தண்ணீராகச் செலவிட்டு விட்டு, வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள்
செலவு எவ்வளவு?
லண்டனில்
நடைபெறவிருக்கும் ஒலிம்பிக்குக்கு தோராயமாக எவ்வளவு செலவாகும் என்று
நினைக்கிறீர்கள்..ஆயிரம் கோடி?
ஐயாயிரம் கோடி? ஸாரி, நீங்கள்
ரொம்ப கஞ்சூஸ்.
ஏனெனில் செலவாகும்
தொகை அப்படி.அமெரிக்க
டாலரில் 14.5 பில்லியன்
அளவிற்குச் செலவாகும் என்கிறது எகானாமிஸ்ட் பத்திரிகை.
அதாவது இந்திய ரூபாயில் 800,00,00,00,000. பூஜ்ஜியங்களை எண்ணி, ரொம்பச் சிரமப்படாதீர்கள். ஜஸ்ட் எண்பதாயிரம் கோடி
ரூபாய் மட்டும்தான்.
இன்னும் சிலர் 19 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகியிருக்கிறது என்றும் சொல்கிறார்கள்.
அவை மேலும் சில ஆயிரம் கோடிகள்.
என்ன லாபம்?
பல
கோடி ரூபாய் பணத்தைப் போட்டு ஒலிம்பிக் நடத்துவதால் இங்கிலாந்திற்கு
என்ன லாபம்? ஐரோப்பியப்
பொருளாதார வீழ்ச்சியில் வீழ்ந்துக் கொண்டிருக்கும் தம் நாடு, இதனால் மீண்டும்
கம்பீரமாக தலைநிமிர வாய்ப்பிருக்கிறது என்று இங்கிலாந்து கருதுகிறது. லண்டன்
ஒலிம்பிக் போட்டிகளின் டிக்கெட் விற்பனை, தொலைக்காட்சி ஒளிப்பரப்பு உரிமை, கார்ப்பரேட்
நிறுவனங்களின் ஆதரவு (ஸ்பான்சர்ஷிப்) போன்றவை மூலம் நேரடியாக பல்லாயிரக்கணக்கான
கோடி ரூபாய் புழங்கும்.
மறைமுகமான
பல லாபங்களும் உண்டு. உதாரணத்துக்கு கிழக்கு லண்டனின் ஸ்ட்ராபோர்ட் பகுதி அவ்வளவாக
வளர்ச்சியடையாத பகுதி. ஒலிம்பிக் போட்டிகளை சாக்காக வைத்து, இப்பகுதியை நவீனமாக கட்டமைத்திருக்கிறது
லண்டன். இப்பகுதியில் அடுத்த முப்பதாண்டுகளில் ஏற்படும் என எதிர்ப்பார்க்கப்பட்ட வளர்ச்சிப் பணிகளை கடந்த ஏழே ஆண்டுகளில் சாத்தியமாக்கியிருக்கிறார்கள். இப்போது நேரடியாக கோடிகள்
அனாயசமாக புழங்குவது கட்டுமானத்துறையில்தான்.
மைதானங்கள் கட்டுவது, சாலை ரயில் போக்குவரத்தை மேம்படுத்துவது என்று ஜரூராக வேலை நடந்து
முடிந்திருக்கிறது. ஒலிம்பிக்குக்கு உருவாக்கிய கட்டமைப்பு நகருக்கு
எதிர்காலத்தில் ஏராளமான அனுகூலங்களை ஏற்படுத்தித் தரும் என்கிற நம்பிக்கை
ஏற்பட்டிருக்கிறது.
தற்போது
வேலையில்லாத் திண்டாட்டம் பெரும் பிரச்சினையாக இங்கிலாந்தில் உருவெடுத்திருக்கும்
நிலையில் ஒலிம்பிக் போட்டிகள் பல்லாயிரம் பேருக்கு வேலை கொடுத்திருக்கிறது.
கட்டுமானத்துறை மட்டுமன்றி போக்குவரத்து, சுற்றுலாத் துறைகளிலும் வேலைவாய்ப்பு
பெருகியிருக்கிறது. 2009 பொருளாதார மந்தத்துக்குப் பிறகு, இப்போதுதான் இங்கிலாந்து
சுறுசுறுப்பு பெறுகிறது என்று சொன்னால் அது மிகையான கூற்று அல்ல.
