30 ஆகஸ்ட், 2019

பூம்.. பூம்.. பும்ரா!

அகமதாபாத் நகரை கோடை சுட்டெரித்துக் கொண்டிருந்தது.

உச்சி வேளை.

பள்ளிக்கு விடுமுறை என்பதால் தல்ஜீத் டீச்சர், வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார்.

‘பூம்.. பூம்.. பூம்..’

சீரான இடைவெளியில் அந்த சப்தம் தொடர்ச்சியாகக் கேட்டுக்கொண்டே இருந்தது.

தூக்கம் களைந்து, படுக்கையறையை விட்டு வெளியே வந்தார்.

ஹாலில் பத்து வயது மகன் பும்ரா, சுவரில் பந்து வீசி விளையாடிக் கொண்டிருந்தான்.

“பும்ரா, சத்தமில்லாமே விளையாட மாட்டியா?” லேசாக கண்டிப்பு தொனிக்கும் குரலில் கேட்டார் டீச்சர்.

தொனிக்கும் குரலில்தான். நிஜமான கண்டிப்பு அல்ல. மகனைப் பொறுத்தவரை எப்போதுமே தல்ஜீத் டீச்சர் கண்டிப்பு காட்ட மாட்டார்.

ஏனெனில், ஏழு வயதிலேயே தந்தையை இழந்த குழந்தை அவன்.

தொழில் நிமித்தமாக அகமதாபாத்துக்கு இடம் பெயர்ந்திருந்த பஞ்சாபி குடும்பம்.

சிறிய அளவில் கெமிக்கல் ஃபேக்டரி ஒன்றை நடத்திக் கொண்டிருந்தார் ஜஸ்பீர் சிங். அன்பான மனைவி. அவர்களது மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு சாட்சியாக ஒரு மகள், ஒரு மகன்.

மகன் பும்ராவுக்கு ஏழு வயது இருக்கும்போதுதான், அந்தக் குடும்பம் தாங்கவொண்ணா துயர் இருளில் வீழ்ந்தது. குடும்பத்தின் ஆணிவேராக திகழ்ந்த ஜஸ்பீர் சிங், மஞ்சக்காமாலை நோயால் திடீரென காலமானார்.

அதுநாள் வரை கணவரின் அரவணைப்பில் வெளியுலகம் பாராமல் இருந்த தல்ஜீத் மகனுக்காகவும், மகளுக்காகவும் வீட்டை விட்டு வெளியே வந்தார்.

நிர்மாண் உயர்நிலைப் பள்ளியில் பிரின்சிபாலாக வேலையில் அமர்ந்தார்.

அதே பள்ளியில் தன் மகளையும், மகனையும் படிக்க வைத்தார்.

டீச்சரின் குழந்தைகள் என்பதால் இருவரும் நன்றாகவே படித்தார்கள்.

டாக்டர், என்ஜினியர், ஐஏஎஸ், ஐபிஎஸ் என்று தன் குழந்தைகளின் எதிர்காலம் குறித்து எல்லோரையும் போலவும் தல்ஜீத் டீச்சருக்கும் கனவுகள் இருந்தன.

தகப்பன் இல்லாத குறை தெரியாமல் அவர்களை வளர்த்து வந்தார்.

மகனை வீட்டை விட்டு வெளியே அனுப்ப மாட்டார். வீட்டுக்குள்ளேயே விளையாடச் சொல்லுவார்.

பும்ராவுக்கு கிரிக்கெட்தான் பிடிக்கும்.

சச்சின் டெண்டுல்கர், வீரேந்தர் சேவாக், சவுரவ் கங்குலி, ராகுல் டிராவிட், முகம்மது கைஃப், யுவராஜ்சிங், தினேஷ் மோங்கியா, ஹர்பஜன் சிங், ஜாகீர்கான், ஜவகல் ஸ்ரீநாத், ஆஷிஷ் நெஹ்ரா என்று இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்கள் சர்வதேச அளவில் கோலோச்சிக் கொண்டிருந்த காலம் அது.

டிவியில் கிரிக்கெட் பார்ப்பதுதான் பும்ராவின் ஒரே சந்தோஷம். பேட்டிங்கைவிட பவுலிங்தான் அவனது விருப்பம். ஜாகீர்கான் யார்க்கர் போட்டு பேட்ஸ்மேனை திணறடிக்கும் காட்சியை கைத்தட்டி ரசிப்பான்.

