறிஞர் சூசகமாக குறிப்பிட்டார்.

இன்றைய தேதியிலும் தமிழ்வளர்ச்சி, தமிழ் முன்னேற்றம், தமிழர் வாழ்வாதாரம் போன்ற சொற்களைக் கேட்டாலே ஒரு கூட்டத்துக்கு வலிப்புநோய் கண்டுவிடுகிறது. திராவிடர்கள் தமிழ், தமிழர் நலனில் தனித்தன்மை கெடாமல் எதைச் செய்தாலும் அக்கூட்டம் எதிர்த்து வந்திருப்பதே வரலாறு. மாநில அளவிலும், தேசிய அளவிலும் தற்போது இந்துத்துவாவுக்கும், பார்ப்பனீயத்துக்கும் கிடைத்திருக்கும் தற்காலிக வெற்றிகளைக் கண்டு ஓநாய்கள் ஓங்காரமாக ஓலமிட ஆரம்பித்திருக்கின்றன.

நரித்தந்திரம் மிக்க தமிழ் ரட்சகர் ஒருவர் இருக்கிறார். தமிழுக்கு திராவிடம் என்ன செய்தது? என்ற கேள்வியோடு கிளம்பியிருக்கிறார். இம்மாதிரி ஆட்களின் பிரச்சினையே சாமான்ய மனிதனின் நிலையிலிருந்து பிரச்சினைகளை அணுகுவதை தவிர்த்து, அறிவுஜீவி பாவனைகளோடு யதார்த்தங்களை புரட்டுகிறார்கள். நல்லவேளையாக தமிழகத்தின் கடந்த அரைநூற்றாண்டு இவர்களை தயவுதாட்சணியம் ஏதுமின்றி நிராகரித்தே வருகிறது.

இந்தக் கூட்டம் எதையெல்லாம் எதிர்க்கிறதோ, அதுவெல்லாம் தமிழனுக்கு நன்மை செய்யும் விடயங்கள் என்று அறிந்துக் கொள்ளலாம். அவர்களது எதிர்ப்பு நமக்கெதிராக எப்போதெல்லாம் எழுகிறதோ அப்போதெல்லாம் நாம் சரியான பாதையில் வீறுநடை போட்டு வருகிறோம் என்பதை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.

16 நவம்பர், 2011

துள்ளுவதோ இளமை!

வெங்கடேசுக்கும் எனக்கும் ஏழாம் பொருத்தம் என்பது பள்ளியின் புல் பூண்டுக்கு கூடத்தெரியும். இருந்தும் இரண்டு பேரும் எப்போதும் ஒரே ஜமாவில் கும்மியடிப்பது பலருக்கும் ஆச்சரியம். என்னைப் பொறுத்தவரை கருத்துக்கள் (வெங்காயம்!) வேறு, நட்பு வேறு. அவனுக்கும் அப்படித்தான் என்று நினைக்கிறேன்.

எங்கள் பள்ளியையும், பக்கத்தில் இருக்கும் மகளிர் மேல்நிலைப் பள்ளியையும் பிரிப்பது ஒரு ஐந்தடி உயர சுவர் மட்டுமே. சுவற்றுக்கு கீழே நான்கைந்து செங்கல்களை போட்டு உயரம் கூட்டி பக்கத்து கிரவுண்டில் விளையாடும் சிட்டுக்குருவிகளை பார்த்து ரசிப்பது எங்கள் பொழுதுபோக்கு. நீலநிறத் தாவணி, வெள்ளை ஜாக்கெட், இரட்டைப் பின்னல் என்று Auspicious ஆக அந்த காலத்தில் இருந்த மாதிரியான பிகர்களை இப்போதெல்லாம் காணமுடியவில்லை.

நான் ஒன்பதாம் வகுப்பு அனுவை சைட்டு அடித்துக் கொண்டிருந்தாலும் (அது என் மாமா பொண்ணாக்கும்), அவ்வப்போது +1 படிக்கும் தேன்மொழியையும் ஜூட் விட்டுக் கொண்டிருந்தேன். காரணம் தேனு வெங்கடேசின் ஆளு. அவனை வெறுப்பேற்றவே பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு செல்லும் தேனுவை வேண்டுமென்றே சைக்கிளில் ஃபாலோ செய்வேன். அனுவைப் பொறுத்தவரை என்னுடைய மாமா பெண் என்பதால் மட்டுமே எனக்கு ஈர்ப்பு இருந்தது. ஆனால் அவளுக்கு என் மீது பெரிய ஈர்ப்பு எதுவும் இருந்ததாக தெரியவில்லை. எனக்கும் ஒரு பிகர் இருக்கிறது என்று சொல்லிக் கொள்ளவே “அனு என்னோட ஆளு” என்று பசங்களிடம் சொல்லி வைத்திருந்தேன்.

அது ஒரு சுபயோகத் திருநாளாக இருந்திருக்கக் கூடும். வழக்கம்போல செங்கல் போட்டு பக்கத்து கிரவுண்டில் ஸ்கிப்பிங் விளையாடும் பிகர்களின் அழகை கண்களால் பருகிக் கொண்டிருந்தோம். எதற்கெடுத்தாலும் “என்ன பெட்டு?” என்று கேட்பதை வழக்கமாகக் கொண்ட வெங்கடேசுக்கு தான் அந்த யோசனை வந்தது.

“தில்லு இருக்கிற எவனாவது ஸ்கூல் டைம்லே பக்கத்து கிரவுண்டை ஒரு சுத்து சுத்தி வரணும். எவனாவது அதை சாதிச்சி காட்டினா, அவனை நான் பீராலேயே குளிப்பாட்டுறண்டா. பெட்டு ஓகேவா?”

அவன் கீரி என்றால், நான் பாம்பு. மசால் வடையை வைக்க வேண்டிய இடத்தில் வைத்தால் எலி மாட்டும் என்றும் அவனுக்கு தெரியும். அவன் பெட் கட்டினால் சும்மாவாச்சுக்கும் அவனை வெறுப்பேற்றவாவது நான் சிலிர்த்துக் கொள்வது வழக்கம். ஆனால் இந்த முறை அவன் வைத்திருப்பது அக்னிப் பரிட்சை. கரணம் தப்பினாலும் கருகிவிடுவோம். இருந்தாலும் சவால் விட்டிருப்பது என் பிரியத்துக்குரிய எதிரி ஆயிற்றே? ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். கவுரவப் பிரச்சினை.

லேடிஸ் ஸ்கூல் ஹெட்மாஸ்டரை நினைத்தால் தான் கொஞ்சம் பீதியாக இருந்தது. காதலன் படத்தில் வரும் பெண் போலிஸ் அதிகாரி மாதிரி தோற்றம். எங்கள் ஹெட் மாஸ்டரிடம் போட்டுக் கொடுத்து விட்டால் முதுகுத்தோல் உறிந்துவிடும். எங்கள் ஹெச்.எம்.முக்கும், அந்த ஹெச்.எம்.முக்கும் ஏதோ ஒரு கெமிஸ்ட்ரி ஒர்க்-அவுட் ஆகியிருந்ததாக கிசுகிசு.

சிவா உசுப்பி விட்டான். “கிச்சா இருக்கறப்பவே பெட்டு கட்டறியா வெங்கடேசு? திருப்பதிக்கே லட்டா, சிவகாசிக்கே பட்டாசா, ரஜினிக்கே ஸ்டைலா?”

“டேய்.. டேய்.. நிறுத்துரா. தில்லு இருக்கறவன், ஆம்பளைன்னு சொல்லிக்குறவன் எவனா இருந்தாலும் என் பந்தயத்தை ஒத்துக்கலாம். முடியலன்னா சொல்லிடுங்க. எனக்கொண்ணும் நஷ்டம் இல்லே. நீங்க ஓடினாலும் சரி, ஓடாம பாதியிலே திரும்பிட்டாலும் சரி. எனக்கெதுவும் கொடுக்க வேண்டியதில்ல. ஜெயிச்சுட்டா மட்டும் ஜெயிச்சவனுக்கு மட்டுமில்லே, நம்ம செட்டு மொத்தத்துக்கும் பீரோட பிரியாணி!” லேடிஸ் ஸ்கூல் க்ரவுண்டை சுற்றி வருவது ஏதோ உலகத்தை சுற்றி வருவது மாதிரியான பில்டப் கொடுத்து வெங்கடேஷ் பேசினான்.

எனக்கு சுர்ரென்று ஏறியது. “நாளைக்கு ஈவ்னிங் மூணரை மணிக்கு நான் சுத்தறேண்டா. ஈவ்னிங் ஏழு மணிக்கு ரம்பா ஒயின்ஸ்லே பீரு, எட்டரை மணிக்கு பாய் கடையிலே பிரியாணி. ஓக்கேவா மச்சி?”

எலி கரெக்டாக மசால் வடைக்கு மாட்டியதை நினைத்து சந்தோஷப்பட்ட வெங்கடேஷ், “ஆல் த பெஸ்ட் மச்சான்!” என்று சொல்லிவிட்டு சபையை கலைத்தான்.

சிவாவோடு சேர்ந்து ப்ளான் போட்டேன். மூணரை மணிக்கு எங்களுக்கு பீ.டி. பீரியட். கிரிக்கெட் விளையாடுவது போல பாவ்லா காட்டி பந்தை பக்கத்து கிரவுண்டில் எறிந்துவிட்டு, பந்தெடுக்கப் போவது போல, கிரவுண்டை ஒரு முறை சுற்றி வந்துவிடலாம். ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் பந்தெடுக்க வந்தேன் என்று சொல்லி தப்பித்துக் கொள்ளலாம்.

