11 பிப்ரவரி, 2015

இந்தியா டுடே

இருபத்தைந்து ஆண்டுகள் என்பது வரலாற்றுக்கு வேண்டுமானால் மிகச்சிறிய காலக்கட்டமாக இருக்கலாம். ஆனால் ஒரு தனிமனிதனின் வாழ்வில் பெரும் பங்கை எடுத்துக் கொள்ளும் காலம். சமகாலத்தில் என் கண் முன்னே பிறந்து, தன்னுடைய இறுதியை ‘இந்தியா டுடே’ எட்டுகிறது என்பது ஜீரணிக்க முடியாத நிகழ்வாக இருக்கிறது. அருண்பூரி தன் ஊழியர்களுக்கு எழுதியிருக்கும் கடிதத்தின் மூலம் இருபத்தைந்து ஆண்டுகால இந்தியா டுடே தமிழ் பதிப்பின் காலம் நிறைவடைகிறது.

அப்பத்திரிகையின் கொள்கைப்பாதையாக அடிநாதமாக தோன்றும் வலதுசாரிய தாராளமயவாத பார்வை நமக்கு ஏற்புடையது அல்ல என்றாலும், நவீனத்தமிழ் வாழ்வின் அடையாளங்களை, சிக்கல்களை, அருமை பெருமைகளை அவ்வப்போது பளிச்சென்று வெளிப்படுத்த இந்தியா டுடே தவறியதில்லை.

‘இண்டியா டுடே’ என்கிற பெயரை சண்டை போட்டு ‘இந்தியா டுடே’வாக மாலன் சார் மாற்றினார் என்பார்கள். ‘ரோஜா’ திரைப்படம் வருவதற்கு முன்பாகவே ஏ.ஆர்.ரஹ்மானின் பேட்டியை (கால்பக்க அளவுக்குதான்) வெளியிட்ட பத்திரிகை. இந்தியா டுடே பரிந்துரைக்கும் புள்ளிகள், பிரபலங்கள் சமூகத்தில் முக்கியமானவர்கள் என்கிற எண்ணம் உடனடியாக ஏற்படும். நினைவில் நிற்கக்கூடிய பல கவர்ஸ்டோரிகளை வெளியிட்ட இதழ். மண்டல் கமிஷன் பரிந்துரைகளை வி.பி.சிங் அரசாங்கம் அமல்படுத்த முனைந்தபோது டெல்லி பல்கலைகழக மாணவர் ராஜீவ்கோஸ்வாமி, தன் உடலில் தீ வைத்துக்கொண்டு மாண்ட காட்சியை இந்தியா டுடே அட்டைப்படமாக வெளியிட்டிருந்தது. இட ஒதுக்கீடு கொள்கைகளின் தாயகமான தமிழகத்தில் அது பெரிய சச்சரவினை உருவாக்கியது. ஷங்கர் இயக்கிய முதல் படமான ‘ஜெண்டில்மேன்’ திரைப்படம் மாபெரும் வெற்றியை அடையக்கூடிய கருத்தியல் பார்வைக்கும் அதுவே காரணம். நக்கீரன் பத்திரிகை வீரப்பனை முதன்முதலாக பேட்டி கண்டபோது, அதே படங்கள் இந்தியா டுடேவிலும் வெளியிடப்பட்டு ஏற்பட்ட சர்ச்சையும் நினைவுக்கு வருகிறது.

வெகுஜன வாசகர்களுக்கு இலக்கியத்தை நெருக்கமாக்கிய முயற்சிகளை ஆரம்பத்தில் இருந்தே இந்தியா டுடே தொடர்ந்துக் கொண்டிருந்தது. பத்திரிகையுலகில் பிரபலமான ‘கதை’ ஒன்று இப்போது நினைவுக்கு வருகிறது.

அது ஒரு புலனாய்வு வார இதழ் (இப்போது வாரமிருமுறை). இதழ் அச்சுக்கு போகவேண்டிய நாளில் பணியாளர்கள் எல்லோருக்கும் மூச்சு முட்டுமளவுக்கு வேலை இருக்கும். அதிரடியாக வேலை பார்த்துக் கொண்டிருந்த உதவி ஆசிரியர் ஒருவர் திடீரென மூர்ச்சை ஆனார்.

