7 ஆகஸ்ட், 2012

மூன்று குறுநாடகங்கள்


சமீபத்தில் ஒரே மேடையில் அடுத்தடுத்து நிகழ்த்தப்பட்ட மூன்று குறுநாடகங்களை காணும் வாய்ப்பு கிடைத்தது.  எழுத்தாளர் ஆனந்த்ராகவின் மடிநெருப்பு, அந்தரங்கம், இரண்டாவது மரணம் ஆகிய சிறுகதைகளை நாடகவடிவில் சென்னையில் மேடையேறின. ஆனந்த்ராகவின் சில நாடகங்களை ஏற்கனவே கண்டிருக்கிறோம். ‘கிரிக்கெட் பெட்டிங்’ குறித்த அவரது ஒரு நாடகம் அரங்க அமைப்பில் ஓர் அதிசயம். நாடக மேடையிலேயே புத்திசாலித்தனமாக கிரிக்கெட் மைதானத்தை காட்சிப்படுத்தி அசத்தியிருந்தார்.

மடிநெருப்பு
சமகால நிலஅபகரிப்புப் பிரச்சினையை கையாண்டிருக்கும் கதை. அரசியல் செல்வாக்குள்ள ரியல் எஸ்டேட் குண்டர்கள் பெரிய அப்பார்ட்மெண்ட் கட்டுவதற்காக நிலங்களை கையகப்படுத்தி வருகிறார்கள். வயதான மூன்றே மூன்று நண்பர்கள் மட்டும் தங்கள் இடங்களை அவர்களுக்கு தர மறுக்கிறார்கள். ஏனெனில் அவர்களுக்கு அது வெறும் நிலம் மட்டுமல்ல. உழைப்பும், உணர்வும் கலந்து பார்த்துப் பார்த்து கட்டிய வீடு. கடைசிக்காலத்தை தங்கள் சொந்த வீட்டில் கழிக்க விரும்பும் அப்பாவி நடுத்தர முதியோர். அவர்களில் ஒருவர் மர்மமான முறையில் கொல்லப்படுகிறார். மீதியிருக்கும் இருவர் மனரீதியாக அடையும் உளைச்சல்கள்தான் கதை. காத்தாடி ராமமூர்த்தி ஒரு முக்கியப் பாத்திரத்தில் நடித்து இயக்கியிருக்கிறார்.

அந்தரங்கம்
இரண்டே இரண்டு பாத்திரங்கள் தொடர்ச்சியாக பத்து நிமிடங்களுக்கு மேல் பேசி அலுப்பூட்டும் நாடகம். விகடனிலோ, குமுதத்திலோ இதை சிறுகதையாக வாசித்திருப்பதாக நினைவு. சிறுகதையாக கவர்ந்த கதை ஏனோ நாடகமாக்கலில் அவ்வளவாக பிடிக்கவில்லை. யாருக்கோ அனுப்பவேண்டிய மெயிலை தன்னுடைய கணவனுக்கு அனுப்பி விடுகிறாள் இளம் மனைவி. அந்த மெயிலை தன் கண்முன்னே அழிக்குமாறு கணவனை வேண்டுகிறாள். கணவன் மனைவிக்குள் வெளிப்படைத்தன்மை வேண்டாமா என்று அவன் கேள்வி எழுப்புகிறான். மனைவிகளுக்கான ‘ப்ரைவஸி’ உரிமையை அவள் போதிக்கிறாள். இப்படியாக நீளும் உரையாடலில் இறுதியில் கணவன், மனைவி இருவருமே பெருந்தன்மை காட்டுவதாக நாடகம் முடிகிறது. ஆனால் அது போலி பெருந்தன்மை என்பதை க்ளைமேக்ஸில், அந்த தம்பதியினருக்குத் தெரியாமலேயே ரசிகர்களுக்கு எடுத்துக் காட்டுகிறார்கள். “என் அம்மாவோட பேங்க் அக்கவுண்டை கூட அப்பாதான் ஆப்பரேட் பண்ணாரு. அவரே கையெழுத்து போட்டு காசு எடுப்பாரு” போன்ற வசனங்களில் தலைமுறை மாற்றங்களை போகிறபோக்கில் கூர்மையாக பதிந்திருக்கிறார்கள்.

