3 நவம்பர், 2017

தோகை விரி!

“இயற்கையை பழிக்காதேடா பாவி..” அப்பா அடிக்கடி சொல்வார்.

அடிவானம் கறுக்கும்போதே எங்களுக்கெல்லாம் அடிவயிற்றில் அச்சம் எழும். தூறல் விழ ஆரம்பித்தாலே ‘எழவெடுத்த மழை’ என்று இயல்பாக எங்கள் உதடுகள் உச்சரிக்கும். அப்பாவுக்கு கண்மூடித்தனமாக கோபம் வரும்.

நாங்கள் மழையை வசைபாடும்போதெல்லாம், அவர்தான் மழைக்கு வக்காலத்து வாங்குவார்.

“பழிக்காம.. இந்த எழவெடுத்த மழையை பாராட்டவா சொல்றீங்க.. ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி இதே இயற்கைதான் நம்மை மொத்தமா குடும்பத்தோட பலிவாங்கப் பாத்துச்சி” என்பேன்.

அப்பா ஏற்றுக்கொள்ள மாட்டார்.

அந்தந்த பருவத்தில் வெயிலும், மழையில் இயற்கையின் இயல்பு. அதனால் மனிதர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்றால், அதற்கு மனிதப்பிழைதான் காரணம் என்பது அவருடைய ஆணித்தரமான வாதம்.

அவர் சொல்வது அறிவியல்ரீதியாக சரிதான். நான் கற்ற கல்வி அவருடைய தர்க்கத்தை ஏற்றுக் கொள்கிறது.

ஆனால்-

கருமேகம் சூழ்ந்து வானம் இருட்ட ஆரம்பிக்கும்போதெல்லாம் என் வயிற்றுக்குள் சடுகுடு நடக்கிறது.

ஆமாம் சார்.

நான் வரதராஜபுரத்துக்காரன். எனக்கு அப்படிதான் இருக்கும்.

மழைத்தூறல் விழுந்ததுமே மகிழ்ச்சியில் பெண் மயில் தோகை விரிக்கும் என்பார்கள். எங்கள் வரதராஜபுரத்துக்காரர்களுக்கு ‘மழை’ என்கிற சொல் காதில் விழுந்தாலே முகம் பேயறைந்துவிடும்.

அப்பா மட்டும் விதிவிலக்கு. அவரைப் பற்றி அப்புறம் பார்ப்போம்.

மழையை யாராவது வெறுக்க முடியுமா என்று கேட்டீர்களேயானால், நீங்கள் புண்ணியவான். மழையை ரசிக்கும் மனசை உங்களுக்கு பரம்பொருள் அருளியிருக்கிறது.

மன்னித்துக் கொள்ளுங்கள்.

தமிழ்நாட்டிலேயே மழையை அதிகம் வெறுக்கும் மனிதர்களாக வரதராஜபுரத்துக்காரர்கள் சமீபத்தில் மாறிப்போனோம்.

ஏன் என்பதற்கு ஒரு சிறிய நினைவூட்டல்.

ஆண்டு 2015. தேடி டிசம்பர் ஒன்று. உங்களில் யாருக்காவது நினைவிருக்கிறதா?

ஒருவேளை அந்த தேதியில் நீங்கள் சென்னையில் இருந்திருந்தால், சாகும்வரை அந்நாளை மறந்திருக்க மாட்டீர்கள். நாங்களெல்லாம் அன்றைய ஊழித்தாண்டவத்தை நினைத்து நாள்தோறும் இன்றும் நடுநடுங்கிக் கொண்டிருக்கிறோம்.

பரவாயில்லை.

அந்த ஆண்டு நவம்பர் மாதமே வானத்தை யாரோ திட்டமிட்டு வாள் கொண்டு கிழித்திருப்பார்களோ என்று சந்தேகம் கொள்ளுமளவுக்கு வரலாறு காணாத மாமழை பொழிந்தது. மாலை ஆனாலே மழைதான். ஒட்டுமொத்த சென்னை, காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஆறு, ஏரி, குளம், வாய்க்கால், குழியெல்லாம் தளும்பத் தளும்ப தண்ணீர்.

குடிக்கும் தண்ணீரைகூட காசு வாங்கி குடிக்கும் கூட்டம்தானே? அந்த மழையை சிகப்புக் கம்பளம் விரித்து வரவேற்றோம். அந்த ஆண்டு தீபாவளியை அவ்வளவு சிறப்பாக கொண்டாடினோம்.

