25 ஜனவரி, 2017

சைலேந்திரபாபு

செம்மொழி மாநாட்டுக்கு கோயமுத்தூர் போயிருந்தபோது, அங்கே கமிஷனராக இருந்த சைலேந்திரபாபுவுக்கு சினிமா ஹீரோவுக்கான இமேஜ் இருந்ததை நேரில் கண்டேன். ஜீப்பில் அவர் வரும் வழியில் எல்லாம் மக்கள் சாலையோரமாக நின்றுக்கொண்டு அவரைப் பார்த்து மகிழ்ச்சியாக கையசைக்கிறார்கள். இவரும் புன்னகைத்தவாறே சல்யூட் செய்தவாறே போய்க் கொண்டிருக்கிறார்.

சைலேந்திரபாபு எங்கே போனாலும் இளைஞர்களின் அன்பை வெகுவிரைவில் பெற்று விடுவார். மற்ற போலிஸ் அதிகாரிகளை போல இல்லாமல், இளைஞர்களோடு இளைஞனாய் பழக முயற்சிப்பதே இதற்கு காரணம்.

அவர் சென்னையில் பணியாற்றியபோதே தூரத்தில் இருந்து கவனித்திருக்கிறேன். பொதுக்கூட்டங்களில் பாதுகாப்புப் பணியை மேற்பார்வையிடுவதற்காக வருவார். உயரதிகாரிகளின் வழக்கமான பந்தாவெல்லாம் காட்டாமல் கான்ஸ்டபிள் மாதிரி களத்தில் இறங்கி தன் கைகளையே லத்தி மாதிரி பயன்படுத்தி கூட்டத்தை கட்டுப்படுத்துவார்.

‘புதிய தலைமுறை’ இதழில் புதியதாக தொடர்கள் கொண்டுவர ஐடியாக்கள் கேட்டிருந்தார் ஆசிரியர் மாலன். ‘Memoirs of a Action Hero’ என்றொரு ஒருவரி ஐடியா கொடுத்திருந்தேன். ‘யாரை எழுதவைக்கலாம்?’ என்று ஆசிரியர் கேட்டதற்கு, யோசிக்காமல் ‘சைலேந்திரபாபு’ என்றேன். சிறுவயதிலிருந்தே அவர் எனக்கு ஹீரோ. அவரைப் பற்றி செய்தித்தாள்களில் அவ்வளவு வாசித்து impress ஆகியிருந்தேன்.

‘எழுதுவாரா?’ என்று கேட்டார் ஆசிரியர். ‘கேட்டு பார்ப்போம் சார். சில புத்தகங்கள் எழுதியிருக்காரு. நல்லா விக்குது’ என்றேன். அதோடு மறந்துவிட்டேன்.

ஆனால்-

எங்கள் ஆசிரியர் அதை நினைவில் நிறுத்தி வைத்து, சில மாதங்கள் கழித்து சைலேந்திரபாபுவிடம் அப்பாயின்மெண்ட் வாங்கி என்னையும் ஐ.ஜி.ஆபிசுக்கு வரச்சொல்லி இருந்தார்.

‘நீங்க எங்க பத்திரிகைக்கு ஒரு தொடர் எழுதணும்’ என்று மாலன் சார் கேட்டதுமே மறுக்காமல் ஒப்புக் கொண்டார்.  ‘இவரு உங்களோட கோ-ஆர்டினேட் பண்ணிப்பாரு. எங்களோட சீனியர் ரிப்போர்ட்டர்’ என்று என்னை அறிமுகம் செய்தார்.

என்னைப் பற்றி நிறைய கேட்டார். போலிஸ்காரர் அல்லவா? துருவித்துருவி விசாரித்தார். நான் கேட்காமலேயே அவரைப் பற்றி சொன்னார். அவர் வேளாண்மைக் கல்லூரி மாணவர் என்கிற விஷயம் ஆச்சரியமாக இருந்தது. நான் அவரை சந்தித்தபோதுகூட முனைவர் பட்டத்துக்காக நிறைய படித்துக் கொண்டிருந்தார்.

