18 ஜனவரி, 2017

ஒரு கைதியின் டைரி

செப்டம்பர் 22, 1978. மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள். முதன்முதலாக அவரை திரையில் நடிகராக அவரே கண்ட நாள். அன்றுதான் ‘Pranam Kareedhu’ படம் வெளியானது. அதற்கு முன்பாகவே ‘Punadhirallu’ என்கிற படத்தில் நடித்திருந்தாலும், அது ஓராண்டு தாமதமாகவே வெளியானது.

ஜூன் 10, 1988. சிரஞ்சீவியின் 100வது படமான ‘கைதி நெம்பர் 786’ (தமிழில் ‘அம்மன் கோயில் கிழக்காலே’) வெளியானது. பத்தே ஆண்டுகளுக்குள் நூறு படம் நடித்தவர், அடுத்த ஐம்பது படங்கள் நடிக்க இருபத்தெட்டு ஆண்டுகள் எடுத்துக் கொண்டிருக்கிறார். யெஸ், இப்போது வெளியாகியிருக்கும் ‘கைதி நெம்பர் 150’தான் அவரது 150வது படம். கடைசியாக அவர் ஹீரோவாக நடித்த ‘சங்கர்தாதா ஜிந்தாபாத்’ வெளியாகி மிகச்சரியாக பத்து ஆண்டுகள் ஆகிவிட்டது. இடையில் தன்னுடைய மகன் ராம்சரண் நடித்த ‘மகதீரா’, ‘ப்ரூஸ்லீ’ படங்களில் கவுரவ வேடங்களில் தோன்றினார்.

சிரஞ்சீவியின் 150வது படத்துக்கு ‘கைதி நெம்பர் 150’ என்று பெயர் வைத்திருப்பதில் ஒரு சுவாரஸ்யமான சென்டிமெண்ட் உண்டு. 100வது படத்திலும் அவர் ‘கைதி’யாக இருந்திருப்பதை கவனியுங்கள். ஆரம்பக் காலங்களில் சிரஞ்சீவிக்கு சிறு சிறு வேடங்கள்தான் கிடைத்துக் கொண்டிருந்தது. இந்த வாய்ப்புகளை பெறவே அவர் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தார்.

முதல் படமான ‘Pranam Kareedhu’ வாய்ப்புகூட சுதாகருக்கு கிடைத்ததுதான். சுதாகரும், சிரஞ்சீவியும் சென்னை ஃபிலிம் இன்ஸ்ட்டிட்யூட் மாணவர்கள். இருவரும் நெருங்கிய நண்பர்கள். கல்லூரியில் படித்துக் கொண்டே ஒன்றாகவேதான் வாய்ப்பு தேடினார்கள். சுதாகருக்கு தமிழில் பாரதிராஜாவின் ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தில் ஹீரோவாகவே அறிமுகமாக வாய்ப்பு கிடைத்தது. எனவே தன்னை நாடிவந்த தெலுங்குப்பட வாய்ப்புகளுக்கு சிரஞ்சீவியை சிபாரிசு செய்தார்.

1955ல் மொகல்தூரு என்று ஆந்திர வரைப்படத்தில் கூட இடம்பிடிக்க முடியாத அந்தஸ்தில் இருக்கும் சிறு கிராமத்தில் பிறந்தவர் சிரஞ்சீவி. அவருடைய இயற்பெயர் சிவசங்கர வரபிரசாத். அப்பா, அரசுப்பணியில் இருந்தார்.

பள்ளிப் பருவத்திலிருந்தே இவருக்கு ‘சென்டர் ஆஃப் அட்ராக்‌ஷன்’ ஆக இருக்க விருப்பம். நாலு பேருக்கு மத்தியில் தான் பளிச்சென்று தெரியவேண்டும், தன்னைப் பற்றி அனைவரும் பேசவேண்டும் என்பதற்காகவே எங்கு பாட்டுச் சப்தம் கேட்டாலும் டேன்ஸ் ஆட ஆரம்பித்தார்.