விஷயம் அறிந்த ஆசிரியர், முகத்தில் தண்ணீர் தெளித்து மயக்கத்தில் இருந்து வெளிவந்து மலங்க மலங்க விழித்துக்கொண்ட உதவி ஆசிரியரை உடனே தன்னுடைய ஜீப்பில் தூக்கிப் போட்டுக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தாராம். பரிசோதித்த மருத்துவர், பிரிஸ்கிரிப்ஷன் எழுதி கொடுத்து, “இதை ஒருவேளை சாப்பிடச் சொல்லுங்க. எல்லாம் சரியாயிடும்” என்றிருக்கிறார். மருத்துவமனையிலேயே இருந்த பார்மஸிக்கு போய் பிரிஸ்கிரிப்ஷனை காட்டியிருக்கிறார் ஆசிரியர். பார்மஸி ஆள் சிரித்துக்கொண்டே, “என்ன எழுதியிருக்கிறது பாருங்கள்” என்று திருப்பிக் கொடுத்திருக்கிறார். ‘ஒரு ஃபுல் மீல்ஸ்’ என்று எழுதியிருக்கிறார் குறும்புக்கார டாக்டர். அதாவது உதவி ஆசிரியருக்கு ஏற்பட்டிருந்தது பசி மயக்கம். தன்னுடைய ஊழியன் ஒருவன் பசியால் மயங்கிய அவலத்தை ஆசிரியரால் சகித்துக்கொள்ளவே முடியவில்லை.

எதுவும் பேசாமல் உதவி ஆசிரியரை ஒரு ஓட்டலுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். வயிறு நிரம்பச் சாப்பிட்டபிறகு ஆசிரியர் கேட்டாராம்.

“ஏன் தம்பி, சாப்பிடலை?”

“காசு இல்லை அண்ணாச்சி!”

“இஷ்யூ முடிக்கிற தேதி அன்னிக்கு எல்லாருக்கும் சாப்புட காசு கொடுக்கணும்னு அக்கவுண்டண்ட் கிட்டே சொல்லியிருக்கேனே? காசு கொடுக்கலையா?”

“அய்யோ. அப்படி இல்லைண்ணே. அவரு அதெல்லாம் கரெக்டா கொடுத்துடுவாரு”

“அப்போன்னா அந்த காசை என்ன பண்ணே?”

“இந்தியா டுடே இலக்கிய மலர் வாங்கிட்டேண்ணே”

நிஜமாகவே நடந்த சம்பவம் இது. இந்தியா டுடேவின் இலக்கிய மலர்களுக்கு எத்தகைய செல்வாக்கு இருந்தது என்பதற்கு இதைவிட பெரிய உதாரணம் தேவையில்லை.

இந்தியா டுடே தமிழில் தொடங்கியபோது நான் பள்ளி மாணவன். அப்போது ஆசிரியர்கள் இந்த இதழை தொடர்ந்து வாசிக்குமாறு மாணவர்களுக்கு பரிந்துரைப்பார்கள் (பிற்பாடு இதுமாதிரி ஆசிரியர்களால் பரிந்துரைக்கப்பட்ட பத்திரிகை ‘புதிய தலைமுறை’).

என்னுடைய அண்ணன் பாலாஜி, ஆரம்பகால இந்தியா டுடே இதழ்கள் அத்தனையையும் சேகரித்து தனித்தனியாக ‘பைண்ட்’ செய்து வைத்திருப்பார். அப்போதெல்லாம் அதுதான் எனக்கு இயர்புக். இன்றைய தலைமுறையினருக்கு இந்தியா டுடே, அதன் செக்ஸ் சர்வேக்களால் அடையாளம் காணப்படுகிறது என்பது துரதிருஷ்டவசமான நிலைமை. கமல்ஹாசனின் கலையுலகப் பொன்விழாவின் போது இந்தியா டுடே வெளியிட்ட சிறப்பிதழ் என்றென்றும் எனக்கு நினைவில் நிற்கும்.

லுங்கி கட்டிக்கொண்டு செல்பவர்கள் மால்களிலும், சினிமா தியேட்டர்களிலும் அனுமதிக்கப்படுவதில்லை என்கிற சூழல் இருந்தபோது, அதுகுறித்த என்னுடைய கருத்து போட்டோவோடு இந்தியா டுடேவில் வெளியானது. எப்படியோ சின்ன துண்டு போட்டு பாஸ்போர்ட்சைஸ் படமாகவாவது வரலாற்றில் இடம்பெற்று விட்டோம்.