அதன்பிறகு ஒரு வாரம் கழித்து சைலேந்திரபாபுவை பார்க்கப் போனேன். அவர் சொல்ல, நான் எழுத்தாக்கம் செய்வதாக ஏற்பாடு. தொடருக்கு ‘எழுந்திரு, விரைந்து’ என்று மாலன் சார் தலைப்பு கூட வைத்து விட்டார். கொஞ்சம் விடலைத் தோற்றத்தில் இருந்ததாலோ என்னவோ சைலேந்திரபாபுவுக்கு ‘ஒழுங்காக எழுதுவேனா?’ என்று என் மீது சந்தேகம் இருந்திருக்கக்கூடும். ‘இதுவரை பத்திரிகைக்கு எழுதியதில்லைங்க. சரியா வருமா?’ என்று திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருந்தார். ‘நான் வேணும்னா ஒரு அத்தியாயம் எழுதிக் கொடுக்கறேன் சார். சரியா வருதுன்னு நெனைச்சீங்கன்னா எழுதுங்க’ என்றேன்.

Discpline அவருக்கு மிகவும் முக்கியம். அதைவிட தன்னுடைய வேலையை தானே செய்ய வேண்டும் என்கிற ஆர்வம் கொண்டவர். ஐஜி அந்தஸ்தில் இருக்கும் அதிகாரியாக இருந்தாலும், சின்ன சின்ன வேலைகளைகூட அவரே செய்தால்தான் அவருக்கு திருப்தி. ‘தாகமா இருக்கா? தண்ணீ வேணுமா?’ என்று கேட்டு அவரே எழுந்துப்போய்தான் வாட்டர் பாட்டில் எடுத்து வந்து தந்தார். தன்னுடைய உதவியாளர்களை பெல் அடித்து அழைக்கவில்லை. ‘முதல் அத்தியாயமாக உங்களுடைய இந்த பண்பையே எழுதுவோம்’ என்றேன். ஒப்புக்கொண்டு, அவர் சர்வீஸில் சந்தித்த ஒரு இளைஞனைப் பற்றி சொன்னார்.

அலுவலகத்துக்கு வந்து மடமடவென்று ‘மானே தேனே’ சேர்த்து எழுதிப் பார்த்தேன். சும்மா விர்ரென்று வந்திருப்பதாக பட்டது. பிரிண்டவுட் எடுத்துக் கொண்டு அன்று மாலையே அவர் அலுவலகத்துக்கு ஓடினேன். ‘பக்கா, பிரில்லியண்ட்!’ என்றார். என் மீது அவருக்கு நம்பிக்கை வந்துவிட்டது. ‘அடுத்த வாரம் வாங்க. நாலஞ்சு சாப்டர் எழுதி வெச்சுக்கலாம். நான் வேலை விஷயமா வெளியூர் போக வேண்டியிருக்கு’ என்றார்.

அவர் சொன்ன மாதிரியே அடுத்த வாரம் போனேன். மேலும் சில விஷயங்கள் சொன்னார். ஐந்து அத்தியாயம் தேறிவிடும் என்றதுமே திருப்தியானார். ‘எனக்கு இந்த ரூல்ஸெல்லாம் தெரியலை. ஐபிஎஸ் இதுமாதிரி பத்திரிகையில் தொடர் எழுதலாமா? இறையன்பு எல்லாம் எப்படி எழுதுறாரு. யார் கிட்டேயாவது பர்மிஷன் வாங்கணுமா?’ என்று கேட்டார். எனக்குத் தெரியவில்லை. ‘இறையன்பு சாருக்கு போன் போட்டு கேட்டு சொல்லட்டுங்களா?’ என்றேன். ‘வேணாம். வேணாம். நானே பார்த்துக்கறேன். நான் ஓக்கேன்னு சொன்னதுமே விளம்பரம் கொடுங்க’ என்றார்.

மீதி அத்தியாயங்களை எழுதி தயார் செய்து காத்திருந்தேன். அடுத்த சில வாரங்களுக்கு அவரிடமிருந்து அழைப்பு இல்லை. நானாக அழைத்துக் கேட்டேன். ‘கொஞ்சம் தயக்கமா இருக்கு கிருஷ்ணா. இப்போ தொடர் வந்துச்சின்னா பிராப்ளம் ஆக வாய்ப்பிருக்கு. ஏன்னா, சில விஷயங்களை சில பெயர்களை சொல்லி சொன்னாதான் சரியா இருக்கும். சர்வீஸ்லே இருக்குற நான் அப்படி செய்யுறது சரிவராது. சாரி!’ என்றார்.