மூன்றரை மணி என்பதால் ரெண்டு ஸ்கூல் ஹெட்மாஸ்டர்களும் சாப்பிட்டு விட்டு லைட்டாக கிறக்கத்தில் இருப்பார்கள். சரியான நேரம். ஹெட்மாஸ்டர் ரூமுக்கு அருகில் ஒரு உளவாளியை, கேடயமாக நிறுத்தி மாஸ்டர் ரவுண்ட்ஸுக்கு வருகிறாரா என்று கண்காணிப்பதாக ஏற்பாடு. செந்தில் அந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டான்.

மூன்று மணிக்கெல்லாம் எங்கள் குழு மைதானத்தை முற்றுகையிட ஆரம்பித்தது. ஸ்டெம்பு நட்டு பவுலிங் செய்து கொண்டிருந்தேன். சிவா பேட்டிங். வெங்கடேஷை காணவில்லை. பெட்டு கட்டிவிட்டு இந்த நாய் எங்கே போய்த் தொலைந்தது?

அவன் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி. சாட்சிகளின் முன்னிலையில் இன்று சாதித்தே தீருவது என்று முடிவெடுத்துவிட்டேன். பெட்டுக்காக மட்டுமில்லாமல் எல்லோரது கவனத்தையும் கவரும் அட்வெஞ்சர் ஆகவும் அது இருக்கும் என்று என் மனதுக்கு பட்டது. மைதானத்தைச் சுற்றி வருகையில் ஒருவேளை தேன்மொழியோ, அனுவோ என்னை கவனிக்கக்கூடும். “ஹீரோ” அந்தஸ்தை மிக சுலபமாக பெறும் குறுக்கு வழியாகவும் இத்திட்டம் அமையும்.

மற்ற பயல்கள் கொஞ்சம் சுரத்து குறைந்துபோயே இருந்தார்கள். எப்போதும் காட்டான் போல ஆடும் சிவா கூட டொக்கு வைத்து ஆடிக் கொண்டிருந்தான். மாட்டினால் மொத்த டீமுக்கும் ஆப்பு என்று அவர்கள் அஞ்சினார்கள்.

”அப்படியே மாட்டிக்கிட்டாலும் ஒரு பய பேரை கூட சொல்லமாட்டேன். நீங்க என் கூட விளையாடினதா கூட சொல்லமாட்டேன். போதுமா?” தைரியப் படுத்தினேன்.

மூன்றரை மணியாக இன்னமும் ஐந்து நிமிஷங்கள் என்று மணியின் வாட்சில் நேரம் பார்த்தோம். அப்போது மணி மட்டும் தான் கைக்கடிகாரம் அணிவான். எங்கேயோ இருந்து வெங்கடேஷும் ஸ்பாட்டுக்கு வந்துவிட்டான். பந்தை கையில் எடுத்தவன் சுற்றும் முற்றும் பார்த்தேன். மாஸ்டர்கள் யாரும் கண்ணில் படவில்லை. ஹெட்மாஸ்டர் நாலு மணிக்கு மேல் தான் ரவுண்ட்ஸுக்கு வருவார். அவர் அப்படியே சீக்கிரம் கிளம்பிவிட்டால் கூட நம்ம கண்காணி செந்தில் ஓடிவந்து சொல்லிவிடுவான்.

ஹய்ட் த்ரோவாக இல்லாமல் ஸ்லோப்பாக லேடீஸ் க்ரவுண்ட் நோக்கி முழுபலத்தையும் திரட்டி பந்தை வீசினேன். அப்போது தான் பந்து மைதானத்தின் அந்த முனைக்கு போய் சேரும். ஒரு ரவுண்ட் அடிக்க வாகாக நேரம் கிடைக்கும். பந்தை எறிந்தவுடன் எந்த திசையில் போய் விழுந்தது என்று கூட பார்க்கவில்லை. சுவரை நோக்கி ஓட ஆரம்பித்தேன். ஓடிவந்த வேகத்தை பயன்படுத்தி கையை சுவர் மீது அழுத்தி ஒரே லாங்க் ஜம்ப்...

பின்னால் பயல்கள் வேடிக்கைப் பார்க்க ஓடிவரும் சத்தம் கேட்டது. நான் நினைத்ததற்கு மாறாக மறுபுறம் மைதானம் மேடாக இல்லாமல் கொஞ்சம் பள்ளமாக இருந்ததால் பேலன்ஸ் செய்யமுடியாமல் குப்புற விழுந்தேன். கை முட்டி இரண்டிலும் சிராய்ப்பு. இரத்தம் எட்டிப் பார்த்தது. கால் கொஞ்சம் சுளுக்கிக் கொண்டதைப் போல வலி. நிமிர்ந்து மைதானத்தைப் பார்த்தேன்.

நூற்றுக்கும் மேற்பட்ட நீலநிற பட்டாம்பூச்சிகள் ஸ்கிப்பிங், கோகோ, ரிங்க் என்று விதவிதமாக விளையாடிக் கொண்டிருந்தார்கள். இந்த மைதானத்தை சுற்றி ஓடிவர குறைந்தது மூன்று நிமிடங்கள் ஆகும். அதற்குள்ளாக ஆசிரியர்கள் யாரும் பார்த்துவிடக்கூடாது. முதல்முறையாக பயம்...

காக்கி பேண்டும், வெள்ளைச் சட்டையுமாக திடீரென்று ஒருவன் தங்கள் மத்தியில் ஓடுவதை கண்டதுமே சில பெண்கள் அவசரமாக ஒதுங்கினார்கள். சில பேர் கூச்சலிட்டார்கள். மைதானத்தின் இடதுப்பக்கமாக ஓட ஆரம்பித்தேன். திரும்பிப் பார்த்தேன், கண்களில் உற்சாகமும், ஆச்சரியமுமாக என் நண்பர்கள்.. சத்தமாக கத்தி என்னை உற்சாகப்படுத்துவதாக நினைத்து எல்லோர் கவனத்தையும் ஈர்த்துக் கொண்டிருந்தார்கள். வெங்கடேஷின் முகத்தில் மட்டும் குரோதம்!

ஓடு.. ஓடு.. ஓடிக்கொண்டேயிரு என்று உள்மனசு சொல்ல மாராத்தான் வீரனின் மன உறுதியோடு பாதி மைதானத்தை தாண்டி ஓடிக்கொண்டிருந்தேன். பந்து எங்கே போய் விழுந்தது என்று தெரியவில்லை. பந்தை விட்டு விட்டு ஓடவேண்டியது தான். தேடிக்கொண்டிருந்தால் மாட்டிக் கொள்வோம். இன்னும் கொஞ்ச தூரத்தில் பள்ளிக் கட்டடம் வந்துவிடும். உள்ளே வகுப்பு நடத்திக் கொண்டிருக்கும் ஆசிரியர்கள் யாரும் பார்த்துவிடக்கூடாது என்று மனசுக்குள் வேண்டியபடி ஓட...

அய்யகோ! ஆண்டி க்ளைமேக்ஸ்…

பள்ளிக் கட்டடத்துக்கு அருகில் வந்தபோது ரெண்டு பள்ளியின் ஹெட்மாஸ்டர்களும் என் வருகையை எதிர்பார்த்து நிற்பது போல நின்று கொண்டிருந்தார்கள். ”இந்த ஆளு எப்படி இங்கே வந்தான்? இந்த ஆளு வெளியே வந்திருந்தாலே செந்தில் ஓடிவந்து சொல்லியிருப்பானே? அவனுக்கு என்ன ஆச்சி?”

“சார் பந்து விழுந்திடிச்சி.. எடுக்க வந்தேன்!”

காதைப் பிடித்து திருகி, “மானத்தை வாங்குறதுக்குன்னே மடிப்பாக்கத்துலே இருந்து வந்து சேர்ந்திருக்கானுங்க! சாரி மேடம்! ஐ அபாலஜைஸ் ஃபார் தி இன்கண்வீனியன்ஸ்” என்று மொக்கை ஆங்கிலத்தில் அந்த ஹெ.எம்.மிடம் சொல்லிவிட்டு “என் பின்னாலேயே வாடா!” என்று சொல்லிவிட்டு முன்னால் போனார்.

மாலை போட்ட ஆடு மாதிரி அவர் பின்னாலேயே போனேன். என் கெட்ட நேரம். என் மாமா பொண்ணு அனு வேறு எதிரில் வந்தாள். நேராக என்னை நோக்கி வந்தவள் என் காதில் கிசுகிசுத்துவிட்டு ஹெட்மாஸ்டரிடம் சென்று ஏதோ சொன்னாள்.

தூரத்தில் திரும்பிப் பார்த்தேன். ஏற்கனவே நம்பியார் மாதிரி என்னைப் பார்த்துக் கொண்டிருந்த வெங்கடேஷ் பாதி நம்பியாராகவும், பாதி வீரப்பாவாகவும் மாறி கொடூர புன்னகை புரிந்து கொண்டிருந்தது தெரிந்தது.