குட் பை இந்தியா டுடே!

4 கருத்துகள்:

  1. Very sad. I read C.S.Sellapa's Vadivasal in India Today's Ilakkiya Malar around 20 years ago.

    K.Ganapathi Subramanian

    பதிலளிநீக்கு
  2. நானும் ஆரம்பகால இந்தியா டுடேயை வாசித்திருக்கிறேன். அதில் இடம் பெறும் சிறுகதைகளும் சிறப்பு விருந்தினர்களின் பத்தி எழுத்துக்களும் சிறப்பானதாக இருக்கும். அதன் இலக்கிய மலர்களையும் தேடிப்பிடித்து வாங்கி வாசித்திருக்கிறேன். என்றைக்கு அவர்கள் சிறுகதைகளை வெளியிடுவதை நிறுத்தினார்களோ அன்றிலிருந்து இந்தியா டுடே வாசிப்பதை நிறுத்தி விட்டேன். அதனால் தமிழ் இந்தியா டுடே நிறுத்தப் பட்டதில் என் அளவில் வருத்தப்பட ஏதுமில்லை; அது ஒரு செய்தி. அவ்வளவு தான்.

    பதிலளிநீக்கு
  3. சாவு வீட்டில் விமர்சிப்பது சரியான மரபல்ல என்பதுபோல இந்தியா டுடே நின்று போனது குறித்து பலரும் பலவிதமாக அஞ்சலி செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் வி.பி.சிங் மறைந்த போது அவருக்கு இந்தியா டுடே எப்படி அஞ்சலி செலுத்தியது என்று பாருங்கள்.

    அஞ்சலி / வி.பி.சிங் 1931-2008

    மண்டல் நாயகனான இவர் இந்தியாவின் அரசியலில் மாபெரும் சமூக சீரழிவைக் கொண்டு வந்தவர்.

    அலகாபாத்தில் கங்கைக்கரையில் நவம்பர் 29ம் தேதி எரிந்த சிதை இந்திய அரசியலின் மிக சாகசமிக்க ஒருவரின் வாழ்வை முடித்து வைத்தது. அந்தத் தீயின் அர்த்தத்தைப் புரி்ந்துகொள்ள கடந்த நூற்றாண்டின் கடைசி காலங்களில் கொழுந்துவிட்டெரிந்த இன்னமும் இருக்கும் தீயின் நாவுகளை நினைத்துப் பார்க்க வேண்டும்.

    பிரதமர் விஸ்வநாத் பிரதாப் சிங்கின் சமூகத்தை சீரழித்த செயலும் அதன் விளைவாக பிறந்த மக்களை மிக மோசமாக பிளவு படுத்திய மண்டலுக்கும் எதிர்வினையாக வந்ததுதான் தில்லி பல்கலைக்கழக மாணவர் ராஜீவ் கோஸ்வாமியின் நெருப்பு யுத்தம்.
    அரசு வேலைகளில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27.5 சதவீதம் இட ஒதுக்கீட்டை சிபாரிசு செய்த மண்டல் கமிஷன் அறிக்கையை அமல்படுத்துவேன் என்று 1990 சுதந்திர தின உரையில் வி.பி.சிங் உறுதிபூண்டது ஒரு மாபெரும் புரட்சிகர நடவடிக்கைதான்; வெகுஜனங்களை மயக்குவதற்கான அரசியல் நாடகம். சிறுபான்மை அரசை நடத்திச்சென்ற முதல் பிரதமரான வி.பி.சிங், ஜாதியை முன்னிறுத்தி, தகுதியை புறந்தள்ளிய மண்டல் கமிஷன் அறிக்கை மூலம் சமூக அடுக்கு முறையை குலைத்தார்.

    இந்த ஒன்று போதும்.இந்தியா டுடேவின் வக்கிர புத்தியை கண்டு கொள்ள.
    தொலைந்தது சனியன்.

    பதிலளிநீக்கு
  4. தொலைந்தது சனியன்............well said

    பதிலளிநீக்கு