அவருடைய அப்போதைய நிலைமை புரிந்தது. ஆனால், எனக்கு ஓர் அருமையா தொடர் மிஸ் ஆகிவிட்டதே என்று ஆதங்கம். அந்த தொடரை அவர் எப்போதாவது எழுத நினைத்தால், என்னை அழைப்பார் என்று இன்றுவரை காத்துக் கொண்டிருக்கிறேன். அல்லது அவர் ஓய்வு பெறுகிறார் என்கிற தகவல் கிடைத்தால், நானே அவரை தொடர்பு கொண்டு கேட்பேன்.

இன்றுவரை அச்சு மை காணாமல் என்னுடைய ஜிமெயில் ஃபோல்டரில் உறங்கிக் கொண்டிருக்கும் ‘எழுந்திரு, விரைந்து’ தொடரின் முதல் அத்தியாயத்தை மட்டும் இங்கே பிரசுரம் செய்கிறேன் (இதில் வில்லங்கமாக எதுவுமில்லை என்பதால் சைலேந்திரபாபு சாரிடம் அனுமதி கேட்காமலேயே பதிப்பிக்கிறேன்).

சல்யூட்

ஒரு ஊரில் பெரிய பணக்காரர் இருந்தார். தங்கமும், வைரமும், வைடூரியமாக செல்வச்செழிப்பு. மனநிம்மதியை தவிர அனைத்தும் அவரிடம் இருந்தது. அப்போது அவர் இருந்த ஊருக்கு ஒரு மகான் வந்தார். அவரிடம் தன்னுடைய பிரச்சினையை சொன்னார். தானும் மற்றவர்களைப் போல மகிழ்ச்சியாக வாழ வழி சொல்லுமாறு கேட்டார்.

கனமான மூன்று கற்களை பையில் போட்டு அவரிடம் கொடுத்து, முதுகில் சுமந்து தன்னோடு வருமாறு கேட்டுக் கொண்டார் மகான். கற்களின் கனம் தாங்காமல் மகானின் வேகத்துக்கு ஈடுகொடுத்து அவரால் வரமுடியவில்லை.

“ஒரு கல்லை தூக்கிப் போட்டுவிட்டு, இரண்டு கல்லை சுமந்துவா” என்றார் மகான். முன்பை விட வேகமாக நடக்க முடிந்தது. ஆனாலும் கொஞ்ச தூரம் சென்றதும் முதுகிலிருந்த சுமை அழுத்த விரைவில் களைப்பு அடைந்தார்.

“இன்னொரு கல்லையும் தூக்கி போடு”

இப்போது பணக்காரரின் முதுகில் இருந்தது ஒரே ஒரு கல்தான். முன்பை விட வேகமாக நடக்க முடிந்தது. ஆனால் இப்போதும் ஒருகட்டத்தில் சுமைதாங்காமல் களைப்படைந்தார். மீதியிருந்த ஒரு கல்லையும் மகான் தூக்கிப்போட சொல்ல, எந்த சிரமமுமின்றி பணக்காரர் வெறும் பையை எடுத்துக்கொண்டு அவரோடு செல்லவேண்டிய இடத்துக்கு நடந்துவந்தார்.

மகான் சொன்னார். “பணமோ, கல்லோ. எதை சேர்த்து வைத்தாலும் அது சுமைதான். சுமைகளற்ற பயணமே மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு உத்தரவாதம்”

கல்லூரிப் பருவத்தில் வாசித்த ஜென் கதை. இந்த கதை வேறு வடிவில் Spring, Summer, Fall, Winter என்றொரு கொரிய திரைப்படத்திலும் வருகிறது. இயக்குனர் கிம்-கி-டுக் இயக்கிய படம். நீங்களும் பார்த்திருக்கலாம். பசுமரத்தாணி போல நெஞ்சில் என்றும் நிற்கும் கதை இது. அவ்வப்போது நினைவுக்கு வரும். என்னிடம் இருக்கும் சுமைகள் என்ன, என்னவென்று யோசித்து அவைகளை களைய அவ்வப்போது முற்படுவேன்.