ஹெட்மாஸ்டர் ரூமுக்கு வெளியே செந்தில் வேறு முட்டிப் போட்டுக் கொண்டிருந்தான். அவனருகில் சென்று முட்டி போடுமாறு சொன்ன ஹெச்.எம். ரூமுக்குள் போய்விட்டார். இன்னமும் ஒரு மணி நேரத்துக்கு முட்டி போட்ட பின்னர், அவர் “சிறப்பு பூஜை” வேறு செய்வார். நினைக்கும் போதே முட்டியும், முதுகும் வலித்தது.

“மச்சான்! வெங்கடேஷ் துரோகம் பண்ணிட்டாண்டா!” - செந்தில்

“என்னடா ஆச்சி?”

“மேத்ஸ் மாஸ்டர் கிட்டே மேட்டரை சொல்லி ஹெச்.எம். வரைக்கும் பிரச்சினையை எடுத்து வந்துட்டான். நாயி என்னை வேற போட்டுக் கொடுத்துட்டான்”

மேத்ஸ் மாஸ்டருக்கும், எனக்கும் ஆகவே ஆகாது. அந்த ஆளு நடத்தும் ட்யூஷனில் வீராப்பாக நான் சேராமல் இருந்தேன். ”சந்தர்ப்பம் பார்த்து போட்டு கொடுத்துட்டானே அந்தாளு?” உறுமினேன்.

“செந்திலு நாம ரெண்டு பேரும் அடிபடப்போறது உறுதி. அதே நேரத்துலே நம்ம அக்ரிமெண்டை மீறுன வெங்கடேஷையும் போட்டுடணும்” என்று சொல்லிவிட்டு எழுந்து நேராக ஹெச்.எம். ரூமுக்குள் நுழைந்தேன். நடந்ததெல்லாம் தப்பு என்று சொல்லி, வெங்கடேஷ் தான் என்னை அதுபோல லேடிஸ் க்ரவுண்டில் ஓடச் சொல்லி பெட் கட்டினான் என்று உண்மையை ஒப்புக் கொண்டேன். பியூனை விட்டு வெங்கடேஷை பிடித்து வரச் சொன்னார் ஹெச்.எம்.

சிறிது நேரத்திலேயே காட்சி மாறியது.

நானும், செந்திலும் மாட்டிக் கொண்டதை பார்த்து கொக்கரித்து சிரித்துக் கொண்டிருந்த வெங்கடேசும் இப்போது எங்களோடு சேர்ந்து முட்டிப் போட்டுக் கொண்டிருந்தான்.

“வெங்கடேசு! ஆனாலும் உன்னை லைஃப்லே மறக்க மாட்டேண்டா!”

“எதுக்குடா?” வெறுப்போடு கேட்டான்.

“உன்னால தாண்டா அனு எனக்கு கிடைச்சா!”

”!!!!???????”

“எப்படின்னு கேளேன் மச்சி. அடக்கேளு மச்சி. நான் மாட்டிக்கிட்டதுமே நேரா என் காதுலே வந்து ‘இவ்ளோ தைரியசாலியா நீ இருப்பேன்னு நினைக்கலை. ஐ லவ் யூ!'ன்னு சொல்லிட்டுப் போயிட்டா மச்சான். நீ மட்டும் ஹெச்.எம். கிட்டே போட்டு கொடுக்கலைன்னு வெச்சிக்கோ, இது நடந்திருக்குமா?”

ஏற்கனவே எரிந்து கொண்டிருந்த நெருப்பில் எண்ணையை ஊற்ற வெங்கடேஷின் முகத்தில் எள்ளும், கொள்ளும் வெடித்தது. நான் சொன்னதை கேட்டதுமே செந்திலுக்கு மகிழ்ச்சி பொங்கியது.

“எப்படியோ வெங்கடேஷ் புண்ணியத்துலே கிச்சா செட்டில் ஆகிட்டான். ஃபிகரு ஒர்க் அவுட் ஆயிடிச்சி. நடக்குறதெல்லாம் நல்லதுக்கு தாண்டா!”

“டேய் பந்தயத்துலே ஜெயிச்சிருந்தா தானேடா வெங்கடேஷ் பீர் வாங்கி கொடுத்திருப்பான். இதோ இப்போ தோத்தவன் சொல்றேன். இன்னைக்கு எல்லாருக்கும் பார்ட்டிடா! நான் பந்தயத்துலே தோத்திருந்தாலும் லைஃப்லே ஜெயிச்சுடேண்டா! ஐ யாம் வெரி ஹாப்பியஸ்ட் மேன் இன் த வோர்ல்ட்”

(சுபம்)

கதையை அப்படியே சுபம் போட்டு முடித்துவிட ஆசை தான். ஆனாலும் உண்மையில் நடந்தது என்னவென்று படித்துக் கொண்டிருந்தவர்களுக்காவது சொல்லுவதுதானே தர்மம்?

ஒரு சின்ன ப்ளாஷ்பேக். பொருத்தமான இடத்தில் இதை பொருத்தி, மீண்டும் ஒருமுறை வாசித்துக் கொள்ளுங்கள்.

காதைப் பிடித்து திருகி, “மானத்தை வாங்குறதுக்குன்னே மடிப்பாக்கத்துலே இருந்து வந்து சேர்ந்திருக்கானுங்க! சாரி மேடம்! ஐ அபாலஜைஸ் ஃபார் தி இன்கண்வீனியன்ஸ்” என்று மொக்கை ஆங்கிலத்தில் அந்த ஹெ.எம்.மிடம் சொல்லிவிட்டு “என் பின்னாலேயே வாடா!” என்று சொல்லிவிட்டு முன்னால் போனார்.

மாலை போட்ட ஆடு மாதிரி அவர் பின்னாலேயே போனேன். என் கெட்ட நேரம். என் மாமா பொண்ணு அனு வேறு எதிரில் வந்தாள். நேராக என்னை நோக்கி வந்தவள் என்னிடம் மெதுவாக,

“பொறுக்கி, நல்லா மாட்டிக்கிட்டியா? ஸ்கூல் விட்டு போறப்போ சைக்கிள்லே வந்து கட் அடிச்சி தொல்லை கொடுக்குறே இல்லே, உங்க ஹெச்.எம். கிட்டே நல்லா போட்டு விடறேன்”

ஹெட்மாஸ்டரிடம் சென்று, “சார் இந்த பொறுக்கி அடிக்கடி எங்களையெல்லாம் டிஸ்டர்ப் பண்றான் சார். ஸ்கூல் விட்டு போறப்போ ரோட்ல வந்து லவ் லெட்டர் கொடுக்கிறான் சார்!”

“அவனை தோலை உரிச்சி தான் இன்னிக்கு வீட்டுக்கு அனுப்பப் போறேன். நீங்க பயப்படாதீங்கம்மா. இனிமேல உங்களையெல்லாம் டிஸ்டர்ப் பண்ணமாட்டான்” ஹெச்.எம்.

தூரத்தில் திரும்பிப் பார்த்தேன். ஏற்கனவே நம்பியார் மாதிரி என்னைப் பார்த்துக் கொண்டிருந்த வெங்கடேஷ் பாதி நம்பியாராகவும், பாதி வீரப்பாவாகவும் மாறி கொடூர புன்னகை புரிந்து கொண்டிருந்தது தெரிந்தது.

12 நவம்பர், 2011

அங்காடித் தெருவுக்கு ஆபத்து!

வணிக சாம்ராஜ்யங்கள் சந்திக்கும் நெருக்கடிக்கு சாட்சி சொல்கின்றன வெறிச்சோடிக் கிடக்கும் தி.நகர் தெருக்கள். எதன் ஆரம்பம் இது?

அருளானந்தம் மெஸ் சென்னை தியாகராயநகர் உஸ்மான் ரோட்டில், ரங்கநாதன் தெருவுக்கு முன்பாக இருக்கும் இந்த உணவகத்தில் எப்போதுமே சாப்பிட ஏகப்பட்ட போட்டி. டேபிள்கள் நிறைந்து, அடுத்து சாப்பிட வருபவர்கள் ஓட்டலுக்கு வெளியே கூட்டமாக நிற்பார்கள். காலையில் வேலை செய்ய ஆரம்பிக்கும் ஓட்டல் பணியாளர்கள் இரவுவரை, ஒரு நிமிடம் கூட ஓய்வின்றி உழைத்துக்கொண்டே இருப்பார்கள். இந்த நவம்பர் இரண்டாம் தேதி நாம் போனபோது, அங்கே ஆட்களே இல்லை. டேபிள்கள் காலியாக கிடக்க, பணியாளர்கள் ஓய்வாக நின்றிருந்தார்கள். அருளானந்தம் மெஸ் இருளானந்தம் மெஸ் ஆகியிருந்தது.

இது ஒரு உதாரணம்தான். உஸ்மான் ரோடு முழுக்கவே இதுதான் நிலை. தீபாவளி வாரத்தில் யாருமே சுலபமாக உள்ளே நுழைய முடியாத (நுழைந்தால் வெளியே வரமுடியாத) ரங்கநாதன் தெரு இப்போது வெறிச்சோடிப் போயிருக்கிறது. நடைபாதை வியாபாரிகள், வியாபாரமின்றி சோர்வாக அமர்ந்திருக்கிறார்கள். கோடிக்கணக்கான ரூபாய் புழங்கிக் கொண்டிருந்த இடம் சூனியம் வைத்ததைப் போலச் சோம்பிச் சுருண்டு கிடக்கிறது.ஆனால் இது சொந்தச் செலவில் வைத்துக் கொண்ட சூனியம்.