லண்டன்
ஒலிம்பிக் கமிட்டியின் தலைவராக இருப்பவர் செபஸ்டியன் கோ. ஒலிம்பிக்கில் இவர்
இரண்டு முறை 1500 மீட்டர் ஓட்டத்தில் தங்கப்பதக்கம் வென்றவர். “உத்தேசமாக நாங்கள்
ஒரு லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கியிருக்கிறோம். இவர்களில் பன்னிரெண்டு
சதவிகிதம் பேர் வரை முன்பு வேலையில்லாமல் வாடிக் கொண்டிருந்தவர்கள்” என்கிறார்
செபஸ்டியன்.
இம்மாதிரி
லாபங்களை பட்டியலிட்டுப் பேசுவது என்பது நாணயத்தின் ஒரு பக்கத்தை மட்டுமே திரும்பத்
திரும்ப பார்த்துக் கொண்டிருப்பது மாதிரி. ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் எட்டு
ஆண்டுகளுக்கு முன்பே கிட்டத்தட்ட இதே அளவு தொகை செலவிடப்பட்டது. ஒலிம்பிக்கின்
தாயகம் என்பதால் கவுரவத்துக்காகவாவது மிகப்பிரம்மாண்டமான
ஏற்பாடுகளை செய்தது க்ரீஸ் அரசு. துரதிருஷ்டவசமாக ஒலிம்பிக் நடத்தியதாலேயே,
இப்போது அந்த அரசாங்கத்தின் பொருளாதாரம் வயிற்றுக்கும், வாய்க்கும் போதாமல்
தடுமாறிக் கொண்டிருக்கிறது. ஒலிம்பிக்கால் ஏற்பட்ட பலத்த நஷ்டத்தை தாங்கமுடியாமல்
பரிதாபகரமான நிலையில் தள்ளப்பட்டிருக்கிறது க்ரீஸ். 1976ஆம் ஆண்டு கனடாவின்
மாண்ட்ரீல் நகரில் நடத்தப்பட்ட ஒலிம்பிக்தான் பொருளாதாரரீதியாக படுதோல்வி அடைந்த
ஒலிம்பிக். அப்போது செலவிடப்பட்ட தொகைக்கு, முப்பத்தி ஐந்து ஆண்டுகள் கழிந்த
நிலையில் இப்போதும் வட்டி கட்டி மாளவில்லயாம் மாண்ட்ரீலுக்கு. இம்மாதிரி லண்டனின்
வயிற்றில் புளியைக் கரைக்கக்கூடிய வரலாறும் ஒலிம்பிக்குக்கு உண்டு.
போட்டிகளை
நடத்துவதற்கு பெரும் பணம் செலவிடப்பட வேண்டும். ஒலிம்பிக் என்பதால் தரத்தில் எந்த
சமரசமும் செய்துக்கொள்ள முடியாது. போட்டி நடக்கும் இடங்களை கட்டுவதிலும்,
அதைச்சுற்றிய போக்குவரத்துக் கட்டமைப்புகளுக்கும் முதல்தர ஏற்பாடு
செய்யப்பட்டிருக்கிறது. இவ்வளவு செலவு செய்து போட்டிகளை நடத்தும் நகரத்துக்கு
இதனால் நஷ்டம் ஏற்பட்டால் அதைப்பற்றி சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கவலைப்பட்டதாக
சரித்திரமே இல்லை. இங்கிலாந்து அரசாங்கம் யாரும் ஏற்பாடுகளில் குறை
சொல்லிவிடக்கூடாது என்பதற்காக சுகாதரம், கல்வி மாதிரியான முக்கியமான துறை
முதலீடுகளை ஒலிம்பிக்குக்கு திருப்பிவிட்டதாக ஏற்கனவே பிரிட்டன்வாசிகள்
குறைபட்டுக் கொண்டிருக்கிறார்கள். பணமாக செலவிடப்பட்ட கோடிகளை விடுங்கள். அரசுப்
பணியாளர்கள், பாதுகாப்புப் பணியாளர்கள் ஆகியோரின் பொன்னான நேரம் இதற்காக செலவிடப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளாக போக்குவரத்து, தங்கும் வசதி என்று சர்வதேச ஒலிம்பிக்
கமிட்டிக்கு செலவு செய்து மாளவில்லை லண்டனுக்கு. சர்வதேச ஊடகவியலாளர்கள் மனம்
கோணாமல் ‘எல்லா’ வசதிகளையும் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். மொத்தத்தில் தண்ணியாக செலவிட்டு விட்டு, வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
எனினும்
கடந்தகால ஒலிம்பிக் செயல்பாடுகளை எடைபோடும்போது லண்டன் ஒலிம்பிக்
பொருளாதாரரீதியாகவும் பெரும் வெற்றி பெறும் என்றே பொருளாதார நிபுணர்கள்
கருதுகிறார்கள். 84 லாஸ் ஏஞ்சல்ஸ், 88 சியோல் ஒலிம்பிக் போட்டிகளில் கிடைத்த
அபரிதமான லாபம் மாதிரி ஒரு மேஜிக்கை 2012ல் லண்டனும் நிகழ்த்தும் என்கிறார்கள்.
