18 டிசம்பர், 2018

ராணி மங்கம்மாளின் கடைசி நாட்கள்!


வரலாறு ஒரே மாதிரியான சம்பவங்களைதான் திரும்பத் திரும்ப பதிவு செய்து வருகிறது. சம்மந்தப்பட்ட நபர்கள்தான் மாறுபடுகிறார்கள்.

உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவுக்கு அருகில் ஆலம்பாக் பகுதியைச் சார்ந்த 75 வயது மூதாட்டி லீலாவதி சமீபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். ரயில்வேயில் பணிபுரியும் அவரது மகன், தன்னுடைய தாயை ஓர் அறையில் பூட்டிவிட்டு கோபித்துக்கொண்டு வெளியேறி விட்டாராம்.

சோறு, தண்ணீர் இல்லாமல் பட்டினியில் வாடி லீலாவதி மரணித்திருக்கிறார்.

லீலாவதி, ஓஹோவென்று ராணி மாதிரி ஒரு காலத்தில் செல்வச் செழிப்போடு வாழ்ந்தவர். அவருடைய கணவர், உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் மேலவை உறுப்பினராம்.

கிட்டத்தட்ட இதே மாதிரி சம்பவம், நம்முடைய தமிழக அரசியலிலும் நடந்திருக்கிறது. சமீபகால வரலாறு ஏதேனும் உங்கள் நினைவுக்கு வந்தால், அதற்கு நாங்கள் பொறுப்பல்ல. நாம் குறிப்பிடும் சம்பவம் நடந்து இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக ஆகிவிட்டது.

மதுரையை முப்பத்தாறு ஆண்டுகள் தன்னுடைய இரும்புக்கரம் கொண்டு ஆண்டவர் திருமலை நாயக்கர். கூடல்மாநகரை தலைநகரமாக மட்டுமின்றி கலைநகரமாகவும் மாற்றிக் காட்டியவர் இவர்தான்.

திருமலை நாயக்கரின் மறைவுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த இரண்டாம் முத்து வீரப்ப நாயக்கர் வெறும் நாலு மாதங்களே ஆட்சியில் இருந்து காலமானார்.

மன்னர் பொறுப்பை அடுத்து ஏற்ற 16 வயது சொக்கநாத நாயக்கர், தன் தாத்தா திருமலை நாயக்கரைவிட பெரும் புகழ் பெறக்கூடிய வகையில் வீரமும், கலைமனமும் வாயத்தவராக விளங்கினார். போர்முனையில் பெரும் தீரம் காட்டினார்.

தஞ்சையை ஆண்ட விஜயராகவ நாயக்கரின் மகள் மங்கம்மாவை காதலித்தார். விஜயராகவ நாயக்கர் பெண் கொடுக்க மறுத்துவிட, அவர் மீது போர் தொடுத்து வலுக்கட்டாயமாக பெண்ணெடுக்க முற்பட்டார். தன் தந்தை போரில் தோல்வியடைய, அவருடைய வீழ்ந்த தலை மீதேறி, சொக்கநாத நாயக்கரை கைப்பிடிக்க மறுத்து மங்கம்மா தன்னைதானே தீயில் மாய்த்துக் கொண்டார்.

எதிர்பாராமல் ஏற்பட்ட இந்த காதல் தோல்வியால் மதுரை மன்னர் சொக்கநாதர், பித்து பிடித்தாற்போல ஆனார். அவரை சகஜநிலைக்குக் கொண்டுவர வேறொரு மங்கம்மாளை மணமுடித்து வைத்தனர்.

அவர்தான் பிற்காலத்தில் மதுரை கண்ட மகத்தான பெண்ணரசி மங்கம்மா.

திருமணமான பிறகும்கூட (தாம்பத்தியமெல்லாம் சரியாக நடந்தும்கூட) தஞ்சை மங்கம்மாவின் நினைவை, சொக்கநாதரின் மனசிலிருந்து இந்த மங்கம்மாவால் முடியவே இல்லை.

அந்த நினைவிலேயே தன்னை இழந்துவிட்ட சொக்கநாதர், மிக இளம் வயதிலேயே காலமானார். அப்போது மங்கம்மாளின் கைகளின் மூன்று மாத கைக்குழந்தையாக அடுத்த மன்னர் அரங்க கிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கர் இருந்தார்.

