இதிகாசக் காலத்திலிருந்தே பாரதத்தில் ஒழுக்கத்துக்குப் பேர் போனவர்கள் ஸ்ரீராமரும்,
அவரது சீடர் ஆஞ்சநேயரும். இருவரும் ஒரு மதுபானக்கடையில் அமர்ந்து மது
அருந்துகிறார்கள். இராமருக்கு சைட் டிஷ்ஷாக மூளைக்கறி. ஆஞ்சநேயருக்கு மிளகாய்
தூக்கலாகப் போட்ட ஆம்லெட். பார் பையனிடம், “ஒரு கட்டிங் கடனா கொடேன். நாளைக்கு
இன்னொரு கட்டிங் சேர்த்து போட்டு கொடுக்கறேன்” என்று டீலிங் பேசுகிறார். பார்
பையன் மறுத்துச் சென்றுவிட ஆஞ்சநேயர், இராமரிடம் கூறுகிறார். “அவங்க சமூகத்துலே
வட்டி வாங்குறது தப்பு”
நீண்டகாலம் கழித்து தமிழ் சினிமாவில் ஆண்மையான இயக்குனர் ஒருவரை பழமையான
ஸ்ரீநிவாசா திரையரங்கத்தின் புதுப்பிக்கப்பட்ட வெண்திரை பிரசவித்துக் கொண்டிருந்த
அதிசயத்தை நேரில் காணும் சாட்சிகளானோம்.
“இந்தத் திரைப்படத்தில் கதை என்று ஏதேனும் இருப்பதாக நீங்கள் கருதினால், அது
உங்களுடைய கற்பனை” என்று ஸ்லைட் போட்டுதான் படத்தையே தொடங்குகிறார் இயக்குனர்
கமலக்கண்ணன். படத்தில் கதை மட்டுமல்ல, கதாநாயகனோ, நாயகியோ கூட இல்லை. எந்த
அம்சங்கள் எல்லாம் சினிமா என்கிற கற்பிதம் இருக்கிறதோ, அந்த அம்சங்கள் எதுவும்
மருந்துக்குக் கூட இலை. இன்னும் சொல்லப் போனால் இதை திரைப்படம் என்று
வகைப்படுத்தியதே கூட இயக்குனரின் கற்பனைதான். மதுபானக்கடை என்கிற களத்தின் ஒரு
நாள் ‘டயரி’ தான் ஒட்டுமொத்த ஒன்றரை மணிநேரப் படமுமே.
நான்கைந்து முக்கியமான பாத்திரங்கள். பாத்திரங்களின் பின்னணி அறிமுகம். காதல்,
பாசம், நட்பு, அன்பு, வன்மம் என்று நவரச கலவையான உணர்வுகளை கலந்த காட்சிகள்.
ஏதேனும் இரண்டு மூன்று பாத்திரங்களுக்கு இடையேயான பாசமோ, காதலோ, முரணோ அல்லது விரோதமோ.
நாலு சண்டை காட்சிகள். ஐந்து, ஆறு பாடல் காட்சிகள். இடைவேளைக்கு முன்பாக ஒரு
பிரதான சிக்கல் முடிச்சு. பிற்பாடு அந்த சிக்கலை வளர்த்தோ, அல்லது படிப்படியாக அவிழ்த்தோ
இறுதியில் சுபம் அல்லது அசுபமான க்ளைமேக்ஸ்... இவ்வாறாகதான் சினிமா நமக்கு
போதிக்கப்பட்டிருக்கிறது. மதுபானக்கடை திரைப்படக் குழுவினர் ஒரு சினிமாவைக்கூட
பார்த்ததில்லை போலிருக்கிறது. இயக்குனர் ஒருவேளை மொடாக்குடியராக இருக்கலாம். தான்
கண்ட, கேட்ட, அனுபவித்த விஷயங்களை சினிமாவாக்க முயற்சித்திருக்கிறார். இதன் மூலமாக
தமிழ் சினிமாவில் புதிய genre ஒன்றினை தோற்றுவிக்கும் பெருமைக்குள்ளாகுகிறார்.