மழை, செகண்ட் இன்னிங்ஸ் ஆடுமென்று யாருக்கு தெரியும்? டிசம்பர் முதல் நாளிலேயே பேயாட்டம் ஆடியது. போதுமான முன்னறிவிப்பு இல்லாமல் ஆட்சியாளர்கள் வேறு காஞ்சிபுரம் மாவட்டத்திலேயே பெரிய ஏரியான செம்பரம்பாக்கத்தை வேறு திறந்து விட்டார்கள். சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற வட்டாரங்களில் பிரளயமே நேர்ந்துவிட்டது.

ஒட்டுமொத்த ஊரும் நீரில் மிதந்தது. ஆடு மாடுகளோடு மனிதர்களும் அடையாற்றில் அடித்துக்கொண்டு போனார்கள். ஒரு வாரத்துக்கு மின்சாரம் இல்லை. லட்சக்கணக்கான குடும்பங்களின் அன்றாட அலுவல்கள் மொத்தமாக முடங்கி, அத்தனை பேரும் வீட்டுக்குள் அடைந்துக் கிடந்தார்கள். பாடுபட்ட சேர்த்த அத்தனையும் வெள்ளத்தில் அடித்துக் கொண்டுச் செல்வதை கண்டு மனம் நொந்தார்கள். வீட்டின் தரைத்தளம் முழுக்க நீரால் நிரம்ப, மொட்டை மாடிக்கு போய் மழையில் நனைந்தவாறே உயிரைக் காப்பாற்றிக் கொண்டார்கள்.

தன்னார்வலர்களின் தொண்டு உள்ளத்தால்தான் மீண்டது சென்னை. அரசிடம் நியாயம் கேட்ட மக்களுக்கு, “நூற்றாண்டு கண்டிராத மழை. நாங்கள் என்ன செய்ய முடியும்?” என்று பதில் சொன்னார்கள் ஆட்சியாளர்கள்.

எல்லா நிகழ்வுகளையும் நீங்களும் டிவியில் பார்த்திருப்பீர்கள். செய்தித்தாள்களில் வாசித்திருப்பீர்கள். இரண்டு மாடி கட்டிடங்கள் வரை மூழ்கிய நிலையில், மிதக்கும் நகரமான வெனிஸை போன்ற ஓர் ஊரை அப்போது அடிக்கடி டிவியில் காட்டிக்கொண்டே இருந்தார்கள். நினைவிருக்கிறதா?

மக்கள், குடும்பம் குடும்பமாக படகுகளில் அகதிகளாக வெளியேறிக் கொண்டே இருந்தார்களே. ஹெலிகாஃப்டர் வந்துதான் நூற்றுக்கணக்கான மக்களின் உயிரை காப்பாற்ற முடிந்ததே. தன்னார்வலர்களும், மீட்புப் படையினரும் பணிபுரிய மிகவும் சிரமப்பட்டார்களே. அந்த ஊர்தான் வரதராஜபுரம். நான் வசிக்கும் பகுதி.

தாம்பரத்திலிருந்து ஏழு கிலோ மீட்டர் தூரம்தான். இயற்கை வனப்பு சூழ்ந்த பகுதி. கிணறு வெட்ட வேண்டாம். பள்ளம் தோண்டினாலே போதும். பத்தடியில் இளநீர் சுவையில் தெளிவான குடிநீர். சென்னை, செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்புதூர் என்று முக்கிய நகரங்களுக்கு மையத்தில் அமைந்திருக்கும் அழகான ஊர். பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாக இங்கே சல்லிசான விலைக்கு இரண்டு கிரவுண்டு நிலம் வாங்கிப் போட்டிருந்தார் அப்பா.

அண்ணனும், நானும் வங்கியில் வீட்டுக்கடன் வாங்கி ஏழு ஆண்டுகளுக்கு முன்புதான் வீடு கட்டினோம். பங்களா மாதிரி பெரிய வசதியான வீடு. அப்பாவுக்கு மழையை பிடிக்கும் என்பதால், வீட்டுக்குள்ளேயே மழை பெய்வதற்கு ஏதுவாக பழைய வீடுகள் பாணியில் வீட்டுக்கு நடுவே ஓர் அழகான முற்றம். வீட்டுக்கும் முன்பும் பின்புமாக பெரிய தோட்டம். நிறைய மரங்கள். அக்கம் பக்கம், சொந்தம் பந்தம், உற்றார் உறவினர் அத்தனை பேரும் மூக்குமேல் விரல்வைத்து ஆச்சரியப்படுமளவுக்கு அத்தனை அழகான வீடு. கூட்டுக் குடும்பமாய் அவ்வளவு சந்தோஷமாய் வாழ்ந்து வந்தோம்.

