16 ஜனவரி, 2018

பத்து வயசானா பங்காளி

பாவலரை பிரிந்துவிட்டு எழுபதுகளின் தொடக்கத்தில் சென்னைக்கு பிழைப்பு தேடிவந்த பாஸ்கர், இளையராஜா, கங்கை அமரன் மூவரும் ‘பாவலர் பிரதர்ஸ்’ என்கிற பெயரில்தான் இயங்கிக் கொண்டிருந்தார்கள் (இவர்களை பிரிந்த பாவலர் அதன் பிறகு மிகக்குறுகிய காலமே உயிரோடு இருந்தார்).

‘அன்னக்கிளி’யில் இருந்துதான் இளையராஜா என்கிற பெயரில் செயல்படத் தொடங்கினார்கள். லண்டன் டிரினிட்டி பள்ளியில் முறையாக இசை தேர்ந்தவர் என்பதால் ராஜாவின் பெயரில் செயல்படுவதில் பாஸ்கருக்கும், கங்கை அமரனுக்கும் ஆட்சேபணை எதுவுமில்லை.

ஒவ்வொருவரும் திருமணம் செய்துக் கொள்கிறார்கள். அதன் பிறகு அவரவர் பிழைப்பை தனித்தனியாக பார்த்தாலும் மதிய உணவு மட்டும் ஒன்றாகதான் உண்பார்கள். தொண்ணூறுகளின் தொடக்கம் வரை, ராஜாவின் பிரசாத் தியேட்டர் ரெக்கார்டிங் ஸ்டுடியோவில்தான் சகோதரர் மூவரும் மதியம் சந்திப்பார்கள். அவரவருக்கு அவரவர் வீட்டில் இருந்து சாப்பாடு வந்துவிடும்.

தனியாக இயக்குநர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் என்று கங்கை அமரன் திரையுலகில் கோலோச்சிக் கொண்டிருந்தாலும் அண்ணன் ராஜாவுக்கு மேனேஜராகவும் பணியாற்றிக் கொண்டிருந்தார்.

பாஸ்கரும், அமரனும் சுத்த அசைவம். ராஜா சைவம். எனவே கொஞ்சம் இடைவெளி விட்டு ராஜா அமைதியாக சாப்பிடுவார். அமரன், லொடலொடவென்று பேசிக்கொண்டே இருப்பார். மற்ற இருவரும் இவர் பேச்சை கவனித்துக் கொண்டே இருப்பார்கள்.

‘தர்மதுரை’ படத்துக்கு ராஜா இசையமைத்துக் கொண்டிருந்தார். வேறொரு வேலையில் இருந்த அமரனுக்கு போன். “டேய், ரஜினி படத்துக்கு பாட்டெழுதணும். மதியம் வர்றப்போ எழுதிக் கொடுத்துடு”

மதியம் பிரசாத்துக்கு அமரன் வந்து சேர்ந்தபோது ரெக்கார்டிங் தியேட்டர் வாசலில் முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டு பாஸ்கர் உட்கார்ந்திருந்தார். அவருடைய மற்றும் அமரனுடைய சாப்பாட்டு பைகள் வெளியே வைக்கப்பட்டிருந்தன.

கோபத்துடன் உள்ளே நுழைந்தார் அமரன். “டேய், ட்யூன் தெரியுமில்லே. சாப்பிட்டுட்டு உடனே பாட்டை எழுதிக் கொடுத்திடு” என்றார் ராஜா.

“அதிருக்கட்டும். எங்க சாப்பாட்டுப் பையை யாரு வெளியே வெச்சது?”

“நான்தான் வைக்க சொன்னேன். நான் சைவம். நீங்க அசைவம். செட் ஆகாது. தனியா சாப்பிடுங்கன்னு உங்க அண்ணிதான் சொல்லிச்சி”

கொதித்துப் போன அமரன் விருட்டென்று வெளியே வந்தார். மனம் நொந்துப் போயிருந்த பாஸ்கர், சாப்பிடாமலேயே கிளம்பிவிட்டார். அமரனும் பசியோடு விறுவிறுவென்று பாட்டு எழுதத் தொடங்கினார்.

பொதுவாக இளையராஜா பாடல்களுக்கு அவரே பல்லவியை எழுதி வைத்திருப்பார்.

அமரன் எழுதவேண்டிய பாடலுக்கு பல்லவி.

“ஆணென்ன பெண்ணென்ன
நீயென்ன நானென்ன
எல்லாம் ஓரினம் தான்
அட நாடென்ன வீடென்ன
காடென்ன மேடென்ன
எல்லாம் ஓர் நிலம் தான்”

விடுவிடுவென அமரன் பாட்டை தொடர ஆரம்பித்தார்.