கிரிக்கெட் போட்டி இல்லாதபோது டென்னிஸ் பந்தை சுவரில் அடித்து பவுலிங் செய்து விளையாடுவான்.

அப்படிதான் அன்று ‘பூம்.. பூம்.. பூம்..’ சப்தம் வந்த சம்பவம்.

சப்தமில்லாமல் சுவரில் பந்துவீசி எப்படி பவுலிங் செய்ய முடியும்?

முடியும்.

சிறுவன் பும்ரா யதேச்சையாக அந்த டெக்னிக்கை கண்டுப்பிடித்தான்.

சுவரின் கீழ்ப்பகுதி, தரையோடு இணையும் இடத்தில் குறிபார்த்து பந்து வீசினால் ‘பூம்.. பூம்.. பூம்..’ சப்தம் எழவில்லை. அம்மாவும் நிம்மதியாகத் தூங்கினார். தானும் விளையாடிய மாதிரி ஆயிற்று.

யதேச்சையாக அமைந்த அந்த பயிற்சிதான் இன்று உலகின் தலைசிறந்த யார்க்கர் பவுலிங் பேரரசனாக பும்ராவை உருவாக்கி இருக்கிறது என்றால் நம்பமுடியாத ஆச்சரியமாகதான் இருக்கும். ஆச்சரியங்களும், அற்புதங்களும் பெரும்பாலும் இதுபோல யதேச்சையாக தோன்றுபவைதான்.

பள்ளியில் கிரிக்கெட் ஆடிக் கொண்டிருந்தபோது, யதேச்சையாகதான் (இந்தக் கட்டுரையில் இன்னும் எத்தனை யதேச்சை வருமோ) பும்ராவின் பவுலிங்கைப் பார்த்தார் விளையாட்டு ஆசிரியர்.

பொதுவாக வேகப்பந்து வீச்சாளர்கள் தொலைவில் இருந்து ஓடிவந்துதான் பந்து வீசுவார்கள். பும்ராவோ, ஸ்பின்னர்களைப் போல மிகக்குறைவான தூரம் ஓடிவந்து படுவேகமாக வீசினான். அதுவும் அடுத்தடுத்து துல்லியமான யார்க்கர்கள்.

விளையாட்டு ஆசிரியருக்கு ஆச்சரியம். இப்படியொரு பவுலிங்கை அவர் சர்வதேச கிரிக்கெட்டில் கூட பார்த்ததில்லை.

”பும்ரா, உனக்கு யார் இப்படி பந்து வீசக் கற்றுக் கொடுத்தது?”

“நானேதான் கற்றுக் கொண்டேன்” என்றவன், வீட்டில் ‘பூம்.. பூம்’ சப்தம் வராமல் இருப்பதற்காக சுவரும், தரையும் இணையும் இடத்தில் குறிபார்த்து வீசி, வீசி பயிற்சி பெற்ற கதையை சொன்னான்.

பும்ராவின் அதிசயப் பந்துவீச்சு குறித்த தகவல் உள்ளூர் கிரிக்கெட் அகாடமிக்குப் போனது. அகாடமியில் இருந்த பயிற்சியாளர், “தம்பி, நீ சாதாரண ஆளு இல்லை. உலகத்தையே உன் பந்து வீச்சால் ஆளப்போறே. டெய்லி கரெக்டா பிராக்டிஸுக்கு வந்துடு” என்றார்.

அப்போது பும்ராவின் வயது பதினாலு.

நேராக அம்மாவிடம் போனார். இனிமேல் ‘ர்’தான். டீனேஜுக்கு வந்துவிட்டாரே?

“அம்மா, நான் ஜாகிர்கான் கிரிக்கெட் பிளேயர் ஆகப்போறேன்”

ஆச்சரியத்தோடு பார்த்தார் அம்மா.

“உனக்கென்ன கிரிக்கெட் தெரியும்?”

“மத்தவங்களுக்கு தெரியாததெல்லாம் எனக்குத் தெரியும்னு கிரிக்கெட் அகாடமியில் சொல்லுறாங்க அம்மா”

அம்மாவுக்கு கவலையாகப் போய்விட்டது. ஒரே மகனை நன்றாகப் படிக்கவைத்து பெரிய வேலைக்கு அனுப்புவதுதான் அவரது லட்சியம். மகனோ, விளையாடப் போகிறேன் என்று அடம் பிடிக்கிறார்.

”வேணாம் கண்ணா. கோடி பேருலே ஒருத்தருதான் டெண்டுல்கர் ஆகமுடியும். நீ அப்பா இல்லாத பையன். உன்னை வெச்சி நான் ரிஸ்க் எடுக்க முடியாது.”