நாங்கள் கட்டியிருக்கும் வீடு கடல் மட்டத்துக்கு கீழே இருக்கிறது என்கிற புவியியல் உண்மையெல்லாம் அப்போது தெரியாது. ஒரு காலத்தில் இங்கே பிரும்மாண்டமான ஏரி இருந்தது. அந்த ஏரியின் நீர்ப்பாசனம் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களுக்கு உதவியது என்பதெல்லாம் ஐம்பது, அறுபது ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு. அதையெல்லாம் யாராவது எடுத்துச் சொல்லியிருந்தாலும்கூட, வீடு கட்டும்போது எங்கள் தலையில் ஏறியிருக்காதுதான்.

2015ல் பெய்த மழைதான் இதையெல்லாம் நினைவுறுத்தியது.

அந்த டிசம்பர் ஒன்று நாள்ளிரவில் எங்கள் வீடே ஆற்றுக்கு மத்தியில் கட்டப்பட்டதை போன்று ஆனது. அழையா விருந்தாளியாக அடையாறு எங்கள் வரவேற்பறைக்குள் நுழைந்தது. குழந்தை குட்டிகளோடு மொட்டைமாடியில் குளிரில் விரைத்து ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டு ஆறுதல்படுத்தகூட தெம்பில்லாமல் அச்சத்தோடு இருந்தோம். பசி மயக்கம் வேறு. யாராவது காப்பாற்ற வருவார்களா, உயிர் பிழைப்போமா என்கிற அச்சத்துடன் கழிந்த அந்த முழு இரவை எப்படிதான் அவ்வளவு சுலபமாக மறக்க முடியும்?

உடுத்திய உடையை தவிர வேறொன்றும் எங்கள் கைவசமில்லை. ஒரே இரவில் எல்லாம் இருந்தும் ஏதுமற்றவர்களாகிப் போனோம். குழந்தைகள், பெண்களோடு ஒரு வார காலம் அகதிகளாக தாம்பரத்தில் ஒரு கல்யாண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டோம். சாப்பாட்டுக்கு வரிசையில் நின்று தட்டேந்தினோம். அப்போது என் தம்பி மனைவி பச்சை உடம்புக்காரி. குழந்தை பிறந்து பதினைந்து நாட்கள்தான் ஆகியிருக்கும். அப்போது நாங்கள் அடைந்த மன உளைச்சலை இப்போது வார்த்தைகளில் முழுமையாக விவரிக்க முடியுமா என்பதே சந்தேகம்தான்.

இப்போது சொல்லுங்கள்.

மழை பெய்தால், நாங்கள் மயில் மாதிரி தோகை விரித்து மகிழவா முடியும்?

ஆனால்-

அப்பா அப்படியேதான் இருக்கிறார்.

சொல்லப்போனால், மயிலைவிட மகிழ்ச்சி அவருக்குதான்.

என் வாழ்நாளில் அப்பா, மழைக்காக எங்கும் ஒதுங்கியதில்லை. குடைபிடித்து நடந்ததில்லை. ரெயின்கோட் அணிந்ததில்லை.

“மழைன்னா நனையனும். எங்க ஊருலே அப்படிதான். ஆடு, மாடெல்லாம் குடை பிடிச்சி பார்த்திருக்கியா? அதென்னவோ தெரியலை. இந்த மெட்ராசுலேதான் அவனவன் மழையிலே நனையுறதுன்னாலே அப்படி அலறுறான். நனைஞ்சா காய்ச்சல் வரும்னு சொல்றான். தண்ணீதான் உலகத்தோட ஜீவன். அதுலே நனைஞ்சு காய்ச்சல் வருதுன்னா, நீ உன் உடம்பை பார்த்துக்கற லட்சணம் அப்படி” ஒவ்வொரு மழையின் போதும் இதுமாதிரி ஒவ்வொரு வியாக்கியானம் பேசுவார்.