என்ன காரணம்?

கடந்த அக்டோபர் 31ஆம் தேதி, அதிகாலை. அந்த நாளின் பரபரப்பிற்குத் தயாராகச் சோம்பல் முறித்து எழுந்து கொண்டிருந்தது ரங்கநாதன் தெரு. ஆனால்- தி.நகரில் வந்திறங்கிய சி.எம்.டி.ஏ (சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம்) மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்ட இருபத்தைந்து கட்டிடங்களுக்கு சீல் வைத்தனர். தங்களுடைய நாளைத் துவக்காமலேயே இக்கட்டிடங்களில் இயங்கி வந்த நூற்றுக்கும் மேற்பட்ட பிரபலமான வணிக ஸ்தாபனங்கள் முடங்கிப் போயின. இங்கு தினம், தினம் ஆயிரம் ஆயிரமாக கூடி ‘ஷாப்பிங்’ செய்யும் மக்கள் வராமல் வெறிச்சோடிப் போனது ரங்கநாதன் தெரு. பக்கவிளைவாக ரங்கநாதன் தெரு கூட்டத்தை நம்பி வியாபாரம் செய்துவந்த உணவகங்கள், துணிக்கடைகள், நகைக்கடைகள், நடைபாதை வியாபாரங்கள் என்று அனைத்துமே இப்போது பாதிக்கப்பட்டிருக்கிறது.

வியாபாரம் பாதிக்கப்பட்டிருப்பதால் வணிகர்கள் கவலையோடும் வெளிக்காட்டிக் கொள்ளமுடியாத கோபத்தோடும் பேசுகிறார்கள்.

”நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் நூறுக்கும் மேற்பட்ட கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்திருக்கிறார்கள். கட்டிடங்களை கட்டும்போதே, இவற்றை அதிகாரிகள் கண்காணித்திருக்க வேண்டும். கட்டி முடிக்கப்பட்டு, பல ஆண்டுகள் ஆனபிறகு நடவடிக்கை எடுப்பது நியாயம் அல்ல”. என்கிறார் வெள்ளையன், தமிழ்நாடு வணிகர்சங்கப் பேரவை

கடைகளுக்கு ஏன் சீல் ?

அவர் சொல்வது போல் இது நியாயமற்ற நடவடிக்கையா?

அந்தக் கேள்விக்கு விடைகாண கடைகளுக்கு ஏன் சீல் வைக்கப்பட்டன என்பதைப் பார்க்க வேண்டும். தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்புச் சட்டத்தின் படி, சென்னை மாநகரப் பகுதியில் எந்த வளர்ச்சியை மேற்கொள்வதாக இருந்தாலும், அதற்கான திட்ட அனுமதியை சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்திடம் முன்கூட்டியே பெறவேண்டும்.

நில உபயோகம் மற்றும் விதிகளின் படி விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு அனுமதி வழங்கப்படும். நிலத்தின் தன்மை மற்றும் அளவு, அதில் கட்ட உத்தேசிக்கப்பட்டிருக்கும் கட்டிடத்தின் உயரம் மற்றும் பரப்பளவு, வாகனங்கள் நிறுத்தும் வசதி, பாதுகாப்பு ஏற்பாடுகள் என்று பலவித தன்மைகளையும் அலசி, உத்தேசித்தே கட்டிடம் கட்ட அனுமதி வழங்கப்படுவது வழக்கம்.சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின்அதிகாரிகள் மனையை பார்வையிட்டு, அனுமதி அளிக்க வேண்டும்.

இந்த விதிமுறைகளை பின்பற்றாததாலேயே தி.நகரில் இப்போது இருபத்தைந்துக்கும் மேற்பட்ட பெரிய கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்டிருக்கிறது.தி.நகரில் பொறுத்தவரை தற்போது சீல் வைக்கப்பட்டிருக்கும் கட்டிடங்கள், நில அளவுக்குப் பொருந்தாத வகையில் ஐந்து முதல் பத்து மடங்கு பகுதிகளைக் கட்டுமானத்துக்கு எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். நடைபாதைக்கு விடவேண்டிய இடங்களையும் விட்டுவைக்கவில்லை. ரங்கநாதன் தெருவில் இருக்கும் எந்த வணிக வளாகத்திலும் ‘கார் பார்க்கிங்’ வசதி இல்லை. இருசக்கர வாகனங்களை நிறுத்துவதற்கும் கூட இடமில்லை என்பதுதான் உண்மை. இடர் காலங்களில் தீயணைப்புத்துறையினர் செயல்படும் அளவுக்குக் கூட இடங்களை விட்டுவைக்கவில்லை.

”இக்கட்டிடங்களில் போதுமான பக்க இடைவெளி இல்லை. அனுமதிக்குப் புறம்பான வாகன நிறுத்துமிடம், இரண்டு மூன்று மற்றும் நான்கு ஐந்து தளங்களை அனுமதியின்றி கட்டியது என்று பல்வேறு விதிமுறை மீறல்கள் நடைபெற்றிருக்கின்றன” என்கின்றனர் மாநகராட்சி அதிகாரிகள்
”விதிமுறையை மீறிய கடை உரிமையாளர்களுக்கு முப்பது நாட்களுக்கு முன்பே நோட்டீஸ் வழங்கியிருந்தோம். இதற்கு உரிமையாளர்கள் அளித்த பதில் திருப்தி அளிக்காததால் சீல் வைத்திருக்கிறோம்.” என்றும் அவர்கள் தெரிவிக்கிறார்கள்

2006ஆம் ஆண்டு சமூக ஆர்வலரான டிராபிக் ராமசாமி, இதுகுறித்த வழக்கு ஒன்றைச் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்தார். அவ்வழக்கில் விதிமுறை மீறிய கட்டிடங்களை கண்டறிந்து போதிய நடவடிக்கை எடுக்குமாறு சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் உள்ளிட்ட அரசு நிறுவனங்களுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஒரு கண்காணிப்பு கமிட்டியையும் இதற்காக உருவாக்க வேண்டுமென நீதிமன்றம் யோசனை சொன்னது.

2007ஆம் ஆண்டு இந்தக் கண்காணிப்பு கமிட்டி, விதிமுறை மீறிய கட்டிடங்களை முடக்கி, சீல் வைக்க நோட்டீஸ் விடச்சொல்லி சென்னை மாநகராட்சியையும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தையும் கேட்டுக் கொண்டது.

நோட்டீஸ் அனுப்புவதற்கு பதிலாக முந்தைய அரசு சட்டமன்றத்தில் ஒரு அவசரச் சட்டத்தை நிறைவேற்றி இந்நடவடிக்கையை முடக்கியது. இயங்கிக் கொண்டிருக்கும் பெரிய வணிக வளாகங்களுக்கு சீல் வைப்பதின் மூலமாக சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படக்கூடும் என்று அந்த சட்டவரைவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கிடையே சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமமும், இவ்வழக்கு தொடர்பான உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதலை நிறுத்திவைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது. இதையடுத்து ‘சீல்’ நடவடிக்கை முடக்கப்பட்டது.

தற்போது, சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அந்த அவசரச் சட்டம் காலாவதியாகிவிட்டது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பும் விதிமுறை மீறிய கட்டிடங்களுக்கு எதிராக கிடைத்திருக்கிறது.
எனவே, கடந்த ஜூலை மாதம் இக்கட்டிடங்களுக்கு சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் நோட்டீஸ் வழங்கியது. இருப்பினும் நோட்டீஸ் வழங்கியதோடு, மேற்கொண்டு எந்த முன்னேற்றமும் இல்லை. இதையடுத்து சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம், தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு செய்வதாக மீண்டும் வழக்குத் தொடரப்பட்டது.
சி.எம்.டி.ஏக்கும், மாநகராட்சிக்கும் இந்த அளவிற்கு நிர்பந்தமும் நெருக்கடிகளும் உருவானபிறகே வேறுவழியின்றி, இப்போது ‘சீல் வைக்கும் வைபவம்’ நடந்தேறியிருக்கிறது.

ஏன் தாமதம்?

நீதிமன்றம் கட்டளையிட்டபிறகும் கூட அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க காலதாமதம் செய்தது ஏன்? விடை எல்லோருக்குமே தெரிந்ததுதான்.

லஞ்சம், ஊழல்!

விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்ட இந்தக் கட்டிடங்களுக்கு அனுமதி வழங்கியவர்கள், அதை கண்டுகொள்ளாமல் இருந்த சென்னைப் பெருநகர் வளர்ச்சிக்குழுமம், மாநகராட்சி உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் ஏராளம்.

இப்போது அவர்களில் 31 பேர் கண்டறியப்பட்டு, அவர்கள் மீதான துறைரீதியான நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ளப்படும் என்று தெரிகிறது. மேலும் இவ்வழக்கில் அவர்கள் எதிர்மனுதாரராகவும் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். தற்போதைய நிலவரப்படி இவர்கள் ‘கைது’ ஆனாலும் ஆச்சரியமடைய ஏதுமில்லை.

