12 நவம்பர், 2011

அங்காடித் தெருவுக்கு ஆபத்து!

வணிக சாம்ராஜ்யங்கள் சந்திக்கும் நெருக்கடிக்கு சாட்சி சொல்கின்றன வெறிச்சோடிக் கிடக்கும் தி.நகர் தெருக்கள். எதன் ஆரம்பம் இது?

அருளானந்தம் மெஸ் சென்னை தியாகராயநகர் உஸ்மான் ரோட்டில், ரங்கநாதன் தெருவுக்கு முன்பாக இருக்கும் இந்த உணவகத்தில் எப்போதுமே சாப்பிட ஏகப்பட்ட போட்டி. டேபிள்கள் நிறைந்து, அடுத்து சாப்பிட வருபவர்கள் ஓட்டலுக்கு வெளியே கூட்டமாக நிற்பார்கள். காலையில் வேலை செய்ய ஆரம்பிக்கும் ஓட்டல் பணியாளர்கள் இரவுவரை, ஒரு நிமிடம் கூட ஓய்வின்றி உழைத்துக்கொண்டே இருப்பார்கள். இந்த நவம்பர் இரண்டாம் தேதி நாம் போனபோது, அங்கே ஆட்களே இல்லை. டேபிள்கள் காலியாக கிடக்க, பணியாளர்கள் ஓய்வாக நின்றிருந்தார்கள். அருளானந்தம் மெஸ் இருளானந்தம் மெஸ் ஆகியிருந்தது.

இது ஒரு உதாரணம்தான். உஸ்மான் ரோடு முழுக்கவே இதுதான் நிலை. தீபாவளி வாரத்தில் யாருமே சுலபமாக உள்ளே நுழைய முடியாத (நுழைந்தால் வெளியே வரமுடியாத) ரங்கநாதன் தெரு இப்போது வெறிச்சோடிப் போயிருக்கிறது. நடைபாதை வியாபாரிகள், வியாபாரமின்றி சோர்வாக அமர்ந்திருக்கிறார்கள். கோடிக்கணக்கான ரூபாய் புழங்கிக் கொண்டிருந்த இடம் சூனியம் வைத்ததைப் போலச் சோம்பிச் சுருண்டு கிடக்கிறது.ஆனால் இது சொந்தச் செலவில் வைத்துக் கொண்ட சூனியம்.

என்ன காரணம்?

கடந்த அக்டோபர் 31ஆம் தேதி, அதிகாலை. அந்த நாளின் பரபரப்பிற்குத் தயாராகச் சோம்பல் முறித்து எழுந்து கொண்டிருந்தது ரங்கநாதன் தெரு. ஆனால்- தி.நகரில் வந்திறங்கிய சி.எம்.டி.ஏ (சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம்) மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்ட இருபத்தைந்து கட்டிடங்களுக்கு சீல் வைத்தனர். தங்களுடைய நாளைத் துவக்காமலேயே இக்கட்டிடங்களில் இயங்கி வந்த நூற்றுக்கும் மேற்பட்ட பிரபலமான வணிக ஸ்தாபனங்கள் முடங்கிப் போயின. இங்கு தினம், தினம் ஆயிரம் ஆயிரமாக கூடி ‘ஷாப்பிங்’ செய்யும் மக்கள் வராமல் வெறிச்சோடிப் போனது ரங்கநாதன் தெரு. பக்கவிளைவாக ரங்கநாதன் தெரு கூட்டத்தை நம்பி வியாபாரம் செய்துவந்த உணவகங்கள், துணிக்கடைகள், நகைக்கடைகள், நடைபாதை வியாபாரங்கள் என்று அனைத்துமே இப்போது பாதிக்கப்பட்டிருக்கிறது.

வியாபாரம் பாதிக்கப்பட்டிருப்பதால் வணிகர்கள் கவலையோடும் வெளிக்காட்டிக் கொள்ளமுடியாத கோபத்தோடும் பேசுகிறார்கள்.

”நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் நூறுக்கும் மேற்பட்ட கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்திருக்கிறார்கள். கட்டிடங்களை கட்டும்போதே, இவற்றை அதிகாரிகள் கண்காணித்திருக்க வேண்டும். கட்டி முடிக்கப்பட்டு, பல ஆண்டுகள் ஆனபிறகு நடவடிக்கை எடுப்பது நியாயம் அல்ல”. என்கிறார் வெள்ளையன், தமிழ்நாடு வணிகர்சங்கப் பேரவை

கடைகளுக்கு ஏன் சீல் ?

