10 நவம்பர், 2011

சாருவும், மாமல்லனும்!

சமகாலத்தில் ஒரு மாதிரியான அவநம்பிக்கைச் சூழலை பல இலக்கிய ஆர்வலர்கள் உணருவதை காண நேர்கிறது. தமிழ் இலக்கியவாதிகள் இலக்கியம் படைப்பதை விட்டு விட்டு ஒருவரையொருவர் இருபத்து நான்கு மணி நேரமும் வசைபாடிக் கொண்டிருப்பதையே தொழிலாக்கிக் கொண்டார்களோ என்றுகூட சில நேரங்களில் எண்ணத் தோன்றுகிறது. குறிப்பாக ‘இணையம்’ வந்தபிறகு இலக்கியத்துக்கான வடிவமென்பது வெறும் வசைபாடுதலாக, மன வக்கிரங்களுங்கான வடிகாலாக சுருங்கிவிட்டது என்றுகூட சிலர் புலம்ப கேட்டிருக்கிறோம்.

துரோகம், விரோதம், பொறாமை என்று இத்துறை புதர்மண்டிப்போன நிலையில் அவ்வப்போது சில நம்பிக்கை ஒளிக்கீற்றுகள் பளிச்சிடுவதுண்டு. விமலாதித்த மாமல்லன் எழுதியிருக்கும் இப்பதிவு, அவ்வாறான ஒளியேற்றி இருள் நீக்குகிறது : தவறியும் போகாதவை!

அவ்வப்போது ஜடாமுனி வளர்த்து, மோனநிலைக்குப் போய் இலக்கியத்துறவு மேற்கொள்ளும் மாமல்லன், பதினைந்து ஆண்டுகள் கழிந்து கடந்த ஆண்டு மீண்டும் இலக்கியத்துக்குள் கிரகப்பிரவேசம் நிகழ்த்தினார். முப்பதாண்டுகளுக்கு முன்பாக சில சிறப்பான சிறுகதைகளை எழுதி பெயர் பெற்றவர் என்பதால், மீண்டும் சிறுகதைகளாக எழுதிக் குவிப்பார் என்று எதிர்ப்பார்ப்பு நிலவியது. மாறாக ஆரம்பத்தில் எஸ்.ரா., பிறகு சாரு, கடைசியாக ஜெயமோகன் என்று சமகால இலக்கியவாதிகளை அம்பலப்படுத்துவதாக கூறி வசைகட்டுரைகளை தொடர்ச்சியாக எழுதிவந்தார். நம்மைப் போன்ற இலக்கிய வம்பு ஆர்வலர்களுக்கு நல்ல தீனியும் போட்டுவந்தார். அவ்வப்போது ஏதாவது பழைய எழுபதுகள், எண்பதுகளின் புனைவுகள், மொழிப்பெயர்ப்புகளை ஒளிவருடி பதிவிலேற்றுவார். இப்போது எழுதிவருபவர்களில் யாரையும் அவர் மனந்திறந்து பாராட்டியிருந்தால், அது ஓர் அரிதான நிகழ்வாக மட்டுமே இருக்க முடியும். மாமல்லனோடு நேரிடைப் பழக்கம் நமக்குண்டு. எப்போதும் தன்னை ஓர் இலக்கியப் பேராசானாகவே வரித்துக்கொண்டு, கையில் பிரம்பு வைத்துக்கொண்டு அடுத்த தலைமுறை வாசகர்களை மிரட்டி, இலக்கியப் பாடம் சொல்லிக் கொடுக்கும் வாத்தியாராகவே அவர்குறித்த மனச்சித்திரம் நமக்குள் பதிந்திருக்கிறது.

அப்படிப்பட்டவர் எழுதியிருக்கும் ‘தவறியும் போகாதவை’யில் தான் எவ்வளவு பெருந்தன்மையும், சக எழுத்தாளனை உயர்த்திப் பிடிக்கும் மனோபாவமும், நினைத்ததை தேடிப்பிடித்தே ஆகவேண்டும் என்கிற குழந்தைத்தன்மையும் வெளிப்படுகிறது?

எண்பதுகளின் தொடக்கத்தில் வந்த சிற்றிதழ்களில் ஒன்று ’படிகள்’. அவ்விதழினில் சார்த்தரின் ‘சுவர்’ சிறுகதையை படித்திருந்ததாக மாமல்லனுக்கு நினைவு. அக்கதையை தூசுதட்டி ஒளிவருடி தனது வலைத்தளத்தில் ஏற்ற ஆசைப்படுகிறார். அது படிகளில்தான் வந்ததா என்பதும் துல்லியமாக அவருக்கு நினைவில்லை.

தனக்குத் தெரிந்த இலக்கியவாதிகளிடமும் , வாசகர்களிடமும் இதுகுறித்து விசாரிக்கிறார். நிறைய ஆட்கள், நீண்ட தேடல். அதுகுறித்த அனுபவத்தை எளிய வார்த்தைகளில், பகட்டின்றி இப்பதிவில் பகிர்கிறார்.

குறிப்பாக சாருநிவேதிதாவிடம் விசாரிக்கும் கட்டம் சுவாரஸ்யமானது. “எனக்கு பெரிய நினைவாற்றல் கிடையாது. ஆனால், ‘சுவர்’ சிறுகதை நிச்சயம் படிகளில் வரவே இல்லை” என்கிறார் சாரு. இந்த கதைத்தேடல் கட்டத்தின் போது, நம்மை மாதிரி அசமஞ்சங்களிடமும் மாமல்லன் விசாரணையை நடத்தினார். “சார்த்தரோட அந்த கதையை தமிழில் யாரும் மொழிபெயர்க்கலேன்னு கூட சாரு சொல்றாம்பா... ஆனா எனக்கு நல்லா படிச்ச நினைவிருக்கு. அதுவும் ‘படிகள்’லே படிச்ச மாதிரிதான் நினைவு” என்றார்.