இரண்டாவது மரணம்
இந்த நாடகம் ஏற்படுத்திய தாக்கம் இன்னமும் அப்படியே இருக்கிறது. இறுதிக் காட்சியில் விழியோரம் நீர் கோர்க்கவில்லை என்றால், நீங்கள் இடிஅமீனாகதான் இருக்க வேண்டும். அப்பா ஐ.சி.யூ.வில் ஆபத்தான நிலையில் சேர்க்கப்படுகிறார். அடுத்த ஒரு மாதத்தில் மகன் எதிர்கொள்ளும் மனப்போராட்டம்தான் கதை. அப்பாவுக்கு ப்ரெய்ன் டெட். “வெறுமனே அவரது இதயம் மட்டும் துடிச்சிக்கிட்டிருக்கு. அதுவும் மெஷினோட உதவியாலே. இப்படியே வெச்சிக்கிட்டிருந்தா நிறைய செலவாகும். நிறுத்திடலாமா?” என்கிறார் டாக்டர். முப்பத்தொன்பது ஆண்டுகள் வளர்த்தெடுத்த அப்பாவை அப்படியே விட்டுவிட மகனுக்கு சம்மதமில்லை. ஆஸ்பிட்டலே கதியென்று கிடக்கும் மகனால் தன் குடும்ப, அலுவலகக் கடமைகளை சரியாக செய்ய முடியவில்லை. இதனால் ஏற்படும் மன உளைச்சல்கள், கடைசியாக அவனெடுக்கும் முடிவு என்று உருக்கமான, உலுக்கிப் போடும் நாடகம். பிரதானப் பாத்திரத்தில் நடித்திருக்கும் க்ரிஷ் என்கிற நடிகரின் திறமை நாடகத்தை தாங்கிப் பிடிக்கிறது. பேஷண்டின் பல்ஸ் காட்டும் மானிட்டரை நாடகத்துக்கு பேக்கிரவுண்டாக யோசித்தது அபாரம்.


நில அபகரிப்பு, கணவன் மனைவிக்கு இடையேயான எல்லை, அப்பா செண்டிமெண்ட் என்று மூன்று வெவ்வேறு பிரச்னைகளை எடுத்துக் கொண்டாலும் மூன்றையும் இணைக்கும் பிணைப்பாக, நடுத்தர மனங்கள் பிரச்னைகளை எதிர்கொள்ளும் மனப்போக்கினை விசாரிக்கிறார் ஆனந்த்ராகவ். நாட்டாமையாக மாறி, இதற்கு தீர்வாக எதையும் சொல்லாவிட்டாலும் இவையெல்லாம் ஏற்படும் சூழல்களை சுட்டிக் காட்டுகிறார்.

சினிமா தரும் அனுபவத்தை நாடகம் தராது என்கிறார்கள். எனக்கென்னவோ நாடகங்கள் தரும் காட்சியனுபவம் சினிமாவில் கிடைப்பதில்லை. நமக்கு முன்பாக தோன்றுபவர்கள் ரத்தமும், சதையுமானவர்கள் என்கிற நம்பிக்கை மேடையில்தான் கிடைக்கிறது. திரையில் கிடைப்பதில்லை. வெண்திரையில் கிடைக்கும் லொக்கேஷன், கிராபிக்ஸ் மாதிரியான விஷயங்கள் நாடகங்களில் கிடைக்காதுதான். ஆனந்த்ராகவ் போன்றவர்கள் இந்த குறையை அரங்க அமைப்பினை நவீனப்படுத்தி, ஒலி-ஒளி துல்லியத்தைக் கூட்டி சரிசெய்கிறார்கள்.