அப்போது வெளிவந்திருந்த ‘கேரவன்’ இந்திப்படத்தில் ஹெலன் ஐட்டம் டான்ஸ் ஆடியிருந்த ‘Piya tu ab to Aaja’ பாடல் மிகவும் பிரபலம். இந்தப் பாடலை பார்ப்பதற்காகவே திரும்பத் திரும்ப தியேட்டருக்கு போவாராம். ஹெலன்தான் சிரஞ்சீவிக்கு டான்ஸ் குரு. இந்தப் பாடல் ரேடியோவில் எங்கு ஒலிபரப்பானாலும், அந்த இடத்தில் அப்படியே ஆட ஆரம்பித்து விடுவாராம். பிற்பாடு படங்களில் சிரஞ்சீவியின் நடனம் சிறப்பாக இருக்கிறது என்று யாராவது பாராட்டினால், சிரித்துக்கொண்டே ‘ஹெலனுக்குதான் நான் நன்றி சொல்ல வேண்டும்’ என்பார். முறைப்படி அவர் நடனம் கற்றுக்கொண்டதில்லை.

‘நடனம் ஆடத் தெரிகிறது, நடிப்பை கற்றுக் கொண்டால் சினிமாவுக்கு போய்விடலாம்’ என்று நண்பர்கள் சொல்லவே, சென்னை ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டுக்கு வந்து சேர்ந்தார். இங்கே அவருக்கு கல்லூரி முதல்வராக இருந்தவர் ஒய்.ஜி.பார்த்தசாரதி (ஒய்.ஜி.மகேந்திரனின் அப்பா). படிப்பை முடிப்பதற்கு முன்பாகவே தெலுங்குப் படங்களில் சிறிய வேடங்கள் கிடைத்தது. கல்லூரி முதல்வர் அனுமதிக்க, வரிசையாக நடித்துத் தள்ளிக்கொண்டிருந்தார்.

அதிர்ஷ்ட தேவதை ஆரம்பத்திலேயே சிரஞ்சீவியை ஆசிர்வதித்திருக்க வேண்டும். ஏனெனில், அவர் நடித்த முதல் படத்தின் பிரிவ்யூ காட்சியை தெலுங்கு சினிமாவின் பிரபல இயக்குநர் பாபு, நம்முடைய இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர் போன்றோர் பார்த்தார்கள். “இந்தப் பையனோட கண்ணு ரொம்ப பவர்ஃபுல்லா இருக்கு” என்பதுதான் பாலச்சந்தர், சிரஞ்சீவி பற்றி அடித்த முதல் கமெண்ட். தங்கள் படங்களில் வாய்ப்பு இருக்கும்போதெல்லாம் இருவரும் சிரஞ்சீவிக்கு சொல்லி அனுப்பினார்கள். ‘அவர்கள்’ படத்தை தெலுங்கில் ‘இதி கதை காது’ என்று பாலச்சந்தர் எடுத்தபோது, தமிழில் ரஜினி செய்திருந்த வேடத்தை சிரஞ்சீவிக்கு கொடுத்தார். கமல்தான் அங்கும் ஹீரோ.

சிறிய கதாபாத்திரங்களும், வில்லன் வேடங்களுமே சிரஞ்சீவிக்கு தொடர்ச்சியாக கிடைத்துக் கொண்டிருந்தன. பாலச்சந்தர் இயக்கிய ‘47 Rojulu’ (தமிழில் ‘47 நாட்கள்’ என்று ரிலீஸ் ஆனது) சிரஞ்சீவியின் நடிப்புத் திறனை முழுமையாக வெளிக்கொண்டு வந்தது. இந்தப் படத்தில் அவர் ஆண்ட்டி ஹீரோவாக நடித்திருந்தார். தமிழிலும் ‘காளி’, ‘ராணுவவீரன்’ போன்ற ரஜினி படங்களில் வில்லத்தனமான வேடங்களில் நடித்தார். தன்னுடைய ஃபிலிம் இன்ஸ்ட்டிட்யூட் ஜூனியர் என்பதால், இவரை வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் பயன்படுத்துவதை ரஜினி விரும்பினார்.