சமீபத்தில் கச்சத்தீவு சென்றிருந்தேன். காவல் பணி நிமித்தமாக. கடலோர காவல் பாதுகாப்பு பொறுப்பில் இருக்கிறேன். இலங்கை, இந்தியா இரு நாட்டு மக்களும் அந்தோணியார் கோயில் திருவிழாவுக்காக ஆயிரக்கணக்கில் குழுமியிருக்கிறார்கள். அசம்பாவிதம் எதுவும் நடந்துவிடாமல் காக்கும் பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது. கண்ணில் படும் ஒவ்வொரு மனிதரையும் எங்களது கண்கள் ‘ஸ்கேனர்’ போல ஊடுருவும். பொதுவாக முதல் பார்வையிலேயே தெரிந்துக் கொள்வோம். இவர் சாதாரணமானவரா அல்லது ஏதேனும் வில்லங்கம் செய்ய வாய்ப்புள்ளவரா என்று. சந்தேகப் படுபவர்களை மட்டும்தான் தனியாக விசாரிப்போம். எங்களது விசாரிப்புக்கு அவர் சொல்லும் பதிலிலேயே எங்களுக்கு விஷயம் புரிந்துவிடும். காவல் பணியில் இருப்பவர்களின் மனதைவிட சிறப்பாக கணக்குபோடும் கம்ப்யூட்டர் இன்னமும் கண்டுப்பிடிக்க முடியவில்லை. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலான காவல்பணியில் எவ்வளவு மனிதர்களை பார்த்திருக்கிறேன். எவ்வளவு மறக்க முடியாத சம்பவங்கள். எவ்வளவு நினைவுகள்?

அப்போதுதான் திடீரென்று எனக்கு மேலே சொன்ன கதை நினைவுக்கு வந்தது. சட்டென்று வெளியில் தெரிவதைப் போன்ற சுமைகள் எதுவும் என்னிடமில்லை. நினைவுகளை சுமையென்று சொல்லலாமா என்றும் தெரியவில்லை. ஆனாலும் மனதில் தங்கிய நினைவுகளை இறக்கிவைத்தால் தேவலை என்றொரு எண்ணம். புதிய தலைமுறையிடம் சொல்வதற்கு எனக்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன. தாம் கற்றதை மற்றவர்களோடு பகிர்வதை விட விருப்பமான செயல் வேறென்ன இருக்க முடியும்?

கற்பித்தல் மட்டுமல்ல கற்பதும் கலைதான். நான் கற்றதை உங்களுக்கு சொல்கிறேன். நீங்கள் கற்றதை எனக்கு சொல்லுங்கள். எனக்கும் உங்களுக்குமான பிரத்யேக உரையாடலுக்கு இத்தொடர் பயன்படட்டும்.

கடலோர மீனவர்கள் பாதுகாப்பினை உறுதிசெய்யும் விழிப்புணர்வுப் பிரச்சாரம் சமீபத்தில் நடந்தது. அதன் பொருட்டு சென்னையில் இருந்து கன்னியாகுமாரிக்கு சைக்கிள் பயணம். இந்திய கடற்படை வீரர்களோடு, கடலோர காவல் பணியில் இருக்கும் காவலர்களும் பங்கேற்றார்கள்.

வெயில் சுட்டெரிக்கவில்லை. இருந்தாலும் கொஞ்சம் கடினமான பயணம்தான். கன்னியாகுமரியை குறிவைத்து சைக்கிளை மிதமாக மிதித்துக் கொண்டிருக்கிறோம். கடலூர் வருகிறது. ஊரின் பெயர் பலகையை கண்டதுமே அந்த இளைஞனின் முகமும் நினைவுக்கு வருகிறது. இருபது ஆண்டுகளுக்கு முந்தைய சம்பவங்கள் வீடியோ காட்சிகளாய் மனதில் ஓடுகிறது.