அப்பாவுக்கு தர்மபுரி பக்கமாக மழையே பார்க்காத ஏதோ ஒரு வறண்ட ஊராம். அவருக்கு பத்து வயது இருக்கும்போது மிகப்பெரிய பஞ்சம் வந்ததாம். சுற்றுவட்டார மொத்தப் பகுதியுமே பாலைவனமாகி, பஞ்சம் பிழைக்க குடும்பம் குடும்பமாக இடம்பெயர்ந்தார்களாம். தன்னுடைய பால்ய வயது உறவுகளையும், நட்புகளையும் பிரிந்ததற்கு மழை பொய்த்ததே காரணம் என்பார். அதற்காக வெயிலையும் அவர் திட்டியதில்லை.

அப்படி இப்படி எப்படியோ படித்து சென்னைக்கு வந்தார். அரசு வேலையில் இணைந்தார். தன்னுடைய வேரை இங்கே உறுதியாக நிலைப்படுத்திக் கொண்டார்.

அக்னி வெயில் முடிந்தாலே போதும். அடிக்கடி அம்மாவிடம், “அடிவானம் கறுக்குற மாதிரியில்லே. இந்த வருஷம் சீக்கிரமே மழை வரப்போகுது” என்பார். மழை வர தாமதமானால் அவருக்கு இரத்த அழுத்தம் எகிறிவிடும். கடற்கரைக்கு போய் கடலையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பார். அப்போதுதான் அவரால் சமநிலைக்கு வரமுடியும். அவருடைய பழைய விஜய் சூப்பர் ஸ்கூட்டரின் ஸ்டெப்னியில் ‘மாமழை போற்றுதும்’ என்று பெயிண்டால் எழுதி வைத்திருப்பார். அப்படிப்பட்ட மழை வெறியர்.

அம்மாவுக்கும், அப்பாவுக்கும் கல்யாணம் ஆனதே ஐப்பசி மாதம்தான். அடைமழையில்தான் தாலி கட்டினார். முப்பத்து முக்கோடி தேவர்களும் மழையால் அட்சதை இட்டு எங்களை ஆசிர்வதித்தார்கள் என்று அடிக்கடி கல்யாணப் பெருமை பேசுவார்.

அவருக்கு ஐப்பசியில் முகூர்த்தம் அமைந்துவிட்டது என்கிற ஒரே காரணத்தால் எங்கள் வீட்டில் அத்தனை பேருக்கும் ஐப்பசியில்தான் கல்யாணம் என்பதில் பிடிவாதமாக இருந்து சாதித்தார்.

அப்பாவுடைய மழைக்காதலை அம்மா, திருமணமான சில காலத்திலேயே புரிந்து, அவருடைய அலட்டல்களை சகித்துக் கொண்டார். எங்களுக்குதான் கடுப்பு. “ஏம்பா, சிவாஜி மாதிரி ஓவர் ஆக்டிங் பண்றே..?” என்று நக்கலடிப்போம்.

சிறுவயதில் நாங்கள் பள்ளிக்கு கிளம்பிக் கொண்டிருப்போம். மழை பெய்தால், “லீவு போட்டுட்டு மழையை ரசிங்கடா” என்பார். அப்போதெல்லாம் அப்பாவே லீவு போடச் சொல்கிறார் என்று மகிழ்ச்சியாகதான் இருந்தது.

ஆனால்-

முக்கியமான தேர்வுகள் வந்தபோதெல்லாம் கூட மழையென்றால், “எக்ஸாமெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம். வர வர மழையை பார்க்கிறதே அபூர்வமாயிக்கிட்டிருக்கு. அதை ரசிக்காம படிப்பு என்ன வேண்டிக் கிடக்கு?” என்று அவர் கேட்டபோது எங்களுக்கு ஆச்சரியமும், அதிர்ச்சியும் ஏற்பட்டது.

அக்காவுக்கு காலேஜில் கடைசிநாள் தேர்வு. அன்று திடீரென கோடைமழை. அக்காவை, தேர்வெழுதப் போகக்கூடாது என்று சொல்லி அப்பா ஒரே அடம். இவர் வேற மாதிரி அப்பா என்பதை நாங்கள் உணர்ந்துதான் இருந்தோம். மழை பொழிந்தால் ‘மவுன ராகம்’ ரேவதி, ‘ஓஹோ.. மேகம் வந்ததே’ என்று ஆடிப்பாடினால் ரசிக்கலாம். பூர்ணம் விசுவநாதன் ஆடினால் சகிக்குமா?