செகண்ட் ஹீரோ, வில்லன் என்று நடித்துக் கொண்டிருந்தாலும் சிரஞ்சீவியின் ஆக்ரோஷமான நடிப்பு, தெலுங்கு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. குறிப்பாக, இவர் இளைஞராக இருந்தார் என்பது அவர்களுக்கு ஆகப்பெரிய ஆறுதலாக அமைந்தது. ஏனெனில், எண்பதுகளின் தொடக்கத்தில் ஐம்பதை தாண்டிய தெலுங்கு ஹீரோக்களே அளவுக்கதிகமான மேக்கப்பில் கல்லூரி மாணவர்களாக நடித்துக் கொண்டிருந்தார்கள். இளமையான செழுமையான ஹீரோயின்களோடு கலர் கலராக அவர்கள் டூயட் பாட, படம் பார்க்கும் ரசிகர்கள் ஆற்றாமையால் மாய்ந்துப் போனார்கள். இந்தக் கொடுமையில் சிக்கி சீரழிந்துக் கொண்டிருந்தவர்களுக்கு ஆபத்பாண்டவனாக சிரஞ்சீவி தெரிந்ததில் ஆச்சரியம் ஏதுமில்லை.

சிறு பட்ஜெட் படத் தயாரிப்பாளர்களுக்கு சிரஞ்சீவியை ஹீரோவாக போட்டு படம் எடுப்பது வசதியாக இருந்தது. முதலுக்கு மோசமில்லை என்பதையும் தாண்டி கணிசமான லாபத்தை பார்த்தார்கள் என்றே சொல்ல வேண்டும். இந்த அமாவாசைக்கு ஒரு தொகையை அங்கே இங்கே வாங்கி பூஜையை போட்டு விட்டால், அடுத்த அமாவாசைக்கு படம் ரிலீஸ். சிரஞ்சீவியால், ஒரே மாதத்தில் கையில் லம்பாக பணம் புரண்டது தயாரிப்பாளர்களுக்கு.

இப்படியே போய்க்கொண்டிருந்த சிரஞ்சீவியின் கேரியரில் 1983ஆம் ஆண்டு அடித்தது செம ஜாக்பாட்.
யெஸ், அவரது நடிப்பில் ‘கைதி’ என்கிற படம் சூப்பர்ஹிட் ஆகி சிரஞ்சீவியை முன்னணி நட்சத்திரமாக மாற்றியது. இத்தனைக்கும் அரதப்பழசான பண்ணையாரை எதிர்க்கும் கிராமத்து இளைஞன் கதைதான். ஆக்‌ஷன், சென்டிமெண்ட், ரொமான்ஸ், டான்ஸ் என்று அத்தனை ஏரியாக்களிலும் சிரஞ்சீவி பட்டையைக் கிளப்ப, தெலுங்கின் மாஸ்டர்பீஸ் படங்களின் பட்டியலில் இணைந்தது ‘கைதி’.

அந்த ‘கைதி’க்கு நன்றி செலுத்தும் விதமாகதான் தன்னுடைய நூறாவது படம், நூற்றி ஐம்பதாவது படத்தின் டைட்டில்களில் எல்லாம் ‘கைதி’யை கொண்டுவருகிறார்.

சினிமா குடும்பங்களின் ஆதிக்கம் மிகுந்த தெலுங்கு சினிமாவை, எவ்வித சினிமாப் பின்னணியுமில்லாத எளிய குடும்பத்தில் பிறந்த சிரஞ்சீவி கைப்பற்றி செய்த சாதனைகள் யாரும் நம்ப முடியாதவை. குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டிக் கொண்டிருந்தவர்களுக்கு வெளியுலகத்தை காட்டியவர் இவர்தான். ‘டபுக்கு டபான் டான்ஸு’ என்று தெலுங்குப்பட நடனக் காட்சிகள் கிண்டலடிக்கப் பட்டுக் கொண்டிருந்த நிலையை மாற்றிக் காட்டிய பெருமை இவரையே சாரும்.