“அம்மா. என்னை நம்பு. நானும் கோடிலே ஒருத்தன்தான்.”

“கண்ணா, நீ ஸ்பெஷல்னு அம்மாவுக்குத் தெரியும். இருந்தாலும்…”

“என்ன இருந்தாலும்? அம்மா, நீங்க ஸ்கூல் பேரண்ட்ஸ் மீட்டிங்கில் பேசுறதைப் பார்த்திருக்கேன். குழந்தைகளோட கனவை நனவாக்கிறது பெற்றோர்களின் கடமைன்னு பேசுவீங்க. நீங்களே கடமை தவறலாமா?”

வார்த்தைகளால் பும்ரா வீசிய யார்க்கருக்கு அம்மா தல்ஜீத், க்ளீன் பவுல்ட் ஆனார். தன் பேச்சை எடுத்துக்காட்டியே தன்னை மடக்கிய மகனின் சாமர்த்தியத்தை வியந்தார்.

”கண்ணா, நீ எது செஞ்சாலும் நல்லபடியா செய்வே. உன் கனவு நீ நினைச்சமாதிரி நடக்கலைன்னாலும் பரவாயில்லை. உடனே அம்மா கிட்டே ஓடி வந்துடு. வேற என்ன செய்ய முடியும்னு பார்த்துக்கலாம்.”

ஆனால் –

அப்படியொரு சந்தர்ப்பம் பும்ராவுக்கு ஏற்படவே இல்லை.

அதிகாலையில் எழுந்து பயிற்சிக்காக அகாடமிக்கு செல்வார். பயிற்சி முடிந்ததும் நல்ல பிள்ளையாக பள்ளிக்குச் செல்வார். மாலையில் மீண்டும் பயிற்சி.

அம்மாவுக்காக நன்றாகப் படித்தார். தனக்காக தீவிரப் பயிற்சி மேற்கொண்டார்.

குஜராத் கிரிக்கெட் அசோஷியேஷன் நடத்திய சம்மர் கேம்பில் கலந்துக் கொண்டார். பும்ராவின் வித்தியாசமான பவுலிங் அங்கிருந்தவர்களைக் கவர்ந்தது.

அதைத் தொடர்ந்து அவரை எம்.ஆர்.எஃப் பவுண்டேஷனுக்கும், தேசிய கிரிக்கெட் அகாடமியின் மண்டலப் பயிற்சி முகாமுக்கும் அனுப்பினார்கள். சென்ற இடமெல்லாம் புதிய நுணுக்கங்களை கற்றுத் தேர்ந்தார்.

குஜராத் 19 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட் அணிக்கு தேர்வாகி, முதல் போட்டி சவுராஷ்டிரா அணியுடன். தான் விளையாடிய முதல் போட்டியிலேயே பேட்டிங்குக்கு சாதகமான ராஜ்கோட் மைதானத்தில் 7 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

“பும்ரா எப்போது பவுன்ஸர் வீசுவான், எப்போது யார்க்கர் போடுவான் என்று எந்த பேட்ஸ்மேனுமே கணிக்க முடியாது. அவன் வீசுவது பந்தா அல்லது அணுகுண்டா என்றே தெரியாது” என்று இப்போதும் சிலிர்க்கிறார் குஜராத் ரஞ்சி அணியின் பயிற்சியாளரான ஹிதேஷ் மஜூம்தார்.

சயித் முஷ்டாக் அலி டி20 சாம்பியன்ஷிப் போட்டியில் பும்ராவின் பந்துவீச்சை கவனித்தார் அப்போதைய மும்பை ஐபிஎல் அணியின் பயிற்சியாளரான ஜான்ரைட்.

மும்பை அணி, பும்ராவோடு ஒப்பந்தம் செய்தது. மும்பை அணியில்தான் தன்னுடைய காட்ஃபாதரான யார்க்கர் மன்னன் லசித் மலிங்காவை சந்தித்தார் பும்ரா. தன்னைப் போலவே சலிக்காமல் யார்க்கர் வீசும் பும்ராவுக்கு, ஏகப்பட்ட நுணுக்கங்களைச் சொல்லிக் கொடுத்தார் மலிங்கா.

அவ்வளவுதான்.

சர்வதேச கிரிக்கெட்டுக்கு ஒரு யார்க்கர் டான் ரெடி!

மீதியெல்லாம் சமகாலத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சாதனை வரலாறு.

(நன்றி : குங்குமம்)