எங்கள் அப்பா அப்படிதான் ஆடிக்கொண்டிருந்தார்.

நாங்கள் எல்லாம் காலேஜ், ஆபிஸ் என்று செட்டில் ஆகி, ஒரு நாளைக்கு ஆயிரத்தெட்டு பிரச்சினைகளில் அல்லல் பட்டுக் கொண்டிருந்தோம். அப்போதும்கூட மழை வந்தால் குடும்பமாக உட்கார்ந்து கும்மியடித்து கொண்டாட வேண்டும் என்கிற அப்பாவின் அன்புக்கட்டளை எங்களை எரிச்சலுக்கு உள்ளாக்கியது. “இதே ரோதனையாப் போச்சிப்பா” என்று சலித்துக்கொண்டே அவரை கடந்துச் செல்வோம்.

அப்பா டிவியில் செய்திகள் மட்டும்தான் பார்ப்பார். குறிப்பாக செய்திகளின் இறுதியில் இடம்பெறும் வானிலை தகவல்கள். செய்தித்தாளிலும்கூட மழை பற்றிய தகவல்களைதான் தேடி வாசிப்பார். நம்மூர் மழை மட்டுமல்ல. வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் பொழிந்த மழை பற்றியெல்லாம் அப்டேட்டாக இருப்பார். நுங்கம்பாக்கம் வானிலைமைய இயக்குநர் ரமணனுக்கு மனதளவில் ரசிகர் மன்றமே வைத்திருந்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

அப்பா ஓய்வு பெற்று வீட்டுக்கு வந்ததுமே சொன்னார்.

“நானும், உங்கம்மாவும் மேகாலயாவுக்கு டூர் போகப் போறோம்”

எங்களுக்கு நினைவு தெரிந்ததில் இருந்து அவர்கள் இருவரும் வெளியூருக்கு எங்கேயும் போனதாக நினைவே இல்லை. எப்போதும் அப்பாவுக்கு ஆபிஸ், அம்மாவுக்கு வீட்டு வேலையென்றே எங்களுக்காக தங்கள் இளமைக்காலம் மொத்தத்தையும் தொலைத்தவர்கள்.

ஆச்சரியமாக கேட்டேன். “நீங்க டூர் போறது நல்ல விஷயம்பா. ஆனா, காசி ராமேஸ்வரம்னு சொன்னாகூட ஓக்கே. அதென்ன மேகாலயா?”

“அங்கேதாண்டா சிரபூஞ்சி இருக்கு. உலகத்துலே அதிகம் மழை பொழிகிற ஊர். மனுஷனா பொறந்த ஒவ்வொருத்தனும் தரிசிக்க வேண்டிய புண்ணியஸ்தலமே அதுதாண்டா”

இதற்கும் மேல் அவரைப் பற்றி என்னதான் சொல்ல? அந்த கொடூரமான டிசம்பர் மழைக்கு பிறகும்கூட மழைமீதான நேசம் அவருக்கு எள்ளளவும் குறையவில்லை என்பதுதான் எங்களுக்கு அதிர்ச்சி. மாறாக நாங்களெல்லாம் மழையை தெலுங்கு சினிமா வில்லனை மாதிரி வெறுக்க ஆரம்பித்து விட்டோம்.

அந்த மழையோடு சரி.

அதன்பிறகு எங்களுடைய வேண்டுதலை ஏற்றோ என்னவோ வருணபகவான், நீண்ட விடுமுறைக்கு போய்விட்டார். அதற்கு அடுத்த ஆண்டு வந்த வார்தா பெரும்புயலிலும்கூட காற்றுதான் கோரத்தாண்டவம் ஆடி லட்சக்கணக்கான மரங்களை பலி கொண்டதே தவிர்த்து, மழையோ வெள்ளமோ இல்லாமல் நாங்கள் மீண்டும் தண்ணிக்கு சிங்கி அடிக்க ஆரம்பித்தோம்.

அப்பாதான் தவிக்க ஆரம்பித்தார். பால்கனியில் ஈஸிசேரில் அமர்ந்துக் கொண்டு அடிவானத்தை பார்த்துக்கொண்டே இருப்பார். கையை நெற்றி மீது வைத்து கண்சுருக்கிப் பார்த்து, “வானம் இருட்டற மாதிரி இல்லே?” என்பார்.