“நீயும் பத்து மாசம்
நானும் பத்து மாசம்
மாறும் இந்த வேஷம்”

சரணத்தில் அண்ணனை விளாச ஆரம்பித்தார்.

“ஒண்ணுக்கொண்ணு ஆதரவு
உள்ளத்திலே ஏன் பிரிவு
கண்ணுக்குள்ள பேதம் இல்ல
பார்ப்பதிலே ஏன் பிரிவு
பொன்னு பொருள் போகும் வரும்
அன்பு மட்டும் போவதில்லை
தேடும் பணம் ஓடிவிடும்
தெய்வம் விட்டுப் போவதில்லை
மேடைக்கும் மாலைக்கும் கோடிக்கும் ஆசைப்பட்டு
வெட்டுக்கள் குத்துக்கள் ரத்தங்கள் போவதென்ன
மேடைக்கும் மாலைக்கும் கோடிக்கும் ஆசைப்பட்டு
வெட்டுக்கள் குத்துக்கள் ரத்தங்கள் போவதென்ன
இதை புரிஞ்சும் உண்மை தெரிஞ்சும்
இன்னும் மயக்கமா?”

பாட்டு எழுதிய பேப்பரை தூக்கி இளையராஜாவின் மேஜை மீது போட்டார்.

“இதான் பாட்டு. புடிச்சிருந்தா வெச்சிக்கோ. இல்லைன்னா தூக்கிப்போடு” என்று சொல்லிவிட்டு முகத்தைகூட ஏறெடுத்துப் பார்க்காமல் போய்க்கொண்டே இருந்தார். எப்படியும் அந்தப் பாடலை ராஜா, ரெக்கார்டு செய்யமாட்டார் என்பது அமரனின் நம்பிக்கை.

ஆனால்-

அந்த பாட்டு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் குரலில் பதிவு செய்யப்பட்டது. படத்தின் சிச்சுவேஷனுக்கு பொருத்தமான பாட்டு என்பதால், தன்னை குறிவைத்து எழுதப்பட்ட பஞ்ச்லைன்களை அனுமதித்தார் இளையராஜா.

ராஜா மட்டும் சளைத்தவரா?

பஞ்சு அருணாச்சலம் எழுதவேண்டிய அடுத்த பாட்டுக்கு பல்லவி எழுதுகிறார்.

“அண்ணன் என்ன தம்பி என்ன
சொந்தமென்ன பந்தமென்ன
சொல்லடி எனக்கு பதிலை
நன்றி கொன்ற உள்ளங்களை
கண்டு கண்டு வெந்தபின்பு
என்னடி எனக்கு வேலை
நம்பி நம்பி வெம்பி வெம்பி
ஒன்றுமில்லை என்ற பின்பு
உறவு கிடக்கு போடி
இந்த உண்மையைக் கண்டவன் ஞானி”

இந்த கதையெல்லாம் ரஜினிக்கு தெரியாது. ‘தர்மதுரை’ படத்தில் பாடல்கள் மிகவும் பவர்ஃபுல்லாக அமைந்ததில் அவருக்கு சந்தோஷம். ஒருமுறை கங்கை அமரனை சந்தித்தபோது, “நம்ம படத்துலே பாட்டெல்லாம் ரொம்ப பிரமாதமா அமைஞ்சுடுச்சி” என்று சொல்லியிருக்கிறார். பதிலுக்கு அமரன், இந்த வரலாற்றை எடுத்துரைக்க, தன்னுடைய படத்தில் பணியாற்றும்போது சகோதரர்களுக்குள் இப்படியொரு பிளவு ஏற்பட்டு விட்டதே என்று பெரிதும் மனம் வருந்தினாராம்.

கலைஞர்களின் கோபதாபங்கள்கூட கலையாகதான் வெளிப்படும்.

6 கருத்துகள்:

  1. விளைவு நன்று என்றால் கோபங்கள் மறக்கப்படும்.

    பதிலளிநீக்கு

  2. அருமையான கட்டுரை /சிறந்த பாடல் வரிகள் பொங்கல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. “அண்ணன் என்ன தம்பி என்ன அவசரமான உலகத்திலே /இது கண்ணதாசன் அவரது அண்ணன் மீது உள்ள கோபத்தில் எழுதியது

    பதிலளிநீக்கு
  4. கருத்துப் போட்டால் காண்பதில்லை ஏன்

    பதிலளிநீக்கு
  5. மிக அருமையான கட்டுரை..வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  6. பெயரில்லா12:28 PM, ஜனவரி 19, 2018

    அரிய தகவல்... நன்று...
    அன்புடன்...
    ராஜா திருச்சிக்காரன்

    பதிலளிநீக்கு