அவர் சொல்வது போல் இது நியாயமற்ற நடவடிக்கையா?

அந்தக் கேள்விக்கு விடைகாண கடைகளுக்கு ஏன் சீல் வைக்கப்பட்டன என்பதைப் பார்க்க வேண்டும். தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்புச் சட்டத்தின் படி, சென்னை மாநகரப் பகுதியில் எந்த வளர்ச்சியை மேற்கொள்வதாக இருந்தாலும், அதற்கான திட்ட அனுமதியை சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்திடம் முன்கூட்டியே பெறவேண்டும்.

நில உபயோகம் மற்றும் விதிகளின் படி விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு அனுமதி வழங்கப்படும். நிலத்தின் தன்மை மற்றும் அளவு, அதில் கட்ட உத்தேசிக்கப்பட்டிருக்கும் கட்டிடத்தின் உயரம் மற்றும் பரப்பளவு, வாகனங்கள் நிறுத்தும் வசதி, பாதுகாப்பு ஏற்பாடுகள் என்று பலவித தன்மைகளையும் அலசி, உத்தேசித்தே கட்டிடம் கட்ட அனுமதி வழங்கப்படுவது வழக்கம்.சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின்அதிகாரிகள் மனையை பார்வையிட்டு, அனுமதி அளிக்க வேண்டும்.

இந்த விதிமுறைகளை பின்பற்றாததாலேயே தி.நகரில் இப்போது இருபத்தைந்துக்கும் மேற்பட்ட பெரிய கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்டிருக்கிறது.தி.நகரில் பொறுத்தவரை தற்போது சீல் வைக்கப்பட்டிருக்கும் கட்டிடங்கள், நில அளவுக்குப் பொருந்தாத வகையில் ஐந்து முதல் பத்து மடங்கு பகுதிகளைக் கட்டுமானத்துக்கு எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். நடைபாதைக்கு விடவேண்டிய இடங்களையும் விட்டுவைக்கவில்லை. ரங்கநாதன் தெருவில் இருக்கும் எந்த வணிக வளாகத்திலும் ‘கார் பார்க்கிங்’ வசதி இல்லை. இருசக்கர வாகனங்களை நிறுத்துவதற்கும் கூட இடமில்லை என்பதுதான் உண்மை. இடர் காலங்களில் தீயணைப்புத்துறையினர் செயல்படும் அளவுக்குக் கூட இடங்களை விட்டுவைக்கவில்லை.

”இக்கட்டிடங்களில் போதுமான பக்க இடைவெளி இல்லை. அனுமதிக்குப் புறம்பான வாகன நிறுத்துமிடம், இரண்டு மூன்று மற்றும் நான்கு ஐந்து தளங்களை அனுமதியின்றி கட்டியது என்று பல்வேறு விதிமுறை மீறல்கள் நடைபெற்றிருக்கின்றன” என்கின்றனர் மாநகராட்சி அதிகாரிகள்
”விதிமுறையை மீறிய கடை உரிமையாளர்களுக்கு முப்பது நாட்களுக்கு முன்பே நோட்டீஸ் வழங்கியிருந்தோம். இதற்கு உரிமையாளர்கள் அளித்த பதில் திருப்தி அளிக்காததால் சீல் வைத்திருக்கிறோம்.” என்றும் அவர்கள் தெரிவிக்கிறார்கள்

2006ஆம் ஆண்டு சமூக ஆர்வலரான டிராபிக் ராமசாமி, இதுகுறித்த வழக்கு ஒன்றைச் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்தார். அவ்வழக்கில் விதிமுறை மீறிய கட்டிடங்களை கண்டறிந்து போதிய நடவடிக்கை எடுக்குமாறு சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் உள்ளிட்ட அரசு நிறுவனங்களுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஒரு கண்காணிப்பு கமிட்டியையும் இதற்காக உருவாக்க வேண்டுமென நீதிமன்றம் யோசனை சொன்னது.

2007ஆம் ஆண்டு இந்தக் கண்காணிப்பு கமிட்டி, விதிமுறை மீறிய கட்டிடங்களை முடக்கி, சீல் வைக்க நோட்டீஸ் விடச்சொல்லி சென்னை மாநகராட்சியையும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தையும் கேட்டுக் கொண்டது.