“அதெல்லாம் ஒண்ணுமில்லே. சாயங்காலம் சூரியன் மறையுறப்போ எப்பவுமே கருப்பு மேகம்தான் இருக்கும்” என்று சொன்னால் முகம் வாடி அப்படியே உட்கார்ந்து விடுவார்.

திடீரென இரவில் எழுந்து தோட்டத்துக்கு வருவார். இப்படி அப்படியுமாக மெதுவாக தளர்ந்த நடை போடுவார். யாராவது யதேச்சையாக எழுந்து அவரைப் பார்த்துக் கேட்டால், “லேசா ஈரக்காத்து அடிக்குது. மண்வாடையும் வீசுது. அனேகமா காஞ்சிவரத்துக்கு அந்தப் பக்கம் மழைன்னு நெனைக்கிறேன்” என்பார்.

அய்யோடா என்றிருக்கும்.

ஒருமுறை அம்மா என்னிடம் சொன்னார். “ப்ளீஸ்டா. அப்பாவை கோச்சுக்காதீங்க. நீங்கள்லாம் மழையை தொல்லையா பார்க்குறீங்க. அவருக்கு அதுதான் எப்பவும் கனவு. சின்ன வயசுலே மழை இல்லாததாலே சொந்த மண்ணை பிரிஞ்ச மனுசண்டா”

அப்பாவை அம்மா புரிந்துக் கொண்ட மாதிரி நாங்கள் இருவரையுமே புரிந்துக் கொண்டுதான் இருந்தோம். இருந்தாலும் பதில் சொன்னேன்.

“அம்மா, தாம்பரத்துலே அனாதைங்க மாதிரி நம்ம குடும்பம் தவிச்ச அந்த வாரத்தை நினைச்சுப் பாரு. புதுசா பொறந்த உன் பேத்தியை வெச்சுக்கிட்டு நீ எப்படியெல்லாம் கஷ்டப்பட்டு. எல்லாம் இந்த மழையாலேதானே?”

“நம்ம நியாயம் நமக்கு. அவரு நியாயம் அவருக்கு” அப்பாவை விட்டுக் கொடுக்காமல்தான் அம்மா சொன்னார்.

மழையை நாம் நேசித்தாலும் சரி. வெறுத்தாலும் சரி. எவ்வித பாகுபாடு பார்க்காமல் எல்லோருக்கும் பொதுவாகதான் பெய்கிறது மழை. பருவம் தப்புவதும் அப்படிதான். இயற்கையின் புதிர் விளையாட்டுக்கு அற்பப் பிறவிகளான மனிதர்களிடம்தான் விடை ஏது?

இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே வரலாறு காணாத வெயிலில் வாடினோம். “மழை பெய்ஞ்சித் தொலைக்கக் கூடாதா?” என்று வரதராஜபுரத்து ஆட்களே ஏங்குமளவுக்கு அப்படியொரு அசுர வெயில்.

அப்பா மட்டும் குஷியானார். “இப்படி வெயில் காட்டு காட்டுன்னு காட்டிச்சின்னா, அந்த வருஷம் கண்டிப்பா அடைமழை நிச்சயம். 1967லே இப்படிதான் ஆச்சு. அப்போ அடிச்ச புயல்லே ஒரு கப்பலு, மெரீனா பீச்சுலே கரை ஒதுங்கி மாசக்கணக்குலே கிடந்துச்சி. நாங்கள்லாம் ஆதம்பாக்கத்துலே இருந்து நடந்தே போயி பார்த்தோம்”

தேவுடா. அப்பா இப்போது வெயிலையும் ரசிக்க ஆரம்பித்து விட்டாரா? ஒவ்வொரு வருட மழைக்கும் அவரிடம் ஒவ்வொரு கதை உண்டு. அவரது அனுபவ ஞானம் கொண்டு, இந்தாண்டு பெருமழை நிச்சயம் என்று கணித்தார்.

போனமாதம் காலையில் கடுமையான வெயிலில் கார் ஓட்டிக் கொண்டிருந்தேன். அலுவலகத்துக்கு செல்ல வேண்டிய நேரம் தப்பி செம டென்ஷன். நந்தனம் சிக்னலில் மெட்ரோ ரயில் பணிகள் முடிவடையாததால் பேரணி மாதிரி டிராஃபிக் ஜாம்.