இந்த நடவடிக்கைகள் குறித்து பெயர் சொல்ல விரும்பாத அதிகாரி ஒருவர் நம்மிடம் பொங்கினார்.
“என்னவோ அரசு அதிகாரிகள் மட்டுமே குற்றவாளிகள் என்பதுபோல காட்சி சித்தரிக்கப்படுவ்து அவலமானதும், உண்மைக்குப் பொருந்தாததும் ஆகும்.இந்த விதிமுறை மீறல்களை கண்டுக்கொள்ளாமல் இருந்ததற்கு அரசியல் அதிகாரம் பெற்றவர்களின் அழுத்தம் முக்கியமான காரணம். நீட்டிய இடத்தில் கையெழுத்து போடாவிட்டால், பணிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களை சந்திக்க வேண்டுமென நேரடியாகவே மிரட்டல்களை சந்திக்கிறோம்.
அரசியல் அதிகாரம், அரசு நிர்வாகத்தை அச்சுறுத்தும் போக்கு முற்றிலுமாக நிற்காதவரை இதுபோன்ற பிரச்சினைகள் தொடர்ந்துக்கொண்டே தானிருக்கும். ஆனால் கடைசியாக பலிகடா ஆக்கப்படுவது என்னவோ அதிகாரிகளாக இருக்கிறார்கள் என்பதுதான் வேதனை. நீதிமன்றத்தால் முறையான விசாரணை நடைபெற வேண்டுமானால், தற்போது நடவடிக்கை எடுக்கப்படப் போகும் அதிகாரிகளை அச்சுறுத்திய அரசியல்வாதிகளும் அம்பலப்படுத்தப்பட வேண்டும்”

இந்தக் கடைகள் மூடப்படுவதால் ஏராளமானவர்கள் வேலை இழப்பார்கள் என்று வணிகர்கள் பிரச்சினையை திசைதிருப்ப முயல்கிறார்கள். ஆனால் இந்த ’அங்காடித் தெரு’ செயல்பட்டுக் கொண்டிருந்தபோது அங்கு பணிபுரிபவர்கள் எப்படி நடத்தப்பட்டார்கள் என்பது ஊரறிந்த ரகசியம். அங்கு பணிபுரிபவர்களுக்குப் கழிப்பறை வசதிகள் கூடப் போதுமான அளவு செய்து தரப்படவில்லை. ஆனால் இன்று ஆடு நனைகிறதே என ஓநாய்கள் அழுகின்றன.

அரசியல் வாதிகளைக் கொண்டு எதையும் ‘சமாளித்து விடலாம்” என்ற மனப்போக்கு, அரசு அதிகாரிகளின் சுயநலம், அலட்சியம் மற்றும் வணிக முதலாளிகளின் பணவெறி.. இவற்றால்தான் தி.நகரின் வணிக சாம்ராஜ்யம் இன்று சரிவைச் சந்திக்கிறது.

தி.நகருக்கு இணையாக தற்போது வளர்ச்சி பெற்றுவரும் புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை மற்றும் முன்பே வளர்ச்சி அடைந்திருக்கும் பாரிமுனை ஆகிய பகுதிகளிலும் இதே நடவடிக்கைகள் தொடரக்கூடும் என்று தெரிகிறது. இன்றைக்குச் சென்னை நாளை, நாளை மறுநாள் என்று அடுத்தடுத்து தமிழக நகரங்களிலும் இதே இடி நிச்சயம் இறங்கும்.

இது முடிவல்ல, ஆரம்பம்.


எக்ஸ்ட்ரா மேட்டர் :

நம் கடமை என்ன?

எந்த ஒரு நேர்மையான நடவடிக்கையும் தனிமனித செயல்பாடுகளில் இருந்தே துவக்கப்பட வேண்டும். நம்முடைய வீடு, கடை என்று எந்த கட்டிடமாக இருந்தாலும், சம்பந்தப்பட்ட மாநகராட்சி, நகராட்சி என்று உள்ளாட்சி அமைப்புகளிடம் முறையான அனுமதி பெறவேண்டும். விதிமுறைகளை மீறாதபட்சத்தில் யாருக்கும் லஞ்சம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. எந்த ஒரு வளர்ச்சித் திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன்பாகவும், அது தொடர்பான விதிமுறைகளை சம்பந்தப்பட்ட அமைப்புகளிடம் நேரடியாகவே சென்று தெரிந்துக் கொள்ள வேண்டியது அவசியம். எந்த ஒரு கட்டுமான திட்டமிடலுக்கும் முன்னதாக, உங்கள் உள்ளாட்சி அமைப்பிடம் ஒரு நடை போய் விசாரித்துவிட்டுதான் வந்துவிடுங்களேன். இல்லையேல் எதிர்காலத்தில் இதுபோன்ற சீல்வைப்பு, இடிப்பு நடவடிக்கைகளை நாமும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

(நன்றி : புதிய தலைமுறை)

10 நவம்பர், 2011

சாருவும், மாமல்லனும்!

சமகாலத்தில் ஒரு மாதிரியான அவநம்பிக்கைச் சூழலை பல இலக்கிய ஆர்வலர்கள் உணருவதை காண நேர்கிறது. தமிழ் இலக்கியவாதிகள் இலக்கியம் படைப்பதை விட்டு விட்டு ஒருவரையொருவர் இருபத்து நான்கு மணி நேரமும் வசைபாடிக் கொண்டிருப்பதையே தொழிலாக்கிக் கொண்டார்களோ என்றுகூட சில நேரங்களில் எண்ணத் தோன்றுகிறது. குறிப்பாக ‘இணையம்’ வந்தபிறகு இலக்கியத்துக்கான வடிவமென்பது வெறும் வசைபாடுதலாக, மன வக்கிரங்களுங்கான வடிகாலாக சுருங்கிவிட்டது என்றுகூட சிலர் புலம்ப கேட்டிருக்கிறோம்.

துரோகம், விரோதம், பொறாமை என்று இத்துறை புதர்மண்டிப்போன நிலையில் அவ்வப்போது சில நம்பிக்கை ஒளிக்கீற்றுகள் பளிச்சிடுவதுண்டு. விமலாதித்த மாமல்லன் எழுதியிருக்கும் இப்பதிவு, அவ்வாறான ஒளியேற்றி இருள் நீக்குகிறது : தவறியும் போகாதவை!

அவ்வப்போது ஜடாமுனி வளர்த்து, மோனநிலைக்குப் போய் இலக்கியத்துறவு மேற்கொள்ளும் மாமல்லன், பதினைந்து ஆண்டுகள் கழிந்து கடந்த ஆண்டு மீண்டும் இலக்கியத்துக்குள் கிரகப்பிரவேசம் நிகழ்த்தினார். முப்பதாண்டுகளுக்கு முன்பாக சில சிறப்பான சிறுகதைகளை எழுதி பெயர் பெற்றவர் என்பதால், மீண்டும் சிறுகதைகளாக எழுதிக் குவிப்பார் என்று எதிர்ப்பார்ப்பு நிலவியது. மாறாக ஆரம்பத்தில் எஸ்.ரா., பிறகு சாரு, கடைசியாக ஜெயமோகன் என்று சமகால இலக்கியவாதிகளை அம்பலப்படுத்துவதாக கூறி வசைகட்டுரைகளை தொடர்ச்சியாக எழுதிவந்தார். நம்மைப் போன்ற இலக்கிய வம்பு ஆர்வலர்களுக்கு நல்ல தீனியும் போட்டுவந்தார். அவ்வப்போது ஏதாவது பழைய எழுபதுகள், எண்பதுகளின் புனைவுகள், மொழிப்பெயர்ப்புகளை ஒளிவருடி பதிவிலேற்றுவார். இப்போது எழுதிவருபவர்களில் யாரையும் அவர் மனந்திறந்து பாராட்டியிருந்தால், அது ஓர் அரிதான நிகழ்வாக மட்டுமே இருக்க முடியும். மாமல்லனோடு நேரிடைப் பழக்கம் நமக்குண்டு. எப்போதும் தன்னை ஓர் இலக்கியப் பேராசானாகவே வரித்துக்கொண்டு, கையில் பிரம்பு வைத்துக்கொண்டு அடுத்த தலைமுறை வாசகர்களை மிரட்டி, இலக்கியப் பாடம் சொல்லிக் கொடுக்கும் வாத்தியாராகவே அவர்குறித்த மனச்சித்திரம் நமக்குள் பதிந்திருக்கிறது.

அப்படிப்பட்டவர் எழுதியிருக்கும் ‘தவறியும் போகாதவை’யில் தான் எவ்வளவு பெருந்தன்மையும், சக எழுத்தாளனை உயர்த்திப் பிடிக்கும் மனோபாவமும், நினைத்ததை தேடிப்பிடித்தே ஆகவேண்டும் என்கிற குழந்தைத்தன்மையும் வெளிப்படுகிறது?

எண்பதுகளின் தொடக்கத்தில் வந்த சிற்றிதழ்களில் ஒன்று ’படிகள்’. அவ்விதழினில் சார்த்தரின் ‘சுவர்’ சிறுகதையை படித்திருந்ததாக மாமல்லனுக்கு நினைவு. அக்கதையை தூசுதட்டி ஒளிவருடி தனது வலைத்தளத்தில் ஏற்ற ஆசைப்படுகிறார். அது படிகளில்தான் வந்ததா என்பதும் துல்லியமாக அவருக்கு நினைவில்லை.

தனக்குத் தெரிந்த இலக்கியவாதிகளிடமும் , வாசகர்களிடமும் இதுகுறித்து விசாரிக்கிறார். நிறைய ஆட்கள், நீண்ட தேடல். அதுகுறித்த அனுபவத்தை எளிய வார்த்தைகளில், பகட்டின்றி இப்பதிவில் பகிர்கிறார்.