கிட்டத்தட்ட ஒரே செட்டில் எடுக்கப்பட்டிருக்கும் படம். ஆரம்பக் காட்சிகளில்
அடிக்கடி ‘ரிபீட்’ காட்சிகள் தோன்றுவதைப் போல ஒரு சலிப்பு ஏற்படுவதால், உடனடியாக
படத்தில் ஒன்றமுடிவதில்லை என்பதுதான் ஒரே குறை. போகப்போக பழகிவிடுகிறது. படம்
தொடங்கியதிலிருந்து ஏராளமான பாத்திரங்கள். ஒரு காதலன். ஒரு காதலி. டாஸ்மாக்
ஊழியர். பார் உரிமையாளர். பாரில் பணிபுரியும் தொழிலாளர்கள். பாருக்கு வரும்
நுகர்வோர் – அவர்கள் ஒவ்வொருவரும் யூனிக் – கூலித் தொழிலாளர்கள்,
பாடகர், உரிமைகளை தட்டிக் கேட்கும் குணம் கொண்டவர், பள்ளிக் கல்லூரி மாணவர்கள்,
ஆசிரியர், ஆலைத் தொழிலாளர்கள், சாதிசங்கப் பிரமுகர், இத்யாதி.. இத்யாதி.. திரையில்
காட்சியாக விரியும் இப்பாத்திரங்களுடைய ஒருநாள் வாழ்க்கையின் சில மணித்துளிகளை
மட்டும் ரசிகர்களுக்கு காட்சிப்படுத்துகிறார் இயக்குனர். எவருடைய பின்னணிக்
கதையையும் நேரடியாக கேமிராவின் பார்வையில் சொல்லாமல், அவற்றை ரசிகனே தன்
கற்பனையில் தனக்குள் உருவாக்கிக்கொள்ளும் சுதந்திரத்தை மதுபானக்கடை வழங்குகிறது.
காசு கொடுத்துப் படம் பார்க்கும் ரசிகன் ஒவ்வொருவனும் புத்திசாலி என்று நம்பும்
தமிழின் முதல் இயக்குனராக கமலக்கண்ணனை பார்க்க முடிகிறது.
இந்திய-தமிழ் சினிமாவுக்கு பாடல் காட்சிகள் தேவையா என்கிற பட்டிமன்றத்துக்கு
வயது நூறு. இப்படத்தில் பாடல் காட்சிகள் யாவுமே இடைச்செருகலாக இல்லாமல் திரைக்கதையினூடே
காட்சிகளாய் பயணிப்பதால் அந்தப் பட்டிமன்றத்தின் விவாதமே இப்படத்தைப் பொறுத்தவரை
பொருளற்றதாகிறது. பாடல்கள் தொடங்கும்போது ஸ்டெடியாக இருக்கும் ஆடியன்ஸ், ஒவ்வொரு
பாடல் முடியும்போது ‘கேர்’ ஆகுவதைப்போல உணர்ந்தே எடுத்திருக்கிறார்கள். வாழ்வில்
ஒரு முறையாவது டாஸ்மாக் பாரில் குடித்தவர்கள் படம் பார்க்கும்போது இந்த உணர்வினை
தொடர்புபடுத்திப் பார்த்துக்கொள்ள முடியும். ஒரு பாடல் காட்சியில் மூன்று
திருநங்கைகள் நுழைந்ததுமே, அவர்கள் சரக்கு போட்டுவிட்டு குமுக்காக ஒரு குத்துப்
போடுவார்கள் என்று வழக்கமான சினிமா பார்வையில் எதிர்ப்பார்க்கிறோம். நஹி.
இதுமாதிரி படம் முழுக்கவே நாம் எதிர்ப்பார்க்கும் எல்லாமே நஹி என்றாலும், படம்
முடிந்ததும் மனசு முழுக்க பல்வேறு உணர்வுகளால் நிறைகிறது.
குடியின்றி அமையாது உலகு என்றுகூறி ‘குடி நல்லது’ என்று பேசவில்லை. அதேநேரம்
குடிக்கலாச்சாரத்தால் சமூகம் எப்படி சீரழிகிறது பாருங்கள். குடும்பம் எப்படி
குட்டிச்சுவராகிறது பாருங்கள் என்று கழிவிரக்கம் கோரி, குடிவெறிக்கு எதிரான
பிரச்சாரமுமில்லை. நல்லது, கெட்டது என்கிற விவாதத்துக்குள்ளேயே நுழையவில்லை. எட்ட
நின்று, ஒரு பீர் அருந்தியபடியே இன்றைய தமிழகத்தின் தவிர்க்க முடியாத சங்கதியான
மதுபானக்கடையை, லேசான போதையில் வேடிக்கை மட்டுமே பார்த்திருக்கிறார் இயக்குனர்.
“நாம தள்ளாடினாதான் கவர்மெண்டு ஸ்டெடியா இருக்கும். நாம ஸ்டெடி ஆயிட்டோமுன்னா
கவர்மெண்டு தள்ளாடிடும்” – நிஜத்தை பிரதிபலிக்கும் இந்த
ஒரு வசனம் போதாதா?