லாப,
நஷ்டக் கணக்கெல்லாம் ஆகஸ்ட் 12க்குப் பிறகு பார்த்துக் கொள்ளலாம். இப்போது
போட்டிகள் தொடங்கப்போகிறது. அந்த கோலாகலத்துக்கு முதலில் தயாராவோம்.
கொஞ்சம் மலரும் நினைவுகள்...
ஒலிம்பிக்
கொடி
நவீன
ஒலிம்பிக்கை உருவாக்கியவரான கூபர்டின் 1914ல் ஒலிம்பிக் போட்டிகளுக்கென்று
பிரத்யேகக் கொடியை உருவாக்கினார். வெள்ளை பின்னணியில் நீலம், மஞ்சள், கருப்பு, பச்சை,
சிகப்பு நிறங்களில் ஒன்றோடு ஒன்றாக ஒட்டிய ஐந்து வட்டங்கள். இந்த ஐந்து
வட்டங்களும் ஐந்து கண்டங்களை குறிப்பிடுகின்றன. 1920ல் நடந்த ஒலிம்பிக்
போட்டிகளின் போதுதான் முதன்முறையாக இந்த கொடி ஏற்றப்பட்டது.
தொடக்க
விழா
ஒலிம்பிக்
போட்டிகளில் விளையாட்டுப் போட்டிகளின் சுவாரஸ்யத்தை தவிர்த்து அனைவரும் எதிர்ப்பார்ப்பது
வண்ணமயமான கோலாகலமான தொடக்கவிழாவைதான். 1908ல் இதே லண்டனில் நடந்த ஒலிம்பிக்
போட்டியின் போதுதான் இந்த சம்பிரதாயம் உருவாக்கப்பட்டது.
முதல்
சாம்பியன்
நிறுத்தப்பட்ட
ஒலிம்பிக்
நவீன
ஒலிம்பிக் 1896ல் இருந்து தொடர்ச்சியாக நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை
நடத்தப்பட்டாலும் முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர் காரணமாக மூன்று முறை
நடத்தப்படவில்லை. 1916, 1940, 1944 ஆகிய ஆண்டுகளில் ஒலிம்பிக் போட்டிகள்
நடக்கவில்லை.
ஒலிம்பிக்
டென்னிஸ்
1924க்குப்
பிறகு ஏனோ தெரியவில்லை, ஒலிம்பிக்கில் டென்னிஸ் சேர்க்கப்படவேயில்லை. பிற்பாடு
1988 ஒலிம்பிக்கில் இருந்துதான் மீண்டும் டென்னிஸ் போட்டிகள் சேர்த்துக்கொள்ளப்பட்டது.
ஜிம்னாஸ்டிக்ஸ்
ஜிம்னாஸ்டிக்ஸ்
என்கிற சொல் கிரேக்க மொழியின் ‘ஜிம்னோஸ்’ என்கிற வார்த்தையில் இருந்து பிறந்தது.
இச்சொல்லுக்கு ‘நிர்வாணம்’ என்று பொருள். ஜிம்னாஸ்ஸியம் என்பது உடைகளற்று
விளையாடும் விளையாட்டு. புராதன ஒலிம்பிக்கில் இவ்வாறான முறையில்தான் போட்டிகள்
நடந்திருக்கிறது.
சாதனை
லண்டன்
லண்டனில்
ஒலிம்பிக் நடைபெறுவது மூன்றாவது தடவை. ஏற்கனவே 1908, 1948 ஆகிய ஆண்டுகளில் இங்கே
ஒலிம்பிக் போட்டிகள் நடந்திருக்கிறது. மூன்றாவது முறையாக ஒரே நகரில் ஒலிம்பிக்
போட்டிகள் நடத்தப்படுவது இதுதான் முதன்முறை என்கிற சாதனை லண்டனுக்கு சொந்தமாகிறது.
சாம்பியன்
பிளேட்டோ
புராதன
ஒலிம்பிக்கில் தத்துவமேதை பிளேட்டோ ‘பான்க்ரேஷன்’ (Pankration)
என்கிற விளையாட்டில் இரட்டை
சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறார்.
நோபல் வீரர்
நோபல்
பரிசுபெற்ற ஒரே ஒலிம்பிக் வீரர் பிரிட்டனின் பிலிப் நோயல் பேக்கர். இவர் 1920ல்
நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் 1500 மீட்டர் தடகளப் போட்டியில் வெள்ளிப் பதக்கம்
வென்றவர். இவர் அமைதிக்கான நோபல் பரிசினை 1959ஆம் ஆண்டுக்காக பெற்றார்.
ராணி குடும்பத்து குதிரை வீராங்கனைகள்
ஒலிம்பிக்
போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களும், வீராங்கனைகளும் ஆணா, பெண்ணா என்பதற்குரிய
பாலியல் சோதனை நடத்தப்படுவது வழக்கம். 1976 ஒலிம்பிக்கில் ஒரு வேடிக்கையான விஷயம்
நடந்தது. பிரிட்டனின் குதிரையோட்டக் குழுவில் இளவரசி ஆனி இடம்பெற்றிருந்தார்.
மகாராணி எலிசபெத்-2 அவர்களின் மகள் என்பதால் இவருக்கு அச்சோதனை நடத்துவது
அர்த்தமற்றது(!) என்கிற முடிவுக்கு வந்த ஒலிம்பிக் கமிட்டி, ஆனியிடம் சோதனை நடத்தி
சான்றிதழைப் பெற திராணியில்லாமல் நழுவிக் கொண்டது. நவீன ஒலிம்பிக் வரலாற்றில்
பாலினச்சோதனை நடத்தப்படாத ஒரே வீராங்கனை இவர் மட்டும்தான். தனிநபர் மற்றும் குழுப்போட்டி இரண்டிலுமே ஆனி படுதோல்வி அடைந்தார். இளவரசி ஆனியின் மகள் சாரா
பிலிப்ஸும் குதிரையோட்ட வீராங்கனையே. இவர் 2004 மற்றும் 2008
ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் இருமுறையும் இவரது
குதிரைக்கு காயமேற்பட்டு, எந்தவொரு போட்டியிலும் ‘திறமை’ காட்டவில்லை.
சோக
ஒலிம்பிக்
1972.
ஜெர்மனியின் முனிச் நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டிகள் மறக்கவியலாத சோகத்துக்கு சான்றாகிவிட்டது.
இஸ்ரேலிய ஒலிம்பிக் வீரர்களின் மீது பாலஸ்தீனிய தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில்
வீரர்களோடு, சில பயிற்சியாளர்களும், போட்டி நடுவர்களாக பங்கேற்க வந்தவர்களுமாக
சேர்த்து பதினோரு பேர் பலியானார்கள்.
ஒலிம்பிக்கில்
தாத்தா, பாட்டி
1972 ஒலிம்பிக்கில் பிரிட்டிஷ் வீராங்கனை லோர்னா ஜான்ஸ்டோன் குதிரையோட்டப் பிரிவில் பங்கேற்றபோது அவருக்கு வயது 71. ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற அதிக வயதான வீராங்கனை என்கிற சாதனை இன்றுவரை அவரிடம்தான் இருக்கிறது.