ஆனால் சென்னையில் நாடகம் பார்ப்பது என்பது காஸ்ட்லியான பொழுதுபோக்காக மாறிவருகிறது. ஒரு தலைக்கு இருநூற்றி ஐம்பது ரூபாய் மாதிரி டிக்கெட் கட்டணம். ஒரு மினிமம் மெம்பர் குடும்பம் டிக்கெட்டுக்காக மட்டுமே ஆயிரம் ரூபாய் செலவழிக்க வேண்டும். குறைவான ரசிகர்களே வருகிறார்கள். நாடகச் செலவை, அரங்க வாடகையை ஈடுகட்ட டிக்கெட் கட்டணத்தை உயர்த்த வேண்டியிருக்கிறது என்பது நாடகம் போடுபவர்கள் சொல்லும் காரணம். இருநூறு ரூபாய் கொடுத்து நாடகம் பார்ப்பதற்கு பதிலாக, ஐம்பது ரூபாய் கொடுத்து சினிமா பார்க்கலாம் என்பது ரசிகர்கள் சொல்லும் காரணம். கோழி-முட்டை கதைதான்.

ஒருமுறை மேடைநாடகத்தை ஒருவன் பார்த்துவிட்டால், திரும்பத் திரும்ப நிறைய நாடகங்களை பார்க்க விரும்புவான். துரதிருஷ்டவசமாக எண்பதுகளின் இறுதியிலும், தொண்ணூறுகளிலும் பிறந்த ஒரு தலைமுறைக்கு நாடகம் என்றாலே இன்று டிவியில் காணக்கிடைக்கும் மெகாசீரியலாகதான் தெரிகிறது. நாடகம் போடுபவர்கள்தான் இந்தப் பிரச்சினையை சரிசெய்ய வேண்டும். தெருக்கூத்து மாதிரியான நிலைமை மேடை நாடகங்களுக்கு ஏற்பட்டுவிடக் கூடாது.

5 கருத்துகள்:

  1. நாடகம் பொறுத்த வரையில் கோவை வாசிகள் அதிர்ஷ்டசாலிகள் என்றுதான் சொல்ல வேண்டும்.
    கடந்த மாதம் கோவையில் நடந்த நாடக விழா மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றதற்கு அனுமதி இலவசமாக அளித்தது கூட காரணமாக
    இருக்கலாம் (அதனால் தான் நான் சென்றேன்). முதல் முறையாக மேடை நாடகங்கள் பார்கிறேன். நீங்கள் சொல்வது போல் நாடகத்தில் இருக்கும் உயிர் திரைப்படத்தில் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். கடந்த மாதம் ஒவ்வொரு சனி ஞாயிறும் புது அனுபவமாகவே இருந்தது.

    பதிலளிநீக்கு
  2. // அப்பாவுக்கு ப்ரெய்ன் டெட்//
    அப்பா பிரெய்ன் டேட் என்றுதானே இருக்கவேண்டும்?

    நல்ல கட்டுரை.

    பதிலளிநீக்கு
  3. மூன்று குறுநாடகங்களையும் சுருக்கமாக விவரித்து, பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி நண்பரே....

    பதிலளிநீக்கு
  4. உண்மையில் கதையே வேறு. புகழின் உச்சியில் இருக்கும் எஸ்.வி.சேகர், கிரேஸி மோஹன், ஒய்.ஜி.மகேந்திரா , வரதராஜன் போன்றவர்கள் அல்லாமல் மேலும் நாடக அமைப்புகள் உள்ளன. ஆனால் சினிமாவில் புகழ் இருப்பதனால் அவர்களுக்கு மவுசு அதிகம். அதுவும் சென்னை தவிர்த்து. சென்னையில் கம்பெனி ஸ்பான்ஸர் என்றால் நல்ல பணம் கிடைக்கும். சபா என்றால் கிடைக்கும் பணத்தில் லைட், செட், மேக்கப் நடிகைகளுக்கே( சாதாரண சம்பளம் பெட்ரோல், ஆட்டோவுக்கு காணாது) சரியாகி விடும்) சபா மெம்பர்கள் பாதி பேர் வரவும் மாட்டார்கள். வருபவர்களும் ( பெரும்பாலும் முதியவர்களே) நாடகம் முடியும் முன்னர் காட்சி மாற்றம் நேரத்தில் எகிறி விடுவார்கள். சபா உரிமையாளர்கள் மனது வைத்து குறைந்த பட்சம் 100 இருக்கைகளை பார்வையாளர்களுக்கு குறைந்த விலையில் தியேட்டர்களில் உள்ளது போல அளித்தால் அனைவரையும் சென்றடையும் என்பது என் எண்ணம்.

    பதிலளிநீக்கு