குறிப்பாக சாருநிவேதிதாவிடம் விசாரிக்கும் கட்டம் சுவாரஸ்யமானது. “எனக்கு பெரிய நினைவாற்றல் கிடையாது. ஆனால், ‘சுவர்’ சிறுகதை நிச்சயம் படிகளில் வரவே இல்லை” என்கிறார் சாரு. இந்த கதைத்தேடல் கட்டத்தின் போது, நம்மை மாதிரி அசமஞ்சங்களிடமும் மாமல்லன் விசாரணையை நடத்தினார். “சார்த்தரோட அந்த கதையை தமிழில் யாரும் மொழிபெயர்க்கலேன்னு கூட சாரு சொல்றாம்பா... ஆனா எனக்கு நல்லா படிச்ச நினைவிருக்கு. அதுவும் ‘படிகள்’லே படிச்ச மாதிரிதான் நினைவு” என்றார்.

ஒருவழியாக செயின் மார்க்கெட்டிங் மாதிரி யார், யாரையோ பிடித்து ஆர்.சிவக்குமாரை பிடிக்கிறார். நல்லவேளையாக அவரிடம் ‘படிகள்’ இதழ்கள் சேகரிப்பில் இருக்கிறது. ‘சுவர்’ சிறுகதை படிகளின் பதிமூன்றாவது இதழில் வந்ததையும் மாமல்லனால் உறுதி செய்துக்கொள்ள முடிகிறது. ‘ஜனனி’ என்பவர் மொழிபெயர்த்திருக்கிறார்.

இந்த மொத்த பிராசஸிங்கிலேயே சுவாரஸ்யமான விஷயம் ‘ஜனனி’ தான். யார் இந்த ஜனனி என்றுப் பார்த்தோமானால், முன்பு அக்கதை படிகளில் வரவில்லை, தமிழில் வந்தது மாதிரியும் நினைவில்லை என்று மறுத்த சாருநிவேதிதாதான் ஜனனி. ஒரு சுவாரஸ்யமான குறுநாவலுக்கான இந்தக் கருவை, ஒரு சாதாரண வலைப்பதிவாக கருக்கலைப்பு செய்துவிட்டார் மாமல்லன்.

தற்பெருமை மிக்கவர், தன்னுடைய சாதாரண படைப்புகளுக்கு கூட டால் க்ளெய்ம் செய்துக் கொள்பவர் என்றெல்லாம் பலவாறாக விமர்சிக்கப்படும் சாரு, தனக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய பெயரை கூட மறந்திருக்கிறார் அல்லது மறுத்திருக்கிறார். விக்கிப்பீடியாவைக் கூட விட்டுவைக்காமல் தமிழின் பெரிய சிந்தனைவாதியாகவும், இலக்கிய அத்தாரிட்டியாகவும் தன்னைத்தானே எழுதிக் கொள்ளும் விளம்பரமோக எழுத்தாளர்கள் மத்தியில் சாருவுக்குள் இருக்கும் இந்த அரிய பண்பு பிரமிப்பினை ஏற்படுத்துகிறது.

மாமல்லன் நினைத்திருந்தால் இந்த விஷயத்தை கமுக்கமாக அமுக்கியிருக்கலாம். ஆனாலும் தன் சக எழுத்தாளனுக்கான கிரெடிட்டை கொடுத்தாக வேண்டும் என்கிற நேர்மை அவரிடம் இருக்கிறது. தனது வலைப்பதிவில் ஒரு கட்டுரையாக எழுதி அதை சிறப்பாகவும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

மேன்மக்கள் மேன்மக்களே!

7 நவம்பர், 2011

கமல்ஹாசன் - சில சாதனைகள், சில தகவல்கள்!

• நான்கு முறை தேசிய விருதும், மூன்று முறை சர்வதேச விருதும் பெற்ற ஒரே இந்திய நடிகர். களத்தூர் கண்ணம்மா, மூன்றாம் பிறை, நாயகன், இந்தியன் படங்களுக்காக தேசிய விருது பெற்றார்.- விருமாண்டி, சுவாதி முத்யம், சாகர சங்கமம் படங்களுக்கு சவுத் ஏசியன் இண்டர்நேஷனல் விருதுகள் சிறந்த படத்திற்கான விருதுகள் தரப்பட்டது.

• இதுவரை இந்திய நடிகர்களிலேயே இவர் நடித்த படங்கள் தான் அதிக முறை (7 முறை) ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரைக்கப் பட்டிருக்கிறது.- இந்திய சினிமா வரலாற்றிலேயே 18 முறை பிலிம்பேர் விருது பெற்ற ஒரே நடிகர். திலீப் குமாரே 14 பிலிம்பேர் விருதுகள் தான் வாங்கியிருக்கிறார்.

• இதுவரை உலகிலேயே அதிக விருதுகள் (170க்கும் அதிகம்) பெற்ற ஒரே நடிகர் கமல்ஹாசன் மட்டுமே.

• கமல்ஹாசன் இந்தியாவில் குடிமகன்களுக்கு வழங்கப்படும் விருதுகளிலேயே 4வது சிறந்த விருதான பத்மஸ்ரீ பெற்றிருக்கிறார்.

• கமல்ஹாசனுக்கு அவர் செய்யும் கலைசேவைகளுக்காக சத்யபாமா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தால் "டாக்டர்" பட்டம் கையளிக்கப் பட்டது.

• கமல்ஹாசனின் சொந்தப் பட நிறுவனமான ராஜ்கமல் நிறுவனம் இதுவரை 450 மில்லியனுக்கும் மேற்பட்ட வர்த்தகம் செய்திருக்கிறது.

• கமல்ஹாசனின் கனவுப்படைப்பான மருதநாயகம் இங்கிலாந்து மகாரானி எலிஸபெத்-2 அவர்களால் துவக்கப்பட்டது.

• உலகிலேயே ரசிகர் மன்றங்களை மக்களுக்கு சேவை செய்யும் நற்பணி மன்றங்களாக மாற்றிய முதல் நடிகர் கமல்ஹாசன்.

• கமல்ஹாசன் மற்றும் அவரது நற்பணி இயக்கத்தினர் இதுவரை 10000 ஜோடி கண்களை தானம் செய்திருக்கிறார்கள். 10000 கிலோ அரிசியை மக்களுக்கு வழங்கியிருக்கிறார்கள்.

• 100 கோடி ரூபாய் தருகிறோம் என ஒரு அரசியல் கட்சி அழைத்தும் அதை துச்சமாக மதித்தவர் கமல்ஹாசன்.

• இரண்டுமுறை ஆந்திர அரசின் மாநில விருதைப் பெற்றவர் டாக்டர் கமல்ஹாசன்.

• 8 முறை தமிழக அரசின் மாநில விருதைப் பெற்று மாபெரும் சாதனை புரிந்தவர் கமல்ஹாசன்.

• கமல்ஹாசனுக்கு தமிழக அரசு கலைமாமணி பட்டமும் வழங்கி கவுரவித்திருக்கிறது.

• கமல்ஹாசனுக்கு மற்ற கலையுலக வித்தகர்களால் வழங்கப்பட்ட பட்டங்கள் "காதல் இளவரசன்" - ஜெமினி கணேசன், "புரட்சி மன்னன்" - கே. பாலச்சந்தர், "சூப்பர் ஆக்டர்" - பஞ்சு அருணாசலம், "கலைஞானி" - டாக்டர் கலைஞர், "உலக நாயகன்" - கே.எஸ். ரவிக்குமார்.

• The Fuel Instrument Engineers (FIE) Foundation, (Ichalkaranji, Maharashtra ) எனும் அமைப்பு நம் காலத்தில் வாழும் சிறந்த இந்தியர் எனும் விருதை கமல்ஹாசனுக்கு வழங்கி இருக்கிறது. இதுவரை இந்த விருதைப் பெற்றவர்கள் 5 பேர் மட்டுமே (டாடா உட்பட)

• சென்னை ரோட்டரி சங்கமும் கமல்ஹாசனுக்கு "சிறந்த மனிதர்" விருது வழங்கி சிறப்பித்துள்ளது.

• டாக்டர் ஏ.டி. கோவூர் தேசிய விருது சிறந்த மனிதாபிமானம் மற்றும் சமூகசேவைகளுக்காக கமல்ஹாசனுக்கு வழங்கப்பட்டது. இந்த விருதினை வழங்கியவர்கள் Bharatheeya Yukthivadi Sangham (Rationalist Association of India ).

• மதுரையில் திரைப்படத் துவக்க விழா செய்த ஒரே நடிகர் கமல்ஹாசன் மட்டுமே. விருமாண்டிப் படத்துக்கான துவக்க விழா மதுரையில் நடைபெற்றது.