அந்தக் காலத்தில் மன்னர்கள் மறைந்தால் கூடவே உடன்கட்டை ஏறும் சதி சடங்கு வழக்கத்தில் இருந்தது.

மங்கம்மாவோ அரசியல் குழப்பங்களை தவிர்க்க உடன்கட்டை ஏற மறுத்தார். தன்னுடைய குழந்தைக்கு அரசியல் கற்பித்து, தகுதியுள்ள மன்னனாக உருவாக்க முடிவெடுத்தார்.

முத்துவீரப்ப நாயக்கர், பட்டத்துக்கு வரும்வரை தானே நாட்டை மறைமுகமாக ஆண்டார். மங்கம்மா அரசியலில் ஈடுபட்டிருந்த அதே காலத்தில் மதுரை அரசுக்கு ஏகப்பட்ட பிரச்சினைகள். அக்கம் பக்கம் நாடுகளின் படையெடுப்பு, அவுரங்கசீப்பின் முகலாய அரசின் நேரடி மிரட்டல் ஆகியவற்றை சமாளித்தார். போர்களில் வெற்றியும், அரசியல் நடவடிக்கைகளில் ராஜதந்திரத்தையும் வெளிப்படுத்தி மதுரையை காத்தார்.
மக்களுக்கு அன்ன சத்திரம், கல்வி நிலையங்கள், கோயில்களுக்கு மானியம், பெரிய நகரங்களை மதுரையோடு இணைக்க சாலைகள், கால்நடைகளுக்கு சாலையோரங்களில் தண்ணீர்த் தொட்டிகள், ஊர் தோறும் ஊருணி, குளம், ஏரி, கிணறு என்று கட்டமைப்புகளை மேம்படுத்தினார். இன்றும்கூட மதுரையில் மங்கம்மா காலத்து சாதனைகள் வழிவழியாக போற்றிப் பாடப்படுகின்றன.

மங்கம்மாவின் மகன் முத்துவீரப்ப நாயக்கருக்கு 15 வயதில் பட்டம் சூட்டப்பட்டது. தாய் எட்டடி பாய்ந்தால், குட்டி எண்பதடி பாய்ந்தது. நாயக்க மன்னர்களிலேயே பெரும் வீரமும், அறிவுத்திறனும், மக்கள் மீதான பாசமும் கொண்டவராக கணிக்கப்பட்டார் முத்துவீரப்பன். கடற்படை அமைப்பது, மக்களுக்கு ஏராளமான நலத்திட்டங்கள் என்று திட்டமிட்டுக் கொண்டிருந்தார். ஒருவேளை அவர் நினைத்ததெல்லாம் நடந்திருந்தால் தமிழகத்தின் வரலாறே மாறியிருக்கக்கூடும்.

ஆனால் –

அவரும் தன்னுடைய தந்தை சொக்கநாதரை போலவே மிகவும் இளம் வயதில் எவரும் எதிர்பாராவிதமாக காலமானார். முத்துவீரப்பன் மறைந்தபோது அவரது மனைவி முத்தம்மா கர்ப்பிணியாக இருந்தார். அடுத்த மன்னனை வயிற்றில் சுமக்கும் ராணியை, உடன்கட்டை ஏறவிடாமல் தடுத்தார் மங்கம்மா.

தன்னுடைய மாமியாரின் ஆசையை நிறைவேற்றும் பொருட்டாக ஆண் குழந்தையை பெற்றுக் கொடுத்துவிட்டு, தற்கொலை செய்து மறைந்தார் முத்தம்மா.

கைக்குழந்தையாக தன்னுடைய மகனை வளர்த்த அதே கதைதான் மீண்டும் மங்கம்மாவுக்கு. இம்முறை பேரன் விஜயரங்க சொக்கநாதன்.

குழந்தை விஜயரங்கனை மன்னனாக பெயரளவுக்கு பட்டம் சூட்டிவிட்டு, மங்கம்மாவே ஆட்சி புரிந்தார். மகனை கண்டிப்பாக வளர்த்த அம்மாவான மங்கம்மா, பேரனை ரொம்ப செல்லமாக வளர்த்த பாட்டியாக இருந்துவிட்டார்.

