நடிகர், கதையாசிரியர், இயக்குனர், தயாரிப்பாளர் என்று சீனிவாசனுக்கு பல முகங்கள்
உண்டு. சென்னை பிலிம் இன்ஸ்டிட்யூட்டில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜூனியர்.
மலையாள சினிமாவுலகில் நையாண்டிக்கும், கருப்பு நகைச்சுவைக்கும் பெயர்போனவர்.
மோகன்லாலின் எக்கச்சக்க சூப்பர்ஹிட் படங்களின் பின்னணியில் இருந்தவர்.
மல்லுவுட்டில் இவ்வளவு செல்வாக்கோடு
இருப்பவர் நியாயமாக என்ன செய்திருக்க வேண்டும்? தன்னுடைய ஒரே மகனை ’லிட்டில்
சூப்பர் ஸ்டார்’ ஆகவோ, ‘இளைய தளபதி’யாகவோ உருமாற்றி, மசாலா படங்களில் பஞ்ச் டயலாக்
அடிக்கவைத்து கேரளாவுக்கு முதல்வர் ஆக்கியிருக்க வேண்டுமா இல்லையா?
இல்லை. சீனிவாசனின் மகன் வினீத் இயக்குனர்
ஆகியிருக்கிறார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்த வினீத், தற்கால
தென்னிந்திய ஹீரோக்களை போலவே பொலிவான தோற்றம் கொண்டவர். 2008ல் வெளிவந்த
‘சைக்கிள்’ படத்தில் இரண்டு ஹீரோக்களில் ஒருவராக நடித்தார். 2009ல் ‘மகன்டே
அச்சன்’னில் திரையிலும் தன்னுடைய அப்பா சீனிவாசனுக்கு மகனாகவே நடித்தார். இரண்டு
படங்களுமே சூப்பர்ஹிட் என்றாலும், “திஸ் ஈஸ் நாட் மை கப் ஆஃப் காஃபி” என்று
முடிவெடுத்தார் வினீத். அருமையான பாடகரான வினீத்துக்கு இசையிலும்,
இயக்கத்திலும்தான் ஆர்வம். தானே பாடல் எழுதி, பாடி ஆல்பங்களை இயக்கினார். அடுத்து
திரைப்பட வாய்ப்புக்காக அலைந்துக் கொண்டிருந்தார்.
சீனிவாசனுக்கும், உச்சநடிகர் ஒருவருக்கும்
அப்போது உரசல் ஏற்பட்டிருந்தது. “உன் மகன் எப்படி இங்கே காலூன்றுகிறான் என்று
பார்த்துவிடுகிறேன்” என்று உச்சநடிகர் உருமினாராம். தன்னுடைய தனிப்பட்ட
விரோதத்தால் மகனுடைய வாழ்க்கை பாதிக்கப்படுமோவென்று சீனிவாசன் கவலைப்பட, அவருடைய
கவலையைப் போக்க முன்வந்தார் இன்னொரு உச்சநடிகரான திலீப். நம்மூர் அஜித்தைப் போலவே கேரளாவில்
தன்னம்பிக்கைக்கு பெயர்போன திலீப்புக்கு இளையவர்களை மேலே தூக்கிவிடுவதில் ஆர்வம்
அதிகம். சொந்தமாக படமெடுத்து வினீத்தை இயக்குனராக களமிறக்கினார் திலீப். ‘மலர்வாடி
ஆர்ட்ஸ் க்ளப்’. முற்றிலும் புதுமுகங்களை வைத்து, சுமார் இரண்டு கோடி ரூபாய்
பட்ஜெட்டில் தயாரான இப்படம் ஆறு கோடி ரூபாய்க்கும் மேலாக வசூலித்து அசத்தியது.
கேரளர்கள் மீதான கம்யூனிஸ தாக்கம், அவர்களது இயல்பு வாழ்க்கையில் எவ்வாறாக பிரதிபலிக்கிறது
என்பதை படம் பிடித்துக் காட்ட வினீத்துக்கு ஆர்வம்.
முதல் படம் வெற்றியடைந்து விட்டதால் அடுத்த
படத்துக்கான கருவை தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருந்தார் வினீத். எம்.ஜே.அக்பரின்
சிறுகதை ஒன்றினை வாசித்துக் கொண்டிருந்தபோது சட்டென்று மூளைக்குள் பல்பு எரிந்தது.
தன்னுடைய இரண்டாவது படத்தின் நாயகன் வினோத்தையும், நாயகி ஆயிஷாவையும் அந்த
சிறுகதையில் கண்டுகொண்டார். காதல்தான் கரு என்பதில் உறுதியானார்.