நோட்டீஸ் அனுப்புவதற்கு பதிலாக முந்தைய அரசு சட்டமன்றத்தில் ஒரு அவசரச் சட்டத்தை நிறைவேற்றி இந்நடவடிக்கையை முடக்கியது. இயங்கிக் கொண்டிருக்கும் பெரிய வணிக வளாகங்களுக்கு சீல் வைப்பதின் மூலமாக சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படக்கூடும் என்று அந்த சட்டவரைவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கிடையே சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமமும், இவ்வழக்கு தொடர்பான உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதலை நிறுத்திவைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது. இதையடுத்து ‘சீல்’ நடவடிக்கை முடக்கப்பட்டது.

தற்போது, சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அந்த அவசரச் சட்டம் காலாவதியாகிவிட்டது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பும் விதிமுறை மீறிய கட்டிடங்களுக்கு எதிராக கிடைத்திருக்கிறது.
எனவே, கடந்த ஜூலை மாதம் இக்கட்டிடங்களுக்கு சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் நோட்டீஸ் வழங்கியது. இருப்பினும் நோட்டீஸ் வழங்கியதோடு, மேற்கொண்டு எந்த முன்னேற்றமும் இல்லை. இதையடுத்து சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம், தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு செய்வதாக மீண்டும் வழக்குத் தொடரப்பட்டது.
சி.எம்.டி.ஏக்கும், மாநகராட்சிக்கும் இந்த அளவிற்கு நிர்பந்தமும் நெருக்கடிகளும் உருவானபிறகே வேறுவழியின்றி, இப்போது ‘சீல் வைக்கும் வைபவம்’ நடந்தேறியிருக்கிறது.

ஏன் தாமதம்?

நீதிமன்றம் கட்டளையிட்டபிறகும் கூட அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க காலதாமதம் செய்தது ஏன்? விடை எல்லோருக்குமே தெரிந்ததுதான்.

லஞ்சம், ஊழல்!

விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்ட இந்தக் கட்டிடங்களுக்கு அனுமதி வழங்கியவர்கள், அதை கண்டுகொள்ளாமல் இருந்த சென்னைப் பெருநகர் வளர்ச்சிக்குழுமம், மாநகராட்சி உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் ஏராளம்.

இப்போது அவர்களில் 31 பேர் கண்டறியப்பட்டு, அவர்கள் மீதான துறைரீதியான நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ளப்படும் என்று தெரிகிறது. மேலும் இவ்வழக்கில் அவர்கள் எதிர்மனுதாரராகவும் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். தற்போதைய நிலவரப்படி இவர்கள் ‘கைது’ ஆனாலும் ஆச்சரியமடைய ஏதுமில்லை.

இந்த நடவடிக்கைகள் குறித்து பெயர் சொல்ல விரும்பாத அதிகாரி ஒருவர் நம்மிடம் பொங்கினார்.
“என்னவோ அரசு அதிகாரிகள் மட்டுமே குற்றவாளிகள் என்பதுபோல காட்சி சித்தரிக்கப்படுவ்து அவலமானதும், உண்மைக்குப் பொருந்தாததும் ஆகும்.இந்த விதிமுறை மீறல்களை கண்டுக்கொள்ளாமல் இருந்ததற்கு அரசியல் அதிகாரம் பெற்றவர்களின் அழுத்தம் முக்கியமான காரணம். நீட்டிய இடத்தில் கையெழுத்து போடாவிட்டால், பணிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களை சந்திக்க வேண்டுமென நேரடியாகவே மிரட்டல்களை சந்திக்கிறோம்.
அரசியல் அதிகாரம், அரசு நிர்வாகத்தை அச்சுறுத்தும் போக்கு முற்றிலுமாக நிற்காதவரை இதுபோன்ற பிரச்சினைகள் தொடர்ந்துக்கொண்டே தானிருக்கும். ஆனால் கடைசியாக பலிகடா ஆக்கப்படுவது என்னவோ அதிகாரிகளாக இருக்கிறார்கள் என்பதுதான் வேதனை. நீதிமன்றத்தால் முறையான விசாரணை நடைபெற வேண்டுமானால், தற்போது நடவடிக்கை எடுக்கப்படப் போகும் அதிகாரிகளை அச்சுறுத்திய அரசியல்வாதிகளும் அம்பலப்படுத்தப்பட வேண்டும்”

இந்தக் கடைகள் மூடப்படுவதால் ஏராளமானவர்கள் வேலை இழப்பார்கள் என்று வணிகர்கள் பிரச்சினையை திசைதிருப்ப முயல்கிறார்கள். ஆனால் இந்த ’அங்காடித் தெரு’ செயல்பட்டுக் கொண்டிருந்தபோது அங்கு பணிபுரிபவர்கள் எப்படி நடத்தப்பட்டார்கள் என்பது ஊரறிந்த ரகசியம். அங்கு பணிபுரிபவர்களுக்குப் கழிப்பறை வசதிகள் கூடப் போதுமான அளவு செய்து தரப்படவில்லை. ஆனால் இன்று ஆடு நனைகிறதே என ஓநாய்கள் அழுகின்றன.