ஒருவழியாக செயின் மார்க்கெட்டிங் மாதிரி யார், யாரையோ பிடித்து ஆர்.சிவக்குமாரை பிடிக்கிறார். நல்லவேளையாக அவரிடம் ‘படிகள்’ இதழ்கள் சேகரிப்பில் இருக்கிறது. ‘சுவர்’ சிறுகதை படிகளின் பதிமூன்றாவது இதழில் வந்ததையும் மாமல்லனால் உறுதி செய்துக்கொள்ள முடிகிறது. ‘ஜனனி’ என்பவர் மொழிபெயர்த்திருக்கிறார்.

இந்த மொத்த பிராசஸிங்கிலேயே சுவாரஸ்யமான விஷயம் ‘ஜனனி’ தான். யார் இந்த ஜனனி என்றுப் பார்த்தோமானால், முன்பு அக்கதை படிகளில் வரவில்லை, தமிழில் வந்தது மாதிரியும் நினைவில்லை என்று மறுத்த சாருநிவேதிதாதான் ஜனனி. ஒரு சுவாரஸ்யமான குறுநாவலுக்கான இந்தக் கருவை, ஒரு சாதாரண வலைப்பதிவாக கருக்கலைப்பு செய்துவிட்டார் மாமல்லன்.

தற்பெருமை மிக்கவர், தன்னுடைய சாதாரண படைப்புகளுக்கு கூட டால் க்ளெய்ம் செய்துக் கொள்பவர் என்றெல்லாம் பலவாறாக விமர்சிக்கப்படும் சாரு, தனக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய பெயரை கூட மறந்திருக்கிறார் அல்லது மறுத்திருக்கிறார். விக்கிப்பீடியாவைக் கூட விட்டுவைக்காமல் தமிழின் பெரிய சிந்தனைவாதியாகவும், இலக்கிய அத்தாரிட்டியாகவும் தன்னைத்தானே எழுதிக் கொள்ளும் விளம்பரமோக எழுத்தாளர்கள் மத்தியில் சாருவுக்குள் இருக்கும் இந்த அரிய பண்பு பிரமிப்பினை ஏற்படுத்துகிறது.

மாமல்லன் நினைத்திருந்தால் இந்த விஷயத்தை கமுக்கமாக அமுக்கியிருக்கலாம். ஆனாலும் தன் சக எழுத்தாளனுக்கான கிரெடிட்டை கொடுத்தாக வேண்டும் என்கிற நேர்மை அவரிடம் இருக்கிறது. தனது வலைப்பதிவில் ஒரு கட்டுரையாக எழுதி அதை சிறப்பாகவும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

மேன்மக்கள் மேன்மக்களே!

7 கருத்துகள்:

  1. பெயரில்லா1:05 PM, நவம்பர் 10, 2011

    /// மேன்மக்கள் மேன்மக்களே!///

    அதுக்கு முதல்வரி மிஸ்ஸிங்!

    பதிலளிநீக்கு
  2. சாருவின் எழுத்திற்கு வலு சேர்க்கும் பதிவு! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  3. ம்ம்.. நல்ல பதிவு. படிகள் இதழ் என்னிடமும் சேமிப்பில் இருக்கிறது. சில நாட்களாக இணையத்தில் புழங்கும் வாய்ப்பு குறைந்து விட்டதால், சமகால இணைய இலக்கிய நடப்பு குறித்து அறிய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு விட்டேன். :)

    பதிலளிநீக்கு
  4. சாரு வாழும் காலத்தில் நானும் வாழ்கிறேன் என்பதில் பெருமைப்படுகிறேன்..

    பதிலளிநீக்கு
  5. சொந்தமாக எழுதி இருந்தால் ஞாபகம் வந்திருக்கும். மண்டபத்தில் யாரோ எழுதியதை எடுத்துக் கொடுத்தால் இப்படித் தான்.

    பதிலளிநீக்கு
  6. பெயரில்லா5:58 PM, நவம்பர் 11, 2011

    http://www.luckylookonline.com/2011/08/blog-post_13.html

    டேய் டுபாகூரு,

    மேலே இருக்கிறது ஆகஸ்ட்டிலே நீ எழுதினதுடா வெண்ணை.

    //நேர்மையான விமர்சனமாக இல்லாமல் தம்/சுயசமூக/சொந்த அரிப்பினை சொறிந்துக் கொள்ள இலக்கியம் கருவியாகப் பயன்படுவதை பார்க்கும்போது, தமிழ் இலக்கியத்துக்கு இனி ஈரேழு ஜென்மத்துக்கும் இவர்களால் விமோசனமில்லை என்று மட்டும் புரிகிறது.//

    இப்போ எந்த அரிப்பினை சொரிந்து கொள்ள இந்தப் பதிவு?

    போங்கடா

    பதிலளிநீக்கு
  7. பெயரில்லா9:05 PM, நவம்பர் 12, 2011

    டோண்டுவுக்கு முரளிமனோகர்; சாருவுக்கு ஜனனி போல!

    பதிலளிநீக்கு