24 நவம்பர், 2018

மஞ்சள் நீராட்டுவதற்கு முன்...

உங்கள் குழந்தை பெரிய மனுஷியாகி விட்டாள் என்பதற்காக, ஊரைக்கூட்டி மஞ்சள் நீராட்டு சடங்கு நடத்துவதெல்லாம் நல்ல விஷயம்தான். நடத்தாதீர்கள் என்று சொல்லுவதற்கு சட்டத்துக்கு கூட உரிமையில்லை. உங்கள் மரபையும், கலாச்சாரத்தையும் நீங்கள் பேணிக்காப்பது உங்களது பிறப்புரிமை.

ஆனால் –

காலம் மாறிக் கொண்டிருக்கிறது என்பதை மட்டும் நினைவூட்டும் கடமை நமக்கு இருக்கிறது.

ஏனெனில் –

சமீபத்திய அவலச் செய்தி ஒன்று இது குறித்து பேசவேண்டிய தேவையை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழகத்தை சூறையாடி சென்ற கஜா புயல், மதிப்பிட முடியாத அளவுக்கு சேதங்களை மாநிலத்துக்கு ஏற்படுத்தி இருக்கிறது. தனிப்பட்ட வகையில் பல்லாயிரம் மனிதர்களின் வாழ்வை மீண்டும் ‘அ’விலிருந்து தொடங்கவேண்டிய மிகப்பெரிய இயற்கை அவலமாக கஜா அமைந்துவிட்டது.

பட்டுக்கோட்டை அடுத்த அணைக்காடு கிராமத்தை சார்ந்த செல்வராஜ் – பானுமதி தம்பதியினருக்கு கஜா கொடுத்த துயரம் மிகவும் அவலமானது. இவர்களது ஒரே மகள் விஜயலட்சுமி பூப்பெய்தி இருக்கிறார். அவர்களது குடும்ப வழக்கப்படி சடங்குகள் செய்வதற்கு முன்பாக விஜயலட்சுமிக்கு தனி குடிசை கட்டி தங்க வைத்திருக்கிறார்கள். கடந்த 16-ம் தேதி அதிகாலை வேதாரணயத்தில் கொடூரத் தாக்குதல் நடத்திய கஜா புயலால், தென்னை மரம் ஒன்று குழந்தை தங்கியிருந்த குடிசை மீது வீழ்ந்திருக்கிறது. தூங்கிக் கொண்டிருந்த விஜயலட்சுமியின் மீது வீழ்ந்த தென்னை மரம் அவளது உயிரைப் பறித்திருக்கிறது. தனிக்குடிசை கட்டாமல் தங்களுடன் வைத்திருந்தால், தங்கள் ஒரே மகள் உயிருடனாவது இருந்திருப்பாளே என்று அவளது பெற்றோர் கதறிக் கொண்டிருக்கிறார்கள்.

இயற்கையின் கோரத்தாண்டவம் பறித்திருப்பது நூற்றுக்கணக்கான உயிர்கள். இயற்கைப் பேரிடர் தவிர்க்க முடியாதது.

ஆனால் –

பூப்பெய்தும் சடங்குக்காக தனிக்குடிசை கட்டி விஜயலட்சுமியை தங்க வைத்திருக்காவிட்டால், அவளது மரணத்தை அந்தக் குடும்பம் தவிர்த்திருக்க முடியும்.

இந்தக் காலத்திலும் என்றோ அந்தந்த காலக்கட்டத்து மதிப்பீடுகளின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட சடங்கு வழிமுறைகளை நாம் இன்றும் கேள்வியின்றி பின்பற்றி வரவேண்டுமா என்கிற கேள்வியை விஜயலட்சுமியின் இழப்பு ஏற்படுத்துகிறது.

ஒரு பெண் வயதுக்கு வருவது என்பது இயற்கை. அறிவியல்ரீதியாக ஒரு பெண் குழந்தை, இனப்பெருக்கத்துக்கு தயாராகிறாள் என்பதற்கான சமிக்ஞை, அவ்வளவுதான்.

தென்னிந்திய சமூக அமைப்பில் பெண் வயதுக்கு வருவதை படோடபமாக ஊர், உறவைக் கூட்டி விருந்து வைத்துக் கொண்டாடுவது என்பது நூற்றாண்டுக்கால வழக்கம்.