• கமல்ஹாசனுடன் இன்டெல் நிறுவனம் இணைந்து இந்தியாவில் டிஜிட்டல் எண்டெர்டெயிண்ட்மெண்டை அறிமுகப்படுத்த பணியாற்றி வருகிறது. அந்த நிறுவனம் இந்தியாவில் கமல்ஹாசன் ஒருவருடன் மட்டுமே இதுபோல ஒரு பார்ட்னர்ஷிப் வைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

• ஒரே ஆண்டில் 5 சில்வர்ஜூப்ளி திரைப்படங்களை அளித்தவர் கமல்ஹாசன் மட்டுமே. எந்த ஒரு நடிகராலும் இந்த சாதனையைக் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாது. அந்தப் படங்கள் : 1982 - ஜன. 26 - வாழ்வே மாயம் (200 நாள்), பிப். 19 - மூன்றாம் பிறை (329 நாள்), மே 15 - சனம் தேரி கஸம் (175 நாள்), ஆக. 14 - சகலகலா வல்லவன் (175 நாள்), அக். 29 - ஹே தோ கமல் ஹோகயா (175 நாள்)

• கமல்ஹாசன் நடித்த மரோசரித்திரா பெங்களூரின் கவிதா தியேட்டரில் 1000 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. இதே படம் சென்னை சபையர் திரையரங்கில் 600 நாள் ஓடியது. மரோசரித்திரா இந்தியில் "ஏக் துஜே கலியே" என்ற பெயரில் எடுக்கப்பட்டு அங்கும் 350 நாள் ஓடியது.

• அகில இந்திய ரசிகர் மன்ற மாநாட்டினை இந்தியாவிலேயே முதன்முறையாக ஒரு நடிகர் நடத்தியது என்றால் அந்தப் பெருமை கமல்ஹாசனையே சாரும். இவர் 1985ல் கோவையில் இந்த மாநாட்டினை நடத்தினார்.

• கமலுக்கு தனது பிறந்தநாளான நவம்பர் 7ஐ கொண்டாடுவதில் ஒரு சங்கடம் உண்டு. ஏனெனில் இதே தேதியில்தான் அவரது தந்தையார் மறைந்தார்.

• இவரது நூறாவது படமான ராஜபார்வையில் நடிக்கும்போது இவரது வயது 27.

• டைம்ஸ் பத்திரிகை இவர் நடித்த நாயகன் திரைப்படத்தை உலகின் சிறந்த 100 படங்களுக்குள் வகைப்படுத்தியிருக்கிறது.

• உடல்தானம் செய்த முதல் நடிகர் டாக்டர் கமல்ஹாசன் தான். சென்னை மருத்துவக்கல்லூரியில் ஆகஸ்டு 15, 2002 அன்று இதைச் செய்தார்.

• இந்தியத் திரைப்படங்களிலேயே முதன்முறையாக அனிமேஷன் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது கமல்ஹாசனின் 100வது படமான ராஜபார்வையில் தான்.

• தமிழில் மார்பிங் தொழில்நுட்பம் முதன்முறையாக பயன்படுத்தப்பட்டது கமல்ஹாசன் நடித்த மைக்கேல் மதன காமராஜனில் தான்.

• ஹாலிவுட்டில் இருந்து மேக்கப் மேன் வரவழைத்து மேக்கப் போடப்பட்ட முதல் இந்தியப்படம் "இந்தியன்"

• கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் முதன்முதலாக ஒரு இந்தியத் திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டது என்றால் அது கமல்ஹாசன் நடித்த மங்கம்மா சபதம் திரைப்படத்தில் தான்.

• ஹாலிவுட் படமொன்றில் மேக்கப் அசிஸ்டண்டாகப் பணிபுரிந்து அந்தப் படத்தின் டைட்டிலிலும் கமல்ஹாசனின் பெயர் வந்திருக்கிறது.

• சென்னையில் முதன்முதலாக ஆயிரம் காட்சிகள் தொடர்ந்து அரங்குநிறைந்து ஓடிய படம் சகலகலா வல்லவன்.

• கொடைக்கானலில் இருக்கும் ஒரு குகையை கண்டுபிடித்து அதில் குணா படத்தின் படப்பிடிப்பை நடத்தியதால் அந்த குகைக்கே "குணா குகை" என்று பெயரிடப்பட்டிருக்கிறது.

• கமல்ஹாசனுக்கு இதுவரை 34 முறை படப்பிடிப்புகளில் எலும்புமுறிவு ஏற்பட்டிருக்கிறது. டூப் போட்டு கும்மி அடிக்கும் மற்ற நடிகர்களில் வித்தியாசமானவர் நம் கமல்.

• தமிழ் திரையுலக சகாப்தங்களான எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி மூன்று பேருடனும் நடித்தவர் கமல்ஹாசன்.

3 நவம்பர், 2011

நாம் இளிச்சவாயர்

‘இலை மலர்ந்தால், ஈழம் மலரும்’ என்றார். இலை மலர்ந்து ஆறு மாதமாகிறது. இப்போது என்ன மலர்ந்திருக்கிறது?


ஆகவே தாய்மாரே!

அடுத்த ஐந்தாண்டுகளுக்கு சமையல் போட்டி, கொழுகொழு குழந்தைகள் போட்டி, கண்ணாமூச்சி, அய்ஸ் பாய்ஸ், கில்லி, கோலி என்று எல்லாப் போட்டிகளையும் நடத்தி தமிழின விடியலுக்கு ‘நாம் இளிச்சவாயர்’ இயக்கம் பாடுபடும் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

அம்மா நூலகம்

அண்ணா நூலகம் இடமாற்றம் பெறுவது குறித்து நிறைய பேர் ஆச்சரியமும், அதிர்ச்சியும், வேதனையும் அடைகிறார்கள் என்பதைக் காண்பதுதான் நமக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. ஒருவேளை அம்மா மாறிவிட்டார், ஈழத்தாயாக நிலைபெற்றுவிட்டார் என்று கருதி, கடந்த தேர்தலில் இரட்டை இலைக்கு வாக்களித்தவர்கள் வேண்டுமானால் இது குறித்து கொந்தளிக்கலாம், கோபப்படலாம். ‘அண்ணா திமுக’ என்கிற பெயரையே கூட ‘அம்மா திமுக’ என்று புரட்சித்தலைவி மாற்றினாலும் கூட அதுகுறித்து எந்த வியப்பும் நமக்கு இருக்கப்போவதில்லை. ‘அண்ணா’வை விட ‘அம்மா’தானே பெருசு? அண்ணாவா கடந்த சட்டமன்றத் தேர்தலில் வென்றார்? நடந்து முடிந்த திருச்சி மேற்கு இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களிலும் அம்மாவால்தானே அதிமுக வெல்ல முடிந்தது? எனவே, இனிமேல் எல்லாமே இப்படித்தான். அடுத்த ஐந்து ஆண்டு காலமும் அதிர்ச்சி, வேதனை, வியப்பு உள்ளிட்ட எல்லா கருமாந்திரங்களும் தமிழர்களுக்கு பழகிப்போகும்.

வாடிக்கைதானே இது?

இது ஒரு பாட்டிக்கதை.

கட்டிக் கொடுத்தப் பெண்ணைப் பார்க்க பெற்றோர் ஊருக்கு வந்திருந்தார்களாம். பெற்றோர் எதிரில் மருமகளை மரியாதையாக நடத்த மாமியார்க்காரி ரொம்பவும் பிரயத்தனப்பட்டாளாம். வீட்டில் விளக்கு ஏற்ற வேண்டிய நேரம் வந்தது. மாமியார்க்காரி மருகளிடம் ரொம்ப தன்மையாக சொன்னாளாம்.

“போயி விளக்கேத்திட்டு வாம்மா”

மருமகள் தயங்கி, தயங்கி நின்றிருக்கிறாள்.

“விளக்கு ஏத்திட்டு வாயேம்மா. இருட்டுது இல்லே”

மீண்டும் தயங்கி மருமகள் சொல்கிறாள். “கொடுக்கிறதை கொடுங்க அத்தே. வெளக்கு ஏத்துறேன்”

“அதெல்லாம் இன்னிக்கு வேணாம். நீயா போயி வெளக்கு ஏத்திட்டு வா”

“கொடுக்குறதை கொடுத்தாதான் வெளக்கு ஏத்துவேன்”

பார்த்துக்கொண்டிருந்த பெற்றோருக்கு கடுப்பு. மாமியார்க்காரியிடம் கோபமாக சொன்னார்கள். “ஏங்க.. எங்க பொண்ணுக்குதான் தினமும் ஏதோ கொடுப்பீங்களாமே? அதைக் கொடுத்துடுங்க. அவ பாட்டுக்குப் போயி விளக்கு ஏத்தப்போறா...”

மாமியார்க்காரிக்கும் அதுதான் சரியென்று பட்டது. ஓரமாக வைத்திருந்த விளக்குமாறை எடுத்துவந்து, மருமகளை நாலு விளாசு விளாசினாள். மருமகளும் அழுதுக்கொண்டே போய் விளக்கேற்றினாள்.

தினமும் மாமியார்க்காரி மருமகளுக்கு கொடுப்பது இதுதான்.

மசோகிஸ்டுகளாக மாறிப்போன தமிழ் வாக்காளர்கள் போன சட்டமன்றத் தேர்தலில் இரட்டை இலைக்கு வாக்களித்து, விளக்கேற்றி இப்போது விளக்குமாறு அடிதான் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை இதுபோல அடி வாங்கி, அடி வாங்கி பழகிவிட்டது. அடி வாங்காமல் இருந்தால்தான் ஏதோ இழந்தது மாதிரி இருக்கிறது.

கதையை விடுங்கள். விஷயத்துக்கு வருவோம்.