பழைய பண்ணையார் கதைகளை அழித்தொழித்து, ப்ரெஷ்ஷான கதைக்களன்களை அறிமுகப்படுத்தினார். ஸ்டுடியோவுக்குள் முடங்கிக் கிடந்த தெலுங்கு சினிமாவை, விதவிதமான லொக்கேஷன்களுக்கு அழைத்துச் சென்று சுதந்திரக் காற்றை சுவாசிக்க வைத்தார். வில்லன் மூன்று அடிகள் அடித்தபிறகு, ஹீரோவுக்கு மூக்கில் ரத்தம் வந்தபின்புதான் திருப்பி அடிக்க வேண்டும் என்கிற ஆதிகாலத்து ஸ்டண்ட் கந்தாயங்களை கடாசி எறிந்து, ஆக்‌ஷன் என்றால் எப்படியிருக்க வேண்டும் என்று ஸ்க்ரீனில் ரணகளமாக்கி காட்டினார்.

இதற்காக சிரஞ்சீவி கமர்ஷியல் ஏரியாவில் மட்டுமேதான் காண்சன்ட்ரேட் செய்தார் என்று முடிவெடுத்து விடாதீர்கள். ஆந்திர அரசின் நந்தி விருதுகள், மத்திய அரசின் தேசிய விருதுகளையும் அவரது படங்கள் குவிக்கத் தவறவில்லை. தமிழில் கமர்ஷியலுக்கு ரஜினி, கலையம்சத்துக்கு கமல் என்று பாகம் பிரித்துக் கொண்டு சினிமாவை முன்னேற்றினார்கள். அதே காலக்கட்டத்தில் தெலுங்கிலோ இரண்டு சுமைகளையுமே சிரஞ்சீவி சேர்த்து சுமந்தார். இந்தியிலும் சில படங்கள் நடித்தார். தமிழில் அர்ஜூன் நடிப்பில் வெளிவந்த ‘ஜெண்டில்மேன்’ படத்தின் இந்திப் பதிப்பில் சிரஞ்சீவிதான் ஹீரோ.

‘கைதி’யில் அவருக்கு கிடைத்த நட்சத்திர அந்தஸ்துக்குப் பிறகு, திரும்பிப் பார்க்க நேரமில்லாமல் ஓடிக்கொண்டே இருந்தார். அடுத்த இருபது ஆண்டுகள், மெகாஸ்டாரின் ஆட்சிதான் ஆந்திராவில். அவரது படங்கள் வெற்றி பெறும் போதெல்லாம் அடக்கமாக இருப்பார். தோல்வி அடையும் போதெல்லாம் வீறுகொண்டு எழுவார்.

1991ல் சிரஞ்சீவியின் ‘கேங் லீடர்’, தெலுங்கு சினிமாவின் அத்தனை வசூல் சாதனைகளையும் உடைத்தது. உடனடியாக அவரது ‘கரண மொகுடு’ (தமிழில் ரஜினி நடிப்பில் வெளிவந்த ‘மன்னன்’ படத்தின் ரீமேக்), ‘கேங் லீடர்’ படைத்த சாதனைகளை முறியடித்து, தெலுங்கு சினிமாவின் முதல் பத்து கோடி ரூபாய் வசூல் திரைப்படமாக அமைந்தது. அப்போதெல்லாம் சிரஞ்சீவி படைக்கும் சாதனைகளை சிரஞ்சீவியேதான் உடைப்பார்.

சிரஞ்சீவியின் சாதனைகளுக்கு எல்லாம் சிகரமாக அமைந்தது 1992-ல் கே.விஸ்வநாத் இயக்கத்தில் ‘ஆபத் பாண்டவடு’ படத்துக்காக அவர் வாங்கிய சம்பளம். ஒண்ணேகால் கோடி. இந்தியாவிலேயே, ஒரு கோடி ரூபாய் சம்பளத்தை எட்டிய முதல் நடிகர் சிரஞ்சீவிதான். அப்போது, இந்தியாவின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனே எழுபத்தைந்து லட்சமோ என்னவோதான் வாங்கிக் கொண்டிருந்தார். அவ்வகையில் இன்று கோடிகளை குவிக்கும் எல்லா மொழி ஹீரோக்களுமே சிரஞ்சீவிக்குதான் நன்றிக்கடன் பட்டவர்கள்.