குட்டி
சாம்பியன்
1936ஆம்
ஆண்டு நடந்த ஒலிம்பிக்கில் 200 மீட்டர் நீச்சல் போட்டியில் டென்மார்க்கைச் சேர்ந்த
இன்கே சோரென்ஸென் வெண்கலம் வென்றார். அப்போது அவருக்கு வயது பதிமூன்று. இன்றுவரை தனிநபர் பிரிவில் இவ்வளவு குறைவான
வயதில் யாரும் ஒலிம்பிக் பதக்கம் பெற்றதில்லை.
தங்கநாடு
1896ல்
இருந்து நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் இன்றுவரை ஒவ்வொரு ஒலிம்பிக்குக்கும்
குறைந்தது ஒரு தங்கப்பதக்கமாவது வென்ற நாடு என்கிற பெருமையை இங்கிலாந்து
பெறுகிறது.
இரண்டு
முறை தங்கம், இரண்டு நாடுகளுக்கு
ஆஸ்திரேலிய
ரக்பி வீரர் டேனியல் கேரோல் 1908 ஒலிம்பிக்கில் தன் தாய்நாட்டுக்கு தங்கம் வென்று
பெருமை சேர்த்தார். 1920லும் அவர் ரக்பியில் தங்கம் வென்றார். ஆனால் இம்முறை
அமெரிக்காவின் சார்பில் பங்கேற்றார்.
ஜார்ஜியாவைச்
சேர்ந்த பலு தூக்கும் வீரர் அகாகைட் காக்கியாஸ்விலி, ஒருங்கிணைந்த ரஷ்ய அணியின்
சார்பில் பங்கேற்று பார்சிலோனாவில் நடந்த 1992 ஒலிம்பிக்கில் தங்கம் வென்றார். மீண்டும் அட்லாண்டாவில் 1996ல் நடந்தப்
போட்டியிலும், சிட்னியில் 2000ஆம் ஆண்டு நடந்த போட்டியிலும் அடுத்தடுத்து தங்கம்
வென்றார். 1996லும், 2000லும் கிரேக்க குடியுரிமை பெற்று க்ரீஸ் நாட்டின் சார்பில்
பங்கேற்றார்.
ஒலிம்பிக்
டிவி
1936ல்
ஜெர்மனியில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளை ஹிட்லர் பிரமாதப்படுத்தினார். ஒலிம்பிக்
வரலாற்றிலேயே முதன்முதலாக போட்டிகள் டிவி கேமிராவில் பதிவு செய்யப்பட்டு, பெர்லின்
நகர் முழுக்க பிரும்மாண்டமான திரைகளில் ஒளிபரப்பப்பட்டது. வீடுகளில் இருந்த டிவி
பெட்டிகளில் ஒலிம்பிக் விளையாட்டு 1948 லண்டன் போட்டிகளின் போதுதான்
ஒளிபரப்பப்பட்டது. இதை இங்கிலாந்துவாசிகள் மட்டுமே ரசிக்க முடிந்தது. 1960 ரோம்
ஒலிம்பிக் போட்டிகளின் போதுதான் உலகமெங்கும் இருக்கும் ரசிகர்கள் டிவி வாயிலாக
விளையாட்டுப் போட்டிகளை தரிசிக்க முடிந்தது.
இரு
நாடுகளில் ஒலிம்பிக்
ஒலிம்பிக்
வரலாற்றிலேயே ஒரே ஒருமுறைதான் போட்டி நடந்த இடங்கள் இரு நாடுகளில் அமைந்திருந்தது.
1920ல் நடந்த போட்டிகளின் போது படகுப் போட்டிகள் பெல்ஜியம் மற்றும் நெதர்லாண்டு
ஆகிய இரண்டு கடற்பகுதிகளில் நடத்தப்பட்டது.
குட்டிப்பையன்
1896ல்
நடந்த முதல் நவீன ஒலிம்பிக் போட்டிகளின் போது கிரேக்க ஜிம்னாஸ்டிக் வீரர்
டிமிட்ரியோஸ் லவுண்ட்ராஸ் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தார். அப்போது அவருக்கு
வயது பத்து மட்டுமே. இன்றுவரை ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற மிகக்குறைந்த
வயதுடைய வீரர் என்கிற சாதனையை அவர் தக்கவைத்திருக்கிறார்.