செக்கஸ்லோவியாவுக்கு பயணமாக சென்றிருந்தபோது ஏற்பட்ட உணர்வெழுச்சியில் மடமடவென்று
காட்சிகளை எழுதத் தொடங்கினார். ‘தட்டத்தின் மறயத்து’ திரைப்படம் வினீத்தின்
மனதுக்குள் வளரத் தொடங்கியது. அவர் எழுதிய முதல் காட்சியே நாயகன், நாயகியிடம்
காதலைத் தெரிவிக்கும் காட்சிதான். “அக்காட்சியை எழுதும்போது வினோத்தின் மனநிலையிலேயே
நானும் இருந்தேன். அவனுடைய படபடப்பான மூச்சுக்காற்றை உணர்ந்தேன். கூடவே ஆயிஷாவின்
மிரட்சியையும்” என்கிறார் வினீத்.
ஸ்க்ரிப்ட் தயாரானதும் தனக்கான குழுவினரை
தேடினார். முதல் படத்துக்கு இசையமைத்த ஷான் ரஹ்மானையே இப்படத்துக்கும்
தேர்ந்தெடுத்தார். பாடல்கள் தேன். பின்னணி வசீகரம். இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக ஜோமோன் ஜான் அமைந்தது
பத்மநாபசாமியின் அனுக்கிரகம். இந்து, இஸ்லாம், கிறிஸ்துவ காம்பினேஷனில்
மதமறுப்புக் காதலை வலியுறுத்தும் திரைப்படம் உருவாகத் தொடங்கியது. பட்ஜெட் சுமார்
நாலு கோடி. ஸ்க்ரிப்ட்டை வாசித்துப் பார்த்த சீனிவாசன் தானே தயாரிக்க முன்வந்தார்.
ஆனால் செலவு அவரது சக்திக்கும் மீறியது. வினீத்தின் முந்தையப் படத்தை தயாரித்து
சீனிவாசனுக்கு திலீப் உதவியதைப் போல, இம்முறை நடிகர் முகேஷ் முன்வந்தார். அவரும்
சீனிவாசனும், இணைந்து தயாரித்தார்கள். மலையாளத் திரையுலகில்தான் எத்துணை
பெருந்தன்மையாளர்கள் இருக்கிறார்கள்? இம்மாதிரி உதாரணங்களை தற்கால தமிழ்
சினிமாவுலகில் தேடினாலும் கிடைப்பதில்லை.
வினீத்தின் முந்தையப் படத்தில் நடித்த
நிவின்பாலியே இதிலும் கதாநாயகனாக நடித்தார். வெளிவந்த ஒரு வாரத்திலேயே பதினான்கு
கோடிக்கும் மேலாக வசூலித்து ‘ப்ளாக் பஸ்டர் ஹிட்’ அடித்திருக்கிறது படம். மலையாளத்
திரைப்பட உலகத்தின் அடுத்த பத்தாண்டுகளை ஆளப்போகிற சூப்பர்ஹிட் இயக்குனரையும்
அடையாளம் காண்பித்திருக்கிறது.
“நாயர் பையன், இஸ்லாமியப் பெண்ணை
காதலிக்கிறான்” என்கிற அரதப்பழசான ஒன்லைன். நம்மூரில் பாரதிராஜா சக்கைப்போடு போட்ட
அதே ‘அலைகள் ஓய்வதில்லை’ கதைதான். விஜய்க்கு நிரந்தரப் புகழ் கொடுத்த அதே
‘காதலுக்கு மரியாதை’ கதைதான். தலைமுறைகள் மாறலாம், காதல் மாறாது என்பதால்,
மீண்டும் அதே காதலை இன்றைய இளைஞர்களின் மனப்போக்குக்கு ஏற்ப மாற்றியமைத்து
வென்றிருக்கிறார் வினீத். மம்முட்டி, லால்களின் ஆதிக்கம் குறைந்தநிலையில், இந்திய
சினிமா மசாலாப் போக்கோடு போரிட முயன்று, தன்னுடைய பொருளாதார போதாமையால் தடுமாறிக்
கொண்டிருந்த மலையாளத் திரையுலகுக்கு சரியான திசையை காட்டியிருக்கிறது ‘தட்டாத்தின்
மறயாது’.