அரசியல் வாதிகளைக் கொண்டு எதையும் ‘சமாளித்து விடலாம்” என்ற மனப்போக்கு, அரசு அதிகாரிகளின் சுயநலம், அலட்சியம் மற்றும் வணிக முதலாளிகளின் பணவெறி.. இவற்றால்தான் தி.நகரின் வணிக சாம்ராஜ்யம் இன்று சரிவைச் சந்திக்கிறது.

தி.நகருக்கு இணையாக தற்போது வளர்ச்சி பெற்றுவரும் புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை மற்றும் முன்பே வளர்ச்சி அடைந்திருக்கும் பாரிமுனை ஆகிய பகுதிகளிலும் இதே நடவடிக்கைகள் தொடரக்கூடும் என்று தெரிகிறது. இன்றைக்குச் சென்னை நாளை, நாளை மறுநாள் என்று அடுத்தடுத்து தமிழக நகரங்களிலும் இதே இடி நிச்சயம் இறங்கும்.

இது முடிவல்ல, ஆரம்பம்.


எக்ஸ்ட்ரா மேட்டர் :

நம் கடமை என்ன?

எந்த ஒரு நேர்மையான நடவடிக்கையும் தனிமனித செயல்பாடுகளில் இருந்தே துவக்கப்பட வேண்டும். நம்முடைய வீடு, கடை என்று எந்த கட்டிடமாக இருந்தாலும், சம்பந்தப்பட்ட மாநகராட்சி, நகராட்சி என்று உள்ளாட்சி அமைப்புகளிடம் முறையான அனுமதி பெறவேண்டும். விதிமுறைகளை மீறாதபட்சத்தில் யாருக்கும் லஞ்சம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. எந்த ஒரு வளர்ச்சித் திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன்பாகவும், அது தொடர்பான விதிமுறைகளை சம்பந்தப்பட்ட அமைப்புகளிடம் நேரடியாகவே சென்று தெரிந்துக் கொள்ள வேண்டியது அவசியம். எந்த ஒரு கட்டுமான திட்டமிடலுக்கும் முன்னதாக, உங்கள் உள்ளாட்சி அமைப்பிடம் ஒரு நடை போய் விசாரித்துவிட்டுதான் வந்துவிடுங்களேன். இல்லையேல் எதிர்காலத்தில் இதுபோன்ற சீல்வைப்பு, இடிப்பு நடவடிக்கைகளை நாமும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

(நன்றி : புதிய தலைமுறை)

14 கருத்துகள்:

  1. sorry sir..intha matterku sambantham illatha kelvi..itntha varudam book fair nadukuma...etho problem nu padichen idli vadi blog la..tirupur to chennai ticket book pannanum sir...book fairku...

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா12:11 AM, நவம்பர் 13, 2011

    //கட்டிடங்களை கட்டும்போதே, இவற்றை அதிகாரிகள் கண்காணித்திருக்க வேண்டும். கட்டி முடிக்கப்பட்டு, பல ஆண்டுகள் ஆனபிறகு நடவடிக்கை எடுப்பது நியாயம் அல்ல”. என்கிறார் வெள்ளையன், தமிழ்நாடு வணிகர்சங்கப் பேரவை//


    வெள்ளையன் ஐயா அவர்களே,

    நீங்க சரியா சொன்னீர்கள். இதே மாதிதான் நம்ம கபாலியும் சொல்றான்,’ பதினைந்து வயதில் சின்ன சின்ன திருடு பண்ணும் போது புடிக்காமல் விட்டு விட்டு, இப்போது மாதத்திற்க்கு ஒரு கொலை, கற்பழிப்புனு நான் வளந்து நிக்கும் போது போலீஸ் பிடித்து ஜையிலில் போடுவது தப்பு’னு.

    பதிலளிநீக்கு
  3. நடுநிலையான அருமையான பதிவு.. நன்றி..