(நன்றி : புதிய தலைமுறை)
(நன்றி : புதிய தலைமுறை)
1936ஆம் ஆண்டு நடந்த ஒலிம்பிக்கில் 200 மீட்டர் நீச்சல் போட்டியில் டென்மார்க்கைச் சேர்ந்த இன்கே சோரென்ஸென் வெண்கலம் வென்றார். இன்றுவரை தனிநபர் பிரிவில் இவ்வளவு குறைவான வயதில் யாரும் ஒலிம்பிக் பதக்கம் பெற்றதில்லை.
பதிலளிநீக்கு//
in what age?
//இப்பகுதியில் அடுத்த முப்பதாண்டுகளில் ஏற்படும் என எதிர்ப்பார்க்கப்பட்ட கடந்த ஏழே ஆண்டுகளில் சாத்தியமாக்கியிருக்கிறார்கள்.//
பதிலளிநீக்குSomething Went missing in between எதிர்ப்பார்க்கப்பட்ட and கடந்த ஏழே.
அப்துல்லா, விஸ்வா! சுட்டிக் காட்டியதற்கு நன்றி. சரி செய்துவிட்டேன்.
பதிலளிநீக்குsir u noticing tat end of every post puthiya thalaimurai....r u working in the puthiya thalamurai magazine....
பதிலளிநீக்குஆமாம் பாலா. பத்திரிகையில் வெளிவந்ததை பதிவில் பிரசுரிக்கும்போது ‘கிரெடிட்’ கொடுத்தாக வேண்டும்.
பதிலளிநீக்கு//அதாவது இந்திய ரூபாயில் 800,00,00,00,000. பூஜ்ஜியங்களை எண்ணி, ரொம்பச் சிரமப்படாதீர்கள். ஜஸ்ட் எண்பதாயிரம் கோடி ரூபாய் மட்டும்தான்.//
பதிலளிநீக்குஅப்போ இரண்டு ஒலிம்பிக்ஸ் நடத்த
ஒரு லட்சத்து அறுபதாயிரம் கோடி ரூபாய் செலவாகுமா? அடேயப்பா!!
முழுமையான தகவலுக்கு நன்றி....
பதிலளிநீக்குஅருமையான பதிவு லக்கி.
பதிலளிநீக்குதெரியாத தகவல்களை பகிர்ந்த்துகொண்டதற்கு நன்றி.
//அப்போ இரண்டு ஒலிம்பிக்ஸ் நடத்த
பதிலளிநீக்குஒரு லட்சத்து அறுபதாயிரம் கோடி ரூபாய் செலவாகுமா? அடேயப்பா!!//
நல்லா சிந்திக்ராங்க
நாற்ப்பத்தைந்தாண்டு முன் இதே லண்டனில் நடந்த போட்டிக்கு செலவிடப்பட்ட தொகை 'வெறும்' இருநூறு கோடி ரூபாய் என்று கேள்விப்பட்டேன் உண்மையா ?.
பதிலளிநீக்குநல்ல பதிவு. நன்றிங்க!!
பதிலளிநீக்குசூடோடு சூடாக உங்கள் இந்தியாவின் பெருமைகளையும் பட்டியலிட்டு இருந்தால் இன்னும் சுவையாக இருந்திருக்கும். ஒலிம்பிக்கில் இது வரை 11 பதக்கங்கள் மட்டுமே பெற்று "சாதித்து" இருக்கிறது இந்தியா. அதிலும் பெரும்பான்மை ஆண்கள் ஹாக்கி. ஒரு பதக்கம் தனிக்காட்டு ராஜா "அபினவ் பிந்திரா" பெற்றது.
பதிலளிநீக்குதகவல்கள் அனைத்தும் அருமை..
பதிலளிநீக்குவிளையாட்டாக செய்தி தராமல் விளையாட்டை விவரமாக விறுவிறுப்பாக கட்டுரையை தந்தமைக்கு நன்றி
பதிலளிநீக்கு