மலையாளி இந்து நாயர் பையன் என்று
காட்டுவதற்காக நாயகன் பாரம்பரிய பட்டுவேட்டி, சட்டை, சந்தனம் என்றில்லாமல் நார்மலான
கேரளனாக இருக்கிறான் என்பது பெரும் ஆறுதல். மரபு என்பது கேரளர்களுக்கு உயிர். அந்த
தேன்கூட்டில் பெரிய சலசலப்பின்றி கல்லெறிந்திருக்கிறார் வினீத். கட்டுப்பெட்டியான
இஸ்லாமியக் குடும்பம் என்று நாயகியின் பின்புலம் காட்டப்பட்டாலும், உலகமயமாக்கலின்
தாக்கத்தில் அவர்களும் அவர்களையறியாமலேயே மாறியிருப்பதை நாயகி பாத்திரம் வாயிலாக
இயல்பாக காட்டுகிறார். நாயகியின் அக்காவுக்கோ, அம்மாவுக்கோ கிடைக்காத வாய்ப்புகள்
இவளுக்கு கிடைக்கிறது. இவளை கல்லூரிக்கு அனுப்புகிறார்கள். இசைக்குழுவில் பாட
அனுமதிக்கிறார்கள்.
கண்டதும் காதல் என்றாலும் தனக்கும், அவளுக்கும்
பொருந்துமா என்று தன் வீட்டுச்சூழலை மையப்படுத்தி வினோத் சிந்திக்கும் காட்சிகள்
அபாரம். அரசியல் பின்புலம் கொண்ட பணக்காரக் குடும்பத்தின் பெண். மதம் ஒரு
பிரச்சினை என்றால், வர்க்கம் இன்னொரு பிரச்சினை. காலையிலிருந்து இரவுவரை
மாத்ரூபூமியில் மூழ்கிப்போய் முத்தெடுக்கும் அப்பா (அப்படி என்னத்தைதான்யா இந்த
மாத்ரூபூமிகாரன் எழுதறான்?), சாணி அள்ளுவதற்காகவே பிறந்த தங்கையைப் பார்த்து நொந்துபோய், ”மாடு வளர்ப்பதற்கு பதில் நம் வீட்டில் நாய் வளர்க்கக்கூடாதா?” என்றெல்லாம் வகை தொகையில்லாமல் சிந்தித்து தனக்கும்
அவளுக்குமான யதார்த்த முரணை மெல்லிய நகைச்சுவையோடு பகிர்ந்துக் கொள்கிறான்.
“ச்சே.. ஒரு அட்டாச்ட் பாத்ரூம் கூட இல்லை. ஆயிஷா கிட்டே எப்படி இதுதான் என்
வீடுன்னு காட்டுவேன்”
இவனுடைய காதலுக்கு இன்னொரு பிரச்சினை. நாலு
வருடமாக ஆயிஷாவை இன்னொருவன் காதலிக்கிறான். அவன் ஆயிஷா இடம்பெற்ற இசைக்குழுவில் பாடும்
பாடகன். பாடுபவர்கள் அழகாக வேறு இருந்துத் தொலைக்கிறார்கள். போதாக்குறைக்கு
அவனுக்கு சிக்ஸ்பேக் வேறு உண்டு. “கேரளாக்காரனுக்கு எதுக்கு சிக்ஸ் பேக்?
மம்முட்டியும், மோகன்லாலும் சிக்ஸ்பேக் வெச்சிக்கிட்டா திரியறாங்க?”
ஆயிஷாவுடன் முதன்முறையாக பழகும் சந்தர்ப்பம்
வினோத்துக்கு கிடைக்கிறது. கேமிரா, இசை, இயக்கம், எழுத்து, நடிப்பு என்று அனைத்து
அம்சங்களுமே கவித்துவமாக இயங்கும் காட்சி அது. “வடகேரளாவின் தென்றல் காற்று என்
முகத்தில் வீசியது. இருளான வராண்டாவில் அவளும், நானும் மட்டும் நடந்துக்
கொண்டிருந்தோம். நிழலில் இருந்து வெளிச்சத்துக்கு அவள் நடந்த காட்சி,
முகிலிலிருந்து நிலவு வெளிவரும் காட்சிக்கு ஒப்பானதாக இருந்தது”
தடங்கல்கள் தடையல்ல. எப்படியோ, அடித்துப்
பிடித்து ஆயிஷாவிடம் காதலை சொல்கிறான் வினோத். இவன் எதிர்ப்பார்க்கும் பதில் வர
தாமதமாகிறது. வினோத்தின் கம்யூனிஸ நண்பன் ஒருவன் சொல்கிறான். “மற்றவர்களின் உணர்வுகளை
மதி. அவளுக்கு உன்னை காதலிக்க ஆர்வமில்லை. திரும்பத் திரும்பத் தொல்லை தராதே”. நன்கு