1992ல் கரசேவைக்கு செங்கல் கொடுத்தனுப்பிய அதே ஜெயலலிதாதான் கொஞ்சமும் மாறாமல் பத்தொன்பது வருடங்கள் கழித்தும் இருக்கிறார். அவரது எந்தவொரு செயல்பாடும், முடிவும் ஆரிய/ஆர்.எஸ்.எஸ்/பார்ப்பனீய கருத்தியல்களின் அடிப்படையிலேயே அமைகிறது. முதலாளித்துவத்துக்கும் இது ஒத்துப்போகும் விஷயங்கள்தான் என்பதால் கேட்க நாதியில்லாமல் போய்விட்டது.

பின்னே? புற்றீசல்களாக ஆயிரக் கணக்கில் வருடாவருடம் தலித்துகளும், பிற்படுத்தப்பட்டவர்களும், சென்னைக்கு இடம்பெயர்ந்து என்ஜினியரிங் / மருத்துவம் / ஆராய்ச்சி என்று வந்துவிட்டால், அவர்கள் ஏற்கனவே செய்துக்கொண்டிருந்த வேலைகளை யார்தான் செய்வது? இவர்களின் கல்வி தொடர்பான ஆதாரங்களில் அடி கொடுத்தால்தானே ஏற்கனவே நிலவும் அமைப்பை அப்படியே தொடரமுடியும். முன்பு சமச்சீர்க் கல்வி. இப்போது அண்ணா நூலகம்.

வசதி படைத்த உயர்சாதியினருக்கு நூலகம் பெரிய ஆதாரமில்லை. ஐயாயிரமோ, பத்தாயிரமோ, லட்சமோ செலவு செய்து அவர்களுக்கு வேண்டிய நூல்களை அவர்களே வாங்கிவிட முடியும். அண்ணா நூலகம் போன்ற அமைப்பின் சேவை அவர்களுக்கு தேவையில்லை. பாதிப்புக்குள்ளாவது முதல் தலைமுறையாக படிக்க வரும் கீழ்நடுத்தர, கீழ்த்தட்டு இளைஞர்கள்தாம்.

தமிழ்/தமிழர் தொடர்பான ஜெயலலிதாவின் அசூயைக்கு எவ்வளவோ உதாரணங்கள் உண்டு. புதிய புதிய உதாரணங்களையும் ஆட்சிக்கு வரும்போதெல்லாம் ஏற்படுத்திக் கொண்டேதான் போகிறார். புதிய தலைமைச் செயலகத்தை பயன்படுத்த அவருக்கு இருக்கும் மனத்தடைகூட ‘அது திராவிட கட்டிடக் கலையை அடிப்படையாகக் கொண்டது’ என்று பெரியதாக, பெருமையாக கடந்த ஆட்சியாளர்களால் சொல்லிக் கொள்ளப்பட்டதும் கூட காரணமாக இருக்கலாம்.

புதிய தலைமைச் செயலகம், அண்ணா நூலகம் போன்றவை வெளிப்படையாக தெரியும் சாட்சிகள். ஜெயலலிதாவின் தமிழ் விரோதப் போக்குக்கு எடுத்துக்காட்டாக வெளியே தெரியாத எவ்வளவோ நடவடிக்கைகள் இருந்துவருகின்றன. கடந்தாண்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழ்வழி பொறியியல் படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டதே? அதன் கதி என்ன? இவ்வருடத்தில் இருந்து பழையமுறையில் ஆங்கில முறை போதிப்புதான்.

அண்ணா நூலக விஷயத்தில் எதிர்ப்பவர்களில் 99% பேரும் நூல்களின் கதி, கட்டிடத்தின் சிறப்பு, லொட்டு, லொசுக்கு என்று ஏதேதோ காரணங்களைப் பட்டியலிடுகிறார்கள். இவ்விவகாரத்திலும் சரியாக அடையாளம் கண்டுணர்ந்து, எதிர்க்கப்பட வேண்டியது ஜெயலலிதாவின் பார்ப்பனக் கண்ணோட்டம்தான். அவருடைய இப்போக்கு தொடரும் பட்சத்தில் அண்ணா நூலகம் போன்ற ஏராளமான பன்முக மொழி/இனம் சார்ந்த பிரச்சினைகளை, அடுத்த ஐந்தாண்டுகளும் நாம் சந்தித்துக் கொண்டேதான் இருக்கப் போகிறோம். சிங்களம் பழம்பெரும் தமிழ் நூலகத்தை எரித்தது. ஆரியம் நவீனத்தமிழ் நூலகத்தை முடக்கி வைக்கிறது, அவ்வளவுதான் வித்தியாசம். தமிழ் விரோதத்தில் இரண்டுக்கும் மத்தியில் எந்த பெரிய வேறுபாடும் இல்லை. ஒருவேளை ராணுவம் அம்மாவின் கட்டுப்பாட்டில் இருக்குமேயானால், சிறப்புப் பெற்ற அக்கட்டிடத்தையே குண்டுவீசி தகர்த்திருக்கவும் கூடும்.

இணையத்தள நண்பர்கள் பலரும் ஆன்லைன் பெட்டிஷன்களை உருவாக்கி கையெழுத்திடக் கூறி கேட்டு வருகிறார்கள். ஏற்கனவே எழுத்தாளர்கள் இம்மாதிரியான ஒரு இயக்கத்தைத் தொடர்ந்திருக்கிறார்கள். சில தோழர்கள் கொஞ்சம் முன்னே போய் முதல்வர் அலுவலகத்துக்கு மின்னஞ்சல்/ஃபேக்ஸ் அனுப்பி எதிர்ப்பைத் தெரிவிக்கலாம் என்றும் முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். 2009ல் தொடங்கி ஈழம் தொடர்பாக ஏராளமான ஆன்லைன் பெட்டிஷன்களில் நாம் கையெழுத்திட்டிருக்கிறோம். அவற்றின் கதி என்னவென்று புரியாத நிலையில், புதியதாக தொடங்கப்படும் ஆன்லைன் பெட்டிஷன்களில் ’என்னத்தை கையெழுத்திட்டு, என்னத்தைச் செய்யப்போகிறோம்’ என்று நினைக்கிறோம். ‘எதிர்ப்புகள்’ எல்லாம் அம்மாவுக்கு சும்மா. அசுரபலத்தை அளித்துவிட்ட தமிழக வாக்காளர்களைதான் இதற்காக நோக வேண்டியிருக்கிறது. நீதிமன்ற படியேறினாலும், இவ்விஷயத்தில் நீதி கிடைக்குமென தோன்றவில்லை. அரசின் முடிவுகளில் நீதிமன்றம் தலையிடுவது தொடர்பான முட்டல், மோதல் ஏற்கனவே நிகழ்ந்துக் கொண்டிருப்பதால், இவ்வாறு எண்ணத் தோன்றுகிறது. எனவே அன்ணா நூலகம் மறைந்து, குறைந்தபட்சம் நுங்கம் பாக்கத்தில் அம்மா நூலகமாவது அமைந்தால் போதும் என்றே கருதுகிறோம்.

திரும்ப, திரும்ப இதையெல்லாம் அம்பலப்படுத்திக் காட்டும்போது பார்ப்பன அன்பர்கள் சிலர் நம்மை ‘சாதி வெறியர்கள்’ என்று ஒரு சொல் விமர்சனத்தில் கடந்துச் செல்கிறார்கள். சாதியக் கண்ணோட்டத்தையும், சாதியையும் எதிர்ப்பவர்கள் எப்படி சாதிவெறியர்களாகவும், என் சாதியை மட்டும் எதுவும் சொல்லிவிடாதே என்று ‘மனு’ தர்மத்தைக் காப்பவர்கள் ‘நல்லவர்கள்’ ஆகவும் ஆகிறார்கள் என்கிற தர்க்கம்தான் நமக்குப் புரியவில்லை. பார்ப்பனரல்லாத நண்பர்களும் கூட இதற்காக நம்மை நோகும்போது, இப்படியெல்லாம் முத்திரை வாங்கி இந்த கருமங்களை எழுதித்தான் ஆகவேண்டுமா என்று சில நேரங்களில் சலிப்பு கூட தோன்றுகிறது.

அரசியலுக்குள் இரண்டறக் கலந்திருக்கும் பார்ப்பனீயத்தையும் வேறுபடுத்தி கண்டறிந்துணர, பார்ப்பனச் சாதி என்று சொல்லிக் கொள்ளப்படும் சாதியில் பிறந்த நண்பர்தான் பாடமெடுத்து நமக்கு சொல்லிக் கொடுக்கிறார். அவர் அந்தச் சாதியில் பிறந்துவிட்டார் என்கிற காரணத்துக்காக, அவரை பார்ப்பனீயர் என்று எதிர்த்துக் கொண்டிருக்கவா செய்கிறோம்? ‘தன்னிறைவு’ பெற்றுவிட்ட தலித்துக்குள்ளும் பார்ப்பனீயம் நுழைகிறது என்பதுதான் யதார்த்தம். ‘கடவுள்’ மாதிரி எல்லோருக்குள்ளும் கலந்துவிட்ட பார்ப்பனீயத்தை இனங்கண்டு, விலக்கி வைப்பதில்தான் சவால் அடங்கியிருக்கிறது. வாழ்நாள் முழுக்க இந்த சவாலை சந்தித்து, எதிர்த்துப் போராடிக் கொண்டேயிருப்பதுதான் குறைந்தபட்ச மனிதநேய வாழ்க்கைக்கு அடிகோலும்.