அதுதான் அவர் செய்த மாபெரும் தவறு. இதனால், நாயக்க வம்சத்தின் ஆட்சியே மதுரையில் முடிவுறுவதற்கு காரணமாகவும் அமைந்தார்.

எந்நேரமும் அந்தப்புரம், நண்பர்களோடு உல்லாசம் என்று மைனராக வளர்ந்தார் விஜயரங்கன் நாயக்கர். ஒரு பெண் தங்களை ஆள்வதா என்று நினைத்த அந்தக்கால ஆணாதிக்க அரசியல் பிரமுகர்கள், விஜயரங்கனை தங்களுடைய கைப்பாவை ஆக்கிக் கொண்டனர்.

எப்போதும் பேரனுக்கும், பாட்டிக்கும் ராஜ்ய பரிபாலனம் குறித்து பிரச்சினை ஏற்பட்டுக் கொண்டே இருந்தது. ஒருக்கட்டத்தில் அதிகாரம் மொத்தத்தையும் கைப்பற்றிய விஜயரங்கன், தன்னுடைய பாட்டி மங்கம்மாவையே தனிமைச்சிறையில் அடைத்தார். அவருக்கு உரிய நேரத்தில் உணவு உள்ளிட்ட வசதிகள் வழங்காமல் சித்திரவதைக்கு உள்ளாக்கினார்.

கட்டிய கணவனோடும் மகிழ்ச்சியான வாழ்க்கை அமையவில்லை. கண்ணுக்கு கண்ணாக வளர்த்த மகனும் அல்பாயுசில் மறைந்துவிட்டான். செல்லமாக வளர்த்த பேரனே தன்னை கொடுமைப்படுத்திக் கொண்டிருக்கிறான் என்று கடைசிக்காலத்தில் புலம்பி, புலம்பியே காலமானார் அந்த மகத்தான மாதரசி.

அந்நாட்களில் மங்கம்மா ஏதேனும் தெரியாத்தனமாக தன் பேரனை சபித்துவிட்டாரோ என்னவோ, விஜயரங்க சொக்கநாதர் பிள்ளை பாக்கியம் இல்லாதவராகிப் போனார். தன்னுடைய பாட்டியின் மரணத்துக்கு தானே காரணமாகிவிட்ட கழிவிரக்கம், அவரை முழுமையாக இறைச்சேவையில் ஈடுபடுத்தியது.

இருபத்தைந்து ஆண்டுகள் பெயருக்கு ஆட்சியில் இருந்து காலமானார். அவருக்கு வாரிசுகள் இல்லாததால் அவரது மனைவி மீனாட்சி சில காலம் அரசு பொறுப்பேற்றார். ஆற்காடு நவாப் படையெடுத்து வந்து மீனாட்சியை வென்றதோடு 200 ஆண்டுகால மதுரை நாயக்கர் ஆட்சி முடிவுக்கு வந்நது.

(நன்றி : குங்குமம்)

3 கருத்துகள்:

  1. என்னதான் வீரமும் ஒழுகும்மும் நிறைந்த நல்ல மன்னர் பரம்பரை வாரிசுனாலும் (ஜீன்ஆனாலும்) , பழக்கங்கள், சந்தர்ப்பமும் சூழ்நிலையும்தான் ஒருவனனை மாற்றும்.

    பதிலளிநீக்கு
  2. ஆங்கிலியர் ஆட்சிக்கு முன், நம் முன்னோர்கள் வீரத்துலயும், கட்டட கலை, மருத்துவம் மற்றும் பல துறைகளில் சிறந்து விளங்கியுள்ளனர்.
    இது இன்று பலமடங்கு மேம்பட்டியிருக்க வேண்டியது ஆனால் ஆங்கிலியர் ஆட்சில அணைத்து மழுங்கடிக்கப்பட்டு - இன்று எந்த படிப்பு படிச்சா எங்க வேலை கிடைக்கும் எவ்வளவு சம்பளம் கிடைக்கும்னு போய்ட்டுஇருக்கோம். யாருக்கு, எந்த நாட்டுக்குக்காக உழைக்குறோம் என்ற கவலை இல்லை.

    நம்ம இந்த நாட்டுக்கு என்ன செஞ்சோம், என்ன புதுசா கண்டுபுடிச்சோம், என்ன சாதிச்சோமுன்னு ஒவொவரத்துனும் நினைக்கணும்.

    பதிலளிநீக்கு