யோசித்துப் பார்த்ததில் வினோத்துக்கும் இது உண்மையென்றே படுகிறது. கடைசியாக
ஒருமுறை அவளை பார்த்துவிட்டு மட்டும் வருவதற்காக செல்கிறான். இவன் எதிர்பாராவிதமாக
இவனிடம் அவள் தனது காதலை ‘பிராக்டிக்கல்’ ஆக சொல்கிறாள். “இறந்துப்போன என்னுடைய
அம்மாவுக்குப் பிறகு என்னை இவ்வளவு முக்கியமாக நினைத்த வேறொருவரை நான்
சந்திக்கவில்லை. எனவே உன்னை காதலிக்கிறேன்”
அவளிடம் காதலைப்பெறுவதில் வெற்றி கண்டவன்,
தங்கள் காதலை எப்படி வெற்றியடைய வைத்தான் என்பதுதான் உருக உருக, சிரிக்க சிரிக்க,
லேசான டிராமாவோடு சொல்லப்பட்டிருக்கும் மீதி கதை. இரண்டாம் பாதியில் நம்மூர்
விக்ரமன் பாணியில் பாசிட்டிவ்வாக வாழ்க்கையில் முன்னேறுகிறான் நாயகன். உள்ளூர்
போலிஸ் உதவியோடு ஹெல்மெட் விற்று பணம் சம்பாதிக்கிறான். பிறகு ஒரு பர்தா கடை
திறக்கிறான். “உலகத்திலேயே பர்தா ஷாப் வைத்திருக்கும் ஒரே இந்து நான்தான்”
ஒரு சாதாரண காதல்கதையை அனைவருக்கும்
பிடிக்கும் மாதிரியான ட்ரீட்மெண்டில் கொடுத்திருப்பதுதான் வினீத்தின் வெற்றி.
காட்சிகளை சுவாரஸ்யப்படுத்த அவர் சின்ன, சின்ன போங்கு ஆட்டம் ஆடுகிறார். அதுவும்
பார்வையாளர்களை செமையாக வசீகரிக்கிறது என்பதால் இந்த வயலேஷனை எல்லாம் மன்னித்துவிடலாம்.
படத்தின் கதைக்கு நேரடித் தொடர்பு இல்லையென்றாலும், இரண்டு குட்டி
ஃப்ளாஷ்பேக்குகள் அசத்துகிறது. ஒன்று குட்டி கேங் ஸ்டோரி. இன்னொன்று வினோத்தின்
தங்கையை ஒரு தலையாக ‘இன்று போய் நாளை வா’ பாணியில் லவ்வும் இன்னொரு இளைஞனின்
ப்ளாஷ்பேக். ஆனால் இந்த காட்சிகளையும் நைச்சியமாக கதைக்குள் இணைக்கும் கலையால்தான்
வினீத் மலையாளத் திரையுலகின் கவனிக்கப்பட வேண்டிய இயக்குனர்களில் ஒருவராக
உருமாறுகிறார்.
நம்மூர் இளைஞனுக்கு திராவிடப் பாதிப்பு
எப்படியோ, அப்படியே கேரள இளைஞனுக்கு கம்யூனிஸப் பாதிப்பு இருக்கிறது. சிறு சிறு
காட்சிகளில் இதை வினீத் வெளிப்படுத்தவும் செய்கிறார். லேசான நையாண்டியோடு
கம்யூனிஸம் பேசினாலும், அந்த சித்தாந்தம் மீது அவர் கொண்டிருக்கும் மரியாதையையும்
புரிந்துகொள்ள முடிகிறது. படம் முழுக்க ஆங்காங்கே பின்னணியில் சேகுவேரா
போஸ்டர்களில் காணப்படுகிறார். முக்கியமான காட்சி ஒன்றில் போஸ்டரில்
இடம்பெற்றிருந்த வாசகங்கள் அக்காட்சியை வெகுவாக சுவாரஸ்யப்படுத்துகிறது. “நீங்கள்
இன்று எங்களை கொன்றொழிக்கலாம். ஆனாலும் கடைசியில் நாங்கள்தான் வெற்றி பெறுவோம்”
மலையாளப் படம், அதுவும் காதல் படம். நிச்சயம்
‘பிட்’ இருக்குமென்று, ஆவலோடு நாக்கை தொங்கப் போட்டுக்கொண்டு நம்மூர் ஊன்னா
தான்னாக்கள் தியேட்டருக்கு ஓடுவார்கள். சாரி ஜெண்டில்மென். இந்தப் படத்தில்
ஹீரோயினின் முகத்தைத் தவிர வேறெதையும் காட்டவேயில்லை. இப்போதெல்லாம் எந்தப்பட
ஹீரோயினைப் பார்த்தாலும், “என்னா தொப்புளுடா” என்றுதான் அதிசயிக்கத் தோன்றுகிறது.