அப்போது கடலூரில் எஸ்.பி.யாக பணி புரிந்துக் கொண்டிருந்தேன். அம்மாவட்டத்தில் சாராயம் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்த காலம். இரவு பகலாக சாராயம் காய்ச்சுபவர்களையும், விற்பவர்களையும் துரத்திப் பிடிப்பதுதான் வேலை. சினிமாக்களில் போலிஸை காட்டுவது மாதிரி ஆக்‌ஷன் காட்சிகள் பலவும் எங்கள் நிஜவாழ்விலேயே நடந்திருக்கிறது. ஆற்றுப் படுகைகளில் காய்ச்சுவார்கள். காவல்துறையினரின் தடிகளால் உடையாத சாராயப் பானைகளே அங்கே எந்த கிராமத்திலும் இல்லை.

இம்மாதிரியான சூழலில்தான் அங்கிருந்த ஒரு கிராமத்தில் அந்த இளைஞனை சந்தித்தேன் (ஊரும், பெயரும் வேண்டாமே. இப்போது அவர்களுக்கு இது சங்கடத்தைத் தரலாம்). சிவில் என்ஜினியரிங் டிப்ளமோ படித்திருந்தான். அந்த ஊரிலேயே அதிகம் படித்தவன் அவன்தான் என்று தெரிந்தது. படித்து விட்டோம். நகருக்கு இடம்பெயர்ந்து ஏதேனும் வேலையில் சேர்ந்து சம்பாதித்து, வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடலாம் என்று அவன் எண்ணவில்லை. சாராய அரக்கனிடம் மாட்டிக்கொண்ட தன்னுடைய ஊரை காப்பாற்ற நினைத்தான்.

சாராயம் காய்ச்சுபவர்களையும், விற்பவர்களையும் குறித்து அவ்வப்போது எங்களுக்கு தகவல் கொடுப்பான். ஒருகட்டத்தில் போலிஸ் இன்ஃபார்மர் என்பதையே தன்னுடைய தொழிலாக எடுத்துக் கொண்டான். இன்ஃபார்மர்களுக்கு அவரவர் தரும் தகவலின் அடிப்படையில் ஊக்கத்தொகை மாதிரி வழங்குவோம். அவனுடைய படிப்புக்கு ஏற்ற வருமானம் இல்லையென்றாலும், சமூகப் பணியையும் சேர்த்து செய்கிறோம் என்கிற திருப்தியில் எங்களோடு இணைந்து பணியாற்றினான். அவனுடைய உதவியோடு வெற்றிகரமாக பல கிராமங்களில் கள்ளச்சாராயத்தை ஒழித்தோம்.

பணிநிமித்தமாக சில முறை சந்தித்திருக்கிறேன் என்பதைத் தவிர்த்து பெரிய பழக்கமில்லை. ஆனால் பார்த்ததுமே பச்சக்கென்றுன் மனதில் ஒட்டிக்கொள்கிற உருவம். பழகுவதில் அவனுடைய பாங்கு அலாதியானது. நேர்த்தியாக உடை அணிவான். காவல்துறையிலேயே சேர்ந்து பணியாற்ற அவனுக்கு ஆர்வமிருந்தது என்று நினைக்கிறேன்.

ஒருநாள் அதிகாலை வேளையில் அந்த அகாலமான செய்தி வந்தது. ‘அவன்’ கொல்லப்பட்டு விட்டான். தங்களது குற்றநடவடிக்கைகளை கட்டுப்படுத்த காவலர்களோடு இணைந்து செயல்படுகிறான் என்று அவனை படுகொலை செய்துவிட்டார்கள் சமூகவிரோதிகள். மனது கேட்கவில்லை. அவனது மரணத்துக்கு நேரில் மரியாதை செலுத்த கிளம்பினேன்.