மாதவிடாய் வரும் நாட்களில் நோய்த்தொற்று எளிதாக பெண்ணுடலை பாதிக்கக்கூடும். எனவேதான் முதன்முதலாக ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் வரும்போது, அவளை தனிமைப்படுத்தி அவள் ஆரோக்கியம் பாதிக்கப்படாத வகையில் வைத்தார்கள். மருத்துவம் நவீனமான காலக்கட்டத்துக்கு முன்பாக நோய் எதிர்ப்பு மருந்துகள், தடுப்பூசி போன்றவை இல்லாத காலக்கட்டங்களில் இதுபோன்ற நடவடிக்கைகள் அவசியமாக இருந்தது என்பது உண்மைதான்.

மேலும், அவளுக்கு அப்போது கர்ப்பப்பையை உறுதியாக்கக்கூடிய ஊட்டச்சத்துகள் கொண்ட உணவை வழங்குவதும் வழக்கமாக இருந்தது. இந்த காலக்கட்டங்களில் ஊட்டமான உணவு மூலமாக குழந்தை பிறப்புக்கு வாகாக இடுப்பு எலும்புகளுக்கு ஏற்படுத்தக்கூடிய உறுதி, பின்னாளில் அவளுக்கு சுகப்பிரசவம் ஏற்பட ஏதுவாக இருக்கும். எனவேதான், பத்திய முறையிலான உணவு வழங்குவதற்கு வசதியாக சில நாட்கள் முறையான ஓய்வு வழங்கப்பட்டது.

மேலும், திடீரென தன்னுடைய உடலில் ஏற்பட்ட மாற்றத்தைக் கண்டு குழந்தை குழம்பியிருக்கும். அது என்னவகையான மாற்றம் என்பதை அத்தை, பெரியம்மா, சித்தி போன்ற குடும்பத்தின் மற்றப் பெண்கள், அந்தக் குழந்தைக்கு எடுத்துச் சொல்வதற்கான வாய்ப்பாகவும், அக்குழந்தைக்கு தனிமை ஏற்படுத்தப்பட்டது. பெரிய மனுஷியாகி விட்டதால் நாணப்படுவாள் என்பதற்காக தந்தை உட்பட மற்ற ஆண்களை அவள் எதிர்நோக்கி தர்மசங்கடப்படுவதையும் தவிர்க்க இந்த தனிமை உதவியது.

அடுத்து விமரிசையாக நடத்தப்படும் மஞ்சள் நீராட்டு விழா.

‘பெண்ணின் திருமண வயது 18’ என்றெல்லாம் முறையான சட்ட அறிவுறுத்தல்கள் இல்லாத காலக்கட்டத்தில் ஒரு பெண், பெரிய மனுஷி ஆனதுமே திருமணம் செய்துவைக்க மாப்பிள்ளை தேடுவது வழக்கமாக இருந்திருக்கிறது. என்னுடைய வீட்டில் திருமணத்துக்கு ஒரு பெண் தயாராக இருக்கிறாள் என்று அப்பெண்ணின் தந்தையார் விளம்பரப் படுத்துவதற்காகவே மஞ்சள் நீராட்டு விழா என்கிற சடங்கு ஏற்படுத்தப்பட்டது. அந்தக் காலத்தில் எல்லாம் இணையத்தில் மாப்பிள்ளை தேடக்கூடிய வசதியெல்லாம் இல்லைதானே?

மேற்கண்ட விஷயங்கள் எல்லாம் நம் பாட்டிக்கு, ஏன் நம் அம்மாவுக்கே கூட நடந்தவைதான்.

இப்போது நம் மகள்களுக்கும் இதையெல்லாம் செய்ய வேண்டிய தேவை இருக்கிறதா, இந்தக் காலத்துக்கு இவையெல்லாம் பொருத்தமானவைதானா என்றுதான் நாம் யோசிக்க வேண்டும்.

நம் குழந்தை பிறக்கும்போதே நோய்த்தொற்றுகளுக்கு எதிரான முறையான தடுப்பூசிகளை போட்டுவிடுகிறோம். அவரவர் வசதிக்கு ஏற்ப ஊட்டமான உணவுகளை வழங்குகிறோம். அந்தக் காலத்தில் சிக்கன், முட்டை என்பதெல்லாம் ஆடிக்கு ஒருமுறை அமாவாசைக்கு ஒருமுறை சமைக்கக்கூடிய உயர்தர உணவு. இப்போது குறைந்தது வாரம் ஒரு முறையாவது கறியெடுக்க கசாப்புக் கடை வரிசையில் நிற்கிறோம்தானே?