பரபரப்பான க்ளைமேக்ஸும் படத்தில் இல்லை. ஒரு நாளில் அதிகபட்சமாக என்ன
நடக்குமோ, அதுதான் படத்தில் ஒன்றரை மணி நேரமாக எடிட் செய்யப்பட்டிருக்கிறது. எதையுமே
மிகைப்படுத்த இயக்குனர் விரும்பவில்லை. அவர் நினைத்திருந்தால் ஒரு ஃபாரின் டூயட்
எடுத்திருக்க முடியும். குறைந்தபட்சம் ஆக்ரோஷமான, ரத்தம் தெறிக்கும் மூன்று
சண்டைக்காட்சிகளை அமைத்திருக்க முடியும். கண்கள் சிவக்க யாரையாவது பஞ்ச் டயலாக்
பேச வைத்திருக்க முடியும். டூப்ளிகேட் சரக்கு சாப்பிட்டு, அந்த பாரில்
குடித்தவர்கள் அனைவருமே இறந்துவிட்டார்கள் என்று கதறக் கதற இறுதிக் காட்சியில் சீரியஸ்
டிராமா ஆடியிருக்க முடியும். இது எதையுமே செய்யாமல் ‘போங்கடா போக்கத்தவனுங்களா’
என்றுகூறி, இந்தப் படத்தைப் பார்த்தாப் பாரு, பார்க்காட்டி போ என்று அதுப்பு
காட்டியிருக்கிறார். அடுத்து தனக்கு கதை சொல்லச் சொல்லி விஜய்யோ, அஜித்தோ,
சூர்யாவோ அழைக்க வேண்டும் என்கிற அக்கறை இயக்குனருக்கே இல்லாதபோது, நமக்கென்ன
வந்தது?
படத்தில் வரும் பெண் பாத்திரங்கள் மிகக்குறைவு. நாயகி மாதிரி தோன்றும் காதலி
சினிமாத்தனமின்றி தமிழகத்தின் இரண்டாம் கட்ட நகரமொன்றின் கல்லூரி யுவதியாக அச்சு
அசலாகத் தெரிகிறார். எடுப்பான மார்புகள், ஆழமான தொப்புள், ஆப்பிள்நிற மேனி, செர்ரி
சிகப்பு லிப்ஸ்டிக் இதெல்லாம் மிஸ்ஸிங். எனவேதான் லிப்-டூ-லிப் கிஸ்ஸிங்
இருந்தும், நமக்கு வழக்கமாக சினிமா பார்க்கும்போது ஏற்படும் காமவெறி ஏதும்
ஏற்படுவதில்லை. இன்னொரு பெண் பாரில் துப்புரவுப்பணி செய்யும் மூதாட்டி. இன்னும்
இரண்டு பெண்கள் வருகிறார்கள். அவர்கள் கணவரோடு வந்து லைட்டாக ஒரு ‘கட்டிங்’
விட்டுச் செல்லும் குடிமகள்கள். மதுபானக்கடை முழுக்க முழுக்க சேவல் பண்ணை.
மதுசபையிலும் சாதி பார்க்கும் குடிமகனிடம், சாக்கடை அள்ளும் தொழிலாளி பேசும்
வசனங்கள் சாட்டையடி. “சாராயம் எங்க குலசாமி. எங்க சாமியை தொலைக்க
வெச்சுட்டீங்களேய்யா. நீங்கள்லாம் சந்தோஷத்துக்கும், துக்கத்துக்கும்
குடிக்கறீங்க. நாங்க வேலை பார்க்கவும், அதோட வலிக்கும் குடிக்கிறோம்” – அவரது ஆதங்கத்தின்
நியாயத்தை ‘மார்பியஸ்’ அருந்தும் நம்மால் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் துல்லியமாக
புரிந்துகொள்ளவே முடியாது என்பதுதான் யதார்த்தம்.
ஒருவேளை சினிமாவாக மதுபானக்கடை தோல்வி அடையலாம். ஆனாலும் கலைப்படைப்பாக
மாபெரும் வெற்றியை எட்டியிருக்கிறது.
SUPER REVIEW YUVAAA......
பதிலளிநீக்குநல்லதொரு அலசல்...
பதிலளிநீக்குதொடர வாழ்த்துக்கள்...
நன்றி...
'மதுபானக்கடை' இயக்குநர் அதை என்னவோ ஈடுபாட்டோடுதான் எடுத்திருக்கிறார். நானே பல இடங்களில் சிரித்தேன்தான். ஆனால்...
பதிலளிநீக்கு'மதுபானக் கடை' படத்தில் எங்குமே வெளிவாங்கல் இல்லை. அதனால் தகவல் தொகுப்பின் இடைவிடாத மொடாக்குடியினால் மட்டையாகிறோம்.
இது போன்ற படங்கள் தற்போது ஒன்று இரண்டு வர ஆரம்பித்துள்ளாது தமிழ் சினிமாவின் வளர்ச்சிப்பாதை.... ஆனால் மக்கள் இது போன்ற படைப்புகளை இன்னும் பெருவாரியாக ஆதரிக்கத்துவங்கவில்லை... அதுவும் கொஞ்சம் கொஞ்சமாக நடக்க வேண்டும். உங்கள் விமர்சனம் நன்று.
பதிலளிநீக்குஇது போன்ற படைப்புகள் இப்போது தான் அத்தி பூத்தது போல் அவ்வப்போது வரத்துவங்கியுள்ளது..... இது மகிழ்ச்சிக்குரிய விஷயம்.... ஆனால் மக்கள் மத்தியில் இது போன்ற படைப்புகளுக்கு வறவேற்பு பெருகவில்லை என்பது வருத்தமாக உள்ளது...
பதிலளிநீக்குgood comment.... Need to watch that movie.
பதிலளிநீக்கு"ஒருவேளை சினிமாவாக மதுபானக்கடை தோல்வி அடையலாம் "
பதிலளிநீக்குபின்புலம் பெரிதும் இல்லாது
இந்த காலகட்டத்தில் இவ்ளோ திரை அரங்குகளில்
வெளியான தருணத்திலேயே படம்
வெற்றி அடைந்து விட்டதாகவே
கருதுகிறேன்
மிகுந்த நம்பிக்கையூட்டும் பதிவு . .
நல்ல விமரிசனம்....படம் பார்க்க ஆவலை தூண்டுகிறது.....
பதிலளிநீக்குyuva andha old photothan unga adayalam yen etuthinga... appuram valakkampola comment super.
பதிலளிநீக்குயுவா “மதுபானக்கடை” பாடல்களை கேட்டபோதே “இவிங்க ஏதோ வித்தியாசமா செய்யப்போறாங்க”ன்னு நெனச்சேன். நீங்களும் ”சர்ட்டிபிகேட்” தந்துட்டீங்க; படம் பார்த்துட வேண்டியதுதான்....
பதிலளிநீக்குநைஸ்... பார்த்திடுறேன்..
பதிலளிநீக்குbest review...of tis movie as iread......kudos sir.
பதிலளிநீக்குNice comments, Really very good movie. I have not seen this type of movie ever. its outstanding movie.
பதிலளிநீக்குThanks,
Sathya Anandan.
மிக வித்திசாசமானதொரு விமர்சனம், சத்தியமாக சொல்கிறேன், முதன் முதலாக ஒரு நல்ல விமர்சனம் படித்த உணர்வு. என்ன எழுதுவதென்று தெரியவில்லை, இந்த சினிமாவை இதுவரை பார்க்கவில்லை, இனிமேல் தவறவிட போவதுமில்ல. இந்த படம் எனது பார்வையில் நல்லாயிருக்குமா இல்லையா எனக்கு தெரியாது. ஆனால் உங்களது விமர்சனத்தின் கோணத்தில் இந்த படத்தை பார்க்கையில் , உண்மையில் இது ஒரு அற்புதமான கலைப்படைப்பே!
பதிலளிநீக்குஒரு மது பானக்கடையின் நிகழ்வுகளை சமூக உணர்வுடன் - இயல்பாக யதார்த்தமாக - நகைச்சுவையுடன் காட்டியிருக்கும் மிகச் சிறந்த தமிழ்த் திரைப்படம் "மது பானக் கடை". ஒரு சிறந்த - இயல்பான சிறு கதை போன்ற படம். இந்தப் படம் தமிழ் சினிமாவில் ஒரு புதிய மைல் கல். ஆண்களின் மதுப் பழக்கத்தால் பெரிதும் பாதிக்கப்படும் பெண்கள் இப்படத்தை பார்க்க வேண்டும் - பார்ப்பார்கள் என்றே நினைக்கிறேன். ஆண் - பெண் இரு பாலாரும் பார்க்கும் வகையில் இந்தப் படத்தை இயக்குனர் கமலக் கண்ணன் சிறப்பாகவே இயக்கியுள்ளார்.
பதிலளிநீக்கு