எளிமையான வீடுதான். அரைகுறையாக கட்டி பாதியில் விடப்பட்டிருந்தது. என் நினைவு சரியென்றால் கூரைப்பகுதி வேலை மட்டும் பாக்கியிருந்தது. விசாரித்ததில் அந்த வீடு முழுக்கவே அவனுடைய உழைப்பில் உருவானது என்றார்கள். வேறொருவரின் உதவி துளி கூட இல்லையாம். செங்கல்லை கூட அவனே சூளையில் சுட்டு உருவாக்கியிருக்கிறான். கதவு, சன்னல்களை அவனே மரம் வாங்கி இழைத்திருக்கிறான். நேரம் கிடைக்கும் போதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக அவனே கட்டுவானாம். முடிப்பதற்குள் உயிர் போய்விட்டது. இந்த வீட்டினை கட்டுவது மட்டுமில்லாமல் அவனுடைய அன்றாட வாழ்வில் அவனுக்குத் தேவையான அனைத்துப் பணிகளையும் அவனே செய்துக் கொள்வானாம். உழைப்புக்கு அஞ்சாத இப்படிப்பட்ட ஒருவன் இத்துணை இளம் வயதிலேயே இறந்துவிட்டானே என்று எனக்கு துயரம் தாங்கவில்லை.

அந்த இளைஞனிடம் நான் கற்றதுதான் நம்முடைய சிறுசிறு பணிகளை கூட நாமே செய்துக்கொள்ள வேண்டும் என்பது. நம்முடைய வேலைகளை நாமே செய்து முடித்துக் கொள்ளும்போது கிடைக்கும் நிறைவு வேறெதிலும் கிடைப்பதில்லை.

பகவத்கீதை, இராமாயணம், மகாபாரதம், திருவாசகம் போன்றவற்றுக்கு எளிய நடையில் உரை எழுதி நமக்கு அளித்த சுவாமி சித்பவானந்தாரை கேள்விப்பட்டிருப்பீர்கள். ராமகிருஷ்ண குருகுல மரபை சேர்ந்தவர். அவருடைய அறையில் கழிப்பறை, வாஷ்பேஸின் போன்றவற்றை கூட அவரேதான் சுத்தம் செய்வாராம். வரவேற்பறை, படுக்கையறை போன்றவற்றை பெருக்குவதில் தொடங்கி தன் தொடர்பான எந்த வேலையையும் செய்ய சிஷ்யர்களையோ, பணியாட்களையோ அனுமதிக்க மாட்டார். நாம் எப்படி வாழவேண்டுமென்று மகான்கள் வாழ்ந்துக் காட்டியிருக்கிறார்கள்.

வெளிநாடுகளில் இக்கலாச்சாரம் உண்டு. ஆனால் இங்கே கூலிவேலை பார்ப்பவர் கூட தன் வீட்டுப் பணிகளை மேற்கொள்ள வேறொருவரை கூலிக்கு அமர்த்துகிறார். அலுவலகங்களில் கடைநிலை ஊழியராக பணியாற்றுபவர் கூட தன் வீட்டு வேலைகளை செய்ய பணியாளரை அமர்த்துக் கொள்கிறார். எல்லோருமே யாரையோ சார்ந்து வாழ்கிறோம். சமீபமாக ஏற்பட்டிருக்கும் கலாச்சார மாற்றம் இது.

நம்முடைய கை, கால் உறுதியாக இருக்கும் வரை தன் கையே தனக்குதவி என்று வாழ பழகவேண்டும். உடல் மட்டுமல்ல, நம்முடைய உள்ளமும் உறுதியானது என்பதை மற்றவர்களுக்கு உணர்த்த வேண்டும். இப்போதிலிருந்து முடிந்தவரை உங்கள் வேலைகளை நீங்களே செய்துப் பாருங்களேன். உங்கள் வாழ்வின் மிகப்பெரிய மாற்றத்தை உணர்வீர்கள்.


(விரைவோம்)

2 கருத்துகள்:

  1. பெயரில்லா8:38 AM, ஜனவரி 28, 2017

    Good work. Need improvement on the narration, sentence formation. Readers like free flow writing, story kind of. Please take this as a reader feedback

    பதிலளிநீக்கு
  2. Excellent bro...இந்தமாதிரி விஷயங்கள சாதிச்ச ஆளுங்க சொல்லும்போது அதோட தாக்கம் ரொம்ப அதிகம். விடாதீங்க, அவர எழுதவச்சிருங்க..:))))

    பதிலளிநீக்கு