தொண்ணூறுகளின் மத்தியில் தெலுங்கு சினிமாவில் புதுரத்தம் பாய்ச்சப்பட்டது. புதிய இயக்குநர்கள், இளம் நடிகர்கள் வரவு அதிகமாக இருந்த அந்த காலக்கட்டத்தில் சிரஞ்சிவி ஃபார்முலா படங்களுக்கு பின்னடைவு ஏற்பட்டது. தன்னுடைய வழக்கமான ஃபைட்டர் தன்மையை வெளிப்படுத்தி ‘ஹிட்லர்’ (1997) மூலமாக மீண்டும் மெகாஸ்டார் இமேஜை தக்கவைத்தார். சிரஞ்சிவீயின் ‘இந்திரா’ (2002), தெலுங்கு சினிமாவின் முதல் முப்பது கோடி வசூல் படமாக அமைந்தது. நம்மூர் ‘ரமணா’வை ‘டாகூர்’ என்று ரீமேக் செய்து, பிளாக்பஸ்டர் ஹிட் என்றால் எப்படியிருக்க வேண்டும் என்று தன்னுடைய அடுத்த தலைமுறை நடிகர்களுக்கு எடுத்துக் காட்டினார். இரண்டாயிரங்களின் மத்தியில் சில சறுக்கல்கள், சில சாதனைகள் என்று கலந்துகட்டி அவரது கேரியர் அமைந்தாலும், ‘மெகா ஸ்டார்’ இமேஜ் உச்சத்தில் இருந்தபோதே படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டு அரசியலில் குதித்தார்.
பத்து ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மெகாஸ்டாரை முழுநீள ஹீரோவாக ‘கைதி நெம்பர் 150’ படத்தில் தரிசிக்கப் போகிறார்கள் அவரது ரசிகர்கள். சிரஞ்சீவியின் ரசிகர்களுக்கு மட்டுமின்றி தெலுங்கு சினிமாத் துறைக்கே இது கொண்டாட்டமான சங்கராந்தி. படத்தைப் பற்றி நாம் எதுவும் புதுசாக சொல்ல வேண்டியதில்லை. நம்ம விஜய் நடித்த ‘கத்தி’யின் தெலுங்கு ரீமேக். இவரது உடம்பில் ரத்தம் ஓடுகிறதா, மசாலா ஓடுகிறதா என்று ரசிகர்கள் சந்தேகிக்கும் வண்ணம் கரம் மசாலா ஹிட்டுகளை கசாப்புக் கடை பாய் மாதிரி போட்டுத் தள்ளும் வி.வி.விநாயக்தான் இயக்குநர். நம்ம ‘கத்தி’ அங்கே மேலும் கூர்மைப் படுத்தப்படும் என்று உறுதியாகவே நம்பலாம்.

சினிமா குடும்பப் பின்னணி கொண்ட வாரிசுகள்தான் வெல்ல முடியும் என்கிற நிலைமையை மாற்றியமைத்தவர் அல்லவா? எனவேதான் சிரஞ்சீவியின் வெற்றியை எப்போதும் எல்லோரும் விரும்புகிறார்கள். அதை சாமானியனின் வெற்றியாக கொண்டாடுகிறார்கள்.

ஒரு சுவையான முரண் என்னவென்றால், எந்த கலாச்சாரத்தை எதிர்த்து நின்று சினிமாவில் சிரஞ்சீவி வென்றாரோ, இப்போது அவரது குடும்பமும் அதையேதான் செய்துக் கொண்டிருக்கிறது. சிரஞ்சீவியின் அடுத்த தலைமுறையில் உருவாகிய இளம் நடிகர்கள்தான் இப்போது தெலுங்கு சினிமாவின் சரிபாதியை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார்கள்.

கடந்த காலத்துக்கும், நிகழ் காலத்துக்குமான இந்த முரண்தான், பார்வையாளர்களாக நம் வாழ்வின் ஆகப்பெரிய சுவாரஸ்யமே.

(நன்றி : தினகரன் வெள்ளிமலர்)

2 கருத்துகள்: