26 நவம்பர், 2011

குடிவெறி

தமிழ்நாட்டில் இருந்துக் கொண்டு குடிவெறிக்கு எதிராகப் போராடுவது என்பது, அமெரிக்காவில் இருந்துக்கொண்டு சமத்துவத்துக்காக குரல் கொடுக்கும் பேரறிஞர் நோம்சாம்ஸ்கி நிலைமை மாதிரி படு தர்மசங்கடமான நிலைமை.ம் அத்தகைய ஒரு நிலையில் சமீபகாலமாக நானும், தோழர் அதிஷாவும் சிக்கிக் கொண்டிருக்கிறோம்.

ஒரு பிரபலமான அரசியல்/சமூக செயற்பாட்டாளர் அவர். ஏதேனும் பிரச்சினைகள் நேரும்போதெல்லாம் அது தொடர்பான விழிப்புணர்வுக் கூட்டங்களை சென்னையில் நடத்துவார். ஓசியில் டீயும், தம்மும் கிடைப்பதாக இருந்தால் கொலைகூட செய்யத் தயாராக இருக்கும் நாங்கள் அவ்வாறான கூட்டங்களில் கலந்துக் கொள்வதுண்டு. அந்த சமூக செயற்பாட்டாளர் மிகச்சரியாக ஒன்பது, ஒன்பதேகாலுக்கெல்லாம் எப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த கூட்டமாக இருந்தாலும் முடித்துவிடுவதை கண்டோம். இம்மாதிரி கூட்டங்களில் வாய்ப்பு கிடைத்தால் வாழப்பாடி வரை வாய் கிழிய பேசும் பேச்சாளர்களுக்கு இவர் ஒழுங்கு செய்யும் கூட்டங்களில் ஏமாற்றம்தான். எப்படி இந்த பங்ச்சுவாலிட்டி அவருக்கு கைவந்தது என்று விசாரித்துப் பார்த்ததில் அதிர்ச்சிகரமான ஓர் உண்மை எங்களுக்கு தெரியவந்தது. பத்து மணிக்கு டாஸ்மாக் மூடிவிடுவார்கள் என்பதாலேயே, எந்தப் பிரச்சினையப் பற்றிய கூட்டத்தையும் ஒன்பது மணிக்கு அவர் முடித்துக் கொள்கிறார் என்றார்கள். குடிவெறி தீமைக்கு இவர் ஒரு எடுத்துக்காட்டு.

இதுபோல குடிவெறியின் தீமைகளை கண்ணால் கண்டும், காதால் கேட்டும், மூக்கால் சுவாசித்தும் உணர்ந்த நாங்கள், அதை எதிர்த்து பிரச்சாரம் செய்ய ஓரியக்கம் ஒன்றினை தொடங்கினோம். வரலாற்றில் யாரெல்லாம் குடிவெறியை எதிர்த்திருக்கிறார்கள், அவர்களை பின் தொடர்வோம் என்று ஆராய்ந்தபோது, உத்தமர் காந்தியின் பெயர் முதலில் வந்தது. அவர் அந்தக் காலத்து அன்னா ஹசாரே என்பதால் அவரை பின் தொடர்வதா என்று யோசித்தோம்.

சமகாலத்தில் தனித்துவத்தோடு குடிவெறியை எதிர்த்தவர்கள் பா.ம.க.வினர் என்பதால், பா.ம.க.வில் இணைந்து குடிவெறியர்களை பந்தாடலாமா என்றும் திட்டமிட்டோம். சென்னைக்கு அருகில் அம்பத்தூரில் (பிரபல குடிவெறியர் ஜ்யோவ்ராம் வசிக்கும் ஊர் இது) நடந்த மது ஒழிப்பு மாநாட்டில் கலந்துக்கொண்ட பா.ம.க. பெண் தொண்டர் ஒருவரின் இந்தப் படத்தைக் கண்டவுடன், பாமகவில் சேரும் திட்டத்தையே கைவிட்டோம். இந்த சமூகத்தீமையைப் பற்றியே எப்போதும் நினைத்துக் கொண்டிருந்ததால், எங்களை அறியாமலேயே நாங்களும் கூட இக்காலக்கட்டத்தில் குடிவெறிக்கு பலியாகிவிட்டோம்.

ஆனாலும், இதுநாள் வரை குடிவெறியை எதிர்த்து மக்களிடையே பிரச்சாரம் செய்துவந்த மக்கள் நலப் பணியாளர்கள் பதிமூன்றாயிரம் பேரை திடீரென புரட்சித்தலைவி பணிநீக்கம் செய்துவிட்டதால், அந்தப் பணியை நாம் இருவர் மட்டுமாவது செய்தாக வேண்டும் என்று திடீரென நாங்கள் சபதம் எடுத்தோம்.

ஓரிரு குடிவெறியர்களையாவது திருத்த முடிந்தால், அதுவே இந்தியா 2020ல் வல்லரசாகும்போது நம்முடைய பங்காக இருக்கும் என்கிற ஆவலில் களமிறங்கினோம். முதற்கட்டமாக மூக்கு முட்ட குடித்துவிட்டு இணையத்தில் ட்விட்டர், ப்ளாக் மற்றும் கூகிள் பஸ்களில் கருத்து வாந்தியெடுக்கும் குடிவெறியர்களை திருத்த முயற்சித்தோம்.

எங்களின் முதற்கட்ட முயற்சியில் ஹாஃப் அடித்துக் கொண்டிருந்த பல்வேறு குடிவெறியர்கள் குவார்ட்டர், கட்டிங் என்று தங்களுடைய லிமிட்டை குறைத்துக் கொண்டார்கள். எங்களுடைய இணையச் சேவையை கேள்விப்பட்ட கேப்டன் கூட இப்போதெல்லாம் ஹாட் அடிப்பதில்லை, பீரோடு திருப்தி கொள்கிறார் என்கிற வெற்றிச் செய்தியை பின்னர் அறிந்துக் கொண்டோம். தோழர் ரோஸாவஸந்த் கூட தன் வீட்டில் சரக்கிருந்தும் தான் அடிப்பதில்லை என்று ட்விட்டரில் ஒப்புக் கொண்டார். 24 மணி நேர ஆஸ்பத்திரி மாதிரி, நாள் முழுவதும் குடிப்பதையே தொழிலாகக் கொண்டிருந்த வரவனையான் செந்தில், எங்களது உபதேசத்தால் குடிவெறியை வெறுத்து ஒதுக்கி, வேறு ஒரு உருப்படியான தொழில் செய்ய போய்விட்டார். அகிம்சை முறையிலான எங்களுடைய குடிவெறி எதிர்ப்புப் பிரச்சாரத்துக்கு இம்மாதிரி ஏராளமான வெற்றிகள் கிடைத்தது.

எந்த நல்ல விஷயம் நடந்தாலும், அதை கெடுக்க சில சாத்தான்கள் இருப்பது உலகம் தோன்றிய நாள் முதலாய் வழக்கம்தானே? எங்களது குடிவெறிக்கு எதிரான போரை கவிராஜன், சரண்கே, பொட்டீக்கடை சத்யா மற்றும் ஜ்யோவ்ராம் போன்ற குடிவெறியர்கள் முடக்க நினைத்தார்கள். ஹாலந்தில் இருக்கும் மெகா குடிவெறியரான மணிகண்டனும் இந்த சதிக்கு உடந்தை.

வெத்தலைப் பாக்கு பழக்கம் கூட இல்லாத எங்களிருவரையும் கஞ்சா புகைப்போம் என்று அவதூறு பரப்பினார்கள். ‘புழுதிவாக்கம் டாஸ்மாக்கில் நான் குடித்துக் கொண்டிருக்கிறேன். இங்கே வந்து குடிவெறிக்கு பிரச்சாரம் செய்து உதை வாங்கிச் செல்லுங்கள்’ என்றுகூட ஒரு குடிவெறியர் நேரடி மிரட்டல் விடுத்தார். இதற்கெல்லாம் நாங்கள் அஞ்சினால் இந்தியா எப்படி வல்லரசாக முடியும்?

எனவே, அடங்காப்பிடாரி குடிவெறியர்களை நேரடியாக சந்தித்து, குடிவெறி தீமைகளை எடுத்துரைத்து திருத்துவது என்று முயற்சியை மேற்கொண்டோம். இந்த முயற்சியின் முதல்கட்டமாக நேற்று கவிராஜன், சரண்கே ஆகியோரைச் சந்தித்து இரண்டு மணி நேர பேருரையாற்றினோம். 1970லோ அல்லது 1972லோ மதுவிலக்கினை திரும்பப் பெற்றுக் கொள்ளும் முடிவை கலைஞர் எடுக்கிறார். இந்த முடிவினை திரும்பப் பெறுமாறு கோரி, கலைஞரின் வீட்டுக்கே ராஜாஜி செல்கிறார். இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுக்குப் பிறகு, அதே மாதிரியான நிகழ்வு இந்த குடிவெறியர்களை நேரில் கண்டு குடிவெறி தீமை வேண்டாம் என்று நாங்கள் கெஞ்சியதுதான்.