    பதிலளிநீக்கு
  4. பெயரில்லா10:09 AM, நவம்பர் 13, 2011

    இதற்க்கு இரண்டே இரண்டு காரணங்கள் தான் இருக்கிறது. ஒன்று ரங்கநாதன் தெருவில் கடை வைத்திருப்பவர்கள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் என்றும், அவர்கள் கடந்த ஆட்சி பீடத்துக்கு எவ்வளவு நெருங்கியவர்கள் என்று மாநிலமறியும். அதுவிமில்லாமல் அவர்கள் இரண்டே கட்சி (திமுக, காங்கிரஸ்) சார்பெடுப்பவர்கள். அவர்களுக்கே ஓட்டும் போடுபவர்கள். அதனால் இது பலி(!) வாங்கும் நடவடிக்கை. இது எப்படி.

    பதிலளிநீக்கு
  5. அங்கு கடை வைத்திருக்கும் அனைவரும் கஷ்ட்டப்பட்டு முட்டி மோதி மேலே வந்தவர்கள் தான். ஒரு படத்துக்கு பல கோடிகள் சம்பளமாக பெற்றவர்கள் அல்ல. அப்படி பட்டவர்கள் இதை போன்ற விதி மீறல்கள் செய்வது சகஜம் தான். ஆனால் அதற்காக இவ்வளவு பெரிய தண்டனை அவசியமில்லாதது. வேண்டுமானால் அதிக தொகை அபராதம் விதித்து அவர்களை அப்படியே தொடர செய்யலாம். கஷ்ட்ட நஷ்ட்டம் தெரிந்தவர்கள் அரசாண்டால் அதைதான் செய்வார்கள்.
    நமது முதல்வரோ கஷ்ட நஷ்டம் என்றால் கிலோ என்னவிலை?. என்று கேட்கிறார்.

    அப்படி பார்க்கப்போனால் தமிழ் நாட்டில் ஒரு கட்டடம் கூட இருக்காது . இடிக்க ஆரம்பித்தால் தமிழகமே நில நடுக்கம் வந்ததை போலத்தான் இருக்கும். முதல்வர் கொஞ்சம் கருணை காட்டினால் நன்றாக இருக்கும்.

    அப்படியே கலைஞர் காப்பீட்டு திட்டத்தை மீண்டும் செயல் படுத்தலாம் (அதாவது வேறு பெயரில்).இந்த வரி இந்த பதிவுக்கு தேவை இல்லாதது என்றாலும் என்னமோ எழுத தோன்றியது.

    பதிலளிநீக்கு
  6. நல்ல பதிவு. ஆராய்ந்து எழுதியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  7. பெயரில்லா9:33 PM, நவம்பர் 13, 2011

    The role played by the councillors of this area is to be probed.They should be punished if found guilty.

    பதிலளிநீக்கு
  8. யுவா அவர்களே... மிக நல்ல, ஒவ்வொறு நபரும் சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டிய பதிவு. நன்றி.

    பதிலளிநீக்கு
  9. நன்றாக அலசி எழுதியிருக்கிறீர்கள்.
    chellappa said..
    //அப்படி பட்டவர்கள் இதை போன்ற விதி மீறல்கள் செய்வது சகஜம் தான்.//
    அப்படியா.. சகஜமா? பரவாயில்லையா? எந்த அளவு மீறினால் பரவாயில்லை? சரவணா கடையில் ஒரு ஆயிரம் பேர் இருக்கும்போது தீ விபத்து நடந்தால் அந்த மக்கள் தப்பிக்க வழி இருக்கிறதா? ஒரு முன்னூறு பேர் பலியானால் பரவாயில்லையா?
    //அப்படி பார்க்கப்போனால் தமிழ் நாட்டில் ஒரு கட்டடம் கூட இருக்காது //
    அப்படியா? நீங்கள் சொல்வது உங்களுக்கே அதிகமாக தோன்றவில்லை?

    பதிலளிநீக்கு
  10. Dear YuvaKrishna,
    Well Said article.
    Especially the Last Paragraph,
    Yes the change should be initiate from the individual people.

    Society is nothing but the group of individual people. So each and every individual is straight forward / following the rules then the society will become the better one

    பதிலளிநீக்கு
  11. //நோட்டீஸ் அனுப்புவதற்கு பதிலாக முந்தைய அரசு சட்டமன்றத்தில் ஒரு அவசரச் சட்டத்தை நிறைவேற்றி இந்நடவடிக்கையை முடக்கியது.//

    இதை எழுதியது யுவா? நம்ப முடியவில்லை !!!

    பதிலளிநீக்கு
  12. Everyone should read Last paragraph and ask the question whether they are following the rule or deviating . If you have deviated you are losing your right to comment about stores . Commenters dont blame the govt. for taking action , if accidents happen you will be the first one to ask why govt. dint take action on these stores .

    பதிலளிநீக்கு