அதுவுமின்றி, அந்தக் காலத்தில் பெண் குழந்தைகள் கல்வி மறுக்கப்பட்டு வெளியுலகத் தொடர்பு இன்றி வீட்டிலேயே வளர்க்கப்பட்டார்கள். இப்போது பள்ளி, கல்லூரி மற்றும் பணியிடங்களுக்கு செல்கிறார்கள். உலக நடப்பை அறிந்து வைத்திருக்கிறார்கள். அவரவர் வாழ்க்கையை தெரிவு செய்யக்கூடிய சமூக அந்தஸ்தை எட்டியிருக்கிறார்கள்.

ஆணும், பெண்ணும் சமம் என்று இயற்கை வழங்கியிருக்கக்கூடிய இயல்பு நீதியை, சமூகமும் ஒப்புக்கொள்ளத் தொடங்கியிருக்கிறது. ஒரு ஆண் குழந்தை எப்படியோ, அப்படியேதான் பெண் குழந்தையும் என்கிற விழிப்புணர்வும் ஏற்பட்டு வருகிறது.

தூய்மை உள்ளிட்டக் காரணங்களால் அந்தக் காலத்தில் கற்பிக்கப்பட்ட மாதவிடாய் தீண்டாமையை இன்னும் நாம் அனுசரித்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் ஏதுமில்லை. அந்நாட்களில் அவர்கள் தூய்மையைப் பேணுவதற்கு வசதியாக நாஃப்கின்கள் பெருமளவு புழக்கத்துக்கு வந்துவிட்டன. இன்னும் அவர்களை வீட்டுக்குள் புழங்க விடாமல் செய்வதற்கு ஏதேனும் காரணம் நம்மிடம் மிச்சமிருக்கிறதா?

வயதுக்கு வருவது குறித்து அவர்களுக்கு முன்பு இருந்த அச்சமெல்லாம் இன்றைய நாகரிக உலகில் அகன்று, உடல் மாற்றத்தை இயல்பாக ஏற்றுக்கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள்.

நகர்ப்புறக் குடும்பங்களில் இந்த மாற்றங்களின் விளைவுகளை கண்கூடாக நாம் காண முடிகிறது.

எனினும் –

இன்னமும் கிராமப்புற மக்களிடம் இந்த விழிப்புணர்வு ஏற்படாததின் ஓர் விளைவாகவே அணைக்காடு விஜயலட்சுமியின் இழப்பைக் காண வேண்டியிருக்கிறது.

முன்னெப்போதோ ஒரு காலத்தில் முன்னோர் அனுஷ்டித்தார்கள் என்பதற்காக அர்த்தமற்ற சடங்குகளை இன்றும்கூட நாம் கடைப்பிடித்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை.

மஞ்சள் நீராட்டு விழா போன்ற குடும்ப விசேஷங்களை கொண்டாடலாமா என்று அதில் சம்மந்தப்பட்ட பெண் குழந்தைகள் முடிவெடுத்துக் கொள்ளட்டும். அவர்களுக்கு விருப்பமிருந்தால் செலவு செய்துக் கொண்டாட வேண்டியது பெற்றோரின் கடமையும்கூடதான்.

ஆனால் –

அதன் பேரில் பெண் குழந்தைகளை தனிமைப்படுத்துவது, தீண்டாமை அனுசரிப்பது போன்ற மூடப்பழக்க வழக்கங்கள் இனியும் வேண்டாமே? இவற்றையெல்லாம் தவிர்ப்பதின் மூலமாகதான் நாம் நாகரிகமான சமுதாயத்தின் ஓர் அங்கம் என்பதை நிரூபிக்க முடியும்.

(நன்றி : குங்குமம்)

3 கருத்துகள்:

  1. நல்ல கட்டுரை, ஆய்வும், அக்கரையும் மிகுந்த கட்டுரை. வாழ்த்துகள் யுவா....
    இன்றைய காலகட்டத்தில் சாலைகளை எல்லாம் அடைத்து பலவண்ண டிஜிடல் பேனர்களை வைத்து கொண்டாடும் அரசியல் வியாதிகள் மாற வேண்டும், அந்த இளம் மழலையின் மனவெழுச்சிகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டும்.....

    பதிலளிநீக்கு
  2. அனைத்து கிராமங்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

    பதிலளிநீக்கு
  3. நல்ல கட்டுரை உண்மை சிறப்பு,...

    பதிலளிநீக்கு