நீண்டகாலத்துக்குப் பிறகு ஓர் நாயகியைப் பார்த்து “என்னா அழகுடா” என்று ஆச்சரியம்
கிளம்புவது இந்தப் படத்தில்தான். இஷாதல்வாருக்கு ஒருமாதிரியான இரானியத் தோற்றம். பாகிஸ்தான் அமைச்சர் ஹினா ரபானி மாதிரி மங்களகரமாக இருக்கிறார். அளவான லிப்ஸ்டிக், பாந்தமான உடைகள் என்று திரையில் பார்த்ததும் நமக்கே காதலிக்கத்
தோன்றும்போது.. வினோத், ஆயிஷாவை கண்டவுடன் காதலில் விழுந்ததில் ஆச்சரியமேதுமில்லை.
வினீத் சீனிவாசன் – மலையாளத் திரையுலகில்
நிகழ்ந்திருக்கும் அதிசயம். இதே அதிசயத்தை பாரதிராஜா, தன் மகன் மனோஜ் மூலமாக
இங்கே நிகழ்த்தியிருக்க முடியும். துரதிருஷ்டவசமாக அம்மாதிரி அதிசயங்கள் நமக்கு
வாய்ப்பதில்லை.
படத்தின் பெயர் தட்டத்தின் மறயத்து.இதற்கு முன்பே சீனிவாசனும் முகேஷும் இணைந்து தயாரித்த படம் குசேலனின் ஒரிஜினல் கத பறயும்போல்.
பதிலளிநீக்குஒரு நல்ல படத்துக்கு விமர்சனம் எழுதும் போது கூட, படத்துக்கு சம்பந்தமே இல்லாத Controversy தேவையா? ஒரு நல்ல பிளாக்கர் டைம்மை இப்படி வீணடிக்கனுமா? But to answer to your question on why Tamil cinema isnt like Malayalam cinema, எனக்கு தெரிஞ்சு மலையாளத்துல ப்ளாக் எழுதறவங்க எல்லாம் இப்படி எல்லாம் எழுதறதில்ல.
பதிலளிநீக்குதிருத்திட்டேன் சித்தன் சார்
பதிலளிநீக்குLast balla dan boss alaga six adikringa :) nice1!!!
பதிலளிநீக்குpadam paarka vendum :)
பதிலளிநீக்கு//“கேரளாக்காரனுக்கு எதுக்கு சிக்ஸ் பேக்? மம்முட்டியும், மோகன்லாலும் சிக்ஸ்பேக் வெச்சிக்கிட்டா திரியறாங்க?”//
பதிலளிநீக்கு:))))))))) Timing...
விமர்சனம் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு 'நச்'சென்ற உதாரண இடுகை இதே. அடிபொழி மாஷே..
பதிலளிநீக்குமிக அருமையான நச்சென்ற விமர்சனம்..
பதிலளிநீக்குதொடர வாழ்த்துக்கள்..
சூப்பர் இண்ட்ரோ..
பதிலளிநீக்குகடைசி வரி புரியலை..மனோஜ் டைரக்ட் செய்யனும்ங்கிறீங்களா?
//மனோஜ் டைரக்ட் செய்யனும்ங்கிறீங்களா?//
பதிலளிநீக்குமனோஜ், மணிரத்னத்திடம் திரைத்தொழில் பயின்றவர். அந்த பயிற்சி வீணாகலாமா?
செரிவான பதிவு...
பதிலளிநீக்குபெரும்பாலும், உடலமைப்புகளோ, உறுப்புகளோ கவர்வதற்கு காரணமாக இல்லாமல், ஒரு பெண்ணை, அவளை அவளாக மதிப்பதற்கு இஸ்லாம் வழி காட்டுகிறது.
பதிலளிநீக்குஉடலோ, கவர்ச்சியோ இந்தப் படத்தில் வெளிப்படவில்லை. மனரீதியான நெருக்கம், அன்பு இவையே பிரதானமாக இருக்கும் எந்தக் காதலும் அழிவதே இல்லை என்பது தான் நிஜம். ஆனால் இதைப் புரிந்து கொள்ள வேண்டிய பெண்கள் இங்கு மிகவும் குறைவு.
good info about director, review about film
பதிலளிநீக்குYuva , super review. The words you have chosen and the way you have presented the review goes like a short film. Magazines like vikatan should use your skills.
பதிலளிநீக்கு