இரவு ஒன்பது மணிவரை இந்த உரையைக் கேட்டு திருந்திய ஆடுகளாய் மாறினார்கள். இவர்கள் திருந்திவிட்டார்கள் என்று வெள்ளந்தியாய் நம்பி, நாங்கள் வீட்டுக்குச் சென்ற பிறகு, இருவரும் டாஸ்மாக்குக்கு சென்று, மிகச்சரியாக 9.59க்கு சரக்கு வாங்கி, மப்பு ஏத்திக் கொண்டதாக இன்று காலை அறிய முடிந்தது.

குடிவெறியரான ஜ்யோவ்ராமோ ஃபுல்லாக குடித்துவிட்டு, ‘மழையில் குடிப்பதை விட வேறென்ன பேரானந்தம் வேண்டும்’ என்று கூகிள் பஸ்ஸில் கவிதை எழுதி, அப்பாவி தமிழ் குடிமக்களை, டாஸ்மாக் குடிமக்களாக மாற்றம் செய்யும் வண்ணம் குடிவெறிக்கு ஆதரவான பிரச்சாரத்தை இன்றுமுதல் மேற்கொண்டிருக்கிறார்.

நேரடிப் பிரச்சாரமும் பயனில்லாவிட்டால், அடுத்ததாக காலில் விழுந்து கெஞ்சி குடிவெறியை கைவிடுமாறு கோருவதுதான் எங்களது ஒரே திட்டம். இதற்கும் குடிவெறியர்கள் தலை சாய்க்காவிட்டால், முள்ளை முள்ளால் எடுப்பதுபோல நாங்களும் குடிவெறியர்களாய் மாறி, மப்பு ஏத்திக்கொண்டு குடிவெறியின் தீமைகளை எடுத்துரைத்து அவர்களை மாற்றியே தீருவோம்.

குடிவெறிக்கு எதிரான எங்கள் போர், நாங்களே குடிவெறியர்களாக மாறினாலும் தொடரும் என்ற உறுதியை இப்பதிவின் வாயிலாக ஏற்கிறோம்.

12 கருத்துகள்:

  1. //குடிவெறிக்கு எதிரான எங்கள் போர், நாங்களே குடிவெறியர்களாக மாறினாலும் தொடரும் // இது வேண்டுமானாலும் நடக்கலாம் ஆனா நாங்க மாற மாட்டோம்

    பதிலளிநீக்கு
  2. நல்ல நகைச்சுவை பதிவு

    பகிர்வுக்கு நன்ற

    பதிலளிநீக்கு
  3. குடிவெறிக்கு எதிரான எங்கள் போர், நாங்களே குடிவெறியர்களாக மாறினாலும் தொடரும் என்ற உறுதியை இப்பதிவின் வாயிலாக ஏற்கிறோம்.............////////////////////////////////

    உண்மை யுவா மது விளக்கு வேண்டும் ..........காய் அடிக்க பட்ட தமிழர்களாய் நான் இருக்க விரும்பவில்லை

    பதிலளிநீக்கு
  4. அக்மார்க் அட்டகாசம்!!

    பதிலளிநீக்கு
  5. யோவ் இந்த மாதிரி அற்புதமான தொடர்புகளை வைத்துக்கொண்டு குடிக்காமல் இருந்தால் கிரியேட்டிவிட்டி குறைஞ்சு போகும் பரப்புரை ஆரம்பித்தால் நட்பு கெட்டு போகும் அளவோடு குடித்து வளமாக வாழ்வோம். வருமானத்துக்கு. அதிகமாக சொத்து சேர்ப்பவர்களுக்கு தனியாக பார் வருதுல்ல அப்புறம் என்ன.

    பதிலளிநீக்கு
  6. திருடனா பார்த்து திருடா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. நன்றி நண்பரே!

    பதிலளிநீக்கு
  7. நானும் உங்கள் இயக்கத்தில் இணைந்து கொள்கிறேன். ஆனால் ரெண்டு ‘பெக்’குக்கு மேல் அடிக்க மாட்டேன்.

    பதிலளிநீக்கு
  8. யோவ் கொன்னேபுடுவேன். :-) நீங்கள் இருவரும் தமிழ் சங்கமத்தில் கலந்துக்கொண்டு ஒரு தீர்மானமாவது நிறைவேற்றி இருக்கிறீர்களா ?

    பதிலளிநீக்கு
  9. பெயரில்லா2:05 PM, ஆகஸ்ட் 02, 2013

    குடிகாரர்களின் மனைவிக்கும்
    மகளுக்கும். குடிக்கக் கற்றுக்கொடுங்கள்.
    மனசாட்சி உள்ளவனாக இருந்தால்
    தானாகத் திருந்துவான்.



    பதிலளிநீக்கு