திடீரென செல்போன் கிணுகிணுத்தது. மனைவி calling. நேரம் கெட்ட நேரத்தில் அவரிடமிருந்து போன் வராது. ஏதாவது முக்கியமான விஷயம் என்றால் மட்டுமே தொடர்பு கொள்வார்.

ஸ்பீக்கரை போட்டு “ஹலோ..” சொன்னேன்.

“மாமாவுக்கு திடீர்னு நெஞ்சுவலிங்க. இந்து மிஷன் ஆஸ்பிடலுக்கு அழைச்சிட்டு போயிருக்காங்க”

பதில்கூட சொல்லாமல் போனை கட் செய்தேன். வண்டியை ‘யூ டர்ன்’ எடுக்கவே அரை மணி நேரம் ஆகிவிட்டது. என் அவசரம் மற்றவர்களுக்கு எப்படி தெரியும். நான் தாம்பரம் போய் சேர்ந்தபோது எல்லாமே முடிந்துவிட்டது.

அப்பா, சில நாட்களாகவே சோர்வாகதான் தெரிந்தார். சர்க்கரை, இரத்த அழுத்தம் என்றெல்லாம் அவருக்கு உடல்ரீதியாக பிரச்சினைகள் இருந்தாலும் இவ்வளவு சீக்கிரமாக விடைபெற்றுக் கொள்வார் என்று யாருமே எதிர்ப்பார்க்கவில்லை.

அம்மா, அழக்கூட மறந்து உறைந்துப் போயிருந்தார். ஐம்பது ஆண்டுகால தாம்பத்யம் அவருக்கு எவ்வளவோ நல்ல நினைவுகளை பரிசளித்துவிட்டுதான் சென்றிருக்கிறது. அண்ணன், அக்கா, தங்கை, தம்பி என்று குடும்பமே கதறிக் கொண்டிருக்க எனக்கு மட்டும் ஏனோ அழுகையே வரவில்லை.

அப்பாவுக்கு இறுதியஞ்சலி செலுத்த வீட்டுக்கு வந்தவர்கள் எல்லாமே அவரை மழையோடு தொடர்பு படுத்திதான் நினைவு கூர்ந்தார்கள்.

“மழைன்னா மனுஷனுக்கு அவ்வளவு உசுரு”

“மழை பெய்யுறப்போ எல்லாம் உங்கப்பாதாம்பா நினைவுக்கு வருவாரு”

அப்பாவை வெறித்து பார்த்துக்கொண்டே இருந்தன். கொஞ்சம் நேரம் ஒதுக்கி தினமும் அவரோடு இன்னும் கொஞ்சம் நெருங்கி பேசிப்பழகி இருக்கலாமோ என்று தோன்றியது. நாங்கள் குழந்தைகளாக இருந்தபோது எங்களோடு மழையில் அவர் போட்ட ஆட்டமெல்லாம் நினைவுக்கு வந்தது. அவர் கடைசிவரை அப்படியேதான் இருந்தார். நாங்கள்தான் வளர்ந்ததும் மழையிடமிருந்து வெகுதூரம் விலகிவிட்டோம்.

சுட்டெரிக்கும் வெயிலில்தான் அப்பா இறுதி யாத்திரை சென்றார். எந்த வெயிலால் சொந்த ஊரிலிருந்து இடம் பெயர்ந்தாரோ, அதே வெயில்தான் கடைசிவரை அவரோடு வந்துக்கொண்டே இருந்தது.

இடுகாட்டில் நடக்க வேண்டிய சடங்கெல்லாம் நடந்து முடிந்தது. அண்ணன் கொள்ளி வைக்கப் போகிறான். மூடியிருந்த விறகு விலக்கி, அப்பாவின் முகத்தை இறுதியாக பார்க்கிறேன். விபூதி பூசியிருந்த அவரது நெற்றியின் மீது சட்டென்று ஒரு பொட்டு ஈரம். வானத்தைப் பார்த்தேன். இருள் மேகம் எங்கள் தலைக்கு மேலே கூடியிருந்தது. குளிரான பெரிய மழைத்துளிகள் சடசடவென்று கொட்டியது. நான் முதன்முதலாக பெருங்குரலெடுத்து வெடித்து அழ ஆரம்பித்தேன்.

(நன்றி : தினகரன் தீபாவளிமலர்)
ஓவியம் : ஸ்யாம்

5 கருத்துகள்: