5 ஜூலை, 2012

பிழியப் பிழிய காதல்!


ஒரு கோடைக்காலத்தில், அவன் அவளை சந்திக்கிறான். மஞ்சள் வண்ண மழை ஆடையில் தேவதையைப் போல வசீகரிக்கிறாள். அடுக்கடுக்காக அழகான பொய்களை சொல்கிறாள். இருவரும் பள்ளி மாணவர்கள். அவனுக்கு அடுத்த இருக்கையில் அவள். அடுக்கடுக்காக அழகான பொய்களை சொல்வது அவளது வழக்கம்.

“நான் வேற்றுக் கிரகத்தைச் சார்ந்தவள். என்னைத் தொடுபவர்கள் எல்லாம் மறைந்து விடுவார்கள் என்பது நான் பிறந்தபோதே பிறப்பிக்கப்பட்ட சாபம். என்னை முதலில் தொட்ட என் தாய் இறந்துவிட்டாள். சில காலத்துக்குப் பிறகு என் தந்தையும் மறைந்தார்!”

மற்ற குழந்தைகள் அவளைத் தொட அஞ்சுகிறார்கள். அவனுக்கு மட்டும் அவளைத் தொட்டுப் பேச ஆசை. மழை பொழிந்த ஒரு மாலையில், மழைக்கு ஒதுங்கிய இடத்தில் முதன்முறையாக அவளை அணைத்தமாதிரியாக உட்காருகிறான். மறுநாள் அவனுக்கு பயங்கரக் காய்ச்சல். அதன்பிறகு அவளை எங்குமே காணவில்லை. மாயமாக மறைந்து விடுகிறாள்.

கால ஓட்டத்தில் ஆண்டுகள் காணாமல் போக, அவள் மீண்டும் அவனை தொடர்பு கொள்கிறாள். இம்முறை அவன் கட்டிளங்காளை. அவளோ காண்பவர் காதலிக்கும் கன்னியாக்குமரி. அவனும் மாறவில்லை, அவளும் மாறவில்லை. அவளது பொய்களும் மாறவேயில்லை. வேற்றுக்கிரவாசிகள் குறித்து இம்முறை அதிகம் பேசுகிறாள். தான் பூமியைச் சார்ந்தவள் அல்ல என்று அடித்துப் பேசுகிறாள். அவனுக்கு நம்புவதைத் தவிர வேறு வழியில்லை. காதலில் விழுந்தவன் பகுத்தறிவையெல்லாம் சேடு கடையில் அடமானம் வைக்கவேண்டியதுதான்.

அவள் தவிர்க்க தவிர்க்க, இவன் தவிக்கிறான். அவள் மீதான தன் காதலை ஒவ்வொரு நொடியிலும் வெளிப்படுத்துகிறான். காதல் தேவன் ஆசிர்வதித்த ஒரு காலைப்பொழுதில் அவள் உணர்ச்சிமேலிட அவன் உதட்டோடு, தன் உதட்டைப் பதிக்கிறாள். மறுநாளே அவன் மீண்டும் காய்ச்சலில் விழ, மீண்டும் அவள், அவன் வாழ்க்கையில் இருந்து காற்றைப் போல காணாமல் போகிறாள்.

எட்டு ஆண்டுகள் கழிந்தநிலையில் அவனே எதிர்பாராத நொடியில் அவள் மீண்டும் அவனை காண்கிறாள். இம்முறை, அவளுடனான அவனது தூரத்தை இராணுவக் கட்டுப்பாட்டோடு வலியுறுத்துகிறாள். முந்தைய முறைகள் போலல்லாது, அவனிடம் சொல்லிவிட்டே விலகுகிறாள்.

இவன் நெருங்க, நெருங்க அவள் ஏன் விலகிக்கொண்டே செல்கிறாள் என்பதற்கு ஒரு தமிழ்சினிமாத்தன ட்விஸ்ட் வைக்கப்பட்டிருக்கிறது. இறுதியில் இணைகிறார்களா என்பது காதல் கோட்டை பாணியிலான பரபரப்புக் காட்சிகளின் ஊடாக சொல்லப்படுகிறது. காதல் விஷயத்தில் தமிழன், கொரியன் வேறுபாடின்றி உலகில் அனைவருமே முட்டாப்பயல்கள் என்று தெள்ளத்தெளிவாக எடுத்துரைக்கும் காட்சிகள் அவை. ஷங்கர் படப்பாணியில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஐந்து நிமிட பிளாஷ்பேக் ஒன்றும் கச்சிதம். கமர்சியல் கலவை கலக்கலாக காக்டெயிலப்பட்ட காவியம்.

’பிட்டு’களுக்கு ஏராளமான வாய்ப்புகள். கொரியப்படமாக இருந்தும் ஒரு ‘க்ளிவேஜ்’ கூட காட்டாமல் படத்தை இயக்கியிருப்பதில் இயக்குனரின் சாமர்த்தியம் பளிச்சிடுகிறது. நம்மூர் நாளைய ஷங்கர்கள் உருவ வாகாக ஏகப்பட்ட சீன்கள், குறிப்பாக வசனங்கள்.

படத்தில் ஜோடியாக நடித்தவர்கள் உண்மையிலேயே ஜோடி என்பதால், நம்மூர் சூர்யா-ஜோதிகா, ’காக்க காக்க’ படத்தில் வெளிப்படுத்திய நெருக்கமான காதல் கெமிஸ்ட்ரியை இப்படத்திலும் காணமுடிகிறது. இறுதிக்காட்சியில் காதலை வெறுப்பவர்களையும் கண்ணீர்விடச் செய்யும் வசனங்கள். காதல் எல்லா ஊரிலும் ஒரே மாதிரியாகத் தானிருக்கிறது.

பனிபொழியும் நடு இரவில், அவளை அவன் அணைத்தவாறே பேசுகிறான்.

“குளிராக இருக்கிறதா?”

“நீ அணைத்துக் கொண்டிருப்பதால் இதமான சூட்டை உணர்கிறேன். உனக்கு?”

“உன்னை அணைத்துக் கொண்டிருப்பதால் கனன்று கொண்டிருக்கும் அடுப்பின் அருகில் அமர்ந்திருப்பதாய் உணர்கிறேன்”

காதல், சூடான வெப்பமாய் இருவருக்குள்ளும் பரவுகிறது. இச்சூழலிலேயே பரபரப்பான இறுதிக்காட்சியும் தொடங்குகிறது. அவளைத் தொட்ட போதெல்லாம் அவனுக்குப் பிரச்சினை. இம்முறை?


படம் : லவ் ஃபோபியா
மொழி : கொரியன்
இயக்குனர் : Kang Ji-Eun
படம் வெளியான ஆண்டு : 2006

5 கருத்துகள்:

  1. ரொம்ப நாளா நான் எழுதணும் நினைச்சுகிட்டு இருந்தேன்.. ஆனா நீங்க முந்திகிட்டீங்க...

    தமிழ் எம்.ஏ. படத்துல லவ் ச்சீக்வென்சும் இதும் ரெண்டு மூணு இடத்துல ஒத்துப் போகும்... :-))

    பதிலளிநீக்கு
  2. படத்தைப் பார்த்துடுவோம்.. (சுடுறதுக்கில்ல... அதுதான் சில பல காட்சிகள் வந்திருக்கும்னு சொல்றாங்களே!) காதலை ரசிக்க!

    பதிலளிநீக்கு
  3. நல்ல விமர்சனம். உங்க விமர்சனத்திர்க்காகவே படம் பார்க்க போறேன்...

    பதிலளிநீக்கு
  4. பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிங்க..

    பதிலளிநீக்கு
  5. பதிவை படிச்சு முடிச்சதுக்கப்புறம் உச்சிக்கு சென்று அந்த பெண்ணை தொட்டு பார்க்கணும் போல இருக்கு (கணனி திரையில்)

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    மழை காலச் சளித் தொல்லைக்கு வீட்டில் ஒரு சிக்கன மந்திரம் Nuisance cold solution

    பதிலளிநீக்கு